மந்திரமாவது நீறு
–தமிழ்த்தேனீ.
ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன். என்னது இது நான் எப்பவும் எல்லாருக்கும் நல்லதைத்தான் சொல்றேன். மனதிலே பட்ட உண்மையைத்தான் சொல்றேன். ஆனா, பேசறதே அவங்களுக்கு கோவமா பேசறா மாதிரியே தெரியுது. உண்மை எப்போதுமே சற்று உரக்கவே இருக்கும் அப்பிடீன்னு யாருக்கும் புரியலே. அதுகூடப் பரவாயில்லை துரோகம் எப்போதுமே இனிமையாக நைச்சியமாக இதமாக இனிக்க இனிக்கப் பேசும் அப்பிடீங்கறதைக் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க. இதை வெளியார் யாரும் புரிஞ்சிக்கலைன்னா பரவாயில்லே. நாற்பது வருஷமா கூடவே இருக்கற மனைவியும் நாமே பெத்த பிள்ளைகளும் கூட புரிஞ்சிக்கலையே. இனிமே வேற யாரு புரிஞ்சிக்கப் போறாங்க எனும் விரக்தியின் உச்சக் கட்டத்தில் இருந்தார் அவர்.
அவர் எந்த நடிப்பும் கலக்காத உண்மையா பாசமா அன்பா நடந்துக்கறது யாருக்குமே புரியலையா, அல்லது புரியாத மாதிரி நடிக்கறாங்களா என்றே புரியாமல் குழம்பிப் போனார் அவர். அவர் சொல்கிற எதையுமே அவர் சொல்லும் சொற்களுக்கு உண்மையான பொருளை யாருமே புரிஞ்சிக்காம, ஏடாகூடமா அதுக்கு அர்த்தம் கற்பிச்சு, எப்போதுமே அவர் எவ்வளவு பொறுமையா சொன்னாலும் கேக்காமல் அவரைக் கோவப்படுத்தி கத்தவிட்டு விட்டு, நீங்க எப்பவுமே எதுக்கெடுத்தாலும் கத்தறீங்க உங்களை மாதிரி கோவக்காரரை நாங்க மதிக்கிறதா இல்லே … அப்பிடீன்னு முகத்துக்கு நேரே சொல்கிற எல்லோருமே அவர் சொல்வதைக் கேளாமல் அடிபட்டாலும் பாதிக்கப்பட்டாலும், அப்போதும் நீங்க உங்க வாயை வெச்சீங்க நாங்க அடிபட்டோம், பாதிக்கப் பட்டோம் அப்பிடீன்னு மறுபடியும் அவரையே குற்றம் சாட்டுகிற அவர்களைப் பார்த்து வருத்தப்படுவதா? அல்லது இப்படி இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையெனில் சூதும் வாதும் கள்ளமும் கபடமும் நிறைந்த இந்த உலகில் எப்படி இவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று கவலைப்படுவதா ஒன்றுமே புரியாமல் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன்.
அவர் இந்த 70 வயதில் பார்த்த, அனுபவித்த, அடிபட்ட, பாதிக்கப்பட்ட, அனைத்திலும் கற்ற அனுபவத்தின் சாரத்தையல்லவா அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அது புரியவே இல்லையே அவர்களுக்கு மனிதரைத் தவிர மற்ற விலங்குகள் எல்லாமே அவர்களின் மூதாதையர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை நுணுக்கத்தை அனுபவத்தை உள்வாங்கித்தானே இன்று வரை தொடர்கிறது. இந்த மனிதருக்கு மட்டும் ஏன் இவ்வளவு புரியாமையும் பெரியவர்களின் அனுபவத்தை மதிக்காத குணமும் வந்துவிட்டது. மிருகத்திடமிருந்து வேறுபட்டு பரிணாம வளர்ச்சியினால் மாந்தராகிவிட்டோம் என்று பெருமைப்படும் மனிதர்கள் இன்னமும் மிருகங்களின் நல்ல குணங்களைக் கூட கைக்கொள்ளாதது ஏன் என்றே புரியாமல் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன்.
அவரை மட்டுமே சண்டைக்காரர் என்று முத்திரை குத்துகிறார்களே அப்படி என்ன செய்துவிட்டார் அவர். இது வரை அவர் வாயால் வரம்புக்கு மீறிய சொற்களை உபயோகித்ததில்லை, எந்த மரியாதைக் குறைவான சொற்களையும் உபயோகப்படுத்தியதில்லை. அப்படி இருந்தும் கத்துகிறார் கோவக்காரர் என்பதைத் தவிர அவருக்கு வேறு நற்பெயரில்லை. அவர் தீர்மானமாக இனி பேசுவதே இல்லை என்று முடிவெடுத்தார். மனம் சற்றே அமைதியானது.
அந்த நிமிடம் முதல் யார் எது பற்றிப் பேசினாலும் அவர் நேராக முருகன் படத்துக்கு முன்னால் சென்று திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு மௌனமானார். இது வரைக்கும் பேசியே எங்களைத் தொந்தரவு செய்தீங்க இப்போ பேசாமலே கழுத்தை அறுக்கறீங்க என்று மற்றவர்கள் கோபமாக கத்திக் கொண்டிருந்தனர். அவருக்கு ஒன்று புரிந்தது மௌனம் சர்வார்த்த சாதகம் நிமிர்ந்து உட்கார்ந்தார் கணேசன் அமைதியான புன்னகையுடன்.