ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஐம்பெரும் தேவியரின் அணிவகுப்பு!

1

பவள சங்கரி

DSC00600

‘பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என்று வழமையானதொரு நிகழ்வாக இராமல் ஒவ்வொரு ஆண்டும் அரங்க அமைப்பில் தொடங்கி, கூடுதலான எண்ணிக்கையிலான புத்தக விற்பனை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், பிரபலங்களின் சந்திப்பு என மென்மேலும் மெருகேறிக்கொண்டே போகும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் இந்த 2013ம் ஆண்டில் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியாக, சென்ற 12-08-2013ல், அற்புதமான பெண் படைப்பாளிகள் ஐவர் ஒருங்கே அலங்கரிக்கும் அற்புத மேடையை அமைத்துக் கொடுத்திருக்கும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் மகத்தான சாதனை பாராட்டிற்குரியது. ‘பெண்கள் நாட்டின் கண்கள்’ என்று நிரூபிக்கும் வகையில் இந்தப் பெண்கள் ஐவரும் தம் எண்ணற்ற படைப்புகள் மூலம் சமுதாயத்தில் பெரும் மறுமலர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர்கள். இப்பேர்ப்பட்ட பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தவர் மற்றொரு பெண் சாதனையாளரான, எம்.பி. என். நாச்சிமுத்து பொறியியல் கல்லூரியின் தாளாளரும், மறைந்த மாபெரும் மனிதரான திரு சுத்தானந்தம் அவர்களின் துணைவியாருமான திருமதி வசந்தா சுத்தானந்தம் அவர்கள். தம்முடைய தலைமை உரையில் புத்தக வாசிப்பின் அருமை குறித்தும், புத்தகப்பிரியரான தம் கணவரின் நினைவுகள் குறித்தும் தங்கள் இல்லத்தில் அவர் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு இலக்கிய நூல்கள் நிறைந்த நூலகம் குறித்தும் சுவைபட விளக்கினார். ஐம்பெரும் தேவியரின் அறிமுகங்களை வெகு நேர்த்தியாக, மிகச் சிறப்பான முறையில் தமக்கே உரிய நாவன்மையுடன் நிகழ்த்தியிருந்தார், நிகழ்ச்சியின் அமைப்பாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து இரத்தினச் சுருக்கமாக, அழகாகச் சிறு உரை நிகழ்த்தியவர் யாழி நிறுவனங்களின் தலைவர், திருமதி.எழிலரசி மதிவாணன் அவர்கள்.

jyothi

முதலில் பேசிய மாபெரும் எழுத்தாளரான, அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுத்தே தன் மூச்சு எனத்தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது எழுத்து மட்டுமே என்று வாழ்பவர். காலங்கடந்து நிற்கும் அரியதொரு பொக்கிஷமான, சிதம்பரம் அண்ணாமலைச் செட்டியார் பரிசும், விருதும் பெற்ற , 900 பக்கங்கள் கொண்ட சிறந்த சுதந்திர எண்ணங்களைச் சுமந்து வந்திருக்கும் ‘மணிக்கொடி‘ என்ற புதினத்தை தன் வாழ்நாளின் சாதனையாகக் கொண்டு படைத்தவர். வெகு அழகாக, நகைச்சுவை உணர்வுடன், எந்த மேடை அலங்கார வார்த்தைகளும் இல்லாமல் வெகு இயல்பாக நம் வீட்டுப் பெண்மணி போல, காலத்தின் அருமை கருதி மிகச் சுருக்கமாகப் பேசிச் சென்றார், நம் ஜோதிர்லதா கிரிஜா அம்மையார் அவர்கள்.

அடுத்து பேசிய திருமதி விமலா ரமணி அவர்கள். இவருடைய படைப்புகளின் எண்ணிக்கைகளை திரு ஸ்டாலின் அவர்கள் பட்டியலிட்ட போது இது எப்படி சாத்தியம் என்று மிக ஆச்சரியமாக இருந்தது. கற்பனை ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. சின்னச் சின்ன கதைகளுடன், பல மேற்கோள்களுடன் மிக அழகான மேடைப்பேச்சும் அளித்து சபையோரை வெகு எளிதாக தம் புறம் இழுத்துவிட்டார். இவருடைய பேச்சில் என்னை மிகவும் கவர்ந்தது, கவிஞர் அப்துல் ரகுமான் சொன்ன மேற்கோளான, “புத்தகம் வெறும் காகிதம்தான். ஆனால், அதைப் படிக்க படிக்க ஆயுதமாக மாறும்” என்பதும், ‘success’ என்ற ஆங்கில வார்த்தைக்கான விளக்கமும்.நல்ல சமுதாய சிந்தனைகள் வளர வேண்டுமென்றால் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். எழுத்து என்பது ஒரு அக்னி போல, ஒரு டாக்டர் மகன் டாக்டர் ஆவது போலவும், வக்கீல் மகன் வக்கீல் ஆவது போலவும். ஒரு நடிகை மகள் நடிகை ஆவது போலவும்., ஒரு எழுத்தாளர் மகனோ அல்லது மகளோ எழுத்தாளராகி விட முடியாது. எழுத்தாளரின் வாரிசு என்பதாலேயே ஒருவர் எழுத்தாளர் ஆகிவிட முடியாது, அதற்கு சிந்தனை அவசியம். சிந்திக்கும் திறமை இருந்தால் மட்டுமே அவன் எழுத்தாளர் ஆக முடியும் என்றும் ஆணித்தரமாகக் கூறியதுதான்!

அடுத்து வந்த அற்புதமான கவிஞர், இரா.மீனாட்சி அவர்கள், சாகித்ய அகாடமி விருதின் குழு உறுப்பினராக இருந்தவர், கவிக்கோ என்ற பட்டம் பெற்றவர், சிறந்த கவிஞர், படைப்பாளி என்பதையும் மீறி, தான் ஒரு சிறந்த மனிதாபிமானி என்பதையும் நிரூபிக்கும் வகையில் பாண்டிச்சேரி ஆரோவில் குழந்தைகள் காப்பகத்தின் ‘அக்கா’ என்று போற்றப்படும் அன்பு நெஞ்சம் கொண்டவர். தம் உரை முழுவதையும் அழகான கவிதை நடையிலேயே வழங்கியவர். பழம்பெரும் படைப்பாளிகளின் கீர்த்தியை வெகு நேர்த்தியாக கவிச்சரமாகக் கோர்த்து, அற்புதமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

‘தரையில் இறங்கும் விமானம்’ தந்த தவப்புதல்வி எழுத்தாளர் திருமதி இந்துமதி இவர்தான் என்பது அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும், செய்கையிலும் பிரதிபலித்தது. இயற்கையோடு ஒன்றிய எண்ணங்களைச் சுமந்து, வாழ்க்கையை மிக அழகாக இரசிக்கும் வல்லமை பெற்றவர் என்பதையும் அவர்தம் உரையின் மூலம் எளிதாக விளங்கிக் கொள்ள முடிந்தது. வாசிக்கும் வழமையே தம் மூச்சாகக் கொண்டு வாழ்பவர் என்பதைத் தம் பேச்சின் மூலம் வெகு இயல்பாக உணர்த்தியவர். ஒரு குழந்தைக்கு பாட்டி, தாத்தாவின் அருகண்மை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அற்புதமாகத் தம் பாட்டியின் நினைவலைகளுடன் பகிர்ந்து கொண்டார். தன்னைப்போலவே தன் மகனும் சிறந்த புத்தகப் பிரியர் என்பதை மிகப்பெருமையான ஒரு தாயாக தலை நிமிர்ந்து கொண்டாடிய விதம் அருமை. நல்ல சமுதாயச் சிந்தனையாளர் என்பதை வார்த்தைக்கு வார்த்தை நிரூபித்தார், இந்த மிகச் சிறந்த படைப்பாளியான இந்துமதி அவர்கள்.

DSC00566

இறுதியாக அத்துனைப் பேரையும் பேச்சு மூச்சின்றி கட்டிப்போடச் செய்தவர், உலகறிந்த மிகப்பெரும் படைப்பாளியான திருமதி சிவசங்கரி அவர்கள். வ.உ.சி. பூங்கா மைதானத்தின் பிரம்மாண்ட கூட்டத்தைக் கண்ட சிவசங்கரி அவர்கள் மிகவும் பிரம்மித்துப் போனார்கள். இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு புத்தக விழாவிலும் பங்கேற்று இருந்தாலும், இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப்போல இதுவரை எங்கும் பார்த்தது இல்லை என்றும் “உங்களை எழுத்தாளராகிய நான் தலைவணங்கி பாராட்டுகிறேன்” என்றும் உணர்வுப்பூர்வமாகப் பேசினார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் அப்துல்கலாம் அவர்களின் பேச்சு பற்றியும் மிக வியந்து பாராட்டினார். இவருடைய மிக நீண்ட சாதனைப்பட்டியல் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அவர்தம் வாழ்நாள் சாதனையாக எண்ணி, மகிழ்ந்திருப்பது, அவருடைய 16 ஆண்டுகால முழுமையான உழைப்பான, இந்திய மொழிகளின் பாலங்களாக அமைந்ததுதான். 47 நாட்கள் என்ற அவருடைய புதினம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து அவரே பேசியது சுவையாக இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவருடைய இந்த நாவலை , ஒரு கல்லூரிக் கருத்தரங்கில் வைத்து மாணவர்களின் மத்தியில் ஆய்வு செய்தது குறித்து அவர் சொன்ன தகவல்கள் குறிப்பிடத்தக்கவை. இன்றைய காலகட்டத்திலும் மிகப்பொருத்தமாக இருக்கக்கூடியது. அவருடைய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற புதினம் மனதை விட்டும் என்றும் அகலாத ஒரு சிறந்த சமுதாய அக்கறையுடனானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறந்த இந்த சமகால எழுத்தாளர்களுடன் கலந்து உரையாடியதில் உள்ளம் பூரித்ததும் உண்மை. எத்துனைப் பிரபலமாக இருந்தாலும், மிக எளிமையாகவும், அன்புடனும், மனித நேயத்துடனும் பழகுவதிலும் உள்ளம் நெகிழச் செய்தார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஐம்பெரும் தேவியரின் அணிவகுப்பு!

  1. அருமையானதொரு பகிர்வு. திருமதி.ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் ‘மணிக்கொடி’ நாவல், கல்கியில் தொடராக வெளிவந்த போது படித்திருக்கிறேன். தாங்கள் கூறியது போல், அது காலங்கடந்து நிற்கும் அரியதொரு பொக்கிஷம்.

    திருமதி.விமலா ரமணி அவர்களது கருத்துக்கள் ஒவ்வொன்றும் லட்சம் பொன் பெறும். திருமதி.இந்துமதி அவர்களை, ‘நல்ல சமுதாயச் சிந்தனையாளர்’ என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது சாலப் பொருத்தம். அவர் எழுதிய‌ ‘மண்ணில் தெரியுமோ வானம்’ இன்னும் மனதில் ரீங்காரமிடுகிறது. மனிதர்களால் மிகவும் காயப்படும் தருணங்களில், அந்தக் கதையில் கதாநாயகி ‘அகிலா’வே வந்து முன்னிற்பாள். 47 நாட்கள் என்ற  திருமதி.சிவசங்கரி அவர்களின்  புதினம் ஏற்படுத்திய தாக்கமே, இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் நல்லதொரு திரைப்படமாகவும் அதனைக் கொணர்ந்தது. ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ மோகம் ஓரளவுக்குக் குறைய, அது காரணமாக இருந்தது எனலாம்.

    இவர்களை எல்லாம் சந்தித்து தாங்கள் உரையாடியது அறிந்து, மிக்க மகிழ்ச்சி. அதே சமயம், ஈரோடில் இல்லாமல் போனோமே என்றும் நினைத்துக் கொண்டேன். நல்லதொரு நிகழ்வைப் பற்றி பகிர்ந்தமைக்கு என் உளமார்ந்த நன்றிகள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.