அடி வானம் சிவந்தது
அது ஏன்?
பல வினாக்கள் என்னுள் எழுந்தது
அவைகளை உங்கள் முன் வைக்கிறேன்
தகுந்த விடை தந்தால் ஏற்கிறேன்!
பணி முடித்த சூரியன்
சொல்லாமல்
வீட்டுக்கு விரைவதால்
வானம் கோபத்தில் சிவக்கிறதா?
எரிக்கும் தன்னை வெறுத்து
குளிர் தரும் நிலவை
வரசொல்லும் வானுக்கு
சூரியன் தீ வைக்கிறதா?
ஒரு நாள் விளையாட்டில்
இரவோ பகலோ
யார் அத்து மீறுவதென புரியாமல்
அந்தி நேரம்
ஆட்டத்தை நிறுத்த
அடிவானத்துக்கு
சிவப்பு கொடி காட்டுகிறதா?
இரவுக்கு
அழகூட்ட வரும் நிலவுக்கு
வானம் ஆரத்தி எடுக்கிறதா?
இரவும் பகலும்
கலவிக்கு தயாரானதால்
வானம் வெட்கப்பட்டு சிவக்கிறதா?
இரவின் வானம்
நிலவாலும் நட்சத்திரத்தாலும்
பூச்சூடுவதால்
பகலின் முகம்
பொறாமையால் கீழ்வானில் எரிகிறதா?
இரவின் வண்ணத்திற்கு ஈடுகட்ட
பகலவள்
மருதாணியிட்டுக் கொண்டாளா?
ஜாம விருந்துக்கு
தயாராகும் வானம்
மகிழ்ச்சியில்
வெற்றிலை போட்டுக்கொண்டதா?
இரவின் இருளால்
உலகம் தவிக்காதிருக்க
பகல்
அடி வானில் தீப்பந்தம் ஏந்துகிறதா?
நிலவவளை வரவேற்க
பகலரசன்
வானில்
சிவப்பு கம்பளம் விரிக்கிறானா?
பூலோக பெண்களுக்கு போட்டியாக
மஞ்சள் அரைத்துக் குளித்த வானம்
இன்று கொஞ்சம்
அதிகமாக மஞ்சள் பூசிக்கொண்டதா?
ஏன்?
ஏன்? என்று எழுந்த
விளங்க முடியா வினாக்களை
உங்கள் முன் வைத்துவிட்டேன்
தகுந்த பதிலை தாருங்கள்
தலை வணங்கி ஏற்கிறேன்.


Leave a Reply