திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-16)

விஜயகுமார்

பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் ஒன்று, கிளிப் பச்சை நிறத்தில் ஒன்று, கோவிந்தா நிறத்தில் ஒன்று, மஞ்சள் நிறத்தில் இன்னொன்று, கடல் நீல நிறத்தில் ஒன்று, சிவப்பு நிறத்தில் இன்னொன்று, இது போதாதென்று பாதிப் பச்சை பாதி மஞ்சள், பாதி சிவப்பு பாதி நீலம் – முன்னாடி விவேக் சொன்னது போல ஏதோ ஜாங்கிரியைப் பிசைந்து போட்ட மாதிரி ஒரு சைன் (போர் ஹயார்) – எல்லாம் வண்ண வண்ண டாக்ஸிகளின் பவனி. எந்த இடமாக இருக்கும்?

சின்ன பட்ஜெட் தமிழ்ப் படம் என்றால் ஊட்டி, பெரிய பட்ஜெட் என்றால் ஐரோப்பா, இரண்டுக்கும் நடுவில் என்றால் – தாய்லாந்து தானே – தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆன இடங்களில் இந்தத் தாய்லாந்தும் ஒன்று – கதாநாயகி கடைக்கண் பார்வை பட்டவுடனே அங்குள்ள பீச்சுக்குக் கேமரா போய்விடுமே! கதைப்படி குடிசையில் அடுத்த வேளைச் சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில் இருந்தாலும் கூட அரைகுறை ஆடையில் பிகினி அணிந்த நனைத்த ஆடையுடன் ஆடிப் பாட வேண்டும்!

இந்த ரசிகர்களின் அபிமான ஸ்டார்களின் வானுயர வருமானம் வீணாகும் இடங்கள் பல என்றாலும் அவை மிகவும் வீணாவது இந்த நாட்டில் தான். அப்படி என்ன இந்த நாட்டுக்கு ஒரு மோகம்? இங்கே கட்டிளம் காளைகள் முதல் சொட்டை விழுந்த மனதளவு வாலிபர் வரை மந்தை மந்தையாக வந்து இறங்குகிறார்கள்?

இந்தியா போன்ற மூன்று பக்கம் கடலாலும் தலையில் இமாலய மலைத்தொடராலும் சூழப்பட்ட நாடுகளில் அயல் நாட்டிற்க்குப் பயணம் செய்யும் வாய்ப்பு அந்நாளில் பலருக்குக் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். பர்மா, சிங்கை போன்ற நாடுகளுடன் பயணக்கப்பல் தொடர்பு இருந்த போதிருந்த சிறு வாய்ப்பும் விமானங்கள் வந்தவுடன் அடங்கி விட்டது. இலங்கைச் சூழல் பல காலம் தடையாகவும் இருந்தது. அப்படி இருக்க நம்மவருக்கு சிங்கை, மலாயா மற்றும் தாய்லாந்து சென்று அரை டஜன் லக்ஸ் சோப்பு, ரெண்டு செண்டு பாட்டில் ( நல்ல வேளை இப்போதெல்லாம் ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா அவர்கள் அணிந்த சிங்கப்பூர் புலி மார்க் பச்சை நிற ஜாம் ஜாம் பெல்ட் எல்லாம் வாங்கி வரச் சொல்வதில்லை!!) வாங்கி வந்து பந்தா காட்ட வேண்டும். நம் நாட்டிலேயே வரலாறும் எழிலும் சொட்டும் பல இடங்கள் இருந்தும் – இதன் பெயர் கூட பெரும்பாலானவருக்குத் தெரியாது – எனினும் ட்ராவல் ஏஜெண்டுகள் பாகேஜ் டூர் மிக மலிவு விலை – முதல் முறை செல்வோருக்கும் நம்மில் எங்கு சென்றாலும் தயிர் சாதம் ஊறுகாய் கேட்கும் நபர்களுக்கும் ஏதுவாகச் சுற்றுலா என்றதும் லாலா கடை அல்வாவுக்கு மொய்க்கும் ஈக்களைப் போல தாய் ஏர்வே விமானம் தான் மோட்சம் என்று சென்று விடுகிறார்கள். அந்தக் காசுக்கு நம்ம ஊரில் இதை விடப் பல மடங்கு பார்க்கலாம் என்றாலும் யாருமே கேட்பதில்லை.

இதைத் தவிர நம்ம ஆட்கள் இங்கே இந்த நாட்டுக்கு ஈ போல வந்து மொய்க்க வேறு ஒரு முக்கிய காரணமும் உண்டு. அதைப் பின்னர் பார்ப்போம். கிழக்கு ஆசிய நாடுகளில் நம்மவருக்கு தாய்லாந்தின் சிறப்பு – மலேசியா மற்றும் சிங்கை போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கு முன்கூட்டியே விசா எடுக்க வேண்டும் – தாய்லாந்தில் அது தேவை இல்லை, இறங்கியதும் “விசா ஆன் அரைவல்” வசதி உண்டு. தர்ம தர்ஷன் – நார்மல் ஆயிரம் பாட், ஸ்பெஷல் ஆயிரத்தி ஐநூறு ( ஆனால் ரசீது ஆயிரத்து இருநூறுக்கு தான் தருவார்கள் ). நல்ல நாளில் நார்மல் அரை மணி நேரம் எடுக்கும், சில கெட்ட நேரத்தில் ஏடுகொண்டலவாடா ரேஞ்சுக்கு இரண்டு மணி எடுக்கும். சுவர்ணபூமி விமான நிலயம் திறக்கும் முன்னர் பழைய விமான நிலையத்தில் இந்த விசா தாமதம் பெரும் தொல்லையாக இருந்தது. மினிமம் ஒரு மணி நேரம் எடுக்கும். ஒருமுறை முந்தைய பாஸுடன் சென்றபோது பெரும் அதிர்ச்சி – ஐந்தே நிமிடத்தில் அவரது கடவுச்சீட்டு வந்து விட்டது – அதுவும் ராஜ மரியாதையுடன் – அவர் பெயரில் ஒரு ராம், அவர் அப்பா பெயரிலும் ராம் இருந்ததே அதற்க்கு காரணம் என்று பிறகு தான் தெரிந்தது. தாய்லாந்தில் பொதுவாக மன்னர் பரம்பரையில் உள்ளவர்களே இப்படிப் பெயர் இருக்கும் போல!

புதிய சுவர்ணபூமி விமான நிலையத்தில் விசா பிரச்சனை கொஞ்சம் குறைவே என்றாலும் மற்ற சௌகரியங்கள் கொஞ்சம் குறைவுதான். பெரிய விமான நிலையம் என்பதால் சிங்கை போல பல டெர்மினல்கள் வைக்காமல் ஒரே டெர்மினல் என்பதால் பல கிலோ மீட்டர் உள்ளுக்குள்ளே நடக்க வேண்டி உள்ளது!! உள்ளே நுழைந்தவுடனே ஒரு பெரிய பாற்கடல் கடையும் காட்சியை வைத்து விட்டனர் – இதன் முன்னால் நின்று போட்டோ எடுக்காவிட்டால் தாய்லாந்து சென்றதை யாருமே நம்ப மாட்டார்கள் போல! முதல் முறை வெளிநாடு பயணம் வந்துள்ளவர்களைப் பார்க்கும் போதே அடையாளம் காணலாம். தழைய தழையப் புடவை கட்டிக்கொண்டு காலில் ரீபோக் சூ! ஒவ்வொரு கடையிலும் விலை கேட்டு அதை இந்தியா ரூபாய்க்கு கால்குலேடர் கொண்டு மாற்றி – இது நம்ம ஊரிலேயே பாதி விலைக்கு கிடைக்குமே என்ற ரியாக்‌ஷன்!!

வெளியில் வந்தால் இந்தக் கலர்களின் அணிவகுப்பு – அதுதாங்க வண்ண வண்ண டாக்ஸிகள் பார்க்கலாம். சரி, தாய்லாந்தைப் பற்றிய “அந்த” விஷயத்துக்கு வருவோம். அதுதாங்க தாய் மசாஜ்! முதலில் நாம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் – உலகின் எல்லா நாடுகளிலும் இந்தத் “தொழில்’ இருக்கிறது. “இலை மறைவு காய் மறைவாய்” நம்ம ஊரிலும் இது உண்டு. அதனால் தாய்லாந்து தான் ஒன்றும் தெரியாத அப்பாவிகளைக் கெடுக்கிறது என்று சொல்வது தவறு. இதற்காகவே அலையும் பலரை நமது பஸ் நிலையங்களிலும், பல்லவன் பஸ்களிலும் பார்க்க முடிகிறது. பெண்களைத் தெய்வமாக மதிக்கும் நாடு என்று பறைசாற்றும் நமது கலாச்சாரத்தின் சீர்குலைவைப் பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள் படும் பாட்டைப் பார்த்தாலே புரியும். வெறும் குச்சிக்குப் புடைவை சுற்றினாலே வெறித்துப் பார்க்கும் இந்தச் சமுதாயச் சீர்குலைவுக்கு எது காரணம்? ஏது விமோசனம்?

ஆமாம் சார், தாய்லாந்தில் வெளிப்படையாக இவை உண்டு – காபரே, சில்மிஷம் முதல் ஹாப்பி எண்டிங் மசாஜ் வரை பல ஷோ உண்டு – அதே போல நல்ல (கௌரவமான) ஹெல்தி மசாஜும் உண்டு – ஏன் நம்ம ஊரில் இல்லாததா? ஜோதி தியேட்டர் முதல் பாண்டிச்சேரியில் அந்தக் கிரகம் பெயர் கொண்ட ஹோட்டலில் காட்டாததா? தவறாக என்ன வேண்டாம் – தாய்லாந்தை பற்றிய இந்த தவறான நோக்கம் எங்கும் பரவி உள்ளது. அருமையான நாடு அது – பார்த்ததும் குனிந்து “ஸ்வாதிகா” என்று பணிவுடன் வரவேற்பது முதல் – அழகிய கடற்கரை, அற்புதமான சுவை மிகுந்த சாப்பாடு என்று பல நல்லவை அந்த நாட்டில் உள்ளன. சொல்லப் போனால் அந்த நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டமே கிடையாது. இங்கே பெண்களுக்கு நம் நாட்டை விட அங்கே மிகுந்த மதிப்பும் சுதந்திரமும் உண்டு.

உதாரணத்துக்கு நம்ம ஊரில் நன்கு பரிச்சயம் ஆன – தெரிந்த பையனுடன் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதையே கொச்சைப்படுத்திப் பல சினிமா காட்சிகள் வந்துள்ளன. பின்னால் பெண்ணை அமரவைத்து ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்குவது போல காட்சி அமைப்பது என்ன ஒரு வக்கிரமான சித்தனை! இதை எவருமே கண்டிப்பது இல்லை! ஆனால் தாய்லாந்தில் எங்கும் நம்ம ஊரு ஆட்டோ மாதிரி பைக் டாக்ஸி பிரபலம். அது என்ன பைக் டாக்ஸி? இரு சக்கர டாக்ஸி – ஆரஞ்சு நிற அரைச்சட்டையை அணிந்து இவர்கள் பத்து பாட் (சுமார் பதினேழு ருபாய்!) வாங்கிக்கொண்டு சிறு சிறு ட்ரிப் அடிக்கிறார்கள். ஆண் பெண் என்ற எந்த வித பாகுபாடுகள் இல்லை. பறக்கும் ரயில் இருந்து இறங்கி டப் என்று எதோ ஒரு பைக் டாக்சியில் ஏறி அமரும் அழகுப் பெண்களை பார்க்கும்போது – இது நம்மூரில் சாத்தியமாகுமா என்ற கேள்வி தான் எழுகிறது.

சங்க இலக்கியம் படிக்கும்போது அந்தக் காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்த உறவை அவர்கள் பார்த்த கண்ணோட்டம் எங்கோ வழியில் சிக்கிச் சிதறி இன்று அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு ஒரு பெண்ணின் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. ஒரு பெண்ணுடன் நட்பு, இல்லை வேண்டாம்.. வெறுமனே கூட வேலை பார்ப்பது முதல் – ஒரு சாதாரண சம கால நடப்பு, ஏன் காதலே உண்டாகட்டும், பின்னர் “எல்லைகளை” மீறினாலும் இவை அனைத்தும் இயற்கையே – அதைப் பற்றிய ஒரு புரிதல் தேவை. இதை பற்றிப் பேசாமல் மூடி மூடி வைப்பது பிரச்சனையை இன்னும் பெரிதாக்கப் போவதுதான் நிச்சயம். எதனால் நம் நாடு HIV, AIDS போன்ற நோய்களில் முதலிடம் வகிக்கிறது? இவை ஏதோ தெய்வ குத்தமா அல்லது பூர்வ ஜென்மத்து சாபம் என்றோ தள்ளி விட முடியாது. பழம் பெருமை பேசி இவற்றை மூடி மறைப்பதை விட நம்ம ஊரு ஓட்டலில் சோப்பு, சீப்பு, ஷாம்பூ வைப்பது போல தாய்லாந்து ஓட்டலில் ஆணுறையையும் வைத்து விடுவதே முதிர்ச்சி.

1 thought on “திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-16)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க