Category: Featured

Featured

  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-18

    பெருவை பார்த்தசாரதி

    நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலைக்கும், நிகழ்ச்சிக்கும், செயலுக்கும் ஒருவரது உதவியை நாடி அவரிடம் ஆலோசனை பெற்று எடுக்கின்ற காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்கும் யுக்தியை, நமக்கு முன் வாழ்ந்தவர்களது அனுபவங்கள் மூலம் அறிந்து கொண்டு, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்ற ஒருவர் லெளகீக வாழ்க்கைக்கு வழிகாட்டுவது போல், வேறு யாரெல்லாம் நம் ஆனந்த வாழ்க்கைக்கும், ஞான மார்க்கத்தும் வழிகாட்டுகின்றனர்?என்பதை நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், புராண, இதிகாசங்களில் இடம் பெறும் அறநெறிகள் மூலம் பாடம் பெறமுடியும் என்பதே இத்தொடரின் முக்கிய குறிக்கோள். ஆலோசனை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அவசியமாகி, வாழ்வின் இறுதிக் கட்டம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தொடர்ந்து உதாரணங்கள், மேற்கோள்கள் மூலம் வலியுறுத்துவதே இத்தொடருக்கு இன்னொரு சிறப்பு.

    அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் கடமைகளுள் ஆன்மீகத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அன்றாடம் நாம் சந்திக்கும் இன்ப, துன்பப் படிகளைக் கடந்து வரும்போது, ஏதாவதொரு இடத்தில் தடைக்கல்லாக ஏதோ ஒரு துன்பம் நம்மைத் தடுக்கும்போது, நமக்கு ஆறுதலாக, அருமருந்தாக அந்த நேரத்தில் உதவுவது ஆன்மீகம். ஆனாலும் ஆன்மீகத்தை முழுமையாக அனுபவித்து உணர முடியாமல் திணறும்போது, ஞான வாழ்க்கைக்குக் வழிகாட்டுகின்ற ஆன்மீககுருவின் உதவியைப் பெற தொடர்ந்து ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்.

    உலகில் வாழும் மனிதர்கள் எவருமே துன்பத்தோடும், வருத்தத்தோடும் வாழ விரும்புவதில்லை. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நீடித்திருக்க வேண்டும், சந்தோஷம் எங்கே கிடைக்கிறதோ அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் யாராவது மறுக்கப் போகிறார்களா என்ன?…. ஆக வாழ்க்கையில் எவ்வளவு பொருளாதார வசதிகள் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியும் சந்தோஷமும் இதில் கலந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மற்றவர் உதவியுடன் இதைப் பெறுவதற்கான முயற்சியை வாணாள் முழுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்கள், தொழிலதிபர்கள், தங்கள் வேலையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வருடத்தில் சில நாட்கள் நிம்மதி தேடி ஆன்மீகம் தழைத்திருக்கும் இமாலயம், ஹரித்வார், ரிஷிகேசம், காசி போன்ற புண்ணியத்தலங்களுக்குச் சென்று ஆன்மீகக்குருக்களிடம் அறிவுரை பெற்று வருவதை நாம் படித்திருக்கிறோம். குருவைப் பற்றிய சிந்தனையைத் தொடருவோம்.

    இதிகாசங்களில் குருவாக வருணிக்கப்படுபவர் மும்மூர்த்திகளுக்கும் சம்மானவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “குருபிரம்மா குரு விஷ்ணோ, குருதேவோ மஹேஸ்வரஹா, குரு சாக்ஷாத் பரப்ரும்மம், குரவே நமஹா”…குருவே பிரம்மா, அவரே விஷ்ணு, மஹேஸ்வரன் எல்லாமும், ப்ரப்பிரும்மும் அவரே என்கிறது வேத உபநிஷத்துக்கள். இதிகாசங்களில் கூறப்படும் அறநெறிகளை எடுத்துச் சொல்லி, உலகை நல்வழியில் நடத்திய இத்தொடருக்குப் பொருந்துகின்ற வகையில் அமைகின்ற ஒரு சில குருமார்களைப் பற்றி இந்த நேரத்தில் சற்று மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டுவந்து பிறகு தொடருவோம்.

    அறவழியில் ஆட்சி செய்ய, இஷ்வாகு வம்சத்தின் குலகுருவாக ‘வசிட்டமுனி’, தசரதனுக்கு அவ்வப்போது நல்லுபதேசங்களைத் தந்தருளினார்.

    திருதராஷ்டிரனின் தீய எண்ணங்களைப் போக்கி, அவரை நீதி வழியில் நல்வழிப்படுத்த விதுரன் தன் வாழ்நாளைச் செலவிட்டான். ‘விதுரர்’ உபதேசித்தது அனைத்தும் ‘விதுர நீதி’ என்ற பெயரில் புத்தக வடிவில் இன்றும் உலகுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

    தன்னை யார் என்று அறிவித்து, தாம் அடைந்த முன்வினைகளைக் களைந்து, சந்தத்தினுள் சதாசிவத்தைக் காட்டி, உள்ளுக்குள் இருக்கும் ஞானக் கனலை எழுப்பி, கருத்தறிவித்து தனக்கு ‘விநாயகப் பெருமான்’ அருள் புரிந்ததாக அவ்வை மூதாட்டி விநாயகர் அகவலில் சொல்லியதைப் படித்திருக்கிறொமல்லவா?…

    மாபாரதத்தில், ‘தருமன்’, தனது மற்ற சகோதரர்களுக்கு சகோதரராக மட்டுமல்லாமல், சில சமயம், அவர்களுக்குக் குருவாக இருந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சகோதரர்களையும், நாட்டு மக்களையும் அறவழியில் செயல் பட வைத்திருக்கிறார்.

    ஆஸ்திகப் பெருமக்களுக்கு என்றுமே மானசீக குருவாக திகழ்பவர்கள் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், ஸ்ரீ மத்வர், ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ விவேகானந்தர் போல இன்னும் பலர் இருக்கின்றனர். இன்று இவர்கள் நிலவுலகில் இல்லையென்றாலும், பல தரப்பட்ட மக்கள் தங்கள் மனதில் மானசீக குருவாக இம்மஹான்களையெல்லாம் வரித்துக் கொண்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. கோடானுகோடி மக்களுக்குக் குருவாக இருந்த இவர்கள் அனைவருக்குமே கூட குருவாக அமைந்தவர்களும் உண்டு.

    பதினெட்டு முறைக்கு மேல் இடைவிடாமல் யாத்திரை சென்று, சபரியில் மணிகண்ட சுவாமியை தரிசிப்பவர்கள், குருசாமி பதவிக்குத் தகுதி அடைந்தவராகி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து விடும் தகுதியை அடைகிறார். தன் வழி நடப்பவர்களை நெறிப்படுத்தி, உடலுக்குக் கல்லினாலும், முள்ளினாலும் உண்டாகும் பாதகம் தெரியாமல், நெஞ்சத்துக்கு இதத்தைக் கொடுத்து இறைதரிசனம் செய்துவிக்கும் பணியினால், ஐயப்பகுருசாமிக்கு மட்டுமல்ல, அவரைப் பின்பற்றுபவருக்கும் அது ஆத்ம திருப்தியை அளிக்கிறதல்லவா?

    இன்றைய உலகம் ஒரு அதிஅற்புத உலகம். ஒவ்வொரு பொருளிலும் நாம் ஒரு பாடத்தை ஒருவர் மூலம் கற்றுக் கொள்ள முடியும். தினமும் தொலைக்காட்சியைத் திறந்தால், எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கு இடையில் யாராவது ஒரு மருத்துவர் உடல் வியாதிக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருப்பார். இன்னொருவர் ஆன்மீக விஷயங்களுக்கு விளக்கம் அளித்து மன அமைதிக்கு வழி காட்டுவார். வேதங்களையும் இதிகாஸங்களையும், உபநிஷத்துகளையும் கற்றுத் தேர்ந்து, அதிலுள்ள சாரங்களைப் பக்குவமாகத் தெளிவு பட உரைக்கத் தெரிந்த ஒருவரே, அனைவராலும் ஆன்மீகக்குருவாக எங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார். அறநெறிகளைத் தவறாக உபதேசித்து, ஆலோசனைகள் எதிர்மறையாக அமைந்தால், குருவின் பதவி அங்கே கேள்விக்குரியதாகி விடுகிறது… அதேபோல

    தனது வாழ்க்கைக்குச் சரியான வழிகாட்டுதலை அளிக்க முடியாத குருவைத் தேர்ந்தெடுத்தாலும் தவறு நேர்ந்து விடும் என்பதை மகாபாரதத்தின் மூலம் அறிய முடியும். அனுவமும், பக்குவமும், திறமையும் ஒருங்கே அமைந்த துரோணாச்சார்யர் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் குருவாக இருந்தாலும், அறிவும், பக்குவமும் இல்லாத வஞ்சக எண்ணம் கொண்ட சகுனியைத்தானே இன்னொரு குருவாகத் துரியோதனன் வரித்துக்கொண்டு அவர் வழி நடந்து அழிவைத் தேடிக்கொண்டான். துரியோதனின் அறியாமையை நீக்கும்படி ஒரு போதும் சகுனி செயல்பட்டதில்லையே!…..

    குருவின் தகுதியைப் பற்றிய கருத்தைத் தனக்கே உரிய பாணியில் ரத்தினச்சுருக்கமாக நான்கு வரிப்பாடலில் திருமூலநாயனார் அவர்கள் அருளிய அருமையான தமிழ்ப்பாடல் ஒன்று:- தகுதிகள் இல்லாத ஒருவரைக் குருவாக அடைந்தால், என்ன நடக்கும் என்பதை மூவாயிரம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த திருமுலர், எளிய தமிழில் யாவரும் புரிந்து கொள்ளும்படி இயற்றிய ‘திருமந்திரம்’ நமக்குத் தெளிவுபட உரைக்கிறது.

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
    குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி
    குருடுங் குருடுங் குழிவிழு மாறே

    அறிவும், பக்குவமும் இல்லாத ஆச்சார்யனைத் (குருவினை) தேர்ந்தெடுத்தால், வாழ்வில் கெடுவர். அறியாமயைக் களையும், நீக்கும் குருவினை ஒரு போதும் இவர்கள் பெற மாட்டார்கள். குருவின் தகுதி இப்படி இருந்தால் என்ன நடக்கும்?.. என்பதற்கு ஒரு உதாரணமும் சொல்லுகிறார். ஒரு குருடனைக் குருவாகத் தேர்ந்தெடுத்த மற்ற இரண்டு குருடர்கள், கூத்தாட்டம் போட்டு, குருட்டாட்டம் ஆடி, முடிவில் கண் தெரியாமல் படுகுழியில் விழுவதைப் போல அமைந்துவிடாமல், குருவைத் தேர்ந்தெடுப்பதற்கு உள்ள அவசியத்தை, ஒரு நான்கு வரிகளில் எளிய பாடலால் விளக்குகிறார். குருவின் தேடுதல் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற உட்கருத்தை இதை விட அழகாக யாரால்?…. நயம்பட விளக்க முடியும். எப்பொழுதுமே சித்தர் பாடல்கள் மேலோட்டமாகப் புரிவது போல் இருந்தாலும், உட்கருத்தை அறிந்து பொருள் கொள்ள வேண்டுமென்று படித்திருக்கிறேன்.

    குருவின் வழிகாட்டல் வாழ்க்கைக்கு அவசியமா?….. என்ற கேள்வியை முன் வைப்பவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு சிறிய கதை மூலம் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

    ஒரு குருகுலத்தில் படிப்பு முடிந்த பிறகு சீடர்கள் ஒவ்வொருவரும் கல்வியில் முழுமை அடைந்திருக்கிறார்களா என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பது குருவின் கடமை அல்லவா!….

    குருகுலத்தை விட்டுச் செல்லும் சீடர்களிடம்…….
    “வாழ்க்கையில் மிக மிக அரிதாகக் கிடைப்பதும், மதிப்பு வாய்ந்ததும் எது?… கேட்கிறார் குரு.

    தங்கம்தான் மிக அரிதாகக் கிடைப்பது,
    இல்லை வெள்ளிதான்,
    இல்லை, இல்லை வைரம், நவரத்தினம் என்று ஒவ்வொரு சீடரும் ஒரு பொருளைச் சொல்லுகிறார்கள்.

    குருவுக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை ஆதலால், மறுபடி ‘வேறு ஏதாவதொன்று சொல்ல முடியுமா’?… என்று கேட்கிறார்.

    கடைசியில் ஒருவன் “வாழ்க்கையில் மிக மிக அரிதாகக் கிடைப்பதும் மதிப்பு வாய்ந்ததும் ஒன்றே ஒன்றுதான் அது உண்மையான “குருவின் வழிகாட்டல்”.

    ஏன் அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?… குரு

    “நான் எங்கு தேடியும் எனக்கு உண்மையான ‘குரு’ கிடைக்கவில்லை, கடைசியில் இங்கு கல்வி பயின்றதில் குரு போதனையால் அனைத்துக் கலைகளிலும் பூரண தேர்ச்சி பெற்றேன். நம்மிடத்தில் இருக்கும் திறமைகளை நாம் அறியாவிட்டாலும், அதை அறிந்து வெளிக்கொணர்வது, நமக்குக் குருவாக அமைவதைப் பொருத்தே அமையும் என்பதை அறிந்தேன். எல்லாம் எளிதாகக் கிடைக்கும் இந்த உலகத்தில், ஒருவருக்கு மிக மிக அரிதாகக் கிடைப்பதும், அமைவதும் ‘உண்மையான குருவும் அவரது போதனையும்’ என்பதை இங்கு உணர்ந்தேன்”.

    ‘சீடனின் விரிவான விளக்கத்தால்’ குருவுக்கு திருப்தி ஏற்பட்டது.

    (தொடரும்)

    Share
  • இலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு

    திருமலை சோமு

    க.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988)

    நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமண்யம், 1912ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வலங்கைமானில் பிறந்தார். கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் என்ற க. நா. சு. சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க.நா.சு, சுவாமிமலை கோவிலருகே தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் தன் படிப்பை தொடர்ந்தார். அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். ஆனால் க.நா.சு கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணத்தின் போதே எழுத்து பணியில் இறங்கி இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய மேதைகளும், இருபதாம் நூற்றாண்டின் என் தலைமுறைப் புரட்சி எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஜாய்ஸும், டி.எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும் வகுத்துக் கொடுத்த புரட்சி மரபுக்கு நான் வாரிசு என்கிற எண்ணம் க.நா.சுவுக்கு இருந்தது.  தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். 1930களில் தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்த அவர் தினமணி அலுவலகத்தில், தன் எழுத்துகளுடன் கால் பதித்தார். 

    அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று கையெழுத்துப் போட்டிருந்தார். வ.ரா. வெடுக்கென்று கேட்டார், நீர் என்ன ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா, கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?    சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம் எழுதாதீர். கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்; க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும் என்று கட்டளையிட, இவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ் இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.

    ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். ‘பொய்த்தேவு’ புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1946ல் இவர் எழுதிய இந்த நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன், சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கைத் தேடல் குறித்த சுவையான படைப்பு. 1986ம் ஆண்டு அவரது ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். 

    40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.

    படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த காந்தி இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.

    மலையாளக் கவிஞரான குமாரன் ஆசான் நினைவாக உருவாக்கப்பட்ட ஆசான் கவிதைப் பரிசு 1979ஆம் ஆண்டு க.நா.சுவுக்கு வழங்கப்பட்டது.   அவருக்குக் கிடைத்த முதல் தனிப்பட்ட அங்கீகாரம் அதுதான். அதற்கு முன் தமிழக அரசின் பரிசை  ‘கோதை சிரித்தாள்’ என்ற நூலுக்காகப் பெற்றிருந்தார்.

    க.நா.சுவின் மறைவுக்குப் பின்பு, அவர் சேகரித்துவைத்திருந்த புத்தகங்களையும் அவரது கையெழுத்துப் படிகளையும் அவரது மருமகன் பாரதி மணி சுந்தர ராமசாமி நினைவு நூலகத்துக்குக் கொடுத்தார்.

     

    ஆர்வமுடையோர் படித்து இன்புற -க.நா.சுவைப் பற்றிய தகவல் தரும் சில முக்கிய இணையப் பக்கங்கள்:-

    க.நா.சு பற்றிய விக்கிபீடியா சுட்டி:

    க.நா.சு.வும் நானும் -வெங்கட் சாமி நாதன் கட்டுரை  (http://www.tamilhindu.com ல் வெளி வந்தது-மூன்று பாகங்கள்)

    சொல்வனம்- க.நா.சு சிறப்பிதழ்

     http://azhiyasudargal.blogspot.in/2012/10/blog-post_9.html

     எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு.- பாரதி மணி

    Share
  • நோபெல் திருவிழா ~ பகுதி-2

    இன்னம்பூரான்

    09 10 2012 ( 11 மணி 49 நிமிடம் 34 வினாடி 8756.78 துகள்)

    பெளதிக உலகினிலே வினாடித்துளிகளில் அரிய நிகழ்வுகள் நிறைவேறி விடுகின்றன. கண்மூடிக்கண் திறக்கும் வினாடியை தொல்காப்பியம் ஒரு மாத்திரை என்று குறிக்கும். அதற்குள் பல்லாயிரம் வினாடித்துளிகள்! ஆகையினால் தான் க்வாண்டம் ஃபிஸிக்ஸ் எனப்படும் நுண்துகள் பெளதிகம், பழங்கால பெளதிகத்தின் எல்லைகளை, அனுமார் சமுத்திரத்தைத் தாண்டியமாதிரி, ஒரே தாவலில், கடந்து விட்டது. இந்த பீடிகை எதற்கு எனில், இன்றைய விஞ்ஞானம், பெளதிகத்திக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்பட்ட வினாடியிலேயே, அதை பிரசுரிக்க வழி வகுத்துள்ளதை மெச்சுவதற்குத்தான்.

    அந்த பரிசு ஸெர்ஜெ ஹரோஷ் (Serge Haroche) என்ற ஃப்ரென்ச் விஞ்ஞானிக்கும், டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் (David J. Wineland) என்ற அமெரிக்க விஞ்ஞானிக்கும், தனித்தனி நுண்துகள் படைப்புகளை அளந்து, மாற்றியமைக்கக்கூடிய பரிசோதனை வழிமுறைகளை முன்னிறுத்தியதற்காக, இருவருக்கும் சமபங்கில் அளிக்கப்படுகிறது. (for ground-breaking experimental methods that enable measuring and manipulation of individual quantum systems”.). அவற்றை விஞ்ஞானத்தின் அடித்தளத்தையே புரட்டியெடுக்கும், வரலாறு காணாத பரிசோதனை வழிமுறைகள் என்று நோபெல் கமிட்டி புகழாரம் சூட்டி வாழ்த்தி இருக்கிறது. அதில் ஆச்சரியம் யாதெனில், இருவரும், அவரவர் போக்கில், அவர் ஒரு புறம், இவர் ஒரு புறமாக, இந்த அரிய சாதனையை படைத்துள்ளார்கள். அவர்களின் புத்தம்புதிய வழிமுறை, அந்த நுண்துகள்களை சோதிக்க/கட்டுப்படுத்த/ எண்ண உதவுகிறது. அந்த நுண்துகள்கள் ஒரு வினாடிக்குள் எண்ணற்ற முறைகளில் மாறி வருபவை. அந்த சிக்கலை இவர்கள் இருவரும் கையாண்ட திறன், அபாரம். இருவரின் வழிமுறைகளில் ஒப்புமை மிக இருந்தாலும், அவற்றின் திசைகள் எதிர்துருவங்கள். டேவிட்.ஜே.வெய்ன்லாண்ட் மின்சாரம் புகுத்தப்பட்ட நுண்துகள்களை, ஒளியின் உதவியால் (‘light or photons’) இற்செறித்து, கட்டுப்படுத்தி, அளந்தார். ஸெர்ஜெ ஹரோஷ், எதிர்மாறாக, இற்செறிக்கப்பட்ட துகள்களை (atoms/ions) ஒரு ‘கூண்டுக்கிளி’ போல் புகுத்தி அடைத்தபின் கட்டுப்படுத்தி, அளந்தார்.

    அந்த நுண்துகள்களை அவற்றின் சுற்றுப்புறத்திலிருந்து தனித்துக் காண இயலாது. அவை தத்க்ஷணமே, தன்னுடைய அதிசய குணாதிசயங்களை, நம்ப முடியாத வகையில் (bizarre) இழந்து விடுகின்றன. அவை துரிதமாக இப்படி அழிவதற்கு முன்னால், ‘நீ பாய்க்கு அடியில் புகுந்தால், நாங்கள் கோலத்துக்கு அடியில் புகுவோம்’ என்ற புதிய பாதையில் சோதிக்கும் வழி மகத்தானது. இங்கு தான் நேற்றைய பெளதிகம் பத்தாம் பசலியாக போய்விட்டது. அதனுடைய விதிகள் இங்கு செல்லாது.

    இருவருமே, 1980லிருந்து ஆராயப்படும் நுண்-பெளதிகத்தில் ஆழங்கால் பதித்து அல்லவா, இந்த புதிய பாதையை அமைத்துள்ளனர். அதனுடைய நல்வரவாக, புரட்சிகரமான ஸூப்பர்-கணினி ஒன்றை உருவாக்கமுடியும். அது நமது வாழ்வியலை தடபுடலாக, நாம் தட்டச்சு செய்யும் கணினி நம் வாழ்க்கையை கிட்டத்தட்ட பற்பலமுறைகளில் மாற்றி விட்டது. மாற்றி வருகிறது. அதை விட தடபுடலாக, இந்த ஸூப்பர்-கணினி நம்மை கட்டியாளும் என்பதில் ஐயமில்லை. அதா அன்று. இனி, நாம் மிக மிக துல்லியமான கடியாரங்களை படைக்கமுடியும். நேரத்தை அளப்பதே ஒரு புது விஞ்ஞான துறையாக அமைந்து, நமக்கு உதவலாம். அல்லது பாடாய் படுத்தாலும்.

    ‘ராமசாமி! மீட்டிங் இன்று மதியம் 14 மணி- 58வது நிமிடம்- 17வது வினாடியின் 9482.7 துகளில் ஆரம்பம். அதற்கு சரியான விமானம் பிடித்து வந்து விடுங்கள்’ என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை. இந்தியா தாங்குமா, சாரே!

    படத்துக்கு நன்றி:

    http://www.kva.se/Global/Bilder_priser/Nobel/2012/fysik/nobel_fysik_2012_200.gif

    Share
  • நோபெல் திருவிழா ~1

     

    இன்ன்ம்பூரான்

    2012 வருட நோபெல் பரிசு திருவிழா இன்று தொடங்கியது. இனி சில நாட்களுக்கு, நாள்தோறும் களைகட்டும். வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், இவ்வருட பரிசுகளிலிருந்து ஆரம்பித்து, நோபெல் மஹாத்மியத்தை, சுருக்கமாக, கூறுவதாக உத்தேசம். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்கு விஷயம் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு உதவலாம் என்று ஒரு அசரீரி கூறுகிறது. வாசகரோ ரக்ஷது.

    இவ்வருட மருத்துவ/உடலியல்(Physiology or Medicine) பரிசு இருவருக்கு:  டாக்டர்  ஸர் ஜான் பி.கார்டன் (கேம்ப்ரிட்ஜ்: இங்கிலாந்து) & டாக்டர் ஷின்யா யாமானகா (க்யோட்டோ: ஜப்பான் & க்ளாட்ஸ்டன் நிறுவனம், சான் ஃப்ரான்சிஸ்கோ)  மூன்றாவது பங்கு கொடுக்கப்படவில்லை. முன்னோடிகளான ஜேமி தாம்சனையும், ரூடி ஜேய்னிஸ்சையும் ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வரும் முன் காப்போன் சிக்கனமாக இருக்கலாம். காலம் கெட்டுக்கிடக்கிறது அல்லவா! இந்த பரிசுகளிலேயே ஐந்தில் ஒரு பங்கு குறைத்துத்தான் கொடுக்கிறார்கள். வட்டி வருமானம் மிகவும் குறைந்து விட்டதாம். பரவாயில்லை. அப்படி குறைந்தாலும், பரிசின் மதிப்பு $ 1.2 மிலியன்.

    ஸர் ஜான் தான் செயற்கையாக உயிரூட்டும் வித்தையின் தந்தை. முதல் படைப்பு ஒரு தவளை. ஐம்பது வருடங்களுக்கு முன் ஆற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு, (1962: டாக்டர். யாமனாகா பிறந்த வருடம்) இப்போது பரிசு. அவர் இன்றைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். டாக்டர் யாமானகாவின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு: ஒரு வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றுவதற்கான புரதங்களை தயாரித்தது. இருவரின் சாதனைகள் மனித குலத்துக்கு மாபெரும் ‘இறவா’ வரங்கள் என்றால் மிகையாகாது. உயிர்ப்பு கொடுக்கும் ஆற்றல் வெகு தூரமில்லை. மனித உறுப்புகள் பழுதடைந்தால், அந்த அந்த மனிதரின் உடலிலிருந்தே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய முடியலாம். மரபணு சார்ந்த வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவது எளிதாகலாம். அவற்றின் ‘நதி மூலம்/ரிஷி மூலம்’ கண்டுபிடிக்க முடிகிறது.

    ஸர் ஜானின் தவளை வந்த விதம் விந்தை. அவர் போட்டது ‘தூபம்’. தாந்தோன்றியாக வளர்ந்தது, தவளை, சுருக்கமாக சொன்னால். அது எப்படி நேர்ந்தது என்பது புரிய 44 ஆண்டுகள் பிடித்தன. 2006ல், டாக்டர் யாமானகா எலிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு, அந்த தவளை வளர்ந்த விதத்தின் சூட்சுமத்தைக் கண்டுபிடித்தார். அது தான் அந்த நான்கு மரபணுக் கண்ட்ரோல் புரதங்கள் (Myc, Oct4, Sox2 and Klf4.). அவை வளர்ந்த மரபணு (செல்)வை சிசு அணுவாக மாற்றும் பணியை செய்தன. இது ஒரு விஞ்ஞானப் புரட்சி.

    ஒரு வேடிக்கையான கொசுறு தகவல்: ஸர் ஜானின் பள்ளி விஞ்ஞான ஆசிரியர் அவருக்கு சுட்டுப்போட்டாலும் விஞ்ஞானம் வராது என்று கொளுத்திப் போட்டார்! அந்த ஜான் சிறுவனும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ஆழ்ந்து விட்டான். இருந்தாலும், வண்ணத்துப் பூச்சிகளின் வண்ண அழகில் மனதை பறி கொடுத்து,1956ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புழு, பூச்சி ஆராய்ச்சியில் புகுந்தார். விஞ்ஞானத்தின் அறைகூவல் அவ்வாறு அவரை பிடித்திழுத்து வைத்துக்கொண்டது.

    டாக்டர் யாமனாகோ ஒரு எலும்பு டாக்டர். டாக்டர் வேலை தனக்கு ஒவ்வாது என்பதை தொடக்கத்திலேயே புரிந்து கொண்ட அவர் தன் திறனை இந்தப்பக்கம் திருப்பினார். அமெரிக்கா வந்தார். சாதனை படைத்தார். அவரை ஊக்குவித்தது, டாக்டர் சுசுமு டோனெகவா என்ற மற்றொரு நோபலர் (1987). அவரைப் பற்றி எழுதவும் நிறைய இருக்கிறது. நோபெல் பரிசு வந்த விதமே ஒரு காதை. இந்தியர்களில் நோபெல் பரிசு பெற்றவர்களில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    ஸர் ஜான் கர்டனுக்கும், டாக்டர் யாமனாகோ அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 40

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

    மனைபுகுந்த ஆடவர் தம் மனைவியரின் ஊடலைத் தீர்க்க அறியாமல் நடுங்குதல்

    விருந்தினரோடு வீடுதான் புகுந்திட்ட
    அகன்ற பெருந்தோள் கணவருடன்
    ஊடல் பாராட்ட இயலாமல்
    அவருடன் பொருந்தியிருந்து
    வந்திட்ட விருந்தினரை
    வரவேற்று உபசரித்தனர்
    இல்லற மகளிர்.

    வழிபாட்டு ஒழுக்கத்தில்
    மேலோங்கிச் சிறந்த
    அருந்ததி போலும்
    கற்பில் சிறந்த
    இல்லற மகளிரை
    அவர்தம் கணவர் பெருமக்கள்
    மதித்தேதான் போற்றினர்.

    தம் நெஞ்சத்திடம்
    தம் எண்ணம் உரைத்தனர்.

    ஒளியும் அழகும் பொருந்திய
    இம்மாதர் திருமுகம் கண்டிட்ட
    நீலமணி ஒத்த இதழ்களையுடைய
    குவளை மலர்கள்
    புறங்கொடுத்துப் போயின.

    மகளிரின் கரிய கண்களின்
    கோபக் கருஞ்சிவப்பு
    விருந்தினர் வரவால்
    நீங்கியே போயிற்று.

    இக்கோபச்சிவப்பு மட்டும்
    நீங்காமல் போயிருந்தால்
    இந்தப் பரந்த நிலவுலகம்
    இவர்தம் ஊடல் நீங்கிட
    வேறு ஒரு மருந்தைத்
    தர வல்லதோ…

    இங்ஙனம் எண்ணி எண்ணிச்
    செயலற்று மயங்கினர்
    கணவன்மாரும்
    விழாவது நடந்திட்ட நாட்களில்..

    கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்

    இச்சிறப்புடை இந்திரவிழாவின்
    நள்ளிரவுப் பொழுதொன்றில்
    தன்னுள்ளே இருக்கும்
    மணத்தாது மகரந்தங்கள்
    தேன் செறிந்து ஊறி உறுத்துவதால்

    மேற்பரப்பில் இருக்கும்
    கட்டு மெல்லவே அவிழ்ந்து
    தேன் சொரியச் சொரிய
    நடுநடுங்கும் கழுநீர் மலரைப்போல
    உள்ளத்தின் நினைவை
    உள்ளே மறைத்துக்
    கண்ணீரைச் சொரிந்தன
    இரு பெண்களின் கண்கள்.

    கோவலனுடன் கலவியற்ற காரணத்தால்
    கருத்திருந்த கண்ணகியின் கருங்கண்ணும் (இடக்கண்ணும்)
    பிரிவுத்துயர் தாளாமல்
    கண்ணீரைச் சொரிந்திட்டது;
    துடிக்கவும் செய்தது.

    கோவலனுடன் கலவியால் சிவந்திட்ட
    மாதவியவள் செங்கண்ணும் (வலக்கண்ணும்)
    ஆனந்தம் தாளாமல்
    கண்ணீரைச் சொரிந்திட்டது;
    துடிக்கவும் செய்தது.

    (குறிப்பு:
    பெண்ணின் இடக்கண் துடித்தல் – நன்மைக்கு அறிகுறி; கண்ணகி கோவலுடன் இணையும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது.

    பெண்ணின் வலக்கண் துடித்தல் – தீமைக்கு அறிகுறி; மாதவி கோவலனைப் பிரியும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது.)

    (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
    அடுத்து வருவது கடல் ஆடு காதை)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 227 – 240
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram14.html

    படத்துக்கு நன்றி:
    http://highqualitypic.blogspot.in/2011/06/raja-ravi-varma-paintings_17.html

    Share
  • தொல்லை காட்சி பெட்டி – அது இது எது- சச்சின் பற்றி கங்குலி

     மோகன் குமார்

    அது இது எது சொதப்பல்

    ஒரு நிகழ்ச்சியின் வெற்றி எதை பொறுத்து இருக்கும்? அநேகமாய் அந்த நிகழ்ச்சியின் பார்மட் /  Content இவற்றை பொறுத்து தானே இருக்கும் ! 

    ஆனால்  அது இது எது நிகழ்ச்சி என விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி முன்பு சிவகார்த்திகேயன் compere செய்தார். செம நக்கல், வந்திருப்போரை இவர் அடிக்கும் கிண்டலே நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிக்க வைக்கும். நான் மட்டுமல்ல பலரும் விரும்பி பார்த்த நிகழ்ச்சி அது.

    சிவகார்த்திகேயன் சினிமாவில் பிசி ஆகி விட, ………. இதனை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அவ்வளவு தான் ! நிகழ்ச்சி சுத்தமாக படுத்து விட்டது. ஓரிரு முறை பார்த்ததிலேயே வெறுத்து விட்டது ! TRP மிக இறங்கி, விஜய் டிவி இதனை அடியோடு தூக்கினாலும் ஆச்சரியப்பட வேண்டாம் !

     

    டிவியில் பார்த்த படம் : காந்தி 

    கலைஞர் டிவியில்   காந்தி ஜெயந்தி அன்று காந்தி தமிழ்ப் படம் ஒளிபரப்பினர். என்ன தான் ஆங்கிலப் படம் பார்த்தாலும் தமிழில் பார்க்கையில் முழுதாய் புரிந்து ரசிக்க முடிந்தது. பள்ளியில் படிக்கும் என் பெண் மிக ஆர்வமாய் படம் பார்த்தாள். அது தான் நிஜ மகிழ்ச்சி ! காந்தி படத்தை இம்முறை பார்த்த போது அதன் பல காட்சிகள் டில்லியில் உள்ள நேரு இல்லத்தில் படம் பிடித்திருப்பது தெரிந்தது. சிறைச் சாலை என காட்டப்படுவதும் சரி, ஆங்கிலேயர்கள் அலுவலகமானாலும் சரி நேரு இல்லத்தையே வெவ்வேறு ஆங்கிளில் காண்பித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் நெகிழ வைக்கும் படம் – காந்தி  

     

    விஜய் டிவியில் அனுஷ்கா

    தாண்டவம் பற்றி பேச விக்ரமுடம் விஜய் டிவி வந்திருந்தார் அனுஷ்கா. திவ்ய தர்ஷினி அவரிடம் சில கேள்விகள் கேட்க அவர் பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் அவருக்கு பதில் விக்ரம் பதில் சொல்ல, அதையே கிளி பிள்ளை போல ஒப்பித்தார் அனுஷ்கா. தனக்கென்று சுய புத்தியே இருக்காதா? என்ன தான் தலைவி என்றாலும் ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது ! ஜெயா, சன் என எல்லா பக்கமும் இவர்கள் வந்து ” தாண்டவம் வெற்றி விழாவை” கொண்டாடி மகிழ்ந்தனர்.

     

    காந்தி பிறந்த நாள் சிறப்பு நிகழ்சிகள்

    லாரன்சின் காஞ்சனா, சிம்பு நடித்த ஒஸ்தி, பாலாவின் அவன்- இவன் இவையெல்லாம் காந்தி கொள்கைகளை  விளக்க  பல்வேறு டிவிக்கள் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் ! ஹே ராம் மட்டுமே ஓரளவு இந்த நாளுக்கான சரியான படமாய் இருந்தது. 

    மெகா டிவியில் அரை மணி நிகழ்வாக காந்தி வாழ்க்கையை அழகாக காட்டினர். அவர் வாழ்விலிருந்து எடுத்த படங்கள், வீடியோவுடன் கூடிய இந்த நிகழ்ச்சி காந்தி பிறப்பு முதல் இறப்பு வரை சொல்லி மிக நிறைவாய் இருந்தது. 

    மற்றபடி வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏதும் அன்று பார்க்கலை ( காந்தி படம்- கிரிக்கெட் மாட்ச்கள் இவை தான் இன்று ஆக்ரமித்தன)

    சீரியல் பக்கம் – மண்வாசனை 

    ராஜ் டிவியில் வெளிவரும் டப் ஆன  சீரியல் ! பத்து வயசுக்குள்ளயே கல்யாணம் ஆன ஒரு சிறுமியின் கதை. பெயர் தான் ஆனந்தி. ஆனால் அவள் காண்பதோ அனைத்தும் கஷ்டங்களே ! எல்லாருக்கும் மாமியார் கொடுமை என்றால் இவருக்கு கணவரின் பாட்டி கொடுமை ! 

    நம் வீட்டில் இதை பார்க்கிறாங்க. வீட்டுக்கு வரும்போது இந்த சீரியல் நடந்துகிட்டு இருக்கும். ஒரே அழுகை சத்தமா இருக்கும் ! நான் அங்கிருந்து ஓடிடுவேன் 🙂

    சச்சின் பற்றி கங்குலி 

    இரண்டாம் செமி பைனல் முடிந்ததும் ஸ்டூடியோவில் கங்குலி, பீட்டர்சன், அக்ரம் ஆகியோர் பேசும் போது கங்குலி ஒரு விஷயம் சொன்னார். ” நான் ஒரு வீரருடன் இருநூறு மேட்சுக்கு மேல் துவக்க ஆட்ட காரரா இறங்கியிருக்கேன். எப்பவும் என்னை தான் முதல் பந்து எதிர்கொள்ள சொல்வார். எனது ஆட்டம் சரியாக இல்லாத சில நேரம் “முதல் பந்தை நீங்கள் விளையாடுங்கள்” என்றாலும் அவர் நோ என்றே சொல்லுவார். கேப்டனாக இருந்த போதும் சில முறை கேட்டுள்ளேன் ( என்னது ? கேப்டன் சொன்னதையும் அவர் கேட்கலியா?-அதிர்ச்சியுடன் அக்ரம் கேள்வி)”

    “சில தடவை நான் கேட்டு பார்த்துட்டு கிரீஸ் அருகே போயிட்டு யார் முதலில் ஆடுறதுன்னு பார்த்துக்கலாம்” என சொல்லிடுவேன் அப்புறம் கிரீஸ் அருகே சென்றதும், நான் போய் நான் ஸ்ட்ரைக்கர்  இடத்தில நின்று கொள்வேன்; அங்கு வந்து அவர் ஆர்கியூ செய்ய மாட்டார்.  பேசாமல் முதல் பந்தை எதிர்கொள்ள போயிடுவார். அந்த நேரம் நான் ஸ்ட்ரைக்கர் ஆக நிற்கும் நான் அவரை பார்க்கவே மாட்டேன். வேறு எங்கோ பார்த்து கொண்டு நிற்பேன்; இப்படி ஓரிரு முறை அவர் முதல் பந்தை எதிர் கொண்டார்”

    இப்படி சச்சின் பேரை சொல்லாமலே சச்சின் பற்றி அவர் பேசியது செம காமெடியா இருந்தது. அதுவும் சின்ன குழந்தை மாதிரி கிரீஸ் அருகே வந்த பின் சச்சினை ஏமாற்றியது பற்றி அவர் சொன்னது செம !

    Share
  • முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம் (World’s First Glimpse of Black Hole Launchpad)

     

                                                                         சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    கண்ணுக்குத் தெரியாத கருந்துளை
    கருவிக்குத் தெரியுது !
    கதிரலைகள் விளிம்பில்
    குதித்தெழும் போது
    கருவிகள் துருவிக் கண்டுவிடும் !
    அகிலவெளிக் கடலில்
    அசுரத் தீவுகளாய் மறைந்துள்ள
    பூதத் திமிங்கலங்கள் !
    உறங்கும் கருந்துளை உடும்புகள்
    விண்மீன் விழுங்கிகள் !
    பிண்டத்தைக் கைப்பற்றி முடங்கும்
    மரணக் கல்லறைகள் !
    பிரபஞ்சச் சிற்பியின்
    செங்கல் மண்
    சேமிக்கும் இருட் களஞ்சியம் !
    கருந்துளை சுழற்சி, செங்குத்து
    கதிர்வீச்சு எழுச்சி
    சுற்றும் ஆப்பத் தட்டு
    இவற்றின் தொடர் பென்ன ?
    இயற்கை அன்னையின்
    கைத்திறம் காண்பது
    மெய்ப்பா டுணர்வது,
    மர்மங்களை உளவிச் செல்வது
    மானுடர் மகத்துவம் !

    ++++++++++++++++++++

    முதலில் நாங்கள் கற்றுக் கொண்டது : கருந்துளை ஏவு அரங்கம் மிகச் சிறியது !    எழுந்திடும் ஒளிக்கதிர் வீச்சுகள் கருந்துளையின் விளைவுத் தொடுவானுக்கு [Black Hole’s Event Horizon ] மிக்க அருகிலிருந்து  பீறிட்டெழுகின்றன.    அந்த விளிம்பிலிருந்து எந்த அண்ட ஒளியும் தப்பிச் செல்ல முடியாது.   அப்படியே கருந்துளை உறிஞ்சி விழுங்கிவிடும்.   இந்த ஒளிக்கதிர் வீச்சுகள் பேரளவு சக்தி கொண்டவை.   இந்த சக்தி எங்கிருந்து வருகிறது ?   கருந்துளையே ஏராளமான அளவில் ஒளிந்துள்ள சக்திக் களஞ்சியம்.   அடுத்து கருந்துளை சுழற்சி [Black Hole Spin]  நிரம்ப அளவு வட்டச் சக்தி [Rotational Energy] கொண்டது.   மேலும் கருந்துளையைச் சுற்றி உருவாகும் ஆப்பத் தட்டு வடிவத்தில் [Pan Cake] தட்டாக்கும் ஈர்ப்பு  இயக்கத்தால் [Accretion Process] ஒளிக்கதிர் வீச்சசுக்கு பேரளவு சக்தி உண்டாகலாம்.   கருந்துளை சுழற்சி ஒளிக்கதிர் வீச்சு உற்பத்திக்கு ஒரு மூல காரணம் என்பதை நாங்கள் அறிய ஆரம்பித்திருக்கிறோம்.  மெய்யாகக் கருந்துளை ஒளிவீச்சு உண்டாக்கும் ஓர் அதிசய எஞ்சின்  !

    ஆவரி பிராடெரிக் [Avery Broderick, Event Horizon Telescope Team]

    “சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன !  காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பைத் திறந்து காட்டி விட்டது !”

    ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

    “புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event Horizon) தெளிவாகக் காட்டுகிறது.  அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக நிரூபிக்கிறது.”

    ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

    “கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல !  அவை ஒளித்துகள் மினுக்கும் கனல் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.

    ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)

    விண்மீன் முந்திரிக் கொத்தில் (Star Cluster) இடைத்தரக் (Medium Size) கருந்துளை ஒன்று இருக்கு மானால், அது சிறிய கருந்துளையை விழுங்கும் அல்லது கொத்திலிருந்து விரட்டி அடிக்கும்.

    டேனியல் ஸ்டெர்ன் Jet Propulsion Lab (JPL), California

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space Answer Book)

    முதன்முதல் கருந்துளை ஏவு பீடம் காணக் கிடைத்தது

    சமீபத்தில் வெளியான விஞ்ஞான இதழின் [Science Express] வலை முன்பதிப்பில் விளைவுத் தொடுவான் விண்ணோக்கிக் குழு  [Event Horizon Telescope Team] உறுப்பினர் ஆவரி பிராடெரிக் [Avery Broderick] உட்பட எழுதிய ஒரு தகவலில் கருந்துளைகள் வெளியேற்றும் ஒளிமிக்க எழுச்சிகளின் [Bright Jets] மூலாதாரம் பற்றி முதன்முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.   வெகு தூரத்தில் உள்ள ஒரு கருந்துளையைக் கண்டு அந்தக் குழுவினர் அவ்வித ஒளிவீச்சு ஏவப்படும் தளத்தைத் தீர்மானிக்க முடிந்தது.   இதுவே ஓர் துவக்க நிலை நிரூபண முதற் சான்றாகும் [First Empirical Evidence].   இதன் மூலம் கருந்துளை சுழற்சிக்கும் [Black Hole Spin] கருந்துளை ஒளிவீச்சுக்கும் [Black Hole Jets] உள்ளை இணைப்பு நிரூபிக்கப் படுகிறது.   இதுவரை இந்த முடிவு வெறும் சித்தாந்த முறையில்தான் [Theoretical Grounds] தெரிவிக்கப் பட்டது.

    நமது பால்மய வீதி உட்பட பல காலக்ஸிகளின் மையத்தில் மிகப் பெரும் கருந்துளை ஒன்று ஒளிந்து கொண்டுள்ளது.    அவற்றில் 10% காலக்ஸிகள்  ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் எலெக்டிரான் போன்ற மின்துகள்கள் நிறைந்த மிக நீண்ட திரட்சி ஒளிக்கதிர் வீச்சுகளை வெளியேற்றுகின்றன.    ஒளிக்கதிர் வீச்சுகளின் நீளம்  பல்லாயிரம் ஒளியாண்டு தூரம் செல்பவை.   காலக்ஸி ஒளிமந்தையைக் காட்டிலும் ஒளிமயமானவை அந்த ஒளிவீச்சுகள்.    ஆயினும் அந்த ஒளிக்கதிர் வீச்சுகளைப் பற்றிய விபரம் எதுவும் இல்லை.    இப்போது அந்தப் பணியைத்தான் இந்த ஆய்வுக் குழு செய்ய முயல்கிறது.   பூமி முழுதும் கண்காணிக்கும் மூன்று ரேடியோ விண்ணோக்கிகளின் தகவலைத் திரட்டி ஒப்பிட்டு, அந்த ஒளிவீச்சின் அடிப்படை அதன் ஏவு பீடம் [Launchpad] என்று முதன்முதல் அறிவித்துள்ளது.   குழு உறுப்பினர்கள் குறிக்கோளாக 50 மில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள  M87 பூதவடிவ நீள்வட்ட ஒளிமந்தையை  [M87  Supergiant Elliptical Galaxy] எடுத்துக் கொண்டார்கள்.

    “முதலில் நாங்கள் கற்றுக் கொண்டது : கருந்துளை ஏவு அரங்கம் மிகச் சிறியது !    எழுந்திடும் ஒளிக்கதிர் வீச்சுகள் கருந்துளையின் விளைவுத் தொடுவானுக்கு [Black Hole’s Event Horizon ] மிக்க அருகிலிருந்து  பீறிட்டெழுகின்றன.    அந்த விளிம்பிலிருந்து எந்த அண்ட ஒளியும் தப்பிச் செல்ல முடியாது.   அப்படியே கருந்துளை உறிஞ்சி விழுங்கிவிடும்.   இந்த ஒளிக்கதிர் வீச்சுகள் பேரளவு சக்தி கொண்டவை.   இந்த சக்தி எங்கிருந்து வருகிறது ?   கருந்துளையே ஏராளமான அளவில் ஒளிந்துள்ள சக்திக் களஞ்சியம்.   அடுத்து கருந்துளை சுழற்சி [Black Hole Spin]  நிரம்ப அளவு வட்டச் சக்தி [Rotational Energy] கொண்டது.   மேலும் கருந்துளையைச் சுற்றி உருவாகும் ஆப்பத் தட்டு வடிவத்தில் [Pan Cake] தட்டாக்கும் ஈர்ப்பு  இயக்கத்தால் [Accretion Process] ஒளிக்கதிர் வீச்சசுக்கு பேரளவு சக்தி உண்டாகலாம்.   கருந்துளை சுழற்சி ஒளிக்கதிர் வீச்சு உற்பத்திக்கு ஒரு மூல காரணம் என்பதை நாங்கள் அறிய ஆரம்பித்திருக்கிறோம்.  மெய்யாகக் கருந்துளை ஒளிவீச்சு உண்டாக்கும் ஓர் அதிசய எஞ்சின்  !” என்று சொல்கிறார்  ஆவரி பிராடெரிக் [Avery Broderick, Event Horizon Telescope Team].   விளிம்பில் உண்டாகும் ஆப்பத் தட்டு, விளவு தொடுவானைப் போல் 5.5 மடங்கு விட்டமுள்ளது என்பது குழுவினரால் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    பூதக் கருந்துளைகள் தெரிவிக்கும் புதிய மர்மங்கள் !

    சமீபத்தில் வெளிவந்த “இயற்கை” விஞ்ஞான வெளியீட்டில் பாஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளர்கள், எப்படிக் கருந்துளைகள் ஒளிவேகத்தை ஒட்டிக் கதிர்த் துகள்களை வீசுகின்றன என்பதைக் கணித்து விட்டதாகக் கூறினர்.  அந்தக் கதிர்த் துகள்களின் உந்து எழுச்சி (Jet Streams of Particles) கருந்துளைகளின் விளிம்பில் உள்ள காந்த தளத்திலிருந்து உண்டாகிறது என்றும் கூறினர்.  அதாவது கருந்துளை விளிம்பு அரங்கிற்குள்ளே கதிர்த் துகள்கள் விரைவாக்கம் பெற்று குவிகின்றன என்று விளக்கினர்.

    நமது பால்வீதி மையத்தில் ஒரு கருந்துளை இருப்பதாகக் கருதினாலும் விஞ்ஞான நிபுணர் அருகில் வந்த எந்தப் பிண்டத்தையும் அண்டத்தையும், ஏன் ஒளியைக் கூட விழுங்கி விடும் அந்த விண்வெளிப் பூதங்களைப் பற்றி இன்னும் மிகக் குறைந்த அளவே அறிந்துள்ளார்.  பாஸ்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் அலன் மார்ஸ்செர் கருந்துளை இதயத்தைத் துளைத்து அரிய தகவலை அறிந்து விட்டதாக வலுவுறுத்தினார் !  சக்தி வாய்ந்த பத்துத் தொலைநோக்கிகள் மூலம் ஒரு காலாக்ஸியை (Galaxy BL Lacertae) உற்று நோக்கி எங்கிருந்து, எப்படிக் கதிர்த்துகள்கள் உந்தி எழுகின்றன என்று உளவிக் கண்டுபிடித்து விட்டதாக பேராசியர் மார்ஸ்செர் உறுதியாக நம்புகிறார்.  மேலும் கருந்துளையில் உந்தி எழும் கதிர் ஊற்றின் உட்புறப் பகுதியைக் கூடத் தெளிவாகக் கண்டு விட்டதாகக் கூறினார்.

    பிரம்மாண்ட அளவுள்ள கருந்துளை கார்க் மூடிச் சுருளாணிபோல் (Winding Corkscrew) ஒளிப்பிழம்பு வெள்ளத்தை (Plasma Jets) உமிழ்கிறது என்று வானியல் விஞ்ஞானிகள் முதலில் ஐயுற்றுப் பிறகு அந்த உளவு நோக்குகள் மெய்யென உறுதிப்படுத்துவதாகக் கூறினர். அவ்விதம் கதிர் எழுச்சிகளின் உட்பகுதிகளைக் கண்டாலும் கருந்துளைக்குள் என்ன உள்ளது என்பதை இன்னும் விஞ்ஞானிகள் காண முடியவில்லை என்று பி.பி.சி. விஞ்ஞான வல்லுநர் நீல் பௌட்ளர் குறை கூறினார்.  கோட்பாட்டு பௌதிக விஞ்ஞானிகள் (Theoretical Physicists) கூறுவது மெய்யானால், அந்த மர்மமான கருந்துளையின் உட்பகுதியைக் காணவே முடியாது என்றும் பி.பி.சி. நிபுணர் கூறினார்.

    காலாக்ஸியில் சிறு கருந்துளைகள் & பெருங் கருந்துளைகள்

    சிறு கருந்துளைகள், பெருங் கருந்துளைக்கள் இரண்டுக்கு மிடையே இருக்கும் நடுத்தரக் கருந்துளையைக் காலாக்ஸிகளில் காண்பது அபூர்வம் என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  கருந்துளைகள் என்பவை எண்ண முடியாத அளவு அடர்த்தியைக் கொண்ட முனைப் பிண்டம் (Incredibly Dense Points of Matter).  அவற்றின் ஈர்ப்பாற்றல் ஒளிப் போக்கை வளைக்கும்.  அருகில் வந்தால் ஒளியையும் கருந்துளை இழுத்து உட்கொள்ளும் ! சிறிய கருந்துளை அருகில் இருந்தால் பெருங் கருந்துளை அதைக் கவ்வி விழுங்கி விடும். பூத விண்மீன்கள் சூப்பர்நோவாவாக வெடிக்கும் போது சிறு நிறையுடைய கருந்துளைகள் தோன்றுகின்றன !  அந்த மிகச் சிறிய கருந்துளை கூட நமது பரிதியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது !  பேரளவு நிறையுடைய கருந்துளைகள் பரிதியைப் போல் பல பில்லியன் மடங்கு திணிவு உள்ளவை !  அத்தகைய பூதக் கருந்துளைகள் ஏறக்குறைய எல்லா காலாக்ஸி வயிற்றிலும் இருக்கின்றன !  ஆயினும் 1000-10,000 மடங்கு பரிதி நிறையுள்ள நடுத்தரக் கருந்துளைகள் விண்மீன் கொத்துக்களின் இடையே இருக்கலாம் என்று கோட்பாட்டுப் பௌதிக வாதிகள் கூறுகிறார்.  சென்ற ஆராய்ச்சி வெளியீட்டு ஒன்றில் டாக்டர் ஸெ·ப் (Dr. Zepf) குழுவினர் 50 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் ஓர் அண்டை காலாக்ஸியின் கருந்துளை (Black Hole : RZ-2109) இருப்புக்குச் சான்றுகள் தேடினார்.

    ஈரோப்பியன் விண்வெளி ஆணையகத்தின் நியூட்டன் தொலைநோக்கி (ESA’s XMM-Newton Telescope)

    1999 டிசம்பர் 10 இல் விண்வெளியில் ஏவப்பட்ட நியூட்டன் எக்ஸ்ரே விண்ணோக்கி உளவி பூமியிலிருந்து 4000 – 68000 மைல் உயரத்தில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்து காலாக்ஸிகளில் உள்ள கருந்துளைகளின் கதிர்த்துகள் எழுச்சிகளை உளவியது.  இரண்டு ஆண்டுப் பணிக்குத் திட்டமிட்ட அந்த விண்ணோக்கி இப்போது 2010 ஆண்டுகள் வரைப் பணிபுரிய நீடிக்கப் பட்டது.  அந்த எக்ஸ்ரே விண்ணோக்கி மூலம் தனித்துவ எக்ஸ்ரே முத்திரை கொண்ட ஓரியங்கும் கருந்துளையைக் கண்டுபிடித்தார்கள்.  அதன் ஒளிப்பட்டை மூலம் அறிந்தது அது பரிதியைப் போல் 10 மடங்கு நிறையுடைய ஒரு சிறிய கருந்துளை என்பது.  அத்தகைய சிறிய கருந்துளை கொண்ட ஒரு விண்மீன் கொத்து, நடுத்தரக் கருந்துளை ஒன்றைக் கொண்டிருக்காது என்று கருதப்படுகிறது.  அவ்விதம் ஓர் நடுத்தரக் கருந்துளை இருந்தால் அது சிறிய கருந்துளையை விழுங்கி விடும் அல்லது அங்கிருந்து விரட்டி விடும் என்று டாக்டர் ஸ்டெர்ன் கூறினார் !

    ஜப்பானிய வானியல் விஞ்ஞானிகள் நாசா விஞ்ஞானிகளோடு இணைந்து தமது எக்ஸ்ரே துணைக்கோளையும், ஈசாவின் நியூட்டன் எக்ஸ்ரே விண்ணோக்கியையும் பயன்படுத்தி நமது பால்வீதி காலாக்ஸியின் மையத்திலுள்ள கருந்துளை 300 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவிட்ட பேராற்றல் கொண்ட கதிர்வீச்சைக் கண்டார்கள் !  அந்த கருந்துளையின் பெயர் ஸாகிட்டேரியஸ் ஏ ஸ்டார் (Sagittarius A-Star) என்பது.  அது ஒரு பூதகரமான பெருங் கருந்துளை !  அதனுடைய நிறை பரிதியைப் போல் 4 மில்லியன் மடங்கு !  ஆனால் அதிலிருந்து வெளியாகும் கதிர்த்துகள் வீச்சுகள் மற்ற காலாக்ஸிக் கருந்துளைகளின் கதிர்வீச்சை விட பல மில்லியன் மடங்கு குறைந்தது !  காரணம் அது ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முதிர்ந்து போய் ஓய்வாக இருக்கிறது !

    பிரபஞ்சத்தில் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள்

    1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார்.  ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள்.  அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் !  ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

     

    1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது.  கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it).  பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி).  அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்..  அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி).  ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது.  அதாவது அருகில்  ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.

    கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ?  நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன !  அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு !  பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது !  ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    அண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

    1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி அறியப் புதியக் கணித முறைகளைக் கையாண்டு, ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியில் [General Theory of Relativity] “ஒற்றை முடத்துவத்தை” [Singularities] ஆராய்ந்து வந்தார்.  அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக வேலை செய்தார்.  1970 முதல் ஸ்டீஃபென் அண்டவெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார்.  அப்போது அவர் கருஙந்துளைகளின் ஓர் மகத்தான ஒழுக்கப்பாடைக் [Property] கண்டுபிடித்தார்!  ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது!  ஒளித்துகளை அவை விழுங்கி விடும்!  ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது!  கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது!  ஜெர்மன் விஞ்ஞானி வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை [Radiation] வெளியேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

    கருந்துளைகள் கருமைப் பிண்டம் சேமிப்புக் களஞ்சியம் !

    சக்தி அழியாதது போல் பிண்டமும் அழியாது !  வலுவற்ற சிறிய கருந்துளைகளை விழுங்கி விடுகின்றன பெருங் கருந்துளைகள் !  அண்டையில் வரும் விண்மீன்களைக் கவ்வி இழுத்துக் கொள்கிறது கருந்துளையின் ஈர்ப்பு விசை !  அது போல் அருகில் நெருங்கும் ஒளிச்சக்தியையும் உறிஞ்சி விடும் கருந்துளைகள் !  பூத வாயு முகிலை வைத்துப் கணனிப் போலி இயக்கம் செய்ததில் (Computer Simulation of Giant Gas Clouds) வாயு முகில் நீரைச் சுழலில் இழுக்கும் நீர்ச்சுழலி போல் கருந்துளை இழுத்துக் கொள்வது அறியப் பட்டது.  அந்தப் போலி இயக்கங்கள் காட்டுவது என்னவென்றால், பூதப் பெருங் கருந்துளைகளின் அருகே காலாக்ஸியிலிருந்து பேரளவு வாயு முகில் கிடைத்தால், புதிய விண்மீன்கள் உண்டாக வாய்ப்பு ஏற்படுகிறது என்று பிரிட்டனின் ஸெயின்ட் ஆன்டிரூஸ் பல்கலைக் கழகத்தின் இயான் பான்னெல் கூறுகிறார்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Comman are Black Holes ? & Can Light Escape from Black Holes ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 A Discover Special – Unseen Universe – Comets Captured By : Jack McClintock (Jan 31, 2007)
    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711221&format=html (கருமைப் பிண்டம்) (Dark Matter)
    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711291&format=html (கருமைச் சக்தி) (Dark Energy)
    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712061&format=html (கருந்துளை) (Dark Hole)
    28 Scientific American – Does Dark Matter Really Exits ? By : Moredehai Milgrom
    29 Astronomy Magazine – Peering into Black Holes By : Steve Nadis (Feb 2001)
    30 Scientific American – Echoes of Black Holes By : Theodore Jacobson (Dec 2005)
    31 Astronomy Magazine – Black Holes Seeing Unseeable ! New Technology will Prove Black Holes Exit By : Seteve Nadis (April 2007)
    32 BBC News : Black Holes Reveal More Secrets [Aug 24, 2008]
    33 BBC News : Black Holes Dodge Middle ground [Aug 24, 2008]
    34 Milky Way’s Core Black Hole Beamed out Massive Flares 300 Years Ago [Aug 26, 2008]
    35 European Space Agency Report on XMM-Newton X-Ray Space Telescope Launch (Dec 10, 1999)
    36 BBC News : Huge Black Hole Tips the Scale By : Paul Rincon, Austin Texas.
    37 BBC News : Rapid Spin for Giant Black Holes By : Paul Rincon, Austin Texas

    38  http://en.wikipedia.org/wiki/Messier_87  [A Supergiant Elliptical Galaxy] [September 29, 2019]

    39 Time and Space : Measuring the Universe’s Exit door By Jennifer Chu  [MIT News, Boston, MA] [Oct 2, 2012]

    40  Time and Space : World’s First Glimpse of Black Hole Launchpad [Oct 3, 2012]

    ******************
    jayabarat@tnt21.com [October 5,  2012]

    Share
  • தென்னாட்டு சாந்தாராம்

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 51)

    தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும்  பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற கவலைகளில் பீடிக்கப்பட்டதாக உணரவே இல்லை. எப்படி நான் அதை ஏதோ சினிமா விளம்பரம் பார்ப்பது போல எவ்வித கலவரமும் இல்லாது வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன் என்பது தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கு இருக்கப் போவதில்லை, ஒரு சில மாதங்கள், அல்லது அதிகம் போனால் ஒரு வருடம் இங்கு காலம் தள்ள முடியும். அதன் பின்? சிக்கல் தான். நிச்சயமின்மை தான். ஆனாலும் எப்படி ஒரு அமைதியான மனத்துடன் அந்த நாட்களில் இருந்தேன் என்பது இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ வீரன், தீரன் என்றும் மனத்திடம் என்றும் எல்லாம் என்னைச் சொல்லிக் கொள்வதற்கும் இல்லை.

    எப்படியோ தெரியவில்லை. எப்போதும்  போல் அமைதியாக, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் ஒருவர் இருவராக, நாலைந்து பேராக ஊரைக் காலி செய்து கொண்டிருந்த போது, நான் பத்திரிகைகளில் வந்த விளம்பரங்களுக்கு மனு போட்டுக் கொண்டிருந்தேன். முதலில் வந்த அழைப்பு Northern Railway யிலிருந்து.. நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். கூடவே சம்பல்பூரிலிருந்து அலஹாபாதுக்கு போக வர இலவச ரயில்வே பாஸும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல் தடவையாக இலவசமாக ரயிலில் வெகுதூரம் பிரயாணம் செய்யப் போகிறேன். கூட வேலை சம்பந்தப்பட்ட ஒரு நேர்காணலுக்கும் போகப்போகிறேன். புதிய அனுபவம். யாரும் சிபாரிசு செய்து அல்ல. கூட அழைத்துச் சென்று அல்ல. நானே என் தகுதியில் என் முயற்சியில் ஒரு வேலை தேடிக்கொள்ளப் போகும் முதல் அடிவைப்பு. பெருமை யாக இராதா?

    எப்படிப் போவது? யாருக்கு வழி தெரியும்.? தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் தான் என்ன? ரயில்வே பாஸ் இருக்கிறது. இலவசம். எங்கே வேண்டுமானாலும் இறங்கி எந்த வண்டியில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். சம்பல்பூரிலிருந்து ஒரு வழியா, இல்லை நேராகச் செல்லும் வண்டி ஏதுமா? இல்லை. எத்தனை வண்டி ஏறி இறங்கி மாறவேண்டுமோ. இஷ்டம் போல் செய்யலாம். ஆனால் குறித்த தேதிக்கு முன்னால் போய்ச் சேர்ந்து விடவேண்டும்.

    சேர்ந்தேன். எப்படி என்றெல்லாம்  இப்போது நினைவில் இல்லை. அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கியதும், அது இரவு நேரம். மணி ஏழரை எட்டு இருக்கும். ஒரு ரிக்‌ஷாக்காரன் ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லவே, வேறு வழி? சரி என்று ஏறி உட்கார்ந்து அவன் இட்டுச் சென்ற இடத்தில் இறங்கினேன்.

    அது ஹோட்டலாகத் தெரியவில்லை. வளைந்த குறுகிய மாடிப்படி ஏறினால் அறைகள். என் அறைக் கதவு ஒரு மாதிரிதான் இருந்தது. பழங்காலத்துக் கதவு. தாட்பாள் இல்லை. கதவின் மேலே ஒரு சின்ன சங்கிலி. அதை நிலைப்படியின் மேல் சட்டத்தின் வளைவில் கோர்த்து அறையைப் பூட்ட வேண்டும். உள்ளே ஒரு கட்டில். அவ்வளவே. ஒன்றும் சரியாகத் தோன்றவில்லை. இடமும் அதிக நடமாட்டம் உள்ள இடமாகத் தோன்றவில்லை. அப்போது தான் எனக்குச் சற்று, கவலை பயமாக பூதாகரிக்கத் தொடங்கியது. இருப்பதா, இல்லை வேறு இடம் தேடுவதா? வேறு இடம் எங்கே என்று தேடுவது?. இரண்டு நாட்களுக்கு காசும் கொடுத்தாய்விட்டது.  சரி நடப்பது நடக்கட்டும் பார்ப்போம் என்ற ஒரு அசட்டு  தைரியம். உள்ளே பையை வைத்துவிட்டு சாப்பிடப் போனேன். அது ஒன்றும் பெரிய தேடலாக இல்லை. வெளியே பெஞ்ச் மேஜை போட்டு இது தான் பஞ்சாபி ஹோட்டல் என்று விளம்பரம் இல்லாது தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒன்று. சாப்பிட்டேன். அதில் ஒன்றும் கஷ்டம் இல்லை. பஞ்சாபி உணவு பழகியது. புது இடம். எதாக இருந்தாலும் நன்றாகத் தான் தோன்றும். லாட்ஜுக்குத் திரும்பி வந்து படுத்துக்கொண்டேன்.

    வழியில் சினிமா விளம்பரம்  ஒன்று பார்த்தேன். புதிய படம். ஜனக் ஜனக் பாயல் பாஜே. நல்ல பாட்டுக்கள். நல்ல நடனங்கள் கொண்ட படம். என்று படித்திருக்கிறேன். சாந்தாராம். தாஹேஜ் என்ற பழைய படம் ஒன்று சம்பல்பூர் விஜயலட்சுமி டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். எரியும் சமூகப் பிரச்சினைகளை கையாள்பவர் என்று புகழ் பாடப்படுபவர். தஹேஜ் என்றால் வரதட்சணை என்று பொருள். அதில் வரதட்சணைக் கொடுமையில் தவிக்கும் பெண்ணின் அவலம் பற்றிய கதை. அதெல்லாம் சரி. ஆனால் ஒரே மெலோட்ராமா. அழுகை. ஸ்டாக் பாத்திரங்கள். ஸ்டாக் சம்பவங்கள். புதிதாக சாந்தாராம் டச் என்று சொல்லப் படுவதைத் தேடினால், அதில் ஒரு காட்சி. ஜயஸ்ரீ, தான் கதாநாயகி. சாந்தாராம் தான் காதலித்து மணம் புரிந்து கொண்ட  மனைவியை கதாநாயகியாக்கிக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை. பணம் மிச்சம். தன் மனைவிக்கும் புகழ் தேடித்தரும் காரியம் தான். ஆனால் அவளை இடுப்பை வளைத்து தன் செழிப்பான பின்புறங்களை ஆட்டிக்கொண்டே நடக்க வைப்பது தான் பெண்ணின் அழகைக் காட்டுவதற்கான ஒரே வழி என்று சாந்தாராமுக்குப் பட்டிருக்கிறது. ஜயஸ்ரீயின் பின் புற அழகைப் பற்றி ரொம்பவும் பெருமைப் பட்டுக்கொள்கிறவர் சாந்தாராம், அப்பெருமையை உலகறியச் செய்ய்யும் விருப்பம் அவருக்கு  என்றும் தோன்றுகிறது. ஆரம்பக் காட்சிகளில் ஒரு பந்து வீசப்படும். அது முன்னே தன் அழகான பின்புறத்தை ஆட்டிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும் ஜயஸ்ரீயின் பின்புறத்தை அடித்துத் திரும்பும். ஜயஸ்ரீ திரும்பிப் பார்த்து பொய்க்கோபம் கொள்வாள். இப்படித்தான் இருக்கும் அவர் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும் பார்வையும் அதற்கு அவர் தேடும் உத்திகளும். இப்போது அவர் இந்திய சினிமாவில் ஒரு பெரிய சகாப்த புருஷர். நம்மூர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், மணிரத்தினம் போல. நம்மூர் ஸ்ரீதர் வாழ்வில் ஒரு நாள் நாம் காசியாத்திரை போகும் ஆசை கொண்டிருப்பது போல, அவர் ஒரு நாள் சாந்தாராம் ஷூட்டிங் பார்க்கப் போயிருக்கிறார். “உங்களைத் தென்னாட்டு சாந்தாராம் என்று சொல்கிறார்களாமே? “ என்று சாந்தாராம் கேட்டாராம். “ஸ்ரீதர் அதற்கு சற்று வெட்கப்பட்டு ஆமாம் என்றாராம். எல்லாம் விவரமாக அந்த சைதன்யத்தைப் பற்றி தமிழ் பத்திரிக்கை ஒன்றில் அவரே எழுதியிருக்கிறார். இல்லையெனில் எனக்கு எப்படித் தெரியும். இன்னொரு காட்சி. மேலே ஒரு ஹரிகேன் விளக்கு ஒன்று தொங்கும். மாமனாரும் மருமகளுமோ இல்லை மாமியாரும் மருமகளுமோ ஒரு சூடான விவாதத்தில். மேலே தொங்கும் ஹரிகேன் விளக்கு ஆடும். ஒரு பக்கம் சாயுந்து ஆடும்போது மாமனாரின் முகம் கோபாக்கினியில் சுடர் விட்டு எரியும். விளக்கு மறுபக்க முனைக்கு ஆடிச் செல்லும் போது மறுமகளின் துக்கத்தில் பீறிடும் முகம் காணும். இப்படி அந்த விளக்கு ஒரு மூலைக்கு மறு மூலை என்று ஆட, இருவர் முகமும் மாறி மாறி உணர்ச்சிகளின் உச்ச கட்டத்தைத் தொடும். அரங்கில் அழுகையும் மூக்கை உறிஞ்சலும் கேட்கும் அமைதி. இது இன்னொரு சாந்தாராம் டச்.

    சரி நல்ல பாட்டுக்கள், நல்ல நடனங்கள் இந்தப் படத்தில் என்று சொல்லப்படுகிறது. நடனமும் பாட்டுமே படத்தின் மையக் கரு. அதுவே படம் முழுதும் விரவியிருக்கும் என்றும் படித்திருந்தேன். சரி பார்த்து வைப்போம். ஆனால் அது நாளைக்கு. நேர்காணல், பரிட்சை எல்லாம் முடிந்த பிறகு என்று தீர்மானித்துக் கொண்டேன்.

    இரவு அமைதியாகக் கழியவில்லை. எந்நேரமும் கதவு தட்டப்படலாம், எதுவும் நேரும் என்ற ஒரு  திகில் இருந்து கொண்டே இருந்தது. இப்போதாவது சரி. நாளை, அறையைப் பூட்டிக் கொண்டு இண்டர்வ்யூக்குப் போனால் இங்கு என்ன நடக்கும்? என்றும் கவலை. இது தான் முதல் தடவை என்பதால் இந்தக் கவலையா, இல்லை இந்த இடம் ஒரு மாதிரியாக அதிகம் நடமாட்டம் இல்லாத இடமாக இருப்பதால் இப்படித் தோன்றுகிறதா என்று தெரியவில்லை.

    இரவு எப்படியோ கழிந்துவிட்டது தான். துக்கத்தில்  எதுவும் தெரியவில்லை. புது இடம், பழக்கமில்லாத் சூழல். அது தான் வேண்டாத சிந்தனைகளையும் கவலைகளையும் தூண்டியதோ என்னவோ. காலையில் குளித்துவிட்டு காலை உணவும் சாப்பிட்டுவிட்டு நேர்காணலுக்குக்குறித்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்கவேண்டும். இ[ப்போது அது நினைவில் இல்லை. ஆனால் எல்லாம் முடிந்த பிறகு இரண்டு மூன்று இடங்களுக்குப் அலஹாபாத் சுற்றிப் பார்க்கப் போனது நினைவில் இருக்கிறது. ஒன்று மோதிலால் நேரு புகழும் செல்வாக்கும் மிக்க வக்கீலாக இருந்த போது தனக்கென கட்டிக்கொண்ட ஆனந்த் பவன். அதைப் பின்னர் காங்கிரஸ் பார்ட்டிக்கு என கொடுத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அங்கு தான் இந்திரா காந்தி வளர்ந்ததும், பெரோஸ் காந்தியுடன் பழக்கமேற்பட்டதும், இத்யாதி. ஆனால் இப்போது அந்த பவனின் வெளித்தோற்றம் தான் நினைவிலிருக்கிறதே தவிர உள்ளே சென்று பார்த்த நினைவுகள் மறந்துவிட்டன. அதைத் தான் இப்போது ஸ்வராஜ் பவன் என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பின்னர் ஏதோ ஒரு மொகலாய கட்டிடம் என்னவென்று நினைவில் இல்லை.

    பின்னர் கங்கைக்  கரைக்குச் சென்றது நினைவில் இருக்கிறது. அங்கு ஒரு  படகுக்காரனைப் பிடித்து சங்கமத்துக்கு சென்றது நினைவில் இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்த பிறகு பிரயாகைக்குப் போய் திரிவேணி சங்கமம் பார்க்காமல் போவியா என்ன? என்று ஒரு படகுக்காரனே கேட்டான். இல்லாவிட்டால் எனக்கு எப்படித் தெரியும் படகில் திரிவேணி சங்கமத்துக்குப் போகலாம், அதற்கு படகோட்டிகள் தயாராக இருப்பார்கள் அந்த வாடிக்கை உண்டு என்று?. சரி என்று உட்கார்ந்து விட்டேன். ஐந்து ரூபாய் பேசினதாக நினைவு. சரியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் இதுவல்ல நான் சொல்ல வந்த விஷயம்.

    எவ்வளவு பெரிய  பிரம்மாண்டமான நதி அது. கங்கை. அதில் நான் படகில் தனியாகப் போய்க்கொண்டிருந்தேன். படகோட்டி என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். படகில் உட்கார்ந்து பாதி தூரம் அந்த பிரும்மாண்டத்தின் மத்திக்குப் போனபின் தான் பயம் ஏற்பட்டது. இப்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? நீச்சல்கூட தெரியாதே. நீச்சல் தெரிந்தாலே இந்த சமுத்திரம் போன்ற பிரவாகத்தில் எப்படி தப்பிப்பது? ராமக்ரிஷ்ண கதாம்ருதத்தில் தான் படித்த ஒரு கதை. கதையில் படகில் சவாரி செய்துகொண்டிருப்பது ஒரு பண்டிதர். சகல சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் கரைத்துக்குடித்தவர். படகோட்டியை, ”உனக்கு இது தெரியுமா, அது தெரியுமா?” என்று தன் தொணதொணப்பில் வறுத்துக்கொண்டிருக்கிறார். படகோட்டி அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் தனக்குத் தெரியாது என்றே சொல்லிவருகிறான். பண்டிதருக்கு தன் வித்வத்தின் கர்வம் தலைக்கேறுகிறது. “கடைசியில் அவனுக்காக பச்சாதாபப்பட்டு, “இப்படி ஒன்றுமே தெரியாது வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே அப்பா? என்று இரக்கப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் பலமான காற்று வீச படகு ஆட்டம் காண்கிறது. படகோட்டி அந்த வித்வானைக் கேட்கிறான். ”ஐயா, தங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்க அவர் தெரியாது என்று சொல்ல, இப்போது படகோட்டியின் முறை, “ஐயா, வாழ்க்கை முழுதும் என்ன புராணமும், சாஸ்திரங்களும் கற்று என்ன பயன்?, இப்போது நீச்சல் தெரியாத உங்கள் வாழ்க்கை தான் முடியப் போகிறது? என்று சொல்லி ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்குகிறான் என்பது அந்தக் கதை. எனக்கும் எந்தப் பயனும் இப்போது இல்லாத படிப்பும், நேர்காணலும், வேலை வாய்ப்பும் என்ன பயன் தரப்போகிறது,? எல்லாமே முடிந்து விடுமோ என்ற பயம் தோன்றியது என் கவலை ஏதும் அறியாத படகோட்டியோ, ”ஐயா வந்துவிட்டோம் மையப் பகுதிக்கு. இதோ பாருங்க இங்கே தான் இரண்டு நதியும் சேர்கிறது” என்றான் பார்த்தால் ஏதோ நடுக்கடலில் இருப்பது போல ஒரு பிரம்மாண்டத்தின் நடுவில் அகப்பட்டுக்கொண்டு அந்த படகோட்டியின் கையில் தயவில் என் உயிர் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

    திரிவேணி சங்கமம்  வந்து, கிடைத்தற்கரிய ஒரு  அனுபவத்தின் திளைத்து பக்தி பாவத்தில் மூழ்குவதற்கு பதிலாக நான் இப்படி வேண்டாத சிந்தனையில் எல்லாம் ஆழ்ந்து ஏன் அவதிப்பட வேண்டும்? படகு இருக்கிறது. இதையே தொழிலாகக் கொண்ட படகோட்டி இருக்கிறான். என் உயிரைக் காப்பதில் தானே அவன் பிழைப்பும் என்று நினைத்துக்கொண்டேன். நேற்று இரவு இப்படித் தானே வேண்டாத சிந்தனைகளில் அவதிப்பட்டோம் என்றும் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

    இருப்பினும் இது  தானா திரிவேணி சங்கமம்? சரஸ்வதி  இல்லை. யமுனையும் கங்கையும்  தான். ஆனால், இரண்டு நதிகளும், சங்கமிக்கும் இடத்தில் படகு இருக்கமுடியுமா? எங்கோ நிறுத்தி விட்டு இது தான் த்ரிவேணி என்கிறானோ. எதாக இருந்தால் என்ன? இரண்டு நதிகளும் சங்கமிக்கும் புள்ளியில் இருந்து தான் ஆகவேண்டுமா என்ன? தூரத்தில் இரு பக்கங்களிலும் விஸ்தாரமாக, ஏதோ கடல் விஸ்தரித்து இருப்பது போல ஒரே நீர்ப்பரப்பாக, தொடுவானம் வரை, இப்படி எங்கே பார்த்திருக்கிறோம். சங்கமிக்கும் புள்ளியிலிருந்து வெகுதூரம் தள்ளியே இருந்து விட்டுப் போகட்டும். இப்படி அகன்ற ஒரு நீர்ப்பரப்பை எங்கு காணப் போகிறோம். இந்த பிரம்மாண்டத்தின் நடுவில் நாம் எவ்வளவு சிறுத்துப் போய்விட்டோம். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருந்தது. சிந்தனை மறுத்த பிரமிப்பில் ஆழ்ந்திருக்கும் போது படகோட்டி திரும்பிக்கொண்டிருந்தான். ஒன்றும் பேசத் தோன்றவில்லை. படகோட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்வது எதுவும் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவனும் இந்த ஆள் பயந்து கிடக்கிறான் என்று தெரிந்திருப்பான்.

    மாலை சினிமாவுக்குப் போனேன். ஜனக் ஜனக் பாயல் பாஜே. ஜனக் ஜனக் என்று சலங்கைகள் ஒலித்தன என்று பொருள். தேகி நா தார் மூக், தேகினா தார் பாணி, கேவல் ஸூனி தாஹார் பாயேர் த்வனி கானி. (அவன் முகத்தை நான் பார்க்கவில்லை. அவன் குரலையும் நான் கேட்கவில்லை. அவன் கால் சலங்கை ஒலி மாத்திரமே எனக்குக் கேட்டது) தாகூரின் பாடல் வரிகள். சலங்கை ஒலிகள் தான் என்னென்ன கற்பனைகளை சிறகடித்துப் பறக்க விடுகின்றன. இன்று காலை கூட பீம்சேன் ஜோஷியின் பாட்டு கேட்டது. இரண்டே வரிகள

    சலங்கை ஒலி தான் கேட்கிறது. அவளை யார் சமாதானப் படுத்துவது? கேட்க மாட்டேன் என்கிறாளே? போதும் அரை மணி நேர கயாலுக்கு. சில காட்சிகள், படிமங்கள்  காலம் காலமாக நம்மை சிலிர்க்க வைக்கின்றன. ஏங்க வைக்கின்றன. அதை நினைத்து நினைத்து நாமும் ஏங்க விரும்புகிறோம் என்பது தான் விந்தை. வெகுதூரப் பயணி. கிணற்றடியில் ஒரு பெண். நீர் வார்க்கிறாள். படகோட்டி. ஒரு கரையிலிருந்து மறு கரைக்குப் பயணம். இப்படியான எல்லா இலக்கியங்களிலும் எல்லாக் காலத்திலும் திரும்பத் திரும்பத் தோன்றும் படிமங்களில் காட்சிகளில் சலங்கை ஒலியும் ஒன்றாகத் தோன்றுகிறது.

    முதல் தடவையாக சாந்தாராமின் படம் ஒன்றில் சிலகாட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தன. பாட்டுக்கள். சில நடனங்கள். இளம் வயது சந்தியா, சாந்தாராமின் புதிய சேர்க்கை, படத்திலும், வாழ்விலும்,. ஜெயஸ்ரீ, பிரிந்தாயிற்று. சாந்தாராமுக்கு சினிமாவைப் பத்தி என்ன தெரியும் என்று ஜெயஸ்ரீ சொல்ல ஆரம்பித்து விட்டாள். பாபுராவ் படேலின் ஃபில்ம் இந்தியாவில் படித்தேன் ஏதோ ஆத்திரத்தில் சொல்கிறாள் என்று தோன்றும். ஆனால் உண்மையும் அது தானே.

    மற்றபடி படம் சினிமாவாக  இல்லை. பழைய சாந்தாராம். கலர்ப் படம். கதக் நடனம் பார்க்கும் படியாக இருந்தது. மற்றபடி  அது என்னைக் கவரவில்லை. திரும்ப ஒரு முறை நான் அந்தப் படத்தைப் பார்க்கும் ஏற்படவில்லை. புர்லாவிலும் சரி, தில்லியிலும் சரி.

     தொடரும

    முந்தைய பகுதியை வாசிக்க:

      படங்களுக்கு நன்றி :

    http://en.wikipedia.org/wiki/File:V._Shantaram_%281901-1990%29.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(26)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    சிலநேரங்களில், சில பொழுதுகளில் ஏதோ உணர்வுகள் மனதினில் ஊசலாடும். கண்முன்னே, ஊடகங்களில் என்று பலவழிகளில் நாம் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்ட நிகழ்வுகள் மனதை ஏதோ செய்யும். அப்படியான ஒரு பொழுதை, அந்தப் பொழுதினில் எனது மனதில் பதிந்த கருத்துக்களை உங்களுடன் இம்மடலில் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆசையின் விளைவே இது.

    ஒரு ஐந்து வயதுச் சிறுமி ஈழத்தின் அவலத்திலிருந்து தப்பி தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து இனியாவது வாழ்வில் அமைதி கிட்டும் எனும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஒரு ஈழத்து இளம் சிறுமி. தனக்கேயுரிய குழந்தைகளுக்கான விளையாட்டாகத் தனது மாமனின் கடைதனில் ஆடி மகிழ்ந்திருந்த வேளை அச்சிறுமியின் வாழ்வையே திசை திருப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.

    என்ன ஒரேயடியாகக் கதையளக்கிறானே என எண்ணுகிறீர்களா? இல்லை உண்மையாகவே சுமார் ஒன்றரை வருடங்களின் முன் நடந்த ஒரு நிகழ்வையே குறிப்பிடுகிறேன்.

    துஷா கமலேச்வரன் எனும் ஈழத்தின் குழந்தைகளில் ஒன்று. ஐந்தே ஐந்து வயதாக இருக்கும் போது சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னால் லண்டனில் உள்ள “ஸ்டாக்வெல் (Stockwell) எனும் இடத்தில் உள்ள தனது மாமனின் கடையில் ஆடி மகிழ்ந்திருந்தது.

    அப்போதுதான் லண்டனின் பெயரையே மாசுபடுத்தும் கோஷ்டி மோதல்களில் ஈடுபடும் குழுக்களைச் சேர்ந்த மூவர் அக்கடையினில் நுழைகிறார்கள் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்களில் அக்காடையர்களால் விடுக்கப்பட்ட அகோரத் துப்பாக்கி வேட்டு ஒன்று வழி தவறி இந்தச் சிறுமியைத் தாக்கி விடுகிறது..

    பலத்த காயத்துடன் விழுந்த சிறுமி அவசரச் சத்திர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு இருமுறை துடிப்பிழந்த அந்தச் சிறு இதயத்தை அரும்பாடுபட்டு இயங்க வைத்தார்கள் அற்புத வைத்திய நிபுணர்கள்.

    இன்று ஒன்றரை வருடங்களின் பின்னால் சக்கர நாற்காலியின் உதவியுடன் புன்னகை பூத்த வதனத்துடன் வலம் வரும் அந்தச் சிறுமியின் முகத்தில் ஒளிவிட்ட நம்பிக்கையை பி.பி.ஸி இணையத்தளத்தில் பார்த்த போது உள்ளம் நெகிழ்ந்தது.

    பள்ளிக்கூடம் போகப் பிடிக்குமா? எனக்கேட்ட நிருபருக்கு புன்னகையுடன் ஆமாம் என்று பதிலளித்த சிறுமி தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுவே தனது கனவு என்று கூறியது.

    இனி இக்குழந்தை தன் வாழ்நாளில் நடப்பது சந்தேகமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

    இக்குழந்தையின் எதிர்காலப் பராமரிப்புக்கு ஏற்படப்போகும் செலவினை எண்ணும் போது நெஞ்சமே பதைக்கிறது. இந்த நேரத்தில் தான் நாம் வாழும் இந்த நாட்டில் வாழும் மனிதாபிமானத்தின் ஆழம் புரிகிற செயலொன்று கடந்த சில நாட்களின் முன்னால் நடைபெற்றது.

    அது என்ன என்கிறீர்களா?

    ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் போலீஸாரைப் பற்றிய அபிப்பிராயம் சிறிது எதிர்மறையாகவே இருக்கும் ஆனால் இல்லை நாமும் மனிதர்தாம் எமக்கும் உணர்வுகள் உண்டு சில போலீசார் விடும் தவறுகளுக்கு நாமனைவரும் பொறுப்பல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்தச் சிறுமியின் வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த துப்பறியும் பிரிவைச் சேர்ந்த இலண்டன் போலீஸார்.

    பொதுவாக ஒரு வாகன விபத்தில் ஒரு சிறுமி அகப்பட்டு அவரது இயக்கத்தை இழந்து விட்டால் காப்புறுதியின் மூலம் அக்குழந்தையின் வாழ்நாள் பராமரிப்புக்கு ஏற்ற நஷ்ட ஈட்டுத்தொகை கிடைக்கும் ஆனால் இத்தகைய ஒரு காயரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு கிடைக்கும் நஷ்ட ஈடோ மிகவும் சொற்பமானது.

    அதை உணர்ந்த இந்த வழக்கிலீடுபட்ட போலீஸார் இங்கிலாந்தின் அதி உயரமான மூன்று மலைகளில் ஏறுவதன் மூலம் இக்குழந்தைக்காக நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டு ஏறக்குறைய £180,000 பவுண்ட்ஸ் வரையில் சேகரித்துள்ளார்கள். இது இக்குழந்தையின் எதிர்காலத்திற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

    இந்த மலையேறும் கருணைப் பயணத்தில் ஈடுபட்ட ஒரு போலீஸ் ஆபிசர் கூறும்போது “இப்பயணத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் குழந்தைகள் உண்டு, இந்தக் குழந்தைக்கு நடந்த கொடுமை எங்கள் மனதை மிகவும் பாதித்தது. இக்குழந்தையின் ஊனத்தின் காரணமான காடையரைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வகையிலும், இக்குழந்தைக்கும் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் அனுசரணை அளிப்பதிலும் நாம் இக்குழந்தையுடன் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாகப் பழகி வந்துள்ளோம். எமக்கு இது அவர் மீது பாசத்தை ஏற்படுத்தியது ” என்றார்.

    பறிபோய்விட்ட அந்த இனிய சிறுமியின் சுதந்திரத்தை எத்தனை கோடிப் பணமும் பெற்றுத் தந்து விடாது ஆனால் மிகவும் சிக்கலாக அமையப் போகும் அவரது எதிர்கால வாழ்க்கையின் சிரமத்தை ஓரளவு குறைக்க உதவும்.

    மனித நேயம் என்பது மதம், மொழி, இனம், நிறம் எனும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிற்பது. மனிதம் ஒன்றே உலகின் மகத்துவம். இதனை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த போலீசாரின் கருணை உணர்த்தி நிற்கிறது.

    அது மட்டுமின்றி போலீஸாரும் மனிதரே அவர்களின் நெஞ்சிலும் ஈரம் இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    நம்பிக்கையின் சிகரத்தையே இச்சிறுமி தொட்டுக்காட்டி எம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். அவரது விருப்பப்படியே அவர் ஒரு டாக்டராகி சமுதாயத்திற்கு அரும்பணியாற்றி தமிழன்னையைத் தலைநிமிரச் செய்வார் என்பது எனது திடமான நம்பிக்கை.

    இதற்காகத்தான் ஒரு கவிஞர்

    எங்கே போய்விடும் காலம் அது
    என்னையும் வாழவைக்கும் – உன்
    இதயத்தைத் திறந்து வைத்தால் அது
    உன்னையும் வாழ வைக்கும் ” என்றாரோ

    நன்றி — படங்களுக்காக (பல இணையத்தளங்கள்)

    Share
  • திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-16)

    விஜயகுமார்

    பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் ஒன்று, கிளிப் பச்சை நிறத்தில் ஒன்று, கோவிந்தா நிறத்தில் ஒன்று, மஞ்சள் நிறத்தில் இன்னொன்று, கடல் நீல நிறத்தில் ஒன்று, சிவப்பு நிறத்தில் இன்னொன்று, இது போதாதென்று பாதிப் பச்சை பாதி மஞ்சள், பாதி சிவப்பு பாதி நீலம் – முன்னாடி விவேக் சொன்னது போல ஏதோ ஜாங்கிரியைப் பிசைந்து போட்ட மாதிரி ஒரு சைன் (போர் ஹயார்) – எல்லாம் வண்ண வண்ண டாக்ஸிகளின் பவனி. எந்த இடமாக இருக்கும்?

    சின்ன பட்ஜெட் தமிழ்ப் படம் என்றால் ஊட்டி, பெரிய பட்ஜெட் என்றால் ஐரோப்பா, இரண்டுக்கும் நடுவில் என்றால் – தாய்லாந்து தானே – தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆன இடங்களில் இந்தத் தாய்லாந்தும் ஒன்று – கதாநாயகி கடைக்கண் பார்வை பட்டவுடனே அங்குள்ள பீச்சுக்குக் கேமரா போய்விடுமே! கதைப்படி குடிசையில் அடுத்த வேளைச் சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில் இருந்தாலும் கூட அரைகுறை ஆடையில் பிகினி அணிந்த நனைத்த ஆடையுடன் ஆடிப் பாட வேண்டும்!

    இந்த ரசிகர்களின் அபிமான ஸ்டார்களின் வானுயர வருமானம் வீணாகும் இடங்கள் பல என்றாலும் அவை மிகவும் வீணாவது இந்த நாட்டில் தான். அப்படி என்ன இந்த நாட்டுக்கு ஒரு மோகம்? இங்கே கட்டிளம் காளைகள் முதல் சொட்டை விழுந்த மனதளவு வாலிபர் வரை மந்தை மந்தையாக வந்து இறங்குகிறார்கள்?

    இந்தியா போன்ற மூன்று பக்கம் கடலாலும் தலையில் இமாலய மலைத்தொடராலும் சூழப்பட்ட நாடுகளில் அயல் நாட்டிற்க்குப் பயணம் செய்யும் வாய்ப்பு அந்நாளில் பலருக்குக் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். பர்மா, சிங்கை போன்ற நாடுகளுடன் பயணக்கப்பல் தொடர்பு இருந்த போதிருந்த சிறு வாய்ப்பும் விமானங்கள் வந்தவுடன் அடங்கி விட்டது. இலங்கைச் சூழல் பல காலம் தடையாகவும் இருந்தது. அப்படி இருக்க நம்மவருக்கு சிங்கை, மலாயா மற்றும் தாய்லாந்து சென்று அரை டஜன் லக்ஸ் சோப்பு, ரெண்டு செண்டு பாட்டில் ( நல்ல வேளை இப்போதெல்லாம் ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா அவர்கள் அணிந்த சிங்கப்பூர் புலி மார்க் பச்சை நிற ஜாம் ஜாம் பெல்ட் எல்லாம் வாங்கி வரச் சொல்வதில்லை!!) வாங்கி வந்து பந்தா காட்ட வேண்டும். நம் நாட்டிலேயே வரலாறும் எழிலும் சொட்டும் பல இடங்கள் இருந்தும் – இதன் பெயர் கூட பெரும்பாலானவருக்குத் தெரியாது – எனினும் ட்ராவல் ஏஜெண்டுகள் பாகேஜ் டூர் மிக மலிவு விலை – முதல் முறை செல்வோருக்கும் நம்மில் எங்கு சென்றாலும் தயிர் சாதம் ஊறுகாய் கேட்கும் நபர்களுக்கும் ஏதுவாகச் சுற்றுலா என்றதும் லாலா கடை அல்வாவுக்கு மொய்க்கும் ஈக்களைப் போல தாய் ஏர்வே விமானம் தான் மோட்சம் என்று சென்று விடுகிறார்கள். அந்தக் காசுக்கு நம்ம ஊரில் இதை விடப் பல மடங்கு பார்க்கலாம் என்றாலும் யாருமே கேட்பதில்லை.

    இதைத் தவிர நம்ம ஆட்கள் இங்கே இந்த நாட்டுக்கு ஈ போல வந்து மொய்க்க வேறு ஒரு முக்கிய காரணமும் உண்டு. அதைப் பின்னர் பார்ப்போம். கிழக்கு ஆசிய நாடுகளில் நம்மவருக்கு தாய்லாந்தின் சிறப்பு – மலேசியா மற்றும் சிங்கை போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கு முன்கூட்டியே விசா எடுக்க வேண்டும் – தாய்லாந்தில் அது தேவை இல்லை, இறங்கியதும் “விசா ஆன் அரைவல்” வசதி உண்டு. தர்ம தர்ஷன் – நார்மல் ஆயிரம் பாட், ஸ்பெஷல் ஆயிரத்தி ஐநூறு ( ஆனால் ரசீது ஆயிரத்து இருநூறுக்கு தான் தருவார்கள் ). நல்ல நாளில் நார்மல் அரை மணி நேரம் எடுக்கும், சில கெட்ட நேரத்தில் ஏடுகொண்டலவாடா ரேஞ்சுக்கு இரண்டு மணி எடுக்கும். சுவர்ணபூமி விமான நிலயம் திறக்கும் முன்னர் பழைய விமான நிலையத்தில் இந்த விசா தாமதம் பெரும் தொல்லையாக இருந்தது. மினிமம் ஒரு மணி நேரம் எடுக்கும். ஒருமுறை முந்தைய பாஸுடன் சென்றபோது பெரும் அதிர்ச்சி – ஐந்தே நிமிடத்தில் அவரது கடவுச்சீட்டு வந்து விட்டது – அதுவும் ராஜ மரியாதையுடன் – அவர் பெயரில் ஒரு ராம், அவர் அப்பா பெயரிலும் ராம் இருந்ததே அதற்க்கு காரணம் என்று பிறகு தான் தெரிந்தது. தாய்லாந்தில் பொதுவாக மன்னர் பரம்பரையில் உள்ளவர்களே இப்படிப் பெயர் இருக்கும் போல!

    புதிய சுவர்ணபூமி விமான நிலையத்தில் விசா பிரச்சனை கொஞ்சம் குறைவே என்றாலும் மற்ற சௌகரியங்கள் கொஞ்சம் குறைவுதான். பெரிய விமான நிலையம் என்பதால் சிங்கை போல பல டெர்மினல்கள் வைக்காமல் ஒரே டெர்மினல் என்பதால் பல கிலோ மீட்டர் உள்ளுக்குள்ளே நடக்க வேண்டி உள்ளது!! உள்ளே நுழைந்தவுடனே ஒரு பெரிய பாற்கடல் கடையும் காட்சியை வைத்து விட்டனர் – இதன் முன்னால் நின்று போட்டோ எடுக்காவிட்டால் தாய்லாந்து சென்றதை யாருமே நம்ப மாட்டார்கள் போல! முதல் முறை வெளிநாடு பயணம் வந்துள்ளவர்களைப் பார்க்கும் போதே அடையாளம் காணலாம். தழைய தழையப் புடவை கட்டிக்கொண்டு காலில் ரீபோக் சூ! ஒவ்வொரு கடையிலும் விலை கேட்டு அதை இந்தியா ரூபாய்க்கு கால்குலேடர் கொண்டு மாற்றி – இது நம்ம ஊரிலேயே பாதி விலைக்கு கிடைக்குமே என்ற ரியாக்‌ஷன்!!

    வெளியில் வந்தால் இந்தக் கலர்களின் அணிவகுப்பு – அதுதாங்க வண்ண வண்ண டாக்ஸிகள் பார்க்கலாம். சரி, தாய்லாந்தைப் பற்றிய “அந்த” விஷயத்துக்கு வருவோம். அதுதாங்க தாய் மசாஜ்! முதலில் நாம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் – உலகின் எல்லா நாடுகளிலும் இந்தத் “தொழில்’ இருக்கிறது. “இலை மறைவு காய் மறைவாய்” நம்ம ஊரிலும் இது உண்டு. அதனால் தாய்லாந்து தான் ஒன்றும் தெரியாத அப்பாவிகளைக் கெடுக்கிறது என்று சொல்வது தவறு. இதற்காகவே அலையும் பலரை நமது பஸ் நிலையங்களிலும், பல்லவன் பஸ்களிலும் பார்க்க முடிகிறது. பெண்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு என்று பறைசாற்றும் நமது கலாச்சாரத்தின் சீர்குலைவைப் பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள் படும் பாட்டைப் பார்த்தாலே புரியும். வெறும் குச்சிக்குப் புடைவை சுற்றினாலே வெறித்துப் பார்க்கும் இந்தச் சமுதாயச் சீர்குலைவுக்கு எது காரணம்? ஏது விமோசனம்?

    ஆமாம் சார், தாய்லாந்தில் வெளிப்படையாக இவை உண்டு – காபரே, சில்மிஷம் முதல் ஹாப்பி எண்டிங் மசாஜ் வரை பல ஷோ உண்டு – அதே போல நல்ல (கௌரவமான) ஹெல்தி மசாஜும் உண்டு – ஏன் நம்ம ஊரில் இல்லாததா? ஜோதி தியேட்டர் முதல் பாண்டிச்சேரியில் அந்தக் கிரகம் பெயர் கொண்ட ஹோட்டலில் காட்டாததா? தவறாக என்ன வேண்டாம் – தாய்லாந்தை பற்றிய இந்த தவறான நோக்கம் எங்கும் பரவி உள்ளது. அருமையான நாடு அது – பார்த்ததும் குனிந்து “ஸ்வாதிகா” என்று பணிவுடன் வரவேற்பது முதல் – அழகிய கடற்கரை, அற்புதமான சுவை மிகுந்த சாப்பாடு என்று பல நல்லவை அந்த நாட்டில் உள்ளன. சொல்லப் போனால் அந்த நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டமே கிடையாது. இங்கே பெண்களுக்கு நம் நாட்டை விட அங்கே மிகுந்த மதிப்பும் சுதந்திரமும் உண்டு.

    உதாரணத்துக்கு நம்ம ஊரில் நன்கு பரிச்சயம் ஆன – தெரிந்த பையனுடன் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதையே கொச்சைப்படுத்திப் பல சினிமா காட்சிகள் வந்துள்ளன. பின்னால் பெண்ணை அமரவைத்து ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்குவது போல காட்சி அமைப்பது என்ன ஒரு வக்கிரமான சித்தனை! இதை எவருமே கண்டிப்பது இல்லை! ஆனால் தாய்லாந்தில் எங்கும் நம்ம ஊரு ஆட்டோ மாதிரி பைக் டாக்ஸி பிரபலம். அது என்ன பைக் டாக்ஸி? இரு சக்கர டாக்ஸி – ஆரஞ்சு நிற அரைச்சட்டையை அணிந்து இவர்கள் பத்து பாட் (சுமார் பதினேழு ருபாய்!) வாங்கிக்கொண்டு சிறு சிறு ட்ரிப் அடிக்கிறார்கள். ஆண் பெண் என்ற எந்த வித பாகுபாடுகள் இல்லை. பறக்கும் ரயில் இருந்து இறங்கி டப் என்று எதோ ஒரு பைக் டாக்சியில் ஏறி அமரும் அழகுப் பெண்களை பார்க்கும்போது – இது நம்மூரில் சாத்தியமாகுமா என்ற கேள்வி தான் எழுகிறது.

    சங்க இலக்கியம் படிக்கும்போது அந்தக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்த உறவை அவர்கள் பார்த்த கண்ணோட்டம் எங்கோ வழியில் சிக்கிச் சிதறி இன்று அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு ஒரு பெண்ணின் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. ஒரு பெண்ணுடன் நட்பு, இல்லை வேண்டாம்.. வெறுமனே கூட வேலை பார்ப்பது முதல் – ஒரு சாதாரண சம கால நடப்பு, ஏன் காதலே உண்டாகட்டும், பின்னர் “எல்லைகளை” மீறினாலும் இவை அனைத்தும் இயற்கையே – அதைப் பற்றிய ஒரு புரிதல் தேவை. இதை பற்றிப் பேசாமல் மூடி மூடி வைப்பது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கப் போவதுதான் நிச்சயம். எதனால் நம் நாடு HIV, AIDS போன்ற நோய்களில் முதலிடம் வகிக்கிறது? இவை ஏதோ தெய்வ குத்தமா அல்லது பூர்வ ஜென்மத்து சாபம் என்றோ தள்ளி விட முடியாது. பழம் பெருமை பேசி இவற்றை மூடி மறைப்பதை விட நம்ம ஊரு ஓட்டலில் சோப்பு, சீப்பு, ஷாம்பூ வைப்பது போல தாய்லாந்து ஓட்டலில் ஆணுறையையும் வைத்து விடுவதே முதிர்ச்சி.

    Share
  • தேவாரத் தலங்கள் சில (பகுதி-3)

    ஊற்றத்தூர்-ஓர் தேவார வைப்புத்தலம்

    நூ.த.லோகசுந்தரம்

    மூவர் முதலிகள், தம் காலமாம் 1350 ஆண்டுகள் தொன்மமுடை, சிவனுறைத் தலங்கள் பலவற்றினை, அவர்கள் நேரடி வழிபட்டு, அவற்றிற்கு எனத் தனிப்பதிகங்கள் இயற்றா விடினும், சேத்திரக் கோவை, அடைவுத் திருத்தாண்டகம், ஊர்த்தொகை என நன்றே தொகுத்துப் பாடின பாங்குடன், நுற்றுக்கணக்கானவற்றைப் பிறப்பதிகங்களில், வைப்புத் தலங்களாக குறிக்கப்பட்டமை, நாம் பெற்ற பேறே. வைணவ மரபில், ‘பாசுரமுள்ளன’, ‘குறிக்கப்பட்டவை’, எனப் பாகுபாடு செய்யாது, யாவும் 108 திவ்யதேசங்களே, எனப் புவி கடந்த மேலுலகத் தலங்களையும், ஒன்றாகக் கொண்ட, நோக்கு சைவத்தில் ஏனோ, காணவில்லை.

    சைவநெறிச் சான்றோர் பலர், சைவத் திருமுறைகளாம் மாகடல் தீரத்தம் ஆடி, ஆயுங்கால், அவ்வைப்புத் தல முத்துக்கள், 300க்கு மேலும் கண்டுள்ளனர். சைவப் பெரியார், சிவஞானமுனிவர், 250 தலங்களை ஆவணப்படுத்தி, ‘வைப்புத்தலக் கோவை‘ பாடினார். பின்வந்தோர், தொடர்ந்து மேலும் பலவற்றினை இனம் கண்டும், அவற்றின் அமைவிடம், வரலாறு, போன்றவற்றையும், ஆய்ந்தனர். 12 திருமுறை, 18000+ பாடல்கள் என ஆழந்து பரந்த கடலாதாலால் மொழியறிவின் வழி முதலில் இது தலப்பெயர், பிறகு அத்தலம் எங்குள்ளதெனும் வரலாறிணைந்த புவியியல் அறிவுடன் ஆய்வு, பல காலும் நடந்த வண்ணமே, உள்ளன.

    இவ்வகைத் தொன்மப் புகழுடைய, சீர்மை மிகு சிவத் தலங்களை, வாய்ப்புகள் கிடைக்கும் காலத்து, பாடல் பெற்ற தலங்களுடனும், தனித்தும், வழிபடுவது, கூடும். அவ்வகையில் காணக்கூடிய தலம் நடுநாட்டு தென் எல்லை கடந்து, சோழநாட்டு வடஎல்லையிலுள்ள, ஊற்றத்தூர் ஆகும். திருச்சி>>சென்னை பெருவழிச் சாலைக்கு மிக அருகேயே, (15கிமீ-சமயபுரம்) கடந்து 35 கிமீ தூரத்தே, பாடாலுர் எனும் சிற்றூரின்கண், கிழக்கே செல்லும் நல்ல சாலை வழியில், 5 கிமீ தொலைவில், மிகச்சிறப்பான கற்றளி ஒன்றில், நகர மக்கள் ஆர்ப்பாட்டரவம் ஒன்றுமின்றி, தூய்மை மிகு தியானச் சூழ்நிலையில், ஊற்றத்தூர் ‘உடையாரை‘ வழிபடலாம்.

    நல்லதோர் தேர், 16கால் வெளிமண்டபம், 5 நிலை 7கலச ராஜகோபுரம், தலப் பெயருக்கேற்ப நந்தியம் பெருமானருகு கோயிலினுள் நடுவண் திருமஞ்சன ஊற்றுக் கிணறு, 63 நாயன்மார் படிமவரிசை, ஐம்பொன் உடன் கருங்கல்லாலும் ஆடல்வல்லான், உருவமெனும் தனிச் சிறப்புகளுடன் அம்மையுடனும் உறைகின்ற

    “பிறையூரும் சடைமுடிஎம் பெருமானைத்
    தொழஇடர்கள் தொலையும் அன்றே”
    எனும் அப்பரடிகள் தாண்டக அருள் வரிகளை நம்பி வழிபடுவோமே.

    இறைவர் >>>>> தூய மாமணீசுவரர்
    இறைவி >>>>> அகிலாண்டேசுவரி
    என் கைபேசிக்கருவி உள்கொண்ட படங்களை கண்டு தேர்க.

    ஊற்றத்தூர் தலத்தினைப் பேசும் தேவாரப் பாடல்கள் இவை :-

    திருநாவுக்கரசர் :
    சேத்திரக்கோவைத் தாண்டகம் – திருமுறை 6.70.10
    நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு
    நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
    துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
    தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
    உறையூர் கடல் ஓற்றியூர் ஊற்றத்தூர்
    ஓமாம்புலியூர் ஏர் ஏடகத்தும்
    கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
    கயிலாய நாதனையே காணலாமே

    திருநாவுக்கரசர் :
    அடைவு திருத் தாண்டகம் – திருமுறை 6.71.3
    பிறையூரும் சடைமுடிஎம் பெருமான் ஊர்
    பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
    நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
    நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
    உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
    அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
    துறையூரும் துவையூரும் தோழுர் தானும்
    துடையூரும் தொழஇடர்கள் தொலையும்அன்றே

    பெயர்வழித் திருமுறை © பாடல்கள்
    சிவபெருமான் ஓர் ஊற்று

    (1)
    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
    மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
    ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
    ஓவாத சத்தத் தொலியே போற்றி
    ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
    ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
    காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி 1
    அப்பரடிகள் தேவாரம் (6.55)
    போற்றித் திருத்தாண்டகம்

    (2)
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்(து) அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்(கு) உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மாணிக்கவாசகர் திருவாசகம்
    சிவபுராணம் (8.1)

    (3)
    அழிதரும் ஆக்கை ஒழிச்செய்த ஒண்பொருள்
    இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
    அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
    ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி
    ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
    போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
    மாணிக்கவாசகர் திருவாசகம்
    திரு அண்டப் பகுதி (8.3)

    (4)
    போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
    ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
    வேற்றுடல் தானென்றும் அதுபெரும் தெய்வமாம்
    காற்றது ஈசன் கலந்து நின்றானே 28
    திருமூலர் திருமந்திரம்
    தோத்திரம் (10.3009)

    மேலும், ஊருக்குள், சிவன்கோயிலுக்கு தென்மேற்கு திசையில், திருமாலுக்கு ஓர் பெரிய கோயில்.உள்ளது. அதான்று, ஓரிரு கிமீ தூரம் மேற்கே, கடத்துப் பாறைகள் மேல், ஓர் முருகன் கோயிலும், காண்கின்றது. மற்றும், பாடலுரிலிருந்து இவ்வூரினுக்கு செல்லும் வழியில், *தெரணி*யிலும் நல்ல பழமையான கோயிலொன்று உள்ளது.

    Share
  • ஸ்காட்லாந்து ஆப் இந்தியா

    விசாலம்

    “கூர்க்’ எனப்பெயர் கொண்ட குடகு மலைக்கு நான் மூன்று முறைகள் போயிருக்கிறேன். அங்கு இருக்கும் இயற்கைச் சூழ்நிலையும், அருமையான இயற்கைக் காட்சிகளும் என்னை மிகவும் கவர்ந்தன.

    நான் போய் தங்கிய இடத்தில் இருந்த பெண்மணி மிகவும் அன்புடன் எங்களை வரவேற்று நல்ல அறையும் கொடுத்து சாப்பாடும் தந்து கவனித்துக்கொண்டாள். நமக்கு என்ன மாதிரி சாப்பாடு வேண்டும் என்று முதலிலேயே சொல்லி விட்டால் அதை அவளே தன் கணவர் உதவியுடன் செய்து முடிக்கிறாள். அவளுக்கு உதவ ஒரு பணிப்பெண்ணும் இருக்கிறாள். அவள் கணவர் கேரள நாட்டைச் சேர்ந்தவர், காதல் திருமணம். பெரிய எஸ்டேட்டின் தலைவர் ஆனால் ரொம்ப சிம்பிள். அங்கு நான் என் வீடு போலவே ஒரு வித்தியாசமில்லாமல் இருந்தேன். அவள் எனக்கு அவர்கள் கட்டும் விதத்தில் புடவையும் கட்டி விட்டாள். ஆனால் அங்கு எடுத்த பல போட்டோக்கள் என் கணினி கிராஷ் ஆகி அழிந்து விட்டன. நான் ஆசை ஆசையாக எடுத்துக்கொண்ட கூர்க் ட்ரெஸ் போட்டோ போயே போச்சு. இதற்காவது இன்னொரு தடவை கூர்க் செல்ல வேண்டும். சரி இனி நான் பத்து நாட்கள் தங்கி அனுபவித்த குடகு நாட்டைப் பற்றிச் சொல்கிறேன். நேரே கண்டு அனுபவிக்கும் சுகமே தனிதான்

    குடகு நாடு {Scotland of India} ஸ்காட்லேந்த் ஆப் இந்தியா எனப் புகழ் பெற்ற ஒன்று. குடவர்கள் வீரமிக்கவர்கள், சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் நாட்டைக்காக்கும் பணியில் இருப்பவர்கள். முன்னாள் பீல்ட் மார்ஷல் கரியப்பா அவர்கள், ஜெனரல் திம்மய்யா அவர்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள். குடகு மக்கள் மிகவும் தைரியமிக்கவர்கள். உழைப்பாளிகள். கேளிக்கைகளை விரும்பி வாழ்க்கையை ரசிப்பவர்கள் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள். பேச்சில் ஹாஸ்யமும் இருக்கும் வேட்டையாடும் பழக்கமும் முன்பு இருந்தது

    விருந்தோம்பலுக்கு மிகவும் பெயர் போனவர்கள். சிரித்த முகத்துடன் விருந்தாளிகளை உபசரிப்பார்கள். அவர்கள் வீட்டில் முன்னோர்கள் போட்டோ பல இருக்க அவைகளுக்குப் பூஜையும் செய்வார்கள் பல எஸ்டேட் முதலாளிகள். வீட்டின் வாயிலில் சலவைக்கல்லினாலோ அல்லது மரத்தினாலோ அவர்களது முன்னோர்களின் சிலை நம்மை வரவேற்கும். முன்னோர்களின் வழிபாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

    பெரியவர்களின் பாதங்களைத் தொட்டு வழங்கும் கலாசாரம் இங்கு சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கப்படுகிறது. பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள்.

    ஒவ்வொரு வீட்டிலும் பெரிய துப்பாக்கியைக்காண முடிகிறது. {Gun] இதை வைத்துக்கொள்ள லைசன்ஸ் தேவையில்லையாம். ராஜ பரம்பரை போல் இது இருப்பதை மிகப்பெருமையாக நினைக்கிறார்கள், குழந்தை பிறந்தால் இந்தத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறர்கள். குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது அந்தக்குழந்தைக்குப் புலி மாமிசத்தினால் ஆன உணவைக் கொடுக்கும் வழக்கம் உண்டாம். புலி போல் மெஜஸ்டிக்காக வீர தீரத்துடன் இருக்கவே இப்படிச் செய்கிறார்கள். இதே போல் யாராவது இறந்தால் இரண்டு தடவை துப்பாக்கியால் ஆகாயம் நோக்கிச் சுடுகிறார்கள். இந்தப்போராயுதங்களுக்குப் பூஜையும் உண்டு. தினமும் அவைகளைக் கும்பிடுகிறார்கள்

    இவர்களது மொழி குடவ மொழி. இதற்கு ஸ்கிரிப்டு இல்லை. இந்த மொழி மலையாளம் சம்ஸ்கிருதம் கன்னடம் கொஞ்சம் தமிழ் என்று நான்கும் கலந்திருக்கிறது.

    இங்கு எல்லா சம்பவங்களுக்கும் நாட்டுப் பாடல் போல் பாடுகிறார்கள். திருமணம் குழந்தைப்பிறப்பு. அறுவடை. மேலும் சில பண்டிகைகள். இறப்பு என்று எல்லாவற்றுக்கும் நாட்டுப்பாடல்கள் போல் பாடல்கள் வந்து விடுகின்றன. வேதாந்தப்பாடல்களும் உண்டு.

    பண்டிகைகள் என்று எடுத்துக் கொண்டால் தசரா, தீபாவளி, காவிரி சங்ரமணா என்ற காவிரிஸ்னானம் மலைவாசிகளின் விசேஷ தினம், அறுவடை தினம் எல்லாமே சிறப்பாக மேள தாள நாட்டியங்களுடன் நடைபெறும். வீடு கட்டிக் கிரஹப்பிரவேசமும் இது போலவே நடைபெறும்.

    இவர்கள் தங்கள் போர் ஆயுதங்களைப் பூஜிக்கும் தினமும் “கைல்போல்டு” என்ற பெயரில் செப்டம்பர் மூன்றாம் தேதி வாக்கில் நடைபெறுகிறது. துப்பாக்கிக்கள், வாள், கத்தி, வில் அம்பு போன்ற ஆயுதங்களுக்குக் குங்குமம் சந்தனம் இட்டு வீட்டின் மூத்தவர் அதை எடுத்து வீட்டுத்தலைவருக்குக் கொடுப்பார். பின் பன்றிக் கறியுடன் ஸ்பெஷல் சாப்பாடு. பின் விளையாட்டில் ஒரு தேங்காயை மிக உயரத்தில் கட்டிச் சுடும் பழக்கமாம். முன்பு வேட்டைக்குப்போவார்களாம், இப்போது அது தடை செய்யப்பட்டுள்ளது.

    காவிரித்தாயின் பூஜையின் போது பெண்கள் விடிகாலை காவிரியில் ஸ்னானம் செய்து பின் எல்லோர் வீட்டிற்கும் காவிரி தீர்த்தம் எடுத்துச்செல்கிறார்கள். பின் ஒரு தேங்காயோ அல்லது வெள்ளரிக்காயோ எடுத்து சிவப்புப் பட்டால் மூடி மஞ்சள் குங்குமம் இட்டு ஆபரணங்களுடன் மங்கள் சூத்ரம் {தாலி}பதக்கம் போட்டு பின் கன்னிபூஜை செய்கிறார்கள்

    இவர்களது குல தெய்வங்கள் காவிரித்தாய், ஐயப்பன், பத்ரகாளி சாஸ்தா. பசுவையும், நாகதேவதா என்று பாம்பையும் பூஜிக்கிறார்கள். பசுவின் வதைக்குத்தடை.

    சாதாரணமாக ஆண்கள் நீளக்கோட்டுடன் காட்சியளிப்பார்கள். இடுப்பில் ஒரு சில்க் துணி பெல்ட் போல் கட்டியிருக்க அதில் சின்னப் பிச்சுவாக் கத்தி சொருகப்பட்டிருக்கும். தலையில் “மண்டே துணி” அதாவது டர்பன் அணிந்திருப்பார்கள்

    பெண்கள் புடவை அணிந்திருப்பார்கள், ஆனால் புடவை தோளில் வராமல் மார்பிலேயே சுற்றப்பட்டுப் பின் தலைப்பின் நுனி பாகம் பின்புறமாக வலது தோளில் வந்து அது விழாமல் நிற்க “பிரோசசால்” குத்தப்பட்டிருக்கும். பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

    ஹிந்துவாக இருந்தாலும் திருமணத்திற்குப் பிராம்மண சாஸ்திரிகள் வருவதில்லை. குடும்பத்தின் தலைவர் வைத்து அவர் முன்னிலையில் திருமணம் நடத்தப்படுகிறது. அக்னிக்கு முக்கியத்துவம் இல்லை. வேறு மந்திரங்களும் திருமணம் போது கிடையாது. ‘டௌரி சிஸ்டம்’ அறவே கிடையாது.

    அம்மா குடவர்கள் என்ற ஒரு பிரிவு உண்டு. இவர்கள் பிராம்மண கலாச்சாரம் கொண்டு பூணலும் அணிந்திருக்கிறார்கள். வேதங்கள் ஓதுகிறார்கள், சுத்த சைவம். தற்காலத்தில் இவரது பிரிவில் காதல் திருமணம் நடக்க “காவிரி பிராம்மணர்கள்’ என்ற தனிப்பிரிவு வந்திருக்கிறதாம்.

    கல்யாண மாப்பிள்ளை வெள்ளைக்கலரில் நீள அங்கி போட்டிருப்பார். தலையில் சரிகைத்தலைப்பாகை அலங்கரிக்கும், கல்யாணப்பெண் சிவப்பு நிறத்தில் உடை உடுத்தியிருப்பாள். அநேகமாக வம்சவம்சமாக உடுத்திய பரம்பரைப் புடவையே மணப்பெண் உடுத்துவாளாம். அது வீணாகாமல் இருக்க வேண்டும். மணமகன் வாழைமரத்தண்டுகளை வெட்டி விட்டு வர வேண்டும், அவனது வீரத்தைக் காட்டுவது போல் அர்த்தம். முன்பெல்லாம் புலியையோ அல்லது காட்டுப்பன்றியையோ வேட்டையாடித் தன் வீரத்தைக்காட்டுவார்கள். திருமணம் போது பல நாட்டுப்பாடல்கள் பாடி பின் நடனமும் ஆடுகிறார்கள்.

    அசைவ உணவு தான் அங்கு பிரதானம் அதுவும் “போர்க்’ என்ற பன்றி இறைச்சிதான் எல்லா விசேஷங்களிலும் முதல் இடம் பெறுகிறது. தவிர கொடம்புட்டு, நூல்புட்டு பெம்ப்ளாஸ்லூட், சிக்கன் {சாதம், நூடுல், மூங்கில் கறி] என்றும் பல இடம் பெறுகின்றன. சாதாரண நாட்களில் சாதம், கஞ்சி, பப்புட்டு, குழால் புட்டு தினமும் பார்க்க முடிகிறது. பழங்களில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எப்போதுமே உபயோகமாகின்றன நல்ல காபியும் கிடைக்கிறது.

    பெண்களுக்கு மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விதவை மறுமணம் செய்து கொள்ளலாம். விதவை எல்லா மங்கள காரியங்களிலும் முதன்மை வகித்து முன் நிற்கலாம். தாயாருக்கு மிக முக்கிய ஸ்தானம் தரப்படுகிறது. அவள்தான் திருமணம் போது மாப்பிள்ளையை முதலில் வாழ்த்தி ஆசிகள் வழங்குகிறாள்.

    இவர்கள் குடும்பம் அநேகமாக கூட்டுக்குடும்பமாகவே இருக்கிறது. வடநாட்டவர்கள் தங்கள் பெயருடன் குடும்பத்தின் பெயரையும் சேர்த்துக்கொள்வது போல் இவர்களும் சேர்க்கிறார்கள். {கவாஸ்கர் டெண்டுல்கர் என்பது போல்} இப்படி இருக்கும் குடும்பம் சுமார் ஆயிரம் வரை இருக்கிறது. இதை “ஒக்கா’ என்று அழைக்கின்றனர்

    வீட்டின் முக்கிய ஹாலில் அவர்கள் குலத்தை ஆரம்பித்த குருவின் படமும் வைக்கப்பட்டு தினமும் விளக்கும் ஏற்றப்படுகிறது. அந்தக்குலத்தின் மூத்த தலைவரைக் கடவுளாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

    பார்க்க வேண்டிய இடங்கள், மடிக்கேரி நாகரஹோல் நேஷனல்பார்க், அபி நீர்வீழ்ச்சி, தலக்காவேரி, ஓம்காரேஷ்வரர் ஆலயம், பிரும்மகிரி குன்று டுபாரே என்ற யானைகள் பிடிக்கும் இடம், ஆரஞ்சு கேன்டி. குசல் நகர். இன்னும் பல இயற்கைச் சூழல் உள்ள இடங்கள்

    ஓம்காரேஷ்வர ஆலயம் மசூதி ஸ்டைலில் நாலு ஸ்தம்பங்களுடனும் நடுவில் வட்ட வடிவ கும்பத்துடன் இருக்கிறது. ஆனால் உள்ளே இருப்பதோ காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கமாம்,

    காபி செடிகள், மிளகு. ஏலக்காய், கிராம்பு மற்ற மாசாலா பொருட்கள் தேயிலை, பாக்கு தேக்கு எல்லாம் செழிப்பாக வளர்வதால் இங்கு பல எஸ்டேட்டுக்கள் உள்ளன. நல்ல வியாபாரமும் நடக்கிறது, காடுகளில் சில இடங்கள் தேவகாடு என்று புனிதமாகக் கருதி அவைகளைக் காக்கின்றனர். அங்கு மரம் வெட்டுவதோ அல்லது வேட்டையாடுவதோ கிடையாது.

    இளைஞர்களுக்குத்தேவையான மலையேறுதல், யானை மேல் சவாரி, தண்ணீரில் படகுடன் வீர விளையாட்டு, நீச்சல் போன்ற சகலமும் இருப்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.

    இங்கு பல மூலிகைகள் விளைவதால் இவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யவும் பலர் வருகின்றனர். மலைப்பிரதேசம் பக்கம் போக மூலிகை மணத்துடன் தென்றல் வீசி நம்மை மேலும் புத்துணர்ச்சி ஆக்குகின்றன. .

    திபெத்தியர்கள் எல்லோரும் சேர்ந்து மிக அழகான புத்தர் கோயிலையும் இங்கு கட்டியிருக்கிறார்கள். இதுவும் பார்க்க வேண்டிய இடம்.

    குடகு மலை ஒரு அருமையான கோடை வாசஸ்தலம் என்பதில் சந்தேகமே இல்லை.

     

    படங்களுக்கு நன்றி: http://www.yaatrika.com/traveler/2011/02/coorg-the-scotland-of-india/

    http://www.coorgie.com/aboutus.asp

    http://www.homestaykodagu.com/coorg_info.html

    http://www.bestindiatours.com/india-travel/coorg-tour.html

    Share
  • ரோசாப்பூ துரை

     

     

    நாகராசன்

    தாழ்த்தப்பட்டவர்கள் அடக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுத்த அறிஞர், மற்றும் வழக்கறிஞர்

    1970 1980களில் பாமரர் வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய தேசிய இயக்கங்களும் மார்க்சிய ஆங்கில ஆதிக்க வரலாறும் பாமரர் பற்றி அறியத் தடைக்கல்லாக இருந்தது என்ற மாபெரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  ஆனால் தேசிய நீரோட்டத்திலும் பாமரர் பற்றிய உரிமைக்குரல் எழுப்பிய தீவுகளும் உண்டு என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் ரோசாப்பூத் துரை

    பாமரர்களுக்காகக் குரல்கொடுத்த ரோசாப்பூத் துரையே மதச்சார்பு காரணமாகத் தேசியவாதிகளால் ஓரங்கட்டப்பட்டார் என்பது வியப்புக்குரிய உண்மை.  தேசிய அளவில் அண்ணல் காந்தியார் ராஜாஜி மோதிலால் நேரு ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்களுடன் தோளோடு தோளாக நின்ற ரோசாப்பூத் துரை தமிழகத்தில் யாரென்று அதிகம் அறிபப்படாமல் இருந்து மறைந்தார்

    கேரளாவில் பிறந்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1903 -ல் பட்டப்படிப்பும், எடின்பர்கில்   எம்.ஏ தத்துவமும் பயின்று 1908-ல் பார் அட் லா வாகப் பதிவு பெற்று 1909-ல் இந்தியா திரும்பினார்.  இங்கிலாந்தில் இந்திய சுதந்திரப் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரோசாப்பூத் துரை சூசன்னா என்ற மங்கையை மணந்த கையுடன் சென்னை வந்து சேர்ந்தார்.
     
    சென்னையில் சில மாதங்களே தங்கியிருந்து சவுத் இன்டியன் மெயில் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர் கோபால மேனன் என்பவரின் அறிவுரைப்படி மதுரைக்குச் சென்று குற்றவியல் வழக்கறிஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார்.  வக்கீல் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அவர் எண்ணம் ஆங்கில அடக்குமுறைக்கு ஆட்பட்டு அல்லலுறும் கள்ளர்கள் பக்கம் திரும்பியது.  சட்ட ரிதியாகக் குற்றப் பரம்பரை என்று குற்றம் சாட்டப்பட்டு இரவு முழுதும் காவல் நிலையத் தாழ்வாரத்திலும் வெட்ட வெளியிலும் இரவு 11 மணி முதல் விடிகாலை 4 மணி வரை இருக்கவேண்டும் என்ற சட்டத்தை எதிர்க்க முனைந்தார்

    1919-1929 களில் 14000 கள்ளர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து வேறு இடங்களுக்குச் செல்லாமல் இரவு காவல் நிலையத்தில் தங்க வேண்டும் என்ற கடுமையான சட்டத்தால் கள்ளர் குடும்பப் பெண்டிர் கடும் மன உளைச்சல்படுவதை எடுத்துக் கூறி ஆங்கில ஏகாதிபத்தியம் ஓரளவுக்குக் கடுமையைக் குறைத்துக்கொள்ள முயன்று வெற்றியும் கண்டார்

    1918-ல் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ராமனாதனுடன் இணைந்து மதுரைத் தொழிற் சங்கத்தை உருவாக்கினார். மார்ச் 22 ஆம் நாள் ராஜாஜியால் ரோசப்பூத் துரை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.  உடனே அண்ணலின் தளபதியாகச் சூளுரை எடுத்துக்கொண்ட ரோசாப்பூத் துரை அவர்கள் இல்லத்தில்தான் மதுரை வந்த காந்தியார் மார்ச் 26 முதல் 28 1919-ல் (அறிமுகமான நான்கு நாட்களுக்குள்) தங்கியிருந்தார்.  1919-ல் காந்தியார் தமிழகம் வந்ததன் நோக்கம் ரெளலட் சட்டத்துக்கான நாடு தழுவிய போராட்டத்தில் தமிழகம் பங்குபெற ஆதரவு திரட்டவே.  ஏப்ரால் 6 ஆம் நாள் மதுரையில் வேலை நிறுத்தம் முழு வெற்றியடையக் காரணமாக இருந்த ரோசாப்பூத் துரை காந்தியாரின் நம்பிக்கையைப் பெற்று தேசிய நீரோட்டத்திலும் போராட்டத்திலும் முழு ஆர்வத்துடன் பங்குபெற்றார்

    1920 ல் மோதிலால் நேருவின் இன்டிபென்டன்ட் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பின்னர் ராஜாஜியைத் தொடர்ந்து யங் இந்தியாவின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.  ராஜ துவேஷ குற்றத்திற்காக நேரு குடும்பத்தாருடன் சிறை சென்றார்

    மீண்டும் தம்ழகம் வந்த ரோசாப்பூ துரை மார்ச் 24-ல் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்.  காந்தியார் ரோசாப்பூத் துறை வேறு சமயத்தைச் சார்ந்தவர் இந்து சமயப் பிரச்சினையில் தலை நுழைத்துப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று வற்புறுத்தியும் அதை ஏற்காமல் ஈ.வெ.ரா வுடன் இணந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்.  ஈ வெ ராவுடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஸ்வராஜ்யக் கட்சிக்காரர்களை எதிர்க்கும் கொள்கையை தளர்த்திக் கொள்ளாமலும் தேவைப்பட்டால் தனித்து நின்று போராடும் பாங்கும் அவரை மிகவும் கவர்ந்தது

    ரோசாப்பூத் துரை அண்ணல் அம்பேத்காருடன் தொடர்பில் இருந்தவர் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ்நாட்டு இளைஞர் காமராசர்.  விருது நகர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட காமராசருக்கு ஆதரவாக வழக்காடி சதி வழக்கிலிருந்து காமராசரை வெளியே கொண்டு வந்தவர் ரோசாப்பூத் துரை

    தனக்குச் சரியென்று பட்டதால் பின்னாளில் காந்தியாரின் ஒத்துழையாமை உப்பு சத்யாக்கிரகம் மதுவிலக்குக் கொள்கையை ஆதரிக்க மறுத்தார் 1938-ல் தன் 50 வயதில் இறந்தார் ரோசாப்பூத் துரை. மதுரையைச் சுற்றியுள்ள கள்ளர்களும் மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் அவர் மரணச் செய்தி அறிந்து கதறி அழுதனர்.

    அவரின் பிறந்த நாளைக் கள்ளர் சமுதாயம் நினைவில் நிறுத்தி ஆண்டு தோறும்  கொண்டாடியது.  தங்கள் குழந்தைகளுக்குப் பெண் என்றால் ரோசாப்பூ என்றும் ஆணாக இருந்தால் ரோசப்பூத் துரை என்றும் பெயரிட்டு அவர் நினைவைப் போற்றியது.

    ரோசாப்பூ என்ற பெயர் எதனால் வந்தது?

    நேரு போல் தன் உடையில் ரோசாப்பூ அணிந்ததாலா? மதுரைத் தமிழில் ஜோசப் என்பதை ரோசாப்பூ என்று சொன்னார்களா?என்பது இன்றுவரை விளங்கவில்லை

    Share
  • காந்தி கண்ட ராமராச்சியம்

     

    பவள சங்கரி

    1869ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 2,) அண்ணல், மகாத்மா, தேசப்பிதா, என்று அன்புடன் அழைக்கப்படுகிற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நம் இந்திய அன்னையின் செல்ல மகனாக அவதரித்தார். நம் நாடு மட்டுமன்றி, உலக நாடுகள் பலவும் அண்ணலை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டதன் முக்கிய காரணம் அவருடைய சத்தியாகிரகம் என்ற அறவழிப் போராட்டம்தான். குஜராத் மாநிலத்தில் கரம்சந்த காந்தி மற்றும் புத்லிபாய் என்ற பெற்றோருக்கு மகனாகப் பிறந்த இவருக்கு தம் 13ம் வயதிலேயே அன்னை கஸ்தூரிபாயுடன் திருமணம் நடந்தது. இங்கிலாந்தில் தம் வழக்குரைஞர் (பாரிஸ்டர்) படிப்பை முடித்து, மும்பையில் சில காலம் பணியாற்றினார். பிறகு ராஜ்காட்டில் சிலகாலம் ப்ணிபுரிந்து, அங்கிருந்து 1893 ஏப்ரல் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் பணிபுரியச் சென்றார். தென்னாப்பிரிக்காவின் நிகழ்வுகளே இவரது அரசியல் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஆங்கிலேயர் ஆட்சியினால், இனப்பாகுபாடும், மதவெறியும் மக்களை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டு மனம் நொந்தவர், போராட்டத்தில் ஈடுபடத்துவங்கினார்.

    ஒருமுறை பிரிட்டோரியா நகருக்குச் செல்லும் பொருட்டு, தொடருந்தில், முதல் வகுப்பில் தகுந்த பயணச்சீட்டுடன் பயணித்தாலும், தான் ஒரு வெள்ளையராக இல்லாத காரணத்தினால் , அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிகழ்ச்சி அவர் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை எதிர்த்து, அதன்மூலம் மக்களுக்கு தங்கள் உரிமையைப் பெறவேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1906ம் ஆண்டு, ஜோகானாஸ்பர்க் நகரில் முதன் முறையாக ஒத்துழையாமை, சத்தியாகிரகம் என்ற அறவழியில் போராடியதன் மூலமாக தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். இதற்காக காந்தியுடன் சேர்ந்து பலரும், பலமுறை சிறைவாசமும் செய்ய வேண்டியிருந்தது. இறுதியில் வெற்றியும் பெற்று இந்தியா திரும்பினார். 1920ம் ஆண்டு, ஒத்துழையாமை இயக்கம் மூலம், அன்னிய பொருட்களை புறக்கணித்தல், மதுபானக்கடைகள் முன் மறியல் செய்தல் போன்றவற்றில் பெண்களும் பங்கெடுத்தனர். இராட்டை வைத்து நூல் நூற்று கதர் துணி நெய்தலிலும் ஈடுபட்டனர். இதனால் இந்திய மக்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும் வழிவகுத்தார். ஆங்கிலேய அரசிற்கு நட்டமேற்படவும் வழிவகுத்தது.

    இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து 1921ம் ஆண்டு அதன் தலைமைப் பதவியையும் ஏற்றார். ரவீந்திரநாத் தாகூர், கோகலே போன்றோரின் நட்பும் கிடைத்தது. சுதேசி கொள்கை மற்றும் சத்தியாகிரக கொள்கைகள் மூலமாக் இந்திய தேசிய காங்கிரசில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். அது மாபெரும் விடுதலை இயக்கமாக உருப்பெற்றது. இந்தியர்களால், இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பிற்கு இங்கிலாந்து அரசு உரிமை கொண்டாடி, அதை வேறு யாரும் விற்கக்கூடாது என்று தடை உத்திரவு போட்டது. இதை எதிர்த்து 1930ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, அண்ணல் காந்தியடிகள் 78 சத்தியாகிரகப் போராளிகளுடன், அகமதாபாத்திலிருந்து 240 மைல் 23 நாட்கள் நடைப்பயணமாக தண்டி கடற்கரை நோக்கி வந்தனர். அங்கு அவர்களுடன் சேர்ந்து உப்பு காய்ச்சி அதை பொது மக்களுக்கு விநியோகம் செய்ததோடு, தொடர்ந்து அது போலவே தயாரிக்கவும் மக்களை ஊக்குவித்தார். இந்தியாவில் பல இடங்களில் இதற்காக பலர் சிறையிலடைக்கப்படனர். நம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். இறுதியில் ஆங்கில அரசு உப்பின் மீது போட்ட வரியை விலக்கிக் கொண்டது.

    1932ம் ஆண்டில் வைசிராய் வெலிங்டன் மூலமாக அண்ணல் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொதித்தெழுந்தது. கடையடைப்பு, வேலை நிறுத்தம் என்று மக்கள் ஈடுபட்டதால் அடக்கு முறை செய்யப்பட்டது. பல முகியமான பெருந்தலைவர்களும் கைது செய்யப்பட்டதோடு காங்கிரசு குழுவும் கலைக்கப்பட்டது.

     அதற்குப் பிறகு இடைவிடாமல் பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திலும் அண்ணலின் பங்கு பெருமளவில் இருந்தது. இதன் முக்கிய அம்சம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் நள்ளிரவில் நம் இந்திய நாடு முழு சுதந்திரம் பெற்றபோதும், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை அண்ணலை துக்கம் கொள்ளச் செய்தது. பகவத் கீதை மற்றும் சமண சமயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்களால் கவரப்பட்டிருந்தார்.

    1902ம் ஆண்டிற்குப் பிறகு பிரம்மச்சரிய விரதம், வாரத்தில் ஒரு நாள் மௌன விரதம், உணவுக் கட்டுப்பாடு, அசைவ உணவை முழுதும் தவிர்த்தல், சத்தியம், அகிம்சை போன்ற பல கொள்கைகளை தம் வாழ்நாள் இறுதிவரை கடைபிடித்தார். 1948, ஜனவரி 30ம் நாள், புது தில்லியில் நாதுராம் கோட்சே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்ணல் காந்தியடிகள் ’சத்திய சோதனை’ என்ற தம் சுயசரிதையை தமது தாய் மொழியான குஜராத்தி மொழியில் எழுதியுள்ளார். பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில், ரா.வேங்கடராஜூலு என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    தம்முடைய சத்திய சோதனைகள் தேடித்தந்திருக்கும் ‘மகாத்மா’ என்ற பட்டத்தை தான் மதிக்கவில்லை என்றும் அப்பட்டம் தனக்கு மன வேதனையைத்தான் அளித்துள்ளது என்பதையும் தம் சுயசரிதையின் முதல் அத்தியாயத்திலேயே கூறுகிறார். கடவுளை நேரில் காண வேண்டும் என்றும், மோட்சம் அடைய வேண்டும் என்பதையே முக்கியமான இலட்சியமாகக் கொண்டிருந்தார். கடவுளைக் காண வேண்டும் என்ற தீவிர வேட்கையில் தம் உயிரையும் தியாகம் செய்ய சித்தமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். சத்தியத்தை நாடிச் செல்பவர்கள் தம்மை தூசியைவிட கீழாக எண்ண வேண்டும் என்கிறார். அந்த அளவிற்கு பணிவுள்ளவராக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

    ”இளைஞர்கள் அனைவரும் அழகிய கையெழுத்து அவசியம் வேண்டும் என்பதை உணர வேண்டும். குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி அளிக்கும் முன் ஓவியப் பயிற்சி  அளிக்கப்பட வேண்டும். ஓவியம் வரைய பயிற்சி இருந்தால் கையெழுத்தும் அழகாக வரும்.”

    “வாய்மையாக இருக்க நினைப்பவன் கவனமானவனாகவும் இருக்க வேண்டும் ”

    ” ஏழை எளியோரும் இது நம் நாடு என்று எண்ணக்கூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினருக்கும் சமமான வாழ்வு இருக்கும். தீண்டாமை சாபமும். மதுப்பழக்கமும் ஒழிந்திருக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர். மற்ற உலகத்தினரோடு நாமும் அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.”

    Share
  • சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது

     

    வணக்கம்.

    இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா நேற்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

    இந் நிகழ்வில், கடந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும், சான்றிதழும், பணப்பரிசும்’ கிடைக்கப்பெற்றது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

     வல்லமை குழுவினரின் சார்பாக திரு ரிஷான் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    அன்புடன்

    பவள சங்கரி

     

    Share