தேவாரத் தலங்கள் சில (பகுதி-4)

நூ.த.லோகசுந்தரம்

அன்பில் ஆலந்துறை

‘தேவாரத் தலங்கள் சில’ எனும் கருத்தில் திருச்சி அருகு திருப்பட்டூர் (பிடவூர்) ஊட்டத்தூர்(ஊற்றத்தூர்) லால்குடி (தவத்துறை) என மூன்று வைப்புத்தலங்கள் பற்றி நாம் பார்த்தோம். இப்போது லால்குடிக்குக் கிழக்காக 5 கி மீ ‘அன்பில்’ எனும் சிற்றூரில் அமைந்த தொன்மை மிகு, ஆலந்துறையைக் காண்போம்.

இஃது சம்பந்தர் ஒன்று (தக்கராகம் – 1.33 – ” கணை நீடெரி மாலரவம் வரை வில்லா”), அப்பர் ஒன்று (குறுந்தொகை – 5.80 – ” வானம் சேர்மதி சூடிய மைந்தனை “) என இரு தேவாரமுள்ள, நீர்வளமிகு, பொழில்சூழ், சோழநாட்டு, காவிரி வடகரைத், தலம்.

தேவாரத் தலமாம் புளமங்கையும் ‘ஆலந்துறை’ எனக் காண்கின்றது. அதனருகே உள்ள சக்கரப்பள்ளி இறைவரும் ‘ஆலந்துறையார்’ ஆகிறார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருந்தகை ஞானசம்பந்தர் கொங்குநாடு வழிபட்டுத் திரும்பும் வழியில் காவிரித் தென்கரை திருப்பராய்த்துறை அருகு செந்துறையுடன் ஓர் ‘ஆலந்துறை’ வழிபட்டு “கற்குடி சேர வந்தார்” என ஆவணப்படுத்தியுள்ளார்.

வடநாடு முழுதும் நேரடி சென்று வழிபட்டு ஆங்கமைந்த சோதிலிங்கத் தலங்களுடன் வடகோடி ‘தாவி’ நதியையும் குறித்த அப்பரடிகள் காசுமீரத்து அமைந்த அமர்நாதம் எனப் பெரும் பேர் பெற்ற இயற்கையாகப் பனி குயில்கின்ற தலத்தை ஆலந்துறை என அடைவு திருத்தாண்டகத்தில் குறித்துள்ளார்

“பதினோறாம் திருமுறை பரணர் சிவபெருமான் திருவந்தாதியிலும் ஒர் ஆலந்துறை காட்டப்பட்டுள்ளது”

‘ஆலம்’ எனும் சொல் நீரினைக் குறிக்கும். ‘ஆலங்கட்டி’ மழை, ஞாயிறு-திங்களை சுற்றித் தோன்றும் ‘ஆலவட்டம்’ எனும் சொற்களும் நீர் வழிப் பிறந்தவைகளே. நீர் எப்போதும் நிலைத்து நின்று மண்வாகு இளகிய நிலங்களிலும் சாய்ந்து விடாமல் நிற்க பரிணாம வளர்ச்சியால் 10 முழ உயர குறுக்குக் கிளைகளினின்றும் காற்று வழியில் விழுது(வேர்)களை வீழ்த்தி அங்கும் நிலைத்து வளரும் திறம் பெற்றதால் ஆல்=நீர் வழி அப்பெயர் பெற்றது ஆலமரம். ஓர் நீர்நிலையை அணித்தே ஆலத்தூர், ஆலங்கானம், ஆலக்கோயில், ஆலப்பாக்கம், ஆலத்துறை, ஆலக்குடி என ஊர்கள் அமைந்தன. ஆலங்காடு, ஆலம்பொழில் என்பனவோ ஆலமரம் பற்றி வழங்கியவை.

அன்பிலுக்கு திருச்சியிலிருந்தே நகரப்பெருந்து உள்ளது. ஊரினுள் கோயிலின் மிக அருகேயே இறங்கலாம். சிற்றூராதலால் காபி, சிற்றுண்டிக்கும்/உணவிற்கும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும். எனினும் இலால்குடிதான் அருகுள்ளதே. நம் அன்பில் ஆலந்துறைக் கோயில் சிறிதாயினும் சீர்மிகு 5 நிலை 5 கலச வெளிச் சுற்றுக் கோபுரம் தொன்மையான பழங் கல்வெட்டுகளுடைய முற்றுப் பெறாத உள்சுற்று பழங்கோபுரம், கல்வேலைப்பாடு சிறந்த நந்திகளும் இருகையுடன் காணும் வாயில் காப்போனும் கற்றளியாக திருஉண்ணாழிகைகளும் திருச்சுற்று மண்டபங்களும் தலத் தேவாரக் கல்வெட்டும் திருவரங்கம் கோயிலின் உபகோயில் எனக்குறிக்கும் தாரண வைகாசி 27குடமுழுக்கினை அறிவிக்கும் கற்பலகையும் காணலாம்

இறைவர்=ஆலந்துறைநாதர்/ இறைவி=அழகம்மை/ தலப்பயிர் = ஆல்/ தூநீர்= காவிரி/ (கொள்ளிடம் – வடகரை). மக்களரவம் ஏதுமின்றி அமைதியாக தியானம் செய்நிலையிலும் நம் ஆலந்துறையாரை வழிபடலாம். முன் குறித்தபடிப் பாடல் பெற்ற வடகரை மாந்துறை லால்குடிக்கு சிறிதே மேற்குள்ளதால் மிக எளிதாக மூன்றினையும் ஓர் பகலிலேயே வழிபடலாம்.

‘பொருள்வழித் திருமுறை’=’அன்பில்’ பாடல்கள் தொகுப்பினை இணைப்பில் காணலாம் என்கருவி வழி வெளிப்பட்ட படங்களையும் கண்டு, தேர்ந்து ஓர் நாள் வழிபடலாமே.

திருச்சிற்றம்பலம்

இணைப்பு

நமசிவாய

பொருள்வழித் திருமுறை © இதனில் அன்பில் திருமுறை ©

திருமுறை தொகுப்பாளன் – நூ.த.முத்து முதலி மயிலை

1
வன்புற்று இள நாகம் அசைத்து அழகாக
என்பில் பல மாலையும் பூண்டு எருதேறி
*அன்பில்* பிரியா தவளோடும் உடனாய்
இன்புற்று இருந்தான்தன் இடைமருது ஈதோ 1.32.6
சம்பந்தர் தேவாரம்

2
எழிலார் இராச சிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றைக்
குழலார் கோதை வரைமார்பில் குற்றாலத்து எம் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ணத்து அம்மானை *அன்பில்* அணைத்து வைத்தேனே 4.15.7
அப்பர் தேவாரம்

3
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே *அன்பினில்* விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 8.538
மணிவாசகர் திருவாசகம்

4
வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் *அன்பில்*
செல்லிகைப் போதின் எரியுடையோன் தில்லை அம்பலம்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்டு ஊதவிண் தோய்பிறையோடு
எல்லிகைப் போதியல் வேல்வயல் ஊரற்கு எதிர் கொண்டதே 8/2.364
மணிவாசகர் கோவையார்

5
தானொரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் *அன்பில்* நின்றானே 10.275
திருமூலர் திருமந்திரம்

6
அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரானவன்
அன்பின் உள்ளாகி அமரும் அரும்பொருள்
அன்பின் உள்ளார்க்கே அணைதுணை ஆமே 10.279
திருமூலர் திருமந்திரம்

7
கண்டேன் கமழ்தரு கொன்றையினான் அடி
கண்டேன் கரியுரியான்தன் கழல் இணை
கண்டேன் கமலமலர் உறைவான் அடி
கண்டேன் கழலதுஎன் *அன்பினுள்* யானே 10.285
திருமூலர் திருமந்திரம்

8
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறிவோம் என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
*அன்பில்*அவனை அறியகி லாரே 10.287
திருமூலர் திருமந்திரம்

9
காரணன் *அன்பில்* கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுஉடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந் தானே 10.391
திருமூலர் திருமந்திரம்

10
இசைந்தெழும் *அன்பில்* எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே 10.1590
திருமூலர் திருமந்திரம்

11
போது சடக்கெனப் போகின்றது கண்டும்
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
நீதியுளே நின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை *அன்பில்* அறியகில் லார்களே 10.2085
திருமூலர் திருமந்திரம்

(தொடரும்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க