புவனேஷ்வர் 

பூரிசிரவஸ் வதம் – பகுதி 2 – பரம்பரைப்பகைவன்!

வணக்கம், அன்பர்களே.

சென்ற பதிவில், நாம் துரோணருக்கும் துச்சாதனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை கண்டோம். பதினான்காம் நாள் யுத்தத்தில் சாத்யகியிடம் அடிபட்டு ஓடி வந்த துச்சாதனனின் நிலை கண்டு துரோணர், பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என்று அறிவுறுத்திய கட்டம் அது. இன்று, அதே பதினான்காம் நாள் யுத்தத்தில், அடுத்து சாத்யகி பண்ணின ஒரு முக்கியமான காரியத்தை பார்க்கலாம். அது தான் பூரிசிரவஸ் வதம்.

பரம்பரை பகை, குடும்பப்பகை என்று எல்லாம் இன்றைக்கு சொல்கிறார்களே, அதெல்லாம் அன்றைக்கும் உண்டு. இன்றைக்கு இருப்பதை விட கொஞ்சம் தூக்கலாகவே அப்போதெல்லாம் உண்டு எனத்தான் தெரிகிறது. அப்படி ஒரு பரம்பரைப்பகை தான் சாத்யகி குடும்பத்துக்கும், பூரிசிரவஸ் குடும்பத்துக்கும்.

முதலில் இது என்ன பகை என்று ஒரு முன் கதை சுருக்கம் பார்ப்போம்.

கண்ணன், பாண்டவர்கள் எல்லாரும் பிறப்பதற்கு முன், கண்ணனின் தாயாரான தேவகி அம்மையாருக்கு சுயம்வரம் ஏற்பாடாகி இருந்தது. அங்கே, யாதவர்களை சேர்ந்த சினி என்ற அரசன் வந்திருந்தான். அவன், அங்கிருந்த மற்ற ராஜாக்களை எல்லாம் போர் செய்து ஜெயித்து, தேவகியை வசுதேவருக்காக தனது தேரிலே ஏற்றிக்கொண்டு கிளம்பினான். இதை கண்ட மற்றொரு அரசனான சோமதத்தனுக்கு பொறுக்கவில்லை. ஆத்திரத்துடன் சினியை தன்னுடன் மல்யுத்தம் செய்ய அழைத்தான். சிறிது நேரம் மல்யுத்தம் நடந்தது. சோமதத்தன் தோற்றான். சினி, ஆத்திரத்தில் தனது வாளை உருவி உயர்த்தி, இடது கையால் சோமதத்தனின் தலை மயிரை பிடித்து இழுத்து, காலால் உதைத்து “பிழைத்துப்போ” என அவமானப்படுத்தி அனுப்பினான்.

எல்லா அரசர்களுக்கும் முன்னால் சினியால் தான் அவமானப்படுத்தப்பட்டதை நினைந்து நினைந்து வெட்கி மாழ்கிய சோமதத்தன், மகாதேவரை குறித்து கடும் தவம் இயற்றினான். அவனது தவத்தால் மகிழ்ந்த மகாதேவரும் அவனுக்கு தரிசனம் தந்து, “உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என வரம் கேட்க சொன்னார். இவனும், தன்னை பல அரசர்கள் முன்னிலையில் உதைத்து அவமானப்படுத்திய சினியின் மகனை அதே போல பல அரசர்கள் முன்னிலையில் உதைத்து அவமானப்படுத்தக்கூடிய மகன் தனக்கு வேண்டும் என வரம் கேட்டாம். மகாதேவரும் “அங்ஙனமே ஆகுக” என வரம் தந்தருளி அந்தர்த்தானமானார்.

சினியின் பேரன் சாத்யகி. சோமதத்தனின் மகன் பூரிசிரவஸ். பிள்ளைப்பருவத்தில் இருந்தே, இவர்களுக்குள் அந்த பரம்பரை பகை ஓதி ஓதி வளர்க்கப்பட்டது. எத்தனை தான் சிறப்புகள் இருப்பினும் கோபமும் க்ஷாத்ரமும் (பழிவாங்கும் பண்பு/வன்மம்) க்ஷத்ரியர்களுக்கு உண்டு. க்ஷத்ரியன் என்ற பெயரே அதில் இருந்து உண்டானதுதான். சரி.

வாள் போரில் நிகரற்றவன் பூரிசிரவஸ். கத்திச்சண்டையில் பூரிசிரவசை யாரும் ஜெயிக்க முடியாது என்பது பிரசித்தம். முன்பு கூட ஒரு முறை சாத்யகியை கத்திச்சண்டைக்கு பூரிசிரவஸ் இழுத்த போது பீமசேனன் அவசர அவசரமாக வந்து சாத்யகியை விலக்கி தன் தேரில் அழைத்துப் போய் விட்டான். பூரிசிரவசின் வாள்வீரம் அவ்வளவு பிரசித்தம். அதே போல வில்வன்மையில் சாத்யகி அருச்சுனனை ஒத்தவன் என அனைவரும் சொல்லும் அளவுக்கு சாத்யகி விற்போரில் நிபுணன். அருச்சுனனின் சீடன். (அப்பொழுது கேட்கவா வேண்டும்?)

சரி. துச்சாதனனை தோற்கடித்த பின், துச்சாதனன் துரோணரிடம் போனானா, சாத்யகி மற்ற வீரர்களை ஒரு கை பார்த்த வண்ணம், அருச்சுனனை நெருங்கினான்.

இனிவியாசர்சொல்லுவதைப்பார்க்கலாம்!

சாத்யகி, தூரத்தில் அருச்சுனனின் தேரை கண்டான். தன் உயிர் நண்பனும் ஆசாரியனுமான பல்குணனை கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உற்சாகம் மேலிட, எதிர்ப்பட்ட எல்லாரையும் துவம்சம் பண்ணிக்கொண்டு விஜயனுக்கு சகாயம் பண்ண போனான்.

அப்போது திரிகர்த்தர்களின் விற்படை சாத்யகியை சூழ்ந்து கொண்டு தாக்கியது, தோள்தட்டும் ஓசையும், வாட்களும் ஈட்டிகளும் கதைகளும் நிறைந்த அந்த படையை தனி ஒருவனாக சாத்யகி விற்போரில் சிதறடித்தான். அருச்சுனனை கண்ட உற்சாகத்தால், அவன் வேகம் மேலும் கூடியது போல காணப்பட்டது. பகைவர்களும் அவன் வீரத்தை கண்டு அதிசயித்து வேடிக்கை பார்த்தனர். ஒரு கணம் மேற்கில் காணப்பட்ட சாத்யகி, அடுத்தகணம் கிழக்கிலும் பின் வடக்கிலும் பின் தெற்கிலுமாக தனது தேரிலே மிக்க வேகத்துடன் சஞ்சரித்து, நூறு வீரர்கள் ஒரே உருவில் போரிடுவதை போல போரிட்டான். திரிகர்த்தர்கள் படை கொஞ்ச நேரத்திலேயே ஓட ஆரம்பித்தது. இதைக்கண்டு பொறுக்காத கலிங்கர்கள் சாத்யகியை சூழ்ந்து கொண்டு, மதம் கொண்ட யானையை பாகர் கூட்டம் அங்குசத்தால் குத்துவது போல கணைகளால் துளைக்கப்பார்த்தார்கள். கொஞ்ச நேரம் அவர்களோடு போரிட்டு, அவர்களை கடந்தான் சாத்யகி. கடலிலே கரை காணாமல் நீந்திக்களைத்த ஒருவன், தெங்கும் நுங்கும் தேன்கதலிகளும் நிறைந்த கரையை அருகில் கண்டால் களிப்பது போல களிப்புற்ற சாத்யகி சிம்மநாதம் செய்தான்.

சாத்யகி வருவதைக்கண்ட வாசுதேவன், “பார்த்தனே, அதோ உன் வழியை பின்பற்றி வரும் சினியின் பேரனைப்பார்! எதிரிகளால் வெல்லப்படாதவனே, அவன் உனது சிஷ்யனும் நண்பனுமாவான். எதிர்த்து வந்த மாபெரும் வீரர்களை எல்லாம் துரும்பென மதித்து அந்த இளம் காளை உனக்காக வருகிறான்! எதிரிகளுக்கு பலத்த சேதம் உண்டாக்கி விட்டு, உனக்கு உயிரினும் பிரியமான நண்பன் சாத்யகி வருகிறான், அதோ பார்! துரோணரையும் போஜ ராஜனான க்ருதவர்மனையும் தனது பாணங்களால் நொறுக்கி விட்டு, இந்த சாத்யகி உன்னிடம் வருகிறான்! ஆயுதப்பயிற்சியில் குறையற்றவனும் தருமபுத்திரனுடைய நலனையே குறிக்கோளாக கொண்டவனுமான இந்த சாத்யகி, சிறந்த பல வீரர்களை கொன்று விட்டு உன்னிடம் வருவதைப்பார்! யுத்த அரங்கத்தில் ஒரு செயற்கரிய செயலை செய்து முடித்து விட்டு, உன்னைக்காண வரும் சாத்யகியை பார்! துரோணரை தலைமையாக கொண்ட பல மகாரதர்களுடன் ஒரே தேரில் நின்று, வேறு துணையின்றி போரிட்டு ஜெயித்து, அதோ, உன்னைக்காண வரும் சாத்யகியை பார்! தன் தோள்வலியால் கௌரவப்படையை துளைத்து, யுதிஷ்டிரனால் அனுப்பப்பட்ட சாத்யகி வருகிறான், அதோ பார்! கௌரவர்களிடையே தனக்கு ஈடான ஒரு வீரனும் இல்லாத சாத்யகி, எண்ணிறந்த வீரர்களை எமனுக்கு விருந்தாக்கி விட்டு உன்னை நாடி வருவதை காண்! பசுக்கூட்டங்களில் இருந்து ஒரு சிம்மம் வெளிப்படுவது போல கௌரவப்படைகளுக்குள் இருந்து வெளிப்படும் சாத்யகியைப்பார்! தாமரை போன்ற அழகிய முகங்களுடைய பல அரசர்களின் தலைகளை பூமியின் மேல் பரப்பி விட்டு உன்னிடம் வரும் சாத்யகியை பார்! துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் யுத்தத்தில் வென்று, ஜலாசந்தனை கொன்று விட்டு உன்னிடம் வரும் சாத்யகியைப்பார்! கௌரவர்களை துரும்பென மதித்து, ரத்த ஆற்றினை இன்று உண்டாக்கிய சாத்யகி, உன்னை நோக்கி களிப்புடன் வருவதைப்பார், அருச்சுனா!” என்று சொன்னான்.

பார்த்தனோ, சாத்யகியைக்கண்டு மகிழ்ச்சி அடையாமல், பெருத்த அதிருப்தியே அடைந்தான். கண்ணனிடம் அவன், “திண்மை பொருந்திய அழகிய தோள்களை உடைய கண்ணா, சாத்யகியின் வருகை எனக்கு சிறிதும் திருப்தி அளிப்பதாக இல்லை. கேசவனே, தருமராஜரை தனியாக விட்டு விட்டு இவன் இங்கு வந்து விட்டானே, யுதிஷ்டிரரின் நலம் பற்றி எனக்கு கவலையாக உள்ளது. (அவரைப்பிடிக்க வேண்டும் என முனைப்புடன் உள்ள துரோணரின் சபதத்திலிருந்து அவரைக்காக்க சாத்யகியை நியமித்து விட்டு ஜயத்ரதனை முடிக்க நான் வந்தேன், இவனோ அவரை தனியாக விட்டு விட்டு எனக்கு உதவி செய்ய வருகிறானே) இவனை பிரிந்து அவர் அங்கே யுத்த களத்தில் உயிரோடு உள்ளாரா என சந்தேகமாக உள்ளது.

இவன் அங்கு தருமரை பாதுகாத்துக்கொண்டல்லவோ இருந்திருக்க வேண்டும்? இவன் எதற்காக கேசவா, என்னைப்பின் தொடர்ந்து வருகிறான்? பாதுகாக்க ஆளின்றி தருமராஜர் துரோணர் வசம் அனாதையைப்போல விடப்பட்டு விட்டாரே!

நானோ இன்னும் ஜயத்ரதனை கொன்று முடிக்கவில்லை. அதோ பார், பூரிசிரவஸ் சாத்யகியை போருக்கு அறைகூவி அழைக்கிறான்! நான் இப்போது ஜயத்ரதனை கொல்ல முனைவேனா இல்லை இந்த சாத்யகியை காப்பாற்ற முனைவேனா? சூரியன் வேறு அஸ்தமிக்கத் துவங்கி விட்டான்.

சாத்யகியைப் பொறுத்த வரை, அவன் மகாவீரன் தான், ஆனாலும், என் உயிரை விடப்பிரியமான உண்மை நண்பனான அவன் எனக்காக நாள் முழுக்க போராடி மிகவும் களைத்துள்ளான்.  அவன் தேரில் உள்ள ஆயுதங்கள் குறைந்து உள்ளன, அவனது குதிரைகளும் சாரதிகளும் களைத்து உள்ளார்கள். பூரிசிரவசோ, நன்கு இளைப்பாறி, முழு பலத்துடனும் படைபலத்துடனும் உள்ளான். இந்த போரில் வெற்றி சாத்யகி பக்கம் இருக்குமா கேசவனே? எனக்கு சந்தேகமாக உள்ளது!

கௌரவர் படை எனும் பெரும் சமுத்திரத்தினை அனாயாசமாக கடந்த எனது நண்பன், சினியின் பேரன் சாத்யகி, பூரிசிரவஸ் எனும்  ஒரு பசுவின் குளம்படிக்குட்டையில் மூழ்கி விடுவானோ என எனக்கு அச்சமாக உள்ளதே, ஜனார்த்தனா!

குருகுலஸ்ரேஷ்டனும், ஆயுதங்களில் தேர்ந்தவனும் மகாத்மாவுமான பூரிசிரவசுடன் இப்போது செய்யப்போகும் போரில் சாத்யகி வெற்றியைத்தழுவுவானா?

இவனை இங்கு எனக்காக அனுப்பியது தரும ராஜா யுதிஷ்டிரர் எடுத்த பிழையான முடிவு என நினைக்கிறேன், கண்ணா. த்ரோணரைப்பற்றிய எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், என் மீது கொண்ட அளவற்ற அன்பினால், இவனை எனக்கு சகாயமாக அனுப்பி இருக்கிறார் எனவே நினைக்கிறேன்.

இறைச்சியையே விரும்பும் கழுகு வானத்தில் வட்டமிடுவது போல, யுதிஷ்டிரரையே பிடிக்க முனைந்து அங்கே துரோணர் முயற்சிக்கிறாரே! அரசர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற சந்தகம் எனக்குள் வந்துவிட்டது மாதவா!”, என்று அருச்சுனன், அதிருப்தியும் கவலையும் கலந்த தொனியில் வாசுதேவனிடம் கூறினான்.

அதே சமயம், பரம்பரைப்பகையை நினைத்து மிக்க ஆத்திரத்துடன் பூரிசிரவஸ், களைத்து இருந்த சாத்யகியை நோக்கி போருக்கு அறைகூவி விரைந்தான்.

அப்புறம் என்ன நடந்தது?

அது அடுத்த பதிவில், அன்பர்களே.

உபரித்தகவல்: பல்குணன் = அர்ஜுனன். அவன் பிறந்த உத்தர ஃபால்குணீ நக்ஷத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்பெற்றான். இந்த நக்ஷத்திரத்தை தமிழில் உத்தரம் (கன்னி ராசி) என்கிறோம். இதை அவனே, உத்தர குமாரனிடம் விராடபர்வத்தில் கோஹரன சண்டையின் போது  சொல்கிறான். இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும் மாசம் ஃபால்குணி மாசம். தமிழில் பங்குனி. பல்குணன் என்ற பெயர் அல்லாமல் அர்ஜுனனின் பிற பெயர்களாவன ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹணன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன், சவ்யசாசி, தனஞ்சயன். குந்தியின் மைந்தனாதலால் கௌந்தேயன். பார்த்தன் என்னும் பெயரும் அதே அர்த்தம் தான். குந்தியின் இயற்பெயர் ப்ருதை. ஆக, அவள் மைந்தன் பார்த்தன். பாண்டு மைந்தன் ஆதலால் பாண்டவன். இவை இரண்டும் பாண்டவர் ஐவருக்கும் பொதுவான பெயர்கள். பாண்டவன் என்றால் ஐவர் நினைவும் வரினும் பார்த்தன் என்றால் அர்ஜுனன் நினைவு தான் வரும். இதிலிருந்து, கீர்த்தியும் புகழும் வாய்ந்த மைந்தன் தந்தையின் புகழைவிட, குறிப்பாக தனது தாயின் புகழை பெருக்குவான் என்பது தெள்ளென விளங்குகிறது. தாய்மை வாழ்க.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “மகாபாரத முத்துக்கள் – பகுதி 2

  1. தாய்மை வாழ்க என முடித்திருக்கும் புவனேஷ்வரும் வாழ்க. நல்லதொரு தொடர் பள்ளிக்காலத்தை நினவுபடுத்துகிறது.

  2. தகவல்கள் மட்டுமல்லாது உபரித் தகவல்கள் வேறா?!!. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி. மிக அரியதொரு புராணத் தொடரைப் பதிவு செய்து வருகிறீர்கள். தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  3. ஊக்கமளிக்கும் கருத்துரையிட்ட தோழர் தனுசு அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புவனேஷ்வர்

  4. தனக்கே உரிய தெய்வீகத் தமிழில் பின்னூட்டமிட்டு, ஊக்குவித்து சிறப்பித்த சகோதரி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு எனது வணக்கங்களையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

    புவனேஷ்வர்

  5. மகாபாரதத்தில் வரும் பிரபலமான கதாபாத்திரங்களைத் தாண்டி பல புதிய கதாபாத்திரங்களையும் தங்களது தொடர் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி.

  6. மதிப்பிற்குரிய திரு. சச்சிதானந்தம் அவர்களே,
    தங்கள் பின்னூட்டம் கண்டு மனம் நிறைவுற்றேன்.
    ஆம், மகாபாரதம் கதை அல்ல. உலகின் மிகப்பெரிய காவியம். Longest Epic Poem. லக்ஷம் சுலோகங்களால் ஆனது. அன்றைய வரலாற்றை கூட இருந்து பார்த்த வியாசர் எழுதிய வரலாற்று காவியம். இதில் வெளியில் தெரியாத பல உத்தம கதாபாத்திரங்கள் உண்டு.
    ஏதோ, அடியேனால் முடிந்த அளவு எழுத முயற்ச்சிக்கிறேன்.
    பெரியோர் ஆசியாலும், இறையருளாலும் அங்ஙனமே ஆகுக.

    பணிவன்புடன்,
    புவனேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *