மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 2

 

இன்னம்பூரான்

09 03 2018

இந்த தொடரின் முதல் பகுதி ஒரு பீடிகையாக இருந்த போதினும், இதை என் வலைப்பூவின் உலகத்தமிழ் வாசகர்களில் பலர் படித்தனர்; நண்பர்கள் ஒரு அரிசோனன், வ.கொ. விஜயராகவன் ( பல வருடங்களுக்குப் பிறகு), சி.ஜெயபாரதன் ஆகியோர் ஆழ்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நன்றி. என்னை வீழ்த்திய இடம் சென்னை ராஸ்தாக்கள் அல்ல. அவை என்னை கொன்றிருக்கக்கூடும். நான் வாழும் இடத்திலேயே காலை உடற்பயிற்சி செய்த இடத்தில் கவனம் பாண்டிச்சேரி தமிழ் ஆய்வு பாடங்கள் மீது செல்ல, உடல் பள்ளத்தில் விழுந்து முகம் ஈயச்சொம்பு போல் நசுங்க, மூக்கு உடைந்தது; நான் தேறி வருகிறேன். இதுவே பகுத்து அறிவதற்கு உவமையாக அமைந்து விட்டதை பாருங்கள். போலி பகுத்தறிவும் கவனக்குறைவால் தான். தும்பையும் விட்டு விட்டு வாலையும் விட்டு விட்டு, காலை பிடிப்பது போல், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது போல் அமைந்து விட்டது. ஈ.வே.ரா.அவர்களின் உன்னதமான சமுதாய சீர்திருத்தங்கள் காழ்ப்புணர்ச்சியினாலும், வன்முறையினாலும், பகைமை அணுகுமுறையினாலும் பாழாயின. அவரின் சிலையை உடைப்பதினால் நன்மை ஏற்படப்போவதில்லை; அவர் பிள்ளையாரை உடைத்துக் கண்ட பயன் யாது? நான் எழுத நினைப்பது எல்லாம் அன்றாடம் மாறிவிடுகின்றன. திரு. ஒரு அரிசோனன் ‘ஒரு இனம் தெரியாத தவிப்பு’ என்றதில் ஒரு உண்மை இருக்கிறது. மதாபிமானம் மதவெறியாக அதிக முயற்சி தேவையில்லை; சுயமரியாதை பிறரை தாழ்த்த நினைக்கும்போது, பூணலையும், குடுமியையும் அறுக்க விழையும்போது, தன்னையே மாய்த்துக்கொள்கிறது; தன் வாழ்வியலை சிதைத்துக்கொள்கிறது. தமிழ்தென்றல் திரு.வி.க. அவர்களின் சகிப்புத்தன்மையை புறம் தள்ளி விடுகிறது. இது நிற்க.

தற்காலம் அசட்டுத்தனமாக சிலை உடைப்பு தலையெடுத்த போது, அதை பிரதமர் முளையிலே கிள்ளி விட்டார் என்றாலும், பட்ட கறை பட்ட கறை தான்.

ஆலயத்திலிருக்கும் விக்ரஹங்கள் ஆனாலும் சரி, மனிதர்களின் சிலையாயினும் சரி, ஒரு கிரேக்க பாடம் படிப்போம் இன்று. மஹாத்மா காந்தி, நேரு, ஈ.வே.ரா. ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர்களின் சிலாரூபங்கள், மரணத்தையும் கடந்து, அதனால் ஏற்பட்ட இழப்பையும் கடந்து, மாண்டோர்களின் சிலைகளில் உறையும் உயிர்மை சிரஞ்சீவி என்க. ஏன்? அசோகரின் கல்வைட்டு, ராஜராஜன் கட்டிய பெரிய கோயில், எல்லா கோயில்களில் உள்ள சிற்பங்கள், அங்கிருந்து திருடப்பட்ட சிற்பங்கள், மோனா லீசாவின் ஓவியம், சலப சாத்திரத்தின் நுன்கணக்குப்படி அமைக்கப்பட்ட ஆலயங்கள் எல்லாமே வாழ்வியலின் இறவா நிலையை குறிப்பிடுகின்றன எனலாம். இன்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

(தொடரும்)

-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

1 thought on “மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 2

 1. பாராட்டுகள் இன்னம்பூரான் ஐயா.

  4000 ஆண்டுகட்கு முன்பு நவீனக் கணித முறையில் நுணுக்கப் பொறியியல் கட்டமைப்பில் வண்ண ஓவியங்களோடு, எகிப்த் பிரமிடுகளில் ஃபெரோ மன்னர் வாழ்க்கை, மக்கள் தொழில், நடப்பு வரலாறுகள் விளக்கமாய் எழுதப்பட்டுள்ளன.

  இந்திய அஜந்தா குகைகளில் புத்தர் காலத்து ஓவியர்கள் உன்னத ஓவியங்களை எழிலோடு வரைந்துள்ளார்.

  தற்காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குமரி முனையில் 1330 அடி உயரத்தில் வரலாற்று முக்கிய வள்ளுவர் சிலையை வடித்து வைத்தார். விடுதலை இந்தியாவில் இதுபோல் வேறு யாராவது வரலாற்றுச் சின்னங்கள் அமைத்துள்ளாரா ?

  மொம்பையில் ஆசியப் புகழ்பெற்ற பாபா அணுவியல் ஆய்வுக்கூடம், சென்னை கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக்கூடம் போன்றவை பாரத நாட்டில் எழுப்பிய நவீன விஞ்ஞான ஆலயங்கள்.

  இந்த வரலாற்றுச் சின்னங்கள், சிலைகள், ஆலயங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப் படவேண்டும்.

  தாலிபான் மூர்க்கர் ஆப்கானிஸ்தானில் வரலாற்று முக்கியமான புத்தர் சிலையை வேட்டு வைத்து சிதைத்தது எத்தகைய மூடத்தனம் ?

  சி. ஜெயபாரதன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க