பெருவை  பார்த்தசாரதி

 

இனி ஒரு சுதந்திரம்!…

வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..

images11

இன்று (15-08-2013) 67 வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஏழெடுக்குப் பாதுகாப்பின் அரவணைப்பில், நமது நாட்டின் தலைவர்களால் நாடெங்கிலும் நமது தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இந்தியாவின் சாதனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இந்த சுதந்திர தினத்தின்போது மிகவும் பெருமைப் படவேண்டிய முக்கியச் செய்திகளுள், இந்தியாவில் தயாரித்த பிரமாண்டமான விமானம்தாங்கிக் கப்பல் “விக்ராந்த்” கண்டிப்பாக இடம்பெற்று அனைவராலும் பாராட்டப் படவேண்டிய தகுதியான செய்தியாக இருக்கிறது. தேசியக்கொடியேற்றி தலைவர்களெல்லாம் சிறப்புரையாற்றும்போது, இதுபோல் இன்னும் பல இந்தியப் பெருமைகளை அள்ளி அடுக்குவார்கள்.

இதே ஆண்டில் சுதந்திரம் அடைந்த அண்டை நாடுகளோடு நம்மை ஒப்பிடும்போது, 60 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் நிறைய வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதில் மற்ற நாட்டிற்கு இல்லாத பெருமை நமது நாட்டிற்கு உண்டு. அதே சமயத்தில் மற்ற விஷயத்திலும் அதாவது, உலக வங்கியில் இந்தியாவின் கடன் பாக்கி, பொருளாதார நிலைமை, நாட்டின் பாதுகாப்பு, தற்காப்பு இலக்கணம், அனைவருக்கும் கல்வி போன்றவற்றில், மற்ற நாடுகளை விட இன்னமும் பின் தங்கி இருப்பது வருத்தம் தரக்கூடியது.

ஆனால், நம் சுதந்திரம் அடைந்து என்ன சாதித்திருக்கிறோம் என்று நம் வீட்டில் இருக்கும் வயதான முதியவர்களைக் (சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவர்கள்) கேட்டுப் பாருங்கள், அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்காது. ஏனென்றால்?…..காலணி ஆதிக்கத்தால் அன்று பாரதம் பாதிப்படைந்திருந்த போதிலும், நேரத்திற்கு எல்லாம் கிடைத்தது, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி பற்றி, மரியாதையும் மதிப்பும் மேலோங்கி இருந்தது பற்றி, வேடிக்கையாக உதாரணங்கள் சொல்லி விவரிப்பார்கள்.

தண்ணீர் தட்டுப்பாட்டால், அண்டை மாநில உறவுகள் மோசமடைந்தது, கல்வி வியாபாரமாகியது, லஞ்சம் தலைவிரித்தாடுவது, இப்படி நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளை அள்ளி அடுக்குவார்கள். மற்ற விஷயத்தைவிட இன்று அதிக அளவில் பெருகி வரும் “முதியோர் இல்லம்” அதில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

நாளை சுதந்திர தினம்,

இன்றே டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி பதுக்கி விடத் துடிக்கும் இளைஞர் பட்டாளம்,

புதிய சினிமாப் படம் பார்ப்பதற்கு டிக்கட் வாங்க, சுதந்திர தினத்தன்று கியூவில் நிற்கும் பாமர ஏழை மக்கள்,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விடுமுறையை வீணடிக்கும் கூட்டம்,

இதுதான் சுதந்திர தினக் கொண்டாட்டமாக இன்றய நிலை.

ஒரு காலத்தில் நமது நாடு “பாரதம்” என்ற பெயரில் உலகம் முழுவதும் அறியப்பட்டு, அங்கே நமது நாட்டின் கலாச்சாரம் மேலோங்கி இருந்தது. இன்று அது மாசு படத்தொடங்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் புதுதில்லியில் மருத்துவ மாணவிக்கு நேர்ந்த கொடுமை உலகையே உலுக்கியது, இதுபோல தருமபுரி சம்பவம் போன்ற பலவற்றைச் சொல்ல முடியும்.

சுதந்திரம் அடைந்த ஆண்டிலிருந்து, இன்று வரை என்னன்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?..

எந்தந்த துறைகளில் நாம் இன்னும் முன்னேறவில்லை?…

நம் நாட்டில் கல்வி அறிவு பெற்ற இளைய சமுதாயத்தினர் ஏன் வெளிநாட்டில் பணி செய்கிறார்கள்?..

சுதந்திர இந்தியாவில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும், ஆலயங்களிலும் ஏன் குண்டு வெடிப்பு?…

“சுதந்திரம்” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?…

பேச்சுச் சுதந்திரத்தால் வன்முறை,

எழுத்துச் சுதந்திரத்தால் கலவரம்,

மொழிச் சுதந்திரத்தால் இனப்படுகொலை,

ஒவ்வொரு ஆண்டும் “சுதந்திரதின” விழாவைக்கூடத் தகுந்த பாதுகாப்பின்றி சுதந்திரமாகக் கொண்டாடமுடியவில்லையே ஏன்?..

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடினால்!.. எல்லாவற்றுக்கும்  இன்னும் ஒரு சுதந்திரம் தேவை  என்று போராட வேண்டி இருக்கும்.

மஹத்மா, நேதாஜி, நேரு, திலகர், வஉசி போன்ற பல தலைவர்களை நினைத்து நாட்டுப் பற்றோடு சுதந்திர தினத்தை உண்மையிலேயே கொண்டாடுகிறோமா?.. என்றால்!…. “இல்லை” என்பதே சரியான பதிலாக இருக்கும் போலிருக்கிறது.

downloadஇதையெல்லாம் அன்றே யோசித்துப் பார்த்ததால்தானோ என்னவோ, 200 ஆண்டுகால காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் போது, அந்த மகிழ்ச்சியில் “மஹாத்மா” அவர்கள் பங்கெடுக்கவில்லை என்பதை இங்கே, இந்த நேரத்தில் கண்டிப்பாக நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு எவ்வளவு துன்பங்களை மக்கள் அனுபவித்தார்களோ, அது இப்போதும் குறைந்த பாடில்லை. இருந்தாலும், இதுவரை சாதித்ததை நினைத்து, நேர்மறை எண்ணங்களோடு  “சுதந்திர தின வாழ்த்துக்களை”   ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

“அனைவருக்கும் அறுபத்து ஏழாவது சுதந்திர தின வாழ்த்துக்கள்”

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “இனி ஒரு சுதந்திரம்!…

 1. சிந்திக்கத் தூண்டும் அருமையான கட்டுரை. நன்று.
  சுதந்திர தின வாழ்த்துக்கள்.

 2. ஆஹா, இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல சுருக்கமாக இன்றைய நிலையை விளக்குதல் அரிது.
  சிறார்களில் பலருக்கு சுதந்திர தினம் “லீவு”, மிட்டாய் தருவார்கள் என்பதோடு போகிறது. வளர்ந்தவர்களுக்கு தேசீய விடுமுறை, பாப்பையா ஐயாவின் பட்டிமன்றம், சினிமா என்று போகிறது.
  சரி…. பின்னூட்டத்தில் வந்து ஏன் புலம்ப வேண்டும்? தாங்கள் சொல்லியவற்றை அடியேன் வருத்தத்துடன் வழிமொழிகிறேன். வருத்தம் வழிமொழிவதற்கு அல்ல. வழிமொழியும் விஷயத்துக்கு.
  அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  பணிவன்புடன்
  புவனேஷ்வர்

 3. தீர்ப்புகள் எழுதும் துணிவோடு,

  நெருப்புடன் மோதும் மனதோடு,

  புது சரித்திரம் படைக்கும் தெளிவோடு,

  சுதந்திர நாளைக் கொண்டாடுவோம்!

  சிந்தனையைத் தட்டி எழுப்பும் தங்களின் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றிகளுடன், நேர்மறையான நம்பிக்கைகளுடன் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

 4. பின்னூட்டம் அளிப்பது தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளிக்கிறது.   படித்தவுடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர்கள் தேமொழி, புவனேஷ்வர், சச்சிதானந்தம் அவர்களுக்கு நன்றி.  

 5. சுதந்திர தினத்தன்று, நல்ல சிந்தனைகளைத் தூண்டும் அருமையான கட்டுரை ஒன்றை நம் ‘நல்வழிகாட்டி’ பெருவை பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் படித்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல சிந்தனைகளை அள்ளித்தாருங்கள்! தங்களுக்கு என் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *