காந்தி ஜெயந்தி சிறப்புக் கவிதை

 

அண்ணாகண்ணன்

காந்தியை விரும்புகிறார்கள் மாணவர்கள்
அவர் பிறந்த நாளில்
விடுமுறை கிடைப்பதால்.

காந்தியை விரும்புகிறார்கள் மக்கள்
அவர்
ரூபாய் நோட்டில் சிரிப்பதால்.

காந்தியை விரும்புகின்றன கட்சிகள்
அவர் படத்தைக் காட்டி
அரசியம் ஆதாயம் பெற முடிவதால்.

————

பள்ளியில் மாறுவேடப் போட்டி.
காந்தி வேடம் அணிந்த மாணவனுக்கு
முதல் பரிசு.
காந்தி வேடம் அணிபவர்களுக்குத்தான்
பரிசுகள் கிடைக்கின்றன.

பாடத் திட்டங்களில் காந்தியின் வாழ்க்கை தவறாமல் இடம்பெறுகிறது.
அதை மனப்பாடம் செய்து, மதிப்பெண்கள் வாங்குகிறோம்.
ஆனால்,
நாம் பாடம் பெறுவது தான் இல்லை.

நன்னடத்தைக்காகச்
சத்திய சோதனையைப் படிக்க வேண்டும் என
நீதிபதி தீர்ப்பளித்தார்.
சத்திய சோதனையைப் படிக்கிறார்கள்
நன்னடத்தை தான் வருவதில்லை.

————

கோட்சே காந்தியை நோக்கி மூன்று முறைகள் சுட்டான்
அத்துடன் அது முடியவில்லை
அந்தத் துப்பாக்கிச் சத்தம் இன்னும் ஓயவில்லை.
உலகில் எண்ணற்றோர் அவரைச் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அரசே மதுக் கடைகளைத் திறந்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

போடாத சாலையைப் போட்டதாய்
அந்தச் சாலையைப் பழுது பார்த்ததாய்
விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

நேரில் வாங்கினால்
லஞ்ச ஒழிப்புத் துறை பொறிவைத்துப் பிடிக்கிறது என்று
தெரிந்தவர் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தச் சொல்லும்
புதிய லஞ்சம் புறப்பட்டபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

பாலர் கல்வி முதல் உயர்கல்வி வரை 
லட்சங்களில் நன்கொடையும் கல்விக் கட்டணங்களும்
வசூலித்தபோது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

விளைநிலங்களை விற்றுவிட்டு,
வெளிநாட்டில் தட்டுக் கழுவும்போது,
விவசாயி தற்கொலை செய்துகொள்ளும்போது
காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

என் ஆசிரமத்தில்
உழைக்காமல் யாருக்கும் உணவு கிடையாது
என உரைத்தீர்கள்.
இலவசங்களுக்காக எங்கள் மக்கள் விழுந்தடித்து ஓடிவந்து
நெரிசலில் சிக்கி மாண்டபோது,
பிதாவே, உமது மார்பில் குண்டு பாய்ந்தது.

ஒவ்வோர் ஊழலிலும் கையாடலிலும் கையூட்டிலும்
காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர், நேரத்துக்கு நேரம்
சட்டம் வளைகிறது.
செங்கோல் வளைகிறது
நீதி வளைகிறது.
காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

ஜாலியன் வாலாபாக்கில் பாய்ந்த குண்டுகளை விட அதிகமான குண்டுகள்
காந்தியின் ஒற்றை மார்பைத் துளைக்கின்றன.

இரண்டாம் உலகப் போரில் வீசிய குண்டுகளை விட அதிகமான குண்டுகள்
காந்தியின் பொன்னுடலை மீண்டும் மீண்டும் சிதைக்கின்றன.

————

ஆனால்,
காந்தியின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
அவரின் தத்துவம் இன்னும் தோற்றுவிடவில்லை.
என் வாழ்வே நான் விடுக்கும் செய்தி
என்ற அவரின் வாழ்விலிருந்து
நாம் பெறும் செய்திகள்
இன்னும் தொடர்கின்றன.

உண்மையும் அன்பும்
எளிமையும்
எங்கெல்லாம் ஒளி வீசுகின்றனவோ
அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்.
அவர்களுக்குள் இருந்து சிரிக்கிறார்.

————

ஒரு நாய்க்குட்டி என் காலை நக்கி விளையாடுகிறது
ஒரு மீன்குஞ்சு என்னை மெல்ல கடிக்கிறது
ஓர் இளங்குருவி என் தோளில் அமர்கிறது
ஒரு மொட்டு மெல்ல மலர்கிறது.
பேரமைதியிலிருந்து ஒரு மெல்லிசை பிறக்கிறது.
ஒரு கனவு மெல்ல விழித்தெழுகிறது.

‘எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

என்றானே பாரதி.

அந்த நன்முறைகளில் ஒன்று, காந்தியம்.
நம்மை நடத்தும் தலைவர் காந்தி.
அண்ணல் வழிநடப்போம்
அன்பின் மொழிபடிப்போம்
அகத்தின் விழிதிறப்போம்.

(சென்னை, மயிலாப்பூர், ஏவி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அக்.2, 2012 அன்று இராமலிங்கர் பணிமன்றம் நடத்திய காந்தியக் கவியரங்கில் வாசிக்கப்பெற்றது. தலைமை: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன்)

படங்களுக்கு நன்றி

http://life.time.com/icons/gandhi-glimpses-of-a-legend/#14

http://www.binscorner.com/pages/l/life-in-pictures-mahatma-gandhi.html

பதிவாசிரியரைப் பற்றி

14 thoughts on “காந்தி ஜெயந்தி சிறப்புக் கவிதை

 1. கத்தியின்றி ரத்தமின்றி
  காந்திஜி கண்ட
  சுதந்திர நாட்டிலின்று
  சுதந்திரமாய்ச் சுரண்டல்கள்..

  சுட்டிக் காட்டுவதோடு கவிதையில்
  சுமுகத் தீர்வு சொல்லும்
  அண்ணாகண்ணனுக்கு வாழ்த்துக்கள்…!
                  -செண்பக ஜெகதீசன்…

 2. கத்தியின்றி…. ரத்தமின்றி….. வாங்கிய சுதந்திர நாட்டில் இன்று கத்தியையும் ரத்தத்தையும் கண்கூடாக பார்த்தபடிதான் வாழ்கிறோம். வாழவேண்டியுள்ளது….! இப்படிப்பட்ட சுதந்திரம் அமைய நமது அரசியல்வாதிகள்தான் காரணம்…! காந்தியின் நோக்கம் தவிடுபொடியாகிவிட்டது….! அரசியல்வாதிகள் இனியாவது திருந்த வேண்டும். இனியாவது காந்தியின் வழி நடக்க இன்றைய அரசியல்வாதிகள் முயற்சி செய்ய வேண்டும்.
  விழித்தெழும் கனவை அருமையாக வடித்தெடுத்த அண்ணா கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…! பாராட்டுக்கள்…!

 3. அன்பு கண்ணன் கவிதை மிக அருமை கடைசியில் பாசிடிவாக பார்த்து முடித்தது
  எனக்கு மிகவும் பிடித்தது வாழ்த்துகள்

 4. அன்பின் அண்ணா கண்ணன்,
  என்னிடமிருந்து எளிதில் புகழுரை வராது. உம் கவிதையை உள்வாங்கிப் படித்தேன். உண்மை பேசுகிறது.
  எங்கெல்லாம் காந்தி இருக்கிறாரோ, அங்கெல்லாஒம் ஒளி வீசும்.

 5. என்ன ஐஐஎம் ல் லஞ்சமா ? ஆச்சர்யமாய் இருக்கின்றதே !

 6. அண்ணா கண்ணனின் காந்தி கவிதை அருமை.  படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் தற்கால நிலமையை.   காந்தி அடிகளின் மார்பில் பாயும் குண்டுகள் எத்தனை? இன்னும் பாய்ந்துகொண்டிருக்கின்றன.  அந்தக் குண்டுகள் அனைத்தும் மக்களின் தலைகளின் விழுந்துகொண்டிருக்கும் பேரிடிகள் அல்லவா?   பாராட்டுக்கள்

 7. ஐ.ஐ.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்க, இலட்சக்கணக்கில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. 2010இல் வெளியான இந்தச் செய்தியைப் பாருங்கள்

  ==========================
  http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=6692

  கோல்கட்டா ஐ.ஐ.எம்., கல்விக் கட்டணம் உயர்வு-20-04-2010

  பெங்களூரு மற்றும் ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,களை, தொடர்ந்து தற்போது கோல்கட்டா ஐ.ஐ.எம்., நிறுவனமும், கல்விக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இரண்டு ஆண்டு, முதுகலை டிப்ளமோ மேனேஜ்மென்ட் படிப்புக்கான கல்விக் கட்டணம் 9 லட்ச ரூபாயில் இருந்து 13.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இந்த புதிய கட்டணம் வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படும் என்று கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மின் தலைவர் அஜித் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  ==========================

  கற்க விரும்பும் எல்லோராலும் இத்தகைய கல்விக் கட்டணங்களைக் கட்ட முடியாது. மேலும், இவை கல்வி நிறுவனங்களை ஆடம்பரமாகவும் சொகுசாகவும் நடத்த வைக்கின்றன. காந்தியின் எளிமைக்கு இது முற்றிலும் எதிரானது. எனவே தான் இதையும் குறிப்பிட்டேன். நன்கொடை என நான் குறிப்பிட்டது, பிரி கே.ஜி. படிக்கவும் அதற்கு மேல் உள்ள பல படிப்புகளுக்கும்.

 8. அட்டகாசமான காந்தி கவிதை என் அன்பு அண்ணாகண்ணன்!
   ஒவ்வொரு சொல்லும் அரசியல்(வ்)வா(யா)-தி நெஞ்சில் குண்டுபோல் துளைத்தால்
   என் நாடு என்றோ உருப்பட்டிருக்கும். இன்னும் தாமதம் ஆகவில்லை.
   உமது கவி போய்த் துளைக்கட்டும்!!
   யோகியார்

 9. இத்தனை குண்டுகள் 
  பாய்ந்தும் எப்படி
  சாகமல் இருக்கிறார் அவர்..

  வெறும் ஆறு அடி மட்டும் அவரல்லவே.

  ***
  இப்படி ஒரு வரி உங்கள் வரியிலிருந்து கிளைத்தது.

 10. அண்ணா கண்ணனின் அற்புதமான கவிதை, யதார்த்தத்தை அழகாய் படம் பிடித்து காட்டியுள்ளது.

 11. 1974ல் நான் ஐ.ஐ.எம. ஏ. சேர்ந்தபோது, கட்டணங்கள் 8000 ரூபாய். அதற்க்கும் இண்டியன் பேங்க் கடன் கொடுத்தது. 38 வருடங்களில் ஃபீஸ் 200 மடங்கு அதிகமாகி விட்டது.
  . ஆனால் அதே விலையேற்ற பின்னத்தை வீடு, நகை, சாப்பாடு, மருத்துவம் எல்லாவற்றிலும் பார்க்கலாம். .

  நான் 1976ல் முதலில் வேலையில் சேர்ந்தபோது மாத சம்பளம் 1350 ரூ. அது என் பேட்சில் சராசரிக்கு அதிகமாகவே இருந்தது. இபோது ஐ.ஐ.எம்.ஏ. பாஸ் செய்து முதல் சம்பளம் ரூ 20 லக்ஷம் என கேள்விப்பட்டேன் . வன்பாக்கம் விஜயராகவன்

 12. காந்திஜி ஒருவர்தான் நான் மதிக்கும் அரசியல் தலைவர். அண்ணாகண்ணனின் கவிதை மனதிற்கு இதமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *