இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(26)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

சிலநேரங்களில், சில பொழுதுகளில் ஏதோ உணர்வுகள் மனதினில் ஊசலாடும். கண்முன்னே, ஊடகங்களில் என்று பலவழிகளில் நாம் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்ட நிகழ்வுகள் மனதை ஏதோ செய்யும். அப்படியான ஒரு பொழுதை, அந்தப் பொழுதினில் எனது மனதில் பதிந்த கருத்துக்களை உங்களுடன் இம்மடலில் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆசையின் விளைவே இது.

ஒரு ஐந்து வயதுச் சிறுமி ஈழத்தின் அவலத்திலிருந்து தப்பி தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து இனியாவது வாழ்வில் அமைதி கிட்டும் எனும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஒரு ஈழத்து இளம் சிறுமி. தனக்கேயுரிய குழந்தைகளுக்கான விளையாட்டாகத் தனது மாமனின் கடைதனில் ஆடி மகிழ்ந்திருந்த வேளை அச்சிறுமியின் வாழ்வையே திசை திருப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.

என்ன ஒரேயடியாகக் கதையளக்கிறானே என எண்ணுகிறீர்களா? இல்லை உண்மையாகவே சுமார் ஒன்றரை வருடங்களின் முன் நடந்த ஒரு நிகழ்வையே குறிப்பிடுகிறேன்.

துஷா கமலேச்வரன் எனும் ஈழத்தின் குழந்தைகளில் ஒன்று. ஐந்தே ஐந்து வயதாக இருக்கும் போது சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னால் லண்டனில் உள்ள “ஸ்டாக்வெல் (Stockwell) எனும் இடத்தில் உள்ள தனது மாமனின் கடையில் ஆடி மகிழ்ந்திருந்தது.

அப்போதுதான் லண்டனின் பெயரையே மாசுபடுத்தும் கோஷ்டி மோதல்களில் ஈடுபடும் குழுக்களைச் சேர்ந்த மூவர் அக்கடையினில் நுழைகிறார்கள் தொடர்ந்து நடந்த அசம்பாவிதங்களில் அக்காடையர்களால் விடுக்கப்பட்ட அகோரத் துப்பாக்கி வேட்டு ஒன்று வழி தவறி இந்தச் சிறுமியைத் தாக்கி விடுகிறது..

பலத்த காயத்துடன் விழுந்த சிறுமி அவசரச் சத்திர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு இருமுறை துடிப்பிழந்த அந்தச் சிறு இதயத்தை அரும்பாடுபட்டு இயங்க வைத்தார்கள் அற்புத வைத்திய நிபுணர்கள்.

இன்று ஒன்றரை வருடங்களின் பின்னால் சக்கர நாற்காலியின் உதவியுடன் புன்னகை பூத்த வதனத்துடன் வலம் வரும் அந்தச் சிறுமியின் முகத்தில் ஒளிவிட்ட நம்பிக்கையை பி.பி.ஸி இணையத்தளத்தில் பார்த்த போது உள்ளம் நெகிழ்ந்தது.

பள்ளிக்கூடம் போகப் பிடிக்குமா? எனக்கேட்ட நிருபருக்கு புன்னகையுடன் ஆமாம் என்று பதிலளித்த சிறுமி தான் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுவே தனது கனவு என்று கூறியது.

இனி இக்குழந்தை தன் வாழ்நாளில் நடப்பது சந்தேகமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

இக்குழந்தையின் எதிர்காலப் பராமரிப்புக்கு ஏற்படப்போகும் செலவினை எண்ணும் போது நெஞ்சமே பதைக்கிறது. இந்த நேரத்தில் தான் நாம் வாழும் இந்த நாட்டில் வாழும் மனிதாபிமானத்தின் ஆழம் புரிகிற செயலொன்று கடந்த சில நாட்களின் முன்னால் நடைபெற்றது.

அது என்ன என்கிறீர்களா?

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் போலீஸாரைப் பற்றிய அபிப்பிராயம் சிறிது எதிர்மறையாகவே இருக்கும் ஆனால் இல்லை நாமும் மனிதர்தாம் எமக்கும் உணர்வுகள் உண்டு சில போலீசார் விடும் தவறுகளுக்கு நாமனைவரும் பொறுப்பல்ல என்று நிரூபித்திருக்கிறார்கள் இந்தச் சிறுமியின் வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த துப்பறியும் பிரிவைச் சேர்ந்த இலண்டன் போலீஸார்.

பொதுவாக ஒரு வாகன விபத்தில் ஒரு சிறுமி அகப்பட்டு அவரது இயக்கத்தை இழந்து விட்டால் காப்புறுதியின் மூலம் அக்குழந்தையின் வாழ்நாள் பராமரிப்புக்கு ஏற்ற நஷ்ட ஈட்டுத்தொகை கிடைக்கும் ஆனால் இத்தகைய ஒரு காயரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு கிடைக்கும் நஷ்ட ஈடோ மிகவும் சொற்பமானது.

அதை உணர்ந்த இந்த வழக்கிலீடுபட்ட போலீஸார் இங்கிலாந்தின் அதி உயரமான மூன்று மலைகளில் ஏறுவதன் மூலம் இக்குழந்தைக்காக நிதிச் சேகரிப்பில் ஈடுபட்டு ஏறக்குறைய £180,000 பவுண்ட்ஸ் வரையில் சேகரித்துள்ளார்கள். இது இக்குழந்தையின் எதிர்காலத்திற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

இந்த மலையேறும் கருணைப் பயணத்தில் ஈடுபட்ட ஒரு போலீஸ் ஆபிசர் கூறும்போது “இப்பயணத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் குழந்தைகள் உண்டு, இந்தக் குழந்தைக்கு நடந்த கொடுமை எங்கள் மனதை மிகவும் பாதித்தது. இக்குழந்தையின் ஊனத்தின் காரணமான காடையரைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வகையிலும், இக்குழந்தைக்கும் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும் அனுசரணை அளிப்பதிலும் நாம் இக்குழந்தையுடன் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாகப் பழகி வந்துள்ளோம். எமக்கு இது அவர் மீது பாசத்தை ஏற்படுத்தியது ” என்றார்.

பறிபோய்விட்ட அந்த இனிய சிறுமியின் சுதந்திரத்தை எத்தனை கோடிப் பணமும் பெற்றுத் தந்து விடாது ஆனால் மிகவும் சிக்கலாக அமையப் போகும் அவரது எதிர்கால வாழ்க்கையின் சிரமத்தை ஓரளவு குறைக்க உதவும்.

மனித நேயம் என்பது மதம், மொழி, இனம், நிறம் எனும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிற்பது. மனிதம் ஒன்றே உலகின் மகத்துவம். இதனை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த போலீசாரின் கருணை உணர்த்தி நிற்கிறது.

அது மட்டுமின்றி போலீஸாரும் மனிதரே அவர்களின் நெஞ்சிலும் ஈரம் இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நம்பிக்கையின் சிகரத்தையே இச்சிறுமி தொட்டுக்காட்டி எம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார். அவரது விருப்பப்படியே அவர் ஒரு டாக்டராகி சமுதாயத்திற்கு அரும்பணியாற்றி தமிழன்னையைத் தலைநிமிரச் செய்வார் என்பது எனது திடமான நம்பிக்கை.

இதற்காகத்தான் ஒரு கவிஞர்

எங்கே போய்விடும் காலம் அது
என்னையும் வாழவைக்கும் – உன்
இதயத்தைத் திறந்து வைத்தால் அது
உன்னையும் வாழ வைக்கும் ” என்றாரோ

நன்றி — படங்களுக்காக (பல இணையத்தளங்கள்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(26)

 1. மறைந்து போன மனிதநேயம்……………………!!!
  பரஸ்பர அன்புகாட்டி
  மனிதனை மனிதன் நேசி – அதுவே
  மகத்தான பேருதவி
  இதுவே! மனிதநேயம்
  வளர்க்கும் உரம்!
  அன்பு உலகை தாங்கும் – இனி
  மனித நேயம் உலகில் ஓங்கும்!
  -விஷ்ணுதாசன்.

  அன்புடன் இ . டினேசன்.

Leave a Reply

Your email address will not be published.