Category: சிறுகதைகள்

கதைகள்

  • ஒரு இதயம் துடிக்கிறது..

    க.பாலசுப்ரமணியன்

    சுப்ரமணிய கௌண்டர் என்றாலே கோவை வட்டாரத்தில் தெரியாதவர்களே கிடையாது. அந்த ஊரில் அவர் ஒரு பெரிய புள்ளி. அவருடைய கண்காணிப்பில்  கிட்டத்தட்ட ஏழெட்டு தொழிற்ச்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல கோடி சொத்துக்களுக்கு அவர் முதலாளி . வீட்டில் எப்போதும் ஐந்து அல்லது ஆறு கார்கள் தயாராக இருக்கும்.  ஆனால் அந்த ஆடி காரைமட்டும் அவரைத் தவிர வேறு யாரும் உபயோகிப்பதில்லை.

    அவரிடம் ஏழெட்டு டிரைவர்கள் வேலை பார்த்தாலும் அந்த ஆடி காரை அவர் மட்டும் தான் ஓட்டுவார். டிரைவர்களிடம் அவர் கொடுப்பதில்லை. அவர் ஓட்டுவதைப் பார்க்கும் போது டிரைவர்களுக்கே கொஞ்சம் பயமாக இருக்கும். அவ்வளவு வேகமாக ஓட்டுவார்.

    நேற்று காலை அவர் கோவையிலிருந்து சேலம் சென்றபோது  சேலம் நகருக்கு முன்னால்  ஒரு சிக்னல்,  சிவப்பு வண்ணம் மாறுவதற்காக அவர் வண்டியில் காத்த்திருந்தார் .

    “சார், சார்,,, பசிக்கு ஏதாவது போடுங்க சார்..” அந்தப் பிச்சைக்காரி வண்டியின் ஜன்னல்களைத் தட்டி பிச்சை கேட்டுக்கொண்திருந்தாள் .

    “போ.. போ.. கதவைத் தட்டாதே.” கை அசைவின் மூலம் அவளுக்கு சைகை காட்டிவிட்டு வண்டியை  நகர்த்தினார்.

    “சார், சார், ஏதாவது பிச்சை போடுங்க சார்.. சாப்பிட்டு இரண்டு நாளாச்சு சார்..”

    “பொய் சொல்லறதே …..உங்களுக்கு  பொய் சொல்லறதே வழக்கமாகப் போச்சு “

    சிவப்பு வண்ணம் விலகி பச்சை வண்ணம் கண்டதும் வண்டியை முன்னே நகர்த்தினார்.

    ” தானம் தர்மம் பண்ணறத்துக்கு ஜனங்களுக்கு மனசே வர மாட்டேங்கறது.”  அந்தப் பிச்சைக்காரி மேலே நகர்ந்தாள்

    மாலையில் சேலத்தில் தன் வேலைகளை முடித்துக்கொண்ட சுப்ரமணிய கௌண்டர்  திரும்புவதற்கு முன்னால்  சூடாக ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை சாப்பிட்டு விட்டு தன வண்டியைக் கிளப்பினார். தன்னுடைய வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோசம் அவர் மனதில் நிரம்பியிருத்தது. அதன் பிரதிபல்லிப்பு அவர் வண்டியின் வேகத்தில் நன்றாகத் தெரிந்தது.

    சேலத்திற்கு வெளியே நேஷனல் ஹை வேயில் அவர் வண்டி நூறு கிலோ மீட்டர்களைத்  தாண்டி பறந்து கொண்டிருந்தது.

    திடீரென்று அவருக்கு ஓர் ஷாக். . அந்த மங்கிய இருட்டில் ஒரு  உருவம் அந்த ஹை வேயை வேகமாகக் கடந்தது. அவர் கால் அசுர வேகத்தில் பிரேக்கை அழுத்தியது. “கிரீச்”  என்ற சத்தத்துடன் அந்த கார் நிற்கும் முன்.. “ஓ மை காட். ” என்று அவர் அலற, காரில் அடிபட்ட அந்த உருவம் வானில் பத்தடி உயரத்தில் பறக்க…

    காரை ஓரமாக நிறுத்திய கௌண்டர் அந்த உருவம் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட …….. கிழே கிடப்பதைப் பார்த்தார்.

    சுற்றும் முற்றும் பார்த்தவர்  “நல்லவேளை. கும்மிருட்டு.. இங்கே யாரும் இல்லை. நம்ம வண்டியையும் யாரும் பார்க்கவில்லை.. பார்த்தால் என்ன ஆகும்? அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

    பைத்தியம் பிடித்தவர் போல வண்டியை நோக்கி ஓடியவர் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக மேலே சென்றார். உடலெல்லாம்  வியர்த்தது. . அந்த வண்டி கோவை வரை எங்கேயும் நிற்கவில்லை. தான் செய்வது முற்றிலும்  அவருக்குத் தெரிந்திருந்தாலும் உள்மனத்தில் இருந்த பயம் அவரை விரட்டியது.

    வீடு திரும்பியதும் காரேஜில் காரை நிறுத்திவிட்டு அதைச் சுற்றிவந்து ஏதாவது தடயங்கள் வண்டியில் தென்படுகிறதா என தேடிப்பார்த்தார். தடயங்கள் ஒன்றும் தென்படாததால் சிறிது  அமைதியுடன் வீட்டின் உள்ளே நுழைந்தார் .

    “என்னங்க,  டென்ஷன் போல..உடம்பெல்லாம் வியர்த்து .. போன காரியம் எதாவது சரியா முடியல்லையா?” அவர் மனைவியின் கேள்விகளுக்கு அரைகுறை பதில் சொல்லிவிட்டு, ” கொஞ்சம் தலைவலி.. நான் படுத்துக்கப்போறேன்.. தொந்தரவு செய்யாதீங்க. “

    காலை நாலு மணி.  நெஞ்சில் ஏதோ ஒரு பாறையை தூக்கி வைத்தால் போல் ஓர் வலி.. உடல் .வியர்த்துக்கொட்டியது. நா வறண்டது ..  அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை நோக்கி கை சென்றது. ஆனால் அதை பிடிக்க முடியவில்லை.

    ” சாவித்திரி.. ..சாவித்திரி.” அவர் குரல் .கொடுத்தார்.

    பயந்து கொண்டே எழுந்த சாவித்திரி.. “என்னங்க.., என்ன ஆச்சு?”

    “நெஞ்சு வலிக்கிதும்மா…”

    “அய்யய்யோ, இருங்க டாக்டரைக் கூப்பிடறேன்…”

    “இல்லே, ஷியாமைக் கொஞ்சம் எழுப்பி என்னை ஆஸ்பத்தரிக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லு.”

    ஆஸ்பத்திரியில் அவர்க்கு உடனே ஐ. சீ .யு வில் அட்மிஷன் .. ஊரில் உள்ள பெரிய இதய அறுவை  சிகிச்சை நிபுணர்கள் அங்கே  கூடினர்.

    இரண்டு மணி நேரம் அவரை பரிசோதித்த பின்  டாக்டர் ஷியாமையும் கௌண்டரின் மனைவியையும் தனியாக அழைத்துப்  பேசினார்.

    “ஷியாம் உங்க அப்பாவுக்கு டோடல் ஹார்ட் பைலியர். இதயத்தின் ரெண்டு வால்வுகள் வேலை  பார்க்கவில்லை. இதயத்தின் தசைகள் சுருங்கி விரியமுடியாத நிலையில் உள்ளன.. அவர் உயிர் பிழைக்க ஒரே வழி.. இதய மாற்று சிகிச்சை.. அதற்கு உடனே ஒரு இதயம் கிடைக்கணும்.. அது மிகவும் கடினமானது. அதுவரைக்கும் ரிஸ்க்தான். “

    சாவித்ரியின் கண்களில் நீர் வழிந்தது.. “அந்த மருதமலை முருகன் தான் வழிவிடணும்.”

    “நான் முயற்சி செய்கிறேன்… எங்காவது இதயம் கிடைக்குமாவென்று. பொதுவாக இதய மாற்று சிகிச்சைகளை  இதயம் கிடைத்து ஓரிரு மணி நேரங்களுக்குள்  செய்ய வேண்டும்.”

    இரண்டு  மணிநேரத்திற்குப்  பிறகு ஷியாமை டாக்டர் அவசரமாக  அழைத்தார்.” “ஷியாம். ஒரு குட் நியூஸ். சேலத்திலே ஒரு பெண் விபத்திலே மாட்டிக்கொண்டு அவளுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதால் அவள் இதயத்தை தானமாகத் தர அவர் உறவினர்கள் ஒத்துக்கொண்டுள்ளனார். உங்களுக்கு    சம்மதம் என்றால் அதை இங்கே கோவைக்கு எடுத்து வர ஏற்பாடு பண்ணலாம். அவரைக் காப்பாற்ற அது ஒன்றுதான் இப்போதைக்கு வழி. “

    “டாக்டர்.. அது முடியுமா..?”

    இப்போதைக்கு ரிஸ்க் 90 விழுக்காடு… ஒரு வேளை இதய மாற்று சிகிச்சை பண்ணினால் சில ஆண்டுகள் வாழ வாய்ப்புண்டு..”

    தங்கள் குடும்பத்தினரைக் கூடி ஆலோசித்தபின் ஷியாம். இதய மற்று சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டான்.

    டாக்டர் பேஷண்டை அறுவை சிகிச்சைக்குத் தயார் பண்ணுங்க..” பெரிய டாக்டர் தன் இளையவருக்கு ஆணையிட்டார். போர் வேகத்தில் வேலைகள் நடந்தன.

    சேலத்திலிருந்து ஆம்புலன்சில் இதயம் கோவைக்கு வந்து அங்கு மாற்று சிகிச்சை நல்லபடியாக நடந்தது..

    சாவித்திரியின் வேண்டுகோளை அந்த  மருத மலையான் கேட்டுவிட்டான்.!

    ஓரிரு வாரங்களுக்குப் பிறகு டாக்டர் இதயத்தை தானமாகக் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்ல அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்தார்.

    நாற்பது வயதுடைய ஓர் நபரும் அவருடைய  மகனும்  வந்திருந்தனர்.

    சுப்ரமணிய கௌண்டர் டாக்டரிடம் அவர்களுக்கு ஏதாவது பணம் அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

    டாக்டர் வந்தவரிடம் ” சார். உங்களுக்கு ஏதாவது பண உதவி செய்யணும் என்கிறார்” என்றார்..

    கைகூப்பி நின்ற அந்த நபர்  “அய்யா, நாங்க பிச்சை எடுத்து .பிழைக்கிறவங்க. இந்த பொம்பிளை அங்கே சிக்னலிலே தினசரி பிச்சை எடுக்கும். பிச்சையெடுத்தாவது  இந்தப்பையனை நல்லாப் படிக்க வைக்கணும்னு சொல்லிச்சுங்க.. அன்னிக்கு ராத்திரி பக்கத்துக்  கடையிலே கொஞ்சம் அரிசி வாங்கப் .போச்சு.  ஏதோ புறம்போக்கு காரிலே போற மமதையிலே அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான்.  மூளையிலே அடிபட்டது ….உசிரு போச்சு. இந்த ஜென்மம் அடிக்கடி .சொல்லுங்க. “ஆண்டவன் நம்மை பிச்சை எடுக்க  வச்சிட்டான் .. என்னிக்காவது நம்மளும் நாலு பேருக்கு ரெண்டு காசு தர்மம் பண்ணனும்னு. . அதுதான்  முடியலே.. போற போக்கிலே அதோட உடம்பாவது நாலு பேருக்கு உபயோகமா .இருக்கட்டுங்க…  இதுக்குப்போயி போயி காசு வாங்கினா அந்த ஜென்மம் என்ன மன்னிக்காதுங்க..”

    டாக்டரின் கண்களில் நீர் வழிந்தது.

    சுப்ரமணிய கௌண்டரின் இதயம் துடித்தது.  அவர் அந்த பிச்சைக்காரன் முன் கையேந்தி நிற்பது போல் மனத்தில் ஒரு நினைப்பு..

    அந்தச் சிறுவனிடம் டாக்டர் கேட்டார்  “தம்பி.. உன் பெயர் என்னப்பா?”

    “அம்மா. ஆசையா என்னை கர்ணன்னு கூப்பிடுவனாக சார்..:”

    :என்ன படிக்கறே?”

    “ஆறாம் கிளாஸ் “

    :கையிலே என்ன புத்தகம?”

    “ திருக்குறள் சார்……”

    “திருக்குறள்  தெரியுமா?”

    “நிறைய  குறள்  தெரியும் சார்..”

    :உனக்குப் பிடித்த  குறள்  ஒண்ணு சொல்லு “

    “இன்னா செய்தாரை ஒறுத்தல்

    அவர் நாண  நன்னயம் செய்துவிடல்.”

    ஒரு பிச்சைக்காரியின் இதயம் பணக்கார உடலில் உட்கார்ந்து துடித்துக்கொண்டிருந்ததா இல்லை சிரித்துக்கொண்டிருந்ததா? .. யாருக்குத் தெரியும் – சுப்ரமணிய கௌண்டரைத்தவிர?

    Share
  • தேவதைகள் தூங்குகிறார்கள் …

    — கவிஜி.

    தேவதைகள் கொல்கிறார்கள் என்றுதான் எழுத நினைத்தேன், ஒரு மணி நேரத்துக்கு முன்னால். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு பின்னால் தேவதைகள் தூங்குகிறார்கள் என்று எழுதி விட்டேன். மனம் அப்படித்தானே அது எழுதிக் கொண்டே அழிக்கவும் செய்யும். மாய வித்தைகளின் எல்லாப் பக்கங்களையும் தன் மாய மைகளினால் நிரப்பிக் கொண்டே செல்லும். செல்கிறது. ‘காண்பதெல்லாம்’ கனவினைப் போல், புதைந்தழிந்தே போனதனால் நானும் ‘ஆழ் மனமோ’ என்ற பாரதியையும் உணர்ந்தேன். சொந்த மனம் தன்னை ஒதுக்குவதை தாங்கி கொள்ளும் சக்தி ஏனோ எனக்கு மனம் கூட்டி வந்திருக்கிறது. சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய், என்பதைக் கொஞ்சம் மாற்றி சுடர் மிகு பலத்துடன் படைத்து விட்டாய் என்று முணு முணுத்துக் கொண்டேன்.

    மனதைக் கீறி அதில் நானும் தேவதையே என்று எழுதும் தேவதைகளின் மன தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும் என்று ஓங்கி அழும் பேராசைகளின் இரைச்சலின் கூப்பாடுகளாக எனது துளியெல்லாம் நிறமற்ற ரத்தமானதைப் போல உணர்ந்து சிரித்தேன். சிரித்து உணர்ந்தேன். அல்லது இரண்டும் அற்ற இடைவெளியில் இல்லாமலே உணர்ந்தேன். சிரித்தேன்.

    நான் எதிர் திசையின் எதிர்ப்பதமாகவே எப்போதும் இருப்பதால், திமிரின் பிள்ளையென தீண்டியும் தூண்டியும் செய்ய முடியாத ஆழத்தில் நீந்தி நீந்தி நீராவதால், கடல் ஒன்றும் பெருங் கனவல்ல என்று கூடி நரைத்து கிழம் எய்திய சங்கத் தமிழின் ஒன்றும் அறியா தினமாக மாறும் மனதுக்குள் முண்டியடித்து அமர்ந்து விட்டேன். நிதானம் இழக்க அவகாசம் தேடும் மனதுக்குள் நான் பெரும் தானங்களின் கவிதையாக கிறுக்கு பிடித்து தலை சிலுப்பிய ஏதோ ஒரு அடுக்கின் கலைதலின் புலம்பல்களாக கொஞ்சம் மது தேடித் திரிந்து, மிஞ்சும் சதி பின்னித் திரியும், நீள வான ஓடைக்குள் மூழ்கிடவே விரும்பினேன். தேவதைகள் கொல்கிறார்கள் என்று உரக்க சொல்லும் துணிச்சல் உண்டு என்பதால் அணைத்து தள்ளிப் போன காலத்தின் முகமூடிக்குள் தலை சாய்த்துக் கொண்டேன்.

    காரணம் இல்லாமல் வெறுக்கும் கலைகளை நல்லவேளை நான் கற்றுக் கொள்ளவே இல்லை. கற்றதையெல்லாம் அன்பின் சுவடுகளாகவே வீசி எறிகிறேன். சில போது அதன் தீச்சுடரை பந்தமாய் கொளுத்தி விடுகிறேன். கொழித்து செழுமையாகப் பீறிடும் முத்தத்தால் மீண்டும் மீண்டும் காதலையே விதைக்கிறேன். விதைந்த போது தேவதைகள் தூங்குகிறார்கள் என்று எழுதத் தோன்றியது. ஆம், தேவதை தூங்கிக் கொண்டுதான் இருந்தாள்.

    கவிஜி கதைரயில் பயணத்தில் எப்போதாவது எப்போதும் மறக்க முடியாத பெண் ஒருத்தி நம்மோடு பயணித்து விடுகிறாள். இன்று அப்படி ஒருத்தி என்னோடு பயணித்தாள். என்னோடு மட்டுமே பயணித்தது போல பக்கவாட்டு மேல் பெர்த்தில் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். பெட்ஷீட் கழுத்து வரை போர்த்தி முகம் தெரியும் அளவுக்கு இடம் விட்டிருந்தாள். அல்லது கண்களை மூடிக் கொண்டிருந்தாள், தமிழன்பனின் புதுக் கவிதையென பார்த்ததும் பிடித்து விடும் முகம். பிடித்து விட்ட முகம். வேர்த்து விறுவிறுத்து கனத்து, சிவந்த கிடந்த மனதுக்குள் அந்த முகம் ஒரு மஞ்சள் நிலவை விதைத்தது. அரும்பு மீசை போல உள்ள பூனை ரோமத்தில் முயங்கித் திரண்ட வியர்வைத் துளிகளின் சூட்டை, ஒரு சில் காற்றின் ஈரத்தோடு என் கண்கள் நனைத்து நின்றன. தூண்டில் கண், ஜப்பான் மூக்கு, தொங்கட்டான் காது, இரண்டடுக்கு ஆரஞ்சு சுளையின் இதழ்கள் கொண்ட சற்றே பெரிய நெற்றியில் சிறிய பொட்டு கொண்ட வட்ட முகம். ஜப்பான்காரியாவதற்கு முந்தைய நிமிடத்தில் நின்று விட்ட தமிழ் முகம்.

    வலது பக்க மேல் பெர்த்தில் நான். தம்பி தன் இடத்தை எனக்கு விட்டுக் கொடுத்து அவன் கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டான். எனக்கு நேராக எதிர் பெர்த்தில் என் நண்பன் படுத்ததும் தூங்கி விட்டான். அவனுக்கு கீழே ஒரு ஹிந்திக்காரன். அவன் பாடல் கேட்பதில் மூழ்கி விட்டான். அவனுக்கு கீழே அந்த தேவதையின் மொட்டைத்தலை அப்பா தூங்கியே விட்டார். எனக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பெரியவர். அவரைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. தேவதை பெர்த்துக்கு கீழ் இருந்த பெர்த்தில் ஒரு நடுத்தரம். கண்கள் இறுக மூடியேதான் புரண்டு கொண்டிருந்தது.

    தேவதை அவளின் முதல் வார்த்தையை, வாக்கியத்தை, சொற்றொடரை கவிதையாகவே கூறினாள். கவிதைக்கு கவிதைதானே வரும் என்று ஒரு சிறுவனைப் போல யோசித்தது கவிதைகளற்ற மனம்.

    “அந்த லைட்ட கொஞ்சம் அணைக்க முடியுமா?”!!!!!!. நான் கண்களால் அணைத்தேன். எனது நடுங்கிக் கொண்டிருக்கும் என் மனதுக்குள் அவளின் வார்த்தைகள் தேவையாய் இருந்ததை நான் உணர்ந்தபடியே லைட்டை நிஜமாகவே அணைத்தேன். கதவுப் பக்கமாகவே எங்கள் இருக்கை அமைந்து விட்டதால் அங்கு எரிந்து கொண்டிருந்த லைட்டின் வெளிச்சம் அவளுக்கும் எனக்கும் ஒரு ஒரு மெல்லிய கோடாய் ஒளிச் சிதறலை அவள் நிறத்திலேயே படற விட்டுக் கொண்டிருந்தது. அவள் கண்கள் இப்போது ஆழமாக மூடி இருந்தன. நான் வலது பக்கம் திரும்பி படுத்து தலைக்கு வலக்கையை அணைக் கொடுத்து அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒரு மயிலிறகாய் அவளின் சாந்த முகம் காந்தம் பரப்பிக் கொண்டிருந்தது.

    “இந்த மாதிரி தேவதைகளைக் காதலித்துக் கொண்டே இருக்கலாமோ”- என்று எனது மனம் கோபச் செழுமைக்குள் இருந்து அன்பின் வரட்சிக்குள் மிதக்கத் தொடங்கியது.

    நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன் ரயிலின் ஆட்டத்துக்கு அவளின் பூசின உடம்பு குலுங்கிக் கொண்டேயிருந்தது ஒரு சாவி கொடுத்த குழந்தை பொம்மையாக. எனக்கு காரணமே இல்லாமல் புன்னகை வந்தது, காரணமே இல்லாமல் கோபம் வந்ததைப் போல. விட்டு தூரம் சென்று ஓடி மறைந்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட பொழுதை இந்த ஜப்பான் முகம் மனதால் ஏந்திக் கொண்டதைப் போலவே உணர்ந்தேன். அந்த முகத்தில் அத்து மீறி நுழைந்த என் பார்வையை ஏதோ ஒரு பெண் மனத் தவிப்பின் உட்புறம் புரிந்து கொண்ட புள்ளியில் சட்டென்று கண் விழித்தாள். விழிக்கும் போதே அந்த பார்வையின் நீட்சி சரியாக என் கண்களை நோக்கியே சரிந்தது. அவள் கண்கள் என் கண்களில் படரும் நொடியில் தொடர்ச்சியாக நான் சட்டென என் கண்களை மூடிக் கொண்டேன் தூங்குவது போல. தூங்கிய விழிகளுக்குள் இரு பூமிப் பந்தாய் மனம் சுழன்றது. “இன்னும் பார்த்து கொண்டு இருப்பாளோ? பார்த்து விட்டாளோ? அயோ என்ன நினைப்பாள்?” என்று தேவையே இல்லாத கற்பனைகளை தொடர விட்டு மீண்டும் கண்களை மெல்லத் திறந்தேன், அவள் கண்கள் மூடி இருந்தன. ஒரு வட்ட தத்துவம் போல அல்லது ஜென் கவிதையின் ஜின் சிந்தனையைப் போல.

    ‘இத்தனை விதமாக தூங்க முடியுமா’ என்று அவள் ஆச்சரியப் பட வைத்தாள். திரும்பி படுத்தாள், தலைக்கு கையை அணைக் கொடுத்துப் படுத்தாள். கால்களை சற்று தூக்கி வைத்துக் கொண்டு படுத்தாள். ஒருக்களித்துப் படுத்தாள். கழுத்தை இப்பக்கம் அப்பக்கம் என்று ஒரு ஓவிய தொடரைப் போல அவள் மாறிக் கொண்டேயிருந்தாள். நான் மனம் முழுக்க அவளை நிரப்பத் தொடங்கினேன். ஹைகூவின் அடுத்த நிலை என்றே நம்பத் தொடங்கினேன். அலை அடித்து மூச்சுத் திண றிக் கொண்டிருந்த மனதுக்குள் பசுமையை சோலையைக் கொண்ட தீவு மடியென இருந்தது. அந்த அமைதியான சோதி முகம் வீணையடி நீ எனக்கு என்று பாரதி மீட்டிய தந்தியை நானும் மிதித்து, சிறு பிள்ளையாய் நொண்டி விளையாடினேன். கடைசியில் என்னைப் போலவே முதல் படுத்திருந்த நிலைக்கு வந்து விட்டிருந்தாள். அவளின் இடது தலைக்கு கை கொடுத்து முகம் என்னைப் பார்ப்பது போல வைத்திருத்தாள். அந்த ரயில் முழுக்க நாங்கள் இருவர் மட்டுமே என்பது போல ஒரு சிறுவனின் சிக்கு புக்கு ரயிலை நானே ஓட்டினேன்.

    மனதுக்குள் தடக் தடக்… நரம்புகளில் கரக் முறுக் …

    ட்ராக் மாறும் சத்தத்தில் தாமாக விழித்துக் கொள்ளும் கண்களின் தொடர்ச்சி அவளின் முகத்தை விரித்துக் கொண்டே போனது. மலர் வனக் காட்டுக்குள் ஒற்றைப் பூவென இம்முறை அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை, சட்டென்று விழித்தாள். ஆனால், நான் சட்டென்று மூடிக் கொள்ளவில்லை. மைக்ரோ நொடி இடைவெளியில் எங்கள் கண்கள் நன்றாக சந்தித்துக் கொண்ட பிறகுதான் நான் கண்களை மூடினேன். இளையராஜாவின் அசரீரி இசையோடு, “முகிலினங்கள் அலைகின்றதே, முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ”

    எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏதோ ஒரு காதல்காரன் “மெல்லினமே மெல்லினமே மெல்லிய காதல் பூக்கும்” பாடலை மிக மெதுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ என்று சத்தமாக என் கற்பனை பூரித்தது. கொலை செய்த தேவதைகளைக் கடந்த மன நிம்மதிக்குள் தூங்கும் தேவதை நிறங்கள் விதைத்தாள். புதுப் பொருள் தரும் சாந்தம் மீண்டும் விழித்தாள். மீண்டும் மூடினேன். மீண்டும் விழித்தாள். மீண்டும் மூடினேன். பார்வைகளின் சந்திப்புகளின் மைக்ரோ நொடி சற்றே நீண்டது, சற்றே பெரிய சிறுகதை போல. அப்படி பார்க்கும் நொடியெல்லாம் அர்த்தம் சொல்லும், அல்லது அர்த்தம் வெல்லும் பார்வையின் சப்தத்தை நான் உரிந்து கொண்டே இருந்தேன். ஒரு பசி எடுத்த காதல்காரனாய் என்னால் எழுத முடியாத கவிதையெல்லாம் அவளே வைத்திருக்கிறாளோ என்று கூட மனம் தடுமாறியது, தடுமாறினால்தான் அது மனம் என்பது போல.

    மீண்டும் ஒரு முறை ரயில் ட்ராக் மாற, சற்று வேகத்துடன் தட தடக்க நான் சட்டென்று விழித்தேன். அவளும் அதே நொடியில் அதே வேகத்தில் விழித்தாள். இம்முறை இருவருமே கண்களை மூடிக் கொள்ளவில்லை. நேருக்கு நேராய் கண்கள் நான்கும் கண நேரத்துக்கும் அதிகமாக பார்த்துக் கொண்டே பின் சட்டென மெல்ல புன்னகைத்து விட்டோம். நான் நன்றாகவே சத்தம் வராமல் வாய் திறந்து சிரித்து விட்டேன். அவள் புன்னகையோடு கண்களை சற்று பெரிதாக்கினாள். எனக்கு அதன் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தேய்ந்து கொண்டே போகும் சூரியனைப் போல சுட்டதும், பட்டு சுருங்கியது மனது. வெப்பச் சலனம் வியர்வைக்குள் ஒற்றை உருண்டையை முதுகின் நடு கோட்டில் இறக்கியது. அவள் திரும்பி படுத்து உடலை ஆங்காங்கே சரி செய்தபடியே மீண்டும் எனை நோக்கியே படுத்தாள். எதை நோக்கியோ நகர்ந்தது. எங்களின் ரயில் கடந்த பயணம் ரயில் இப்போது திருப்பூர் தாண்டி இருந்தது.

    “அய்யோ இன்னும் ஒரு மணி நேரத்தில் கோவை வந்து விடுமே என்ன பண்ண?” என்று மூளை பர பரத்தபடியே மெல்ல இதழ் சேர்த்து. சப்தம் எழாமல் “உன் பேர் என்ன?” என்று கேட்டேன். இப்போது மெல்ல தலையை சரித்து கீழே யாராவது, குறிப்பாக அவளின் அப்பா பார்க்கிறாரா? என்று பார்த்தேன் யாரும் பார்க்கவில்லை. குறிப்பாக அவளின் அப்பா பார்க்கவே இல்லை. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். உதடு சரித்து ஏதோ முணு முணுத்தாள்.

    ஒன்றும் புரியவில்லை மீண்டும் சொல்லுமாறு ஜாடை செய்தேன். மெல்ல, செல்ல கோபத்தோடு கொண்ட முறைத்தல் போல ஒரு புன்னகை கலந்து மீண்டும் உதடு சரித்தாள். வீ… என்பது போல பெயர் நீண்டதுஇப்போதும் புரியவில்லை. நான் காசு தொலைத்த சிறுவனாய் விழித்தேன். ஐயோ இத்தனை அழகா இருக்கா. குண்டு குண்டுன்னு மொழு மொழுன்னு பாக்கவே ஜப்பான் பொம்மை மாதிரிதான் இருக்கா. “பேசாம என் கூட வந்துரு”- என்று காமத்தின் திறவு கோலென, காதல் கன்னா பின்னாவென வலை வீசியது. கண்களின் குளத்தில் சிக்கிக் கொண்ட மனதுக்குள், ஆயிரம் மீன்கள் கவிதை ஆயிரம் காரணத்தோடு இல்லாமல் எழுதி தவித்தது.

    என் பெயர் கேட்டாள். நான் “விஜி.. விஜி…” என்றேன் அதே மெல்லிய வாய் மூடித் திறத்தலின் மொழியாக.

    அவளும் “வீ… என்ன வீ?”- என்றே கலவரப் பட்டாள். இருவருமே முகம் அறியா நிழலை விரட்டிக் கொண்டிருந்தோம். என் காயங்களுக்கு எல்லாம் அந்த ஒற்றை பார்வையும் அருகாமை ஜாடையுமே மருந்தாகி விட்ட மாயங்களில் நான் தூங்கும் தேவதையையே நினைக்கத் தொடங்கினேன். மற்றவை மறந்தே போனது. ரயில் கூட மறந்த கணங்களில் தான் வடகோவை வந்தே விட்டது. நண்பனும், தம்பியும் எழுந்து தங்களை தயார் செய்ய ஒவ்வொருவராக எழுந்து இறங்குவதற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு விழி அவள் மீதும் மறு விழி மற்றவர் மீதும் இருக்க, நானும் காலணிகளை அணிந்து, தலை சீவி,பேக் எடுத்துக் கொண்டு தவித்து நிற்க, அவளின் முழு விழியை அப்பாவின் மீதும் அதில் ஒரு துளி விழியை என் மீதும் வைத்துக் கொண்டே தயார் ஆகிக் கொண்டிருந்தாள் அவள். என் தோளுக்கு நிற்கும் அளவான உயரம் சற்று கணத்த உடம்பு. காந்த உதடுகளின் வாயிலாக, அளவான கண்களின் மொழியாக, முகம் தைத்து பார்வையை மாற்றிக் கொண்டேயிருந்தாள். சட்டென காலியான கனவாய் நான் மீண்டும் தவித்து தடுமாறி தேவதைத் தூக்கத்துக்கு சாமரம் வீசிக் கொண்டே ரயிலை விட்டு இறங்கி நடை பாதையில் நடக்கத் துவங்க, எனைக் கடந்து முன்னேறிய அவளின் கை என் கைக்குள் வேகமாக எதையோ திணித்து. மறு கணத்தில் பிரிந்து போனது. நான் குனிந்து கையை விலக்காமலே பார்த்து விட்டு சுயயோசனை வந்து நிமிர, அவள் கூட்டத்தில் கரைந்து காணாமல் போயிருந்தாள். மெல்ல கையை தளர்த்தி விரித்தேன். ஒரு பஸ் டிக்கெட்டில் 8148476 அலைபேசி எண்அவளைப் போலவே குண்டு குண்டாய் உருண்டிருந்தது.

    இரவுதான் பேச வேண்டும்.

    எல்லா தேவதைகளும் ஏமாற்றுவதில்லை. உடல் வலியோடு திரும்பி படுக்கிறேன். எதிரே அவள் படுத்திருப்பது போலவே ஒரு வெற்றிட வெளி நிரம்புகிறது என் அறையெங்கும். அது தேவதைகளின் அன்பை மட்டுமே வடிகட்டி விடும் நம்பிக்கையின் பிடிமானம்.

    Share
  • நேற்று…

    — மாதவன் ஸ்ரீரங்கம்.

    புவன் எம்ஜியாருடன் கனவில் காப்பி குடித்தபடி பேசிக்கொண்டிருக்க, பட்டென்று கிறிஸ்டோபர் நோலன் அவனை துப்பாக்கியால் சுட்டபோது, அதிலிருந்து டுமீல் ஓசைக்கு பதிலாக அவன் மொபைலின் ரிங்டோன் ஒலித்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது. பாண்டித்துரைதான் அழைத்திருந்தான். எடுப்பதற்குள் நின்றுவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது நிறைய வியர்த்திருந்தது.

    ஒரு பேச்சிலர் அறைக்குண்டான அனைத்து அம்சங்களுடன் அலங்கோலமாய் கிடந்தது அறை. நாளை ஞாயிறு. நாளைக்காவது சுத்தம் செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டான். பாத்ரூம் இதாயாதிகளை முடித்துக்கொண்டு, தானே தயாரித்த தேநீருடன் மொட்டைமாடிக்கு வர, காலை ஒன்பதுமணி வெயில் இதமாகத்தான் இருந்தது.

    கீழே நகரம் பெரிய சந்தடிகளின்றி இருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய டிஷ் ஆண்டனாக்களும் கேபிள் வயர்களும், பாதியில் துருத்திநிற்கும் பில்லர்களுமாக, ஒரு டிஜிட்டல் உலகின் சகல சாத்தியங்களுடன் விளங்கியது. நகரத்தில் நிறைய அலைக்கழிந்து, நெருக்கடிகளை எல்லாம் கடந்துதான் இந்த அறையை அடையமுடிந்தது. பில்டிங்கின் முதலாளி ஒரு அப்புராணி. இத்தனைகாலமாக இத்தனை சொத்துக்களுடன் இந்த நகரத்தில் அவர் குப்பைகொட்டுவது குறித்து அவனுக்கு ஆச்சரியம்தான். மிகக்குறைந்த வாடகைக்கு இந்த அறையைக்கொடுத்திருக்கிறார். என்ன, அவ்வப்போது கரண்ட்பில்லோ வீட்டுவரியோ ஆன்லைன் ஷாப்பிங்கோ செய்வதற்கு இவன் உதவியை எதிர்பார்ப்பார். அவ்வளவுதான்.

    முன்பு தட்டுமுட்டுச்சாமான்கள் அடைத்துவைத்திருந்த இடம் அது. இன்னும் அதன் பழைய வாசனைகள் எஞ்சியிருக்கின்றன. ஆனால் இந்த அறையும் மொட்டைமாடியும் சொர்க்கம். வெக்கைப்போதில் காற்றாட வெளியில் படுத்துக்கொள்ளலாம். துவைத்த துணிகளை சவுகரியமாக காயப்போடலாம். மிக முக்கியமாக வார இறுதியில் நண்பர்களுடன் பீர் அருந்தலாம். சத்தமாக சிரித்துக் கும்மாளம் போடலாம். டைரி எழுதலாம். டைரி நினைவு வந்ததும் இன்றைய நாளின் வேலைகள் பற்றி யோசனை வந்தது. எழுந்து கோப்பையை கழுவிக் கவிழ்த்துவிட்டு டைரியை எடுத்துப்புரட்டினான்.

    நேற்று சந்தித்த கிளையண்டுகள் பற்றிய குறிப்புகளிருந்தன. இன்று சனிக்கிழமை. இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்று தேடினான். எல்லாமே மனதில் பாடமாக இருப்பதுதான். என்றாலும் ஒருமுறை தவறுதலாக பிக்ஷாட் ஒருவரின் அப்பாய்ன்மெண்ட்டை இழந்துவிட்டான். மிகப்பெரிய அமவுண்டிற்கு பாலிஸி கிடைத்திருக்கவேண்டியது சிறு பிழையால் தவறிவிட்டது. அன்றிலிருந்துதான் புவனுக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டாயிற்று. ஒவ்வொரு நாளிலும் என்னென்ன நிகழ்ந்தன, யாரையெல்லாம் சந்தித்தோம், மறுபடி அவர்களை சந்திக்கவேண்டிய நாள் கிழமை நேரம் எல்லாம் அதில் குறித்துவைக்கத் துவங்கினான்.

    இன்று மங்களம் ஜுவல்லர்ஸ் சித்ரஞ்சனை பார்க்கவேண்டும். மதியம் 3 மணிக்குத்தான் சொல்லியிருக்கிறார். அவன் பணிபுரியும் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வெளியில் நல்ல பெயரும் விளம்பரமும் இருந்தன. அதை சரியாக மார்க்கெட் செய்யும் வித்தையும் அதற்கான பயிற்சியும் இவனுக்கு இருந்தது. இருந்தும் சற்று கடினமாகவே ஓடுகிறது பிழைப்பு. இந்த வாழ்வு ஒரு பகாசுரன். எத்தனை சம்பாதித்தாலும் லபக் லபக்கென்று விழுங்கிவிட்டு, இன்னும் கொண்டா என்று கேட்கிறது.

    என்னவோ இன்று வேலை பார்க்கவே தோன்றவில்லை. ஒரு விடுமுறைக்கொண்டாட்ட மனநிலைதான் இருந்தது. அவன் தயாராகி தன் டிஸ்கவர் பைக்கில் வெளிவந்தபோது சாலை நெறிசலின்றி வெறிச்சென்று கிடந்தது. சிக்னல்களிலும் அதிகம் கும்பலில்லை. கடைகள் ஷோரூம்கள் எல்லாம் ஷட்டர் இறங்கி இருந்ததையும், பள்ளிச்சீருடையில் ஒரு குழந்தைகளைக்கூட காணவில்லையே என்றும் வியந்துகொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி எடுத்துப்பார்க்க பாண்டித்துரைதான்.

    “சொல்லு மச்சி எங்க இருக்க”

    “ஏண்டா கூ…. நேத்துபூராம் நீ எங்கபோய்த்தொலஞ்ச”?

    ” என்னடா லூசுமாதிரி பேசுற ? நேத்து நைட்டு நம்ம பார்ல நாம ஒன்னாத்தான இருந்தோம்”?

    “மூதேவி அது முந்தாநேத்துடா. நேத்து எங்கபோன ? த்தா எத்தனவாட்டி போன் பண்ணேன் ? அப்புடியென்ன பிஸி மசிறு ஒனக்கு”?

    புவனுக்கு குழப்பமாக இருந்தது. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருக்க, பாண்டித்துரையே மறுபடிப் பேசினான்.

    “சரி விடு இப்ப நீ எங்கயிருக்க”!

    “இப்பத்தாண்டா ரூம்லருந்து கெளம்புனேன். மெஸ்ல சாப்டுட்டு அப்டியே ஒரு கிளையண்ட்ட பார்க்கனும். நீ எங்கருக்க”?

    “நா நம்ம சேட்டன் கடைலதான் இருக்கேன் வா”

    சரியென்று அழைப்பைத்துண்டித்து மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு பைக்கை நகர்த்தினான். நிரம்ப யோசனையாக இருந்தது. என்னாயிற்று பாண்டிக்கு ? நேற்று இரவு இருவரும் ஒன்றாகத்தான் பீர் சாப்பிட்டோம். பிறகு ஏன் குழப்புகிறான் ? நேற்றைய பீர் இன்னும் தெளியவில்லைபோல என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். பயங்கரமாக பசித்தது. மெஸ்ஸில் நிறுத்தி எதையேனும் அள்ளித்தின்றுவிட்டுப் போகலாமா என நினைத்தபடி மெஸ் வாசலில் நிறுத்த கேட் பூட்டியிருந்தது. முதலியாருக்கு உடம்பு சரியில்லை போல. சமீபமாக இப்படித்தான் அடிக்கடி மூடிவிட்டுச் சென்றுவிடுகிறார் பாவம். சரி இன்று வடையும் டீயும்தான் விதி என்று வழக்கமான சேட்டன் கடைக்குச்சென்று நிறுத்த வாசலிலேயே சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான் பாண்டித்துரை. அவன் முகம் கடுப்புடனிருந்தது.

    மாஸ்டரிடம் ஒரு லைட் டீ சொல்லிவிட்டு வடையொன்றை எடுத்துக்கொறித்தான்.

    “ஏண்டா நேத்து போன்பண்ணப்ப எடுக்கல”? என்றான் மறுபடி.

    நிஜமாகவே புவனுக்கு இம்முறை கோபம் வந்துவிட்டது. கூடவே சிரிப்பும். சட்டென்று தன் மொபைலை எடுத்து கால் ஹிஸ்டரியை பார்த்துவிட்டு பாண்டியிடம் கொடுத்தான்.

    ” த்தா போன் பண்ணிருந்தா மிஸ்டு கால் லிஸ்ட்ல இருக்கும்ல ? எங்கன்னு காட்டு”?

    பாண்டி மொபைலை வாங்காமலேயே,

    “ஆமா பெரிய விஞ்ஞானி. லிஸ்டை டெலிட் பண்றதெல்லாம் மேட்டராடா ? சரி அப்டி எங்கதான் போன. எதாச்சும்…..”?

    புவனும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டான்.

    ” ரெண்டு பீர்தாண்டா அடிச்ச. இன்னுமா தெளியல? சரி விடு. நா ஒரு கிளையண்ட்டை பார்க்கனும். முடிச்சிட்டு சாயந்திரமா கால் பண்றேன்” என்று ஹெல்மட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிய புவனை ஆச்சரியமாகப்பார்த்தான் பாண்டி.

    “ஏண்டா ஞாயித்துக்கெழமைல கூட எவனையும் வீட்ல நிம்மதியா இருக்கவுடமாட்டியாடா ? எப்பப்பாரு பாலிஸி பாலிஸின்னு”

    “டே லூஸு. இன்னிக்கி சனிக்கிழமைடா. இந்த சண்டேதான் திருணாமலை போலாம்னு பிளான் பண்ணிருந்தமே”

    “யப்பா சாமி. இப்பவாச்சும் நெனப்பு வந்துச்சே. த்தா பிளானைப்பூராம் சொதப்பிட்டு மொக்கத்தனமா சமாளிக்காத”

    அப்போதுதான் புவன் கடையிலிருந்த தேதியைப்பார்த்தான். ஞாயிறு என்றிருந்தது. அவனுக்கு என்னவோ தோன்ற செய்தித்தாள்களை எடுத்துப்பார்க்க அதுவும் ஞாயிற்றுக்கிழமை பதிப்புத்தான் வந்திருந்தது. அவசர அவசரமாக தனது மொபைலை எடுத்து பரிசோதிக்க, கடைசியாக வெள்ளிக்கிழமை பேசிய தவறிய அழைப்புகள் மட்டுமே இருந்தன. இன்று காலை தவறிய பேசிய பாண்டியின் அழைபுகள் இருந்தன. சனிக்கிழமை தேதியில் ஒன்றுகூட பதிவாகவில்லை. புவனுக்கு சற்று பீதியுண்டானது.

    பாண்டியை கடைக்குள் இழுத்துச்சென்று பெஞ்சில் அமர்ந்து பதட்டத்துடன் விஷயத்தைக்கூறினான்.

    “மச்சி என் நேத்தை காணம்டா”

    பாண்டி பகபகபகவென சிரித்தான்.

    “என்னடா ஜட்டியக்கானோங்குற மாதிரி சொல்ற”?

    புவன் வெளிறிப்போய் கிடந்தான்.

    ” மச்சி சீரியஸாடா. நேத்து முழுக்க என்ன நடந்துச்சி என்ன எதுமே மைண்ட்ல இல்லடா. கடைசியா வெள்ளிக்கிழமை நாம ஒன்னா சரக்கடிச்சது ஞாபகத்துல இருக்கு. அப்பறம் இன்னிக்கி நீ போன் பண்ணப்ப எழுந்ததுதான். நடுவுல நேத்து முழுக்க”…..

    புவன் குரலிலிருந்த சீரியஸ்தனம் பாண்டிக்கு உறைத்திருக்க வேண்டும். ஆறுதலாய்க் கூறினான்.

    “விட்ரா மச்சி. நேத்து நைட்டு என்னை விட்டு தனியா போய் புல்லா சரக்கடிச்சிருப்ப. நாள் முழுக்க மட்டையாயிருப்ப. விடு இதெல்லாம் மேட்டரா”

    “போடா கூ…. . எவ்ளோ மட்டயானாலும் ரெண்டு ராத்திரி ஒரு பகலாடா தூங்குவாங்க? இல்ல உன்னவிட்டி என்னிக்காச்சும் தனியா சரக்கடிச்சிருக்கனா”?

    புவன் கேட்டதில் லாஜிக் இருந்தது. அவன் தனியாக என்றுமே குடித்ததில்லை.

    “இப்ப என்னடா செய்யறது? மங்களம் ஜுவல்லர்ஸ் அப்பாய்ன்மெண்டும் கோவிந்தா. அதான் ரோட்ல டிராபிக் ப்ரீயா, கடைகன்னியெல்லாம் மூடிக்கெடந்துருக்குபோல”

    இப்போது குழப்பம் இருவருக்குமாய் ஆகிப்போனது.

    “ஆபீசுக்கு போன் அடிச்சிப்பாரேன் மச்சி” என்றான் பாண்டி.

    “அட போடா. ரெண்டுமாசமா டார்கட் அச்சீவ் ஆகலைன்னு மேனேஜர் கடுப்புல கெடக்கான். எதுனா பாலிஸியோட வந்தா ஆபீஸ் பக்கம் தலையக்காட்டுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான்”

    சட்டென்று யோசனை வந்து, பேகில் இருந்த டைரியை புரட்டினான். அதிலும் வெள்ளிக்கிழமைதான் கடைசியாக பதிவாகியிருந்தது.

    “சரி அதை விடு. எப்டியும் இன்னிக்கி லீவுன்னு கன்பர்ம் ஆயிருச்சில்ல. வா ஆளுக்கொரு பீர வாங்கிட்டு உன் ரூமுக்கு போயிருவோம்”

    பாண்டி கூறியதுதான் சரியென்று தோன்றியது. இருவரும் சற்றுநேரத்திற்கெல்லாம் புவன் அறையை அடைந்தார்கள். படியேறுகையில் மூடிக்கிடந்த பில்டிங்கின் கடைகளை பாவமாக பார்த்தான். அறைக்குள் நுழைந்ததும் முதல் காரியமாக தினசரி காலண்டரை கவனித்தான். அது ஞாயிற்றுக்கிழமையை காட்டியது. எப்போதும் முதல்நாள் இரவே தேதித்தாளை கிழிக்கும் வழக்கம் வைத்திருந்தான் புவன். கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு கிழித்திருந்தால் சனிக்கிழமைதானே இருக்கவேண்டும்?

    “டே என்னடா. எதுக்கு குப்பையக் கெளறிட்ருக்க”?

    பதில்கூறாமல் குப்பை டப்பாவைக் கவிழ்த்து தேதித்தாள்களை மட்டும் சேகரித்து சோதித்துப்பார்க்க, அதில் மற்ற அனைத்து நாட்களும் இருந்தன. நேற்றைய சனிக்கிழமையை மட்டும் காணவில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தான். ஊரிலிருக்கும் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களும் நேற்றுமுழுக்க இவன் அழைப்பை ஏற்கவில்லையென்று புகார் வைத்தார்கள்.

    ” மச்சி எனக்குப் பயமாயிருக்குடா. இந்த செலக்டீவ் அம்னீஷியா அல்ஜைமர்லாம் சொல்றாய்ங்களே.. அப்டி ஏதும்”

    “ச்சேச்சே.. அப்டிலாம் ஒன்னுமிருக்காது மச்சி. நீ கவலைப்படாத. நாளைக்கி நம்ம டாக்டர் பய ஹரீஷ பார்த்துருவோம். அப்டிலாம் இருக்காதுரா”?

    பாண்டி ஆறுதல் கூறினாலும் கூட, அவனுக்குமே உள்ளுக்குள் சற்று அச்சமாகத்தான் இருந்தது. ஒரு புத்தகத்தின் பக்கமொன்று தொலைந்ததைப்போல தொலைந்துவிட்டிருக்கிறது ஒரு நாள் ! அது வந்து சென்றதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாமல். யார் கண்டது, அது வாராமலேகூட இருந்திருக்கலாம்.

    இரண்டாவது பியரில் சற்றே மிதக்கத்துவங்கிய புவன் மறுபடிப் புலம்ப ஆரம்பிக்க, பாண்டி அவனிடம் சொன்னான்.

    “இப்ப நம்மகையில இருக்கு பாரு இன்னிக்கி. இதான் நம்முது. இத்தை தொலையாம பாத்துக்கிட்டா போதும் மச்சி”

    “அடப்போடா” என்று அவன் சலித்துக்கொண்டான். “சரி நா கேக்குறதுக்கு பதிக் சொல்லு மச்சி”

    மிக்சரை ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டபடி புவன், “கேளு”

    “சாதாரணமா ஒரு நாள்ல நீ என்னல்லாம் செய்வ”?

    ” ஏன் கேக்குற”?

    “சும்மா சொல்லு மச்சி”

    ” என்னா, எந்திரிப்பேன். குளிப்பேன், சாப்புடுவேன், வேலைக்கிப்போவேன். வீட்டுக்கு வருவேன். தூங்குவேன்”

    “சூப்பரு. நேத்து தொலையாம இருந்திருந்தாலும் நீ அதைத்தான செஞ்சிருப்ப”?

    சற்று ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னான்.

    ” ஆங்… ஆமாம். அதத்தான் செஞ்சிருப்பேன். ஏன் கேக்குற”?

    “இல்ல, ஒருவேளை உன் நேத்து தொலையாம இருந்திருந்தா, சி எம்மாவோ பி எம்மாவோ ஆயிருப்பியா? இல்ல ஐநாவுக்கு அதிபராயிருப்பியா”?

    ” டாய்”….

    ” அப்பறம் என்ன ? சும்மா பொலம்பாத மச்சி. நீ பெரிசா எதையும் இழந்திடல “

    “த்தா ஒனக்கென்ன வந்திச்சு ? போனது என்னோட நேத்துடா”

    “அதுஞ்சரிதான். ஒன்னு பண்ணேன். வேன்னா என் நேத்து சும்மாத்தான் கெடக்கும் மச்சி. அதை எடுத்துக்கயேன்” என்று கண்ணடித்துச் சிரித்தான் பாண்டி.

    புவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

    “ஆமா அப்புடித்தான் செய்யணும். ஆனா அப்டி நாளைக்கி உன் நேத்தை நா எடுத்துக்கிட்டா, என்னோட நாளையை என்னடா செய்யிறது”?

    ” ம்… நியாயமான கேள்விதான். . ஆங்… உன் நாளைய நா வச்சிக்கிறேன். ஆனா, அப்ப என் நாளை என்னாவும் மச்சி ? பேசாம அதை யாருக்குனா பிச்சை போட்ரலாமா”? என்று பாண்டி கேட்க,

    இருவரும் பயங்கரமாக வெடித்துச் சிரித்தார்கள். இறுதியாக பாண்டி, புவனிடம் சொன்னான்.

    “மச்சீ… இந்த உத்திரவாதமில்லாத வாழ்க்கையில நேத்துக்கும் இன்னிக்கும் நாளைக்கும் பெரிய அர்த்தமோ வித்தியாசமோ இருக்குதா என்ன” ?

    *

    Share
  • அம்பிளி இல்லம்

    –கவிஜி.

    “இது மாலை நேரத்து மயக்கம் …”- பாடல் கேட்டுக் கொண்டே மழை பார்த்துக் கொண்டிருந்தேன். சோவென மழை, இல்லை … பலத்த மழை, பழுத்த மழை.

    சனிக்கிழமை மாலை வேறு. கொஞ்சம் குடித்துக் கொண்டும் இருந்தேன். டாஸ்மாக் முன்னால் விழுந்து கிடப்பது போல் இல்லை எனது குடி. இது முன்னால் காதலியின் பிரிவு முத்தம் போல. அத்தனை மென்மையானது. மேன்மையானது. தானாக புன்னகைத்துக் கொண்டே ஏதேதோ யோசிக்கத் தோன்றியது. “ஜன்னல் தாண்டி வந்து முகம் தொட்ட சாரலில் கடவுளின் எச்சில்” என்று மொக்கையாக கவிதை கூட வாய்மொழியாக நினைத்த போது தான் எதிர் வீட்டு ஜன்னல் கதவுகள் முன்னும் பின்னும் வேக வேகமாக அடித்துக் கொண்டிருந்தன, அத்தனையும் காற்று. பெருங்காற்றில் பெரு மழை. பெருமழைக்குள் மாலை மூடுகிறது, கவ்விய மௌனமாக.

    இப்போது, “ஏதோ நினைவுகள், மனதிலே மலருதே…” பாடல்.

    எப்போதும் அடைத்தே கிடக்கும் ஜன்னல் எப்போதாவது எட்டாவது அதிசயமாய் திறக்கும். ஒன்பதாவது அதிசயமாக ஜன்னலில் ஒரு பெண்ணின் முகம் சோர்ந்து காணப்படும். அதுவும் பின்னிரவு நேரங்களில் மழை நாட்களில் அடர் வெயில் சமயங்களில் இப்படி எப்போதாவது தெரியும் முகத்தில் ஒரு வித தெளிவும் இல்லாத, குழப்பமும் இல்லாத வெற்றிட வட்டம் போல அந்த முகம் வெறித்திருக்கும். முன் அறையில் பெரியவர்கள் பேசுவதும், போவதும் வருவதுமாகவே இருப்பார்கள் அந்த வீட்டுத் தாத்தா கூட என்னுடன் எப்போதாவது வாக்கிங் வருவார்.

    “சார், அது உங்க பேத்திங்களா?” என்று கேட்கத் தோன்றும். பின், “ம்… சரி எதுக்கு வம்பு!” என்று வாய் சாத்திக் கொண்டு நடை சாற்றுவேன். பெரிதாகப் பழக்கம் இல்லை என்பதால் கடந்து போவது சுலபமாக இருக்கும். சரி, இன்று என்ன ஆனாலும் பரவாயில்லை கை காட்டி விட வேண்டும். ‘அம்பிளி இல்லம்’, என்று வாயில் ஸ்லாபில் பெயர் பதிந்து வைத்திருக்கிறார்கள் ஒரு வேலை அம்பிளிதான் பெயராக இருக்குமோ?

    வாய்க்குள் மழை வைத்தது போல மெல்லமாக, ஆனால் மன சத்தத்தில் அதிகமாக ‘அம்பிளி’ என்று கத்தினேன். எனக்கே கேட்டதாகத் தெரியவில்லை. “இந்த பொண்ணுங்கள நம்பவே முடியாது திடீர்னு போட்டு குடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க. அதான்…”யோசித்தேன். யோசிக்க யோசிக்க அவளின் தீர்க்கப் பார்வை கவிழ்ந்து கொண்டே இருந்தது. மிகப் பெரிய மேகத்தின் கரிய நடையைக் கொண்டிருத்த கூர் முகத்தில், வட்ட வட்டமாய் விழுந்த துளியின் நிறப் பிரிகையில் வானவில்லின் இரு நிறம் கூட அவள் முகம் தாங்கிப் போனது போல நீண்டு வளைந்து கிடந்தன என் பார்வையின் குறிப்புகள்.

    கையை ஆட்டிக் கொண்டே ஜன்னலுக்கு வெளியே உடலை சற்று தள்ளி முகத்தை நீட்டினேன். மழைப் பெண் நனைத்த முகத்தை கவிப் பெண் நனைக்கவில்லை, இன்னும் குனிந்தே இருந்தது முகம்.

    சற்று சத்தமாகவே ‘அம்பிளி’ என்று கத்தினேன். வெற்றிடம் நிரப்பிய மழைச் சாரல்கள் தாண்டி சத்தம் அவளை அடைய நொடிக்குள் நொடி ஆனது. மெல்லத் தலை தூக்கிப் பார்த்தவள், என் கண்களை ஆழமாக, தீர்க்கமாக, கூர்மையாகப் பார்த்தாள். ஒளி நிறைந்த அழகிய முகம். செதுக்கிய கண்களில் குதித்தது பார்வைகள்.

    ‘ம்ம்ம்ம்ம்….’ என்று யாரோ என் அருகே முனகுவது போல இருக்க, மெல்ல திரும்பிப் பார்த்தேன்.

    தலை இல்லாத பெண் உடல் ஒன்று எனக்குப் பின்னால் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தது.

    கண்கள் விரிய மூச்சடைத்து நடுங்கிக் கொண்டே, நா வறண்டு கத்திக் கொண்டே சட்டெனத் திரும்பி அம்பிளியைப் பார்த்தேன்.

    இப்போது என் ஜன்னல் விளிம்பில் அதே அம்பிளியின் தலை இருந்தது.

    ஆ…ஆஹ்…ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்…

    Share
  • பந்தயம்

    — மாலா மகாதேவன்.

    horse race

    ஜெயிப்பாண்டா, இந்த ரவுண்டு இவன் தாண்டா ஜெயிப்பான். என் செல்லம்டா இவன். நான் வளர்த்த பையன்.

    ஆர்ப்பரித்த குரலில் இருந்த உற்சாகத்தை உணர்ந்த இவனாகப் பட்ட குதிரை சம்சுத் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தது. அதன் மேல் நம்பிக்கை வைத்து லட்சத்துக்கு மேல் பந்தயத் தொகை கட்டியிருந்தான் செல்வா.

    வாயில்லா ஜீவன் அது. முயன்றால் ஓடும். ஓடினால் ஜெயிக்கும். ஜெயிக்கா விட்டாலும் அதற்கு ஒன்றுமில்லை. அதன் மேல் கட்டினவன் பாடு. அது பாட்டுக்குத் தன் வயிற்றுக்குப் பார்த்து கொண்டு இருக்கும்.

    செல்வாவின் பிரஷர் ஏறிக் கொண்டு இருந்தது. கடைசி சுற்று வெற்றி பெற்றால் இழந்த பந்தய தொகையை மொத்தமும் மீட்டு விடலாம். பரிகசித்த பண்டாரங்களை ஊதித் தள்ளி விடலாம்.

    சம்சுத் இதுவரைக்கும் வெற்றிக் கோட்டின் பக்கத்தில் போயிருக்கிறது. முதலாவதாக என்றுமே வந்ததில்லை. ஆதலால் அதன் மேல் பணம் கட்டாதே என பாதிப் பேர் சொல்லியும் செல்வா மிகுந்த நம்பிக்கையுடன் அதன் மேல் கட்டியிருந்தான். அதைச் சொந்தமாகவும் வாங்கி இருந்தான்.

    தொண்டைத் தண்ணி தீரும் வரை விடாமல் கத்திக் கொண்டு இருந்தான் செல்வா.

    “கமான் சம்சுத் கமான் கமான்..”

    வின் வின் என்று கத்தியதில் அவனுக்கே தலை விண் விண் என வலித்துக் கொண்டு இருந்தது.

    கண்ணுக்கு நேரே பாதை. வளைந்தும் குறுகியும் நெடிதுமாய் இருக்கும் நீள் வட்டப் பாதை. சம்சுத் ஓடும் ஒவ்வொரு நொடியும் அவனுக்குப் பொக்கிஷம். போட்டி தொடங்கியது. ஓடத் தொடங்கியது.

    மின்னலாய் விரைந்த குதிரையின் முன் கத்துகின்ற மக்கள் கூட்டத்தில் செல்வாவின் தலை தனித்துத் தெரிந்தது. அவனைப் பார்த்து மிரண்ட சம்சுத் என்ன செய்கிறோம் எனப் புரியாமலே ஒரு வினாடி தயங்கி நின்றதில் பின் சென்ற ஜாக்குவார் வெற்றிக் கோட்டை தொட்டது.

    பார்த்த செல்வாவுக்கு ஒன்றுமே புரிய வில்லை. எப்படி நடந்தது? வெற்றிக்குப் பக்கத்தில் நம் குதிரை தானே இருந்தது?

    ஏன் போச்சு? எப்படி போச்சு? வாயில்லா ஜீவனைக் கம்பால் வதைத்தான். உன்னால் எனக்கு பணம் போச்சு. மற்றவர்களிடம் மானம் போச்சு எனக் குதிரையை முற்றிலும் புறக்கணித்தான். குதிரை பராமரிப்பு இல்லாமல் சோர்ந்து போனது.

    இந்தக் குதிரை என்ன அவ்வளவு பெரிய ஆளா? ஒரு போட்டியில் வெற்றி பெற முடிய வில்லை.

    “நான் ஜெயிச்சு காட்டறேன் பாரு இந்த குதிரையை என” வெறி கொண்ட செல்வா “கமான் க்விக் , கமான் க்விக் ” என்றபடி தானே இறங்கி பந்தயத்தில் ஓட ஆரம்பித்தான்.

    அந்தோ ! பாவம் அது குதிரைகளின் பந்தயம்.

    Share
  • ஆத்தா …

    —கவிஜி.

    confusedகாலை 11 மணி – 28.11.1984.
    எல்லாரும் ஓடி வந்தார்கள். ஒரு சேர கொஞ்சம் முன் பின்னாக, “என்னாச்சு, என்னாச்சு குட்டி, எங்க இருக்க?” என்று கத்திக் கொண்டே வாசல் பக்கம் ஓடி வந்து தேடினார்கள்.

    எனக்கு மூச்சு அடைத்துக் கொண்டு வந்தது போல திக் திக் நிமிடங்களில் தொங்கிக் கொண்டிருந்தேன். என்னால் இப்போது கத்த முடியவில்லை. மேல் கிளையில் இருந்து தவறி கீழ் கிளைக்கு வந்த நொடிகளில் பயத்தின் உச்சியில் பறந்து கொண்டு கத்திய என்னால் இப்போது கீழ் கிளையின் முனையில் கை மாட்டி தொங்கிக் கொண்டிருக்கும் போது கத்த முடியவில்லை. என் மாமா என்னை சீக்கிரம் கண்டு பிடித்து விட்டார். நான் வழக்கமாக ஏறி அமர்ந்து கொள்ளும் எங்கள் கொய்யா மரத்தின் பாதியில் நான் பாம்பாய் தொங்கிக் கொண்டிருந்ததை சில பல பார்வையிலேயே கண்டு பிடித்து விட்டார்.

    “பயப்படாத, பயப்படாத. யாரும் திட்டாதீங்க. எல்லாரும் அமைதியா இருங்க,” என்று என்னையும் அதே சமயம் வீட்டில் அனைவரையும் அமைதியாக்கி விட்டு கொய்யா மரத்தின் அடியில் வந்தார்.

    பிறகு ஏணி வந்தது. மெல்ல நான் இறக்கப் பட்டேன்.

    மதியம் 12.30 – 28.11.1984.
    தண்ணிகாய் மரத்தின் அடியே விளையாடிக் கொண்டிருந்த நான் வீட்டை நோக்கி தலை தெறிக்க ஓடி வந்தேன். என் பின்னால் ஒரு பாம்பு என்னை விரட்டியதா? இல்லை. என்னைக் கண்டு பயந்து மரத்தின் மேல் ஊர்ந்து ஏறியதா என்று என்னால் அப்போது கவனிக்க முடியவில்லை. என்னால் வீட்டை நோக்கி மட்டுமே ஓட முடிந்தது. கத்துகிறேன், மீண்டும் வீட்டில் உள்ளவர்கள் திடு திடுவென வாசலுக்கு ஓடி வந்தார்கள்.

    “என்னாச்சு என்னாச்சு” என்று அவர்கள் கத்துவதற்கும். நான் “பாம்பு, பாம்பு” என்று கத்திக் கொண்டு ஓடி வருவதற்கும் சரியான இடைவேளையில் மதிய உணவுக்கு வந்த என் மாமா மீண்டும் என்னை நோக்கி ஓடி வந்து என்னை தாவி அனைத்துக் கொண்டார் என் உடல் நடுங்கியது.

    “என்னாச்சு குட்டிப்பா?”-என்று கேட்டுக் கொண்டே நான் எங்கிருந்து ஓடி வந்தேனோ அங்கேயே மறுபடியும் மெல்ல, கவனமாக பார்த்து பார்த்து போனார். நான் காட்டிய அந்த பாம்பு இன்னும் மரத்தின் மேல் ஒரு கிளையில் அமர்ந்து எங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. எல்லாரும் என்னை முறைத்தார்கள். அம்மா குச்சியை ஒடித்துக் கொண்டு அடிக்கவே வந்து விட்டார்.

    எல்லாரையும் போக சொல்லி விட்டு, மாமா என்னைப் பார்த்து ஆறுதலாக, “ஏன் குட்டிப்பா. இது அணிலுன்னு உனக்கு தெரியாதா!” என்று வாஞ்சையாக கேட்டார்.

    “ஓ அணிலும் இப்டிதான் இருக்குமா மாமா? என்று கேட்டேன். அப்போதைக்கு சிரித்து விட்டார் மாமா.

    அதன் பிறகு சாப்பிட்டுக் கொண்டே என் அத்தையிடம் “இன்னைக்கு நாளே நல்லா இல்லயே. மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கு” புலம்பிக் கொண்டிருந்தார்

    1984 – அக்டோபர் ஒரு மழை நாள்.
    மழை தூரத் தொடங்கி, இந்தா வந்துட்டே இருக்கேன் என்றது போல ஒரு சிணுங்கல், ஒரு முறைப்பு என்று அப்டி இப்டி என்று சாரலாய், பொல பொலவென வந்து கொண்டிருந்தது. நான் ஆத்தாவிடம் சென்று “எனக்கு மிச்சர் வேணும்” என்றேன்.

    “வா”- என்று எனக்கு மட்டும் மழைக் கோட்டை மாட்டி விட்டு கடைக்கு தூக்கி சென்றது. என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்ட ஆத்தா தன் முந்தானையை என் தலை மேல் போர்த்திக் கொண்டு நடந்தது. நான் எது கேட்டாலும், எப்போது கேட்டாலும் ஆத்தா மறுக்காது. என் ஆத்தாவுக்கு கொஞ்சம் காது மந்தம். சாலையில் போகும் போது நான்தான் இடுப்பில் உக்கார்ந்து கொண்டு முன்னால் பின்னால் வரும் வண்டிகளை சொல்லி, விலக சொல்லிக் கொண்டே போவேன்.

    வழியெல்லாம் மழையோடு சேர்த்து மிச்சரையும், வாயில் கொஞ்சம் மண்ணில் கொஞ்சம் என்று போட்டபடியே வந்தேன். இந்தக் காட்சியை இப்போது என் நினைவுகளின் வெளியில் காண்கிறேன். அது ஒரு அற்புத ஓவியம் போல, மழையினூடே ஒரு சிவத்த குட்டை கிழவி, இடுப்பில் ஒரு குட்டிப் பையனை வைத்துக் கொண்டு வேக வேகமாக நடந்து வரும் காட்சியில் அசைகின்ற ஓவியம் ஒன்று தன்னை வரைந்து கொண்டே நகர்ந்து கொண்டு இருப்பது போல தோன்றுகிறது.

    வீட்டை நெருங்கும் போது ஒரு வளைவினில் மழை வேகம் எடுத்து விட அருகினில் இருந்த ஒரு வீட்டு வாசலில் மறைந்து கொண்டோம். நான் மழைக் கோட்டு போட்டு இருந்தாலும் முன்னால் ஜிப் போடத் தெரியாமல் என் நெஞ்சு, வயிறு பகுதி நனையத் தொடங்கியிருந்தது. ஆத்தாவும் எவ்ளவோ முயற்சி செய்து கண்களைக் கூராக்கி ஜிப்பை போட்டு விட முயன்றது, முடியவில்லை. அந்த வீட்டு ஆள் (அவர் பெயரை மறந்து விட்டேன்) “என்னடா குட்டி, ஆத்தாள மழைல போட்டு இப்பிடி கஷ்டப் படுத்தறயே” என்றபடியே வெளிய வர, ஆத்தா அவரிடம், “தம்பி இந்த சிப்ப கொஞ்சம் போட்டு விடுய்யா” என்று கேட்டது. இப்போது நினைக்கிறேன், ஆத்தா கேட்கும் தோரணை மற்றவர்களிடம் பேசும் முக பாவம், கொஞ்சமாக மனதில் புகை போல தங்கி இருந்தாலும் ஊதி ஊதி நினைவுகளைக் கிளறுகுறேன். அது அத்தனை அன்பானது, வாஞ்சையானது, தூய்மையானது, வெகுளித்தனமனது. ஒரு போதும் யாருக்கும் எந்த துரோகமும் நினைத்திடாத ஒரு மனம் அது. ஜிப்பை போட்ட பிறகு, நான் நனைய மாட்டேன் என்று நம்பிய அந்த முகத்தில் விழுந்த மழைத் துளிகள் இன்னும் என் நெஞ்சினில் சொட்டிக் கொண்டிருக்கின்றன. சுருக்கம் விழுந்த அந்த முகத்தை ஒரு வெண்ணிற புகை வடிவமாக பின்னொரு நாள் நான் கண்டேன்.

    1985 ஜனவரி – ஒரு நாள்.
    தாத்தா அதை கதை போல சொல்லிக் கொண்டிருந்தார்.

    அதே இடம், மதியம் 3 மணி இருக்குமாம், வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்ப வண்டியில் ஏறிய பிறகுதான் தன் தலைக்கு கட்டும் மைக்கா கவர் கீழேயே இருக்கிறது என்று பார்த்திருக்கிறார். அதற்குள் வண்டியும் நகரத் தொடங்கி விட, டிரைவரைப் பார்த்து வண்டியை நிறுத்த சொல்ல எத்தனிக்க, கீழே இருந்து மைக்கா கவர் தானாக வண்டிக்குள் வந்து விழுந்ததை ஆச்சரியத்தோடு பயந்து கொண்டே பார்த்து, வாயடைத்து அதே இடத்தில் உற்றுப் பார்த்திருக்கிறார். ஆத்தா சிரித்துக் கொண்டே மறைந்திருக்கிறது. நான் மிரண்டு போய் இன்னும் கொஞ்சம் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சுருண்டு கொண்டேன். தாத்தா கண்கள் கலங்கி வாசல் வெறித்த கணத்தை இப்போது நானும் வெறிக்கிறேன். கலங்க ஒன்றுமில்லாதது போல வெற்றுப் பார்வையில் என் கண்கள் தூசுகள் கடக்கின்றன.

    1992 மே – ஒரு நாள்.
    நான் எப்போதுமே ஜன்னலோரம்தான் படுப்பேன். நான் வந்திருக்கிறேன் என்றால் அந்த இடத்தை எனக்கு விட்டு விடுவார்கள். அன்றும் அப்படிதான் ஜன்னலோரம் படுத்திருந்தேன். எனக்கு அடுத்து என் தம்பி, அதற்கு அடுத்து எங்க அக்கா, அடுத்து எங்க அண்ணி, அடுத்து எங்க தாத்தா படுத்திருந்தார்கள்.

    தூங்குவதற்கு முன் எனக்கு நேராக மேலே இருந்த பரணின் அடிபாகத்தில் கண்கள் விழுந்தது. குட்டி என்று என் பெயர் எழுதி இருந்தேன். வருடம் கூட 1984 என்று அருகினில் எழுதி இருக்கிறேன். அது இன்னும் அழியாமல் இருக்கிறது எப்படி என்று அப்படி ஓர் ஆச்சரியம் (அது இன்றும் அழியாமல் இருக்கிறது ஆச்சரியம் தொடர்கிறது).

    இதே ஜன்னல்தான் காற்றே இல்லாதது போல இருந்த ஒரு முன்னிரவில் படாரென அடித்து தானாக மூடிக் கொண்டது ஞாபகத்தில் வந்தது. யாரோ ஜன்னலை அடித்து சாத்தி விட்டு போவதை தான் உணர்ந்ததாக பெரியப்பா சத்தியம் செய்து கூறினார். அந்த நேரத்தில் இங்கே வந்து போக யாரும் இல்லை என்பது ஏக மனது கருத்தாக உணரப் பட்டது. பின் நேரம் ஆக ஆக, கொய்யா மரத்தினடியில் யாரோ விசும்பிக் கொண்டே இருந்ததும், அதைத் தொடர்ந்து சில குருவிகளின் பயம் கலந்த கத்தலும், தூரத்தில் ஏதோ ஒரு காட்டுப் பன்றியின் உறுமலும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருந்ததையும், வீட்டுக்குள் எல்லாரும் விழித்துக் கொண்டும், யாரும் யாருடனும் எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்து கொண்டு, ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டு, திக் திக் இரவைக் கழித்தது ஞாபகத்தில் வந்து போனது.

    நான் மெல்ல தூங்கி போனேன். அது ஒரு கனவு காட்சி. தாத்தாவின் கால் மேட்டில் என் ஆத்தா வெள்ளையாக புகை வடிவில் அமர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும், குறிப்பாக என்னை அதே வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தது.

    ஆத்தா எப்போதும் ஒரு காலை உள் நோக்கி மடக்கி, தன் இடது கையை தரையில் ஊன்றி கொஞ்சம் சாய்ந்தார் போலத்தான் அமரும். அன்றும் அப்படித்தான் அமர்ந்திருந்தது. அந்த அறை கொஞ்சம் சூடாகவே இருந்தது, வழக்கத்துக்கு மாறாக. நன்றாக என்னால் உணர முடிந்தது. ஆத்தா எனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது ஆத்தாவேதான். ஆனால், பால் போல வெள்ளை நிறத்தில் மிதந்து கொண்டிருப்பது போல அமர்ந்து கொண்டிருக்கிறது. எனக்கு உள்ளுக்குள் நடுக்கமாக, என் மூச்சு, பெரு மூச்சாக மாறியிருந்தது. தடுமாற்றம், தவிப்பு, தாகம் எடுப்பதைப் போல உணர்ந்தேன். என் உடல் தானாக ஆடுவது போல ஒரு பிரமை. என் உடல் இன்னும் எடை கூடினார்போல உணர்ந்தேன். சட்டென விழித்து படாரென எழுந்து, எழுந்த வாக்கிலேயே அமர்ந்தேன். எழும்போதே என் பார்வை முழுக்க நான் பார்த்துக் கொண்டிருந்த என் ஆத்தா மீதுதான் இருந்தது. எழுந்து அமர்ந்த பின்னும் ஆத்தா என்னை பார்த்துக் கொண்டிருந்தது. நான் கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தேன். இப்போதும் ஆத்தா என்னையே பார்த்தது. நேருக்கு நேராக கண்களில் தெரிந்த புகை போலான உருவம் மெல்ல மறையத் துவங்கியது. அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அதே வேகத்தில் படுத்து போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு என் தம்பியைக் கட்டிக் கொண்டேன்

    இன்று – 28-12-2014.
    இப்போது நினைத்தாலும் சில்லிடும் காட்சி அது. அதன் பிறகு நான் எல்லாரிடமும் கூறினேன். யாரும் நம்பவில்லை. வெறும் ஞாபகங்கள் என்று கடந்து விட்டார்கள். ஆனால் என்னால் அதை வெறும் ஞாபகமாக கடக்க முடியவில்லை. ஞாபகங்கள் மட்டுமா மரணத்துக்கு பின் இருக்கிறது. அதன் பிறகும் ஒரு தேடல் இருப்பதை நான் உணர்கிறேன். அங்கும் ஒரு மொழி இருக்கிறது. அந்த பாஷை நமக்கு புரிவதில்லை. இதோ இந்த கிணறு. வெறும் சாட்சி மட்டும் அல்ல. ஒரு மௌன மொழியின் ராட்சச கதறலை உள் வாங்கிக் கொண்டு மாயங்களின் குறியீடாக இங்கே இருக்கிறது. இதைத் தேடித்தான் நான் இன்று வந்திருக்கிறேன். கடந்த வாரம் முழுக்க என் ஆத்தாவின் நினைவுகள் என்னை தூண்டி ஏனோ இங்கு வர சொல்வது போல, ஒரு முரண்பாட்டு முகவரிக்குள் தொலைந்து விடும் முயற்சியை என்னில் விதைப்பது போல, ஒரு முடிச்சாகிக் கொண்டே இருந்தது. வந்தே விட்டேன். யாரும் சட்டென கண்டு பிடிக்க முடியாத பூமி வளையத்துக்குள் இந்த கிணறு இப்போது இருப்பது போல நான் நம்புகிறேன். காலம் ஓட ஓட பாதைகள் சுருங்குவதும் விரிவதும் எத்தனை எத்தனை மாயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. இதோ இந்த கிணறுகூட தன் வட்டத்தை சுருக்கிக்கொண்டிருக்கிறது. இத்தனை குறுகிய கிணறல்ல இது. இங்கு வரும் பாதை கூட இத்தனை குறுகியது அல்ல. ஒரு பேருந்து போகும் அளவுக்கு இருந்த பாதை இப்போது ஒரு ஜீப் போகும் அளவுக்குத்தான் இருக்கிறது.

    இந்தக் கிணறு.
    நான் மெல்ல அருகினில் செல்கிறேன். என் அலைபேசி கொண்டு புகைப்படம் எடுக்கிறேன். ஆள் அரவமற்ற காட்டுக்குள் ஒரு பூதமாக மறைந்து இருக்கிறது. இனம் புரியாத பயத்தை எனக்குள் தெளிக்கிறது. உற்று நோக்குகிறேன். இதே கிணறுதான். 1984 டிசம்பர் 28 நான் கொய்யா மரத்தில் இருந்து விழுந்து தொங்கிய பின், அணிலை பாம்பென்று சொல்லி கத்திய பின், ஒரு, ஒரு மணி நேரம் கழித்து இந்த கிணற்றுக்குள் விழுந்து இறந்து போனதாக, தண்ணீர் சொட்ட சொட்ட ஆத்தாவைத் தூக்கி கொண்டு வந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆத்தாவை படுக்க வைத்து அனைவரும் கத்திக் கொண்டும் கதறிக் கொண்டும் இருந்தார்கள். நான் எப்போதும் போல மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆத்தா வாங்கிய கடைசி மிச்சர் அது. இப்போது அழ வேண்டும் போல இருந்தது. கொலைக்கார கிணறு உயிரைக் கொண்டு விட்டு ஒன்றுமே தெரியாதது போல, வாய் மூடி கிடக்கிறது சனியன். ஒரு கல்லை எடுத்து வேகமாக வீசினேன். ரெம்ப நேரம் கழித்து குபுக்கென்று ஒரு அமிழும் சத்தம் ஆழ் மனதில் இரைச்சலாக குபீர் என கேட்டது. அது எனக்கு மட்டுமே எதிரொலிக்கும் மிக நீண்ட சத்தமாக இருக்க போகிறது, இருந்தது.

    என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. ஒரு புகைப்படம் போல அமர்ந்திருந்தேன். ஒரு தீர்க்கத்தை கலைத்துப் போடும் வேஷங்கள் நிறைந்த இடமாக அது இருந்தது. தேடலின் நிசப்தங்கள் யுத்தமற்ற போர்க்களத்தின் ஒரு மூலையில் படிந்து போன ரத்தக் கரையை சுரண்டி சுரண்டி எனக்கு பூசிக் கொள்ளும், பாரா ஆன்மாவை கசியச் செய்யும் இடமாக அது இருந்தது. இறப்பின் மணம் அங்கு வீசிக் கொண்டிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. என்னிலும் அந்த கிணற்றை சுற்றிலும். எனக்கு ஆத்தாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. தேடிப் பார்த்தேன் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். மெல்ல கூப்பிட்டுப் பார்த்தேன் எனக்கே அச்சமாக இருந்தது.

    அந்த ஆத்தா என்கிற வார்த்தை இத்தனை வருடங்களில் எனக்கு எழுத்துப் பிழையை நாவில் நீட்டியது. முதல் முதல் பேசி பழகும் நாவைப் போல மடங்க மறுத்து. பயந்து ரத்தம் பீய்ச்சும் வலியோடு வெளி வந்தது.

    ஆ….த்தா….

    இப்போது ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில், எடுத்த புகைப்படத்தை அலைபேசியில் பார்க்கத் தொடங்கினேன்.

    ஒவ்வொரு புகைப்படமாக பார்த்தேன். திக் என்று இதயம் ஒரு நொடி நின்றது. புகைப்படத்தில் இருந்து எடுத்த நடுங்கும் கண்களை மீண்டும் கிணற்றில் வீசினேன். அதும் வெறும் கிணறாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் புகைப்படத்தைப் பார்த்தேன். இனி அங்கு நிற்பது சரி இல்லை என்று உள்ளே என்னைத் தூண்டிய உயிர் பயத்தில் வேக வேகமாக வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தேன். என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை என் உடல் நடுங்கியது. எனை சுற்றி பனி மூட்டம் என்னை விரட்டுவது போலத் தோன்றியது. வேகமாக என் நண்பனுக்கு அலைபேசியில் அழைத்தேன் நடந்து கொண்டே …

    “சொல்லு மச்சான்”

    “மாப்ள, கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நம்ம ராஜாவும் வேம்புவும். எங்க போனாங்க.”

    “அவுங்கதான் ஓடி போய்ட்டாங்களேடா, எங்க இருக்காங்கனு தெரியல. சிக்குனாங்கனா கொன்னேபுடுவாங்க. அவுங்கவுங்க வீட்டுல.”

    “டேய் மச்சா, ஏற்கனவே அவுங்கள கொன்னுதான் போட்ருக்காங்கடா. எங்க ஆத்தா செத்த கிணத்துக்குள்ளதான் அவுங்க பாடி இருக்குது.”

    அலைபேசியில் விழுந்திருந்த புகைப்படத்தில் வேம்புவும், ராஜாவும் கிணற்று மேட்டில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அலைபேசியை சட்டென மூடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நடையைக் கூட்டினேன்.

    Share
  • திருட்டுப் பட்டம்!

    ரமணி 

    சைதாப்பேட்டை டாட்‍ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள அது ஒரு தூண்டுதலாக அமைந்தது.

    நிகழ்ச்சி நடந்த மறுவாரம் ஒரு நாள் மாலை கைலாசத்துடன் தொலைபேசினேன். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒலித்த குரலில் என்னை ஒருமையில் ’டா போட்டு’ அழைத்து அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சாப்பிட வரச்சொன்னான்.

    ஞாயிற்றுக் கிழமை சென்னை கிழக்கு தாம்பரம் சாலையில் சேலையூர் அருகில் கைலாசம் வீட்டைக் கண்டுபிடித்து அழைப்பு மணியை ஒலித்தேன். ஓடி வந்தான். “ரங்கா, உன்னைப் பார்த்து முப்பது வருஷமாச்சுடா!” என்றான். “இப்ப நீ என் பேச்சு ’பழம்’ தானே?”

    “கொஞ்ச நாளாவே நான் உன்கூட ’பழம்’தான்”, என்றேன். “அதனாலதான் உன் டெலிஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அன்னிக்கு உன்னோட பேசினேன். நீ தமிழ்க் கதையுலக வாசகர்களுக்கு நல்லாப் பரிச்சயமான ஒரு எழுத்தாளன் ஆச்சே! நானும் உன் வாசகன். ’இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்’ புத்தகத்தில உன் சுயவிவரம், தொலைபேசி எண், விலாசம் பார்த்தேன். உன் படைப்புகளைச் சிலாகித்து அந்த புத்தகத்தில ரெண்டு ரெவ்யூ வந்திருந்ததே!”

    “ஆமாம், நீ என்னைத் தொலைபேசில தொடர்புகொண்டப்ப நம்பவே முடியலைடா! இப்ப நேர்ல பாக்கறப்ப, உன் குரல் அப்படியே இருக்கு. உன் உருவம்தான் முழுக்க மாறிடுத்து!”

    “ஆனால் உன் குரல், உருவம் ரெண்டும் ஸ்கூல்ல பார்த்த மாதிரியே இன்னமும் இருப்பது ஆச்சரியம்!” என்றேன்.

    “அப்படியா! அப்பா போனதும் கண்ணாடி போட்டுக்கிட்டேன். கல்லூரி நாள்லேர்ந்து வெச்சிருந்த மீசையை அம்மா போனதும் எடுத்துட்டேன்.”

    “உங்கப்பா அம்மா ரெண்டு பேருமே கதை எழுதுவான்னு நீ என்கிட்ட ஸ்கூல் படிக்கும்போதே சொன்னே இல்ல?”

    “ஞாபகம் வெச்சிருக்கயே! வா, கூடத்து ஷோகேஸ்ல அவங்க படம் இருக்கு, பாரு”, என்று கூட்டிச்சென்று அவன் பெற்றோர் கல்யாண போட்டோவைக் காட்டினான். “அப்பா சின்ன வயசிலயே போய்ட்டதால ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி இந்த ஒரு படம்தான் கிடைச்சுது.”

    “ஷோகேஸ்ல மற்ற பொருட்கள்லாம் பாரு. இதோ வரேன். விமலா!” என்று விளித்தபடியே விலகி சமையல்கட்டை நோக்கிச் சென்றான்.

    கைலாசத்தின் பெற்றோர் போட்டோவில் அம்மா பக்கம் ஓர் ஊதாநிற ரைட்டர் ஊற்றுப் பேனாவும், அப்பா பக்கம் ஒரு கருப்புநிற பைலட் பேனாவும் லாமினேட் செய்யப்பட்ட போட்டோ சட்டத்துடன் இணைந்திருந்தன. அந்த பேனாக்களைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்தது.

    “இவள் விமலா, என் இல்லத்தரசி. சீனு எங்களுக்கு ஒரே பிள்ளை. எட்டாவது படிக்கறான். இப்ப கோடை விடுமுறைல திருச்சிக்குப் போயிருக்கான், அவன் சித்தி வீட்டுக்கு.”

    “வாங்கோ!” என்றாள் விமலா. “நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல காய் விட்டுண்டதுக்கப்பறம் முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் சந்திக்கறது மஹா ஆச்சரியம்!”

    சிரித்தேன். “என் பிள்ளை மாதுவும் எட்டாவதுதான் படிக்கறான். அவன் தங்கை கமலா நாலாம் கிளாஸ். என் மனைவி பெயர் மாலினி, ஹோம்மேக்கர். கைலாசம், உன்னை மாதிரியே நானும் அரசு வங்கில கிளார்க் வேலை பார்க்கிறேன். வீடு நங்கநல்லூர்ல இருக்கு.”

    நான் வாங்கியிருந்த பழங்கள் பையை விமலாவிடம் தந்தேன். “கைலாசம், உனக்கு ஒரு சின்ன கிஃப்ட்” என்று சொல்லி அவனிடம் ஒரு சின்ன பார்சலைத் தந்தேன்.

    உடனே பிரித்துப் பார்த்து வியந்தான். “எதுக்குடா எனக்கு விலை உயர்ந்த பார்க்கர் பேனா?”

    “நன்கு அறியப்பட்ட எழுத்தாளனுக்கு ஓர் வாசக நண்பனின் எளிய பரிசு.”

    “தாங்க்யு ரங்கா” என்றான். “வா, மணி பன்னிரண்டாகப் போறது. சாப்பிட்டபடி பேசுவோம்.”

    *** *** ***

    சாப்பாட்டு மேசையில் கைலாசம் நாங்கள் பள்ளியில் காய் விட்டுக்கொண்டது பற்றிக் கலகலப்பாக மனைவியிடம் சொன்னான். “எட்டாம் வகுப்பு முழுக்க நாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் விமலா! அந்த வகுப்பு முழுவருடத் தேர்வில் இவன் என்னைவிடக் கணக்கிலும் ஆங்கிலத்திலும் அதிக மார்க். ஆனால் ரெண்டு பேரும் ஒரே டோட்டல் மார்க்….”

    “அறுநூறுக்கு நானூத்தி எண்பது” என்றேன். “உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனால் மற்ற தேர்வுகள்ல நீ என்னைவிட ஒவ்வொரு பாடத்லயும் அதிக மார்க். அதனால கடைசிப் பரீட்சைக்கு நான் விழுந்து விழுந்து படிச்சேன்.”

    “ஒன்பதாம் வகுப்பு ஆரம்பிச்சு மூணு மாசத்தில இவன் திடீர்னு ஒரு நாள் ’கைலாசம், இந்த க்ஷணத்லேர்ந்து நான் உன் பேச்சு காய். என்னோட பேச முயற்சி பண்ணாதே, சொல்லிட்டேன்’, அப்படீன்னான். ஏண்டான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாமப் போயிட்டான். அதுக்கப்புறம் நாங்க கடைசிவரை பேசிக்கவே இல்லை!”

    “ஆனால் மத்த பசங்க ஒரு பத்துநாள் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கப் படாத பாடு பட்டாங்க, இல்லயா?” என்றேன்.

    “ஆமாமாம். நாங்க பேசிக்காட்ட கூட முன்ன இருந்த மாதிரி ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்திலதான் உக்காரணும்னு கிளாஸ் வாத்தியார் சொல்லிட்டார். அது மஹா அவஸ்தையா இருந்தது. பசங்க எங்க ரெண்டு பேர் செருப்பையும் ஒளிச்சு வெச்சுத் தேட வெச்சாங்க…”

    “ஒரு நாள் ஒரு செருப்பை மட்டும் ரெண்டுபேர்க்கும் மாத்தி வெச்சு அப்படியே போட்டுண்டு கொஞ்ச தூரம் போய்ட்டோம்”, என்றேன். “அப்புறம் கண்டுபிடிச்சு, தூரத்லேர்ந்து கடுப்பாப் பார்த்து ஒருத்தர் மேல ஒருத்தர் மாறின செருப்பை எறிஞ்சு மண்ணை வீசி எறிஞ்சி மௌனமாத் திட்டிக்கிட்டோம்!”

    “டெய்லி சாயங்காலம் கடைசி பீரியட் விளையாட்டு. அப்போ கால்பந்து விளையாடும் போது பசங்க எங்களை ஒருத்தர் மேல ஒருத்தர் விழனும்னு பிடிச்சுத் தள்ளுவாங்க!”

    “ராஜேந்திரன்னு எங்க ரெண்டு பேர்க்கும் ஒரு காமன் ஃப்ரெண்டு இருந்தான்”, என்றேன். “எட்டாம் வகுப்பு பரீட்சை, டெஸ்ட்கள்ல நாங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி முதல் ரெண்டு ரேங்க் வாங்கின போது ராஜேந்திரன் மூணாவது ரேங்க் வாங்கினான். அவன் எங்களைச் சேர்த்துவைக்க ரொம்பவும் முயற்சி பண்ணி முடியாம ஒரு நாள் எங்களுக்கு எதிர்லயே அழுதுட்டான். அப்பவும் நாங்க சேரக்கூடாதுங்கற திமிர்ல இருந்தோம்!”

    “ஏண்டா ரங்கா திடீர்னு என் பேச்சு காய் விட்டே?”

    “என்னத்தச் சொல்லறது? இப்ப நினைச்சுப் பார்த்தா வேடிக்கையாவும் வேதனையாவும் இருக்கு”, என்றேன். “ஒன்பதாம் வகுப்பு முதல் மூணு மாசத்ல நாம மொத்தம் பத்து தேர்வுகள் எழுதியிருப்போமா? அதுல எல்லாத்லயும் நீ முதல் ரேங்க் வாங்கினதை என்னால சகிச்சுக்க முடியலைங்கறது முதல் காரணம். அப்புறம் எல்லா வாத்தியாரும் உன்கிட்ட அன்பா பழகின மாதிரி என்கிட்ட பழகலைங்கறது ரெண்டாவது காரணம். அப்புறம் எட்டாம் வகுப்பு படிச்சப்ப பள்ளி ஆண்டுவிழாவுல கட்டுரை, கவிதை, பேச்சு மூணு போட்டிலயும் நீ முதல் பரிசு வாங்கின இல்லையா? பேச்சுப்போட்டியின் தரத்தை வெச்சுப் பார்த்தா நான்தான் முதல்பரிசு வாங்கியிருக்கணும். ஆனால் நீ எடுத்த எடுப்பிலேயே கலிங்கத்துப் பரணியோட ’எடுமெடு மெடுவென வெடுத்தவோர்’ பாட்ல ஆரம்பிச்சு ஆடியன்ஸ், ஜட்ஜை மயக்கி முதல் பரிசு வாங்கினது எனக்கு மஹா எரிச்சல்!”

    “அப்படியா சேதி! நீ முதல்ல காய் விட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அப்புறம் எனக்கும் உன்னமாதிரியே விரோதமும் வெறுப்பும் உண்டாச்சு.”

    கைகள் வாய்பேச்சை நடுநடுவே மீற விமலா சமைத்திருந்த அறுசுவை உணவை ஒருகை பார்த்துப் பாராட்டினேன். சாப்பிட்டு எழுந்ததும் மூவரும் ஹாலில் சோஃபாவில் வசதியாக அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தோம்.

    “திடீர்னு இவரோட காய்விட்ட மாதிரியே முப்பது வருஷம் கழிச்சு, திடீர்னு பழம்விடத் தோணித்தாக்கும்! அது எப்படி?” என்றாள் விமலா.

    “ஆமாண்டா, நேத்து வரைக்கும் ரெண்டு பேரும் ஆள் அட்ரஸ் தெரியாம இருந்திட்டு எப்படிடா திடீர்னு என்கூட நம்ம பழைய நட்பைப் புதுசு பண்ணிக்கணும்னு உனக்குத் தோணித்து? யு ஆர் கிரேட் ரங்கா!”

    “அதை நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைடா”, என்றேன். “ஆனால் சொல்லித்தான் ஆகணும்; அப்பதான் என் மனசு ஆறும்.”

    “என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!”

    “சொல்றேண்டா கழுதை!”

    அந்த எருமை மாடும் கழுதையும் எங்கள் நட்பு பழையபடி ராசியாகி விட்டது என்று காட்டியது. ஆனாலும் எனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி குறையவில்லை.

    “பதினஞ்சு நாள் முன்ன எம்பிள்ளை மாது அவன் பர்த்டேக்கு நான் வாங்கித்தந்த காஸ்ட்லி வில்சன் பேனாவத் தொலச்சிட்டான். எனக்கு வந்த கோவத்துல அவனை அடி பின்னிட்டேன்! அப்புறம் மறுநாள் அவன் பேனா கெடச்சதும் ரொம்ப ஃபீல் பண்ணினேன். மாதுவைப் பிடிக்காத இவன் கிளாஸ் பையன் ஒருத்தன் இவன் புதுப் பேனாவை எடுத்து இவன் குளோஸ் ஃப்ரெண்ட், பக்கத்து சீட் ராகவன் ஸ்கூல் பையில போட்டானாம். அதை இன்னொரு பையன் மறைஞ்சு இருந்து பார்த்து மாதுட்ட சொன்னானாம். இவன் பொய்க்கோவத்தோட ’ஏண்டா என் புதுப் பேனாவைத் திருடினே?’ன்னு ராகவன்ட்ட கேட்டப்ப அவன், ’சத்தியமா நான் திருடலைடா! நமக்குள்ள சண்டை மூட்டிவிட யாரோ என் பைல போட்டிருக்கணும்டா, ஐ ஸ்வேர்’ அப்படின்னு சொல்ல, இவன் உண்மையைச் சொல்லி ராகவனைக் கட்டிண்டு ’நமக்குள்ள இருக்கற நட்பை யாரும் குலைக்க முடியாதுடா!’ அப்படீன்னு கிளாஸ்ல எல்லோருக்கும் கேக்கற மாதிரி உரக்கச் சொன்னானாம்…”

    கைலாசம் என்னை மேலே பேச விடவில்லை.

    “ரங்கா, இதே மாதிரி நான் ஒன்பதாவது படிச்சபோது ஒரு நிகழ்ச்சி நடந்ததுடா! நாம ரெண்டு பேரும் அப்ப ஒருத்தரோட ஒருத்தர் பேசாம இருந்தோம். உன் பையன் பேனாவைத் தொலைச்சான். ஆனால் என் பையில யாரோ ரெண்டு பேனாவைப் போட்ட கதையை உனக்கு இப்ப விளக்கிச் சொல்லறேன் கேளு”, என்று தொடர்ந்தான்…

    *** *** ***

    கைலாசம் சொன்னது:

    அன்று மாலை ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் அம்மா கொடுத்து அனுப்பிய சாக்லெட் இரண்டையும் சாப்பிட மறந்தது ஞாபகம் வந்தது. உடனே அவசரமாக என் ஸ்கூல் பையைத் தலைகீழாகக் கவிழ்த்துத் தரையில் கொட்டித் தேடினேன். அன்று விடுமுறையில் இருந்த என் தந்தை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சமையல் கட்டில் எனக்காகப் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

    “ஏண்டா உன் பையிலேர்ந்து ரெண்டு பேனா விழறதே!” என்று என் தந்தை சொன்னபோதுதான் கவனித்து எடுத்துப் பார்த்தேன். ஊதா நிறத்தில் ஒரு ரைட்டர் பேனாவும், கறுப்பு நிறத்தில் ஒரு பைலட் பேனாவுமாக இரண்டு புதிய ஊற்றுப் பேனாக்கள்.

    “உன்னோடது மெரூண்கலர் ரைட்டர் பேனா தானே? அதுவும் போன வருஷம் வாங்கினது. ஏது இந்த ரெண்டு பேனா?” என்றார் என் தந்தை.

    “தெரியலைப்பா!” என்று நான் சொன்னதை அவர் நம்பவில்லை.

    “யாரோட பேனாவோ? ரெண்டும் எப்படீடா உனக்குத் தெரியாம உன் பைக்குள்ள வந்தது?” தந்தையின் குரலில் சூடு ஏறியது.

    “நெஜமா எனக்குத் தெரியலைப்பா!”

    “பொய் சொல்லாதே! திருடினயா? சாயங்காலம் கடைசி பீரியட்ல பசங்க வெளையாடப் போனப்ப கிளாஸ்ல டெஸ்க் மேல இருந்த இந்தப் பேனா உன் கண்ணுல பட்டது. ஏதோ ஓர் ஆசைல நீ சத்தம் போடாம எடுத்துப் பையில போட்டுண்டு வந்துட்டே, அப்படித்தானே?”

    “ஐயோ அதெல்லாம் இல்லைப்பா! நான் திருடலை!”

    “அப்புறம் எப்படிடா பேனா ரெண்டும் உன் பைக்கு வந்தது?”

    “அதுதான் எனக்குத் தெரியலைப்பா!”

    என் அம்மா கையில் பால் டம்ளர்-டபராவுடன் வந்தவள், “கைலாசம், உண்மையைச் சொன்னா அப்பா புரிஞ்சுப்பார். அப்பாக்குக் கோவம் வந்தா உன்னால தாங்க முடியாது!”

    “என்னம்மா நீயும் இப்படிக் கேக்கறே? நான் திருடலைம்மா”, என்றேன். “பேனா எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியலையே அம்மா!”

    பொங்கிவரும் பாலாக என் தந்தைக்குக் கோபம் தலைக்கேறி அவர் கண்களில் வழிந்தது. பளார் என்று என் கன்னத்தில் அவர் அறைந்தபோது எனக்குத் தலை சுற்றியது.

    “திருடவும் செஞ்சிட்டுப் பொய் வேற சொல்லறயாடா, ராஸ்கல்!” என் முதுகில் அடிகள் சரமாரியாக விழ நான் தடுமாறிச் சாய்ந்தேன். ஆனாலும் நான் அழவில்லை.

    “கைலாசம், பொய் பேசினா ஸ்வாமி கண்ணக் குத்திடும்னு உனக்குச் சொல்லியிருக்கேன், இல்லையா?” என்றாள் அம்மா. “எப்படி பேனாவைத் திருடினதா அப்பா உன்னை அடிக்கறாரோ அப்படித்தானே பேனாவைத் தொலச்சதுக்கு அந்த ரெண்டு பையன்களும் அவா அப்பாட்ட அடி வாங்குவா!”

    அடிகள் போதும் என்று நினைத்தாரோ என்னவோ, அப்பா என்னைத் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய் சமையல் கட்டில் இருந்த ஸ்வாமி அலமாரியின் முன் தள்ளினார். “போடா, போய் ஸ்வாமி முன்னால நின்னுண்டு நீ தப்புப் பண்ணலைன்னு சொல்லு.”

    “கைலாசம், என்னால இந்த அவமானத்தைத் தாங்க முடியலைடா. நீயா இப்படி!”, என்று அழுத அம்மா, என்று தன் புடவைத் தலைப்பை எரிந்துகொண்டிருந்த ஸ்டவ் அடுப்பின் ஜுவாலை அருகில் வைத்துக்கொண்டு, “இதுக்கு உயிரை விட்டுடலாம்”, என்றாள்.

    “பார்றா, அம்மா பத்திக்கப் போறா. உண்மையைச் சொல்லுடா!” என்று தந்தை இரைந்தார்.

    “ஐயோ கடவுளே! நான் உண்மையைத் தானே சொல்றேன்”, என்று நான் கண்ணீருடன் சத்தம் போட்டுக் கதறினேன். “ரெண்டு பேனாவும் எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியாது. அப்படி நான் திருடிட்டுப் பொய் சொல்றதா நெனைச்சா ஸ்வாமி என் கண்ணைக் குத்தட்டும், ஏத்துக்கறேன்.”

    முதன்முதலாக அவர்களுக்கு என் மேல், நான் சொல்வதில், நம்பிக்கை வந்தது. கோபத்துடன் முட்டவந்த மாடு மனிதன் கீழே விழுந்ததும் விலகிச் சொல்வதுபோல் அப்பாவின் கோபம் தணிந்து அவர் அப்பால் சென்றார். அம்மா என்னை அணைத்துக் கொண்டாள், அப்பாவின் விரல்கள் பதிந்த என் கன்னத்தை வருடியபடி.

    “ரெண்டு பேனாவும் எப்படி என் பைல வந்ததுன்னு புதிரா இருக்கும்மா!” என்று கேவினேன். “எனக்கு ஒண்ணுமே புரியலை. நாளைக்கு பேனாவைக் கிளாஸ்ல காட்டி யாரோடதுன்னு கேட்டு திருப்பிக் கொடுத்துடறேன்.”

    “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்”, என்றார் அப்பா. “அப்படிப் பண்ணினா நீதான் திருடினேன்னு நிரூபணம் ஆய்டும். கொண்டா அந்த ரெண்டு பேனாவையும்” என்று கீழே இருந்தவற்றைப் பறித்து வைத்துக்கொண்டார்.

    *** *** ***

    “அதுக்கப்புறம் அம்மா அந்த ஊதா நிற ரைட்டர் பேனாவையும் அப்பா கறுப்பு நிற பைலட் பேனாவையும் கதை எழுதப் பயன்படுத்தினாங்க”, என்றான் கைலாசம், மோட்டுவளை இல்லாத வீட்டுக் கூரையைப் பார்த்தவாறே. “அந்த ரெண்டு பேனாவும்தான் அவா புகைப்படத்தோட இணைச்சு ஷோகேஸ்ல வெச்சிருக்கேன், பார்த்தே இல்லயா?”

    “இன்னிவரைக்கும் ரங்கா, சத்தியமா அந்தப் பேனா ரெண்டும் எப்படி என் ஸ்கூல் பைக்குள்ள வந்ததுதுன்னு எனக்குத் தெரியாது”, என்ற கைலாசம், “யாராவது அதைப் பைக்குள்ள போட்டங்களான்னும் தெரியாது”, என்றபடி என்பக்கம் திரும்பினான்.

    என் கண்களில் இருந்து மாலையாகக் கண்ணீர் பெருகுவது கண்டு திடுக்கிட்டான். “நீ ஏண்டா அழறே?” என்றான்.

    பத்திரிகை படித்தவாறே கேட்டுக்கொண்டிருந்த விமலாவும் என்னைப் பார்த்தாள்.

    “ஒரு எழுத்தாளன் என்கிற முறையில இந்த சோக நிகழ்ச்சியை கிராஃபிக்கா விவரிச்சேன். நீ ஏன் அழறே?”

    “உன்னை உங்கப்பா அடிச்சதெல்லாம் எனக்குத் தெரியும் கைலாசம்! நீ விவரமா அவன்ட்ட சொன்னதை ராஜேந்திரன் என்கிட்ட சொன்னான்.”

    “அதுக்கு இப்ப என்ன கண்ணீர்! எனக்கே அழுகை வரல!” என்றான் கைலாசம்.

    “கைலாசம், உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லத்தான் நான் இன்னைக்கு இங்க வந்தேன்”, என்றேன். “இத்தனை வருஷமா என் மனசில புகையேறிக் கிடந்த உண்மை. பேனாவைப் பறிகொடுத்த என் பிள்ளையை அன்னிக்கு அடிச்சு மறுநாள் வருத்தப்பட்டேன் இல்லையா? அன்னிக்குதான் எனக்கு உன்னைக் கண்டுபிடிச்சுப் பேசி என் மனசில இருக்கற உண்மையைச் சொல்லணும்னு தோணிச்சு.”

    “என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!”

    “சொல்றேன் கைலாசம். அதுக்கப்பறமும் நான் உன் நண்பனா இருக்க எனக்கு அருகதை உண்டான்னு நீ தீர்மானிச்சுக்க” என்றேன்.

    “சொல்லித் தொலையேன்!” என்றான் கைலாசம் பொறுமை இழந்து.

    “அன்னைக்கு அந்த ரெண்டு பேனாவையும் உன் ஸ்கூல் பையில் போட்டது நான்தாண்டா கைலாசம்!”

    *** *** ***

    Share
  • ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள்

    நிர்மலா ராகவன்

    அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன்.

    “என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க?” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து.

    “அதான் ரேடியோக்காரங்க ஏத்துக்கிட்டு, பணமும் குடுக்கறாங்கல்ல? அப்புறம் என்ன? சும்மா தொணதொணத்துக்கிட்டு..!”
    கணவர் களைப்புடன் வீடு திரும்பியவுடன் தான் சுயநலத்துடன் பேச்சுக்கொடுத்தது தவறுதான் என்று, உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே போனாள் வசந்தா.

    சிறிது நேரத்தில் அவள் கொண்டுவைத்த தேத்தண்ணீரை வெறித்துப் பார்த்தார் நடராஜன். அவர் உள்ளம் அதைவிட சூடாக இருந்தது.

    மனைவி நாடகம் எழுத, அவளுடைய கற்பனையில் உருவான ஐந்து பாத்திரங்களில் தானும் ஒரு சிறிய அங்கமாக நடித்ததுகுறித்து அவமானம் ஏற்பட்டது.

    அவளுடைய பெயர்மட்டும் சற்று உரக்க அறிவிக்கப்பட்டதோ?

    `என்னங்க, நடராஜன்! பேருக்கு ஏத்தமாதிரி, சக்திக்கு அடங்கின சிவனா ஆயிட்டீங்களே! இனிமே நீங்கதான் பேரை மாத்தி வெச்சுக்கணும் — மிஸ்டர் வசந்தா அப்படின்னு!’ வேடிக்கையாகச் சொல்வதுபோல், சகநடிகர்கள் உசுப்பேற்றினார்கள்.

    அந்தக் கைலாய பரமசிவன் தன் உடலில் பாதியை பார்வதியுடன் பகிர்ந்துகொண்டு, அவளுடன் ஒன்றாக இயங்கினாராம். யாரோ புராண காலத்துக்குப் போய் பார்த்தமாதிரிதான்!

    அட, அந்தக் காலத்திற்கு அது சரியாக இருந்திருக்கலாமோ, என்னவோ! இப்போதோ, ஆணுக்கு நிகராக உரிமை கொண்டாடும் வசந்தா போன்ற பெண்களால்தான் குடும்ப நிம்மதியே போய்விடுகிறது. நண்பர்களுக்குத்தான் எத்தனை கேலிப்பொருளாக ஆகிவிட்டோம்!

    கோலாலம்பூரில், அங்காசாபுரி (ANGKASAPURI) என்ற பெரிய வளாகத்துள் எதிரெதிரே இருந்தன மலேசிய தொலைகாட்சி, வானொலி நிலையங்கள். நாடகத்தில் நடித்து முடித்ததும், எப்போதும்போல் காண்டீனில் அமர்ந்து, அரட்டையே முக்கிய குறிக்கோளாய், ஆனால் மீ பிரட்டலை (நூடுல்ஸ்) சாப்பிடுவதுபோல் பாவனை செய்ய இன்று அவர் மனம் ஒப்பவில்லை. பிறரது தலையை உருட்டும்போது இருக்கும் சுவாரசியம், `நான் அவர்களைவிட மேலானவன்!’ என்று அப்போது எழும் கர்வம், தானே பிறரது வாய்க்கு அவலாக மாறும்போது கிடைப்பதில்லையே!

    அவர்களிடமிருந்து கத்தரித்துக்கொண்டு வந்தாலும், தன்னையும், வசந்தாவையும்பற்றித்தான் பேசுவார்கள் என்று நன்றாகவே தெரிந்திருந்தது நடராஜனுக்கு.

    என்ன பேசுவார்கள்?
    `இவரும்தான் முப்பது வருஷமா `நடிகன்’னு பேரை வெச்சுக்கிட்டு காலந்தள்ளறாரு! பளபளப்பான சட்டையும், அதிலே எக்கச்சக்கமா செண்டும் போட்டுக்கிட்டு, நாலுபேர் கூடற எல்லா எடத்துக்கும் தப்பாம வந்து, ஏதாவது சண்டை இழுத்து, அதனாலேயே எல்லாருக்கும் தன்னைத் தெரியறமாதிரி செய்துக்கிட்டிருந்தா ஆச்சா?’ என்று பழித்துவிட்டு, அதே மூச்சில், `அதுவே, அந்தம்மா இருக்காங்களே! குடத்துக்குள்ளே இருக்கிற விளக்கு!’ என்று வசந்தாவை எங்கோ கொண்டு வைப்பார்கள்.

    அவர்கள் பேசுவதை இவர் ஒன்றும் கற்பனை செய்து பார்க்கவேண்டி இருக்கவில்லை. சாடைமாடையாக, இவர் எதிரிலேயே பல முறை பேசி வந்ததுதானே!

    வசந்தா முதன்முதலாக எழுத ஆரம்பித்தபோது, `இவள் என்ன பெரிசா கிழிச்சுடப்போறா!’ என்று தான் அசிரத்தையாக இருந்தது தப்பு என்று இப்போது, காலங்கடந்து யோசனை வந்தது.

    அப்போதெல்லாம் அவரிடமே பிறர் அவளைப் பாராட்டிப் பேசியபோது, பெருமையாகத்தான் இருந்தது. நண்பர்களுடையதைவிட விலை அதிகமான விளையாட்டுச் சாமான் தன்னிடம் இருப்பதற்காகப் பெருமை கொள்ளும் சிறுவனது மனநிலைக்கு ஆளானார். மனைவி தன் உடைமை. ஆகவே, தான் அவளைவிட மேலானவன் என்பதுபோல் நடந்துகொண்டார். அதுவும் பொறுக்கவில்லை பிறருக்கு. பலவாறாகத் தூபம் போட்டார்கள்.

    `உன் மனைவி பேரும் புகழுமாக இருந்தால், அதில் அவளுக்குத்தான் பெருமை. உனக்கென்ன வந்தது?’
    `நீ இப்படியே அவளை வளரவிட்டால், நாளைக்கு உன்னையே மதிக்கமாட்டாள், பார்!’
    நடராஜனுக்குப் பயம் வந்தது.

    இப்போது இவள் எழுதி என்ன ஆகவேண்டும்? அலுவலக உத்தியோகத்துடன், அவ்வப்போது மேடை, வானொலியில் நடிப்பதாலும் தனக்குக் கிடைப்பதே போதாது?

    அட, பணத்தைப் பெரிதாக எண்ணியா தான் நடிக்கப் போனோம்?

    எல்லாரையும்போல, `கலைக்குத் தொண்டு செய்கிறேன்!’ என்று வெளியில் மிதப்பாகச் சொல்லிக்கொண்டாலும், செய்யும் தொண்டு தனக்கேதான்; தன் பெயர் பிரபலமாக வேண்டும் என்ற சுயநலத்தால்தான் என்று அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. இதில் என்ன கேவலமாம்? எல்லாம் வல்ல இறைவனே புகழ்ச்சிக்கு அடிமை! கடவுளைப் புகழ்ந்து வேண்டுபவருக்குத்தான் நல்லது நடக்கிறது. அவனுடைய படைப்பான தான் மட்டும் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும் என்று தன்னைத்தானே சமாதானமும் செய்துகொண்டார்.

    அபூர்வமாக, எவளாவது, `நான் உங்கள் விசிறி!’ என்று இளிச்சவாய்த்தனமாக சொல்லும்போது, என்னவோ கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டமாதிரி பிரமை ஏற்படும் நடராஜனுக்கு. மெனக்கெட்டு வருவித்துக்கொண்ட பெரியமனிதத்தனத்துடன், தலையைச் சற்றே அண்ணாந்து, எங்கோ பார்த்தபடி ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.

    வீட்டுக்கு வந்ததும், வாய் ஓயாமல், தன்னைப்பற்றி தன் ரசிகைகள் என்ன நினைக்கிறார்கள், என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒன்றைப் பத்தாக்கி மனைவியிடம் கூறுவார். அவர் எது சொன்னாலும், புன்னகையுடன் கேட்டுக்கொள்வாள் வசந்தா.

    இப்போதும், நண்பர்கள் தன்னை ஓயாது மட்டந்தட்டுவதைச் சொன்னார், மிகுந்த ஆற்றாமையுடன் — `விழுந்துட்டேம்மா!’ என்று தாயிடம் வந்து அழும் குழந்தையைப்போல.

    “விட்டுத் தள்ளுங்க!” என்றாள் வசந்தா.

    “நானும் அதான் நினைச்சேன். அவங்க பெண்டாட்டி எல்லாம் ஒரே மக்கு. அதான் அவங்களுக்கு வயத்தெரிச்சல்!” என்றவர், “எனக்கு அதிர்ஷ்டம்! ஒன்னைமாதிரி புத்திசாலியான பெண்டாட்டி வாய்ச்சிருக்கு!”

    வசந்தாவுக்கும் பூரிப்பாக இருந்தது. இன்னும் நிறைய எழுதி, கணவனுடைய பெருமையை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள்.

    வேலை முடிந்து, அப்போதுதான் வீடு வந்திருந்தார் நடராஜன்.

    “பிளாஸ்கில் டீ வெச்சிருக்கேன்,” என்ற குரல் அசரீரியாகக் கேட்டது. தன்னைக் கவனிக்காது, தன்பாட்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவியின் போக்கு உறுத்தியது. கட்டின கணவனைவிட இவளுக்கு எழுதுவதால் கிடைக்கும் பெயரும், புகழும்தானே பெரிதாகிவிட்டன என்ற ஆத்திரத்துடன், “அந்த டீயை நீ வந்து எடுத்துக் குடுத்தா கொறைஞ்சு போயிடுவியோ?” என்று கத்தினார்.

    எதுவும் பேசாது, பேனாவை மூடி வைத்துவிட்டு எழுந்தாள் வசந்தா. அன்றையிலிருந்து அவர் பார்க்க அவள் எழுதவில்லை. ஆனால், அவளுடைய எழுத்துப் படிவங்கள் என்னமோ வெளியாகிக்கொண்டுதான் இருந்தன.

    நடராஜன் தன் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    “வீணா ஒடம்பைக் கெடுத்துக்காதேம்மா. இந்த தள்ளிப்போன நாட்டில, எழுதறதுக்கு ஒரு பயல் காசு குடுக்கறதில்ல. அப்புறம் எதுக்காக எழுதறது? கண்ணுக்குக் கீழே எப்படிக் குழி விழுந்துபோச்சு, பாரு!” என்றார், அன்பு சொட்டச் சொட்ட.
    அவருடைய கரிசனம் வசந்தாவுக்கு வேண்டியிருந்தது. ஆத்திரப்பட்டவர் இப்படி மாறி விட்டாரே!

    “பொழுது போகணுமே!” என்றாள் அப்பாவித்தனமாக.

    “சினிமா, கச்சேரின்னு நாலு எடத்துக்குப் போயிட்டு வா. இல்லே, ஓய்வா, வீட்டிலேயே வீடியோ பாரு!”
    சில நாட்கள் கணவர் சொன்னதுபோல் செய்துபார்த்தாள் வசந்தா. மனதில் ஏதோ வெறுமை. எதையோ இழந்ததுபோல் இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்து, மீண்டும் எழுத முயன்றாள்.

    இப்போது ஏதேதோ பயம் எழுந்தது. கணவர் வீடு திரும்புவதற்குள் எழுதி முடிக்கவேண்டும். அவருக்குச் சுடச்சுட தேநீர் போட்டால்தான் பிடிக்கும். இல்லையேல், மௌனமாக அமர்ந்து, பெருமூச்சாலேயே தான் கவனிப்பாரின்றி வாடுவதை உணர்த்துவார். அவளுக்கு அவரை அப்படிப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தான் தன் கடமையிலிருந்து தவறிவிட்டோம் என்ற உறுத்தல் உண்டாகும்.

    இப்போது ஒவ்வொரு வரி எழுதியபிறகும், கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். உருப்படியாக எதுவும் எழுத முடியவில்லை.

    இரவில் அவர் தூங்கியபின் எழுதினால், இந்தக் குழப்பங்கள் எழாது என்று தீர்மானித்தாள்.

    தூக்கக் கலக்கத்தில் கையை விசிறிப் போட்டபோதுதான் அவள் தன் பக்கத்தில் இல்லாததை உணர்ந்தார் நடராஜன். தூக்கம் கலையாமலேயே, அசைந்து அசைந்து அவளைத் தேடி வந்தார்.

    “இப்படித் தனியா படுக்கிறதுக்கா வசந்தி, ஒன்னைக் கட்டிக்கிட்டேன்?” என்று அவர் கேட்டது அவள் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    வசந்தாவுக்கு இப்போது குழப்பமில்லை. அவளுக்குப் புரிந்தது.

    `ஆண்’ என்பவன் உருவத்தில் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கும் குழந்தை! சிறு வயதில் அம்மாவின் ஏகபோக கவனிப்புக்காக தம்பி, தங்கைகளுடன் போட்டி போட்டதைப்போல, இப்போது மனைவியின் பரிபூரண கவனிப்பும், அக்கறையும் தன் ஒருத்தனுக்காகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் புத்தி அவனுக்கு!

    அத்துடன், ஒரு பெண் தனக்கு அடங்கி இருப்பதைத்தான் சராசரி ஆண் விரும்புகிறான். இது கற்காலத்திலிருந்து வரும் நியதி. கொடிய விலங்குகளைத் தனியே எதிர்க்கும் சக்தியின்றி, தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்தாளே, பெண்! அப்போது அவனுக்கு ஏற்பட்ட பெருமிதம் இன்றும் அவனுக்குத் தேவைப்படுகிறது.

    தன்னை நாடாது, தன்னை மீறி அவள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால், அடிப்படை ஆண்மையிலேயே சந்தேகம் தோன்ற, அந்த எண்ணத்தின் பயங்கரத்தில் அவள் வீழ்ச்சி காண வழி வகுக்கிறான்.

    இப்போதெல்லாம் யாராவது வசந்தாவை, “ஒங்க கதைகளைப் பாக்க முடியறதில்லியே?” என்று உள்ளூர மகிழ்ச்சியுடன், ஆனால் வார்த்தைகளில் கரிசனம் சொட்டக் கேட்கும்போது, `ஆமா! ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லை இதால! (100 ஸென் (காசு) = 1 மலேசிய ரிங்கிட்). நேரம்தான் தண்டம்,’ என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.

    வெளியே, “எங்கே! வீட்டு வேலையே சரியா இருக்கு. அதோட, எங்க வீட்டுக்காரர் கைப்பிள்ளை மாதிரி. அவருக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் நான்தான் பாத்துப் பாத்து செய்யணும்!” என்று பெருமை பேசுகிறாள்.

    தன்னைப்போன்று, `குடும்பமே பெண்ணாகப் பிறந்ததின் லட்சியம்’ என்ற கொள்கையுடைய மற்ற பெண்களுடன் சேர்ந்து வெளியே போகிறாள், அரட்டை அடிக்கிறாள். அவர்களைப்போல் இல்லாது, கணவரை மீறிக்கொண்டு புகழ்ப் பாதையில் பீடுநடை போடும் யாராவது அபூர்வமான பெண்ணைப்பற்றி மட்டந்தட்டிப் பேசுகையில், ‘நல்ல வேளை, எனக்குப் புத்தி வந்ததே!’ என்று திருப்திப்பட்டுக் கொள்கிறாள்.

    Share
  • நடுத்தெரு நாராயணன்

    — க. பாலசுப்ரமணியன்.

    “என்னங்க, ஆபீசுக்குக் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அபிராமி வாசலை நோக்கி வந்தாள்.

    “இதோ கிளம்பிண்டே இருக்கேன் அபிராமி” என்று பதிலளித்தவாறே “வண்டியைத் துடைச்சுக்கொண்டிருக்கிறேன். ரொம்ப அழுக்கா இருக்கு” தனது துடைக்கிற வேலையில் மும்முரமானார்.

    “கொஞ்சம் இருங்கோ. நான் வந்துண்டே இருக்கேன். அந்த நாராயணன் எங்கே இருக்கான்னு ஒரு தடவை பார்த்துக்கிறேன். சரியாய் நம்ம வெளியிலே கிளம்பும் போது எதிரிலே வருவான். அவனுக்கு விவஸ்தையே கிடையாது. மற்றவங்களை நோகடிச்சுப் பார்க்கிறதிலே தான் அவனுக்குச் சந்தோஷம்.” முணுமுணுத்துக்கொண்டே அபிராமி வாசலை நோக்கி வந்தாள்.

    அபிராமி எந்த நாராயணனைப் பற்றி சொல்லுகிறார்னு நினைக்கின்றீர்கள்? நடுத்தெரு நாராயணனைப் பற்றித் தான் ! அந்தப் பெயர் அவருக்கு எப்படி வந்தது? அவரைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுகின்றார்கள்?

    “நாராயணன் ரொம்ப நல்ல மனிதன். ஊர்ல எல்லாரும் அவரை ஒரு அப்பாவி என்று தான் சொல்வார்கள். வேலை ஒண்ணும் பார்த்ததாகத் தெரியவில்லை. அப்படியே திண்ணையில் உட்கார்ந்திருப்பார். ஏதாவது நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார் அவர் உண்டு. அவர் வேலையுண்டு . ஒரு வம்பு தும்புக்குப் போக மாட்டார்.” இது அநேகருடைய கருத்து..

    நாராயணன் கிட்டத்தட்ட ஐந்து அடி எட்டு அங்குலம் உயரம். அநேகமாக ஒரு ஐம்பது வயது இருக்கும் புண்ணாக்கு போன்ற ஒரு நிறம். எப்போதும் பளபளவென இருக்கும் உடலைப் பார்த்தால் அதிலிருந்து ஒரு கால் கிலோ நல்லெண்ணெய்யை வழித்து எடுக்கலாம் போல இருக்கும்.

    நாராயணன் ஒரு பக்திமான். கட்டை பிரம்மச்சாரி. காலையிலே குளித்ததும் திருநாமம் அணிந்து வேங்கடேச சுப்ரபாதமும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் சொல்லிவிட்டு பிரபந்தத்திலிருந்து சில பாடல்களைப் படித்துவிட்டு அதற்குப் பின் நியூஸ் பேப்பரை அலசுவார்.

    பொழுது போக வில்லையென்றால் தெருவிலே இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருப்பார்.. அதனால் தான் தெருவிலே உள்ள எல்லோருமாகச் சேர்ந்து நடுத்தெரு நாராயணன் என்ற காரணப் பெயரை அவருக்கு வைத்தனர்

    “என்ன நாராயணா, இன்றைய நடைப் பயணம் இன்னும் ஆரம்பமாக வில்லையா?” என்று கேட்டுக்கொண்டே பக்கத்து வீட்டு சாமிநாதப் பிள்ளை திண்ணையில் அவர் அருகில் வந்து உட்கார்ந்தார். இருவரும் திண்ணை நண்பர்கள்.

    “இல்லை இனிமேல்தான்… முதல்லே சொர்ண பவனில் ஒரு காப்பி சாப்பிட்டு அதுக்கப்பறம்தான் எல்லாம். வாங்க பிள்ளை காப்பி சாப்பிடப் போகலாம்.”

    நாராயணன் அவர் தம்பி வீட்டில்தான் தங்கியிருந்தார். அவர் தம்பிக்கு அரசாங்கத்தில் வேலை. தம்பி மனைவியும் அரசாங்கத்தில் தான் வேலை பார்க்கிறார். அதனால் இவர் வீட்டிலேயே தங்கி வீட்டையும் தன்னுடைய தாயாரையும் கவனித்துக் கொள்கிறார். மாசத்துக்கு ஒரு முறை தன்னுடைய கிராமத்திற்குச் சென்று நிலபுலன்களையும் கவனித்து வருகின்றார்.

    பிள்ளையும் நாராயணனும் சொர்ண விலாசை நோக்கிச் செல்கின்றனர். எதிரே தன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய காவேரி அம்மாள் நாராயணனைப் பார்த்ததும் மீண்டும் வீட்டுக்குள் செல்கிறார்.

    “கோவிலுக்குப் போகும் நேரத்தில் இவன் எதிரே வந்தால் சாமி கூடச் சரியா தரிசனம் தர மாட்டார்.” சொல்லிக்கொண்டே அவர் உள்ளே செல்கிறார்.

    இதைக் கண்ட சாமிநாத பிள்ளை மனத்துக்குள் வருத்தப் படுகின்றார். “என்ன உலகமடா நாராயணா ! ரொம்ப மோசம்டா இந்த உலகம். என்னவோ எதிரே ஒரு ஆள் வந்தால் சகுனம் சரியில்லே என்று நினைத்து உலகமே இருண்டு போன மாதிரி மனசை வைத்துக்கொண்டு .. குடும்பமே முழுகிப்போறமதிரி மனதைக் கருப்பாக்கிக்கொண்டு.. ..ச்சீ, ஒரே அருவருப்பா இருக்கு நினைக்கிறதுக்கே ..ரொம்ப வருத்தமாக இருக்கு நாராயணா.” ‘.

    ஒரு வருத்தம் தோய்ந்த முகத்தோடு நாராயணன் பதிலளித்தார். “சாமிநாதப் பிள்ளை..மனசு இருக்கே அது ஒரு குரங்கு மாதிரி.. தன்னோட இயலாமையையும், தன்னோட கையாலாகதனத்தையும் மற்றவா மேல போட்டு தன்னைச் சுற்றி ஒரு தற்காப்பு கவசம் போட்டுகொள்றது அது. .தன்னோட மனசையே நம்ப வைக்கறது தன்னோட தோல்விக்கு மற்றவாதான் காரணம்னு. ஒரு வகையில பார்க்கப்போனா உளவியலிலே இது ஒரு விதமான மனநோய் ….எஸ்கேபிஸ்ட் முறைன்னு கூட சில பேர் சொல்லுவா.”

    “நாராயணா, இதெல்லாம் உனக்கு இப்படித் தெரியும்?”

    சிரித்துக்கொண்டே நாராயணன் “பிள்ளை, ஒண்ணு தெரிஞ்சுக்குங்கோ அறிவுக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஏதோ படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்ட அவாளுக்கெல்லாம் நிறைய அறிவு இருக்கும் என்பது கிடையாது. எனக்கு நிறைய படிக்கற ஆசை. அதனால்தான் படிக்கிறேன். ஒரு வகையிலே பார்க்கப்போன நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு மனசில ஒரு விதமான நோய் இருக்கிறதாகச் சொல்லுவா. அதனால இதல்லாம் பெரிசு பண்ணாம நம்ம வேலைய மட்டும் பார்த்துண்டு போயிண்டு இருக்கணும். “

    “ ரொம்ப தைரியசாலி நீ நாராயணா. விவேகமானவன்.”

    ” சாமிநாதா, சுவத்திலே போய் முட்டிக்கொண்டு வலிக்கிறதே வலிக்கிறதேன்னு அழுதா யார் மேல தப்பு? சிலர் சுவர் மாதிரி. அவா மேல போய் நம்ம முட்டிக்கொண்டு நாம ஏன் அழணும் ? நான் சொல்லறது புரியறதா உங்களுக்கு? “

    ஒரு நிமிடம் சாமிநாத பிள்ளை அப்படியே நின்றுவிட்டார். நாராயணின் மனப்பக்குவத்தைக் கண்டு வியந்து.

    இருவரும் சொர்ணவிலாசை நோக்கிச் செல்கின்றனர். பின்னாலிருந்து ஸ்கூட்டரின் ஹார்ன் சப்தம் விட்டுவிட்டுக் கேட்கிறது.

    சற்றே திரும்பிப் பார்த்த நாராயணன் ” குழந்தை, நில்லும்மா, நில்லும்மா, கிராஸ் பண்ணாதே.. ஸ்கூட்டர் வருது பாரு…” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூட்டரில் மோதவிருந்த குழந்தையை தள்ளிவிடுகிறார். ஸ்கூட்டர் திசை மாறி நாராயணனின் கால் மேல் ஏறுகின்றது.

    ஒரு கையால் குழந்தையைப் பிடித்துக்கொண்டே கீழே விழுந்த நாராயணனைச் சுற்றி ஒரே கூட்டம். பதைபதைத்து செய்வதறியாமல் சாமிநாத பிள்ளை நிற்கிறார்.

    கூட்டத்தைக்கண்டு ஓடி வந்த அபிராமி ” என்ன ஆச்சுன்னா உங்களுக்கு?.. அப்பவே சொன்னேன் சகுனம் பாத்துப் போங்கோ.. அவன் எதிரிலே வரப்போ போகாதேங்கோன்னு ….கேட்டேளா ” என்று அலறுகின்றார்.

    ஸ்கூ ட்டெரிலிருந்து கீழே விழுந்த பார்த்திபன் தப்பித்து விட்டார். தலையில ஹெல்மெட் போட்டிருந்ததால் ! உடம்பில். ஒரு அடிகூடப் படவில்லை .

    ஒரு ரிக்க்ஷாகாரர் ஓடிவந்து நாராயணனின் கையைப் பிடித்து ” நம்ம சாமிடா . இவரை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கடா.. ஒரு வண்டியை இந்தப் பக்கம் இழுங்கடா.” எனக் கத்துகிறான்.

    வண்டியில் உட்கார்ந்து கொண்டே நாராயணன் அபிராமியப் பார்த்து சத்தமாகச் சொல்கின்றார் “அபிராமி.. நான் ஒண்ணும் அவர் எதிரே வரவில்லை. அவர் தான் என் பின்னாலேதான் வந்தார். விஷயம் தெரியாம தப்பாப் பேசாதேங்கோ “

    குழந்தையின் தாயாரோ கைகூப்பி “ரொம்ப நன்றி நாராயணன் சார் . ஏதோ அந்த வைகுண்டத்திலிருந்து ஸ்ரீமன் நாராயணனே கீழே வந்து என் குழந்தையைக் காப்பாற்றின மாதிரி இருக்கு. நிஜம்மா நீங்கப் பகவான் வடிவத்திலே வந்திருக்கேள்.” .

    அந்த ஒரு நிமிடம் நாராயணனுக்கு நடுத்தெருவிலிருந்து வைகுண்டத்திற்கே சென்று வந்த ஓர் உணர்வு.

    சாமிநாத பிள்ளையின் கண்கள் பனித்தன. அவர் கண்களில் வழிந்த நீர் இந்த வார்த்தைகளைக் கேட்டதற்கா, இல்லை, நாராயணனின் கால் ஓடிந்ததற்கா, இல்லை இந்த மனிதர்களின் ஒடிந்த இதயங்களைக் கண்டா – யாருக்குத் தெரியும்?

    Share
  • ஏழரை எப்படி வரும்?

    பாலசுப்ரமணியன்

    காலைக்கதிரவனின் முதல் மரியாதை இன்னும் மண்ணுக்குக் கிட்டவில்லை. மெல்லிய இளவேனில் காற்று உடலுக்கு மிகவும் இதமாக இருந்தது. நரசிம்மன் வழக்கம் போல் தன் வீட்டு மொட்டை மாடியில் தன்னுடைய தினசரி காலை நடையை துவக்கியிருந்தார் பொதுவாக அந்த நேரத்தில் அவர் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால் இன்று அவர் மனம் கொஞ்சம் பாரமாக இருந்தது. அதற்குக் காரணம் அவர் முன்தினம் தன் வீட்டுப் பரம்பரை ஜோசியரிடம் தன்னுடைய ஜாதகத்தைக் காண்பித்ததுதான்.

    “உங்களுக்கு மூல நட்சத்திரம். வரப்போவது ஏழரை நாட்டுச் சனி. ரொம்பப் படுத்தும். ஜாக்கிரதையாக இருக்கணும். உடம்பை கொஞ்சம் படுத்தும். வேண்டாத வம்பு தும்புல மாட்டிப்பேள். கொஞ்சம் வாயை அடக்கி வாசிக்கணும். என்ன சொன்னாலும் தப்பாகும்.”

    இது போதாதா நரசிம்மனின் மனசை ஒரு கலக்குக் கலக்க!  பாவம், மனுஷன்!  காலையிலே மாலனைப்பற்றிக்கூட நினைக்கவில்லை. எல்லாம் சனி பகவான் நினைப்புத்தான்!!

    இன்று மொட்டை மாடியில் அவர் நடையில் அவ்வளவு வேகமில்லை. “ஹலோ, நரசிம்மன், குட் மார்னிங்” பக்கத்து வீட்டுக்காரரின்   குரல்கூட அவர் காதுகளில் விழவில்லை.

    “”காலையிலே ரொம்ப சிந்தனை போலிருக்கு” இது மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர். நரசிம்மன் தன்னை அமுக்கியிருக்கும் சிந்தனையிலிருந்து  வெளியே வந்த பாடில்லை. மரத்திலிருந்து விழுந்த முள் அவர் கால்களில் குத்தி வலி தந்தது. காலை ஒருமுறை தூக்கி முள்ளைப் பிடுங்கி எறிந்தார்.

    “வனமாலி கதி சாரங்கி .. ” வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டே மேலே நடந்தார். “சனி பகவான் எப்படி வருவார்? சனி வரும்போதே ஒரு உலுக்கு உலுக்கும் என்பார்களே.!! நாராயணா. நீ தான் காப்பாத்தணும்.”

    மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது

    “அம்மா” என்று ஒரே அலறல். ஒரு நிமிடம் தன தலையை இரு கைகளால் தாங்கிக்கொண்டு “நாராயணா, நாராயணா” என்று அந்த முதலை வாயில் பிடிபட்ட யானை “ஆதிமூலமே” என்று அழைத்ததுபோல் ஒரு கத்தல். என்ன ஆச்சு என்று அவருக்கே புரியவில்லை. “என்ன சார்? ” மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர்.

    “மண்டையிலே யாரோ பளார்னு அறைந்தமாதிரி இருந்தது” சொல்லிக்கொண்டே திரும்பிப்பார்த்தார். “ஓ, அந்த காக்கான்னா சிறகாலே மண்டையிலே அடிச்சிட்டு ப் போறது.”

    ஒரு கணம். “ஆஹா, ஜோசியர் சொன்னது சரியாப்போச்சு. அந்த சனி பகவான் தன்னோட காக்கை வாகனத்திலேதான் வந்து மண்டையிலே தட்டி விட்டு ப் போயிருக்கார்.” அவர் மனம் ஒத்துக்கொண்டது.

    “ஆரம்பிச்சாச்சு. சனியின் பலன் இன்னிலேந்து போலிருக்கு. சனிப்பெயர்ச்சிக்கு மூன்று மாதம் முன்னாலேயே பலன் தெரியும் என்று சொல்லுவா.”

    அவர் நடையின் வேகம் தளர்ந்தது. சரி. இன்னிக்கு நடையை இதோடு முடித்துக்கொள்ளவேண்டியதுதான்.

    “பத்து நிமிஷம் தானே ஆச்சு. இன்னொரு அஞ்சு நிமிஷம் பார்க்கலாமா. “மனம் யோசித்தது. திரும்பிப்பார்த்தார் “நல்லவேளை. காக்கை. போயிடுத்து” அவர் நடை தொடர்ந்தது.

    சிறிது நேரத்தில் மீண்டும் “அம்மா” என்று தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழாத குறையாய் நரசிம்மன். “அப்பவே நினைத்தேன். சனீஸ்வரனுக்கு எதிராய் நாம். போகப்படாதுன்னு.  தப்புத்தான். தப்பு” சொல்லிக்கொண்டே அந்த மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார்.

    “ஏன்னா. என்ன ஆச்சு., மாடில ஒரே சத்தமா இருந்தது.” அலமேலுவை ஒரு முறை பார்த்துக்கொண்டே “சனி வரானில்லையோ  . அதுக்கு முகவுரை எழுதிட்டுபோனான்” மனைவிக்கு ஒன்றும் புரிய வில்லை.

    அடுத்த நாள் காலை அவருக்கு மொட்டைமாடிக்குப்   போவதா வேண்டாமா என்ற பிரச்சனை. “ஏன்னா, ஒரு நாள்  நடந்தா நித்தியம் நடக்குமாயென்ன? ” மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை. “தைரியம் புருஷலக்ஷணம்” என்றோ படித்தது இப்போது நினைவுக்கு வந்தது.

    மாடியிலே பதினைந்து நிமிடங்கள் நடந்தவர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். சனி பகவானின் வாகனத்தை எங்கும் காணோம். நடையில் வேகம் கட்டியது. சில நிமிடங்களில் “அம்மா”என்று தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தவர் பந்தயத்தில் ஓடுவது போல கீழிறங்கி வந்தார்.

    இரண்டு மாதங்களுக்கு நரசிம்மன் மாடிப்பக்கம்   செல்லவே இல்லை. ஒரு நாள் மாலை அவரை மாடியிலே பார்த்த பக்கத்து வீட்டு கோவிந்தராஜன் “என்ன நரசிம்மன், ரொம்ப நாளா மார்னிங் வாக்ல உங்களைக் காணோம்.” என்றார்.

    “என்ன சார் பண்றது, என் நட்சரத்துக்கு ஏழரைச் சனி பிடிச்சிருக்கு. தினசரி  காலையிலே காக்கை ரூபத்திலே சனி பகவான் மண்டையில ஓங்கி அடிச்சுட்டு போறார். ஒரு நாளுன்னா பரவாயில்ல,. தினசரியா? அதான். “

    ” என்ன சார் சொல்றேள், ஏழரை எட்டரையின்னு. கொஞ்சம் மேல நிமிந்து பாருங்கோ. உங்காத்து மரத்திலே காக்கா கூடுகட்டிக் குஞ்சு பொரிச்சிருக்கு. யார் அந்தப்பக்கம் போனாலும் தற்காப்புக்காக மண்டையிலே தட்டி விரட்டறது. ஒரு நாள் என்னைக்கூட எங்காத்து மாடியிலே…””

    கோவிந்தராஜன் பேசுவதைக் கேட்க நரசிம்மன் அங்கே நிற்கவில்லை. அவர் மனதில் ஒரே குழப்பம். “அப்போ, சனி பகவான் இப்படி வரவில்லை என்றால் வேறே எப்படி வருவார்?”

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • கடலோடி கழுகு

    சூர்யா

    கடலும் கடல் சார்ந்த இடம்  பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி.அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் என அழைப்பர்.கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது ஒவ்வொரு மீன் பிடி பயணத்தின் போதும். ஆனாலும் அவன் பின்வாங்கியதில்லை. தினமும் கடல்க்கு  மீன் பிடிக்க செல்வது அவன் பழக்கம் . மீன்களுக்கு அவன் வலைகளுக்கு மாட்டால் தப்பிச்செல்வது பழக்கம்.வருமானம் பெரிதாக இல்லை ஆனால் அவன் தன் தொழிலை விட்டதில்லை.கோடைக்கால மீன்பிடிதடைகால அறிவிப்பு.அதற்கு முன் நடந்த கதை அதிகம் .இந்தியாவின் கால்களில் தொங்கிகொண்டிருப்பது போன்று உலக வரைபடத்தில் இருக்கும் தேசம் இலங்கை.அங்கு தமிழர்களுக்கு எதிரான இனவெறியும், இந்திய பெருங்கடலே என் அப்பன்வீட்டு சொத்து என எண்ணும் சிங்கள இனத்தவர் மிகுதியாய் ஆக்கிரமித்திருந்த தேசம்.அதுபோல தான் மகாஇந்திய சாம்ராஜ்யத்தின் கடல் எல்லையை மதிக்காமல் எல்லைதாண்டி வந்து இந்திய தேசத்தின் பிரஜையை  சுட்டுக்கொன்றும்,கைது செய்தும் அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடர்ந்து வரும் தேசம் அது.இது நிலை ராமேஸ்வரத்திலும் இருந்தது.தமிழக அரசியல் நிலையோ ஏதோ ஐ.நா சபை மாதிரி தீர்மானங்களும் காரசார விவாதங்களும்,தத்தம் ஆதாயங்களுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்தி கொண்டன.தினசரி ஏதாவது ஒரு செய்தியாவது மீனவர் கைது பற்றி இருந்தே ஆகும்.மீன்பிடி தடைக்காலம் மட்டும் யாரும் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் கைது இருக்காது. மற்றபடி மீன்பிடி தடைக்காலம் நீக்கப்பட்டதும் சிங்கள கடற்படையினருக்கும் கைது செய்ய போடப்பட்ட தடைக்காலம் நீக்கப்பட்டதாக அர்த்தம்.மைக்கேல் செய்தி தாள் படிப்பதுண்டு.அங்கு சாலையோர டீக்கடைகளில் உள்ள பிரான்சிஸ்,டேவிட்,மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் ஆகியோர் தான் அவரது தோழர்களும் பட்டிமன்ற பேச்சாளர்கள். பிரான்சிஸ் ஒரு கடலோர பொதுவுடமை காரன்.சற்று உலக அரசியல் பற்றி அறிந்தவன்.டேவிட் ஒரு முற்றிலும் துறந்த ஞானி போல பேசுவர்.ஒரு தத்துவ ஞானி.போதைக்காரர்.கண்ணதாசன் பாடல்களை சதா கேட்டுக்கொண்டுஇருப்பார்.மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் போர்வீரர். நாட்டுக்காக பாக்கிஸ்தானிக்கு எதிராக போரில் போரிட்டு ஈடுபட்டு ஒய்வு பெற்றவர்.கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்.எப்போதும் வேலையில்லாத ஒய்வு நேரங்களில் மேரி டீஸ்டாலில் ஒரு பட்டிமன்றத்தையும் இங்கிருந்து கொண்டே காசில்லாமல் இலவசமாக ஐ.நா சபைக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இவர்கள்.மைக்கேலுக்கு ஒரு விரோதி உண்டு அவள் பெயர் ஆச்சரியமாக இருக்கிறதா அவள் பெயர் மகதலினா. ஏனெனில் ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்க தெரியாதவன் மைக்கேல். மேலும் அவன் ஒரு அழகன்.சிறுவயதில் இருந்தே மைக்கேல் மீது மகதலினாவுக்கு ஒரு கண்.அதாவது ஒரு அழகிய கிராமத்து காதல்.கண்ணால் பேசிவிடுவாள் அவள் ஆனால் அவன் பேசி கண்ணைமூடிவிடுவான்.கேட்டால் காதல் என்பால் அவள்.அவனோ ஒன்னும் இல்லை தூரப்போ என்பான்.காதலின் ஏமாற்றம் பகையாய் மாறுவதில் சந்தேகம் இல்லை.அது போலத்தான் மகதலினா வாழ்க்கையும்.அவள் வெறுப்பு பகைமையை அவன் அடுத்த இளம் பெண்களிடம் பேசும் போது வெளிப்படுத்தினாள்.ஆனால் இறைவன் என்பவன் விசித்திரமான ஒரு விலங்கு என்பதை நிருபிக்க அங்கு காலம் ஒரு கணக்கு போட்டது.மகதலினா ஒரு கடலோர அழகி. அழகிய கண்கள்.அவள் கண்சிமிட்டல் மின்னல்கள் வெட்டுவதைபோலவும்,அவள் உதடுகள் ஒரு தேன்சிந்தும் வளைகுடா போல அழகாக பார்ப்பவரை சுண்டியிழுத்துவிடும் அழகு.இடையோ வளைந்த வில் போல பார்ப்பவர்களின் மீது அம்பை ஏய்து கொண்டே செல்லும். அவள் நடை ஒரு அழகு.அவள் உடை இத்தனை அழகையும் புதையலை மூடுவது போல இருக்கும். இப்படி வர்ணிக்கும்படியான அழகு தேவதை.யாருக்கு தான் காதல் வராது அவள் மீது.ஆனால் மைக்கேலுக்கு இதில் விருப்பம் இல்லை.மகதலினாவுக்கு அவன் மீது விருப்பம் உண்டு.பிரான்சிஸ் ஒர் இளைஞன் . பொதுவுடமைக்காரன்.உலகம் அறிந்தவன்.அவனுக்கும் காதலில் விருப்பம் உண்டு.ஒரு வேளை பிரான்சிஸ்ன் வைரமுத்து காதல் கவிதைகளை படிக்கும் ஆர்வத்தால் காதலில் விருப்பம் வந்திருக்கலாம்.பிரான்சிஸ் மகதலினாவை ஒருதலையாக காதலித்து வந்தான்.ஏனெனில் ஒரு தலைஉள்ள அனைவருக்கும் வருமல்லவா இந்த ஒரு தலைக்காதல்.பொறாமை வளர்ந்தது நண்பர்களான மைக்கேல் மற்றும் பிரான்சிஸ் இடையே.ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே சும்மாவா சொன்னாங்க.ஒரு நாள் டீக்கடையில் காரசார விவாதம் காதல் திருமணங்களால் வன்முறை ஏற்படுகிறது  ஏன் என்பது. இதில் வாக்குவாதம் முற்றி வழக்கு போல மைக்கேல் பெண்களை இழிவுபடுத்தி பேச,அதாவது மகதலினாவை பற்றி தவறாக பேச கைகலப்பானது.இது மகதலினாவுக்கு தெரிய வர அவள் மனவருத்தத்தில் மைக்கேலை மறப்பதாக நடித்தாள்.உயிர்நண்பர்கள் பகைவர்களாக மிலிட்டரிகாரர் அல்போன்ஸ் சமாதானபடுத்த முயற்சி செய்து தோல்வியில் முடிவு பெற பகைமை தொடர்ந்தது.இருவரும் வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுக்க மைக்கேல் பிரான்சிஸின் கொள்கையை எதிர்ப்பதென முடிவெடுத்தான்.ஏனெனில் பிரான்சிஸ் ஒரு பொதுவுடமை வாதி.அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக மாறினான்.அந்த ஊரில் ஒரு சிறு பனிப்போரே நடத்தினர்.இதில் மகதலினா,அல்போன்ஸ் நடுநிலைமை வகித்தனர்.எப்போதுமே பொதுவுடமைவாதியிடம் வேகம்,மூர்க்ககுணம் அதிகமாக இருக்கும்.அன்று மீன்பிடி தடைகால இறுதி நாள்.மைக்கேல்க்கு அங்கு இருந்த அகதிகள் முகாமில் இருந்த சில அமெரிக்க நண்பர்களின் நட்பு கிடைத்தது.அவர்கள் இந்தியாவை வேவுபார்க்கவந்த சி.ஐ.ஏ உளவாளிகள்.அவர்கள் தமிழகத்தில் அதாவது இலங்கைக்கு அருகாமை பகுதியில் பொதுவுடமைவாதத்தை வீழ்த்த வந்தவர்கள்.அவர்கள் மைக்கேலின் பொதுவுடமை வெறுப்பை பயன்படுத்தி தங்கள் வேலையை செய்ய முடிவு செய்தனர்.ஆனால் அதே நேரம் பிரான்சிஸ் தமிழகத்தில் உள்ள பொதுவுடமை இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தான்.ஆனால் அவன் தன் மீன்பிடித்தொழிலை விடவில்லை.இரு கொலைமுயற்சி அவனுக்கு எதிராக.ஆனால் அவன் அதில் இருந்து மீண்டிருந்தான்.அமெரிக்க உளவுத்துறை பிரான்சிஸ்ஐ கொலைசெய்ய முடிவு செய்திருந்தது.அதற்கு மைக்கேலை பகடைக்காயாக பயன்படுத்த திட்டம் தீட்டிருந்தது.மைக்கேலுக்கு சி.ஐ.ஏ உறுப்பினர் அட்டை வழங்கி அவனுக்கு பணம் அளித்தது.மீன் பிடி தடை காலம் முடிவடைந்தது.காலையில் கதிரவன் மீனவர்களை வரவேற்றான் கடலுக்கு வரும்படி.மைக்கேலுக்கு மீன்பிடிக்கும் ஆசையில்லை ஆனால் கடலுக்கு செல்ல ஆயத்தமானான் பிரான்சிஸ்ஸை வீழ்த்தி பொதுவுடமை வேரை அறுக்க. ஆனால் பிரான்சிஸ்ஸோ கண்முழுவதும் மீன்களை பற்றிய கனவு.இருவரும் கடலுக்கு புறப்பட்டனர்.ஆனால் மகதலினாவுக்கு புரிந்து போனது மைக்கேல் மாறிவிட்டான்.காதல் அழிக்க இயலாததது.அவள் மனதில் இருந்தது அவனை நீக்க இயலவில்லை என.இருவரும் கடலுக்கு சென்றனர் நவீன படகேறி. நடுகடலில் சி.ஐ.ஏ. திட்டப்படி பிரான்சிஸ்ஸை கொல்ல முயன்ற வேளையில்,அங்கு தடைகாலம் நீங்கியதால் சிங்கள ராணுவம் எல்லோரையும் கைது செய்யதது.அவர்களை செய்த சோதனையில் மைக்கேல் ஒரு உளவாளி என கண்டறிந்தனர்.இலங்கையில் மெல்ல சீனா தன் ஆதிக்கத்தை நுழைதந்துகொண்டிருந்த நேரம் இந்த உளவு விவகாரம் சீன-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு நிழல்பாதிப்பை நுழைத்தது.அன்றில் இருந்து மைக்கேல் உலகம் அறியும் உளவாளியாகவும்,தேச துரோகியாகவும் அறியப்பட்டான்.மைக்கேலை தவிர அனைவரையும் இலங்கையில் இருந்த மீட்டது.மைக்கேல் தன் சிறைவாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவேண்டியாயிற்று.எங்கோ இருந்து வந்த இளைஞன் உலகம் பேசும் உளவாளிகள் வரிசையில் இடம்பெற்றான்.தன் முன்னாள் காதலனை எண்ணி மகதலினா,கடலோரம் பறக்கும் கழுகுகளை பார்த்து கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள்.அந்த கடலோரம் எங்கும் பொதுவுடமை கொடி மைக்கேலின் வீழ்சியில் ஆர்பரித்து கடலோர கழுகளை பார்த்து சுடர் விட்டு பறந்து கொண்டிருந்தது மகதலினாவின் கண்ணீருடன்.

    Share
  • விதையொன்றுபோட….

    சரஸ்வதி ராசேந்திரன்

    சந்தானமும் ,காஞ்சனாவும் ஊரை எதிர்த்து,உறவை பகைத்து திருமணம் செய்துகொண்டவர்கள் ,அதனால் ஒன்றும் பாதகமில்லை சந்தானம் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதித்து வீடு ,கார் என சமூக அந்தஸ்தோடு இருக்கிறான்.

    அவர்களுக்கு ஒரே மகள். ஊரே வியக்கும் வண்ணம் நூறு பவுன் போட்டு விமர்சையாக திருமணம் செய்ய ஆசைபட்டான் சந்தானம் .

    மனைவியிடம் தன் விருப்பத்தை சொன்னபோது,
    ‘’இப்ப என்ன அவசரம் அவளுக்கு?’’

    ‘’உனக்குத் தெரியாது காஞ்சனா ,பெண்ணும் ,கீரைத்தண்டும் முற்றினால் விலை போகாது இதுதான் சரியான வயது ’’

    ‘’இல்லை அவள் ..வேலைக்குபோகனும்னு ..’’

    ‘’அதுக்கெல்லாம் அவசியமில்லை ..போற இடத்திலே நல்ல வசதி’’

    கேட்டுக்கொண்டே வந்த அகிலா ’’ யாருக்கப்பா திருமணம் ?’’கேட்டாள்
    ‘’உனக்குத்தான் அகிலா ‘’

    ‘’ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ‘’

    ‘’ நான் என் நண்பனிடம் வாக்கு கொடுத்திட்டேன் அகிலா’’

    ‘’சாரி ப்பா ‘,பெற்றவர்களை நான் மதிப்பவள் தான் ஆனால்..அதுக்காக நான் சுயத்தை இழக்க முடியாது ‘’

    ‘’’’சுயமா அதென்ன ?’’

    ‘’ நீங்க உங்க மனசுக்கேத்த பெண்ணைத்தானே எல்லா தடைகளையும் மீறி பண்ணிகிட்டீங்க,உஙளுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?

    ‘’அப்ப நீ யாரையாவது லவ் பண்றியா?சொல்லு ‘’

    ‘’இது வரை யாரையும் காதலிக்கலே அந்த நேரம் வரும்போது சொல்றேன், அது வரை பொறுமையா இருங்க ‘’ சொல்லி விட்டு போனாள்.

    வாயடைத்து நின்றார் சந்தானம் .விதையொன்று போட சுரைஒன்றா முளைக்கும்?

    Share
  • ஏன் வரவில்லை?

    ஷைலஜா

    இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம்,

    கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான்

    துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும்.

    இந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்ப்ரியாகுட்டி,”சித்தப்பா எப்போ வரே?’ என்று கேட்டதும் மனது கேட்கவில்லை.

    புறப்பட்டுவிட்டேன்!

    காவிரிப்பாலத்தில் டாக்சியில் வரும்போதே காலைநேரத்து இளம்குளிரோடுவீசியகாற்றில் உடலிற்குப் புதுத்தெம்பு வந்துவிட்டது.

    மாம்பழச்சாலையைக் கடந்து ஊருக்குள் டாக்சிநுழையும்போது எதிரே விண்ணைமுட்டும்ராஜகோபுரம் ‘வா வா’ என அழைப்பதுபோல இருக்கிறது.

    தெற்குவாசலில் டாக்சியை நிறுத்தசொல்லி மன்னிக்குப் பிடிக்குமே என்று ஜாதிமல்லிபத்துமுழமும், கோபுரத்துஅடியில் கூறுகட்டி

    விற்றுக்கொண்டிருந்தவளிடம் அம்மாவுக்காக கொய்யாபழமும் வாங்கிக்கொள்கிறேன்.

    டாக்சியின் எஃப் எம் கமல்படத்தின் ’ உன்னைக்காணாமல்…’என்றது.போனமுறை ஊர்வந்தபோதுதீப்தா எனக்குப்பாடிக்காட்டிய பாடல்! என் இனிய சிநேகிதியான அவளுக்கும் குடும்பச் சுமை அதிகம்,அதுவும்அவள் அப்பாவின் மறைவிற்குப்பிறகு, உள்ளூரில் ஒருசீட்டுக்கம்பெனியில் பணிபுரிகிறாளாம், மாதம்நாலாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக

    சித்திரை வீதிவழியே டாக்சிபோகும்போது இரண்டுவருடங்களில் கொஞ்சமும் மாறாத என்ஊரைப்பெருமையுடன்பார்த்துக்கொள்கிறேன்.

    . தேரடியில் ரங்கப்ரசாத் மற்றும் பாபு, சுதர்சனுடன் கிரிக்கெட் விளையாடியதைமனம் அசைபோட்டது.

    ?யாரு பரத்வாஜனா? ஏண்டாப்பா, ரண்டுவருஷம் கழிச்சி வரபோல்ருக்கு?”

    எதிர்வீட்டுதிண்ணையிலிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து மறுபடி அணிந்தபடியேகிச்சாமாமா குரல்கொடுத்தார்.

    “ஹைய்யா சித்தப்பா வந்தாச்சு:!” ஓடிவந்தது ப்ரியாகுட்டி. அட! ப்ரியாக்குட்டிஎப்படி வளர்ந்துட்டது!

    டாக்சியை அனுப்பிவிட்டு நிமிர்கிறேன்.

    வீட்டுவாசல்கதவை அடைத்துக்கொண்டு உறவுப்பட்டாளம்!

    பார்வையாலேயே பாசத்தைப்பொழிந்தார் அப்பா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்பணிபுரிந்தபோது அதிகம் பேசிய களைப்போ என்னவோ ஓய்வுபெற்றதிலிருந்து அப்பாயாருடனுமே அதிகம் பேசுவதில்லை.

    “அதில்லைடா பரத் உங்கப்பாக்கு குடும்பச்சுமையை உன்மேல ஏத்திட்டோ மேன்னுமனசுக்குள்ள குறுகுறுப்பு உங்கண்ணாக்கும் சுமாரான சம்பளம்தான். சேமிப்பும்அதிகமில்லை..குடும்பம் ஓடணும்னுதான் படிச்சதுமே நீ துபாய் போய் பணம்அனுப்பிண்டு இருக்கே..பாவம் …நாங்கள்ளாம் வாய்விட்டு சொல்லிடுவோம்…உங்கப்பா மனசுக்குள் வச்சிண்டு குமைவார். அதான் மௌனசாமியாராய் ஆயிட்டார்”என்று போனதடவையே அம்மா சொன்னாள்.

    “ரண்டுவருஷமாச்சே கண்ணா எப்டிப்பா இருக்க? என்னவோ இந்தக்குடும்பம் முன்னேறவும்வீட்டுக்கடனை அடைக்கவும் உன்னை

    அவ்வளோ தூரத்துக்கு அனுப்பிட்டோ மேன்னு பலசமயம் வருத்தமா இருக்குப்பா”

    அம்மா இப்போதும் பார்த்ததும் கண்பனித்தாள்.

    “வாங்கோ! போனவருஷம் வருவேள்னு ரொம்ப எதிர்பார்த்தோம்”என்றாள் மன்னி. கல்யாணமாகி ஆறுவருடங்களாகியும் மாறாத புன்னகைமுகம்.

    ” அதான் லீவே கிடைக்கலை வரமுடியலைன்னு போன்ல சொல்வானே விஜி? இப்போ லீவ்கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி!…வாடா பரத்…எப்படீ இருக்கே? அம்மா! அவனுக்கு ஃபில்டர்காஃபி புதுப்பால்லபுதுசா போட்டுக்கொடு” அண்ணா ராஜு தோளைத்தட்டி வரவேற்றான்.

    “பரத் அண்ணா! நான் இந்தவருஷம் ப்ளஸ்டூக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணிபடிக்கறேன்’

    ‘நானும்:தான்”

    இரட்டைசகோதர உறவுகள் சேர்ந்துகுரல் கொடுத்தன.

    “இந்தவருஷமும் நீ வரலேன்னா நாங்க கடனை உடனைவாங்கி டிக்கட்போட்டுண்டுதுபாய்வந்துருப்போம்,தெரியுமா அப்படி

    ஏங்கிட்டோ ம்டா பரத்! போன்ல எத்தனை பேசினாலும் நேர்ல பாக்றாப்ல ஆகுமா சொல்லு?”

    “வந்ததும்வராததுமா அவனை ஆயிரம் கேள்வி கேக்காதங்களேண்டிம்மா.. பரத்! ஊஞ்சல்லஉக்காருப்பா… டீ சித்ரா! fan போடேன் சித்த..குழந்தை வெளிநாட்ல ஏசிகீசின்னு சௌகர்யமா இருப்பான் இங்க வந்த சித்த நாழிலகறுத்துப்போயிட்டான்பாரு..” அத்தை-அப்பாவின் மூத்த சகோதரி- வாஞ்சையுடன் என்

    தலையைக் கோதிவிட்டாள்.

    . :அம்மா சூடாய் வெண்பொங்கலும் கத்திரிக்காய் சுட்ட கொத்சும் தட்டில் வைத்துஎன்னிடம் நீட்டினாள்.தங்கநிறத்தில் வறுபட்டமுந்திரிகளும், பொம்மைமுயலின்கண்களைப்போல முழித்துக்கொண்டிருந்த மிளகும் நாக்கில் நீர் ஊறவைத்தது.

    புழக்கடைப்பக்கம் போய் கிணற்றடியில் கைகால் அலம்பிக்கொண்டுவந்து தட்டைஅம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.

    “காஃபி முதல்ல தரக்கூடாதோ?” அண்ணா கத்தினான்.

    “பசியா இருக்குமோன்னு முதல்ல டிபனைத் தந்தேன்..முடிச்சதும் காஃபி கலந்துட்டாபோச்சு”

    “பொங்கலோட வடையும் பண்ணி இருக்கலாம்னு இப்போ தோண்றது

    ..சாப்பாட்டுக்குப்பண்ணிடலாம்மா…மச்சினருக்கு தயிர்வடைன்னா ரொம்பவேபிடிக்குமே?” மன்னி உருகினாள்.

    “நேத்தே திரட்டிப்பால் கிளறிவச்சிட்ட்டேன் குழந்தைக்கு தட்ல ஓரமா போடேன்பத்மா,சொல்லணுமாக்கும்? “அத்தை அதட்டினாள் அம்மாவை அன்பாக.

    வாங்கிவந்த சாமான்களை அனைவரிடமும் கொடுத்தபோது கண்களில் மகிழ்ச்சிதவழ நன்றிதெரிவித்தனர்.

    “எதுக்குடா இப்படி சிரமம் எடுத்துக்கறே?”அண்ணன் அன்பாய்கடிந்துகொண்டான்.

    ஊரும் மாறவில்லை என்வீட்டுமனிதர்களும்மாறவில்லை என்னும்போது எனக்குப்பெருமையாகஇருக்கிறது.

    “கொள்ளிடம்போய்குளிச்சிட்டுவந்துடறேன்” என்றபோது அப்பா தன் சைக்கிள்சாவியைஎன்னிடம் தந்தார். நடந்துபோகக்கூடாதாம்!

    படித்துறையில் தீப்தா துணி துவைத்துக்கொண்டிருந்தவள், என்னைக்ண்டதும்,”பரத்எப்போ வந்தே? “என்று வியப்பாய் கேட்டாள்.

    சிறிதுநேரம் நாஞ்சில்நாடனையும் ஜெயகாந்தனையும் அலசினோம்.

    “ஜெயகாந்தனும் போயிட்டாரேடா பரத் நம்பவேமுடியல”

    “ஆமா …மனசுக்கு ரொம்பக்கஷ்டமா இருக்கு..”

    “என்னவோபோ..சொல்லிக்காம வர ஒரேவிருந்தாளி மரணம்தான்…

    அதுபோக்கட்டும்..நாளைக்கு ஆடும்பல்லக்குடா, பரத்…வாசல்பூரா

    கோலம் வழக்கம்போலப்போடப்போறேன்..நீவந்து பார்த்து கருத்து சொல்லணும் என்ன?”

    “இந்த கம்ப்யூட்டர் யுகத்துலயும் சின்னக் குழந்தைமாதிரி கோலம்போடறதும்கொள்ளிடக்குளியலுமாய் அது இதுன்னு இருக்கியா தீப்தா?”

    “மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவேமத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ?”

    நான் சிரித்தபடி வேறுபக்கம் நகர்ந்தேன்

    ஆயிற்று ஊருக்குபோகிற நாள் வந்தாயிற்று.

    எந்நேரமும் விரல்பிடித்துக்கொண்டே விளையாடிய ப்ரியாகுட்டி..

    பார்வையால் வருடும் அப்பா..

    வாய்க்கு ருசியாய் சமைத்துப்போடும் அம்மாவும் அதனை வயிறாரப் பரிமாறியமன்னியும்

    ..

    பாடங்களில் சந்தேகம்கேட்டு என்னைப்பெரிய ஆசிரியர் போல மதிக்கும் என்உடன்பிறப்புகள்..

    ‘துபாய்ல உப்பு,புளிகிடைக்குமா ?நல்ல ஹோட்டல் இருக்கா? உடம்புக்கு ஏதாவதுன்னாயாருடா பக்கத்துல இருக்கா உனக்கு?’

    அத்தையின் அன்பான அக்கறையான கேள்விகள்.

    ‘பரத்! அம்மா அப்பாவைப்பத்தி கவலையேபடாதே …நானும்மன்னியும் நன்னாபாத்துக்றோம் என்ன? “

    அண்ணாவின் அனுசரணையான பேச்சு..

    சிநேகிதம் என்கிற எல்லைக்கோடிற்குள்லேயே எப்போதும் இருந்துகொண்டுபழகும்அன்புதோழி தீப்தா…

    எல்லாரையும் விட்டு ஊருக்குபுறப்படவேண்டுமே என்றிருக்கிறது.

    அப்பாமட்டும் எவ்வளவு தடுத்தும் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட ஸ்ரீரங்கம்ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.

    ரயில் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது அப்பா என்னிடம்,

    “பரத்! உன்கிட்ட வந்ததுலேந்து கேட்க நினச்சேன் , இப்போ கேட்டுட்றேன்.. உன் தலைலகுடும்பச்சுமைய ஏத்திட்டோம்ன்னு எங்கபேர்ல கோபமா? அதனால்தானே நீ இத்தனை நாளாய்

    ஊர்பக்கமே வரலயா?” என்றார்.

    ‘ஐயோ அப்பா! இந்தப்பேச்சுக்கு உங்கள் மௌனமே பரவாயில்லை’ என்று கத்தவேண்டும்போலிருந்தது.

    என்னையே பார்த்துகொண்டிருந்த அப்பாவின் விரல்களை பிடித்துக்கொள்கிறேன்.

    “அ அ ..அ.ப்.பா! ” வார்த்தைகள் உடைந்து வந்தன .

    இருபத்தி ஏழுவயதில் இருபதுவயதை முழுங்கிவிட்டு, சிறுவனாய் கதறஆரம்பிக்கிறேன்.

    “அப்பா ஒவ்வொரு தடவை ஊருக்கு வந்துவிட்டுப்போகிற போதெல்லாம் உங்க எல்லாருடையபாசத்தையும் பரிவையும் அனுபவிச்சிட்டுதிரும்பி துபாய் போனதும் பலநாட்களுக்கு என்னால் இதிலிருந்துமீளமுடிவதில்லை.. எதையுமே ருசிகண்டால்தானே அவஸ்தை?என்னால் ஆசையை அடக்கமுடியும்போல இருக்கு… ஆனா அவஸ்தையை தாங்கமுடியலப்பா..அதான் இத்தனை நாளா வரல…இப்போ மறுபடி துபாய்போனதும் இந்த அவஸ்தைதொடரபோகிறதுப்பா..” நான் முடிக்கவும் உடனே

    “ப..ர..த்!” என்ற அப்பாவின் குரலில் மேலும் கரைந்துவிடவும் இருந்த நிலையில், நல்லவேளையாய் ரயில் வந்துவிட்டது .

    Share
  • மெல்லத் திறந்தது கதவும்

    — கவிஜி.

    ஊட்டி.

    ஊட்டியில் இருந்து 35 கிலோ மீட்டரில் ஒரு காட்டு பங்களா.

    நான், என் அக்கா, தங்கை, தம்பி, மாமா பையன், என் நண்பன் கிரி, அவனின் தங்கை மாயா, மாயாவின் தோழிகள் என்று ஒரு பட்டாளமே பிக்னிக் போயிருந்தோம். ஊட்டிக்குள் நுழையும் நிமிடங்களை மனம் செல்ஃபி எடுத்துக் கொண்டே வந்தது. எடுத்துக் கொண்ட செல்ஃபி நினைவுகளை அசை போட்ட நொடிகளோடு சேர்த்து முகநூலில் ஏற்றிக் கொண்டே இருந்தோம்.

    அன்று இரவு அந்தக் காட்டு பங்களாவில் நாங்கள் ஆளுக்கொரு கதைகள் கொண்ட புது புத்தகமாய் விரிந்து கிடந்தோம். இரவின் பனியும், பனியின் குளிரும் ஊட்டியை விரிந்து கிடந்த வெளியில் ஒரு மிதக்கும் காட்டின் சதுரமாய் நாங்கள் தங்கியிருந்த பங்களா நகர்வது போல நின்றிருந்தது. நாங்கள் எல்லாரும் சுற்றி அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டும் அந்தக் கதையை ஒருவர் பாதியில் விட அதை அடுத்தவர் தொடர்ந்து அவரும் ஒரு கட்டத்தில் நிறுத்த, அதற்கடுத்தவர் அதிலிருந்து தொடர. என்று இரவின் நீட்சிகள் மணி 11 தாண்டியும் சில்லிட்டுக் கொண்டிருந்தன கதைகளாய்.

    டக் … டக் … டக் … டக் … டக் … டக் …

    நாங்கள் ஒரு சேர திரும்பிக் கதவைப் பார்த்தோம்.

    காட்டுக்குள் நாங்கள் நுழையும் போதே இந்தப் பங்களாவின் உரிமையாளர் ‘எக்காரணத்தைக் கொண்டும் இரவில் கதவை திறந்திட வேண்டாம்’ என்று கூறியது அனைவருக்குமே ஒரு கணம் கருப்பு வெள்ளையில் நினைவின் கவனத்துக்கு வந்து போனது. கதவு தட்டப் படும் சத்தம் மிக மெல்லியதாகத்தான் கேட்டது. இப்போதுதான் ஒன்றைக் கவனித்தோம். உள்ளே ரெஸ்ட் ரூம் போய்விட்டு மாமா பையன் பிரபு வந்து கொண்டிருந்தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒருவேளை இவன்தான் உள்ளே போவது போலப் போய் இந்தப் பக்கம் வந்து கதவை தட்டி விட்டு வந்திருக்கிறானோ. என்று அவனைக் கூர்ந்து கவனித்தேன் அவன் எதையும் கண்டு கொள்ளாமல் கதையைக் கவனிப்பதில் கவனமாய் இருந்தான்.

    இப்போது மீண்டும் அதே சத்தம், அதே அளவோடு வந்தது.

    அனைவரும் திரும்பிப் பார்த்தோம், இம் முறையும் உள்ளே இருந்து வெளியே வந்த பிரபுவை நாங்கள் ஒருசேரப் பார்த்து மெல்லச் சிரித்தோம்.

    “டேய் என்ன இப்படிப் போய், அப்படி வந்து கதவை தட்டிட்டுத் தட்டிட்டு வந்துட்டா எங்களுக்குத் தெரியாதா. மொக்கையா இருக்குடா” என்று கலாய்த்தோம்.

    அவன் சீரியசான முகத்தைக் கொண்டு. “ஹே… நான் தண்ணி குடிக்க உள்ள போனேன்ப்பா நான் தனியா வெளிய போவேனா” என்றான்.

    மனதுக்குள் ஒரு வகை திக் தட்டிக் கொண்டே இருப்பதை அனைவருமே மறைக்க முயன்றோம். எனக்குக் கொஞ்சம் வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.

    சற்று நேரத்தில் மீண்டும் அதே டக் … டக்… டக் … சத்தம். அது கதவை தட்டும் சத்தம் தானா என்று சந்தேகிக்கும் அளவுக்குத்தான் சத்தத்தின் வேகம் இருந்ததால் ஒருவேளை பிரமையாகக் கூட இருக்கும் என்று பேசிக் கொண்டோம்.

    “இல்ல விஜி. யாரோ கதவைத் தட்றாங்க, நல்லாவே கேக்குது,” என்றாள் என் அக்கா.

    “ஆமா எனக்கும்தான் கேட்டுச்சு,” என்று கூறிய தங்கையின் பின்னால் அப்போதுதான் வந்து அமர்ந்தான் மீண்டும் பிரபு.

    “டேய் பிரபு விளையாடாதா நீதான் கதவை தட்டிட்டுத் தட்டிட்டு வர்ற. நல்லாவே தெரியுது இது விளையாடற டைமா? பயமா இருக்குடா வேண்டாம்,”என்றபடியே “ஆமா, நீ இப்போ எங்க போன?” என்று எல்லாரும் மொத்தமாகக் கேட்டோம். எங்கள் சத்தத்தில் கொஞ்சம் பயம் கலந்த தடுமாற்றம் இருந்தது. ஒருவேளைத் தட்டுவது பிரபுவாக இல்லாமல் இருந்தால் என்ற கேள்விக்குள் மாட்டிக் கொண்ட பார்வையை ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்டோம்.

    அவன் மெல்ல சிரித்துக் கொண்டே “சத்தியமா நான் வெளிய போகல. நான் சிப்ஸ் எடுக்கத்தான் உள்ள போனேன்” என்றான் கையில் சிப்ஸ் பாக்கெட் இருந்தது. கொறித்துக் கொண்டிருந்தான்.

    அனைவரின் மனதுக்குள்ளும் கதவே நிறைந்திருந்தாலும். கண்டுகொள்ளாதது போல. கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

    பிரபு வாயைக் கை கொண்டு அடக்கியபடியே ஒவ்வொரு முறை தட்டுவது போலவே கதவைத் தட்டினான். தட்டியபடியே தலையை பின்னோக்கி இழுத்துக் கொண்டு ஒளிந்து கொண்டான். கையை மீறும் சிரிப்பை இன்னும் அழுத்தி அடக்கினான். உள்ளே கதவு தட்டப் பட்ட சத்தம் கேட்டதுமே நான் எழுந்தேன். என்னை இரு என்பது போல எல்லாரும் தடுத்தார்கள். பாருங்க பிரபுவக் காணோம் அவன்தான் இந்த வேலைய பன்றான். இப்போ பிடிச்சிடலாம் என்று மெல்லமாக கூறியபடியே நான் கதவு பக்கம் சென்றேன். என் பின்னால் அனைவரும் கூட்டமாக நின்றார்கள். அனைவர் முகத்திலும் இனம் புரியாத வியர்வைத் துளிகள்.

    மீண்டும் தட்டும் சத்தம் கேட்க காத்திருந்தோம்.

    வெளியே பிரபுவும், என்னடா, எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள் போல, என்றபடியே மீண்டும் தட்ட முனைந்தான்.

    மிகப் பெரிய மௌனம் இடையே கதவாய் நின்று கொண்டிருப்பதை இருபக்கமும் உணர்ந்தார்கள்.

    தட்டலாமா, வேண்டாமா, மீண்டும் உள்ளே போய் விட்டு வந்து தட்டலாமா, என்று யோசித்த பிரபு,சரி ஒரு முறைத் தட்டி விட்டு ஓடி விடலாம் என்றே நினைத்தான்.

    அடுத்த கணம் …

    “டக் டக் டக்” கதவைத் தட்டினான் பிரபு.

    “இருடி மாட்ன” என்றபடியே சட்டென்று கதவைத் திறந்தேன்.

    வெளியே புகை போல ஒன்று நின்று கொண்டிருந்ததை நாங்கள் கத்திக் கொண்டே கண்டோம்.

    வெளியே இருந்த பிரபுவுக்கு வீட்டுக்குள் புகை போல நிறையப் பேர் நின்றிருந்தது தெரிந்ததாம். மயங்கிச் சரிந்தான்.

    ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்…..

    Share
  • அமுதா . . . (சமூகத்தால் ஒடுக்கப்பட்ட திருநங்கையின் கதை…)

    விஜய் விக்கி…

    சமூகத்தால் இன்றளவும் ஒடுக்கப்பட்டுள்ள திருநங்கை சமூகத்தின் உண்மை நிலையை எடுத்துச்சொல்லவே இந்த படைப்பு… இது உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை…

    ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அமுதா… பால் வாங்கி காய்ச்சி டீ போட்டு பிளாஸ்க்கில் ஊற்றிவைத்துவிட்டு, சமையல் வேலைகளையும் முடித்தாகிவிட்டது… ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்புவதற்கும் ஆயத்தமாகிவிட்டபோதும், செல்வியும் ரோஸியும் இன்னும் எழுந்திருக்கவே இல்லை, எப்படியும் பத்து மணி ஆகலாம்.. இருவருக்குமே காலை சாப்பாடு சாப்பிடும் பழக்கமில்லை என்பதால், தேநீர் மட்டும் குடித்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு பைபாஸில் பயணித்துவிடுவார்கள்…

    “ரோஸி, டீ போட்டு வச்சிருக்கேன்… கத்தரிக்காய் குழம்பும் வச்சிட்டேன், சோறு மட்டும் வடிச்சுக்கோங்க.. நான் கிளம்பட்டுமா?” கடிகாரத்தை பார்த்துக்கொண்டே கேட்டாள் அமுதா…

    சோம்பல் முறித்து, கண்களை கசக்கி எழுந்து படுக்கையில் அமர்ந்தாள் ரோஸி.. கடிகாரத்தை பார்த்தாள், இன்னும் மூன்று மணி நேரத்தூக்கம் மிச்சம் இருக்கிறது… ஆழமாக ஒரு கொட்டாவி விட்டபடி, “இன்னிக்கு ஞாயித்துக் கிழமையாச்சே, லீவு இல்லையா??” என்றாள்…

    “டீச்சரக்கா இருக்காகள்ல, அவங்க பக்கத்து வீட்டுக்கு யாரோ புதுசா குடி வந்திருக்காங்க.. வேலைக்கு பார்த்த ஆள் நாளக்கிதான் வருதாம், அதான் இன்னிக்கு மட்டும் வந்துட்டுப்போகச் சொன்னாங்க..”

    “ஒருநாள் கூட ஓய்வில்லாம ஒழைக்கனுமா?.. டீச்சரக்கா சொன்னா, முடியாதுன்னு சொல்லவேண்டியதுதான?.. ஏண்டி இவ்ளோ கஷ்டப்படுற?.. பேசாம எங்ககூட தொழிலுக்கு வந்திடு, உன் அழகுக்கு விட்டில் பூச்சிங்க மாதிரி பார்ட்டிங்க
    விழுவானுங்க…” அமுதாவின் கன்னத்தை உருவி முத்தம் கொடுத்தாள்…

    நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டாள் அமுதா.. “நீதான் ராத்திரி பார்ட்டிய கூட்டிட்டு வந்தியா?.. பக்கத்து வீட்டு பொம்பள காலங்காத்தாலயே சண்டைக்கு வருது…”

    “ஏன், அவ புருஷனையா கூப்ட்டேன்?… நல்ல கிராக்கி, ஐந்நூறு ரூபாய்க்கு மடிஞ்சான்.. இடமில்லைன்னு சொன்னதால கூட்டிட்டு வந்தேன், குந்தாணி பன்னண்டு மணிக்கு நான் வர்றத பார்த்திருக்கு பாரேன்” பொங்கினாள் ரோஸி..

    “வீட்டுக்கு ஆள கூட்டிட்டு வராதன்னு எத்தன தடவ சொல்றது உனக்கு?.. ஓனரண்ணே பாவம்டி, அவருக்கு நம்ம சங்கடத்த குடுக்கணுமா?” தூக்கம் களைந்து எழுந்த செல்வியும் கோபித்துக்கொண்டாள்…

    “காலைலேயே சண்டை வேணாம்டி, இனி அப்டி எதுவும் நடக்காம பார்த்துக்கறேன்..
    ஆமா, உனக்கு நேத்து செம்ம கலெக்சன் போல, ரெண்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்த?” செல்வியை கேள்வியின் மூலம் திசைதிருப்ப முயன்றாள் ரோஸி….

    ஆனாலும், அடுத்த வீடு தேடவேண்டி வருமோ? என்கிற பயம் அவளுக்குள் உண்டாகியிருந்தது..

    “அடப்போப்பா.. இருநூறு ரூபாய்க்கு ஒரு மணி நேரமா பேரம் பேசி, பொழப்ப கெடுத்துட்டான் ஒரு சாவுகிராக்கி… ஆயிரம் ரூபாய்க்கு பெங்களூர் பொண்ணுகளே கெடைக்குது, உனக்கு முன்னூறு குடுக்கமுடியாதுன்னு சாதிக்கிறான்… அப்புறம் என்ன மயித்துக்குடா அரவாணிகிட்ட வந்தன்னு செவுல்லையே விட்டு பத்திவிட்டேன்…” காலை நேரத்து சூழலை கொஞ்சம் இறுக்கமாக்கியது செல்வியின் பேச்சு… ஒவ்வொரு நாளிலும் இப்படி எதிர்கொள்ளும் ஏளனப்பேச்சுகளை அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளும்போது, வீடும் நிசப்தமாகிவிடுவது வழக்கம்…

    “ஐயோ நேரமாச்சு.. சாயந்திரம் வந்து பேசுவோம்!” சேலையை சரிசெய்துகொண்டு, அவசரமாக கிளம்பினாள் அமுதா..

    வீட்டை விட்டு கிளம்பியது முதலாகவே, அமுதாவை வட்டமடிக்கும் கண்கள் கணக்கில் அடங்காதவை.. பெரும்பாலும் அந்த பார்வைகள், அவளின் அங்கங்களை துழைத்து எடுப்பதிலேயே குறியாக இருப்பதுண்டு… அதனாலேயே தன்
    தோழிகளைப்போல உதட்டுச்சாயம், கிரீம்கள் என அரிதாரம் பூசிக்கொள்ள விரும்பமாட்டாள்… கழுத்தில் மாட்டியிருக்கும் பாசியும், முகத்தில் பூசிய பவுடருமேகூட பலநேரங்களில் தனக்கு விருப்பமில்லாமல் செய்துகொள்ளும்
    ஒப்பனைதான்…

    “வா அமுதா… போகலாமா?” வாசலிலேயே டீச்சர் அமுதாவிற்காக காத்திருந்தாள்…
    “சரிக்கா…”
    “ஒன்னும் பெரிய வேலை இல்ல… குழந்தைய வச்சுகிட்டு அந்த வீட்டுக்குவந்திருக்கிற பொண்ணு ரொம்ப கஷ்டப்படுது… சாமான்களை பிரிச்சு அடுக்கி வச்சு கொஞ்சம் ஒத்தாசை பண்ணனும், மதியம் போய்டலாம்..”
    “சரிக்கா.. செஞ்சிடுறேன்…”

    “உன்னப்பத்தி சொல்லிருக்கேன்… ஒன்னும் அத பெருசா எடுத்துக்கல.. திருநங்கைனு எதாச்சும் கேலி பேசக் கூடாதுன்னும் தெளிவா சொல்லிட்டேன்” அமுதாவின் முதுகை தட்டியபடி சொன்னாள் டீச்சர்… பலநேரங்களில் அமுதா எதிர்கொள்ளும் பாலின மாற்றம் தொடர்பான அவச்சொற்களை டீச்சரிடம் நிறையவே பகிர்ந்துகொன்டதன் விளைவுதான், இப்படியோர் கண்டிஷனுக்கும் காரணம்..

    “சரிக்கா…” கண்களால் நன்றி சொன்னாள்…
    பேசிக்கொண்டே இருவரும் அந்த வீட்டினை அடைந்துவிட்டனர்… அழைப்புமணியை அடித்துவிட்டு அமுதாவை பார்த்த டீச்சர், “சம்பளத்த நீயே பேசிக்கோ…”

    கிசுகிசுப்பாக சொன்னாள்…
    தலையை மட்டும் அசைத்துக்கொண்டாள் அமுதா…
    மூன்றாம் அழைப்பு மணியின் சத்தத்திற்கு பிறகுதான் கதவை திறந்தார் ஒரு முப்பதுவயது மதிக்கத்தக்க இளைஞர்..

    டீச்சரை பார்த்ததும் முன்முறுவல் செய்துவிட்டு, “வாங்க டீச்சர்… உள்ள வாங்க” என்று கதவை முழுமையாக திறந்துவிட்டு, உள்ளே சென்று அவசரக்கோலத்தில் ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு ஹாலுக்கு வந்தார் அவர்… அறைக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது… சுவரில் அரைகுறையாக மாட்டப்பட்டிருந்த சில புகைப்படங்களும், மின் இணைப்பு கொடுக்கப்படாத தொலைக்காட்சிப் பெட்டியும் தூசி துடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.. ஹாலின் பெரும்பகுதியை பிரிக்கப்படாத அட்டைப்பெட்டிகள் நிரப்பியிருந்தன, அநேகமாக அவற்றுள் புத்தகங்களோ, அலங்காரப் பொருட்களோ இருக்கலாம்… இவற்றை பிரித்துவைக்கவே ஒருநாள் ஆகலாம், அமுதா கண்களால் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்…

    “ஒன்னும் பயப்படவேணாம்மா… இதை எதையும் நீங்க பிரிக்கவேணாம், இதல்லாம் நான் பார்த்துக்கறேன்… அடுப்படி ஐட்டங்களை மட்டும் நீங்க பிரிச்சு வையுங்க, போதும்” அமுதாவின் யூகத்தை அடையாளம் கண்டதுபோல அப்பட்டமாகச் சொன்னார்…

    “ஐயோ… அப்டி இல்லைங்க சார்..” சிரித்துக்கொண்டாள்…

    “அமுதா ரொம்ப நல்ல பொண்ணு… நம்ம விஜயா ஹாஸ்பிட்டல்லதான் வர்க் பண்றா, இன்னிக்கு சண்டே லீவுங்கறதால கூப்ட்டதும் வந்துட்டா… என்ன பண்ணனும்னு சொல்லுங்க, பர்பெக்டா செஞ்சிடுவா… நான் கிளம்புறேன் ரகு சார்…”
    டீச்சர் கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்…

    “ஐயோ இருங்க… காபி குடிச்சிட்டு போகலாம்… மாலு இப்போ வந்திடுவா..”

    “இல்ல பரவால்ல சார்., அவங்க குழந்தை வேலையா இருக்காங்க போல.. அப்புறம் வந்து பார்த்துக்கறேன்.. நீங்க வேலைய பாருங்க…” பிடிவாதமாக கிளம்பிவிட்டார் டீச்சர்…

    ஹாலில் இருந்த அட்டைப்பெட்டிகளை ஓரமாக நகர்த்திவைத்துவிட்டு, குப்பைகளை கூட்டத்தொடங்கினாள் அமுதா… குளித்துமுடித்து அறைக்குள் சென்ற ரகு, அமுதாவைப்பற்றி மனைவியிடம் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தான்..

    “திருநங்கைனு சொன்னா நம்பவேமாட்ட மாலு, அப்டியே பொண்ணு மாதிரி இருக்கா..”

    “அவகிட்டபோய் இத சொல்லிக்கிட்டு இருக்காதிங்க… நமக்கு வேலைதான் முக்கியம்.. குழந்தைய பிடிங்க, நான் போய் வேலைய சொல்லிட்டு வரேன்”

    இன்னும் சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தையை ரகுவிடம் கொடுத்துவிட்டு, தலைமுடியை வாரிச்சுருட்டி முடிந்துகொண்டே ஹாலை நோக்கி நடந்தாள் மாலினி…

    “அந்த பெட்டிகளை நகர்த்தி வச்சிட்டு ஹாலை கூட்டனும், போட்டோ பிரேம்களை துணியால தொடச்சு ஆணில மாட்டணும், ஜன்னல் கம்பிகள்ல படிஞ்சிருக்குற தூசிய தொடைக்கணும்..” தான் எதையல்லாம் சொல்லவேண்டும் என்று மாலினி நினைத்துக்கொண்டு வந்தாளோ, அவை அத்தனையும் ஏற்கனவே செய்துமுடித்திருப்பதைக்கண்டு ஆச்சர்யமடைந்தாள்.. நல்ல பொறுப்பான பொண்ணுதான் போல, தினமும் வரமுடியுமான்னு கேட்கணும்.. மனதிற்குள்
    யோசித்தபடியே சமையலறைக்குள் சுத்தம் செய்துகொண்டிருந்த அமுதாவின் அருகில் சென்றுவிட்டாள்… சாக்கு மூட்டைக்குள் இருந்த பாத்திரங்களை அடுக்கி வைப்பதில் முனைப்பாக இருந்த அமுதா, மாலினியை கவனிக்கவில்லை… அமுதாவை பார்த்ததும் மாலினிக்கு எப்போதோ பரிச்சயமான முகம் போல தெரிந்தது, பலநாட்கள் பழகிய சாயல் தொனித்தது…

    ஆழ்மனதை கசக்கி, அவள் சாயலைக்கொண்டு அடையாளம் காண முயற்சித்தாள்.. பயனில்லை, நினைவிற்கே வரவில்லை.. இப்படியாக இரண்டொரு நிமிடங்கள் தனது அருகாமையில் நின்று யோசித்துக் கொண்டிருந்த மாலினியை அப்போதுதான் கவனித்தாள் அமுதா… சட்டென எழுந்து சிரித்துக்கொண்டே வணக்கம் சொன்னபிறகுதான், அமுதாவின் முகமும் மெள்ள இறுக்கமாக மாறியது…

    “அக்கா…” தழுதழுத்த குரலில் அழைத்தாள் அமுதா…

    ஒருவழியாக யோசிப்புகள் முற்றுப்பெற்று ஒரு தீர்மானத்திற்கு வந்ததைப்போல, “சுரேஷ்?” சத்தம் வராமல் மாலினியின் உதடுகள் மட்டும் அசைந்தது… அதனை ஆமோதிப்பதைப்போல கண்களில் சுரந்த கண்ணீர் மல்க, தலையை மேலும் கீழும் அசைத்தாள் அமுதா…

    மாலினி திகைத்துப்போனாள்… அடக்கடவுளே!.. இப்படியொரு தருணத்திலா சுரேஷை சந்திக்கணும்?… தான் அத்தனை செல்லம் கொடுத்து வளர்த்த தம்பியா இது?.. அவனை கட்டி அணைத்து, சோகம் தீர அழவேண்டும் போன்று மாலினிக்கு தோன்றியது.. நிறைய பேசணும், உடல்நலம் பற்றி விசாரிக்கணும், ஆசையாக தோசை வார்த்துக்கொடுக்கணும் என எல்லா ஆசைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக உயரப்பறந்தது… ஆனால், இப்படி பெண்ணாக மாறிய தம்பியிடம் அப்படியல்லாம் உறவு கொண்டாட அவள் மனம் ஒப்பவில்லை.. அதுமட்டுமல்லாமல் “இதுதான் ஆறு வருஷத்துக்கு முன்ன வீட்டை விட்டு ஓடிப்போன என் தம்பி!”ன்னு ரகுவிடம் எப்படி அறிமுகப்படுத்தமுடியும்?… அப்படிச்சொன்னால் நிச்சயம் அதன்மூலம் குடும்பத்தில் வெடிக்கும் சண்டைகளின் விளைவு கணிக்கமுடியாத அளவல்லவா இருக்கும்… கணவரை சமாளித்தாலும் கூட அவர் குடும்பத்தினர், அக்கம் பக்கம்னு ஒவ்வொருவரையும் சமாளிப்பது பச்சைத்தண்ணீரில் வெண்ணை எடுப்பது போன்றதுதான்..

    “எப்புடிக்கா இருக்க?” ஆசையாக மாலினியின் கைகளைப்பிடித்து கேட்டாள் அமுதா… சட்டென அவள் கைகளை விலக்கிக்கொண்டு, இரண்டடிகள் பின்னே நகர்ந்துகொண்டாள்…

    “இங்க எதுக்கு வந்த?” இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும்போது, முகத்தைக்கூட நேருக்கு நேர் பார்த்திடாமல், முகச்சுளிப்போடு அக்கா இப்படி கேட்பாள் என்பதை அமுதா கனவிலும் நினைக்கவில்லை… ஒருவாறாக தன்னை நிதானித்துக்கொண்ட அமுதா, “இது உன் வீடுன்னு தெரியாதுக்கா.. டீச்சர்தான் வரச்சொன்னாக…” கண்களை
    துடைத்துக்கொண்டாள்…

    “இப்பதான் தெரிஞ்சிருச்சுல்ல, முதல்ல கெளம்பு… என் வீட்டுக்காரருக்கு இப்டி ஒன்னு என் கூட பொறந்ததுன்னு தெரியாம இருக்குறதுதான் நல்லது…”

    அமுதா திகைத்துப்போனாள்… சிறுவயது முதலாகவே அம்மாவின் அன்பிற்கு நிகராக பாசமூட்டி வளர்த்த அக்காவா இப்படி வெறுத்துப்பேசுகிறாள்?.. தனக்கு எது கிடைத்தாலும், “இது தம்பிக்கு!”ன்னு ஒரு பங்கு அக்காகிட்ட எப்பவும்
    இருக்கும்.. தோற்பதற்காகவே என்கூட விளையாடுவாள், சண்டைகளின் இறுதியில் முதலில் சமாதானம் செய்வாள், எந்த தருணத்திலும் விட்டுக்கொடுக்காதவள்.. ஆனால் இன்று?… அமுதாவால் தன்னை நிதானிக்க முடியவில்லை, கண்ணீர் அவளை மீறி வழிந்துகொண்டிருந்தது…

    “சும்மா ஒப்பாரி வைக்காம கிளம்பு, அவர்கிட்ட நான் எதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்..” மாலினி இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போது, ரகுவும் அவர்களை நோக்கி வந்துவிட்டான்…

    “வாவ்.. அமுதா… ரொம்ப நல்லா வீட்டை சுத்தம் பண்ணிருக்கிங்க… ஒரு காபி போட்டுத்தரமுடியுமா?” சூழல் புரியாமல் இடைபுகுந்தான் ரகு…

    “ஐயோ ரகு.. பேசாம இருங்க, நான் காபி போட்டுத்தரேன்..” பல்லை கடித்துக்கொண்டு உறுமினாள்…

    “நீ ரெஸ்ட் எடும்மா, இன்னிக்கு இவங்க பார்த்துப்பாங்க… மயக்கமா வருதுன்னு சொன்னில்ல, போய் படு…” தோளோடு தோளாக மாலினியை அணைத்து படுக்கையறைக்குள் அழைத்துச்சென்றான்..

    “அவ வேணாம்ங்க… நானே பார்த்துக்கறேன்…” எப்படிச்சொல்லி புரியவைப்பதென்று தடுமாறினாள்..

    “இங்கபாரு மாலு, இது 2015… நம்ம கவர்மென்ட்டே அவங்கள அங்கீகரிச்சுடுச்சு, இன்னுமென்ன தயக்கம்?.. இன்னிக்கு ஒருநாள்தான அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா, நமக்கு வேலை நடக்குதுல்ல..” மாலினியின் மனதைப்புரியாமல் விளக்கிக் கொண்டிருந்தான் ரகு… நிஜமாகவே மாலினிக்கு கண்கள் இருளத்தொடங்கியது, ரகுவிடம் வாதம் புரிந்தும் பயனில்லை…
    மனதிற்குள் எழுந்த பலநூறு குழப்பங்களோடு மெள்ள படுக்கையில் சாய்ந்தாள்.. சுரேஷ் வீட்டின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவன்… அப்பாவிற்கும் கூட ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு பையனுமாக பிறந்ததில் எல்லையில்லா
    மகிழ்ச்சிதான்.. ஆனால் ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு அவன் ஓடிப்போகையில், வீடே மயான பூமியாக காட்சியளித்தது… நிறைய தேடினோம்.. காவல்துறையில் புகார், நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு… எல்லாமும் வீணாகத்தான்
    போனது… எப்போது மீண்டும் தம்பியை பார்ப்பேன்? என்றிருந்த அதே மனதுதான், இப்போது ஏன்தான் பார்த்தோம்? என்று அரிக்கத்தொடங்கியுள்ளது.. குழந்தையை தோளில் போட்டபடியே சமயலறைக்கு வெளியே நின்று அமுதாவை அழைத்தான் ரகு… முகத்தை சேலையின் முனையில் துடைத்தபடி, வெளியே வந்தாள் அமுதா..

    “என்னம்மா காபி போடலையா?.. மாலு ஏதும் பேசிட்டாளோ?.. சாரிம்மா, அவளுக்கு இன்னும் விவரம் பத்தாது.. நீங்க வேலைய பாருங்க..” கனிவாக பேசினான்..

    முன்பு ரகுவை அமுதா எதிர்கொண்ட பார்வைக்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய மாற்றங்கள் தென்பட்டன… அக்காவின் கணவனல்லவா, ஒளிக்கீற்று கண்களில் ஒளிக்கத்தான் செய்யும்… இரண்டு நிமிடத்தில் கோப்பையில் காபியை ஆற்றியபடி ஹாலுக்கு எடுத்துவந்து ரகுவிடம் நீட்டினாள்..

    “குழந்தைய கொஞ்சநேரம் பிடிங்கம்மா.. காபி குடிச்சிட்டு வாங்கிக்கறேன்..” கைகள் நடுங்க வாங்கி கன்னத்தில் ஒற்றிக்கொண்டாள் அமுதா… குழந்தை அழகாக சிரித்தது, அக்காவை அப்படியே உரித்துவைத்திருந்தது… ரகு பார்க்காதபோது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.. காலம் முழுக்க இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திடாதா? என்று மனம் ஏங்கத்தொடங்கியது.. குழந்தையின் சிரிப்பு அவளை அழவைத்துவிடுவது போல இருந்தது..

    “குடுங்கம்மா…” காபியை குடித்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டான் ரகு.. இப்படி வாங்கிக்கொள்வான் என்று தெரிந்திருந்தால், இன்னும் சூடாக பெரிய குவளையில் கொண்டுவந்து கொடுத்திருப்பாள்.. அரைமனதோடு குழந்தையை கொடுத்தாள்…

    “நீங்க எந்த ஊரும்மா?”

    “திரு….. திருப்போரூர் சார்…” திருச்சி தொண்டைக்குழியோடு திரும்பிவிட்டது… அக்காவை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.. அதற்கு மேலும் அங்கிருந்தால், மேற்கொண்டு பொய்களை சொல்லவேண்டிவரலாம்..

    சமையலறைக்குள் சென்றுவிட்டு அடுத்தடுத்த வேலைகளை செய்யத்தொடங்கினாள்…

    சமையலறையின் வாயிலில் அமர்ந்தபடியே மற்றப்பொருட்களை பிரிக்கத் தொடங்கினான் ரகு… புத்தகங்களை அதிலிருந்து எடுக்கும்போது தூசி தட்டுவதைப்போல முகத்தை மறைத்துக்கொண்டு, கண்களை மட்டும் லேசாக உயர்த்தி அமுதாவை நோட்டமிட்டான்.. பாதி நேரம் வேலையும், மீதி நேரம் அமுதாவின் அங்கங்களின் மீதான பார்வையுமாக நேரத்தை கழித்துக்கொண்டிருந்தான்… வேலைகளை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான் ரகு..

    “என்ன சார் வேணும்?” இயல்பாக கேட்டாள் அமுதா…

    “தண்ணி வேணும்…” குவளையில் எடுத்துக்கொடுத்தாள்…

    “நீங்க யார்கூட தங்கிருக்கிங்க அமுதா?”

    “என்கூட ரெண்டு பேர் இருக்காங்க சார்..”

    “அவங்களும் ஹாஸ்பிட்டல்லதான் வேலை பார்க்குறாங்களா?”

    “இல்ல… அவங்க…” தயங்கினாள் அமுதா…

    “ஓ சரி… புரியுது… அப்போ உங்களைவிட அவங்க அதிகமா சம்பாதிப்பாங்கன்னு நினைக்குறேன்..”

    “….” பதில் சொல்லவில்லை..

    “போலிஸ் பிரச்சினயல்லாம் எப்டி சமாளிப்பாங்க?”

    “தண்ணி குடிச்சிட்டிங்களா சார்?” இன்னும் கிளம்பலையா? என்பதின் நாகரிக வடிவம்தான் இந்த கேள்வி…
    “ஓ.. சாரி, தப்பா நினைச்சுக்காதிங்க… நான் சாதாரணமாதான் கேட்டேன்”

    அவசரமாக சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறிவிட்டான் ரகு.. நல்லவேளையாக பூசிமொழுகிய கேள்விகளோடு மாமா நிறுத்திவிட்டார்… மேற்கொண்டு பேசி சிக்கல்களுக்கு வழிவகுத்திருந்தால், அறைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அக்காவிற்கு தேவையில்லா தர்மசங்கடம்… வேலைகளை முடித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் அமுதா… மாலினியும் குழந்தையும் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.. ரகுவை காணவில்லை, எங்காவது கடைக்கு போயிருக்கலாம்… கண்ணாடி திரைக்கு பின்னிருந்த அக்காவின் திருமண புகைப்படத்தை ஆசையாக
    பார்த்துக்கொண்டிருந்தாள்… இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருக்கும் போல.. அப்பா, அம்மா, அக்கா என ஒவ்வொருவராக அவள் கடக்கும்போதும் அமுதாவின் மனம் விசும்பிக்கொண்டிருந்தது.. வெகுநேரமாக
    நின்றபடி வெறித்துக்கொண்டிருந்தாள், நினைவுகள் காலச்சக்கரத்தின் ஊடே பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன…

    “அமுதா…” ரகுதான் அழைத்தான்…திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள்..

    “என்ன இங்க நிக்குறீங்க?”

    “இல்ல சும்மாதான்… வேலை முடிஞ்சிடுச்சு, அதான் சார்…” பதறினாள்…

    அவள் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது…

    “ஏன் டென்ஷனா இருக்குறீங்க?… கூல்…” அமுதாவின் வெகு அருகில் வந்துநின்று தோளை தட்டி ஆசுவாசப்படுத்தினான்…

    “உன் கஷ்டங்கள் எனக்கு புரியுது.. எதுக்காக ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு போய் கஷ்டப்படனும், இங்கயே ரெகுலரா வந்திடுவே?” தோளின் மீதிருந்த கை, ஊர்ந்து முதுகை தழுவியிருந்தது.. மனம் முழுவதும் மரத்துப்போயிருந்ததால்,
    உடலின் உணர்ச்சிகள் அப்போது அமுதாவிற்கு புரிபடவில்லை…

    “ஒன்னும் பெரிய வேலை இல்ல, சம்பளம் நீ எதிர்பாக்குறதை கொடுக்குறேன்!”

    இப்போது இரண்டு கைகளும் அவளை வட்டமிட்டு சுற்றியிருந்தன.. சூழல் அப்போதுதான் அமுதாவிற்கு புரிந்தது.. தன் முழு பலத்தையும் செலுத்தி, ரகுவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இரண்டடிகள் பின்னே நகர்ந்து நின்றாள்… அவள் முகம் வெளிறிப்போயிருந்தது, அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்…

    “ஏய் என்ன பிரச்சின உனக்கு?… உனக்கு கல்யாணம் காட்சியா ஆகப்போகுது?…

    இப்டி கிடைக்கிற சந்தோஷங்கள ஏன் மறுக்குற?.. இதல்லாம் ஒன்னும் தப்பில்ல..” சொல்லிக்கொண்டே மீண்டும் அமுதாவின் அருகில் நெருங்கத்தொடங்கினான் ரகு.. ஐயோ கடவுளே.! என்ன இது கொடுமை?… அக்காவின் வீட்டில் இப்படியொரு சோதனையா காத்திருக்கணும்?… இதுவே வேறு ஆண் செய்திருந்தால் இந்நேரம் முகத்தில் காரி உமிழ்ந்து, சட்டையை கிழித்து சண்டை போட்டிருப்பாள்… ஆனால், அக்காவின் கணவனிடத்தில் என்ன செய்வது?… தலையில் அடித்துக்கொண்டு அழுதாள், அழுகை சத்தம் கூட அறைக்குள் இருக்கும் அக்காவிற்கு கேட்டுவிடக்கூடாது என்கிற பதற்றத்தோடு அழுதாள்… அதற்குமேல் அங்கிருந்து சிக்கலை அதிகமாக்கிட விரும்பவில்லை.. விறுவிறுவென
    எழுந்து வீட்டை விட்டு வெளியேறினாள்… கண்ணீரை துடைக்கத்துடைக்க மறுபுறம் கசிந்துகொண்டே இருந்தது.. இவள் மீதான பார்வைகள் அருவருப்பாய் தோன்றியது… யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல இருந்தாலும், அதற்குரிய
    வாய்ப்பும் இல்லை.. இன்னும் அவள் கண்கள் சுரப்பதை நிறுத்தவில்லை… வீட்டை அடைந்தபோதுதான் வாசலில் எழுந்த சத்தத்தை கவனித்தாள், பக்கத்து வீட்டுப்பெண்மணி, ரோசியிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்… வழக்கமான
    சண்டைதான், ஆனால் அமுதாவின் வழக்கமான மனநிலை இல்லையே இன்று… போன வேகத்தில் அந்த பெண்ணின் நேருக்கு நேர் நின்று, “இப்ப என்னதான் உனக்கு வேணும்?” என்றாள் அமுதா…

    “நீங்க பண்றதை கேக்க ஆள் இல்லைன்னு நெனச்சியா?… அதுக ராத்திரி படுக்க போற மாதிரி, நீ பகல்ல போயிட்டு வார… இதல்லாம் நாலு குடும்பம் குடித்தனம் இருக்குற ஏரியா, ஏன் இப்புடி அசிங்கம் பண்றீங்க?” மொத்தத்தையும் கொட்டினாள் அந்தப்பெண்…

    “ஆமா.. எல்லாரும் பிராத்தலுக்குதான் போறோம்… உன் மவனுக்குதான் இன்னும் கல்யாணம் ஆகலையே, எங்க மூணு பேர்ல ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிவச்சு எங்கள மாத்தப்பாரேன்… இல்லைன்னா நல்ல பையனா பார்த்து நீயே கட்டிக்கொடு, நாங்கல்லாம் நல்ல வழிக்கு மாரிடுறோம்…” அமுதாவும் விடுவதாக இல்லை…

    “என்ன பேசுற நீ?.. அந்தம்மா பேசுறதுல என்ன தப்பு, நீ ஒழுக்கமில்லாம இருந்துட்டு இப்ப உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கனுமாக்கும்?” கூட்டத்திலிருந்த ஒரு நாற்பது வயது நபர் குரல் கொடுத்தார்…

    “ஒழுக்கத்தப்பத்தி நீ பேசுறியா?.. எப்படா சேலை வெலகும், ஜாக்கெட்டை பாக்கலாம்னு நீ அலைஞ்ச அலைச்சல்லதான் உன் ஒழுக்கம் நல்லா தெரிஞ்சுதே…”

    அமுதா ஒருவரையும் விடுவதாக இல்லை.. அதற்கு மேல் இவர்களின் ஒழுக்கத்தைப்பற்றி குறைகூற எத்தனித்த ஒழுக்க சீலர்கள் யாரும் இல்லை என்பதால், மெள்ள கூட்டம் கலைந்தது… ரோஸி இன்னும் அதிசயமாகவே பார்த்தாள்
    அமுதாவை. ஆனாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.. வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் படுக்கையில் போய் விழுந்தாள் அமுதா… தலையணையில் முகத்தை புதைத்து விம்மி அழுதாள்.. அப்படியே தூங்கியும் போனாள்.. கனவு முழுக்க அக்காவும் குழந்தையுமாக நிறைந்திருந்தார்கள்…

    “அமுதா… அமுதா…” ரோஸி எழுப்பினாள்… தூங்கி வெகுநேரம் ஆகிவிட்டது போலும், அந்தி நேரம் ஆகிவிட்டதை போல தெரிகிறது… அமுதாவின் தலை கனத்திருந்தது, தலையை பிடித்தபடியே எழுந்து அமர்ந்தாள்…

    “டீச்சர் உன்னபாக்க வந்திருக்காக?”

    முகத்தை துடைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.. நடந்த எதையும் சொல்லக்கூடாது, அக்காவிற்கு வீண் கஷ்டத்தை கொடுக்கக்கூடாது… மாலை இருள் வாசலை ஆட்கொள்ள தொடங்கியிருந்த நேரம்… டீச்சருடன் வேறொரு
    பெண்ணும் நின்றுகொண்டிருந்தாள்…

    “உள்ள வாங்க டீச்சர்” கையை பிடித்து உள்ளே அழைத்தாள்.. டீச்சரின் பின்னே அந்த பெண்ணும் உள்ளே வந்தாள்… வந்தவள் வேறு யாருமில்லை, அவள் அக்காவேதான்.. அமுதா அதிசயித்து நின்றாள், முகம் முழுவதும் பிரகாசமாக
    மாறியது… அவசரமாக இரண்டு இருக்கைகளை எடுத்துப்போட்டு அமரச்செய்தாள்..

    “என்ன சாப்பிடுறீங்க?.. காபி போடவா?” பூரிப்பாக கேட்டாள்…

    “அதல்லாம் ஒன்னும் வேணாம் அமுதா… நீ வர்றப்போ பணம் வாங்கலையாம், அதான் மாலினி கொடுக்கலாம்னு வந்துச்சு… உன்ன வீட்டுக்கு வரச்சொல்றேன்னு சொன்னேன், என்னமோ அது உங்க வீட்டை பாக்கனும்னு சொன்னுச்சு… அதான் கூட்டி வந்தேன்..”

    மாலினி ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை மடித்து அமுதாவின் கைகளில் கொடுத்தாள், அப்போது அவள் கைகளை அழுத்தி கண்களால் மன்னிப்பும் கேட்டாள்… அந்த பணத்தை பிரித்துப்பார்த்தபோது, அதனுள்ளே “அக்காவ மன்னிச்சிடும்மா..”
    என்று எழுதியிருந்தது..

    எதற்காக மன்னிப்பு?.. அவள் அப்படி பேசியதற்கா? அல்லது மாமா செய்த தவறுகள் தெரிந்தா?… புரியவில்லை… மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறி நின்றுகொண்டிருந்தாள்…

    “எனக்கு ஒரு காபி கிடைக்குமா அமுதா?” அக்காவேதான் கேட்டாள்…

    “இதோ ஒரு நிமிஷம்..” பறந்துபோய் சமையலறைக்குள் பாத்திரங்களை உருட்டத்தொடங்கினாள் அமுதா… ரோசியோடு மாலினி பேசிக்கொண்டிருந்தாள்.. மிகவும் கலகலப்பாக, உற்சாகமாக பேசினாள்…

    “உங்களுக்கு எத்தனை குழந்தைங்கக்கா?” ரோஸிதான் கேட்டாள்…

    “ஒண்ணுதான்… அதை சமாளிக்கவே நேரம் போதல..” மாலினி சிரித்தாள்…

    “பையனா? பொண்ணா?”

    “அதை பெருசானதும் அந்த குழந்தையே முடிவு பண்ணிக்கட்டும்!” அக்கா சொல்லும்போது, அடுப்பிலிருந்த பாலும் பொங்கியது…

    Share