நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-18

பெருவை பார்த்தசாரதி

நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலைக்கும், நிகழ்ச்சிக்கும், செயலுக்கும் ஒருவரது உதவியை நாடி அவரிடம் ஆலோசனை பெற்று எடுக்கின்ற காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்கும் யுக்தியை, நமக்கு முன் வாழ்ந்தவர்களது அனுபவங்கள் மூலம் அறிந்து கொண்டு, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகின்ற ஒருவர் லெளகீக வாழ்க்கைக்கு வழிகாட்டுவது போல், வேறு யாரெல்லாம் நம் ஆனந்த வாழ்க்கைக்கும், ஞான மார்க்கத்தும் வழிகாட்டுகின்றனர்?என்பதை நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், புராண, இதிகாசங்களில் இடம் பெறும் அறநெறிகள் மூலம் பாடம் பெறமுடியும் என்பதே இத்தொடரின் முக்கிய குறிக்கோள். ஆலோசனை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் அவசியமாகி, வாழ்வின் இறுதிக் கட்டம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தொடர்ந்து உதாரணங்கள், மேற்கோள்கள் மூலம் வலியுறுத்துவதே இத்தொடருக்கு இன்னொரு சிறப்பு.

அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் கடமைகளுள் ஆன்மீகத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அன்றாடம் நாம் சந்திக்கும் இன்ப, துன்பப் படிகளைக் கடந்து வரும்போது, ஏதாவதொரு இடத்தில் தடைக்கல்லாக ஏதோ ஒரு துன்பம் நம்மைத் தடுக்கும்போது, நமக்கு ஆறுதலாக, அருமருந்தாக அந்த நேரத்தில் உதவுவது ஆன்மீகம். ஆனாலும் ஆன்மீகத்தை முழுமையாக அனுபவித்து உணர முடியாமல் திணறும்போது, ஞான வாழ்க்கைக்குக் வழிகாட்டுகின்ற ஆன்மீககுருவின் உதவியைப் பெற தொடர்ந்து ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்.

உலகில் வாழும் மனிதர்கள் எவருமே துன்பத்தோடும், வருத்தத்தோடும் வாழ விரும்புவதில்லை. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நீடித்திருக்க வேண்டும், சந்தோஷம் எங்கே கிடைக்கிறதோ அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் யாராவது மறுக்கப் போகிறார்களா என்ன?…. ஆக வாழ்க்கையில் எவ்வளவு பொருளாதார வசதிகள் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியும் சந்தோஷமும் இதில் கலந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மற்றவர் உதவியுடன் இதைப் பெறுவதற்கான முயற்சியை வாணாள் முழுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்கள், தொழிலதிபர்கள், தங்கள் வேலையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வருடத்தில் சில நாட்கள் நிம்மதி தேடி ஆன்மீகம் தழைத்திருக்கும் இமாலயம், ஹரித்வார், ரிஷிகேசம், காசி போன்ற புண்ணியத்தலங்களுக்குச் சென்று ஆன்மீகக்குருக்களிடம் அறிவுரை பெற்று வருவதை நாம் படித்திருக்கிறோம். குருவைப் பற்றிய சிந்தனையைத் தொடருவோம்.

இதிகாசங்களில் குருவாக வருணிக்கப்படுபவர் மும்மூர்த்திகளுக்கும் சம்மானவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “குருபிரம்மா குரு விஷ்ணோ, குருதேவோ மஹேஸ்வரஹா, குரு சாக்ஷாத் பரப்ரும்மம், குரவே நமஹா”…குருவே பிரம்மா, அவரே விஷ்ணு, மஹேஸ்வரன் எல்லாமும், ப்ரப்பிரும்மும் அவரே என்கிறது வேத உபநிஷத்துக்கள். இதிகாசங்களில் கூறப்படும் அறநெறிகளை எடுத்துச் சொல்லி, உலகை நல்வழியில் நடத்திய இத்தொடருக்குப் பொருந்துகின்ற வகையில் அமைகின்ற ஒரு சில குருமார்களைப் பற்றி இந்த நேரத்தில் சற்று மீண்டும் நம் நினைவுக்குக் கொண்டுவந்து பிறகு தொடருவோம்.

அறவழியில் ஆட்சி செய்ய, இஷ்வாகு வம்சத்தின் குலகுருவாக ‘வசிட்டமுனி’, தசரதனுக்கு அவ்வப்போது நல்லுபதேசங்களைத் தந்தருளினார்.

திருதராஷ்டிரனின் தீய எண்ணங்களைப் போக்கி, அவரை நீதி வழியில் நல்வழிப்படுத்த விதுரன் தன் வாழ்நாளைச் செலவிட்டான். ‘விதுரர்’ உபதேசித்தது அனைத்தும் ‘விதுர நீதி’ என்ற பெயரில் புத்தக வடிவில் இன்றும் உலகுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

தன்னை யார் என்று அறிவித்து, தாம் அடைந்த முன்வினைகளைக் களைந்து, சந்தத்தினுள் சதாசிவத்தைக் காட்டி, உள்ளுக்குள் இருக்கும் ஞானக் கனலை எழுப்பி, கருத்தறிவித்து தனக்கு ‘விநாயகப் பெருமான்’ அருள் புரிந்ததாக அவ்வை மூதாட்டி விநாயகர் அகவலில் சொல்லியதைப் படித்திருக்கிறொமல்லவா?…

மாபாரதத்தில், ‘தருமன்’, தனது மற்ற சகோதரர்களுக்கு சகோதரராக மட்டுமல்லாமல், சில சமயம், அவர்களுக்குக் குருவாக இருந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சகோதரர்களையும், நாட்டு மக்களையும் அறவழியில் செயல் பட வைத்திருக்கிறார்.

ஆஸ்திகப் பெருமக்களுக்கு என்றுமே மானசீக குருவாக திகழ்பவர்கள் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன், ஸ்ரீ மத்வர், ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ விவேகானந்தர் போல இன்னும் பலர் இருக்கின்றனர். இன்று இவர்கள் நிலவுலகில் இல்லையென்றாலும், பல தரப்பட்ட மக்கள் தங்கள் மனதில் மானசீக குருவாக இம்மஹான்களையெல்லாம் வரித்துக் கொண்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. கோடானுகோடி மக்களுக்குக் குருவாக இருந்த இவர்கள் அனைவருக்குமே கூட குருவாக அமைந்தவர்களும் உண்டு.

பதினெட்டு முறைக்கு மேல் இடைவிடாமல் யாத்திரை சென்று, சபரியில் மணிகண்ட சுவாமியை தரிசிப்பவர்கள், குருசாமி பதவிக்குத் தகுதி அடைந்தவராகி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து விடும் தகுதியை அடைகிறார். தன் வழி நடப்பவர்களை நெறிப்படுத்தி, உடலுக்குக் கல்லினாலும், முள்ளினாலும் உண்டாகும் பாதகம் தெரியாமல், நெஞ்சத்துக்கு இதத்தைக் கொடுத்து இறைதரிசனம் செய்துவிக்கும் பணியினால், ஐயப்பகுருசாமிக்கு மட்டுமல்ல, அவரைப் பின்பற்றுபவருக்கும் அது ஆத்ம திருப்தியை அளிக்கிறதல்லவா?

இன்றைய உலகம் ஒரு அதிஅற்புத உலகம். ஒவ்வொரு பொருளிலும் நாம் ஒரு பாடத்தை ஒருவர் மூலம் கற்றுக் கொள்ள முடியும். தினமும் தொலைக்காட்சியைத் திறந்தால், எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கு இடையில் யாராவது ஒரு மருத்துவர் உடல் வியாதிக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருப்பார். இன்னொருவர் ஆன்மீக விஷயங்களுக்கு விளக்கம் அளித்து மன அமைதிக்கு வழி காட்டுவார். வேதங்களையும் இதிகாஸங்களையும், உபநிஷத்துகளையும் கற்றுத் தேர்ந்து, அதிலுள்ள சாரங்களைப் பக்குவமாகத் தெளிவு பட உரைக்கத் தெரிந்த ஒருவரே, அனைவராலும் ஆன்மீகக்குருவாக எங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார். அறநெறிகளைத் தவறாக உபதேசித்து, ஆலோசனைகள் எதிர்மறையாக அமைந்தால், குருவின் பதவி அங்கே கேள்விக்குரியதாகி விடுகிறது… அதேபோல

தனது வாழ்க்கைக்குச் சரியான வழிகாட்டுதலை அளிக்க முடியாத குருவைத் தேர்ந்தெடுத்தாலும் தவறு நேர்ந்து விடும் என்பதை மகாபாரதத்தின் மூலம் அறிய முடியும். அனுவமும், பக்குவமும், திறமையும் ஒருங்கே அமைந்த துரோணாச்சார்யர் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் குருவாக இருந்தாலும், அறிவும், பக்குவமும் இல்லாத வஞ்சக எண்ணம் கொண்ட சகுனியைத்தானே இன்னொரு குருவாகத் துரியோதனன் வரித்துக்கொண்டு அவர் வழி நடந்து அழிவைத் தேடிக்கொண்டான். துரியோதனின் அறியாமையை நீக்கும்படி ஒரு போதும் சகுனி செயல்பட்டதில்லையே!…..

குருவின் தகுதியைப் பற்றிய கருத்தைத் தனக்கே உரிய பாணியில் ரத்தினச்சுருக்கமாக நான்கு வரிப்பாடலில் திருமூலநாயனார் அவர்கள் அருளிய அருமையான தமிழ்ப்பாடல் ஒன்று:- தகுதிகள் இல்லாத ஒருவரைக் குருவாக அடைந்தால், என்ன நடக்கும் என்பதை மூவாயிரம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த திருமுலர், எளிய தமிழில் யாவரும் புரிந்து கொள்ளும்படி இயற்றிய ‘திருமந்திரம்’ நமக்குத் தெளிவுபட உரைக்கிறது.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடி
குருடுங் குருடுங் குழிவிழு மாறே

அறிவும், பக்குவமும் இல்லாத ஆச்சார்யனைத் (குருவினை) தேர்ந்தெடுத்தால், வாழ்வில் கெடுவர். அறியாமயைக் களையும், நீக்கும் குருவினை ஒரு போதும் இவர்கள் பெற மாட்டார்கள். குருவின் தகுதி இப்படி இருந்தால் என்ன நடக்கும்?.. என்பதற்கு ஒரு உதாரணமும் சொல்லுகிறார். ஒரு குருடனைக் குருவாகத் தேர்ந்தெடுத்த மற்ற இரண்டு குருடர்கள், கூத்தாட்டம் போட்டு, குருட்டாட்டம் ஆடி, முடிவில் கண் தெரியாமல் படுகுழியில் விழுவதைப் போல அமைந்துவிடாமல், குருவைத் தேர்ந்தெடுப்பதற்கு உள்ள அவசியத்தை, ஒரு நான்கு வரிகளில் எளிய பாடலால் விளக்குகிறார். குருவின் தேடுதல் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற உட்கருத்தை இதை விட அழகாக யாரால்?…. நயம்பட விளக்க முடியும். எப்பொழுதுமே சித்தர் பாடல்கள் மேலோட்டமாகப் புரிவது போல் இருந்தாலும், உட்கருத்தை அறிந்து பொருள் கொள்ள வேண்டுமென்று படித்திருக்கிறேன்.

குருவின் வழிகாட்டல் வாழ்க்கைக்கு அவசியமா?….. என்ற கேள்வியை முன் வைப்பவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு சிறிய கதை மூலம் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

ஒரு குருகுலத்தில் படிப்பு முடிந்த பிறகு சீடர்கள் ஒவ்வொருவரும் கல்வியில் முழுமை அடைந்திருக்கிறார்களா என்பதைப் பரீட்சித்துப் பார்ப்பது குருவின் கடமை அல்லவா!….

குருகுலத்தை விட்டுச் செல்லும் சீடர்களிடம்…….
“வாழ்க்கையில் மிக மிக அரிதாகக் கிடைப்பதும், மதிப்பு வாய்ந்ததும் எது?… கேட்கிறார் குரு.

தங்கம்தான் மிக அரிதாகக் கிடைப்பது,
இல்லை வெள்ளிதான்,
இல்லை, இல்லை வைரம், நவரத்தினம் என்று ஒவ்வொரு சீடரும் ஒரு பொருளைச் சொல்லுகிறார்கள்.

குருவுக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை ஆதலால், மறுபடி ‘வேறு ஏதாவதொன்று சொல்ல முடியுமா’?… என்று கேட்கிறார்.

கடைசியில் ஒருவன் “வாழ்க்கையில் மிக மிக அரிதாகக் கிடைப்பதும் மதிப்பு வாய்ந்ததும் ஒன்றே ஒன்றுதான் அது உண்மையான “குருவின் வழிகாட்டல்”.

ஏன் அப்படி உறுதியாகச் சொல்கிறாய்?… குரு

“நான் எங்கு தேடியும் எனக்கு உண்மையான ‘குரு’ கிடைக்கவில்லை, கடைசியில் இங்கு கல்வி பயின்றதில் குரு போதனையால் அனைத்துக் கலைகளிலும் பூரண தேர்ச்சி பெற்றேன். நம்மிடத்தில் இருக்கும் திறமைகளை நாம் அறியாவிட்டாலும், அதை அறிந்து வெளிக்கொணர்வது, நமக்குக் குருவாக அமைவதைப் பொருத்தே அமையும் என்பதை அறிந்தேன். எல்லாம் எளிதாகக் கிடைக்கும் இந்த உலகத்தில், ஒருவருக்கு மிக மிக அரிதாகக் கிடைப்பதும், அமைவதும் ‘உண்மையான குருவும் அவரது போதனையும்’ என்பதை இங்கு உணர்ந்தேன்”.

‘சீடனின் விரிவான விளக்கத்தால்’ குருவுக்கு திருப்தி ஏற்பட்டது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-18

  1. மகிழ்வுடன் படித்தேன், திரு.பெ.பா. திருமூலரின் உட்கருத்தின் மற்றொரு பரிமாணம்:
    குரு-சிஷ்ய பாவம் ஒருமுகம் கொண்டது, இரண்டற இணைந்து விட்டால் – ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், ஸ்வாமி விவேகானந்தர் போல, கிருஷ்ணபரமாத்மாவும், அர்ஜுனனும் போல. அது நண்பர்களாக -போஜராஜனும், காளிதாஸனும் போல அமைவதும் உண்டு. காந்தி-நேரு போல, வினா-விடை போலவும் உண்டு.

  2. குரு சிஷ்ய பாவம் பற்றிய தங்களது கருத்துக்களை ரத்தினசுருக்கமாக ஓரிரு வார்த்தைகளின் மூலம் கருத்துச் சொல்லியது போல்,  தொடர்ந்து நல்ல விஷயங்களை எழுத ஊக்கமளிக்கும் அய்யாவின் ஆசியை இனி வரும இதழ்களிலும்  பெற விழைகிறேன். நன்றி அய்யா.

  3. என்னதான் நாம் புத்திசாலியாக இருந்தாலும் நம்மிடம் உள்ள திறமைகளை நம்மை அறியாமல் யார் வெளிகொண்டுவருகிரர்களோ அவர்களை குருவாக ஏற்று கொள்வதே சிறப்பானதாகும் என்ற உண்மையை அருமையாக சொல்லியுள்ள பெருவை.பார்த்தசாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published.