வார ராசி பலன்!…19-08-13 – 25-08-13
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புகளை சரிவர செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டால், பணமும், பொருளும் வீணாவதைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால், பல ஒப்பந்தங்கள் உங்கள் பக்கமே! பணியில் உள்ளவர்கள் நிதி நிலவரத்தை அனுமானித்தபின் காசோலைகளை பிறருக்கு வழங்குவது நல்லது. பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், வேண்டிய காரியங்களைஎளிதில் நிறைவேற்றுக் கொள்ளலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொண்டால் வேலைகள் சீராக நடக்கும்.
ரிஷபம்: இந்த வாரம் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் துவங்கும். நினத்த காரியம் கை கூடுவதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணியில் உள்ளவர்கள் திடீரென்று வரும் இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள தயாராய் இருப்பது நல்லது. மாணவர்கள் ஏடாகூடமாய் பேசுபவர்களிடமிருந்து விலகி இருந்தால், மன நிம்மதி குறையாமலிருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்ப நிலுவையில் உள்ள பணம் ஓரளவு வசூலாகிவிடும். சுய தொழில் புரிபவர்கள் சரக்கு பற்றாக்குறையை சமாளிக்க, கடன் வாங்கியாவது அதிக முதலீடு போடுவதோடு நீண்ட நேரமும் பாடுபட வேண்டியிருக்கும்.
மிதுனம்: இந்த வாரம் பெண்கள் நினைத்தபடி காரியங்கள் நடக்காமல் இழுத்தடிப்பதால், நேரமும், பணமும் வீணாகலாம். மாணவர்கள் அவ்வப்போது தலை காட்டும் சண்டைச் சச்சரவுகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது. பணியிடத்தில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க நிதானத்தைக் கடைபிடியுங்கள். உறவுகளும் சீராக இருக்கும், வேலையும் தடையின்றி நடைபெறும். கலைஞர்களுக்கு தொல்லை தந்தவர்கள், தோள் கொடுக்கும் அளவிற்கு நட்பு பாராட்டி வருவார்கள். வியாபாரிகள் பொது விஷயங்களுக்காக கூடுதலான அலைச்சல் இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம்: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதால் பெண்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் உங்கள் வாகனம் உங்கள் வசமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவும், மன உளைச்சலும் இராது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் யாருடனும் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்கள் இயன்றவரை புதிய கடன் வாங்குதலைத் தள்ளிப் போடுங்கள். கலைஞர்கள் அளவாகப் பேசி, காரியங்களை முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால், எதிலும் வெற்றி கிட்டும். பதற்றம், எரிச்சல் ஆகியவற்றால் உங்கள் பணியின் வேகம் மட்டுப்பட இடம் கொடுக்க வேண்டாம்.
சிம்மம்: வியாபாரிகள் பிறருக்கு தாட்சண்யம் காட்டுவதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. பெண்களுக்கு சுறுசுறுப்புடன் பணிகளில் ஈடுபடும் மனோபாவம் அதிகரிக்கும். கூட்டு முயற்சி மூலம் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தியிருந்த எதிர்ப்புச் சக்திகளை புறம் தள்ளி புதிய வழியில் நடை போடுவார்கள். புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பணிகளை தடங்கலின்றி முடிப்பதோடு நல்ல பெயரும் பெற்று விடலாம். தேவையில்லாமல் சிலருடன் மோதல் நிகழும் வாய்ப்பிருப்பதால், கலைஞர்கள் கவனமாக இருப்பது அவசியம்.
கன்னி: இந்த வாரம் முதியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். எனவே தேக நலனை நல்ல முறையில் பராமரித்து வரவும். வியாபாரிகள் கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டால்,பொருளாதாரச் சரிவுகளை ஓரளவு சரிக்கட்டமுடியும். பொறுப்பில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படுவதே நல்லது. சுயதொழில் புரிபவர்கள் தொழில் வகையில் செய்யும் மாற்றங்கள் ஏமாற்றத்தை கொடுக்கலாம். கலைஞர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி ஓடிக்கொண்டிருக்கும் நிலை இருந்தாலும் உணவு விஷயங்களில் மிதமாக இருப்பது அவசியம்.
துலாம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கினால், உயர்ந்த இடத்தை இடைய இயலும். உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வரும் வாய்ப்புகளை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் நல்ல பலனடையலாம். உதாசீனம் செய்தவர்கள் உங்கள் அருமை உணர்ந்து உதவிக்கரம் நீட்ட தயாராய் இருப்பதால், பெண்களின் வேதனை நிலைமாறி, மகிழ்ச்சி பூக்கும். அலுவலக அளவில் கலந்து கொள்ளும் பொதுக் குழுக்களில், சிற்சில பிரச்னைகளும், விவாதங்களும் ஏற்பட்டு மறையும்.
விருச்சிகம்: பெண்கள் உழைப்புக்கு நடுவே தேவையான ஓய்வும் எடுத்துக் கொண்டால், புதிய பலத்துடன் பணிகளை முடிக்கலாம். கலைஞர்கள் சிந்தனையுடன் செயலாக்கத்தையும் இணைத்தால், விரும்பிய பலன்கள் வரிசையாக வரும். மாணவர்கள் கேளிக்கைகளில் கவனத்தைச் சிதற விடாமல் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கூட்டாக வியாபாரம் செய்பவர்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதைத் தவிர்த்தல் நலம். கனவு இல்லம் கை கூட வேண்டுமென்று விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி செயல்படாதிருந்தால் ஏமாற்றங்களைத் தவிர்த்து விடலாம்.
தனுசு: இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த ஒப்பந்த வாய்ப்புகள் சற்றே தள்ளிப் போகக் கூடும். தொல்லை கொடுத்த கடன் பிரச்னைகளின் தாக்கம் குறையும். மனைவி வழி உறவுகளால் அனுகூலமிருக்கும். முன்பு அடங்கியிருந்த பிரச்னைகள் மீண்டும் தலை தூக்க வாய்ப்பிருப்பதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிரியின் பலம், பலவீனம் இரண்டையும் அறிந்து செயல்பட்டால், நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வு பற்றி நல்ல தகவல் பெறுவார்கள். பெண்கள் உறவுகளிடையே எழும் பூசலை வளர விடாதீர்கள். மன அமைதி சிதறாமலிருக்கும்.
மகரம்: பெண்கள் துணைவரின் போக்கில் தோன்றும் மாறுதல்களை இதமாகக் கண்டித்தால் அன்பு இழை விலகாமல் இருக்கும் . கலைஞர்களின் ஆர்வத்திற்கும் உற்சாகத்திற்கும் இறக்கை கட்டும் விதமாக வாய்ப்புக்கள் வந்து சேரும்.வியாபாரிகளுக்கு சிறு அலைக்கழிப்புக்குப் பின் அவசரத் தேவைகளுக்கான பணம் கிட்டும். மாணவர்கள் முனைப்புடன் பாடங்களில் கவனம் செலுத்தி வந்தால், முதல் மதிப்பெண் பரிசாய் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சிறு விஷயங்களுக்காக ஆர்ப்பாட்டமாய் செயல்படுதல் என்பதைத் தவிர்த்தல் நலம். கூட்டாய் செயல்படுவதில், சில விஷயங்களில் தலையாட்டி பொம்மையாய் இருக்க நேரிடும்.
கும்பம்: மாணவர்கள் ஆசை வார்த்தை பேசுபவர்களிடம் கவனமாய் பழகுங்கள்.முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தெளிவாகத் திட்டமிட்டபின் செயலில் இறங்கினால், நல்ல பெயர் நிலைக்கும்.இந்த வாரம் வியாபாரிகள் ஏட்டிக்குப் போட்டிகளை சமாளித்து, சரக்குகளை விநியோகம் செய்ய வேண்டியிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் எடுத்த பணியை முடிக்கும் வரை, அதிலேயே முனைப்பாய் இருந்தால், நஷ்டங்களைத் தவிர்க்க முடியும். பெண்கள் பணியிடத்தில் பட்டென்று வார்த்தைகளை கொட்டா திருந்தால்,பின்னால் அதற்காக வருந்த வேண்டியிராது. உறவுகளின் தலையீட்டால், குடும்பத்தில், சில நேரம் தர்மசங்கடமான நிலை உருவாகலாம்.
மீனம்: உயர் பதவியில் இருப்பவர்கள் சட்டச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ள எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டாம். வியாபாரிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பாக்கியில்லாமல் கட்டினால், அங்கும் இங்கும் அலைவதைக் குறைத்து விடலாம். கலைஞர்கள் மேற்கொள்ளும் தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல பலனளிக்கும். தொழிலதிபர்கள் பணியாளர்களிடம் பக்குவமாக நடந்து கொண்டால், பணிகள் விரைவில் முடியும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரிடம் வார்த்தைகளை கொட்டும் முன் பின்விளைவுகளை சிந்தியுங்கள். பேச்சில் இணக்கம் தானே வரும். இந்த வாரம் கடன் தொல்லை கணிசமாக குறையும்