Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்

ஸ்காட்லாந்து ஆப் இந்தியா

விசாலம்

“கூர்க்’ எனப்பெயர் கொண்ட குடகு மலைக்கு நான் மூன்று முறைகள் போயிருக்கிறேன். அங்கு இருக்கும் இயற்கைச் சூழ்நிலையும், அருமையான இயற்கைக் காட்சிகளும் என்னை மிகவும் கவர்ந்தன.

நான் போய் தங்கிய இடத்தில் இருந்த பெண்மணி மிகவும் அன்புடன் எங்களை வரவேற்று நல்ல அறையும் கொடுத்து சாப்பாடும் தந்து கவனித்துக்கொண்டாள். நமக்கு என்ன மாதிரி சாப்பாடு வேண்டும் என்று முதலிலேயே சொல்லி விட்டால் அதை அவளே தன் கணவர் உதவியுடன் செய்து முடிக்கிறாள். அவளுக்கு உதவ ஒரு பணிப்பெண்ணும் இருக்கிறாள். அவள் கணவர் கேரள நாட்டைச் சேர்ந்தவர், காதல் திருமணம். பெரிய எஸ்டேட்டின் தலைவர் ஆனால் ரொம்ப சிம்பிள். அங்கு நான் என் வீடு போலவே ஒரு வித்தியாசமில்லாமல் இருந்தேன். அவள் எனக்கு அவர்கள் கட்டும் விதத்தில் புடவையும் கட்டி விட்டாள். ஆனால் அங்கு எடுத்த பல போட்டோக்கள் என் கணினி கிராஷ் ஆகி அழிந்து விட்டன. நான் ஆசை ஆசையாக எடுத்துக்கொண்ட கூர்க் ட்ரெஸ் போட்டோ போயே போச்சு. இதற்காவது இன்னொரு தடவை கூர்க் செல்ல வேண்டும். சரி இனி நான் பத்து நாட்கள் தங்கி அனுபவித்த குடகு நாட்டைப் பற்றிச் சொல்கிறேன். நேரே கண்டு அனுபவிக்கும் சுகமே தனிதான்

குடகு நாடு {Scotland of India} ஸ்காட்லேந்த் ஆப் இந்தியா எனப் புகழ் பெற்ற ஒன்று. குடவர்கள் வீரமிக்கவர்கள், சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் நாட்டைக்காக்கும் பணியில் இருப்பவர்கள். முன்னாள் பீல்ட் மார்ஷல் கரியப்பா அவர்கள், ஜெனரல் திம்மய்யா அவர்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள். குடகு மக்கள் மிகவும் தைரியமிக்கவர்கள். உழைப்பாளிகள். கேளிக்கைகளை விரும்பி வாழ்க்கையை ரசிப்பவர்கள் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள். பேச்சில் ஹாஸ்யமும் இருக்கும் வேட்டையாடும் பழக்கமும் முன்பு இருந்தது

விருந்தோம்பலுக்கு மிகவும் பெயர் போனவர்கள். சிரித்த முகத்துடன் விருந்தாளிகளை உபசரிப்பார்கள். அவர்கள் வீட்டில் முன்னோர்கள் போட்டோ பல இருக்க அவைகளுக்குப் பூஜையும் செய்வார்கள் பல எஸ்டேட் முதலாளிகள். வீட்டின் வாயிலில் சலவைக்கல்லினாலோ அல்லது மரத்தினாலோ அவர்களது முன்னோர்களின் சிலை நம்மை வரவேற்கும். முன்னோர்களின் வழிபாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

பெரியவர்களின் பாதங்களைத் தொட்டு வழங்கும் கலாசாரம் இங்கு சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கப்படுகிறது. பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் பெரிய துப்பாக்கியைக்காண முடிகிறது. {Gun] இதை வைத்துக்கொள்ள லைசன்ஸ் தேவையில்லையாம். ராஜ பரம்பரை போல் இது இருப்பதை மிகப்பெருமையாக நினைக்கிறார்கள், குழந்தை பிறந்தால் இந்தத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறர்கள். குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது அந்தக்குழந்தைக்குப் புலி மாமிசத்தினால் ஆன உணவைக் கொடுக்கும் வழக்கம் உண்டாம். புலி போல் மெஜஸ்டிக்காக வீர தீரத்துடன் இருக்கவே இப்படிச் செய்கிறார்கள். இதே போல் யாராவது இறந்தால் இரண்டு தடவை துப்பாக்கியால் ஆகாயம் நோக்கிச் சுடுகிறார்கள். இந்தப்போராயுதங்களுக்குப் பூஜையும் உண்டு. தினமும் அவைகளைக் கும்பிடுகிறார்கள்

இவர்களது மொழி குடவ மொழி. இதற்கு ஸ்கிரிப்டு இல்லை. இந்த மொழி மலையாளம் சம்ஸ்கிருதம் கன்னடம் கொஞ்சம் தமிழ் என்று நான்கும் கலந்திருக்கிறது.

இங்கு எல்லா சம்பவங்களுக்கும் நாட்டுப் பாடல் போல் பாடுகிறார்கள். திருமணம் குழந்தைப்பிறப்பு. அறுவடை. மேலும் சில பண்டிகைகள். இறப்பு என்று எல்லாவற்றுக்கும் நாட்டுப்பாடல்கள் போல் பாடல்கள் வந்து விடுகின்றன. வேதாந்தப்பாடல்களும் உண்டு.

பண்டிகைகள் என்று எடுத்துக் கொண்டால் தசரா, தீபாவளி, காவிரி சங்ரமணா என்ற காவிரிஸ்னானம் மலைவாசிகளின் விசேஷ தினம், அறுவடை தினம் எல்லாமே சிறப்பாக மேள தாள நாட்டியங்களுடன் நடைபெறும். வீடு கட்டிக் கிரஹப்பிரவேசமும் இது போலவே நடைபெறும்.

இவர்கள் தங்கள் போர் ஆயுதங்களைப் பூஜிக்கும் தினமும் “கைல்போல்டு” என்ற பெயரில் செப்டம்பர் மூன்றாம் தேதி வாக்கில் நடைபெறுகிறது. துப்பாக்கிக்கள், வாள், கத்தி, வில் அம்பு போன்ற ஆயுதங்களுக்குக் குங்குமம் சந்தனம் இட்டு வீட்டின் மூத்தவர் அதை எடுத்து வீட்டுத்தலைவருக்குக் கொடுப்பார். பின் பன்றிக் கறியுடன் ஸ்பெஷல் சாப்பாடு. பின் விளையாட்டில் ஒரு தேங்காயை மிக உயரத்தில் கட்டிச் சுடும் பழக்கமாம். முன்பு வேட்டைக்குப்போவார்களாம், இப்போது அது தடை செய்யப்பட்டுள்ளது.

காவிரித்தாயின் பூஜையின் போது பெண்கள் விடிகாலை காவிரியில் ஸ்னானம் செய்து பின் எல்லோர் வீட்டிற்கும் காவிரி தீர்த்தம் எடுத்துச்செல்கிறார்கள். பின் ஒரு தேங்காயோ அல்லது வெள்ளரிக்காயோ எடுத்து சிவப்புப் பட்டால் மூடி மஞ்சள் குங்குமம் இட்டு ஆபரணங்களுடன் மங்கள் சூத்ரம் {தாலி}பதக்கம் போட்டு பின் கன்னிபூஜை செய்கிறார்கள்

இவர்களது குல தெய்வங்கள் காவிரித்தாய், ஐயப்பன், பத்ரகாளி சாஸ்தா. பசுவையும், நாகதேவதா என்று பாம்பையும் பூஜிக்கிறார்கள். பசுவின் வதைக்குத்தடை.

சாதாரணமாக ஆண்கள் நீளக்கோட்டுடன் காட்சியளிப்பார்கள். இடுப்பில் ஒரு சில்க் துணி பெல்ட் போல் கட்டியிருக்க அதில் சின்னப் பிச்சுவாக் கத்தி சொருகப்பட்டிருக்கும். தலையில் “மண்டே துணி” அதாவது டர்பன் அணிந்திருப்பார்கள்

பெண்கள் புடவை அணிந்திருப்பார்கள், ஆனால் புடவை தோளில் வராமல் மார்பிலேயே சுற்றப்பட்டுப் பின் தலைப்பின் நுனி பாகம் பின்புறமாக வலது தோளில் வந்து அது விழாமல் நிற்க “பிரோசசால்” குத்தப்பட்டிருக்கும். பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

ஹிந்துவாக இருந்தாலும் திருமணத்திற்குப் பிராம்மண சாஸ்திரிகள் வருவதில்லை. குடும்பத்தின் தலைவர் வைத்து அவர் முன்னிலையில் திருமணம் நடத்தப்படுகிறது. அக்னிக்கு முக்கியத்துவம் இல்லை. வேறு மந்திரங்களும் திருமணம் போது கிடையாது. ‘டௌரி சிஸ்டம்’ அறவே கிடையாது.

அம்மா குடவர்கள் என்ற ஒரு பிரிவு உண்டு. இவர்கள் பிராம்மண கலாச்சாரம் கொண்டு பூணலும் அணிந்திருக்கிறார்கள். வேதங்கள் ஓதுகிறார்கள், சுத்த சைவம். தற்காலத்தில் இவரது பிரிவில் காதல் திருமணம் நடக்க “காவிரி பிராம்மணர்கள்’ என்ற தனிப்பிரிவு வந்திருக்கிறதாம்.

கல்யாண மாப்பிள்ளை வெள்ளைக்கலரில் நீள அங்கி போட்டிருப்பார். தலையில் சரிகைத்தலைப்பாகை அலங்கரிக்கும், கல்யாணப்பெண் சிவப்பு நிறத்தில் உடை உடுத்தியிருப்பாள். அநேகமாக வம்சவம்சமாக உடுத்திய பரம்பரைப் புடவையே மணப்பெண் உடுத்துவாளாம். அது வீணாகாமல் இருக்க வேண்டும். மணமகன் வாழைமரத்தண்டுகளை வெட்டி விட்டு வர வேண்டும், அவனது வீரத்தைக் காட்டுவது போல் அர்த்தம். முன்பெல்லாம் புலியையோ அல்லது காட்டுப்பன்றியையோ வேட்டையாடித் தன் வீரத்தைக்காட்டுவார்கள். திருமணம் போது பல நாட்டுப்பாடல்கள் பாடி பின் நடனமும் ஆடுகிறார்கள்.

அசைவ உணவு தான் அங்கு பிரதானம் அதுவும் “போர்க்’ என்ற பன்றி இறைச்சிதான் எல்லா விசேஷங்களிலும் முதல் இடம் பெறுகிறது. தவிர கொடம்புட்டு, நூல்புட்டு பெம்ப்ளாஸ்லூட், சிக்கன் {சாதம், நூடுல், மூங்கில் கறி] என்றும் பல இடம் பெறுகின்றன. சாதாரண நாட்களில் சாதம், கஞ்சி, பப்புட்டு, குழால் புட்டு தினமும் பார்க்க முடிகிறது. பழங்களில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எப்போதுமே உபயோகமாகின்றன நல்ல காபியும் கிடைக்கிறது.

பெண்களுக்கு மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விதவை மறுமணம் செய்து கொள்ளலாம். விதவை எல்லா மங்கள காரியங்களிலும் முதன்மை வகித்து முன் நிற்கலாம். தாயாருக்கு மிக முக்கிய ஸ்தானம் தரப்படுகிறது. அவள்தான் திருமணம் போது மாப்பிள்ளையை முதலில் வாழ்த்தி ஆசிகள் வழங்குகிறாள்.

இவர்கள் குடும்பம் அநேகமாக கூட்டுக்குடும்பமாகவே இருக்கிறது. வடநாட்டவர்கள் தங்கள் பெயருடன் குடும்பத்தின் பெயரையும் சேர்த்துக்கொள்வது போல் இவர்களும் சேர்க்கிறார்கள். {கவாஸ்கர் டெண்டுல்கர் என்பது போல்} இப்படி இருக்கும் குடும்பம் சுமார் ஆயிரம் வரை இருக்கிறது. இதை “ஒக்கா’ என்று அழைக்கின்றனர்

வீட்டின் முக்கிய ஹாலில் அவர்கள் குலத்தை ஆரம்பித்த குருவின் படமும் வைக்கப்பட்டு தினமும் விளக்கும் ஏற்றப்படுகிறது. அந்தக்குலத்தின் மூத்த தலைவரைக் கடவுளாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

பார்க்க வேண்டிய இடங்கள், மடிக்கேரி நாகரஹோல் நேஷனல்பார்க், அபி நீர்வீழ்ச்சி, தலக்காவேரி, ஓம்காரேஷ்வரர் ஆலயம், பிரும்மகிரி குன்று டுபாரே என்ற யானைகள் பிடிக்கும் இடம், ஆரஞ்சு கேன்டி. குசல் நகர். இன்னும் பல இயற்கைச் சூழல் உள்ள இடங்கள்

ஓம்காரேஷ்வர ஆலயம் மசூதி ஸ்டைலில் நாலு ஸ்தம்பங்களுடனும் நடுவில் வட்ட வடிவ கும்பத்துடன் இருக்கிறது. ஆனால் உள்ளே இருப்பதோ காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கமாம்,

காபி செடிகள், மிளகு. ஏலக்காய், கிராம்பு மற்ற மாசாலா பொருட்கள் தேயிலை, பாக்கு தேக்கு எல்லாம் செழிப்பாக வளர்வதால் இங்கு பல எஸ்டேட்டுக்கள் உள்ளன. நல்ல வியாபாரமும் நடக்கிறது, காடுகளில் சில இடங்கள் தேவகாடு என்று புனிதமாகக் கருதி அவைகளைக் காக்கின்றனர். அங்கு மரம் வெட்டுவதோ அல்லது வேட்டையாடுவதோ கிடையாது.

இளைஞர்களுக்குத்தேவையான மலையேறுதல், யானை மேல் சவாரி, தண்ணீரில் படகுடன் வீர விளையாட்டு, நீச்சல் போன்ற சகலமும் இருப்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.

இங்கு பல மூலிகைகள் விளைவதால் இவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யவும் பலர் வருகின்றனர். மலைப்பிரதேசம் பக்கம் போக மூலிகை மணத்துடன் தென்றல் வீசி நம்மை மேலும் புத்துணர்ச்சி ஆக்குகின்றன. .

திபெத்தியர்கள் எல்லோரும் சேர்ந்து மிக அழகான புத்தர் கோயிலையும் இங்கு கட்டியிருக்கிறார்கள். இதுவும் பார்க்க வேண்டிய இடம்.

குடகு மலை ஒரு அருமையான கோடை வாசஸ்தலம் என்பதில் சந்தேகமே இல்லை.

 

படங்களுக்கு நன்றி: http://www.yaatrika.com/traveler/2011/02/coorg-the-scotland-of-india/

http://www.coorgie.com/aboutus.asp

http://www.homestaykodagu.com/coorg_info.html

http://www.bestindiatours.com/india-travel/coorg-tour.html

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here