(Peer Reviewed) சிலம்பில் பெண்களின் அவல நிலை
கு.வளா்மதி,
உதவிப் பேராசிரியா்,
தமிழ்த் துறை,
தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி
சிலம்பில் பெண்களின் அவல நிலை
முன்னுரை
ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது, ‘சிலப்பதிகாரம்’ ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒற்றுமைப் பண்புகளால் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று போற்றப்படுகின்றன. இன்பமும் துன்பமும் நிறைந்த மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மையப்படுத்தியே இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியங்களில் கதைமாந்தா் படுகின்ற துன்ப நிலையைக் கண்டு வாசகா்கள் இரக்கம் கொள்கின்றனா். இந்தத் துன்ப நிலையே ‘அவலம்’ என்று கூறப்படுகின்றது. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பெரும்பான்மையும் அவலம் இடம் பெற்றுள்ளதால், இது ‘அவலக் காப்பியம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு காப்பியத்தில் முதன்மை மாந்தா், துணை மாந்தா் என்று மாந்தா்கள் பலா் இருப்பா். இளங்கோவடிகள் தோற்றுவித்த மாந்தா்கள் அவா் நினைத்த செயலை வெற்றியோடு செய்து முடித்து விடுகின்றனா். சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள மாந்தா்களில் பலா் – முக்கியமாக முதன்மை மாந்தா்கள் ‘அவல மாந்தா்’களாகவே காணப்படுகின்றனா். ‘சிலம்பில் பெண்களின் அவல நிலை’ பற்றி ஆராய்வதே இங்கு நோக்கமாகின்றது.
அவலம் – விளக்கம்
அவலம் என்பதற்கு ‘வருத்தம்’ அல்லது ‘துன்பம்’ என்று பொருள் கொள்ள முடியும். இதனை ஆங்கிலத்தில் ‘Tragedy’ என்று கூறுகின்றனா்.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “அவலம் என்பதற்கு வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை”1 என்று பொருள் கூறியுள்ளது.
தொல்காப்பியா் ‘அவலம்’ என்பதனை ‘அழுகை’ என்னும் பொருள்படக் கூறியுள்ளார்.
“இழிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” 2
என்று அவலம் தோன்றுவதற்குரிய நிலைக் களன்களைத் தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார். ‘இவை நான்கும் தன்கண் தோன்றினும், பிறன்கண் தோன்றினும் அவலமாகும்’ என்பது பேராசிரியரின் கருத்தாகும்.
சிலப்பதிகாரத்தில் அவலத்தின் நிலைக் களன்கள்
சிலப்பதிகாரத்தில் பிறரால் இகழப்பட்டு எளியனாகும் துன்பத்தைத் தரும் அவலமான ‘இழிவு’ என்பது காணப்படவில்லை. ஏனெனில், இந்நிலை பின்னால் மாறும்; அதை மாற்றும் நிலைமையும் வந்து சேரும்.
‘இழவு’ என்பது மீட்க முடியாத தன்மை உடையதாக – பேரிழப்பாகத் தோன்றினால், அவலம் மேலோங்கும். அன்புடையாரின் உயிரிழப்பு, இணையற்ற இழப்பாகச் சிலம்பில் காட்டப்பட்டுள்ளது.
ஓா் உயர்ந்த குறிக்கோளினைக் கொண்டு படைக்கப்படும் காப்பியத்தில் வறுமை களைந்து வளம் சேர்க்க வேண்டும் என்னும் உயரிய நோக்கம் மிக்கிருப்பதால், ‘வறுமை’ என்ற நிலையில் சிலப்பதிகாரத்தில் மிகுதியும் அவலச் சுவை இடம்பெறவில்லை என்று கூறமுடியும்.
‘அசைவு’ என்பது, முன்பு இருந்த நன்னிலை மாறிப் பொலிவு கெட்டு, வேறொரு துயர நிலையை எய்தி அதனால் இறந்துபடுதல் என்பதாகும். தன் செயல்களினாலோ, குறைபாட்டினாலோ பலரும் போற்ற வாழ்ந்தவன் வீழ்ந்து படுகின்ற நிலையே இவ்வசைவாகும். இவ்வாறு வீழ்ச்சியுறுகின்ற அவல வீரர்களுக்காக இரக்கமும் அனுதாபமும் ஏற்படுவது இயற்கை.
இவை தவிர, பிரிவின்கண் தோன்றும் அவலமும் பெரிதாகச் சிலப்பதிகாரத்தில் காட்டப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரக் காப்பியப் போக்கு
சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள், ‘புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்’ என்று மூன்று காண்டங்களாகப் பகுத்துள்ளார். சிலப்பதிகாரக் காப்பியப் போக்கைக் கொண்டு ஐந்து பகுதிகளாகப் பகுக்க முடியும்.
- ‘கோவலன் – கண்ணகி திருமணத்தில் தொடங்கி, கண்ணகியின் பிரிவுத் துயர் வரை (1 – 4 காதைகள்)
- மாதவியிடம் மையல் கொண்ட கோவலன், மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சேரும் வரை (5 – 8 காதைகள்)
- புகாரிலிருந்து கோவலன் – கண்ணகி மதுரை செல்லுதல் வரை (9 -12 காதைகள்)
- கோவலன் கொலைக்களப்பட்டது முதல் கண்ணகி வழக்குரைத்து, மதுரையை எரிப்பது வரை (13 – 23 காதைகள்)
- கண்ணகி பத்தினித் தெய்வமாகும் இறுதி நிகழ்ச்சி வரை (24 – 30 காதைகள்)’
காப்பியத்தின் தொடக்கத்தில் திருமணம், அதனைத் தொடர்ந்து மாதவியுடன் ஊடல், கண்ணகியின் கனவு, மதுரை வாழ்க்கையில் அவலம் என்று இறுதி வரை சிலப்பதிகார கதைப் பின்னலில் அவலத்தைக் காண முடிகின்றது.
அவல மாந்தா்கள்
சிலப்பதிகாரத்தில் பெண்மாந்தருள் ‘கண்ணகி, மாதவி, பாண்டிமாதேவி’ ஆகியோர் அவல மாந்தர்களாகக் காட்சியளிக்கின்றனர்.
கதையின் இறுதியில் ‘மாதரி, கவுந்தி, கண்ணகியின் பெற்றோர், மாதவி, மணிமேகலை’ ஆகியோருக்கு நேரிட்ட அவலத்தை மாடலன் தொகுத்துக் கூறுகின்றான். மாதவி மேற்கொண்ட துறவு, அவலத்தை மிகுவிப்பதாக உள்ளது.
அவலமே வாழ்க்கை – கண்ணகி
சிலம்பில் கண்ணகியையே முதலில் அறிமுகம் செய்கின்றார் இளங்கோவடிகள்! கண்ணகி உற்ற அவலமெல்லாம் கோவலனால் நேர்ந்தவையே ஆகும். புகாரில் கணவனோடு மகிழ்ந்திருந்த மகிழ்ச்சியை விட கணவனைப் பிரிந்து வருந்தும் துன்பம் மிகுதி; மதுரையில் மாதரி இல்லத்தில் மகிழ்ந்திருந்த மகிழ்ச்சியை விட, கணவன் கொல்லப்பட்டுக் கிடந்த அவலம் மிகுந்தது. ஒரு மென்மையான பெண்ணின் நல்ல பண்புகள் கூட, வலிய ஆடவனின் குறைகளுக்கு முன்னால் அவளை அவலத்திற்குள் தள்ளுகின்றன. கணவனை இழந்த கண்ணகியே அவலச் சுவையின் ஆழத்தைக் காட்டுகின்றாள்.
மாதவி ஆர்வ நெஞ்சமொடு, கோவலனோடு அகம் மகிழ்ந்திருந்த வேளையில் கண்ணகி கையற்ற நெஞ்சினளாக வருந்துகின்றாள். இன்பம் துய்ப்பதற்குரிய இளமை வீணே கழிந்தது, கண்ணகிக்கு! அவள் இளமையெல்லாம் வாட, அணிகலன்களை எல்லாம் களைந்து, அவலமாகக் காட்சியளிக்கின்றாள்.
“கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து
விலங்கி நிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப”3
“அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய,
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்”4
தன்னைப் புறக்கணித்த கணவனைப் பற்றியும், காரணமாக அமைந்த மாதவியைப் பற்றியும் பழித்து ஒரு சொல்லும் சொல்லாத கண்ணகியின் பண்புநலன்கள், படிப்பவர் உள்ளத்தைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன.
வெளியுலகம் அறியாதவளாக, கணவன் என்ற நிஜத்தின் நிழலாக வாழும் கண்ணகி, மாதவியின் பொருட்டுத் தன்னைப் பிரிந்தவன் மீண்டும் வந்ததும் ‘சிலம்புள கொண்மின்’ என்று புன்னகைக்கின்றாள்; வேறு பேச்சில்லை. ‘ஏன் பிறந்தீர்? தற்போது வந்த காரணம் என்ன?’ என்று வினவின், மீண்டும் பிரிவானோ? என்ற அச்சத்தால் அவள் அமைதியாக இருந்திருக்கலாம். உளவியல் அடிப்படையில், இது ஒரு சிறந்த உத்தியாகும். ஒருவன் தவறிழைக்கும்போது, சுட்டிக் காட்டித் திருத்துதல் நலம். அவனே திருந்தி வாழும்போது அதனைப் பற்றிப் பேசாதிருத்தலே சிறப்பு. கண்ணகியும் இதனையே கையாளுகின்றாள்.
‘வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்’ என்ற பெருமைக்குரிய கண்ணகி, அவலத்தின் தொடர்ச்சியாகப் புகாரிலிருந்து மதுரைக்கு நடந்தே வருகின்றாள்.
“ ‘மதுரை மூதூர் யாது?’ என வினவ
ஆறுஐங்காதம் நம்அகல்நாட்டு உம்பர்”5
கோவலனைத் திருத்துவதற்கோ, மீண்டும் அழைப்பதற்கோ எந்த முயற்சியும் செய்யாத கண்ணகி, மதுரை செல்லலாம் ‘எழுக’ என்றவுடன் உடன் சென்றவள், கவுந்தியடிகளின் ஆதரவால் மாதரி வீட்டில் தங்கியிருக்கும் வேளையில்தான், அதுவும் தனது தவறுகளை எண்ணிக் கோவலன் வருந்திய பின்னரே சிறிது பேசுகின்றாள்.
“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”6
என மனை வாழ்க்கைக்குரிய அறங்களைக் கணவனோடு கூடி நிறைவேற்றும் நல்ல மனைவியாக வாழ முடியாத தன்னுடைய அவல நிலையை முதலில் கூறுகின்றாள், கண்ணகி! பெற்றோருக்கும் மற்றோருக்கும் தன் துன்பம் தெரியாத வண்ணம் தான் வாழ்ந்ததைச் சொன்ன கண்ணகி இறுதியில்,
“போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றெழுந்தனன் யான்”7
என்று முடிக்கின்றாள். குலத்திற்கு ஒவ்வாத, ஒழுக்கக் கேடுகளைத் தாங்கள் புரிந்தீர். யானோ பெண்களுக்கே உரிய கற்பு நெறியைக் கடைப்பிடித்ததால் ‘எழுக’ என்றவுடன் எழுந்தேன் என்பது, கண்ணகியின் பேச்சு!
கணவனின் தவறுகளைக் கண்டிக்காத, அவனோடு விவாதம் செய்யாத, தனக்கென ஒரு சுயம் இல்லாத, தன்னைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கத் தெரியாத ‘கண்ணகி’யே சிலப்பதிகாரத்தில் அவலத்தின் முழு உருவாகத் திகழ்கின்றாள்.
மதுரையில் கணவனோடு சில நாட்கள் வாழும் வாய்ப்பே கண்ணகிக்குக் கிடைத்தது. சிலம்பு விற்று வருவார், சிறந்த வாழ்க்கை அமையும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கணவன் ‘கள்வன்’ என்று கொலை செய்யப்பட்டான் என்பது அவலத்தை மிகுவிக்கும் காட்சியாக அமைந்துள்ளது.
“கணவனைப் பிரிந்த அவலம் அவளைமிகு மானுடநிலைக்கு உயர்த்தியது;
கணவனை இழந்த அவலம் அவளைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியது”8
என்று ம.ரா.போ.குருசாமி குறிப்பிட்டுள்ளார். காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைபட்டு, பத்தினியாக உருவெடுத்து நிற்கும் ஓர் அடிமை வர்க்கத்தின் எச்சமே, கண்ணகி. அவ்வாறு வாழ்ந்தவள், பாண்டியன் என்ற ஆடவனை, அரசனை எதிர்த்ததன் மூலம் புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். சிந்தித்தால், இங்கும் தன்வாழ்வு சீரழிந்ததற்காக அல்லாமல், கணவனுக்கு ஊறு நோ்ந்து விட்டதற்காகவே கண்ணகி பொங்கி எழுவதை உணர முடிகின்றது.
அடிமைகளிடம்தான் புரட்சி மனப்பான்மை தோன்றும். அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழும் ஒரு சமூகம் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு வகையில் தனது எதிர்ப்பைக் காட்டும் கண்ணகியும் நீதி இறந்ததற்காகப் போராடவில்லை. தன் கணவன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதாலேயே சீறுகின்றாள். அடிமனத்தில் அடக்கி வைத்திருந்த கண்ணகியின் உள்ளக் குமுறல்கள், எரிமலையாக வெடித்துச் சீறியதில் வியப்பொன்றும் இல்லை.
“மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைக்கோன்
கண்டளவே தோற்றான்”9
கண்ணகி, மதுரை மாநகரில் தலைவிரி கோலத்துடன், கலங்கிய உள்ளத்துடன் நீதி கேட்க வரும்போது, அவளது அலங்கோலம் அவளது அவலத்தைப் பிரதிபலிக்கின்றது.
கோவலன் கொலையுண்டபின், அவனைத் தேடி அலைந்து, அவன் உடல் கிடக்குமிடம் சென்று கதறி அழும் கண்ணகியின் நிலை, அவலத்தின் உச்சக்கட்டமாகும். இதனை,
“அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்
தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்ற”10
என்கிறார் இளங்கோவடிகள்! புகார் நகரில் அமைதியாக வாழ்ந்த கண்ணகி, மதுரையில் அரசனை எதிர்க்கவும், நகரை எரிக்கவும் காரணம், அவள் பெற்ற ‘அவலக் கொடுமைகளே’ ஆகும்.
கணவனை இழந்தபின் கற்புடைப் பெண்களைப் போல் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. தன் கணவனைப் பறிகொடுத்த கண்ணகியின் வாழ்வில்தான் அவலம் மிகுந்திருக்கின்றது. காப்பியத் தலைவியான கண்ணகி படுகின்ற துன்பங்களே, சிலப்பதிகாரக் கதையின் அவலத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. பிற பாத்திரங்கள் படுகின்ற துன்பத்தைக் காட்டிலும், கண்ணகி படுகின்ற அவலமே மிகுதியாகும்.
மாதவி சந்திக்கும் அவலம்
கணிகையர் குலத்தில் பிறந்தாலும் குலமகளாக வாழ ஆசைப்பட்ட மாதவியின் வாழ்வு, அவல வாழ்வாக அமைந்துள்ளது. கணவன் போன்ற கோவலனால் ஐயப்பட நேரிட்ட ஒரே அவலப் பாத்திரம், இரக்கத்திற்குரிய ‘மாதவி’ ஒருத்தி மட்டுமே! மாதவியின் இந்திர விழா ஆட்ட முத்திரைகளும் வேடப் புனைவுகளும் அவையோரின் ஆரவாரப் பாராட்டுகளும் கோவலன் மனத்தில் வெறுப்பையே விளைவித்தன. ஆழமான இந்த வெறுப்பின் அடையாளமாகவே கானல்வரிப் பாட்டில் கண்ணகியின் மேன்மையைப் பாராட்டிப் புகழ்கின்றான், கோவலன்.
“மன்னும் ஓர் குறிப்பு உண்டு,
இவன்தன் நிலை மயங்கினான் எனக்
கலவியால் மகிழ்ந்தாள் போல்,
புலவியால் யாழ் வாங்கித்
தானும் ஓர் குறிப்பினாள் போற்,
கானல் வரிப்பாடல் – பாணி”11
மாதவியின் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்று கோவலன் பாடுகின்றான். மாதவி அதே துன்பத்தைக் கோவலனுக்கு உண்டாக்க, அவள் பாட இருவரும் மனம் புண்பட்டுப் பிரிய நேரிடுகின்றது. தான் அடைந்த பிரிவுத் துன்பத்தைக் கோவலனுக்குப் புலப்படுத்தினால், தன் மீது இரக்கம் கொண்டு அவன் வரமாட்டானா? என்பதே மாதவியின் ஏக்கம். அந்த ஏக்கமும் பொய்த்து, அவலத்தை மிகுவிக்கிறது.
“இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்”12
கோசிகனிடம் மாதவி கொடுத்து அனுப்பிய இரண்டாம் மடல், அவளுடைய அவல உள்ளத்தின் உச்சமாக அமைந்துள்ளது. கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்ததும் மாதவி தன் அழகு நலன்களையெல்லாம் தொலைத்து, மணிமேகலையுடன் துறவு மேற்கொள்கிறாள். கோவலனைப் பிரிந்து, அவன் இறந்தவுடன் துறவு பூணும் மாதவி பாத்திரம் அவலத்திற்கு உரியதாகும்.
அரசியின் இறப்பு – அவலம்
சிறப்பு மிகுந்த பாண்டிய மன்னன், நாடக மகளிரின் நடனத்தால் ஊடல் கொண்ட அரசியின் ஊடல் தீர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளான். சூழ்நிலைக்கேற்ப பொற்கொல்லனின் வருகை அமைகிறது.
“வினைவிளை காலம் ஆதலின், யாவதும்
சினைஅலா; வேம்பன் தேரான் ஆகி”13
கதைப் போக்கை நடத்தி வைக்கின்ற பொற்கொல்லன்தான் ‘கள்வன்’ என்பது மன்னனுக்குத் தெரியாதது பேரவலமாக அமைந்துள்ளது.
வழக்குரைக்க வந்த கண்ணகியைக் கண்டதும் ‘கணவனை இழந்தாள் கடையகத்தாளே’ என்று வாயிற்காவலன் கூறியமை, பாண்டிய மன்னனின் நினைவுக்கு வரவில்லை. அவன் வாழ்க்கையில் பரபரப்பூட்டப் போகும் ஒன்றைப் பற்றி அறியாதவனாக இருக்கும் பாண்டிய மன்னனின் நிலை இரங்கத்தக்கதாக உள்ளது.
“ ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே!’எனத்
தேமொழி! உரைத்தது செவ்வை நன்மொழி;
யாம் உடைச்சிலம்பு முத்துஉடை அரியே”14
‘தேராமன்னா! செப்புவது உடையேன்’ என்று தனியாக வந்து நீதி கேட்கும் கண்ணகியின் அவலத்துடன், புகழ்மிக்க, செங்கோலாட்சி புரிந்த பாண்டிய மன்னன், நீதிநெறி பிழைத்தமை கவலைக்கிடமாக உள்ளது. கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பை உடைத்து தன் அறியாமையை இந்தப்பெண் உணர்ந்து தெளியட்டும் என்பது பாண்டிய மன்னனின் எதிர்பார்ப்பு. மன்னனின் நம்பிக்கையும் நல்ல எண்ணமும் ஒரு நொடிப் பொழுதிற்குள் நொறுங்கி விடுகின்றது. இதனால், பாண்டிய மன்னன் மீது இரக்கம் ஏற்படுகின்றது. கண்ணகி உடைத்த சிலம்பில் இருந்து மாணிக்கப்பரல் பாண்டிய மன்னனின் முகத்தில் தெறித்து விழுந்ததும், தன்னை முதன்முதலாக உணரத் தொடங்குகின்றான்.
“யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என்ஆயுள்என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே”15
பாண்டிய மன்னனின் இறப்பு மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், பொற்கொல்லனுக்கு அடுத்த குற்றவாளியாக மன்னன் காணப்படுவான்; ஆனால், தனக்குத் தானே கெடுமொழி கூறிக்கொண்டு சாகக்கூடிய கொடும்சாவே அவன் மீதுள்ள வெறுப்பைத் துடைத்து விடுகின்றது.
“கணவனை இழந்தோருக்குக் காட்டுவதுஇல் என்று
இணைஅடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி!”16
பாண்டிய மன்னனின் இறப்பு, அரசியின் முடிவுக்குக் காரணமாக அமைந்து, சிலப்பதிகாரக் காப்பியத்தில் மேலும் அவலத்தை மிகுவிக்கின்றது.
அவலத்தின் பயன்கள்
இலக்கியங்களில் இடம்பெறும் கதை மாந்தருக்கு அவலம் நேரும்போது, வாசகன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் நிலையில் தான் இருந்திருந்தால், இத்தகைய அவலம் தனக்கும் நேரிட்டிருக்குமே என்ற அச்சம் ஏற்படும். அதன் காரணமாக அவலத்திற்கு உள்ளானவர்கள் மீது இரக்கமும் தோன்றுகின்றது. பார்ப்பவர் உணர்வு வெளிப்பாட்டிற்கு இத்தகைய இலக்கியங்கள் வடிகாலாக அமைந்துள்ளன. இதோடு, அவலத்தின் மூலம் இளமை, செல்வம், யாக்கை போன்றவற்றின் நிலையாமையை எடுத்துக் காட்டி, வாழ்க்கையின் இலக்கைத் தெளிவுபடுத்துகின்றான், படைப்பாளன். மனித வாழ்வில் நிறைந்துள்ள இன்னல்களை அறிவதன் மூலம் உலக வாழ்வின் இயல்பு குறித்தும், வாழ்வில் ஏற்படும் நம்பிக்கை குறித்தும் அறிந்துகொள்ள முடிகின்றது.
தொகுப்புரை
சிலப்பதிகாரத்தில் ‘அவலம்’ என்ற சொல், ‘வருத்தம் (அல்லது) இரக்கம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பாத்திரப் படைப்பு நடப்பியல் வாழ்வில் காணக்கூடிய மாந்தர்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காப்பியம் – ‘அவலக் காப்பியம்’ ஆதலின் அவலத்தை மிகுவிக்கும் ‘சொல்லாட்சிகள்’ இடம் பெற்றுள்ளன. அவலக் காப்பியமான சிலப்பதிகாரத்தில் எதிர்பாராமல் நடைபெறும் சில தற்செயலான நிகழ்ச்சிகள் அவலத்திற்குக் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் எதிர்நோக்கும் நிகழ்ச்சிகளுக்கு முரணான எதிர்த்திருப்பங்கள் நடந்து, அவலத்தை மிகுவிப்பதாக உள்ளன. ‘துன்ப மாலை’ என்ற காதை, கண்ணகியின் தீராத் துயரத்தை எடுத்துரைக்கின்றது. தற்குறிப்பேற்ற அணி போன்றவற்றின் மூலமும் அவலம் வெளிப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் ‘ஊழ்வினை’ ஒரு கதாப்பாத்திரம் போல் செயல்பட்டு, அவல நிகழ்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.
அடிக்குறிப்புகள்
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.50
- தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூற்பா – 5
- புகார்க் காண்டம், அந்திமாலை சிறப்புச்செய் காதை, 70,71
- புகார்க் காண்டம், அந்திமாலை சிறப்புச்செய் காதை, 47-50
- புகார்க் காண்டம், நாடுகாண் காதை, 41,42
- மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை, 71-73
- மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை, 81-83
- ம.ரா.போ.குருசாமி, சிலம்பு வழிச் சிந்தனை, ப.55
- மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வெண்பா – 3
- மதுரைக் காண்டம், ஊர்சூழ்வரி, 64,65
- புகார்க் காண்டம், கானல்வரி, கட்டுரை, 24
- மதுரைக் காண்டம், புறஞ்சேரி இறுத்த காதை, 90,91
- மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை 148,149
- மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 65-68
- மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 75-78
- மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 80,81
==========================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
பண்டைக் காலம் தொடங்கி இன்றுவரை பெண்கள் எதிர்நோக்கும் அவலங்களுக்குக் காரணங்கள் மாறினாலும், இன்னல்கள் இன்னமும் அதே போலவே நீடிக்கின்றன.
சிலம்பில் சித்திரிக்கப்பட்டுள்ள பெண்களின் அவலம் குறித்த இக்கட்டுரை, அவலத்தின் இலக்கண விளக்கம் தொடங்கி எந்தப் பாத்திரம் யாருடைய எந்தச் செயலால் அவலமுறுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கண்ணகியின் அவலம் குறித்துப் பேசும் பலரும் பெண்ணியம், அடிமைத்தனம் என்ற ஒரே கோட்டைப் பற்றிக் கொண்டு வாதிடுவர். இந்த ஆய்வுக் கட்டுரையில், அப்படியான கருத்துகளை வலுப்படுத்தாமல், கணவனிடம் கொண்ட அன்பு, சூழலால் உண்டான விளைவுகள், பிற மாந்தரின் செயல் விளைவுகள் என்ற நோக்கில் அவளின் அவலங்களை ஆய்ந்திருப்பது பாராட்டுக்குரியது. மாதவி படும் அவலம், துறவு மூலம் காணும் தீர்வு, அரசன் நீதி தவறியதால் உயிர் நீக்கும் அரசியின் அவலம் – இங்ஙனம் அவலங்கள் அவர்கள் பாத்திரப் படைப்பை மெருகேற்றுவதையும் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.
இந்த ஆராய்ச்சியைப் பன்முகங்களில் விரிவுபடுத்தும் முகமாக, கண்ணகியின் அவலங்கள், அதற்குக் காரணமான நிகழ்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கலாம். மாதவி மற்றும் அரசியின் அவலங்கள், பிற பாத்திரங்களின் அவலம், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், பாத்திரம் செம்மையுறும் விதம் குறித்து விரிவாக இந்த ஆராய்ச்சியைப் பெரிய அளவில் எடுத்துச் செல்லும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இந்தப் பெண்களின் பாத்திரப் படைப்பு மூலம், தற்காலச் சமுதாயம் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகளை விரிவாக்கலாம்.
காப்பியப் பெண்களின் அவலங்கள் மூலம் அவர்கள் வாழ்வு மாறியது எங்ஙனம், அவர்கள் கற்றது என்ன, அதன் மூலம் பிறர் அறியும் பாடங்கள் என்ன என்ற கருத்துகளை வலியுறுத்தும் இக்கட்டுரை, காரணங்கள் மற்றும் விளைவுகளையும் விரிவாகவும் சிறப்பாகவும் ஆராய்ந்து, நம் பாராட்டுகளைப் பெறுகிறது.
==========================================================