அம்மாவுக்குக் கடிதம்!

பழமைபேசி

இலையுதிர் காலம்! வீட்டின் முன்புறம் இருக்கும் பழுப்பேறிக் கொண்டிருந்த மேப்பில் மரங்கள் தன் இலைகளைச் சாவகாசத்துடன் ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்தன. ஆறு மாதங்களாய்ப் பச்சையத்தை முழுவீச்சில் பூசிக்கொண்டிருந்த தரைப் புல்வெளி வெளிறத் துவங்கிருந்தது. பரணிலும் பெட்டியிலுமிருந்த குளிர்கால ஆடைகளுக்கு மறுபிரசவம் நெருங்கிக் கொண்டிருந்தது.

இப்படியான இந்நாளின் இத்தருணத்தில், அதே ஊரில் அமைந்திருக்கும் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமையகத்தில் பல நூறு மில்லியன்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கக் கூடும்.  கொல்லப்படப் போகும் பயங்கரவாதிக்கு  அங்கிருக்கும்  உளவு நிறுவனத்தில் வைத்து நாள் குறிக்கும் தருணமாகவும் இது இருக்கக் கூடும்.  இவையாவிலும் ஒன்றாகத்தான், சார்லட் பெருநகரத்தின்  பேலன்ட்டைன் பகுதிலிருந்து  மடலொன்றும் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது இத்தருணத்தில்.

அன்புடன் அம்மாவுக்கு,

சுகாதாரத்தில் நான் மிகவும் நலமாய் இருப்பதாகவே உணருகிறேன். இன்று நான் உன்னைச் சந்திக்கிற வரையிலும் மனரீதியாகவும் நலமாய்த்தான் இருந்தேன். ஆனால் தற்போது அப்படி இல்லை. மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

நீயும் உன் கணவனுமாகச் சேர்ந்து கொண்டு என் பள்ளிக்கூட முன்றலுக்கு ஏன் வந்தீர்கள்? வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதேதோ பேசி நண்பர்கள் மத்தியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள்.

எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இனிமையான கோடைகால விடுமுறை அது. ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு, பெருமைமிகு ராபின்சன் இடைநிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு படிப்பினைத் தொடரப் போகிறேன் எனும் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்தோடிக் கொண்டிருந்தேன்.

என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பருவம்; வீடெங்கும் தேடிப் பார்க்கிறேன்; அப்பாவைக் காணவில்லை. கூட்டத்தினின்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன். வழிதவறி அல்லாடும் என்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மேய்ப்பன் எவனும் வர மாட்டானா என ஏங்கிப் புழுங்கித் தவித்தேன். அடிமேல்தான் அடி விழும் என்பார்களே, அதைப் போலத்தான் எனக்கும்.

என்மீதான உன் கவனிப்பும் அருகிப் போனது. உனக்கு எல்லாமே ஸ்டீவ் என்றாகி விட்டது. நீயும் என்னைக் கவனிக்கவில்லை. அப்பாவையும் சந்திக்க விடவில்லை. நொறுங்கிப் போனேன் நான்.

அந்த ஏழு மாதங்களும் எனக்கு வெம்மையான மாதங்கள்தாம். அங்கே நீதிமன்றக் கதவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார் அப்பா. அதுவும் எனக்காக! போராட்டத்தின் முடிவில் வாரம் ஒருமுறை என்னையவர் பொது இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்றாகிப் போனது.

வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு வசந்த காலம். இறைவனின் திருவுலகிற்கே அழைத்துச் செல்வார் அவர். அவர் சந்திக்குமந்த மெக்டொனால்ட்சு கடையோ, இசுடார் பாக்சு கடையோ, அது எனக்கு புனிதத் தலமானது. எனக்குப் பொன் தரவில்லை. பொருள் தரவில்லை. சந்திக்கும் போதெல்லாம் என் அப்பா எனக்கு ஊட்டியது நம்பிக்கையான சொற்களை மட்டுமே. அவைதான் இன்றளவும் என்னை இருத்திக் கொண்டுள்ளது.

பழைய கதை எதற்கு? நடப்புக்கு வருவோம்.பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி உன் வீட்டிற்கு வரவே மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது. உன் அழகிய மணாளன், அதான் அந்த ஸ்டீவ் என்னை அங்குல அங்குலமாய் கீழிருந்து மேலாய் வெறித்தும் உற்றும் பார்க்கிறான். தொட்டுப் பேசுகிறான். போதாக்குறைக்கு, வார ஈறின் போது அவனது நண்பர்களையும் அழைத்து வந்து கூத்தடிக்கிறான். நீயும் என்னை அவர்களுக்கு விருந்தோம்பச் சொல்கிறாய். அதுதான் முடிவாக நான் இங்கேயே வந்து விட்டேன்.

அதில் உனக்கு என்ன இடைஞ்சல்? எனக்கு இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லையென்பதற்காக என்னவெல்லாமோ செய்கிறாய். நான் இங்கு மிகவும் பாதுகாப்பாய் இருக்கிறேன். பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக, எஞ்சிய நேரத்தை என் படிப்புக்காக மட்டுமே செலவிடுகிறேன்.

கடந்த இலையுதிர்காலப் பருவத்தின் கடைசிக் கட்டத்தில்தான் இங்கு வந்தேன். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என் அறைக்குள் அவர் வந்தது கிடையாது. அதே வேளையில் என்னைக் கவனித்துக் கொள்வதனின்றும் அவர் தவறியது இல்லை.

காலையில் ஆறரை மணிக்கெல்லாம் கிளம்பி, சார்லட் நகர மையத்தில் இருக்கும் தன் அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார். மாலை ஏழு மணிக்கு வந்ததும் வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, உடற்பயிற்சிக்காக ஒரு மணி நேரம்; அவ்வளவுதான்! பிறகு ஒன்பது மணிக்கெல்லாம் தன் அறைக்குள் போய் விடுகிறார். காலையில் எனக்கான சிற்றுண்டியை அவரே செய்து வைத்து விட்டுப் போகிறார். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என்னையவர் கடிந்து கொண்டது கிடையாது.

ஒவ்வொரு நாள் காலையில் கிளம்பும் போதும் என் அறைக்கதவுக்கு வெளியே நின்று கொண்டு, காலையில் சாப்பிடுவதற்கு இன்னது செய்து வைத்திருக்கிறேன்; வெளியே தட்பவெட்பம் இப்படி இருக்கிறது; இன்று மழை வரும், குடை எடுத்துக் கொண்டு போ என்றெல்லாம் அக்கறையுடன் சொல்வார். குளிர்நாள் என்றால், அதற்கான ஆடை இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

மாலை நேர உணவு வேளையின் போது, அன்றைய நாள் எப்படி இருந்தது எனக் கேட்பார். நிறைய நூல்களையும், நூல்களில் குறிப்பிட்டுள்ள வாசகங்களையும் மேற்கோள் காண்பித்துப் பேசுவார். இப்படித்தானம்மா நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு.

நீ, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டு போய் அடைத்து வைத்திருப்பதாய் நீ வழக்கெதுவும் பதிந்து விடாதே! இன்னும் இரண்டு மாதங்கள்தானே? எனது பதினெட்டாவது பிறந்த நாள் வந்து விடும். அதையும் பிரையனுடன் சேர்ந்து மகிழ்வோடு கொண்டாட விரும்புகிறேன். தயவு கூர்ந்து என் விருப்பத்தை நிறைவேற்று. ஸ்டீவுடன் சேர்ந்து கொண்டு இனிமேலும் என் பள்ளிக்கு வராதே! இறைஞ்சுகிறேன்!!

இதோ கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது அம்மா. அவர் வந்து விட்டார் போல தெரிகிறது மீண்டும் சந்திப்போம்.. இறைவனது அருள் உனக்கு உரித்தாகட்டும்!!

அன்பு மகள்,

டீனா.

மாடத்தில் இருக்கும் தன் அறையிலிருந்து இறங்கிப் போனாள் டீனா. இரண்டு ரொட்டிகள், பழச்சீப்பு ஒன்று, மூன்று காலன் பாலுக்கான நெகிழிக்கலம் ஆகியனவற்றைச் சுமந்தபடி உள்ளே வந்து கொண்டிருந்தார் பிரையன். ஓடிப் போய், அவர் கையிலிருக்கும் பாலை வாங்கி, சமையலறையில் இருக்கும் குளிர்மிக்குள் வைத்தாள்.

“என்ன டீனா? ஒரு மாதிரி சோர்ந்து போயி இருக்கியே?! இன்னைக்கு பாடங்கள் எதும் அதிகமோ?”, கேட்டுவிட்டுத் தனக்கே உரிய சிரிப்பினை உதிர விட்டார் பிரையன்.

”ஸ்டீவும் அம்மாவும் பள்ளிக்கே வந்து மத்தவிங்க முன்னாடி அலப்பறை பண்ணிட்டாங்க அப்பா. அவமானமா இருக்கு!”, ஓவெனப் பெருங்குரலெடுத்து பிரையனின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

”ஏய், இதுக்கெல்லாம் இப்படி நீ உணர்ச்சிவசப்படலாமா? அடுத்த கோடைகாலத்துல நீ மருத்துவத்துறை மாணவி. அமெரிக்காவுக்கும், இந்த உலக மக்களுக்கும் நீ செய்ய வேண்டிய பணிகள் ஏராளமா இருக்கு. மருத்துவத் துறையில் நீ காலூன்றதுலதான் இருக்கு எல்லாமே! அதை நினைச்சுப் பாரு டீனா!”

இரு கைகளாலும் தன் இரு தோள்ப்பட்டைகளைப் பற்றித் தூக்கி நிறுத்தி அவர் குலுக்கியதிலும், பொலிவு மிகுந்த அவரது முகத்தின் ஒளிவீச்சிலும் புத்துணர்வு பெற்றாள் டீனா.

”இன்னைக்கு நான் உடற்பயிற்சிக்குப் போகலை. குளிச்சிட்டு வா சாப்பிடலாம். நல்லா, எதனா செய்து வைக்கிறேன்!”, கிளம்பி தன் அறைக்குப் போனார் பிரையன்.

சிறு ஓய்வுக்குப் பின்னர், கலைந்து கிடந்த தன் பாடப்புத்தகங்களை நேர்த்தியாகத் தன் மேசையின் மீது அடுக்கிக் கொண்டிருக்கிறாள் டீனா.  அஞ்சல் செய்வதற்கும், செய்யாமல் கசக்கித் தூக்கி எறியப்படுவதற்குமான இடைவெளியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது மேசையின் மறுகோடியிலிருக்கும் அம்மாவுக்கு எழுதிய அந்தக் கடிதம்!

1 thought on “அம்மாவுக்குக் கடிதம்!

  1. கதை உணர்வுக்குவியலாய் இருக்கின்றது பழமைபேசி ! மகளின் மனதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளின் வாயிலாகவே அக்குழந்தையின் அம்மா அப்பா பிரிந்துவிட்டிருக்கின்றனர் என அறிவது கொஞ்சம் வேதனையே ! காலம் மிகவும் மாறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது !

Leave a Reply

Your email address will not be published.