Category: சிறுகதைகள்

கதைகள்

  • பேனா எனும் பிறப்புறுப்பு

    -பாலு

    அந்த அந்தி நேரத்தில் ஆண்டுகள் கழித்து கேத்ரினைக் காண்கிறான் திவாகர். சந்தோஷ் நாராயணன் இசையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கோயம்பேடு நிறுத்தத்தில் கேத்ரின் ஏறுவதைக் கண்டதும் தன் காதணிகளைக் கழற்றினான்.

    திவாகரும் கேத்ரினும் கல்லூரிக் காலத்து நண்பர்கள். கல்லூரியில் திவா, தீபாவைக் காதலித்துக் கொண்டிருந்தான். திவாகருக்கும் தீபாவிற்கும் கேத்ரின் தான் வெள்ளைப் புறா. திவாவிற்காகப் பல உதவிகள் செய்திருக்கிறாள் கேத்ரின். திவாவும் தீபாவும் சண்டை போட்டுக் கொண்ட சமயத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பதற்கான முயற்சியும் எடுத்தாள். ஆனால் பலன் பெறவில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்தபோது, திவா – தீபா காதலும் முடிந்திருந்தது.

    இப்போது இரண்டரை ஆண்டுகள் கழித்து, திவாவால் கேத்ரினைத் தான் பார்க்க முடிந்ததே தவிர தீபாவைத் தொடர்புகொள்ளக் கூட முடியவில்லை. கேத்ரினும் திவாவும் புன்னகைத்துக் கொண்டனர். திவா அவளிடம் தன்னருகில் வந்து அமருமாறு சைகை செய்தான்.

    “எப்படி டா இருக்க?” என்றாள் கேத்ரின்.

    “ஏதோ இருக்கேன். நீ எப்படி இருக்க? மேடம் ரொம்ப பிஸி ஆகிட்டீங்க போல? ஆளையே பாக்க முடியல! கடைசியா டிகிரி செர்டிபிகேட் வாங்குனப்ப பார்த்தது!” என்றான் திவா.

    “ஊர்ல இருந்தேன் டா.. இப்போ ரீசெண்டா தான் சென்னை வந்தேன். இங்கதான் வொர்க் அதிகமா இருக்கு. சோ, ரூம் எடுத்துத் தங்கிட்டேன்”

    “என்ன வொர்க் பண்ற?”

    “இப்பத்திக்கி ஒரு மேகசின்ல கன்டென்ட் ரைட்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்”

    “ஓ! குட்”

    “நீ எங்க வொர்க் பண்ற திவா?”

    “நான் எங்கயும் வொர்க் பண்ல. இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். பார்ப்போம்! வாழ்க்கை என்ன எங்க கூட்டிட்டு போகுதுனு” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டான் திவா.

    “ஓ வாவ்! ஆல் தி பெஸ்ட் டா” என்றதும் திவா புன்னகைத்தான். இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு

    “கேத்ரின்.. தீபா வ பாக்குறியா? அவ எங்க இருக்கா? ஏதாச்சும் விவரம் தெரியுமா?”

    “இல்ல திவா.. காலேஜ் முடிஞ்சி அப்புறம் அவள பாக்கவே இல்ல.. ரெண்டு மூனு தடவ கால் பண்ணி பேசுனேன். அப்புறம் அந்த நம்பருக்கு கால் போகவே இல்ல.. நா ஜெயா கிட்ட கேட்டு தீபாவோட புது நம்பர் இருந்தா வாங்கி உனக்கு அனுப்புறேன். உன் நம்பர் குடு” என்று திவா எண்களை வாங்கிக் கொண்டாள்.

    அன்று முதல் திவாகரும் கேத்ரினும் நிறைய பேசிக் கொண்டனர். ஆனால் கேத்ரின் ஜெயாவிடம் தீபாவின் எண்களைக் கேட்கவும் இல்லை திவாகரும் அதைப் பற்றி கேட்டுக்கொள்ளவில்லை. இப்படியே ஒரு மாதம் கழிந்தது.

    திவாகர் நன்றாக கவிதை எழுதுவான். ஒரு அழகான பெண்ணைப் பார்த்து விட்டால் அந்த இரவு அவளுக்காக ஒரு கவிதை எழுதாமல் அவன் கண்ணிமைகள் மூடா. அவன் கவிதை டைரியில் நூற்றுக்கணக்கான அழகிகள் குடித்தனம் செய்து வருகின்றனர். அவன் கவிதைகளை ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் பகிர்வான். இன்று அவன் ஏதோ ஒரு அழகிக்காக எழுதிய கவிதையைத் தன் நண்பர்களுக்கு அனுப்பும்போது கேத்ரினுக்கும் அனுப்பினான்.

    “என் இலக்கியத்தில்
    பல அந்தாதிகளும் நீ
    பல ஹைகூக்களும் நீ
    பல ருஷ்ய கவிதைகளும் நீ”

    என்று திவாகர் அனுப்பிய கவிதையைப் படித்து விட்டு கேத்ரின், அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். “எனக்காக நீ எழுதிய கவிதை மிகவும் அழகாக உள்ளது. இதை விட அருமையாக யாராலும் காதலை வெளிப்படுத்த முடியாது. நல்ல வேளையாக நான் சொல்வதற்கு முன்பே நீ சொல்லிவிட்டாய்!”

    இதைப் படித்ததும் திவாகர் ஒரு நிமிடம் ஆச்சரியமடைந்தான். அதே சமயம் அவனுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் திவாகருக்கும் கேத்ரினைப் பிடித்திருந்தது. கடந்த ஒரு மாதமாக அவன் நிறைய அவளிடம் பகிர்ந்திருக்கிறான். ‘இது காதலா? நட்பா?’ என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு அவன் பேனாவாலும் ஏதோ ஒரு அழகியாலும் பதில் அறிய முடிந்தது.

    திவாகரும் கேத்ரினும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். நிறையப் பேசி, நிறையச் சுற்றி, நிறைய இசை கேட்டு, திகட்டத் திகட்டக் காதலித்தார்கள். கேத்ரினின் காதல் மழையில் நனைந்து கொண்டிருந்த திவாகர் தன் பேனாவை எடுத்து

    ‘எழுத்துகள் அடங்காக் காவியம் நீ
    வர்ணங்களில் அடங்கா ஓவியம் நீ
    ரௌத்திரம் பழகி எழும் பாரதி நீ

    ‘என்று எழுதி கேத்ரினிடம் அவளுக்கான முதல் கவிதையை கொடுத்தான். அவள் அதை படிக்கும்போது வெட்கத்தோடு புன்னகை மிளிர்ந்தது.

    “எப்படி இருக்கு?” என்றான் திவா.

    “எல்லாம் ஓகே. அது ‘அடங்காக் காவியம்’ இல்ல. ‘அடங்கா காவியம்’ நடுல ‘க்’ வராது என்று கேத்ரின் சொன்னதும் திவாகருக்கு ‘ஏன் தான் கவிதை கொடுத்தோமோ’ என்றாகிவிட்டது (உண்மையில் அடங்காக் காவியத்துக்கு ஒற்று மிகும்). அன்று முதல் திவா அவளுக்காகக் கவிதை எழுதுவதையே விட்டுவிட்டான். கேத்ரின் திவாவின் காதலை பெற முடிந்ததே தவிர, கவிதையைப் பெற முடியவில்லை. இப்படியே சில நாட்கள் கடந்தன.. திவா கேத்ரினிடம் கவிதைகளைத் தவிர எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டான். கேத்ரின், திவாவிடம் காமத்தைத் தவிர எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாள். ஆம்! இருவரும் இதுவரை ஒரு முத்தம் கூட கொடுத்துக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேத்ரினுக்கு ஒரு வருத்தமும் இல்லை. திவா தான் கவலைப்பட்டான். ஒரு நாள் வெட்கத்தை விட்டு அவளிடமே கேட்டுவிட்டான்.

    “கேத்ரின்.. நம்ம கிஸ் பண்ணிக்கலாமா?”

    “ஹ்ம்ம்… பட், இப்ப வேணாம்”

    “ஏன்?”

    “எனக்கு மூட் இல்ல”

    “அப்ப எப்போ?”

    “எனக்கு எப்போ கொடுக்கணும்னு தோணுதோ, அப்போ நானே தரேன்”

    “அப்போ எனக்கு மூட் இல்லன்னா?”

    “ஓ! பாக்றேன். நான் கொடுக்கும்போது நீ எப்படி அவாய்ட் பண்றன்னு” என்று திமிராகக் கூறினாள். திவாகர், கோபத்துடன் தன் டைரியை எடுத்து,

    ‘நான் என்றோ
    ஒருநாள்
    எழுதப் போகும்
    ஏதோ ஒரு புத்தகத்தில்
    ஏதோ ஒரு பக்கத்தில்
    ஏதோ ஒரு வரியில்
    அவள் கொல்லப்படுவாள்
    அல்லது முத்தமிடப்படுவாள்
    என்பது மட்டும்
    எனக்குத் தெரியும்’

    என்று கேத்ரினுக்கான தன் இரண்டாவது கவிதையை எழுதினான். ஆனால் இதையும் அவளிடம் காண்பிக்கவில்லை. தவறாக எடுத்துக்கொள்வாள் என்பதற்காக அல்ல. இதிலும் தப்பும் தவறுமாக ஏதாவது பிழை காண்பாளோ என்று பயந்துதான். இரண்டு நாட்களுக்குப் பிறகு. திவாகர் ஆர்வமாகத் தன் நாவலை எழுதிக் கொண்டிருந்தான். எழுதுவதற்கு முன்பு வசனத்தைச் சொல்லிப் பார்த்துக் கொள்வது திவாகரின் வழக்கம். அந்தச் சமயத்தில் கேத்ரின் தன் வீட்டிற்குள் வருவதைப் பார்த்ததும் அமைதியாக எழுதினான். சண்டையை சமாதானப் படுத்துவதற்கு கேத்ரினே திவாவை முத்தமிட்டாள். அவள் சொன்னது போல் இவனால் அதை மறுக்க முடியவில்லை. அவன் வாழ்க்கையில் பெற்ற மிகப் பெரிய முத்தம் அதுதான். ஓர் உரையாடலின் தொடக்கமாக தேநீர் இருப்பது போல, ஒரு காதலின் தொடக்கமாக உரையாடல் இருப்பது போல, ஒரு முத்தத்தின் தொடக்கமாகக் காதல் இருப்பது போல, ஒரு கலவியின் தொடக்கமாக இந்த முத்தம் இருந்தது. திவாகர் எழுதி வரும் நாவலில் கதாநாயகன் தன் காதலைத் தெரிவிக்கும் முன்னமே இந்தக் கலைஞனைக் காம வசத்தில் இழுத்துவிட்டாள் கேத்ரின். காமம் தீர்ந்த பின்பு பெருமூச்சு விட்டபடி,

    “திவா. சே சம்திங் நைஸ்” என்றாள் கேத்ரின்.

    “நா உன்ன இந்த அளவுக்கு லவ் பண்ணுவேன்னு நினைச்சி கூட பாக்கல தீபா” என்று திவா சொன்னதும் அதிர்ந்து போனாள் கேத்ரின்.

    கண்ணீரைத் துடைத்தபடி ஆடையை அணிந்துகொண்டு வேகமாய் வெளியேறிய கேத்ரினிடம்

    “ஐயோ கேத்ரின்! அது என் நாவல்ல வர வசனம். நீ தப்பா எடுத்துக்காத” என்று சமாதானம் சொல்லி, அவளையே பின்தொடர்ந்தான் திவாகர்.

    இவர்கள் காதல் சேர, அந்தக் கவிதை காரணமாக இருந்ததுபோல் இவர்கள் காதல் பிரிய அந்த வசனம் காரணமாகி விடுமோ? எழுத்தாளர்களின் வாழ்க்கையில் இந்த வார்த்தைகள் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கின்றனவோ?

    Share
  • பஞ்சரத்னம்

    -நிர்மலா ராகவன்

    பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி.

    “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் சோதி.

    அந்த இசைக்குழுவில் இருந்தவர்களிடையே இருந்த ஒரே ஒற்றுமை – அந்த சிலரே இந்தியாவில் முறையாக கர்னாடக இசை பயின்றவர்கள் என்பதுதான்.

    அவர்களில் மூவர் திருமணத்திற்குப்பின் கோலாலம்பூர் வந்தவர்கள். கல்லூரிப்படிப்புக்கு நிறைய செலவாகும், போதாத குறைக்கு அதிகம் படித்த மாப்பிள்ளையைத் தேட வேண்டும், அவன் வரதட்சணை நிறைய கேட்பான் என்று ஏதேதோ பயங்கள் எழ, கல்யாணத்துக்கு உரிய காலம் வரும்வரை பாட்டாவது கற்றுக்கொள்ளட்டும், பெண்பார்க்க வரும்போது மதிப்பாக இருக்கும் என்ற பெற்றோரின் திட்டத்தால் பாட்டு கற்றுக்கொண்டவர்கள்.

    பரம் சோதி மட்டும்தான் மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்தவள். அதனாலேயே தான் பிறரைவிட உயர்த்தி என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள்.

    பதினைந்து வயதாக இருக்கையில், மூன்றாம் படிவ அரசாங்கப் பரீட்சையில் நிச்சயம் தேர்ச்சி பெறமுடியாது என்று புரிந்ததும், “நான் `ஊருக்குப்’ போய் பாட்டு கத்துக்கறேன்!” என்று முடிவெடுத்தாள்.

    குண்டும் கறுப்புமாக இருந்த மகளைக் கல்யாணம் செய்துகொள்ள ஒரு லட்சம் வெள்ளி கொடுத்தால்கூட ஒருவனும் வரமாட்டான் என்று தாய்க்குத் தெரிந்துதான் இருந்தது. அப்படி அள்ளிக் கொடுக்க வசதியும் இருக்கவில்லை. மகள் இந்தியா சென்றாவது தனக்கென ஒரு வழி செய்துகொள்ளட்டுமே என்று சம்மதித்தாள்.

    போன இரு வருடங்களுக்குள் ஒரு பட்டத்துடன் திரும்பிவந்தாள் பரம் சோதி.

    `இசை அரசி அப்படின்னு ஊரிலேயே பட்டம் குடுத்திருக்காங்கன்னா சும்மாவா!’ என்று, அவளிடம் வாய்ப்பாட்டும் வாத்தியமும் கற்க வந்தார்கள் பலரும். எந்தப் பரிசோதனையுமின்றி, வானொலி, தொலைகாட்சியில் பக்கவாத்தியம் வாசிக்கவும் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

    முதலில் பெருமையாக இருந்தது. ஆனால், போகப்போக, இப்படியே இனிய குரலோ, ஞானமோ இல்லாதவர்களுக்குப் பாட்டு படித்துக்கொடுத்துக் கொண்டேதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிதரிசனம் புரிந்துபோக, விரக்தி எழுந்தது பரம் சோதிக்கு.

    தொலைகாட்சி நிகழ்ச்சியில், நளினி என்ற இளம்பெண் காமராவுக்கு முன்னால் கம்பீரமாக உட்கார, வாத்தியத்துடன் தான் ஒரு பக்கத்தில் அமரவேண்டிய நிலை அவமானகரமாக இருந்தது.

    புதிய மணப்பெண்ணாக இந்தியாவிலிருந்து வந்திருந்தவள்! தன்னைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள்!

    ஆண்களுக்கு அது என்ன வழக்கம், வெகு தூரத்தில் போய் பெண்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வருவது? மலேசிய நாட்டில் பெண்களே கிடையாதா?

    பரம் சோதியின் மனப்போராட்டத்தைக் கவனியாது, நளினி இசையிலேயே தன் முழுமையான கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

    `இவளை மிஞ்சவேண்டும்!’ என்று வெறியுடன் வாசித்தாள் பரம் சோதி. ஆனால் ஒன்றரை வருட இசைக்கல்வியால் நளினிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஒரு சிறு திருப்தி எழுந்தது சோதிக்குள்.

    `காமராவையே பாத்துக்கிட்டு பாடுங்க,’ என்று இயக்குனர் சொல்லியிருந்ததைத் தப்பாமல் கடைப்பிடித்திருந்தாள் நளினி.

    சீனர்களின் மிகச் சிறிய கண் சற்றுப் பெரியதாகத் தெரிய, வழக்கமாக காமராவை கீழிருந்து மேல் நோக்கித் திருப்புவார்கள். அதேபோல் நளினிக்கும் செய்ததில், ஏற்கெனவே பெரிதாக இருந்த அவளுடைய `இந்திய நயனங்கள்’ அளவுக்கு மீறி பெரியதாக, முறைப்பதுபோல் தோற்றமளித்தன.

    “சகிக்கலே!” என்று சொல்லிக்கொண்ட பரம் சோதி, தான் சற்றுக் கூன்போட்டு அமர்ந்திருந்ததையும் பார்க்காதிருக்க முயன்றாள்.

    `அம்மாவுக்கும் வயசாகிடுச்சு. வீட்டிலே, வெளியிலே எல்லா வேலையும் நான்தான் பாத்துக்கணும். முடியற காரியமா!’ என்று தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொண்டாள்.

    தாய் எவ்வளவு மறுத்தாலும் கேளாது, தான் எங்கு போனாலும் அவளையும் அழைத்துப்போவதை வழக்கமாக வைத்துக்கொண்டாள். அப்போதெல்லாம், `உங்களுக்குத்தான் துணை இருக்கிறதோ?’ என்று பிறரிடம் சவால் விடுவதுபோல் அவள் தலை வழக்கத்திற்கு அதிகமாகவே நிமிர்ந்திருக்கும்.

    ஆனால், அவள் நினைத்தமாதிரி அது ஒரு நல்ல மாற்று மருந்தாக இருக்கவில்லை.

    “ஹலோ, பரம் சோதி! சௌக்கியமா?” என்று முகமெல்லாம் புன்னகையாக நளினியைக் கோயிலில் பார்த்தபோது, பதிலுக்கு அவளை வெறிக்கத்தான் முடிந்தது.

    நளினியின் பக்கத்தில் அழகழகான இரு குழந்தைகள்!

    சுதாரித்துக்கொண்டு, “நீ இப்போ எல்லாம் பாடறதில்லே போல இருக்கு!” என்றாள், உபசாரமாக. மாணவ மாணவிகளின் வெவ்வேறு ஸ்ருதிக்கேற்ப ஓயாமல் கத்திக் கத்தி, தொண்டையில் இரண்டு குரல்கள் பேசின.

    நளினி புன்னகைத்தாள். “வீட்டிலே இதுகள் ரெண்டையும் பாத்துக்க வேண்டியிருக்கு. வேலைக்குவேற போறேன், இல்லையா? சாதகம் பண்ண நேரமே கிடைக்கறதில்லே, போங்கோ!”

    அவள் யதார்த்தமாகக் கூறியது சோதியின் ஆத்திரத்தைக்கிளப்பிவிட்டது. `உனக்கில்லாத குழந்தை பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது!’ என்று குத்திக்காட்டுகிறாள்!

    பட்டப்படிப்புப் படித்து வேலைக்குப் போனால்தான் பெருமையோ? தானும்தான் ஓர் ஆசிரியை – இசை ஆசிரியை!

    அதிகம் யோசிக்கவில்லை அவள். நளினியை எப்படி மட்டம் தட்டுவது என்று உடனே புரிந்துபோயிற்று.

    “தியாகராஜ ஆராதனை வருதில்ல? வந்து பாடலாமே!” என்றாள் தேன்சொட்ட. பிறகு, “பஞ்சரத்ன கீர்த்தனை பாடம்தானே?” என்றும் கேட்டுக்கொண்டாள், சந்தேகம் இல்லாவிட்டாலும்.

    ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “பத்து வருஷம் கத்துண்டு இருக்கேனே!” என்றாள் நளினி.

    `இரு! அப்போ உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்,’ என்று கறுவிக்கொண்டாள் சோதி.

    அரங்கத்தில் இசைப்பிரியர்கள் நிரம்பி இருந்தார்கள்.

    சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேடையில் பாடப்போகும் உற்சாகத்தில் நளினி நடுவில் அமரப்போனாள்.

    “நீ அங்கே போய் உக்காரு!” என்ற ஆணை பிறந்தது. பரம் சோதியின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தாள் அவள்.

    கடவுளுக்காகப் பாடுகிறோம். எங்கே உட்கார்ந்தால் என்ன! அதுதான் மூன்று ஒலிபெருக்கிகள் வைத்திருக்கிறார்களே என்றுதான் அவள் எண்ணம் ஓடிற்று.

    ஆனால், யாருமே எதிர்பாராவிதமாக அவை மூன்றையும் தன் எதிரில் வைத்துக்கொண்டு, வாத்தியத்துடன் நட்டநடுவில் பரம் சோதி அமர்ந்துகொண்டாள்.

    முதலில் சற்று அயர்ந்தாலும், `இந்த நல்ல நாளில் இவளுடன்போய் சண்டை பிடிப்பதாவது!’ என்று மற்றவர்கள் ஒதுங்கினார்கள். அவர்களுடைய ஆத்திரம் அடுத்து வந்த கானமழையில் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    “நீங்க எல்லாரும் பாடினீங்களா, இல்லே மல்லுக்கு நின்னீங்களா? நல்லவேளை, தியாகராஜர் இந்தக் கண்ராவியைப் பாக்காம சமாதி ஆயிட்டார்!” என்று ஒரு ரசிகர் வெளிப்படையாகவே கூறினார், தலையைப் பக்கவாட்டில் ஆட்டியபடி.

    அடுத்த ஆண்டு குழுவுடன் சேர்ந்து பாட காமாட்சி மாமியிடமிருந்து அழைப்பு வந்தபோது, மெல்ல மறுத்தாள் நளினி.

    “வரலியா?” கேட்டவளுக்கு ஏமாற்றம்.

    “பரம் சோதி, பரம் சோதி, பரம் சோதின்னு மூணு தடவை அழைப்பிலே போட்டு, மூணு மைக்கையும் அவ முன்னால வெச்சுடுங்கோ! நான் வரலே!” என்றாள் நளினி. தீர்மானமாக.

    தொண்டை கட்டிக்கொண்டிருந்தாலும், குரல் கம்மியிருந்தாலும், `நீதானே இப்படிப் பண்ணினே?’ என்று கடவுளிடம் சண்டைபிடித்துவிட்டு, கோயிலில் பாடுவதே மேல் என்று தோன்றிப்போயிருந்தது.

    மேலும் சில ஆண்டுகள் கழிந்தன.

    ஒரு சாயந்திர வேளையில், கோயிலுக்குள் மிகுந்த பிரயாசையுடன் நடந்து வந்துகொண்டிருந்த பரம் சோதி, நளினியைப் பார்த்தும் பாராததுபோல் போக முயற்சித்தாள். அவள் கையைப் பிடித்து நடத்திச்செல்ல ஒரு பணிப்பெண்!

    நளினியின் மனதில் ஏதோ அசைந்தது. `காலமெல்லாம் தனிமையில் வாட வேண்டியிருக்கும் என்ற வருத்தம், பாவம்! அதைத்தான் அதிகாரமாக காட்டிக்கொண்டிருக்கிறாள்!’

    அவளருகே விரைந்து, “சௌக்கியமா, சோதி? அப்பாடி! பாத்து எத்தனை நாளாச்சு!” என்று பரிவுடன் விசாரித்தாள்.

    நீட்டிய அவள் கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டாள் பரம் சோதி.

    (குறிப்பு: பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த தியாகப்பிரம்மம் என்ற மகான் தெலுங்கில் அமைத்த எழுநூறு பக்திப்பாடல்கள் பிரசித்தமானவை. நூற்றுக்கணக்கான புதிய ராகங்களைக் கண்டுபிடித்த பெருமை இவரைச்சாரும். இன்றுவரை, கர்னாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி, அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள் – பல நாடுகளிலும்).

    Share
  • என் மனத்தோழி

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார்.

    இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது.

    “மதன், மருத்துவர் என்ன கேட்டார்னு கேளுங்களேன். நீங்க வெளில தானே இருந்தீங்க.”

    “என்ன கேக்கணும். சொல்ல வேண்டியதை நீயே சொல்லு.” இது மதன்.

    எரிச்சலாக வந்தது எனக்கு.

    “இப்போ சம்பந்தமில்லாமல் மதன் என்னய இங்க எதுக்கு கூட்டி வந்திருக்கார். அவருக்கு ஏதும் பிரச்சினையா?”

    அமைதியாக ஜானவியுடன் பேச ஆரம்பித்தேன். அவள் எப்போதும் மறுக்காமல் கலகலவென்று பேசுவாள். எல்லா விஷயங்களையும் கேட்டு வந்து எனக்காகச் சொல்லுவாள். பொறுமையாக மருத்துவரிடம் நடந்த உரையாடலைக் கேட்டாள். இப்போதான் எனக்கு திருப்தி.

    அவளுடன் இருப்பது தனி சந்தோசம் தான்.

    ஜானவி இருக்கும் வரை எனக்கு யாரும் தேவையில்லை.  அவள் தினமும் டி.வி.யில் செய்திகள் பார்ப்பதால் பெரும்பாலும் அவைகளைப் பற்றி விவாதிப்போம். பின் சிறிது நேரம் சமயற்கலை.

    சாயங்காலம் வாக்கிங் போகும்போது உடற்பயிற்சி பற்றி. பூங்காவில் அமர்ந்திருப்பவர்கள் பற்றி பேசுவோம். மற்றவர்களைப் பற்றி அதிகம் வம்பு பேச அவளுக்குப் பிடிக்காது. என்னைப் போலவே அவளுக்கும் பிடித்த கலர் மஞ்சள் தான். .

    நான் படித்த அத்தனை கதைப் புத்தகங்களையும் அவளும் படித்திருப்பதால் கதைகளை திரும்பவும் நினைவு கூர்வோம்.

    தமிழ் பேச ஆளில்லாத பஞ்சாபில் எனக்கு ஜானவி மட்டும் தான் உற்ற தோழி.

    “நீ பேசாவிட்டால் என்ன. எனக்கு ஜானவி இருக்கிறாள்!” என மதனிடம் சொன்னதற்குப் பின் தான் அவசரமாக விடுப்பு எடுத்தார் சென்னை வர. ஆனால் அவளைப் பற்றி அவர் ஒருகேள்வி கூட கேட்கவில்லை.

    ஜானவியும் எங்களுடன் சென்னை வந்துள்ளாள்.  நேற்று தொலைக்காட்சியில் பார்த்த சினிமா கதையை சொல்லிக் கொண்டிருக்கிறாள். முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் என மூன்று மணிநேர சினிமா கதையச் சுருக்கி ஒரு மணி நேரம் ஒலிபரப்புவார்களே. அதுபோல அவளும் கதையைச் சுருக்கி சொல்கிறாள். கண்ணை மூடிக்கொண்டு நான் கேட்டுக் கொண்டிருகிறேன்.

    ஏனோ இந்த மதனுக்கு மட்டும் இருப்பு கொள்ளவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் மருத்துவரின் வருகைக்காக.

    மருத்துவர் வந்தவுடன் அவரை விசாரிப்பார் போல. எதற்காக இத்தனையும். புரியவில்லை.  கேட்டால் மட்டும் சொல்லிவிடவா போகிறார்.

    இங்கு வந்ததிலிருந்து திரும்பத் திரும்ப தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    “உனக்கு என்னைப் பற்றி குறை சொல்ல வேண்டும் எனத் தோன்றினால் தாரளமாக மருத்துவரிடம் சொல். நான் வேணும்னாலும் திரும்ப வெளில உக்காந்துக்கறேன்.”

    “மதனுக்கு என்ன ஆச்சு. நான் ஏன் குறை சொல்லணும்.  கொஞ்ச நேரம் முன்னால தானே மனநல மருத்துவர் முன்னால உக்காந்தேன்.  எங்கிட்ட  கேட்ட பல கேள்விகளையும் அதுக்கு நான் சொன்ன பதிலையும் இப்பதான் ஜானவி கிட்ட சொன்னேன்.”

    திரும்பவும் மனதுள் அசை போட்டேன் நேரம் போவதற்காக.

    “உங்கள் பெயர் …”

    “சரண்யா”

    “உங்களுக்கு பிடித்த விஷயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள்.”

    “பேசப் பிடிக்கும். முக்கியமா வம்பு கேட்கப் பிடிக்கும். அறிவுரை சொல்லப் பிடிக்கும். கூட்டமா உக்காந்து நேரம் போக்குவது பிடிக்கும். படம் பார்க்கப் பிடிக்கும்……”

    “எதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. எது எரிச்சலைக் கொடுக்கும்.”

    “பேசாம இருப்பது. தனியா இருப்பது. அவ்வளவு தான்.”

    இன்னும் அடுக்கடுக்கான கேள்விகள்.

    சிறிது நேரத்துக்குப்பின் மருத்துவர் கூறினார்.

    “சரண்யா உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சாதாரணமா எல்லாப் பெண்களுக்கும் உள்ள குணம் தான் உங்ககிட்டயும்  இருக்கு. பயப்படத்தேவையில்லை.”

    “மனச அமைதியாகவும் சந்தோஷமாகவும் வச்சுக்கோங்க. அவ்வளவு தான்.”

    “மதன் உங்கள் மனைவி தேவையில்லாமல் மனச குழப்பிக்கறாங்க. அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. டேக் கேர்.”

    “இல்லை டாக்டர் உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்.”

    “நான் எங்க பயப்பட்டேன். எப்ப சொன்னேன் எனக்கு பிரச்சினைனு. என்ன இது. இங்கேந்து வெளில போனவுடனே மதன ஒரு பிடி பிடிக்கணும். அவர் என்ன லூசா.”

    யோசித்துக் கொண்டிருக்கும்போதே மருத்துவர் திரும்பி வந்தார்.

    அவர் மதனிடம்

    “நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே…” .என ஆரம்பித்தார்.

    “டாக்டர் நீங்க அவளோட தோழிகள் பத்தி கேட்டீங்களா.” இது மதன்

    மருத்துவர் சந்திராவுக்கு ஒரே ஆச்சரியம். இதெல்லாம் ஒரு விஷயமா என.

    “ஓ… இது தான் பிரச்சினையா மதன்?” எனக் கேட்டுவிட்டு டாக்டரை நோக்கி பேசத் தொடங்கினேன்.

    “எனக்கு இப்போ ஒரே ஒரு தோழி தான். அவ பேரு ஜானவி. அவள நீங்கல்லாம் பாக்க முடியாது. எனக்கு வேணும் னு நெனைக்கும்போது என் கூட மட்டும் பேசுவா.”

    மருத்துவர் இருக்கையை விட்டு எழுந்தே விட்டார். அப்படின்னா ஜானவி ஒரு……..

    “என் கற்பனைத் தோழி அவ்வளவு தான். எனக்கு பேச ஆளில்லாததால் நானே உருவாக்கி வளர்த்துவிட்ட கற்பனைப் பாத்திரம்.”

    “மதன் அதிகம் பேச மாட்டார். வேலைப் பளு வேறு. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச பாஷை தெரியாது. அதனால அப்டி செஞ்சேன்.”

    “இதுக்குத்தான் இவ்ளோ பயமா மதன். எங்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே. கவலைப்படாதீங்க.  எனக்கு ஒண்ணும் ஆகாது.”

    எழுந்து வெளியேறினேன் என் மனத் தோழி ஜானவியுடன்.

    புரிந்தும் புரியாமல் பின் தொடர்ந்தார் மதன்.

    Share
  • பிரதி பிம்பங்களின் நேரம்

    மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்

    மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

     

    ஏழு வயதான ரெஷ்மி படுக்கையறைக்குப் பரபரப்புடன் கடந்து சென்றாள்.

    “மா…….ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்?”  அவள் கேட்டாள்.

                    அகிலா படுக்கை மீது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூட் கேஸில் சீலைகளையும், உள்ளாடைகளையும், வேறு சில துணிகளையும் அலங்கோலமாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள். சில துணிகள் பீரோவிற்கு முன்பாகச் சிதறிக் கிடந்தன.

                     “மா……..ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்? வை டோன்யு ஸ்பீக்”ரெஷ்மி மறுபடியும் கேட்டாள்.

                    அகிலா ஒரு விளக்கத்திற்கும் தயாரில்லை. பீரோவிலிருந்து ரெஷ்மியின் சில ஆடைகளையும் எடுத்துப் பெட்டியில் வைத்தாள். பிறகு ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பிளாஸ்டிக் பெட்டியும்.

                    ரெஷ்மியின் பரபரப்பு அதிகரித்தது. தனது கேள்விக்குப் பதில் கிடைக்காததால் அவள் அம்மாவை முரைத்துப் பார்த்துக் கொண்டு அறையின் நடுவில் நின்றாள்.

                    அகிலா சூட்கேஸை மூடினாள். ரெஷ்மி அப்போதுதான் அம்மாவின் கண்களைக் கவனித்தாள். அவை கலங்கியிருந்ததன . முகபாவம் கோபமும் வீராப்பும் கலந்திருந்தது. வேடமோ முற்றிலும் அநாகரிகமாக அழகுபடுத்தப் படாமல் வலது கையில் சூட்கேஸைப் பிடித்துக் கொண்டு இடதுகையை ரெஷ்மிக்கு நேராக நீட்டினாள்.

                    “கமோ………..ன்”

                    இருவரும் வெளியிலிறங்கி நடந்தனர். வரவேற்பறையில் டெலிவிஷனுக்கு நேர்முகமாக சிவந்த சோஃபாவில் உட்கார்ந்திருந்த ராமமூர்த்தி ஸ்டார் மூவிஸில் ‘திவன் ஆம்டு போக்ஸர்’படத்தை ரசித்துக் கொண்டிருந்தார். துணைக்கு வோட்காவும் சிகரெட்டும். அவரின் முன்னால் வந்ததும் அகிலாவின் முகபாவம் மேலும் கர்வமானது. ரெஷ்மியைப் பிடித்த பிடியும் முறுகியது.

                    ராமமூர்த்தி டம்ளரைக் கீழே வைத்து எழுந்தார்.

                    “நில்லு……..!” அவர் கூறினார்.

                    அகிலா அதைக் கேட்காமலேயே கதவை நோக்கி நடந்தாள். கதவு திறந்து கிடந்திருந்தது. அகிலாவும் ரெஷ்மியும் வெளியில் இறங்கினார்கள். ரெஷ்மி திரும்பிப் பார்த்தாள். ஒருநிமிடம் அகிலா சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டுக் கதவை இழுத்துச் சாத்தினாள். ராமமூர்த்தியின் பார்வையில் சாத்திய கதவு மட்டும்தான் தெரிந்தது. அவர் சிந்தை கலங்கி நின்றார்.

                    டெலிவிஷன்ஸ்க்ரினில் ’திவன் ஆம்டு பாக்ஸர்’ தொடர்ந்து கொண்டிருந்தது. ராமமூர்த்தி மறுபடியும் பார்க்கத் தொடங்கினார். பாதி தீர்ந்த டம்ளரை அவர் கையிலெடுத்தார். அதிலிருந்த மீதி வோட்காவைக் குடித்துவிட்டுக் கனநேரத்திற்கு அசையாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு எழுந்து டெலிபோனுக்கு அருகில் சென்றார். சில எண்களை டயல் செய்தார்.

                    “ரேகா…….. அவ மகளயும் கூப்பிட்டு எறங்கி போயிட்டா. இனிமேல் நமக்கு இந்த பெட்ரூமையே உபயோகிக்கலாம். இப்போ ஃப்ரிதானே. உடனே ஒரு டாக்சி பிடிச்சு இங்கவா. எத்தன நிமிஷத்துக்குள்ள?. பிஃப்டீன்? ஓ.கே”

                    அவர் ரிசீவரை க்ராடலில் திரும்ப வைத்துவிட்டு முகம் முழுவதும் விசித்திரப் பொலிவுடன் படுக்கையறைக்கு நடந்தார்.

                    அகிலா மகளுடன் மெயின் ரோட்டில் டாக்ஸியை எதிர்பார்த்து நின்றாள். பாதை வழியாக பல வண்டிகளும் சத்தமிட்டுக் கொண்டு சென்றன.

                    படுக்கை விரிப்பையும் தலையணைக் கவரையும் மாற்றிவிட்டு ஒரு வேலையை அழகாக முடித்ததன் திருப்தியுடன் வெளியிலிறங்கினார் ராமமூர்த்தி. அப்போதுதான் அவர் ஜன்னல் வழியாக மனைவியையும் மகளையும் பார்த்தார். அவர் ஜன்னலுக்கருகில் மறைந்து நின்று கொண்டு அவர்களைப் பார்த்தார். அகிலா ஒரு டாக்சிக்குக் கை காண்பித்த போதும் பயணிகள் இருப்பதாலோ என்னவோ அவ்வண்டி நிற்காமல் போனது. ரெஷ்மி அம்மாவின் கையைப் பிடித்தாள். அம்மாவின் மனதை மாற்ற முயற்சிக்கும் விதமாக மீண்டும் மீண்டும் ஏதோ கூறுவதைப் பார்த்த ராமமூர்த்தியின் முகம் மாறியது.

                    “ப்ளீஸ் மம்மி நமக்குத் திரும்பிப் போயிடலாம்”என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

                    கதவு திறக்கப் படுகின்ற சத்தம் கேட்டு ராமமூர்த்தி முகம் உயர்த்தவில்லை. ரெஷ்மி ஓடி வந்து சிரித்துக் கொண்டே கன்னங்களில் முத்தமிட்ட போதுதான் மிகவும் சந்தோஷமடைவதாக பாவிக்க அவர் முயற்சி செய்தார். அகிலா அவரின் முகத்தைப் பார்க்காமல் சூட்கேஸை எடுத்துக்கொண்டு நேராக படுக்கையறைக்குச் சென்றாள்.

                    வெளிப்பாதையில் ஒருடாக்சி வந்து நின்றது. ரேகா வெளியலிறங்கினாள். ரிமோட் கன்ட்ரோலின் பட்டனில் ராமமூர்த்தியின் விரல் அமர்ந்தது. டெலிவிஷன்ஸ்க்ரின் நொடியிடையில் சூன்யமானது………….

    _____________________________________________________________________

    முனைவர் நா.தீபாசரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை

    Share
  • ஏக்கங்கள்

    –விஜய் ப்ரகாஷ்

    பெரியகுளம் பேருந்து நிலையம்…

    மணி ஒன்பது அடித்து நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆனது.

    கைப்பையுடன் சேகரும், இரண்டரை வயது குழந்தையுடன் அவன் மனைவி காயத்ரியும் நின்றிருந்தார்கள்.

    “அழாத செல்லம், அப்பா ஊருக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்று அழும் குழந்தையைத் தேற்றிக் கொண்டிருந்தான் சேகர்.

    “ஏம்பா போற?” என்று மழலை அழுது கொண்டே ததும்பும் குரலில் இந்து குட்டி கேட்டாள்.

    “இண்டெர்வியூவுக்கு மா”

    “அப்டீன்னா?”

    “அப்டீன்னா என் இந்து குட்டி டெடி பியர்,சாக்லேட் லாம் கேட்டால்ல, அத வாங்குறதுக்கு டா செல்லம்”

    “அப்பொ சீக்கிரமே வாங்கிட்டு வந்துடணும் சரியாப்பா?”

    “சரி செல்லம்”

    அருகிலிருந்த கடையில் இரண்டு கேட்பெரி டைரிமில்க்கை வாங்கிக் கொடுத்து,

    “இத சாப்டு! அப்ப வர்றப்ப ஒனக்கு நெறைய வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

    இந்து சோகத்துடன் வாங்கிக் கொண்டாள்.

    காயத்ரியிடம், “நான் கெளம்புறேன்! கொழந்தைய பத்திரமா பாத்துக்க! சேட்ட பண்ணா அடிக்காத! சாக்லேட் கேட்டா வாங்கித்தா! அழ வெக்காத! நீயும் பத்திரமா இரு!” என்றான்.

    அவளும், “சரிங்க! நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்றாள். அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. அவன் பிரிவு அவளைப் பேச முடியாமல் தான் செய்திருக்கிறது. கண்களின் கண்ணீர் தேங்கியது.

    “பஸ் கெளம்பப் போது! செல்லம் அப்பாக்கு முத்தா குடு” என்று கேட்ட சேகருக்கு சாக்லேட் அப்பிய உதடுகளீன் ஈர முத்தம் கிடைத்தது.

    “நீ வீட்டுக்குப் போ. பனி பொழிய ஆரம்பிக்குது. கொழந்தைக்குச் சளி புடிக்கப்போது” என்று காயத்ரியைக் கிளப்பினான்.

    அவளும், “அப்பாவுக்கு டாட்டா காட்டு” என்று இந்து குட்டியை டாட்டா காட்டச் செய்தாள். சின்ன சாக்லேட் கைகள் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டது.

    “வேலகெடச்சுடனும் கடவுளே! வாங்குற சம்பளத்த வெச்சு இந்து குட்டிக்கு நான் ஆசப்படுற மாதிரி நல்ல வாழ்க்கைய தரணும்” என்று மனப்பிரார்த்தனை செய்துகொண்டே தூங்கப் போனான்.

    வேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து ஏதோ ஒரு வேகத்தடை ஏற்றத்தில் ஏறி இறங்கி அசுரனாய்க் குலுங்கியது.

    தூங்கிக் கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி முன் கம்பியில் முட்டிக் கொண்டனர்.

    சிலர் இடித்த இடத்தில் வீங்கிவிடாமல் இருக்கத் தடவிக் கொண்டிருக்க, சிலர் கடவுளைத் துணைக்கழைக்க, சிலரது தகாத வார்த்தைக் கசையடிகள் ஓட்டுநரைப் பாய்ந்தன.

    சேகருக்கும் தூக்கம் கலைந்தது. பல நிமிட முயற்சிக்குப் பின் தூக்கம் வராமல் உட்கார்ந்தான். சுற்றிலும் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவன் எழுந்து முன்னே சென்றான். ஓட்டுநரும் நடத்துநரும் பேசிக்கொண்டிருந்தனர்.

    “என்னாச்சு தம்பி? என்றார் நடத்துநர்.

    “ஒன்னும் இல்லைங்க! தூக்கம் வரல அதான்! முன்னாடி வந்து ஒட்காரலாமா?”

    “ஒக்காருங்க தம்பி! எம்பேரு முருகன். இவரு கந்தசாமி.”

    “நா சேகர் ணே! சென்னைக்கு வேல விஷயமா போறேன்”

    ஓ… அப்டியா! நல்லது”

    “எத்தன வருஷமா ணே நீங்க வண்டி ஓட்றீங்க?”

    “நாங்க பத்து வர்ஷமா இந்த ரூட்டு தான் தம்பி. நீங்க சென்னைல எங்க வேல பாக்குறீங்க?”

    “இல்ல, வேலைக்கு இண்டர்வியூவைக்கிறாங்க! அதுக்கு போறேன்!”

    “ஓ! இப்ப என்ன பண்ணிட்டிருந்தீங்க?”

    “அப்பாவோட சேர்ந்து வெவசாயம் பார்த்துட்டு இருந்தேன்! வெளச்சல் பெருசா இல்ல, கடன் தான் அதிகமாச்சு, கல்யாணம் ஆகி குழந்த வேற இருக்கு. அவளுக்கு நான் ஆசப்பட்ட மாதிரி நல்ல வாழ்க்கைய அமச்சு தரணும், அதுக்கு நெறைய சம்பாதிக்கணும். அதான் சென்னைக்கு போறேன் ணே”

    நம்மூர்லையே நெறைய வேல இருக்கே தம்பி! நீங்க ஏன் சென்னைக்குப் போகணும்?”

    வேல கெடச்சுது ணே! ஆனா வந்த சம்பளம் குடும்ப செலவுக்கே போய்டுச்சு! கைல பத்து காசு நிக்கல. அதான் சென்னைக்கு போறேன்”

    “அப்ப, வேல கெடச்சா குடும்பத்த சென்னைக்கு கூப்ட்டு போய்டுவீங்க போல?”

    “அவங்களுக்கு வர ஆச தான் ணே! ஆனா அப்பா அம்மாவுக்கு நான் போறதே புடிக்கல. அவங்கள அனுப்ப மாட்டாங்க. வேல கெடச்சா மாசம் ஒருவாட்டி வந்து பாத்துட்டு போக வேண்டியது தான். எல்லாம் எம்பொன்னுக்காக ணே!”

    “பொன்னு மேல ரொம்ப அன்பா இருக்கீங்க”

    “எம் பொன்னுதாங்க எனக்கு எல்லாம். அவன்னா எனக்கு உசுரு”

    பேச்சு சுவாரஸ்யத்தில் நொடிகளை விட நிமிடங்கள் வேகமாகக் கரைந்தன.

    சில மணி நேரங்களுக்குப் பின் பஸ் ஒரு உணவகத்திற்கு முன் நின்றது.

    “பஸ்ஸு பத்தி நிமிஷம் நிக்கும்.. டீ, காஃபி, டிஃபன் சாப்டுறவங்க சாப்ட்டுக்கோங்க. வேற எங்கெயும் இனி நிக்காது” என்று நடத்துநர் அனைவரையும் எழுப்பிவிடக் கத்தினார்.

    “வாங்க தம்பி டீ சாப்டலாம்” என்று சேகரை ஓட்டுநர் அழைத்தார்.

    இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டே,டீ அருந்திக்கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர். சில பேருந்துகள் வந்து நின்றன, சில கிளம்பின. உணவகம் நிறைந்து வழிந்துகொண்டே இருந்தது. குழந்தைகளில் சிலர் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அருந்திய டீக்கு காசு கொடுத்துவிட்டு சேகரும் ஓட்டுநரும் பேருந்தில் ஏறிக் கொண்டார்கள்.

    நடத்துநர் அதன்பின் வந்து ஏறி, “எல்லாரும் பக்கத்து சீட்டுல இருந்த ஆளு இருந்தாங்களான்னு பாத்துக்கங்க” என்றார். “இருக்காங்க, இருக்காங்க” என்று ஆங்காங்கே பதில்களும் தலையாடல்களும் நிகழ்ந்தன.

    “நாளைக்கு காலைல இண்டர்வியூ இருக்கு! நா கொஞ்ச நேரம் தூங்குறேன் ணே” என்று நடத்துநரிடம் விடைபெற்றுச் சென்றான் சேகர். இந்தமுறை எந்தத் தொந்தரவும் இன்றி கொஞ்ச நேரம் நிம்மதியாகக் கண்ணயர்ந்தான்.

    “தம்பி கோயம்பேடு வந்திருச்சுப்பா” என்று சற்றைக்கெல்லாம் நடத்துநர் சேகரை உசுப்பினார். சேகர் பையை எடுத்துக்கொண்டு இறங்க முற்பட்டபோது, “தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க!” என்று ஓட்டுநரின் குரல் அவனை நிறுத்தியது.

    “என்ன ணே”

    “சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. ராத்திரி நீங்க சென்னைக்கு வேல தேடி வந்ததே அதிக சம்பளங் கெடைக்கும். அதவெச்சு ஒங்க பொன்னுக்கு நல்ல வாழ்க்க தரணும்னு சொன்னீங்க. வேல கெடச்சா நீங்க இங்க இருப்பீங்க! ஒங்க குடும்பம் ஊர்ல இருக்கும். இப்ப தான் ஒங்க பொன்னு வளர ஆரம்பிச்சிருக்கா! இப்ப தான் நீங்க அவளோட இருக்க முடியும். இருக்கணும். ஒங்களோட அன்பு அவளுக்குத் தேவ. இப்ப தான் அவ ஒலக்த்த புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருப்பா. அவள வழி நடத்த நீங்க அவ கூட தான் தம்பி இருக்கணும். இத நான் ஏன் சொல்றேன்னா, எனக்கும் பதினேழு வயசுல ஒரு பொன்னு இருக்கா. அவள நான் நல்லா பாத்துக்கணும்னு ராப்பகலா வேல செய்யுறேன். நான் வீட்டுக்குப் போறப்ப அவ தூங்கிருப்பா! தீபாவளி, பொங்கலப்பலாம் கூட அவ கூட கொண்டாடுனது கம்மி தான். அவளுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன். ஆனா அவகிட்ட இருந்து அவளோட சந்தோஷத்தப் பகிர்ந்துக்கவும், துக்கத்துல ஆறுதல் சொல்லவும் என்னால முடியல. என்ன மாதிரி நீங்களும் கஷ்ட்டப்படக் கூடாதுன்னு தான் சொல்றேன் தம்பி! தப்பா நெனச்சுக்காதீங்க” என்று வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சென்றார் ஓட்டுநர்.

    அவன் நெஞ்சை ஊசிகள் தைத்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியே வந்தான். பொம்மைக் கடையைத் தேடினான்.

    அவனது இந்து குட்டிக்கு “டெடி பியர்” வாங்குவதற்கு….

    Share
  • வாத்தியார்

    பேராசிரியர் ம. பரிமளா தேவி

    ஒப்பதவாடி ஒன்றியத்துல இருக்குற நடுநிலைப்பள்ளிக்கு டிரான்ஸ்சர் வாங்கிட்டு வரும்போது அவ்ளோ சந்தோசம் ஜானகி டீச்சருக்கு. எவ்ளோ பெரிய வேலையிலிருந்தாலும் உள்ளூருல வேலைப்பாத்தா மரியாதை இல்லைன்னு சொல்வாங்க.  ஆனா பல வருச கனவு தான் படித்த பள்ளியில வேலைப்பாக்கனும்னு. அந்த ஆசை இப்போதான் நிறைவேறியது.

    வண்டியில போனா பத்து நிமிச்சத்துல போயிரலாம். அப்படி போகாம நடந்து போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. சின்ன வயசுல தான் நடந்து போகும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும். வழியில போகும் போது பூத்திருக்குற ஊமத்தப் பூ குவளைப்பூ எல்லாம் பறிச்சு கையில வைச்சுக்கிட்டு போயிருக்கேன்.  முதல் முதல்ல பள்ளிக்கூடம் போனபோது என்னோட பிறந்த தேதியை வாத்தியார் கேட்டாங்க.

    ஏனோ அம்மாவுக்கு ஞாபகத்துல இல்லை. ஏன் எழுதி வைக்கலையான்னு கேட்டத்துக்கு எரவானத்துல எழுதி வைச்சிருந்தேன் எங்கயோ காணாமப் போயிடுச்சு என்றாள். ஜப்பசி மாசம் நல்ல மழைபெய்ஞ்சுட்டு இருந்துச்சு. அப்போ தான் இவ பொறந்தா சார்ன்னு அம்மா சொன்னாங்க. வாத்தியார் சிரிச்சிட்டு அவரா நவம்பர் பதினாலுன்னு எழுதிட்டாரு. அது போலத்தான் என் வீட்ல இருந்து படிக்கப்போன எல்லாத்துக்கும் வாத்தியார் எழுதினதுதான் பிறந்த தேதி. ஓடை வழியாத்தான் பள்ளிக்கூடத்துக்கு போகனும். மழைக்காலங்களில் நிறைய ஊமத்தப் பூ பூத்திருக்கும்.

    வெள்ளையா நிமிர்ந்து பீப்பீ போல அழகா இருக்கும். அத பார்த்துட்டே போனா அவ்ளோ சந்தோசமா இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு சீக்கரமா போய் பசங்க எல்லாம் கிரவுண்டல வாத்தியார் வர வரைக்கும் விளையாடிட்டு இருப்போம். விளையாட்டு ஆக்கபூர்வமாக எல்லாம் இருக்காது. ஆலமர விழுதை பிடிச்சுத் தொங்கிட்டு இருக்குறது. பச்சை குதிர தாண்டுறது. பட்டாட்டம், கில்லி ஆடுறது, கோலி, பம்பரம்னு விளையாடிட்டு இருப்போம். வாத்தியார் வந்ததும் முதல்ல வேலைக் குடுப்பாரு. எல்லாரும் வாங்க.

     

    கிரவுண்டல இருக்குற குப்பையை எடுக்கன்னு சொல்வாரு. பொம்பள பிள்ளைகள வகுப்பறையை கூட்ட சொல்வாங்க. ஆயம்மா இல்லாத பள்ளிக்கூடம். எங்க வேலைகளை நாங்களே பாத்துகுவோம். மஞ்சுமில் போத்திய கூரையிலும் மரத்தடியிலும் படிச்சோம். இப்போ பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் சுற்றுச்சுவர் எல்லாம் வந்துருச்சு. பள்ளிக்டம் எவ்ளோ மாறிபோச்சு.

    டீச்சா் …சத்தீஷ் என்ன கிள்ளிட்டான்

    பாலு பொய் சொல்றான் டீச்சா்.

    சத்தீஷ் பொய் சொல்றான் டீச்சா்.

    டேய்.. வாங்க ரெண்டு பேரும். போடுங்க தோப்புக்கரணம் ஐம்பது வரைக்கும்.

    இனி இப்படி செய்யமாட்டோம்னு சொல்லிட்டே போடுங்க. ஆறாம் வகுப்பில் நடந்துக்கொண்டிருந்த கூத்தைப் பாத்துட்டே ஏழாம் வகுப்புக்குச் சென்றாள்.

    குட்மானிங் டிச்சா்….

    குட்மானிங்.

    எல்லாரும் அட்டனன்ஸ் சொல்லுங்க.. என்று வருகைப் பதிவு நோட்டை எடுத்து ஒவ்வொரு பெயர்களாக அழைத்தாள்.

    கார்த்திகா.

    உள்ளேன் டீச்சா்.

    தனுஷ்.

    உள்ளேன் டீச்சர்.

    திருப்பதி.

    உள்ளேன் டீச்சா்.

    ராஜா.. ராஜா…

    உள்ளேன் டீச்சா்.

    “அட்டனென்ஸ் சொல்லாம என்ன பண்ணிட்டு இருக்க.. டீச்சா் இவன் என்ன கருப்பான்னு கூப்பிடுறான் டீச்சா்”. “திரு இங்க வா இனி யாரையும் இப்படி கூப்பிடக் கூடாது பேர் சொல்லித்தான் கூப்பிடணும் சரியா”

    ராஜா “டீச்சர் நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதிங்க இளைய தளபதி விஜய் கருப்புத்தான் எனக்கு ஒன்னும் பிராப்பளம் இல்ல” என்றான். எனக்கு சிரிப்பா வந்தது. சினிமா சின்னக்குழந்தைக்கு எப்படி போய்ச் சோ்ந்திருக்குன்னு. இந்தக் காலத்து பசங்க ரொம்ப மாறிட்டாங்கன்னு தெரியுது. அப்போ மூக்கின்னு கூப்பிட்டத்துக்காக மாசக்கணக்கில பேசாம இருந்தது ஞாபத்துக்கு வந்தது. கருப்பி, முட்டக்கண்ணி, குள்ளச்சி, ஓட்டப்பள்ளன், சின்னக்குஞ்சி, மூத்திரவண்டி இப்படி எல்லாம் பேர் சொல்லி கூப்பிட்டு இருக்கோம்.

    இப்ப போல எல்லாம் மாணவர்கள் தப்பு பண்ணா கண்டிக்காம தண்டனை குடுக்காம அப்போ இருந்ததில்லை. சமூக அறிவியல் வாத்தியாருன்னா வகுப்புலே ஒன்னுக்கு போயிருவோம் அவ்ளோ பயம். வகுப்புல சாக்பீஸ் எடுத்து சின்ன வட்டத்தை போட்டுவிடுவார். அந்த வட்டத்துகுள்ள நிக்க சொல்வார். யார் வீட்டுப்பாடத்தை செய்யலையோ அவங்கள வட்டத்துக்குள்ள நிக்கவைச்சு அவங்க கையை தன் கையில பிடிச்சிட்டு சூத்தாம்பட்டையில அடிப்பார். வட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது.  அப்படி அடிக்கும்போது வெளியே வந்துட்டா இன்னும் பலமாக விழும். அவர் வகுப்புல மட்டும் மூணு நாலு மூங்கில் குச்சி உடையும்.  கிளாஸ் லீடா் வீட்ல இருந்து வரும்போது தினமும் மூங்கில் குச்சி கொண்டு வரணும். இல்லைன்னா முதல்ல அவனுக்கு விழும்.  எல்லா டீச்சரும் கையிலத்தான் அடிப்பாங்க. கணக்கு டீச்சர் மேரி மட்டும் ஸ்கேல் வைச்சு கையைத் திருப்ப சொல்லி முட்டில அடிப்பாங்க. இரண்டு மூணு நாளைக்கு கையைத் தூக்கி எந்த வேலையும் செய்ய முடியாது.

    வாத்தியார் எவ்ளோ அடிச்சாலும் ஒருத்தங்களும் வீட்டுக்கு போய் சொல்ல மாட்டோம். பள்ளிக்கூடத்துக்கு பின்னாடி இருந்த டோரியா பூந்தோட்டத்துல எல்லாரும் போய் கூட்டம் போட்டு வாத்தியார் தப்பு பண்ணா நம்மள அடிக்கிறாரு. மத்தப்படி நம்மள எவ்ளோ நல்லா பாத்துகிறாரு. தினமும் மத்தியானம் என்ன நடக்குது தெரியாதா உனக்கு. வகுப்புல உக்காந்து சாப்பிடற எல்லா வாத்தியாரோட டிபன் பாக்சையும் பிள்ளைகளை கழுவச் சொல்றாங்க. அவங்க பையை தூக்கிட்டு போறது. அவங்க வீட்டுக்கு போய் வேலை செய்ய சொல்றது, இத எல்லாம் செஞ்சிட்டு இருந்தோம். அப்ப அவர்தான மத்த டீச்சருங்கிட்ட நமக்காக சண்டைப் போட்டாரு.  மாணவர்கள் உங்க வீட்டு வேலைக்காரர்கள் இல்லை அவங்க படிக்கத் தான் வந்திருக்காங்கன்னு சொல்லி.. கூட்டம் முடிந்தது.

    ஊர்ல டீவியெல்லாம் இல்லை.  பஞ்சாயத்தில மட்டும் தான் இருந்தது. செய்தி மட்டும் போட்டுட்டு நிறுத்திருவாங்க. படம் எல்லாம் பாத்ததே இல்லை. கூலி வேலை பாக்கற அப்பா அம்மா வாழ்க்கையை நடத்துறத்துக்கு ரொம்ப கஷ்டபட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை படத்துக்கு கூட்டிட்டு போகணும்னு ஆணை வந்திருந்தது. எல்லா பிள்ளைகளையும் தன் சொந்த செலவுல வாத்தியார் கூட்டிட்டு போனாங்க.

    அப்போ பார்த்த படங்கள் தான் அனகோண்டா, ஜீராசிக் பார்க், டைட்டானிக் படம் எல்லாம். அவர் இல்லாட்டி சினிமா எப்படி இருக்கும்னு கூட தெரியாம போயிருக்கும். அறிவியல் கண்காட்சி, கலைவிழான்னு எல்லா ஊருக்கும் கூட்டிட்டு அலைஞ்சி திரிஞ்சவர். மதியம் சாப்பிட போகும்போது   ஒரு திருக்குறள் சொல்லிட்ட தான் சாப்பிடனும். வாத்தியார் எங்ககூடவே நின்னுட்டு இருப்பார். ரொம்ப அன்பாக நடந்து கொண்டு இருந்தார். என்னவோ தெரியல பள்ளிக்கூடத்துக்கு வாத்தியார் வரல. என்ன நடந்ததுன்னு தெரியல. மத்தவங்கள கேட்கவும் பயமா இருந்தது. எல்லா வாத்தியாரும் அவரப் பத்தி தப்பா பேசிட்டு இருந்தாங்க.

    பள்ளிக்கூடத்துல இருந்து விட்டு வந்த இந்த பதினைஞ்சு வருசத்துல ஒரு முறைக்கூட வாத்தியார பாக்கல. ஆனா அடிக்கடி நினைச்சுட்டு இருப்பேன். ஏனோ ஒரு தயக்கம் என்னன்னு சொல்லத் தெரியல. அவரைப் பாக்கும் போது எப்பவும் வாத்தியாரா நான் பாத்ததே இல்லை. நல்ல தந்தையைப் போல் என் படிப்பில் அவ்வளவு அக்கறையோடு இருந்தவர். முகம் வாடி இருந்தா அவருக்கு தாங்கிக்கவே முடியாது.

    என்ன ஆச்சு ஜானகி உடம்புக்கு முடியலையா. மாத்திரை வாங்கிவரவான்னு கேட்பார். நோட்ஸ் வாங்க வீட்டுல பணம் கொடுக்கலங்கற தெரிஞ்சதும் அவரோட நோட்ஸ் எடுத்துக் கொடுத்திட்டாரு. பரிட்சை வரை படிச்சிட்டு திரும்ப கொடுத்திருன்னு சொன்னதும் நானும் வாங்கிப் படிச்சசேன். கல்லூரியில என்னத்துறை எனனோட எதிர்காலத்திற்கு நல்லா இருக்குன்னு அப்பாவிடம் சொல்லிட்டு போனதா பின்னாடித்தான் எனக்கே தெரிஞ்சது.

    என் வாழ்க்கையில என் வாழ்க்கையில முக்கியமான தருணங்களில் அவர் தான் முடிவு பண்ணியிருக்காருங்கறதும் எனக்கு தெரியில. ஒரு நாள் திடீா்ன்னு என் மொபைல்க்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “அம்மா ஜானகி நல்லா இருக்கியாமா?.. ம்ம்.. நீங்க யாருன்னு…. நான் தாம்மா வாத்தியாரு மறந்துட்டியா? சந்தையில அப்பாவ பாத்தேன் மா. அவருகிட்ட உன் நம்பர வாங்கினேன். நேரம் கிடைச்சா பேசுமான்னு வைச்சிட்டாரு..” எனக்கு கொஞ்ச நேரம் தலைக்கால் புரியல. இத்தனை வருசம் கழிச்சும் என்ன ஞாபகத்துல வைச்சி இருக்காருன்னு.

    வாத்தியார் எங்க அப்பா கிட்ட பொன்னு நல்லா படிக்கறா ஏன் அவள இங்கலீஸ் மீடீயத்துல போடக்ககூடாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. எங்க அப்பா மேயுற மாடு எங்க மேய்ஞ்சா என்ன சார்ன்னு சொல்லிட்டாரு. எங்க அப்பா மேல கோப கோபமா வந்துச்சு . நம்மள வாத்தியாரு முன்னாடி மாடுன்னு சொல்லிட்டாரேன்னு.

    அன்பரசு என் கூட படிச்ச பையன். இன்னிக்கு பெரிய வேலையில இருக்கறதுக்கு என் வாத்தியார் தான் காரணம். ஒரு வாரமா பள்ளிக்கூடத்துக்கு வராத அன்பரச தேடிட்டு வாத்தியார் அவன் வீட்டுக்கே போயிட்டாரு. அங்க போன அப்ப தான் அவன் நிலைமை என்னனு வாத்தியாருக்கு தெரிஞ்சது. நார்மில்லுக்கு வேலைக்கு போயிட்டு வரும்போது வேகமா வந்த கார் மோதி விபத்துல அவனோட அப்பா இறந்துப்போனது தெரி்ந்தது.

    அவங்க அம்மா இனி எப்படி இவன பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியும். எனக்கு இருந்த ஓரே ஆதரவு இவங்க அப்பா தான். மூணு பிள்ளைகளை நான் ஒருத்தி எப்படி கரையேத்த முடியும்னு அழுதாங்க. வாத்தியாருதான் அவங்கள சமாதானப்படுத்தி அன்பரச தன் வீட்ல இருந்து படிக்க வைச்சு பெரிய ஆளாக்கிவிட்டார். இன்னிக்கு அன்பரசு அரசாங்க வேலையில இருக்கறதுக்கு அவர்தான் காரணம்.

    பள்ளிக்கூடத்துல யாராச்சும் சாப்பிடாம இருந்தா தன் சாப்பாட்ட அப்படியே எடுத்துக் கொடுத்துடுவார். டீ.வி.எஸ். பிப்டில தான் பள்ளிக்கூடத்துக்கு வருவார். வண்டில வரும்போதும் போகும்போதும் இரண்டு மூணு பிள்ளைங்க கூட்டிட்டு போய் அவங்க வீட்ல விட்டுத்தான் போவார்.

    வாத்தியாருக்கு கல்யாணம் ஆகி பதினைஞ்சு வருசமாகியும் குழந்தையே இல்லை. அவர் வகுப்பில் இருக்கிற அத்தனை குழந்தைகளையும் தன் குழந்தையாகவே பாத்துக்கொண்டவர். பள்ளிக்கூடத்துல ஜானகியை வகுப்புல மாணவர்கள் முன்பு கன்னத்தை கிள்ளி செல்லமா உன்னோட பிறந்த நாளுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கன்னு மகிழ்ச்சியா பேசிட்டு இருந்தத.. மேரி டீச்சா் பாத்துட்டு போய் தலைமையாசிரியிடம் ஆசிரியர் மேல் பாலியல் ரீதியா புகார் சொன்னதும் அதனால மனம் உடைஞ்சு வாத்தியார் வேலையை விட்டு நின்னது யாருக்கும் தெரியாமல் போனது.

    Share
  • மகனின் பிம்பம் – சிறுகதை

    -முனைவர் நா. தீபா சரவணன்

    மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன்

    மகனின் பிம்பம்

    தன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும் ஒரு முழு இரவிற்கும் பின் விடியற்காலையில் பிளாட்ஃபாமில் வந்திறங்கினார் பெரியவர். இரயில்வே அறிவிப்புகளில் கேட்டது போலவே இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. பையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் மகன் ஒத்துக்கொள்ளவில்லை. அவருடைய இரண்டு ஜோடி துணிகளும் வடுமாங்காய் ஊறுகாயும் பலாக்காய் வறுத்ததும் பையில் இருந்தன. அதிகமான பாரம் ஒன்றுமில்லை.

    மகன் அம்மாவின் உடல் நலம் விசாரித்தான். எப்பொழுதும் உள்ள தலைச்சுற்றல் இப்போதும் அடிக்கடி தொந்தரவு செய்கிறது என்பதைத் தவிர அம்மாவுக்கு வேறு பிரச்சனை ஒன்றுமில்லை. ஒரு பசுமாடு இருக்கிறது. அதற்கு உணவு கொடுப்பது, நேரம் தவறாமல் பால் கறப்பது. இரண்டு டம்ளர் பால் பக்கத்து வீட்டுக்கு விலைக்குக் கொடுக்கப்படுகிறது. மாலை கோயிலுக்குப் போகும் பழக்கமும் தொடர்கிறது. மகன் வேறு ஏதாவது விசேஷம் இருக்கிறதா எனக் கேட்கவில்லை. பிளாட்ஃபோமில் நெரிசல் வழியாக அவனும் அப்பாவும் வெளியில் நிற்கும் காருக்கு அருகில் நடந்தனர்.

    புதுமை மணம் மாறாத கார். எப்படி இருக்குன்னு மகன் கேட்டான். அப்பாவுக்கு வண்டிகளைப் பற்றி அவ்வளவு தெரியாது இருந்தாலும் முழுவதுமாக ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னார்.

    “நல்லா இருக்கு”

    “இது புதிய மாடல்…”

    டோர் திறப்பதற்கும், கண்ணாடிகளைத் தாழ்த்துவதற்கும் ரிமோட் கன்ட்ரோலில் விரல்அமர்த்தினால் போதும். என்ன வில இருக்குமென்று அவர் கேட்கவில்லை. மகன் காரை ஸ்டார்ட் செய்தான். பார்க் செய்யப்பட்ட பல வண்டிகளிலிருந்து அது பெருமையோடு வெளியிலிறங்கியது.

    சிறிய மதில்களும் கம்பீரமான நுழைவு வாயிலும் சல்யூட் செய்கின்ற இளைஞனும் உள்ள வசிப்பிடத்தின் முன்னால் பயணம் முடிவடைந்தது.

    இதை விடக் கொஞ்சம் வசதியான ஒரு ஃபிளாட்டிற்கு இருப்பிடத்தை மாற்றப் போகிறேன் என்று மகன் ஃபோனில் கூறியிருந்தான். அப்பாவிற்கு அந்த ஞாபகம் வந்தது. மகன் தனியாக இல்லை. ஒரு நண்பனும் உடன் இருந்தான்.

    ஃபிளாட்டில் எயர்கண்டிஷன் இருக்கு. தரை முழுவதும் இத்தாலியன் மார்பிளின் வெண்மை. சாக்லெட் நிறத்தில் உள்ள இருக்கைகள் பெரிய டெலிவிஷன் செட். இலைகள் படர்ந்த இன்டோர் செடிகள். நீல நிறத் திரைச் சீலைகள்.

    “வாடகை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நல்ல கம்ஃபர்ட்டபள். அப்பாவுக்கு என்ன தோணுது!” மகன் கேட்டான்.

    அவருக்குக் குளிரத் தொடங்கியிருந்தது.

    ஒரு படுக்கையறையின் கதவு சாத்தியிருந்தது. நண்பன் தூங்கிக் கொண்டிருந்தான். அறிமுகப்படுத்துவதை அப்பறம் பாக்கலாம். இனியும் நேரமிருக்கே.

    “உனக்கு இன்னக்கி வேலக்குப் போகணுமா?”. கைகால் கழுவி வந்து மகனிடம் கேட்டார்.

    “வேண்டாம் லீவு சொல்லிருக்கேன். நாம சிட்டி முழுக்க ஒண்ணு சுத்திப் பாக்கலாம்”

    அவர் மகனின் கருத்தை வரவேற்றார். காலை டிபன், பயணம், மதிய உணவு, ஓய்வு.
    மாலை இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள பிரசித்தமான பீச்சிற்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காட்சிகளுக்கிடையில் நடைப்பயணம். மணல் வீடுகள் கட்டி விளையாடும் குழந்தைகள். கடற்காற்றின் பயங்கர ஓசை. நெடு நீளமாக பரந்து கிடக்கும் அலைகள். அந்தி மேகங்கள்.

    “டின்னர் முடிச்சிட்டுப் போலாம்” மகன் வழியில் வைத்துக் கூறினான். சாதாரணமாக இரவு உணவு, கஞ்சிதான். சேர்த்துச் சாப்பிடப் புதினாவும் மல்லியும் சேர்த்து அரைத்த தேங்காய்த் துவையல். பிரஷருக்குத் தினமும் மாத்திரை சாப்பிடுவதால் குறைந்த அளவு உப்பு போட்ட கூட்டு ஏதாவது இருக்கும்.

    அவர் மகனுடன் ஒரு ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருந்தார். அம்மாவுக்குத் தெரிய வேண்டாம். மகன் அவனுக்காக விஸ்கி ஆர்டர் செய்திருந்தான். அவனுக்குக் குளிர்ந்த பீரும், மெனுகார்ட் பார்த்து எவையெல்லாம் வேண்டுமென்று வெயிட்டரிடம் அவன் தான் கூறினான்.

    “எதுக்கு இதெல்லாம்?” …………….. அவர் சந்தேகப்பட்டார்.

    “அப்பாவ கொஞ்சம் கவனிக்க வாய்ப்பு கெடத்ச்சுதே” மகன் பீர் டம்ளரை உயர்த்திக் கொண்டு சொன்னான்.

    அனேகம் அனேகம் பெரிய விளக்குகள் எரியும் நகரம். காரில் அவற்றிற்கிடையில் கடந்து போகவே மகனைப் பார்த்தார். காரின் ஸ்டீரியோவிலிருந்து மென்மையாக ஒலிக்கும் பாடலுக்கேற்றவாறு அவனுடைய கைவிரல்கள் ஸ்டியரிங் வீலின் மீது தாளம் போடுவதை அவர் பார்த்தார்.

    சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. வந்ததே அதற்குத்தான். இப்போது வேண்டாம் என்று நினைத்தார்.

    நாளைக்குப் பேசலாம்.

    அவர் காரினுள் நிலவும் மிதமான குளிரை அனுபவித்தார். கண் இமைகள் பாரமாகத் தெரிந்தன.

    “அரேயார்…………? அப்பா எதுக்கு வந்திருக்கார்?” மகன் நண்பனின் படுக்கை அறையிலிருந்தான். பக்கத்து அறையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

    “எம்.பி.ஏ படிச்சது பாங்கிலிருநது மூணு லட்சம் ரூபா லோன் போட்டுத் தானே! மேனேஜர் கேட்டிருப்பாரு. வேல கெடச்சு நாலஞ்சு மாசமாச்சில்லே?”

    “அப்புறம்? அப்பா இன்னக்கு அத ஞாபகப்படுத்தினாரா?”

    “இல்ல அத நெனக்கவே அப்பாவுக்கு நான் இடந்தரல.”

    “நாளைக்கும் இப்படி தானிருக்கும்.”

    “திரும்பிப் போகும் போதோ”

    “அம்மா கேப்பாங்க. அப்பா அத மறந்திட்டேன்னு சொல்லுவாரு”

    “பேங்க் ஜாம்யம் போட்ட வங்ககிட்டருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்காதா?”

    “சந்தேகமே இல்லை கண்டிப்பா எடுப்பாங்க”

    “யார் அந்த துரதிர்ஷ்டசாலி”

    “அப்பாவே தான்”

    “பாப்ரே…”

    *******

    மொழிபெயர்ப்பாளர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரியில் முனைவர் இரா.மணிமேகலை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகள் 100, மலையாளத்தில் கேரள அரசின் சாகித்ய அகாதமி விருதுபெற்ற படைப்பாளர் சி.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் 100 சிறுகதைகள் ஆகியவற்றை ஆய்வு எல்லையாகக் கொண்டு ஆய்வு செய்தவர்.

    “ஒப்பியல் நோக்கில் தமிழ் மலையாள சிறுகதைகள் (நாஞ்சில் நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)” என்னும் தலைப்பிலான இவரது ஆய்வின் அறிமுகத்தைக் காண இங்கே சொடுக்குங்கள் – http://www.vallamai.com/?p=89703

    Share
  • சாப்பாடு இலவசம் !!

    க. பாலசுப்ரமணியன்

    அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சுமார் நூறுபேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தின் வாயிலில் இருந்த ஒரு பலகையில் “சாப்பாடு இலவசம்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே சாப்பாட்டு நேரம் மதியம் 1 மணி முதல் 2.30 வரை’ என்றும் எழுதப்பட்டிருந்தது. பக்கத்தில் போவோர் வருவோர் தங்கள் கடிகாரங்களை ஒரு முறை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இன்னும் சற்று நேரம் கழித்து வரலாமே’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் அங்கிருந்து நகர்ந்தார்.பகல் ஒரு மணிக்கு அந்தக் கட்டிடத்தின் வெளிவாயில் மூடப்பட்டு அருகே உள்ளே ஒரு சிறிய வாயில் அருகே இரண்டு பேர்கள் நாற்காலி மேஜை போட்டுக்கொண்டு அமர்ந்தனர். ஒருவர் உள்ளே நுழைய முயன்ற போது அவரை நிறுத்தி “எங்கே போறீங்க” என்றனர். “சாப்பாட்டுக்காக உள்ளே ” என்றார் அவர்.

    “நுழைவுக் கட்டணம் இருபது ரூபாய் செலுத்திவிட்டு உள்ளே போங்கள்” என்கிறார். “சாப்பாடு இலவசம் தாங்க” ஆனால் அந்த இலவசச் சாப்பாட்டு மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக் கட்டணம் இருபது ரூபாய்.”

    சற்றே வியந்த அந்த மனிதர் நினைத்தார் “என்ன அநியாயமாக இருக்கு” என்று முனகிக்கொண்டே நினைத்தார் “சரி போனால் போகுது. வெளியிலே ஹோட்டல்லே சாப்பிட்டால் எண்பது ரூபாய் ஆகுது. இங்கே இருபதோடு முடியுதே.”. தன் மனதைத் தேற்றிக்கொண்டு அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

    அந்த மண்டபத்தில் இரண்டு வரிசைகள் அமர்வதற்காக நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருந்தன. அருகில் இரண்டு வரிசைகள் கீழே அமர்ந்து உண்பதற்காக பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன அதைத் தொடர்ந்து இரண்டு வரிசைகள் பாய்கள் போடப்படாமல் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவர் ஒரு நாற்காலியில் அமர முயன்றபோது அங்கிருந்த ஒரு சிப்பந்தி “அய்யா. டிக்கெட் வாங்கிட்டீங்களா” என்று கேட்டார். ” வாங்கிட்டேனே ” என்று சொன்னவாறு தனது அனுமதிச் சீட்டைக் காண்பித்தார். ” இது இல்லீங்க..” நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட டிக்கெட் வாங்கிட்டிங்களா” எனக் கேட்டார். ” நாற்காலிக்கு டிக்கெட்டா ” என்று என்று திகைத்தவாறே வினவினார். உடனே அந்த சிப்பந்தி ‘ஆமாங்க…நாற்காலிக்கு பத்து ரூபாய் டிக்கெட். பாய்க்கு ஐந்து ரூபாய் டிக்கெட். தரையில் உட்கார்ந்து சாப்பிட இரண்டு ரூபாய் டிக்கெட்..”

    “என்னங்க இது. வெளியிலே சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கு.. நீங்கள் உள்ளே நுழைய டிக்கெட் வாங்குறீங்க . உட்காருகின்ற இடத்துக்கு டிக்கெட் வாங்குகிறீங்க” எனச் சிறிது கோபத்துடன் கேட்டார்.. “ஆமாங்க சாப்பாடு உண்மையிலேயே இலவசம் தாங்க. மத்தது எல்லாத்துக்கும் கட்டணம் உண்டு. முணுமுணுத்துக்கொண்டே தன்னுடைய பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த மேசை மீது வைத்துவிட்டு அமர்ந்தார்.

    சிறிது நேரத்தில் இன்னொரு சிப்பந்தி இவரை அணுகி “அய்யா இலை வேணுங்களா? ” எனக் கேட்டார். “பின்னே எப்படி.. இலையில்லாமல் எப்படி சாப்பிடறது?” என்றவுடன் ” அய்யா.. இலை ஐந்து ரூபாய்.”

    உள்ளே நுழைந்த அன்பரால் என்ன செய்வதென்றே புரியவில்லை. வேண்டா வெறுப்பாக ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து இலையைக் கையில் வாங்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து வந்து சிப்பந்தி “அய்யா. தண்ணி வேணுங்களா.” எனக்கேட்க அவரிடம் வேறு ஏதும் கேட்காமல் “இது எவ்வளவு” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டார். “பாட்டில் தண்ணி இருபது ரூபாய். டம்ளரிலே தண்ணி வேணுமென்றால் டம்ளர் ரெண்டு ரூபாய் .. தண்ணி மூணு ரூபாய். ” அவர் பையில் இருந்த பணம் கரைந்து கொண்டிருந்தது. தான் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் மனதை உறுத்தியது.

    உடனே இலவசச் சாப்பாடு இலையில் விழுந்தது. அதுவும் அளவுச் சாப்பாடுதான். “சார், ரெண்டாவது தடவை பொரியல் கூட்டு என்று கேட்கக்கூடாது. ஒரு முறைதான் போடுவோம்” என்று சொல்லிக்கொண்டே அந்த சிப்பந்தி பந்தியில் முன்னேறினார்.

    பந்தியில் இருந்த இன்னொரு நபர் “என்னங்க… சாம்பாரில் உப்பே இல்லீங்களே” என்கிறார். அதைப் பரிமாறிக் கொண்டிருந்தவர் “எங்களுக்கு எப்படீங்க உங்களுக்கு உப்பு வேணுமா வேண்டாமா என்று தெரியும். வேணுமென்றால் ரெண்டு ரூபாய் கொடுத்து உப்பு வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள்.:”என்றார்

    உடனே அந்தப் பந்தியில் இருந்தவர்கள் அனைவருக்கும் அடக்க முடியாத கோபம் வந்தது. அவர்கள் எழுந்து நின்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டனர். “என்ன ஏமாற்று வேலை இது.. வெளியிலே இலவசச் சாப்பிடு எனப் பலகை வைத்துவிட்டு ஒவ்வொன்றிற்கும் காசு வாங்குகின்றனர். மொத்தத்தில் கூட்டிப் பாரத்தால் வெளியே ஒரு நல்ல உணவகத்தில் சாப்பிடும் கட்டணத்தை விட இது அதிகமாக இருக்கிறதே.” கொந்தளிப்பு அதிகமானது.. உடனே வண்ண உடைகளுடன்  டையும் அணிந்திருந்த மேலதிகாரி அங்கே வந்தார்.

    “அமைதி… அமைதி.. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாங்கள் எதுவும் தவறாகச் செய்யவில்லையே.. சாப்பாடு இலவசம் என்று எழுத்து மூலமாக அறிவித்தோம். அதை நாங்கள் நிறைவேற்றுகின்றோம். சட்டப்படி நாங்கள் செய்தது உண்மையானது. நேர்மையானது…”

    “அய்யா.. நான் சாப்பிட அமரவே இல்லை. எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் கட்டிய பணத்தை மட்டும் திருப்பிக் கொடுங்கள்”

    “தாராளமாக. ஆனால் ஒரு முறை டிக்கெட் வாங்கிவிட்டால் அதில் தொண்ணுறு விழுக்காடு சேவைக் கட்டணமாக கழித்துக்கொண்டு மீதியைத் தான் தருவோம்.”

    அந்த அன்பர் மயங்கி விழுந்தார்..

    கூட்டம் சற்றே கலைந்து வரும் தருவாயில் ஒருவர் வாசலில் இருந்த சிப்பந்தியிடம் சொன்னார். “நல்ல வியாபாராமய்யா .. இலவசமென்று சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றும் வேலை.. எங்கேதான் கத்துக்கிட்டாங்களோ.”

    வெளியே அமர்ந்து வசூலித்துக்கொண்டிருந்தவர் சொன்னார். “அய்யா.. இந்த அமைப்பை நடத்தக்கூடிய ஆறு பேர் போன மாதம் வரைக்கும் ஒரு விமானக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே ஆட்குறைப்பு ஏற்பட்டு வெளியே வந்தவுடன் அதே வழிமுறைகளை வைத்து இந்த வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்…”

    காதில் விழுந்ததைச் சரியாகக் கேட்க முடியாதவர்க்கு மேலே சென்று கொண்டிருந்த ஒரு நீல வண்ண விமானத்தின் சத்தம் காதை அடைத்தது. தலையை உயர்த்தி விமானத்தை நோக்கியவாறு “அய்யோ.. வேணாமப்பா.. அதை பார்ப்பதற்கு வேறே காசு வசூலிக்கப் போறாங்க…” என்று சொல்லிக்கொண்டே மேலே நடந்தார்.

    Share
  • வாலாட்டிச் சென்ற கருங்குருவி

    -முனைவர் ஆ. சந்திரன்

    கருங்குருவியின் வால் மேலும் கீழும் அசைந்துகொண்டிருப்பதை வறட்டுப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த தாடிக்காரன். அவனுக்குப் பித்து பிடித்திருப்பதாக அவ்வூர் மக்கள் திடமாக நம்பினார்கள். அதனால் அவனுக்கு அப்பெயரே நிலைத்துப் போனது; பித்தன். ஆனால் அவனுடைய பெயர் மாணிக்கம். பெயருக்கு ஏற்பத்தான் அவனும் இருந்தான் என்பது தனிக்கதை.

    ஊர்மக்களால் பித்தன் என்றும் பிச்சைக்காரன் என்று அழைக்கப்பட்ட மாணிக்கம் பாழடைந்த அந்த இரும்புக் கேட்டின் மேல் மெல்ல அடியெடுத்து வைத்து பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்த கருங்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    கீச்… கீச்… என்ற குருவியின் ஓசையைக் காதில்வாங்கிய அவனுடைய மனம் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருந்தது.

    காட்டூரில் ரயில் பயணத்திற்கான வெள்ளோட்டம் அப்பொழுதுதான் முதன்முறையாக நடந்தது. புகையைக் கக்கிக்கொண்டு சீரான வேகத்தில் ரயில் அந்த ஊரைநோக்கி வந்துகொண்டிருந்தது. வயிறுமுட்டத் தின்ற சாரைப்பாம்பாய் வளைந்து நெளிந்து மெதுவாக  நடைமேடையில் நுழைந்து நின்றது. ரயில்வே ஊழியர்கள் ஒன்றுகூடி ரயிலுக்குக் கிடாய்வெட்டி ஆரத்தியெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் பக்தி தலைக்கேறியவனாய்க் காணப்பட்டான்.

    ஊரே அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதிசயமான அந்தக் காட்சியை மக்களிடம் உதிர்த்துவிட்டு மெல்ல ரயில் அங்கிருந்து புறப்பட்டுப் போனது.

    ரயில்போன சிறிது நேரத்தில், தண்டவாளத்தின் இரு மருங்கிலும் தலைகவிழ்ந்து நின்ற நெல்மணிகள் நிறைந்த வயலுக்குள் கல்லெறிந்த தேன் கூட்டிலிருந்து பறந்து செல்லும் தேனீக்களாய்ப் புகுந்தனர் வேடிக்கை பார்க்கக் கூடியவர்கள். வயல்வெளிக்குள் சென்ற ரயிலின் பிம்பங்கள் மறைய வாரங்கள் பல ஆயின.

    அதன் பிறகு காட்டூர் ரயில் நிலையத்தைத் தினமும் பல ரயில்கள் கடந்து சென்றன. என்றாலும், மக்கள் எவ்வித மாற்றமுமின்றி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

    அப்போது….மணிக்கம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அன்றிரவு வானில் ஒரே நேர்கோட்டில் வரிசையாக இருந்த மூன்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அழகிய அக்காட்சியை அவன் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வருகிறான். அதற்குமுன் எத்தனையோ முறை நட்சத்திரங்களைப் பார்த்தபோதும் இல்லாத ஒரு வியப்பு அவனுக்கு அன்று தோன்றியது. அது புதுமையாக இருந்தது அவனுக்கு. எண்ணிறந்த நட்சத்திரங்களின் நடுவே வரிசையாக சம அளவில் இருக்கும் அந்தக் காட்சி அவனுடைய மனதில் வடுவாக நிலைத்துப் போனது.

    அவன் வானத்து நட்சத்திரங்களை எண்ணத்தொடங்கிய சமயத்தில் அவனுடைய வயது சிறுவர்களில் சிலர் கல்லை வரிசையாக அடுக்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் சிறுசிறு செடிகளைப் பிடுங்கி சிறிய குழிகளை நோண்டி அதில் நட்டு வளர்க்கும் வேலையில் மூழ்கியிருந்தார்கள். இன்னும் சிலர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நடந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குச் சத்தமாகக் கத்திப் பேசுவதற்குப் பிடித்திருந்தது. எனவே அவனுடன் விளையாட யாருக்கும் பிடிக்காமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. அதைப் பற்றி அவன் ஒன்றும் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

    ஒரு நாள் அப்பாவுடன் வயலுக்கு நீர்பாய்ச்சச் சென்றிருந்த மாணிக்கம் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

    கருமேகங்கள் வானில் வேமாகச் சென்று கொண்டிருந்தன. நீரைச் சுமந்துகொண்டிருந்த அவற்றைப் பார்த்தவன் தனக்குப் பழக்கமான ஆடு, மாடு, அம்மா, முறுக்குமீசை வைத்திருந்த அப்பா, தங்கச்சிப் பாப்பா, கருவுற்றிருந்த சித்தி என ஒப்பிட்டுக் கொண்டிருந்தான்.

    நீரின் சுமையைப் பொறுக்க முடியாத மேகத்துண்டுகள் சில அவனுடைய ஒப்பனையில் மாட்டாமல் தப்பி ஓடிக்கொண்டிருந்தன. அவற்றினுடன் போட்டியிடும் விதமாக வயலில் இருந்து பூச்சிகள் படையெடுக்க ஆரம்பித்தன.

    அவ்வாறு புறப்பட்ட தும்பிகளுள் ஒன்று நெற்றியில் மோதி அவனுடைய கவனத்தைச் சிதைத்தது.

    அப்பூச்சியைப் பிடித்து விளையாட அரம்பித்தான். அதுவும் அவனுடைய விரல்களின் மேல் நடனம் பழக ஆசைப்படுவதுபோல் நடந்துகொண்டது.

    சிறிது நேரத்தில் அவனை நோக்கி ஏராளமான பூச்சிகள் படையெடுத்தன. ஒரு கட்டத்தில் சூறாவளியில் சிக்குண்ட இரும்புத் தூணாய்ப் பூச்சிகளுக்குள் நின்றான் அவன்.

    “ஏய் மாணிக்கம்! மழைவரும் போல் இருக்கு”  என்று சற்றுத் தொலைவில் இருந்த தன் மகனை அழைத்தவாறே வெண்டைக்காய்த் தோட்டத்திற்குள் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் நீரின் மடையை நெல் வயலுக்குள் திருப்பிவிட்டு மோட்டாரை நீறுத்த ஓடினான் மாணிக்கத்தின் அப்பா வேலாயுதம். அதற்குள் வானம் சிந்திய நீர்த்துளிகள் அவனை முழுமையான நீராட்டின.

    தன்னுடைய தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது வெள்ள நீர் முழங்காலைக் கடந்து போனதால் தந்தையின் தோள்மீது அமர்ந்து வீட்டிற்குப் போனான்.

    தன்னுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் எப்போது உறங்கினான் என்று தெரியாது. கிழக்கில் உதித்த கதிரவனின் கரங்கள் அவனுடைய கண்களைத் தழுவ உறக்கம் அவனை விட்டு விடைபெற்றுச் சென்றது.

    அவன் எழுந்த போது அம்மா மாட்டிற்குத் தண்ணீர் வைத்துக்கொண்டிருந்தாள். அப்பா அப்போது வயலில் இருப்பார் என்று தெரியும்; அதனால் அவன் வேகமாக நடந்து செல்லும் தொலைவிலிருந்த வயலை நோக்கி நடந்தான். இல்லை… இல்லை… ஓடினான்.

    நேற்றுப் பெய்த மழையால் புத்துணர்ச்சி பெற்ற நெல்மணிகள் அவனுடைய கால்களை வருடி மகிழ்ந்தன. இல்லை…இல்லை… அவன் அவற்றை வருடி மகிழ்ந்தான்.

    நெல்மணிகளின் புன்னகையுடன் பள்ளியை அடைந்தான்.

    ஆங்கில ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். ”ரெயின் ரெயின் கோ அவே”  என்ற பாடலைப் பாடியமைக்காக அவனுக்கு பள்ளியில் நல்ல பெயர் உண்டானது. பல முறை அப்பாடலைப் பாடுமாறு பள்ளியில் கேட்டதுண்டு. அவனும் மகிழ்ச்சியாகப் பாடியுள்ளான்.

    அவன் வளர வளர வயலோடு சேர்த்து வானத்து நட்சத்திரங்களுடனும் நெருக்கமானான். மனிதர்களுடன் பழகுவதைவிட அதிக நேரம் அவனுடைய நெருக்கம் அதிகமாக இருந்தது. வயலில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதால் அவனுக்கு நேரம் போவதே தெரிவதில்லை. சில நேரம் அதனால் கல்லூரிக்குத் தாமதமாகப் போனதுண்டு.

    அப்படிப் போகும்போது அவனை ஆசிரியர்கள் மட்டுமன்றி சக மாணவர்களும் கிண்டல் செய்வதுண்டு. அப்படி ஒரு நாள் அவனது வரவால் தன்னுடைய பாடம் தடைப்படுவதாகக் கோபங்கொண்ட ஆசிரியர், “ஏன் லேட்”….  என்றார் சத்தமாக.

    “வயல்ல கொஞ்சம் வேலையிருந்தது…… அதனால…… ” என்று மாணிக்கம் தயங்கியவாரே மெதுவாகச் சொல்ல…..

    சரி… சரி…  வா! வா! என்றவர், தன் கடமையைத் கடுகடுப்புடன் தொடர்ந்தார்.

    மதியம் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவச் சென்றபோது அவனுக்கும் ரமேஷ்க்கும் சின்னதாக ஒரு கைகலப்பு. பிரச்சனை ஆசிரியர் வரை போனது.

    இருவரும் விசாரணை வளையத்தில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

    ரமேஷ் தரப்பில் அவன்தான் என்னை முதலில் அடித்தான் என்று சொல்லப்பட்டதால் ஏன் அடித்தாய் என்ற கேள்வி மாணிக்கத்தின் மீது பெரிதாக எழுந்தது.

    “காட்டுவாசின்னு என்னைத் திட்டினான் அதனால் தான் அவனை அடித்தேன்னு” நடந்ததைச் சொல்லி பூமியைப் பார்த்து நின்றான் மாணிக்கம்.

    அந்த நிகழ்விற்குப் பிறகு அவன் தலை வானத்தை நோக்கியே நின்றது எப்போதும்.

    அதற்குக் காரணம் அவனுடை கண் பார்வைக்கு அன்று புதிய ஒளி கிடைத்தது. ஆசிரியர் வழியில்.

    மனித இனத்தின் உன்னதத்தைப் பற்றிய அந்த விளக்கம் அவனுடை மனதில் பசுமையாய்க் குடிகொண்டது.

    தன்னுடைய ஊரின் சிறப்பைப் பற்றி அறிந்துகொள்ள அவன் அன்று தன்னுடைய பயணத்தைத் தொடங்கினான்.

    காட்டில் வாழும் யானை, புலி, சிங்கம், ஓநாய்களைப் பற்றி அறிந்திருந்தவனுக்கு அவனுடைய காட்டூரின் வரலாறும் அதன் அருமையும் விளங்கியது.

    தன்னுடைய சிறப்பை மனதில் சுமந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தவனுடைய பார்வையில் தண்டவாளத்தின் இருபுறமும் ஆங்காங்கே புதிதாக முளைத்திருந்த வீடுகள், ஊரின் மையப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய உரக்கடை முதலியன பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

    பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்துசென்றவன் வழக்கமாகக் குடிக்கும் பன்னீர் சோடாவைக் குடிக்க பெட்டிக் கடையை நோக்கி போனான். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்து வந்த பெட்டிக்கடை அந்த இடத்தில் இல்லை. அதற்குச் சற்றுத் தள்ளி பெரிய குளிர்பானக் கடை ஒன்று புதிதாய் முளைத்திருந்தது. பளபளப்பான டிஜிட்டல் பேனருடன் இருந்த அந்தக் கடையை உற்றுப்பார்த்தவனுக்குக்  காணாமல்போன பெட்டிக்கடை மனக் கண்ணில்  தெளிவாய்த் தெரிந்தது.

    அதைப்பற்றி ஊரில் உள்ள மக்களிடம் கூறினான். அவன் கூறியதைப் பலர் நம்பவில்லை. சிலர் நம்பினாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

    விடாப்பிடியாய் தன்னுடைய கருத்தைக் கூறிக்கொண்டு வந்துகொண்டிருந்த அவனுடைய பாதையில் ஒருத்தன் குறுக்கிட்டான். யாருடைய கண்ணுக்கும் எளிதாகத் தெரியாமல் இருக்கும் அவன் என்ன என்ன செய்வான் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

    அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வானிலிருந்த மூன்று நட்சத்திரங்களில் ஒன்று கீழே விழுந்தது. அவனுக்குப் பிரமை உண்டாக அதிர்ந்தான். அவனுடைய அந்த அதிர்ச்சியைப் பார்த்து அவ்வளவு காலம் அவனுடன் பயணித்த கருங்குருவி வாலாட்டிக்கொண்டு அங்கிருந்து பறந்துபோனது.

    அதுவரை கருங்குருவி இருந்த இடத்திற்குப் பின்னால் மறைந்திருந்த ஒற்றைக் கண்ணனைக் கண்கொட்டாமல் பார்த்தான் மாணிக்கம்.

    அவனுடைய பார்வையில் வழக்கம் போல் அன்றும் எவ்வித பதற்றமும் இல்லை…….

    கம்பீரமாய் நடக்க ஆரம்பித்தான்…

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த் துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்.

    Share
  • சார்ஜ் தீர்ந்து விட்டது

    முனைவர் ஆ.சந்திரன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழ்த் துறை

    தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)

    திருப்பத்தூர்

    வேலூர்

    முகத்தில் தெளித்த இளநீரைச் சுவைத்தவாறே கண்விழித்த இளைஞன் தங்கரதத்தில் சாய்ந்து கிடப்பதை உணரத் தவறினான். எதிரில் இருந்த இளம்பெண்ணைப் பார்த்ததும் மீண்டும் அவன் மயங்கிப் போனான்.

    யார் அவன்? ஏன் மயங்கினான் என்பதை அறிய நாம் அவனுடைய இறந்த காலத்திற்குப் போகத்தான் வேண்டும். வேறு வழி ஏது?

    அரபிக்கடலைக் கிழித்துக்கொண்டு கிளம்பிய சூரியனின் ஒளி மலைகளுக்கு இடையில் இருந்த அந்த ஊரில் படவில்லை. இதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் “அந்தப் பெரியவர்” தான் என்பதை ஊர் மக்கள் திடமாக நம்பினர். “மாடசாமி” என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அந்தப் பெரியவர், ஊர் ஊராய் அலைந்து திரிந்து அந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் அவருடைய தலைமுடி நரைத்துப் போனதாகச் சிலர் பேசிக்கொண்டனர். அதனால் அவருக்கு இளம் வயதிலேயே “பெருசு” என்ற பட்டத்தைக் கொடுத்து  மகிழ்ந்தது அந்த ஊர். அந்தப் பட்டம் கொடுத்த ஏழுாவது நாள் அவருக்குப் பிறந்த நாள் வந்தது.

    அது அவரது எழுநூற்று ஐம்பதாவது பிறந்த நாள். அதனால் அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. கொண்டாட்டம் கலைகட்டியது.

    அந்த ஊரில் வாழ்ந்த மனிதர்களில் அவர்தான் மூத்தவராய் இருந்ததால் அவரது பிறந்த நாளுக்கு வந்திருந்தவர்கள் அவரை வணங்கி மட்டுமே சென்றனர். அப்படி வணங்க வந்தவர்களில்  பேரிளம்பருவப் பெண் ஒருத்தி விநோதமாக நடந்துகொண்டாள். அவரது கழுத்தில் மங்கல நாண் ஒன்றை அணிவித்தாள். அது அந்த நிகழ்வை முன்னின்று நடத்திய உயரமான மனிதரை மிகவும் பாதிக்க, அவர் மாரடைப்பு வந்து சில காலத்திற்குப் பின்னர் இறந்து போனதாக அந்த ஊரில் உள்ளவர்கள் கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

    திடீரெனக் கொட்டித்தீர்த்த அடைமழையில் பெருக்கெடுத்தோடிய வெல்லத்தில் நனையாமல் கரையேறியவர்களில் ஒருவன்தான் மயங்கிக்கிடக்கும் அந்த இளைஞன். அவனுடைய மயக்கத்தைப் போக்க இளையவள் தொடர்ந்து முயன்று கொண்டிருந்த தருணத்தில் அவன் தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டான்.

    ஆற்றுவெள்ளத்தில் கொட்டும் மழையில் தள்ளாடி கரையடைந்த பெருங்கூட்டத்தில் பலர் சில நாட்களிலேயே இறந்த போனார்கள். தப்பிப் பிழைத்த ஒரு சிலர் நேய்வாய்ப்பட்டதால் இறந்தவர்களின் ஆயுளும் நோயுற்றவர்களின் வலிமையும் இவனுக்குச் செந்தமானது. அதனால் அவன் தன்னுடைய தலையெழுத்தை திருத்தி எழுதிக் கொண்டான். அவ்வாறு செய்ததால் அவனுக்கு எழுத்தன் என்ற பெயர் பிறந்தது. தன்னுடைய தலையெழுத்தை மாற்றிக்கொண்டது போல் மற்றவர்களின் தலையெழுத்தும் மாறவேண்டும் என்று உறங்காமல் தவம் கிடந்தான்.

    ஊர்ச்சுற்றச் சென்ற தலைவன் திரும்பி வருவான் என்று தென்னை மரத்தின் அடியில் ஒற்றைதக் காலில் கிடந்த அவளுடைய தவத்திற்குப் பலனாக அவளுக்குத் தங்கப்பதக்கம் ஒன்று கிடைத்தது. அதைத் தனக்குக் கிடைத்த பாக்கியமாக நினைத்த அவள் அவ்வப்போது மார்புடன் இருக்கமாக அனைத்து மகிழ்ந்தாள். தனிமை கிடைக்கும் போதெல்லாம் அது அவளுக்குத் துணையாக இருந்ததாய் அவள் தன்னுடைய சுயசரிதையில் பின்னால் எழுதியதைச் சிலர் மட்டுமே வாசித்திருந்தனர் என்பதுதான் துர்ப்பாக்கியம்.

    ஃ என்ற பதம் அ ஆ இ ஈ என்ற உயிர் எழுத்துக்களின் தனியன் என்று விளக்கிக்கொண்டிருந்த ஆசானின் வாய் இப்போது அம்மா, ஆடு, இலை, ஈ, என்று மெல்லிய குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது.

    அப்போது இரவும் பகலும் மக்களின் தலையெழுத்து மாறவேண்டி உறங்காமல் கிடந்த எழுத்தருக்கு கைமேல் பலனாக ஏராளமான பன்றிகுட்டி குட்டிகள் பிறந்தன. அவற்றின் வருகையால் வீட்டின் தென்மேற்கு மூலையின் நிறம் மாறத்தொடங்கியது. அவற்றிற்கு வண்ணம் அடிக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனை அவருக்குத் தோன்றும் முன்னரே மஞ்சள் வண்ணத்தைத் தீட்டி அவருக்கு அதிர்ச்சியளித்தனர் அவருடைய விசுவாசிகள்.

    உறங்காமல் நீண்ட காலம் தவம் கிடந்த எழுத்தருக்கு அன்று ஏனோ முன்னிரவிலே உறக்கம் வந்தது. எனவே ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று படுக்கையறைக்குப் போனார். உறக்கம் களைந்து எழுந்தவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டின் நிறம் சிவந்திருந்து. எப்படி ஓர் இரவில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்தது என்று அவர் யாரிடமும் கேட்கவில்லை. அன்று முதல் அவருடைய இடதுகால் நடக்க மறுத்துவிட்டது. அதன்பிறகு அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது.

    அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதெல்லாம் வந்து நலன் விசாரித்துச் செல்பவர்களில் சிலர் அவரிடம் தனிமையில் உரையாடிச் செல்வதுண்டு. அப்படி வந்தவர்களில் ஒருத்தன் அவருடைய கைகளை இருகப்பற்றினான். அவனைப் பார்த்த எழுத்தரின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவராய் அருகில் இருந்த இளம்வாரிசு சொன்னான் “இவர் நம்ம பக்கத்து ஊரின் தலைவர் வீட்டிற்குப் புதிதாக குடிவந்தவர் என்று”

    அதைக் கேட்டவுடன் “வாழைப்பழத்தில் ஊசியை குத்திவிட்டுப் பின்னர் அதைச் சுவைப்பது” என்று முடிவெடுத்து நிற்பவர்களுக்கு மத்தியில், காதுகளைப் பொத்திக்கொண்டு  மூன்று கால்களுடன் ஊர் ஊராய்ச் சென்றுகொண்டிருந்த உயரமான தேகம் பளிச்சென நெற்றியில்  தோன்றி மறைய, விழாமல் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு சில பற்களைக் காட்டிச் சிறித்தார் எழுத்தர்.  நெடுநேரம் ஏதேதோ பேசிய இளைஞன் விடைபெற்றுச் சென்றான்.  தாங்கித் தாங்கி நடந்துசென்ற இளைஞனின் கால்களை கவனித்த எழுத்தரின் பார்வை அவருடைய கால்கள் மீது திரும்பியது.

    தங்கப் பதக்கம் பளபளப்புடன் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த இளையவளுக்குப் ஆயிரமாவது பிறந்தாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

    அதை விமரிசையாக எவ்வாறு கொண்டாடலாம்? என்ற கேள்வி எழுந்தபோது  யோசனைகள் பல முளைக்கத் தொடங்கின. இப்படிக் கொண்டாடலாம்! அப்படி கொண்டாடலாம்! என்ற கடிவாளங்கள் இறுதியாக மௌனத்தில் அமிழ்ந்தன.

    இளநீர் விற்பதில் இருந்து இளையவளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டு எதையும் கேட்காமல் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.

    டீக்கடையிலும் இந்த விவாதம் பற்றி எரிந்தது. “சரித்திரத்தில் இதுவரை இப்படி ஒருவிழா கொண்டாடப்படவில்லை” என்ற குரல் அதிர்ந்து ஒலித்தது. அது டீ குடிக்க வந்தவர்களின் காதுகளைச் செவிடாக்கியது.

    “இளையவளின் ஆயிரமாவது  பிறந்த நாள் சரித்திரம் அறியாதவாறு தடபுடலாய்க்  கொண்டாடப்படும்” என்று  ஊரே எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது. அப்போதுவரை அவளுடைய படுக்கையறையை அலங்கரித்து வந்த தங்கப்பதக்கம் திடீரென மண்ணாக மாறியது. அதைப் பார்த்த அவள் அதிர்ச்சியடைந்தாள். இமைகள் இணைந்தன. மயங்கிக் குப்புறவிழுந்தாள். மயக்கம் தெளிந்து கண்விழித்தவள் மீண்டும் மயங்கிப்போனாள். இரண்டாம் முறையாகக் கண்விழித்தபோது மருத்துவரின் குரல் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள்.

    அதன் பிறகு மருத்துவமனைக்கு அடிக்கடி ரகசியமாகப் போய் வந்துக்கொண்டிருந்தாள். அதற்கான காரணம் அவளுடைய வீட்டிலிருந்த வேலைக்காரிக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தாள். ஆனால் அவளுக்குத் தெரிந்திருந்தது என்பதை அந்த வீட்டில் இருந்த இரு கண்கள் கண்டுபிடித்திருந்தன. அதற்கு வாய் இல்லாததால் அதை யாருக்கும் அது சொல்லவில்லை.

    ஆயிரத்தொன்றாவது பிறந்தநாளுக்கு ஒருமாதத்திற்கு முன்னர் இளையவள் கருவுற்றிருப்பதை அவளுடைய வயிறு வெளிவுலகிற்கு வாய்த்திறந்து சொன்னது.

    அவளது வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்பதை அவளுடைய வேலைக் காரி எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டாள். பிறக்க இருப்பது எழுபத்தைந்தாவது குழந்தையாக இருந்தாலும் அதுதான் அவளுக்குப் பிறக்க இருக்கும் முதல் ஆண் குழந்தை என்பது இளையவளின் காதுகளுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.

    அந்த ஊரில் எழுபத்தைந்து குழந்தைகளை ஆயிரமாண்டுகளுக்குப் பிறகுப் பெறப்போகும் புண்ணியம் அவளுக்கு மட்டுமே வாய்த்திருப்பதாகப் பஞ்சாங்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டிருப்பதாக ஒரு செய்தி மக்களிடம் புயலாய்ப் பரவியது.

    தனிமையில் இருந்த இளையவளுக்கு  முதல் பிரசவத்தைப் பற்றிய நினைவுகள் அரும்ப ஆரம்பித்தன.

     இளநீர் விற்ற பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கேக் வாங்க கடைக்குப் போய் வெறுங்கையுடன் சோகமாக வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த அவளுடைய முகம் பிரகாசமானது. அவள் பிரமித்துப் போனாள். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளுடைய வீட்டின் அழகுதான் அவளுடைய அந்த பிரமிப்பிற்குக் காரணம்.

    வீட்டின் உள்ளே நுழைந்தபோது “இது கற்பனை இல்லையே” என்பதை நம்ப கொஞ்ச நேரம் அவளுக்குத் தேவைப்பட்டது.

    பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்குத் தேவையான அனைத்தும் அவள் நினைத்துப் பார்ப்பதற்கும் மேலாக அங்கே குவிக்கப்பட்டிருந்தன. அவள் கண்களின் தேடலில் சிக்கிய இளைஞன்  கொடுத்த பரிசு தான் பத்துமாதங்கள் கழித்து அழகான பெண் குழந்தையாய்ப்  பிறந்தது.

    கொஞ்ச நாள் கழித்து தன்னுடைய மாளிகையின் மேல் தளத்தில் அவளைக் குடிவைத்தான் அந்த இளைஞன். பின்னர் திடீரென ஒரு நாள் அவன் காணாமல் போய்விட அவனைத் தேடுவதின் அவசியம் ஒரு கட்டத்தில் இளையவளுக்கு ஏற்படாமல் போனது.

    அந்தக் கட்டத்தில் அந்த இளைஞன் இல்லை. தன் நினைவிலும் அவன் இல்லை என்பதை இரவில் மட்டுமே அவ்வப்போது உணர ஆரம்பித்தாள் அவள். அவ்வாறான வேளைகளில்  “மண்ணில் தனக்குச் சொர்க்கத்தை உருவாக்கித் தந்துவிட்டு வானுலகில் நிரந்தரமாய் அவன் தங்கிவிட்டதாய்” தன் மனதைச் சமாதானம் படுத்திக்கொள்வாள்.

    அவனைப் போல் தானும் வானுலகம் போக ஏற்பாடுகள் நடைபெறுவதாக அவளுக்குச் செய்தி வானிலிருந்து வந்தது.

    அப்போதுதான் அவளுக்கு எழுபத்தைந்தாவது கரு உருவான விசயம் காதுகளுக்கு வந்துசேர்ந்தது. செய்வதறியாது திகைத்துப் போனாள்.

    நாள் நெருங்கிக் கொண்டிருந்ததை அவளது உடல் உணர்த்தியது. நாட்கள் நிமிடங்களாகச் சுருங்கின.

    ”பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அவசர அவசரமாய்ப் பறந்தாள்” என்ற செய்தி பரவியது. ஊரே ஆவலாய் எதிர்பார்த்து நின்றது. ஆண் குழந்தை பிறக்க வேண்டுதல்கள் முளைத்தன புதுப்புது வடிவங்களில்.

    “இன்னும் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த காற்று வரும். அப்பொழுது மழை பெய்யும். இதுவெல்லாம் நடந்தால் நான்கு கால்கள், நான்கு கைகள், நான்கு கண்கள், இரண்டு தலைகள், இரண்டு வாய்கள், நான்கு மூக்குத்துவாரங்கள் கொண்ட ஒரு குழந்தை இளையவளுக்குப் பிறக்கும்” என்று வானில் இருந்து அசரீரி ஒலித்தது.

    அதைக் கேட்ட மக்கள் மழையில் குடையைத் தூக்கியெறிந்து ஆனந்தக் குளியலை அனுபவித்தனர். பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க மருத்துமனையின் வாயிலில் தவம் கிடந்தனர். அவர்களின் செவிமடல்களில் மோதித்தெரித்த தண்ணீர் துளிகள் பிரவாகமெடுத்து வெள்ளமாய் ஓடத்தொடங்கியது.

    பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர் பெண்ணே அல்லள். அவன் ஓர் ஆண்மகன்” என்று துள்ளி குதித்த சொற்கள். பிரவாகத்துச்செல்லும் செல்லும் வெள்ளத்தின் வேகத்தில் அமுங்கிப்போனது அடயாளமின்றி.

    அந்த வர்த்தைகளைக் கேட்ட உழவன் “போங்கடா புண்ணாக்குகளா…….” என்று தலையில் அடித்தவாறே மாட்டின் கயிற்றை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

    குறிப்பு: லேப்டாப்பில் சார்ஜ் தீர்ந்து விட்டதால் சொற்கள் இத்துடன் நிற்கின்றன. தொழில் நுட்பக் கோளாறுக்காக வருந்துகிறேன். ஆனால் நீங்கள் தொடரலாம்.

    நன்றி.

    வணக்கம்.

    .

    Share
  • மரணத்தைத் தடுத்த மனித நேயம்!

    -முனைவா். இரா. மூர்த்தி 

    புகைவண்டி புறப்படுவதற்கு அரைமணி நேரமே இருந்தது. நேரத்தை விரயம் செய்யாமல் எப்படியாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு வேகமாக நடந்தான் ரகிம்.

    டீக்கெட் கவுண்டரில் பதினைந்து பேர் மட்டுமே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஐந்து நிமிடத்திலே டிக்கெட்டும் கிடைத்தது.  நடைபாதையில் வரும் வழியில் ஒருவரிடம் ‘சார் அமிர்தா எக்ஸ்பிரஸ் எத்தனையாவது நடைமேடையில் நிக்குது.

    “தம்பி மூன்றாவது நடைமேடையில்” சரி நன்றி சார். எனச் சொல்லிவிட்டு வேகமாக சென்றான். அங்கு கடைசியாக இருந்த அன் ரிசர்வ்டு பெட்டியில் நுழைந்து ஒவ்வொரு சீட்டாகக் கேட்டுக்கொண்டு சென்றவன், ஒரு சீட்டில் ஒரே பெண்மணி மட்டும் அமர்ந்திருந்தனள்.

    இங்கே யாராவது வாராங்களா? இல்லைங்க… தான் சுமந்து வந்து பேக்கை அதில் வைத்து அருகில் அமர்ந்தான்.

    ரகிம் இவ்வளவு வேகமாக வருவதற்குக் காரணம்? தீபாவளி முடிந்த மறுநாள். கூட்டம் அதிகமாக இருக்கும். பொள்ளாச்சி வரைக்கும் இடம் கிடைக்காது. நின்று கொண்டே போக வேண்டும் என்ற பயத்தில் வீட்டிலிருந்து கிளம்பும் போதே பஸ்சில் அடித்துப் பிடித்து ஏறினான்.

    ரகிம் சொந்த ஊர் மேற்குத்தொடர்ச்சி மலை அருகிலுள்ள சதுரகிரி. விருதுநகர் மாவட்டம். சிவன் (லிங்கம்) சுயம்பாக உருவாகிய தளம். பிரசித்தி பெற்ற மலைத்தளம்.

    நண்பகல் ஒரு மணிக்கு பேருந்தில் ஏறியவன், திருமங்கலம் இறங்கி அங்கிருந்து வேறு ஒரு பேருந்தில் ஏறி மதுரை பெரியார் பேருந்து நிலையம் இறங்கி இரயில் நிலையத்திற்கு நடந்துபோக வேண்டும். இத்தனை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் அவனுக்குப் புகைவண்டியில் இடமும் கிடைத்தது.

    புகைவண்டி சரியாக 3.45 மணிக்கு திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டது. புகைவண்டி திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாகத் திருவனந்தபுரத்திற்குச் செல்லக் கூடியது.

    வண்டி கிளம்பி பத்து நிமிடத்தில் எனது இருக்கையைக் கடந்து கூட்டத்தில் கழிவறைக்கு 23 வயது மதிக்கத் தக்க நாகரிகத் தோற்றத்தில் இளைஞன் ஒருவன் நடந்து சென்றான். போகும்போது ஒரு சிரிப்பு. வரும்போது ஒரு சிரிப்பு சிரித்தான். என் தலைக்கு மேல் பெர்த் சீட்டில் உட்கார்ந்து இருந்த இளைஞனைப் பார்த்து…

    திடீரென முன்னே எட்டு வைத்த இளைஞன் வழிப்பாதையிலே கீழே விழுந்தான். அருகிலிருந்தவர்கள் தூக்கும்போது நிலைகுலைந்து கிடந்தான். தூக்கி உட்கார வைத்தால் உட்காரவில்லை. வண்டியில் சிலர் அபாயச் செயினைப் பிடித்து இழுத்து விடுங்கள் என்றனர். சிலர் இரயில்வே போலிசுக்குப் போன் போடுங்கள் என்றனர். சிலர் தண்ணீர் கொடுங்கள் என்றனர். அந்த இளைஞனால் எதுவுமே பேச முடியவில்லை. காரணம் ‘லோ சுகர்’, பதற்றம் வேறு அதிகரித்தது.

    புகைவண்டியும் வேகமாகச் சென்றது. அடுத்து திண்டுக்கல்லில் தான் நிற்கும். திண்டுக்கல் வருவதற்கு இன்னும் நாற்பது மணித்துளி நேரம் ஆகும். ஒரு நிலையில் உயிர் போகும் நிலையும் ஏற்பட்டன.

    அருகிலிருந்த ஒரு பெண்மணியிடம் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்து கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் செய்து எழுப்பிய பின்பும் ஒரே பதற்றம், அந்த இளைஞன் நெஞ்சைப் பிசைத்துக் கொண்டே இருந்தான்.

    ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், தம்பி நீ யாரு? எங்கே போற? என்று கேட்டார். அதற்கு எந்தவித பதிலும் இல்லை. வாய்பேசவும் இல்லை. அவனது சட்டை, பேண்ட் பாக்கெட்டிலும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அப்பாவோடு போன் எண்ணைக் கேட்டாலும் சொல்லவில்லை.

    இதற்கு இடையிலே, பிஸ்கட், மிட்டாய், பழம் அருகிலிருந்தவர்களிடம் வாங்கி சாப்பிட வைத்துக் கேட்டபோது, வாய் மட்டுமே சைகை செய்தான். பார்த்தவர்கள் அனைவரும் கண்களில் கண்ணீர் வடியத் தொடங்கின….

    ஒரு பேப்பரில் திண்டுக்கல் என்று மட்டுமே எழுதினான். சிறிது நேரம் கடந்த பின்பு, சைகை மூலம் கூறத் தொடங்கினான். திண்டுக்கல் ஊர். பாட்டிக்கு உடம்பு சரியில்ல. மதுரை பெரியாஸ்பத்திரிக்கு போய்விட்டுட்டு வரேன்.

    டீக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்துட்டு வரும்போது என்னுடைய பர்ஸ், பணம் எல்லாம் பிடிங்கிட்டு விட்டானுக. மதுரைக்காரனுக. கூட்டத்தில் சில வயதான பெண்களும், முஸ்லிம் பெண்களும் வாய்ப்பேச்சாக “மதுரைக்காரனுக பகலிலே ஆள முழுங்கிடுவனுக” என்று சொல்லிக் கொண்டனர்.

    இதைக் கேட்டதும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் கண்கலங்கியதுடன் தன்னுடைய பையிலிருந்த நூறு ரூபாயை எடுத்து அவனது பையில் வைத்தார். அவன் வாங்க மறுத்தான் சைகை மூலமாக.

    பின்பு சமாதானப்படுத்தி அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஐம்பது ரூபாய் சேர்த்து 200 ரூபாய்  அவனது சட்டைப் பையில் வைத்தனர். கூட்டத்தில் சிலர் வாய் பேசமுடியாத, ‘லோ’ சுகரில் உள்ள இந்த பையனை ஏன் தனியா அனுப்புறாங்க இவனது அப்பா அம்மா? என்று கோபப்பட்டனர். உடல் நடுக்கம் குறையவே இல்லை.

    இத்தகைய சூழலில் சிலரது மனதிற்குள் பல உளப்போராட்டங்கள் எழுந்திருக்கும். இந்த நிலைமை நாளை நமக்கும் தான்? அல்லது தனியாகக் கல்லூரிக்கு அனுப்பும் நமது மகளுக்கு? மகனுக்கு? என்று எண்ணத் தொடங்கி இருக்கும். இதை வாசிக்கும் நமக்கும் அந்த எண்ணங்கள் எழக் கூடும்.

    ஆனால் நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. இருந்து கொண்டுதான் இருக்கு. உயிர்போகக் கூடிய நேரத்துலகூட  சாதி, மத வேறுபாடு என எதையும் பார்க்காமல் உயிர்மேல் உள்ள பற்றால், முன்வந்து உதவக்கூடிய சில மனிதர்கள் இருக்கும் வரை மனிதநேயம் வாழ்வதுடன் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஆகையால் பேருந்திலோ, வண்டியிலோ தனியாக இரவு, பகல் நேரங்களில் பிரயாணம் செய்யும் நபர்கள் தங்களது சுயமுகவரி, போன் எண் முதலியவைகளை எடுத்துச் செல்லுங்கள்.

    நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்நாட்கள் எப்போது நிறைவுறும் என்பது புரியாத புதிர். வாழட்டும் மரணத்தை சாகடித்த மனித நேயம்……

    *****

    கதாசிரியர் – உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் -20

    Share
  • ஒரு நாள் கூத்து!

    -பேரா. ம. பரிமளா தேவி

    உன்கூட எல்லாம் மனுசன் பேசுவானா என்று கேட்டுவிட்டு போனைத் துண்டித்தான் தமிழ். இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு வார்த்தை தெரியல. குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு அம்மாக்கிட்ட இருந்து போன் வந்ததுமே யாழினிக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சி. நேத்துதான் கொண்டுபோய் விட்டுட்டு வந்து இருந்தாள். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்னால சென்னை வரைக்கும் போக வேண்டி இருக்கு. காலையில போனா பத்து மணிக்குள்ள வந்துரமுடியும். இவதான் டீம் லீடா் வேறயாரையும் அனுப்ப முடியாது. இத எப்படி சொல்றதுன்னு தெரியாம பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

    என்னங்க ..லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் திரும்பிப் பார்த்தான். ம்… இப்ப இயல்பாதான் பாக்குறானா? இல்ல கோபமா இருக்கானான்னு ஒன்னுமே புரியல யாழினிக்கு.

    நாளை ஆபிஸ்ல மீட்டிங்..

    நாளைக்கா…

    சனிக்கிழமை..

    செகண்ட் சாட்டா்டே கூட லீவ் இல்லையா.

    ம். இல்ல.

    அப்போ இந்த வாரம் கூட வீட்ல இருக்கமாட்டியா என்றான்.

    இல்ல. முக்கியமான மீட்டிங் பாஸ் என்னத்தான் போகச் சொல்லியிருக்காரு என்றாள்.

    குழந்தையை யாரு பாத்துக்கிறது.

    நீங்க பாத்துக்கங்க.

    இல்ல என்னால பாத்துக்க முடியாது . உங்க அம்மாவ பாத்துக்க சொல்லு…

    தமிழ் அப்படி சொன்னதுமே அவளுக்கு ஏனோ கடுப்பா இருந்தது. வருண் அவ்ளோ அடம். செல்லம். அவன் வேகத்துக்கு அம்மாவால ஈடுகொடுக்கவே முடியாது. எல்லா குழந்தையைப் போலவும் வருண் இல்ல. ஒவ்வொரு முறையும் சாப்பாடு கொடுக்கவே அவ்ளோ கஷ்டமா இருக்கும். துறுதுறுன்னு ஓடிட்டே இருப்பான். அம்மா சொல்வாங்க இவன் ரொம்ம சுட்டியா இருக்கான் பாப்பா. சொல்லறத கேக்கவே மாட்டேங்குறான். நிறைய அடம் பிடிக்குறான். எனக்கும் வயசாகுதில்ல. ஸ்கூல் போனதும் நானேகூட பாத்துகிறேன். இப்ப நீயே கொஞ்சநாள் பாத்துகோன்னுவாங்க. சில நேரங்களில் கோபம் தரக்ககூடியதா இருந்தாலும் அதுலயும் உண்மை இருக்கத்தானே செய்யுதுன்னு தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்வாள். பாவம் அவங்களுக்கும் ஓய்வு வேணாம்மா. பதினைந்து வயசுல இருந்து கஷ்டப்பட்டுத்தான் யாழினியைப் படிக்கவைச்சு கட்டிக்குடுத்தாங்க. எவ்ளவோ ஓடி ஓடி உழைச்சாச்சு. கருப்பை பிரச்சனை முட்டிவலின்னு ஒவ்வொரு மாசமும் அவ அம்மா பட்ட வலியெல்லாம் பக்கம் இருந்து பாத்தவ. பொண்ண கட்டிக்குடுத்தப் பின்னாடியாச்சும் நேரத்துக்குப் சாப்புட்டு ஒய்வாக இருக்க முடியல. அண்ணன் குழந்தை தம்பி குழந்தன்னு எல்லாத்தையும் பாத்துக்கிறாங்க. தன்னால கூட்டிவந்து பாத்துக்க முடியலன்னு குற்றவுணா்ச்சியே அவளுக்கு. என்னதான் அம்மாவுக்குத் தேவையைப் பாத்துபாத்துச் செஞ்சாலும் அம்மா ஆசைப்படறதெல்லாம் பொண்ணு சோ்ந்தாப்பல நாலுநாள் கூட இருக்கனும். போனமுற வந்து போனதிலிருந்து இப்ப வரைக்கும் என்ன நடந்ததுன்னு சொல்ல நிறைய கதைகள் இருக்கும். அதெல்லாம் அம்மா சொல்ல சொல்ல ம் கொட்டிட்டே கேக்க யாழினிக்கு ரொம்ப பிடிக்கும். தன் கை சாப்பாடே பிடிக்கல பாப்பான்னு சொல்வாங்க. உன் கையால எதாச்சும் செஞ்சிக்குடுன்னு கேப்பாங்க. அவ்ளோ ருசியா செய்யலன்னாலும் ஆசையா செய்யறதால நிஜமாவே அவ்ளோ நல்லா இருக்கும்.

    யாழினிக்கு நல்லா வாசிக்கிற பழக்கம் உண்டு. அது அவ அம்மாக்கிட்ட இருந்து வந்தது. அம்மா அந்தக் காலத்துலே பத்தாவது படிச்சவங்க.  தனக்கு வந்த அரசாங்க வேலையை விட்டுட்டுக் குழந்தை கணவன்னு வீட்டோட இருந்துட்டாங்க. அப்ப தன்னோட பொழுதுபோக்குன்னா அது ஒன்னே ஒன்னு புத்தகம் மட்டும் தான். ஊருல நூலகம் எல்லாம் கிடையாது. அஞ்சு கிலோ மீட்டா் பஸ்ல போய் ராணி குமுதமுன்னு வாங்கிட்டு வந்து ஒரு வாரம் வச்சு வச்சு படிப்பாங்க. புத்தகத்த அம்மாவுக்குத் தெரியாம எடுத்துப் படிச்சிட்டு மறைச்சு வைச்சுருவா யாழினி. படிக்கிற பிள்ளைக்கு எதுக்குக் கதை புத்தகம். ஒழுங்காப் படின்னு சொல்வாங்க. ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டு இருந்ததுனாலதான் தனக்கு எப்பயெல்லாம் ஓய்வுகிடைக்குதோ அப்பெல்லாம் புத்தகம் படிக்கத்தோனும். அது இப்ப வரைக்கும் தொடர்வதற்குக் காரணம் அம்மாதான்.

    அவங்க பேரக்குழந்தைகளோட நம்ம குழந்தையைப் பாத்துகறதுக்கு என்ன உங்க அம்மாவுக்கு. இங்க வாங்கன்னு கூப்புட்டா ஒருமுறையாச்சும் வராங்களா. டவுன்ல எல்லாம் வந்து இருந்து பழக்கம் இல்லைங்கறாங்க. நீண்ட பெருமூச்சு விட்டு.. சரிங்க போன்ல ஒரு வார்த்தைச் சொல்லிடுறேன். நீங்கப் போய் விட்டுட்டு வந்துருங்க என்றாள்.

    விடியற்காலையிலே கிளம்பனும். காலையிலே டிபன் செய்யவா. வேணா நான் பாத்துகிறேன். அப்பாடா இன்னிக்காவது திருவாயில் இருந்து சமைக்க வேணாம்னு வந்துச்சே. அதுவே பெரிய ஆறுதலா இருந்தது. தமிழுக்கு நிறைய கொள்கை எல்லாம் இருக்கு. அது என்னன்னா இவ்ளோ படிச்சிட்டு யாராச்சும் வீட்ல இருப்பாங்களா. பொண்ணுங்களும் வேலைக்குப் போகனும். அப்படி போகும்போது விடியகாலையில எந்திரிக்கனும். வாசல் தெளிச்சு கோலம் போடனும். பெட் காப்பி கொடுக்கணும். வேலைக்காரி வைக்கக்கூடாது. எல்லா வேலையும் செஞ்சுட்டுத்தான் வேலைக்குப் போகணும். சமைக்கும்போது மாமனார் மாமியார் என்ன சாப்பிடுவாங்களோ அததான் காலையில செய்யணும். மத்தியானதுக்கு அவங்களுக்குச் சாப்பாடும் செய்து வைக்கணும். ஏன்னா மாமியார் சமைக்கமாட்டாங்க. வேலைக்குப் போறவங்க எல்லாம் சமைக்காம தான் போறாங்களா என்பான். அந்தச் சாப்பாடு வருணுக்குத் தமிழ்தான் ஊட்டுவான். ஊட்டும் போதே திட்டிட்டே ஊட்டுவான். அரிசியை இன்னும் குழைய விட்டிருக்கலாம் இல்ல. அரைமணி நேரமாச்சும் அரிசியை ஊர வைக்கணும் இல்ல. குக்கா்ல செய்யாம நல்லா வடிக்கணும். அதயும் எடுத்து மிக்சில போட்டு அரைச்சு கொடுக்கனும். அப்போதான குழந்தைக்குச் சக்தி கிடைக்கும்னு தினமும் பாடுற புராணத்தை முடிச்சிருவான். ஏழரை மணி பஸ்ஸ பிடிக்க நைட்டு முடிக்காம விட்ட எல்லா வேலையும் செஞ்சிட்டு டிபன் பாக்ஸ் கையோடு ஓடிப்போய்தான் பஸ்ஸயே பிடிப்பாள் .அப்பவும் சொல்வான் கொஞ்சம் முன்னாடி எழுந்தா என்ன. ரிலாக்ஸா வேலையை முடிச்சிட்டுப் போலான்னு இலவசமா புத்திமதி தருவான்.

    யாழினிக்குச் சின்னச் சின்ன கனவு எல்லாம் இருந்தது. காலையில குளிச்சு முடிச்சிட்டு நல்ல பில்டா்காபி போட்டு அத ஆவிபறக்க ஊதி ஊதி நிறைய நேரம் குடிக்கணும். காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறதுல இருக்கற சொகமே  தனிதான். காப்பி குடிக்கும்போது நாக்கு நுனியில சா்க்கரையோட சுவை இருந்துட்டே இருக்கும். காலையில டிபன் சாப்பிட வரைக்கும். அந்தச் சா்க்கரை எப்படி ஒவ்வொரு நாளும் சுவைதருதோ அதுபோல வாழ்நாள் முழுக்க வாழ்க்கையும் சுவையா இருக்கும்னு அவளுக்கு ஒரு நம்பிக்கை. வருண் வயித்துல இருக்கும்போதுதான் கண்டுபிடிச்சாங்க பெண்களுக்குப் பேறுகாலத்துல வர சா்க்கரை நோய் இருக்குன்னு டாக்டா் சொல்லிட்டாங்க. அவன் பொறந்ததும் இரண்டு மாசத்துல சா்க்கரை இல்லை. இருந்தாலும் அவளால தனக்குச் சர்க்கரை இருந்ததா. எப்படி இவ்ளோ வயசாகியும் தன் அப்பா அம்மாவுக்கு இல்லாத ஒன்னு தனக்கு எப்படின்னு யோசிக்கும் போதுதலையே வெடிச்சிரும் போலயிருக்கும். அப்ப இருந்து இப்ப வரைக்கும் காபில சுகா் இல்லை. காபியைக் குடிச்சிட்டே நியூஸ் பேப்பரை காலையில படிக்கணும். ஆபிஸ் போயிட்டு வந்து நைட்ல படிக்கறதல என்ன சுவாரசியம் இருக்கு. சமைக்கும்போது இளையராஜா பாட்டுக் கேக்கணும். இல்ல தானாச்சும் பாடிட்டே சமைக்கணும். ஆனா அப்படி எதுமே நடக்காது .ஒவ்வொரு நாளும் காலையில என்ன சமைக்கணும் மத்தியானம் என்ன சமைக்கணும் குழந்தைக்கு என்ன செய்யணும் ஆபிசுக்கு என்ன மெயில் அனுப்பணும்.. ஆபிஸ்ல வொர்க் எப்ப முடிக்கணும். மூளைக்குள்ள அவ்ளோ வேகமா வேலைகள் ஓடிட்டே இருக்கும்.

    ஆபிஸ்ல வேலை முடிச்சிட்டுச் சோர்ந்து வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கத்தோணும். தெருவிலே மாமியார் பாத்துட்டு வருணு தங்கம் அம்மா வந்துட்டாங்க பாருன்னுவாங்க. அவங்க டியூட்டி டைம் அதுவரைக்கும்தான். என்கிட்ட கொடுத்துட்டுச் சீரியல் பாக்கப் போயிருவாங்க. அவங்களயும் கொற சொல்ல முடியாது. குழந்தையோட கொஞ்சநேரம் இருந்துட்டு மறுபடியும் பாத்திரம் தேய்ச்சு வீடு கூட்டி நைட்டுச் சாப்பாடு எடுத்து வைச்சு சாப்பிட உக்காரும் போது நைட்டுப் பத்தாயிரும்.

    எவ்வளவு சோர்வா இருந்தாலும் அடுத்த நாள் ஆபிஸ்ல என்ன செய்யணும் என்ற நெனப்பு ஒருபுறம் இருக்க, பெண்டிங் வொர்க் எல்லாம் முடிக்க நைட் எப்பவுமே பன்னிரண்டு ஒரு மணி ஆகும். தினசரி வாழ்க்கை இதுதான். இதுலஒரு மாற்றமும் இல்லை. இதவிட நிறைய சோர்வு என்னன்னா யாழினிக்கு எதையும் தமிழ்கிட்ட சோ் பண்ண முடியாது.

    ஆபிஸ்ல என்ன நடந்தாலும் அத உடனே வந்து சொல்லும் போதும் சரி அப்படியா அத தவிர வேற ஒன்னும் வராது.

    ஏதாவது பிரச்சனை வந்தா அத ஏன் என்கிட்ட சொல்ற வாசலுக்கு வெளியே செருப்ப கழட்டும்போதே எல்லாத்தையும் விட்டுரணும். அதையும் தாண்டி அலுவலகத்தில் சில நுண்ணரசியல் செயல்களையெல்லாம் தாங்காம சொல்லும் போதும் நீ தைரியமா இருக்கணும் வேலையை இன்னும் நல்லா செய்யின்னு சொல்லிட்டுப் போயிருவான். இதயெல்லாம் சொல்லாமலே அவளுக்கே தெரியணும். அவளுக்கு எப்பவுமே தோணும் தான் சோர்வா இருந்தா தோள்சாய அவன் இருக்கணும். தலையை வருடிக்கொடுக்கணும். உனக்கு நான் இருக்கன்னு சில வார்த்தைகள். இப்படிப்பட்டஆசைகள் எதுவுமே நடப்பது இல்லை.

    சமைக்கப்போறீங்களா. நான்மட்டும் தான ஓட்டல்ல வாங்கிறேன். பொதுவாக ஓட்டலில் சாப்பிடபோலாம்னாலோ இல்லை போனாலோ பெரிய பிரசங்கம் பண்ணுற ஆளு. மாசத்துக்கு ஒரு முறை போனாக்கூட ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு நல்லது இல்ல. எப்பவும் வீட்டுச் சாப்பாடுதான் நல்லதுன்னு சொல்வான். அப்படியே போனாலும் உனக்கு என்ன வேணுமோ அதஎல்லாம் ஆா்டா் செய். லேட் பண்ணாத எனக்கு வேலை இருக்கு உடனே கிளம்பணும்னு சொல்லும் போதே சாப்பிடற ஆசையே அவளுக்கு விட்டுபோயிரும். தினமும் நான் சமைச்சு நானே சாப்பிடுறேன். ஒரு டேஸ்ட்டுக்கு சேஞ் பண்ணிசாப்பிட்டா நல்லா இருக்குன்னுதானே பொண்ணுங்க வராங்க . அதுக்கூட புரியாதா இவங்களுக்கு எல்லாம் என்று மனசுக்குள்ளத் தோணும் யாழினிக்கு.

    ஓட்டலுக்குப் போயிருந்தபோது முழுக்க தன்னுடைய பார்வையால் சுழலவிட்டிருந்தாள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனா். உடனே தான் பார்த்த படத்தில் ஒரு காட்சி அவள் நினைவுக்கு வந்தது. நாயகனும் நாயகியும் சாப்பிட ஓட்டலுக்குப் போறாங்க. இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு வந்த கிராமத்துப் பெண்ணாகக் காட்டியிருப்பாங்க. சாப்பிட உட்கார்ந்ததும் எல்லோரையும் பார்க்கும்போது நிறைய பெண்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அய்ய இந்த ஊா்ல பொம்பளைங்க சமைக்கமாட்டாங்களா.. இங்க வந்து சாப்பிடுறாங்க. எங்க ஊா்ல எல்லாம் கழனி வேலைக்குப் போற பொம்பளைங்க எல்லாம் தூக்குச் சட்டியில சாப்பாடு கொண்டு போவாங்க என்பாள். இப்படி எல்லாம் யோசிக்கறவன் மட்டும் என் கையில் கிடைச்சான்னா கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் போயிருவேன். என்ன வாழ்க்கை எங்க போனாலும் எதப்பாத்தாலும் ஊா்ல இருக்கிறவன் எல்லாம் பொண்ணுங்களுக்கே கருத்துச் சொல்லிட்டு இருக்காங்க. சூடான பேல்பூரியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டே கொண்டே தமிழைப் பார்த்தாள். அவன் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ அப்படித்தான் இப்பவும் இருக்கானா என்கிற கேள்வி எழுந்தது.

    அலுவலகத்தில் போன வாரம் பெண்கள் தினத்திற்குப் பேச விருப்பம் உள்ளவர்கள் பெயரைப் பதிவு செய்ய சொல்லியிருந்தாங்க. எல்லாரும் சொன்ன ஓரே பெயர் யாழினி. அவங்க பேசுனா சரியா இருக்கும் எனும் பதில் வந்தது.  யாழினியைப் பொறுத்தவரைக்கும் பெண்ணுக்கான இடத்தை யாருக்காகவும் விட்டுத்தரமாட்டாள். பெண் அப்படிங்கறதாலேயே சலுகையை எதிர்பார்க்க கூடாது. பிறருடைய அனுதாபத்தை விரும்பாதவள்.

    காலையில ஐந்து மணிக்கு எழுந்து டிபன் செஞ்சு லஞ்ச் பேக் பண்ணி பசங்கள ஸ்கூலுக்கும் கணவனை ஆபிஸ்க்கும் அனுப்பிட்டு எனக்கு டயா்டா சேச் சே நான் தான்… லைன் ஹனி குடிக்கறனே.. டீவில ஒரு பெண்  விளம்பரத்துல சொல்றதும்  பாத்ததும் இதை ஏன் ஆண் சொல்றது போல எடுக்கறதில்ல.. யோசிட்டே பெண்கள் தினத்துல என்ன பேசலான்னு குறிப்புகளைத் தயார் செய்தபடி இருந்தாள். தனக்கு எப்பவும் பிடித்துப் பிளாக் கலா்ல காட்டன் சேரியைக் கட்டிகொண்டு ரொம்ப நேரமாகக் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துட்டே இருந்தாள்.  தான் கல்லூரியில் படித்த நாட்கள் எல்லாம் கண் முன்னாடி வந்தது. அப்போவெல்லாம் பெண்கள் படித்தால் வேலைக்குப் போனா  சுயமரியாதையுடனும் யாருக்கும் அடிமை யில்லாமலும் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள். ஆனா படிப்பு வேலை அவள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக இருக்குமே ஒழிய அவளுக்குகான சுதந்திரவெளியைச் சுயமரியாதையைக் கொடுத்துறாதுன்னு இப்பத்தான் புரிஞ்சது.

    நீண்ட பெருமூச்சுவிட்டு புன்னகையோடு அனைவருக்கும் வணக்கம் என்றாள். உங்க எல்லாருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன். ஏன் ஒரு நாள் மட்டும் கொண்டாடணும் எல்லாம் நாளும் அவர்களுக்குக்கானது தான் என்று முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களுக்கும், பெண்கள் தினத்துல கூட தான் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் வாழ்த்து தெரிவிக்க தயங்குற பிற்போக்கான எண்ணம் கொண்டர்வா்களும் இன்று ஒரு நாள் தனக்கானது என்று மகிழ்ச்சியாக இருக்கின்றவா்களும் முதலில் இந்தத் தினத்திற்கான முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    பேச்சின் முடிவாக “நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுவிக்காமல் மனிதகுல விடுதலை சாத்தியமல்ல என்ற லெனின் வாசகத்தையும் வீட்டு வேலைகளில் ஆணும் பெண்ணும் சமமாக ஈடுபட வேண்டும் என்பதைச் சோவியத் நாடு சட்டமாக்கியது குறித்தும் சொல்லிய பின்பு” நம்முடைய சிந்தனையில் மாற்றம் வந்தால் ஒழிய இந்த பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறி முடித்தாள்.

    “வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை வைப்போமா எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கு, குழந்தையையும் பாத்துக்கணும் கஷ்டமா இருக்கு”.

    “இப்பவே இவ்ளோ குண்டா இருக்க.  உன்னைப் போல வீட்டையும் பாத்துட்டு வேலையையும் செய்றவங்க யாருமே இல்லையா. கொஞ்சமாச்சும் வேலை செஞ்சு உடம்பைக் கொற”.

    கோவத்துல தீபாவளிக்கு வாங்கிட்டு வந்து இருந்த மொத்த ஸ்வீட்டையும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்!

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.

    Share
  • தனியாக எரிகிறது

    விஜயகுமார் வேல்முருகன்

     

    இன்று ஏதோ ஒரு வித்தியாசமாகத்தான் இருந்தது சுடுகாடு.. வாசல் முழுதும் எக்கச்சக்க பூக்கள் நான்கைந்து பிணங்களின் வருகைப்போல..

    தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனுங்கூட வந்திருந்தார்கள்..

    இரண்டு தகன மேடைகளும் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்க..

    அவரவர் உறவினர்கள் அருகருகே.. தாத்தா வேர்வை மழையில் நனைந்திருந்தார்.. தகன மேடைக்கு சற்றுத்தள்ளி.. அடுத்தடுத்த இரண்டு குழிகள்..

    தாத்தாவின் மகன் ஒரு குழியிலும், பேரன் ஒரு குழியிலும் ‘சாங்கியங்களை’ முடித்துக்கொண்டிருந்தனர்..

    வியப்பாக இருந்த குமாரின் முகத்தை பார்த்து,
    வியர்வையை துடைத்தப்படி தாத்தா சிறு புன்னகை மட்டும் செய்ய சற்று தள்ளி நின்றான் குமார்..

    நேரம் ஆக ஆக.. கூட்டம் குறைய தொடங்கியது..

    அப்பொழுது “என்ன கொமாரு இங்க நிக்கிற?” என்ற குரலை கேட்டு திரும்பியவனை நோக்கி ஊர்த்தலைவர் வர.. “இங்க எதுக்குங்க தலைவரே வருவாங்க?” என்று குறும்பு சிரிப்போட கேக்க..

    “ஹா ஹா ஹா.. அதானே.. செத்தவன கொண்டுவந்து போடத்தானே வருவோம்.. சரிசரி.. கொமாரே .. கோடாங்கி அம்மா பொணத்த எரிச்சிபுட்டு கணக்கு பாக்க கிளம்புறோம்” என்று சொல்லியபடி, சாங்கிய மண்டபத்தை பார்த்து தலைவர் போக.. அவர் பின்னாடியே பறை அடிச்சவர், சங்கு ஊதி, இன்னும் சிலர் போனார்கள்..

    தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனும் கூட கிளம்பி விட்டார்கள்.. நன்றாக இருட்டி விட்டது..

    தாந்தட்டி தாத்தாவும் பானையிலிருந்த தண்ணீரை குடித்துவிட்டு “வா தம்பி கொமாரு” என அழைக்க..

    “என்ன தாத்தா இன்னைக்கி செம்ம வேட்டைப்போல” என குமார் கேட்டபடி நடந்து எதிலேயோ இடறிப்போய் விழப்போக “ஆத்தாடி.. கொமாரு” னு பதறிப்போய் தாத்தா அவனைத் தாங்கிப் பிடிக்க..

    கீழே பார்த்தால் ஓலை பாடையி்ல் ஒரு பிணம்..

    “என்னங்க தாத்தா.. இங்க ஒரு சடலம் இருக்கு? இதுக்கு யாரும் சொந்தக்காரவங்க இல்லையா?”

    “தம்பி அது யாருன்னு தெரியுதா? நல்லா உத்துப்பாருங்க” என்று சொல்லியபடியே தாத்தா தீப்பந்தத்தை எடுத்துக்காட்ட…

    “இவர எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே.. ஆஆஆஆங்.. வட்டிக்கட ஆனந்தன் தானே இவரு?..”குமார் கேட்க

    ” அநியாய வட்டி ஆனந்தன்னு சொல்லு தம்பி.. இவன் ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா.. கொஞ்சங்கூட இரக்கமே இல்லாதவன்.. வட்டிக்கு வட்டிப்போட்டு அதுபோட்ட குட்டிக்கும் வட்டிப்போட்டு எத்தன குடும்பங்கள நடுத்தெருவுக்கு தள்ளுனான் தெரியுமா..”

    “அப்படியா தாத்தா.. இவருக்கு கொழந்தைங்க இல்லைல?”

    “ஆமாந்தம்பி.. இல்லாத வரைக்கும் சந்தோசம் தம்பி.. இல்லைனா இவன் செஞ்ச பாவம் பூரா அதுங்க தலைல விழுந்திருக்கும்.. இவனோட சம்சாரம் நல்ல குணவதி.. பாவி அடிச்சி அடிச்சே பைத்தியமாக்கிட்டான்.. ஊருக்கு ஒரு கூத்தியா வச்சிருந்தும் ஒன்னுக்குக்கூட புள்ளைங்களே இல்லை தம்பி..

    உங்க தெருவுக்கு ரெண்டு தெரு தள்ளி மேற்கு தெரு இருக்கே அதுல ஒரு பெரிய மாடி வீடு இருக்கே தெரியுமா?”

    “ஆமாங்க தாத்தா.. ‘ஆனந்தம் இல்லம்’னு போட்டிருக்குமே அதானே?”

    “ம்ம்ம்.. அதேதான்..அது ஒன்னும் இவன் சொந்தமா கட்டுன வீடு இல்ல.. ராஜலிங்கம் னு ஒரு வாத்தியார் இருந்தாரு அவரோட வீடு.. ரொம்ப தங்கமான ஆளு”

    “ஆமங்க தாத்தா நான் கூட கேள்விப்பட்டுருக்கேன்.. எங்க பள்ளிக்கூடத்துல தலைமை ஆசிரியரா இருந்தார்னு போடுல எழுதி வச்சிருக்காங்க” குமார் சொல்ல..

    “அவரே தாம்பா.. இவன்கிட்ட வட்டிக்கு கடன் வாங்குனாரு.. மாசாமாசம் வட்டிய ஒழுங்கா தான் கொடுத்துட்டு வந்தாரு..

    ஒரு நாளு அசல் திருப்பிகொடுக்க, தன்னோட ஊர்ல இருந்த சொத்த வித்துட்டு வந்து பணத்த வீட்ல வச்சிருந்தாரு.. அத கேள்விபட்ட இவன் கூட்டாளிகளோட போயி அவர் வீட்ல வச்சிருந்த பணத்தை திருடியிருக்கான்..

    அத வாத்தியாரோட சம்சாரம் பாத்துட்டாங்க, அவங்கள கழுத்தை நெரிச்சி கொன்னுபுட்டான்.. அந்த நேரத்துக்கு வாத்தியாரோட பையன் வர அவனையும் கத்தியால குத்தி கொலை செஞ்சிருக்கான்.. இத பார்த்த்த அவங்க வீட்ல வேலை செஞ்சவன் ஓடிப்போயி போலீஸ்ட்ட சொல்ல.. இவன கைது செய்ய வந்தாங்க..

    கூட்டாளிகள்ல ஒருத்தன மாட்ட விட்டுட்டு இவன் தப்பிச்சுட்டான் தம்பி.. அப்பறமா .. வெளியே போயிட்டு வந்த வாத்தியாரு பொண்டாட்டி, புள்ளையும் செத்துக் கிடந்தத பாத்துட்டு நெஞ்சு வலி வந்து அவரும் செத்துபோய்ட்டாரு..

    அந்த மூனு பேரையும் அதோ அந்த எட்டி மரத்து பக்கத்துல தான் புதைச்சேன் தம்பி.. ம்ம்ம்..” என்று பெருமூச்சு விட்டார் தாத்தா..

    குமார் தாத்தாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

    “ஊர்ல இருக்குறவங்க எல்லாரோடைய வயித்தெரிச்சலையும் கொட்டிகிட்டான்..

    கடைசியில புத்து நோய் வந்து முத்திப்போயி கூட இருந்த கூட்டாளிகளும் கைவிட்டுட்டு போயிட்டாங்க.. ஒரு சொந்த பந்தமும் கிடையாது .. இப்ப அனாதையா செத்துப்போயி.. ஊர்க்கார பெரியவங்க தூக்கிஇ வந்து போட்டுட்டு செய்யிறத செய்யினு பணத்தக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க.. இதாந்தம்பி இவனோட வாழ்க்க முடிவு” என்று சொல்லியபடி மூன்றாவது தகன மேடையில் விறகு கட்டைகளை அடுக்க, கூட குமாரும் உதவியபடி..

    கடைசியில் ஆனந்தனின் சடலத்தை தாத்தா , ஒரு குழந்தையை போல தூக்க, உதவ போன குமாரை “வேண்டாம் தம்பி.. நானே தூக்கி வச்சுடுறேன்” என்று விறகுகள் மீது வைத்து வரட்டிகளை அடுக்கி, மேலேயும் பக்கவாட்டிலும் களிமண் போட்டு மூடி ஆங்காங்கே சிறு ஓட்டைகளை போட்டு வைத்தார்..

    “யேன் தாத்தா இவருக்கு மட்டும் இப்படி செய்யுறீங்க” என்று குமார் கேக்க..

    “தம்பி.. இவன் புத்துநோய்ல செத்தவன்.. அப்படியே விறகு மட்டும் வச்சு எரிச்சோம்னா சாகாத விச கிருமிகள் காத்துல கலந்து போயிடும்..

    பக்கத்துல ஏதாவது உடம்பு முடியாத ஆளுக இருந்தாங்கனா அவங்கள தாக்கிடும்.. அதான் களிமண்ணுல ஊமத்தம், ஆமணக்கு இலைகள குளைச்சி பூசிட்டு எரிச்சோம்னா எந்த விசகிருமிகளும் வெளியேறாது” என்று சொல்லியபடி ஓட்டைகள் வழியே கற்பூரங்களை கொளுத்திப்போட.. சிறிது நேரத்தில் அனைத்து ஒட்டைகள் வழியாகவும் புகை வர உள்ளே பிணம் கொளுந்துவிட்டு எரியும் சப்தம் கேட்டது..

    “அநியாய வட்டி ஆனந்தன் கொஞ்ச நேரத்துல சாம்பலாயிடுவான்.. நாம அப்படி போய்டுவோம் தம்பி” என்று சொல்லியபடி தாத்தாவும், குமாரும் வெட்டியான் தாத்தா குடிசை நோக்கி நடந்தார்கள்.

    தனியாக எரிந்துக்கொண்டிருக்கிறது அநியாய வட்டி ஆனந்தனின் பிணம்.

    Share
  • உயிரின் விலை!

    -புனிதா

    குளிர்ந்த காடுகள், பல்வேறு மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை  எங்கும் பச்சை அருவி அமுதம் போல் பாயும் என்றவுடன் எங்கள் சிவகாசியை மலைப் பிரதேசம் என்று நினைத்து விடாதீர்கள்.

    பலருக்கு வாழ்வு தரும் கற்பகத் தரு உள்ள நகரம். அதன் முக்கியத் தொழில்கள் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, சுண்ணாம்புக் கல் எடுத்தல் போன்றவை. இங்கே ஆடம்பர வாழ்க்கை இல்லை. சாதாரண நிலையிலும் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். பட்டாசுத் தொழில்தான் படிக்காதவர்களின் வாழ்வாதாரம்.

    அப்படிப்பட்டவர்தான் கருப்பசாமி. அவர் வயது 22. துடிப்பானவர். இள ரத்தம் அல்லவா? அழகான புத்திசாலியும் கூட. ஆனால் வறுமை அவர் வாழ்வில் பூகம்பத்தைக் கிளப்பியது. 17 வயதில் இருந்தே வேலைக்குச் செல்கிறார். கருப்பசாமியின் நண்பர் அய்யாசாமி. இரண்டு பேரும் சம வயது. அய்யாசாமிக்குத் திருமணம் முடிந்து சந்தோசமான வாழ்க்கை வாழ்கிறார்.

    இரண்டு பெரும் ஒன்றாகப் பட்டாசுக் கம்பனிக்கு வேலைக்குப் போவார்கள், வருவார்கள். இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு நொடியும் உயிர் ஊசலாடும் வேலை தான். தினமும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைமைதான்.

    படிக்க வேண்டிய காலத்தில் படிக்காததால் காலம் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது. ஆனால் அவர்கள் இரண்டு பேருக்கும் எப்போதும் சிரிப்பும் சந்தோசமான பேச்சும்தான். எதற்கும் வருத்தப் படவே மாட்டார்கள்.

    அப்படி ஒருநாள் வேலைக்குப் போகும்போது தான் கருப்பசாமி தனக்குப் பெண் பார்த்திருப்பதாகவும் இரண்டு மாதங்களில் திருமணம் என நிச்சயம் செய்திருப்பதாகவும் சொன்னார். அப்போது அய்யாசாமியின் மனைவி கர்ப்பமாக இருந்தார். இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்கும் சூழ்நிலை.

    நண்பர்கள் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இன்னும் இரு மாதங்கள் தான். அதன் பின் அவர்கள் வாழ்வில் பெரிய சந்தோசம் வரப்போகிறது. மனம் ததும்பி வழிந்த மகிழ்ச்சியை முகம் நிறைந்த சிரிப்பைப் பார்த்து அவர்களது நண்பர்கள் செய்தியை கண்டு கொண்டு எல்லோருமாகக் கொண்டாடினார்கள். இந்த அத்தனை மகிழ்ச்சியும் சில மாதங்கள், சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    இரண்டு நாட்கள் கழித்து கருப்பசாமியின் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. திடீரென்று வந்த இந்த இடியால் நண்பர்கள் இருவரும் அனலில் விழுந்த புழுவைப் போல் துடித்தார்கள். அவர்கள் நெஞ்சில் மேலும் ஈட்டியைச் சொருகுவது போன்று மருத்துவ செலவுக்கு காப்பீடு போக 2 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

    கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கினாலும் ஒரு லட்சம் தான் கிடைத்தது. மீதி ஒரு லட்சத்திற்கு அவன் பட்ட பாடு! அய்யோ!! இரு நாட்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, பிச்சைக்காரனாக ரோடு ரோடாக கடன் கேட்டு ஓடினான். எந்தக்  கடவுளும் அவனுக்கு உதவவில்லை.

    மனம் சோர்ந்து திரும்பி வரும் வழியில் ரோட்டிலேயே மயங்கி விழுந்து விட்டான். அந்த வழியாகச் சென்ற அவன் முதலாளி அவனைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி அவனைக் கூட்டி வந்தார்.

    “ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது” என விசாரித்தார்.

    நடந்த எல்லாம் கேட்ட அவர் இரக்கமுள்ள மனம் கொண்டவர். மருத்துவச் செலவுக்கான தொகையைக் கொடுத்து உதவினார். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லாமல் கையெடுத்துக் கும்பிட்ட கருப்பசாமி மனம் முழுவதும் நன்றி நிறைந்திருந்தது.

    அம்மா குணமாகி வீடு திரும்பியதும் கருப்பசாமியின் கல்யாண வேலைகள் ஆரம்பமாயின. பத்திரிகை அடித்து ஊருக்கெல்லாம் உறவுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ச்சியோடு கருப்பசாமி எல்லாரையும் அழைத்தார்.

    அய்யாசாமியும் அப்பாவாகப் போகிற மகிழ்ச்சியில் மிதந்தார். அய்யாசாமியின் மகனை தேவர்கள் பூப்போட்டு ஆசீர்வதித்து பூமிக்கு அனுப்பினார்கள். அதே சமயத்தில் அந்தக் குழந்தையின் அப்பாவின் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டி விட்டார்கள். ஆம்!

    கல்யாணம் எனும் கனவும் குழந்தை என்ற ஆசைக் கனவும் பட்டாசின் வெடிச் சத்தத்தில் கலைந்து போயின. யாரோ செய்த சிறு தவறு பல குடும்பங்களின் நிம்மதியை, மகிழ்ச்சியை, குழந்தைகளின் படிப்பைத் தலைகீழாக மாற்றி விட்டது.

    எங்கும் கரிக்கட்டை போலப் பிணங்கள்.

    “அம்மா அப்பா”,

    “என்னால் தாங்க முடியலையே”

     என்று எங்கும் ஓலம் கேட்க அழுகையும் அவலக் குரல்களும் அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் எதிரொலித்தது. ஒவ்வொருவருடைய கை எது? கால் எது? என்று பிரித்தறிய முடியாதவாறு மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன.

    எல்லாரும் தங்கள் உறவுகளை, உறவுகளின் உறுப்புகளை தேடியபடி இருந்தனர். அந்தக் குவியலில் தான் கருப்பசாமியும் அய்யாசாமியும் கிடந்தார்கள். அய்யாசாமியின் மகன் பிறந்தவுடன் பெருங்குரலெடுத்து அழுதான். அதென்னவோ மற்றக் குழந்தைகளின் அழுகை போல சாதாரணமாக இருக்கவில்லை. தன் தந்தையின் மரணத்துக்கும் சேர்த்து அழுவது போல் இருந்தது. மகனின் முதல் சுவாசம் தந்தையின் கடைசி சுவாசம்.

    புயலுக்கு பின்வரும் அமைதி போல இந்த பேரிடருக்குப் பின் பெரும் அமைதி பிறந்தது. எல்லா முகங்களும் சோகத்தைச் சுமந்தபடி இருக்க உதடுகள் சொற்களற்ற மௌனத்தைத் தாங்கி வலம் வந்தன.

    எல்லாம் முடிந்த பின்னர் அரசு நிவாரணத்தொகை அறிவித்தது. மரணம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் என்று அறிவித்தது. ஓர் உயிரின் விலை 1 லட்சம் தானா??

    அரசாங்கம் கொடுக்கற 1 லட்சத்தை வைத்துக் கொண்டு மொத்தக் காலத்தையும் கடத்திவிட முடியாது. எல்லாரும் தங்கள் இழப்பைத் தாண்டி பிழைப்பைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

    அய்யாசாமியின் மனைவி கைக்குழந்தையுடன் செய்வதறியாது திகைத்து நின்றாள். கடந்து வந்துதானே ஆக வேண்டும் எந்தச் சோகத்தையும்!!!

    பிழைப்பைத் தேடிச் செல்லத் தொடங்கினாள் அந்தத் தாய். அந்த நேரத்தில் கூட “ஏய்! இவ புருஷன் செத்து ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளயும் வேலைக்கு கிளம்பிட்டா பாரு!” என்ற அங்கலாய்ப்புகள், ஏச்சுப் பேச்சுக்கள். தன்னுடைய சின்னஞ்சிறு பூங்குழந்தைக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாள்.

    எங்கே வேலைக்குப் போவது?? ‘பட்டாசு தொழில்தான் ஆபத்துணு சொல்லிவிட முடியாது. எல்லாத் தொழில்லயும் ஆபத்து இருக்கத்தான் செய்யும்’ தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டவளாக பட்டாசு தொழிற்சாலைக்குள் நுழைந்தாள். வேறு எந்தத் தொழிலும் செய்யத் தெரியாத அவள். வேறு தொழிலுக்கு அங்கே வாய்ப்பும் தான் ஏது?

    ஆபத்து நிறைந்த இந்தத் தொழிலிலும் அரசு விதிக்கிற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் ஆபத்தைக் குறைத்து விடலாம் என்று தோன்றினாலும் அவள் அடி மனத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் வேண்டுதல் ஒன்று இருக்கிறது.

    ‘தந்தையை இழந்து விட்ட தன்னுடைய சின்னச் சிட்டுக்காகவாகிலும் தனக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது’ என்பது தான் அது!.

    எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் ஊசலாடியபடி தான் அங்கே பல மனித உயிர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் வாழ்விலும் இந்தத் தீபாவளித் திருநாள் ஒளி வீசட்டும்!!

    *****

    கதாசிரியர் – மாணவி,
    ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

     

     

    Share
  • புள்ளக்குட்டிக்காரி!

    -முனைவர் பா. ஜெய்கணேஷ்

    “இது எத்தனாவது”

    “ஏழு மா”

    “உங்க வீட்டுக்கார் என்ன வேல செய்யறார்”

    “லாரியில கம்பி ஏத்தற வேலதாங்க”

    “அந்த ஆளுகிட்ட சொல்லுமா. இத்தோட குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் பண்ணிரலாம்னு”. கவுர்மண்ட்டு ஆஸ்பத்திரி நர்ஸ், ராஜேஸ்வரிகிட்ட சொன்னப்பா அவளோட முகம் வெளிறிப் போச்சு.

    “என்ன நர்ஸம்மா சொன்னீங்க. அத்தோட அந்த ஆளு என்ன நடுரோட்டுலயே வச்சி வெட்டிருவான். நல்ல வேள அந்த ஆளு இங்க இல்ல. இல்லனா உங்ககிட்ட இந்நேரம் மல்லுக்கு நின்னிருப்பான்”.

    “என்னமோ போங்க எனக்கு என்ன? நீதான் நாளைக்கு அவஸ்த படப்போற. அந்த ஆளுக்கு என்ன? படுத்தானா? எந்திரிச்சு போனானான்னு போயிடப் போறான். வருஷா வருஷம் சாகிறது நீ தான. திருந்தவே மாட்டீங்கன்னு” நர்ஸ் அம்மா சொல்லிக்கிடே டாக்டர் கூப்பிட உள்ள போச்சு.

    “சின்ன வயசுலயே புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. எங்க அப்பன் ஒரு குடிகாரன். எங்க அம்மா மட்டும் என்ன பண்ணும். அதுவும் அஞ்சும் பொண்ணுங்க நாங்க. எல்லாரையும் கரையேத்தறதுக்குள்ள எங்க அம்மா போய் சேர்ந்துருச்சு. எனக்கு வாய்ச்சவன் இவன்தான். ஆறு பெத்து கீழ இறக்கிட்டன். வயித்துல இருக்கற இது ஏழாவது. எல்லாம் என் தலையெழுத்துன்னு” பக்கத்துல இருந்த ஆயாகிட்ட புலம்பிக்கிட்டுக் கிடந்தா ராஜேஸ்வரி.

    “எனக்கு முதல்ல பொண்ணுதான் பொறந்துச்சி. ஆஸ்பத்திரியில உயிர கையில புடிச்சி படுத்துக்கிட்டு இருந்தன். இந்த ஆளுக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருந்தாங்க. வேக வேகமா உள்ள வந்தான். என்ன கத்தப்போறானோன்னு ஈரக்குலலாம் நடுங்கி கிடந்துச்சு. கையில தூக்கினான். நான் அவனையே பாத்தான். அப்ப அவன் ஒன்னு சொன்னான்.

    “புள்ளையில என்ன பொம்பள புள்ள ஆம்பள புள்ள. எங்க ஆத்தா பொம்பளதான. என்கூட பொறந்ததுங்கள்ல நாலு பொம்பள புள்ள தான. உன்னை எதுக்கு கல்யாணம் பண்னன். உங்க வீட்டுல அஞ்சும் பொம்பள புள்ளைங்க. உங்க ஆத்தா என்ன பாடு பட்டிருப்பான்னுதான் உன்ன பண்ணிக்கிட்டன். மகாலட்சுமிய பெத்துத் தந்திருக்க. அதனால இவ பேரு மகாலட்சுமின்னு வைக்கலாம்னு” அவன் சொல்லிட்டு நின்னப்ப,

    “எனக்கு அவன் மேல வந்த மரியாதைக்கே அளவில்லாமப் போச்சு. இவனுக்காக என் உடம்பு என்ன ஆனாலும் பரவாயில்ல. எத்தன புள்ள வேணா பெத்துத் தரலாம்ணு தோணுச்சு. அதுக்கப்பறம் எனக்குப் பொறந்தது எல்லாமே ஆம்பள புள்ளைங்கதான்னு” ராஜேஸ்வரி எதிர்ல இருந்த இன்னொரு கர்ப்பிணிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கறப்ப அவ கண்கள்ல இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிஞ்சுது.

    “சரி ஆத்தா நான் கிளம்பறன். புள்ளைங்க வீட்டுல தனியா கிடக்கும். அவ அக்காவும் இவரோட அம்மாவும்தான் எல்லாத்தையும் பாத்துக்குவாங்க. நான் வேலையோட போய் சேரன்னு” அங்கிருந்து கிளம்பினா ராஜேஸ்வரி.

    ஓட்டு வீடுதான். ஒரே ஒரு அறைதான். ஒரு சமையல்கட்டு. மொழுவன அடுப்பு. கொஞ்சமான பாத்திரங்கதான். ராஜேஸ்வரிக்கு மீனுனா உசுரு. ஒவ்வொரு புள்ளயும் பொறந்த அஞ்சாம் நாளே புள்ளைய கிழவிகிட்ட விட்டுட்டு, தன்னோட நீண்ட முடிய வாரி எடுத்து ஒரு கொண்டைய போட்டுக்கிட்டு, ஒரு பெரிய தூக்கு எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்குப் போய் குழம்பு மீனையும் வறுக்கற மீனையும் வாங்கியாந்து கால நீட்டிப்போட்டு அருவாமனையில உக்காந்து ஆஞ்சியெடுத்து சட்டியில தெருவே மணக்க மணக்க குழம்ப வைச்சு கவல மீன மொறு மொறுன்னு வறுத்து எடுத்து சூடா சோத்தப் போட்டு வக்கணையா வாயில ஒரு உண்டைய போடறப்பதான் அவளுக்கு உசுரே வந்த மாதிரி இருக்கும்.

    ”ஏண்டி ராஜேஸ்வரி. பச்ச உடம்புக் காரி. இப்படியா மார்க்கெட்டுக்குப் போய் வருவ. அப்படி என்னதாண்டி அந்த மீன்ல வச்சிருக்கன்னு” எதிர்த்த வீட்டுக்காரி கேக்கறப்ப,

    “அடப் போக்கா. இதல்லாம் உனக்கு சொன்னா புரியாது. அது மூக்க துளைச்சி, நாக்குல வழிஞ்சி உள்ள போற விஷயம். அத அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு” ராஜேஸ்வரி சொல்லிட்டு போயிருவா.

    நல்ல உயரம். சிகப்பிதான் அவ பட்டபேரு. ரோட்டுல நடந்தா நாலு கண்ணு இல்ல நானூறு கண்ணுங்க அவமேல படும். அப்படி ஒரு அழகு. ஒருமுறை ரோட்டுல ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அந்தப் படத்துல வைஜெயந்தி மாலா நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அந்த ஷூட்டிங்க ராஜேஸ்வரி வேடிக்க பாத்துக்கிட்டு இருந்தப்ப அந்தம்மாவோட கண்ணு இவ மேல பட்டுச்சு. ராஜேஸ்வரிய கிட்ட கூப்பிட்டவங்க “நீ ரொம்ப அழகா இருக்க. உன் கூட ஒரு போட்டோ எடுத்துக்கவான்னு கேட்டாங்கலாம். ராஜேஸ்வரிக்கு கையும் ஓடல காலும் ஓடல. பதற்றத்துலயும் கூச்சத்துலயும் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா. அன்னைக்கு சாயங்காலமே ஒரு பிரிண்ட் போட்டு ராஜேஸ்வரிக்கு ஒரு போட்டோவை வீடு தேடி வந்து கொடுத்துட்டு போச்சாம் அந்த அம்மா”.

    கொஞ்சா நாட்கள்லயே ஏழாவது புள்ளயும் பொறந்துச்சு. ஹாஸ்பத்திரியில அன்னைக்குப் பெரிய சண்டையே நடந்துச்சு. கிருஷ்ணன் யார் சொல்லியும் கேக்கல. “இதல்லாம் பேச உங்க யாருக்கும் உரிமை இல்ல. அவ என் பொண்டாட்டி. நான் சொல்றததான் கேப்பான்னு” கோவமா கத்திக்கிட்டே வெளியில போனான்.

    பதினோராவது புள்ள பொறக்கவரைக்கும் ஆஸ்பத்திரியில இதே தகராறுதான். ஏழு வருஷம் கடந்தும் அவன் மனசுல எந்த மாற்றமும் இல்ல.

    “மகாலட்சுமிக்கு இப்ப பதினாறு வயசு ஆயிருச்சு. பக்கத்து தெருவுல ராம்குமார்னு  ஒரு பையன் இருக்கான். இவளதான்  கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கானாம். குடும்பம் கூட நல்ல குடும்பம்னு கேள்விப்பட்டன். கல்யாணம் பண்ணி வச்சிரலாமான்னு”
    ராஜேஸ்வரி கிருஷ்ணன் கிட்ட சொன்னப்ப  “அதுக்கென்ன பண்ணி வச்சிட்டாப் போச்சுன்னு” கிருஷ்ணன் சொல்ல பெருமூச்சு விட்டா ராஜேஸ்வரி.

    “வீட்ட மாத்தணுங்க. ரெண்ரு ரூம் இருக்க வீடாப் பாருங்க. மருமகன்லாம் வந்தா அவங்களுக்குன்னு தனியா ஒதுக்கணும்னு” ராஜேஸ்வரி சொன்னப்ப “ஆமா ஆமா மாத்தணும். சீக்கிரமே மாத்திடறன்னு சொல்லிட்டு” வெளிய கிளம்பினான் கிருஷ்ணன்.

    கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்குப் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்த அன்னைக்கு ராத்திரி முதல் இரவு.

    “புள்ளைங்க எல்லாம் தூங்கிருச்சாடின்னு” கிருஷ்ணன் கேட்டான்.

    “ஏங்க எதுக்க இப்ப கேக்கறிங்க. பொண்ணயே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அவளுக்குப் புள்ள பொறக்க நேரத்துல எனக்கும் புள்ள பொறக்கணுமான்னு” சொல்லி முடிக்கற நேரத்துல விழுந்த அடியில அலற ஆரம்பிச்சா ராஜேஸ்வரி. எல்லாரும் முழிக்க மாப்பிள்ளையும் பொண்ணும் அலறி ஓடிவர அன்னைக்கு ராத்திரி எல்லாருக்கும் சிவராத்திரிதான்.

    “என்னடி நினைச்ச என்ன? ஆம்பளடி நானு. எனக்கு என்ன வயசாயிருச்சா? இல்ல உனக்குதான் வயசாயிருச்சா? இன்னும் பத்து பெத்துக்குவண்டி. என்ன யார் கேக்க முடியும்னு” கிருஷ்ணன் பேசின பேச்சுல அடுத்த நாளே பொண்ணும் மாப்ளையும் ஊருக்குக் கிளம்பிட்டாங்க.

    மாசம் ஓடிப்போச்சு. ஒருநாள் ராஜேஸ்வரிக்கு ஒரு போன் வந்துச்சுன்னு கடைகாரன் கூப்பிட போன கையில எடுத்தப்ப “அம்மா நான் மகாலட்சுமி பேசறன். நீ எப்படி இருக்க. உன் கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்னுதான் பண்ணன்”னு அவ சொல்றப்பவே ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிச்சுருச்சு. மவராசியா இருடின்னு அவள வாழ்த்திட்டு திரும்பி வந்த ராஜேஸ்வரி எதையோ ஒன்ன மென்னு முழுங்கிக்கிட்டே வீட்டுக்கு வந்து சேந்தா.

    ஏழாம் மாசம் வீட்டுக்குள்ள மகாலட்சுமி நுழையறப்பவே கத்த ஆரம்பிச்சிட்டா. “ஏன்மா உனக்கு அசிங்கமாவே இல்லையா? அந்த ஆளுக்குதான் அறிவு இல்ல. உனக்குமா. என்னதான் ஜென்மங்களோ?”

    “என்ன என்னடி பண்ண சொல்ற. அந்த ஆளப்பத்திதான் உனக்குத் தெரியுமே. இங்க பாரு அந்த ஆளு என் புருஷன். அவன் நீ பொறந்தப்ப என்ன தெரியுமா சொன்னான்.”

    “நிறுத்துமா. நீ இதச் சொல்லியே பன்னிரண்டு பெத்துட்ட. இப்ப பதிமூணாவது. பொண்ணும் ஏழாம் மாசம். அம்மாவும் ஏழாம் மாசம். மாத்தி மாத்தி வளைகாப்பு செஞ்சிக்குவோம். நல்லா இருக்குமா தாயின்னு” மகாலட்சுமி சொல்றப்பவே மூலையில உக்காந்து அழுதுகிட்டு இருந்தா ராஜேஸ்வரி.

    ராஜேஸ்வரிக்குப் பதிமூணாவதா பொறந்தது பொண்ணு. மகாலட்சுமிக்கும் பொண்ணு. மகாலட்சுமியோட புருஷன் அமைதியா இருக்கறதாலயும் அவங்க வீட்டுல மகாலட்சுமிய எல்லாருக்கும் புடிச்சுப் போனதாலயும் எந்தப் பிரச்சினையும் இல்ல. அப்பாவோட முரட்டு குணம் தெரிஞ்ச பொண்ணும் அமைதியாயிட்டா.

    ஒரு  வருஷம் கழிச்சு மகா போன் பண்ணா அம்மாவுக்கு. என்னடின்னு ராஜேஸ்வரி கேக்கறப்பவே “நீ எத்தனாவது மாசம் சொல்லுன்னு சொன்னா?”

    ராஜேஸ்வரி வெக்கப்பட்டுக்கிட்டே “இது நாலாவது மாசம்டின்னு” சொன்னா.அதான் தெரியும்மே அதுக்குதான் கேட்டன்.

    “நான் இப்ப மூணு. ஏழாம் மாசம் வரன் பாத்துக்கோன்னு” போன வச்சிட்டா.

    ஆஸ்பத்திரியே அன்னைக்கு அரக்க பரக்க கிடந்துச்சி. கிருஷ்ணன் துள்ளிக் குதிச்சிட்டுக்கிட்டு இருந்தான். “ ஏய் ஆத்தா எனக்கு ரெட்ட புள்ள. எப்படி சிங்கங்க மாதிரி இருக்காணுங்க பாருன்னு” எல்லாருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்துட்டு இருந்தான்.

    மகாலட்சுமி வயித்த தள்ளிக்கிட்டு ராஜேஸ்வரி இருந்த அறைக்குள்ள நுழைஞ்சப்ப வெக்கத்துல கண்ண மூடிக்கிட்டுப் படுத்து இருந்தா அவ.

    “இந்த வெக்கத்துல ஒன்னும் குறைச்சல் இல்ல உங்களுக்கு. வெக்கத்தப்பாரு வெக்கத்த. காலம் போன காலத்துல ரெட்ட புள்ள வேற. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்வன் நானுன்னு” அவ புலம்பிக்கிட்டே தன்னோட தம்பிங்க கன்னத்த கிள்ளி முத்தம் தந்துக்கிட்டு இருந்தா. ஓரமா நின்னுக்கிட்டு இருந்த மாப்பிள “அத்த உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு” ஆரம்பிச்சார்.

    “சொல்லுங்க மாப்பிளைன்னு” ராஜேஸ்வரி கேக்க, “உங்களுக்கு இப்ப பதினாலு புள்ள ஆயிருச்சு. எனக்குப் பொறக்கப் போறது ரெண்டாவது. நானும் மகாலட்சுமியும் ரெண்டு போதும்னு முடிவுக்கு வந்துட்டோம். அவ குழந்தை பொறக்கறத நிறுத்திக்கிட்ட பிறகும் நீங்க புள்ள பெத்துக்கிட்டு இருந்திங்கனா எங்க எல்லாருக்கும் அசிங்கம். அதனால ஆபரேஷன் பண்ணிருங்க அத்தன்னு” தயங்கித் தயங்கி அவர் சொல்லி முடிச்சப்ப ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து தண்ணி வழிய ஆரம்பிச்சிருச்சு.

    மகாலட்சுமிக்குப் பையன் பொறந்தான். குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனுக்குத் தயார் ஆயாச்சு. பக்கத்துப் படுக்கையில ராஜேஸ்வரியும் படுத்து இருந்தா அதே ஆபரேஷனுக்கு.

    “அத்த ஒன்னும் கவலப் படாதீங்க. மாமா ஊருல இருந்து வரதுக்குள்ள எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும். அவர் வந்த பிறகு சொல்லிக்கலாம்னு” மருமகன் சொல்லி முடிக்கறதுக்குள்ளயே அவ ஒடுங்கியும் நடுங்கியும் படுத்து இருந்தா.

    எதிர்த்த வீட்டுக்காரி வேகமா ஓடி வந்தா. “அண்ணி அண்ணி உள்ள போய் கதவ சாத்திக்கோங்க. அண்ணனுக்கு யாரோ தகவல் சொல்லிட்டாங்க. கத்திய எடுத்துக்கிட்டு ஓடி வரார். மாப்ள நீங்களும் எங்கயாவது போயிருங்க. அந்த ஆளு கொல கூட பண்ணத் தயங்க மாட்டான்னு” சொல்லி முடிச்சா.

    ராஜேஸ்வரி சின்னப்புள்ளைங்கள கூப்பிட்டுக்கிட்டு உள்ள போய் கதவ சாத்திக்கிட்டு அழுதுகிட்டே கிடந்தா. வெளியில பயங்கர சத்தம். கிருஷ்ணனோட குரல் தெரு முழுக்கக் கேட்டுச்சு. நல்லா தண்ணி அடிச்சு இருந்தான்.

    “எவன்டா என்ன கேக்காம என் பொண்டாட்டிக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணது. மருமகன்னா என்ன வேணா பண்ணலாமா? என் பொண்ணதான் அவனுக்குக் கட்டிக் கொடுத்தன். அவன் பொண்டாட்டிக்கு அவன் பண்ணது சரி. என் பொண்டாட்டிக்கு ஏன் பண்ணான்.

    பெரியவங்க கல்யாணத்து அன்னைக்கு என்ன சொன்னாங்க. பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும்னு. அதுவும் அத சொன்னது எங்க அப்பத்தா. அது வாக்க காப்பாத்ததாண்டா இவ்ளோ போராடினன். பதினாலுதாண்டா பெத்தன். பதினாறு பெத்துமுடிக்கறதுக்குள்ளயே இப்படி பண்ணிடிங்களேடா. பாவிப்பயலுகளா?ன்னு” கிருஷ்ணன் போட்ட கூப்பாடு, அவனோட அழுகை, கோபம், வெறி எல்லாம் சேந்து காத்துல கரைஞ்சிக்கிட்டு இருந்துச்சு.

    “மாமா வந்து அத்த முகத்த பாருங்க. நான் பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க. எந்திரிச்சு வாங்க. ஒருமுறை பாருங்க. இத்தன வருஷம் தான் பேசாமலே இருந்துட்டீங்க. கடைசியா ஒருமுறை பாக்கவாவது செய்யலாம்லன்னு” மருமகன் சொல்றப்ப கைய உதறிட்டு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டார்.

    “எத்தன முறையா உன் கிட்ட சொன்னன். ஏழாவது புள்ள அப்பவே ஆபரேசன பண்ணிரு பண்ணிருன்னு தலப்பாடா அடிச்சுகிட்டன். கேட்டியா நீ. அன்னைக்குப் பண்ணியிருந்தா இந்தக் கற்பப் பையில பாழாப் போன கேன்சர் வந்திருக்குமா? அவளும்தான் இவ்வளவு சீக்கிரமா செத்து இருப்பாளா. நீங்கலாம் திருந்தவே மாட்டிங்கையா?ன்னு அந்த ஆஸ்பத்திரி நர்ஸ் சொன்ன வார்த்தைகள் கிருஷ்ணனனோட காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்துச்சு.

    சேகண்டி சத்தம் எழுப்ப, சங்கு தெருவெங்கும் முழங்க, பறை இசை காதுகளைத் தொலைத்து கால்களை ஆடவைக்க ரெண்டு பெண்களும் அழுது புலம்ப புள்ளைங்க எல்லாம் பாடையைத் தோளில் ஏந்த பேரப்பிள்ளைகள் தீப்பந்தம் சுற்ற கிளம்பினாள் ராஜேஸ்வரி.

    “புள்ளக்குட்டிக்காரிடா? எப்படி கம்பீரமா போறான்னு” எதிர்த்த வீட்டுக்காரியின் பேச்சு ராஜேஸ்வரியின் காதில் உள்நுழைய எத்தனித்த படியே கிடந்தது.

    *****

    கதாசிரியர் – துறைத்தலைவர், தமிழ்த்துறை,
    அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
    காட்டாங்குளத்தூர் – 603203

     

    Share