திவாகர்

Pasupathy_1தமிழை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும், எளிமையாக, நன்றாக ரசிக்க வேண்டுமென்று இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவாரேயானால் அவர்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுவது இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களின் எழுத்துதான். அதற்காக இந்த நூற்றாண்டில் உள்ள எழுத்தாளர்களை நான் குறை சொல்வதாக எண்ணவேண்டாம். எளிமை, இனிமை, புதுமை, நேர்த்தி, அழகான கதை அமைப்பு, சமுதாய சிக்கல்களை யாவரும் அறியும்படி எழுதும் கைவண்ணம் இவை அனைத்தையும் பெற்றிருந்தார்கள் என்பதுதான் இங்கே நான் சொல்ல வருவது.

உரைநடையில் கல்கியிலிருந்து ஆரம்பித்து சுஜாதா இன்னும் எத்தனையோ எழுத்தாளர் வரை தமிழை அழகாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு வரை கூட படிக்காதவர்கள் கூட (முக்கியமாக அந்தக் கால பெண்மணிகள்) கல்கி, தேவன், எஸ்.வி.எஸ், குமுதினி, லக்ஷ்மியின் கதைகளை விறுவிறுப்பாகப் படித்தார்கள் என்பதை இப்போதுள்ள பெரியவர்களின் வாயிலிருந்தே அறிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நம் தலைமுறையினருக்கு சற்றளவேனும் அந்தக் கால எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நாம் அறிமுகப்படுத்துகிறோமா, அல்லது நமது வாராந்தர மாதாந்தரிகள் இச்சேவையைப் புரிகின்றனவா என்று கேள்வி எழுந்தால் பதில் ஏமாற்றம்தான் தரும்.

இத்தகைய நிலையில் கனடாவில் வாழும் பேராசிரியர், தமிழர் பசுபதி அவர்கள் இந்த அறிமுக வேலையை கண்ணும் கருத்துமாக, மெனக்கெட அந்தப் பழைய பத்திரிக்கைகளிலிருந்து அந்த எழுத்துக்களை அப்படியே படம் பிடித்து நமக்காக தன் வலைப்பகுதியில் தந்து வருகிறார். கல்கியிலிருந்து சின்ன அண்ணாமலை வரை, இந்த எழுத்தாளப் பெருமக்களை இந்தத் தலைமுறைக்கு அப்படியே அவர் எழுத்துக்கள் மூலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்.

இந்த வருடம் நூறாண்டு காணும் எழுத்தாளர் தேவனின் எழுத்துக்களை கடந்த சில ஆண்டுகளாக அப்படியே படம்பிடித்து தம் வலைப்பகுதியில் பதித்து வருகிறார், தேவன் கதைகளில் மல்லாராவ் கதைகள் மிகவும் சுவையானது. இந்த வாரத்தில் மல்லாரிராவ் சொல்லும் ஒரு வரலாற்றுக் கதை ஒன்றைப் பதிப்பித்திருக்கிறார். இக்கதையை அறிமுகப்படுத்துமுன் தேவன் அவர்களைப் பற்றிய ஒரு அரிய செய்தியும் கூடவே வருகிறது. இதோ அவர் எழுத்து மூலமாக

‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய ‘மல்லாரி ராவ்’ கதைகளை அவர்கள் படித்ததில்லை என்று தோன்றுகிறது! அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம்! ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும்! பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள்! ஒரு கதையைத் தான் படியுங்களேன்! ‘கோபுலு’வின் படத்தையும் ரசித்துக் கொண்டே தான்!

பேராசிரியர் பசுபதி கேட்டுக்கொண்டபடி நீங்களும் அந்த ராஜகிரி ரஸ்தா’வில் http://s-pasupathy.blogspot.in/2013/08/6.html ஒருமுறை பயணம் செய்து பாருங்களேன். பயணம் மிகச் சுவையாக இருக்கும் என்பதோடு அந்தத் தமிழ் எத்தனை ருசிகரமானது என்பதும் அறிந்துகொள்ளலாம்.

இவைகளைப் படிக்கும்போது நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த எழுத்தாளர்களின் சிந்தனைகள் இப்போதும் சிறந்தவையாக நமக்குப்படுகிறது இப்படி ஒரு பொறுப்பை சுகமான சுமையாக எடுத்துக்கொண்டு. நம்முடைய மூதாதைய எழுத்தாளர்களின் பெருமையை அறிமுகப்படுத்தும் பேராசிரியர் பசுபதி அவர்கள் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

கடைசிபாரா: வல்லமையில் ‘புதிய சுதந்திரப் பள்ளு’வில் ஒரு பின்னூட்டம்.

பெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
உற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
மற்றவர் நலனதுக் கெடாது – யாதும்
அற்றவர் நிலை யிலாதுச் செய்
கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!

10 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. பேராசிரியர் பசுபதி அவர்களுக்கும் சிங்கைக் கவிஞர் சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்தும்!!

 2. இந்த வார வல்லமையாளர் பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்தம் சிறப்புப் பணி தொடர்ந்து பலருக்கும் நன்மைகள் பயக்கட்டும்.

  சிறப்பான கருத்துரை வரிகளை வழங்கிய சிங்கைக் கவிஞர் சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ….. தேமொழி

 3. இந்த வார வல்லமையாளர் பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு அடியேனது வணக்கங்கள்.
  முத்தான வரிகளில் தனது ஈடில்லா inimitable பாணியில் சுதந்திரத்தினைப் பேணும் வழி அறிவித்த சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கு அடியேனது வாழ்த்துக்கள்.

  பணிவன்புடன்,
  புவனேஷ்வர்

 4. கடைசி பத்தியில் எந்தன் கவிதை! 
  கடைசியில் நானொருக் கவிஞன்!
  வல்லமை தந்த பாராட்டு அதனால் 
  வல்லோர் பலரின் வாழ்த்துக்களோடு

  எதிர் பாராத முத்தமா! இல்லை 
  எதிரே நிற்கும் சொர்க்கமா! 
  சமநிலை வேண்டும் சாமான்யன் யான் 
  சமமற்றுப் போனதென் மனநிலை….

  கவிதையை பாராட்டிய ஐயா அவர்களுக்கும்….

  வாழ்த்தக்களை கூறிய எனதினிய சகோதரி தேமொழியோடு அன்புச் சகோதரர் புவனேஷூக்கும் எனது தமிழ் கலந்த வணக்கங்களும் நன்றிகளும்.

 5. வல்லமை வானத்தில் மின்னிடும் வல்லமையாளர் 
  எல்லையில்லா தமிழில் வாசிப்போர் எண்ணமெல்லாம் 
  கொள்ளைபோக செய்திடும் எழுத்துக்குச் சொந்தக்காரர் 
  தில்லையம் பலத்தான் பெயர்கொண்ட பேராசியருக்கு – எனது 
  உள்ளம்பெருகி பொங்கும் வாழ்த்துகள் !

 6. வல்லமையாளர் பேராசிரியர்.பசுபதி ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள்.

  பின்னூட்டத்தில் சிறந்த கவிதையை வழங்கிய திரு.ஆலாசியம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

 7. எனக்கு வாழ்த்துகள் கூறி, ஊக்கமளித்த யாவருக்கும் என் மனமார்ந்த நன்றி! 

  என்னுடைய வாழ்த்து இதோ! 

  ஞாலத் தமிழர்கள் நாடுகின்ற மின்னிதழாய்க்
  காலத்திற் கேற்றநடை கைக்கொண்டு — சீலமுடன்
  நல்ல தமிழ்மணத்தை நாற்றிசையும் வீசிடும்
  ‘வல்லமை’ வாழ்க வளர்ந்து.  

 8. வல்லமையாளர் பசுபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பு பதிவர் ஆலாசியம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 9.  வல்லமையாளர் பசுபதி அவர்களுக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள். நான்கு வரிகளாலான பின்னூட்டம் ஒன்றில் பொன்னான கருத்துக்களிட்டு வல்லமையில் தம் கவித்திறனை நிறுவிய அன்புச் சகோதரர் சிங்கைச்செல்வர் திரு.ஆலாசியம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 10. A deserving, though delayed, tribute to a deserving person, who deserves much more. Congrats pasu sir, i am an ardent follower and admirer of all that you write and register.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க