ராமஸ்வாமி ஸம்பத்

 porus

“அன்பரே! ஜீலம் நதிக்கரையில் அடாது மழை பெய்தாலும் விடாது நடந்த யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த தருணத்தில், தினம் மாலையில் போர் நிலவரம் பற்றி என்னிடம் விவரிப்பீர்கள். போரஸின் பராக்கிரமத்தையும் சாகசத்தையும் வெகுவாக சிலாகித்து அவருடைய வீரத்தினைப் போற்றுவீர்கள். ‘உண்மையிலேயே போரஸ் எனக்குச் சரியான ஜோடி’ என்றெல்லாம் சொல்வீர்கள்.

“ஒரு மாலை, இருபக்கங்களிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் பற்றி விவரித்து, ‘போரஸை யுத்த தந்திரங்களால்தான் தோற்கடிக்க முடியும்’ என்று கூறினீர்கள். அதற்கான திட்டத்தையும் என்னிடம் விவரித்தீர்கள். ’அதன்படி புறமுதுகிட்டு ஓடுவதுபோல் பாசாங்கு செய்து, போர் முடிந்து விட்டதாக போரஸை நம்பவைத்து, அவன் படை அயர்ந்த நிலையில் இருக்கும்போது பின்பக்கமாகச் சென்று தாக்கப்போவதுதான் அந்த திட்டம். அதனால் அவன் குழப்பமடைந்து தன் படையின் பெரும் பகுதியை அங்கு நகர்த்துவான். அப்போது நான் இப்பக்கத்திலிருந்து போரஸைத் தாக்குவேன்’ என்றீர்கள். ’உங்கள் படையும் இரண்டாகி பாதுகாப்பு குறைந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ’ என்று எனக்கு அச்சம் மேலிட்டது.

“பௌர்ணமி நாளான அன்றிரவு இதே போன்று கொட்டும் மழையில், நான் ஒரு பவுரவ ஒற்றன்போல் வேடமிட்டு சுலபமாக போரஸின் கூடாரத்திற்குள் நுழைந்தேன். கவலை தோய்ந்த முகத்தோடு அவர் அமர்ந்திருந்தார். வேடத்தைக் களைந்துவிட்டிருந்த என்னை அவர் வியப்புடன் நோக்கி, “பெண்ணே நீ யார்? எதற்கு இந்த நள்ளிரவில் கொட்டும் மழையில் என் கூடாரத்திற்கு தனியே வந்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?’’ என்றார். நான், ‘பவுரவ மன்னரே! இன்றைய தினம் சிரவண பூர்ணிமா அல்லவா? என் போன்ற பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ரக்‌ஷை கட்டும் நாளல்லவா? எனக்கு உடன்பிறந்தவர் யாரும் இல்லை. ஆகவே, இந்த சகோதரியின் ரக்‌ஷையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இறை அருளால் உங்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ என்றேன்.

“போரஸ் மனம் மகிழ்ந்து, ‘தங்காய், உனக்கு இன்னும் மணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன். நீ என் வலது கை மணிக்கட்டில் ரக்‌ஷை கட்டியதால் உன்னை மணக்கப்போகும் பாக்கியசாலிக்கு எத்தீங்கும் வராது காப்பேன்’ என்றார். ‘அண்ணா, அப்படியானால், உங்கள் எதிர் முகாமில் இருக்கும் அலெக்சாண்டரை போரில் கொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன். அவரே என்னை மணம்புரியப் போகிறார்” என்றேன்.

“பவுரவ மன்னர் பேரதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்து நின்றார். பின்பு சுதாரித்துக்கொண்டு, ‘தங்காய், நீ சாமர்த்தியசாலி. உன் காதலனைக் காக்க எப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். இந்த புருஷோத்தமன் வாக்களித்துவிட்டால் அதனை எக்காரணம் கொண்டும் மீறமாட்டான். நீ மன நிறைவோடு புறப்பட்டுச்செல்’ என்று கூறி தன் கழுத்தில் இருந்த வைரமாலையை எனக்கு அளித்தார். பின்னர் தன் மெய்க்காப்பாளனை அழைத்து என்னை ஜாக்கிரதையாக எங்கு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு விடுமாறு பணித்தார்.”

இதைக்கேட்ட அலெக்சாண்டர் மிக்க ஆச்சரியமடைந்து, ‘ஓகோ, இதுதான் காரணமா அன்று போரஸின் தயக்கத்திற்கு?’ என நினைத்தான். பின்னர், “ரொக்ஸானா,  அது என்ன ரக்‌ஷை கட்டுவது? அது என்ன வழக்கம்” என்று வினவினான்.

roxana“என் ஆருயிரே! சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திரப்ரஸ்தம் எனும் தலைநகரிலிருந்து ஒரு சாம்ராஜ்யத்தை தர்மபுத்திரன் ஆண்டு வந்தான். அவன் நடத்திய ராஜசூய யாகத்தில் யாதவ குலத்தைச் சேர்ந்த கண்ணன் என்கிற வாசுதேவர் பங்கு கொண்டார். யாக முடிவில் அவருக்கே முதல் தாம்பூலம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்தருணத்தில் கண்ணனின் ஜன்ம வைரியான சிசுபாலன் அவரைப் பலவாறு வசைமாரி பொழிந்து அந்த யாகசாலையில் கலவரம் செய்தான். சினம்கொண்ட கண்ணன் தன் சுதர்சனம் என்கிற சக்கர ஆயுதத்தை அவன் மீது பிரயோகம் செய்தார். அந்தச் சக்கராயுதம் சிசுபாலன் தலையைக் கொய்து விட்டு கண்ணன் கையைத் திரும்பி வந்தடைந்தது. அப்போது கண்ணனின் வலது கை மணிக்கட்டு காயமுற்று குருதி பெருகியது. அதைக் கண்ட தர்மபுத்திரனின் பட்டத்து ராணியான துரோபதை தன் விலைமதிப்பான புடைவையின் முந்தானையைக் கிழித்து கண்ணன் மணிக்கட்டில் கட்டி குருதிப் பெருக்கை நிறுத்தினாள். கண்ணன்  மகிழ்ந்து, ‘தங்காய், இந்த பேருதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்? உன்னுடைய இந்த புடைவையில் எத்தனை நூலிழைகள் உள்ளதோ அத்தனை மதிப்புள்ள  புடைவைகளை உரிய காலத்தில் உனக்கு அளிப்பேன். அது மட்டுமல்ல. உன் கணவர்களான பஞ்ச பாண்டவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் காப்பேன்’ என்று வாஞ்சையுடன் வரமளித்தான். அன்று முதல் பரத கண்டத்தில் ஒவ்வொரு வருடமும் சிரவண பூர்ணிமா அன்று சகோதரிகள் தம்தம் சகோதரர்களுக்கு ரக்‌ஷை கட்டும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது” என்றுரைத்தாள் ரொக்ஸானா.

இதைக்கேட்ட அலெக்சாண்டர், ‘எவ்வளவு உயர்ந்த மனிதன் இந்த போரஸ்! எதிரியின் காதலி தன்னை நயமாகப் பேசி மடக்கிவிட்டபோதிலும் தான் கொடுத்த வாக்கினை மீறாமல் இருந்திருக்கிறான். நல்மனம் படைத்தவன் இந்த பவுரவ மன்னன்’ என்று பெருமிதம் கொண்டான்.

அதே நேரத்தில் ஒரு பெண்மூலம் தனக்கு உயிர்ப்பிச்சை கிடைத்திருக்கிறது என்ற எண்ணமே அவனுக்குக் கசந்தது.

”ரொக்ஸானா, அந்த நள்ளிரவில் நீ என் எதிரியின் முகாமுக்குச் சென்றது எனக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை. உனக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அதை என்னால் சகித்துக்கொள்ள முடியுமா?”

“மன்னியுங்கள் மாமன்னரே! இப்பரத கண்ட மண்ணின் மகிமையோ என்னவோ தெரியவில்லை. காதலனுக்காக இந்த சிறிய சாகசத்தைச் செய்ய முற்பட்டேன்” என்றாள் அவள்.

“அது சரி. பாரசீகத்தைச் சேர்ந்த உனக்கு இப்பரத கண்ட பழக்க வழக்கங்கள் எவ்வாறு தெரிந்தன?”

“பாக்டிரீயா நாட்டில் எனக்கு நாட்டியம் கற்பித்த ஆசான் பரத கண்டத்தைச் சேர்ந்தவர். அவர் எனக்கு பாரதவர்ஷத்தின் இதிகாச புராணங்களையும் இந்நிலப்பகுதியின் கலாச்சாரங்களையும் அடிக்கடி விளக்குவார். அதனால் எனக்கு இந்த மண்மீது ஒரு பற்று ஏற்பட்டது. இதனைக் காணவேண்டும் என்ற தீவிரமான அவாவும் உண்டாயிற்று. இறை அருளால் தங்கள் மூலம் அந்த பாக்கியமும் கிட்டியது” என்றாள் ரொக்ஸானா.

அலெக்சாண்டரின் கூடாரத்தில் சில நொடிகள் மவுனமாகக் கடந்தன.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-4)

 1. அட, ரக்ஷா பந்தனின் கதை இங்கே அழகாக வந்து விட்டதே, அதுவும் பொருத்தமான நாளில்! மிக அருமை ஐயா. வணங்கிக் கொள்கிறேன்.

 2. அழகான கதை. சொல்லப்பட்டவிதமும் மெருகேறியுள்ளது. படிப்பதற்கு இனிமையாகவும் உள்ளது. இம்மாதிரி விவரங்கள் தர வல்லமை ஒரு சிறந்த தளமாக இருப்பது மந்திற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சமபத் நன்கு படித்தவர். குழந்தை போல பழகுபவர்; ஆகிஅயால் கதை சொல்கையில் கூட அவரது மென்மையான தனமை வெளிப்படுகிறது. இவ்வளவு அழகாக தமிழில் எழுதும் இவர் ஏன் இது வரை தமிழ் ஜனரஞ்சக இதழ்களில் ஒன்றும் எழுதவில்லை என்று தெரியவில்லை. ஆயினும் மிந்தமிழ் உறுப்பினர்கள் வல்லமை மூலம் இவரைப் படிக்க முடிகிறதே என்று நினைக்கும் போது ஒரு நிறைவு ஏற்படுகிறது. இது ஒரு முழு நூலாக வெளிவாவேண்டும்.
  நரசய்யா 

 3. ரக்ஷாபந்தன் குறித்துப் பற்பல கதைகள் நிலவினாலும் மஹாபாரத காலத்தோடு சம்பந்தப் படுத்தி எழுதி இருக்கும் இந்தக் கதை மிகவும் அருமை.  பொருத்தமாக ரக்ஷாபந்தன் தினத்தை ஒட்டி வெளிவந்துள்ளது. மேலும் தொடரக் காத்திருக்கிறேன்.

 4. நுணுக்கமான தகவல்களுடன் கதை விரிவடைந்து செல்லும் விதம் அருமை. நன்றி.

 5. என் பெருமதிப்புக்குரிய நரசய்யா, கீதாம்மா, சின்னப்பெண் கவிநயா மற்றும் சச்சிதானந்தம் ஸார் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இப்பகுதி ரக்‌ஷாபந்தன் தினத்தை ஒட்டி வெளிவந்துள்ளது இறை அருளாலும் ஆசிரியர் பவள சங்கரி அவர்களிர்ன் கைவண்ணத்தாலும் என நம்புகிறேன்.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

 6. தங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி திருமதி பார்வதி ராமசந்திரன் அவர்களே! உங்கள் தொடர்ந்து படிக்கும் ஆவல் அடியேனுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
  வணக்கத்துடன்
  ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *