நாகராசன்

தாழ்த்தப்பட்டவர்கள் அடக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுத்த அறிஞர், மற்றும் வழக்கறிஞர்

1970 1980களில் பாமரர் வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய தேசிய இயக்கங்களும் மார்க்சிய ஆங்கில ஆதிக்க வரலாறும் பாமரர் பற்றி அறியத் தடைக்கல்லாக இருந்தது என்ற மாபெரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  ஆனால் தேசிய நீரோட்டத்திலும் பாமரர் பற்றிய உரிமைக்குரல் எழுப்பிய தீவுகளும் உண்டு என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் ரோசாப்பூத் துரை

பாமரர்களுக்காகக் குரல்கொடுத்த ரோசாப்பூத் துரையே மதச்சார்பு காரணமாகத் தேசியவாதிகளால் ஓரங்கட்டப்பட்டார் என்பது வியப்புக்குரிய உண்மை.  தேசிய அளவில் அண்ணல் காந்தியார் ராஜாஜி மோதிலால் நேரு ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்களுடன் தோளோடு தோளாக நின்ற ரோசாப்பூத் துரை தமிழகத்தில் யாரென்று அதிகம் அறிபப்படாமல் இருந்து மறைந்தார்

கேரளாவில் பிறந்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1903 -ல் பட்டப்படிப்பும், எடின்பர்கில்   எம்.ஏ தத்துவமும் பயின்று 1908-ல் பார் அட் லா வாகப் பதிவு பெற்று 1909-ல் இந்தியா திரும்பினார்.  இங்கிலாந்தில் இந்திய சுதந்திரப் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரோசாப்பூத் துரை சூசன்னா என்ற மங்கையை மணந்த கையுடன் சென்னை வந்து சேர்ந்தார்.
 
சென்னையில் சில மாதங்களே தங்கியிருந்து சவுத் இன்டியன் மெயில் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர் கோபால மேனன் என்பவரின் அறிவுரைப்படி மதுரைக்குச் சென்று குற்றவியல் வழக்கறிஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார்.  வக்கீல் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அவர் எண்ணம் ஆங்கில அடக்குமுறைக்கு ஆட்பட்டு அல்லலுறும் கள்ளர்கள் பக்கம் திரும்பியது.  சட்ட ரிதியாகக் குற்றப் பரம்பரை என்று குற்றம் சாட்டப்பட்டு இரவு முழுதும் காவல் நிலையத் தாழ்வாரத்திலும் வெட்ட வெளியிலும் இரவு 11 மணி முதல் விடிகாலை 4 மணி வரை இருக்கவேண்டும் என்ற சட்டத்தை எதிர்க்க முனைந்தார்

1919-1929 களில் 14000 கள்ளர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து வேறு இடங்களுக்குச் செல்லாமல் இரவு காவல் நிலையத்தில் தங்க வேண்டும் என்ற கடுமையான சட்டத்தால் கள்ளர் குடும்பப் பெண்டிர் கடும் மன உளைச்சல்படுவதை எடுத்துக் கூறி ஆங்கில ஏகாதிபத்தியம் ஓரளவுக்குக் கடுமையைக் குறைத்துக்கொள்ள முயன்று வெற்றியும் கண்டார்

1918-ல் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ராமனாதனுடன் இணைந்து மதுரைத் தொழிற் சங்கத்தை உருவாக்கினார். மார்ச் 22 ஆம் நாள் ராஜாஜியால் ரோசப்பூத் துரை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.  உடனே அண்ணலின் தளபதியாகச் சூளுரை எடுத்துக்கொண்ட ரோசாப்பூத் துரை அவர்கள் இல்லத்தில்தான் மதுரை வந்த காந்தியார் மார்ச் 26 முதல் 28 1919-ல் (அறிமுகமான நான்கு நாட்களுக்குள்) தங்கியிருந்தார்.  1919-ல் காந்தியார் தமிழகம் வந்ததன் நோக்கம் ரெளலட் சட்டத்துக்கான நாடு தழுவிய போராட்டத்தில் தமிழகம் பங்குபெற ஆதரவு திரட்டவே.  ஏப்ரால் 6 ஆம் நாள் மதுரையில் வேலை நிறுத்தம் முழு வெற்றியடையக் காரணமாக இருந்த ரோசாப்பூத் துரை காந்தியாரின் நம்பிக்கையைப் பெற்று தேசிய நீரோட்டத்திலும் போராட்டத்திலும் முழு ஆர்வத்துடன் பங்குபெற்றார்

1920 ல் மோதிலால் நேருவின் இன்டிபென்டன்ட் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பின்னர் ராஜாஜியைத் தொடர்ந்து யங் இந்தியாவின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.  ராஜ துவேஷ குற்றத்திற்காக நேரு குடும்பத்தாருடன் சிறை சென்றார்

மீண்டும் தம்ழகம் வந்த ரோசாப்பூ துரை மார்ச் 24-ல் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்.  காந்தியார் ரோசாப்பூத் துறை வேறு சமயத்தைச் சார்ந்தவர் இந்து சமயப் பிரச்சினையில் தலை நுழைத்துப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று வற்புறுத்தியும் அதை ஏற்காமல் ஈ.வெ.ரா வுடன் இணந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்.  ஈ வெ ராவுடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஸ்வராஜ்யக் கட்சிக்காரர்களை எதிர்க்கும் கொள்கையை தளர்த்திக் கொள்ளாமலும் தேவைப்பட்டால் தனித்து நின்று போராடும் பாங்கும் அவரை மிகவும் கவர்ந்தது

ரோசாப்பூத் துரை அண்ணல் அம்பேத்காருடன் தொடர்பில் இருந்தவர் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ்நாட்டு இளைஞர் காமராசர்.  விருது நகர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட காமராசருக்கு ஆதரவாக வழக்காடி சதி வழக்கிலிருந்து காமராசரை வெளியே கொண்டு வந்தவர் ரோசாப்பூத் துரை

தனக்குச் சரியென்று பட்டதால் பின்னாளில் காந்தியாரின் ஒத்துழையாமை உப்பு சத்யாக்கிரகம் மதுவிலக்குக் கொள்கையை ஆதரிக்க மறுத்தார் 1938-ல் தன் 50 வயதில் இறந்தார் ரோசாப்பூத் துரை. மதுரையைச் சுற்றியுள்ள கள்ளர்களும் மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் அவர் மரணச் செய்தி அறிந்து கதறி அழுதனர்.

அவரின் பிறந்த நாளைக் கள்ளர் சமுதாயம் நினைவில் நிறுத்தி ஆண்டு தோறும்  கொண்டாடியது.  தங்கள் குழந்தைகளுக்குப் பெண் என்றால் ரோசாப்பூ என்றும் ஆணாக இருந்தால் ரோசப்பூத் துரை என்றும் பெயரிட்டு அவர் நினைவைப் போற்றியது.

ரோசாப்பூ என்ற பெயர் எதனால் வந்தது?

நேரு போல் தன் உடையில் ரோசாப்பூ அணிந்ததாலா? மதுரைத் தமிழில் ஜோசப் என்பதை ரோசாப்பூ என்று சொன்னார்களா?என்பது இன்றுவரை விளங்கவில்லை

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ரோசாப்பூ துரை

  1. இந்தத் துரையை நான் இதுவரை அறிந்திலேன்.  நல்லதொரு சமுதாயக் காவலனை அறிமுகம் செய்து வைத்து பேராசிரியருக்கும்,  வல்லமை ஆசிரியருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

    அன்பன்
    கி.காளைராசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *