முகில் தினகரன்

குடிசைக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு ஒருவித ரசிப்புடன் பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் வீரண்ணன். சற்றுத் தள்ளி அவன் மனைவி சிகப்பி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டே இவனையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

‘த பாருய்யா…மூத்தவ தலைப் பிரசவத்துக்கு வந்து உட்கார்ந்துட்டிருக்கா…எப்படியும் ரெண்டு மூணு நாளுல வலி கண்டிடும்…எனக்கென்னமோ நம்மூரு கவருமெண்டு ஆசுபத்திரி தோதுப்படாதுன்னு தோணுது…பக்கத்தூரு பிரைவேட்டு ஆசுபத்திரிக்குத்தான் இட்டுட்டுப் போவணும்…அதுக்கெல்லாம் காசு பணம் கொஞ்சங் கூடுதலா ஆவும்….அதப் போயி ஏற்பாடு பண்ணுவியா….அத விட்டுட்டு இங்க உக்காந்து பீடி வலிச்சிட்டிருக்கியே…உனக்கு எதுனாச்சும் இருக்கா?’

‘அட ஏண்டி சும்மா கெடந்து கூவுற?…வேலை வெட்டி ஒண்ணும் சரியா கெடைக்கலைடி…மழைக்காலமாப் போனதால் டூர் வர்ற ஜனங்க எண்ணிக்கையும் கொறைஞ்சிடுச்சு…இந்தச் சமயத்துல ‘ரெண்டாயிரம் ஆவும்…மூவாயிரம் ஆவும்’ ன்னா எங்கடி போவேன் நான்?’ வீரண்ணனும் பதிலுக்குக் கத்த,

பாத்திரங்களை அப்படியே போட்டு விட்டு எழுந்து அவனருகே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவன் காதோரமாய் ‘த பாருய்யா…தேவை பெரிய தொகை….அதனால பாவ புண்ணியம் பாக்காம….ஆளிழுக்கற வேலையப் பண்ணிடு…’ என்றாள்.

‘என்னடி சொல்றே?’

‘காலேஜி பசங்க ஆத்துக்கு குளிக்க வர்றாங்கல்ல?…அதுல எவனாச்சும் ஒருத்தனை உள்ளார கொண்டு போய் பாறையிடுக்குல சொருகிடு…அப்புறம் பேரம் பேசி சவமெடுக்கறதுக்குன்னு பெரிய தொகையா வாங்கிடலாம்’

‘சீச்சீ…பாவம்டி அது…’

‘ஆமா…இப்படி பாவ புண்ணியம் பார்த்துட்டே இருக்கறதாலதான் இன்னமும் நீ இப்படியே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிட்டிருக்கே….இதே அந்த ரெங்கனைப் பாரு….எப்படியும் மாசம் ரெண்டு ஆளை இழுத்துடறான்…பெரிய தொகை பாத்துப் போடறான்…’

நிறைமாத வயிறோடு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த மூத்த பெண் சுந்தரி ‘அய்யா…கவருமெண்டு ஆசுபத்திரி ஆவாது…பிரைவேட்டு ஆசுபத்திரிலதான் புள்ளப் பெக்கணும்னு எங்க மாமியா சொல்லியே அனுப்பிச்சிருக்கு…’ என்று அவள் பங்குக்கு சொன்னாள்.

‘க்கும்…நீயே சொல்லு…நானும் சொல்லிச் சொல்லி ஓய்ஞ்சு போயிட்டேன்..’ சிகப்பி மீண்டும் பாத்திரங்களுக்கு நடுவில் சென்றமர்ந்தாள்.

ஒரு நீண்ட மனப் போராட்டத்திற்குப் பிறகு எழுந்து ஆற்றங்கரையை நோக்கி நடந்தான் வீரண்ணன்.

ஆற்றகரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆங்காங்கே வாலிபப் பசங்க கூட்டம் மட்டும் ‘காச்…மூச்’ சென்று கத்திக் கொண்டு தண்ணீரில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

சற்றுத் தள்ளி கூட்டம் குறைவான பகுதியில் ஐந்தாறு இளைஞர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை குறி வைத்தான் வீரண்ணன்.

நீருக்குள் இறங்கி மூச்சடக்கி, ஆழப்பகுதிக்குச் சென்று அந்த இளைஞர்கள் இருக்கும் பகுதியை அடைந்தான். மெல்ல மேல் நோக்கி வந்து, கையில் சிக்கிய ஒரு காலை இழுத்துக் கொண்டு மறுபடியம் ஆழத்திற்குச் சென்றான். பாறைகள் நிறைந்த பகுதி வரை இழுத்துச் சென்றவன் ஒரு பாறை இடுக்கில் அந்தக் காலைச் செருகி விட்டு, நீருக்கடியிலேயே நகர்ந்து நீண்ட தூரம் சென்ற பின் மேலெழும்பி வந்தான். எதுவுமே நடக்காதது போல் நீரிலிருந்து வெளியேறி கரையில் நடந்து சென்ற வீரண்ணனை யாருமே கண்டு கொள்ளவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு அரைக் கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு டீக்கடையில் வந்தமர்ந்து அழைப்புக்காகக் காத்திருந்தான்.

ஒரு டீ…ஒரு பீடி!…ஒரு டீ….ஒரு பீடி!…என மாறி மாறி உறிஞ்சிக் கொண்டிருந்தவனை நோக்கி ஒரு கூட்டம் கத்திக் கொண்டெ ஓடி வர எதுவும் தெரியாதவன் போல் விசாரித்தான். ‘ஏம்பா…என்னாச்சு உங்களுக்கு?…எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க?’

‘அய்யா…அய்யா…எங்களோட வந்த ஒருத்தனைக் காணலை…உள்ளார போயிட்டான் போலிருக்கு….காப்பாத்துங்கய்யா…ப்ளீஸ்…’ கதறியவன் கண்களில் வண்டி வண்டியாய்ப் பீதி.

‘அடடே…’ என்றபடி அவசரமாய் எழுந்து வேட்டியை மடித்துக் கொண்டு வேக வேகமாய் ஓடினான் வீரண்ணன். அந்த இளைஞர் கூட்டமும் கூடவே ஓடி வந்தது.

‘எந்த எடத்திலப்பா குளிச்சிட்டிருந்தீங்க?’ தெரியாதவன் போல் கேட்டான் வீரண்ணன்.

ஒரு இளைஞன் காட்டிய இடத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி ‘அய்யய்ய…அங்க தண்ணிக்குள்ளார நிறைய சுழலு இருக்குதப்பா…அங்க ஏன் போனீங்க?’

‘எங்களுக்குத் தெரியாதுங்கய்யா…நாங்க வெளியூரு’

‘சரி…சரி…எவ்வளவு நேரமாச்சு…ஆளு காணாமப் போயி?’

‘ஒரு….முக்கால் மணி நேரம் இருக்கும்ங்கய்யா’

‘ப்ச்…அப்பக் கஷ்டந்தான்….சொழலுல சிக்கி உள்ளார பாறைல போய் மாட்டியிருந்தா இந்நேரத்துக்கு உசுரு போயிருக்கும்…’

வீரண்ணன் சொன்னதும் அந்த இளைஞர்கள் கோரஸாய் அழ ‘சரி…சரி…இருங்க பாத்துடலாம்…’

அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் முங்கி சில நிமிடங்களுக்குப் பிறகு மேலே வந்து ‘உள்ளார ஆள் இருப்பதாத் தெரியலையே…’ என்றான் வீரண்ணன்.

‘அடிச்சிட்டுப் போயிருக்குமோ என்னவோ?’ கூட்டத்தில் எவனோ ஒருவன் பொத்தாம் பொதுவாய்ச் சொல்ல,

‘அப்படி அடிச்சிட்டுப் போயிருந்தா…இன்னேரத்துக்கு அஞ்சாறு கிலோ மீட்டராவது தாண்டிப் போயிருக்கும்…’

அழுது கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் சற்று தைரியமான ஒருவன் முன் வந்து ‘அய்யா….என்ன ஆனாலும் சரி…எவ்வளவு பணம் ஆனாலும் சரி…எங்களுக்கு பாடிய எடுத்துக் குடுத்துடுங்க…இப்பத்தான் அவங்க பேரண்ட்ஸ்க்குப் போன் பண்ணியிருக்கேன்…அவங்க வந்திட்டிருக்காங்க….’

‘ஆஹா…அப்ப பெரிய தொகை வந்திட்டிருக்கு…சரி…அந்தப் பையனைப் பெத்தவங்க வர்ற வரைக்கும் தேடுற மாதிரி பாவ்லா பண்ணிட்டு அவங்க வந்தப்புறம் பாடிய எடுத்து காசு வாங்கிடணும்’ மனசுக்குள் கணக்குப் போட்டான் வீரண்ணன்.

ஆனால் இதையெல்லாம் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டவன் அதே கணக்கை வேறு விதமாய்ப் போட்டுக் கொண்டிருப்பது பாவம் அவனுக்குத் தெரியாது.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகே அவர்கள் வந்து சேர்ந்தனர். வந்தவுடன் தாயும் தகப்பனும் கதறிய கதறல் வீரண்ணனை சந்தோஷப்படுத்தியது. ‘பய மேல ரொம்ப பாசம் போலிருக்கு…பாடிய எடுத்துக் குடுக்க எவ்வளவு கேட்டாலும் நிச்சயம் தருவாங்க’

சிறிது நேரத்திற்குப் பிறகு, பாவ்லா போதுமென முடிவு செய்த வீரண்ணன் தண்ணீருக்குள் முங்கி தான் செருகி வைத்த இடத்திலிருந்து அந்த உடலை இழுத்துக் கொண்டு மேலே வந்தான்.

கரையில் தூக்கி வந்து போட்ட அந்த சடலத்தைப் பார்த்த வீரண்ணன் அதிர்;ந்து போனான். அந்த இளைஞனுக்கு வலது கை சிறிய வெள்ளரிப் பிஞ்சு போல் சூம்பிப் போய் தோளிலிருந்து அரையடியெ இருந்தது. முன் பகுதியில் பேருக்கு இரண்டு குட்டி விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

முதன் முறையாக வீரண்ணனுக்கு மனசு வலித்தது.

‘ஏம்பா! இப்படி இருக்கற பையன் ஏனப்பா தண்ணில எறங்கணும்?’ தன் அங்கலாய்ப்பை வீரண்ணன் கேட்டே விட,

‘இந்த எடத்துல ஆழமில்லைன்னு சொன்னாங்கய்யா…அத நம்பித்தான் நாங்க இவனை எறங்க அனுமதிச்சோம்…’

சடலத்தைச் சுற்றி அமர்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தவர்களிடம் ‘நான் கௌம்பனும்…என்னை கவனிங்க’ வீரண்ணன் சொன்னான.

மூவாயிரம் ருபாய் கைமாறியதும் புறப்பட்டான்.

‘ச்சே….கை சூம்பிப் போன பையனை இழுத்திட்டுப் போய்ச் சொருகிட்டோமே…’ வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த உறுத்தல் வீரண்ணனை கொல்லாமல் கொன்றது.

குடிசையில் யாரும் இல்லாதிருக்க தெருவுக்கு வந்து தலையில் துணி மூட்டையோடு சென்று கொண்டிருந்த வண்ணாத்தியிடம் கேட்டான்.

‘அடக் கெரகமே….தெரியாதா உனக்கு?…உன்ர மவளுக்கு பிரசவ வலி வந்து…பிரைவேட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க…பணங் கட்டுறதுக்கு உன்னையக் காணோம்னு வலை போட்டுத் தேடிட்டிருந்தாங்க…சீக்கிரமா ஓடு’

ஓடினான்.

இன்னும் பிரசவம் ஆகவில்லை. பணம் கட்டி விட்டுக் காத்திருந்தனர்.

நொடிகள் நிமிடங்களாக….நிமிடங்கள் மணியாக கரைந்து கொண்டிருக்க…

‘ஆம்பளக் கொழந்த பொறந்திருக்கு’ நர்ஸ் ஒருத்தி வந்து சொன்னாள்.

‘அப்பாடா….’ நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அறைக்குள் சென்று தொட்டிலில் கிடந்த அந்த ஆண் குழந்தையைப் பார்த்த வீரண்ணனின் தலை ‘கிர்’ரென்று சுழன்றது.

ஒரு கை சூம்பிப் போய் பாதியே இருக்க, முன்பகுதியில் பேருக்கு இரண்டே இரண்டு குட்டி விரல்கள் ஒட்டியிருந்தன.

(முற்றும்)

பின்குறிப்பு: எங்கள் கோயமுத்தூரில், நகரத்தை விட்டுத் தள்ளி இருக்கும் ஒன்றிரண்டு நீர் நிலைகளில் சில கும்பல்கள் செய்து கொண்டிருக்கும் இந்த கொடூரச் செயல் பற்றி கிட்டத்தட்ட பல பேர் அறிந்திருந்த போதும், மாதம் ஒன்றிரண்டு இளைஞர்கள் பலியாகிக் கொண்டுதானிருக்கின்றனர்.

இக்கதையைப் படித்த பிறகு கொஞ்சமேனும் விழிப்புணர்வு ஏற்பட்டால் அது போதும் எனக்கு.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.