பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஐவகை நிலங்கள்
மீனாட்சி க., முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)
நெறியாளர்- முனைவர் ப. தமிழரசி., பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்- 21.
முன்னுரை:
பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் இவை பாடும் புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும்.
தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது.
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’ 1
கருத்து விளக்கம்:
பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கே உரிய ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகையும் புகழ்ந்து இயற்றப்பட்ட பல பாடல்களை அனைத்துப் பருவங்களிலும் இயற்றிய புலவர்களின் கற்பனைக்கேற்பக் கொண்டமைந்து விளங்குகின்றன. இலக்கியச் சுவையையும் மேம்படுத்துகின்றன. பாட்டுடைத்தலைவன் / தலைவியின் நாட்டின் வளம் இந்த ஐவகை நிலங்களின் செழிப்பாலும் உணரப்படும்.
முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் பெரிதளவில் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத்தலைவன், தலைவியின் நாட்டு வளத்தைப் போற்றிவரும் பாடல்களில் வயல்சூழ்ந்த மருதநிலம், கடற்புறமான முத்துக்கள் விளையும் நெய்தல்நிலம் ஆகியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன. முல்லை, பாலை நிலங்கள் தொடர்பான செய்திகள் மட்டும் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. முல்லைநிலக் கடவுளான திருமால் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களிலும் அந்நிலம் பற்றிய வருணனைகளும் பாடல்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிஞ்சிநிலம் பற்றிய பாடல்:
குறிஞ்சிநிலத்தின் கடவுள் சேயோனான குமரப்பெருமான். அவன் மீதான பகழிக்கூத்தனாரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்று ‘மலையும் மலைசார்ந்த இடமு’மான குறிஞ்சிமலைப்புறத்தின் அச்சமூட்டும் பேரழகை விவரிக்கின்றது. குறிஞ்சிநிலம் பற்றிய நயங்களும் மிகச்சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.
நெடிய மரங்கள் கொடிகளுடன் பின்னிப்பிணைந்து அடர்ந்து வளர்ந்துள்ளமையால் பகல்போதிலும் இருள் சூழ்ந்திருக்கும் அச்சம்தரும் மலைப்பிரதேசம். அந்த இருளை நீக்கவும் இயற்கையே வழிசெய்கிறது. அங்குள்ளதான கொடிய நஞ்சினை உடைய ஒரு பாம்பு தன் வாயை அகலத்திறந்து மாணிக்கக் கல்லை உமிழ்கின்றது; அந்த மாணிக்கக்கல் ஊழிக்கால இருள்போன்ற கொடிய இருளை நீக்குகின்றதாம்.
மலையில் வாழும் குறவர்கள் உணவுக்காகத் தினை பயிரிடுவர். அதுவே அவர்களின் முக்கிய உணவாகும். அதற்கு எருவாக அவர்கள் பயன்படுத்துவது கவரிமானின் முலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் பால். அது, சூரியஒளியினால் காய்ந்து, பாறைகள்மீது படர்ந்துள்ளது; சூரிய ஒளியில் அது வெள்ளித்தகடு போன்று பளபளவென்று ஒளிவீசுகின்றது. மலைவாழ் குறவர்கள் அதனை எடுத்துத் தங்களது தினைப்பயிருக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்களாம்.
இக்குறிஞ்சி நிலத்தில் வாழும் கருநிறம் கொண்ட குறமகளிரின் இன்றியமையாத வேலை, தினைப்பயிரைத் தின்னவரும் கிளிகளையும் மற்ற பறவைகளையும், ‘ஆலோலம்’ எனக்கூறி கவண் எறிந்து ஓட்டுவதாகும். சிலபொழுது அவர்களின் கவனம் பறவைகளை விரட்டுவதில் ஈடுபடுகிறது; இன்னும் சிலபொழுது தங்கள் குலமகளான வள்ளியின் உள்ளம் கவர்ந்த குமரனையும் அவன் திருவுருவையும் எண்ணி நெகிழ்ந்து கனிகின்றது. இவ்வாறு இருவிதமான எண்ணங்களும் மாறி மாறி அவர்களுடைய உள்ளங்களில் ஊசலாடுகின்றன.
இவ்வாறெல்லாம் குறிஞ்சி நிலவளம் கூறிப் பின்பு குறமகளிரின் செம்மைபாய்ந்த கண்களைக் கொள்ளைகொண்ட முருகப்பெருமானைத் தலையசைத்து, திருவாய் திறந்து சில சொற்களைக்கூறிச் செங்கீரையாட வேண்டுகிறார் பகழிக்கூத்தனார்.
‘வெங்காள கூடவிட மொழுகுபற் பகுவாய்
………………………………….
மங்காம லிரசதத் தகடெனச் சுடர்விட
மலைக்குறவர் கண்டெடுத்து
வண்டினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற
மகளிருள மூசலாட…….’ 2
முல்லைநிலம் பற்றிய பாடல்:
சிதம்பர அடிகளார் இயற்றியுள்ள முருகப்பிரானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிறுபறைப் பருவப் பாடலொன்று முல்லைநிலங்கள் செறிந்த திருப்போரூரின்கண் உள்ள பலவிதமான முல்லைநிலக் காட்சிகளைக் கூறி கருத்துக்கு விருந்து படைக்கின்றது.
அழகான திருப்போரூர், முல்லைநிலங்கள் செறிந்தவூர். முல்லைநிலக்கடவுள் மாயோன் எனப்படும் திருமாலாவான். இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. தயிரின் முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள், அவர்கள் தயிர் கடையும் கலங்களில் முழக்கும் ஒலி ஒருபுறம் கேட்கிறது; பசுக்கூட்டங்கள் தம் கன்றுகளை நினைத்தமட்டிலேயே அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச் சுரந்து கன்றுகளை எண்ணிக் கத்தும் முழக்கமும் மிகுதியாகக் கேட்கின்றது.
இசையமைந்த துளைகளினூடே விரல்களைப் பொருத்திப்பிடித்து தொறுவர்கள் எனப்படும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழலோசையும் கேட்கின்றது. பலவிதமான நிறங்கள் கொண்ட காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக் கூவும் ஓசையும் எழுந்தவண்ணம் உள்ளது.
செழித்து விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய இனிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியற்போதில் எழும் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இப்போரூரின் முல்லைநிலங்கள்.
அம்முல்லை நிலத்தில் வாழ்பவனும் குளமலி கண்ணனாகிய சிவன் தந்தருளியவனுமான முருகப்பெருமானை, “முருகா, நீ சிறுபறை கொட்டுக! முத்தமிழினை மெத்த வளர்த்தவனே! சிறுபறை கொட்டுக!”- என்பது பாடற்பொருள்.
ஒருவரைப் பற்றிக் கூறும்போது அவர் புகழ்வாய்ந்த குடும்பப் பின்னணி உடையவராயின் அவர் பெற்றோர், மற்ற உறவுமுறைகளைக்கூறி அவரைப் பெருமைப்படுத்துவது வழக்கம். அதுபோன்றே இப்பாடலில் முருகனின் தந்தையாகிய சிவபிரானின் புகழையும் விளக்கியுள்ளார். குலம்- குடிப்பெருமை கூற ‘குளமலி கண்ணன் தரும் இறை’ எனச் சிலசொற்களையே கூறுகிறார். குளம் = நெற்றி; அலிகம்- நெற்றி. நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமான் தந்தருளும் முருகக்கடவுள் என்கிறார். வேறென்ன பெருமை வேண்டும் முருகனுக்கு? தனது பெற்றோரைப்போல் அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் வளர்த்து அருளுபவன் அல்லவா?
அளைகடை முடைகது வியதளிர் வடிவத்
தாய்ச்சியர் மத்தொலியும்
அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி
ஆன்நிரை கத்தொலியும்
……………………………………
…………………………முல்லைக்
குளமலி கண்ணன் தருபோ ரூரிறை
கொட்டுக சிறுபறையே.’ 3
முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஒரு இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.
புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது.
மருதநிலம் பற்றிய பாடல்:
குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்து முதல் பாட்டிலேயே மருதநிலத்துச் செய்தியைக் கூறுகிறார். காக்கும் தெய்வமான திருமாலின் பெருமையைக் கூறும்போது வயல்கள் சூழ்ந்த மருதநிலத்து வனப்பை விவரிக்கிறார். மருதநிலத்துக் கடவுள் வேந்தன் எனப்படும் இந்திரனாவான். மேலும் அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் தாமரையில் உறைபவர்கள். தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.
திருமால் தமிழ்மீது கொண்ட காதலால் தமிழ்பாடும் புலவனின் பின்னால் தனது பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு விரைவதனை அழகுற விவரிக்கிறார். காதல்மனையாளை விட்டுப்பிரியத் திருமாலுக்கு மனமில்லை. ஆகவே வயலில் பூத்து நிற்கும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவளை அந்த வழுக்கும் சேறுநிறைந்த வயலில் தனது கையால் அணைத்தபடி அவள் விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டு உடனழைத்தவாறு தமிழ்ப்புலவரின்பின் விரைகிறான். மிக அழகான கற்பனை!
‘கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்
கலுழிபாய்ந் தளறுசெய்யக்
கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்
கையணை முகந்துசெல்லப்
பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்
பணைத்தோள் எருத்தலைப்பப்
பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே.’ 4
‘கையணை முகந்து செல்ல,’ எனும் சொற்கள் மிகவும் நயமாக, ‘கையால் அணைகொடுத்து, அவளை அன்போடு தழுவி அணைத்து நடத்திச் செல்ல,’ எனும் பொருள்படும். மிக நுட்பமான உய்த்தறிதலின் ஆளுமை நிரம்பிய கவிதையிதுவாகும்.
நெய்தல்நிலம் பற்றிய பாடல்:
திருச்செந்தூர் தலம் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆகவே, பகழிக்கூத்தனார் தாமியற்றிய பிள்ளைத்தமிழில் கடல்சார்ந்ததாகிய நெய்தல் நிலத்தினைப் பலவிதமாகப் போற்றியுள்ளார். நெய்தலின் கடவுள் வருணனாவான்.
‘திரையெறியு மலைவாய்’ – அலைகளை வீசி எறியும் திருச்செந்தூர் (திருச்சீரலைவாய் என்பது இதன் பெயர்),
‘வெள்வளை தரும் தண்தரள மலைகொண்டு கொட்டு நகராதிபா’- வெண்மையான சங்குகள் ஈனும் குளிர்ச்சி பொருந்திய முத்துக்களை மலைபோல கடலலைகள் கொண்டு கொட்டும் நகருக்கு அதிபனே!’,
‘குரைகட லலையெறி திருநக ரதிபதி’- ஓசையிடும் கடல் அலைகளை வீசியெறியும் திருநகருக்கு அதிபதி,
‘அலையாழிசூழ் திருச்செந்தூர் வடிவேலன்.’
‘கழிதொறும் கயல்குதிக்கத் திரைவாய் முழங்கும் திருச்செந்தில் வேலவனே!’ (கழி- உப்பங்கழி- நெய்தலின் அடையாளம்) என்பன சில உதாரணங்கள்.
முத்தப்பருவத்துப் பாடலில் கூறுகிறார்: “குமரனே! உனது அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் கடலலைகள் முத்துக்களை வாரி வாரி வீசும். அலைகள் விடாது ஒலியெழுப்பும். கடலிலும், கடற்கரையிலுள்ள உப்பங்கழிகளிலும், அவற்றில் மலர்ந்துள்ள கழுநீர் மலர்களிலும், அக்கழிகளில் உண்டாகும் நீர்ச்சுழிகளிலும், கடற்கரையில் வளர்ந்துள்ள அடர்ந்த தாழைப் புதர்களிலும், இன்னும் பல இடங்களிலும் சங்குகள் வருந்திப்பெற்ற கோடிக்கணக்கான முத்துக்களைக் காணலாம். அத்தகைய வளமுடைய திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் பெருமானே! எமக்கொரு முத்தம் தந்தருளுக,” எனத் தாய் வேண்டுவதாக அமைந்த ஒரு இனிய பாடல்.
கத்துங் கடலி னெடும்படவிற்
கழியிற் கழுநீ ரிற்சுழியிற்
கானற் கரையிற் கரைதிகழும்
கைதைப் பொதும்பிற் ………
…………………………………….
முத்தம் சொரியும் கடலலை’வாய்
முதல்வா முத்தம் தருகவே’5
பாலைநிலம் பற்றிய பாடல்:
திருவிரிஞ்சை முருகன் பி. த. நூலில் ஒரு சப்பாணிப் பருவப்பாடல், ‘பொய்யாமொழிப்புலவர் மதுரையில் சங்கம் புரக்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சியைக் கூறுகின்றது. பாலைநிலத்துத் தெய்வம் கொற்றவை ஆவாள்.
துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடமாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவேனோ?” எனக்கூறி மறுத்துவிட்டார். இப்புலவர் ஒருமுறை மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் காக்கவேண்டிப் புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றார். இப்படிப்பட்ட வாய்ப்பிற்காகக் காத்திருந்த முருகன், அவர் செல்லும் காட்டுவழியில் ஒரு வேடச்சிறுவனாக உருக்கொண்டு புலவரை வழிமறித்தான். “நானொரு புலவன்,” எனப் பயந்தவண்ணம் கூறிய புலவரிடம், ஒரு கவிதை பாட வேண்டினான் கள்ளச்சிறுவன். ‘நமது உயிருக்கு இவனால் ஆபத்தில்லை; தமிழின் அருமை உணர்ந்த கள்ளன் போலும்!’ என மகிழ்ந்த புலவரிடம், “என்மீது சுரம்போக்காக ஒரு கவி பாடுக,” என்றான் வேட்டுவச் சிறுவன். “உன் பெயரென்ன அப்பா?” எனக்கேட்ட புலவரிடம், முன்பு அவர் கூறியதனை நினைவில் கொண்டு, “என் பெயர் முட்டை,” என்றான் குமரன். புரிந்துகொள்ளவில்லை புலவர் பெருமகனார்!
சுரம்போக்குத் துறையாக ஒரு பாடலைப் பாடினார்.
‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கிசைந்தனளே- மின்போலு
மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்
கானவேள் முட்டைக்குங் காடு.’ 6
வேடச்சிறுவனாக வந்த முருகன் இதில் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறினான். வெட்டிப்போட்டாலும் காயாத வேலமுள் நாள்பட்டுக் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது. அப்படிப்பட்ட முள் கள்ளி வெந்து பொறியாகப் பறக்கும் பாலையில், பச்சையாக வேகாமல் இருந்து காலில் தைக்கும் எனக்கூறுவது பொருந்துமோ? (காய்ந்து உலர்ந்து வெந்தமுள் குத்தவியலாது) இப்படிப்பட்ட பொருட்குற்றம் உடைய பாடலைப் புலவராகிய நீர் பாடலாகுமோ? என்றான் வேடச்சிறுவன். பொய்யாமொழியார் பேச்சற்றுத் திகைத்து நின்றார்.
வரகவி மார்க்கசகாயதேவர் தாமியற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
முருகன் தானொரு பாடலைப் பொய்யாமொழியார் மீது பாடி, பெட்டை- முட்டை பற்றிய நினைவினைப் புலவருக்கு வரச்செய்தான்.
புலவர் ‘நீ யார்?’ என வினவ, தன் அழகுத் திருவுருவைக் காட்டி, புலவரின் நாவில் தன் வேல்கொண்டு பொறித்து மறைந்த “முருகப்பெருமானே! அறிவிற் சிறந்த சதுரனே!” என முருகப்பிரானை வாழ்த்தி அவனைச் சப்பாணிகொட்ட வேண்டுகிறார் புலவனார்.
‘பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்
புரக்கவெழு நாள்மறவனாய்
புறவற வளைத்தெனது பெயர்முட்டை பாடெனப்
பொன்போலு மென்றுபாட
வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி
ளம்பென…’7
முடிவுரை:
இவ்வாறு நுணுக்கமான பல தமிழ்நயங்களை பிள்ளைத்தமிழ்க் கவிஞர்கள் தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளமை நயந்து நோக்கத்தக்கது.
______________________________________
ஆய்வுக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்:
1. தொல்காப்பியம்- அகத்திணையியல் – பொருளதிகாரம்
2. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்
3. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் – சிதம்பர அடிகள்
4. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்
5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்
6. தனிப்பாடல்- பொய்யாமொழிப்புலவர்
7. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் – வரகவி மார்க்கசகாயதேவர்
************