நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-15)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

சுந்தரத்தின் ஆபீசில் பரபரப்பாகப் பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. சுந்தரத்தைச் சந்தேகப்பட்டு அவனிடம் பேசிய பிறகு மேனேஜருக்கு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமி ஒருவரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர் சொன்ன செய்தியைக் கேட்டு மேனேஜருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் தேவையில்லாமல் சுந்தரத்தைச் சந்தேகித்தோமே என்று தோன்றியது. விஷயம் இது தான்.

சுந்தரம் பெயருக்குக் கெட்ட பெயர் உண்டு பண்ணும் நோக்கத்தோடு வந்த மொட்டை லெட்டர்களைப் பற்றி மேனேஜரிடம் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட்காரர்கள் சொன்ன போதே அவர் சுந்தரத்தின் மேல் தப்பு இருக்க முடியாதே என்று யோசித்தார். அதனால் அவர்”எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு! இந்த எல்லா லெட்டரையுமே ஒரே நபர்கள் தான் எழுதியிருக்கணும். சுந்தரத்தைப் பிடிக்காத யாரோ தான் இதைச் செஞ்சிருக்கணும். அதனால நீங்க எதுக்கும் இந்த லெட்டர்சை ஒரு கையெழுத்து ஸ்பெஷலிஸ்ட் கிட்ட அனுப்பி ஒரு ஒப்பினியன் வாங்கிக்குங்க” என்று கூறியிருந்தார்.

அவர் சொன்னதைக் கேட்டு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த சுப்பிரமணியமும், போலீசில் இருந்த தன் நண்பரின் உதவியோடு ஒரு கையெழுத்து நிபுணரிடம் கொடுத்தார். அவரும் அதைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு,”மொத்தம் 10 லெட்டர்கள் இருக்கு, ஆனா இதை எதோ ரெண்டு பேர் தான் எழுதியிருக்காங்க!” என்று கூறியியிருந்தார். அந்த விஷயத்தைச் சுப்பிரமணியம் மேனேஜரிடம் தெரிவித்தார். அதைக் கேட்டதும் மேனேஜருக்குப் பொறி தட்டியது.

வேலுமணி, கணேசன் இவர்கள் இரண்டு பெயருடைய கையெழுத்தும் அடங்கிய ஃபைலை சுப்பிரமணியத்திடம் கொடுத்து அவற்றைப் பரிசோதிக்கும்படி சொன்னார். அதன் ரிசல்டைத்தான் இப்போது சுப்பிரமணியம் மேனேஜரிடம் ஃபோனில் தெரிவித்தார். சுப்பிரமணியம் கூறியது மேனேஜர் நினைத்ததைப் போலவே இருந்தது. அந்த மொட்டை லெட்டர்களை எல்லாம் எழுதியவர்கள் வேலுமணியும்,கணேசனும் தான் என்று கையெழுத்து நிபுணர் தெரிவித்து விட்டதாகச் சுப்பிரமணியம் கூறினார்.

அதை வைத்து வேலுமணியிடமும், கணேசனிடமும் துருவித்துருவிக் கேட்ட போது அவர்களே ஒரு கட்டத்தில் சுந்தரத்தின் மேல் உள்ள பகையால் தாங்கள் சுந்தரத்தைப் பழி வாங்க அவ்வாறு செய்தோம் என்று ஒப்புக் கொண்டார்கள். ஆனால் வெளி நாட்டுக்குப் பணம் அனுப்பிய விவரம் சம்பந்தமாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.

அதைக் கேட்டதிலிருந்து மேனேஜருக்கு சுந்தரத்தின் மேல் மரியாதை ஓங்கியது.

“சே! நான் அவசரப்பட்டிருக்கக் கூடாது. இந்த ரிசல்ட் வந்தப்புறம் சுந்தரத்துக் கிட்ட பேசியிருக்கணும். ஏன் அவசரப் பட்டேன்னு தெரியல. இப்போ அவருக்குத் தேவையில்லாத மனசு கஷ்டம். ஆனா வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புன வெவகாரம்? அதுக்கு என்ன பதில்” என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சுந்தரம் வந்து விட்டான்.

“சார்! நான் என்னை நிரபராதின்னு நிரூபிக்க வேண்டிய ஆதாரங்களோடு வந்துருக்கேன் சார்!”

“சுந்தரம் உங்க ஆதாரங்களை எல்லாம் நான் கண்டிப்பாப் பாக்குறேன்! ஆனா உங்க மிஸஸ் ஏன் வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புனாங்கன்னு தெரிஞ்சுதா?”

“தெரிஞ்சுது சார்! அவங்க ஒரு இ-மெயிலை நம்பி ஏதோ ஒரு அட்ரசுக்கு பரிசு விழும்னு நம்பி சவுத் ஆப்பிரிக்காவுக்கு பணம் அனுப்பியிருக்காங்க! தன்னோட சொந்த சேமிப்புலர்ந்தும், ஒரு நகையை அடமானம் வெச்சும் தான் அந்தப் பணத்தை அனுப்பியிருக்காங்க! அதுக்குண்டான ஆதாரங்கள் எல்லாம் நான் கைவசம் வெச்சுருக்கேன் சார்” என்றான் பரபரப்போடு.

“கவலைப் படாதீங்க சுந்தரம்! கடவுள் உங்க பக்கம் இருக்கார். அந்த பேப்பர்சை எல்லாம் குடுங்க!” என்று அவற்றை வாங்கி ஒவ்வொன்றாகப் பார்த்தார். அவற்றைப் பார்த்து விட்டு நிமிரும்போது அவர் முகம் தெளிவடைந்திருந்தது. நேரே சுப்பிரமணியத்துக்கு ஃபோனைச் சுற்றி ஸ்பீக்கரில் போட்டார்.

“மிஸ்டர். சுப்பிரமணியம், சுந்தரம் வீட்டுக்கு ரெய்டு போகணும்ங்கற அவசியம் இல்ல. அவரு அந்தப் பணம் சம்பந்தமான எல்லா டாக்குமெண்ட்சையும் நீட்டாக் கொண்டு வந்திட்டாரு. அது மட்டுமில்ல தன்னோட ரெண்டு வருஷ பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்டையும் கொண்டு வந்திருக்காரு அதுல அப்டி ஒண்ணும் நெறயப் பணம் போடப் படல. அதனால வீடு ரெய்டு செய்யப்படத் தேவையில்ல”

“அப்டியா சார்? ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னா மாதிரியே அவரு நிரபராதின்னு ப்ரூவ் ஆய்டிச்சே! ரொம்ப சந்தோஷம் சார்!”

“ஆமா மிஸ்டர். சுப்பிரமணியம். எனக்கே கூட ரொம்பக் கஷ்டமா இருந்தது. எனக்கு சுந்தரத்தை ரொம்ப வருஷமாத் தெரியும். அவரு இப்டி ஒரு காரியத்தைச் செஞ்சிருப்பாருன்னு என்னால கற்பனை கூடப் பண்ணிப்பாக்க முடியல. ஆனா என்ன பண்ண? சூழ்நிலை அவருக்கெதிரா இருந்ததே? அதான் உங்க கிட்ட சொல்ல வேண்டியதாயிடுச்சு”

“போனது போகட்டும் சார். இப்போ மிஸ்டர். சுந்தரம் எங்கே? அவர் கிட்ட சொல்லிட்டீங்களா? அவர் நிரபராதின்னு?

“இல்ல! இன்னும் சொல்லல்ல! இப்போ அவரு இதையெல்லாம் கேட்டுக்கிட்டு என் எதுத்தாபோலத்தான் உக்காந்துருக்காரு. நான் இப்பவே அவருக்கு வெளக்கமாச் சொல்லிடறேன்” என்று கூறி ஃபோனை வைத்தார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு ஆகாயத்தில் பறப்பது மாதிரி இருந்தது.

“என் மேல இருந்த களங்கம் போயிடுச்சா? எங்க வீட்டுக்கு ரெய்டு வராதா? எப்படி இந்த திடீர் மாத்தம்? கடவுளே உனக்கு நன்றி! முருகா! நீ என்னைக் காப்பத்திட்டப்பா” என்று அவன் மனம் கனிந்து கசிந்து உருகியது.

“என்ன சுந்தரம் அப்டியே பிரமிச்சுப் போயி உக்காந்துட்டீங்க?”

மேனேஜர் குரலைக் கேட்டதும் கனவிலிருந்து மீண்டவன் மாதிரி திடுக்கிட்டவன் அவரை நோக்கி,

“சார்! நீங்க இப்போ ஃபோன்ல பேசினது எல்லாம் நிஜமா? நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆயிடிச்சா? எப்டி? இப்போ ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி கூட என்னைச் சந்தேகப் பட்டீங்களே? நான் வீட்டுக்குப் போயிட்டு டாக்குமெண்ட்சையெல்லாம் கொண்டு வரதுக்குள்ள எப்டி சார் நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆச்சு? என்னால நம்பவே முடியல சார்!”

“பதறாதீங்க சுந்தரம். உக்காருங்க! முதல்ல இந்தத் தண்ணியக் குடிங்க!” என்றவர் தண்ணீரை நீட்டினார். அதை வாங்கிப் பருகியவனை நோக்கி

“எல்லாம் விவரமா மொதல்லருந்து சொல்றேன் கேளுங்க! நீங்க வீட்டுக்கு டாக்குமெண்ட்சை எடுக்கப் போனதும் எனக்கு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் சுப்பிரமணியத்துக்கிட்டருந்து ஃபோன் வந்துது. மொட்டை லெட்டர்கள்ள இருக்குற கையெழுத்தும், கணேசன், வேலுமணி கையெழுத்தும் ஒண்ணுதான்னு கையெழுத்து எக்ஸ்பெர்ட் ரிப்போர்ட் குடுத்துட்டாரு. அதை வெச்சிக்கிட்டு இவங்க அந்த ரெண்டு பேரையும் கொடஞ்சிருக்காங்க! ஒரு ஸ்டேஜில அவங்களே கொடச்சல் தாங்க முடியாம மொட்டை லெட்டர் போட்டது தாங்கதான்ன்னு ஒப்புக்கிட்டாங்க!. அதனால் உங்க மேல இருந்த சந்தேகம் 80% குறஞ்சிடுச்சு. இப்போ நீங்க வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புன ரெக்கார்ட்சையும், உங்க பேங்க் ஸ்டேட்மெண்டையும் கொண்டு வந்தீங்க அப்போ உங்க மேல இருந்த மீதி 20% சந்தேகமும் தீந்து போச்சு.”

“சார்! உண்மையாவா சொல்றீங்க? கணேசனும்,வேலுமணியுமா அந்த மொட்டை லெட்டர்களைப் போட்டது?”

“ஆமா சுந்தரம்! அவங்க திட்டம் போட்டு வேலை செஞ்சிருக்காங்க! மத்தவங்க பாக்கும் போது வேணும்னே உங்க கிட்ட நெருங்கிப் பேசறா மாதிரி நடிச்சிருக்காங்க! அப்பத்தான் மத்தவங்களளுக்கும் உங்க மேல சந்தேகம் வரும்னு. என்ன ஒரு வில்லத்தனம் பாத்தீங்களா?”

” ஏயப்பா! இவ்ளோ வேலை செய்துருக்காங்களா அவங்க? அவங்க கேட்டு நான் அந்த ஃபைலைத் தர மாட்டேன்னு சொல்லிட்டேன். அந்தக் கோவத்துல என்னை இப்டிப் பழி வாங்கியிருக்காங்க!”

“ஆமா சுந்தரம்! கொஞ்ச நேரத்துக்கு நான் கூட உங்களைத் தப்பா நெனச்சேன். ஐ ஆம் சாரி! உங்களுக்குப் புரமோஷன் கெடைக்க சிபாரிசு பண்றேன். நான் பண்ண தப்புக்கு அது பரிகாரமா இருக்கட்டும்”

“ரொம்ப தேங்க்ஸ் சார்! ஆமா! இப்போ அவங்க ரெண்டு பேர் நெலம என்னாகும்?”

“யாரு வேலுமணி, கணேசனா? அவங்க மேல ஏகப்பட்ட புகார் இருக்கு. இப்போ நீங்க அவங்க மேல உங்க புகார் குடுத்தீங்கன்னா கண்டிப்பா வேலை போயிடும். ஊழல் செஞ்சதாச் சொல்லப் படற அமௌண்டையும் கட்ட வேண்டி வரும்.”

“ஏன் சார் நான் புகார் குடுத்தாலும், குடுக்காட்டாலும் அவங்களுக்கு வேலை போறது உறுதியா சார்?”

“ஆமா! அப்டித்தான் சுப்பிரமணியம் சொன்னார்”

“அப்டீன்னா நான் அவங்க மேல எந்தப் புகாரும் குடுக்கல்ல சார்!”

“வாட்? நீங்க அவங்களுக்கு எதிரா கம்பிளெயிண்ட் குடுக்கப் போறதில்லியா? ஏன் சுந்தரம்? அவங்களால உங்களுக்கு எவ்ளோ மனசுக் கஷ்டம் வந்துச்சு? அதையெல்லாம் மறந்துட்டீங்களா?”

“மறக்கல சார்! ஆனா நான் கம்பிளெயிண்ட் குடுத்ததால தான் அவங்களுக்கு வேலை போச்சுன்னு நெனச்சுக்கிட்டு என் மேல மேலும் பகை வரும் சார். பாவம் சார் அவங்களும். பிள்ளைக்குட்டிக்காரங்க! பொழச்சுப் போகட்டும்! என் விஷயத்துல தலையிடாம இருந்தா அதுவே போதும்.”

“சுந்தரம் யூ ஆர் கிரேட்! இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்னு குறளுக்கு நீங்க தான் எக்சாம்பிள். வெல் டன்! எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு”

“தேங்க்ஸ் சார்! நான் அப்போ வீட்டுக்குப் போயி நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆயிடிச்சுன்னு என் மகன் கிட்ட சொல்லலாமா சார்?”

“கண்டிப்பா! இப்பவே கிளம்புங்க! உங்க மனைவி கிட்ட மொதல்ல சொல்லுங்க அவங்க பாவம் எவ்ளோ டென்ஷனோட இருக்காங்களோ?”

மனைவி என்ற சொல்லைக் கேட்டதும் சுந்தரத்தின் முகம் இறுகியது. மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் மேனேஜரிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.

கதவைத்திறந்தவன் நிகில் தான். அப்பாவின் புன்னகை பூத்த முகத்தைப் பார்த்ததுமே வந்த ஆபத்து நீங்கி விட்டது என்று உணர்ந்து கொண்டான் அவன். கதவைத் திறந்தவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டான் சுந்தரம்.

“நிகில்! கண்ணா! என் மேல இருந்த பழி நீங்கிடுச்சுடா கண்ணா! உங்கப்பா நிரபராதின்னு எல்லாரும் சொல்லிட்டாங்க! நாக்கு மேல பல்லைப் போட்டு என்னைக் குத்தம் சொன்னவங்க எல்லாம் எங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டாங்கடா நிகில்!” சொல்ல சொல்லவே கண்களில் நீர் பெருகியது கல்யாணிக்கு.

“அப்பா! வடபழனி ஆண்டவா! என் மனக்குறையைத் தீர்த்தியே! வேண்டிக்கிட்டபடியே உனக்கு பாலாபிஷேகம் பண்றேம்ப்பா!” என்றவள் ஓடிப் போய் திருநீறை எடுத்துப் பூசிக் கொண்டாள். ஆவலோடு சுந்தரத்தின் அருகே வந்து

“என்னங்க? எப்டி நீங்க தப்பு செய்யல்லன்னு கண்டு பிடிச்சாங்க?”

அவள் இருப்பதையே லட்சியம் செய்யாமல் நிகிலையே பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான் சுந்தரம்.

“அப்பா! அம்மா கேக்குறாங்க ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க?”

முகம் கடுமையானது. அதைப் பார்த்து நிகிலுக்கே பயம் வந்தது. கல்யாணி நொந்து போனாள்.

“டேய் நிகில்! இனிமே உங்கம்மாவோட பேச்சை எங்கிட்ட எடுக்காதே! அவ என் எதிரி. என் நேர்மையையே கேள்விக்குறி ஆக்கின ராட்சசி.”

“என்னப்பா இப்டிச் சொல்றீங்க? இப்போதான் எல்லாம் சரியாயிடுச்சே? அப்புறம் என்ன?”

“என்ன இருந்தாலும் கொஞ்ச நாள் எல்லாரும் என்னை ஆபீசுல சந்தேகமாப் பாத்தாங்க இல்லியா? அதுக்குக் காரணம் யாரு? இவ தானே?”

“என்னங்க பிளீஸ் நாந்தான் தெரியாமப் பண்ணிட்டேன்னு சொல்றேனே! உங்க கால்ல விழுந்துனாலும் மன்னிப்புக் கேட்டுக்கறேன்”

“நிகில்! உங்கம்மாவைப் பேசாம இருக்கச் சொல்லு, நான் இப்போ ரொம்ப சந்தோஷமான மூட்ல இருக்கேன். அதைக் கெடுக்கச் சொல்லாதே”

“சரி சரி! இதை அப்புறமாப் பாத்துக்குவோம். நீங்க முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க? எனக்கு எதுவுமே தெரியாது” என்றான் நிகில்.

எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான் சுந்தரம். வேலுமணியும்,கணேசனும் ஊழல் செய்தது, திட்டம் போட்டு சுந்தரத்தை மாட்டி வைத்தது, மொட்டை லெட்டர் போட்டது எல்லாம் சொன்னான்.

“இதெல்லாம் போதாதுன்னு உங்கம்மா வெளி நாட்டுக்கு பணத்தை அனுப்பி என்னைத் தலையே தூக்க முடியாதபடி செஞ்சா! ஆனாலும் தெய்வம் என் பக்கம். என்ன இருந்தாலும் நியாயம் ஒரு நாள் ஜெயிக்கத்தானே செய்யும்? நான் கொண்டு போன டாக்குமெண்ட்சையெல்லாம் பாத்துட்டு எங்க மேனேஜர் தன் தப்பை உணர்ந்துட்டார். அதோட லெட்டர் போட்டது அவங்க தன்னு ரெண்டு பேரும் ஒத்துக்கவே நான் தப்பிச்சேன்”

கல்யாணியின் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் நிற்கவேயில்லை. தான் செய்த காரியத்தின் தீவிரம் அப்போதுதான் அவளுக்கு உறைத்தது.

“என்ன காரியம் செஞ்சிட்டோம்? நான் அந்த ரசீதுகளை மட்டும் பத்திரமா வெச்சுருக்கல்லன்னா என்ன ஆகியிருக்கும்? அவரு பேருக்குத் தீராத களங்கம் இல்ல உண்டாயிருக்கும்? அப்போ இந்தக் குடும்ப நிலைமை என்ன? நல்ல வேளை கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரம் நான் இந்த ரசீதுகளைப் பத்திரமா வெச்சேன். முருகா நன்றி!” என்று முருகனுக்கு மனத்துள் நன்றி சொன்னாள்.

நிகில் மீண்டும் ஆரம்பித்தான்.

“அப்பா உங்களுக்குக் கெட்ட பேர் வரணும்னு வேலை செஞ்ச அந்த ரெண்டு பேர் மேலயும் கம்பிளெயிண்ட் குடுத்தீட்டீங்க இல்ல? மான நஷ்ட கேஸ் போட்டு நல்லா உள்ள தள்ளணும் அப்பத்தான் இவங்களுக்கு எல்லாம் புத்தி வரும்”

“இல்ல நிகில். நான் அவங்க மேல கம்பிளெயிண்ட் குடுக்கல்ல! ஏற்கனவே கஷ்டத்துல இருக்காங்க பாவம்! ஏதோ தெரியாம தப்பு செஞ்சிட்டாங்க! நானும் கூடச் சேர்ந்து சொன்னா அவங்களுக்கு பாவம் எதிர்காலமே இல்லாமப் போயிடும். எப்படி இருந்தாலும் அவங்களுக்கு வேலை போகப் போகுதுன்னு உறுதியாயிடுச்சு, இந்நேரத்துல போய், மான நஷ்ட வழக்கு அது இதுன்னிக்கிட்டு, அவங்களும் குடும்பஸ்தங்க தானே! போறாங்க விடு”

நிகிலுக்கு தன் தந்தையை நினைத்துப் பெருமையாக இருந்தது.

“அப்பா!, உங்களை அம்மா கூப்புடுறாங்க!” என்றான் வேண்டுமேன்றே.

“நிகில்! நான் சொன்னா சொன்னது தான். உங்கம்மாவோட நான் இனிமேப் பேசறதாயில்ல. அவ செஞ்ச காரியம் அப்டிடா! உனக்கு பைக் வாங்க வெச்சிருந்த பணத்தைத் தூக்கி விட்டுருக்கா! அம்பதாயிரம் சாதாரணத் தொகையா? நான் எதை வேணா மன்னிப்பேன் ஆனா உன் பைக் பணத்தை எடுத்து என் நேர்மைக்கு களங்கம் உண்டாக்க முயற்சி பண்ணாளே அதை என்னால மன்னிக்கவே முடியாது.”

“அம்மா தெரியாம தானே செஞ்சாங்க!”

“தெரிஞ்சோ தெரியாமலோ! எனக்குப் பிடிக்கல்ல!”

“அப்பா, நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே?”

“சொல்லுடா”

“உங்களை வேணும்னே பிளான் பண்ணி மாட்டி விட்ட அவங்களை ரெண்டு பேரையும் மன்னிச்சு சும்மா விட்டுட்டீங்க ஏதோ அம்மா நம்ம வீட்டுக்கு நிறையப் பணம் வரணும் நம்மள்ளாம் சந்தோஷமா இருக்கனும்கறதுக்காக தெரியாமக் கொண்டு போயி பணத்தைக் கட்டி ஏமாந்துருக்காங்க! அவங்களை மன்னிக்க மாட்டீங்க ஏன்ப்பா அப்பிடி?”

கல்யாணிக்கு நிகிலா இவ்வளவு பெரிய மனிதத்தனமாகப் பேசுகிறான் என்று இருந்தது.

“அப்பா! ஒரு வேளை அம்மா பணம் கட்டி எதிர் பார்த்தபடி அந்த அஞ்சு கோடி ரூவா வந்திருந்துதுனா நாம எல்லாரும் தானே அதை எஞ்சாய் பண்ணியிருப்போம்? அதுக்கு மட்டும் அம்மா வேணும் , இப்போ மட்டும் மன்னிக்க மாட்டோம்னா எப்டிப்பா?”

“டேய்! நிகில் அவ பணம் கட்னதால எனக்கு ஏற்பட்ட அவமானத்தையே நான் மறந்துட்டேன்னே வெச்சிக்கோ! ஆனா பணம்? உன் பைக்குக்குன்னு ஆசப்பட்டு சேத்ததுடா! என்னால இப்போ உடனடியாப் பணம் குடுத்து உனக்கொரு பைக் வாங்கித் தர முடியாது! நீ அதை மறந்துடாதே”

“பைக்! பைக்! அது போனாப் போகட்டும்ப்பா! நம்ம வீடு எப்பவும் போல கலகலப்பா இருந்தாப் போதும் எனக்கு! அம்மா வேலை செய்ய ஆரம்பிச்சதுலருந்து வீடு வீடாவே இல்ல! அப்போ என் மனசுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? இப்போ எல்லாம் சரியானப்புறமும் நீங்க அம்மாவோட பேச மாட்டேன்னு சொன்னா அப்புறம் நம்ம வீடு நரகமாத்தான் ஆகும். இன்னும் ஒரு வருஷத்துல நான் யூ.எஸ் போயிடுவேன். அப்போ ரெண்டு பேரும் மோட்டு வளையைப் பாத்துக்கிட்டு உக்காந்துருப்பீங்களா இல்ல என் கிளாஸ் மேட் சுப்ரியாவோட அம்மா அப்பா மாதிரி டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?”

“டேய் நிகில்!”

“பின்ன என்னப்பா? அம்மா தான் தெரியாம செஞ்சுட்டேன் உங்க கால்ல கூட விழறேன்னு சொல்றாங்க அப்புறமும் நீங்க இப்டிப் பேசினா?”

சுந்தரத்தின் மனம் இளகியது. “பாவம் கல்யாணி! ஏதோ எங்கள் மேல் இருக்கும் அன்பினால் தான் இதையெல்லாம் செய்திருக்கிறாள். எனக்கு மானக்கேடு வருமென்று தெரிந்திருந்தால் ஒரு நாளும் அந்த வேலையைச் செய்யவே மாட்டாள். நானும் தான் ரொம்பக் கடுமையாப் பேசிட்டேன். என் கிட்ட சொல்லப் பயந்துக்கிட்டு தான் அவ சொல்லல்ல! இத்தனை நாளா அவ மனசு என்ன பாடு பட்டிருக்கும்?” என்று எண்ணமிட்டான்.

கல்யாணியை அவன் பார்த்த பார்வையில் இப்போது அன்பும் காதலும் இருந்தது. அதைப் புரிந்து கொண்டவள் ஓடோடி வந்து சுந்தரத்தின் அருகில் நின்றாள்.

“என்னங்க? என்னை மன்னிச்சிடுங்க! எனக்கு இனிமே இந்தக் கம்ப்யூட்டரே வேணாம். போதும் போதும் நான் சம்பாதிச்சது. எல்லாத்தையும் தான் தொலச்சுட்டேனே”

“அப்டிச் சொல்லாதே கல்யாணி! இதை ஒரு நல்ல எக்ஸ்பீரியன்சா எடுத்துக்கோ! இனிமே உனக்கு இந்த மாதிரி இ-மெயில் வந்தா அதைக் கண்டுக்கவே கண்டுக்காதே. இக்னோர் பண்ணிடு! உன்னோட இந்த எக்ஸ்பீரியன்சை நாலு பேருக்கு எடுத்துச் சொல்லு. அவங்களாவது ஏமாறாம இருப்பாங்க இல்ல? ஆனா சுஜாதாவோட ஆபீஸ்ல செய்யற பார்ட் டைம் வேலையை விடாதே!”

“சரிங்க”

“அதுக்குன்னு முன்ன மாதிரி வீட்டை விட வேலை முக்கியம்னு இருக்காதே! நீ ஓய்வா இருக்கற நேரத்துல மட்டும் வேலை செய். அதனால எவ்ளோ குறையப் பணம் வந்தாலும் பரவாயில்ல, பணம் முக்கியம்தான் வாழ்க்கைக்கு. ஆனா அதை விட நிம்மதி முக்கியம் அதை மறந்துடாதே!”

“சரிங்க! நான் எப்டி பைத்தியமா இருந்திருக்கேன்னு இப்போ நெனச்சுப் பாக்கும்போது தாங்க தெரியுது”

“அம்மா! அதுக்குன்னு என் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு வந்தா அவங்க கூட உக்காந்து டேட்டிங், சேட்டிங்ன்னு பேச ஆரம்பிச்சுடாதீங்க! நீங்க நீங்களாவே இருங்க. அப்டி இருந்தாத்தான் நல்லாயிருக்கு”

அம்மா, அப்பா, மகன் மூவரின் சிரிப்பையும் அந்த வீடு எதிரொலித்தது.

(தொடரும்) 

படத்திற்கு நன்றி: http://www.srikaliyammansecurityserviceanddetectivebureau.com/contactus.aspx#

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *