கவிஜி.

confusedகாலை 11 மணி – 28.11.1984.
எல்லாரும் ஓடி வந்தார்கள். ஒரு சேர கொஞ்சம் முன் பின்னாக, “என்னாச்சு, என்னாச்சு குட்டி, எங்க இருக்க?” என்று கத்திக் கொண்டே வாசல் பக்கம் ஓடி வந்து தேடினார்கள்.

எனக்கு மூச்சு அடைத்துக் கொண்டு வந்தது போல திக் திக் நிமிடங்களில் தொங்கிக் கொண்டிருந்தேன். என்னால் இப்போது கத்த முடியவில்லை. மேல் கிளையில் இருந்து தவறி கீழ் கிளைக்கு வந்த நொடிகளில் பயத்தின் உச்சியில் பறந்து கொண்டு கத்திய என்னால் இப்போது கீழ் கிளையின் முனையில் கை மாட்டி தொங்கிக் கொண்டிருக்கும் போது கத்த முடியவில்லை. என் மாமா என்னை சீக்கிரம் கண்டு பிடித்து விட்டார். நான் வழக்கமாக ஏறி அமர்ந்து கொள்ளும் எங்கள் கொய்யா மரத்தின் பாதியில் நான் பாம்பாய் தொங்கிக் கொண்டிருந்ததை சில பல பார்வையிலேயே கண்டு பிடித்து விட்டார்.

“பயப்படாத, பயப்படாத. யாரும் திட்டாதீங்க. எல்லாரும் அமைதியா இருங்க,” என்று என்னையும் அதே சமயம் வீட்டில் அனைவரையும் அமைதியாக்கி விட்டு கொய்யா மரத்தின் அடியில் வந்தார்.

பிறகு ஏணி வந்தது. மெல்ல நான் இறக்கப் பட்டேன்.

மதியம் 12.30 – 28.11.1984.
தண்ணிகாய் மரத்தின் அடியே விளையாடிக் கொண்டிருந்த நான் வீட்டை நோக்கி தலை தெறிக்க ஓடி வந்தேன். என் பின்னால் ஒரு பாம்பு என்னை விரட்டியதா? இல்லை. என்னைக் கண்டு பயந்து மரத்தின் மேல் ஊர்ந்து ஏறியதா என்று என்னால் அப்போது கவனிக்க முடியவில்லை. என்னால் வீட்டை நோக்கி மட்டுமே ஓட முடிந்தது. கத்துகிறேன், மீண்டும் வீட்டில் உள்ளவர்கள் திடு திடுவென வாசலுக்கு ஓடி வந்தார்கள்.

“என்னாச்சு என்னாச்சு” என்று அவர்கள் கத்துவதற்கும். நான் “பாம்பு, பாம்பு” என்று கத்திக் கொண்டு ஓடி வருவதற்கும் சரியான இடைவேளையில் மதிய உணவுக்கு வந்த என் மாமா மீண்டும் என்னை நோக்கி ஓடி வந்து என்னை தாவி அனைத்துக் கொண்டார் என் உடல் நடுங்கியது.

“என்னாச்சு குட்டிப்பா?”-என்று கேட்டுக் கொண்டே நான் எங்கிருந்து ஓடி வந்தேனோ அங்கேயே மறுபடியும் மெல்ல, கவனமாக பார்த்து பார்த்து போனார். நான் காட்டிய அந்த பாம்பு இன்னும் மரத்தின் மேல் ஒரு கிளையில் அமர்ந்து எங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. எல்லாரும் என்னை முறைத்தார்கள். அம்மா குச்சியை ஒடித்துக் கொண்டு அடிக்கவே வந்து விட்டார்.

எல்லாரையும் போக சொல்லி விட்டு, மாமா என்னைப் பார்த்து ஆறுதலாக, “ஏன் குட்டிப்பா. இது அணிலுன்னு உனக்கு தெரியாதா!” என்று வாஞ்சையாக கேட்டார்.

“ஓ அணிலும் இப்டிதான் இருக்குமா மாமா? என்று கேட்டேன். அப்போதைக்கு சிரித்து விட்டார் மாமா.

அதன் பிறகு சாப்பிட்டுக் கொண்டே என் அத்தையிடம் “இன்னைக்கு நாளே நல்லா இல்லயே. மனசுக்கு என்னமோ மாதிரி இருக்கு” புலம்பிக் கொண்டிருந்தார்

1984 – அக்டோபர் ஒரு மழை நாள்.
மழை தூரத் தொடங்கி, இந்தா வந்துட்டே இருக்கேன் என்றது போல ஒரு சிணுங்கல், ஒரு முறைப்பு என்று அப்டி இப்டி என்று சாரலாய், பொல பொலவென வந்து கொண்டிருந்தது. நான் ஆத்தாவிடம் சென்று “எனக்கு மிச்சர் வேணும்” என்றேன்.

“வா”- என்று எனக்கு மட்டும் மழைக் கோட்டை மாட்டி விட்டு கடைக்கு தூக்கி சென்றது. என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்ட ஆத்தா தன் முந்தானையை என் தலை மேல் போர்த்திக் கொண்டு நடந்தது. நான் எது கேட்டாலும், எப்போது கேட்டாலும் ஆத்தா மறுக்காது. என் ஆத்தாவுக்கு கொஞ்சம் காது மந்தம். சாலையில் போகும் போது நான்தான் இடுப்பில் உக்கார்ந்து கொண்டு முன்னால் பின்னால் வரும் வண்டிகளை சொல்லி, விலக சொல்லிக் கொண்டே போவேன்.

வழியெல்லாம் மழையோடு சேர்த்து மிச்சரையும், வாயில் கொஞ்சம் மண்ணில் கொஞ்சம் என்று போட்டபடியே வந்தேன். இந்தக் காட்சியை இப்போது என் நினைவுகளின் வெளியில் காண்கிறேன். அது ஒரு அற்புத ஓவியம் போல, மழையினூடே ஒரு சிவத்த குட்டை கிழவி, இடுப்பில் ஒரு குட்டிப் பையனை வைத்துக் கொண்டு வேக வேகமாக நடந்து வரும் காட்சியில் அசைகின்ற ஓவியம் ஒன்று தன்னை வரைந்து கொண்டே நகர்ந்து கொண்டு இருப்பது போல தோன்றுகிறது.

வீட்டை நெருங்கும் போது ஒரு வளைவினில் மழை வேகம் எடுத்து விட அருகினில் இருந்த ஒரு வீட்டு வாசலில் மறைந்து கொண்டோம். நான் மழைக் கோட்டு போட்டு இருந்தாலும் முன்னால் ஜிப் போடத் தெரியாமல் என் நெஞ்சு, வயிறு பகுதி நனையத் தொடங்கியிருந்தது. ஆத்தாவும் எவ்ளவோ முயற்சி செய்து கண்களைக் கூராக்கி ஜிப்பை போட்டு விட முயன்றது, முடியவில்லை. அந்த வீட்டு ஆள் (அவர் பெயரை மறந்து விட்டேன்) “என்னடா குட்டி, ஆத்தாள மழைல போட்டு இப்பிடி கஷ்டப் படுத்தறயே” என்றபடியே வெளிய வர, ஆத்தா அவரிடம், “தம்பி இந்த சிப்ப கொஞ்சம் போட்டு விடுய்யா” என்று கேட்டது. இப்போது நினைக்கிறேன், ஆத்தா கேட்கும் தோரணை மற்றவர்களிடம் பேசும் முக பாவம், கொஞ்சமாக மனதில் புகை போல தங்கி இருந்தாலும் ஊதி ஊதி நினைவுகளைக் கிளறுகுறேன். அது அத்தனை அன்பானது, வாஞ்சையானது, தூய்மையானது, வெகுளித்தனமனது. ஒரு போதும் யாருக்கும் எந்த துரோகமும் நினைத்திடாத ஒரு மனம் அது. ஜிப்பை போட்ட பிறகு, நான் நனைய மாட்டேன் என்று நம்பிய அந்த முகத்தில் விழுந்த மழைத் துளிகள் இன்னும் என் நெஞ்சினில் சொட்டிக் கொண்டிருக்கின்றன. சுருக்கம் விழுந்த அந்த முகத்தை ஒரு வெண்ணிற புகை வடிவமாக பின்னொரு நாள் நான் கண்டேன்.

1985 ஜனவரி – ஒரு நாள்.
தாத்தா அதை கதை போல சொல்லிக் கொண்டிருந்தார்.

அதே இடம், மதியம் 3 மணி இருக்குமாம், வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்ப வண்டியில் ஏறிய பிறகுதான் தன் தலைக்கு கட்டும் மைக்கா கவர் கீழேயே இருக்கிறது என்று பார்த்திருக்கிறார். அதற்குள் வண்டியும் நகரத் தொடங்கி விட, டிரைவரைப் பார்த்து வண்டியை நிறுத்த சொல்ல எத்தனிக்க, கீழே இருந்து மைக்கா கவர் தானாக வண்டிக்குள் வந்து விழுந்ததை ஆச்சரியத்தோடு பயந்து கொண்டே பார்த்து, வாயடைத்து அதே இடத்தில் உற்றுப் பார்த்திருக்கிறார். ஆத்தா சிரித்துக் கொண்டே மறைந்திருக்கிறது. நான் மிரண்டு போய் இன்னும் கொஞ்சம் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சுருண்டு கொண்டேன். தாத்தா கண்கள் கலங்கி வாசல் வெறித்த கணத்தை இப்போது நானும் வெறிக்கிறேன். கலங்க ஒன்றுமில்லாதது போல வெற்றுப் பார்வையில் என் கண்கள் தூசுகள் கடக்கின்றன.

1992 மே – ஒரு நாள்.
நான் எப்போதுமே ஜன்னலோரம்தான் படுப்பேன். நான் வந்திருக்கிறேன் என்றால் அந்த இடத்தை எனக்கு விட்டு விடுவார்கள். அன்றும் அப்படிதான் ஜன்னலோரம் படுத்திருந்தேன். எனக்கு அடுத்து என் தம்பி, அதற்கு அடுத்து எங்க அக்கா, அடுத்து எங்க அண்ணி, அடுத்து எங்க தாத்தா படுத்திருந்தார்கள்.

தூங்குவதற்கு முன் எனக்கு நேராக மேலே இருந்த பரணின் அடிபாகத்தில் கண்கள் விழுந்தது. குட்டி என்று என் பெயர் எழுதி இருந்தேன். வருடம் கூட 1984 என்று அருகினில் எழுதி இருக்கிறேன். அது இன்னும் அழியாமல் இருக்கிறது எப்படி என்று அப்படி ஓர் ஆச்சரியம் (அது இன்றும் அழியாமல் இருக்கிறது ஆச்சரியம் தொடர்கிறது).

இதே ஜன்னல்தான் காற்றே இல்லாதது போல இருந்த ஒரு முன்னிரவில் படாரென அடித்து தானாக மூடிக் கொண்டது ஞாபகத்தில் வந்தது. யாரோ ஜன்னலை அடித்து சாத்தி விட்டு போவதை தான் உணர்ந்ததாக பெரியப்பா சத்தியம் செய்து கூறினார். அந்த நேரத்தில் இங்கே வந்து போக யாரும் இல்லை என்பது ஏக மனது கருத்தாக உணரப் பட்டது. பின் நேரம் ஆக ஆக, கொய்யா மரத்தினடியில் யாரோ விசும்பிக் கொண்டே இருந்ததும், அதைத் தொடர்ந்து சில குருவிகளின் பயம் கலந்த கத்தலும், தூரத்தில் ஏதோ ஒரு காட்டுப் பன்றியின் உறுமலும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருந்ததையும், வீட்டுக்குள் எல்லாரும் விழித்துக் கொண்டும், யாரும் யாருடனும் எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்து கொண்டு, ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டு, திக் திக் இரவைக் கழித்தது ஞாபகத்தில் வந்து போனது.

நான் மெல்ல தூங்கி போனேன். அது ஒரு கனவு காட்சி. தாத்தாவின் கால் மேட்டில் என் ஆத்தா வெள்ளையாக புகை வடிவில் அமர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும், குறிப்பாக என்னை அதே வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தது.

ஆத்தா எப்போதும் ஒரு காலை உள் நோக்கி மடக்கி, தன் இடது கையை தரையில் ஊன்றி கொஞ்சம் சாய்ந்தார் போலத்தான் அமரும். அன்றும் அப்படித்தான் அமர்ந்திருந்தது. அந்த அறை கொஞ்சம் சூடாகவே இருந்தது, வழக்கத்துக்கு மாறாக. நன்றாக என்னால் உணர முடிந்தது. ஆத்தா எனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது ஆத்தாவேதான். ஆனால், பால் போல வெள்ளை நிறத்தில் மிதந்து கொண்டிருப்பது போல அமர்ந்து கொண்டிருக்கிறது. எனக்கு உள்ளுக்குள் நடுக்கமாக, என் மூச்சு, பெரு மூச்சாக மாறியிருந்தது. தடுமாற்றம், தவிப்பு, தாகம் எடுப்பதைப் போல உணர்ந்தேன். என் உடல் தானாக ஆடுவது போல ஒரு பிரமை. என் உடல் இன்னும் எடை கூடினார்போல உணர்ந்தேன். சட்டென விழித்து படாரென எழுந்து, எழுந்த வாக்கிலேயே அமர்ந்தேன். எழும்போதே என் பார்வை முழுக்க நான் பார்த்துக் கொண்டிருந்த என் ஆத்தா மீதுதான் இருந்தது. எழுந்து அமர்ந்த பின்னும் ஆத்தா என்னை பார்த்துக் கொண்டிருந்தது. நான் கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தேன். இப்போதும் ஆத்தா என்னையே பார்த்தது. நேருக்கு நேராக கண்களில் தெரிந்த புகை போலான உருவம் மெல்ல மறையத் துவங்கியது. அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் அதே வேகத்தில் படுத்து போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டு என் தம்பியைக் கட்டிக் கொண்டேன்

இன்று – 28-12-2014.
இப்போது நினைத்தாலும் சில்லிடும் காட்சி அது. அதன் பிறகு நான் எல்லாரிடமும் கூறினேன். யாரும் நம்பவில்லை. வெறும் ஞாபகங்கள் என்று கடந்து விட்டார்கள். ஆனால் என்னால் அதை வெறும் ஞாபகமாக கடக்க முடியவில்லை. ஞாபகங்கள் மட்டுமா மரணத்துக்கு பின் இருக்கிறது. அதன் பிறகும் ஒரு தேடல் இருப்பதை நான் உணர்கிறேன். அங்கும் ஒரு மொழி இருக்கிறது. அந்த பாஷை நமக்கு புரிவதில்லை. இதோ இந்த கிணறு. வெறும் சாட்சி மட்டும் அல்ல. ஒரு மௌன மொழியின் ராட்சச கதறலை உள் வாங்கிக் கொண்டு மாயங்களின் குறியீடாக இங்கே இருக்கிறது. இதைத் தேடித்தான் நான் இன்று வந்திருக்கிறேன். கடந்த வாரம் முழுக்க என் ஆத்தாவின் நினைவுகள் என்னை தூண்டி ஏனோ இங்கு வர சொல்வது போல, ஒரு முரண்பாட்டு முகவரிக்குள் தொலைந்து விடும் முயற்சியை என்னில் விதைப்பது போல, ஒரு முடிச்சாகிக் கொண்டே இருந்தது. வந்தே விட்டேன். யாரும் சட்டென கண்டு பிடிக்க முடியாத பூமி வளையத்துக்குள் இந்த கிணறு இப்போது இருப்பது போல நான் நம்புகிறேன். காலம் ஓட ஓட பாதைகள் சுருங்குவதும் விரிவதும் எத்தனை எத்தனை மாயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன. இதோ இந்த கிணறுகூட தன் வட்டத்தை சுருக்கிக்கொண்டிருக்கிறது. இத்தனை குறுகிய கிணறல்ல இது. இங்கு வரும் பாதை கூட இத்தனை குறுகியது அல்ல. ஒரு பேருந்து போகும் அளவுக்கு இருந்த பாதை இப்போது ஒரு ஜீப் போகும் அளவுக்குத்தான் இருக்கிறது.

இந்தக் கிணறு.
நான் மெல்ல அருகினில் செல்கிறேன். என் அலைபேசி கொண்டு புகைப்படம் எடுக்கிறேன். ஆள் அரவமற்ற காட்டுக்குள் ஒரு பூதமாக மறைந்து இருக்கிறது. இனம் புரியாத பயத்தை எனக்குள் தெளிக்கிறது. உற்று நோக்குகிறேன். இதே கிணறுதான். 1984 டிசம்பர் 28 நான் கொய்யா மரத்தில் இருந்து விழுந்து தொங்கிய பின், அணிலை பாம்பென்று சொல்லி கத்திய பின், ஒரு, ஒரு மணி நேரம் கழித்து இந்த கிணற்றுக்குள் விழுந்து இறந்து போனதாக, தண்ணீர் சொட்ட சொட்ட ஆத்தாவைத் தூக்கி கொண்டு வந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆத்தாவை படுக்க வைத்து அனைவரும் கத்திக் கொண்டும் கதறிக் கொண்டும் இருந்தார்கள். நான் எப்போதும் போல மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆத்தா வாங்கிய கடைசி மிச்சர் அது. இப்போது அழ வேண்டும் போல இருந்தது. கொலைக்கார கிணறு உயிரைக் கொண்டு விட்டு ஒன்றுமே தெரியாதது போல, வாய் மூடி கிடக்கிறது சனியன். ஒரு கல்லை எடுத்து வேகமாக வீசினேன். ரெம்ப நேரம் கழித்து குபுக்கென்று ஒரு அமிழும் சத்தம் ஆழ் மனதில் இரைச்சலாக குபீர் என கேட்டது. அது எனக்கு மட்டுமே எதிரொலிக்கும் மிக நீண்ட சத்தமாக இருக்க போகிறது, இருந்தது.

என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. ஒரு புகைப்படம் போல அமர்ந்திருந்தேன். ஒரு தீர்க்கத்தை கலைத்துப் போடும் வேஷங்கள் நிறைந்த இடமாக அது இருந்தது. தேடலின் நிசப்தங்கள் யுத்தமற்ற போர்க்களத்தின் ஒரு மூலையில் படிந்து போன ரத்தக் கரையை சுரண்டி சுரண்டி எனக்கு பூசிக் கொள்ளும், பாரா ஆன்மாவை கசியச் செய்யும் இடமாக அது இருந்தது. இறப்பின் மணம் அங்கு வீசிக் கொண்டிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. என்னிலும் அந்த கிணற்றை சுற்றிலும். எனக்கு ஆத்தாவை பார்க்க வேண்டும் போல இருந்தது. தேடிப் பார்த்தேன் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். மெல்ல கூப்பிட்டுப் பார்த்தேன் எனக்கே அச்சமாக இருந்தது.

அந்த ஆத்தா என்கிற வார்த்தை இத்தனை வருடங்களில் எனக்கு எழுத்துப் பிழையை நாவில் நீட்டியது. முதல் முதல் பேசி பழகும் நாவைப் போல மடங்க மறுத்து. பயந்து ரத்தம் பீய்ச்சும் வலியோடு வெளி வந்தது.

ஆ….த்தா….

இப்போது ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில், எடுத்த புகைப்படத்தை அலைபேசியில் பார்க்கத் தொடங்கினேன்.

ஒவ்வொரு புகைப்படமாக பார்த்தேன். திக் என்று இதயம் ஒரு நொடி நின்றது. புகைப்படத்தில் இருந்து எடுத்த நடுங்கும் கண்களை மீண்டும் கிணற்றில் வீசினேன். அதும் வெறும் கிணறாய் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் புகைப்படத்தைப் பார்த்தேன். இனி அங்கு நிற்பது சரி இல்லை என்று உள்ளே என்னைத் தூண்டிய உயிர் பயத்தில் வேக வேகமாக வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தேன். என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை என் உடல் நடுங்கியது. எனை சுற்றி பனி மூட்டம் என்னை விரட்டுவது போலத் தோன்றியது. வேகமாக என் நண்பனுக்கு அலைபேசியில் அழைத்தேன் நடந்து கொண்டே …

“சொல்லு மச்சான்”

“மாப்ள, கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நம்ம ராஜாவும் வேம்புவும். எங்க போனாங்க.”

“அவுங்கதான் ஓடி போய்ட்டாங்களேடா, எங்க இருக்காங்கனு தெரியல. சிக்குனாங்கனா கொன்னேபுடுவாங்க. அவுங்கவுங்க வீட்டுல.”

“டேய் மச்சா, ஏற்கனவே அவுங்கள கொன்னுதான் போட்ருக்காங்கடா. எங்க ஆத்தா செத்த கிணத்துக்குள்ளதான் அவுங்க பாடி இருக்குது.”

அலைபேசியில் விழுந்திருந்த புகைப்படத்தில் வேம்புவும், ராஜாவும் கிணற்று மேட்டில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அலைபேசியை சட்டென மூடி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நடையைக் கூட்டினேன்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆத்தா …

  1.       இது கற்பனையா. நிஜமா.
    நிகழ்ந்த சம்பவம் என்றால் மேலும் அறிய ஆவல்.
    நல்ல எழுத்துப் பாங்கு. நன்றி.

  2.  நன்றி…..பாதி நிஜம்…. மீதி கற்பனை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.