சக்தி சக்திதாசன்

 

images

 

 

 

 

 

 

அன்பினியவர்களே !

அடுத்தொரு மடலில் அன்பு வணக்கங்களுடன்.

அவசர வாழ்க்கையில் அர்த்தத்தைத் தேடி ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாகரீகம் எனும் பெயரில் பல கலாச்சாரச் சீரழிவுகள் நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதே சமயம் தாம் தமது காலாச்சார மையங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம் எனும் பெயரில் சமுதாயங்கள் தம்மைத் தாமே அந்நியப்படுத்திக் கொண்டு வாழ்கின்றன.

தீவிரவாதம் பல பெயர்களில் குறிப்பாக மதங்களின் பெயரால் பலவகைகளில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இத்தகைய ஒரு சூழல் இங்கிலாந்தைப் போன்ற ஒரு பல்லினக் கலாச்சார மக்கள் நிறைந்த சமுதாய அமைப்பினைக் கொண்ட நாட்டின் அரசாங்கங்களை பலவகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியுள்ளன.

அது மட்டுமில்லாமல் இயந்திரவியல் தொழில் நுட்பம் அதிகரிக்கும் அதே வேகத்தில் சமுதாயத்தில் நிகழும் குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இவைகள் அனைத்துக்கும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அரசாங்கம் கையாளும் விஞ்ஞான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமே நிகழ்வுகளைக் கண்காணிக்கும் தானியங்கி கமெராக்கள்.

இத்தகைய இயந்திரங்கள் பல பொது இடங்கள் பலவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றின் உதவியுடன் பல குற்றச்செயல்கள் தடுக்கப்படுவது உண்மையெனினும் இவற்றினால் மக்களின் பிரத்தியேக உரிமைகள் மீறப்படுகின்றன என்பது பொதுப்படையான சில அமைப்புக்களினாலும், பல பொதுமக்களினாலும் அரசாங்கத்தின் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.

இத்தகைய தெருவோரக் கமிராக்களினாலும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கமிராக்களினாலும் எடுக்கப்படும் படங்கள் எத்தகைய வகையில் உபயோகிக்கப்படுகின்றன என்பதுவே பலரின் அச்சத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இத்தகய நடவடிக்கைகளை ஆங்கிலத்தில் “Big brother watch” என்பார்கள். அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினரால் ஏனையோர்களின் நடவடிக்கை கண்காணிக்கப்படுவதான அர்த்தத்தில் கூறப்படுகிறது.

சரி அதிலென்ன தவறு ?

கேள்வி எழுகிறது அல்லவா? நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நபர்கள் இந்நாட்டின் பிரஜைகள் எமக்கு அதற்கான பொறுப்புணர்வு இருக்கிறது அதி நம்பிக்கையில்லாமல் எமது ஒவ்வொரு செய்கையையும் கண்காணிப்பது எவ்வகையில் நியாயமாகும் ? என்பதுவே இதன் எதிர்ப்பாளர்களின் வாதம்.

ஒன்றும் புரியாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று போய்க் கொண்டிருப்போருக்கு என்ன பயம்? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும் ? நியாயமாக சட்டத்தை மதித்து வாழ்வொருக்கு இத்தகிய கமிராக்கள் இருப்பதால் ஒன்றும் நேரப் போவதில்லையே பின் எதற்காக இந்த எதிர்ப்பு என்கிறார்கள் அரசாங்கமும் இந்தக் கமிராக்கள் இருப்பதனை ஆதரிப்பவர்களும்.

தனிமனித உரிமைகளைப் பாதிப்பது மட்டுமல்ல இனரீதியான பாகுபாட்டையும் மக்களிடையே பிரிவு உணர்ச்சிகளையும் தூண்ட வழிவகுக்கும் பல நடவடிக்கைகளுக்கு இத்தகிய செயல்பாடுகள் காரணமாகின்றன என்கிறார்கள் புலம் பெயர்ந்து இந்நாட்டில் வாழும் பல வேற்று சமூகத்தினர்.

உதாரணமாக 2010ம் ஆண்டு இங்கிலாந்தின் “வெஸ்ட் மிட்லண்ட்ஸ்(West Midlands)” போலிஸ் பிரிவு மன்னிப்புக் கோர வேண்டிய நிலைக்குத் தள்லப்பட்டது. ஏனெனில் இவர்கள் பொருத்திய 200 கமிராக்கள் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளை தனது பார்வையில் கொண்டிருந்த காரணத்தினால்.

2007ம் ஆண்டு நடைபெற்ற இலண்டன் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னனியில் பார்க்கும் போது இத்தகைய கண்காணிப்பு அவசியம் தான் என்கிறார்கள் இதனை ஆதரிப்பவர்கள்.

இவ்வகையான நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு எனும் போர்வையில் மக்களை இனரீதியகாப் பிரித்துப்பார்க்கப் பயன்படுகிறது என்று வாதிடுகிறார்கள் இதன் எதிர்ப்பாளர்கள்.

அது மட்டுமின்றி பாதுகாப்பு எனும் போர்வையில் பாடசாலைகளில் இக்கமிராக்கள் பொருத்தப்படும் போது அங்கே சிறுவர்களின் பிரத்தியேக உரிமைகள் மீறப்படுகின்றன என்பது ஒருசாராரின் வாதம்.

இத்தகிய கமிராக்களின் செயர்பாடுகள் குற்றச் செயல்களைத் தடுக்கும் வீதம் இதன் செயர்பாட்டை நியாயப்படுதுகிறது என்கிறார்கள் மற்றொரு அறிக்கையைச் சுட்டிக் காட்டி வாதிடும் அரசாங்கத் தரப்பு ஆதரவாளர்கள்.

இந்த நிலைமையைச் சாளிக்கும் முகமாக அரசாங்கம் புதிய இக்கமிராக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை அறிமுகம் செய்தார்கள்.

இந்தச் சட்டம் இப்போது அமுலிக்கு வந்துள்ளது.

அது என்ன சட்டம் ?

“Surveillance camera code of practice “ அதாவது கன்காணிப்புக் கமிராக்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்.

“இத்தகைய கமிராக்கள் ஒரு நியாயபூர்வமான சட்டத்திற்கு உட்படும் வகையில் கன்காணிப்பதை நியாஇப்படுத்தும் வகையிலேயே இயக்கப்பட வேண்டும் அத்துடன் இத்தகைய அத்தாட்சி பெறப்படுவதற்கு மிக அழுத்தமான, அவசியமான தேவை இருக்க வேண்டும் ” இதுவே இச்சட்டத்தின் சாரம்சமாகும்.

இந்தச் சட்டம் தாம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்பது இக்காமிராக்களின் இயக்கத்தை எதிர்ப்போரின் வாதம் இருக்கிறது.

தம் நாட்டின் பிரஜைகளின் பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்துவது ஒரு அரசாங்கத்திற்கு எத்த்னை முக்கியமோ அத்தனை முக்கியம் தமது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது.

நாட்டின் குற்றச்செயல்களில் மலரும் பயங்கரவாதச் செயல்கள் என்பனவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த எடுக்கும் நடவ்டிக்கைகளுக்கு தமது ஆதரவை நல்காமல் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜையின் கடமையாகவும் இருக்க முடியாது.

இரண்டு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் எடுத்துப் பார்க்கையில் எதற்கும் ஒரு சமநிலை பேணப்பட வேண்டியதன் அவசியம் புரிகிறது.

அடுத்த மடலில் சந்திக்கும் வரை

அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *