தேவாரத் தலங்கள் சில (பகுதி-3)

ஊற்றத்தூர்-ஓர் தேவார வைப்புத்தலம்

நூ.த.லோகசுந்தரம்

மூவர் முதலிகள், தம் காலமாம் 1350 ஆண்டுகள் தொன்மமுடை, சிவனுறைத் தலங்கள் பலவற்றினை, அவர்கள் நேரடி வழிபட்டு, அவற்றிற்கு எனத் தனிப்பதிகங்கள் இயற்றா விடினும், சேத்திரக் கோவை, அடைவுத் திருத்தாண்டகம், ஊர்த்தொகை என நன்றே தொகுத்துப் பாடின பாங்குடன், நுற்றுக்கணக்கானவற்றைப் பிறப்பதிகங்களில், வைப்புத் தலங்களாக குறிக்கப்பட்டமை, நாம் பெற்ற பேறே. வைணவ மரபில், ‘பாசுரமுள்ளன’, ‘குறிக்கப்பட்டவை’, எனப் பாகுபாடு செய்யாது, யாவும் 108 திவ்யதேசங்களே, எனப் புவி கடந்த மேலுலகத் தலங்களையும், ஒன்றாகக் கொண்ட, நோக்கு சைவத்தில் ஏனோ, காணவில்லை.

சைவநெறிச் சான்றோர் பலர், சைவத் திருமுறைகளாம் மாகடல் தீரத்தம் ஆடி, ஆயுங்கால், அவ்வைப்புத் தல முத்துக்கள், 300க்கு மேலும் கண்டுள்ளனர். சைவப் பெரியார், சிவஞானமுனிவர், 250 தலங்களை ஆவணப்படுத்தி, ‘வைப்புத்தலக் கோவை‘ பாடினார். பின்வந்தோர், தொடர்ந்து மேலும் பலவற்றினை இனம் கண்டும், அவற்றின் அமைவிடம், வரலாறு, போன்றவற்றையும், ஆய்ந்தனர். 12 திருமுறை, 18000+ பாடல்கள் என ஆழந்து பரந்த கடலாதாலால் மொழியறிவின் வழி முதலில் இது தலப்பெயர், பிறகு அத்தலம் எங்குள்ளதெனும் வரலாறிணைந்த புவியியல் அறிவுடன் ஆய்வு, பல காலும் நடந்த வண்ணமே, உள்ளன.

இவ்வகைத் தொன்மப் புகழுடைய, சீர்மை மிகு சிவத் தலங்களை, வாய்ப்புகள் கிடைக்கும் காலத்து, பாடல் பெற்ற தலங்களுடனும், தனித்தும், வழிபடுவது, கூடும். அவ்வகையில் காணக்கூடிய தலம் நடுநாட்டு தென் எல்லை கடந்து, சோழநாட்டு வடஎல்லையிலுள்ள, ஊற்றத்தூர் ஆகும். திருச்சி>>சென்னை பெருவழிச் சாலைக்கு மிக அருகேயே, (15கிமீ-சமயபுரம்) கடந்து 35 கிமீ தூரத்தே, பாடாலுர் எனும் சிற்றூரின்கண், கிழக்கே செல்லும் நல்ல சாலை வழியில், 5 கிமீ தொலைவில், மிகச்சிறப்பான கற்றளி ஒன்றில், நகர மக்கள் ஆர்ப்பாட்டரவம் ஒன்றுமின்றி, தூய்மை மிகு தியானச் சூழ்நிலையில், ஊற்றத்தூர் ‘உடையாரை‘ வழிபடலாம்.

நல்லதோர் தேர், 16கால் வெளிமண்டபம், 5 நிலை 7கலச ராஜகோபுரம், தலப் பெயருக்கேற்ப நந்தியம் பெருமானருகு கோயிலினுள் நடுவண் திருமஞ்சன ஊற்றுக் கிணறு, 63 நாயன்மார் படிமவரிசை, ஐம்பொன் உடன் கருங்கல்லாலும் ஆடல்வல்லான், உருவமெனும் தனிச் சிறப்புகளுடன் அம்மையுடனும் உறைகின்ற

“பிறையூரும் சடைமுடிஎம் பெருமானைத்
தொழஇடர்கள் தொலையும் அன்றே”
எனும் அப்பரடிகள் தாண்டக அருள் வரிகளை நம்பி வழிபடுவோமே.

இறைவர் >>>>> தூய மாமணீசுவரர்
இறைவி >>>>> அகிலாண்டேசுவரி
என் கைபேசிக்கருவி உள்கொண்ட படங்களை கண்டு தேர்க.

ஊற்றத்தூர் தலத்தினைப் பேசும் தேவாரப் பாடல்கள் இவை :-

திருநாவுக்கரசர் :
சேத்திரக்கோவைத் தாண்டகம் – திருமுறை 6.70.10
நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
உறையூர் கடல் ஓற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஏர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாய நாதனையே காணலாமே

திருநாவுக்கரசர் :
அடைவு திருத் தாண்டகம் – திருமுறை 6.71.3
பிறையூரும் சடைமுடிஎம் பெருமான் ஊர்
பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழுர் தானும்
துடையூரும் தொழஇடர்கள் தொலையும்அன்றே

பெயர்வழித் திருமுறை © பாடல்கள்
சிவபெருமான் ஓர் ஊற்று

(1)
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி 1
அப்பரடிகள் தேவாரம் (6.55)
போற்றித் திருத்தாண்டகம்

(2)
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்(து) அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்(கு) உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மாணிக்கவாசகர் திருவாசகம்
சிவபுராணம் (8.1)

(3)
அழிதரும் ஆக்கை ஒழிச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மாணிக்கவாசகர் திருவாசகம்
திரு அண்டப் பகுதி (8.3)

(4)
போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தானென்றும் அதுபெரும் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே 28
திருமூலர் திருமந்திரம்
தோத்திரம் (10.3009)

மேலும், ஊருக்குள், சிவன்கோயிலுக்கு தென்மேற்கு திசையில், திருமாலுக்கு ஓர் பெரிய கோயில்.உள்ளது. அதான்று, ஓரிரு கிமீ தூரம் மேற்கே, கடத்துப் பாறைகள் மேல், ஓர் முருகன் கோயிலும், காண்கின்றது. மற்றும், பாடலுரிலிருந்து இவ்வூரினுக்கு செல்லும் வழியில், *தெரணி*யிலும் நல்ல பழமையான கோயிலொன்று உள்ளது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க