Category: சிறுகதைகள்

கதைகள்

  • சுதந்திரம்

    நிர்மலா ராகவன்

    “மாதவனுக்காக நீச்சல் கத்துக்கிட்டே! இப்போ ஒனக்கே பிடிச்சுப்போச்சு போலிருக்கே!”

    கணவன் கேலியை ரசிக்க முடியவில்லை சாவித்திரியால்.  `ஏதோ, நாலு பேரைப் பாத்தாலாவது அவன் கொஞ்சம் தேறமாட்டானா என்கிற ஆசைதான்!”என்றாள், தழுதழுத்த குரலில்.

    பூமியின்மேல் இரு பாதங்களையும் பதித்து நடக்க முடியாது, தன் தோளைப்பற்றி, உடன் நடக்கும் பிள்ளையை நினைக்கும்போதே சொல்லவொணாவருத்தம் எழுந்தது அத்தாய்க்குள். அவள் அருகில் இல்லாவிட்டால், எட்டு மாதக் குழந்தைபோல் தவழுவான்.

    ஏதோ நினைப்பில் அவள் முகம் மலர்ந்தது. “அவன் நீஞ்சறப்போ நீங்க பாக்கணுமே!  தண்ணிக்குள்ளே போய் குட்டிக்கரணம் போட்டு..! என்று ஆரம்பித்தவள்,கொஞ்ச நேரம் அந்த இன்ப நினைவில் ஒன்றிப்போனாள். “அவன் தலையை மறுபடியும் மேலே பாக்கறபோதுதான் எனக்கு மூச்சு வரும்!”

    “அதான் டாக்டர் சொல்லியிருக்காரில்ல? உயிருக்கு ஆபத்து வர்றமாதிரி எதுவும் செய்திட மாட்டான்னு!”

    “இருந்தாலும், எனக்குப் பயம்தான்! ” என்று ஒப்புக்கொண்டாள் அந்த பேதைத்தாய். “நீங்கதான் எங்ககூட வரவே மாட்டேங்கிறீங்களே!”

    “எனக்கு இந்த `தண்ணி` எல்லாம் பிடிக்காது!” சிரித்தார். “அதோட, அளவுக்கு அதிகமா க்ளோரின் போட்டிருப்பாங்க. கிருமிங்க சாகுதோ, என்னவோ, எனக்குமுடி கொட்டிடும்”.

    சாவித்திரிக்குத தெரியும் அவர் மறுப்பின் காரணம்.

    தண்ணீரில் அமிழ்ந்திருக்கும்போது தான் அனுபவிக்கும் சுகத்தை வெளிக்காட்ட வேறு வழி தெரியாது, மாதவன் அர்த்தமற்ற பிதற்றல்களை இரைந்துகத்தும்போது, அங்கிருக்கும் அனைவரும் வேடிக்கை பார்ப்பதும், அருவருப்புடன் ஒதுங்குவதும் அந்தப் பெரிய மனிதருக்கு தலைகுனிவு.

    எவ்வளவோ ஆசையாகப் பெற்ற மகன்!

    மூன்று மாதத்தில் தன் முகம் பார்த்து இவன் சிரிக்கவில்லை, எட்டு மாதத்தில் உட்காரவில்லையே என்றெல்லாம் சாவித்திக்கு  சந்தேகம் எழ, `எல்லாக்குழந்தையின் சுபாவமும் ஒரே மாதிரி இருக்குமா?` என்று சமாதானம் செய்தார் கணவர்.

    மூன்று வயதானபின், `பசித்தாலும் சொல்லத் தெரியவில்லை, நெருப்பு சுடும் என்றாலும் புரியவில்லை,` என்ற நிலை வர, அதற்கு மேலும் தவிர்க்கமுடியாது,  மருத்துவர்களை நாடிப் போனார்கள்.

    மாதவனுக்கு எட்டு வயதானபோது, `இவன் என்றுமே சிறு பிள்ளையாகத்தான் இருப்பான்!` என்று திட்டவட்டமாகப் புரிந்து போனது சாவித்திரிக்கு. நீரில்அமிழ்பவன், தத்தளிப்பை விடுத்து, தன் முடிவை ஏற்கச் சித்தமாவதுபோல் அமைதியானாள். எந்த தேவைக்கும் தன்னை எதிர்பார்க்கும் இந்த மகன் என்றுமேதனக்கு கைப்பிள்ளைதான் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.

    `ஆடிசம் குணமாக இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கல. அவனால் இயன்றவரை, எல்லாவற்றையும் கற்க ஏற்பாடு செய்யுங்கள்!` என்று டாக்டர்கள்தெரிவித்தபோது, மாதவன் பியானோ கற்க ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டாள்.

    `விரல்களில் வலுவே இல்லையே!` என்று அவள் உதட்டைப் பிதுக்க, பரிதவிப்புடன், டாக்டரிடம் ஆலோசனை கேட்டாள் சாவித்திரி.

    `உங்கள் மகனுடைய நல்ல காலம்தான் இப்படி பணத்தட்டுப்பாடு இல்லாத குடும்பத்தில் பிறந்திருக்கிறான். நீந்தவும் கற்றுக் கொடுக்கலாமே!`

    `எப்படி டாக்டர்? இவனுக்கோ பிடித்துக்கொள்ளாமல் நிற்கவே முடியவில்லை..!` தாய் பயந்தாள்.

    `தண்ணியில எடை குறைஞ்சமாதிரி இருக்குமில்லியா? அதனால, கால், கையெல்லாம் சீரா இணைஞ்சு, ஒடம்பும் சமநிலைக்கு வரும். நாளடைவிலேஇருதயமும் பலமாகிடும்`.

    நீச்சல் குளம் காலியாக இருந்தது. அனேகமாக, காலை எட்டு மணிக்குமேல் யாரும் வரமாட்டார்கள்.  பூமத்திய ரேகைக்கு ஏழு டிகிரி வடக்கிலிருந்த மலேசியநாட்டில், நாள் முழுவதும் வெயில் கடுமையாகத் தாக்கும். எப்போது மழை பொழியும் என்றும் சொல்ல இயலாது.

    வெளிர்நிற சருமம் கொண்டவர்கள் பகல் பன்னிரண்டு மணி வெயிலில் — ஒரே மணி நேரம் — காய்ந்தால்கூட, சருமப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்றுஆங்கில தினசரிகளில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

    மேல்நாடுகளில் வசித்தவர்கள் டிசம்பர் மாதத்து குளிரைத் தாங்கமுடியாது, இங்கு வந்து, கடற்கரைப் பகுதிகளில், அல்லது நீச்சல் குளங்களுக்கருகே நாற்காலிகளில் அமர்ந்திருப்பது  சாதாரணமாகக் காணக்கூடிய காட்சி. கூடியவரை ஆடைகள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு, காலையும்தலைக்குமேல் தூக்கி, இண்டு, இடுக்கு எல்லாம் ஒரே சீராக பழுப்பு நிறமாக வேண்டும் என்ற அவாவுடன் அவர்கள் இருந்தார்கள், `கான்சர் போன்ற வியாதிஎல்லாம் பிறருக்குத்தான் வரும்,` என்ற மெத்தனத்துடன். மாதவனுக்கோ சூரியன் அளிக்கும் அந்த விட்டமின் D வேண்டியிருந்தது.

    வழக்கம்போல், “ஒழுங்கா அந்தப் பக்கம் போயிட்டு வரணும், என்ன?” என்று உபதேசித்தாள் சாவித்திரி, மகனுக்கு அந்த அறிவுரை விளங்காது என்றுதெரிந்திருந்தும்.

    அவனோ, இரு மீட்டருக்குமேல் இருந்த குளத்தின் அடிப்பாகத்திற்கே சென்றான். மேலெழுகையில், அனுமார்போல் கன்னம் உப்பியிருந்தது.

    “மாதவன்!” சாவித்திரியின் கண்டனக்குரல் தாமதமாகத்தான் வந்தது.

    தலையை மேலே சாய்த்து, வாய் நிறைய இருந்த நீரை உமிழ்ந்தான். அந்த எச்சில் நீர் அருகே நின்றிருந்த ஒருவரின்மேல் அருவியாக ஊற்றியது.

    பதைப்புடன் அவரை நோக்கியவள், “என் மகன்.. அவனுக்கு மூளை சரியில்லை! மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று அவமானத்தில் இறுகிய முகத்துடன்வேண்டினாள்.

    “இதற்கு மன்னிப்பு எதற்கு? இன்னொரு முழுக்கு போட்டால் போகிறது!” என்று பெருந்தன்மையுடன் கூறியவரை நன்றியுடன் நோக்கினாள்.

    அவருக்கும் கிட்டத்தட்ட அவள் வயதுதான் இருக்கும். சற்றே நரைத்திருந்தாலும், அடர்ந்த முடி நெற்றியெல்லாம் படர்ந்திருந்தது.

    “உன் பேரு என்னப்பா?”

    தலையும், பார்வையும் இலக்கில்லாது, எங்கோ பதிந்திருக்க, இயந்திர கதியில் பதிலளித்தான் மாதவன்.

    “அங்கிள் முகத்தைப் பார்த்துச் சொல்லு, மாதவன்!” என்று திருத்தினாள் தாய்.

    அவன் அவர்புறம் திரும்பியபோது, மரியாதையாக, “என் பெயர் சேது!” என்று தெரிவித்தார், முறுவலுடன்.

    “சேது!” என்று திரும்பச் சொன்ன மகனை மீண்டும் கண்டித்தாள் தாய்: “அங்கிள் சேது!”

    “மீன் குட்டி மாதிரி தண்ணிக்குள்ளே என்னென்னமோ வித்தைகள் செய்யறானே!” சேதுவின் வியப்பு உண்மையாக இருந்தது.

    பெருமையுடன் புன்னகைத்தாள் சாவித்திரி மாதவனைப் பாராட்டி, இதுவரை எவரும், எதுவும் சொன்னதாக நினைவில்லை அவளுக்கு.

    “ஒவ்வொரு நாளும் இங்க கூட்டிட்டு வர்றப்போ, பயமா இருக்கு எனக்கு. அவனோ, எப்பப் பார்த்தாலும், `ஸ்விம்மிங் போகலாம்மா, ப்ளீஸ்!` என்கிறான்!”

    “எதுக்குப் பயப்படறீங்க? சொல்லப்போனா, மாதவனைப் பாத்தா பொறாமையா இருக்கு எனக்கு”.

    சாவித்திரி வியப்புடன் அவரை நோக்கினாள்.

    “நாப்பது வயசுக்குமேலதான் நீச்சல் பழகினேனா! இப்போ.. ஒழுங்கா.. இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கம்தான் போகத் தெரியும். மீதி எல்லாம் பயம்!”

    அவர்கள் இருவரும் மனம் விட்டுச் சிரிக்கையில், காரணம் புரியாமலேயே தானும் சேர்ந்து சிரித்தான் மாதவன்.

    பூரிப்புடன் அவனது கன்னத்தைத் தடவினாள் தாய். இப்போது அக்கன்னம் முன்போல வழவழப்பாக இல்லை என்பதை உணரும்போதே, ஒரே சமயத்தில்பெருமிதமும், கவலையும் முளைத்தன.

    ஒளிவுமறைவில்லாது பேசும் இவரிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கையுடன், “ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?” என்றாள்,கெஞ்சலாக.

    பதிலாக, அவர் மிக லேசாக தலையை ஒருமுறை மேலும், கீழும் ஆட்டி, அவளுடைய கண்களையே உற்றுப் பார்க்க, சாவித்திரி தன் மனதைத் திறந்துகொட்டினாள் — தன்னைவிட உயரமாக வளர்ந்துவிட்ட மகனுக்குப் பல் விளக்க ஒவ்வொரு நாளும் தான் படும் பாடு (`அவனை நாற்காலியில உட்காரவைங்களேன்!`), யாராவது பேசும்போது அதை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, தவறாக அதை வெளியிட்டு மகன் தலைகுனிவை ஏற்படுத்துவது;அப்படித்தான் ஒருநாள், ஒரு பெண்மணி அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவளுடைய மார்பகத்தைச் சுட்டி, `குண்டு!` என்று அறிவித்தது, அப்போதுவந்தவள் அடைந்த அதிர்ச்சி, கோபம் — இப்படியாக, தன்னை எப்போதோ பாதித்து இருந்த அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள். ஒருவரிடம் மனந்திறந்துபேசுவதே இனிய அனுபவமாக இருந்தது.

    உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த சேது, “தான் ஆண் என்பது மாதவனுக்குத் தொ¢யுமா?” என்று வினவினார்.

    சாவித்திரி தலையசைத்தாள்.

    “பொதுவா, ஒரு பையனுக்கு நாலு வயசாறப்போ, `அம்மாவோட ஒடம்பு என்னோடதுமாதிரிஇல்லையே!` அப்படின்னு வியப்பா இருக்கும். `அம்மாஎன்கூடவே இருக்கணும்` என்கிறமாதிரி ஒரு கவர்ச்சி ஏற்படும்”.

    பிறகு, தான் படித்திருக்கும் பெருமையை இவளிடம் காட்டிக் கொள்கிறோமே என்று வெட்கியவராக, “ஆசிரியப் பயிற்சி எடுக்கும்போது, மனோதத்துவத்திலபடிச்சது,” என்று சமாளித்தார். “மாதவனுக்கு ஒடம்புதான் வளர்ந்திருக்கு. ஆனா, மனசு இன்னும் சின்னப்  பிள்ளையாத்தானே இருக்கு?” என்று நியாயம்கற்பித்தார்.

    “மத்தவங்களுக்கு இது புரியுதா? எங்களைத் தப்பா நினைக்கிறாங்க!” சாவித்திரியின் முகத்தில் ஆழ்ந்த வருத்தம்.

    “கெடக்கிறாங்க. நாம்ப எல்லாரையும், எப்பவும் திருப்திப்படுத்திக்கிட்டு இருக்க முடியாது!” கையை ஒருமுறை அலட்சியமாக வீசினார் சேது.

    சிறிது நேரம் யோசித்துவிட்டு, ” நீங்க அவன்கிட்ட,  `நீ அப்பா மாதிரி. அப்பாவும் ஒன்னைமாதிரி பையனாக இருந்தவர்தான். ஆனா, அம்மா ஒரு பெண்` –இப்படிச் சொல்லிப் பாருங்களேன்!”

    “அவனுக்குப் புரியுமா?” சாவித்திரியின் நியாயமான சந்தேகம்.

    “எந்த ஒண்ணையும் செய்கையால புரிய வைக்க முடியாதா, என்ன! அவசியமானா, ஒங்க ஜாக்கெட்டுமேல அவன் கையை வைங்க!” கூறப்பட்டதுநுண்ணியமானதாக இருந்தாலும், கூறிய விதத்தால் ஆபாசமாக ஒலிக்கவில்லை.

    “எந்த ஒண்ணும் நமக்குப் புரிஞ்சு போயிடறப்போ,  அதில வேண்டாத ஆர்வம் இருக்கிறதில்ல,” என்று அழுத்தமாக மேலும் சொன்னார்.

    சாவித்திரியின் நன்றி உணர்வையும் மீறி, பெருமூச்சு வந்தது. “நான் தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!” சொல்லும்போதே  சுயபச்சாதாபம்கிளர்ந்தது.

    சேது மென்மையாகப் புன்னகைத்தார். “எல்லாமே தெரிஞ்சவங்களா இருந்தா, நாம்ப ஏம்மா இன்னும் இந்த  ஒலகத்தில இருக்கோம்? சாமியா இல்லஆகியிருக்கணும்?”

    கருணையும், அமைதியும் ததும்பும் அவரது கண்களைச் சந்தித்தபோது குழப்பமோ, குற்ற உணர்வோ இல்லை அவளிடம்.

    நாளடைவில், சேது நீச்சல் குளத்தில் இருந்தால், தொலை தூரத்திலிருந்தே அவரைக் கண்டுவிட்டு, “அங்கிள் சேது!” என்று ஆனந்தப்படும் மாதவனுக்காக,அவன் கேட்பதற்கு முன்னாலேயே சாவித்திரி` தயாராவது பழக்கமாயிற்று. அவளுடைய புதிய ஆர்வம் கணவருடைய கண்களுக்குத் தப்பவில்லை. “எப்படாநீச்சல் குளத்துக்குப் போகலாம்னு, இவனைவிட நீதான் அதிகம் துடிக்கிறமாதிரி இல்ல இருக்கு!” என்று கேலி செய்தார்.

    அவள் எதுவும் சொல்லுமுன், “அங்கிள் சேது!” என்றான் மாதவன், அசந்தர்ப்பமாக.

    தம்புராவின் தந்தி அறுந்ததுபோல, இசைவு மறைந்த சூழ்நிலை எழுந்தது அங்கு.

    சட்டென முகத்தில் மாறுதல் தெரிய, “யாரது?” என்ற கேள்வி பிறந்தது.

    கூடியவரை இயல்பாக இருக்க முயன்று, “எப்பவாவது அங்கே பார்ப்போம். மாதவன்கிட்டே அன்பாப் பேசுவார்,” என்றாள்.

    “என்ன உத்தியோகம்?” மிரட்டலாக வந்தது அடுத்த கேள்வி.

    சாவித்திரியின் ஸ்ருதி இறங்கியது. “ஸ்கூல் டீச்சர்னு சொன்ன ஞாபகம்!”

    கை, கால், முதுகு எல்லாம் தெரிய, மானம் காக்கும் அத்தியாவசியமான உறுப்புகள் மட்டும் மறைக்கப்பட்டால் போதும் என்னும் நோக்கத்துடன்தைக்கப்பட்டிருந்த உடையில் மனைவி நீச்சல் குளத்தில் இருக்க, அவளருகே ஓரிரு சாண் அகல உள்ளாடை மட்டுமே அணிந்த ஒரு ஆண்மகன்!

    எப்படிப் பேசினால் பெண்களைக் கவரலாம் என்பதைக் கலையாகக் கற்றிருப்பவன் அவன் என்பதில் அவருக்குக் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.

    பெற்ற குழந்தையைப் புகழ்ந்து பேசினால், அவள் எவ்வளவு கடின நெஞ்சுடையவளாக இருந்தாலும் இளகிவிடுவாளே! அப்படி இருக்கையில், மகனைநினைக்கையில், வேதனை மட்டுமே அனுபவித்திருக்கும் சாவித்திரி எம்மாத்திரம்!

    மாதவனிடம் அன்பாகப் பேசுவானாமே!

    தான் பெற்ற மகனுடன் கழிக்க சிறிது அவகாசத்தை ஒதுக்கவில்லை என்பதைக் குத்திக்காட்டுகிறாளோ!

    இப்போது தாய், தந்தை இருவருமே தொடர, நீச்சலுக்குப் போனான் மாதவன். அவனுடைய கபடில்லா மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்தப்பட முடியவில்லைசாவித்திரியால்.

    கணவருக்கு அப்படியொன்றும் மகன்மீது புதிதாகக் கரிசனம் பிறந்துவிடவில்லை, தன்னைக் கண்காணிக்கவே உடன் வருகிறார் என்று புரிய, வேதனையாகஇருந்தது.  மரியாதை கருதி, சேதுவை கணவருக்கு அறிமுகப்படுத்தினாள், வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன்.

    தனது சொந்த கம்பெனியில் வந்து குவியும் பணத்தை கணவர் பிரகடனப்படுத்திக்கொண்டபோது, சேதுவுடன் அவளும் கூசிப்போனாள்.

    `நான் யார் தெரியுமா? நீ மாதமெல்லாம் உழைத்துச் சம்பாதிப்பதை நான் ஒரே நாளில் ஈட்டிவிடுகிறேன்! என்னிடமா மோதுகிறாய்?` என்று மறைமுகமாகஎச்சரிக்கை விடுத்தது தெளிவாகத் தெரிந்தது.

    சில வாரங்கள் கழிந்தன.

    இனிமேலும் தான் மனைவிகூட வருவது அனாவசியம் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.

    கணவர் தன் முழு கவனத்தையும் பழையபடி வேலை மற்றும் `பார்` நண்பர்களிடம் திருப்ப, சாவித்திரியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

    இப்போது மட்டும் என்ன, அவளிடம் புது நம்பிக்கையா?

    மகனுடைய வளர்ச்சியில், மகிழ்வில் அக்கறையைவிட மனைவியைக் கண்காணிக்க வேண்டியதுதானே அவசியமாகப் போய்விட்டது அவருக்கு!

    “அங்கிள் சேது!” என்று மாதவன் ஆர்ப்பரித்தபோது, தலைநிமிர்ந்த சாவித்திரியின்  கண்கள் சேதுவின் தீர்க்கமான நயனங்களில் பதிந்தன.

    அதில் அவள் கண்டது இரக்கமா, வேதனையா? அதை அலசும் மனநிலையில் இருக்கவில்லை அவள்.

    வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டபோது, ஆத்திரம் பொங்கியது, இலக்கில்லாமல்.

    ஆண்-பெண் நட்பு எவ்வளவுதான் மதிப்புக்குட்பட்டதாக இருந்தாலும், அதைக் கேவலமானதாகக் கருதுபவர்கள் இருக்கும்வரையில், எவருக்குமே பூரணசுதந்திரம் இல்லை.

    நம் சமூகம் ஏன் இப்படி தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறது?

    குளத்தின் அடியில் போய், வாய் நிறையத் தண்ணீருடன் மூச்சுத் திணற, தலையை வெளியே நீட்டிய மகனுடைய முதுகில் ஓங்கி ஓர் அறை விட்டாள்சாவித்திரி.

    அதைக் காணாதமாதிரி, வேறு பக்கம் போனார் சேது.

    Share
  • மந்திரமாவது நீறு

    –தமிழ்த்தேனீ.

    ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன். என்னது இது நான் எப்பவும் எல்லாருக்கும் நல்லதைத்தான் சொல்றேன். மனதிலே பட்ட உண்மையைத்தான் சொல்றேன். ஆனா, பேசறதே அவங்களுக்கு கோவமா பேசறா மாதிரியே தெரியுது. உண்மை எப்போதுமே சற்று உரக்கவே இருக்கும் அப்பிடீன்னு யாருக்கும் புரியலே. அதுகூடப் பரவாயில்லை துரோகம் எப்போதுமே இனிமையாக நைச்சியமாக இதமாக இனிக்க இனிக்கப் பேசும் அப்பிடீங்கறதைக் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க. இதை வெளியார் யாரும் புரிஞ்சிக்கலைன்னா பரவாயில்லே. நாற்பது வருஷமா கூடவே இருக்கற மனைவியும் நாமே பெத்த பிள்ளைகளும் கூட புரிஞ்சிக்கலையே. இனிமே வேற யாரு புரிஞ்சிக்கப் போறாங்க எனும் விரக்தியின் உச்சக் கட்டத்தில் இருந்தார் அவர்.

    அவர் எந்த நடிப்பும் கலக்காத உண்மையா பாசமா அன்பா நடந்துக்கறது யாருக்குமே புரியலையா, அல்லது புரியாத மாதிரி நடிக்கறாங்களா என்றே புரியாமல் குழம்பிப் போனார் அவர். அவர் சொல்கிற எதையுமே அவர் சொல்லும் சொற்களுக்கு உண்மையான பொருளை யாருமே புரிஞ்சிக்காம, ஏடாகூடமா அதுக்கு அர்த்தம் கற்பிச்சு, எப்போதுமே அவர் எவ்வளவு பொறுமையா சொன்னாலும் கேக்காமல் அவரைக் கோவப்படுத்தி கத்தவிட்டு விட்டு, நீங்க எப்பவுமே எதுக்கெடுத்தாலும் கத்தறீங்க உங்களை மாதிரி கோவக்காரரை நாங்க மதிக்கிறதா இல்லே … அப்பிடீன்னு முகத்துக்கு நேரே சொல்கிற எல்லோருமே அவர் சொல்வதைக் கேளாமல் அடிபட்டாலும் பாதிக்கப்பட்டாலும், அப்போதும் நீங்க உங்க வாயை வெச்சீங்க நாங்க அடிபட்டோம், பாதிக்கப் பட்டோம் அப்பிடீன்னு மறுபடியும் அவரையே குற்றம் சாட்டுகிற அவர்களைப் பார்த்து வருத்தப்படுவதா? அல்லது இப்படி இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையெனில் சூதும் வாதும் கள்ளமும் கபடமும் நிறைந்த இந்த உலகில் எப்படி இவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று கவலைப்படுவதா ஒன்றுமே புரியாமல் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன்.

    அவர் இந்த 70 வயதில் பார்த்த, அனுபவித்த, அடிபட்ட, பாதிக்கப்பட்ட, அனைத்திலும் கற்ற அனுபவத்தின் சாரத்தையல்லவா அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அது புரியவே இல்லையே அவர்களுக்கு மனிதரைத் தவிர மற்ற விலங்குகள் எல்லாமே அவர்களின் மூதாதையர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை நுணுக்கத்தை அனுபவத்தை உள்வாங்கித்தானே இன்று வரை தொடர்கிறது. இந்த மனிதருக்கு மட்டும் ஏன் இவ்வளவு புரியாமையும் பெரியவர்களின் அனுபவத்தை மதிக்காத குணமும் வந்துவிட்டது. மிருகத்திடமிருந்து வேறுபட்டு பரிணாம வளர்ச்சியினால் மாந்தராகிவிட்டோம் என்று பெருமைப்படும் மனிதர்கள் இன்னமும் மிருகங்களின் நல்ல குணங்களைக் கூட கைக்கொள்ளாதது ஏன் என்றே புரியாமல் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன்.

    அவரை மட்டுமே சண்டைக்காரர் என்று முத்திரை குத்துகிறார்களே அப்படி என்ன செய்துவிட்டார் அவர். இது வரை அவர் வாயால் வரம்புக்கு மீறிய சொற்களை உபயோகித்ததில்லை, எந்த மரியாதைக் குறைவான சொற்களையும் உபயோகப்படுத்தியதில்லை. அப்படி இருந்தும் கத்துகிறார் கோவக்காரர் என்பதைத் தவிர அவருக்கு வேறு நற்பெயரில்லை. அவர் தீர்மானமாக இனி பேசுவதே இல்லை என்று முடிவெடுத்தார். மனம் சற்றே அமைதியானது.

    அந்த நிமிடம் முதல் யார் எது பற்றிப் பேசினாலும் அவர் நேராக முருகன் படத்துக்கு முன்னால் சென்று திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு மௌனமானார். இது வரைக்கும் பேசியே எங்களைத் தொந்தரவு செய்தீங்க இப்போ பேசாமலே கழுத்தை அறுக்கறீங்க என்று மற்றவர்கள் கோபமாக கத்திக் கொண்டிருந்தனர். அவருக்கு ஒன்று புரிந்தது மௌனம் சர்வார்த்த சாதகம் நிமிர்ந்து உட்கார்ந்தார் கணேசன் அமைதியான புன்னகையுடன்.

    Share
  • ஒரு துளி கடல்

    தமிழ்த்தேனீ

    இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டாள் கனகம். ஏங்க  நாளைக்கு  எந்த வேலையும் வெச்சுக்காதீங்க. நம்ம வைதேகிக்கு  60 வயசாவுது  வைதேகியோட பொண்ணுங்க  மாப்பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து   வைதேகி வீட்டிலே ஒரு விழா ஏற்பாடு செஞ்சிருக்காங்க.

        ஏதோ யோசனையாய் இருந்த ராஜகோபாலன்   சரிம்மா  உன்னோட  ஆர்வம் புரியுது  நாம  போயிட்டு வரலாம்  என்றார்

    அவர் மனதில்  வைதேகியைப் பற்றிய  எண்ணங்கள் நிழலாடின. அவருடைய  சகதர்மிணியின்  தங்கை. அவருக்கு திருமணம் ஆகும் போது அவள் 16  வயதுப் பெண்.  மாமனார் வீட்டுக்கு  போனால்  பொண்டாட்டி கவனிக்கறாளோ இல்லயோ   மாமா  காபி சாப்டுங்க, மாமா  இந்தாங்க  பஜ்ஜி கொண்டாந்து வெச்சிருக்கேன் சாப்பிடுங்க  என்றும் அவ்வப்போது  அவரைப் பார்த்துப் பார்த்து அக்கா புருஷங்கிற  பாசத்தோட  கொஞ்சமும்  களங்கமில்லாம கவனிச்சு  எல்லாத்தையும்  செய்யற பாசமான  மச்சினி.

    அவரும் வைதேகியை  தன்னோட  தங்கையாகவே பாவிச்சு  பாசம் செலுத்த  ஆரம்பித்தார். மாமனார்  ஒரு நாள்  மாப்பிள்ளை  நம்ம வைதேகிக்கும்  கல்யாணம்  செய்யலாம்னு பாக்கறேன்  என்றவுடன்

    ஆமாம் மாமா  நானே  சொல்லணும்னு இருந்தேன்  என்னோட  வேலை செய்யறவர்  கண்ணன்  அவரோட  தம்பி  ரமேஷ் நல்லா  படிச்சிட்டு அரசாங்க  வேலையிலே இருக்கானாம். என்றார் ராஜகோபாலன்.

    அதே போல்  தன் வீட்டிலேயே பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்து அந்தத் திருமணத்திலே  மாப்பிள்ளை என்கிற  பந்தாவெல்லாம் இல்லாமல்  மாமனாரையும்  தன்னுடைய தகப்பனைப் போலவே  நினைத்து  அவர்கள் வீட்டையும்  தன் வீட்டைப் போல  நினைத்து  எல்லா காரியங்களையும்  இழுத்துப் போட்டுக்கொண்டு  செய்து  கல்யாணத்தை  நிறைவாக நடத்தியவர்  ராஜ கோபாலன்.

    மாமனார்   அவர் கையைப் பிடித்துக்கொண்டு  மாப்பிள்ளே  நீங்க  என் பிள்ளை  மாதிரி   எல்லாத்தையும்  நல்லா  நடத்திட்டீங்க.  அப்பிடியே  வைதேகியை  அவங்க புகுந்த வீட்டுக்கு  கொண்டு போயி  நீங்களும் என் பொண்ணு கனகாவும்தான்  விட்டுட்டு வரணும்  என்றார். அதெல்லாம் நாங்க  பாத்துக்கறோம்  நீங்களும் கூட வாங்க  என்றபடி  வைதேகியின் புருஷன் ரமேஷ் வீட்டுக்கு  அழைத்துப் போய்  அவர்களை விட்டுவிட்டு விருந்தும் உண்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அட  காலம் எவ்ளோ வேகமா ஒடுது  அதுக்குள்ளே  வைதேகிக்கே  60  வயசாயிடிச்சா!

    அது மட்டுமா  இரண்டு வருஷத்துக்கு  முன்னாலே  வைதேகியோட  புருஷன்  திடீர்ன்னு  ஹார்ட் அட்டாக்கிலே  போனதும்   குழந்தை மாதிரி வைத்திருந்த  வைதேகியின் நிலையை  எண்ணிக் கலங்கியதும் அவர் நினைவுக்கு வந்து அவர் மனதை சலனப்படுத்தியது.

    ஆனாலும்  இங்கே  வந்து  விழாவிலே கலந்து கொண்ட போது  வைதேகி  அவளுடைய குழந்தைகள்  யாருமே  இறந்து போன ரமேசைப் பற்றிய  கவலையே  இல்லாமல்  மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

    மனுஷன்  இருக்கறவரைக்கும் தான்  மதிப்பு   பல சமையத்திலே  இருக்கும் போதே  மதிப்பு இல்லாம போயிடறதும் உண்டு  என்று நினைத்துக் கொண்டு

    இந்தப் பொம்பளைங்களே  இப்பிடித்தான் புருஷன் போயிட்டான்னா  அதோட  தொல்லை விட்டுதுன்னு  மறந்துருவாங்க  என்று நினைத்துக் கொண்டார்.

    விழா  இனிதே   முடிந்தது.  வாங்க  மாமா  சாப்பிட உக்காருங்க என்று வழக்கம் போல்  உபசரித்தாள் வைதேகி.

    சாப்பாடு   முடிந்து  சரிம்மா  நாங்களும் கிளம்பறோம்   இன்னும் அவ்ளோ தூரம் போகணும்  என்றபடி கிளம்ப யத்தனித்தார் ராஜ கோபாலன்

    ஒரு பெண்மணியும் அவளுடைய  புருஷனும்  நாங்களும் கிளம்பறோம்என்றபடி கிளம்பினார்கள்

    அந்தப்  பெண்மணி  இதே மாதிரி  எங்க வீட்டிலேயும்  ஒரு விழா ஏற்பாடு  செய்யறோம்  அடுத்த  மாசம்  எல்லாரும் வந்திடுங்க  என்றாள்

    வைதேகி  வேகமாக  வந்து  இன்னொரு வாட்டி  அப்பிடி சொல்லாதே  இதே மாதிரி  விழா  யார் வீட்டிலேயும் வரவேண்டாம்

    எனக்குதான் தெரியும்  என் புருஷன்  ரமேஷ்  இல்லாத  வீடு எப்பிடி வெறிச்சோடிக் கிடக்குன்னு  அந்தத் தனிமையை இனிமே யாரும் அனுபவிக்க வேண்டாம்  . உங்க  வீட்டிலே  வேற மாதிரி  விழாக் கொண்டாடுங்க  எல்லாரும் வருவாங்க  என்றாள் கண்ணில் பொங்கி வந்த  ஒரு துளிக் கண்ணீரை  முந்தானையால் துடைத்துக் கொண்டு

    நம்ம  நாட்டுப் பொண்களுக்கு  புருஷன் மேலே இருக்கற  பாசமும்  அன்பும் வேற  யாருக்கும் வராது. பத்தினிங்கற  சொல்லுக்கே  இலக்கணம்  இவங்கதான். இவங்களோட  மனசாழத்தை  கண்டு பிடிக்கவே  முடியாது  என்று உணர்ந்தார் ராஜகோபாலன்.

    அவர்  நேராக வைதேகியிடம் சென்று நாங்க  வரோம்  . நாங்க  இருக்கோம் எப்போ வேணா நீ அங்கே வந்துடு தனியா அவதிப்படாதே நீயும் எங்க வீட்டுப் பொண்ணுதான்  புரியுதா  என்றவர்  சமாளித்துக்கொண்டு  சரி  நாங்க கிளம்பறோம் என்று கிளம்பினார்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை

    — அண்டனூர் சுரா.

    அண்டனூர் சுரா

     

    ‘என்ன வேலை பார்க்கிறாய் நீ…’

    ‘பாடகனாக இருக்கேன்….’

    ‘உன் தொழிலைக்கேட்கிறேன்….?’

    ‘தொழிலைத்தான் சொல்கிறேன்….’

    ‘பாடுறது ஒரு தொழில் கிடையாதே….’

    ‘இருக்கலாம். நான் அதை முறைப்படுத்திச் செய்துகிட்ருக்கேன்…’

    ‘எதையெல்லாம் பாடுவ…?’

    ‘என்னெல்லாம் எழுதுறேனோ அதையெல்லாம் பாடுவேன்’

    ‘நீ எழுதியது எதாவது இதழ்களில் வந்திருக்கிறதா….?’

    ‘வந்ததில்லை….’

    ‘பிறகு ஏன் எழுதுறே……?’

    ‘பாடுவதற்காக எழுதுகிறவன்……’

    ‘என்னெல்லாம் எழுதியிருக்கே…..?’

    ‘பாட்டாளியைப்பற்றி எழுதிருக்கேன்… அவன் வாங்கிற கூலி வீடு போய் சேராததைப்பற்றி எழுதிருக்கேன்….’

    ‘பாட்டாளியை மட்டும்தான் எழுதுவே….ம்….?’

    ‘அரசியல்வாதிகளையும் எழுதிருக்கேன்….’

    ‘அவர்களைப்பற்றி எப்படி எழுதியிருக்கே..?’

    ‘அவர்கள் செய்கிற ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவர்கள் நடத்துகிற சாதி அரசியல், மத அரசியல்,….இதெல்லாம் பற்றி எழுதியிருக்கேன்…..’

    ‘எங்களப்பத்தி எழுதியிருக்கீயா….?‘

    ‘ம்……’

    ‘எப்ப…..?’

    ‘சீர்காழியில ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு போலீஸ் அதிகாரியை நாலுபேர் நடு ரோட்டில் வெட்டிக்கொன்றாங்க. அப்ப போலீஸ்க்கென பாதுகாப்பு வேணும் அவங்களுக்கொரு சங்கம் வேணுமென எழுதியிருக்கேன்…..’

    ‘எங்கே அதைப் பாடு…?’

    ‘சும்மா பாட முடியாது….’

    ‘என்ன வேணும்….?

    ‘அடிச்சுப்பாட பறை வேணும்….’

    ‘பறையெல்லாம் ஸ்டேசனுக்குள்ளே எடுத்துவர அனுமதியில்லை….’

    ‘அப்ப என்னால் பாட முடியாது….’

    ‘தாறேன்…. எங்க அதிகாரியப் புகழ்ந்து பாடுவீயா….?’

    ‘அதிகாரி வர்க்கத்தப்பாடுகிறவன் இல்ல நான்….’

    ‘பின்னே….?’

    ‘பாட்டாளி வர்க்கத்தப் பாடுகிறவன்…’

    ‘ அப்ப நீயொரு கம்யூனிஸ்ட்….?’

    ‘நீங்க என்ன கேப்டலிஸ்ட்டா…..?’

    ‘என்ன கிண்டலா…? கேள்விக்கேட்கிறவன் நான், நீ இல்ல…..’

    ‘உங்க கேள்வியில நான் கம்யூனிசவாதியா முதலாளித்துவவாதியாயென இருக்க வேண்டியதில்ல…..’

    ‘இன்னைக்கு சனிக்கிழமை. திங்கள், செவ்வாய் லீவு. புதன் கிழமைதான் உன்ன கோர்ட்ல ஒப்படைக்க முடியும்….தெரியும்ல….?’

    ‘புதன் கிழமை வரைக்கும் நான் பாதுகாப்போட இருந்தாதான் அதுவும் முடியும். அது உங்களுக்குத் தெரியும்ல….?’

    ‘கேட்கிறக்கேள்விக்கு முறையாகப் பதில் சொல்வது உனக்கு நல்லது….’

    ‘நமக்கு நல்லது…..’

    ‘யாரெல்லாம் உன் தொடர்புல இருக்காங்க…..?’

    ‘மக்கள்….’

    ‘மக்களைக்கேட்கல…. கட்சிகளைக் கேட்கிறேன்…..?’

    ‘மக்களுக்காக குரல் கொடுக்கிற கட்சிகளெல்லாம்….’

    ‘அதுதான் எது எதுன்னு கேட்கிறேன்…..?’

    ‘தெரிஞ்சுக்கிட்டு ஏன் கேட்கணுங்கிறேன்…’

    ‘இதுக்கு முன்னாடி யாரையும் நான் இப்படி பொறுமையா விசாரிச்சதில்ல….’

    ‘விசாரணை எனக்கு ஒன்னும் புதிதில்ல…..’

    ‘நான் போலீஸ்காரன்’

    ‘நான் கலைஞன்…..’

    ‘பணத்துக்காக பாடுறவன் நீ இப்படித்தான் பேசுவே….?’

    ‘பணத்துக்காக உங்களைப்போல நடிக்கத்தான் முடியும். பாட முடியாது….’

    ‘உன்னை இயக்குறது யாருனு சொல்லு. இப்பவே விட்டுறுறேன்…..’

    ‘அதான் சொன்னேனே…. மக்கள்னு….’

    ‘அரசியல்வாதி மாதிரி பேசுறே…’

    ‘அவ்ளோ அசிங்கமாவாப் பேசுறேன்…..?’

    ‘அதிகமாகப் பேசுறேங்கிறேன்…..’

    ‘இதுவே அதிகமானால் இனி நான் பேசப்போறதில்லை…..’

    ‘பேசமாட்டேனு சொல்றமாதிரி எழுதமாட்டேனும் சொல்லு’

    ‘அது என்னால முடியாது…’

    ‘இனி நீ எழுதக்கூடாது.’

    ‘ஒரு வாரம் சாப்பிடாம இருக்கச்சொல்லுங்க இருக்கேன். ஆனா ஒரு நிமிசம் என்னால எழுதாம இருக்க முடியாது….’

    ‘சரி… பாட மாட்டேனு சொல்லு…..’

    ‘பாட்டு என் சுவாசம்’

    ‘உன்னால பாடாம , எழுதாம இருக்க முடியாது….ம்…..?’

    ‘பாடவும், எழுத்தவுமில்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது’

    ‘எவ்வளவு காலமாக நீ பாடிக்கிட்டிருக்கே….?’

    ‘ரொம்பக்காலமாக….’

    ‘சரியாகக் கேட்கிறேன்….’

    ‘விபரம் தெரிந்ததிலிருந்து…..’

    ‘எப்ப உனக்கு விபரம் தெரிந்தது….?’

    ‘நான் படிச்ச படிப்பு எனக்கு சோறு போடப்போறதில்ல என தெரிந்ததிலிருந்து…’

    ‘என்ன படிச்சிருக்கே….’

    ‘தமிழ் பி. ஹச். டி.’

    ‘புரியல….’

    ‘முனைவர் அதாவது டாக்டரேட்….’

    ‘படிச்சப்படிப்புக்கு வேலைத் தேடியிருக்கலாமே…..?’

    ‘தேடினேன்… படிக்காதவன் நடத்துற காலேஜ்ல என்னோட படிப்ப நான் அடமானம் வைக்க விரும்பல…..’

    ‘நீ பாட்டு எழுத, பாட யார் காரணம்…..?’

    ‘உங்களைப் போன்றவங்க…’

    ‘அப்படின்னா….?’

    ‘அதிகாரம் படைச்சவங்க…..’

    ‘டாக்டரேட் படிச்ச நீ இப்படி போலீஸ்க்கிட்ட பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு….?’

    ‘ஒரு பாடலைப் பாடினேன் என்பதற்காக ஒரு கொலைக் கைதியைப் போல, ஊழல்வாதியைப் போல, அரசுப் பணத்த கையாடல் செய்தவனைப் போல விசாரிக்கிறது நல்லாத்தான் இல்லை…’

    ‘நீ இவ்ளோ படிச்சிட்டு கூத்தாடி போல நடந்துக்கிட்டேனா, உன் குடும்பத்தில இருக்கிறவங்க எப்படி சாப்பிடுவாங்க….?’

    ‘உழைச்சி ’

    ‘அப்ப நாங்க உழைக்காம சாப்பிடுறோம்னு சொல்றியா…..?’

    ‘நான் சொல்கிற பதில்ல அப்படியொரு அர்த்தம் பொதிந்திருக்குனா அதற்கு நான் பொறுப்பல்ல…’

    ‘அரசாங்கத்த விமர்ச்சிக்கிற உரிமை உனக்கு யார் கொடுத்தது….?’

    ‘அரசாங்கத்தை விமர்ச்சிக்கக்கூடாதுங்கிற கடிவாளத்த எனக்கு யார் போட்டது….?’

    ‘போலீஸ்க்காரன் நான்… நீ இல்ல….’

    ‘என் தரப்பு நியாயத்த சொல்ல வேண்டியவன் நான். நீங்க இல்ல….’

    ‘என்ன நீ சொல்ல வாறே….?’

    ‘சுவர்தாண்டி அர்த்தராத்திரியிலே என்னை ஏன் கைது செய்திருக்கீங்க….’

    ‘அரசாங்கத்தைக் கேலி செய்திருக்கே ….’

    ‘எந்த வகையில செய்திருக்கேன்….?’

    ‘சொல்லட்டுமா….?’

    ‘அதைத்தான் கேட்கிறேன்….’

    ‘அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள்னு பாடியிருக்கே….’

    ‘பண்ணியவங்களைப் பாடியிருக்கேன்….’

    ‘மதுபான ஆட்சி எனக் கேலி செய்திருக்கே….?’

    ‘கேலி மட்டும்தான் செய்திருக்கேன்….’

    ‘மதுவைச் சீண்டிருக்கே….’

    ‘சீண்டதான் செய்திருக்கேன். குடிக்கவில்லையே…..’

    ‘கொச்சை மொழியில் பாடியது பெருந்தவறு….’

    ‘அது கொச்சை மொழியில்ல. அது வட்டார மொழி என தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் தவறு….’

    ‘வட்டார மொழியில் நீ பாடியிருக்கக்கூடாது….’

    ‘பீப் மொழியிலதான் நான் பாடியிருக்கக் கூடாது….’

    ‘இது எல்லாத்தையும் விட இன்னொன்று நீ செய்திருக்கே…..’

    ‘என்ன செய்திருக்கேன்….?’

    ‘பொது மக்களோட அமைதியக் கெடுத்திருக்கே….’

    ‘ஹக்……’

    ‘இப்ப நீ என்ன செய்தே….?’

    ‘சிரிச்சேன்…’

    ‘போலீஸ்க்காரன் கோபம் என்னனு தெரியும்ல….?’

    ‘தெரியும்…’

    ‘என்ன தெரியும்…..?’

    ‘அது பாட்டாளிகள் படும் கோபத்தில பாதி கூட கிடையாதெனத் தெரியும்..’

    ‘உண்மையைச் சொல்லிவிடு. உன்னை இயக்குறது யாரு….?’

    ‘மக்கள்’

    ‘இப்படி நீ பேசினா…கோர்ட்ல ஜாமீன்கூட கிடைக்காது…’

    ‘அப்படி கிடைக்காமப் போறது நல்லதுன்னு நினைக்கிறவன் நான்….’

    ‘சிறை வாழ்க்கை எப்படி பட்டதுன்னு உனக்குத் தெரியாது…’

    ‘பாட்டு எழுத, பாட இதுதான் தகுந்த இடமென உங்களுக்குத் தெரியாது….’

    ‘உன்னை நான் வேற வழியில் விசாரிக்கிறேன்…..’

    ‘சட்டத்திற்கு உட்பட்டே விசாரிங்க….’

    ‘உன்ன கோர்ட்ல ஒப்படைக்கிற வரைக்கும் நீ லாக்கப்லதான் இருக்கப்போறே…..’

    ‘இருக்கேன் ’

    ‘நேரத்துக்கு சாப்பாடு தரமாட்டேன்…..’

    ‘வேண்டியதில்லை…..’

    ‘டார்ச்சர் படுத்துவேன்….?’

    ‘பரவாயில்லை’

    ‘உன் குடும்பத்தார்களை சந்திக்க விடமாட்டேன்’

    ‘தேவையில்லை…’

    ‘எதுவுமே வேண்டாமெனச் சொல்றீயா……?’

    ‘வேணுமெனச் சொல்றேன்…..’

    ‘என்ன வேணும்…..?’

    ‘என்னோட பறை வேணும் ’

     

    ******************

     

     

    [நன்றி: வண்ணக்கதிர்: மார்ச் 27 தீக்கதிர் இணைப்பு]

    Share
  • கனவு நனவானபோது

    — நிர்மலா ராகவன்.

    தனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆனால், அம்மாமாதிரி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வைதேகி.

    புராண இதிகாச காலங்களில் கணவனை வழிபட்ட பெண்கள் பிற கடவுளை நாட வேண்டி இருந்ததில்லையாம். அப்போது இருந்த ஆண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்களோ, என்னவோ!

    ஆனால், `பெண்’ என்றாலே ஒரு மாற்றுக் குறைவாக எடைபோடும் அப்பாவின் மெத்தனத்தை, ஆணான தான் எது சொன்னாலும், செய்தாலும் அதை எல்லாப் பெண்களும் ஏற்க வேண்டும் என்று, ஒரு வரையறையே இல்லாது, உணர்ச்சிப்பூர்வமாக மனைவி மக்களைக் கொடுமைப்படுத்தியதை அவளால் ஏற்கத்தான் முடியவில்லை. அடித்தால்தான் வதையா!

    அதற்காக ஒரேயடியாக வெறுப்பை வளர்த்துக்கொண்டு, `கல்யாணமே வேண்டாம்’ என்று பிடிவாதம் பிடிக்கத் தோன்றவில்லை அவளுக்கு. தமிழ்த் திரைப்படங்களும், `கோடிக்கணக்கில் விற்கிறதே, இந்த ஆங்கில நவீனங்களில் அப்படி என்னதான் இருக்கிறது!’ என்று படித்ததும் அவள் மனதில் கட்டுக்கடங்காத இளமைக் கனவுகளை வளர்த்திருந்தன.

    அவளை மணப்பவன் அவள் கிழித்த கோட்டைத் தாண்டாத `பத்தினி விரதனாக’ இருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். தான் அவனுக்குப் பணிவதற்குப் பதிலாக, தனது ஆற்றலைப் பார்த்து அவன் அடங்கி ஒடுங்க வேண்டும். அப்போதுதான் அவனால் தன்னைக் கீழே தள்ள முடியாது. `நீ படிக்காத முட்டாள்! ஒனக்கு என்ன தெரியும்? சும்மா இரு!’ என்று அப்பா சமயம் கிடைத்தபோதெல்லாம் மட்டம் தட்டுவதைப்போல் அவளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது.

    சினிமா நடிகர்களை மனதால் வரித்து, அவர்களைப்பற்றிப் பேசிச் சிரித்த, தன் வயதுப் பெண்களின் போக்கு அவளுக்கு எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது. இம்மாதிரியான அர்த்தமற்ற கனவுகள் கண்டு, அதிலேயே நிறைவு பெற்று, பின் உப்புசப்பற்ற மணவாழ்க்கையில் அமுங்கிவிடுவது மடத்தனம். முன்னெச்சரிக்கையுடன், மனதில் ஒரு ஆடவனை உருவாக்கிக் கொண்டாள். அவன் முகம்? அது அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. அனுதினமும் அவனுக்குள் சில குணங்களைச் செலுத்தினாள். அவன் பிறரது மதிப்பைப் பெற்றவனாக இருப்பான். இன்னொருவரைச் செயலாலோ, வார்த்தையாலோ காயப்படுத்துவதைவிட தானே துன்புறுவது மேல் என்று நினைக்கும் கண்ணியவானாக இருப்பான்.

    சற்று யோசித்து, விளையாட்டு வீரன் வேண்டாம், என்றைக்காவது ஒரு நாள் அவனுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் போட்டி மனப்பான்மை, எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி, மேலே கிளம்பிவிடும் என்று நிச்சயித்தாள். இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்ததில், கலாரசனை உள்ளவன்தான் உணர்ச்சி மிக்கவனாக இருப்பான், வலுவான தேகம் கொண்டவனைவிட இவனை வீழ்த்துவது எளிது என்று தோன்றியது. இரண்டு, மூன்று வருடங்கள் இதே ரீதியில் முகமற்ற தன் வருங்காலக் கணவனுடன் சிறிது சிறிதாகப் பரிச்சயம் செய்து கொண்டவளுக்கு, அதன்பின் அவனை நினைக்கும்போதே உள்ளுக்குள் ஏதோ கிளர்ந்தெழுந்தது.

    வீட்டில் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்பா தேடிவரும் எவனையாவது மணக்க நேரிடுமோ என்ற அச்சம் பிறந்தது. அப்பா கொண்டு வரும் மாப்பிள்ளையும் அவரைப்போல்தானே இருப்பான்! `எதற்கோ பயந்து, எதிலோ மாட்டிக் கொண்டாற்போல்’ என்பார்களே! அப்படி நடக்க விடக்கூடாது. கல்யாணம் என்ற பிரச்சினையைத் தள்ளிப்போட அதற்கு ஒரே வழிதான் தென்பட்டது. பட்டப்படிப்பு முடியும் தறுவாயில்தான் அது நிகழ்ந்தது.

    `இதே கல்லூரியில் இருந்திருக்கிறார்! அது எப்படி இத்தனை நாளாகக் கவனிக்காமல் போனேன்!’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். அங்கு விரிவுரையாளராக இருந்த சம்பத்தைப் பொறுத்தவரை, `தானுண்டு, தன் வேலையுண்டு’ என்றிருந்தான். அங்கேயே ஹாஸ்டலில் தங்கியிருந்து, வேலை முடிந்ததும் டென்னிஸ் விளையாடி, இரவுப் பொழுதில் புத்தகங்களைப் படிப்பதில் கழித்தான். அவனைத் தற்செயலாகப் பார்த்த வைதேகிக்குப் பொறி தட்டியது. அவள் மனதுள் பல காலமாகப் பதிந்திருந்த உருவம் முழுமை பெற்றது. அடுத்த வேலை, எதிரிலிருந்தவனைப் பக்கத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுதான்.

    அவனை முதன்முதலில் கண்டபோது, இதுவரை அவளை ஆட்டுவித்த வீறாப்பு, ஆண்களை மட்டம் தட்டவேண்டும் என்ற வெறி எல்லாமே மறைய, மனம் பரபரத்தது. இவ்வளவு பண்பான, புத்திசாலியான ஒருவனுடன் காலமெல்லாம் இணைந்து, அவன் மிருதுவாகப் பேசுவதை, தன்னைக் கனிவுடன் பார்ப்பதை, அனுபவிப்பதைவிட வேறென்ன இன்பம் இருக்க முடியும் என்று தோன்றிப்போயிற்று. தன்னையும் அறியாமல், அவனுக்கு வலை விரித்தாள் வைதேகி. முதலில் வகுப்புக்கு வெளியே சந்தேகம் கேட்க ஆரம்பித்தாள். அவன் கேளாமலேயே, சிறுகச் சிறுக, தன்னைப்பற்றி, தன் குடும்பத்தின் அவலத்தைப்பற்றி, சொன்னாள்.

    `என்னிடம் ஏன் இந்தப் பெண் இப்படி மனந்திறந்து பேசுகிறாள்?’ என்று குழம்பினாலும், சம்பத் நெகிழ்ந்து போனான். ஓர் அழகான, புத்திசாலிப் பெண் தன் ஆதரவை நாடுகிறாள், தன்னை மதிப்பும் மெச்சுதலுமாகப் பார்க்கிறாள் என்றால், எந்த ஆடவனுக்குத்தான் உச்சி குளிர்ந்துபோகாது? தன்னை வெகுவாகப் பாதித்தவற்றை வைதேகி சொல்லச் சொல்ல, அவளுக்கு ஆறுதலாக ஏதாவது கூற எண்ணியவனாய் தன்னை அவளுடைய நிலையில் வைத்துப் பார்த்துக் கொண்டவனின் உடலிலும் உள்ளத்திலும் ஏதேதோ மாறுதல்கள். `இவள் பட்ட பாடெல்லாம் போதும். இனியாவது நான் இவளைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தபோது, சம்பத் திடுக்கிட்டான்.

    தன் கீழ் பயிலும் மாணவியை மணப்பதா! பெயர் கெட்டுப் போகாது? அச்சத்தை மீறியது ஆண்மை. அவளைத் தூரத்தில் பார்த்தபோதே ஒரு படபடப்பு, அவள் குரலைக் கேட்கவும் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பார்க்காதபோதோ எதையோ இழந்துவிட்டதைப் போன்ற ஏக்கம். `இதற்கு எப்படி ஒரு முடிவு கட்டுவது?’ என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். அவளைப்பற்றியே நினைத்துப் பார்க்கக்கூடாது என்று தனக்குள் முடிவு செய்துகொண்டான். ஆனால், வேறு எந்த விஷயத்துக்குமே அவன் மனதில் இடமிருக்கவில்லை. அந்தந்த வேளைக்குப் போதை மருந்தை நாடி, அது கிட்டாவிட்டால் அல்லலுறும் மூளை, காதல் வசப்பட்டிருந்த சம்பத்தையும் அதேபோல் ஆட்டுவித்தது. படுத்தால், தூக்கம் `வரமாட்டேன்,’ என்று விலகிச் செல்ல, எண்ணப் பெருக்குக்கு ஈடு கொடுக்க முடியாது தவித்தான். காதல் நோயை வெல்ல ஒரு வழிதான் புலப்பட்டது.

    கணவனின் அன்பில் திளைக்கும்போது, `மணவாழ்க்கை’ என்பது இவ்வளவு குதூகலமாக இருக்குமா, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் ஏன் இப்படி அமையவில்லை என்ற குற்ற உணர்ச்சிகூட உண்டாகியது வைதேகிக்கு. அம்மா அழகியோ, அதிகம் படித்தவளோ இல்லை. அதுவே அப்பாவுக்குக் குறையாக இருந்திருக்கலாம். `என் மனைவியைவிட நான் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும்!’ என்றுதான் எந்த ஆணும் ஆசைப்படுகிறான். ஆனால், அவளைவிடச் சிறப்பாக இருக்கும் இன்னொரு பெண்ணையும், அவள் கணவனையும் பார்த்தால் பொறாமை வருகிறது என்றெல்லாம் யோசித்தாள். `பாவம், அப்பா!’ என்று பரிதாபப்பட்டாள்.

    பழையதாகப்போன விளையாட்டுச் சாமானை தூரப் போட்டுவிட்டு, பெருமைப் பட்டுக்கொள்ளக்கூடிய புதியதொன்றில் மகிழ்ச்சி காணும் சிறுவனின் மனப்பக்குவத்துடன்தான் அப்பாவும் அழகும் இளமையுமான இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். `அப்பாவைப்போல என் சம்பத்தும் ஏமாற விடமாட்டேன்! அவர் என்னால் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். நான் நிறையப் படித்தால்தான் அது முடியும்!’ `கல்வி ரீதியிலாவது இருவரும் சமமாக இருக்கிறோமே!’ என்ற சம்பத்தின் நிம்மதி பொய்த்தது, வைதேகிக்கு முனைவர் படிப்புக்கான அழைப்பு வழங்கப்பட்டபோது.

    இப்போதைக்கு, பெரிய இடத்துப் பெண் என்ற கர்வம் இல்லாமல் பணிவாக இருக்கிறாள். மேற்படிப்பு அவளை மாற்றிவிட்டால்? பயம் பிடித்துக்கொண்டது அவனை. “எதுக்கும்மா இன்னும் படிப்பு? அதான் ரெண்டு பேருமே கைநிறைய சம்பாதிக்கிறோமே?” என்று நைச்சியமாகப் பேசி, அவள் மனதைக் கலைக்கப் பார்த்தான். அவன் மனநிலையை உணராது, தான் எடுத்த முடிவிலேயே உறுதியாக இருந்தாள் வைதேகி.

    டாக்டர் வைதேகி!

    இப்போது, அவள் செய்வது எல்லாம் தவறாக, தன்னை மட்டம் தட்டுவதற்காகச் செய்வது போல் தோன்றியது. படுக்கையில் சுகித்தபின்னர்கூட மனம் மகிழ்வால் நிறையவிலை. “என்னைவிட ஒனக்கு `இந்த’ விஷயத்திலே பலம் அதிகம்! அதான் பெருமை ஒனக்கு!” என்று குற்றம் சாட்டினான். இவளை எந்த விதத்திலும் மீற முடியாது போலிருக்கிறதே என்ற ஆயாசம் பிறந்தது. காதல் களியாட்டத்தின் இறுதியில் ஆணின் உணர்ச்சிப் பெருக்கு ஒரேயொரு பேரலையாக எழுந்து அடங்கும் என்றால், பெண்ணின் உடற்கூற்றின்படி சிறு சிறு அலைகள் அடுக்கடுக்காக எழும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. எதிராளியின் தன்மை புரியாததால் பலவீனம் உண்டாயிற்று.

    இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாத வைதேகி சிரிப்பாள். “படுக்கை என்ன, குஸ்தி மேடையா? இல்லே, நம்ப ரெண்டு பேருக்கும் ஏதாவது போட்டியா, யார் ஜெயிச்சது, யார் தோத்ததுன்னு கணக்குப்போட!” இப்படி அன்பும் பொறுமையும் ஓர் உருவாய் அவள் நடந்துகொள்ளும் போதெல்லாம் தன்மீதே வெறுப்பு எழும் சம்பத்துக்கு. இருப்பினும், வைதேகி ஒவ்வொரு அடியாக மேலே எடுத்து வைக்க வைக்க, அவனுடைய சுயமதிப்பு குறைந்துகொண்டே வந்தது. “நானும் ஒன்னைப்போல வசதியான குடும்பத்திலே பிறந்திருந்தா, எவ்வளவோ முன்னுக்கு வந்திருப்பேன்!” என்று அரற்றினான், ஒரு நாள்.

    ஆரம்பப் பள்ளி — அதுவும் எவ்வித வசதியும் இல்லாத தமிழ்ப்பள்ளி — ஆசிரியரின் ஆறு பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தது அவனது துர்ப்பாக்கியம். `மகனும் தன்னைப்போல் வறுமைக்கோட்டின்கீழ் அவதிப்படக் கூடாதே!’ என்ற நல்லெண்ணத்துடன், அவன் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும், ரோத்தானால் (மெல்லிய பிரம்பு) விளாசும் அப்பாவுக்குப் பயந்தே படித்தான். வகுப்பில் முதலாவதாக வந்தாலும், `நீயெல்லாம் முதலா! அப்போ மத்தவங்க எவ்வளவு முட்டாளா இருக்கணும்!’ என்று ஏளனம் செய்தால், அது ஊக்குவிப்பதற்குச் சமம் என்று அவர் போட்ட கணக்கு தப்பாகியது. எதற்கும் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, அதை மறைத்துக்கொள்ளப் பெரும்பாடு பட்டவனாக வளர்ந்தான்.

    வைதேகி, `பக்கபலமா இருக்க வேண்டிய நீங்களே தடை போடறதையும் ஒரு சவால்னு எடுத்துக்கலே நான்?’ என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டாள். இந்தச் சில வருடங்களில் அவளுக்கு ஒன்று புரிந்திருந்தது. தான் எதையாவது சொல்லப்போக, கோபம் அல்லது வருத்தம்தான் மிகும் கணவனுக்கு. கோபமாக இருந்தால், அவளிடம் மேலும் தப்பு கண்டுபிடிப்பான். இல்லை, மனம் வருந்தி, மன்னிப்பு கேட்பான், `நான் ஒனக்கு ஏத்தவனே இல்லே!’ என்று. அதன்பிறகு, கொஞ்சல், பரிசுகள் என்று தொடரும். வைதேகிக்கு அலுப்பாக இருந்தது. மனைவி என்பவள் ஒருவனைவிட மேலான நிலையிலிருந்தாலும் கஷ்டம், அவனைவிடத் தாழ்ந்திருந்தாலும் கஷ்டம். அவளுக்கு எப்போதாவது தான் கற்பனையில் உறவாடிவந்த முகமற்ற மனிதனின் நினைவு எழும். அப்போது திட்டம் தீட்டியிருந்தமாதிரி, தனது உயர்வை ஒவ்வொரு வார்த்தையிலும் செய்கையிலும் பறைசாற்றிக் கொள்ளலாம்தான். ஆனால், ஒருவர்க்கொருவர் அடிமையாக இருப்பதில், அல்லது இன்னொருவரை வீழ்த்துவதால், உறவு எப்படி பலப்படும்?

    சஞ்சலப்பட்டுக்கொண்டு இருந்த மனம் நிம்மதிக்காகப் புத்தகங்களை நாடியது. ஆனால், அதிலும் மனம் நிலைக்கவில்லை. “எப்பவும் புத்தகத்தை வெச்சுக்கிட்டு ஒக்காந்திருந்தா ஆச்சா?” அவள் செய்வது எல்லாமே தவறு என்ற முடிவுக்கு வந்தவன்போல், சம்பத் இரைந்தான். “என் சட்டையெல்லாம் இஸ்திரி பண்ணிவைக்கச் சொல்லி இருந்தேனே!” அவன் கட்டளையை நிறைவேற்றவேபோல் உள்ளே விரைந்த வைதேகிக்கு ஒன்று புரிந்தது. அப்பாவுக்கு அம்மா அடங்கிப்போனபோது, என்னமோ பெண் குலத்துக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று குமுறினோமே! அப்படி நடந்துகொண்டது அம்மாவின் விவேகம். குடும்பம் போர்க்களமானால், அதனால் குழந்தைகள் மனதில் வடு உண்டாகும் என்றுதான் எல்லா இன்னல்களையும் பொறுத்துப் போயிருக்கிறாள்! அப்பாவோ, அவளது அமைதியான, எதிர்ப்புக் காட்டாத போக்கைத் தனது வெற்றி என்று இறுமாந்து, எல்லை மீறியிருக்கிறார்!

    துணிகளை ஒரு பெரிய பையில் நிரப்பிக்கொண்டு வந்து, தன்னிடம் நீட்டிய மனைவியைப் புரியாது பார்த்தான் சம்பத். “என்ன? ஒன்னை இஸ்திரி பண்ணச் சொன்னேன்!” பிசிரின்றி ஒலித்தது அவள் குரல்: “ஒங்களுக்கு வேலைக்காரி வேணுமானா, அதுக்கேத்த மாதிரி பெண்டாட்டி கட்டியிருக்கணும். பெரிய படிப்பு படிச்சு, கைநிறைய காசு சம்பாதிச்சு, அதை ஒங்க கையில குடுத்தப்புறமும் அவளை எப்படி இன்னும் கொஞ்சம் கீழே தள்ளலாம்னு யோசிக்காதீங்க!” படபடவெனப் பொரிந்துவிட்டு, அப்பால் நகர்ந்தவள் திரும்பினாள். “ஒங்க துணியை லாண்டரியிலதான் போடுவீங்களோ, இல்லே, நீங்களே இஸ்திரி போட்டுப்பீங்களோ, அது ஒங்க பாடு!”

    சம்பத் பின்வாங்கினான், அகன்ற விழிகளுடன். கணவர் பயந்துவிட்டார், இனி தன்னை மிரட்ட யோசிப்பார் என்று புரிந்தது வைதேகிக்கு. ஆனால், அந்த எதிர்பார்ப்பில் மகிழ்வு என்னவோ இல்லை.

    (`நான் பெண்தான்’ என்ற எனது தொகுப்பு நூல், சிறுகதைகள்.காம்)

    Share
  • என்ன குறை வைத்தேன்

    என்ன குறை வைத்தேன்

    [மொழியாக்கக் கதை]
    தெலுங்கில்: வசந்தலட்சுமி. P
    மொழியாக்கம்: கௌரி கிருபானந்தன்

    “உனக்கு என்ன குறை வைத்தேன்?”

    “உனக்கு என்ன குறை வைத்தேன்?” திரும்பவும் கேட்டான் மகேஷ்.

    ‘எல்லாமே அதிகம்தான்’ மனதில் நினைத்துக் கொண்டேன். வெளியில் மட்டும் எதுவும் சொல்லாமல் என் வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது இந்த மனிதனுக்கு?

    தோசை வார்த்துக் கொண்டிருந்தேன். தேங்காய் சட்னி அரைத்தாகி விட்டது. தக்காளி தொக்கு ஏற்கனவே இருந்தது. தோசைமிளகாய் பொடி, நல்ல எண்ணெய் எல்லாம் தயாராக வைத்தேன்.

    குளித்துமுடித்துவிட்டு தலையை துவட்டிக் கொண்டே வந்த மகேஷ் டிபனுக்கு என்ன பண்ணியிருக்கிறேன் என்று எட்டிப் பார்த்துவிட்டு, “சாம்பார் இல்லையா?” என்றான்.

    நேற்று முதல் எனக்கு மைக்ரேன் தலைவலி. அம்மா வீட்டில் இருந்த போது எனக்குச் சின்ன தலைவலி வந்தாலும் அம்மா எவ்வளவு துடித்துப் போவாளோ, எவ்வளவு உபசாரம் செய்வாளோ நினைவுக்கு வந்ததும் கண்களில் நீர் சுழன்றது.

    என் கண்ணில் நீர் துளிர்த்தது மகேஷின் கண்ணில் பட்டு விட்டது. என்ன இருந்தாலும் மனைவியின் கண்கள் கலங்கினால் இந்த ஆண்களால் தாங்கி கொள்ள முடியாது இல்லையா.

    “என்னவோ பெரிதாக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது போல் அழுவானேன்? மாவு அரைக்க கிரையிண்டர். சட்னி அரைக்க மிக்ஸி இருக்கு. குக்கர், ஓவன் எல்லாமே வாங்கிக் கொடுத்திருக்கிறேன். வாய்க்கு ருசியாகச் சமைத்து போடுவாய் என்றுதானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். இல்லையென்றால் எந்தப் பிடுங்கலும் இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்பேன்.”

    வெடுக்கென்று இப்படிச் சொல்லாமல் எனக்குச் சமையலில் கொஞ்சம் உதவி செய்து கொண்டே, கிண்டல் அடிப்பது போல் சொல்லி இருந்தால் இந்தக் காலை நேரத்தில் என் விழிகளில் ஈரம் படிந்திருக்காதோ என்னவோ.

    காலை ஐந்து மணிக்கே எழுந்து பில்டரில் டிகாஷன் போட வேண்டும். காபி புது மணத்துடன் சூடாக இருக்க வேண்டும். இட்லி மாவை ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஹோட்டல் தோசை போல் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். ஹோட்டலில் கொடுப்பது போலவே மூன்று விதமான சட்னி, கூடவே சாம்பாரும் இருக்க வேண்டும். இட்லி பஞ்சு போல் மெத்தென்று, வாயில் போட்டால் கரைந்து போக வேண்டும்.

    இவையெல்லாம் மகேஷின் விருப்பங்கள். இல்லை இல்லை டிமாண்டுகள்! அதது அப்படி இல்லை என்றால் தன்னுடைய வெறுப்பை முகத்தில் மட்டுமே இல்லை, வார்த்தைகளிலும் காட்டுவதற்கு தயங்கமாட்டான்.

    ஆணாக இருந்தால் எது வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள முடியுமா? என்னுடைய விருப்பம் என்னவென்று ஒரு நாளும் கேட்டது இல்லை. சொல்லவும் எனக்கு வாய்ப்பு கொடுத்தது இல்லை.

    அம்மா செய்யும் இட்லி மல்லிகை போல் வெள்ளை வெளேரென்று, வாயில் போட்டால் கரைந்து விடுவது போல் இருக்கும். ஆனால் நான் எப்போது சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்திருக்கிறேன், அம்மா எப்படித் தயாரிக்கிறாள் என்று தெரிவதற்கு?

    எப்போதும் படிப்பு, இல்லையா சிநேகிதிகளுடன் சினிமா, டிராமா என்று ஊர் சுற்றுவது. அப்பாவின் செல்லம் நான். ஒரே மகள்! ‘அவளை எதுவும் சொல்லாதே. எங்க அம்மாதான் மகளாகப் பிறந்திருக்கிறாள்’ என்று எவ்வளவு செல்லமாக பார்த்துக் கொண்டார்!

    *******

    நானும் தவறு செய்திருக்கிறேன். சிவில் இன்ஜினியரிங் முடித்த பிறகு, வேலைக்கு முயற்சி எதுவும் செய்யவில்லை. அப்பாடா! படிப்பு முடிந்து விட்டது. கொஞ்சநாள் நிம்மதியாக ரெஸ்ட் எடுத்துக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன்.

    படிக்கும் போது கவனம் செலுத்தி படிக்கவில்லை. எப்போதும் சிநேகிதிகளுடன் பேச்சும், சிரிப்புமாகப் பொழுதை போக்கி வந்தேன். எப்படியோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டேன். படிப்பு முடிந்த பிறகுதான் தோன்றியது. பள்ளியில் படிக்கும் போது நன்றாகத்தானே படித்து வந்தோம்? இந்த இன்ஜினியரிங் படிப்பை ஏன் சிரத்தை எடுத்துக்கொண்டு படிக்க வில்லை?

    எல்லாம் கனவு போல் நடந்து முடிந்து விட்டது. கல்லூரிப் பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம், ஆண்களும், பெண்களுமாய் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக ஏதோ பிகினிக் போவது போல் கல்லூரிக்குப் போய் வந்தாள். அந்த நான்கு வருடங்களும் எவ்வளவு சந்தோஷமாக கழிந்து விட்டன!

    படிப்பு முடிந்ததும் அப்பா கேட்டார் மேற்கொண்டு என்ன செய்வதாக இருக்கிறாய் என்று.

    என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒரு லட்சியமும் இல்லாத படிப்பை முடித்துவிட்டு களைத்துப் போய் விட்டேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளணும் என்று நினைத்தேன். இப்பொழுது தோன்றுகிறது இன்னும் கொஞ்சம் சிரத்தையாகப் படித்திருக்கலாமே என்று.

    அம்மா எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பாள். “சுதா! வாழ்க்கையில் படிப்பு ரொம்பவும் முக்கியம். அதை விட்டு விடாதே” என்று. அப்போது அம்மா சொன்னது பழைய பஞ்சாங்கம் போல் இருந்தது.

    அதற்குள் அப்பாவின் நண்பன் மூலமாக இந்த வரன் வந்தது. பெயர் மகேஷ். நல்ல உயரம், இன்ஜினியர், ஹைதரபாதில் சாப்ட்வேர் வேலை, ஒரு தங்கை. அவளுடைய திருமணமும் முடிந்து விட்டது. பெற்றோர்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கே வீடு, நிலம் நீச்சு எல்லாம் இருக்கிறது. பெரிய பொறுப்புகள் எதுவும் இல்லை. குறை சொல்வதற்கு எதுவும் இல்லாத இடம்.

    எனக்கும் மறுப்பு சொல்வதற்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. கல்யாணம் என்றதும் ஏதோ தெரியாத உற்சாகம் பொங்கி வந்தது. இனிமேல் எனக்கு என்று ஒரு வீடு இருக்கும். என் விருப்பம் போல் அதை சீரமைத்துக் கொள்வேன். கணவன் மனைவியுமாக ஊர் சுற்றுவோம், காதலித்துக் கொள்வோம். கல்யாணம் முடிந்த பிறகுதான் காதல் என்று என் மனதில் முன்பே தீர்மானம் செய்திருந்தேன் . கல்லூரியில் படிக்கும் போது இரண்டு மூன்று பேர்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்கள். ஆனால் என் மனதில் அது போன்ற எண்ணம் ஒரு நாளும் வந்தது இல்லை.

    திருமண நாள் நிச்சயமானதும் அம்மாவும், நானும் கடைகடையாக ஏறிக் கொண்டிருந்தோம். பட்டுப் புடவை, சாதாரண புடவை, ரெடிமேட் ஆடைகள், மாட்சிங் பிளவுசுகள், செருப்புகள், சிக்கர் பொட்டுகள்… ஒன்றா இரண்டா!

    ஷாப்பிங் என்றாலே தலைவலி வரும் அளவுக்குக் கடைகளை ஏறி இறங்கினோம். இனி திருமணப் பத்திரிகை தேர்வு செய்யும் கட்டம். எனக்குப் பிடித்தது அம்மாவுக்குப் பிடிக்காது, அப்பாவுக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது. மூன்று பேருக்கும் பிடித்தது தேர்வு செய்வதற்குள் ஒரு வாரம் ஓடி விட்டது.

    இனி வாழ்நாள் முழுவதும் எனக்குத் துணை மகேஷ்! வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் அவசரப்பட்டு விட்டேனா?

    அம்மா, அப்பாவுக்கும் பெரியவர்கள் நிச்சயம் செய்த கல்யாணம்தான். அவர்கள் ஒற்றுமையாகத்தானே இருந்தார்கள்?

    என் விஷயத்தில் மேட்சிங் எங்கேயோ தவறி விட்டது போன்ற உணர்வு.

    கல்யாணத்தின் போதே தெரிந்தது. என் சினேகிதிகள் ஜோக் செய்தால் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டான். “அவனுக்கு எல்லாம் ஒழுங்குமுறையுடன் இருக்கவேண்டும். நான் பண்ணினால் கூட அவனுக்கு சில சமயம் பிடிக்காது. ஏன் இப்படிச் செய்தாய் என்று கோபித்துக் கொள்வான்.” மாமியார் மகனைப் புகழ் பாடினாள்.

    “உன் மனைவி வந்த பிறகு உனக்கு வேண்டிய விதமாகப் பண்ணவைத்து சாப்பிடு. என்னால் இதைவிடச் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டேன்.”

    மாமியார் சொன்ன போது என் இதயம் தொண்டைக்குழிக்கு வந்தது போல் இருந்தது,

    இப்பொழுது நான் வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு, வீட்டை நேர்த்தியாக எடுத்து வைத்து நல்ல பெயர் வாங்க வேண்டுமா? அடடா! நன்றாகப் படித்திருந்தும் வேலைக்குப் போகாமல் ஏன் சும்மா இருந்தேன்? அது இன்னும் கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கும் இல்லையா?

    கணினி மூலமாகச் சமையல் குறிப்புகளைக் கற்றுக்கொண்டு ஆறுமாதங்கள் போவதற்குள் பைவ் ஸ்டார் ஹோட்டல் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு நன்றாகவே சமைக்கத் தொடங்கினேன்.

    அப்படியும் குறை சொல்லாமல் ஒரு நாளும் சாப்பிட்டது இல்லை. கத்தரிக்காய் வதக்கல் செய்தால் எண்ணெய் பசையே இல்லை. இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்பான். டாக்டர்கள் எண்ணெய்யை குறைக்கச் சொல்லி சொன்னார்களே என்று கவனமாக தயாரித்தேன். ருசியாகத்தான் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் அமிருதமாகவே இருந்தது.

    என்ன மனிதன் இவன்!

    இருந்தாலும் இப்படி சமைத்துப் போட்டுக்கொண்டு நான் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறேன்? வேலைக்குப் போகணும் என்று முடிவு செய்து அதை அறிவிக்கவும் செய்தேன்,

    “உன் விருப்பம். நான் வீட்டுக்கு வரும் போது நீ வீட்டில் இருக்க வேண்டும். மூடி இருக்கும் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் வருவது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. எனக்கு வாய்க்கு ருசியாக இருக்க வேண்டும். சமையல் சாப்பாட்டில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. நான் மற்றவர்களைப் போல் இல்லை. இருந்தாலும் நான் உனக்கு என்ன குறை வைத்தேன்? நீ கேட்காமலேயே எல்லாம் வாங்கித் தருகிறேன். சொந்த வீடு இருக்கிறது. அடுத்த மாதம் கார் வாங்கப் போகிறேன்.”

    எனக்குத் தெரியாமலேயே, என்னைக் கலந்து ஆலோசிக்காமலேயே, என் விருப்பு வெறுப்புகளின் பிரமேயம் இல்லாமலேயே காரியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கும்.

    நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்று இப்பொழுது புரிந்தது. என் வாழ்க்கையைப் பற்றி, எவ்வளவு சுலபமாக, முடிவு செய்து விட்டேன்! என்னுடைய பிரமேயம் இல்லாத வாழ்க்கை இது!

    சதுரமாக இருக்கும் ஒரு பொருளை எடுத்து வட்டமாக இருக்கும் ஒரு இடத்திற்குள் பொறுத்த முயற்சி செய்தால், பொருளாகவே இருந்தாலும் அதற்குக் காயம் ஏற்படாமல் இருக்காது.

    நான் என்று ஒருத்தி இறுதியில் எஞ்சி இருப்பேனா? மகேஷின் மனைவியாக என்னை நிலை நாட்டிக் கொள்வதற்குள் எனக்குப் பிரியமானவற்றை எத்தனை இழக்க வேண்டியிருக்குமோ.

    தேவையில்லாமல் அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கிறேனோ. இப்பொழுதே இப்படி என்றால் நாளை ஒரு குழந்தை பிறந்து விட்டால் நிலைமை இன்னும் எப்படி மாறுமோ.

    வேலைக்குப் போவதாக சொன்னது முதல் அவனுடைய எரிச்சல் அதிகமானதை உணர்ந்து கொண்டுதான் இருந்தேன். அதன் பாதிப்புதான் இன்று தலைவலியாக உருமாறி இருக்கிறது. மனம் காயமடைந்தால் உடலும் நலிந்து போகும் இல்லையா.

    “டிபன் ரெடியா?” மகேஷின் குரல் கேட்டது.

    “இதோ கொண்டு வருகிறேன்.”

    ஒரு தட்டில் இரண்டு தோசைகள், இரண்டு விதமான சட்னி, தோசைமிளகாய் பொடி, உருக்கின நெய், இன்னொரு கையில் டம்ளரில் தண்ணீர் கொண்டு போய் மேஜை மீது வைத்தேன்.

    “நான் வேலைக்குப் போவது நிச்சயம். வேலைக்குப் போகாமல் என்னால் இருக்க முடியாது. குறைந்த பட்சம் சின்ன குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் டீச்சர் வேலை என்றாலும் சரி. இல்லை என்றால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும். இது போல் சமைத்துப் போட்டுக்கொண்டு, வீட்டோடு இருப்பதற்கு நான் படிப்பு அறிவு இல்லாத, சுயசிந்தனை இல்லாத முட்டாள் இல்லை. மனமும், யோசிக்கும் மூளையும் இருக்கும் பெண். வாய்க்கு ருசியாக சமைத்துப் போடும் சமையல்காரியாக மட்டுமே நீங்கள் என்னை நடத்துகிறீர்கள். உங்களை நேசிக்கும், மதிக்கும் மனைவி உங்களுக்கு வேண்டும் என்றால் நான் வேலைக்குப் போவதற்கு சம்மதம் சொல்லுங்கள். இல்லை என்றால் என்னால் இங்கே இருக்க முடியாது.”

    மனதில் இருப்பதைச் சொல்லிவிட்டு என் அறைக்குப் போய் படுத்துக் கொண்டேன்.

    இந்தத் தலைவலி குறைய வேண்டும் என்றால் தூக்கம் ஒன்றுதான் மருந்து.

    என் மனதில் பட்ட காயம் ஆற வேண்டும் என்றால் முதலில் நான் விழித்துக் கொள்ள வேண்டும்.

    இனி முடிவு அவன் கையில். எனக்கு என்ன குறை என்று புரிந்தால் ஒப்புக்கொள்வான் என்ற யோசனையுடன் தூக்கத்தில் நழுவினேன்.

    _____________________________________

    கௌரி கிருபானந்தன்
    மொழியாக்கம்:
    கௌரி கிருபானந்தன்
    tkgowri@gmail.com

    _____________________________________

    Share
  • திண்ணை

    — தமிழ்த்தேனீ.

    கட்டுப்பெட்டி கிராமமாக இருந்த திருவிடை மருதூர் அக்கிரகாரத்தில் ஓட்டு வீடுகளும் திண்ணையுமாக இன்னும் சற்றேறக் குறைய தன் பழமை மாறாமல் இருந்தது. திண்ணையிலே சீட்டாடும் கும்பலைத் தாங்கிக் கொண்டு முதுகுச் சுமை தாளாமல் தவித்துக் கொண்டிருந்தாலும் எத்தனை பேர்களை சுமந்தாயிற்று, எத்தனை மனிதர்களைப் பார்த்தாயிற்று, அத்தனை பேரின் அந்தரங்கக் கதையும் தனக்கு மட்டுமே தெரியும் என்கிற கர்வத்தோடே இது வரை வாழ்ந்தாயிற்று, அந்தக் கர்வம்தான் இத்தனை பேருக்கும் சுமைதாங்கியாய் தன்னை ஆக்கி வைத்திருக்கிறது என்றே உணராமல் நம்மை அசைக்க ஆளில்லை எனும் கர்வத்தோடு, வெயிலையும் மழையையும் தாங்கிக் கொண்டு, பற்றாக்குறைக்குத் தேக்கு மரத் தூண்களையும் தாங்கிக் கொண்டு, கர்வத்தின் அலகை அகல விரித்து கால்பரப்பி கனத்தின் அழுத்தத்தால் கால் மடங்கி அப்படியே சமமாய் பரந்து படர்ந்து அந்தரங்க ரகசியங்களையும் கிசுகிசுக்களையும் கேட்பதே பேரானந்தம் என்று நினைத்துக் கொண்டு இன்னமும் எப்போது இடிபடுவோம் என்றே தெரியாமல் காத்திருக்கிறது.

    இன்றும் வாயில் வெற்றிலைக் குதப்பலுடன் புளிச் புளிச்சென்று முதுகின் மேலேயே துப்பவும், கையிலே சீட்டுகளைப் பிடித்துக் கொண்டு ஜோக்கர் வரவில்லை என்று பொறுமிக் கொண்டு காத்திருக்கும் சீட்டாட கும்பல் வந்தாயிற்று. இனி சுமைதான். எவ்வளவு வேண்டுமானாலும் சுமக்கிறேன். ஆனாலும், எனக்குத் தினமும் கிசுகிசுக்களையும் அந்தரங்கங்களையும் காதால் கேட்டால்தான் தூக்கமே வரும்.

    திண்ணைக்கேதடா காது என்று யோசிக்கிறீர்களா? சுவருக்கும் காது உண்டு என்று சொல்வார்களே!! எனக்கு இருக்கக் கூடாதா? எத்தனையோ ராமநாதன்கள்… எத்தனையோ விஸ்வநாதன்கள்… எத்தனையோ கிருஷ்ணமணிகள் என்று அத்தனை பேரையும் பார்த்த திண்னை நான் என்று நினைக்கும் போது இன்னமும் கர்வம் ஓங்கி வளர்ந்தது. பெரியவங்க சொல்வாங்க, வாயை மூடிக்கிட்டு காதைத் தொறந்து வையி, அப்போத்தான் ஞானம் வரும்னு, திண்ணையாய் இருக்கும் என்னை உதாரணமாக வைத்துத்தான் அதைச் சொன்னாங்க தெரியுமா? என்று மனம் படபடக்கிறது. இது யாருக்குமே புரிய மாட்டேங்குது.

    ராமநாதன் தன் கையிலிருந்த சீட்டுகளை உற்றுப் பார்த்தான். மப்பும் மந்தாரமுமாக இருந்த மானமும் மனமும் கண்களை மறைக்கவே உற்றுப் பார்த்தான். சிவந்த விழிகள் மேலும் சிவந்தன. கை நடுங்கியது. ஆண்டவா!!! எனக்கு இந்தத் தடவை எல்லாம் நல்ல நல்ல சீட்டா வந்திருக்கு. ஒரே ஒரு ஜோக்கர் மட்டும் இருந்தா ஜெயிச்சிடுவேன். எப்பிடியாவது கருணை காட்டுப்பா, என்று வேண்டியபடி ஒரு சீட்டை எடுத்தான். அது தேவையே இல்லாத சீட்டு.

    “இந்தத் தடவையும் என்னைக் கவுத்திட்டியா?” என்றார் உரக்க எதிரே இருந்த ஜெயராமன்.

    “ஆமாம், கவுத்துட்டேன்,” என்றார் .

    “உன்னை இல்லைப்பா,” என்றார் ராமநாதன்.

    “நான் உன்னைக் கவுத்துட்டேன்னு சொன்னேன், நான் ஜெயிச்சிட்டேன்,” என்றான் ஜெயராமன்.

    ஹூம் …

    “எல்லாரும் காசைக் குடுங்க,” என்று கல்லாகட்ட ஆரம்பித்தார் ஜெயராமன்.

    தெய்வமே எவ்ளோ வேண்டறேன், எவ்ளோ திறமையா ஆடினாலும் ஒரு சீட்டுலே என்னைக் கவுக்குறியே, என்னை ஜெயிக்கவே விடமாட்டியா? என்று நொந்து போனார் ராமநாதன். அவருக்குக் காலையில் அவருக்கும் அவர் மனைவிக்கும் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

    “என்னோட ஏழு தலைமுறைக்கும் உக்காந்து சாப்டாலும் என் சொத்து தீராது. நீ எதுக்கு என்னை வேலைக்குப் போகப்படாதா? அதைவிட்டுட்டு எப்போ பாத்தாலும் சூதாடிண்டு இருக்கேன்னு திட்ற,” என்றார் ராமநாதன்.

    “பழங்கதையே பேசாதீங்க. இப்போ என்ன நிலமைன்னு தெரியுமா? இன்னும் மூத்தவளுக்கே கல்யாணம் செய்யலை. இப்போ நாம வெறும் காலிப் பெருங்காய டப்பாதான். எல்லாத்தையும் சீட்டாடியே தோத்தாச்சு,” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.

    சுருக்கென்றது அவருக்கு. அடேடே!!! இவ்ளோ நாள் என்ன நிலமைன்னே தெரியாமே சீட்டாடினோமே!! இதுலேயாவது ஜெயிச்சோமா? இதுலேயும் தோத்துண்டே இருக்கோம். வாழ்க்கையிலேயும் தோத்துட்டோமா? ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் எழுந்தார்.

    “நான் இனிமே சீட்டாடப் போறதில்லே. நாம அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பி ஆடிண்டே இருக்கோம். ஆனா நாம தன்னம்பிக்கையா ஆடவேண்டிய ஆட்டத்தை ஆடறதில்லே. இனிமே என்னைத்தான் நம்பப் போறேன். இனிமே நான் ஆடற எல்லா ஆட்டமும் என்னை நம்பியே இருக்கும்,” என்று சொல்லிவிட்டு தள்ளாடினார்.

    “இனிமே இவரு போயி தனியா ஆடப் போறாராம்! நிக்கவே முடியலே. உடம்பு தள்ளாடுது, இதுலே ஆட வேற போறாராம்,” என்று சிரித்தனர் அனைவரும்.

    திண்ணை ஆடாமல் அசையாமல் கவனித்தபடி இருந்தது. மாநகராட்சியின் சாலைப் பணியாளர்கள் ராக்‌ஷச இயந்திரத்தோடு வந்து கொண்டிருக்கின்றனர். சாலையை அகலமாக்கப் போறாங்களாம். திண்ணையை எல்லாம் இடிச்சிருவாங்களாம் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

    Share
  • இளமை

    — தமிழ்த்தேனீ.

    ram  hanuman

    பால்ய ஸ்னேகிதர்கள் சபேசனும் கிருஷ்ணனும். இருவரும் 70 வயதை எட்டிக்கொண்டிருப்பவர்கள். காலார நடந்து வருகையில் சபேசன் கேட்டார்.

    “கிருஷ்ணா, ரொம்ப நாளா நான் ஒரு சந்தேகம் கேட்டுண்டே இருக்கேன்,” என்றார்.

    “நானும் நீயும் சம வயது, ஆனா நீ எப்பிடி இப்பிடி இளமையா இருக்கே, அதானே? இன்னிக்கு சொல்றேன். நான் சின்ன வயசிலேயே கிழவன் மாதிரி ஆயிட்டேன். அப்போத்திலேருந்து அப்பிடியே மெயின்டைன் பண்றேன். அதுனாலே எல்லாருக்கும் எப்பவும் ஒரே மாதிரி காட்சி அளிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ … என்று சிரித்தார் கிருஷ்ணன்.

    “ஏதாவது ஜோக்கடிச்சு சரியான பதிலை சொல்லாமலே காலம் கடத்தறே,” என்றார் சபேசன் எரிச்சலுடன்.

    “இரு, இரு உடனே சீறாதே. இப்ப உண்மையைச் சொல்றேன். உனக்கு ரெண்டு பொண்ணு ஒரு பையன். எனக்கும் ரெண்டு பொண்ணு ஒரு பையன்,” என்றார் கிருஷ்ணன்.

    “உன் இளமையைப் பத்திக் கேட்டா, ஏதோ கதை சொல்றே,” என்றார் சபேசன்.

    “இந்த அவசரம்தான் உனக்கு முதுமையை குடுக்குது, நிதானம் எனக்கு இளமையைக் குடுக்குது,” என்றார் கிருஷ்ணன்.

    “கிருஷ்ணா, நீ எப்பவுமே விளக்கமா சொல்றேன்னு சொல்லுவே புரியறா மாதிரி இருக்கும். ஆனா கடைசியிலே குழம்பிடும்,” என்றார் சபேசன்.

    “இரு, இரு சொல்றேன். உன் பிள்ளைகளும் வெளி நாட்டிலே இருக்காங்க. என் பிள்ளைங்களும் வெளி நாட்டிலே இருக்காங்க. வீட்டுக்கு வீடு வாசற்படி. எல்லார் வீட்டிலேயும் எல்லாப் ப்ரச்சனையும் இருக்கு. ஆனா …” என்று நிறுத்தினார் கிருஷ்ணன்.

    “என்ன ஆனா, ஆவன்னா? விஷயத்துக்கு வாப்பா,” என்றார் பொறுமையற்று சபேசன்.

    “ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ …என்று சிரித்த படி, “சபேசா, இப்போ சொல்லிடறேன். வருஷத்திலே ஒரு வாட்டி நம்மளைப் பாக்க வர பசங்க கிட்ட நாம நல்லாத்தான் நடந்துக்கறோம். நேத்து என் பையன் அமெரிக்காவிலேருந்து வந்து பாதிராத்திரிக்கு வீட்டுக்கு வந்து இறங்கினான். அதுக்கப்புறம் போயி தூங்கிட்டான். அவனுக்கும் வயசு நாற்பது ஆயிடுச்சு. கல்யாணமும் ஆகி எனக்கு ஒரு பேரனும் பெத்துக் குடுத்துட்டான். காலையிலே ஒரு கல்யாணத்துக்கு போகணும்னு குளிச்சிட்டு அவனையும் எழுப்பினேன். அவன் எழுந்து என்னைக் கட்டிண்டு அப்பிடியே என் தோளிலே தலையை வெச்சிண்டு செல்லம் கொஞ்சறான் இந்த நாற்பது வயசிலேயும். எனக்கு 27 வயசுலே அவனைப் பெத்து அவன் குழந்தையா இருந்தப்போ எழுந்து என்னைக் கட்டிண்டு என் தோளிலே தலையை சாச்சிண்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவானே அது நியாபகத்துக்கு வந்துடுச்சு. நான் திடீர்ன்னு 27 வயசுக்கு போயிட்டேன். அதே மாதிரி என் மருமக அவளும் என் சம்பந்தி பெத்த பொண்ணு கொஞ்சம்கூட விகற்பமே இல்லாம அப்பான்னு என்னைக் கட்டிக்கறா. எப்பிடிப்பா இருக்கீங்கன்னு கொஞ்சறா, அப்போ அவளோட 30 வயசுக்கு நான் போயிடறேன். அதே போல என் பொண்ணுங்க ரெண்டு பேரும் மாப்பிள்ளைகளும் என்னைக் கட்டிண்டு என்னப்பா எப்பிடி இருக்கீங்கன்னு அன்பா விசாரிச்சுக் கொஞ்சும் போது அவங்க அவங்க வயசுக்கு நான் போயிடறேன். அதே மாதிரி என் பொண்ணுங்களோட குழந்தைகள் நாலு பேரனும் மஹாலக்‌ஷ்மி மாதிரி ஒரு பேத்தியும் தாத்தான்னு என்னைக் கட்டிண்டு கொஞ்சறாங்க. அப்போ அவங்க வயசுக்கு நான் போயிடறேன். என் சம்பந்திகளும் எப்போ என்னைப் பார்த்தாலும் ஆரத் தழுவிண்டு வாங்கோ எப்பிடி இருக்கீங்கன்னு அன்பா பாசமா கேக்கறாங்க. என்னைவிட சின்னவங்கள் அவங்க வயசிலே ஆனா மனசாலே பெரியவங்க. அப்போ அவங்க வயசுக்கு நான் போயிடறேன். எல்லாம் அந்த இறைவன் கருணை. இப்போ புரியுதா என் இளமையோட ரகசியம்?” என்றார் கிருஷ்ணன்.

    “இன்னொரு ரகசியம் சொல்லப் போறேன். இப்பிடி கட்டிண்டு இதமா கொஞ்சினா அதுக்குப் பேரு காடாலிங்கனம்னு சொல்வாங்க. இதைப்பத்தி விவரமா சொல்லணும்னா வாழ்நாள் பூரா பேசணும்,” என்றார் கிருஷ்ணன்.

    “அதானே பார்த்தேன்! ஏதோ புரியறா மாதிரி ஏதோ சொன்னியேன்னு பாத்தேன் மறுபடியும் குழப்பிட்டியா?”என்றார் எரிச்சலுடன் சபேசன்.

    Share
  • காந்தியும் தாத்தாவும்

    — நிர்மலா ராகவன்.

    “முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட குழந்தைங்கதான்’னு சொல்லி, நாம்ப செய்யற வேலையைக்கூட அவரு செஞ்சாராம். அவரு மகாத்மாடா. அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன்!”

    தொட்டியிலிருந்த தண்ணியை மொண்டு குளித்துவிட்டு, இடுப்பில் துவாலையுடன் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் உடல் வனப்பை ரசித்துக்கொண்டிருந்த காந்திக்கு தாத்தாவின் குரல் கேட்டது. தினமும் கேட்டதுதான். முகத்தைச் சுளித்தான்.

    ஐந்து வயதாக இருந்தபோது, சஞ்சிக்கூலியான (JANJI – மலாய் மொழியில், சத்தியம். அதுவே, `காண்ட்ராக்ட்’ என்பதன் தமிழ்ச்சொல்லாக சஞ்சியென மறுவிற்று). தன் தந்தையின் கைவிரலைப் பற்றிக்கொண்டு `ஊரிலிருந்து’ அன்றைய மலாயாவுக்கு வந்த தாத்தா, தோட்டப்புற தமிழ்ப்பள்ளியில் `அஞ்சு கிளாஸ்’வரை படித்தவர். இளவட்டங்களைப்போல மலாய் மொழி கலக்காமல், சுத்தமான தமிழ் பேசுவார்.

    `ஒங்கப்பன் ஒழுங்கில்ல. அதான் ஒங்கம்மா பெத்துப் போட்டுட்டுப் போனதும், ஒன்னய நானே வெச்சுக்கிட்டேன்!’ என்று அடிக்கடி சொல்வார். இதையெல்லாம்கூட `வயசான தோஷம்’ என்று அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவர் சொன்னதில் காந்தியால் தாங்கமுடியாதது, `நீயும் காந்திமாதிரி இருக்கணும்டா. பொய்யே பேசக்கூடாது’ என்பதுதான்.

    பெயர் வைத்துவிட்டால் மட்டும் ஆயிற்றா? மேல்நாட்டில் படித்துப் பட்டம் பெற்ற காந்தி எங்கே, இந்தக் கேடுகெட்ட குப்பத்தில் வாழும் தான் எங்கே! `உயர உயரப் பறந்தாலும்’ என்று ஏதோ சொல்வாரே, தாத்தா! அந்தக் கதையாகத்தானே இருக்கிறது!

    வலுக்கட்டாயமாக அந்த காந்தியை ஒதுக்கிவிட்டு, தன் முகபிம்பத்தில் கவனத்தைச் செலுத்தினான். ஓரிரு பருக்கள் இருந்த கன்னத்தில் எச்சிலைத் தடவினான்.

    “காந்தி, டேய்!” தாத்தாவின் குரல் வாசலிலிருந்து கேட்டது.

    அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், கண்ணாடியின் பின்னால் கைவிட்டுப் பார்த்துவிட்டு, திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டான் காந்தி. `ரெண்டாயிரம் கொடுப்பாங்களாமே! கொஞ்சம் சேர்ந்ததும், மொதல் வேலையா தாத்தாவை ஊருக்கு அனுப்பி வைக்கணும். பளனி, மதுரை எல்லாம் போய், சந்தோசமா சாமி தரிசனம் பண்ணிட்டு நிதானமாத் திரும்பி வாங்கன்னு!’ அந்த நினைப்பிலேயே சுதந்திரம் வந்துவிட்டதுபோன்ற நிறைவு ஏற்பட்டது. `கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!’ என்று தானே எழுந்ததது பாட்டு.

    தாத்தாவின் நினைவு தொடர்ந்தது. `கல்யாணம் கட்ட ஒருவாட்டி ஊருக்குப் போனேன். கப்பல்லே. அதோட சரி. வர்ற பத்தாவது மாசம் திரும்பிப் போலாம்னு இருக்கேன்!’ வருடம் தவறாமல் இதையே நம்பிக்கையோடு சொல்வார். `பத்தாவது மாசம்’ வந்துவிட்டால், `நாலாவது மாசம்’ என்று அதை மாற்றிக்கொள்வார், அலுக்காமல். ஆனால், ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப் போடப்போகும் முதல் ஆள் அவராகத்தான் இருப்பார்.

    புரியாது, அவன் ஒருமுறை கேட்டேவிட்டான். `ஊரு, ஊருங்கறீங்க! இங்க யாரு பதவிக்கு வந்தா என்ன, வராட்டி என்ன? எதுக்கு இப்படி ஓட்டுப்போடணும்னு ஓடறீங்க?’

    வெகுண்டெழுந்தார் தாத்தா. `என்னடா அப்படிக் கேட்டுப்பிட்டே? நாம்ப இருக்கிற எடத்துக்கு உண்மையா இருக்க வேணாம்? இந்த மண்ணிலதான் பிள்ளைகுட்டி பெத்து, நாயா ஒளைச்சு அவங்களைக் காப்பாத்தி, இந்த வீட்டைக் கட்டிப்போட்டு..!’

    “டேய் காந்தி!” குரல் சற்று அருகிலிருந்து மீண்டும் கேட்க, “என்ன தாத்தா?” என்று சலிப்புடன் குரல் கொடுத்தபடி, ஆறங்குலச் சீப்பை கையில் எடுத்துக்கொண்டான் காந்தி. பதினேழு நிமிடங்கள். தினசரிக் கணக்கு. அவனுடைய ஒவ்வொரு வயதுக்கும் ஒரு நிமிடம். தலை வாரி முடிய இன்னும் நான்கு நிமிடங்கள்.

    “எனக்கு இந்த நேசனைக் கொஞ்சம் படிச்சுச் சொல்லுடா. கண்ணே தெரிய மாட்டுது!”

    காந்தி பல்லைக் கடித்துக்கொண்டான். மலாய் பள்ளிக்கூடத்தில் படித்த தன்னை டியூஷன் வகுப்புக்கு அனுப்பியாவது தமிழ் கற்றுக்கொள்ள வைத்தது இதற்குத்தானா என்ற எரிச்சல் பிறந்தது. தமிழ் கற்ற நேரத்தில் கணக்கில் கவனம் செலுத்தியிருந்தால், பாசாகித் தொலைத்திருக்கலாம்.

    `இன்னொரு வருசம் படியேண்டா!’ என்று தாத்தா வற்புறுத்தியபோது மறுத்துவிட்டான். அக்கம்பக்கத்தில் யார் எட்டாவதைத் தாண்டி இருக்கிறார்கள்?

    “காந்தி..!”

    `அன்னாடம் பேப்பர் படிக்காட்டி என்ன! தினமும் சண்டை, கொலை, கற்பழிப்பு, அவ்ளோதான்! போரிங்! பரிச்சை எளுதக்கூட நான் இவ்வளவு படிச்சதில்ல!’ தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். இதையெல்லாம் தாத்தாவிடம் சொல்லித் தப்பிக்க முடியாது. அவர் பேசப் பிடித்துக்கொண்டால் அவ்வளவுதான்.

    சில சமயம், அரைகுறை ஆடைகளில் கவர்ச்சிகரமாகப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த நடிகைகளைப் பார்த்துவிட்டு, `சினிமா பக்கம் படிக்கட்டுமா, தாத்தா?’ என்று இவனே துணிந்து கேட்டாலும்,`இப்பல்லாம் என்னடா சினிமா? அந்தக் காலத்தில பாகவதர் பாடுவாரு, பாரு!’ என்றபடி, `கிஸ்னா, முகுந்தா,’ என்று பாடவும் ஆரம்பித்துவிடுவார். ஒரு வரி பாடுவதற்குள் இருமல் ஆரம்பித்துவிடும். பாட்டை நிறுத்திவிட்டுப் பேச்சைத் தொடர்வார்: `காந்தி! ஒன்கிட்டே சொல்லி இருக்கேனோ? நான் ஒன் வயசா இருக்கிறப்போ பாட்டு படிச்சபடி, மேடை நாடகத்திலே எல்லாம் நடிச்சிருக்கேன்!’

    `ஒன் வயசா’ என்று அவர் ஆரம்பிக்கும்போதே, அடுத்து வரும் வார்த்தைகளை அவன் ஒலியில்லாமல், கூடவே உச்சரிப்பான். அந்த அளவுக்கு அவ்வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. முகத்தில் அலட்சியச் சிரிப்பு தெளிவாகத் தெரியும். நடிகர் என்றால் பணக்காரராக இருக்க வேண்டாமோ?

    தெருமுனையில் அழுகைச்சத்தம்.

    எந்த ஒழுங்குமுறையும் இல்லாது, அவரவர் அவசரத்துக்குக் கட்டிக்கொண்டிருந்த குடியிருப்பு ஆதலால், `குடிசை’ என்றும் சொல்ல முடியாமல், `வீடு’ என்றும் மனதாரச் சொல்ல முடியாது, நவக்கிரகங்கள்போல் வெவ்வேறு திசையை நோக்கியிருந்தன அந்த புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த உறைவிடங்கள்.

    ஓரத்திலிருந்த சில வீடுகளை முதல்நாள்தான் டிராக்டர் வைத்து இடித்துத் தள்ளியிருந்தார்கள். எப்போதும் காணப்படும் ஆளுயர குப்பைமேடு, பலகைகளும், உலோகத் தகடுகளும் சேர, மேலும் உயர்ந்து இருந்தது. தெருநாய்கள் ஆரவாரமாக விளையாடிக்கொண்டும், சண்டை பிடித்துக்கொண்டும் இருந்தன.

    வீட்டை இழந்து, தமது சொற்ப உடைமைகளுடன் பெண்கள் அழுதபடி நிற்க, அவர்களைப் பார்த்து சிறுகுழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர். ஆண்கள் கண்ணில் நிராசை — இந்தமாதிரி சுதந்திரமான இடத்தில் இனிமேல் தங்கமுடியுமா என்ற விரக்தியில்.

    `நானும் இப்படி ஒண்ணுமில்லாம நிக்கற நெலமை வரக்கூடாது!’

    “காந்தி! இன்னுமா தலைசீவி முடியல? முடி எல்லாம் கொட்டிடப்போகுதுடா!” பலமுறை கேட்டிருந்த தாத்தாவின் நகைச்சுவையை ரசிக்க முடியாது, தரையில் கிடந்த பாய்மேல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த ஜீன்சையும், டி.ஷர்ட்டையும் அணிந்துகொண்டான்.

    தீபாவளியை முன்னிட்டு, கோலாலம்பூர் `செமுவா ஹௌஸ்’ (SEMUA HOUSE — எல்லோருடைய வீடு) கட்டிடத்தின் பக்கத்தில் பிரத்தியேகமாகக் கடைகள் போடப்பட்டபோது, வெளியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சட்டை எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை. அதன் இரு பக்கங்களிலும் குறுந்தாடியுடன் ஒசாமா பின் லாடன் — ஈராக் போர் மூள காரணமாக இருந்தவர். நமட்டுச் சிரிப்புடன் பலரும் நகர, `இதைப் போட்டா, நம்பளையும் பாப்பாங்கல்ல!’ என்ற நப்பாசையுடன் அவன் வாங்கியது.

    “டேய்! கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்ல?”

    “நான் வெளியே போகணும்!” என்று முணுமுணுப்பாகப் பதிலளித்தவன், ஒரே பாய்ச்சலில் வெளியே நடந்தான். அவசரத்தில், தாழ்வான கூரையின் அலுமினியத் தகடு நெற்றியில் இடித்தது.

    அதனால் உண்டான வலியும், `பாத்துப் போயேண்டா!’ என்ற தாத்தாவின் கரிசனம் ஏற்படுத்திய ஆத்திரமும் அவன் பைக்கை உதைத்த விதத்தில் தெரிந்தது. அதற்கு அவன் அவசரம் புரியவில்லை. நிறைய உதை வாங்கியது.

    `இது வேற! சனியனை `ஸம்பால’ (SAMPAH – குப்பை, மலாயில்) கடாசிட்டு, சீக்கிரம் புதுசு ஒண்ணு வாங்கணும். பளபளான்னு இருக்கும்!’ என்று சொல்லிக்கொண்டவனுக்கு, செல்வநாதனைப்போல் தானும் கார் வாங்கும் நாள் தூரத்தில் இல்லை என்ற எண்ணமே சற்று ஆறுதலைக் கொடுத்தது.

    செல்வநாதன் — பதினான்கு வயதில், சிகரெட்டுப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்த குரு. `இதுக்கெல்லாம் பணமில்லியே!’ என்று இவன் தயங்கியபோது, `ஸ்கூலுக்குப் போக பஸ் எதுக்குடா ஒனக்கு? நடந்து போவியா! அந்தக் காசை நல்லா, ஜாலியா செலவழிக்கலாமில்ல?’ என்று ஞானம் வழங்கியவன். அவன் இன்று புதிய ப்ரோட்டான் வீரா காடி வைத்திருக்கிறான். கழுத்தில் கெட்டியான தங்கச் சங்கிலி. எட்டு பவுன் இருக்கும். ஒரு காதில் ரஜினி வளையம்.

    “இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா காந்தி இந்த நாத்தம் பிடிச்ச கம்பதிலேயே (KAMPUNG — கிராமம்) இருப்பே? வீட்டுக்கு ஜன்னலுமில்ல, காத்துமில்ல. என்னிக்காவது ஒரு நாள் எல்லாத்தையும் இடிச்சுட்டுப் போயிடுவாங்க!” என்று செல்வநாதன் சில மாதங்களுக்குமுன், தற்செயலாகச் சந்திப்பதுபோல் சந்தித்து, ஆரம்பித்தபோது, “பதிலுக்கு அவங்க அபார்ட்மெண்ட் தர மாட்டாங்க?” என்று அப்பாவித்தனமாக வினவினான் காந்தி.

    “பெரிய அபார்ட்மெண்ட்!” நண்பன் பழிப்புக் காட்டினான். “பத்தடுக்கு மாடி, தெரியுமா? புறாக்கூண்டு மாதிரி, ஒவ்வொண்ணிலேயும் நாலு வீடுங்க. ஒரே ரூம்புதான். லிஃப்ட் எப்பவுமே ரோஸா (ROSAK — பழுது) ஆகிடும். இப்ப மாதிரி, தண்ணிக்காசு, விளக்குக்காசு குடுக்காம இருக்கமுடியுமா? நீ லோரி கிளீனரா வாங்கற சம்பளம் அதுக்கே சரியாப் போயிடும்!”

    `இவனுக்குத்தான் எவ்வளவு சமாசாரங்கள் தெரிந்திருக்கிறது!’ என்ற பிரமிப்பையும் மீறி, தாத்தாவைபோல் லோரி டிரைவராக ஆனாலும், தன் தரித்திரம் தொலையாது என்ற உண்மை புரிய, காந்தியின் முகம் தொங்கிப்போயிற்று.

    அதை எதிர்பார்த்திருந்த நண்பன் வேப்பிலை அடித்தான். “நீ வர்றியா, சொல்லு. எங்க பெரிய மண்டகிட்ட கூட்டிட்டுப்போறேன். பியாசாவா (BIASA –வழக்கமாக), அவர் யாரையும் கண்டுக்க மாட்டாரு. ஆனா, `இப்பிடி, நம்ப பையன் ஒருத்தன் கஸ்டத்தில இருக்கான். நல்ல பையன், மண்ட. சொன்ன பேச்சு கேப்பான்’னு நான் எடுத்துச் சொன்னதுமே, `பாவம், கூட்டிட்டு வாடா. நம்பளோட சேத்துக்கலாம்’னு சொல்லிட்டாரு!”

    “தமிழாளா?”

    “அட,நீ ஒத்தன்! தமிழவங்க `விதி, விதி’ ன்னு பொலம்பிக்கிட்டு, கஸ்டத்திலேயே காலத்தைக் கடத்திடுவாங்க. இவரு சீனரு!”

    யோசித்தபடியே வீடு திரும்பிய காந்தி, செல்வநாதன் குறுகிய காலத்திலேயே பெரிய பணக்காரன் ஆனதுபற்றி தாத்தாவிடம் வியப்புடன் தெரிவித்தான்.

    “எனக்கென்னமோ, அவன் குறுக்கு வழியில போறான்னுதான் படுது!” என்ற தாத்தா, “எப்பவும் நம்பளைவிடக் கீள இருக்கிறவங்களைத்தான் பாக்கணும். அப்பத்தான் அந்த பத்துமலை முருகன் நம்பளை எவ்வளவு நல்லா வெச்சிருக்காருன்னு வெளங்கும்,” என்று தத்துவம் பேசினார்.

    குண்டும் குழியுமாகப் பெயர்ந்த மண்தரையில் சிமெண்டு பூசி, சுவர் என்ற பெயரில் மரப்பலகைகள் வைத்த இடத்தில் காலம் தள்ளிவிட்டு, தான் ஏதோ பெரிய அதிர்ஷ்டசாலி என்பதுபோல் தாத்தா பேசியபோது, காந்திக்கு எரிச்சல்தான் எழுந்தது.

    அவர்கள் வீட்டு வாசலில் நின்று பார்த்தால், உலகத்திலேயே உயரமான இரட்டைக் கோபுரங்கள் தெரியும். இன்னொரு பக்கம் செல்வம் கொழிக்கும் மலைநாட்டின் மிகப் பெரிய பேரங்காடியான `மெகா மால்’. இவையெல்லாம் எப்படி தாத்தா கண்ணில் மட்டும் படாமல் போயின?

    `தாத்தா கனவிலேயே சந்தோசமாயிடறவரு!’ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டான். தானும் அவரைமாதிரி ஆகிவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டது அப்போதுதான்.

    நடுராத்திரி. ஏதோ ரகளை. வழக்கமாக, அக்கபக்கத்தில் எவனாவது குடிகாரன் மனைவியை அடிப்பதுபோல் இல்லாமல், வித்தியாசமாக இருந்தது. காந்தி எழுந்து வந்தான்.

    வீட்டுக்குள் போலீஸ்காரர்கள்! ஒருவர் கையில் அவன் கண்ணாடிக்குப்பின் ஒளித்து வைத்திருந்த பார்சல்!

    “யாரிது?” காந்தியைக் காட்டிக் கேட்டார் ஒருவர்.

    “என் பேரப்பிள்ளைதாங்க. சின்னப்பையன்! அவனுக்கு ஒண்ணும் தெரியாதுங்க”.

    “இதில நிறைய டாடா (DADAH — போதைப்பொருள்) வெச்சிருக்கீங்க. எங்கேயிருந்து வந்திச்சு?”

    “எனக்குத் தெரியாதுங்க, பாஸ். இல்லாட்டி, `யாராவது சாமான் ஏதாச்சும் ஒங்ககிட்ட குடுத்தாங்களா?’ன்னு நீங்க கேட்டப்போ, நானே இதைக் காட்டி இருப்பேங்களா?” தாத்தா கூறிக்கொண்டிருந்தார். “என் கூட்டாளியோட மகன் — அசலூர்க்காரன் — `கிளப்புக்குப் போறேன், மாமா. நாளைக்கு வெள்ளனே வந்து இதை எடுத்துக்கிட்டுப் போறேன்! அப்படின்னான். இதுக்குள்ளே என்ன இருக்குன்னு அவனும் சொல்லல. நானும் கேக்கல”.

    “ரெண்டு கிலோ இருக்கும்! என்னமோ கதை அளக்கறீங்களே!”

    “நம்பிக்கைத் துரோகம் செய்துட்டானுங்க, பாவி!” தாத்தாவின் குரலில் அழுகை. காந்தி இருந்த பக்கம் அவர் திரும்பவே இல்லை.

    “தாத்தா..!” தயக்கத்துடன் அழைத்தான் பேரன். இப்படியெல்லாம் ஆகும் என்று செல்வநாதன் ஏன் எச்சரிக்கவில்லை? இப்போது என்ன செய்வது?

    gandhi-t-shirt_1975029iகண்டிப்பான குரலில், “ராங்கி பண்ணாதே, காந்தி. பெரியவங்க பேசறப்போ, குறுக்கே பேசக் கூடாதுன்னு ஒனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்?” என்றார் தாத்தா, அவன் பக்கம் திரும்பாமலேயே. அதிகாரிகளிடம், “என் பேரப்பிள்ளைங்க!” மீண்டும் சொன்னார். “பேருதான் காந்தி. வெளங்காத பய. படிப்பும் ஏறல,” என்றுவிட்டு, “நான் வெள்ளக்காரன் காலத்திலேயே அஞ்சு கிளாஸ் படிச்சவன்!” என்றும் தப்பாமல் சொன்னார்.

    தாத்தாவின் தற்பெருமையைக்காதில் வாங்காது, “வயசான காலத்திலே நீங்க இப்படி ஒரு காரியம் செய்திருக்க வேண்டாம். ஒரு கிலோ டாடா வெச்சிருந்தாலே மரண தண்டனை. தெரியுமில்ல?” என்று மேலும் அதட்டினார் அதிகாரி.

    மரண தண்டனையா! அதிர்ந்தான் காந்தி.

    தாத்தா தொணதொணப்புதான். எப்படியும் சில வருடங்களில் சாகப்போகிறவரும்கூட. ஆனால், `தவறு’ என்று தெரிந்தே, பேராசை பிடித்துத் தான் செய்த காரியத்துக்காக சட்டம் அவரைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தால், தான் என்ன மனிதனோடு சேர்த்தி?

    `காந்தி பொய்யே சொல்ல மாட்டாராம். அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன். நீயும் அவர்மாதிரி..!’

    தாத்தா மட்டும் இப்போது பொய் சொல்லலாமோ என்று குழந்தைத்தனமான கோபம்தான் முதலில் எழுந்தது காந்திக்கு.

    சட்டென விளங்கியது அவனுக்கு. தன்னைக் காப்பாற்ற, மரண தண்டனைக்கும் துணிந்துவிட்டார்!

    தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வர அதிக நேரம் பிடிக்கவில்லை காந்திக்கு.

    “ஸார்! தாத்தாவுக்கும், இந்தப் பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,” என்று திடமாக ஆரம்பித்தான்.

    ஆழ்ந்த வருத்தத்தையும் மீறி, தாத்தாவின் முகத்தில் சிறு நகையின் ரேகை படர்ந்தது. பேரனுக்குக் காரணப்பெயரைத்தான் வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தின் வெளிப்பாடு அது.

    _________________________________________________________________________

    மறுபகிர்வு:
    2004 -ல் தமிழ் நேசன் பவுன் பரிசுப்போட்டியில் பரிசு பெற்ற கதை.

    Share
  • முட்டுச் சந்து

    — எஸ். வி. வேணுகோபாலன்.

    இன்று காலை சக்தி நகரின் அந்தத் தெரு மையப் பகுதியில் இருந்த அந்த வீட்டுமுன் நான்கைந்து பேர் நிற்கும்போதே எனக்குச் சிலீர் என்றது.

    இன்று காலை சக்தி நகரின் அந்தத் தெரு மையப் பகுதியில் இருந்த அந்த வீட்டுமுன் நான்கைந்து பேர் நிற்கும்போதே எனக்குச் சிலீர் என்றது.

    ஒரு வேளை அந்தப் பாட்டி… அடடா… என்னுடன் மகள் இந்து இருந்தாள்.

    இந்த ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு எனது மூன்றாவது நடை அது. காலை ஏழரை மணிக்கு நானும் ராஜியும் வழக்கமான நடை நடந்து போகையில் இதே வீட்டைக் கடக்கையில் பாட்டியை நினைத்தபடி தான் கடந்தோம்… அப்போது வாசலில் எந்தக் கூட்டமும் இருந்திருக்கவில்லை. “”கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே முழு நடையை முடித்த நான், பால் வாங்க மறந்தது வீட்டருகே நெருங்கும்போது நினைவுக்கு வர, ராஜியை போகச் சொல்லிவிட்டு மீண்டும் பிஸ்மி கடைக்கு நடந்தேன்.

    பிஸ்மி கடை, சக்தி நகர் நுழைவுக்கு முந்தைய தெருவான விஸ்வநாதபுரம் இரண்டாவது தெரு. வீட்டுக்குத் திரும்பிய பிறகு சிறிது நேரம் கழித்து மகன் நந்தா, “”கொஞ்சம் நடை நடந்து விட்டு வரலாம் வா” என்றான். அவனோடு நடக்கும் திசைகள், தெருக்கள் வேறு. அப்புறம் இந்து கேட்டாள், “”அப்பா கொஞ்சம் வாக் போயிட்டு வரலாமா?” என்று அது எங்கள் வழக்கமான நடைப் பயிற்சிப் பாதை.

    சக்தி நகரில் நுழைகையில் அந்த வீட்டின் முன் நான்கைந்து பேரைப் பார்த்தோம். அந்தப் பாட்டி விடைபெற்று விட்டிருந்தாள். ஏழரை மணிக்கு எங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்த உயிர், இனி எப்போதும் நினைவில் வாழ்வதானது.

    ஒரு நாளா? இரண்டு நாளா? எத்தனை முறை பார்த்திருப்போம்? ராஜிக்கு அந்தப் பாட்டியை மிகவும் பிடித்திருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் பார்க்கையில் திடமாகத் தெரிந்த பாட்டி, அண்மைக் காலமாக நாங்கள் அந்த வழி செல்கையில், எப்போதேனும் எதிர்ப்படுவாள். தெருவில் யாரேனும் தென்படுகிறார்களோ என்று தேடும் காந்தக் கண்கள். கருணை சுரக்கும் கண்களில் அதே போக்கில் ஒரு கோரிக்கையும் ஒலிக்கக் கேட்டிருக்கிறோம்.

    “”கொஞ்சம் அந்தப் பக்கம் கொண்டு விட்டுடேன்” என்று கேட்பாள் பாட்டி. ஐம்பது மீட்டர் கூட இல்லாத சிறிய தெருவில் எதிர்ப்பக்கம் கையைப் பிடித்துக் கொண்டு விட்டால் போதும், அப்புறம் பாட்டி நேரெதிரே இருக்கும் முட்டுச் சந்தில் ஒரு வீட்டை நோக்கித் தானே நடந்து செல்லத் தொடங்கி விடுவாள். சிலபோது, எதிர்ப்பக்க முட்டுச் சந்தின் முனையில் காத்திருக்கையில் பார்த்திருக்கிறோம். ராஜி கையைப் பிடித்து தெருவின் குறுக்கே வண்டி வராத நேரமாக நடக்க வைத்து இந்த வீட்டின்முன் கொண்டு விடுவாள். அந்தக் கண்களில் இலேசான பரிச்சய சிரிப்பும், மகிழ்ச்சியும் எதிர்காலத் தலைமுறையையும் வாழ்த்தும்படி இருக்கும்.

    இங்கே யார் இருக்கிறார்கள். அங்கே யார் இருக்கிறார்கள் எங்களுக்குத் தோன்றியதில்லை, கேட்க. பாட்டி சொல்லியதாக நினைவு, இங்கே ஒரு பிள்ளை வீடு, அங்கே ஒரு பிள்ளை வீடு என்று. வாழ்க்கை ஒரு தொடர் ரயில் பயணம். இடைப்பட்ட தூரத்தில் பயணிகளுக்கு இடையே ஒருவருக்கொருவர் பேச்சுத் துணைக்கு, ரசனைக்கு, பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் விஷயங்களுக்கு எப்போதுமே ஓர் எல்லைக் கோடு இருக்கிறது. வடிவேலு சொல்வது மாதிரி, “”அதைத் தாண்டி நீயும் வரக் கூடாது.. நானும் வர மாட்டேன்” என்று பாட்டி எங்கள் நடைப் பயிற்சியின் இடையே ஒரு பாத்திரம். அவளது வாழ்க்கையில் எங்களுக்கு பெரிய இடம் இருந்திருக்க வேண்டிய சாத்தியம் இல்லை.

    முதுமையின் நிறைவில் ததும்பிக் கொண்டிருந்த அழகில், உடலின் இயலாமையை வெல்லும் அந்த கம்பீரப் புன்னகையில், மூக்குத்தியின் ஜொலிப்பில் நாங்கள் அந்தப் பாட்டியை நேசிக்கத் தொடங்கி இருந்தோம்.

    சிறிது காலமாக பாட்டியைப் பார்த்த நினைவு இல்லை. இந்த அவசர மாநகர வாழ்க்கையில் நழுவும் சங்கதிகள், மறக்கும் நிகழ்ச்சிகள், இழக்கும் அனுபவங்கள், தொலைக்கும் உறவுகள் எத்தனை எத்தனை… ஆனாலுமென்ன? இருக்கவே இருக்கிறது, “”ஓஹோ அப்படியா”, “”அடடா அப்புறம்”, “”அடக் கடவுளே”, “”ஆஹா போச்சுடா” என்பது மாதிரி ஸ்டாண்டர்ட் சொற்கோவை சில இருக்கவே இருக்கிறது, எல்லாவற்றையும் அந்த ஓரிரு சொற்களில் அழுத்தி உணர்ச்சிகளை மூழ்கடித்து அடுத்த வேலைக்குச் செல்ல கூட்டங்களில் அன்னார் நினைவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி என்று அறிவிப்பதன் விரிவான பொருள், அதற்கு மேலும் அந்தத் துக்கத்திற்கு இங்கே நேரமில்லை என்பதாக இருக்கக் கூடும், யார் கண்டது?

    பாட்டி போய்விட்டாள் என்பதை வாசலில் அவரது மகன் அலைபேசியில் யாரிடமோ, ஆமாம்… எட்டரை மணிபோல இருக்கும்.. என்று சொல்லிக் கொண்டிருந்ததில் உறுதியானது. இந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் மட்டும் சட்டென்று வீட்டினுள் நுழைந்தேன். அழுது கொண்டிருந்தது மருமகளாக இருக்கக் கூடும். அவசர அவசரமாக வேறு ஒரு பெண்மணி – பச்சை நிற மாஸ்க் அவள் கழுத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது, நர்சிங் பணியாளராக இருக்கக் கூடும்- பாட்டிக்கு புடவை அணிவித்துக் கொண்டிருக்கவே சட்டென்று வாசலோடு நின்றேன்.

    “”கடைசியா ஏதாவது சாப்பிட்டாங்களா?” என்றேன்.

    “”கார்த்தால காப்பி சாப்பிட்டாளே… அப்புறம் எட்டு மணிக்குத் தான்”

    என்னருகே நின்ற ஒருவரிடம், “”டாக்டர் பார்த்துவிட்டுச் சொல்லிட்டாராக்கும்?” என்றேன்.

    “”ஆமாம்… முடியலேன்னு கூப்பிடவும் டாக்டர் வந்து பார்த்து ஐ சி யூவில் சேர்க்கலாம்னு சொல்லி இருக்கார். அவர் அந்தண்ட போயிருக்க மாட்டார். போய்ட்டா பாவம்” என்றார்.

    அதற்குள் வேறொரு பெண்மணி, “”நிறைவாழ்வு வாழ்ந்துட்டா… ஆறு மாசத்துக்கு முன்னாடி தாத்தாவும் பாட்டியும் நன்னா உட்கார்ந்துண்டு கனகாபிஷேகம் பண்ணிண்டாளே… அவருக்கு நூறு வயசு. பாட்டிக்கு தொண்ணூற்று ஐந்து” என்றார்.

    நான் பாட்டியைக் கை தொழுது நின்றேன். கழுத்து வழி புடவையைக் கொண்டுபோய் அந்த நர்சிங் பெண்மணி பாட்டியின் தலையை உயர்த்திய மாதிரி வைத்து வேலையை முடிக்கையில், பாட்டியின் முகம் பளிச்சென்று தெரிந்தது. “நான் வரட்டுமா?’

    என்று கேட்டாற்போல் இருந்தது. சாலையைக் கடந்து போகத் துணை தேடியவளுக்கு இப்போது காலத்தைக் கடந்து போக எந்தத் துணையும் தேவைப்பட்டிருக்கவில்லை. உடலை முன்னெடுக்கவும், உடலை நகர்த்தவும், உடலை இயக்கவுமே இயலாதவருக்கு யாருடைய துணையாவது தேவையாயிருக்கிறது. உடலைத் துறக்க வேண்டிய தருணத்தில் இலேசாகிறது எல்லாமும்.

    வெளியே இந்து காத்திருந்தாள். நான் பாட்டி எதிர்ச்சாரியில் முட்டுச் சந்து நோக்கிக் கடக்கும் இடத்திற்கு அவளையும் அழைத்து நகர்ந்தேன்.

    மிகவும் வயதான பெரியவரை யாரோ கைத் தாங்கலாக அழைத்து வந்தனர். மிக நெடிய அகல நெற்றியில் திருமண் பளிச்சிட்டது. துணையை இழந்த முதியவர் அவராகத் தான் இருக்கவேண்டும். அதற்குள் வேறொருவர் வேகமாக வந்து தாத்தாவின் கையைப் பற்றிக் கொண்டு நடக்க உதவி செய்தவாறே, “”போயிட்டா” என்றார்.

    பெரியவர் அப்படியே நின்றார். ஒரு நொடிப் பொழுது. – ஒரே ஒரு நொடிப்பொழுது உறைந்தவண்ணம் நின்றார். தழுதழுக்கும் குரலில், “”போயிட்டாளா?” என்று வினவினார். “”நல்லதுக்குத் தான்” என்றார். அடுத்த கணம். மெதுவாக நடக்கத் தொடங்கினார்.

    எனக்கு என்னவோ, அவரை மெல்ல அந்தப் பக்கம் தெருவைக் கடக்க வைத்து அந்த வீட்டுக்குள் கொண்டு சேர்த்த பிறகு சொல்லி இருக்கலாமோ என்று பட்டது. ஆனால், அவரால் அந்த ஒரு நொடியில் உண்மையை ஜீரணிக்க முடிந்தது.

    இப்போது வண்டிகள் எதுவும் குறுக்கே வராதபடி பார்த்து மெல்ல தாத்தாவை அந்த இருவரும் கைத் தாங்கலாக அழைத்து வந்தனர்.

    ஏனெனில், இனி ஒரு போதும் பாட்டி அப்படி அதே எச்சரிக்கையோடு அடுத்தவர் உதவியோடு கூட எதிர்ப்பக்க முட்டுச் சந்துக்கு அவரைத் தேடிச் செல்ல இயலாது.

    ____________________________________________________________
    மறுபகிர்வு:
    நன்றி: முட்டுச் சந்து – தினமணி கதிர் சிறுகதை

    Share
  • தேவிதரிசனம்

    ஒரு அரிசோனன்

    என் கண்ணைப் பறித்தன அந்த பளபளக்கும் வான்நீலத் தாவணியும், கருநீலப் பட்டுப்பாவாடையும்.  அவற்றை அணிந்துவந்த அழகுதேவதை என் கண்களையும், கருத்தையும் தன்பால் கட்டிக் கவர்ந்திழுத்தாள்.  உடனே, என் கால்கள் தாமாகவே நின்றுபோயின.

    “டேய், கண்ணா, ஏண்டா சடன் பிரேக் போடறே?  இப்பவே பந்தி ஃபுல் ஆகறமாதிரி இருக்கு.  நீபாட்டு பராக்குப் பார்த்துக்கிட்டு நின்னா, சாப்பாட்டுக்கு ரெண்டாம் பந்திக்குக் காத்திருக்கவேண்டியதுதான்!” என்று என்னை இழுத்தான் என் வயதொத்த என் சின்னமாமன் ராஜு.

    “நீ போய் உக்கார்ந்து, எனக்கும் உன்பக்கத்துலே இடம் போட்டுடேண்டா, ராஜு!” என்று அவனை அனுப்பமுயன்றேன்.  ஒரே வயதொத்தவர்கள் என்பதால் ‘வாடா, போடா,’தான்;  மாமன், மருகன் என்ற பேதம் மறைந்து நட்பு நிறைந்துநின்றதே அதற்குக் காரணம்.

    “இங்கெ என்ன வெட்டிமுறிக்கற வேலை உனக்கு இருக்கு, கல்யாணச் சாப்பாட்டை ஒருகை பார்க்கறதைவிட?  சரி, இடம்போட்டுத் தொலைக்கறேன்.  நீ உன்னோட வெட்டிமுறிக்கற வேலையை முடிச்சுட்டே வந்துதொலை!” என்று பலவிதமான, எழுதக்கூடாத வார்த்தைகளால் என்னை அர்ச்சனை செய்து, எனக்கு ஆசிவழங்கியவாறே செல்லத்துவங்கியவனை மறுகணமே பின்தொடர்ந்தேன், “ராஜூ,  நில்லுடா, நானும் வரேன்,” என்றவாறே.

    என் நீலத்தேரும் பந்தியைநோக்கி நகர ஆரம்பித்ததே அதற்குக் காரணம்.

    அந்தத் தேர் அசைந்து அசைந்து செல்வதைப் பார்த்ததும் என் நினைவுக்கு வந்தது, சில நாள்கள்முன்பு தமிழாசிரியர் நடத்திய கவிதைகளின் வரிகள்தான்!

    “இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க, வட்டில் சுமந்து மருங்கசைய…”

    அத்துடன், அம்பிகாபதி படத்தில் வந்த,

    “சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
    துற்றே அசையக் குழை ஊசலாடத் துவர்கொள் செவ்வாய்
    நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே!”

    என்ற பாடலையும் என் உதடுகள் தானாகவே முணுமுணுத்தன.

    என்னைத் திரும்பிப்பார்த்த என் மாமன் ராஜு, “உனக்கு அரணைப் புத்திடா, கண்ணா!  சித்தம்போக்கு சிவன்போக்குடா உனக்கு!  ஒழுங்கா சாப்பிட வந்துதொலை!  சமையல் வாசனை மூக்கைத் துளைக்குது.  வெங்காய சாம்பார் மணம் என்னை அப்பிடியே தூக்குது!” என்று உண்ணவிருக்கும் திருமணவிருந்தையே எண்ணி மகிழ்ந்தவாறே முன்சென்றான்.

    எனது பாடல் அவன் காதுகளில் விழவேயில்லை.  பசியினால் அவனது காதுகள் அடைத்துப்போயினவா, அல்லது, “வயிற்றுக் குணவு இல்லாதபோது செவிக்கும் சிறிது ஈயப்படும்” என்ற அவனது சித்தாந்தமா என்று நானறியேன்.

    அந்த நீலத்தேரின் நடையழகை, துவளும் இடையழமை இரசித்தவாறே நடந்தேன்.

    அழகு, அழகு கொள்ளையழகு.  மனதிற்குள்ளும், உடலுக்குள்ளும் ஏதோ ஓர் இனம்புரியாத கிளர்ச்சி.  அவள் நடக்க நடக்க, நெளிந்தாடும் பாம்பையொத்த குஞ்சலம் வைத்த பின்னல் என்னைக் கட்டியிழுதத்தைச் சொல்லவா, பக்கவாட்டில் அசையும் பின்னழகில் நான் கிறங்கி அதற்கேற்ப என் தலையை என்னையும் அறியாமல் ஆட்டி மகிழ்ந்ததைச் சொல்லவா, அலையலையாக வளைந்திருந்த கருங்குழலில் என் இரும்பு மனம் பழுக்கச் சிவந்து வளைந்ததைச் சொல்லவா?  என் மனம் என்னை விட்டுவிட்டு அவளுடன் நடைபயின்றது.

    “கருங்குழலி என்பது ஆகுபெயர் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை” என்று தமிழாசிரியர் கற்பித்த இலக்கணம் நினைக்காமலே என் நினைவுக்கு வந்து, இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டான அழகி இவள் என்ற எண்ணத்தை என் மனதில் இழையோடவிட்டது.

    அப்பொழுது எதிர்பாராவண்ணம் திரும்பிய நீலத்தேர் தன் முத்துப்பற்கள் தெரிய புன்னகை செய்தாள்.  நான் அங்கேயே ஏன் மயங்கிவிழவில்லை என்று எனக்கே தெரியவில்லை.

    நடுவில் சீரான, நேர்கோடான வகிடு, அதிலிருந்து இருபுறமும் வளைந்துவளைந்து செல்லும் கரிய கேசம் காதுகளைப் பாதி மூடியவண்ணம் பின்சென்று மறைந்தது.  மணிபதித்த நெற்றிச்சுட்டி, காதில் குண்டலங்கள் அவள் திரும்பியதால் ஆடிய ஆட்டத்தை இன்னும் நிறுத்தவில்லை.  அந்த ஆட்டத்தில் நான் அக்குண்டலங்களோடு ஊஞ்சலாடினேன்.

    சாயமே இல்லாமல் இலேசாகச் சிவந்திருந்த உதடுகளில் உள்ள ஈரப்பசையில் என் உள்ளம் அட்டையாக ஒட்டிக்கொண்டது.  இயற்கையாகவே சிவந்திருக்கும் உதடுகளை முதன்முறையாக அப்பொழுதுதான் பார்த்தேன்.  அதுவரை – உதடுகள் கடவுளால் உருவாக்கப்பட்டதற்குக் காரணம் – மண்டையோடுமாதிரி நமது பற்கள் மாதிரி வெளியே தெரியாமலிருக்கவும், பேசுவதற்காகவும், உண்ணுவதற்காகவும், நமது வாயைத் திறக்கவும், மூடவும் — அதற்குமேல் அவற்றைப்பற்றி சிந்திக்கவும் தேவையில்லாத உறுப்புகள் அவை என்பதைத்தவிர வேறெந்த எண்ணமும், என்னைப்பொருத்தவரை என் மனதில் தோன்றியதில்லை.

    ஆனால், முகத்திற்கு அழகுசேர்க்கும் — கண்களுக்கு இணையான — அவள் கண்களைப்பற்றி அடுத்தபடி சொல்லுகிறேன் – உள்ளத்தைக் கவ்வியிழுக்கும் உறுப்பு என்ற எண்ணம் முதன்முறையாக என்னிடம் எழுந்தது.

    அவள் என்னைப் பார்த்துத்தான் புன்னைகை செய்கிறாள், உடனே அவளருகில் செல்வோம் என்ற எனது ஆர்வத்திற்கு அணைபோட்டேன்.  அடுத்தகணம் அப்புன்னைகை எனக்கல்ல, என்னைத்தாண்டி ஓடி அவளருகில் சென்று அவள் தோளில் உரிமையுடன் கையைப்போட்டுக்கொண்ட அவளது தோழிக்குத்தான் என்றறிந்ததும், என் உற்சாகம் ஈரப்பட்டாசாகப் பிசுபிசுத்தது.

    உடனே என்னையும் அறியாமல் ஒருவிதமான பொறாமை உணர்வும் தோன்றுவதை என்னால் தடுக்கமுடியவில்லை.

    “சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை,” என்று எப்பொழுதும் என்னை உயர்த்திப்பேசும் என் பாட்டியின் சொற்கள் என்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், பெண்ணாகப் பிறந்திருந்தால், அந்த நீலத்தேரின் அருகில் சென்று பேசியிருக்கலாமே, அதிலும், அவளின் தோழியாகப் பிறந்திருந்தால், அவளின் தோளில் உரிமையாகக் கையைப்போட்டு, அவளுடன் சென்றிருக்கலாமே என்ற பொறாமைகலந்த நப்பாசை ஒருகணநேரம் என்னுள் தோன்றுவதையும் என்னால் தடுக்க இயலவில்லை.

    “இங்கே உட்காரலாமாடா, கண்ணா?  இங்கேதான் முதல்ல பரிமாறுவாங்க.  எதுவும் விட்டுப்போகாம கிடைக்கும். என்ன, சரியா நான் சொல்றது?” என்று தனது உணவுப்பந்தி நுணுக்கத்தை எடுத்துக்காட்ட முயன்றான் என் மாமன் ராஜு.

    “இருடா ராஜு, இங்கே வேண்டாம்.” என்று என்னையும் அறியாமல் என்னிடமிருந்து பதில் வந்ததும், என்னை வியப்புடன் பார்த்தான் ராஜு.

    “என்னடா ஆச்சு கண்ணா, உனக்கு?  பித்துப் பிடிச்சுடுச்சா?  இந்த இடத்துக்கு என்ன குறைச்சலாம்? கொஞ்சநேரமா உன் போக்கு சரியாவே இல்லே!” என்று தன் அதிருப்தியைக் தெரிவித்துக்கொண்டான்.

    “அங்கே வாடா, போகலாம்,” என்று நீலத்தேர் — வேண்டாம், நீலக்குயில் என்று சொல்லலாமே இனிமேல் – அவள் உட்கார்ந்த இடத்தைநோக்கி விரைந்தேன்.  அவளும், அவள் தோழியும் அமர்ந்த இடத்திற்கு எதிரில் அமர்ந்தேன், அங்கு அமரமுற்பட்ட ஒரு முதியவரை முந்தித் தள்ளிக்கொண்டு.

    “ஏண்டாப்பா தம்பி, நான்தான் இங்கே உட்கார வரேன்னு பார்த்தும், சினிமாக் கொட்டகைக்கு டிக்கெட் வாங்கப்போறவன்மாதிரி இடிச்சுதள்ளிண்டு உட்காரறியே?” என்று முதியவர் கேட்டது என் காதில் விழவேயில்லை.  அந்த நீலக்குயில்தான் என்னில் நிறைந்திருந்தாள்.

    “வரவர இந்தக்காலப் பசங்களுக்கு மரியாதை மட்டு எதுவும் இல்லாமப்போச்சு!” என்று குறைப்பட்டுக்கொண்டவாறே நகர்ந்தார் அம்முதியவர்.

    என்னை என் நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சி தேவியின் தரிசனத்திலிருந்து தடுத்தது ஓருருவம்.  அதை என் இடதுகையால் விலக்க முற்பட்டேன்.

    பட்டென்று என்முதுகில் ஒரு அடி விழுந்தது.  நிமிர்ந்துபார்த்தேன்.  என் மாமன் ராஜு.

    “உன்னை நம்பி வந்தால் நீ சுப்பிரமணியசாமி மயில்வாகனத்தில் உக்கார்ந்தமாதிரி இங்கேவந்து உக்காந்திருக்கே!  எங்கேயும் இடமில்லே, நகருடா கொஞ்சம்,” என்றபடி என்னை தம் பிடித்து நகர்த்தி, தானும் என்னருகில் அமர்ந்தான்.  அதையும் நான் உணரவேயில்லை. என் மனதைக் கவர்ந்த தேவியின் தரிசனத்தில் மீண்டும் ஆழ்ந்தேன்.

    அவள் தன் தோழியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.  எதையோ சொல்லிவிட்டு, மறுதலிப்பதுபோலத் தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.  உதட்டைச் சுழித்துக்கொண்டாள்.  அப்பொழுது அவள் காதில் சுழன்றாடிய குண்டலங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன், நான் அவளது குண்டலங்களாக இல்லாதுபோனேனே என்று.

    அவளது கண்கள் – ஆகா, பால்கிண்ணத்தில் நீந்தும் கருவண்டுகளாக அவளது கருவிழிகள் இங்குமங்கும் அலைந்தன.  ஒருதரம் பார்த்தாலேபோதும், உடனே பார்த்தவரைத் தன்னிடம் ஈர்த்துக்கொண்டுவிடும் அகண்ட கருவிழிகள்! அவ்விழிகளைப் பார்த்து அக்கடைக்கண் அமுதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணச்செய்யும் கருணைததும்பும் விழிகள்.

    அப்படிப்பட்ட அவ்விழிகள், அவளையே அள்ளிப்பருகிக்கொண்டிருக்கும் என்மேல் வந்து ஒருகணம் நிலைத்தன.  அதில் ஒரு சிறுபகுதிநேரம் என் கண்களுடன் கலந்தன.  அப்பொழுது அக்கண்களில் தெரிந்தது நாணமா, அன்பா, பாசமா, எதிர்பாரா திடுக்கிட்ட உணர்வா – அந்த அரைக்கண நேரம் எனக்கு ஆயிரம் யுகங்களாக — அசையாமல் நின்றுவிட்ட காலத்தின் இறுதியாகவே என்னால் உணரப்பட்டது.  அந்த அரைக்கணம் என்வாழ்விலேயே மறக்க இயலாத அரைக்கணம்; என் நினைவைவிட்டே அகலாத அரைக்கணம்; என்றென்றும் என்னைவிட்டு நீங்காத அரைக்கணம்; என் துன்பம், இன்பம், கோபம், தாபம், மகிழ்வு, இகழ்வு இவையனைத்தையும் மறக்கடித்துப் பேரின்பத்தில் ஆழ்த்தி முழுகடிக்கும் அரைக்கணம்.

    அவளது இதழ்கள் பிரிந்து மலர்ந்தன.  உடனே நாணத்தில் அவள் தலைகவிழ்ந்தாள்.

    நான் இன்பவெள்ளத்தில் திளைத்துத் திக்குமுக்காடினேன்.

    சுர்ரென்று புறங்கையில் சூடுவைத்ததைப் போன்ற உணர்வு என்னை துன்பக்கரையில் கொண்டுசேர்த்தது.

    “ஏண்டா, கண்ணா!  இலையைக் கவனிக்காமல் என்ன பார்வை, இங்குமங்கும்?  இப்பவே, மனசை அலையவிட்டால், நீ எங்கே படிச்சு உருப்படறது?  கொதிக்கற சாம்பாரைக் கையில் ஊத்தினாலும் திரும்பாம என்ன பார்வை?  இலையைக் கவனிடா!  உன்னை வைத்து பாப்பா [என் அம்மா] எத்தனையோ மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறாள், அதை மண்கோட்டையாக்கிவிடாதே!” என்று எரிந்துவிழுந்தார். என் மூத்த மாமா முத்துராமலிங்கம்.  உறவினர் திருமணம் என்பதால், பரிமாறும் பொறுப்பையும் தானாக இழுத்துப் போட்டுக்கொண்டவர், தன்னைமறந்த என் நிலைமையைக் கவனித்திருக்கிறார்.

    திடுக்கிட்டு சுய உணர்வுக்கு வந்தேன்.  என் இனிய கனவை – பேரின்ப அனுபவத்தை –வித்தியாசமான என் முதல் உணர்வை – ஒருபெண்ணிடம் லயித்த எனது முதன்முதல் கன்னிக்காதல் உணர்வைக் கலைத்துவிட்ட பெரியமாமா அடுத்த இலைக்குமுன் அமர்ந்திருந்த என் சின்னமாமன் ராஜுவுக்கு பரிவுடன் சாம்பாரிலிருந்து காய்கறித்துண்டங்களை எடுத்துப்போட்டுக்கொண்டிருந்தார்.

    அதற்குமேல் எனக்கு உணவில் கவனம் செல்லவில்லை.  எழுந்துவிட்டேன்.

    அப்பொழுது அவள் என்னைப் பார்த்த பார்வை —  ஏன் எழுந்தாய் என்பது போலும் இருந்தது, இல்லாமலும் இருந்தது.  அந்த ஒருகணத்தில் “நானிருக்கப் பயமேன்?” என்று அருள்புரியும் தேவியின் கடைக்கண் பார்வையைபோலவும் இருந்தது.

    “ஏண்டா கண்ணா, எழுந்திட்டே?” என்று வினவிய என் சின்னமாமனிடம், “பசி தீந்து போயிட்டதுடா, ராஜு.  இனிமே எதுவும் வேணும்னு தோணலே!”  என்று என் நீலத்தேரை, நீலக்குயிலை, நீலாயதாட்சித் தேவியைத் திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்.

    உள்ளம் கனத்தது.  அவளைத் திரும்பிப்பார்க்க என்மனதில் திராணியில்லை.  அவளது உருவம் என் நெஞ்சில் கற்சிற்பமாக காலம்காலத்திற்கும் அழியாதவண்ணம் செதுக்கப்பட்டதைமட்டுமே என்னால் உணரமுடிந்தது.  அவளை என் இறுதிமூச்சு உள்ளவரை மறக்கமுடியாது என்பதும் தெரிந்தது.  அதுவொரு சுகமான அனுபவமாகவும், என்னைப்பொருத்தமட்டில் ஒருகணத்தில் உலகையே புறட்டிப்போடவைத்த புத்துணர்ச்சியாகவும் இருந்தது.

    காதல் பக்தியாகப் பரவசமெடுத்தது.

    ஆண்டுகள் பல கழிந்துவிட்டன.  எத்தனையோ அழகிகளைக் கண்டுவிட்டேன்.  அவர்களின் முகம் என் நினைவில் இருப்பதில்லை.  அந்த நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சியின் – அவள் பெயர்கூட எனக்குத் தெரியாது — அதற்குப்பிறகு அவளை என்வாழ்வில் நான் சந்திக்கவும் இல்லை.  ஆயினும், ஒருசில நிமிடங்களே பார்த்த அவளது முகம், அவளது  திருவுருவம் காதல் ஓவியமாக, காதல்தெய்வமாக, அருள்பாலிக்கும் தேவியாக என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கிறது.  அவளைப் பார்த்த நிகழ்வு என்னைப்பொருத்தவரையில் ஒரு தேவிதரிசனமாகவே நெஞ்சில் குடியிருக்கிறது — அவள் என்னுள், என் உயிரில், என் உணர்வில் ஒன்றிவிட்டாள்.  அவளைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எப்போதும் தோன்றியதே இல்லை.  ஏனெனில், என்னைப் பார்த்துப் புன்னகைசெய்த அரைக்கணத்தில் — என் கண்ணோடு கலந்த அந்த அரைக்கணத்தில் என்னுடன் ஒன்றாகிவிட்டாள்.

    என்னுடன், என்னுள்ளே இருப்பவளை நான் ஏன் வேறு இடத்தில் தேடவேண்டும்?

    நான் மனம்தளரும்போதெல்லாம் அவள் என்னுள் இருந்து என்னைத் தேற்றுகிறாள்.  என் மனவலிமை குன்றி நான் தடுமாறும் சமயத்தில் ஊன்றுகோலாக உருவெடுக்கிறாள்.  என்றுமே நான் தனிமையை உணராதவண்ணம் என் வாழ்க்கைத்தோழியாக வடிவெடுக்கிறாள்.  என் தாய் இறந்தவுடன் எனது தாயாகவேமாறி என்றும் தாயன்பு செலுத்துகிறாள்.

    சுருங்கச் சொன்னால் அவள் எனக்கு ஒரு தெய்வமாகவே தென்படுகிறாள்.

    அவள் எங்கு இருக்கிறாளோ எனக்குத் தெரியவில்லை.  அரைக்கணத்தில் என்னுள் ஒரு நிறைவை நிலைநிறுத்திய அவள் சென்றவிடமெல்லாம் சிறப்பித்துவருவாள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    என் காதல்தெய்வத்திற்கு, என் தேவிக்கு என் வணக்கங்கள்!

    ***   ***   ***

    Share
  • விடியல் இன்று…

    — பால நிவேதிதா.

    “எதுக்கும் இன்னொரு டாக்டர்கிட்ட கேட்கலாமா…”, கீதாவின் குரல் கம்மி ஒலித்தது.

    “ப்ச் ……பார்ப்போம் ….”, நம்பிக்கை இல்லா ரமேஷின் குரல் கீதாவை என்னவோ செய்தது.

    “இன்னைக்கு கருணை இல்லத்தில் இருந்து போன் வந்தது கீதூ …”, திரும்பிப் படுத்து தூங்குவதாகப் பாவனை செய்தாள் கீதா.

    ரமேஷ், கீதா தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.

    ஒரு குழந்தையை தத்து எடுப்போம் என ரமேஷ் கூறிய போதும் ஏனோ கீதாவின் மனம் அதை ஏற்க மறுக்கிறது.

    பொழுது புலர்ந்த அதிகாலை வேளையில் வாசலில் தண்ணீர் சத்தம் கேட்டு கண் விழித்தாள் கீதா. அதற்குள் வந்து விட்டாளா கிருஷ்ணம்மா பாட்டி…

    ஜன்னல் வழியே பார்த்த கீதா கதவை திறந்து வெளியே வந்தாள்.

    அவள் செல்ல டாமி வாலை ஆட்டியபடி கீதாவிடம் பாய அதை வாஞ்சையுடன் தடவிய படியே,” என்ன பாட்டிமா இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க? ” என்றாள்.

    “எனக்கு என்ன கண்ணு…ஒத்தக்கட்ட விடிஞ்சதும் அப்படியே நடந்துட்டேன்”….கூறிய கிருஷ்ணம்மாவை ஏறெடுத்த கீதா,

    “என்ன பாட்டி கைய நல்லா கழுவ மாட்டீங்களா பாருங்க அங்க சுவர்ல உங்க கைத்தடம் அழுக்காய்……போனவாரம் தான் ஒயிட் வாஷ் பண்ணினோம்…..ப்ச். ..” எரிச்சலுடன் உள்ளே போன கீதாவை பரிதாபமாய் பார்த்த படியே மீதி வேலைகளைச் செய்ய நகர்ந்தாள் கிருஷ்ணம்மா.

    ரமேஷும் கீதாவும் ஆபிசுக்கு ரெடியாகி ஹாலுக்கு வரும் போது வேலைகள் அனைத்தையும் முடித்து இருந்த கிருஷ்ணம்மா வாசலில் யாரிடமோ பேசிய படி உள்ளே பார்த்து,

    “கண்ணு….அந்தியில வாரேன். ..ரேஷன் கடை சோலி இருக்கு…”, கீதாவின் ஒப்புதலை எதிர்பாராதவளாய் நடையைக் கட்டினாள்..

    ஆளுக்கு ஒரு புறமாக ரமேஷும் கீதாவும் தங்கள் அலுவலுக்குப் பறந்தனர். ..

    மதிய உணவு இடைவேளை.

    “அப்ப தத்து எடுக்க விரும்பலைன்னு ரமேஷிடம் சொல்லி விட வேண்டியது தானே “உயிர்த் தோழி சுரேகாவின் குரல் தெளிவாய் தான் விழுந்தது கீதாவிற்கு.

    ” ஆமாம்டி …என்னையறியாம என்னமோ தடுக்குது என்னை. .. எப்படியும் இன்னிக்கு உறுதியா சொல்லிடுவேன்”.

    வழிநெடுக இதை யோசித்தபடியே மாலை வீடு வந்து சேர்ந்தாள். ..

    பக்கத்து வீட்டு சுட்டிப் பெண் ஓடி வந்து “ஆன்ட்டி, கிருஷ்ணம்மா பாட்டி வரவே இல்லை, இந்தாங்க ….எனச் சாவியை கொடுத்து ஓடியது.

    ஸ்ஸ் எப்ப பார்த்தாலும் சொல்லாம லீவ் போடுவதில் இந்தப் பாட்டிக்கு ஈடு இணை வராது. .. நாளை வரட்டும் ..நல்லா நாலு வார்த்தை போட்டாதான் சரிவரும்…மனசுக்குள் திட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள். ..

    அவளுக்குத் தெரியுமா நாளைய விடியலின் பயங்கரம். .

    இரவு டாமியின் குரல் கீதாவின் அடிவயிற்றைப் புரட்ட… ஊளளளள….. என்னாச்சு இதுக்கு. .. அபாய மணிக்குரலாக தோண …ரமேஷை எழுப்பினாள்.

    அவனுக்கும் முரணாகப் பட, இருவரும் எழுந்து வெளிவராண்டா விளக்கைப் போட்டு வாசலுக்கு வரவும் அது நடந்தது. ஆம். ..கணநேரத்தில். ..நிலநடுக்கம். …பெரிய சத்தத்துடன் தாறுமாறாய் நிலை குலைய கண்ணிமைக்கும் நேரத்தில் பூகம்பம் நடந்தேறி முடிந்தது. .

    ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும்,, பெரிய பெரிய பிளவுகளும் கண்ணெதிரே பார்க்க முடிந்தது.

    ரமேஷும் கீதாவும் டாமியை பார்க்க வெளியே வந்ததால் தடுமாற்றத்துடன் தப்பினர்.

    இயற்கையின் செயல்களுக்கு தடுப்பு சுவர் ஏது ?என்ன கொடுமை ..மனித வலிகளுக்கு மருந்திடக் கடவுள் இப்படியும் வருவாரா? இல்லை இயற்கை தன் அன்பைக் காட்டும் விதமோ? நடந்தேறியது என்னமோ பயங்கரம் தான். ….

    ஆயிற்று இன்றோடு பத்து நாட்களுக்கு மேல். … அனைவரும் சிரமங்களுக்கு நடுவில் இயல்புக்குத் திரும்பி கொண்டு இருந்தனர்.கீதாவும் ரமேஷும் உறவுகளுக்கு எல்லாம் தாங்கள் நன்றாக இருப்பதைத் தெரிவித்து ஓய்ந்து போனார்கள்.

    தொடர் விடுப்புக்குப் பிறகு அலுவலைத் தொடரத் தீர்மானிக்கும் போது தான் கீதாவிற்கு கிருஷ்ணம்மா பாட்டி நினைவே வந்தது .

    ஐயையோ கிருஷ்ணம்மா பாட்டி இருந்தது ரொம்பவும் நெருக்கடியான ஒரு பகுதியாச்சே, இந்தப் பத்து நாட்களாக எந்தத் தகவலும் இல்லையே ….ஒண்டி கட்டை என அடிக்கடி புலம்புவாளே ..என்ன ஆனாள் ?..இயற்கையோடு ஐக்கியமாகிப் போனாளா ?…எப்படி நான் அவளை மறந்தேன் ? உயிர் உடைமை என வரும் போது தன்னைக் காப்பாற்றத் தோன்றியதே தவிர வேலை பார்க்கும் கிருஷ்ணம்மாவா நினைவிற்கு வருவாள் .இருந்தாலும் இத்தனை வருடம் பழகிய ஆன்மா …

    விடு விடுவென தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் கீதா, கிருஷ்ணம்மா இருப்பிடத்தை நோக்கி ……

    சுக்கு நூறாய் மாறி இருந்தது அந்த இடம் ..இங்கு தானே அவள் வீடு .சுற்றும் முற்றும் பார்த்தாள் .பல இடங்களில் பருந்துகள் வட்டமிட்டபடி இருந்தது .தென்பட்ட சிலரிடம் அவ்விடத்தில் இருந்தவர்களை பற்றி விசாரித்தாள். பாதிக்கும் பேர் இறந்து போனதாகவும், பாதி பேர் மருத்துவமனையிலும், எஞ்சியவர்கள் கோயில் மண்டபத்திலும் இருப்பதாகக் கூறினர்.

    குளமாகிய கண்களுடன் கோயில் மண்டபத்தை நோக்கி தொய்ந்து நடந்தாள். அன்று சுவரில் அவள் அழுக்கு கைப் பட்டதற்குத் திட்டினேன். இன்று அந்த சுவரே இல்லை ..தான் நடந்து கொண்ட விதத்தை நினைத்து அவளுக்கே அவமானமாய் இருந்தது. விழும் கண்ணீரைத் துடைக்க கூடத் தோன்றாமல் நடந்தவளுக்கு ,..

    “சாப்பிடு கண்ணு ..என் செல்லம், ராசா…கிருஷ்ணம்மாவின் குரல் …கிருஷ்ணம்மா இருக்கிறாள்.

    திரும்பி குரல் வந்த திசையை நோக்கிப் பாய்ந்தாள். அங்கே கிருஷ்ணம்மா தன் இடுப்பில் ஒரு குழந்தையும், இடக்கையில் ஒரு குழந்தையும் பிடித்தபடி அழுது கொண்டிருந்த மற்றொரு சிறு குழந்தைக்குத் தட்டில் இருந்த உணவை ஊட்டிக் கொண்டு இருந்தாள். அந்தக் குழந்தை வாங்க மறுக்க அதனைச் செல்லம் ,ராசா எனத் தாஜா பண்ணிக் கொண்டு இருந்தாள்.

    திகைக்க இக்காட்சியைப் பார்த்தபடி நின்றாள் கீதா.

    தற்செயலாய் இவள் பக்கம் திரும்பிய கிருஷ்ணம்மா துள்ளி ஓடி வந்தாள் ….”ஏ ..கண்ணு ..எப்டிமா இருக்க ….?இன்னிக்கி நானே வரணும்னு நினைச்சேன் தாயி ..” சொல்லும் போதே கண்ணீர் முட்டி இருந்தது .

    “உங்களுக்கு ஒண்ணும் இல்லையே பாட்டி ….?”

    “நான் நல்லா இருக்கேன் தாயி …இன்னும் நான் இருக்கணும்னு எழுதி இருக்கான் போல..”

    “நீங்கப் பிழைத்ததே சந்தோஷம் பாட்டி ….கூறிய கீதாவின் கண்கள் கிருஷ்ணமாவிடம் இருந்த குழந்தைகளை பார்த்தது

    புரிந்தவளாய் குழந்தைகளை உட்கார வைத்து விட்டு “கொஞ்சம் அப்டி வா கண்ணு ..எனச் சற்று தள்ளி வந்து குழந்தைகள் அறியாவண்ணம் …”அந்த சின்னதுக இரண்டும் எங்க தெருவுல தான் இருந்தாக. அதுங்க தாயும் தகப்பனும் போய்ட்டாக …”கைகளை வானத்தை நோக்கி காமித்த பாட்டியால் விழும் கண்ணீரை துடைக்க முடியவில்லை ..” தெய்வ புண்ணியத்துல பிள்ளைகளுக்கு ஒண்ணும் ஆகலை ….”

    அவளிடம் சாப்பிட மல்லுக்கட்டிக் கொண்டிருந்த சிறுவனைக் காமித்து ,”இவன் யாருன்னு தெரியல கண்ணு ,அவனுக்கு சரியாப் பேசவும் வரல, இங்கன அழுதுகிட்டு நேத்துல இருந்து சுத்தி சுத்தி தேடிகிட்டு அலையறான் ….பச்சபுள்ள வயித்து பசி கூட தெரியாம தேடுது …அதான் சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கியாந்து ஊட்டினேன் “

    காதுகள் அடைத்து கண்ணீரை விழுங்கிய கீதா, “எப்படி பாட்டி சிறு குழந்தைகளை ……கீதா முடிக்கவில்லை .

    “எது யார் கைல இருக்கு கண்ணு …போன வாரம் வரைக்கும் வாழ்நாள் முழுதும் தன் தாய் தகப்பனோட வாழுற நினைப்புல தான் பிறந்திருக்கும், இப்போ அவுக இல்ல நான் பார்த்துக்குறேன் ….இதோ இவனுக்கு நேத்துவரை யாரோ, இன்னைக்கு தாயாய் ஊட்டுறேன் ..நாளைக்கு என்னமோ நடந்துட்டு போகுது ..எத்தனை யோசனையாய் இருந்தாலும் நிமிஷத்துல ஆண்டவன் தான் இருக்கேன்னு காமிக்கிறானே ..இருக்கிறவரை இந்தப் பிள்ளைகளுக்கு தாயா இருக்கேன் “……இன்னும் கிருஷ்ணம்மா சொல்லி கொண்டே போக, கீதாவிற்கு எதுவும் காதில் விழவில்லை .எத்தனை உண்மை வார்த்தைகள் பெரியவளிடமிருந்து ….

    பெற்று வந்த பாசமா இது …தாயின் முகங்கள் தான் வேறு, தாய்மை எனும் குணம் ஒன்று தான் என்பது “ணங் “என்று கீதாவின் மண்டையில் பட்டது.கிருஷ்ணம்மாவின் கண்ணீர் கண்களைத் துடைத்து விட்டு வீடு வந்தாள் தெளிவாக ….

    அவள் கைபேசியிலிருந்து கருணை இல்லத்திற்குப் போன் பறந்தது ..தான் வளர்க்கப் போகும் குழந்தையின் வரவுக்காக…தாயாய் காத்திருந்தாள். .

    Share
  • வேட்டை

    பெஸீ ஹெட் (தென்னாபிரிக்க நாட்டுச் சிறுகதை)

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

                ஜூலை மாதம் வேட்டைக்குரிய மாதம். பல காரணங்களுக்காக அக் காலநிலை வேட்டைக்கேற்ற பல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. ஜூன் மாத அறுவடைக் காலமானது அத் தறுவாயில் முடிந்திருக்கும் என்பதால் எல்லோரிடமுமே சோளம் இருக்கும். அச் சோளத்தோடு கலந்து சுவையான உணவாகக் கொள்ள ஏதேனும் தேவைப்படும். சாதாரணமாக இக் காலத்தில், அவ் வருடத்திற்கான மழை வீழ்ச்சி பெய்யுமெனில் கொடிய மிருகங்களைக் காணக் கிடைக்கும்.

    பன்னிரண்டு மாதங்களிலும் மிக அதிகளவில் குளிரான மாதம் ஜூலை மாதம் என்பதனால் இறைச்சியைக் காய வைக்கையில் ஏனைய மாதங்களில் போல கெட்டுப் போகவோ புளுத்துப் போகவோ மாட்டாது. எனவே ஜூலை மாதத்தில் அனேக ஆண்கள் ஊரை விட்டுக் கிளம்பி விடுவார்கள். சிலர் வாரக் கணக்கிலும், சிலர் ஒரு மாதம் தாண்டியும் கூட ஊரைத் தாண்டி வெளியே இருப்பர். அவர்கள் அடர்ந்த வனாந்தரத்துக்குச் சென்று மிகக் கடினமாக வாழ்க்கையைக் கழிப்பர். மரங்களிலிருந்து கிளைகளை வெட்டியெடுத்து முக்கோண வடிவத்தில் நட்டு அதன் மேல் புற்களை கூரையாகப் பரப்பி கூடாரங்களையோ குடிசைகளையோ உருவாக்கிக் கொள்வர். இரவு நேரங்களில் ஓய்வெடுக்கவும் குளிரிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் அதற்குள் புகுந்துகொள்வர். சிங்கங்கள் நடமாடும் பகுதியொன்றுக்கு அவர்கள் வேட்டைக்காக வந்திருப்பின் சிங்கங்களை அச்சுருத்துவதற்காக தமது குடிசைக்கருகில் தீ மூட்டி விசாலமானதாக எரிய விட்டிருப்பர்.

    அவர்களிடம் தமக்குச் சொந்தமான ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதனைக் கொண்டு அவர்கள் ஆபிரிக்காவில் வசிக்கும் மான், மரை போன்ற விலங்குகளை வேட்டையாடி தமது குடும்பத்துக்கு மூன்று, நான்கு மாத காலங்களுக்குத் தேவையான இறைச்சியை சேகரித்துக் கொள்வர். பொதுவாக வேட்டைக் குழுவொன்று நான்கைந்து பேரைக் கொண்டதாக இருக்கும். இயன்றவரையில் சிறிய குழுக்களாக இருக்கவே அவர்கள் முயற்சிப்பர். மிருகங்கள் மனித வாடையை உணர்ந்தால் அவை தப்பிச் சென்று விடுமென அவர்கள் கதைத்துக் கொண்டனர்.

                ராபுலா, டெபோகோ, லெசீட் மற்றும் கெலீபோன் ஆகிய நால்வரும் தோலோ என்பவனின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். டிரக்டர் வண்டியொன்றும் அதனுடன் பொருத்தக் கூடிய ட்ரேலர் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கும் ஒருவன் அக் கிராமத்தில் தோலோ மட்டுமே. எனவே அவனுடன் வேட்டைக்குச் செல்ல எல்லோருமே ஆர்வம் காட்டினர். தோலோவின் டிரக்டர் வண்டியில் சென்றால் தேவையான அளவு இறைச்சியோடு இரண்டே நாட்களில் வீடு திரும்ப முடியும். அவற்றைத் தமது வீட்டு முற்றத்திலேயே காய வைக்கும் நடவடிக்கைகளில் ஓய்வு நேரங்களில் ஈடுபடலாம். அவர்களது மனைவிமார் அந்த இறைச்சியை சமைத்தெடுப்பர் என்பதனால் எதுவுமே வீணாகப் போய்விடாது.

                இறுதியில் ராபுலாவாலும் டெபோகாவாலும் பொறுத்திருக்க முடியாமல் போயிற்று. அவர்கள் தோலோவின் முற்றத்துக்கு வந்தனர். தோலோ தனது டிரக்டரைத் திருத்தி, சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். சோள அறுவடையை அந்த டிரக்டரில் ஏற்றிக் கொண்டு அப்பொழுதுதான் வந்திருந்தான்.

                “நாங்க எப்ப போகலாம் தோலோ?” ராபுலா கேட்டான்.

                தோலோ தனது வேலையைத் தொடர்ந்தவாறே அமைதியாக தலையை உயர்த்திப் பார்த்தான். அவன் அவர்களுடன் தனது விழிகளால் மட்டுமே புன்னகைத்தான். அவன் உயர்ந்து மெலிந்த உடலுடையவன்.

                “இந்தத் தடவை என்னோட வருவியா?”

                அவர்கள் நட்பாகப் புன்னகைத்து சாதாரணமாகக் கேட்டார்கள்.

                “லெஸீட்டும் கெலீபோனும் கூட நம்மோட வருவாங்க.” ராபுலா கூறினான்.

                தோலோ பூரண சம்மதத்துடன் தலையை அசைத்தான். ஒவ்வொரு முறையும் தன்னுடன் வரப் போவது யாரென்பது குறித்து தோலோ மிகவும் கவனமாக இருந்தான். டிரக்டரில் சென்று விலங்குகளை வேட்டையாடும் அதிர்ஷ்டம் தனது கிராமவாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

                “நாளை விடிகாலையிலேயே எழும்பி காட்டுக்குப் போவோம்.” எனச் சொன்ன தோலோ தான் செய்து கொண்டிருந்த வேலையின் பக்கம் திரும்பினான். அது அவனது இயல்பு. வீண் அரட்டையடிப்பதோ ஊர் வம்பு கதைப்பதோ இல்லை.

                இருவர் இருவராக திரும்பிச் செல்லத் திரும்பினர். தோலோவுக்குக் கேட்காத தொலைவுக்குச் சென்ற பிற்பாடும் குள்ளமாகவும் மிரட்டும்விதமாகவும் இருந்த ராபுலா தனக்குள் எழுந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டிருந்தான்.

                “என்னால தோலோவை புரிஞ்சுக்கவே முடியல.” என அவன் சொன்னான்.

                “இவன் ஒரு பொம்பளையான்னு எனக்குத் தெரியல.” என கெலீபோன், தோலோவின் நற்குணத்தையும் நட்பாகப் பழகுவதையும் கிண்டலடித்தான். அவன் தலைவனைப் போன்ற ஒருவன். எனினும் நாம் கழிப்பதைப் போன்ற ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ்கிறான்.

                “தோலோ பற்றி கெலீபோன் சொன்னது நிஜம்தான்.” டெபோகோ கூறினான்.

                “இந்த மாதிரியான மனுஷன்கிட்டத்தான் உண்மையான சக்தியொண்ணு இருக்கும்..இப்படியொரு நல்ல மனுஷன் நம்ம கூட இருக்குறது எங்க அதிர்ஷ்டம்னு முன்னாடி ஒரு நாள் அவன் சொல்லியிருக்கான்.”

                தோலோ குறித்து எல்லோருமே அவன் ஒரு நல்ல மனிதனென்றே அறிந்திருந்தனர். அவனிடம் ஏதேனும் உதவி கேட்டுச் செல்லும்போது அவன் ஒருபோதும் அந்த வேண்டுகோளை நிராகரித்ததில்லை. அவனிடமிருக்கும் அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூட அவன் விருப்பத்துடனிருந்தான். எனினும் வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலிருந்தும் தப்பித்துச் செல்லும் பழக்கமொன்றும் அவனுக்குள்ளே இருப்பது தெரிந்தது. மனித வாழ்க்கையில் ஒழுங்குமுறையும் நன்மை மாத்திரமும் இருக்காது. எனினும் சுய கட்டுப்பாட்டுடன் வாழும் ஒழுங்குமுறையானது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டும். அவன் தனது மனைவி மற்றும் தனது வேலைகள் குறித்து ஆழமாகச் சிந்தித்தே செயலாற்றினான்.

                அவன் தனது மனைவியான தாட்டோவை மிகவும் கவனமாகவே தேர்ந்தெடுத்திருந்தான். நாகரிகத் தோற்றத்துடன் அவள் அமைதியானவளாகவும் குழப்பமடையாதவளாகவும் இருந்தாள். இந்தக் கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருந்த அன்னியோன்யத்தை எல்லாப் பெண்களுமே அறிந்திருந்தனர். தேவைக்கென கேட்டு வந்திருக்கும் எவர்க்கும் தன்னிடமிருக்கும் அனைத்தையுமே வழங்குவது தாட்டோவின் பழக்கம்.

    தோலோ அவளை மணமுடித்துக் கூட்டி வருகையில், அவளைக் கைவிட்டுச் சென்ற அவளது முந்தைய கணவனுக்குப் பிறந்த மகளொருத்தியும் இருந்தாள். இக் காலத்தில் இது ஒரு சாதாரணமான விடயம். திருமணத்துக்கு முன்பே எவருடனாவது உறவைக் கொண்டு செல்வது அவசியம் என்றே இன்று அனேகர் எண்ணுகின்றனர். இதனால் இலவசமாகவே இந்த உறவைக் கொண்டு செல்ல முடிகிறது. அவர்களுக்கு பெண்கள் மேல் எவ்விதமான விஷேட ஈர்ப்பும் இல்லாததோடு உண்மையிலேயே பெண்களை மதிக்கவும் மாட்டார்கள். தம்மால் பெண்களுக்கு நிகழும் வன்முறைகளால் அப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெண் என்றால் பண்பற்ற, கசப்பான, எந்தப் பெறுமதியும் அற்றவள். அவளுக்கும் அன்பு செலுத்த வேண்டும் என அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

                தோலோவுடன் தொடர்பொன்று ஏற்பட்ட முதல் சந்தர்ப்பத்தில் அவனது அனுபவங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள தாட்டோ முயற்சித்தாள். குழந்தையொன்றைப் பெற்றுக் கொள்வதில் அவளுக்கு ஆட்சேபணை இல்லை. எவரும் குழந்தைகளை மறுக்க மாட்டார்கள். எனினும் ஆண்களின் நேர்மையற்ற தன்மையும் ஏமாற்றும் திறனும் அவளுக்குப் பிடிக்காதவை.

                ‘முட்டாள் பொம்பளைங்க’ அவள் கோபத்துடன் சொன்னாள். ‘ஆம்பளைங்களோட தேவைகளைப் பூர்த்தி செய்றதுக்காகப் பொம்பளைங்க இருக்காங்க. ஆனா படிச்ச பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் ஆம்பளைங்களுக்குத் தேவையா இருக்கு. ஆனா அவங்களையும் ரொம்ப மோசமாத்தான் கவனிக்கிறாங்க. பொம்பளைங்க அவங்களுக்காகவே வேலை செய்றாங்க. அவங்களுக்கு உபகாரம் பண்றாங்க. ஆனா கல்யாணத்தினால பொம்பளைங்களுக்கு எந்தவொரு சந்தோஷமும் கிடைக்குறதில்ல.”

                சிறியதொரு இடைவெளி விட்டு ஏதொவொரு நிச்சயமற்ற தன்மையோடு அவள் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டே போனாள்.

                “நான் ரொம்ப நாளா கல்யாணத்துக்காகக் காத்திருந்தேன். அதுக்கப்புறம்தான் குழந்தையொண்ணப் பெத்துக்கத் தீர்மானிச்சேன். எனக்கு வயசாகும்போது பிள்ளையில்லாத அம்மாவா இருக்குற நிலைமைக்கு என்னை ஆளாக்க வேணாம்.”

                அவள் அடுப்பில் நெருப்பை மூட்டி களி கிண்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கு வந்த மனிதனால் அவளது மனதில் உதித்த எண்ணங்கள் அனைத்தையும் அழித்து விட முடிந்தது.

    தொடக்கத்தில் அவர்களது தொடர்பு ஆரம்பித்தது இவ்வாறுதான். முதலில் அவள் தனது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணங்களை அழித்து விட வேண்டும். ஆண் மகனொருவனைக் காதலிப்பதற்கு பெண்ணானவள் அதிக தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

                தோலோவின் டிரக்டர் வண்டியைப் பாவித்து தமது காணி நிலத்தைப் பண்படுத்திக் கொள்ள தாட்டோவின் தாய் நடவடிக்கைகளை மேற்கொண்டாள். டிரக்டர் வண்டியொன்று அவர்களது இடத்துக்கு வந்தது அதுதான் முதல் தடவை. வருடக் கணக்கில் அவர்களது நிலத்தை அவர்கள் எருமைகளைப் பயன்படுத்தியே செப்பனிட்டு வந்தார்கள். (அவர்களது காணியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். தாட்டோவின் தந்தை அவளது சிறு வயதிலேயே இறந்துவிட்டிருந்தார். அவள் தனது தாயோடும் சிறிய தங்கைகள் இருவரோடும் வசித்து வந்தாள்.)

    டிரக்டர் வண்டியின் மூலம் நிலத்தைப் பண்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பதே புதிய அனுபவம். மழை பெய்திருந்ததால் புதிதாக ஈரலித்துப் போயிருந்த நிலத்தை, விவசாயக் கல்லூரியில் பெற்ற தொழில் அனுபவத்தைக் கொண்டு அவன் தோண்டிக் கொண்டிருந்தான். அவர் மிகச் சரியான முறையில் தனது வேலையைச் செய்துகொண்டிருந்தான். அன்று அந்தி சாயும் நேரமாகுகையில் அவர்களது நிலத்தைப் பண்படுத்துவதைப் பூர்த்தி செய்த அவன் வண்டியை வேறொரு வேலைக்காகக் கொண்டு சென்றான்.

    இரவில் அவளது கனவு உலகத்தில் அசையாத உருவமொன்று நடமாடத் தொடங்கியது. அவள் அவனைத் தன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். அவளது கஷ்டமான வாழ்க்கையை விடவும் அவன் தொலைதூரத்திலிருந்தான். அவளைப் போல இன்னும் பெண்கள் பலர் இருக்கக் கூடும். அவர்களுக்கும் அவளைப் போலவே எல்லா வேலைகளையும் செய்யக் கூடிய திறமைகளும் இருக்கக் கூடும். எனினும் அவர்களுக்கு வாழ்க்கையில் விஷேடமான மகிழ்ச்சி எதுவும் ஏற்பட்டிருக்காது.

                அவர்கள் தொடர்ந்தும் புதியவர்களாக இருக்கவில்லை. அறுவடைக் காலம் முடிந்து விற்பனைச் சந்தைக்குச் சென்ற சந்தர்ப்பமொன்றில் அவள் அவனை மீண்டும் சந்தித்தாள். ‘காதல் என்பது விபத்துக்களை நோக்கிக் கையசைக்கும் பயங்கரமான ஒன்று’.

    பெண்கள் இவ்வாறு சொல்லப் பழகியிருந்தார்கள். “எல்லா ஆம்பளைங்களுமே ஒண்ணு மாதிரித்தான். அவங்க ஒண்ணு ரெண்டு மாசம் ஒண்ணா சுத்திட்டு அப்புறம் நிரந்தரமாக் காணாமப் போயிடுவாங்க.”

                எனினும் ‘ஏனையவர்களின் கதைகளை நான் கண்டுகொள்வதில்லை. அவன் இன்னும் பல பெண்களை அறிந்திருக்கக் கூடும். எனினும் எனக்கு அது ஒரு தடையல்ல.’ எனத் தீர்மானித்த தாட்டோ, தோலோவின் எதிர்காலம் குறித்து எந்தவொரு உறுதிப்பாடும் கிடைத்திராத நிலையிலேயே அவனுடனான தொடர்பினை வளர்த்துக் கொள்ளச் சம்மதித்தாள். இரு மாதங்கள் கழிந்த நிலையில் ஏதொவொரு தவறு நிகழ்ந்திருப்பதாகத் தென்பட்டது. அவன் காதல் குறித்து எந்த ஈடுபாட்டையும் காட்டவில்லை. அவள் மிகவும் கவலைக்குள்ளானாள். அவள் எந்தளவு வெறுப்புக்குள்ளானாளெனில், அவன் வருகை தரும் போது அவனை வரவேற்பதைக் கூட அவள் செய்யவில்லை.

                “என்ன ஆகியிருக்கு உனக்கு?” என அவன் அமைதியாகக் கேட்டான். அவள் ஒரு கணம் எரியும் சுடர் போன்ற கூர்மையோடு அவனை நோக்கினாள். ஒரேயடியாக அவள் உடனடித் தீர்மானமொன்றை எடுத்தாள். அது அவனிடம் சொல்லியே ஆக வேண்டிய ஒரு பிரச்சினை. ‘ஆமாம். நான் குழந்தையை எதிர்பார்ப்பதாக அவனிடம் சொல்லி விடப் போகிறேன். எவ்வாறாயினும் நான் ஆண்களை வெறுக்கிறேன்’ எனத் தீர்மானித்த அவள் இறுதியில் உறுதியோடும் கோபத்தோடும் அவனிடம் அதனைச் சொல்லி விட்டாள். எனினும் அவன் அமைதியாகவே இருந்தான். அவள் கரிக் கட்டையொன்றை எடுத்து நிலத்தில் கோடு வரைந்தாள். அவளது நொந்து போயிருந்த மனதுக்குள் நேரடியாக ஊடுருவியபடி

                “நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்’ என அவன் அன்பாகக் கூறினான். “என்னால எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடலாம்.”

                எதிர்பாராத வகையில் அவனது அலங்காரமிக்க வாழ்க்கையுடன் தனது வாழ்க்கை இணையப் போவதை அவள் உணர்ந்தாள். பின்பு அமைதியாக லேசாய்ப் புன்னகைத்தாள். பண்டைய காலத்தைப் போல நிகழ்காலத்தில் திருமணத்தைத் திட்டமிடுவது பெற்றோர்களல்ல. ஆணும் பெண்ணும் தமது வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு கணவனும் மனைவியுமாக வாழ்க்கையை ஆரம்பித்து விடுகின்றனர்.

                “என்னிடம் தர்றதுக்கு எதுவுமே இல்ல தோலோ’ அவள் மிகவும் கையாலாகாத நிலையில் சொன்னாள். “நாங்க ரொம்ப ஏழைங்கங்குறது உனக்குத் தெரிஞ்சிருக்கும். என்னால ரொம்ப நல்லா விவசாய வேலைகளைச் செய்ய முடியும்.”

                அவன் அவளது முகத்தை வியப்போடு பார்த்தான். விழிகளால் புன்னகைத்தான். அச் சிரிப்பை உணர்ந்து கொள்ள அவளுக்குக் கொஞ்ச நேரம் பிடித்தது. அதன் அர்த்தம் அவன் இன்னுமொருவரது வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதைப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் போன்றது. ஆரம்பத்தில் அவள் அனைத்து விடயங்கள் குறித்தும் கவனமாக இருந்தாள். நிறைய நேரத்துக்குப் பிறகு அவர்களது உரையாடல் அறுவடை, விலங்கு வேளாண்மை, ஏனைய மனிதர்கள் போன்ற விடயங்களுக்குத் திரும்பியது. எனினும் அம் மாலை நேரத்தில் அவனுக்கு, அவளிடம் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்ல இயலாமல் போயிற்று. எதிர்பாராத அச் சுதந்திரத்தை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

                அவனைப் போன்ற விவசாயிகளுக்கும் விலங்குப் பண்ணையாளர்களுக்கும் முக்கியமான இடமொன்று கிடைத்தது. அவனுக்கு அரச விவசாய தொழில் பயிற்சி நிலையத்தில் விஷேட இடமொன்று கிடைத்ததோடு, அவளது முந்தைய கணவனுடன் இணைந்து அவனது நிலத்தில் வேலை செய்யவும், விலங்குகளைப் பார்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுடன் இணைந்து அவ்வாறு திருமண வாழ்க்கையைக் கொண்டு செல்லக் கூடிய பெண்ணே அவனது தேவையாகவிருந்தது. இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்பிருந்த மக்களுக்கு இவ்வாறானதோர் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கவில்லை.

                அவன் அவளைத் தனது குடும்பத்திடம் அறிமுகப்படுத்திய வேளையில் அவர்கள் தமது மறுப்பைத் தெரிவித்தனர். அவனது அத்தையொருத்தி எல்லாவற்றையும் சுருக்கமாக இவ்வாறு சொன்னாள். ‘அவள் வாழ்க்கைல நிறைய அனுபவங்களைப் பார்த்தவளொருத்தி. வயசானவள்.”

                தாட்டோவின் முகத்தைப் பார்க்கையில், அவள் நன்கு யோசிக்கக் கூடியவளென அவர்களுக்குத் தென்பட்டது. ஆண் மகனொருவன் திறந்த மனதுடன் உள்ள, தன்னை விடவும் வயதில் பத்து வருடங்களாவது குறைந்த ஒருத்தியையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்களது திருமணம் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்காவது நிலைத்திருக்கும்.

                எவ்வாறாயினும் அவர்கள் மூன்று வருடங்களாக திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கின்றனர். வேலைகள் மற்றும் ஏனையவர்களின் தேவைகளுக்காகக் கலந்துகொள்ளச் செல்வதனால் அவர்களது திருமண பந்தத்திலிருந்த மகிழ்ச்சி மெதுவாக நீங்கிச் சென்றது. ராபுலாவும் டெபோகோவும் தமது முற்றத்திலிருந்து சென்ற உடனேயே தண்ணீர்க் குடமொன்றைத் தலையிலேந்தியபடி தாட்டோ வந்தாள். தனக்கு ஏதோவோர் தேவையிருப்பதை உணர்த்தும் விதத்தில் தோலோ அவளைப் பார்த்தான். அவள் அவனருகே சென்று டிரக்டர் வண்டியின் அருகே தண்ணீர்க் குடத்தை நிலத்தில் வைத்தாள்.

                “ஏதாச்சும் கொண்டு போக ஏற்பாடு பண்றியா? நான் நாளைக்கு ராபுலாவோடும், டெபோகோ லேஸீட்டோடும், கெலீபோனோடும் வேட்டைக்குப் போக நினைச்சிருக்கேன்.”

                அவள் டிரக்டர் வண்டியின் மீது தனது ஒரு கையை வைத்தாள். “இந்த வருஷத்துல மிருகங்கன்னா நல்லா வளர்ந்திருக்கு. ஆனா நம்ம தோட்டத்து வட்டக்கா, பூசணி, தர்ப்பூசணி எல்லாம் நோய் வந்தது மாதிரி சின்னதாப் போயிருக்கு.”

                தீர்மானித்திருந்த படி அடுத்த நாள் விடிகாலையில் ஆண்கள் ஐந்து பேரும் தமது வேட்டைக்கான பயணத்தை ஆரம்பித்தனர். பெரிய மழைக்குப் பிற்பாடு மெல்லிய தென்றல் வீசுவதே வழமை. ஜூலை மாதமாகுகையில் எந்நாளும் வானம் நீல நிறத்தில் இருப்பதோடு குளிர்ந்த சூரியக் கீற்றுகளோடு மொத்த சூழலும் உறங்கச் செல்லத் தயாராவதைப் போன்றதொரு நிலையைக் காட்டும். தேனின் நிறத்தைக் கொண்ட புற்கள் குளிர்ந்த தென்றல் அலைகளில் சிக்கி அசைவது, ஆயிரக்கணக்கான சிறுமியர் தமது ஆடைகளை அசைத்து ஆடுவதைப் போன்றிருக்கும்.

    இந்த அமைதியான சூழலுக்கே இந்த ஐவரும் வேட்டைக்காகச் சென்றிருந்தனர். அந் நாளின் மத்தியான வேளையாகும் போது அவர்களுக்கு, தமக்குத் தேவையான அளவு விலங்குகளை வேட்டையாட முடிந்ததோடு மாலையில் அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். அன்றைய மாலைவேளை அனைத்து வீடுகளிலும் ஒரே களேபரம். பிள்ளைகள் சுட்ட இறைச்சியை தமது வயிறு வெடிக்குமளவுக்குச் சாப்பிட்டனர். அவர்கள் நீங்கிச் சென்ற பிற்பாடு பெரியவர்கள் முற்றங்களில் வெட்டவெளியில் நெருப்பை மூட்டி பெரிய இரும்புப் பாத்திரங்களில் இறைச்சியைச் சமைக்க ஆரம்பித்தனர். அடுத்த நாள் காலைவேளையில் அவர்களது வீட்டில் சமைக்கப்பட்ட இறைச்சியை  உண்டு செல்ல விருந்தாளிகள் வருகை தரவிருக்கின்றனர்.

                தோலோவுக்கு இந்த நாள் மிகவும் பிடிக்கும். இக் காட்சியை அவன் அநேகத் தடவைகள் கண்டிருக்கிறான். அவன் சிறியதொரு கதிரையில் அமர்ந்திருந்ததோடு அவனது மனைவி ஒரு காலை மடித்து நிலத்தில் அமர்ந்து நெருப்புச் சுடரைப் பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

                “என்ன சங்கதி?” ஒரு சந்தர்ப்பத்தில் அவன் கேட்டான்.

                அவளால் எந்தவொரு கலவர நிலைக்கும் முகம் கொடுக்க முடியும். ஆனால் அவனால் முடியாது. ஏனைய பெண்களைப் போலவே அவளும் ஊர் விடயங்கள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் ஈடுபாடு கொண்டிருந்தாள். எனவே அவளுக்கு ஊர் விடயங்கள் அனைத்தும் தெரிந்திருக்கும். எனினும் அதனை வெளிப்படுத்தும் போது தேர்ந்தெடுத்துச் சொல்வதில் அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

                அன்றைய மாலை நேரத்தில் அவனது ‘என்ன சங்கதி?’ எனும் கேள்விக்கு பதிலளிக்க அவள் தயாரானாள்.

    ‘மாட்டுக் கொட்டகையில ஒரு எருமை இன்னொரு வயதான எருமையோடு மோதிக் கொண்டதில பலத்த காயப்பட்டிருக்கு’

    அவள் சிறியதொரு இடைவெளி விட்டுவிட்டு விழிகளைச் சுழற்றியபடி சொன்னாள்.

    “ஊர்ல இன்னுமொரு பிரச்சினை. பிலீஷியாவுக்கும் அவளோட புருஷனுக்குமிடையில திரும்பவும் சண்டை. அவங்க சமீபத்துலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா பிலீஷியா கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடியிருந்தே சாதாரணமாக நடந்து கொள்ளல. அதேபோல கல்யாணத்துக்கு அப்புறமும் எந்நாளும் புருஷனோட சண்டை போடத் தொடங்கினா. வெளி மனுஷங்களுக்கு அவங்களோட முற்றத்துல அவங்க சண்டை போடுற சத்தத்தத் தவிர வேறெதுவும் கேட்டிருக்காது.அவள் இந்த நாட்கள்ல விவசாய வேலைகள்ல ஈடுபட மாட்டேங்குறா. அவளோட புருஷன் ஏதோ நல்ல வேலையொண்ணுல இருக்குறதால அவ கொஞ்சம் ஓய்வெடுத்தா என்னன்னு கேட்குறாளாம். இப்ப புருஷனோட நிலைமையும் மாறியிருக்கு. அவன் இன்னிக்கு வேலையை விட்டு நின்னுட்டானாம். அவனும் கொஞ்சம் ஓய்வெடுக்கணும்னு சொல்றானாம். ஓய்வெடுக்குறதும், சும்மா காலங்கடத்துறதும் அவங்களுக்கு நல்ல பழக்கமான ஒண்ணுதான். இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்குறதுன்னு யாருக்குமே தெரியல. அவங்க பசியிலிருக்கையில பிற மனுஷங்கதான் உதவி செய்ய வேண்டியிருக்கும்.”

                ஒவ்வொரு நாளும் மனிதர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவள் விபரிக்கத் தொடங்கினாள். சில காலத்துக்கு முன்பு ராபுலா கள்ளச்சாராயம் காய்ச்சும் இடமொன்றுக்குச் சென்று குடித்து விட்டு வந்து மனைவிக்கு அடித்த விடயத்தை அவன் தாட்டோவிடமிருந்து அறிந்து கொண்டான். அவள் அவனைத் திட்டுவதையும் கூட அறிந்து கொண்டான். இதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்? உலகில் எதையும் தேர்ந்தெடுத்துச் செய்ய இயலாது. அது எப்போதுமே வேதனையும் சிக்கலும் பின்னிப் பிணைந்தது. அவன், ராபுலா அங்கு வந்ததும் கருணையோடும் நட்போடும் புன்னகைத்தது அதனால்தான்.

    – பெஸீ ஹெட்

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    எழுத்தாளர் பற்றி :

     

    பெஸீ ஹெட் Bessie Head

     

    f3a7bdea-ce49-4cd1-a9c6-1435089920be           தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

    1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், ‘ட்ரம்’ எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக 1964 ஆம் ஆண்டு பொஸ்த்வானாவிற்கு ஒரு அகதியாக புலம்பெயர்ந்தார். அங்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி காலமான பெஸீ ஹெட்டின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பான ‘The Collector of Treasures’ எனும் தொகுப்பிலுள்ள ‘Hunting’ எனும் சிறுகதை இங்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

     

    -மொ.பெ.

    Share
  • ஒருகாம்பிருதலையும் பூ

    திரு நரசய்யா எழுதிய முதற்கதை விகடனில் 1964 ஆம் வருடம் செப்டம்பரில் வெளியானது. இக்கதை 100 கதைகளைத் தாண்டியது. திரு நரசய்யா அவர்களின்  அரை நூற்றாண்டு இலக்கியப் பயணத்தின் நினைவாக!

    நரசய்யா

    “கல்லுருகுங் காலங் கழுகறியு மக்காலம்
    வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்
    ஓங்க லறியு முயர்கடலி னுள்ளாழம்

    பாங்கனுக்குப் பாங்கன் பயன்றிவான் மன்ற
    அறிவா ரறிவா ரறியா ரறியார்
    ஒருகாம் பிருதலையும் பூ”

    பெருந்தொகை பாட்டு எண் 1800

    அகலிகை வெண்பா முன்னுரையிலிருந்து தொகுக்கப்பட்டது.
    (கழைக்கூத்தியொருத்தி கழை மேனின்று ஆடியபோது பூப்படையக் கழையினின்று
    இறங்குக்காற் பாடியது )

    சென்னை மாநகரின் அடையாறில் வசிக்கும் எனக்குக் கழைக்கூத்தாடிகளைப் பற்றி அதிகம் தெரியாதுதான். ஆனாலும் அன்றொருநாள் சர்வ சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று திரும்புகையில் அடிக்கப்பட்ட தம்பட்ட ஒலி என்னை
    நிறுத்தித் திரும்பிப் பார்க்கச் செய்தது!

    அது சாதாரண ஒலியில்லை, ஓலம்! பசியையும் ஏழ்மையையும் அறிவித்து, எங்களைப்பார் என்பதைப் போல இருந்ததால் நின்று கவனித்தேன். அதிகமாக எவரும் கவனிக்கவில்லை. இரண்டு பக்கங்களிலும் கிராஸ வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூங்கில்களின் இடையில் சுமார் 10 அடி நீளத்திற்குக் கட்டப்பட்ட கயிறு. கீழே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருந்தது. தந்தையும் தாயும் தம்பட்டத்தை அடித்துக்கொண்டு பாடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்க முன்று கொண்டிருந்த நிலை! ஒரு பெண்; சுமார் 10 லிருந்து 13 வயதிற்குள்ளென சொல்லலாம்; தயாராக நின்று கொண்டிருந்தாள். நான் நின்று பார்ப்பதைப் பார்த்த தந்தை இன்னும் வேகமாக தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்த போது இன்னும் சிலர் சேர்ந்தனர். அப்பெண் எப்படியோ அந்த மூங்கில் வழியாக கயிற்றின் மீது ஏறி, கையில் ஒரு நீண்ட குச்சியையும் வைத்துக்கொண்டு கயிற்றில் மீது நடக்க ஆரம்பித்தாள். இன்னும் இரண்டு மூன்று மனிதர்கள் சேர்ந்து விடவே உறசாகத்துடன் தம்பட்டம் ஒலிக்க அவளும் இரண்டு முறை மேலும் கீழுமாக நடந்து விட்டாள். சிலர் சில்லரையை அந்தத் துண்டின் மீது எறிந்து விட்டு அகன்றனர். திடீரென அப்பெண் கீழே இறங்கிவந்து ஏதோ தன் தாயிடம் முணுமுணுக்கவும் தம்பட்ட ஒலி நின்றது. மனைவியைப் பார்த்த அந்த மனிதன் அவள் செயத ஜாடையைப் புரிந்து கொண்டு எக்காராணத்தாலோ தலையில் அடித்துக் கொண்டான்.

    ********

    இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், எனது சகோதரர்களுடனும் அவர்கள் குடும்பத்தினருடனும் தி. நகரின் ஒரு சுமாரான பெரிய ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றது அங்கு நடக்கவிருந்த ஒரு திருமண
    வரவேற்புக்காக; அந்த ஹோட்டலின் நுழைவாசலில் சில அறிவிப்புகள் இருந்தன. அதைப் பார்த்து எங்கு செல்ல வேண்டுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும. திருமண வரவேற்பு எங்கு எனப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கு
    வைக்கப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பு என் கவனத்தை ஈர்த்தது. . . .இன்னாரின் மகளான செல்வி . . . எனப்பட்டவள் புஷ்பவதி ஆகிவிட்டதை அந்த அறிவிப்பு பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. அதற்காக அப்பெண்ணின் பெற்றோர்கள் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கின்றனர்!

    அதற்காக ஒரு விழா எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த ஏற்பாட்டிற்காக வந்திருந்தவர்களெல்லோருமே சுமாராக பணம் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். கைகளில் பல தினுசு தினுசான பரிசுப் பொருளகளும் இருந்தன! என்னதான் செய்கிறார்கள் என்று பார்க்க நானும் அந்த ஹாலின் அருகில், துணைக்கு எனது இளைய சகோதரனின் புத்திரியான ரம்யாவையும் அழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு கல்யாண வரவேற்பு போலவே இருந்தது. வந்தவர்கள் எல்லோரும்
    அப்பெண்ணின் பெற்றோரை வாழ்த்தினர். அப்பெண் கையில் பரிசுப் பொருளகளைத் தந்து மகிழ்ந்தனர். அப்பெண்ணின் உருவத்தையும் மீறி அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலை நிறையப் பூ! திரும்பவும் வந்து அந்த பிரகடனத்தைப் பார்த்தேன்.

    “புஷபவதி ஆன… ” அப்போது என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். ரமயா ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்டாள். “ரம்யா நீயே நினைத்துப் பாரேன்.

    சப்போசிங் மெனோபாஸுக்கு இந்த மாதிரி ஒரு விழா எடுத்தால் எப்படியிருக்குமென்று?’

    “சீ” * * * *

    திடீரெனத் தம்பட்ட ஓசை நின்று விட்டதையடுத்து. தலையில் கை வைத்துக் கொண்டிருந்த அந்த தந்தையின் அருகில் சென்றேன். “என்னாச்சு?” “என்னத்தை சொல்ல சார். இவளை நம்பித்தான் நாங்க பொழப்பு நடத்துறோம் இப்போ பாருங்கோ
    திடீர்னு பொண்ணு பெரியவளாயிட்டதா இவ சொலறா. .”

    தனது மனைவியைச் சுட்டிக்காட்டிச் சொன்ன அந்த மனிதனின் நிலைமையைக் கண்டால் பரிதாபமாயிருந்தது. தாய்க்கு மட்டும் தான் தெரியும் அப்பெண் பூப்பெய்து விட்டது; அதைத்தான அறிவார் அறிவார் என்றும் அறியார் அறியார் என்றும்
    சொன்னார்களோ! தாயோ, ஒரே நேரத்தில், சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனது முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. துண்டில் கிடந்த சில்லரையில் சிலவற்றைப் பொறுக்கியெடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று
    அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த மாதிடம் இவ்விஷயத்தைச் சொல்லவும், அம்மாதோ, சற்றும் தயங்காது, பணத்தை மறுத்து விட்டு இரண்டு முழம் பூவை எடுத்து அந்த தாயிடம் அளித்து வாழ்த்தும் சொன்னாள்! அதைக் கொண்டு வந்து அப்பெண்ணிற்கு அணிவித்து விட்டு கட்டிப்பிடித்துக் கொண்ட தாய் யுகாந்திரமாக தாய்மார்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாமல் நின்று கொண்டிருந்தாள். வெளியிலிருந்தே உள்ளே வீற்றிருக்கும விநாயகரை நோக்கித் தொழுது நிற்கையில் அப்போதே வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகார் நாராயண சாஸ்திரியைப்
    பார்த்து அம்மாது சொன்னாள்: “சாமி, எம்பொண்ணு பெரியவளாயிட்டா; கும்பிடறேன்” என்றாள். “அப்பிடியா! இனணிக்கு திதி நடசத்திரம் எல்லாமே பேஷா இருக்கு ஒம்பொண்ணு பிரகாசிப்பா; இந்தா” என்று அவர் குங்குமப் பிரசாதமும் பூவும் கொடுத்தார். அப்பெண்ணின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

    தந்தையின் முகம் மாறுபட்டிருந்தது. அவர் சந்தோஷத்தில் உள்ளாரா, துக்கத்தில் ஆழந்து கிடக்கிறாரா என்று விவரிக்க இயலவில்லை! அவர்களது சம்பாத்தியமே இப்பெண்ணின் மூலம் தான்! மூவர் சாப்பாடும் அவள் கையில்தான்! ஆனாலும் அவர்களும் மனிதர்கள்தானே! தமது பெண் பெரியவளானது அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தானே அளிக்கவேண்டும. ஏனிந்த ஒரே நிகழ்ச்சி சிலருக்குச் சந்தோஷத்தையும் மற்றும் சிலருக்குத் துக்கத்தையும் அளிக்க வேண்டும்? கயிற்றினின்றும் இறங்கிவிட்ட அப்பெண் எவ்வளவு மாறுபட்ட அக உணர்வுப் போராட்டங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தாள்! திடீரென சைரன் ஒலிக்கும் கார் ஒன்று எங்களைத் தாண்டிச் சென்றது. அதுவும் ஒரு ஓசை தான்; ஏன் ஒரு ஓலம் தான்! நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்று அறிவித்துக்கொண்டு செல்கிறார் அக்காரினுள் உள்ளளவர். தான் செல்வது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால், அது தன்னுடைய கர்வபங்கம் என்று நினைத்துத் தான்அவ்வாறு ஓலத்தை ச் செயது கொண்டு அவரும் பாவம் செல்கிறார்!

    அதிலிருப்பபவரும் மனிதன் தான். அரசியல் வாதியோ அல்லது உயர்ந்த பதவியிலிருக்கும் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். வெட்கம் கெட்டவர்கள்! எனது வாய் முணுமுணுத்தது இவர்கள் செல்வது உலகுக்கு எல்லாம் தெரியவேண்டுமா? “சைரனுக்குப் பதிலாக, நீயும் ஒரு தம்பட்டத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை அடிக்கக்கூட உனக்கு ஆட்கள் தயாராகக் கிடைப்பார்களே!” எனக் கேட்கலாம் போலிருந்தது! இங்கு தம்பட்டம் அடித்து தனது இருப்பிடத்தை உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த கழைக்கூத்தாடிக்கும் சைரனை அடித்துக்காட்டிக்கொன்டு மற்றவர்கள் உபயத்தில் பெரும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் இந்த”பெரிய” மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

    இந்த கழைக்கூத்தாடியே சிறந்தவர்! ஆனாலும் நடைமுறையில் தினசரி சாப்பாட்டிற்கே ஆட வேண்டிய நிலை! பள்ளி செல்ல வேண்டிய வயதில் கழைக்கூத்து! சைரன் கார்காரர் தனது சொந்த விளம்பரத்திற்காக “சிறாக்களைப் பள்ளிக்கு அனுப்புங்கள்; வேலை செய்ய அனுப்பாதீர்கள்” எனச் சொல்லலாம்! வேறுபாடுகள் இவ்வளவா?

    ஹோட்டலில் வாழ்த்துப் பெற்றவளும் ஒருத்தி தான். இங்கு நிற்கும் இக்காம்பு, தனது இரு மருங்கிலும் பூ ததும்ப நிற்கிறாளே இவளும் ஒரு மனுஷிதான்! ஆனால் மனிதர்களுள எவ்வளவு வேறுபாடு! மூங்கில்களை சேர்த்துக் கொண்டு
    கயிற்றையும் சுற்றிக கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டார் அந்தக் கழைக்கூத்தாடி! சுற்றிக் கொண்டிருந்த துண்டின் அருகில் சென்று என் பையிலிருந்து எடுத்த ரூபாய் நோட்டை அத்துண்டில் போட்டேன். அக்கூத்தாடியின் கண்கள் அகல விரிந்தன. “ஐயா! நீங்கள் பிள்ளை குட்டிகளோடே நல்லா இருக்கணுமய்யா!” என்ற போது அந்த வார்த்தைகளின் உண்மையும், ஹோட்டலில் பார்த்த சமுதாய நோக்கிற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகளின் ஆழமின்மையும், அரசியல் வாதியோ ஒரு அதிகாரியோ சென்ற அக்காரின் அபத்தமான சைரனின் ஒலியும் இரைந்தே சொல்லியவை, ” மன்ற அறிவா ரறிவா ரறியா ரறியார்” என்ற வார்த்தைகள்தாம்! அவ்வார்த்தைகள் அந்த இடத்திலெல்லாம் வியாபித்து, எல்லா பக்கங்களிலிருந்தும் என்னைத் தாக்கின. இருதலையும் பூ கொண்ட அப்பெண்ணை இப்போது பெற்றோர்கள் அரவணைத்து ஆனந்தத்துடன் முத்தமிட்டனர்! அவர்கள் அறிவர். வையக மெல்லா மலர்ந்தபூ வண்டறியும்; ஓங்கல் அறியும் கடலாழம்!

    Share
  • நானும் சங்கரன் தான்..  சிறுகதை .. க. பாலசுப்ரமணியன்

    “மகாலிங்கம் .. மகாலிங்கம்…”

    அந்த திருவிடைமருதூர் கோவில் பிரகாரம் முழுதும் அந்த ஒலி எதிரொலித்தது. காலை ஐந்தரை மணிக்கு அந்தக் குளத்திலே  நீராடி விட்டு, குளிர் காற்று  சில்லென்று உடம்பைத் தழுவ, திருநீறின் மணம் பக்தி பரவசத்தை உண்டாக்க அந்தக் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது மனதுக்கு இனம் புரியாத மகிழ்ச்சியை த்  தந்தது. .

    மீண்டும் யாரோ அங்கே  “மகாலிங்கம், மகாலிங்கம்” என்று குரல் எழுப்பியதும் என் சுயனைவுக்குத் திரும்பினேன்.

    ” இந்தக் கோவில் ரொம்ப பெரிசு. இங்க வந்து தரிசனம் பண்ணினா ” பிரம்மஹத்தி தோஷம்” விலகிடுமாம். நிறையப் பேர் சொல்லுவா.” முன்னாலே போன பெரியவர் நான் இந்தக் கோவிலுக்கு முதல் முறையாக வருவதைப் புரிந்து கொண்டார் போலும்.., எனக்கு விளக்கிவிட்டுச் சென்றார்.

    பிரம்மஹத்தி தோஷம்னா  என்ன? என் மனதில் ஒரு கேள்வி. சான்றோரைக் கொன்றதாலா, இல்லை, கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றதாலா, இல்லை முதியோரையோக்  கொன்றதாலா .. சந்தேகத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    ‘”ஓம் நமச்சிவாய,  ஓம் நமச்சிவாய”  என்று சொல்லிக்கொண்டே முன் நகர்ந்தேன்.

    ” காலையிலே நீங்கள் தான் முதல் தரிசனம். விஸ்வரூப தரிசனம் மாதிரி.. பசிக்கறது.. ஏதாவது கொடுங்கோ..”

    ஒரு நாலு முழம் வேட்டியைக் கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு துண்டை இருக்கிகொண்டு  திருநீறு அணிந்து முன்னே நின்ற உருவத்தைப் பார்த்ததும் பகீரென்றது.! இவரை எங்கேயோ பார்த்திருக்கேனே.. மனம் ஆழ்ந்த சிந்தனயில் ஈடுபட்டது..

    ” சார்,உங்களைத்தானே  ஹெல்ப் பண்ணுங்கோ..””

    இந்தக் குரலும் சற்று பழகிய குரலாகத் தெரிகிறதே..”

    ” ..நீங்க. “… கொஞ்சம் தயங்கிக் கேட்டேன் “அனந்து சார் இல்லே”

    ” அனந்து .. அனந்தன்.. ஆனந்தன்.. ஆனந்தம்  எல்லாம் என் பெயர் தான். கோவிலுக்கு உள்ளே இருக்கானே, அவனுக்கும் இந்தப் பெயரெல்லாம்  உண்டு., ..பசிக்கிறது.. ஏதாவது குடுங்கோ..”

    “நீங்க நாகர்கோயில் கணபதி கோயில் தெருவிலே இருந்தேளோ?”

    “பிள்ளையார்.. எல்லாக் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்வார். நோ டவுட். எதாவது தருவேளா..”

    மனம் வலித்தது.. இவருக்கு எதாவது மன நோயோ? ஏன் இங்கே வந்து பிச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறார்?  இவர் குடும்பம் முழுவதும் எனக்குத் தெரியுமே..”

    “சார், உங்கள் குழந்தைகளெல்லாம்..?”

    “குழந்தைகளா?…..” ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதைப் போல் சிரித்தார்… ” சின்ன வயசிலேதான் அவர்கள் குழந்தைகள்… அதுக்கப்பறம் படிச்சு வேலைக்குப் போயாச்சுனா அவா எல்லாம் ஆபீசர்கள் .. என் வாரிசுகளெல்லாம் பெரிய ஆபீசர்கள். …”

    அவர் சூசகமாகச சொன்னதிலிருந்து அவர் வாழ்வின் உண்மை தெரிய வந்தது..

    “‘ஜெர்மனி தெரியுமா, ஜெர்மனி அங்கதான் என் ஆபீசர் மகன். ..” அந்த வார்த்தைகளில் தொனித்தது பெருமையா ஏளனமா என்று தெரியவில்லை.

    ” உங்க மனைவி… ? ”  மீண்டும் வாய் விட்டுச் சிரிப்பு..

    பெண்டாட்டி ரொம்பப்  படுத்தினா, அவ்வை என்ன சொன்னா தெரியுமா “கூறாமல் சன்யாசம் கொள்”  .. சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிரிப்பு..

    ” நீங்க ஒரு கம்பெனியிலே மக்கள் தொடர்பு  அதிகாரியாக இருந்தேளில்லையோ ..”

    “அன்னிக்கும் மக்கள் தொடர்பு .. இன்னிக்கும் மக்கள் தொடர்பு.. அன்னிக்கு நான் பேசினதுக்கு காசு கொடுத்தா .. இன்னிக்கு நான் பேசாம இருக்கறதுக்கு காசு கொடுக்கறா.. நீங்க எப்படி?  பசிக்கறது.. ஏதாவது தருவேளா…”

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற ஒரு அனுபவம். ,.” நிச்சயமா தரேன்.. ஆனா ஒரு கேள்வி.. உங்களுக்கு அந்த தெருவிலே ஒரு வீடு இருந்ததில்லையோ? ”

    “வீடு.. அந்த வீடு வேற.. நான் இனிமே போகப்போற வீடு வேற.. அந்த வீட்டை விலைக்கு விக்கலாம்.. எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம் .. இந்த வீட்டுக்கு விலையே கிடையாது.. யாரும் ஷேர் பண்ணிக்கவும் மாட்டா ..”

    “வீடு வரை உறவு..: கண்ணதாசன் பாடல் கேட்டிருக்கேளோ? அதெல்லாம் கேட்ட பின்னும்  ஜனங்களுக்கு புத்தி வர மாட்டேங்கறது… சரிதானே?

    “மகாலிங்கம்  மகாலிங்கம்” .. கோவில் முழுதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது .. அந்த சிவன் அங்கே அமர்ந்து கொண்டு ஏன் இப்படி நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்  என்று  புரியவில்லை.

    “ஹலோ ..” அவர் குரல் மீண்டும் என்னை ஈர்த்தது. .”உங்களுக்கு ஆதி சங்கரரைத் தெரியுமோ…?:

    நான் தலையை அசைத்தேன் .. “அவர் எங்கே பிறந்தார்?”  ஏதோ விநாடி வினாவில் கேள்விகள் கேட்பது போல் கேட்டார்.

    :”காலடி” மெதுவாகச் சொன்னேன்.. “கரெக்ட்.  அவர் எப்படி சாப்பிட்டார் தெரியுமா?”

    நான் மௌனமாக இருந்தேன். அவர் தொடர்ந்தார்.

    ” பவதி பிக்ஷான் தேஹி.”.. தினசரி வீடு வீடாகப் போய்  “பவதி பிக்ஷான் தேஹி”  என்று பிக்ஷாவந்தனம்  செய்து தானியங்கள் பெற்று உணவு சமைத்து சாப்பிட்டார்.”

    எதோ ஒரு பெரிய உண்மையை  கண்டறிந்தது போல் நான் பேசாமல் இருந்தேன்.

    ” இப்போ நானும் “பவதி பிக்ஷான் தேஹி”  வீடு வீடாகப் போகலை. இங்கேயே இப்படியே கோவில் வாசலிலே நின்று கொண்டு :பவதி பிக்ஷான் தேஹி.,”

    “:சொல்லுங்கோ.. எனக்கும் சங்கரனுக்கும் என்ன வித்யாசம்? நானும் சங்கரன் தானே..”  சிரித்துக்கொண்டே  “அவர் ஆதி சங்கரர்.. நான் ஆதி அனந்தர்..”.. ஓ வெனக் கைகொட்டிச் சிரித்தார்.

    மெதுவாக அவர் கைகளைப் பிடுத்து அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு வேண்டிய காலை  டிபன் கொடுக்கச் சொன்னேன்.. அவர் கைகளில் ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தேன்.

    அவரைப் பார்த்த அந்த ஹோட்டல் முதலாளி “யாரு? பவதி பிக்ஷான் தேஹி சாரா?” புன்னகை அவர் முகத்தில்.

    அருகில் இருந்த சிவபிரானின் படத்தை ஒருமுறை பார்த்து “மகாலிங்கம்” என்றார்.

    கடைசியாக அவரிடம் நான் “சார், நான் யார் என்று தெரிகிறதா?” எனக்கேட்டேன்.

    என்னை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு  “ஆதி அனந்தருக்கு இன்னிக்கு பிக்ஷா வந்தனம் செய்த ஒரு நல்லவர்.. ராஜாராமன் என்ற நாமதேயம்.” இட்டிலியை சாம்பாரில் தோய்த்து வாய்க்குள் திணித்தார்

    என் சப்த நாடிகளும் அடங்கி நின்றன!!

     

    Share