கல்வித்துறை
பவள சங்கரி
தலையங்கம்
தலைநகர் தில்லியில் ஆக்கப்பூர்வமான ஒரு புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது. புற்றீசல் போல பெருகியுள்ள பள்ளிகள் மத்தியில் தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிப் பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் புத்தகச் சுமை இல்லாத நாளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்று ஒரு நாள் குழந்தைகள் பள்ளிகளுக்கு புத்தகம் ஏதும் கொண்டு வரவேண்டியதில்லை. இது குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. (smart education) பொலிவுறு கல்வித் திட்டத்தின் கீழ் இதை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலை நாடுகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு +2 வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் அறிவுத்திறன் பன்மடங்கு பெருகும் வகையில் கல்வித் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. வகுப்பில் நடைபெறும் கற்பித்தலும் வீட்டில் அதைப் பயிற்சி கொடுத்தலும், மாணவர்களின் கல்வித்தரம் குறித்த செய்திகளை பெற்றோருக்குத் தெரிவித்தலும் அனைத்தும் கணினி மூலமாகவே நடைபெறுகின்றன. மாணவர்கள் வீட்டுப்பாடங்கள் செய்வதற்கு மடிக்கணினியையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.. இப்போதுதான் நம் கல்வித் திட்டத்தில் அதுவும் தலைநகரில் உள்ள 3 மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும், வாரத்தில் 1 நாள் மட்டும் இத்திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் இத்திட்டம் விரைவில் செயல்படுத்துதல் நலம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி பயிற்றுவிக்கும் பள்ளிகளில் கணினி மூலமாகப் பயிற்றுவிக்கும் இந்த முறை அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்படி செய்வதே சிறந்த கல்வித் திட்டமாகும். தட்டச்சு பயிலும்போது 10 ஆம் வகுப்பு மாணவன் ஆரம்ப நிலையில் ஆரம்பித்து வார்த்தைகள் வந்து சேர்வதற்கே 2 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. ஆனால் மேலை நாடுகளில் பயிற்றுவிக்கும் திட்டங்களின்படி மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு நிமிடத்திற்கு 120 முதல் 140 வரை வார்த்தைகளைப் பதிவிடுவதாகக் கூறப்படுகின்றது. அறிவில் சிறந்த நமது மாணவர்கள் இந்த வளர்ச்சியை அடைவதற்கு ஏற்ப நம் கல்வித் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். தமிழறிஞர்களின் கல்வியாளர்களின் பங்களிப்பைப் பெற்று நம் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு ஆவண செய்யவேண்டும். பொதுவாக 10 வயதிற்குள் குழந்தைகள் வளர்ந்தவர்களின் அறிவுத் திறனில் 60 விழுக்காட்டிற்கும் மேல் அறிவினைப் பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு பாரபட்சமில்லாத முறையான கல்வி வளர்ச்சியே, இந்தியாவின் வளர்ச்சி.