தேமொழி

 

அபி பால்டிமோரில் வளர்ந்தவள்.  ரிக்கியைவிட நான்காண்டுகள் வயதில் சிறியவள். அவளும் ரிச்சர்டும் முதலில் சந்தித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அப்பொழுது அவள் ‘மேரிலாண்ட் பல்கலை’யின் ‘ஸ்மித் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ்’ஸில் நிதியியல் மூன்றாமாண்டு முடித்திருந்தாள். கோடையில் இண்டர்ன் ஆகப் பயிற்சி பெற வில்லியாம்ஸ்பெர்கில் இருக்கும் பால் காரப்பரேஷனுக்கு மூன்று மாதங்களுக்கு வேலைக்கு வந்திருந்தாள். அப்பொழுது ரிச்சர்ட் தனது படிப்பை முடித்துவிட்டு ஹாம்ப்டனில் உள்ள லேஞ்ச்லி  ஏர் ஃபோர்ஸ் பேஸில் பணிபுரிந்து கொண்டிருந்தான். அந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் ஹாம்ப்டனில் உள்ள ஃபோர்ட் மன்றோவில் நடந்தது.  வாணவேடிக்கை,   கண்ட்ரி மியூசிக் பாடகர்கள் ‘எமிலி வெஸ்ட்’ மற்றும் ‘ஜிம்மி வெய்ன்’ ஆகியோரின் சிறப்பு இசைநிகழ்சிகள் நடந்தது.  அபிக்கு எமிலி வெஸ்ட்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவள் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றும் இரு பயிற்சி நிலையில் பணிபுரியும் மற்ற மாணவர்களுடன் வந்து கலந்து கொண்டாள்.

எமிலி வெஸ்ட்டின் நிகழ்ச்சி முடிந்து அடுத்து ஜிம்மி வெய்னின் நிகழ்ச்சி நடந்த பொழுதுதான் ரிக்கியை முதலில் பார்த்தாள்.  அவன் “கவ் பாய்ஸ் அண்ட் இன்ஜின்ஸ்” பாடல் ஆரம்பித்த பொழுது உற்சாகமாகக் கூச்சலிட்டான். பிறகு தனது நண்பர்களுடன் ஆட ஆரம்பித்தான்.  பாடல் முடிந்ததும் பக்கச் சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு ஒரு காலை மடக்கி  சுவரில் ஊன்றி ஓய்வு எடுத்தான்.  அபி அவனுக்கு மேல் வரிசையில் நின்று கொண்டு லெமனேட் குடித்துக் கொண்டிருந்தாள். ‘பரவாயில்லையே நன்றாகவே ஆடுகிறான் இவன்’, என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள். அப்பொழுது அவளுக்கு பின் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி விளையாடிய சிறுவர்கள் இவள் மேல் இடித்துவிட, அபியின் கையில் இருந்த  லெமனேட் இருந்த காகிதக் கோப்பை அவள் கை தவறி அவன் தலையில் விழுந்து அவனை முழுக்காட்டியது.  அவள் அவசர அவசரமாக மன்னிப்பு கேட்பதற்குள், ரிக்கிக்கு இது எப்படி நடந்தது எனப் புரிந்து விட்டது.  ஒரே சமயத்தில் அவள் “மன்னித்துவிடுங்கள்” என்றும், அவன் “பரவாயில்லை” என்றும் சொல்லிக் கொண்டார்கள்.  “என்னை பானத்தால் குளிப்பட்டும் இரண்டாவது பெண் நீங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சிரித்தவாறே போய்விட்டான்.

மறுபடியும் எதிர்பாராமல் அடுத்த வார இறுதியிலும் அவனை சந்தித்தாள். இம்முறை ‘வில்லியம்ஸ்பர்க் புஷ் கார்டன்’ உல்லாசப் பூங்காவில் நண்பர்களுடன் அவள் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பட்டான்.  அந்தச் சமயமும் அவள் சோடா குடித்துக் கொண்டிருந்தாள். கையில் பானத்துடன் அவளைப் பார்த்ததும், அவன் மேல் ஊற்றிவிடுவாள் என்று அச்சம் கொண்டவன் போல சட்டென்று  திரும்பி ஓடுவது போலப் பாசாங்கு செய்து அவளைப் பார்த்துச் சிரித்தான்.  அவளுக்கும் அவன் செய்கையைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து சிரித்ததில் புரைக்கேறியது. பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது அவனிடன் தான் அவனை முழுக்கட்டிய இரண்டாவது பெண் என்று அவன் சொன்னதைக் குறிப்பிட்டு முதலாவது பெண் யாரென்று கேட்டாள். அவனும் மிக உற்சாகமாக தனது பள்ளி இறுதியாண்டு ப்ரோம் நடனத்துணை ஷெர்லி டேவிஸுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட தகராறையும், அவள் அவன் தலையில் மில்க் ஷேக் ஊற்றியதையும், நடனத் திட்டம் தடம் மாறிப் போக ப்ரோம் நடனத்திற்கு அவளது சகோதரியுடன் ஆடியதையும் விவரமாகச் சொன்னான்.  பின்னர் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள், அவ்வப்பொழுது ஒருவரை ஒருவர் ‘போக்’ செய்து கொண்டார்கள்.

அவள் தனது பயிற்சி முடிந்து, விடுமுறை முடிந்து இறுதியாண்டிற்கென மீண்டும் பல்கலை சென்ற பின்னர் அவர்களுக்குத் தங்கள் தொடர்பு சாதாரண நட்பு அளவிற்கும் மேலே சென்று விட்டது புரிந்தது.  ரிக்கி அவ்வப்பொழுது வார இறுதியில் மேரிலாண்ட்  வந்து அவளை சந்தித்தான்.  அவளை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஒரு மோதிரம் பரிசளித்தான்.  அவளும் சம்மதித்து அவள் படிப்பு முடிந்து பட்டம் வாங்கிய பின்னர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

அந்த ஆண்டு இறுதியல் தேங்க்ஸ் கிவ்விங் என்னும் நன்றி கூறும் விழா நடக்கும் வார இறுதியில் அவளைத் தனது வீட்டிற்கு  அழைத்துச் சென்று, அவனது பெற்றோருக்கு அவளை அறிமுகப்படுத்தி அவளை மணந்து கொள்ளப் போவதாகச் சொன்னான்.  அவனது அப்பா வில்லியம்ஸ் கொதித்தெழுந்தார்.  அதற்குக் காரணம் வெள்ளை இனத்தவரான அவரால் கறுப்பினப் பெண்ணான அபியைத் தனது மருமகளாகவோ அல்லது தனது மகனின் துணையாகவோ நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.  ஆனால் அவனது தாயார் அதனைப் பெரிது படுத்தவில்லை.  அவர் வெள்ளை இனத்தவரானாலும் நாட்டின் வட பகுதியிலேயே  பெரும்பாலும் வாழ்ந்தவர். சிக்காகோவில் பிறந்து, நியூயார்க்கில் வளர்ந்து,  வாஷிங்டன் டி.சி. யில் படித்து வேலை பார்த்தவர்.  அப்பொழுதுதான் இராணுவத்தில் பணிபுரிந்த ரிச்சர்டின் அப்பாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து மணந்து கொண்டார்.  அத்துடன் இயல்பாகவே அவர் பரந்த மனத்துடன் இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதவர்.

ஆனால் ரிச்சர்டின் தந்தை வில்லியம்ஸின் பின்புலம் வேறு.  அவர் குடும்பத்தினர் நாட்டின் தென் மாநிலங்களில் ஒன்றில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருப்பவர்கள். வெள்ளை இனத்தவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று ஆழ் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டவர்கள். அப்பா வில்லியம்ஸின் தந்தையும் பெரிய தந்தையும், அதாவது ரிச்சர்டின் தாத்தாவும் பெரிய தாத்தாவும், இனவெறி கொண்ட கே.கே.கே. அல்லது ‘கு க்ளக்ஸ் கிளான்’ (KKK / Ku Klux Klan), என்ற இனவெறிக் கும்பலுடன் மறைமுகத் தொடர்பு கொண்டு ஆதரவும் அளித்ததாக அரசல் புரசலாக ஊரில் செய்திகள் உண்டு.  இந்த இனவெறிக்கூட்டம் கொள்ளையர்கள் போன்று தங்கள் முகத்தைக்  காட்டாமல் வெள்ளை முகமூடி அணிந்து, நீண்ட வெள்ளை அங்கி அணிந்து, கறுப்பர்களுக்கு சம உரிமை தருவதை 1950 மற்றும் 1960 களில் எதிர்த்துக்  கலவரம் செய்த தீவிரவாதிகள். கறுப்பர்களைத் துன்புறுத்துவதையும், அவர்களது வீட்டு வாசல்களில் சிலுவைகளை எரித்து அச்சுறுத்துவதையும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அந்தக் கும்பல் பரவலாகச் செய்து வந்தார்கள். இதுபோன்ற அர்த்தமற்ற பிடிவாதப் போக்கு கொண்ட கொள்கைகளைக் கொண்ட கும்பலுடன் தொடர்பு கொண்டவர்களது குடும்பத்தோர் கறுப்பின ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை நினைத்தும் பார்க்க முடியாதுதான்.

ஆனால் கறுப்பின ஒபாமாவை நாட்டின் அதிபதியாகத் தேர்ந்தெடுத்த இக்கால இளைஞர் கூட்டத்தைச் சார்ந்தவன் ரிச்சர்ட்.  அவனுக்கு ஏனோ எப்பொழுதும் இன வேற்றுமை மனதில்  தோன்றியதில்லை.  அபியையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.   தேங்க்ஸ் கிவிங் பண்டிகைக்கு அபியை அவன் அழைத்து வந்து இவள்தான் என் வருங்கால மனைவியாக வரப் போகிறவள் என்று அறிக்கைவிடுவான் என்று அவன் குடும்பத்தில் யாரும் எதிர்பாக்கவில்லை.  அப்பா வில்லியம்ஸ் அபியிடம் முகம் கொடுத்து பேசவேயில்லை.  ரிச்சர்டின் விருப்பம் தெரிந்தவுடன் அவனிடமும் பேச மறுத்துவிட்டார். அபிக்கு அந்தக் குடும்பப் பண்டிகை அவளது வரவால் மகிழ்ச்சி இழந்தது வருத்தமாக இருந்தது. ஆனால் ரிக்கி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.  அவளையும் அடுத்த நாளே அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.  அபியிடமும், “வருந்தாதே, அவர்கள் அக்கால மனிதர்கள்.  பழமையிலிருந்து வெளி வர விரும்பாத அசட்டுப் பிடிவாதம் என் அப்பாவிற்கு அதிகம்.  நீயும் நானும் சிறியவர்கள் அல்ல. உனக்கும் எனக்கும் என்ன பிடிக்கிறது என்று நமக்குத் தெரியும். வாழ்க்கையில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்து பார்க்கும் அறிவு உள்ளவர்கள்தான்  நாம். நமக்கு பிடித்த வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்ததில் எந்த தவறும் இல்லை,” என்று ஆறுதல் சொன்னான்.

தொடர்ந்து கோடையில் அவர்கள் திட்டப்படியே அபி பட்டம் வாங்கியதும் அவர்கள் திருமணம் நடந்தது.  அபியின் குடும்பமும் உறவினர்களும்,  நண்பர்களும், ரிக்கியுடன் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அவன் பெற்றோர் திருமணத்தை புறக்கணித்து விட்டனர்.  அவன் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவனது திருமண படங்களின் தொகுப்பையும் காணொளியையையும் யூ டியுப், பிக்காஸா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டு செய்தி அனுப்பினான்.  திருமணமான கையோடு அவனுக்கு ஆஃப்கானிஸ்தான் செல்ல வேண்டிய உத்தரவு கிடைத்தது.  எனவே அவன் திரும்பி வரும் வரை குழந்தை பெற்றுக் கொள்வதைத்  தள்ளிப் போடவும், அவள் மேல் படிப்பில் சேர்ந்து அவன் திரும்பி வருவதற்குள் அவளது படிப்பை முடிக்கவும் திட்டம் போட்டார்கள்.  ரிக்கிக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் ஆசை என்று அவளுக்குத் தெரியம்.  குழந்தை பிறக்கும் பொழுது அவன் உடன் இருப்பதை அபியும் விரும்பினாள்.

பெரும்பாலான இராணுவ வீரர்களுக்குத் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது அருகிருக்கும்  வாய்ப்பு கிடைப்பதில்லை. படங்களையும் காணொளிகளையும்தான் முதலில் பார்பார்கள்.  போர் முனையில் இருந்து வந்து சேர்வதற்குள் குழந்தை வளர்ந்திருக்கும்.  யாரோ மூன்றாவது மனிதரை அறிமுகப் படுத்துவது போல இதுதான் உன் அப்பா, இதுதான் உங்கள் பிள்ளை என்று அறிமுகப் படுத்த வேண்டியிருக்கும்.  அவர்களும் வாழ்வில் ஒரே ஒரு முறை கிடைக்கும் அறிய வாய்ப்புகளை, விரைவில் வளரும் குழந்தைகளின் முதல் மழலைச் சொல், முதல் நடை போன்ற மகிழ்ச்சி தரும் அனுபவங்களைத் தொலைத்துவிடுவார்கள். எனவே அவன் போருக்குச் சென்றதும் இவள் படிப்பைத் தொடர்ந்தாள். இருவரும் மின்னஞ்சல் மூலம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வளர்த்துக் கொண்டார்கள்.  மீண்டும் திருமணத்திற்கு முன் இருந்த கல்லூரி நாட்கள் போலவே காலம் சென்றது.

அவன் திரும்பி வருவதையும், அவள்  பட்டம் வாங்குவதையும்  ஒரு சேர்த்துக் கொண்டாட ஹவாய் அல்லது  கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டாடுவது, அல்லது உல்லாசக் கப்பல் பயணம் போவது, எங்கு வாழ்க்கையைத் தொடங்குவது போன்ற சிறியதும் பெரியதுமாக பலப் பலத் திட்டங்கள் இருவரிடமும் இருந்தது.  ஆனால் அத்தனை திட்டங்களும் இராணுவத்தில் இருந்து ஒரு நாள் நள்ளிரவு வந்த தொலைபேசி அவசர செய்தி ஒன்றில் சிதைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியல் நிகழ்ந்த  ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் விமான விபத்தில் ரிச்சர்டும் மேலும் சில வீரர்களும் இறந்து விட்டார்கள் எனவும், அவனது உடல் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு டெலாவேரில் உள்ள டோவர் ஏர் ஃபோர்ஸ் பேஸிற்கு அனுப்பிவைக்கப் படவிருப்பதை அறிவித்து வருத்தமும் தெரிவிக்கப் பட்டது.  தூக்கத்தில் சிறிது நேரம் ஏதும் பயங்கரக் கனவு கண்டு கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் அபிக்கு வந்தது. அதிர்ச்சி மட்டும்தான் அவளுக்கு அப்பொழுது இருந்தது அழுகை சுத்தமாக வரவேயில்லை.  நிலைமை உண்மைதான் என உணர்ந்ததும் ரிச்சர்டின் தாயைக் கூப்பிட்டு செய்தியைச் சொன்னாள். பிறகு அவனது உடலை அவன் ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தாள்.  ரிச்சர்டின் பெற்றோர்கள் அவர்கள் பங்குக்கான ஏற்பாடுகளை தங்கள் ஊரில் தயாராக செய்து வைத்திருந்தார்கள்.

அபி நேற்று இரவு ரிச்சர்டின் ஊருக்கு வந்தாள், நாளை பொழுது விடியும் முன்னரே மீண்டும் பால்டிமோருக்குப் பயணமாவாள்.  ஏனோ வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்தது போல, அர்த்தமில்லாமல் போனது போல உணர்ந்தாள். கைபேசியை எடுத்து மணியைப் பார்த்தாள் நள்ளிரவுக்கு மேலே ஆகியிருந்தது. இன்னமும் மூன்று மணி நேரத்தில் கிளம்ப   வேண்டும். தூக்கம் வரும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. கைபேசி வழியே தனது ஃபிலிக்கர் தளத்திற்குச் சென்று தனது படங்களின் தொகுப்பில் ரிச்சர்டின் படங்களாகத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தாள், கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, பார்வையை மறைத்தது.  கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்ப்பதைத் தொடர்ந்தாள். ரிச்சர்டிற்குப் பிறகு கையோடு  தன்னை வெட்டிவிட்ட ரிச்சர்டின் தந்தை மீதோ, அதனை மறுத்து ஏதும் செய்ய இயலாமல் கலங்கிப் போயிருந்த ரிச்சர்டின் தாயின் மீதோ அவளுக்கு ஏனோ சிறிதும் கோபமே   வரவில்லை. ரிச்சர்டே போன பிறகு இவர்கள் யார் என்ற நிலைக்கு அவள் மனம் எப்பொழுதோ சென்றுவிட்டிருந்தது.

(தொடரும்)

 

படம் உதவி:
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQEkiA2xBeeJAprVUE2GVZSneEGljw3LMTW4BKo_2WAg9m7HKYQ
http://media2.wavy.com//photo/2009/06/09/fireworks1_20090609143951_320_240.JPG

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சிலை அழுதது – 3

  1. வாழ்வின் யதார்த்த நிகழ்வுகளை மிகையில்லாமல் கதை விவரித்துக் கொண்டே செல்லும் பாங்கு அருமை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்…..ஆவலோடு. பாராட்டுக்கள் தேமொழி!

  2. Applause. பாராட்டுக்கள், தேமொழி. அனாவசிய ஆரவாரங்களும் விவரிப்புகளும் இன்றி மிக யதார்த்தமாக, அதே சமயம் மனதை வருடும் வண்ணம் எழுதி கதையை கொண்டு போகிறீர்கள். அடுத்த பகுதிக்காக ஆவலுடன், புவனேஷ்வர்

  3. தொடர்ந்து படித்து ஊக்கப் படுத்திக் கொண்டு வருகிறீர்கள் மேகலா, மிக்க நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  4. ஊக்கம் கொடுக்கும் உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி புவனேஷ்வர்.

    அன்புடன்
    ….. தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *