இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 263 )

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

இயற்கையன்னை ஒருவாரகாலம் , ஒருமுறை சிலிர்த்து இங்கிலாந்து நாட்டினை தன்னுள் சிறையாக்கி வைத்திருந்து வெளிவந்த வேளையிது. கருமேகங்கள் கூடி வெள்ளைப் பனிமழை பொழிந்து இங்கிலாந்து நகரத்து தெருக்களையெல்லாம் பனிப்பாய் கொண்டு மூடியிருந்தது.சைபீரியாவிலிருந்து அடித்த குளிர்காற்று “கிழக்கிலிருந்து வந்த பூதம் (Beast from the east)” எனும் பெயருடன் இங்கிலாந்து நாட்டினைத் தன் கைப்பிடிக்குள் அமுக்கிப் பிடித்திருந்தது. – 5 டிகிரி செல்சியஸ் எனும் சூழல் வெப்பநிலையை வெப்பமானிகள் காட்டினாலும் இங்கிலாந்தைக் கவ்விப்பிடித்திருந்த குளிர்காற்றின் வேகம் – 12 டிகிரி செல்சியஸ் எனும் வகையிலான தாக்கத்தைக் கொடுத்திருந்தது. இப்போதுதான் ஒருவாறு அப்பிடிக்குள் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டுள்ளது. நாமும் மீண்டுள்ளோம்.

இந்நிலையில் தான் நாம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியை வந்தடைந்துள்ளோம். அது சரி… அப்படி இந்த மார்ச் 8ஆம் திகதிக்கு அப்படி என்ன பெருமை என்று எண்ணினால் அது உலகின் மகத்தான “சர்வதேச மகளிர் தினத்தை ” தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். ஆம், பெண்களின் மகத்துவத்தைக் குறிக்கும் நாள். பெண்களின் பெருமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் நாள். பெண்களின் சுபீட்சத்தை எடைதூக்கிப் பார்க்கும் நாள். அன்றைய பெண்களுக்கும், இன்றைய பெண்களுக்கும் இடையில் காலம் கொடுத்த மாற்றங்கள் அநேகமாக இருந்தாலும், காலத்தால் மாற்ற முடியாத ,காலத்தால் அழியாத பல பண்புகள் இன்றைய பெண்களுக்கு உண்டு. அன்று தாய்மையின் வடிவமாகப் பெண்தான் திகழ்ந்தாள் இன்றும் தாய்மையின் வடிவமாகப் பெண்கள் தான் திகழ்கிறார்கள்.

அன்றைய பெண் தாய்மையின் வடிவமாக மட்டுமே இருந்தாள். அவளுக்கென விதிக்கப்பட்டவை இல்லம் எனும் நான்கு சுவர்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டு இருந்தன. ஆனால் இன்றைய பெண்களுக்கு வானம் கூடத் தொடும் தூரத்தில் தான் இருக்கிறது. ஆண்கள் செய்யும், ஆண்களால் மட்டுமே செய்யக்கூடியவை என்று எண்ணப்பட்ட பல பணிகள் இன்று பெண்களினால் ஆண்களை விடத் திறமையாகச் செய்யப்படுகின்றன. கணனித்துறையை எடுத்தால் என்ன, விமானம் ஓட்டும் பணியாக இருந்தாலென்ன, மருத்துவத்துறை என்றால் என்ன, விஞ்ஞானத்துறை என்றால் என்ன அனைத்திலும் இன்று பெண்கள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

சமுதாய முன்றிலில் நடக்கும் பல அநியாயமான செயல்களைத் தட்டிக் கேட்பவர்களாகப் பல பெண்கள் செயற்படுகிறார்கள். சமூக சேவகிகளாக பலர் தம்முடைய சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்துச் சமுதாயத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்று மேலைநாடுகளிலும் சரி, எமது தாய்நாடுகளானான பின்புல நாடுகளாயினும் சரி பல வியாபார நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் பெண்கள் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்றும் மேலைநாடுகளில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையிலிருக்கும் சமதள வேறுபாடு தீர்ந்தபாடில்லை. ஒரே பணியிலிருக்கும் ஒரு பெண்ணையும், ஆணையும் எடுத்துக் கொண்டால் ஆணை விடப் பெண்ணின் சம்பளம் குறைவாகவே இருக்கிறது. இது பலமுனைகளில் பலரினால் எடுத்துக் காட்டப்பட்டுத் தொடரும் பல அரசுகளினால் விமர்சிக்கப்பட்டாலும் அவ்வித்தியாசம் மிகவும் மெதுவாகவே குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு ஒருவகையில் ஆண்களின் ஆணாதிக்கக் குணாம்சம் அடிப்படையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆண்களுடன் சமதளத்தில் போராடித்தான் தமக்கான வாழ்வாதரத்தைத் தேடிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ள பெண்கள் ஆரம்பிக்கும் போதே சில அடிகள் பின்னாலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய காட்டாயத்துக்குள்ளாக வேண்டியுள்ளது.

தமிழ்ப்பாட்டன் மகாகவி பாரதி தன் தமிழில்,

”ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!” என்றான் பெருங்குரலில்.

பாரதி கண்ட அப்புதுமைப் பெண்ணினைக் காணும் வகைக்கு இன்று நாம் என்ன செய்தோம்? பெண்களை ஒரு காமப்பொருளாக, நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பவர்கள் பலரையே காண்கிறோம். பொதுவாக நடிகைகள் என்றாலே அவர்களை மனம்போன போக்கிலே விமர்சிக்கும் உரிமை எமக்குண்டு என்பது போலேத் தம்மை நாகரிகவாதிகள் என்று கூறிக் கொள்ளும் இன்றைய ஆண்களில் பலர் நடப்பதைக் காணும்போது வேதனையாக உள்ளது. தாயாக, சகோதரியாக, அன்பு மனையாளாக எமக்குக் கிடைப்பவர்கள் கூட அப்பெண்ணினத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பதை மறந்தவர்கள் போல் நடப்பது வியப்பாக இருக்கிறது.

சமீபத்தில் இந்தியாவின் பல மொழிகளில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி அவர்கள் அகால மரணமடைந்ததையடுத்து சொற்ப நேரத்திலேயே அவரது பிரத்தியேக வாழ்க்கை மிகவும் தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது வேதனையளிக்கிறது. அதற்குச் சார்பாக ” நடிக்க வரும் போதே இத்தகைய நிகழ்வுகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதை அவரே அறிந்திருப்பார்” எனும் வாதம் சிலரால் முன்வைக்கப்பட்டது. ஒரு மிருகம் இறந்தால் கூட அதனை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனும் பண்பு நிறைந்த இந்நூற்றாண்டிலே அடிப்படை மனிதத்தன்மை அற்றுப் போனதைப் போல உணர வேண்டிய பல தருணங்கள் நிகழ்கின்றன. இன்றைய பெண் சமூகத்தின் ஒரு முக்கியமான அங்கம். பலநாடுகளின் தலைவர்களாகப் பெண்கள் திகழ்கிறார்கள். அதற்காக அன்றைய பெண் முக்கியமான அங்கமாக இருக்கவில்லை என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் அன்றைய காலத்தில் பெண்கள் குடும்பம், இல்லம் எனும் வரையறைக்குள் அடைக்கப்பட்டதினால் அவர்களின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆராய வேண்டிய தேவை இருக்கவில்லை. அத்தகைய ஒரு சூழலில் தான் மகாகவி பாரதியார் அச்சிறையை உடைத்துப் பெண்களை வெளிக்கொணர வேண்டிய உண்மையை சத்தமாகவே உரைக்கத் தொடங்கினார். அதனாலேயே,

”பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்; அதற்குரிய வெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோமதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.” என்று கவி படித்தார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதமும் வருகிறது, எட்டாம் திகதியும் வருகிறது.மகளிர் தினங்களும் வந்து போகின்றன. கவிதைகள் படிக்கிறோம், கட்டுரைகள் வரைகிறோம். எம்மில் எத்தனை பேர் உள சுத்தியுடன் இப்பெண் விடுதலை தினத்தில் பெண்களின் மேன்மையைக் காக்கும் வகை எம் மனத்தில் இவ்வுறுதியை எடுக்கிறோம் என்று ஏதாவது ஓர் உறுதியை அன்றி ஒரு செயற்பாட்டை முன்னெடுத்திருக்கிறோம்?

அடுத்த மகளிர் தினத்தில் மீண்டும் எடை போடுவோம்!!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *