ஆன்மீகமும் நானும் (6)
நடராஜன் கல்பட்டு
சாராயத்தில் பிறக்குதோ சக்தி
எனது சக ஊழியர்களில் ஒருவர் பரஞ்சோதி. நான் விஜயவாடாவில் இருந்த போது காகிநாடாவில் பணி புரிந்து வந்தவர் அவர்.
பரஞ்சோதியின் வாழ்க்கையில் ஒரு சோகம். அவரது மனைவிக்கு அடிக்கடி வலிப்பு வந்து விடும். அம்மாதிரி ஒரு முறை வந்தபோது எரியும் அடுப்பின் மீது விழுந்து அவளது கால்களில் பலத்த தீக் காயம் கூட ஏற்பட்டு விட்டது.
அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இதோ.
பித்தாபுரம் ஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி ஜில்லாவில் சுமார் 40 முதல் 50 ஆயிரம் ஜனத்தொகை கொண்ட ஒரு சிற்றூர். அதற்கு தக்ஷிண காசி என்றுகூட ஒரு பெயர் உண்டு. அங்கு ஒரு ‘ஞானி’ பிறர் குறைகளைத் தீர்த்து வைக்கிறார் என்று கேள்விப்பட்ட பரஞ்சோதி அந்த ‘ஞானி’ இருந்த இடத்தினைச் சென்றடைந்தார். அவர் முறை வந்த போது உள்ளே சென்று ‘ஞானி’ முன் அமர்ந்தார்.
‘ஞானி’ தன் கையில் இருந்த இரண்டு துண்டுக் காகிதங்களில் ஒன்றைப் பரஞ்சோதியிடம் தந்தார். மற்றொன்றைச் சுருட்டி ஒரு மூலையில் விட்டெறிந்தார். “உனக்குப் பிடித்தமான ஒரு பூவின் பெயரை எழுது. அதை இப்போது சுக்கு சுக்காகக் கிழித்துப் போடு. இப்போது மூலையில் சுருட்டியபடிக் கிடக்கும் சீட்டினைப் பிரித்துப் பார்” என்றார்.
சொன்னதைச் செய்தார் பரஞ்சோதி. என்ன ஆச்சரியம் அவர் எழுதிய பூவின் பெயர் அந்த சீட்டில்!
அடுத்ததாக, “உன் சட்டைப் பையில் உள்ள ஒரு நாணய்த்தை எடுத்துக் கைக்குள் நன்றாக மூடி வைத்துக் கொள்” என்றார். பரஞ்சோதியும் அவர் சொன்னதைச் செய்தார். அடுத்த நிமிஷம் ஞானி தன் கண்களையும் கைகளையும் மூடிக் கொண்டு உடலின் எல்லாத் தசைகளையும் இறுக்கிக் கொண்டு பற்களை நற நறவென்று கடித்தார். அடுத்த வினாடி கண்களைத் திறந்து பரஞ்சோதியைப் பார்த்து, “இப்போது உன் கையைத் திற” என்றார்.
கையைத் திறந்த பரஞ்சோதிக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. காரணம் அவர் கையில் இருந்த நாணயம் கண்டபடி கசக்கிய காகிதம் போலக் காணப் பட்டது.
“என் தக்ஷிணையைக் கொடு” என்றார் ஞானி. பரஞ்சோதி பத்து ரூபாயைக் கொடுத்தார்.
“போதாது. உன்னிடம்தான் பணம் இருக்கிறதே. கொடு” என்றார் ஞானி.
இன்னுமொரு பத்து ரூபாயயை அவர் கையில் வைத்து விட்டு கிளம்பத் தயாரானார் எனது நண்பர்.
“எவ்வொளவு நாட்கள் இவ்வூரில் இருப்பாய் நீ? மீண்டும் வந்து பார் என்னை.”
“இன்று இரவே கிளம்புகிறேன்.” உண்மையில் அவ்வூரில் அவர் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி இருந்தன.
மறு நாள் மாலை பரஞ்சோதி கடைத் தெருவில் காரில் இருந்து இறங்கி நடந்து கொண்டிருந்தபோது அவர் தோள்மீது பின்னிருந்து ஒரு கை பட்டது.
“நேற்றே போகப் போவதாகச் சொன்னாய்?”
திரும்பிப் பார்த்தார் பரஞ்சோதி. அங்கு ‘ஞானி’.
“வேலை கொஞ்சம் பாக்கி இருந்தது. அதான்…..” இழுத்தார் பரஞ்சோதி.
“சரி. ரூபாயை எடு. எனக்கு சாராயம் சாப்பிடத் தினமுன் பணம் வேணும்.”
பத்து ரூபாயைப் பையில் இருந்து எடுத்து அவர் கையில் கொடுத்தார்.
“போதாது இது. இன்னுமொரு பத்து ரூபாய் எடு.”
பேசாமல் இன்னுமொரு பத்து ரூபாயை அவர் கைகளில் கொடுத்து விட்டுக் காரில் ஏறி காகிநாடா திரும்பினார் பரஞ்சோதி.
சாராயம் கொடுக்குதோ அவருக்கு சக்தியினை?
இப்படிப் பட்ட ‘தேவ தூதர்கள்’ பலர் இருக்கின்றார்கள் நம் நாட்டில்! அவர்களை நம்பி ஏமாறுகிறவர்களும் இருக்கிறார்கள் பல லட்சக் கணக்கில்!!!
சித்துக்கள் சில
செய்து காட்டி
கும்பல் சேர்த்தே
தண்டல் காரனாய் மாறு கின்றார்
இன் நாளில் பலர்
வெளுத்த தெல்லாம் பாலு மல்ல காவி
உடுத்தவ ரெல்லாம்
சாமியாரு மல்லர்
சாமி யாரென அறிந்திடல் வேண்டுமா
உன்னுள்ளே உறை கின்றார்
என்னுள்ளே உறை கின்றார்
எல்லா வற்றிலு முறை கின்றார்
மந்திரம் வேண்டாம்
தந்திரம் வேண்டாம்
கண்டிடத் தானவரை
அன்பும் ஆதரவும் தந்திடு நீ
துன்பத்தி லுழல் வோர்க்கே
கண்டிடலாம் உன்னுள் குடி
கொண்ட ஈசனை நீ
(தொடரும்…..)
நடராஜன் கல்பட்டு