பேனா எனும் பிறப்புறுப்பு
-பாலு
அந்த அந்தி நேரத்தில் ஆண்டுகள் கழித்து கேத்ரினைக் காண்கிறான் திவாகர். சந்தோஷ் நாராயணன் இசையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது கோயம்பேடு நிறுத்தத்தில் கேத்ரின் ஏறுவதைக் கண்டதும் தன் காதணிகளைக் கழற்றினான்.
திவாகரும் கேத்ரினும் கல்லூரிக் காலத்து நண்பர்கள். கல்லூரியில் திவா, தீபாவைக் காதலித்துக் கொண்டிருந்தான். திவாகருக்கும் தீபாவிற்கும் கேத்ரின் தான் வெள்ளைப் புறா. திவாவிற்காகப் பல உதவிகள் செய்திருக்கிறாள் கேத்ரின். திவாவும் தீபாவும் சண்டை போட்டுக் கொண்ட சமயத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பதற்கான முயற்சியும் எடுத்தாள். ஆனால் பலன் பெறவில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்தபோது, திவா – தீபா காதலும் முடிந்திருந்தது.
இப்போது இரண்டரை ஆண்டுகள் கழித்து, திவாவால் கேத்ரினைத் தான் பார்க்க முடிந்ததே தவிர தீபாவைத் தொடர்புகொள்ளக் கூட முடியவில்லை. கேத்ரினும் திவாவும் புன்னகைத்துக் கொண்டனர். திவா அவளிடம் தன்னருகில் வந்து அமருமாறு சைகை செய்தான்.
“எப்படி டா இருக்க?” என்றாள் கேத்ரின்.
“ஏதோ இருக்கேன். நீ எப்படி இருக்க? மேடம் ரொம்ப பிஸி ஆகிட்டீங்க போல? ஆளையே பாக்க முடியல! கடைசியா டிகிரி செர்டிபிகேட் வாங்குனப்ப பார்த்தது!” என்றான் திவா.
“ஊர்ல இருந்தேன் டா.. இப்போ ரீசெண்டா தான் சென்னை வந்தேன். இங்கதான் வொர்க் அதிகமா இருக்கு. சோ, ரூம் எடுத்துத் தங்கிட்டேன்”
“என்ன வொர்க் பண்ற?”
“இப்பத்திக்கி ஒரு மேகசின்ல கன்டென்ட் ரைட்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்”
“ஓ! குட்”
“நீ எங்க வொர்க் பண்ற திவா?”
“நான் எங்கயும் வொர்க் பண்ல. இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். பார்ப்போம்! வாழ்க்கை என்ன எங்க கூட்டிட்டு போகுதுனு” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டான் திவா.
“ஓ வாவ்! ஆல் தி பெஸ்ட் டா” என்றதும் திவா புன்னகைத்தான். இரண்டு நிமிட மௌனத்திற்குப் பிறகு
“கேத்ரின்.. தீபா வ பாக்குறியா? அவ எங்க இருக்கா? ஏதாச்சும் விவரம் தெரியுமா?”
“இல்ல திவா.. காலேஜ் முடிஞ்சி அப்புறம் அவள பாக்கவே இல்ல.. ரெண்டு மூனு தடவ கால் பண்ணி பேசுனேன். அப்புறம் அந்த நம்பருக்கு கால் போகவே இல்ல.. நா ஜெயா கிட்ட கேட்டு தீபாவோட புது நம்பர் இருந்தா வாங்கி உனக்கு அனுப்புறேன். உன் நம்பர் குடு” என்று திவா எண்களை வாங்கிக் கொண்டாள்.
அன்று முதல் திவாகரும் கேத்ரினும் நிறைய பேசிக் கொண்டனர். ஆனால் கேத்ரின் ஜெயாவிடம் தீபாவின் எண்களைக் கேட்கவும் இல்லை திவாகரும் அதைப் பற்றி கேட்டுக்கொள்ளவில்லை. இப்படியே ஒரு மாதம் கழிந்தது.
திவாகர் நன்றாக கவிதை எழுதுவான். ஒரு அழகான பெண்ணைப் பார்த்து விட்டால் அந்த இரவு அவளுக்காக ஒரு கவிதை எழுதாமல் அவன் கண்ணிமைகள் மூடா. அவன் கவிதை டைரியில் நூற்றுக்கணக்கான அழகிகள் குடித்தனம் செய்து வருகின்றனர். அவன் கவிதைகளை ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் பகிர்வான். இன்று அவன் ஏதோ ஒரு அழகிக்காக எழுதிய கவிதையைத் தன் நண்பர்களுக்கு அனுப்பும்போது கேத்ரினுக்கும் அனுப்பினான்.
“என் இலக்கியத்தில்
பல அந்தாதிகளும் நீ
பல ஹைகூக்களும் நீ
பல ருஷ்ய கவிதைகளும் நீ”
என்று திவாகர் அனுப்பிய கவிதையைப் படித்து விட்டு கேத்ரின், அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். “எனக்காக நீ எழுதிய கவிதை மிகவும் அழகாக உள்ளது. இதை விட அருமையாக யாராலும் காதலை வெளிப்படுத்த முடியாது. நல்ல வேளையாக நான் சொல்வதற்கு முன்பே நீ சொல்லிவிட்டாய்!”
இதைப் படித்ததும் திவாகர் ஒரு நிமிடம் ஆச்சரியமடைந்தான். அதே சமயம் அவனுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் திவாகருக்கும் கேத்ரினைப் பிடித்திருந்தது. கடந்த ஒரு மாதமாக அவன் நிறைய அவளிடம் பகிர்ந்திருக்கிறான். ‘இது காதலா? நட்பா?’ என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு அவன் பேனாவாலும் ஏதோ ஒரு அழகியாலும் பதில் அறிய முடிந்தது.
திவாகரும் கேத்ரினும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். நிறையப் பேசி, நிறையச் சுற்றி, நிறைய இசை கேட்டு, திகட்டத் திகட்டக் காதலித்தார்கள். கேத்ரினின் காதல் மழையில் நனைந்து கொண்டிருந்த திவாகர் தன் பேனாவை எடுத்து
‘எழுத்துகள் அடங்காக் காவியம் நீ
வர்ணங்களில் அடங்கா ஓவியம் நீ
ரௌத்திரம் பழகி எழும் பாரதி நீ
‘என்று எழுதி கேத்ரினிடம் அவளுக்கான முதல் கவிதையை கொடுத்தான். அவள் அதை படிக்கும்போது வெட்கத்தோடு புன்னகை மிளிர்ந்தது.
“எப்படி இருக்கு?” என்றான் திவா.
“எல்லாம் ஓகே. அது ‘அடங்காக் காவியம்’ இல்ல. ‘அடங்கா காவியம்’ நடுல ‘க்’ வராது என்று கேத்ரின் சொன்னதும் திவாகருக்கு ‘ஏன் தான் கவிதை கொடுத்தோமோ’ என்றாகிவிட்டது (உண்மையில் அடங்காக் காவியத்துக்கு ஒற்று மிகும்). அன்று முதல் திவா அவளுக்காகக் கவிதை எழுதுவதையே விட்டுவிட்டான். கேத்ரின் திவாவின் காதலை பெற முடிந்ததே தவிர, கவிதையைப் பெற முடியவில்லை. இப்படியே சில நாட்கள் கடந்தன.. திவா கேத்ரினிடம் கவிதைகளைத் தவிர எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டான். கேத்ரின், திவாவிடம் காமத்தைத் தவிர எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாள். ஆம்! இருவரும் இதுவரை ஒரு முத்தம் கூட கொடுத்துக் கொள்ளவில்லை. இதைப் பற்றி கேத்ரினுக்கு ஒரு வருத்தமும் இல்லை. திவா தான் கவலைப்பட்டான். ஒரு நாள் வெட்கத்தை விட்டு அவளிடமே கேட்டுவிட்டான்.
“கேத்ரின்.. நம்ம கிஸ் பண்ணிக்கலாமா?”
“ஹ்ம்ம்… பட், இப்ப வேணாம்”
“ஏன்?”
“எனக்கு மூட் இல்ல”
“அப்ப எப்போ?”
“எனக்கு எப்போ கொடுக்கணும்னு தோணுதோ, அப்போ நானே தரேன்”
“அப்போ எனக்கு மூட் இல்லன்னா?”
“ஓ! பாக்றேன். நான் கொடுக்கும்போது நீ எப்படி அவாய்ட் பண்றன்னு” என்று திமிராகக் கூறினாள். திவாகர், கோபத்துடன் தன் டைரியை எடுத்து,
‘நான் என்றோ
ஒருநாள்
எழுதப் போகும்
ஏதோ ஒரு புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்தில்
ஏதோ ஒரு வரியில்
அவள் கொல்லப்படுவாள்
அல்லது முத்தமிடப்படுவாள்
என்பது மட்டும்
எனக்குத் தெரியும்’
என்று கேத்ரினுக்கான தன் இரண்டாவது கவிதையை எழுதினான். ஆனால் இதையும் அவளிடம் காண்பிக்கவில்லை. தவறாக எடுத்துக்கொள்வாள் என்பதற்காக அல்ல. இதிலும் தப்பும் தவறுமாக ஏதாவது பிழை காண்பாளோ என்று பயந்துதான். இரண்டு நாட்களுக்குப் பிறகு. திவாகர் ஆர்வமாகத் தன் நாவலை எழுதிக் கொண்டிருந்தான். எழுதுவதற்கு முன்பு வசனத்தைச் சொல்லிப் பார்த்துக் கொள்வது திவாகரின் வழக்கம். அந்தச் சமயத்தில் கேத்ரின் தன் வீட்டிற்குள் வருவதைப் பார்த்ததும் அமைதியாக எழுதினான். சண்டையை சமாதானப் படுத்துவதற்கு கேத்ரினே திவாவை முத்தமிட்டாள். அவள் சொன்னது போல் இவனால் அதை மறுக்க முடியவில்லை. அவன் வாழ்க்கையில் பெற்ற மிகப் பெரிய முத்தம் அதுதான். ஓர் உரையாடலின் தொடக்கமாக தேநீர் இருப்பது போல, ஒரு காதலின் தொடக்கமாக உரையாடல் இருப்பது போல, ஒரு முத்தத்தின் தொடக்கமாகக் காதல் இருப்பது போல, ஒரு கலவியின் தொடக்கமாக இந்த முத்தம் இருந்தது. திவாகர் எழுதி வரும் நாவலில் கதாநாயகன் தன் காதலைத் தெரிவிக்கும் முன்னமே இந்தக் கலைஞனைக் காம வசத்தில் இழுத்துவிட்டாள் கேத்ரின். காமம் தீர்ந்த பின்பு பெருமூச்சு விட்டபடி,
“திவா. சே சம்திங் நைஸ்” என்றாள் கேத்ரின்.
“நா உன்ன இந்த அளவுக்கு லவ் பண்ணுவேன்னு நினைச்சி கூட பாக்கல தீபா” என்று திவா சொன்னதும் அதிர்ந்து போனாள் கேத்ரின்.
கண்ணீரைத் துடைத்தபடி ஆடையை அணிந்துகொண்டு வேகமாய் வெளியேறிய கேத்ரினிடம்
“ஐயோ கேத்ரின்! அது என் நாவல்ல வர வசனம். நீ தப்பா எடுத்துக்காத” என்று சமாதானம் சொல்லி, அவளையே பின்தொடர்ந்தான் திவாகர்.
இவர்கள் காதல் சேர, அந்தக் கவிதை காரணமாக இருந்ததுபோல் இவர்கள் காதல் பிரிய அந்த வசனம் காரணமாகி விடுமோ? எழுத்தாளர்களின் வாழ்க்கையில் இந்த வார்த்தைகள் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கின்றனவோ?