தமிழ்த்தேனீ

யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள்.

அப்பப்பா  என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய்  சோகை படிந்த  தேவதையின் ஓவியம் கருமேகத்தின்  இடைவெளியில்  மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது  தோன்றி மறைவது போல்  அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில்  ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின்  சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அரசல் புரசலாக அவள்  வாழ்க்கை அம்பலத்துக்கு வந்தது. பார்யா ரூபவதி சத்ரு என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பழமொழி உண்மையானால் அவள் கணவன் கண்களில் அல்லவோ சோகம் தெரியவேண்டும், இங்கே மாறாக இருக்கிறதே?

மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் ரமேஷ்.

அவள் குழந்தையிலேயே அழகாக இருந்ததால் அவளுக்கு ரூபா என்றே பெயரிட்டிருந்தனர் அவளுடைய பெற்றோர்.

காலைத் தொடும் நீண்ட கருகருவென்ற  கேசம், தாமரைத் தடாகத்திலே நீந்தும் மீனைப் போன்ற அகலமான கரிய விழிகள், தீர்மையான நாசி, சற்றே இதழ் விரிந்திருக்கும் ரோஜா மொட்டுப் போன்ற உதடுகள், அசாத்தியமான, அலங்காரமான வளைவுகளுடன் மோவாய், அதற்கும் கீழே சங்குக் கழுத்து, இதற்கு மேலும் வர்ணிப்பது பாவம் என்று தோன்றியது ரமேஷுக்கு. என்ன இருந்தாலும் அவள் மாற்றான் தோட்டத்து மலர்.

அந்த மலரை வாடாமல்  மெல்லிய கைகளின் அழுத்தமும் இல்லாமல் இடைவெளிவிட்டு  பொத்தி வைத்துக்கொண்டு,  காலம் முழுவதும்   வைத்துக்கொண்டு காப்பாற்றி, அவள் முகத்தில் ஆனந்த மயமான புன்னகையை வரவழைத்து, அவள் முகத்தில் சிரிப்பைத் தவிர சோகத்தின் நிழலே விழாதவாறு,   ஒரு தேவதையை உபாசனை செய்வது போல், அவளை உபாசித்தால்தான் தன் ஜென்மம் கடைத்தேறும்  என்று உணர்ந்தான் ரமேஷ். 

எப்படி இது சாத்தியமாகும்? எப்படி அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிப்பது என்பதே சிந்தனையாய் மூளைக்குள் சுழன்று சுழன்று அவனை அசத்திக்கொண்டிருந்தது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்னும் யோசனையில் இருந்த அவனுக்கு பலவிதமான சந்தேகங்கள். அவள் இவனை நம்புவாளா? ஏற்கெனவே ஒரு ஆண்மகனால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்னின் மனநிலையில் இன்னொரு ஆண்மகனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பாளா? அவள் நம்பிக்கையை எப்படிப் பெறுவது என்றெல்லாம் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக மூளைக்குள் வலம் வரத் தொடங்கின.

ஒரு மனிதனுக்கு அழகான மனைவி அமைவது வரம். அப்படி வரம்போல் அமைந்த அழகான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு வாழாமல், எப்படி ப்ரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு தானும் நிம்மதியில்லாமல் அந்த தேவதையையும் நிம்மதியாக இருக்க விடாமல் இப்படி இருக்கிறார்கள் மனிதர்கள் என்று  நினைத்தால் ஆத்திரம் வந்தது ரமேஷுக்கு.

எப்போதுமே மனிதன் கிடைக்காதவரையில் அது கிடைக்க ஏங்குகிறான், ஆனால் அது கிடைத்ததும் அதன் மதிப்பு தெரியாமலே வாழ்கிறான். எப்போதுதான் இவர்கள் திருந்துவார்களோ.

சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும்.  இவன் திருந்தினால் என்ன, திருந்தாவிட்டால் நமக்கென்ன, கண்ணுக்கெதிரே துன்பப்படும்  இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது.

அவன் எதிர் பார்த்த வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக அவனைத் தேடி வந்தது.

ஆமாம் வாசலில் யாரோ அழைப்பு மணியை அடிப்பது கேட்கவே, ஜன்னல் வழியே பார்த்தவன் அதிர்ந்தான். அந்த அழகுத் தேவதை அவன் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். ஓடிப்போய்க் கதவைத் திறந்து, “என்ன வேண்டும் வாருங்கள் உள்ளே” என்றான். 

“அதற்கெல்லாம் நேரமில்லை என் புருஷனுக்கு திடீரென்று நெஞ்சு வலி எனக்கு பதட்டமாக இருக்கிறது” என்று பதறினாள் அவள். இதோ ஒரு நொடியில் வருகிறேன் என்று கூறிவிட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு, அவனுடைய காரை எடுத்து ஓட்டிக்கொண்டு வந்து  அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு,  கைத்தாங்கலாய் அவள் புருஷனைக் கூட்டிவந்து காரில் உட்காரவைத்துவிட்டு, அவளையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று,  அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு….

அவள் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். “நீங்கள் கவலைப்படாதீர்கள், ஒன்றும் ஆகாது”  என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.

“நீங்கள் அவர்மேல் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறீர்களே அவர் ஏன் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்” என்றான்.

“என்னை நீங்கள் நீ என்றே அழையுங்கள்”, என்றாள் அவள்.

“என் தலைவிதி அப்படி இருக்கிறது, நான் அழகாகப் பிறந்ததுலே என்னோட தப்பு என்ன இருக்குன்னே புரியலை. எப்போ பாத்தாலும் என்னை சந்தேகப் பட்டுக்கொண்டே இருக்காரு. நான் எப்பிடி நிரூபிக்கிறதுன்னே புரியலை” என்று கேவினாள் அவள்.

“நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே, உங்களோட அருமை அவருக்கு புரியலை. எனக்கு மட்டும் உங்களை மாதிடி ஒரு பொண்ணு கிடைச்சிருந்தா அப்பிடியே தங்கத் தாம்பாளத்திலே வெச்சுத் தாங்குவேன்” என்று கூறிவிட்டு  அவளையே பார்த்தான் ரமேஷ்.

அவள் அவனை நோக்கி ஒரு விரக்திப் புன்னகையை வீசிவிட்டு “எப்படி உங்களால் இவரிடமிருந்து என்னைப் பிரித்து அழைத்துப் போகமுடியும், இதெல்லாம் நடக்கிற காரியமா” என்றாள்.

“நீ மட்டும்  சரின்னு சொல்லு ரூபா, நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல். இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணிர்தான் வரணும், அதுக்கு நான் பொறுப்பு” என்றான் தீர்மானமாக.

“இவரைப் பத்திக் கவலைப்படாம, இவர் கண்ணிலேயே அகப்படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இது சத்தியம்” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

அவள் இவன் மேல் சாய்ந்து அழத்தொடங்கினாள், அவளை தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்து, “இனிமேல் உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீரமட்டும்தான் வரணும்.  நான் பாத்துக்கறேன்” என்றான் ரமேஷ்.

சொன்ன வாக்கைக் காப்பாற்ற, தகுந்த இடமாகப் பார்த்து அவளை  பெங்களூருக்கு அழைத்துப் போய் ஒரு பெரிய வீட்டில் வாழத் தொடங்கினர் இருவரும். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

இவர்கள் இருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தான் கமலேஷ், யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள், அப்பப்பா  என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய்  சோகை படிந்த  தேவதையின் ஓவியம் கருமேகத்தின்  இடைவெளியில்  மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது  தோன்றி மறைவது போல்  அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில்  ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின்  சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அவன் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றியது. சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும், கண்ணுக்கெதிரே துன்பப் படும்  இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது. மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் கமலேஷ்.

ஒரு நாள் அவள் மட்டும் தனியாக இருக்கும்போது “உன் புருஷன் ரமேஷைப்  பத்திக் கவலைப்படாம நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல் ரூபா, இந்த ஆளு  கண்ணிலேயே படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீர்தான் வரணும் அதுக்கு நான் பொறுப்பு. இது சத்தியம்” என்றான் தீர்மானமாக உணர்ச்சி வசப்பட்டு  கமலேஷ் . 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மாற்றான் தோட்டம்

  1. இத்தனை சிக்கல்கள் எனக்கு புரிவதில்லை. ரமேஷ்/கமலேஷ் இடங்களில் திவ்யாவையும், மந்திராவையும் வைத்து கற்பனை செய்து பார்த்தேன். நம்மால் தாங்காது என்று தமிழ்த்தேனீக்குத் தனி மடல் அனுப்பிவிட்டேன். 

  2. நல்லா இருக்கு போங்க.  வாலு போச்சு கத்தி வந்துது கதையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *