நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-16)

ஸ்ரீஜா வெங்கடேஷ்

நிகில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று பி.ஈ பரீட்சையில் தேறி விட்டான். அமெரிக்காவுக்கு செல்லத் தேவைப்படும் தேர்வுகளான ஜி.ஆர்.ஈ, டோஃபில் இவற்றிலும் நல்ல மார்க்குகள் எடுத்துப் பாஸ் செய்திருந்தான். மூன்று புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து அவனுக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. அதில் மிகச் சிறந்ததான டெக்சாஸ் பல்கலைக் கழகத்தைத் தேர்ந்தெடுத்து அதில் சேர்வதாக முடிவெடுத்திருந்தான் நிகில். அங்கு படிப்பதற்குரிய ஸ்காலர்ஷிப்பும் அவனுக்குக் கிடைத்து விட்டது.

சுந்தரத்துக்கும் கல்யாணிக்கும் பெருமை தாங்கவில்லை. அது மட்டுமா? இப்போது சுந்தரம் மேனேஜர் ஆகி விட்டான். அது வேறு அவர்கள் பெருமையைப் பூரிக்கச் செய்தது.

தங்களுடைய மகன் அமெரிக்கா செல்லப் போவதை நினைத்து நினைத்து இருவரும் வானில் பறந்தனர். சுமதி அக்கா, சுந்தரத்தின் தங்கை என எல்லாருக்கும் ஃபோனில் விஷயத்தைச் சொன்னார்கள். அவர்களுக்கும் சந்தோஷம். அதைக் கொண்டாடவும், நிகில் வெளிநாட்டுக்குப் போவதற்கு முன் கடவுளிடம் வேண்டிக் கொள்ளவும் என ஒரு பூஜை ஏற்பாடு செய்தாள் கல்யாணி.

அதற்கு அனைவரையும் அழைத்திருந்தாள். நாளை தான் பூஜை. கம்ப்யூட்டரில் அழைப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதைப் பார்த்ததும் அவள் மனம் ஒரு வருடம் முன்னோக்கிப் பறந்தது. தன்னிடம் சுந்தரம் சீறி விட்டு டாக்குமெண்டுகளை எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு அரக்கப் பறக்க ஓடிய அந்த நாள் நினைவுக்கு வந்தது. ஏனெனில் இந்த இ-மெயிலும் அந்த இ-மெயிலைப் போலவே பல கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

அதை ஒரு புன்னகையோடு டெலீட் செய்தாள் கல்யாணி.

மனம் மீண்டும் அந்த நாளில் போய் உட்கார்ந்து கொண்டது.

அடேயப்பா! சுந்தரத்துக்கு இனி கெட்ட பெயர் இல்லை எனத் தெரிந்ததும் அவர்கள் குடும்பம் அடைந்த மகிழ்ச்சிக்கு ஏது அளவு? அதுவும் சுந்தரம் தன் மேல் உள்ள கோபமெல்லாம் தீர்ந்தது என்று அறிந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சி இருக்கிறதே! அதை விட ஒரு சந்தோஷத் தருணம் இனி இருக்குமா? மனம் பின்னோக்கி ஓடியது.

“கல்யாணி! போனாப் போகுது போ! ஏதோ தெரியாம செஞ்சிட்ட! இனிமே இப்டிப் பண்ணதே சரியா?” என்ற வார்த்தைகளோடு விளையாட்டாய் அவள் காதைப் பிடித்துத் திருகினான்.

“ஆஆ.. வலிக்குது விடுங்க! நீங்க என்ன ஸ்கூல் வாத்தியாரா இருந்தீங்களா? காதைப் பிடிச்சுத் திருகுறீங்க?”

“பின்ன? தப்புப் பண்ணினா! அப்டித்தான் தண்டனை குடுப்பாங்க! என்னடா நிகில்?”

“ஆமாம்ப்பா! விடாதீங்க அம்மாவை! என்னை எத்தனை தடவை திருகியிருக்காங்க சின்ன வயசுல”

கலகலவென்ற சிரிப்பொலியால் அந்த வீடு நிறைந்தது.

அதற்கப்புறம் எல்லாம் சரியாவதற்கு எத்தனை நாள் பிடித்தது?

ஒரு பக்கம் கல்யானியின் நாத்தனார் செல்வி கோபித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் என்றால், மறு புறம் நிகில் பல பரீட்சைகளுக்குத் தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். அது போதாதென்று இஞ்சினியரிங் பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. கல்யாணி வேறு கிட்டத்தட்ட எல்லா உறவினர்களோடும் சண்டை போட்ட நிலை. வட பழனி முருகனுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டியது வேறு பிரார்த்தனை பாக்கி.

மூச்சு முட்டியது கல்யாணிக்கு. இந்த முறை எதிலும் தவறு நேராமல் நிதானமாக யார் மனதும் நோகாமல் பேச வேண்டும். எல்லோருடனும் சமாதானமாகப் போக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் அவள். சுந்தரத்தை இதில் நுழைக்க விரும்பவில்லை. தான் ஏற்படுத்திய சிக்கலைத் தானே தான் விடுவிக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்கு.

இந்தக் கம்ப்யூட்டர் வேலையாலும், அந்தப் பரிசாலும் யார் யார் மனதை நோகடித்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தாள் கல்யாணி.

முதலில் சுஜாதா, அவள் அந்த மெயிலை ஃபிராடு என்று சொன்னாள் என்பதற்காக அவள் மனம் நோகப் பேசியாயிற்று, அடுத்து சுமதி அக்கா, அவள் சவுத் ஆப்பிரிக்காவில் அந்த அட்ரசைப் பற்றி விசாரித்துச் சொன்ன பிறகு ஒரு நாள் வெறுப்பில் ஃபோன் செய்து அவளையும் கடுமையாகப் பேசி விட்டாள். அந்த நிகழ்ச்சிக்கப்புறம் சுமதி அக்கா ஃபோன் செய்வதேயில்லை.அதற்கு அடுத்தது செல்வி தான். தன்னுடைய கவலையினால் வீட்டிற்கு வந்தவளை வெறுப்பாகப் பேசித் துரத்தி விட்டாள். சுந்தரத்துக்கு அந்தக் கோபம் இன்னும் உள்ளூர இருப்பது கல்யாணிக்குத் தெரியும்.

முதலில் சுஜாதாவிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தாள் அவள்.

கல்யாணிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. “ஒரு சிறு பெண் அவளிடம் போய் நாம் மன்னிப்புக் கேட்பதா?” என்றிருந்தது. இருந்தாலும் “தவறு செய்தது நாம், அதனால் மன்னிப்புக் கேட்பது தான் முறை. இதில் அவமானம் ஒன்றுமில்லை” என்று திரும்பத் திரும்ப தனக்குத்தானே கூறிக் கொண்டு பின் சுஜாதாவுக்கு ஃபோன் செய்தாள். முதலில் சுஜா எடுக்கவேயில்லை. நான்கைந்து முறை முயற்சி செய்த பின் எடுத்தாள்.

“ஹலோ! சுஜா! நான் கல்யாணி பேசறேம்மா!”

“தெரியுது!”

“உங்கிட்ட மன்னிப்புக் கேக்கத்தான் நான் ஃபோன் பண்ணினேன் சுஜா! பிளீஸ் என்னை மன்னிச்சிடும்மா! ஐ ஆம் சாரி”

“————“

“இல்ல சுஜா! நான் சும்மா மேலுக்கு உங்கிட்ட மன்னிப்புக் கேக்கறேன்னு நினைக்காதே! நீ சொன்னா மாதிரி அது எவ்ளோ பெரிய ஃபிராடுங்கறதை அனுபவ பூர்வமா தெரிஞ்சுக்கிட்டேன். நீ சொல்றதை முதல்லேயே கேட்டிருந்தா இந்தப் பிரச்சனை எல்லாம் வந்திருக்காது. “

“பரவாயில்லை மேடம்! விடுங்க! எப்டியோ நீங்க அதெல்லாம் ஃபிராடுன்னு புரிஞ்சிக்கிட்டீங்கல்ல அது போதும்”

“ஆமாம்மா! என் மேல உனக்கு கோபம் இல்லை தானே”

“இல்ல! இல்ல! போதுமா?”

“சரி சுஜா” என்று ஃபோனை வைத்தவள் மனது சற்று லேசாகியது. “ஒரு மன்னிப்பு கேட்டால் நல்லபடியாக முடிந்தது, அடுத்தது சுமதி அக்கா” என்று அவர்களுக்கு ஃபோனைச் சுழற்றினாள். இரண்டு ரிங்குகளிலேயே எடுத்து விட்டாள் அக்கா.

“ஹலோ! கல்யாணி! எப்டி இருக்க?” கொஞ்சமும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சுமதி அக்கா பேசியது கல்யாணிக்குக் கண்களில் நீரை வரவழைத்தது.

“ஹலோ! அக்கா!” என்றாள் தொண்டை அடைக்க.

“”சொல்லு! கல்யாணி! எதும் பிரச்சனையா? சொல்லும்மா!”

“அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா! கடவுள் அருளால எல்லாம் நல்லபடியா முடிஞ்சது”

“நானும் எல்லாமே கேள்விப் பட்டேன்மா! நல்லவங்களுக்கு இப்படிப்பட்ட சோதனைகள் வரது சகஜம் தான்”

“என்னவோ போங்க! நான் முக்கியமா ஃபோன் பண்ணது உங்க கிட்ட மன்னிப்புக் கேக்கத்தான்”

“மன்னிப்பா? எதுக்கு?”

“அக்கா! எதுக்குன்னு நீங்க கேக்கறதுலருந்தே நீங்க எவ்ளோ உசந்தவங்கன்னு தெரியுது! அன்னிக்கு நீங்க சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும் கேட்டு விசாரிச்சு எனக்குச் சொன்னீங்கள்ல்ல அதுக்கப்புறம் நான் உங்களைத் தப்பாப் பேசிட்டேங்கா! அதுக்கு சாரி கேக்கத்தான்….”

“சீ! பைத்தியம்! நான் அதை ஒண்ணும் தப்பாவே நினைக்கல்ல!”

“அப்ப ஏன் எனக்கு அதுக்கப்புறம் ஃபோன் பண்ணல்ல?”

“அதுவா? நீ ஏற்கனவே சங்கடத்துல இருக்க! அப்பப் போயி சும்மா உன்னை நொய் நொய்னு தொந்தரவு பண்ணுவானேன்னுதான் நான் ஃபோன் பண்ணல்ல”

“உண்மையிலேயே அது தான் ரீசனா?”

“அட! ஆமாம்! ஆமாம்! ஆமாம்! போதுமா? உன்னை எனக்குத் தெரியாதா? அவசர அவசரமா காரியங்களைச் செஞ்சுட்டு நிதானமா வருத்தப்படுவ நீ! சின்ன வயசுல இருந்த அதே மாதிரி தான் இன்னமும் இருக்க! உன்னைப்போயி தப்பா நெனப்பேனா?”

“ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்று ஃபோனை வைத்தவள் மனது இப்போது குதூகலமாயிருந்தது. “அக்கான்னா அக்காதான்” என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்து ஃபோன் செய்ய வேண்டிய ஆளை நினைத்த போது அவளுக்கு வயிறு கலங்கியது. நாத்தனார்.. அதிலும் கோபித்துக் கொண்டு போன நாத்தனார். என்ன சொல்லி சமாதானப்படுத்த? மிகவும் யோசித்தவள் கடைசியில் உண்மையைச் சொல்லி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தாள்.

அதேபோல ஃபோனைச் சுழற்றினாள். மறு முனையில் எடுத்தபோதே மன்னிப்புக் கேட்டாள். நாத்தனார் கொஞ்சம் இறங்கி வருவது போலத் தோன்றவே விஷயம் முழுவதையும் சுந்தரத்துக்கு வந்த ஆபத்தையும் சேர்த்துக் கொட்டித் தீர்த்து விட்டாள்.

“அண்ணி! இவ்ளோ நடந்திருக்கா? அண்ணன் என் கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல்ல! நிகில் நடுவுல ரெண்டு தரம் வீட்டுக்கு வந்தான் ஏண்டா ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டதுக்கு ஒண்ணுமில்ல அத்தன்னு மழுப்பிட்டானே!”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல! எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி உங்களையும் ஏன் மனசு கஷ்டப்பட வைக்கணும்னுதான் சொல்லல்ல! ரொம்ப சாரிம்மா! நீ அன்னிக்கு ஆசையா வீட்டுக்கு வந்த!”

“பரவாயில்லீங்க அண்ணி! நாம அடுத்த வாரமே ஒரு நாள் போவோம் சரியா?”

“கண்டிப்பா” என்று சொன்னவள் அதே போல மறு வாரமே நாத்தனாரோடு மனம் போல ஷாப்பிங் போய் வந்து திருப்தியாகச் சமைத்துச் சாப்பிட்டு ஜாலியாக இருந்தார்கள்.

கனவிலிருந்து மீண்டாள் கல்யாணி.

இந்தக் கம்ப்யூட்டர் தான் தன் வாழ்க்கையை எப்படி மாற்றி விட்டது? முதலில் நிறைய சந்தோஷம், பணம் எல்லாம் கிடைத்தது. அதன் பிறகு அவமானம், அவச்சொல், பண நஷ்டம் எல்லாம் உண்டாக்கியது. யோசித்துப் பார்த்தாள் கல்யாணி “கம்ப்யூட்டர் நஷ்டம் உண்டாக்கியதா? இல்லை உன் பேராசை நஷ்டம் உண்டாக்கியதா? என்று அவள் மனசாட்சி தட்டிக் கேட்டது.

“ஆமாம்! என் பேராசைதான் எனக்கு எதிரியாக வந்தது. கம்ப்யூட்டர் என்பது இன்றைய நாளின் அத்தியாவசியம். ஆனால் அதன் நல்லது கெட்டது தெரிந்து உபயோகிக்க வேண்டும். அதிலும் இண்டர் நெட் என்பது தொழில் நுட்பப் புதையல். யாருக்கு என்ன தகவல் வேண்டுமோ அவை அனைத்துமே விரல் நுனியில் அதில் கிடைக்கும். அதனாலேயே அதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். ஏதாவது ஒரு எழுத்து மாறிப் போனால் கூட மிகவும் அசிங்கமான மனதைத் தூண்டும் விதமான தகவல்கள் கிடைக்கும் அபாயமுள்ளது.

எப்படி துப்பாக்கி சுடுபவர்கள் அதை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளுகிறார்களோ அதே போலத்தான் நாமும் இண்டர் நெட்டைக் கையாள வேண்டும். இதையெல்லாம் அறியாத பல பெண்கள் இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்களுக்கு இதன் ஜாக்கிரதை பற்றிச் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்று தோன்றியது கல்யாணிக்கு.

முதல் தனக்கு தெரிந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று எல்லோரிடமும் இண்டர் நெட் பற்றியும் அதன் பயன், ஆபத்து இரண்டைப் பற்றியும் எடுத்துக் கூறினாள். இது சம்பந்தமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட அவள் கலந்து கொண்டாள். அதில் மிகவும் நல்ல பெயர் அவளுக்கு. தனக்குக் கிடைத்த கசப்பான அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு அந்த அனுபவம் நேராமல் காத்தாள்.

இப்போதெல்லாம் கல்யாணி யாருடனும் சேட்டிங் செய்வதில்லை. சுந்தரத்துக்குப் பிரமோஷன் கிடைத்ததும் பிரீதாவே வலிய இரு முறை ஃபோனில் பேசி சேட்டிங்கில் வரச் சொன்னாள். ஆனால் கல்யாணி அதற்கெல்லாம் இடம் கொடுக்கவேயில்லை. வீட்டை கவனித்துக் கொண்ட நேரம் போக மற்ற நேரம் வேலை செய்து திருப்தியாகச் சம்பாதிக்கிறாள்.

இதிலெல்லாம் சுந்தரத்துக்கு ஏகப் பெருமை.

பூஜை சிறப்பாக நடைபெற்றது. சுமதி அக்கா, கல்யாணி இருவரும் சேர்ந்து வருபவர்களுக்கு விருந்து தயாரித்து விட்டார்கள். செல்வி எல்லாரையும் வரவேற்று உட்கார வைக்கும் பொறுப்பையும், பூஜைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுக்கும் பொறுப்பையும் செய்தாள். வந்திருந்த உறவினர்கள் அனைவரும் மனாதார சாமி கும்பிட்டு வயிறாரச் சாப்பிட்டு விட்டு வாழ்த்தியபடி சென்றார்கள்.

அனைவரும் விடை பெற்றுக் கொண்டு போயாகி விட்டது.

வீட்டில் கல்யாணி, சுந்தரம் மற்றும் நிகில் இந்த மூவர் தான்.

இதோ நிகில் இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்கா கிளம்புகிறான். அதற்குள் செய்ய வேண்டியது ஏராளம் இருக்கிறது. தேவையான சாமான்கள் வாங்க வேண்டும், உணவுப் பண்டங்கள் பார்சல் செய்ய வேண்டும், நிகிலுக்கு அடிப்படைச் சமையல் கற்றுக் கொடுக்க வேண்டும், நிகிலை அழைத்துக் கொண்டு வட பழனி முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் இப்படிப் பல.

எல்லா வேலைகளும் முடிந்து நிகில் அமெரிக்கா கிளம்பும் நாளும் வந்து விட்டது.

நடு இரவு 2:30க்கு ஃபிளைட். 12 மணிக்கு இவர்கள் ஏர்போர்ட் சென்று விட்டார்கள். விமானம் கிளம்பும் மூன்று மணி நேரத்துக்கு முன்பே பயணிகள் தங்கள் உடமைகளோடு உள்ளே சென்று விட அதாவது செக் இன் செய்து விட வேண்டும் என்பதால் ஒரு மணி வாக்கில் நிகிலிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்தனர் கல்யாணியும் சுந்தரமும். இருவர் கண்ணிலும் ஆனந்த வெள்ளம், கவலைக் கண்ணீர் இரண்டும் சேர்ந்து காணப் பட்டது.

ஏர்போர்ட்டிலிருந்து திரும்பும் டாக்சியில் ஆதரவாகக் கணவனின் தோள் மேல் சாய்ந்த கல்யாணியை மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் சுந்தரம். டாக்சி விரைந்தது. மானசீகமாக நிகிலுக்கு டாட்டா காட்டியபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் அந்தத் தம்பதி.

முற்றும்.

 

படத்திற்கு நன்றி: http://www.teluguone.com/nri/thkts/pages/events-2-387.html

பதிவாசிரியரைப் பற்றி