தனுசு

 

இறைவா
நீ என்னை விட்டுப்போ
அப்படியே
எனக்கான உன் கருணையையும் கொண்டுபோ.

இறைவா
உன் இல்லத்தையும் மூடிக்கொள்
அப்படியே
எனக்கான அந்தப் பாதையையும் அடைத்துக்கொள்.

உன்
பரிவும் அருளும்
பங்கு வைத்து பார் முழுக்கக் கொடு
உன்
அன்பும் அணைப்பும்
ஏங்கி நிற்கும் அடியவர்க்கு வழங்கிவிடு.

“வழிபட்டு வாழி” என்ற
உன் மொழி கேட்டு
விழி மூடி
உன் பழியாய்
நான் கிடக்க விரும்பவில்லை.
என்னிலிருந்து
நீ பிழைக்க
என்வழி விட்டு நின்றுவிடு
உன்
எல்லைப் பரப்பு பற்றி எனக்கு கவலையில்லை.

உன் சொர்க்க வாசல்
அதை நீ எனக்கு
தர்மம் செய்து தரவேண்டாம்
வன் நரகமென பயமுறுத்தி
என்னை நீ
உன் பக்கம்
இழுக்கவேண்டாம்.

உன் சக்தி கொண்டு
பக்தி தந்து
பக்தனாக மாற்றிட வேண்டாம்.
சாந்தி என்றும்
சாந்தமென்றும்
முக்தி பெற
சந்தனத்தை பூசவேண்டாம்.

உன் மோகம் தந்து
ஆன்மீகத்தை
என் மீது ஏற்றிடவேண்டாம்
தயவும்
துணையும்
நீயே என
நீயாக மெச்சிக்கொள்ள வேண்டாம்.

மன்னிப்போ
மறதியோ
உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை.
கண்டிப்பாய்
இதை நான் உனக்கு விதிப்பதில்
எனக்கு தயக்கமேதுமில்லை.

ஏனென்றால்….
என் அருகில்
என் தாய் இருக்கிறாள்
அது போதும் எனக்கு.

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “போய்விடு இறைவா….

  1. இறைவனை விடவும் பெற்ற தாய் மேலானவள் என வலியுறுத்தும் கவிதைப் பகிர்விற்கு நன்றி. தங்கள் உணர்வுகள் மிக நன்றாக வெளிப்பட்டிருக்கின்றன. ஆனால் வெளிப்படுத்திய விதத்தில் சற்று வேகம் அதிகமோ என்று தோன்றுகிறது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி. 

  2. தாய்குலத்தின் சார்பில் என் நன்றிகள் தனுசு.
    கடைசி வரிகள் வரும் வரை ஏது திடீரென நாத்திகராக மாறிவிட்டீர்களோ என்ற திகைப்பையும் உருவாக்கி விட்டீர்கள்.
    திருப்புமுனைக் கவிதைகள்தான் உங்கள் சிறப்பு ஆயிற்றே. நல்ல திருப்பம்தான், வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ….. தேமொழி

  3. தாய்மடி இருக்கும் தைரியத்தில், இறைவனைப்

    போய்விடு என்று வழியனுப் பிடுமிச்,

    சேய்விடு கவிதை செம்மை நிறைந்தது!

    கவிதை மிகவும் அருமை. வாழ்த்துக்கள் திரு.தனுசு அவர்களே!

  4. பார்வதி இராமச்சந்திரன். wrote ////இறைவனை விடவும் பெற்ற தாய் மேலானவள் என வலியுறுத்தும் கவிதைப் பகிர்விற்கு நன்றி. தங்கள் உணர்வுகள் மிக நன்றாக வெளிப்பட்டிருக்கின்றன. ஆனால் வெளிப்படுத்திய விதத்தில் சற்று வேகம் அதிகமோ என்று தோன்றுகிறது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றி.

    இறைவன் மீது நமக்கு சமயத்தில் ஆறாத தீராத கோபம் வரும். அப்போதெல்லாம் ஆறுதல் படுத்துவது தாய். , “விடுப்பா எல்லாம் நல்லதுக்கென்று நினைத்துக்கொள், பார் இப்போது நடந்த இந்த வருத்தமான சம்பவத்துக்கு பின்னாளில் ஒரு பெரிய பலன் உண்டாக்குவான் இறைவன் என்று அரவனைப்பான வார்த்தைகள் சொல்லி நம்மை சகஜமாக்குவது அவர் தானே. அப்படி ஒரு சூழ்னிலையில் எழுதியது தாங்களுக்கு பிடித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்சி.

  5. தேமொழி wrote.///தாய்குலத்தின் சார்பில் என் நன்றிகள் தனுசு.
    திருப்புமுனைக் கவிதைகள்தான் உங்கள் சிறப்பு ஆயிற்றே. நல்ல திருப்பம்தான், வாழ்த்துக்கள்.///

    மிக்க நன்றி தேமொழி. எல்லாம் தாங்கள் போன்றோரின் ஊக்கத்தால் வருவதுதான். நமக்கு பிடித்தமானவரிடம் நாம் சமயத்தில் செல்லக்கோபம் கொள்வதில்லையா, அது போல் தான் இதுவும்.

  6. சச்சிதானந்தம் wrote

    ///தாய்மடி இருக்கும் தைரியத்தில், இறைவனைப்

    போய்விடு என்று வழியனுப் பிடுமிச்,

    சேய்விடு கவிதை செம்மை நிறைந்தது!////

    பாராட்டிய தாங்களுக்கு மிக்க நன்றிகள் சச்சிதானந்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *