கென்யா பயணம் – 5
நாகேஸ்வரி அண்ணாமலை
நேஷனல் ஜியாகிரபிக் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஆப்பிரிக்க சவானாவைப் (African Savannah) பார்த்திருக்கிறேன். இப்போது அதை நைரோபி நேஷனல் பார்க்கில் நேரில் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. கென்யாவில் நிறைய நேஷனல் பார்க்குகள் இருக்கின்றன. ஒரு பெரிய நகருக்கு அருகில் ஒரு வனவிலங்குகள் வாழும் காடு இருக்கிறது என்பது இந்தப் பார்க்கின் விஷேசம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்துவிரிந்திருக்கும், நீண்டு வளர்ந்த கோரைப் புல் மட்டுமே வளர்ந்திருக்கும் சவானாவின் ஊடே ஒரு வேனில் கச்சா ரோடுகளின் இடையே சென்றபோது பல வனவிலங்குகளைப் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே சவானாவுக்கே உரிய குடை போல் வளர்ந்திருக்கும் அகேசியா (Acacia) என்னும் மரங்களையும் பார்க்க முடிந்தது.
இந்த பார்க் நைரோபியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதன் ஆரம்பத்தில் அனாதை விலங்குகளின் புகலிடமாக ஒரு மிருகக்காட்சிசாலை அமைந்திருக்கிறது. பார்க்கிற்குள் நுழைவதற்கு முன்பே இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் உள்ள ஒரு மிகப் பெரிய ஒற்றுமை தெளிவானது! நாங்கள் வேனில் உள்ளே நுழைவதற்குரிய நுழைவுக் கட்டணம் வாங்கச் சென்றபோது ஏற்கனவே சிலர் அங்கு டிக்கெட் வாங்க முயன்றுகொண்டிருந்தனர். எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு எங்களை வெளியே போகச் சொல்லிவிட்டு அங்கு இருந்த இன்னொரு பார்ட்டியிடம் ஏதோ பேரம் பேசத் தொடங்கினார் டிக்கெட் கொடுப்பவர். உள்ளே செல்வதற்கு பெரிய வேன்களுக்கு ஒரு கட்டணமும் சிறிய கார்களுக்கு குறைந்த கட்டணமும் வசூலிக்கிறார்கள். மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு வாகனத்தில் செல்பவர்கள் இருந்தால் கட்டணம் அதிகம். கென்யாவில் எல்லா இடங்களிலுமே கென்யா நாட்டுப் பிரஜைகளுக்குக் குறைந்த ரேட். குழந்தைகளுக்கு இன்னும் குறைந்த ரேட். வெளிநாட்டுப் பயணிகளுக்கு உள்நாட்டுப் பயணிகளை விட கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகம். இன்னொரு பார்ட்டி ஆப்பிரிக்காவிலுள்ள இன்னொரு நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள். இவர்களும் வெளிநாட்டுப் பயணிகள் போல்தான் கட்டணம் செலுத்த வேண்டும். ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளிலிருந்து வருபவர்களுக்கென்று தனிச் சலுகை எதுவும் கிடையாது. ஆனால் வெளியிலிருந்து வந்த அந்தப் பயணிகள் உள்நாட்டுப் பயணிகள் ரேட்டில் டிக்கெட் வாங்குவதற்கு டிக்கெட் வினியோகிப்பவரிடம் லஞ்சம் கொடுத்ததாகப் பின்னால் எங்கள் ஓட்டுநர் எங்களிடம் கூறினார். மேலும் பெரிய காரில் வந்துவிட்டு சிறிய காருக்குரிய ரேட்டையும் கொடுத்ததாகச் சொன்னார்.
வனவிலங்குகளைப் பார்ப்பதற்காகச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த பார்க்கிற்குள் கட்டனம் செலுத்திச் செல்ல முடியும். ஆனால் தாங்கள் வேலைசெய்யும் இடங்களிலிருந்து வீடு திரும்பும்போது பார்க்கைச் சுற்றிக்கொண்டு செல்வதர்குப் பதில் இதன் வழியாகச் சென்றால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் வெகுவாகக் குறையும் என்பதால் பார்க் காவலர்களிடம் லஞ்சம் கொடுத்து இதனூடே செல்கிறார்களாம். வளர்ந்துவரும் நாடுகள் எல்லாவற்றிலும் சட்டத்தை மதிக்காத சாபக்கேடு இருக்கிறது.
சவானாவின் நுழைவாயிலிலிருந்து கொஞ்சதூரம் சென்றதுமே ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது. ஒரு முறை யானகளைத் திருட்டுத்தனமாகக் கொன்று பல கோடி ரூபாய் பெறுமான தந்தங்களைக் கடத்திச் சென்ற ஒரு திருட்டுக் கும்பலைப் பிடித்து அவர்கள் திருடிச் சென்ற தந்தங்களை இந்த இடத்தில் வைத்து எரித்தார்களாம். அப்படி எரித்தால் தந்தத்திற்குப் பணம் கிடைக்காது என்று யானைகளைக் கொல்லமாட்டார்கள் என்பது நம்பிக்கை. அதன் நினைவாக மேடை போன்ற ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள். ஆயினும் தந்தங்கள் திருட்டுப் போவது குறையவில்லையாம். அதிலும் வளமடைந்து வரும் சீனாவில் தந்தத்தின் தேவை பெருகி வருவதால் ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளைக் கொன்று தந்தங்களைத் திருடுவதும் கூடிக்கொண்டுதான் போகிறதாம்.
சவான்னாவின் நடுவே சில இடங்களில் தண்ணீர்க் குட்டைகள் இருக்கின்றன. அவற்றில் தண்ணீர் குடிக்க மிருகங்கள் வருமாம். ஒரு குட்டையருகே ஏழெட்டு ஒட்டகச் சிவிங்கிகளைப் பார்த்தோம். Gazelle என்னும் ஒரு வகை மான் கூட்டம் கூட்டமாகத் திரிந்துகொண்டிருந்தது. கினி கோழிகள், காட்டெருமை, காண்டாமிருகம், தீக்கோழிகள், வரிக்குதிரை ஆகியவையும் காணக் கிடைத்தன. சிறுத்தை, புலி போன்றவை இருட்டிய பிறகுதான் வெளியே வருமாம். கென்யாவின் சில பார்க்குகளில் இடம்பெயரும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலைச் சரிவிலிருந்து இறங்கியதும் ஓடும் நதிக்குள் புகுந்து கடப்பதையும் நதியில் வாழும் முதலைகளுக்கு ஒரு சில காட்டெருமைகள் இரையாவதையும் பர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிறைய உல்லாசப் பயணிகள் வருவார்களாம். அங்கெல்லாம் போவதற்கு எங்களுக்கு விருப்பமில்லை.
ஒட்டகச் சிவிங்கிக்கென்று பார்க்கின் ஒரு மூலையில் ஒரு சரணாலாயம் இருக்கிறது. இதற்கு சிவிங்கி பார்க் (Giraffe Park) என்று பெயர். ஒட்டகச் சிவிங்கியில் இரண்டு இனங்கள் உண்டு. ஒரு இனம் மறைந்துவருகிறது. இந்த இனத்தைக் காப்பாறுவதற்காக இந்தச் சரணாலயம் ஆரம்பிக்க்ப்பட்டது. இதை ஆரம்பித்தவரும் ஒரு ஐரோப்பியரே. இதைப் பார்ப்பதற்கும் கூட்டம் வருகிறது. உள்ளே போகக் க்ட்டணம் உண்டு. ஒரு சிறிய இடத்திற்குள்தான் நாம் போக முடியும். அதில் உயரமான ஒரு மேடை அமைத்திருக்கிறார்கள். அதில் ஏறி நின்றால் ஒட்டகச் சிவிங்கியின் தலை உயரத்தில் நிற்கலாம். நின்றுகொண்டு பக்கத்தில் வரும் ஒட்ட்கசிவிங்கிக்கு தீனி கொடுக்கலாம். கொடுப்பதற்கென்றே ஸ்பெஷலாகச் செய்யப்பட்ட உணவு உருண்டைகள் கிடைக்கின்றன. ஒட்டகச்சிவிங்கியின் வாயைத் தொடும் அளவில் பக்கத்தில் நின்றுகொண்டு அதன் நாக்கில் உருண்டையை வைக்கலாம். அது நம் கையை நக்கும். ஒட்டகசிவிங்கியைப் பக்கத்தில் பார்க்காதவர்களுக்கு இது ஒரு புது அனுபவம்.
நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் யானைக் குட்டிகளின் காப்பகமும் ஒன்று (Elephant Orphange). தந்தத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்ட தாய் யானையின் இளம் குட்டிகளை ரோந்துபோகும் வனஅதிகாரிகள் காப்பாற்றிக் இந்தக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். வியாதியால் இறந்துபோன தாயின் இளம் குட்டிகளையும் இப்படிக் காப்பாற்றுகிறார்கள். யானைக் கூட்டத்ததிலிருந்து பிரிந்த யானைக் குட்டி வழி தவறி, நீர் குடிக்கச் சென்று கிணற்றில் விழுந்துவிடுவதும் உண்டு. இந்தக் குட்டிகளையும் காப்பாற்றிக் காப்பகத்திற்குக் கொண்டுவருகிறார்கள். இந்தக் காப்பகத்தின் நோக்கம் ஐந்தாறு ஆண்டுகள் குட்டிகளைக் கண்ணும்கருத்துமாக வள்ர்த்துப் பின் காட்டில் விட்டுவிடுவது. அங்கே அவை ஒரு யானைக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பிழைத்துக்கொள்ளுமாம்.
ஒரு ஐரோப்பிய தம்பதிக்ள் முதலில் இந்தக் காப்பகத்தை ஆரம்பித்தார்களாம். யானை குட்டி நான்கு வருடங்கள் வரை தாய்ப்பால் குடிக்குமாம். அனாதைக் குட்டிகளுக்க்கு மாட்டுப்பால் ஒத்துக்கொள்ளாதாம். அதனால் மனிதக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் புட்டிப்பாலை பெரிய பாட்டில்களில் அடைத்துக் கொடுக்கிறார்கள். இது தினமும் பதினொரு மணிக்கு நடக்கும். இதற்குக் குட்டிகளைக காட்டுக்குள்ளேயிருந்து கூட்டிவந்து ஒரு வளைவுக்குள் விடுவார்கள். இந்தக் காட்சியைப் பொதுமக்கள் சுற்றி நின்று பார்கக்லாம். இதற்குக் கட்டணம் உண்டு. பல உல்லாசப் பயணிகள் இதைப் பார்க்கக் கூடுகிறார்கள். கென்யாவின் பள்ளிக் குழந்தைகளையும் பள்ளி நிர்வாகத்தினர் கூட்டிக்கொண்டு வருகிறார்கள்.
குட்டி யானைகள் வரிசையாக நடந்துவந்து பால் பாட்டில்களுக்கு முன்னால் வந்து நிற்கும் அழகு ரசிக்கத் தகுந்தது. பாலைக் குடித்துவிட்டு ஒர் மணி நேரம் மண்ணை வாரி இறைத்தும் தண்ணீரில் இறங்கியும் விளையாடுகின்றன. ஒவ்வொரு குட்டிக்கும் தனிப் பெயர் உண்டு; தனிக் காவலரும் உண்டு. ஒரு யானைக் குட்டிக்கு வயது நான்கு மாதமே. தாயை ஒரு நாளிலேயே பிரிந்துவிட்டது. அன்றிலிருந்து அது காப்பகத்தில் வள்ர்கிறது. தாயைப் பிரிந்த சோகம் அதன் முகத்தில் இன்னும் காணப்பட்டது. இது பிழைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
நாங்கள் காப்பகத்திற்குப் போன அன்று பல நாட்டுப் பயணிகள் வந்திருந்தனர். கென்யாவைச் சேர்ந்த வசதியான ஒரு ஆரம்பப் பள்ளியின் குழந்தைகளும் பள்ளிச் சீருடை அணிந்து வந்திருந்தார்கள். ஒரு காவலர் ஒவ்வொரு குட்டியின் கதையையும் சொனன்னார். இந்தக் குட்டிகளின் பராமரிப்புச் செலவுக்கு உதவும் வகையில் யாரும் ஆண்டுக்கு ஐம்பது டாலர் செலுத்தித் தத்துஎடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு குட்டிக்கும் தத்துஎடுப்பவர்கள் பலர் இருப்பார்கள். இவர்களுக்கு மாதம்தோறும் தத்தெடுத்த குட்டியின் வளர்ச்சியை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள். குட்டியின் படத்தையும் அவ்வப்போது அனுப்புவார்கள், பார்க்க வந்த பலர் பணம் கொடுத்தார்கள்.
இங்கு பல நினவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. யானைப் படம் போட்ட பைகள், T ஷர்ட்டுகள், யானை உருவங்கள் முதலியனவற்றைப் பலரும் வாங்கினார்கள். இந்தப் பணமும் காப்பகத்துக்குப் போகும்.
மிருகங்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். அவற்றை மிருகக் காட்சிச் சாலையில் பார்ப்பதை விட அவற்றின் இயற்கைச் சூழலிலேயே பார்ப்பது ஒரு தனி இன்பம். அந்த இன்பம் எனக்குக் கென்யாவில் நிறையவே கிடைத்தது.
சரணாலயத்தின் படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.
https://picasaweb.google.com/108173580006522327175/KenyaWildlife?authkey=Gv1sRgCJ67k97mpOaxQQ
படங்கள்: மெல்லியல்
(தொடரும்)
விலங்குகளின் நடமாட்டம் குறித்த நேரடி வர்ணனை கேட்பது போல மிகவும் விறுவிறுப்பான நடை. புகைப்படங்களும் அருமை. நன்றி.