Category: Featured

Featured

  • பழந்தமிழக வரலாறு -2

    காலமும்  வரலாறும்

     கணியன்பாலன்

    காலம் குறித்தப் புரிதலோ, காலம் குறித்தத் தெளிவோ இன்றி எழுதப்படும் வரலாறு, ஒரு முழுமையான வரலாறாக இருக்க முடியாது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும், கி.பி. 21ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமிடயேயான வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டு காலகட்ட உலகமும் வேறு வேறானவை. அதில் வாழ்ந்த, வாழ்ந்து வருகிற மனிதர்களும் வேறு வேறானவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். சான்றாக 17ஆம் நூற்றாண்டு தமிழன் ஒருவனால், 21ஆம் நூற்றாண்டுத் தமிழனின் வாழ்வை கற்பனை கொண்டுகூட பார்க்கமுடியாது. இரண்டு வாழ்வுக்குமிடையேயான வாழ்க்கை, வசதிகளும், சமூகத் தனிமனித உறவுமுறைகளும், அரசியல், பொருளாதாரம் கலை, இலக்கியம் போன்றவைகளும் கற்பனையிலும்கூட காணமுடியாத அளவு மாற்றம் அடைந்துள்ளன. ஆகவே வரலாற்றில் காலம் மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டாகவேண்டும். நவீன இயற்பியலில் வெளி, காலம்(SPACE & TIME) ஆகிய இரண்டும் அனைத்து அறிவியலுக்குமான அடிப்படையாகக் கருதப்படுகிறது. வெளி-காலம் ஆகியவற்றால் ஆன பொருளாக நமது அண்டம் இருக்கிறது எனவும், காலம் என்பது நமது அண்டத்தின்(UNIVERSE) நான்காவது பரிமாணமாக(FOURTH DIMENSION) இருக்கிறது எனவும் நவீன அறிவியல் கூறுகிறது. நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன் ஆக்கிங் அவர்கள் எழுதிய “காலம்” என்ற நூல் அண்டம், காலம் முதலியன குறித்த விரிவான விளக்கத்தைத்தருகிறது என்பதோடு காலத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

    பழந்தமிழர் மரபும் காலமும்:

    “முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்

    இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே” என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம், அகத்திணையியல்-4). இங்கு ‘நிலம்’ என்பது இடம் அல்லது வெளி என்ற பொருளிலும், ‘பொழுது’ என்பது காலம் என்ற பொருளிலும் சொல்லப்பட்டுள்ளது. நமது பழந்தமிழக மரபுப்படி, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றிலும் முதற்பொருள் என்பது அனைத்திற்கும் அடிப்படையாகக் கருதப்பட்டது. நவீன அறிவியல், வெளி, காலம் ஆகிய இரண்டையும் அனைத்திற்கும் அடிப்படையாகக் கருதுவதுபோன்றே தொல்காப்பியரும் இடம், காலம் என்பதை அனைத்திற்கும் அடிப்படையான முதற்பொருள் எனக் கூறியுள்ளார். அதனால்தான் மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும்”(one  of  the finest  monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று தொல்காப்பியம்” எனக்கூறியுள்ளார் எனலாம்(1).

    எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்தத் தொல்கபிலர் ஒரு தமிழர் ஆவார் என்பதோடு அவர் ஒரு பொருள்முதல் மெய்யியல் அறிஞரும் ஆவார். அவர் வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் எனவும், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனவும் கூறியுள்ளதாகக் கூறுகிறார் கிரபின் என்கிற உருசிய அறிஞர்(2). இந்த எண்ணியச்சிந்தனையை அடிப்படையாகக்கொண்டுதான் இடம், காலம் ஆகியவற்றின் இயல்புகள்தான் முதற்பொருள் என்கிறார் தொல்காப்பியர். ஆகவே நமது முன்னோர்கள் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு தொல்கபிலரும்,  தொல்காப்பியருமே  சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆவர். அறிவியல், மெய்யியல் ஆகியவற்றில் காலம் எந்தளவு முக்கியமானதோ அதைவிட ‘வரலாறு’ என்பதில் காலத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஆகவே காலம் பற்றிய தெளிவு இன்றி படைக்கும் வரலாறு ஒரு முழுமையான வரலாறாக இருக்காது.

    பழந்தமிழக வரலாற்றில் காலம்:

    பழந்தமிழக வரலாற்றில் காலம் குறித்தத் தெளிவு இதுவரை உருவாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் போன்றவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் அவர்களை கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுகிற அவலநிலை இருந்துவருகிறது. இரண்டுக்குமிடையே நான்கு நூற்றாண்டுகள் கால இடைவெளி இருக்கிறது. முன்பு கூறியதுபோல் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களை கி.பி. 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுவதுபோல்தான் இதுவுமாகும். “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள், இந்தியத் தமிழகத் தத்துவ வரலாறு, வெளிநாட்டார் குறிப்புகள், வட இந்திய வரலாறு, உலக வரலாறு, இனக்குழு வரலாறு & நகர அரசு உருவாக்கம் போன்ற பலதளங்களில், பலகோணங்களில் ஆய்வு செய்து நமது பழந்தமிழக வரலாற்றின் காலத்தை ஓரளவு துல்லியமாகவே உறுதி செய்துள்ளது.

    அதன்படி சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலகட்டம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட வேந்தர்கள், வேளிர்கள் போன்ற ஆட்சியாளர்களின் காலகட்டம் என்பது கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டமாகும். சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகை நூல்களும், பத்துப்பாட்டில் 2 முதல் 9 வரையான எட்டு பாடல்களும், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் முதலியனவைகளும் சேர்ந்து ஆகமொத்தம் உள்ள 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு நமது வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.

    தொல்கபிலர் காலம்:

    எண்ணியம் என்கிற சாங்கியம் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது எனவும் மகாபாரதத்திலேயே சாங்கியம் சநாதமானது(காலங்கடந்தது) எனக் கூறப்பட்டுள்ளது எனவும், உபநிடதங்கள் கூட சாங்கியம் அவற்றுக்கு முந்தையது எனக்காட்டுகின்றன எனவும் சாங்கியம் புத்தருக்கு முந்தையது எனக் கார்பேயும், கெச்.பி. சாத்திரியும் வாதிடுகின்றனர் எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார்(3). மேலும் மெய்யியல் அறிஞர்கள் பலர் சாங்கியம் கிட்டத்தட்ட வேதத்துக்கு முந்தைய ஆரியமில்லாத சிந்தனைப்போக்கு எனக் கருதுகின்றனர் எனவும்(4), கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்கிற தொன்மை உபநிடதங்களின் காலத்தைக்குறிக்கிறது எனவும் ‘இந்தியாவில் மெய்யியல்’ என்கிற நூல் கூறுகிறது(5). சாங்கியம் என்கிற எண்ணியத்தின் மூலவர் வடமரபுப்படி கபிலர் எனவும் சங்க இலக்கியங்களைப் பாடியுள்ள தொல்கபிலரே சாங்கியத்தின் மூலவர் எனவும்  அவர் தமிழர்தான் எனவும் பல கோணங்களில் ஆய்வு செய்து உறுதி செய்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(6). ஆகவே மிகப்பழங்காலத்தைச் சேர்ந்த, மகாபாரதத்துக்கும் உபநிடதங்களுக்கும் முந்தைய சாங்கியம் என்கிற எண்ணியத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதால் சாங்கியத்தின் மூலவரான தொல்கபிலரின் காலம் கி.மு. 750 ஆகும்.

    தொல்கபிலர் பாடிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. தொல்கபிலரது தொன்மையையும், அவரது சிறப்பையும் குறிக்கும் விதத்தில்தான் சங்க இலக்கியம் இவரைத் தொல்கபிலர் எனக் குறித்துள்ளது. இந்திய மொழிகளில் சாங்கியம் என்கிற எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194ஆம் பாடல் ஆகும். சங்ககாலப் புலவரான இவர் மகாவீரர், புத்தர் ஆகியோரின் சம காலத்தவராக, அதாவது கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்(7). ஆகவே தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார் ஆகியவர்களின் காலங்களைக் கொண்டு சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் தொடங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

    நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு:

    முத்தொள்ளாயிரம் என்கிற நூல் பாண்டியன் மாறன் வழுதி, சோழன் நலங்கிள்ளி, சேரன் குட்டுவன் கோதை ஆகிய மூன்று சமகால வேந்தர்களைப் பற்றிப் பாடுகிறது என்பது எமது ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்நூலின்படி சோழன் நலங்கிள்ளி உச்சயினிவரை படையெடுத்தான் என்பதும் அறிந்து கொள்ளப்பட்டது. டி.டி. கோசாம்பி அவர்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் தெற்கேயிருந்து வந்த சாதவாகனர்கள் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தனர் என்கிறார்(8). சுங்கவம்சத்தின் ஆட்சிக்காலம் என்பது கி.மு. 187 முதல் கி.மு. 75 வரை ஆகும். சாதவாகன அரசுகள் பற்றிய ஆய்வில் கி.மு.180-124 வரை சதகர்ணி என்பவன் ஆண்டான் எனவும், அதன் பின் வந்தவர்கள் பலவீனமானவர்கள் எனவும் அதற்குப்பின் வலிமையாக இருந்தவன் புலுமாயி(கி.மு.30-6) என்பவன் எனவும் அறியப்பட்டது. ஆகவே கி.மு. 124 முதல் கி.மு. 30வரை சாதவாகனர்கள் மிகவும் பலவீனமாக இருந்தார்கள்(9). ஆதலால் அவர்களால் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்(கி.மு.100-75) உச்சயினியைத் தாக்கியிருக்க முடியாது என்பது அறியப்பட்டது. எனவே தெற்கேயிருந்து வந்த வேறுயாரோதான் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தார்கள் என முடிவு செய்ய முடிந்தது.

    தலைவடிவ நாணயங்களை வெளியிட்ட பாண்டியன் வெள்ளியம்பலத் துஞ்சிய பெருவழுதி, சேரமான் மாக்கோதை ஆகியவர்களுக்குப் பின் வந்தவர்கள்தான் முறையே பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன் கோதை ஆகிய வேந்தர்கள் ஆவர். இந்தத் தலைவடிவ நாணயங்களை வெளியிட்டவர்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதால் அதன்பின் ஆட்சிக்கு வந்த   பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன்கோதை ஆகியவர்களின் ஆட்சிக்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் துவக்கம் ஆகும். பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன்கோதை ஆகிய இருவரும்  முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்ற  சோழன் நலங்கிள்ளியின் சமகாலத்தவர்கள் ஆவர். மேலும் குட்டுவன் கோதை வெளியிட்ட நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் சோழன் நலங்கிள்ளியின் ஆட்சிக்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் துவக்கம்(கி.மு.100-75) என முடிவு செய்யப்பட்டது. அவன் உச்சயினி மீது படையெடுத்தான் என முத்தொள்ளாயிரம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே சோழன் நலங்கிள்ளிதான் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்(சுமார் கி.மு.85-80), உச்சயினி மீது படையெடுத்து சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தவன் என முடிவு செய்ய முடிந்தது.

    இறுதிக்காலம்:

    நலங்கிள்ளிக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவனது மகன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னிதான் சங்ககால இறுதிச் சோழவேந்தன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.மு. 75-50 வரையான ஆண்டுகள் ஆகும். சேர, பாண்டிய வேந்தர்களின் ஆட்சிக்காலமும் கி.மு. 50க்குள் முடிவடைகிறது. இவர்களுக்குப்பின் வந்த வேந்தர்கள் குறித்தக் குறிப்புகள் சங்ககாலப் பாடல்களில் இல்லை. ஆகவே சங்ககாலத்தின் இறுதிக்காலம் என்பது கி.மு. 50 என வரையறை செய்யப்பட்டது. ஆகவே தொல்கபிலர் காலம் சங்ககாலத்தின் தொடக்ககாலம் என்பதால், சங்ககாலம் என்பது கி.மு.750 முதல் கி.மு.50 வரை என முடிவு செய்யப்பட்டது.  இந்த சங்ககாலத்தில் இருந்த ஆட்சியாளர்களின் காலத்தை(கி.மு.350-50) பத்து காலகட்டமாகப் பிரித்து, அவர்களின் காலகட்டங்களையும், ஆண்டுகளையும் துல்லியமாகக் கண்டறிந்து, அவர்களின் காலவரிசைப்படியான  வரலாற்றை “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் கட்டமைப்பதற்குக் கீழ்கண்ட சில சிறப்பம்சங்கள் அடித்தளமாக இருந்துள்ளன.

    சிறப்பம்சங்கள்:

    1.திட்டவட்டமான சான்றுகளைக்கொண்ட உலக வரலாற்றுக்காலத்தை அடிப்படையாகக்கொண்டு தமிழக வரலாற்றுக்காலத்தை கணித்துக் காலநிர்ணயம் செய்தது. கிரேக்க வீரன் அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பு ஆண்டுகளைக் கொண்டும், மகத அரசில் ஏற்பட்ட நந்தர்-மௌரியர் ஆட்சி மாற்ற ஆண்டுகளைக் கொண்டும், அசோகனின் கல்வெட்டு ஆண்டுகளைக்கொண்டும், மாமூலனாரின் காலத்தையும், செருப்பாழிப் போரின் ஆண்டையும் கணித்துக் காலநிர்ணயம் செய்தது.

    2.பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகைநூல்களையும் பத்துப்பாட்டில் 2-9 வரையான எட்டு பாடல்களையும், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றின் ஒரு சில விடயங்களையும் மட்டும் பயன்படுத்திக் கொண்டது; சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் ஆகிய பிற்கால நூல்களில் உள்ள விடயங்களை, மேலே குறிப்பிட்ட ஆதார இலக்கியங்களின் தரவுகளோடு இணைந்து போகும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொண்டது.

    3.சங்ககாலப் புலவர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளையே தங்கள் பாடல்களில் பாடியுள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதனை சங்க காலத்துக்கான காலவரிசைப்படியான வரலாற்றைக் கணித்துக் கால நிர்ணயம் செய்யப் பயன்படுத்திக் கொண்டது.

    4.புலவர்கள் பாடிய தலைவர்கள், தலைவர்களைப் பாடிய புலவர்கள் என்கிற தலைவர்கள்-புலவர்கள் தொடர்பை ஒரு முறைப்படுத்தி, வரையறுத்துத் தொகுத்து, அதனைக்கொண்டு கோட்டியல் வரைபடமுறையை உருவாக்கி, தலைவர்கள்-புலவர்களின் கால கட்டங்களையும், அவர்களின் ஆட்சி ஆண்டுகளையும் கணித்துக் கால நிர்ணயம் செய்து தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி தொகுத்தது.

    5.இனக்குழு நிலையில் இருந்து அரசு உருவான காலகட்டம் வரையான வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை மார்கன், ஏங்கெல்சு, டாங்கே ஆகியவர்களின் நூல்களில் உள்ள சிவப்பிந்திய, கிரேக்க, உரோம, இரிக் வேதகால இனக்குழுக்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை தமிழக சங்ககாலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் ஒப்பிட்டு சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைபெற்ற காலம் என்பதை நிறுவியது.

    6.அசோகன் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டு, புகளூர்க் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு போன்றவைகளின் ஆண்டுகளையும், முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்,  கொல்லிப்பொறை, மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் ஆண்டுகளையும், இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டையும் நமது சங்ககால இலக்கியக் கணிப்பு ஆண்டுகளோடு பொருந்திப் போகச் செய்து, தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி வரையறுத்து நிர்ணயித்திருப்பது.

    7.தொன்மங்கள், புராணங்கள், வாய்மொழிக்கதைகள் போன்றனவற்றை வரலாற்றுச் சான்றாதாரமாகக் கொள்ளாது, முழுமையாக அவைகளைத் தவிர்த்திருப்பது, பிற சான்றாதாரங்களுக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் அவைகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பது; பதிகம், பாயிரம், அடிக்குறிப்புகள் போன்றனவற்றைப் பிற சான்றாதாரங்களோடு இணைத்துப் பயன்படுத்தியிருப்பது.

    பார்வை:

    1.உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண் பதிப்பகம், 2009,  பக்: 64, 68-71.

    2.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ வி.கிரபின், இரசிய நூல், முன்னேற்றப் பதிப்பகம், 1987, மாஸ்கோ பக்:45, 46..

    3.இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்: 196.

    4,5.இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா, தமிழில் சா. செயராஜ், டிசம்பர்-2011, NCBH, பக்: 23, அணிந்துரை-XII.

    6.க.நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சரக சம்கிதையும், 2009, பக்: 21.

    7.க.நெடுஞ்செழியன், ‘சங்கஇலக்கியக் கோட்பாடுகளும், சமயவடிவங்களும்’ இரண்டாம்பதிப்பு, 2009, பக்: 21

    8.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, தமிழில்-ஆர்.எசு. நாராயணன், செப்டம்பர்-2006, NCBH,  பக்:388.

    9.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 275, 310-313.

    Share
  • பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 1

    -பேரா. பீ.பெரியசாமி

    1:0 முன்னுரை

    பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக, இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசியட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல், கண் துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயஞ் செய்தல், அவர் தமர் உவத்தல், அறனழிந்துரைத்தல், ஆங்கு நெஞ்சழிதல், எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல், கலக்கம் எனும் இருபதையும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.22) இம்மெய்ப்பாட்டினையும் இதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியல் ஆராயவுள்ளது.

    1:1 பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளதன் காரணத்தை,

    “மேல் நடுவ ணைந்திணைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் கைக்கிளைக் குரியவருமாறு உணர்த்தினான். இனி இச்சூத்திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று” இவற்றுள், இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை யல்வழி வரும் என்றவாறு.”  (இளம்.,மெய்.22)

    என இளம்பூரணர் கூறியுள்ளார். முதலில் எண்வகை மெய்ப்பாட்டினைக் கூறிய தொல்காப்பியர் அதனைத் தொடர்ந்து அகத்திற்கும் புறத்திற்குமான மெய்ப்பாடுகளைக் கூறினார். அடுத்ததாக அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக ஆறு அவத்தைகளைக் கூறினார். அடுத்து பெருந்திணைக்குரிய இம்மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார்.

    1:1:1 இன்பத்தை வெறுத்தல்

    இன்பத்தை வெறுத்தலென்பது, “கோலஞ்செய்தல் முதலியனவற்றை வெறுத்தலும் தென்றலும் நிலவு முதலாயினவற்றை வெறுத்தலும் இவ்வாறு களவின்கண்வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண் வரிற் இயல்வழி மங்கல மின்றாம்.” (மேலது) எனவும், “யாழுங் குழலுங் பூவுஞ் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். அவை காமத்திற்கு ஒருவகையான் ஏதுவாகலின் ‘மன்னிய வினைய நிமித்த’ மெனப் படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாகா தன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் ‘நலத்தக நாடின் அதுவே’ என்றானென்பது.” (பேரா.,மெய்.22) எனவும், “தனிப் படர்மெலியுங் காதலர், கூட்டத்தின் முன்னும் உடனுறைபொழுதும் தமக்கினி தாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்பமாதல் இம்மனவியல் பற்றியதாகும்.” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர் உரைகொள்வர். தலைவனோடு சேர்ந்திருக்கும் காலத்தில் இன்பத்தை ஏற்படுத்திய தென்றல், நிலவு முதலியன அவனில்லாத நேரத்தில் காணும்போது துன்பத்தை ஏற்படுத்தும். அதனால் இன்பத்தை ஏற்படுத்தியவற்றை வெறுத்து ஒதுக்குதலே இன்பத்தை வெறுத்தல் எனும் மெய்ப்பாடாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1127-ஐயும்; பாரதி குறள்.396 – ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர்,

    “நின்வலித்த மைவென் மன்னோ வல்கற்
    புன்கண்
    மதலையொடு பொருந்திக் கொடுங்கோற்
    கல்லாக்
    கோவல ரூதும்
    வல்வாய்ச்
    சிறுகுழல் வருந்தாக் காலே.” (அகம்.74)

    எனம் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “ஊதிப்பழகாத கோவலர்கள் (சிறுவர்கள்) ஊதுகின்ற வாயையுடைய சிறிய வேய்ங்குழலோசை வருத்தாக்கால் கல்லா  – என்னை வருத்துமென்றறியாத எனினுமாம் என்பதில் கோவலர்கள் ஊதுகின்ற குழலின் ஓசையின் இன்பத்தை வெறுத்து தலைமகன் பிரிவின்கண் தன்நிலையைத் தோழிக்கு தலைவி சொல்லியது. இதில் ‘இன்பத்தை வெறுத்தல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.  இதனை, ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கல்லாக் கோவல ரூதும், வல்வாய்ச் சிறுகுழல் வருந்தாக் காலே’ என்புழி இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கு ஏதுவாம் என்பது கருத்து என்றார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.178) என ந.மு. வேங்கடசாமி கூறியுள்ளார். இது பேராசிரியர் கருத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாய் உள்ளது. மேலும் பேராசிரியர்,

    “…………………… …………………. எல்லி,
    மனைசேர் பெண்ணை மடிவா யன்றி
    றுணையொன்று
    பிரியினுந் துஞ்சா காணெனக்
    கண்ணிறை
    நீர்கொண்டு சுரக்கு
    மொண்ணுத
    லரிவையா னென்செய்கோ வெனவே” (அகம்.50)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், இரவில் மனையைச் சேர்ந்த பனையிலுள்ள மடிந்த வாயையுடைய அன்றில் தன் சேவலராகிய ஒன்று பிரியினுந் துயிலாது காண். அங்ஙனமாக நான் பிரிந்து யாது செய்வேனென்று கண்கள் நிறைந்த நீர்கொண்டு (பின் அதனை அழித்து) மறைப்பாளெனத் தோழி பாணனை நோக்கி கூறுகின்றாள். ‘கண்ணிறை நீர்கொண்டு சுரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே’ என்பதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய இதில் இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.

    “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து, இன்பத்தை வெறுத்தல் என்பது இன்பத்திற் கேதுவாய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல் என்று கூறி, அதற்கு ‘எல்லி மனைசேர்….. என் செய்கோ எனவே’ என்னும் பகுதியை எடுத்துக்காட்டினார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.124) என ந.மு.வேங்டசாமி கூறியுள்ளார். இருப்பினும் இது எவ்வாறு பொருந்தாது என்பது மேலே கூறப்பட்டது.

    1:1:2  துன்பத்துப் புலம்பல்

    துன்பத்துப் புலம்பலென்பது, “துன்பத்தின் கண்ணே புலம்புறுதல்.” (இளம்.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாது துன்புறுங்காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறு கின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந்துணரினென்றவாறு.” (பேரா.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் படருற்று மெலிந்து வருந்துதல், இதுவும் அழுகைக்குப் பொருளாக வரும்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகனின் பிரிவைத் தாங்க இயலாத தலைமகள் அதனை நினைந்து புலம்பல் துன்பத்துப்  புலம்பலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1162 ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் குறள்.1167 ஐயும்; மேலும், பாரதி குறள்.1162 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும் பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

    “நின்னுறு விழுமங் களைந்தோ
    டன்னுறு
    விழும நீந்துமோ வெனவே” (அகம்.170)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் நினது மிக்க துன்பை நீக்கினோள் தனது மிக்க துன்பத்தை நீக்குவாளோ? எனத் தலைவனிடம் கூறக்கேட்டு நண்டிடம் தலைவி கூறியது. இதில் ‘துன்பத்துப் புலம்பல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது இதனைக், “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி, தலைவனுடன் கூடி, முன்பு பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது.” (நா.மீனவன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.113) எனவும், “ ‘இன்பத்தை வெறுத்தல்’  என்னும் சூத்திர உரையினும் இச்செய்யுளைப் பேராசிரியர் காட்டினார்.” (புலியூர்க் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.109) எனவும், “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து  ‘நின்னுறு விழுமங்களைந்தோள், தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே’ என்பது துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும் ………………. கூறினார் பேரா” (ந.மு. வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, மணிமிடை பவளம், ப.101) எனவும் அகநானூற்று உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். இதன்வழி இவ்வகப்பாடலில் இம்மெய்ப்பாடு பயின்று வந்துள்ளமைப் புலப்படுகிறது.

    1:1:3 எதிர்பெய்து பரிதல்

    எதிர்பெய்து பரிதலென்பது, “தலைமகன் முன்னின்றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல்” (இளம்.,மெய்.22) எனவும், “உருவு வெளிப்பாடு; அது தலைமகனையும் அவன் தேர்முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்து கொண்டு பரிந்து கையறுதல்.” (பேரா.,மெய்.22) எனவும், “உருவெளி கண்டிரங்குதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகள் காதல் மிகுதியால் தலைமகன் தன்னெதிரே இல்லாத நிலையிலும் எதிரே இருப்பதாகக் கண்டு இரங்குதல் எதிர்பெய்து பரிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணர் குறள்.1123 ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் ஐங்.418 ஐயும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர், குறுந்.301.ஐயும்;  தாசன் குறள்.1126 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:4 ஏதம் ஆய்தல்

    ஏதமாய்தலென்பது, “குற்றமாராய்தல்” (இளம்.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவும் ஆராய்தல். அது நொதுமலர் வரையக் கருதுவர் கொல்லெனவும், பிரிந்தோர் மறந்து இனிவாரார் கொல்லெனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி” (பேரா.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு இடையூறாம் தீமை பலவும் ஆராய்தலாம் ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தனர் கொல்லெனத் துயரல், ஏதிலர்வரைவின் தீதினையஞ்சல் போல்பவை யெல்லாம் இதில்பாலடங்கும்.” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

     ஏதமாய்தலென்பது குறியிடத்தே கூட்டத்திற்கு வரும் தலைவனுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1165 ஐயும்; பாரதி குறுந்.268, 217, 307, கலி.11 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், குறுந்.307 ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

    “வாரார் கொல்லெனப் பருவருந்
    தாரார்
    மார்பநீ தணந்த ஞான்றே” (அகம்.150)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாரையணிந்த மார்பனே! நீ பிரிந்தகாலை வாரார்கொல் என்று துயருறுவாள் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, “ஏதம் ஆய்தல்’  என்னும் மெய்ப்பாட்டிற்கு,  ‘வாரார் கொல் எனப் பருவரும் தாரார் மார்ப நீ தனந்த ஞான்றே’ என்பதை ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்துப் பேராசிரியர் காட்டினார்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், பக். 67-68) எனப் புலியூர் கேசிகன் தமது உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப. 63), “மா.பரமசிவம்” (மா.பரமசிவம் அகநானூறு, ப. 186) ஆகியோரும் தமது அகநானூற்று உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளனர்.

     1:1:5  பசியட நிற்றல்

    பசியட நிற்றலென்பது, “உண்ணாமை” (இளம்.,மெய்.22) எனவும், “பசிவருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல்” (பேரா.,மெய்.22) எனவும், “தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும் பசிப்பிணியை அறவே தாம் அடும் ஆற்றல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தனக்கு பசி உண்டாகியும் உணவை உண்ணாது தலைவனின் பிரிவை எண்ணி வருந்துதல் பசியட நிற்றலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும். குறள்.1128 ஐயும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,

    “அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
    பாலு
    முண்ணாள் பழங்கண் கொண்டு
    நனிபசந்
    தனளென வினவுதி.” (அகம்.48)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், அன்னாய் வாழீ! நான் சொல்வதை விரும்பு. அன்னையாகிய நின்மகள் பாலும் உண்ணுகின்றிலள். துன்பங்கொண்டு மிகவும் நிறம் வேறுபட்டாள், என்று வினவுகின்றாய் என்பதில் பாலும் உண்ணாள் என்பது பசியட நிற்றலை வெளிக்காட்டியது. இதனை, “பாலும் உண்ணாள் என்புழி உம்மை உயர்வு சிறப்பு பாலும் உண்ணாள் எனவே ஏதும் உண்டிலள் என்றாயிற்று. ஈண்டுச் செவிலி கூற்றைத் தோழி கொண்டு கூறிய  ‘பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள்’ என்பது புணர்ச்சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டி ஆராய்வார்க்குப் புணர்ச்சி நிமிர்த்தமாகத் தோன்றுகின்ற மெய்ப்பாடுகளாம். இங்ஙனமாதலை – துன்பத்துப் புலம்பல், பசியட நிற்றல், பசலை பாய்தல், என்றோதுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். இவற்றுள் பசியட நிற்றல் என்னும் ஒரு மெய்ப்பாட்டிற்கே பேராசிரியர் “அன்னாய்………….  வினவுதி” என்னும் இவ்வடிகளை எடுத்துக்காட்டினர்.” (பொ.வே.சோமசுந்தரம், அகநானூறு, பா.48 உரை) என பொ.வே. சோமசுந்தரம் கூறியுள்ளார். மேலும் இதனை, “ந.மு.வேங்கடசாமியும் தமது அகநானூற்று உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.” (ந.மு.வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, களிற்றியானைநிறை, ப.120) எனவே இம்மெய்ப்பாடு இவ்வகநானூற்றுப் பாடலில் வெளிப்பட்டுள்ளது.

    1:1:6 பசலை பாய்தல்

    பசலை பாய்தலென்பது, “பசலை பரத்தல்” (இளம்., (பேரா.,மெய்.22). எனவும், “கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவியர் காதற் நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு.” (பாரதி.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் மாமைக்கவின் மாறி மேனி பசப்பூர நிற்றல். (பாய்தல்-பரவுதல்) இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் பொருள்கொள்வர். பசியட நின்ற தலைவி உடல் வலியிழந்தமையால் மேனியில் பசலை பரவுதல் பசலை பாய்தலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1188-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், குறுந்.27-ஆம் பாடலையும்; பாரதி, ஐங்.231, குறுந்.27 – ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், ஐங்.231-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 

     1:1:7. உண்டியிற் குறைதல்

    உண்டியிற் குறைதலென்பது, “உணவு சுருங்குதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “பசியட நிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறிதுண்டல்.” (பேரா.,மெய்.22). எனவும், “உற்றார் ஊட்டும் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் வெறுப்பை மறைத்துட்கொண்டதுபோற் சிறிது உண்டுவைத்தல், முன் பசியட நிற்றல், தனிப்படர் மெலிவால் பசிப்பிணியுணராத கை கடந்த காதல்நிலை குறிக்கும்; இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டி சுருங்குதலைச்சுட்டும் “தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும்” (இ.வி.ப.573) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக.” (பாரதி.,மெய்.22) எனவும், “தாயார் பரிந்து உணவு ஊட்டியவழி நனி உண்ணாது கழியவும் குறைத்துண்ணல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இயல்பாக உணவு உண்ணும் அளவினின்று தன் காதலர் பிரிவால் குறைத்து உண்ணுதல் உண்டியிற் குறைதலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,

    “பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு” (அகம்.48)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் பாலும் உண்ணாமல் இருக்கிறாள் என்பது எதையும் உண்ண மறுக்கிறாள் என்பதை வெளிக்காட்டுகிறது. இது பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இது பொருந்தாது. மேலும், இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியர், பாரதி, பாலசுந்தரம் ஆகியோர்,

    “தீம்பா லூட்டினும் வேம்பினுங் கைக்கும்
    வாரா
    யெனினு மார்வமொடு நோக்கு
    நின்னிற்
    சிறந்ததொன்  றிலளே
    யென்னினும்
    படாஅ  லென்னிதற் படலே.” (இ.வி.ப.௫௨௭)

    எனும் இலக்கண விளக்கப் பழம்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், இனிய பாலை ஊட்டினாலும் அதனை வேம்பினைக் காட்டினும் கசப்பு என ஒதுக்குவாள். நீ வாராது போனாலும் உன்னுடைய வருகையை விருப்பத்தோடு நோக்குவாள். என் தலைவி நின்னைக் காட்டினும் சிறந்ததொன்று இல்லையென்பவள். எனது சொல்லினும் அமைகின்றிலள் – இதனைப்படுதலெப்படி? என்பதன்வழி இம்மெய்ப்பாடு வெளிப்படாது நின்றது. இது உணவை வெறுத்தல் என்பதை உணர்த்துதலால் பசியட நிற்றலென்பதின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது உணவைச் சிறிதளவு உண்ணுதல் இங்கு இப்பழம்பாடல் உணவு உண்ணாமையே உணர்த்துகிறது.

    1:1:8 உடம்பு நனி சுருங்கல்

    உடம்புநனி சுருங்கலென்பது, “உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “அவ்வுண்ணாமை உயிரிற் செல்லாது உடம்பிற் காட்டுதல்.” (பேரா.,மெய்.22). எனவும், “உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல்.” (பாரதி.,மெய்.22) எனவும், “பசியட நிற்றலானும் உண்டியிற் குறைதலானும் மேனி மெலிவுறுதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். உண்ணாமை காரணமாகவும், சிறிதுண்ணலினாலும் உயிர்போகாது உடம்பு தன்னளவின்றி சுருங்குதல் உடம்புநனி சுருங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1234-ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.290-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:9. கண்துயில் மறுத்தல்

    கண்துயில் மறுத்தலென்பது, “உறங்காமை” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “இரவும் பகலுந் துஞ்சாமை.” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22)., எனவும், “இது தண்டாக்காதல் கொண்டார் துயிலாமை” (பாரதி.,மெய்.22) எனவும், “உடம்பு சோர்வுற்ற காலையும் உள்ளம் உறங்க ஒருப்படாமையின் கண்துஞ்சாதிருத்தல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கண்துயில் மறுத்தலென்பது தலைவனைக் காணாததால் உண்டியிற் குறைந்து உடம்புநனி சுருங்கிய தலைவி உணவு மறுத்து உறக்கம் பெறாமல் தவித்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1168-ஐயும்; பாலசுந்தரம் குறுந்.6 ஆம் பாடலையும்; பாரதி குறள்.1179, குறுந்.6, 11, 329, 5, 365, கலி.6 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

    “புலர்குர லேனற் புழையுடை யொருசிறை
    மலர்தார்
    மார்ப னின்றோற் கண்டோர்
    பலர்தில்
    வாழி தோழி யவரு
    ளாரிருட்
    கங்கு லணையொடு பொருந்தி
    யோர்யா
    னாகுவ தெவன்கொ
    னீர்வார்
    கண்ணொடு நெகிழ்தோ ளேனே” (அகம்.82)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தோழியே! முற்றிய கதிரையுடைய தினைப்புனத்தின் ஒருபக்கத்தில் நின்றோனாகிய பரந்த தாரையணிந்த மார்பனைக் கண்டோர் பலர்தில். அவருள் ஆரிய இருட் கங்குலிலே படுக்கையொடு பொருந்தி நீர்வடியுங் கண்ணோடு நெகிழ்ந்த தோளையுமுடையேன் யானொருத்தியேயாகுதல் என்னையோ! என்பதில் படுக்கையில் உறங்காது தவிக்கும் தலைவியின் நிலை கூறப்பட்டுள்ளமையின் இது கண்துயில் மறுத்தலானது. மேலும் இதனை,  “ ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கண்டுயில் மறுத்தலென்பது’ இரவும் பகலுந் துஞ்சாமை; அது ‘புலர்குர லேனல் …… ……… ……………….. நெகிழ்தோளேனே’ எனவரும் எனவும் உரைத்தார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.82) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    1:1:10. கனவொடு மயங்கல்

    கனவொடு மயங்கலென்பது, “கனவை நனவென மயங்குதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம்.” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22), எனவும், “நயந்தோர் பிரிவால் அயர்ந்தகாதலர் கனவிற்றுணைவரைக் கண்டுகளித்து விழித்தபின் காணாது வெருளுதலாகும்.” (பாரதி.,மெய்.22) எனவும், “தண்ணுணர்வின்றி ஒருகால் துயிலெய்தியவழி நேர்ந்த கனவிடத்துக் காதலனைக் கண்டு களித்து விழித்த விழிக் காணாமையின் கலங்குதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். காதலுணர்வு மேலோங்கிய காரணத்தால் கனவில் தலைவனைக் காணும் தலைவி அவனை நேரில் காண்பதாக நினைத்து மயக்கமுறுதல் கனவொடு மயங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1217-ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், கலி.128-ஆம் பாடலையும்; பாரதி குறுந்.30, குறள்.1213 மற்றும்,

    “……………….. ……………………… ……யாழ, நின்
    கோடேந்து
    புருவமொடு குவவுநுதல் நீவி
    நறுங்கதுப்
    புளரிய நன்னர் அமையத்து
    வறுங்கை
    காட்டிய வாயல் கனவின்
    ஏற்றேக்
    கற்ற உலமரல்” (அகம்.39)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், நான் உன்னுடைய அழகிய புருவங்களையும் சிறிய நெற்றியையும், நறுமணக் கூந்தலையும் தடவ நினைத்து முயன்றேன். உன்னைத் தழுவுதல் போன்ற என் கையை வெறுங்கை ஆக்கிய பொய்யான அக்கனவை நினைத்து ஏற்பட்ட மனச் சுழற்சியை நீ அறியவில்லை. அதனால் நீ என்னை நினைத்ததும் உண்டோ? என்று ஊடல் கொள்கிறாய்! எனத் தலைவியை நோக்கி தலைவன் கூறுகின்றான். இதில் அவன் கனவை நனவாக மயங்கியமை வெளிப்பட்டுள்ளது.

     1:1:11. பொய்யாக்கோடல்

    பொய்யாக் கோடலென்பது, “தலைவன் கூற்றுத் தன்னைப் பொய்யாகக் கோடல்.” (இளம்., தாசன், குழந்தை, இராசா, மெய்.22). எனவும், “மெய்யைப் பொய்யாக் கோடல்” (பேரா.,மெய்.22). எனவும், “காதல் மிகையால் மெய்யைப் பொய்யாகத் திரித்துக்கோடல்.” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தண்ணளி செய்யவும் பிரிவச்சத்தான் அதனைப் பொய்யாகக் கற்பித்துக் கொண்டு இனைதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைவன் கூறும் கூற்றையும்;  அவன் செய்யும் தண்ணளியையும் பொய்யாகக் கொள்ளுதல் பொய்யாக் கோடலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.88 – ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1311, கலி.88 ஆகிய பாடல்களையும்; குழந்தை கலி.68 ஆம் பாடலையும்;  பாலசுந்தரம் கலி.68, 41 ஆகிய பாடல்களையும்;  பேராசிரியர், கலி.68, 41 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியரும் இராசாவும்,

    “வருது மென்ற நாளும் பொய்த்தன
    வரியே
    ருண்கணீரு நில்லா.” (அகம்.144)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், தலைவன் வருவேனென்ற நாளும் பொய்த்தன; வரி பொருந்திய மையுண்ட கண்களில் நீரும் நிற்கின்றில எனும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதில் தலைவன் ஒரு காலத்தைக் குறிப்பிட்டு இக்காலத்தில் நான் திரும்பி வந்துவிடுவேன் எனக்கூறி தலைவியிடம் விடைபெற்று சென்றிருப்பான் அக்காலத்தின் வரவை இயற்கை உணர்த்திய உடனே அவன் வருவேனெனக் கூறிய காலம் வந்துவிட்டது; அவன் வரவில்லையே என அவன் கூறிய கூற்றைப் பொய்யென நினைத்தல் பொய்யாக் கோடல் ஆகும். எனவே இப்பாடலில் பொய்யாக் கோடலென்பது பொருத்தியாளப்பட்டுள்ளது. மேலும், இதனை, “பேரா. ‘பொய்யாக் கோடல்’ என்ற பகுதிக்கு உதாரணமாக “வருதுமென்ற நாளும் பொய்த்தன, வரியே ருண்கணீரு நில்லா” என்பதனைக் காட்டியுள்ளார்.” (மா. பரமசிவம், அகநானூறு, பக்.172-173) என மா.பரமசிவம் தமது உரையில் எடுத்தாண்டுள்ளார். இதனை மேலும், “புலியூர் கேசிகன்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.56,), “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப.52) ஆகியோரும் தமது உரையில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

    [தொடரும்…]

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

     

    Share
  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 2

     

    இன்னம்பூரான்

    09 03 2018

    இந்த தொடரின் முதல் பகுதி ஒரு பீடிகையாக இருந்த போதினும், இதை என் வலைப்பூவின் உலகத்தமிழ் வாசகர்களில் பலர் படித்தனர்; நண்பர்கள் ஒரு அரிசோனன், வ.கொ. விஜயராகவன் ( பல வருடங்களுக்குப் பிறகு), சி.ஜெயபாரதன் ஆகியோர் ஆழ்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நன்றி. என்னை வீழ்த்திய இடம் சென்னை ராஸ்தாக்கள் அல்ல. அவை என்னை கொன்றிருக்கக்கூடும். நான் வாழும் இடத்திலேயே காலை உடற்பயிற்சி செய்த இடத்தில் கவனம் பாண்டிச்சேரி தமிழ் ஆய்வு பாடங்கள் மீது செல்ல, உடல் பள்ளத்தில் விழுந்து முகம் ஈயச்சொம்பு போல் நசுங்க, மூக்கு உடைந்தது; நான் தேறி வருகிறேன். இதுவே பகுத்து அறிவதற்கு உவமையாக அமைந்து விட்டதை பாருங்கள். போலி பகுத்தறிவும் கவனக்குறைவால் தான். தும்பையும் விட்டு விட்டு வாலையும் விட்டு விட்டு, காலை பிடிப்பது போல், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது போல் அமைந்து விட்டது. ஈ.வே.ரா.அவர்களின் உன்னதமான சமுதாய சீர்திருத்தங்கள் காழ்ப்புணர்ச்சியினாலும், வன்முறையினாலும், பகைமை அணுகுமுறையினாலும் பாழாயின. அவரின் சிலையை உடைப்பதினால் நன்மை ஏற்படப்போவதில்லை; அவர் பிள்ளையாரை உடைத்துக் கண்ட பயன் யாது? நான் எழுத நினைப்பது எல்லாம் அன்றாடம் மாறிவிடுகின்றன. திரு. ஒரு அரிசோனன் ‘ஒரு இனம் தெரியாத தவிப்பு’ என்றதில் ஒரு உண்மை இருக்கிறது. மதாபிமானம் மதவெறியாக அதிக முயற்சி தேவையில்லை; சுயமரியாதை பிறரை தாழ்த்த நினைக்கும்போது, பூணலையும், குடுமியையும் அறுக்க விழையும்போது, தன்னையே மாய்த்துக்கொள்கிறது; தன் வாழ்வியலை சிதைத்துக்கொள்கிறது. தமிழ்தென்றல் திரு.வி.க. அவர்களின் சகிப்புத்தன்மையை புறம் தள்ளி விடுகிறது. இது நிற்க.

    தற்காலம் அசட்டுத்தனமாக சிலை உடைப்பு தலையெடுத்த போது, அதை பிரதமர் முளையிலே கிள்ளி விட்டார் என்றாலும், பட்ட கறை பட்ட கறை தான்.

    ஆலயத்திலிருக்கும் விக்ரஹங்கள் ஆனாலும் சரி, மனிதர்களின் சிலையாயினும் சரி, ஒரு கிரேக்க பாடம் படிப்போம் இன்று. மஹாத்மா காந்தி, நேரு, ஈ.வே.ரா. ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர்களின் சிலாரூபங்கள், மரணத்தையும் கடந்து, அதனால் ஏற்பட்ட இழப்பையும் கடந்து, மாண்டோர்களின் சிலைகளில் உறையும் உயிர்மை சிரஞ்சீவி என்க. ஏன்? அசோகரின் கல்வைட்டு, ராஜராஜன் கட்டிய பெரிய கோயில், எல்லா கோயில்களில் உள்ள சிற்பங்கள், அங்கிருந்து திருடப்பட்ட சிற்பங்கள், மோனா லீசாவின் ஓவியம், சலப சாத்திரத்தின் நுன்கணக்குப்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாமே வாழ்வியலின் இறவா நிலையை குறிப்பிடுகின்றன எனலாம். இன்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

    (தொடரும்)

    -#-

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  •  நான் அறிந்த சிலம்பு – 242

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    சோதிட வார்த்தை

    ஆடிமாதத்தின்
    கிருஷ்ண பட்சத்து அஷ்டமியும்
    கார்த்திகையின் குறையும் சேர்ந்த
    வெள்ளிக் கிழமையில்,
    தெளிவாக அமைந்த தீக்கதுவினாலே,
    புகழில் சிறந்த மதுரை நகரத்துடன் சேர்ந்து
    மன்னனும் கேடு வாய்க்கப் பெறுவான்
    என்ற வாக்கு உண்டானது.

    பாண்டியன் முறைபிழைத்த காரணம்

    கோவலனின் முற்பிறப்பு வரலாறு

    மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த
    கலிங்க நாட்டில்
    இனிமையான நீர் நிறைந்த
    மருதநிலம் அமைந்த சிங்கபுரத்திலும்
    மூங்கில் காடுகள் நிறைந்த கபிலபுரத்திலும்
    அரசை ஆள்கின்ற செல்வம் உடைய
    நேர்த்தியான மாலையணிந்த
    அரசனாகிய
    திருவேலினை ஏந்திய
    பெரிய கையை உடைய
    வசு என்பவனும்
    குமரன் என்பவனும்
    என்றும் அழியாத செல்வமுடைய
    சிறந்த குடியில் தோன்றிய
    இந்த இருவரும்
    தம்முள் பகையுற்றனர்.
    ஆறு காவதத்துக்கு
    இடைப்பட்ட நிலத்தில்
    ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ளப்
    போர் தொடுத்தனர்.

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (98)

    நிர்மலா ராகவன்

     

    உறவுகள் பலப்பட

    `கணவன்-மனைவியாகட்டும், ஒன்றாக வாழும் இரு ஆண்களாகட்டும், அவர்களது உறவைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. பத்து நிமிடங்களுக்குள் அவர்களுக்குள் சண்டை வருகிறதா என்று பாருங்கள்!’ ஓர் உளவியல் நிபுணர் எனக்குத் தந்த குறிப்பு.

    இரு மனிதர்கள் நெருக்கமாக வாழ்ந்தால், சிறு சண்டை பூசல்களைத் தவிர்க்க முடியாது. இதனால்தான் ஓரிரு தலைமுறைகளுக்குமுன் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள் — ஆடி மாதம், கர்ப்பமாகி ஐந்தாம் மாதம் என்று ஏதேதோ சாக்கில்.

    சில தினங்களோ, மாதங்களோ அப்படிப் பிரிந்திருந்து, பிறகு புகுந்த வீட்டுக்கே ஒரு பெண் திரும்பி வரும்போது, மறைந்துபோன ஈர்ப்பு தம்பதிகளுக்குள் மீண்டும் தலைதூக்கும். சில காலமாவது நிலைத்திருக்கும்.

    பத்து நாட்களுக்குள் மீண்டும் ஏதாவது அபிப்ராய பேதம் வரலாம்.

    `குழந்தைகள்மேல் உனக்கு இருக்கிற அக்கறை எப்பவும் என்மேல் கிடையாது!’ என்று சாடுவான் கணவன்.

    இந்த வாக்கியத்தில் `எப்பவும்’ என்று இருப்பதைத் தவிர்த்தால் சண்டை பெரிதாக வளராது.

    `நீங்கள் மட்டுமென்ன? முன்பொருமுறை..,’ என்று மனைவி எதிர்த்து வாதாட இது வழி செய்துவிடுகிறது.

    இப்படி இருவரும் மற்றவரது குறைகளையே, அல்லது தமக்குப் பிடிக்காதவற்றையே, பெரிதுபண்ணிக் கொண்டிருந்தால், இல்வாழ்க்கையில் அமைதி ஏது?

    பணம் = அதிகாரம்

    குடும்பத்தில் வரவு செலவைக் கவனித்துக்கொள்ளும்வரைதான் தன் அதிகாரம் நிலைத்திருக்கும் என்று கணக்குப்போடுவார்கள் சிலர். துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவன் பத்து பேரைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டு வருவதில்லையா, அது போல!

    கதை

    மனைவி சம்பாதிப்பதை அப்படியே வாங்கிக்கொண்டுவிடுவான் அகிலன். அவள் கொடுக்க மறுத்தால், அவள் நடத்தையைக் கேவலமாகப் பேசுவான். அது பொறுக்காது, `கேவலம், பணம்தானே! தொலையட்டும்!’ என்று கொடுத்துவிடுவாள் தாராவும்.

    அகிலனின் அதிகாரத்தில், ஓயாத கட்டுப்பாட்டில், தாராவின் மன இறுக்கம் அதிகரித்தது.

    `என்னுடன் படித்தவன் என்மேல் உயிராக இருந்தான். அவன் கேட்டபோது, அவனையே கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும்!’ என்று அவள் யோசனை போயிற்று.

    கணவன்மேல் அதிருப்தி, காழ்ப்பு இருக்கலாம். ஆனாலும், இத்தகைய எண்ணத்தால் என்ன பயன்? குழப்பம்தான் விளையும். காதலனாக இருப்பவன் கணவனானபின்பும் அப்படியே இருப்பான் என்று சொல்வதற்கில்லை. அதோடு, அவள்மேலும் குறை இருந்ததே! எதற்காக அவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்துப்போனாள்?

    விவாகரத்து செய்யலாமா என்று அடுத்த யோசனை வந்தது. புதிய பாதையில் இன்னும் என்னென்ன இடர்கள் இருக்குமோ, இருக்கிறதையே செப்பனிட்டுக்கொள்ளலாம் என்று தோன்றிப்போயிற்று. கணவனை மாற்ற முடியாவிட்டாலும், நாம் மாறலாமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது தாராவிற்கு.

    `நான் சம்பாதிப்பதை உங்களுக்கு எதற்குக் கொடுக்க வேண்டும்?’ என்று திமிறினாள்.

    இவளுடன் சண்டை போட்டு வெல்ல முடியாது என்று புரிந்துகொண்டான் அகிலன். `நமக்குள் என் பணம், உன் பணம்னு என்னம்மா வித்தியாசம்?’ என்றான் குழைவாக. அதிகாரம் நிலைத்திருக்க வேண்டுமானால் கட்டுப்படுத்தும் முறைகளை மாற்ற வேண்டும்.

    தாரா இணங்கவில்லை. மீண்டும் வாய்ச்சண்டை. இறுதியில், ஒரு மாதத்தில் மொத்த செலவு எவ்வளவு என்று உத்தேசமாகக் கணக்கிட்டு, அதை இருவருமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவள் ஓர் உபாயம் கூறினாள்.

    அகிலனின் தந்தை மட்டுமே சம்பாதித்தபோது, அவரது கட்டுப்பாட்டில் குடும்பம் இருந்திருக்கலாம். ஆனால், காலம் மாற, மாற, அதற்கேற்ப மாறினால்தான் அமைதியோ, மகிழ்ச்சியோ தழைக்கும் என்றவரைக்கும் அவனுக்குப் புரிந்தது. புதிய ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டான் – அரைமனதாகத்தான்!

    அதன்பின், இருவருக்குமே பொருளாதார சுதந்திரம் இருந்தது. மனைவியிடம் தன் தவற்றை ஒத்துக்கொண்டான்: “கணவனுக்கு மனைவி அடங்கி நடக்க வேண்டும், அவன் சொல்வதையெல்லாம் கேட்பவள்தான் நல்ல மனைவி என்று நினைத்திருந்தேன்!”

    (1981- ல், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன் கல்யாணத்தின்போது, `கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்,’ என்று சபதம் செய்ய மறுத்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, அவளுடைய துணிச்சல் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது).

    உடலுறவும் சோர்வும்

    உடல் சோர்வடைந்திருக்கும்போது, வேறு உறவில் எப்படி நாட்டம் போகும்? சீக்கிரமே படுத்துத் தூங்கிவிடுவது தாராவின் வழக்கமாக இருந்தது.

    `ஏதாவது நடந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!’ என்று கூறிப்பார்த்தான் அகிலன்.

    `வெளியிலும் வேலை, வீட்டிலும் வேலை. எப்பவும் களைப்பாக இருக்கிறது!’ என்று தாரா அலுத்துக்கொண்டாள். கனமான வேலைகள் அவனுடையது, சமையல் அவள் பொறுப்பில் என்று பிரித்துக்கொண்டார்கள்.

    `வீட்டு வேலை மாறுதல் இல்லாமல், ஒரேமாதிரி இருக்கிறதே! இவ்வளவு சலிப்பைத் தருவதாக இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது!’ என்று ஆச்சரியப்பட்ட அகிலன் மனைவியைப் புரிந்துகொண்டான். `ஓயாமல் என்ன வேலை! இன்று வெளியில் போகலாம், வா!’

    வாரத்தில் ஒரு நாளாவது அவர்கள் தனித்து வெளியில் போனதால், நெருக்கம் அதிகரித்தது.

    நண்பர்களுடனேயே காலத்தைக் கழிப்பவர்கள், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும் மனைவியிடம், `என் முகத்தையே பார்த்துப் பார்த்து உனக்குப் போரடிக்கவில்லை?’ என்று விளையாட்டுப்போல் கேட்பார்கள்.

    ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பதால் ஏற்படும் சலிப்பைப் போக்க இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். புதிய இடங்களுக்குப் பயணம் செய்தால், மனம் புத்துணர்ச்சி அடையுமே!

    பேசும்போது கவனி

    வாய் திறந்து பழிக்காவிட்டாலும், சில செயல்கள் தாம்பத்திய உறவில் ஏமாற்றத்தை விளைவிக்கின்றன.

    மனைவி ஏதாவது சொல்லும்போது, நாளேடு, கைத்தொலைபேசி என்று ஏதாவது சாதனத்தில் மூழ்கி, `சொல்லு. காதில் விழுகிறது!’ என்பான் கணவன். இருந்தாலும், ஒருவர் பேசும்போது, கண்களைக் கவனித்துக் கேட்பது போலாகுமா?

    ஓருயிர், ஈருடல்?

    இது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாது. ஒவ்வொருக்கும் தனிப்பட்ட இலக்கு இருந்தால்தான் அவருக்கு நிறைவாக இருக்கும். இல்லாவிட்டால், எதையோ இழந்த உணர்வைத் தவிர்க்க முடியாது.

    இதற்காக, ஒரே குடும்பத்தில் இருக்கும் இருவர் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டுவது அவசியமில்லை. ஒருவரது தோற்றத்திலும் செய்கையிலும் மற்றவர் சிறிதளவு ஆர்வம் காட்டினாலே போதும்.

    இப்போது வேண்டாம்!

    `நான் சொல்வதை நீ அப்படியே கடைப்பிடித்து நடக்க வேண்டும்!’ என்று கணவர் சொல்வாரோ என்று பயந்து, படித்த பெண்கள் தற்காலத்தில் திருமணம் என்றாலே அஞ்சுகிறார்கள். முப்பது வயதுக்குமேல்தான் மணமுடிக்க இசைகிறார்கள் — நிறைய நிபந்தனைகளுடன். அதில் முக்கியமானது – கணவரது பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து இருக்கக்கூடாது.

    ஏன் தனிக்குடித்தனம்?

    கூட்டுக்குடும்பத்தில், `நான் செய்த தவற்றை நீங்களும் செய்துவிடக்கூடாது!’ என்று `நல்ல மனதுடன்,’ எந்தச் சிறிய காரியத்தையும் எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருப்பார் ஒருவர். வயதும் அனுபவமும் இருப்பதாலேயே ஒருவர் தலைவராக முடியாது.

    அதைக் கேட்டு நடப்பவருக்கு ஆத்திரமும் குழப்பமும்தான் எழும். நாளடைவில் சுயமாக எதையும் செய்யும் ஆர்வமும் திறனும் அற்றுப்போகலாம்.

    அவரவர் காரியத்தை முடிந்த அளவுக்குச் சுயமாகச் செய்தால்தான் நிறைவாக இருக்கும். உதவி தேவையென்றால் மட்டும் பிறரை நாடலாம்.

    கல்யாணம் ஆனதால் மட்டும் ஒருவர் தன் தனிமனித சுதந்திரத்தை இழந்துவிட வேண்டுவதில்லை. அவ்வுணர்வு அளவு மீறினால்தான் பிரச்னை.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே-11

    க. பாலசுப்பிரமணியம்

     

    முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்

    “முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்; முயலாமை என்றும் வெல்லாது”- எனது கார் அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்தபொழுது சுவற்றில் எழுதப்பட்ட இந்த வாசகத்தைப் படித்தேன். திரும்பத் திரும்பப் படித்தேன். எத்தனை உண்மையான வார்த்தைகள்! முயலும் தன்னுடைய இலக்கை நோக்கிச் செல்லுகின்றது. ஆமையும் தன் இலக்கை நோக்கிச் செல்லுகின்றது. அந்த இலக்கை அடைவதில் அவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம் – கொஞ்ச நேரமே ! ஒன்றின் வேகத்தில் இன்னொன்றால் செல்ல முடியாது. ஏனெனில் இயற்கையில் அவைகளின் உருவகமும் உடல்  பாங்கும் வேறுபட்டுள்ளன. தங்கள் உடல் பாங்குகளுக்கேற்றவாறும் தங்களுடைய இயற்கை வாழ்விற்கேற்றவாறும் அவைகள் பயணித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தக் கருத்து நமக்கும் பொருந்தும். இயற்கையில் நம்முடைய உடல் பாங்குகள், சக்தி நிலைகள், உணர்வு நிலைகள் மற்றும் உடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள் வேறுபட்டவை. எனவே நாம் ஒருவேரோடு ஒருவர் போட்டி போடுதல் மிக்க தவறான செயல். நாம் நம்முடைய இயற்கைக்குத் தகுந்தவாறு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ஆனால் வெற்றி பெறுவதற்கு முயலும் முயற்சிக்க வேண்டும், ஆமையும் முயற்சிக்க வேண்டும். அதே போல் நாம் எந்த நிலையில் இருந்தாலும் சரி, வாழ்க்கையில் சாதனைகள் செய்ய, வெற்றிபெற, சிகரங்களைத் தொட முயற்சி செய்தல் மிகவும் அவசியம். அறிவையும், திறமையும் மட்டும் வைத்துக்கொண்டு முயற்சி செய்யாமல் இருந்தால் வெற்றிப் படிகளில் நிற்க முடியாது, சில நேரங்களில் முயற்சியே செய்யாமல் இறைவனின் திருவருளை மட்டும் நம்பி பலர் வாழ்வில் காத்திருக்கின்றனர். இவர்களில் சிலபேருக்கு வேறு சில காரணங்களால் ஓரளவு வெற்றி கிடைக்கின்றது. ஆனால் அனைவருக்கும் வெற்றிக்கு முயற்சிதான் வழி. முயற்சி செய்யும்பொழுது அதற்கான கூலி நிச்சயம் கிடைத்துவிடும் என்று வள்ளுவர் மிக அழகாக உரைக்கின்றார்.

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

    மெய்வருத்தக் கூலி தரும்

    முயற்சி என்பது சரியான திசையில் சரியான அளவில் சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது விழலுக்கிறைத்த நீராகிவிடும். முயற்சி வெற்றி பெற ஒரு மனிதனுக்கு என்னென்ன தேவைப்படுகின்றது?

    1. தன்னம்பிக்கை (Self-confidence)
    2. ஆர்வம் ( curiosit)
    3. நோக்கத்தில் தெளிவு ( Clarity of vision)
    4. துணிவு (courage)
    5. செயல் திறன் (Skill)
    6. வளங்கள் (Resources)
    7. உழைப்பு (Hard work)
    8. பொறுமை (Patience)
    9. சவால்களை சந்திக்கும் திறன் ( Ability to face challenges)
    10. கால நிர்வாகத் திறன் (Time Management )

    மேரி கியூரி என்ற போலந்து நாட்டு விஞ்ஞானி வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தவர்.  தன்னுடைய ஆராய்ச்சிக்காக தன்னுடை கையிருப்பிக்களை எல்லாம் இழந்து, ஆறிச்சிக்குத் தேவையான உபகாணங்களைக் கூட வாங்க முடியாமல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தன் வாழ்க்கையை நடத்தியவர். போட்டி காரணமாக அவருக்குத் தேவையான அறிவியல் மூலதனைகளைக் கூட அவரால் பெற முடியவில்லை. அந்த ஏழ்மையான நிலையிலும் இரவு பகலாக வேலை செய்து ‘ரேடியம்” என்ற பொருளைக் கண்டுபிடித்தார். இவருடைய இந்தக் கண்டுபிடுப்புத்தான் பின்பு  எக்ஸ் -ரே கதிர்வீச்சுக்கள் மூலமாக பல நோய்களை கண்டறிய உதவியாக இருந்தது. இவருடைய கண்டுபிடிப்புக்காக பின்பு இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. உலகிலேயே முதல் முதலாக நோபல் பரிசு பெற்ற பெண்மணி என்பது மட்டுமல்லாமல் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணியாக இவர் விளங்கினார்.

    தொடர்ந்து இருந்த சவாலான சூழ்நிலைகளிலும் தன்னுடைய முயற்சியை விட்டுவிடாமல் இயலாமை என்ற சொல்லுக்குத் தலைவணங்காமல் சாதனை படைத்த இந்தப் பெண்மணி என்ன கூறுகின்றார்?

    ” வாழ்க்கையில் எதையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது புரிந்துகொள்வதற்கான நேரம், பயப்படுவதற்கானது அல்ல. ”

    “நாமெல்லாம் வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்திருக்கிறோம் என்ற உணர்வு நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். இதை நாம் எந்த விதத்திலாவது சாதித்தே ஆகவேண்டும்.”

    சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த ஆக்கப்பூர்வமான உணர்வினை ஊட்டி விட வேண்டும். அவர்களுடைய கனவுகளின் உயரம் சிகரத்தை தொடுவதாக இருக்க வேண்டும். மிகப் பெரிய கனவுகளைக் கண்டு அதற்கான முயற்சிகள் செய்து சிறிதளவு அதில் தோல்வி அடைந்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் சரித்திரம் படைத்தவர்களாக ஆகின்றார்கள். சிறிய கனவுகளைக் கண்டு அவற்றை உடனேயே அடைந்தவர்கள் கடலில் கரைந்த உப்பாகக் காணாமல் போகின்றார்கள்.

    பெரிய கனவுகளைக் காணலாமே.. அதற்கான தெளிவான நோக்குடனும் உறுதியுடனும் தைரியத்துடனும் முயற்சி செய்து பார்க்கலாமே.

    வாழ்க்கை என்பதே நம் கனவுகளுக்கு ஒரு உருவகம் கொடுப்பதுதானே !

    வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(206)

     

     

     

    சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ                                                                  

    நன்றின்பா லுய்ப்ப தறிவு.

           -திருக்குறள் -422(அறிவுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    செல்லும் தீய பாதையில்

    மனதைச்

    செல்லவிடாமல் தடுத்து,

    நல்ல பாதையில்

    செலுத்துதல்தான் அறிவு…!

     

    குறும்பாவில்…

     

    தீய பாதையில் செல்லும் மனத்தைத் 

    தடுத்து தீமையகற்றி தூயபாதை 

    செலுத்துதலே அறிவு…!

     

    மரபுக் கவிதையில்

     

    கட்டுப் பாடுகள் ஏதுமின்றிக்

         கடந்தே செல்லும் மனத்தினையே,

    கட்டுப் படுத்தித் தடைசெய்து

         கெட்ட வழியில் செல்லாமல்,

    திட்ட மிட்டே நல்வழியில்

         தீயன அகற்றிச் செலவிடுதல்

    மட்டும் தானிவ் வுலகதிலே

         மகிமை மிக்க அறிவாமே…!

     

    லிமரைக்கூ..

     

    செலவிடாதே மனததன்வழி யதுவே, 

    செலுத்ததை தீமையகற்றி நல்லவழியிலே,  

    செம்மை அறிவென்பதுதான் இதுவே…!

     

    கிராமிய பாணியில்…

     

    அறிவுயில்ல அறிவுயில்ல- இது

    அறிவுயில்ல அறிவேயில்ல,

    அதுபோக்கில மனசப் போகவிட்டா

    அதுக்கபேரு அறிவில்ல..

     

    அடங்காமப்போற மனச அடக்கி

    அது கெட்டவழியில போகாம

    நல்லவழியில அனுப்புனா,

    அதுக்கப்பேருதான் அறிவு..

     

    அதால

    அறிவுயில்ல அறிவுயில்ல- இது

    அறிவுயில்ல அறிவேயில்ல,

    அதுபோக்கில மனசப் போகவிட்டா

    அதுக்கபேரு அறிவில்ல…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஐவகை நிலங்கள்

     

    மீனாட்சி க., முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)

    நெறியாளர்- முனைவர் ப. தமிழரசி., பேராசிரியர் மற்றும் தலைவர்,

    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்- 21.

     

    முன்னுரை:

     

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் இவை பாடும் புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும்.

    தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது.

    ‘மாயோன் மேய காடுறை உலகமும்

    சேயோன் மேய மைவரை உலகமும்,

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’ 1

    கருத்து விளக்கம்:

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கே உரிய ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகையும் புகழ்ந்து இயற்றப்பட்ட பல பாடல்களை அனைத்துப் பருவங்களிலும் இயற்றிய புலவர்களின் கற்பனைக்கேற்பக் கொண்டமைந்து விளங்குகின்றன. இலக்கியச் சுவையையும் மேம்படுத்துகின்றன. பாட்டுடைத்தலைவன் / தலைவியின் நாட்டின் வளம் இந்த ஐவகை நிலங்களின் செழிப்பாலும் உணரப்படும்.

    முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் பெரிதளவில் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத்தலைவன், தலைவியின் நாட்டு வளத்தைப் போற்றிவரும் பாடல்களில் வயல்சூழ்ந்த மருதநிலம், கடற்புறமான முத்துக்கள் விளையும் நெய்தல்நிலம் ஆகியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன. முல்லை, பாலை நிலங்கள் தொடர்பான செய்திகள் மட்டும் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. முல்லைநிலக் கடவுளான திருமால் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களிலும் அந்நிலம் பற்றிய வருணனைகளும் பாடல்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிஞ்சிநிலம் பற்றிய பாடல்:

    குறிஞ்சிநிலத்தின் கடவுள் சேயோனான குமரப்பெருமான். அவன் மீதான பகழிக்கூத்தனாரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்று ‘மலையும் மலைசார்ந்த இடமு’மான குறிஞ்சிமலைப்புறத்தின் அச்சமூட்டும் பேரழகை விவரிக்கின்றது. குறிஞ்சிநிலம் பற்றிய நயங்களும் மிகச்சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.

    நெடிய மரங்கள் கொடிகளுடன் பின்னிப்பிணைந்து அடர்ந்து வளர்ந்துள்ளமையால் பகல்போதிலும் இருள் சூழ்ந்திருக்கும் அச்சம்தரும் மலைப்பிரதேசம். அந்த இருளை நீக்கவும் இயற்கையே வழிசெய்கிறது. அங்குள்ளதான கொடிய நஞ்சினை உடைய ஒரு பாம்பு தன் வாயை அகலத்திறந்து மாணிக்கக் கல்லை உமிழ்கின்றது; அந்த மாணிக்கக்கல் ஊழிக்கால இருள்போன்ற கொடிய இருளை நீக்குகின்றதாம்.

    மலையில் வாழும் குறவர்கள் உணவுக்காகத் தினை பயிரிடுவர். அதுவே அவர்களின் முக்கிய உணவாகும். அதற்கு எருவாக அவர்கள் பயன்படுத்துவது கவரிமானின் முலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் பால். அது, சூரியஒளியினால் காய்ந்து, பாறைகள்மீது படர்ந்துள்ளது; சூரிய ஒளியில் அது வெள்ளித்தகடு போன்று பளபளவென்று ஒளிவீசுகின்றது. மலைவாழ் குறவர்கள் அதனை எடுத்துத் தங்களது தினைப்பயிருக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்களாம்.

    இக்குறிஞ்சி நிலத்தில் வாழும் கருநிறம் கொண்ட குறமகளிரின் இன்றியமையாத வேலை, தினைப்பயிரைத் தின்னவரும் கிளிகளையும் மற்ற பறவைகளையும், ‘ஆலோலம்’ எனக்கூறி கவண் எறிந்து ஓட்டுவதாகும். சிலபொழுது அவர்களின் கவனம் பறவைகளை விரட்டுவதில் ஈடுபடுகிறது; இன்னும் சிலபொழுது தங்கள் குலமகளான வள்ளியின் உள்ளம் கவர்ந்த குமரனையும் அவன் திருவுருவையும் எண்ணி நெகிழ்ந்து கனிகின்றது. இவ்வாறு இருவிதமான எண்ணங்களும் மாறி மாறி அவர்களுடைய உள்ளங்களில் ஊசலாடுகின்றன.

    இவ்வாறெல்லாம் குறிஞ்சி நிலவளம் கூறிப் பின்பு குறமகளிரின் செம்மைபாய்ந்த கண்களைக் கொள்ளைகொண்ட முருகப்பெருமானைத் தலையசைத்து, திருவாய் திறந்து சில சொற்களைக்கூறிச் செங்கீரையாட வேண்டுகிறார் பகழிக்கூத்தனார்.

    ‘வெங்காள கூடவிட மொழுகுபற் பகுவாய்

    ………………………………….

    மங்காம லிரசதத் தகடெனச் சுடர்விட

    மலைக்குறவர் கண்டெடுத்து

    வண்டினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற

    மகளிருள மூசலாட…….’ 2

    முல்லைநிலம் பற்றிய பாடல்:

    சிதம்பர அடிகளார் இயற்றியுள்ள முருகப்பிரானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிறுபறைப் பருவப் பாடலொன்று முல்லைநிலங்கள் செறிந்த திருப்போரூரின்கண் உள்ள பலவிதமான முல்லைநிலக் காட்சிகளைக் கூறி கருத்துக்கு விருந்து படைக்கின்றது.

    அழகான திருப்போரூர், முல்லைநிலங்கள் செறிந்தவூர். முல்லைநிலக்கடவுள் மாயோன் எனப்படும் திருமாலாவான். இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. தயிரின் முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள், அவர்கள் தயிர் கடையும் கலங்களில் முழக்கும் ஒலி ஒருபுறம் கேட்கிறது; பசுக்கூட்டங்கள் தம் கன்றுகளை நினைத்தமட்டிலேயே அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச் சுரந்து கன்றுகளை எண்ணிக் கத்தும் முழக்கமும் மிகுதியாகக் கேட்கின்றது.

    இசையமைந்த துளைகளினூடே விரல்களைப் பொருத்திப்பிடித்து தொறுவர்கள் எனப்படும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழலோசையும் கேட்கின்றது. பலவிதமான நிறங்கள் கொண்ட காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக் கூவும் ஓசையும் எழுந்தவண்ணம் உள்ளது.

    செழித்து விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய இனிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியற்போதில் எழும் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இப்போரூரின் முல்லைநிலங்கள்.

    அம்முல்லை நிலத்தில் வாழ்பவனும் குளமலி கண்ணனாகிய சிவன் தந்தருளியவனுமான முருகப்பெருமானை, “முருகா, நீ சிறுபறை கொட்டுக! முத்தமிழினை மெத்த வளர்த்தவனே! சிறுபறை கொட்டுக!”- என்பது பாடற்பொருள்.

    ஒருவரைப் பற்றிக் கூறும்போது அவர் புகழ்வாய்ந்த குடும்பப் பின்னணி உடையவராயின் அவர் பெற்றோர், மற்ற உறவுமுறைகளைக்கூறி அவரைப் பெருமைப்படுத்துவது வழக்கம். அதுபோன்றே இப்பாடலில் முருகனின் தந்தையாகிய சிவபிரானின் புகழையும் விளக்கியுள்ளார். குலம்- குடிப்பெருமை கூற ‘குளமலி கண்ணன் தரும் இறை’ எனச் சிலசொற்களையே கூறுகிறார். குளம் = நெற்றி; அலிகம்- நெற்றி. நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமான் தந்தருளும் முருகக்கடவுள் என்கிறார். வேறென்ன பெருமை வேண்டும் முருகனுக்கு? தனது பெற்றோரைப்போல் அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் வளர்த்து அருளுபவன் அல்லவா?

    அளைகடை முடைகது வியதளிர் வடிவத்

    தாய்ச்சியர் மத்தொலியும்

    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி

    ஆன்நிரை கத்தொலியும்

    ……………………………………

    …………………………முல்லைக்

    குளமலி கண்ணன் தருபோ ரூரிறை

    கொட்டுக சிறுபறையே.’ 3

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஒரு இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.

    புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது.

    மருதநிலம் பற்றிய பாடல்:

    குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்து முதல் பாட்டிலேயே மருதநிலத்துச் செய்தியைக் கூறுகிறார். காக்கும் தெய்வமான திருமாலின் பெருமையைக் கூறும்போது வயல்கள் சூழ்ந்த மருதநிலத்து வனப்பை விவரிக்கிறார். மருதநிலத்துக் கடவுள் வேந்தன் எனப்படும் இந்திரனாவான். மேலும் அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் தாமரையில் உறைபவர்கள். தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.

    திருமால் தமிழ்மீது கொண்ட காதலால் தமிழ்பாடும் புலவனின் பின்னால் தனது பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு விரைவதனை அழகுற விவரிக்கிறார். காதல்மனையாளை விட்டுப்பிரியத் திருமாலுக்கு மனமில்லை. ஆகவே வயலில் பூத்து நிற்கும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவளை அந்த வழுக்கும் சேறுநிறைந்த வயலில் தனது கையால் அணைத்தபடி அவள் விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டு உடனழைத்தவாறு தமிழ்ப்புலவரின்பின் விரைகிறான். மிக அழகான கற்பனை!

    ‘கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்

    கலுழிபாய்ந் தளறுசெய்யக்

    கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்

    கையணை முகந்துசெல்லப்

    பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்

    பணைத்தோள் எருத்தலைப்பப்

    பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற

    பச்சைப் பசுங்கொண்டலே.’ 4

    ‘கையணை முகந்து செல்ல,’ எனும் சொற்கள் மிகவும் நயமாக, ‘கையால் அணைகொடுத்து, அவளை அன்போடு தழுவி அணைத்து நடத்திச் செல்ல,’ எனும் பொருள்படும். மிக நுட்பமான உய்த்தறிதலின் ஆளுமை நிரம்பிய கவிதையிதுவாகும்.

    நெய்தல்நிலம் பற்றிய பாடல்:

    திருச்செந்தூர் தலம் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆகவே, பகழிக்கூத்தனார் தாமியற்றிய பிள்ளைத்தமிழில் கடல்சார்ந்ததாகிய நெய்தல் நிலத்தினைப் பலவிதமாகப் போற்றியுள்ளார். நெய்தலின் கடவுள் வருணனாவான்.

    ‘திரையெறியு மலைவாய்’ – அலைகளை வீசி எறியும் திருச்செந்தூர் (திருச்சீரலைவாய் என்பது இதன் பெயர்),

    ‘வெள்வளை தரும் தண்தரள மலைகொண்டு கொட்டு நகராதிபா’- வெண்மையான சங்குகள் ஈனும் குளிர்ச்சி பொருந்திய முத்துக்களை மலைபோல கடலலைகள் கொண்டு கொட்டும் நகருக்கு அதிபனே!’,

    ‘குரைகட லலையெறி திருநக ரதிபதி’- ஓசையிடும் கடல் அலைகளை வீசியெறியும் திருநகருக்கு அதிபதி,

    ‘அலையாழிசூழ் திருச்செந்தூர் வடிவேலன்.’

    ‘கழிதொறும் கயல்குதிக்கத் திரைவாய் முழங்கும் திருச்செந்தில் வேலவனே!’ (கழி- உப்பங்கழி- நெய்தலின் அடையாளம்) என்பன சில உதாரணங்கள்.

    முத்தப்பருவத்துப் பாடலில் கூறுகிறார்: “குமரனே! உனது அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் கடலலைகள் முத்துக்களை வாரி வாரி வீசும். அலைகள் விடாது ஒலியெழுப்பும். கடலிலும், கடற்கரையிலுள்ள உப்பங்கழிகளிலும், அவற்றில் மலர்ந்துள்ள கழுநீர் மலர்களிலும், அக்கழிகளில் உண்டாகும் நீர்ச்சுழிகளிலும், கடற்கரையில் வளர்ந்துள்ள அடர்ந்த தாழைப் புதர்களிலும், இன்னும் பல இடங்களிலும் சங்குகள் வருந்திப்பெற்ற கோடிக்கணக்கான முத்துக்களைக் காணலாம். அத்தகைய வளமுடைய திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் பெருமானே! எமக்கொரு முத்தம் தந்தருளுக,” எனத் தாய் வேண்டுவதாக அமைந்த ஒரு இனிய பாடல்.

    கத்துங் கடலி னெடும்படவிற்

    கழியிற் கழுநீ ரிற்சுழியிற்

    கானற் கரையிற் கரைதிகழும்

    கைதைப் பொதும்பிற் ………

    …………………………………….

    முத்தம் சொரியும் கடலலை’வாய்

    முதல்வா முத்தம் தருகவே’5

    பாலைநிலம் பற்றிய பாடல்:

    திருவிரிஞ்சை முருகன் பி. த. நூலில் ஒரு சப்பாணிப் பருவப்பாடல், ‘பொய்யாமொழிப்புலவர் மதுரையில் சங்கம் புரக்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சியைக் கூறுகின்றது. பாலைநிலத்துத் தெய்வம் கொற்றவை ஆவாள்.

    துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடமாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவேனோ?” எனக்கூறி மறுத்துவிட்டார். இப்புலவர் ஒருமுறை மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் காக்கவேண்டிப் புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றார். இப்படிப்பட்ட வாய்ப்பிற்காகக் காத்திருந்த முருகன், அவர் செல்லும் காட்டுவழியில் ஒரு வேடச்சிறுவனாக உருக்கொண்டு புலவரை வழிமறித்தான். “நானொரு புலவன்,” எனப் பயந்தவண்ணம் கூறிய புலவரிடம், ஒரு கவிதை பாட வேண்டினான் கள்ளச்சிறுவன். ‘நமது உயிருக்கு இவனால் ஆபத்தில்லை; தமிழின் அருமை உணர்ந்த கள்ளன் போலும்!’ என மகிழ்ந்த புலவரிடம், “என்மீது சுரம்போக்காக ஒரு கவி பாடுக,” என்றான் வேட்டுவச் சிறுவன். “உன் பெயரென்ன அப்பா?” எனக்கேட்ட புலவரிடம், முன்பு அவர் கூறியதனை நினைவில் கொண்டு, “என் பெயர் முட்டை,” என்றான் குமரன். புரிந்துகொள்ளவில்லை புலவர் பெருமகனார்!

    சுரம்போக்குத் துறையாக ஒரு பாடலைப் பாடினார்.

    ‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே

    என்பேதை செல்லற் கிசைந்தனளே- மின்போலு

    மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்

    கானவேள் முட்டைக்குங் காடு.’ 6

    வேடச்சிறுவனாக வந்த முருகன் இதில் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறினான். வெட்டிப்போட்டாலும் காயாத வேலமுள் நாள்பட்டுக் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது. அப்படிப்பட்ட முள் கள்ளி வெந்து பொறியாகப் பறக்கும் பாலையில், பச்சையாக வேகாமல் இருந்து காலில் தைக்கும் எனக்கூறுவது பொருந்துமோ? (காய்ந்து உலர்ந்து வெந்தமுள் குத்தவியலாது) இப்படிப்பட்ட பொருட்குற்றம் உடைய பாடலைப் புலவராகிய நீர் பாடலாகுமோ? என்றான் வேடச்சிறுவன். பொய்யாமொழியார் பேச்சற்றுத் திகைத்து நின்றார்.

    வரகவி மார்க்கசகாயதேவர் தாமியற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

    முருகன் தானொரு பாடலைப் பொய்யாமொழியார் மீது பாடி, பெட்டை- முட்டை பற்றிய நினைவினைப் புலவருக்கு வரச்செய்தான்.

    புலவர் ‘நீ யார்?’ என வினவ, தன் அழகுத் திருவுருவைக் காட்டி, புலவரின் நாவில் தன் வேல்கொண்டு பொறித்து மறைந்த “முருகப்பெருமானே! அறிவிற் சிறந்த சதுரனே!” என முருகப்பிரானை வாழ்த்தி அவனைச் சப்பாணிகொட்ட வேண்டுகிறார் புலவனார்.

    ‘பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்

    புரக்கவெழு நாள்மறவனாய்

    புறவற வளைத்தெனது பெயர்முட்டை பாடெனப்

    பொன்போலு மென்றுபாட

    வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி

    ளம்பென…’7

    முடிவுரை:

    இவ்வாறு நுணுக்கமான பல தமிழ்நயங்களை பிள்ளைத்தமிழ்க் கவிஞர்கள் தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளமை நயந்து நோக்கத்தக்கது.

    ______________________________________

    ஆய்வுக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

    1. தொல்காப்பியம்- அகத்திணையியல் – பொருளதிகாரம்

    2. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்

    3. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் – சிதம்பர அடிகள்

    4. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்

    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

    6. தனிப்பாடல்- பொய்யாமொழிப்புலவர்

    7. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் – வரகவி மார்க்கசகாயதேவர்

    ************

    Share
  • பிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு

     

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    ஒவ்வொரு பிரபஞ்சத் தோற்ற கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு.

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

    ஒற்றைத்திரட்டு / ஒற்றைத்திணிவு  [Singularity] என்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு வெடிப்புக் கோட்பாடு  ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.  உள் விரிவுக் கோட்பாடு [Inflation Theory] சரியே என்று பிளாங்க் முடிவு செய்தாலும், உள் விரிவு எப்படி நேர்ந்திருக்கும் என்னும் வினா எழுகிறது.

    நியாயேஷ் ஆஃப்ஷோர்டி [Niayesh Afshordi, Astrophysicist, Premeter Institute for Theoretical Physics, Waterloo, Ontario, Canada]

    [youtube https://www.youtube.com/watch?v=ScVLrPVnk_E?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=G-fjEY2PRls?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=rfs1BAn7gI0?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    See the source image

    பெருவெடிப்புத் தோற்றம்

    ++++++++++++++++

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    பெருவெடிப்புக்கு முன்பு பிரபஞ்ச வெளியில் நேர்ந்தது என்ன?

    பிரபஞ்ச துவக்கத்தின் ஆரம்ப காலத்தில் என்ன இருந்தது என்று இன்னும் விஞ்ஞானிகள் உறுதியாகக் கூற முடியவில்லை.  ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமா யூகித்த பெருவெடிப்பு நியதியைப் பலர் ஏற்றுக் கொண்டிருந்தாலும், துவக்க நிலையில் என்ன இருந்தது, பெருவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பதில் உலக விஞ்ஞானிகள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தார்.   அவை எதுவுமே காரண-விளைவு கோட்பாடுக்கு ஏற்றதாக விளக்கப்பட வில்லை.  பிரபஞ்ச வெளியில் எல்லாம் தோன்றும் முன்பு என்ன இருந்தது ?  2018 மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி, இந்த மூலாதாரக் கேள்வியை விஞ்ஞானி நீல் திகிராஸ்ஸி டைசன் [Neil deGrasse Tyson] விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைக் கேட்ட பொழுது, ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.

    Hawking and Tyson

    அந்தக் கேள்விக்குப் பதில் ஹாக்கிங் கூறும் போது, தான் நம்பும்  பிரபஞ்ச விளிம்பற்ற புதிய கருத்துரைக் [No Boundary Proposal] கோட்பாடை எடுத்துரைத்தார்.  பிரபஞ்சத்தின் விளிம்பு நிபந்தனை  [The Boundary Condition of the Universe]  என்பது,  நமது  பிரபஞ்சம் விளிம்பு வரையறை இல்லாதது [Universe has No Boundary] என்று யூகிப்பதாகும்.  இந்தக் கோட்பாடைப்  புரிந்து கொள்ள, பிரபஞ்ச தொலையியக்கி [Remote Control] எடுத்து “மீள்சுற்று” [Rewind]  விசையைத் தட்டினால், காலம் பின்னோக்கிச் சென்று, பிரபஞ்சம் சுருங்கிக் கொண்டுவரும்.  13.8 பில்லியன் ஆண்டுகள் பின்சென்று, பிரபஞ்சம் ஓர் புள்ளி அணுவாகச் சுருங்கும்.

    See the source image

    அந்தக் அணுக்கடுகுதான் ஒற்றைத்திரட்சி [Singularity]   அல்லது ஒற்றைத்திணிவு நிலை எனப்படுவது.  பூதநிறை உள்ள மிகச் சிறு திரட்சியே  ஏராளமான வெப்பமும், சக்தியும் கொண்டது. அந்த ஒற்றைத் திணிவு நிலையில் நாமறிந்த பௌதிக நியதிகள், காலம் [The Laws of Physics and Time] இயங்கா !  சொல்லப் போனால் காலம் இல்லாது போய்விடுகிறது.  அதாவது பிரபஞ்சம் என்னும் காலவெளி, காலமின்றி, வெறும் வெளிமட்டும் மிஞ்சும்.  பிரபஞ்சம் சுருங்கச் சுருங்க, காலமும் சுருங்கித் தடமின்றி மறைந்து விடுகிறது.  அதாவது பெருவெடிப்புக்கு முன்பு நிகழ்ந்தவற்றை விளக்க முடியாது.  ஏனெனில் அப்போது என்ன நேர்ந்தது என்று அளக்க வழியேதுமில்லை.  பெருவெடிப்புக்கு முன்பு துவக்கத்தில் நிகழ்ந்தவற்றை யூகிக்க முடியாது.  காலமே பெருவெடிப்பில்தான் ஆரம்பமாகிறது.  பிரபஞ்சம் சுருங்கிய துவக்க நிலையில் காலம் தடமின்றிப் போகிறது.

    இந்த விளிம்பற்ற பிரபஞ்சக் கோட்பாடு ஹார்டில்–ஹாக்கிங் நிலை [Hartle – Hawking state]  என்று குறிப்பிடப் படுகிறது.

    இந்திய விஞ்ஞானி ஏற்றுக் கொள்ளாத பெருவெடிப்பு நியதி

    இந்திய விஞ்ஞானி டாக்டர் ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher].  அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது.  பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ?  அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது?  ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ?  அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ?  அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ?  பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ?  அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

    பிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்

    பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டனின் உன்னத விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] “பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி” [Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர்! ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தார்!  அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது “நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தை” [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார்!  ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது ! பெரு வெடிப்பு நியதியே பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

    பிரபஞ்சப் பெரு வெடிப்பை விளக்கிய ரஷிய விஞ்ஞானி

    பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை ‘ [Big Bang Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள் முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

    பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும், விரிந்து குமிழி போல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்! அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்! பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்!

    பெருவெடிப்பு வளர்ச்சி

    1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும் சார்ந்திருந்தன. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நெபுளாக்க ளின் பிறப்பு [Origin of Nebulae], ராட்சதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூதநோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.

    ஜார்ஜ் காமாவின் விஞ்ஞானச் சாதனைகள்

    1948 இல் விஞ்ஞானி ரால்·ப் ஆல்·பருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலை வெப்பவீச்சு [Residual Microwave Radiation] இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப்படுத்தினர்!

    எட்வின் ஹப்பிள் விண்ணோக்கி

    விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் ‘என்ட்ராப்பி நியதிக்கும் ‘ [Theory of Entropy] என்ன தொடர்பு ? அண்ட வெளியில் ஊடுறுவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது ? விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டதின் விளைவென்ன ? சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன ? உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, ‘இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள் ‘ [Problems in Laws of Numbers] எவ்விதத்தில் பாதிக்கின்றன ? இத்தனை வினாக்களையும் தான் எழுதிய ‘ஒன்று, இரண்டு, மூன்று.. முடிவின்மை ‘ [One, Two, Three…Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow]! ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற் சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின் காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் பிரபஞ்சம்

    விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திரவியலையும் [Quantum Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு பொது நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டு பிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி ‘ [String Theory]. அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ள ‘இழை நியதி ‘ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும் மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்! பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றி பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

    உப்பி விரியும் பிரபஞ்சம்

    பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டா·பன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்! பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித்திருக்கலாம்! ஆகவே பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று எழும் கேள்விகளுக்கு ஒருகாலத்தில் பதில் கிடைக்கலாம் !

    பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

    பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின! விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

    பிரபஞ்சப் பின்புலக் காட்சி

    பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ¨†டிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்ளுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன. இந்த மாறுதல் வெப்பவீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல வெப்பவீச்சு ‘ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல் அகிலவியல் பின்புல வெப்பவீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

    நான்கு வித அகில உந்து விசைகள்

    பெரு வெடிப்புக்குப் பிறகு பின்புல வெப்ப வீச்சு

    1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல வெப்பவீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல வெப்ப வீச்சு அடர்த்தியை [Intensity of the Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல வெப்பவீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப் படுகின்றன!

    பின்புல வெப்பவீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு! ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘ மாக்ஸ் பிளான்க் வளைகோடு முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/-450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும் ‘சம வெப்பநிலை ‘ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

    ஹப்பிள் தொலைநோக்கு ஆழ்நீட்சி

    ஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நெபுளாக்கள்

    ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.

    ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 18600 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.

    பல்வேறு ஒளிமந்தைத் தோற்றம்

    பிரபஞ்ச விரிவு பற்றி மாறான ஐன்ஸ்டைன் கருத்து.

    1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார்! பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார்! அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு [Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன! நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின! பின்னால் பிரபஞ்சம் விரிகிறது என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant] இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்!

    Big bang

    Click to view large image

    Big Bang Events

     

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2. Universe 6th Edition (2002) 3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6. BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html(பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html(பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)

    10. https://en.wikipedia.org/wiki/Big_Bang  [May 9, 2016]

    11.  https://www.space.com/37114-neil-tyson-receives-hawking-medal.html [June 7, 2017]

    12. https://www.nextbigfuture.com/2018/03/hawking-talks-about-no-clear-big-bang-and-no-boundary-to-space-time.html  [March 2, 2018]

    13.  https://www.popsci.com/stephen-hawking-neil-degrasse-tyson-big-bang [March 2, 2018]

    14.  stephen hawking says he knows what happened before the big bang

    15. https://www.mirror.co.uk/science/professor-stephen-hawking-says-knows-12128613  [March 6, 2018]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) March 10, 2018  [R-2]

    Share
  • சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

    சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    உலகில் மிகவும் தாழ்ந்து போயிருந்த அமெரிக்காவின் படிமத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்பி அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒபாமா தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதி ஆன பிறகு தன் விருப்பத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றார் என்று கூறலாம். சில நாடுகளுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தினார்; அமெரிக்கா பல காலமாக வன்மம் பாராட்டிவந்த கியூவுடனான உறவையும் சீர்படுத்த நிறைய முயற்சிகள் செய்தார். அமெரிக்கா ஈடுபட்டிருந்த போர்களில் ராணுவத்தின் அளவைக் குறைத்தார். மொத்தத்தில் அமெரிக்கா உலக நாடுகளின் போலீஸ்காரன் அல்ல என்று மற்ற நாடுகள் உணரும்படி செய்ய முயற்சிகள் பல செய்தார்.

    ஆனால் ஒபாமாவிற்குப் பின் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப் ஒபாமா உள்நாட்டிலும் அகில உலக அளவிலும் செய்த எல்லாச் சீர்திருத்தங்களையும் ஒவ்வொன்றாக ஒழித்து வருகிறார். அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனத்தை திரும்பக் கொண்டுவர முயன்று வருகிறார். இவர் பதவியை விட்டு விலகும் முன் அமெரிக்காவின் படிமத்தை உலக நாடுகளிடையே வெகுவாகக் குறைத்துவிடுவார்போல் தெரிகிறது. அடாவடித்தனமாக இவர் காரியங்கள் செய்தாலும் இன்னும் இவருக்கென்று நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று அறியும்போது மிகவும் பயமாக இருக்கிறது.

    உலக அரங்கில் இப்போது நிறைய சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள்; அந்த எண்ணிக்கை இப்போது கூடிக்கொண்டு போவதுபோல் தெரிகிறது. ஏற்கனவே சர்வாதிகாரிகளாக இருந்த ரஷ்யாவின் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜான் அர்ன் ஆகியோரோடு துருக்கியின் எர்டோவன், எகிப்தின் ஸிஸி என்று இன்னும் பலர் உருவாகி வருகிறார்கள்.

    சீனா கம்யூனிஸ்ட் நாடு என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அங்கும் ஒரு வகையான சர்வாதிகார ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை பத்து வருடங்களுக்கொரு முறையாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதுத் தலைவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இப்போது அந்த ஏற்பாட்டையும் தகர்த்தெறிவதுபோல் சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின் பிங், சீன ஜனாதிபதிகள் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்ற அரசியல் சட்டத்தை மாற்றப் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. அப்படியென்றால் அவர் ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக நீடிப்பார் என்பது உறுதியாகிறது. இது சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என்று உலகத் தலைவர்கள் பலர் அஞ்சுகிறார்கள். சீன மக்கள் இப்போது அவர்களுக்குள்ள ஒரு சில மனித உரிமைகளையும் இழக்கலாம் என்ற அச்சமும் சீனாவிலும் சீனாவிற்கு வெளியிலும் பரவி வருகிறது.

    இப்படிப் பலர் அஞ்சினாலும் சீனாவுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்று அஞ்சிப் பல நாட்டுத் தலைவர்கள் அது பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. சென்ற ஜனவரி மாதம் பிரான்ஸ் தலைவர் மேக்ரான் சீனாவுக்கு விஜயம் செய்தபோது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் தன் வர்த்தக உறவுகளை சீனா பலப்படுத்திக்கொள்வதின் அபாயத்தைப் பற்றி எச்சரித்தாலும் சீன அரசு தன் மக்களை நடத்தும் முறை பற்றிச் சாதுர்யமாக எதுவும் சொல்லவில்லை. ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இப்போதைக்கு உறவு அவ்வளவு சுமுகமாக இல்லையென்றாலும் ஜப்பான் கூட ஷி ஜின் பெங்கின் ஆட்சி அவருடைய ஆயுள் முழுவதும் இருக்கும் என்பது பற்றி எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சீனா ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது பற்றி ஆஸ்திரேலியா குறை சொன்னபோது சீனா திருப்பிப் பதிலடி கொடுத்ததால் இப்போது சீனாவில் வரக்கூடிய அரசியல் மாற்றம் பற்றி எதுவும் கூற ஆஸ்திரேலியா தயாராக இல்லை. இதற்குக் காரணம் சீனாவுடனான வர்த்தக உறவுகள்தான். (இந்தியா எப்படி சீனாவின் சர்வதிகாரம் நோக்கி நகரும் இந்த மாற்றத்திற்கு எதிர்வினை ஆற்றியது என்று தெரியவில்லை. மோதியின் கருத்து என்னவென்று தெரியவில்லை.)

    மற்ற நாடுகள் இம்மாதிரி நடந்துகொள்ளும் வேளையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அது பற்றிக் கருத்துக் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. நண்பர்களுடன் தனிப்பட்ட சந்திப்பின்போது ட்ரம்ப், ‘ஷி கின் பிங் ஆயுளுக்கும் சீனாவின் ஜனாதிபதி ஆகலாம். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஒரு நாள் அமெரிக்காவும் இதை முயன்று பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். தனிக் கூட்டத்தில் இப்படி ட்ரம்ப் கூறியிருந்தாலும் அது எப்படியோ வெளியே வந்துவிட்டது. அமெரிக்கா சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் நாடாக உருவானது. அப்போது அவர்கள் எழுதிய அரசியல் சாசனத்தின்படி அமெரிக்காவில் ஒருபோதும் சர்வாதிகார ஆட்சி ஏற்படாது என்று உறுதிப்படுத்திக்கொண்டார்கள். மேலும் அமெரிக்கா உலகம் முழுவதிலும் ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு என்று பெயர் வாங்கியிருக்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் ட்ரம்பின் மனதில் இப்படி ஒரு ஆசை ஏற்பட்டிருக்கிறதே என்று நினைத்தால் எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை உள்ள மனிதர் ட்ரம்ப் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. சென்ற நவம்பர் மாதம் சீனாவுக்குச் சென்றிருந்த ட்ரம்ப்பிற்கு வெகு விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதில் உச்சிகுளிர்ந்த ட்ரம்ப் ஷி ஜின் பிங்கை இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மற்ற நாடுகள் வர்த்தக உறவுகளுக்காகச் சீனாவை எதிர்க்க முடியாமல் இருக்க, ட் ரம்ப்போ சீனாவின் ஷி ஜின் பிங்கை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களை என்னவென்று சொல்வது. இவரைப் போன்றவர்களிடமிருந்தும் மற்ற சர்வாதிகாரிகளிடமிருந்தும் இறைவன் உலகைக் காக்கட்டும்.

    நாகேஸ்வரி அண்ணாமலை

    https://www.facebook.com/a.nageswari

    https://twitter.com/a_nageswari

    Share
  • கவனம் பெறாத உ.வே.சா. வின் பாடத்திட்ட விளக்கவுரை

    கவனம் பெறாத உ.வே.சா.வின் பாடத்திட்ட விளக்கவுரை

    முனைவர் இரா.வெங்கடேசன் , இணைப்பேராசிரியர், இந்திய மொழிகள் மற்றும்  ஒப்பிலக்கியப் பள்ளி , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10.

    1937 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பாரதீய சாகித்திய பரிஷத்தின் மாநாட்டில் மகாத்மா காந்தி அவர்கள் தலைமை வகித்தபோது உ.வே.சாமிநாதையர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள் தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என்று சொன்னாராம். தமிழ் படித்த கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்தவர் உ.வே.சாமிநாதையர் அவர்கள். சங்க இலக்கியப் பதிப்பு முன்னோடியான இவர் அந்தக் காலத்தில் பி.ஏ. படித்த மாணவர்களுக்குப் பாடமாக இருந்த தமிழ்ப் பாட நூல்களுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். புறநானூறு முதலான பாடத்திட்டப் பகுதிகளுக்கு மிக உன்னதமான விளக்கவுரை எழுதியிருக்கிறார். இதுவரை கவனம் பெறாத புறநானூறு பாடத்திட்ட விளக்கவுரை குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    I

    இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் அச்சுக்கலை தோன்றலாயிற்று. இதன்வழிப் பழம்பெருமை பொருந்திய இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கின. அச்சுக்கலை வந்தபிறகே நம் இலக்கிய வளம் நமக்குத் தெரியலாயிற்று.

    “ஓலைச்சுவடிகளிலிருந்து நூல்களைப் பெயர்த்தெழுதி காகிதத்தில் அச்சிடும் அச்சுக்கலைப் பயிற்சி அயல்நாட்டவரின் தொடர்பில் நம் நாட்டிலும் ஏற்பட்டது. மரக்கட்டைகளில் எழுத்தைச் செதுக்கி அச்சிட்டதன் பின்னர் உலோகங்களில் வார்க்கப்பட்ட தனித்தனி எழுத்துக்களை அமைத்து அடுக்கி அச்சிடும் கலையும் இங்கு வளர்ச்சியுற்றது. எழுதாமல் பதிப்பிக்கும் இவ்வெழுத்தை ‘எழுதா எழுத்து’ என்றும் ‘தீட்டுதலிலா எழுத்து’ என்றும் நம் முன்னோர் குறித்தனர்” (இரா.மாதவன் 2000:69)

    மேலை நாட்டாரின் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும் கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழிவகுத்தன. இந்தக் காலக்கட்டத்தில் திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், அ.முத்துச்சாமிப்பிள்ளை, எல்லிஸ் துரை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமானுஜக்கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், மழவை மகாலிங்கர், தாண்டவ முதலியார், திருத்தணிகை சரவண பெருமாளையர், வேங்கடாசல முதலியார், சந்திரசேகர கவிராச பண்டிதர், திரிசிரபுரம் வி.கோவிந்தபிள்ளை, கொட்டையூர் சிவக்கொழுந்து, சி.எஸ்.சபாபதி முதலியார், யாழ்ப்பாணம் கோப்பாய் அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் வட்டுக்காட்டு அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் மன்னிப்பாய் அருணாசல சதாசிவம் பிள்ளை, இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர், மகாவித்துவான் சி.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, நல்லூர் க. ஆறுமுகநாவலர், இராமலிங்க அடிகளார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, சோடாவதானம் வ.சுப்பராய செட்டியார், கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, கு.கதிரைவேற்பிள்ளை, புதுவை சவராயலு நாயகர், பொன்னம்பல சுவாமிகள், தொழுவூர் செ.வேலாயுதமுதலியார், காயல்பட்டினம் செய்து அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம், யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை, சபாபதி நாவலர், குமாரசுவாமிப்புலவர், வயித்தியலிங்கம்பிள்ளை, முத்துப்பிள்ளைப் புலவர், த.கனகசுந்தரம்பிள்ளை, திருமயிலை சண்முகம்பிள்ளை, அ.நாராயண அய்யங்கார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், நாகலிங்க முனிவர், சோழவந்தான் அரசஞ்சண்முகனார், இரா.இராகவையங்கார், மு.சி.பூர்ணலிங்கம்பிள்ளை, வை.தாமோதரம்பிள்ளை, ச.பவானந்தம்பிள்ளை, நமச்சிவாய முதலியார் போன்ற பலரும் உ.வே.சாவிற்கு முன்பாகவே பல தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளனர். 1918க்குள் சங்க இலக்கியங்கள் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டன.

    1851 திருமுருகாற்றுப்படை – ஆறுமுகநாவலர்
    1887 கலித்தொகை – சி.வை.தாமோதரம்பிள்ளை
    1889 பத்துப்பாட்டு – உ.வே.சாமிநாதையர்
    1894 புறநானூறு – உ.வே.சாமிநாதையர்
    1903 ஐங்குறுநூறு – உ.வே.சாமிநாதையர்
    1903 முல்லைப்பாட்டு – மறைமலையடிகள்
    1904 பதிற்றுப்பத்து – உ.வே.சாமிநாதையர்
    1904 பட்டினப்பாலை – மறைமலையடிகள்
    1907 பொருநராற்றுப்படை – வா.மகாதேவமுதலியார்
    1915 குறுந்தொகை – சௌரிப்பெருமாள் அரங்கனார்
    1915 நற்றிணை – பின்னத்தூர் நாராயண அய்யர்
    1918 பரிபாடல் – உ.வே.சாமிநாதையர்
    1918 அகநானூறு – ரா.இராகவையங்கார்

    “இவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களுக்குப் பல்வேறு வகையில் நூல்கள் எழுந்தன. பழைய உரைகளைப் பதிப்பித்தனர். புத்துரைகளும் விளக்கவுரைகளும் எளிய உரைகளும் எனப் பொதுமக்கள் எளிதில் படித்துணர்ந்து கொள்ளுமாறு பல பதிப்பு வகைகள் தோன்றின. ஒவ்வொரு நூலுக்கும் திறனாய்வு நோக்கிலும் பல நூல்கள் எழுந்தன. அறிஞர்கள் எளிமையான விளக்கங்களுடன் சங்க இலக்கியத்தை மக்கட்கு அறிமுகம் செய்தமை பெரிதும் குறிப்பிடத்தக்கது” (இ.சுந்தரமூர்த்தி, 2005:70)

    உ.வே.சாமிநாதர் அவர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பத்துப்பாட்டின் முதற்பதிப்பும் (1889) புறநானூற்றின் முதற்பதிப்பும் (1894) கொண்டுவரப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டிலேயே ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பும் (1903) பதிற்றுப்பத்தின் முதற்பதிப்பும் (1904) பதிப்புப்பெற்று நூல் உருவம் பெற்றன. பதினேழு ஆண்டுகளில் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகை நூல்களில் மூன்றையும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்துள்ளார்.

    “கால வரிசைப்படி உ.வே.சாமிநாதையர் அவர்களின் பதிப்புகளை ஒழுங்குபடுத்தும் போது பதிப்புகளின் முறை இவ்வாறு அமைகிறது.

    பத்துப்பாட்டு 1889 (1918, 1931, 1950, 1956, 1961, 1974)

    புறநானூறு 1894 (1923, 1935, 1950, 1956, 1963, 1971)

    ஐங்குறுநூறு 1903 (1920, 1944, 1949, 1957)

    பதிற்றுப்பத்து 1904 (1920, 1944, 1945, 1949)

    பரிபாடல் 1918 (1935)

    குறுந்தொகை 1937 (1947, 1955, 1962)” (குளோரியா சுந்தரமதி, 1984:8)

    உ.வே.சாமிநாதையர் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட காலகட்டத்தில் மூன்று வகைகளாக பதிப்பு நெறிமுறைகளைக் கையாண்டார். 1. பழைய உரைகளோடு குறிப்புக்களைப் பதிப்பிப்பது. 2. புதிய உரையோடு பதிப்பிப்பது. 3. உரை இல்லாமல் மூலம் மட்டும் பதிப்பிப்பது. இந்த மூன்று பதிப்பு நெறிமுறைகள் அவரின் காலத்தில் இருந்தது. மூன்று நெறிமுறைகளைக் கையாண்ட பெருமை உ.வே.சாமிநாதையர் அவர்களையே சாரும். இக்காலக்கட்டத்தில் பல நூல்கள் மறுபதிப்புக் கண்டன. உ.வே.சாமிநாதையர் அவர்களும் தாம் பதிப்பித்த நூல்களைச் செம்மையுற மறுபதிப்பு செய்கிறார்.

    புறநானூற்றின் இரண்டாம் பாடலின் மூலம் திணைக்குறிப்பு, பாடினோர், பாடப்பெற்றோர் பெயர்கள் இவற்றைத் திருத்தமுற அமைத்த முறையைக் குறிப்பிடுகிறார். மேலும் ஒப்புமைப்பகுதிகள் மேற்கோள் விளக்கங்கள் தேவையான குறிப்புரைகள் இணைவுற்றதையும் எடுத்துரைக்கிறார்.

    “உ.வே.சா. அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு நூலின் அடுத்த என்பது திருந்திய பதிப்பு. பதிப்புக்கலையின் நுட்பங்கள் முன்னைப் பதிப்பிலும் செறிவுற்றமையும் பதிப்பு” (சொல் விளங்கும் பெருமாள், 1981)

     எனவே மறுபதிப்பு செய்கின்ற வேளையில் தீவிரத்தன்மையுடன் கூடிய பதிப்புநெறிகளைக் கையாண்டு பதிப்பித்தார் உ.வே.சா.

    II

    நூல்களுக்கு உரை எழுதாமல் வாயால் விளக்கிச் செவியால் அறிந்து கொள்ளும் காலக்கட்டம் இருந்தது. பலமுறை வாய்மொழி வழியாக வழங்கிவந்த உரைகளே பிற்காலத்தில் உரைகளாக எழுந்தன. உரையின் வளர்ச்சி என்பது.

    “மூலபாடம் சொல்லல், கருத்துரைத்தல், சொல் வருவித்தல், சொற்பொருள் உரைத்தல், பொழிப்புரைத்தல், உதாரணங்காட்டல், விரிவுகாட்டல், அதிகார வரவு காட்டல், பணிவுகூறல், பயனொடெடுத்தல், ஆசிரிய வசனம் காட்டல் என்று பல வகைகளாக விரிந்தது என்பதை மயிலைநாதர் உரையால் அறியமுடிகிறது.” (இ.சுந்தரமூர்த்தி 2005:74)

    சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்கத் தொடங்கியவர்கள் மூலத்தோடு சொந்தமாக எழுதிய உரையைப் பதிப்பித்தனர். ஆனால் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பழைய உரைகளோடு பெரும்பாலும் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தார். ஐங்குறுநூற்றின் இரண்டாம் பதிப்பில் பழைய உரை குறித்தும் தமது உரை முயற்சி குறித்தும் குறிப்பிடும்போது ‘பழைய உரையில்லாத செய்யுள்களுக்கு உள்ளுறையுவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒரு வகையாக உரை எழுதி இத்துடன் பதிப்பிக்கலாம் என்ற விருப்பம் சில சமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு. நிகழ்ந்தும் இந்நூலையும் இவ்வுரையையும் உற்று நோக்க அவ்விருப்பம் அடியோடே மாறிவிட்டது. இந்நூல் முழுமைக்கும் நான் எழுதி வைத்த அரும்பதிவுரையை இத்துடன் பதியாமைக்கு காரணம் இதுவே எனக் குறிப்பிட்டுள்ளார்.’

    “இப்பகுதி பழைய நூல் உரைகள் குறித்து உ.வே.சா. அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பையும் தாமாக உரை எழுதும் வன்மை பெற்றிருந்தும் தன்னடக்கம் காரணமாக தன் நிறை காணாது குறையையே எண்ணும் தகைமையையும் காட்டுகின்றது. உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த சங்கத் தொகை நூல்களில் இத்தகைய பழைய உரை எதனையும் பெறாது அமைந்த நூல் குறுந்தொகை ஒன்றே. சங்க இலக்கியப் பதிப்பு வரிசையில் இறுதியாக அமையும் இந்நூலுக்கு மட்டுமே உ.வே.சா. அவர்கள் பதவுரை, விசேடஉரை, மேற்கோள் விளக்கம், ஒப்புமைப்பகுதி ஆகியவற்றை வழங்கியுள்ளார். பிறவற்றிற்குக் குறிப்புரை மட்டுமே பொருந்துகின்றது.” (குளோரியா சுந்தரமதி, 1984:34)

    பாடநூலாய்ப் புறநானூறு (பா.101-125) அன்றைய காலத்தில் (1911) பி.ஏ. மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடல்களுக்குப் பதவுரையும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதியும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் எழுதியுள்ளார். இது புதுமையானதாகும். டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் புறநானூற்றைப் பதிப்பித்தது அதாவது முதல் பதிப்பு 1894. இரண்டாம் பதிப்பு 1923 அதனைத் தொடர்ந்து பல பதிப்புகள் வருகின்றன. இந்தப் புறநானூற்றுப் பதிப்பிற்குக் குறிப்புரை மட்டுமே தருகிறார். புறநானூறின் முதல் பதிப்பிற்கும் (1834) இரண்டாம் பதிப்பிற்கும் (1923) இடையே பி.ஏ. மாணவர்களுக்குப் பாடமாக (1911) இருந்த புறநானூறு 101 முதல் 125 பாடல்களுக்குச் சிறந்ததொரு பதவுரையும் விளக்கவுரையும் தருகிறார். இந்த உரை குறித்து யாரும் பேசவில்லை.

    இந்நூலில் முகவுரை, பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, புறநானூறு மூலம் உரையும் [க0க – கஉரு] திணை விளக்கம், துறை விளக்கம், பிரயோக விளக்கம் போன்றவற்றைத் தந்துள்ளார். மேலும் சொல் பிரிப்பு, பதவுரை, விசேடவுரை, சொற்பொருள நிரை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், ஒருசொல்லுக்குப் பல பொருள் பயிலும் நிலையை எடுத்துரைத்தல், உரையாசிரியர்கள் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களை எடுத்துரைத்தல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, சொல்தேர்ச்சி, இலக்கணம், பிரதிபேதங்கள், விசேட உரையும் குறிப்புரையும், ஒப்புமைப் பகுதி போன்றவறறைத் தருகின்றார்.

    உ.வே.சாமிநாதையர் பாடலின் உரையை நான்கு பகுதிகளில் வகைப்படுத்தித் தருகிறார். அவை 1. பதவுரை 2. முடிவு 3. கருத்து 4. விசேடவுரை என்பனவாகும்.

    பதவுரை என்பது பாடலின் கட்டுக்கோப்பில் சொற்களையும் தொடர்களையும் நிறுத்திக்கொண்டு பொருள் காண்பது. இது கவிதை மொழியின் செறிவமைப்பை இனங்காட்டி நிற்கும். புறநானூறு 102 ஆம் பாடல்

    “எருதே யிளைய நுகமுண ராவே

    சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே

    யவலிழியினு மிசை யேறினு

    மவண தறியுநர் யாரென வுமணர்

    கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன

    விசைவிளங்கு கவிகை நெடியோய் திங்க

    ணாணிறை மதியத் தனையையிருள்

    யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே”

    பதவுரை

    இளைய எருது நுகம் உணரா – இளைய எருதுகளானவை நுகம்பூணுதலை மதியா; சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – வண்டியானது உப்பாகிய பண்டம் பெரிதாக இடப்பட்டது; ஆதலால் அவல் இழியினும் – அவ்வண்டி பள்ளத்தே இறங்கினாலும்; மிசை ஏறினும் – மேட்டிலே ஏறினாலும்; அவணது அறியுநர்யார் என – அவ்விடத்து வரும் இடையூற்றை அறிவார் யார்தா னென்று நினைத்து, உமணர் கீழ்மரத்து யாத்த – உப்பு வணிகர் அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட; சேம அச்சு அன்ன – சேமவச்சுப்போன்ற; இசை விளங்கு கவிகை நெடியோய் – புகழ் விளங்கிய இடக்கவிந்த கையையுடைய உயர்ந்தோய்! திங்கள் நாள் நிறை மதியத்து அனையை – நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை யொப்பை; ஆகலின், நின் நிழல் வாழ்வோர்க்கு இருள் யாவணது – நின்னிழற்கண் வாழுமவர்களுக்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது.

    இந்தப் பாடல் அமைப்பில் முன்னும் பின்னும் இடம்பெயர்ந்து அமையும் தொடரைப் பொருள் கொள்வதற்கு வாய்ப்பாக உரை அமைப்பில் இரண்டு இடங்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்.

    வாக்கிய நிலையிலும் தொடர்நிலையிலும் அமையும் இடமாற்றங்கள் ஒழுங்குபடுத்தப்பெற்றுப் பாடல் தொடரைப் பொருள் கொள்ள வசதியாக அமைத்துக்கொள்ளுதலைப் பதவுரையின் முதல்படிநிலையாகக் கொள்ளலாம்.

    அடுத்த படிநிலைகளாகச் சொற்களைத் தனித்தனியாக எளிதில் புரிந்து கொள்ளும்படி பிரித்துக்கொள்ளும் உயிரும் உயிரும், மெய்யும் உயிரும் உற்ற சந்திமாற்றங்கள் அல்லது திரிபுகள் நீக்கப்பட்டுச் சொற்கள் தனிப்படுத்தப்படுகின்றன. இதன்விளைவாக

    “ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்

    தூம்பாகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கித்”

    என்ற செய்யுளடிகள்

    “ஒருதலை பதலை தூங்க ஒருதலை

    தூம்பு அகம் சிறுமுழா தூங்க தூக்கி” (க0ங.1-2)

    என்ற சொற்களின் தொகுதியாக மாற்றப்படுகின்றன.‘

    இசைநிறைக்காக அமைந்த பொருளுள்ள சொற்கள் (அசைகள்) விடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக வாழ்கவன்தாளே (ஏ), (க0ங) என்பதில் அமைந்த ஏகாரம் பதவுரையில் இடம்பெறவில்லை.

    முடிவும் கருத்தும்

    முடிவு என்ற பகுதியில் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வழங்குவது பாடலின் வினைமுடிவு. பாடலில் பொருந்தும் அடிப்படையான தொடரமைப்பு. கருத்து என்ற பகுதியில் அவர் வழங்குவது பாடலின் கருத்து. பாடலில் பொருந்தும் தொடர் அமைப்பும் அதன் கருத்தும் இரண்டு எல்லைகள்.

    “சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வதற்கு-பயிலுவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் பாடலிற் செறிந்தமைந்த அடைகளைக் கோத்துச் செல்லும் பாடலின் அடிப்படையான தொடரை உணர்ந்து கொள்வது முதற்படி. பாடலின் அடிப்படைத் தொடரை எடுத்து வழங்கும் நிலை பழைய உரையாசிரியர்களிடம் அமைந்த உரைநெறிகளில் ஒன்று. இதனையே உ.வே.சாமிநாதையர் அவர்கள் தமது முடிவு என்ற பகுதியில் அமைத்துள்ளார்.” (குளோரியா சுந்தரமதி, 1984:44)

    புறநானூறு க0ங பாடலில் பதலையென்பது – ஒருதலையுடையதொரு தோற்கருவி. பகைப்புலத்தோனென்ற கருத்து. பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின் நீவேண்டியவெல்லாந்தருதல். அவனுக்கு எளிதென்பதாம். சேணோனல்லனென்பதற்கு – பரிசில் நீட்டிப்பானல்லனென்று உரைப்பினுமமையும் என்று கூறியுள்ளார்.

    விசேடவுரை

    உ.வே.சாமிநாதையர் அவர்கள் விசேடவுரையில் சொற்பொருள் நிலை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், உரையாசிரியர் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களைத் தருதல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, அளபெடை, உவமை முதலிய அணிகள் எனப் பலவற்றைத் தருகிறார். எடுத்துக்காட்டாக“கா-தேற்சுமை, ஒருதலை-ஒருபக்கம், தூங்க – தொங்க, அகம் – உள், முழா – மத்தளம், பரிசு – விதம், மண்டை – ஏற்கும் பாத்திரம், மலர்த்தல் – வாய் மேலாகப் பிடிக்கச் செய்தல், விறலி – விளிப்பெயர் – விறல் படப்பாடியாடுபவளென்பது பொருள். சேய்மை – தொலைவு, முனைப்புலம் – பகைவருறையுமிடம். (ங)

    இதற்கடுத்த நிலையில் பல செய்திகளைப் எழுதியுள்ளார். இந்தப் படிநிலையில் வரிசையில் ஒவ்வொரு பாடலையும் அமைத்துள்ளார்.

    நூலின் இறுதியில் இந்தப் பகுதியில் (பாடப்பகுதி புறம்.101-125) வந்துள்ள துறைகளுக்குச் சுருக்கமான விளக்கத்தைத் தருகிறார். அரசவாகை, இயல்மொழி, கையறுநிலை, பரிசில்கடாநிலை, பொருண்மொழிக்காஞ்சி, மகண்மறுத்தல், விறலியாற்றுப்படை. இதற்கடுத்த நிலையில் இப்புறநானூற்றுப்பபாடல்கள் இலக்கிய-இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள இடங்களைக் குறிப்பிடுகிறார்.

    முடிவுரை

    இந்தப் பாடத்திட்ட உரையில் ஏராளமான நுட்பமான விளக்கங்களைத் தந்துள்ளார். மேற்கோள் நூல்கள் பலவற்றை எடுத்துத் தருவதோடு, உரையாசிரியர்கள் கருத்துக்களையும் தந்து செல்கிறார். உ.வே.சாமிநாதையர் அவர்கள் தாம் உரை வகுத்த குறுந்தொகைக்கு மட்டுமே விசேடவுரை வழங்கியுள்ளார். ஏனைய நூல்களுக்குப் பழைய உரை அமைந்துள்ளமையால் குறிப்புரை மட்டுமே வழங்கியுள்ளார். இக்குறிப்புரையின் வளர்ச்சிநிலையே இப்பாடலுக்கான மேற்கோள் காட்டித் தன் புலமையை வெளிப்படுத்துகிறார். பழைய நூல்களை எவ்வாறு அணுகுவது என்பதனை இவ்வுரையின்வழித் தெளியமுடிகிறது. பாடநூலாக இருக்கும் நூலுக்கு எதையாவது சொல்லிவிடலாம் என்று இல்லாமல் தெளிவாகப் பதவுரை, விளக்கவுரை, இலக்கண விளக்கம், ஒப்புமைப் பகுதி, மேற்கோள் விளக்கம், பிரதிபாடம், பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, உவமை நயம் போன்ற பலவற்றை மிகச்சிறப்பாக எடுத்தியம்புகிறார். இரண்டு விசயங்களை நாம் கவனிக்கவேண்டியது 1.ஆங்கிலேயர்கள் தமிழ்ப்பாட நூல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம். மற்றொன்று ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த பாடத்திட்ட அமைப்பு முறை குறித்தானது. இது குறித்துத் தனியே ஆராய வேண்டும்.

    குறிப்புகள்

    1. இரா.மாதவன், 2000, சுவடிப்பதிப்பியல், பாவை வெளியீட்டகம், தஞ்சாவூர் – 5
    2. சுந்தரமூர்த்தி, 2005, பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், சென்னை
    3. குளோரியா சுந்தரமதி, 1934, டாக்டர் உ.வே.சா. சங்க இலக்கியப் பதிப்புகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
    4. பூ. சொல் விளங்கும் பெருமாள், டாக்டர் உ.வே.சா. பதிப்புப் பணி ஓராய்வு, மதுரை
    5. இ.சுந்தரமூர்த்தி, 2005, பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், சென்னை
    Share
  • திருச்சதகத்தில் மணிவாசகர்

     திருச்சதகத்தில் மணிவாசகர்

    முனைவர் இரா. மதன் குமார். உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    முன்னுரை

    தொல்லை இரும்பிறவிப் பிணி தீர்க்கின்ற அருமருந்தென விளங்குவது, ‘திருவாசகம்’. அதன் ஐந்தாம் திருப்பாடல் தொகுப்பாக இடம்பெறுவது, நூறு திருப்பாடல்களைக்கொண்ட திருச்சதகமாகும். மெய்யுணர்தல் முதலாக, ஆனந்தாதீதம் ஈறாகிய பத்துத் தலைப்புகளின் கீழுள்ள,   ஒவ்வொரு திருப்பாடலின் சொல்லும் பொருளும், மணிவாசகரின் சிவானுபவப் பதிவுகளாக உள்ளன. அத்திருப்பாடல்கள், தாயைத் தேடி அலைகின்ற குழந்தையின் ஆராத தவிப்பாக, கண்ணொளி பெற்று அதனை மீண்டும் இழந்தானின் தீராத ஆற்றாமையாக, உலக வாழ்க்கையை ஆற்றாது, சிவத்தைச் சேர மணிவாசகர் கொண்ட ஞானத்தவிப்பின் பதிவுகளாக விளங்குகின்றன. அவ்வகையில், திருச்சதகத் திருப்பாடல்களில் புலனாகும், மணிவாசகரின் பக்தி அனுபவத்தை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    ஞானநாடகம்

    ‘உலகும், உடம்பும், இளமையும், செல்வமும் நிலையில்லாதன’ என உணர்தலும், ‘சிவமே மெய்ப்பொருள்’ என்று தெளிதலுமே, மெய்யுணர்தலாகும். ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பாகும். உயிரானது, பொய்ப்பொருளைப் பற்றி நிற்கின்ற அறியாமை மயக்கிலிருந்து தெளிகின்றபோது, மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சார்கின்ற பேரறிவு வாய்க்கின்றது. அப்பேரறிவானது, பற்றற்றவனாகிய பரத்தையே நாளும் பற்றுகின்ற மெய்யுணர்வை மேன்மேலும் உயிரிடத்தில் விளங்கச்செய்கிறது. மணிவாசகர், திருப்பெருந்துறையில் இறைவன் தமக்கு ஞானகுருவாக வந்தருளிய நொடிமுதலாக, சித்தத்தைச் சிவன்பாலே வைக்கின்ற மெய்யுணர்வில் முழுமையாக ஆழ்ந்தார். பெருமான் அவர்பொருட்டு, நரியைக் குதிரைகளாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்தும் நிகழ்த்திய விளையாடல்களின் வழியே அவர்தம் அருள்சிறப்பினைத் தென்னவன் உணர்ந்தான். அவன், தனது ஆட்சிப்பொறுப்பை அடிகளிடம் தந்து, தம்மையும் மக்களையும் உய்விக்க வேண்டினான். அடிகள், தமது ஞானத்தெளிவாகிய மெய்யுணர்வால், நாடாளுகின்ற பேற்றினையும் தாழ்வென ஒதுக்கினார். ‘தம்மை ஆள்கின்ற நாதன் பாதம் பணிவதே, உயிர்க்கு உறுதி’ என்ற மெய்யுணர்வில் நிலைகொண்டார். நிலையில்லா உலகியல் இன்பங்களின் மீதான மயக்கம் தீர்தலும், திருவடியில் கண்ணீர்ப் பெருக்குதலும், அன்பை மறவாத பற்றுறுதியுமாகிய மணிவாசகரின் மெய்யுணர்வு அனுபவங்கள், திருச்சதகத்தில், ‘மெய்யுணர்தல்’ என்னும் தலைப்பின்கீழ் உரைக்கப்பெற்றுள்ளன.

    ‘மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

    கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்

    பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும்

    கைதான் நெகிழ விடேன்உடை யாயென்னைனைக் கண்டுகொள்ளே’ (திருச்சதகம்:1)

    என்றமைந்த பாடலின் இறுதி அடியிலுள்ள, ‘கை’ என்பது, ‘ஒழுக்கம்’ எனப் பொருள்படும். ‘நெகிழவிடேன்’ என்பது, ‘கைவிடேன்’ என்னும் பற்றுறுதியைக் குறிக்கும். ’பெருமானைப் பணிவதே பணி’ என மணிவாசகர் பெற்ற மெய்யுணர்வின் வெளிப்பாடாக இத்திருப்பாடல் அமைந்திலங்குகிறது.

    அறிவுறுத்தல்

    உலகியல் வாழ்வில் உயிர்கள், ‘யானே அனைத்தையும் செய்கின்றேன்’ என்ற அகப்பற்றுடனும், ‘எல்லாம் எனது உடமை’ என்னும் புறப்பற்றுடனும் அறியாமைக் கூத்தாடி, அன்றாடம் வாழ்நாளை வீணே கழிக்கின்றன. பயனற்ற அறியாமைக்கூத்தின் அவலத்தை உயிர்க்கு அறிவுறுத்தி மீட்டருள வேண்டியே பெருமான், அம்பலத்தின்கண் ஓயாது ஆனந்தக்கூத்தாடுகின்றான். ‘அம்பலமாகிய அண்டக்கூத்தே, பிண்டத்திலும் விளங்குகிறது; அனைத்து உயிரினுள்ளும் இருந்து பெருமானே அனைத்தையும் இயக்குகின்றான்’; அவனே உள்ளிருந்து, தன்னையும் இயக்குகின்றான்’ என்னும் மெய்யுணர்வு பாழாகாதவகையில், பெருமானை இடையறாது தொழுது பக்தியில் ஆழ்வதே நன்னெறியாகும்’ என மணிவாசகர் நெஞ்சுக்கு அறிவுறுத்துகின்றார்.

    ‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு

    ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே

    சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்

    வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே’          (திருச்சதகம்: 20)

    சுட்டறுத்தல்

    பொறி முதலிய கருவிகளின் துணையால், குறித்த ஒன்றினைச் சுட்டி நம் சிற்றறிவுக்கு எட்டியவாறு உணர்தல், சுட்டறிவாகும். ஆனால், ‘பெருமான், அத்தகைய பசுஞானத்தால் உணர வல்லவன் அல்லன்’. அதனைப் பெருமானே உயிர்க்கு அறிவுறுத்தித் தெளியச்செய்தலே சுட்டறுத்தலாகும் (சிற்றறிவு அகற்றல்). ’ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக்கண்ணினில் சிந்தை நாடுக’ என்பது சிவஞானபோதம். அவனருளையே கண்ணாகக் கொண்டு காணமுற்பட்டால் மட்டுமே, இறைவன் அனைத்து பொருள்களின் குண குணியாகவும், அவற்றைக் கடந்த அரும்பொருளாகவும் விளங்குகின்ற பரத்துவத்தை உணரலாம். திருவருளே கண்ணாக இருந்து, உயிர்க்குப் பெருமானை உணர்த்துகிறது. ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ என்பது திருமந்திரம் (பாடல்: 2823).

    ‘இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை

    ஆட்கொண்டெம் பிரான் ஆனாய்’                 (திருச்சதகம்: 22)

    என்னும் தொடர்கள், ‘தகுதிநோக்காது பெருமான், தானே எளியனாக எழுந்தருளி, இன்ன தன்மையன் என்பதைக் காட்டியருளினன்’ என்று, மணிவாசகரின் அருளனுபவத்தைச் சுட்டுகின்றன.

    ‘யான்’ ; ‘எனது’ என்னும் பற்றற்ற உயிர், தன்னை மறந்து, தன்னைச் சிறுபொருளாக உணர்ந்து, தன்னிலும் மேலான பெரும்பொருளை அறிதற்கு ஞானப்பேராவல் கொள்கிறது. தன்னை உணர்ந்த மெய்யணர்வு நிலையே, உயிர்க்கு, அன்பென்னும் அகக்கண்ணையும், அருளென்னும் வழித்துணையையும் தந்து, பெருமானுடன் பிரிவரியாத திருவருளுறவுக்கு வகைசெய்கிறது. ‘தனது அறிவென்னும் குறையுணர்வால், பெருமானைக் குறைவுற உணர்கின்ற அவலம் நேராதவகையில், பெருமானே தமக்கு குருவாகிவந்து, திருவருளையே கண்ணாகத் தந்தருளி, ஞானநிலையினை உணர்த்தியருளிய பெருங்கருணைக்கு நன்றியுடையவராக மணிவாசகர், தம்மை, ‘நாய்’ என்று குறித்தருளியுள்ளார்.

    ‘நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே

    நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே

    காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்

    கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை

    மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்

    எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே’                 (திருச்சதகம்: 28)

    சுட்டறிவின் வழியல்லாது, அவனருளால் அவனைக் காணும்படியான வித்தையினைப் பெருமான் செய்தருளிய கருணையின் பெருமிதத்தை மணிவாசகர்,

    ‘சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன்

    கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி

    வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்

    மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார

    வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை’                 (திருச்சதகம்: 26)

    என்று குறித்தருளியுள்ளார். இப்பாடலில், ‘வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி’ என்றமைந்த தொடர், பெருமானின் திருவடியில் அன்புபெருக்கி, மணிவாசகங்களால், திருவாசகத்தை அருளிச் செய்கின்றவகையில், பெருமான் தம்மிடத்தில் கீழான சுட்டறிவை மாய்த்துச் சிவஞானத்தை விளங்கச்செய்ததனைக் குறிப்பதாகும்.

    ஆத்துமசுத்தி

    சுட்டறிவாகிய சிற்றறிவுநிலை அகன்று, மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களாலும் உயிர் தூய்மைபெற்று விளங்குவதே ‘ஆத்துமசுத்தி’ (ஆன்மத்தூய்மை) என்பதாகும். அத்தகைய தூய்மைநிலை, ‘மெய்யன்பு’ எனப்பெறும்; மெய்யன்பாகிய தூய்மைநிலை, தன்னை மறந்து, உலகியலை முற்றிலும் துறந்து, ஆன்மநாயகனாகிய பெருமானை உள்ளும் புறமும் இடையறாது தேடித் திரிகின்ற ஆன்மவிழிப்பைத் தருகிறது; இமைப்பொழுதும் பெருமானைப் பிரியாது, அன்பு மிகுந்து, ஆடுதலும், பாடுதலும், தேடுதலும், திகைத்தலும், தெளிதலுமாகிய அருளனுபவங்கள் உயிர்க்கு வாய்க்கிறது. அத்தகு அருளனுபவங்களுக்கு இடையூறு நேருங்கால், உடல் தாங்கி வாழவும் அவ்வுயிர் பொறுப்பதில்லை. அவ்வகையில் மணிவாசகரும் ஆத்துமசுத்தியுடன், பெருமானை அணுப்பொழுதும் பிரிந்திருக்க ஆற்றாமல், தீயில் வீழவும், மலையிலிருந்து பாயவும், பெருங்கடலில் வீழவும் துடிக்கின்றார்.

    ‘தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்

    தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவனே’   (திருச்சதகம்: 39)

     கைம்மாறு கொடுத்தல்

    கைம்மாறு கொடுத்தலாவது, பிறர் செய்த உதவிக்கு நன்றியாக நாம் அவர்கட்கு மீள உதவுதல். ‘கருணையே உருவமாகி, அனைத்து உயிர்க்கும் இரங்குதலே இறைவன், உயிர்கட்குப் புரிகின்ற பேருதவியாகும்; தாயைப் பிரிந்த கன்றெனப் பெருமானை இடையறாது தேடுதலே, நாம் அவனுக்குச் செய்கின்ற கைம்மாறாகும். அடிகளுக்கு அருளவேண்டி பெருமான், திருப்பெருந்துறையில் அருமையில் எளிய அழகனாக வந்தான். அதுகாறும் தாம், ‘அறிவீனன்’ என்னும் நிலையிலேயே இருந்ததாகவும், பெருமானே அருங்கருணையால் அடியவனாக ஆட்கொண்டு, அவனை முற்றும் அறிகின்ற சிவஞானத்தையும் தந்தருளினான்’ என்றும், அதனால் அவனிடத்தில் உண்மையான பக்தி செலுத்துதலே அதற்குரிய மேலான கைம்மாறு என்றும் மணிவாசகர் அறிவிக்கின்றார்.

    ‘அறிவ னேயமு தேயடிநாயினேன்

    அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது

    அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்

    அறிவனோவல்ல னோஅரு ளீசனே’                 (திருச்சதகம்: 50)

    என்றமைந்த பாடலில், ‘தாம் அறிவுடையவரா? அன்றி அறிவற்றவரா?’ என்று அடிகள் பெருமானிடத்தில் ஞானவினா எழுப்புகின்றார். அவ்வினா, அடிகள் தம்மை உணர்ந்த ஞானத்தெளிவின் வெளிப்பாடாகும்.

    அநுபோகசுத்தி

    செயல்கள், உயிர்க்கு வினைத்தொடர்பை ஊட்டுகின்றன. வினைத்தொடர்பால் உயிர் மேலும் பல பிறவிகளில் பிறந்திளைக்க நேரிடுகிறது. பிறவிகளை வாய்ப்பாகக்கொண்டு, ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களும், சார்ந்ததன் வண்ணமாக விளங்கவல்ல உயிரைக் கீழ்நிலைகளில் செலுத்தி, அதன் தூய்மையினைச் சிதைக்கின்றன. ஆனால், தன்னை உணர்ந்து, திருவருள் தொடர்பில் ஆழ்கின்ற சிவஞானிகளிடத்தில், ஆணவமலம் மெலிகிறது. மாயையின் மயக்கமும் நீங்குகிறது. அவர்களது கருவி கரணங்கள், சிவகரணங்களாகவும், சிந்தை, சிவச்சார்பிலேயே ஆழ்ந்தும், செயல், சிவனது அருள்விளையாடல்களாகவும் மேம்படுகின்றன. அவ்வுயர்நிலையினைச் சீவன்முத்தநிலை என்பர். அந்நிலையில், சிவத்துடன் பிரிப்பின்றிக் கலந்திருந்து, அழுந்தி அறிதலாகிய பேறு உயிர்க்கு வாய்க்கிறது. சீவன்முத்தரெனச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்த உறைப்பினாலேயே திருஞானசம்பந்தர், ‘எனதுரை தனதுரையாக’ என்று பாடியருளினார். மணிவாசகரும் அத்தகைய அருளுறுநிலைக்குத் தடையாக உள்ள உடம்பைச் சுமக்க ஆற்றாமல் புலம்புகின்றார். சீவன்முத்தர்களாகிய உண்மையடியார்கள் சிவச்சார்பில் உறுதிஉடையவர்கள்; அவர்கள், பெருமானது திருக்குறிப்பையே திருவருளாணையாக ஏற்றுப் பணிபவர்கள்; வினைத்தொடர்பினை ஒழித்த அவர்களது உயர்வு, திருப்பெருந்துறையில் அவர்கள், பெருமானின் கழல் அடைந்துய்ய வகைசெய்தது. ஆனால், தான்மட்டும், வினைத்தொடர்பை மேன்மேலும் பெறுகின்றகின்றவாறு உடம்பைப் பேணுகின்ற தாழ்வு கொண்டுள்ளதாகக் குறித்துள்ளார்.

    ‘மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட

    தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்

    கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட

    ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே’     (திருச்சதகம்: 55)

    காருணியத்திரங்கல்

    தாம் இடையறாமல் திருவருள் திளைப்பில் களிப்பினும், அடிகளின் அன்புள்ளம், தில்லையில் பெருமானைச் சேர்கின்ற பேராவலில் ஓயாமல் தவித்தது. திருப்பெருந்துறையில் ஞானகுருவாக வந்த பெருமானுடன் வந்த அடியார்களும் சிவசோதியில் கலந்து மறைந்தனர். ‘நீர் மட்டும் மண்ணுலகில் சிலகாலம் தங்கியிருந்து, தில்லையை வந்தடைந்து எம்மைச் சேர்க!’ என்று அடிகளுக்குப் பெருமானால் அருளாணை அருளப்பெற்றது. அவர் அருளியவாறு, ‘தில்லைக்கூத்தனைச் சேர்கின்ற கருணைப்பேறு எந்நாளில் வாய்க்கும்?’ என்பதே அடிகளின் தீராத பேராவலாக இருந்தது. அதற்கென, தில்லைப் பெருமானை வேண்டி,

    ‘வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி’    (திருச்சதகம்: 68)

    என்று பாடி, பெருமானின் கருணைக்கு ஏங்குகிறார்.

    ஆனந்தத்து அழுந்தல்

    சமயக்குரவர் முதலாயினோரின் மண்ணுலக இருப்பானது, மக்கள்தம் நல்வாழ்வின் பொருட்டு இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாகும். பிள்ளையாரும், அரசுகளும், நம்பிகளும் மண்ணுலகில் வாழ்ந்த பெரும்பேறே, சைவப்பெருஉலகின் தேவாரத் திருச்செல்வமாகத் திகழ்கிறது. அவ்வாறே, அடிகளின் மண்ணுலக வாழ்வும் நம்மைத் திருவாசகமென வாழ்விக்கிறது. அடிகள், திருவருள் திளைப்பில் ஆழ்ந்து, மண்ணுலகில் சீவன்முத்தரென வாழ்ந்தநாளில், தில்லை நகரடைந்து, அம்பலவனைக் கூடுவதே அவரின் பெருவிருப்பாக நிலைத்திருந்தது.

    அடிகள், தில்லையை அடைதலும், அங்கு பலநாள் தங்கியிருத்தலும், பௌத்தரை வாதில் வெல்லுதலும், திருக்கோவை பாடுதலும், பெருமானே திருவாசகத்தைப் படியெடுக்க வரவிருத்தலுமாகிய திருவிளையாடல்கள் தில்லையின்கண் நிகழ்தற்கு உரியகாலம் வாய்க்கின்றவரையில், அடிகள் தில்லையை அடைதற்குப் பெருமான் திருவருளாணை அருளவில்லை. ‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ; வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில், அதுவும் உன்தன் விருப்பன்றே’ என்ற ஞானத்தெளிவு கொண்ட அடிகள்,

    ‘உண்மையடியார்கள் அன்று உம்முடன் வர அருளி, என்னை மட்டிலும் மண்ணுலகில் விடுத்துச் சென்றீர்; ‘அவர்களது உண்மையான பூசனைப்பயனே அவர்கட்கு உம்மைப் பெற்றுத்தந்தது. அவ்வகையில் யானும் உம்மைப் பெறுதற்குக் கருவியாக, ‘பூசனைப்பேற்றினைத் தந்தருள்க!’ என பெருமானிடத்தில் வேண்டுகிறார். சிவானந்தத்தில் அழுந்தியிருக்கக் கருவியாகிய மெய்யன்பை விளைவிக்கின்ற பூசனைப் பேற்றை வேண்டுபவராக,

    ‘புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின்க ழற்கணே

    புணர்ப்ப தாக அங்க ணாள புங்க மான போகமே’ (திருச்சதகம்: 71)

    என்று பாடியுள்ளார். இத்தொடர்களில், ‘புங்கமான போகம்’ என்பது, மேலான பேறு என்பதாகும்.

    பூசனையே மேலான பேறாகும். ‘ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த’ என்பது, பிள்ளையார் தேவாரம். அதனாலேயே அம்மையும் அப்பனை அடைவதற்குரிய பேறாகப் பூசனையை வேண்டினாள். அப்பனும் அவளது பூசனைக்கு உகந்து,  ‘நின் பூசனை என்றும் எம்பால் முடிவதில்லை’ என்று அருளியுள்ளான். அடிகளும் அத்தகைய அருள்பேற்றினைப் பெற விழைகின்றார். வழிபாடாகிய இன்பத்தில் இடையறாது திளைக்கின்ற வேட்கையைச் சுட்டுவதால் இத்திருப்பதிகத் தொகுதிக்கு, ‘ஆனந்தத்து அழுந்தல்’ என்னும் பெயர் பொருத்தமுடையதாகும்.

     ஆனந்த பரவசம்

    ‘இறைவனுடன் கூடியிருத்தலே, ‘சிவானந்தம்’. அத்தகைய பேற்றுக்கு மெய்யன்பே கருவியாகும்’ என்று தெளிந்த மணிவாசகர், தமது தாழ்நிலையினை உணர்ந்து கழிவிரக்கம் கொண்டார். ‘பெருமானை அடைந்து உய்வுற்ற அடியார்கள் அனைவரும், ‘உண்மையடியார்கள்’ என்னும் பக்குவநிலையும், ‘பழவடியார்’ என்னும் தகுதிநிலையும் பெற்றவர்கள். ஆனால், தமது தகுதியோ, அவர்களினும் குறைந்ததாக இருக்க, அவர்களைப்போலவே சிவனடி கூடிடக் காலம் தாழ்வதற்குக் கவலை கொள்வதில் பொருளில்லை’ என ஆற்றாமையால் தம்மைத்தாமே தேற்றிக்கொள்கின்றார். ‘நல்லபசுக்கள் இடையனைக் கண்டு அன்பின் பெருக்கில் கனைக்க, இடையனைக் காணக் கண்ணற்ற குருட்டுப் பசுவும், பிற பசுக்களுடன் கலந்து கனைக்கின்ற அறியாமையைப் போன்றதே தனது முயற்சியும்’ என்பது மணிவாசகரின் சிந்தனை.

    ‘தாராய் உடையாய் அடியேற் குன்தா ளிணையன்பு

    பேரா உலகம் புக்கா ரடியார் புறமே போந்தேன்யான்

    ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங் குன்தா ளிணையன்புக்கு

    ஆரா அடியேன் அயலே மயல்கொண் டழுகேனே’ (திருச்சதகம்: 87)

     

    என்று பாடிய அடிகள், மெய்யன்பர்கள், தீ சேர் மெழுகாக உள்ளம் உருகிக் கரைந்ததே அவர்களின் தனித்தகுதியாக அமைந்ததனை உணர்ந்தார். தாமும் அவ்வகையையே பின்பற்றி, பெரும்பற்றப் புலியூரானைக் கூட எண்ணி,

    ‘ அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த

    மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல் கண்டு

    தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே

    பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே’      (திருச்சதகம்: 88)

     

    என்று தெளிந்தார். சிவானந்தத்தைப் பெறுதற்குரிய பெருநெறியாக, அன்பென்னும் ஆறு கரையது புரள, கண்ணீர்ப் பெருவெள்ளம் பெருக அழுதலாகிய சிவானந்தப் பரவசத்தில் ஆழ்ந்தார்.

    ‘யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்

    ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’       (திருச்சதகம்: 90)

    ஆனந்தாதீதம்

    அடிகளுக்குப் பெருமான் இடையறாத மெய்யன்பினை வழங்கிப் பித்தனாக்கினான்; அவன் அன்பருக்கும் அன்பனாக்கி அருளினான்; திருக்கோயில் தொறும், அழுது அரற்றி, அவனைத் தேடித் திரியும்படியும் செய்தருளினான். ‘தாம் வளர்த்த நச்சுமரத்தையும் வெட்டத்துணியாத பெரியோர் போல, தகுதியில்லாமையை அறிந்திருந்தும் பெருமான் தம்மை ஒதுக்காமல், பேரின்பப்பேற்றுக்குக் கருவியாகிய மெய்யன்பு மேன்மேலும் வளரும்படி அருளிய அருந்திறத்தை எண்ணியெண்ணி அடிகள், அளவிறந்த ஆனந்தவெள்ளத்தில் திளைத்தார். பெருமான், பக்தி என்னும் வயலுள், ‘மெய்ம்மை’ என்னும் வித்தின்றியே, ‘சிவானந்தம்’ என்னும் பெரும்பயிரை வளர்த்ததாகக் குறித்தருள் கின்றார். தமக்கு அருளிய பேற்றினை நினைந்த அடிகள்,

    ‘விச்ச தின்றியே விளைவு செய்குவாய்’            (திருச்சதகம்: 96)

    ‘நச்சு மாமர மாயி னுங்கொலார்

    நானும் அங்ஙனே உடைய நாதனே’     (மேலது பாடல்)

    எத்தகைய பிழை செய்தாலும், தம்மை அரவணைத்துக் காக்கின்ற பெருமான், திருவடிப்பேற்றுக்குத் தம்மைத் தகுதியுடையவனாக ஆக்கியதும், கல்லை மென்கனியாக்கிய வித்தை’ என்று வியக்கின்றார்.

    ‘கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்

    டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்’    (திருச்சதகம்: 94)

    முடிவுரை

    அடிகளின் அருளனுபவப் பிழிவாக உள்ள திருச்சதகம், நமக்குப் பெருமானையே பெற்றுத்தர வல்லது; பக்தியின் பெயரால், அவனடியார் போல நடிக்கின்ற பொய்மையை நீக்கவல்லது; உயிரறிவாகிய சுட்டறிவை நீக்கி, பேரறிவால் பெருமானைத் தேட வழிகாட்டுவது; ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்னும் ஆன்மதூய்மையினை வலியுறுத்துவது; ‘நீங்காத அடிமைத்திறமே’ பெருமானுக்கு, நமது கைம்மாறு என நிறுவுவது. சிவானந்தத்துக்குத் திருவருளே கருவியாவதை விளங்கச்செய்வது; சிவானந்தத்தில் அழுந்தவும், மேன்மேலும் பரவசத்தில் திளைக்கவும், மெய்யன்பே மேன்மேலும் வகைசெய்யும் என்று விளக்குவது; தன்னை மறந்து, உள்ளம் உருகிக் கண்ணீர் சிந்துதலே, ‘உண்மையான பக்தி’ என்று உணர்த்தவல்லது.

    திருச்சதகத்தின் தெளிபொருளைச் சான்றோர், ‘பக்தி வைராக்கிய விசித்திரம்’ என்று வரையறுப்பர். பக்தியாவது, பெருமான்பால், அடிகள் கொண்ட நிலையான பேரன்பு; வைராக்கியமாவது, அவர்தம் பேரின்பப் பற்றுறுதி; விசித்திரமாவது, வியப்புணர்வு. பெருமானின் எளிவந்த கருணையினை எண்ணுந்தொறும், தகுதியின்மையினைப் பொருட்படுத்தாமல் பெருமான், தனக்கு இரங்குகின்றமையினை எண்ணுந்தொறும் எழுகின்ற பெருவியப்பு. இத்தகைய அருளனுபவப் பதிவுகள், ‘யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ எனப் பக்திநெறி காட்டவல்லன.

    துணைநூல்கள்:

    1. திருவாசகம் (மூலம்), சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை வெளியீடு, ஆண்டு: 1999.
    2. திருவாசகம்-திருச்சதகம் (பண்டிதமணி உரை), மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை வெளியீடு, ஆண்டு: 1985
    Share
  • இந்துமத நூல்கள் பாடிய இசுலாமியப் புலவர்கள்

    -முனைவர் இரா.வெங்கடேசன்

    இந்திய வரலாறு என்பதே கட்டமைக்கப்பட்டதாகும். திட்டமிட்டே இங்கே வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒருநாட்டின் மேலாண்மை, சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் சார்ந்த நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ள வரலாறு ஒருபக்கச் சார்பு அடையாங்களைத் தாங்கியே நிற்கின்றது. இந்திய வரலாறு என்பது வட இந்திய வரலாற்றையும் தமிழக வரலாறு என்பது உயர்நிலையில் இருப்போரின் வரலாற்றையும் மட்டுமே பேசுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு. அருணாசலம் பிள்ளை, சமண நூல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘குண்டலகேசி, நீலகேசி கதைகளும் பின்னால் வந்த யசோதர காவியக் கதைகளும் கதைகள் என்ற அளவில் மட்டரகமான கதைகள். குண்டலகேசி ஒரு பெரிய பிசாசாவாள் என்று கூறியுள்ளார். தமிழில் மறுக்கமுடியாத ஆய்வாளராக இருக்கக்கூடிய மு.அருணாசலம். பிறமத நூல்களை (சமண, பௌத்த) இழிவாகக் கூறியதனை நாம் எவ்வாறு ஒப்புக்கொள்வது.

    இதே போன்ற பல சிக்கல்கள் தமிழ் இலக்கிய வரலாறு முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாகச் சைவம், வைணவம், கிறித்துவம் சார்ந்த நூல்களைப் பேசிய அளவு இசுலாம் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதை இலக்கிய வரலாற்று நூல்கள் தவிர்த்திருக்கின்றன. குறிப்பாக இசுலாம் மதத்தைச் சார்ந்த புலவர்கள் இந்து மத விடயங்கள் குறித்துப் பாடிய நூல்களைப் புறந்தள்ளியுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைத்தவர்களால் திட்டமிட்டே இது நிகழ்ந்திருக்கிறது.

    இந்திய மண்ணில் இசுலாம் குறித்த புரிதல்கள் மிகக் குறைவே. எந்தவொரு மதமும் தனிமனிதரால் உருவாக்கப்படவில்லை. திடீரென்று தோன்றிவிடுவதுமில்லை. சமூகச் சிந்தனையின் ஒட்டுமொத்த விளைபொருளாகவே மதங்கள் தோன்றியுள்ளன. இசுலாமும் அப்படியாகவே தோற்றம்பெற்றது. அராபிய தேசமெங்கும் மக்கள் தாராளச் சிந்தனை கொண்டிருந்தனர். பழமையான மதத்தை நம்பியிருந்த அவர்கள் புதிய விடியலுக்காகக் காத்திருந்தனர். முகமது நபி (ஸல்) புதிய மதத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்பே அராபியர்கள் இசுலாம் சாராம்சம் அரபு மக்களின் ஆன்மீக உணர்வுகளில் கலந்திருந்தது.

    “சமூகச் சிதைவு ஆன்மீக அவநம்பிக்கை ஆகியவற்றின் கடுமையான இருளில் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, அராபிய இறைத்தூதரின் நற்செய்தியானது நம்பிக்கை தரும் ஒரு விளக்காகக் காட்சியளித்தது. இம்மை, மறுமை குறித்து புதிய மதம் கூறிவந்த கருத்துக்கள் சாமான்ய மக்களின் சிந்தனையைக் கவர்ந்தன. இம்மண்ணுலக வாழ்க்கைக்கான போராட்டத்தில் தோல்வியுற்று எந்தப் பிடிப்புமின்றி கடவுளின் இருப்பு என்ற மூடநம்பிக்கையில் தங்களை ஈடுபடுத்தியிருந்த விரக்தி கொண்ட மக்களின் ஆன்மாக்களை இசுலாத்தின் வெற்றி முரசொலி விழிப்படையச் செய்தது.” (எம்.என்.ராய், 1999:40) 

    விரக்தியின் விளிம்பிலிருந்த மக்களின் முன்னால் இசுலாம் புதிய நம்பிக்கைக்கான பாதையைத் திறந்து காட்டியது. கடுந்துறவறம் என்ற நிலையைக் கடந்த இசுலாம் சிந்தனை மக்களுக்கு புதிய வெளிச்சத்தைத் தந்தது.

    “கி.பி.ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவிலேயே ஒரு புது வித ஞான ஒளி தோன்றியது. மறம் போக்கி அறம் புகுத்த முகமது நபிகள் (ஸல்) தோன்றினார். அவரின் அன்பாலும் திருநெறியாலும் அரேபியர்கள் ஈர்க்கப்பட்டனர். புத்துணர்ச்சி பெற்றார்கள். (அப்துல் ரஹீம்:1957:13).”

    இசுலாம் மதம் மக்களின் மனங்களில் நிரம்பியது. வாழ்க்கையைக் காட்டிய மதத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் எகிப்தில் வாழ்ந்து வந்த சில அரேபியக் குடும்பங்கள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபின் கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சிக் கடல்வழியாகப் பாண்டிய நாட்டிற்கு வந்தனர். தமிழ்நாட்டிற்கு 1923ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமிஷ்கைச் சேர்ந்த அபுல்பிதா இசுலாமியர்களும் தமிழர்களும் ஒற்றுமையோடு வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    “கி.பி.13ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் முகம்மது இப்னு கலாவூனின் கொடுமை தாங்க முடியாமல் சில அரேபியக் குடும்பங்கள் வைசயித் ஜமாலுத்தின் அவர்களின் தலைமையில் காயல்பட்டினத்தில் வந்து குடியேறினர்.” (அப்துல் ரஹீம்:1957)

    தமிழகத்தில் வாழத் தொடங்கிய இசுலாமியர்கள் அமைச்சர்களாக, போர்வீரர்களாக, நகரப் பாதுகாப்பாளர்களாக, பொற்காசு செய்து தருவோராக, வணிகர்களாக விளங்கினர். மக்கள் இவர்களை மரக்காயர், லெப்பை, இராவுத்தர், சாகிபு என்ற பல பெயர்களால் அழைத்தனர். இசுலாமியர்களை மன்னர்கள் ஏற்றுக்கொண்டதால் மக்களும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இசுலாம் மதம் இந்து மதத்தை அழிக்க வந்த மதமாக இந்துக்கள் கருதவில்லை. அதனால் சாமானியர்களான இந்துக்களுக்குள்ளும் இசுலாமியர்களுக்குள்ளும் நல்ல உறவு ஏற்பட்டது. இதைத்தாண்டிய இரு சமூகத்திற்குமிடையிலான வணிக உறவென்பது முக்கியமானது. இயற்கையாகவே வணிக நோக்குடைய இசுலாமியர்கள் இந்துக்களோடு கலக்கும்போது புதிய வெளிகள் வணிகத்தில் உருவாக்கப்படுகிறது. இடைவெளியை இருசமூகமும் அனுமதிக்காததால் புரிந்துணர்வு என்பது முக்கிய இடம்பெறுகிறது.

    “அரேபியாவின் குதிரைகளைத் தமிழ் மன்னர்கள் பெரிதும் விரும்பினர். தமிழகத்திற்கு அரபு நாடுகளிலிருந்து குதிரைகள் கொண்டு வரப்பட்டன. இந்தக் குதிரை வணிகம் இருநாடுகளிடையே பெரும் நட்புறவை ஏற்படுத்தியது. இந்த உறவு தமிழகத்திற்கு அரபு வணிகர் வந்து தங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அரேபியக் குதிரைகளைப் பராமரிக்கவும் உணவு கொடுத்துப் பேணி வளர்க்கவும் பயிற்சி பெற்றோர் அந்நாளில் தமிழகத்தில் அரிதாகவே இருந்தனர். எனவே இந்தப் பணிகளைச் செய்ய அரபு நாடுகளிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களில் பலர் இங்கேயே தங்கியிருந்து தமிழ் மக்களோடு ஒன்றிணைந்து மண உறவு கொண்டு வாழ்ந்து வரலாயினர்.” (எஸ்.ஏ.முகம்மது இபுராகிம் 2009:41)

    இந்துக்களோடு வாழ்ந்து வரக்கூடிய இசுலாமியர்களைத் தமிழ்ப் புலவர்கள் செய்த படைப்புக்களோடு இசுலாமியர்கள் செய்த படைப்புக்களை ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சி இங்கே பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. இசுலாமியப் புலவர்கள் இசுலாம் மார்க்கம் குறித்து மட்டுமே பாடியுள்ளனர் என்ற மைய நீரோட்டத்திலிருந்து விலகிப்பார்த்தால் இசுலாம் புலவர்கள் இந்து மதம் குறித்துப் பாடியுள்ளனர். இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே சமூக உறவு மட்டுமல்லாது இலக்கிய உறவு மேம்பட்டிருந்தது. இந்துப் புலவர்கள் இசுலாம் மதத்தை உயர்வாகப் பேசுவதும் இசுலாம் புலவர்கள் இந்துப் பண்பாட்டை உயர்வாகப் பேசுவதும் இலக்கியரீதியாகத் தமிழில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து ஆவணப்படுத்தல் மிகக் குறைவாக நடைபெற்றுள்ளது.

    “1868இல் பீர்காதர் ஒலி ராவுத்தர் திருவாசகத்தைப் பதிப்பிக்கின்றார். 1835ஆம் ஆண்டிலிருந்தே சுமார் ஆறு ஏழு பதிப்புக்கள் ராவுத்தர் பதிப்பிற்கு முன்னரே வெளிவந்திருக்கின்றன. ஆனால் திருவாசகத்தின் தொடக்கமாக உள்ள சிவபுராணம் என்ற பகுதி முன் பதிப்புக்களில் எல்லாம் சிவபுராணத்து அகவல் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அப்படி அதனை அகவல் என்று குறிப்பிடுவது தமிழ் இலக்கண மரபின்படி பிழையானது என்பதையும் உண்மையில் அது கலிவெண்பா என்பதை யாப்பருங்கலம், தொல்காப்பியம் நூற்பாக்களின் வழியாக நிரூபித்து அந்தச் செய்யுள் வெண்தளையால் அமைந்த கலிவெண்பா என்று சரியாகக் குறிப்பிடுகின்றார். பின்னர் இன்று வரை வந்த பதிப்புக்கள் அனைத்தும் ராவுத்தர் பதிப்பை அடியொற்றி அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.” (பொ.வேல்சாமி, 2014:30).

    இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பலரைப் பற்றிய பதிவுகள் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாறுகளிலும் இசுலாம் இலக்கிய வரலாறுகளிலும் பதிவாகவில்லை. அவ்வாறு புறக்கணிப்புக்கு உள்ளானவர்களின் சாந்தாதி அசுவகம் (மகாபாரதம்) மகாபாரத அம்மானை பாடிய சையது முகம்மது அண்ணாவியார், பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமிமீது கும்பாபிஷேக வழிநடைச்சிந்து பாடிய அப்துல்காதிறு ராவுத்தர் போன்றோர் முக்கியமானோர். இவர்கள் பிறப்பால் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டவர்கள். மானுட சமூகத்தின் மீதான சமத்துவத்தையும் மதிப்பையும் கொண்டவர்கள். அதனால் மதங்கள் அனைத்தும் சமமே என்ற கொள்கையோடு இவர்கள் வாழ முடிந்தது.

    18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செய்யிது முகமது அண்ணாவியார் பாண்டி நாட்டினர். பிறருக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து அதன்வழி மொழியையும் சமயத்தையும் வளர்க்கும் அண்ணாவியார் எனும் குடும்பத்தினர். அண்ணாவி என்பது கிராமத்து ஆசிரியர்களைக் குறிக்கும் சொல்லாகும். கவி பாடுவதிலும் பெருங்காப்பியங்கள் செய்வதிலும் இனிமையைக் கண்டவராதலால் இவரை மக்கள் அமிர்தகவி என அழைத்தனர். சமயப் பொறை கொண்ட இவர் தமிழ்ப்புராணங்கள் வடமொழிப் புராணங்கள் சிலவற்றைக் காவியமாக்கினார். இவர்தம் கவிதை முருகனைக் காட்டிய வரலாறு கொண்டது. யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல்களை விரைந்து பாடும் ஆற்றல் கொண்டவர். நாகூரில் சில காலம் கல்வி கற்பித்தார். பிற்காலத்தில் ஜவ்வாது புலவர் என்று பாராட்டப் பெற்ற பீர்ஜவ்வாது இவரிடம் கல்வி கற்றவர்.

    சையிது முகம்மது அண்ணாவியார் நாகூரில் இருந்தபோது ஷைரு வஹாபுதீன் என்ற ஆன்மீகப் பெரியோரின் நட்பு கிடைத்தது. அவரால் தீட்சை பெற்றார் அண்ணாவியார். பின்னர் ஐயம்பேட்டையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அதிரையில் திண்ணைப் பள்ளியில் கதிர்வேலு உபாத்தியாயர் தம்மிடம் இருந்த மந்திரக் கலையைக் காட்டி மக்களை அச்சுறுத்தி வாழ்ந்து வந்தார். அச்சம் கொண்ட மக்கள் கதிர்வேலு உபாத்தியாயரை அடக்க மாந்திரீகக் கலையில் வல்லவரான அண்ணாவியாரை லெப்பைத் தம்பிமரக்காயர் என்னும் பெருவள்ளல் ஒத்துழைப்போடு அழைத்து வந்தனர். அண்ணாவியார் அதிரைக்கு வந்தவுடன் மக்கள் அச்சமின்றி நடமாடினர். இதனைக் கண்ட கதிர்வேலு உபாத்தியாயர் நட்போடு பழகுவதுபோல் அண்ணாவியாரிடம் நடித்தார். ஒருமுறை காவடி எடுக்கப் பழனிக்குச் செல்கிறேன் என்று உபாத்தியாயர் கூற முருகனைக் காணப் பழனி ஏன் செல்ல வேண்டும் இங்கேயே முருகன் வருவான் எனக் கூறுகிறார் அண்ணாவியார்.

    “நாளும் இடமும் குறிக்கப்பட்டன. செழியன் குளத்தருகே பந்தல் போடப்பட்டது. மக்கள் வெள்ளம் கரைகட்டி நின்றது. அண்ணாவியாரும் உபாத்தியாயரும் எதிரும் புதிருமாய் அமர்ந்தனர். சையிது முகம்மது அண்ணாவியார் முன்னரே தாம் பாடி வைத்திருந்த ஏட்டை எடுத்தார். கதிர்வேலு கையில் கொடுத்தார். ‘ஏட்டிலிருக்கும் மந்திரக் கவிகளை உரக்கப்படியும் உமது வேதம் காட்சி நல்கும் என்றார். கதிர்வேலு படித்தார். பதினான்கு கவிதைகள் (சுப்பிரமணியர் பிரசன்ன பதிகம்) வரை உரக்கப் படித்தார். என்ன விந்தை! கதிர்வேலு தம் கந்தவேளைக் கண்ணாரக் கண்டு கொண்டார். அண்ணாவியாரின் ஆற்றலை அறிந்துகொண்டார். அண்ணாவியார் இவ்விடத்தில் காட்டியது ‘தொலை உணர்தல்’ (டெலிபதி) எனும் தொலைக்காட்சியாகும்.” (தா.கோ.பரமசிவம், 2004:சு)

    அண்ணாவியார் பத்துப்புராணங்களை இயற்றியுள்ளார். நூர்நாமா, அலிநாமா, சாந்தாதி அசுவமகம், பாரத அம்மானை போன்றவை குறிப்பிடத்தக்கவை. சையது முகம்மது அண்ணாவியார் சுப்பிரமண்யரை வரவழைத்த செய்யுட்கள் அடங்கிய சிறுநூல் ‘சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம்’ என்ற பெயருடன் மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன. அதற்குப் பல இந்தத் தலைவர்களே சாற்றுக்கவிகள் பாடியுள்ளனர். மேலும் அண்ணாவியார் பாடிய மகாபாரத அம்மானையின் பதிப்புகளால் அஷ்டாவதானம் இராமசாமிப்பிள்ளை அப்பதிகம் பத்தாவது செய்யுள் பாடிய தருணம் அங்ஙனம் சூழ்ந்த சர்வவீரர்களும் மயிர்க்கூச்சலிட்டு நின்றனர். இது ஒரு நிகழ்வே போதும். இந்து சமயத்தின் மீதான அண்ணாவியார் கொண்டிருந்த பற்றுதலைச் சொல்வதற்கு. அண்ணாவியார் அலிநாமா நூலை அரங்கேற்றியபோது லெப்பை தம்பி மரக்காயர் அவருக்குச் சரியாசனம் வழங்கிக் கனகமாரி பொழிந்தார் என்பது வரலாறாகும்.

    மகாபாரதத்தின் ஒரு சிறிய பருவத்தை 4100 பாடல்களில் பாடிய இப்புலவர் பாரதக்கதை முழுவதையும் பாடியிருந்தால் அது ஒரு லட்சம் கவிதைகளையும் தாண்டியிருக்கும் அதிராம்பட்டினத்தில் பள்ளிவாசலின் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாவியாரின் மகனார் சையிது மீராலெப்பை தந்தை இறந்தபிறகு அவரது மீது சமரகவி பாடினார். ஜீவரத்னகவி என்ற சிறப்புப் பெயருடன் விளங்கினார். மனை அலங்காரம், மதீனக்கலம்பகம், வாள்விருத்தம், பரிவிருத்தம், யானை விருத்தம் போன்றவை பாடியுள்ளார்.

    அண்ணாவியார் எடுத்தாண்ட உவமைகளும் உருவகங்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் காணப்பெறும் இலக்கிய மரபுகளை முற்றிலும் அடியொற்றிய கவிகளைப் பாடியுள்ளார்.

    “காவெலாம் மலரின் கூட்டம் கனியெலாம் தேனின் கூட்டம்
    பூவெல்லாம் மிஞிறின் கூட்டம் பொருப்பியக் கோட்டின் கூட்டம்
    மாவெலாம் குயிலின் கூட்டம் வரம்பெலாம் வாழைக்கூட்டம்
    நாவெலாம் பாவின் கூட்டம் நாடெலாம் செல்வக் கூட்டம்”

    என்று குருநாட்டின் வளத்தைக் காட்டுமிடத்துக் கம்பன் அயோத்தி வளத்தை காட்டுவதைப் போல் காட்டியுள்ளார். அண்ணாவியாரின் சமயப்பொறை வியப்புக்கும் பாராட்டுக்கும் உரிய நிலையில் காணப்படுகிறது.

    எடுத்துக்கொண்ட கதை பாரதக்கதை. பாரதக்கதையின் மூலவேர் கண்ணன் எனவே கண்ணனை அவர் வாழ்த்திப்பாடுகின்ற பாடல்கள் ஆழ்வார் ஒருவர் பாடும் உருக்கத்துக்கு இணையானவை எனில் அது மிகையாகாது.

    “கருதரிய பெரும்சலதிச் சலசவனப்
    புதுமை சொல்லக் கடவர் யாரோ?
    அரவில் நடித்ததும் மருது சகடை உதைத்
    ததும் சிலைபெண் ஆக்கி கங்கை
    விரவ அரன் முடிதரிக்க உதவுபதத்
    தின்பெருமை வினாவப் பொன்னின்
    நிருதனைச் சென்று அருமறையை வெளிக்கொணர்ந்த
    பெரும் பொருளை நேசிப்போமே”                   (சாந்தாதி. சயிந்தவ.1)

    இப்பாடலில் திருமாலின் அவதாரங்கள் அடுக்கப்பெற்று வாழ்த்தப்பெறுகின்றன. நிரல் நிரையில் அவதாரங்கள் பின்னிலிருந்து முன்னர்க் கூறப்பட்டுள்ளன.

    அண்ணாவியாரின் சாந்தாதி அசுவமகம் கவனம் பெறாமல் போனது போலவே M.K.M. அப்துல் காதிறு ராவுத்தர் அவர்கள் இயற்றிய பாம்பன் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து நூலும் கவனம் பெறாமல் போனது வரலாற்றுப்பிழையாகும். இந்நூல் மதுரை ஸ்ரீ மீனாம்பிகை பிரசில் பதிக்கப்பெற்று 1904ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இச்சிந்து நூல் 30 கண்ணிகள் கொண்டது. இந்நூலில்,

    “இது சிவகங்கை வக்கீலும், இந்திரகுல ராஜவம்ச அகம்படியார் டிஸ்டிரிக் ட்டுசலைப் பிரஸிடெண்டும் தமிழபிமானியும், சீமானும், சிவநேசச் செல்வரும் ஆகிய மகா – ஸ்ரீ எஸ். சீனமுருகுபிள்ளையவர்கள் நடாத்தும் பாம்பன் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேக தரிசனைக்குச் செல்வார் பலருள் ஒரு தலைவன் தனது ஆருயிர்க்காதலிக்கு அச்சிவகங்கையிலிருந்து பாம்பன் நகர் வரையுமுள்ள மார்க்க விஷேடங்களையும் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷகப் பெருமை பலவற்றையும் எடுத்துக் கூறுந்தன்மையில் விளங்கி நிற்பது.” (M.K.M. அப்துல்காதிறு ராவுத்தர், 1904:முகவுரை). 

    என்று முகவுரையில் கூறியுள்ளார். காப்புச் செய்யுளில் முருகனுக்கும் சரஸ்வதிக்கும் துதி பாடியுள்ளார். தன் காதலிக்கு வழி காண்பித்துச் செல்லும் கவிகள் இன்பச் சுவைகளைத் தரக்கூடியவை.

    “தாலுகாக் கச்சேரி யீதே அது
    தானேதெப் பக்குளம் மாதே அருள்
    தங்கும் கௌரி விநாயகர் கோவில் ரா
    ஜாக்கள் அரண்மனை பாராய் இனித்
    தான்கடை வீதியும் நேராய் இதில்
    தக்கவியாபாரம் சீராய் செயும்
    சாமர்த்தியத்தைநீ தேராய் விலை
    தந்தாலெது வுந்தாமத
    மின்றாயுட னின்றீகுவர்
    சற்புத்தியில் வெர்மிஞ்சுவர்
    ஒப்பற்றவ ணிகதந்திரர்
    சரசத்திலி தம்பற்பல
    சொலிமிக்கத னம்பெற்றவர்
    தருமத்திலும் நினைவுற்றவர்
    இனிமற்றுள தெதிர்நிற்பது” (பத்மினி)

    என இவ்வாறு வழியைக் காட்டிக்கொண்டு செல்லும்போதே முருகனின் பெருமைகளை விரிவாகப் பேசியுள்ளார். இந்நூலை இசுலாமியப் புலவர் ஒருவர் பாடுவதாக நாம் நினைக்க முடியாது. அருணகிரியார் பாடுவதைப் போலப் பாடியுள்ளார்.

    அண்ணாவியாரின் சாந்தாதி அசுவமகம் M.K.M, அப்துல்காதிறு ராவுத்தரின் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து இரண்டு நூல்களும் பதிப்பு நெறிப்படி பதிப்பிக்கப்பட்டுள்ளது. செய்யுள் முதற்குறிப்பு அகராதி, நூலைப் புரிந்து கொள்வதற்கான முன்னுரை, ஏடு கிடைத்த முறை போன்றவை தரப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு நூல்களிலும் உரை இல்லை. தமிழில் நல்லிணக்கண  நூல்களாக உள்ள இந்நூல்கள் உரையுடன் வெளிவரவேண்டும். சமயப்பொறையை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல இந்நூல்களின் வழியை நாடலாம்.

    உசாத்துணை நூல்கள் 

    1. கோவிந்தசாமி (தமிழாக்கம்) எம்.என்.ராய் 1999இ இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம், விடியல் பதிப்பகம்.
    2. அப்துல் ரஹீம் 195இ முஸ்லீம் தமிழ்ப் புலவர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் சென்னை
    3. எஸ்.ஏ. முகம்மது இபுறாகிம் 2009 கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு, சிராஜும் முனீர் நற்பணி மன்றம் கடையநல்லூர்.
    4. பொ.வேல்சாமி 2014 வரலாறு என்பது கற்பிதம், முகம் வெளியீடு, கோவை – 5.
    5. எம்.கே. எம். அப்துல்காதிறு ராவுத்தர் 1904 பாம்பன் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து, மீனாம்பிகை பிரஸ் மதுரை.

    *****

    கட்டுரையாளர்,
    இணைப்பேராசிரியர்,
    இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி,
    தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 263 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    இயற்கையன்னை ஒருவாரகாலம் , ஒருமுறை சிலிர்த்து இங்கிலாந்து நாட்டினை தன்னுள் சிறையாக்கி வைத்திருந்து வெளிவந்த வேளையிது. கருமேகங்கள் கூடி வெள்ளைப் பனிமழை பொழிந்து இங்கிலாந்து நகரத்து தெருக்களையெல்லாம் பனிப்பாய் கொண்டு மூடியிருந்தது.சைபீரியாவிலிருந்து அடித்த குளிர்காற்று “கிழக்கிலிருந்து வந்த பூதம் (Beast from the east)” எனும் பெயருடன் இங்கிலாந்து நாட்டினைத் தன் கைப்பிடிக்குள் அமுக்கிப் பிடித்திருந்தது. – 5 டிகிரி செல்சியஸ் எனும் சூழல் வெப்பநிலையை வெப்பமானிகள் காட்டினாலும் இங்கிலாந்தைக் கவ்விப்பிடித்திருந்த குளிர்காற்றின் வேகம் – 12 டிகிரி செல்சியஸ் எனும் வகையிலான தாக்கத்தைக் கொடுத்திருந்தது. இப்போதுதான் ஒருவாறு அப்பிடிக்குள் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டுள்ளது. நாமும் மீண்டுள்ளோம்.

    இந்நிலையில் தான் நாம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியை வந்தடைந்துள்ளோம். அது சரி… அப்படி இந்த மார்ச் 8ஆம் திகதிக்கு அப்படி என்ன பெருமை என்று எண்ணினால் அது உலகின் மகத்தான “சர்வதேச மகளிர் தினத்தை ” தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். ஆம், பெண்களின் மகத்துவத்தைக் குறிக்கும் நாள். பெண்களின் பெருமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் நாள். பெண்களின் சுபீட்சத்தை எடைதூக்கிப் பார்க்கும் நாள். அன்றைய பெண்களுக்கும், இன்றைய பெண்களுக்கும் இடையில் காலம் கொடுத்த மாற்றங்கள் அநேகமாக இருந்தாலும், காலத்தால் மாற்ற முடியாத ,காலத்தால் அழியாத பல பண்புகள் இன்றைய பெண்களுக்கு உண்டு. அன்று தாய்மையின் வடிவமாகப் பெண்தான் திகழ்ந்தாள் இன்றும் தாய்மையின் வடிவமாகப் பெண்கள் தான் திகழ்கிறார்கள்.

    அன்றைய பெண் தாய்மையின் வடிவமாக மட்டுமே இருந்தாள். அவளுக்கென விதிக்கப்பட்டவை இல்லம் எனும் நான்கு சுவர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டு இருந்தன. ஆனால் இன்றைய பெண்களுக்கு வானம் கூடத் தொடும் தூரத்தில் தான் இருக்கிறது. ஆண்கள் செய்யும், ஆண்களால் மட்டுமே செய்யக்கூடியவை என்று எண்ணப்பட்ட பல பணிகள் இன்று பெண்களினால் ஆண்களை விடத் திறமையாகச் செய்யப்படுகின்றன. கணனித்துறையை எடுத்தால் என்ன, விமானம் ஓட்டும் பணியாக இருந்தாலென்ன, மருத்துவத்துறை என்றால் என்ன, விஞ்ஞானத்துறை என்றால் என்ன அனைத்திலும் இன்று பெண்கள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

    சமுதாய முன்றிலில் நடக்கும் பல அநியாயமான செயல்களைத் தட்டிக் கேட்பவர்களாகப் பல பெண்கள் செயற்படுகிறார்கள். சமூக சேவகிகளாக பலர் தம்முடைய சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்துச் சமுதாயத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்று மேலைநாடுகளிலும் சரி, எமது தாய்நாடுகளானான பின்புல நாடுகளாயினும் சரி பல வியாபார நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் இன்றும் மேலைநாடுகளில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையிலிருக்கும் சமதள வேறுபாடு தீர்ந்தபாடில்லை. ஒரே பணியிலிருக்கும் ஒரு பெண்ணையும், ஆணையும் எடுத்துக் கொண்டால் ஆணை விடப் பெண்ணின் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. இது பலமுனைகளில் பலரினால் எடுத்துக் காட்டப்பட்டுத் தொடரும் பல அரசுகளினால் விமர்சிக்கப்பட்டாலும் அவ்வித்தியாசம் மிகவும் மெதுவாகவே குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு ஒருவகையில் ஆண்களின் ஆணாதிக்கக் குணாம்சம் அடிப்படையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆண்களுடன் சமதளத்தில் போராடித்தான் தமக்கான வாழ்வாதரத்தைத் தேடிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ள பெண்கள் ஆரம்பிக்கும் போதே சில அடிகள் பின்னாலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய காட்டாயத்துக்குள்ளாக வேண்டியுள்ளது.

    தமிழ்ப்பாட்டன் மகாகவி பாரதி தன் தமிழில்,

    ”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!” என்றான் பெருங்குரலில்.

    பாரதி கண்ட அப்புதுமைப் பெண்ணினைக் காணும் வகைக்கு இன்று நாம் என்ன செய்தோம்? பெண்களை ஒரு காமப்பொருளாக, நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பவர்கள் பலரையே காண்கிறோம். பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களை மனம்போன போக்கிலே விமர்சிக்கும் உரிமை எமக்குண்டு என்பது போலேத் தம்மை நாகரிகவாதிகள் என்று கூறிக் கொள்ளும் இன்றைய ஆண்களில் பலர் நடப்பதைக் காணும்போது வேதனையாக உள்ளது. தாயாக, சகோதரியாக, அன்பு மனையாளாக எமக்குக் கிடைப்பவர்கள் கூட அப்பெண்ணினத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பதை மறந்தவர்கள் போல் நடப்பது வியப்பாக இருக்கிறது.

    சமீபத்தில் இந்தியாவின் பல மொழிகளில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி அவர்கள் அகால மரணமடைந்ததையடுத்து சொற்ப நேரத்திலேயே அவரது பிரத்தியேக வாழ்க்கை மிகவும் தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது வேதனையளிக்கிறது. அதற்குச் சார்பாக ” நடிக்க வரும் போதே இத்தகைய நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதை அவரே அறிந்திருப்பார்” எனும் வாதம் சிலரால் முன்வைக்கப்பட்டது. ஒரு மிருகம் இறந்தால் கூட அதனை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனும் பண்பு நிறைந்த இந்நூற்றாண்டிலே அடிப்படை மனிதத்தன்மை அற்றுப் போனதைப் போல உணர வேண்டிய பல தருணங்கள் நிகழ்கின்றன. இன்றைய பெண் சமூகத்தின் ஒரு முக்கியமான அங்கம். பலநாடுகளின் தலைவர்களாகப் பெண்கள் திகழ்கிறார்கள். அதற்காக அன்றைய பெண் முக்கியமான அங்கமாக இருக்கவில்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் அன்றைய காலத்தில் பெண்கள் குடும்பம், இல்லம் எனும் வரையறைக்குள் அடைக்கப்பட்டதினால் அவர்களின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கவில்லை. அத்தகைய ஒரு சூழலில் தான் மகாகவி பாரதியார் அச்சிறையை உடைத்துப் பெண்களை வெளிக்கொணர வேண்டிய உண்மையை சத்தமாகவே உரைக்கத் தொடங்கினார். அதனாலேயே,

    ”பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
    பிறப்பித்தேன்; அதற்குரிய வெற்றி கேளீர்;
    மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
    மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
    விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
    விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
    பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
    பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.” என்று கவி படித்தார்.

    ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதமும் வருகிறது, எட்டாம் திகதியும் வருகிறது.மகளிர் தினங்களும் வந்து போகின்றன. கவிதைகள் படிக்கிறோம், கட்டுரைகள் வரைகிறோம். எம்மில் எத்தனை பேர் உள சுத்தியுடன் இப்பெண் விடுதலை தினத்தில் பெண்களின் மேன்மையைக் காக்கும் வகை எம் மனத்தில் இவ்வுறுதியை எடுக்கிறோம் என்று ஏதாவது ஓர் உறுதியை அன்றி ஒரு செயற்பாட்டை முன்னெடுத்திருக்கிறோம்?

    அடுத்த மகளிர் தினத்தில் மீண்டும் எடை போடுவோம்!!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு!

    ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிமனிதர்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அமைய முடியும். அத்தகைய தனிமனித வளர்ச்சியின் ஆணி வேராக இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் மட்டுமல்ல வாழ்வாதாரத்தின் அடிப்படையிலேயே பெண்தான் இருக்கிறாள் என்பதே நிதர்சனம். ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பான்மையான சமூக அமைப்புகள் பெண்களின் தன்னலமற்ற சேவையின் மூலமே கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது பாலின வேறுபாடுகளின்றி, சமுதாய முன்னேற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் உள்ளது. தற்போது பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சம ஊதியம், சம கல்வி, சம வேலை வாய்ப்புகள் என பல்வேறு வகையான வாய்ப்புகளும் பெருகி வருவதும் கண்கூடு. கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அதனால் அவனுக்கு மட்டுமே பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. அக்கல்வியால் குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் முடிகிறது. ஆம் கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க முடிகிறது.


    சமுதாய அமைப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பெண்கள் பெற்றுள்ள செல்வாக்கு மட்டுமே அந்நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமையும். அத்தகைய வளர்ச்சிக்குப் பெண் கல்வி மட்டுமே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதாவது நற்பண்பை வளர்க்கக்கூடிய அறிவைப் புகட்டுவதும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியதுமான திறன்களை உருவாக்குவதுமே பெண் கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும். சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு இயங்க வேண்டுமாயின் கல்வியின் அவசியத்தை முதலில் உணர்தல் வேண்டும். சமுதாயத்தில் உன்னதமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்றால் அது பெண் கல்வி மட்டுமே. ஆம் பல துறைகளிலும் ஆண்களுக்குச் சரி நிகராக முன்னேறிவரும் இன்றைய பெண்கள்தான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகிறவர்கள் என்றால் அது மிகையல்ல. அத்தகைய கல்வி, இலட்சிய வேட்கை மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு முன்னேற்றம், புதிய சிந்தனையில் நாட்டம், ஆகியவற்றை முன்னெடுக்கக்கூடியதாக அமைய வேண்டும்.

    ஆதிகாலந்தொட்டு பெண்கள் வீரம், விவேகம், உழைப்பு, பொறுப்பு, பொறுமை என அனைத்திலும் ஆண்களைக்காட்டிலும் சிறந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். புலியை முறத்தால் விரட்டியப் பெண்மணிகள் சங்க காலத்திலேயே இருந்துள்ளனர். வயலில் இறங்கி பாரபட்சமின்றி ஓயாது உழைத்தவர்கள் அக்காலத்திலும் இருந்தனர். ஆயினும் கல்வி கற்பதில் மட்டும் பெண்களுக்கான எல்லைக்கோடு அழுத்தமாகவே பதியப்பட்டிருந்தது.

    ஆனால் இன்றைய நிலையே வேறு. “புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசனின் வார்த்தைகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் இல்லாமல் அடிமைத்தளையில் சிக்குண்டு கிடக்கும் பெண்கள் உருவாக்கும் சந்ததியினரின் துணிவும், தன்னம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிடுகின்றன.

    மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமையைக் கொளுத்துவோம்
    என்றார் பாரதி.

    அதாவது, பெண்களை எண்ணத்தால், சொல்லால், செயலால் என எவ்வகையிலும் இழிவுபடுத்தும் அறிவற்ற செயலை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.

    ஆனால் இன்றைய நிலையில் அன்றாடம் ஊடகங்களில் பெண்கள் பலவகையிலும் இழிவுபடுத்தப்படும் செயல்பாடுகளில் முன்னணியில் நிற்கின்றன. விளம்பரங்களில் தேவையின்றி பெண்களை அரைகுறை ஆடைகளுடன், மோசமான பாலுணர்வைத் தூண்டுகின்ற உடல் மொழிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று மிகக் கேவலமாக நடத்துவதைக் காணமுடிகிறது. தொலைக்காட்சி தொடர்களில் மேலும் ஒருபடி மோசமாக, பெண்களை கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிப்பவர்களாக புனையப்படுவதுதான். குடும்பத்தில் வன்முறைகளை எப்படி செயல்படுத்துவது என்பதை பெண்களைக்கொண்டு வகை வகையாகத் திட்டமிட்டு காட்சிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொலை, கொள்ளை, கர்பத்தைக் கலைத்தல், பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடுமைகளை சர்வ சாதாரணமாகப் பெண்கள் செய்வதுபோலக் காட்சியமைப்பதை எந்தத் தணிக்கைக் குழுவும் கண்டுகொள்வதில்லை என்பது வேதனையான விசயம். பண்பாடு மற்றும் கலாச்சார சீரழிவிற்கு மிக முக்கியமான காரணிகளில் முதன்மையாக இருப்பது ஊடகங்கள் என்பதை மறுக்கவியலாது.

     

    ஒரு பெண்ணின் வாழ்வியல் என்பது ஆரம்பம் முதல் கல்வியில் தொடங்க வேண்டும். மகாகவி பாரதி சொல்வது போன்று,
    “அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன. முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி; மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது என்பது கருத்து”
    (சக்கரவர்த்தினி கட்டுரை-பக்.83) என்கிறார்.

    ஓரளவிற்கேனும் படித்த பெண்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பதோடு அரசியல் செயல்பாடுகளிலும் பங்கேற்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் பல நன்மைகள் விளைகின்றன. இன்று கணினித் துறையில் இருக்கும் பெண்கள் பல நாடுகளுக்கும் பயணம் செய்து தங்கள் அறிவின் மேன்மையை வெளிப்படுத்தி புகழ் பெறுகிறார்கள். அதுமட்டுமட்டுமின்றி அங்குள்ள புதுமைகளை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும் முனைவதன் மூலம் பாரதியின் கனவை நினைவாக்குகின்றனர்.

    கல்வி, ஆளுமை, சுதந்திர உணர்வு, அச்சமின்மை, என ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டெழுந்து வெற்றிவாகை சூடிவரும் புதுமைப் பெண்களை பரவலாகக் காணமுடிகிறது.

    எதிர்படும் சவால்களனைத்தையும் சமாளிக்கும் வல்லமையையும் பெற்றிருக்கிறார்கள். ஆக சமுதாயப் புரட்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லாத வகையில் பெண்கள் இன்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள்.

    பொருளாதார முன்னேற்றம் என்பது மட்டுமே ஒருவரின் உண்மையான வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமும், முன்னேற்றமும் மிகவும் அவசியமானதாகும். இன்றைய உலகமயமாக்கல், பொருளாதார மறு சீரமைப்பு போன்றவைகளால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் பெருகி வருவது பெண்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. பலர் தொழில் துறைகளிலும், உற்பத்தித் துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.
    சிலகாலம் முன்பு தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பணிபுரிவது மட்டுமே பெண்களின் வழமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலையில் மற்றைய உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும், சமுதாயத்தில் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுய தொழில் செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர் என்பதும் மகிழ்வான செய்தி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவின்படி அரசியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய அனைத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் பெண்களின் சுதந்திரமான பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்றும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
    இத்தனைச் சட்டங்களும், கல்வியறிவும் இருந்தாலும் பெண்களுக்கு போதுமான அதிகாரங்களும் வாய்ப்புகளும் குறிப்பிட்ட மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதும் உண்மை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இந்திய சமுதாயம் ஆணாதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்றே சொல்லமுடிகிறது. அலுவலகங்களில் ஒரே விதமான பணிகளுக்கு ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு குறைந்த அளவிலுமே சம்பளம் வழங்கப்படுகிறது. கூலி வேலை செய்யும் தொழிலிலும் இதே நிலையே உள்ளது.

    பெண்களும் பொறுப்பு தரப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட்டு தாமே முன்வந்து முக்கியமான பொறுப்புகளை ஏற்கவேண்டும்.

    ஆயினும் பாரம்பரியமாக குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கும் பெண்களும்கூட பொருளாதார நிலையில் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைதான் இன்று இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து சுயமாக நின்று தொழில் புரிய முன்வரும் பெண்களும் தொழிலில் சந்திக்கும் சவாலை விட பன்மடங்கு சவால்களையும் பிரச்சனைகளையும் தங்கள் சமுதாயம், குடும்பம் போன்றவற்றில் அதிகமாகவே சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களைப் போன்றல்லாமல் பெண்கள் குடும்ப பொறுப்புகளையும் சேர்த்தே சுமக்க வேண்டியுள்ளது. ஆனால், அவள் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்ப பொறுப்பையும் இயல்பாக ஏற்கும் நிலையே இருக்கிறது. பல காலங்களாக பழக்கத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமே குடும்பம், குழந்தைகள் பராமரிப்பு என்று இருக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றங்கள் கொண்டுவருவது எளிதாக இருப்பதில்லை. சமுதாயத்தில் எந்த மட்டத்தில் இருக்கும் ஆண்களும் இதனை புரிந்து கொள்ள முயல்வதில்லை.

    இதுமட்டுமின்றி, தேவையான அளவிற்கு உழைப்பதற்கும், சவால்களை சமாளிப்பதற்குரிய பக்குவம் பெற்றிருந்தாலும் பெண்கள் எதிலும் சுயமாக முடிவு எடுக்க முடியாத வகையில் பெற்றோர், கணவர், உறவினர்கள் என்று பலரின் தலையீடுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. தொழில் விசயங்களிலும் இந்த தலையீடு இருப்பதால் பல நேரங்களில் அது வெற்றி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதும் நிதர்சனம்.

    வெற்றி பெற்ற பெரும்பாலான பெண் தொழிலதிபர்கள், ஆண்களை விட பன்மடங்கு அதிகமாக உழைத்தவர்களாகவோ அல்லது குடும்பத்தின் முழுமையான ஒத்துழைப்பு பெற்றவர்களாகவோ இருப்பவர்கள்.

    பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களும், சலுகைகளும் நிறைய இருக்கின்றன. இவைகள் பற்றிய விழிப்புணர்வுடன் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் துவங்கி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தொழில் தொடங்க முன் வரவேண்டும்.

    அனைத்திற்கும் மேலாக பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராடுவதோடு தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் தயங்கக்கூடாது.

    ஒரு நாட்டின் புகழ் அந்த நாட்டின் மக்கள் தொகையைக் கண்டு மதிப்பிடப்படுவதில்லை. மாறாக அந்நாட்டிலுள்ள சிறந்த மேதைகள், சிந்தனையாளர்கள், நல்ல தலைவர்கள், பண்பாளர்கள் ஆகயோரின் எண்ணிக்கையைக் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அப்படிப்பட்ட நல்ல குடிமக்களை உருவாக்கும் தாய்க்குலத்தை சுதந்திரமாக செயல்படவும், துணிவுடன் சவால்களை எதிர்கொள்ளவும் வழியமைக்க வேண்டும்.

    சேமிக்கின்ற நல்ல பழக்கமும், குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கும் திறமையும் பெண்களிடம் தான் அதிகமாக உள்ளது என்பதையும் மறுக்கவியலாது.
    தற்கால பெண் சாதனையாளர்களில் மறக்க முடியாதவர்கள் என்றால், துர்காபாய் தேஷ்முக், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தவர். ஆந்திர மகிளா பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அர்த்தமற்ற சமூகக் கட்டுப்பாடுகளை பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என முழங்கியவர். நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்தவர். பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். ‘சமூக சேவைகளின் அன்னை’ என்று புகழாரம் சூட்டிய இந்திரா காந்தி இவரை தனது குருவாகக் கொண்டார். இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்டவரான இவர் தமது இறுதிமூச்சு வரை பெண்கள், குழந்தைகளின் நலனுக்காகவே பாடுபட்டவர்.

    டாக்டர் சாந்தா, உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தவரும் இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வது வழக்கம்.

    மன நோயாளிகளின் புனர் வாழ்விற்கு வழியமைத்த டாக்டர் சாரதா மேனன் , இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி. பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
    கலைமாமணி ருக்மணி அருண்டேல் போன்றோர். தங்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான அர்ப்பணிப்புடன் எதிர் நீச்சல் போட்டு சாதனை புரிந்தவர்கள் இவர்கள்!

    Share