நடராஜன் கல்பட்டு

கோவிந்தன் எனது சக ஊழியர், அவர் ஹைதராபாதில் வேலை பார்த்து வந்த போது அவருடைய பெரிய மகள் வயதுக்கு வந்தாள். அந்த சமயம் ஏதோ ஒன்று அவளது மூளையைத் தாக்கி விட்டது. விழித்திருக்கும் போதெல்லாம் கூண்டில் அடை பட்ட புலி போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருப்பாள். கோவிந்தனும் பார்க்காத வைத்தியர் இல்லை. ஆனால் அவள் நிலையில் ஒரு மாற்றமும் தெரிய வில்லை.

ஒரு நாள் கோவிந்தன் சொன்னார், “நடராஜன் புதுக்கோட்டை வரணும். அவ்விட ஒரு ஆளு கொவில் ஒண்ணுலெ குறி, பரிகாரங்கள் சொல்லுதாம்.”

பதிலுக்கு நான் சொன்னேன், “கோவிந்தா இவங்கெள்ளாம் ஏமாத்துக் காரங்க. ஒன் பொண்ணு குணமாகணும்னா நல்ல வைத்தியரைப் பாரு. மனசுக்கு நிம்மதியோ, இறைவன் அருளோ வேணுமா கோவிலுக்குப் போ. அல்லது வீட்டிலேயே ஆண்டவனெ நினெ, பூஜெ பண்ணு” என்று.

கோவிந்தன் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. என்ன செய்ய? அவர் நிலமை அப்படி. நீரில் மூழ்குபவன் ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுவான் என்று சொல்வார்களே அதுதான் அவர் நிலை அப்போது. இருவரும் புதுக்கோட்டைக்குக் கிளம்பினோம்.

ஊருக்குத் தெற்கே சுமார் 5 கிலோ மீடர் தூரத்தில் ஒரு சிறிய கிராமம். அங்கு பூட்டிய நிலையில் ஒரு பழய கோவில். ஒரு காலத்தில் அது பிரசித்தமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும், தேர், திருவிழா என்று. காரணம் அங்கு ஒரு தேர் முட்டி இருந்தது. ஆனால் தேர் இல்லை. அதை உடைத்து பண்டைய கலைப் பொக்கிஷங்களாக விற்றிருக்க வேண்டும்.

தேர் முட்டி அருகே ஒரு பெரிய கீத்துக் கொட்டகை. அது கதவு வைத்த தடுப்பினால் இரண்டாகப் பிரிக்கப் பட்டு இருந்தது. முன் பகுதியில் இரு மேஜைகள் ஒரு நாற்காலி. ஒரு மேஜை மீது ஒரு தடிமனான நோட்டுப் புத்தகமும், ஒரு திறந்த பெட்டி நிறைய துண்டுக் காகிதங்களும். பக்கத்து மேஜையின் மீது ஒரு கூடை நிறைய எலுமிச்சம் பழங்கள், மற்றும் ஒரு காலி அட்டைப் பெட்டி நாற்காலியில் ஒரு ஊழியர்.

முதல் முறை வருபவர்கள் தங்கள் பெயர், விலாசத்தினை ரூபாய் ஐந்து கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் பதிவு எண் இரண்டு சீட்டுகளில் குறிக்கப் பட்டு, ஒன்று உங்கள் கையிலும் மற்றொன்று பக்கத்து மேஜை மீது வைக்கப் பட்டுள்ள காலிப் பெட்டியிலும் போடப் படும். அவை அவ்வப்போது வேறு ஒரு ஊழியர் மூலம் உள்ளே எடுத்துச் செல்லப் படும். உங்கள் கையில் இரண்டு எலுமிச்சம் பழங்கள் கொடுக்கப் படும். அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளேசென்று அமைதியாய் அமர வேண்டும்.

இரண்டாவது மூன்றாவது முறை வருபவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தங்களிடம் உள்ள சீட்டினைக் காட்டி உள்ளே செல்லலாம். உங்களது எண் ஒரு சீட்டில் குறிக்கப் பட்டு உள்ளே அனுப்பப் படும். உள்ளே செல்லுமுன் இரண்டு எலுமிச்சம் பழங்களுக்கு ரூபாய் இரண்டு கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டும்.

(ஊருக்குள்ளே மார்கெட்டில் அந்நாட்களில் ஒரு ரூபாய்க்கு பத்து முதல் இருபது வரை கிடைக்கும் எலுமிச்சம் பழங்கள்!)

நாங்கள் இருவரும் எலுமிச்சம் பழ சகிதம் உள்ளே சென்று அமர்ந்தோம்.

கொட்டகை நடுவில் ஒரு கம்பளி மீது உடலில் பட்டை பட்டையாக விபூதியும், நெற்றியில் ஒரு ரூபாய் அளவில் குங்குமமும் வைத்துள்ள ஒருவர். அவர்தான் குறி, பரிகாரம் சொல்லும் பூசாரி.. அவர் முன்பு பள பளவெனத் தேய்க்கப் பட்ட ஐந்து செப்புத் தட்டுகள் சுமார் பத்து அங்குலெ விட்டத்தில். ஒன்றிலே விபூதி. ஒன்றில் குங்குமம். மூன்றாவதில் ஒரு சிறிய வெள்ளி வேல். நான்காவதில் ஒரு மோதிரம். ஐந்தாவதில் எண்கள் எழுதப் பட்ட சீட்டுகள்.

ஒரு சீட்டினை எடுத்து அதில் உள்ள எண்ணை உரக்கப் படிக்கிறார். அந்த எண் சீட்டை வைத்திருப்பவர் எழுந்து நிற்கிறார்.

“முன்னாடி வா. இங்கெ வந்து ஒக்காரு. ஒனக்கு என்ன கொறென்னு சொல்லு. ஒம் பேரு, கோத்திரம், நட்சத்திர்ம் அதையும் சொல்லு.”

எழுந்து நின்றவர் பூசாரி முன் வந்து உட்காருகிறார். “எம் பேரு முருவனுங்க. சிவ கோத்திரம். அஸ்த நட்சத்திரங்க.”

“சரி… என்ன கஷ்டம் அஸ்த நட்சத்திரக் காரனுகுன்னு சொல்லு.”

“என் நெலெத்துக்குத் தண்ணி பாச்ச கெணறு வெட்டினேங்க.”.

“என்ன தண்ணி வல்லியா?”

“ஆமாங்க. நீங்கதான் எதுனா செஞ்சு தண்ணி வர வளிக்கணுங்க.”

“சரி பாக்கலாம் என்ன பண்ணலாம்னு.”

தட்டில் இருக்கும் மோதிரத்தை எடுத்துக் காதருகே வைத்துக் கொள்ளுகிறார். கடவுளுடன் நேரில் தொலை பேசி வழியே பேசுகிறார். (செல் போன்கள் வந்திடாத காலம் அது!)

“ருதுதும் சந்தத்ய. முருகன் நாமஸ்ய. சிவ கோத்ரஸ்ய. ஹஸ்த நக்ஷத்ரஸ்ய… ஹான்… ஹான்… கெணறு… ரத்த காட்டேரியா ஹான்… ஹான்.. என்ன பண்ணலாம்? அப்பிடியா? சரி அப்பிடியே சொல்றேன் முருகன் கிட்டெ.”

“முருகா… அந்தக் கெணத்துலெ ஒரு ரத்தக் காட்டேரி இருக்கு அதுனாலெ தான் தண்ணி வரலெ. நாம அந்தக் கெணத்தெ ஆழப் படுத்த கடப்பாரெயெ வெச்சோம்னா அது ஒன்னெயுன் என்னையும் ரத்த ரத்தமா வாந்தியெடுக்க வெச்சு சாக அடிச்சிடும்.”

“ஐயா நீங்கதான் எப்படியாவது இதுக்கு ஒரு வளி சொல்லணுங்க. தண்ணி இல்லாமெ பயிருங்க கருகிப் போயிடுதுங்க.”

“அப்பிடியா சரி பாக்கலாம்.” மீண்டும் தொடர்கிறது இறவனுடன் தொலை பேசி சம்பாஷணை.

“ருதுதும் சந்தத்த்ய. முருகன் நாமஸ்ய. ஹான்… ஹான்… அதே கெணறு கேசுதான். என்ன பண்ணலாம்? எப்படியாவது முருகனுக்குத் தண்ணி வரவழிச்சிச்சுக் கொடுகணுமே. ஹான்… ஹான். அப்பிடியே பண்ணச் சொல்றேன்.”

முருகன் கையில் இருந்த இரு எலுமிச்சம் பழங்களையும் வாங்கி விபூதித் தட்டில் வைத்து, உதடு ஏதோ முணு முணுத்துக் கொண்டிருக்க, வெள்ளி வேலால் சிறிது விபூதி எடுத்து அவற்றின் மேல் தூவி, சிறிதளவு குங்குமத்தினை எடுத்து அவற்றின் மீது வைத்து முருகன் கையில் கொடுக்கிறார் பூசாரி.

“முருகா இந்த ரெண்டு எலுமிச்சம் பழத்தையும் பத்திரமா வீட்டுக்குக் கொண்டு போ. ஒண்ணெ வீட்டுலெ மாட்டி இருக்குற சாமி படத்த்க்கு முன்னாடி வை. இன்னோண்ணெ ரெண்டா வெட்டி ஒரு துண்ட கெணெத்துக் குள்ளெ போடு. இன்னோரு துண்டெ அங்கெ இருக்குது பாரு ஒத்தடிப் பாதெ அதுலெ விட்டெறி. அப்புறமா கெணத்தெ ஆழப் படுத்து. தண்ணி பீச்சிகிட்டு வரும் பாரு.”

முருகனுக்குப் பரம சந்தோஷம் கிணற்றில் அப்போதே தண்ணீரைப் பார்த்தது போல. கூட்டத்தில் ஒரு சல சலப்பு. “எவ்வொள் கரெக்டா சொல்றாரு நேரெ பாத்தாப்புள? சாமி படம்… ஒத்தடிப் பாதெ!!!”

சாமி படம் இல்லாத வீடு இருக்காது அந்த நாளுலெ. ஒத்தடிப் பாதெ இல்லாத வயல் கெணறும் இருக்காது.

இதே பாணியில் இன்னும் பல.

கோவிந்தனுக்கும் ஏதோ ஒரு பரிகாரத்தினைச் சொன்னார் அவர்.

என் மனம் கொதித்தது. ‘இவர்களையெல்லாம் கட்டி வைத்து உதைத்தால் என்ன?’ என்று. ஆனால் அதைச் செய்ய முயன்றாலோ என்னைத்தான் கட்டி வைத்து உதைப்பார்கள் மக்கள்!

கடைசியில் ஒரு அறிவிப்பினை அளிக்கிறார் பூசாரி ஒரு விமானப் பயணச் சீட்டினை அனைவர் கண்கள் முன்னும் ஆட்டிய படி, “அடுத்த வாரம் சாமி சிங்கப்பூரு போறாரு. ஒங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்குக் குறி கேக்கணும்னாலும் உடனே கூட்டியாந்துடுங்க.”

என்ன உலகம் இது? இவர்களெல்லாம் ‘இறைவனின் தூதர்கள்’!!!

தொடரும்……

நடராஜன் கல்பட்டு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.