— மாதவன் ஸ்ரீரங்கம்.

புவன் எம்ஜியாருடன் கனவில் காப்பி குடித்தபடி பேசிக்கொண்டிருக்க, பட்டென்று கிறிஸ்டோபர் நோலன் அவனை துப்பாக்கியால் சுட்டபோது, அதிலிருந்து டுமீல் ஓசைக்கு பதிலாக அவன் மொபைலின் ரிங்டோன் ஒலித்து அவனை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது. பாண்டித்துரைதான் அழைத்திருந்தான். எடுப்பதற்குள் நின்றுவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது நிறைய வியர்த்திருந்தது.

ஒரு பேச்சிலர் அறைக்குண்டான அனைத்து அம்சங்களுடன் அலங்கோலமாய் கிடந்தது அறை. நாளை ஞாயிறு. நாளைக்காவது சுத்தம் செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டான். பாத்ரூம் இதாயாதிகளை முடித்துக்கொண்டு, தானே தயாரித்த தேநீருடன் மொட்டைமாடிக்கு வர, காலை ஒன்பதுமணி வெயில் இதமாகத்தான் இருந்தது.

கீழே நகரம் பெரிய சந்தடிகளின்றி இருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய டிஷ் ஆண்டனாக்களும் கேபிள் வயர்களும், பாதியில் துருத்திநிற்கும் பில்லர்களுமாக, ஒரு டிஜிட்டல் உலகின் சகல சாத்தியங்களுடன் விளங்கியது. நகரத்தில் நிறைய அலைக்கழிந்து, நெருக்கடிகளை எல்லாம் கடந்துதான் இந்த அறையை அடையமுடிந்தது. பில்டிங்கின் முதலாளி ஒரு அப்புராணி. இத்தனைகாலமாக இத்தனை சொத்துக்களுடன் இந்த நகரத்தில் அவர் குப்பைகொட்டுவது குறித்து அவனுக்கு ஆச்சரியம்தான். மிகக்குறைந்த வாடகைக்கு இந்த அறையைக்கொடுத்திருக்கிறார். என்ன, அவ்வப்போது கரண்ட்பில்லோ வீட்டுவரியோ ஆன்லைன் ஷாப்பிங்கோ செய்வதற்கு இவன் உதவியை எதிர்பார்ப்பார். அவ்வளவுதான்.

முன்பு தட்டுமுட்டுச்சாமான்கள் அடைத்துவைத்திருந்த இடம் அது. இன்னும் அதன் பழைய வாசனைகள் எஞ்சியிருக்கின்றன. ஆனால் இந்த அறையும் மொட்டைமாடியும் சொர்க்கம். வெக்கைப்போதில் காற்றாட வெளியில் படுத்துக்கொள்ளலாம். துவைத்த துணிகளை சவுகரியமாக காயப்போடலாம். மிக முக்கியமாக வார இறுதியில் நண்பர்களுடன் பீர் அருந்தலாம். சத்தமாக சிரித்துக் கும்மாளம் போடலாம். டைரி எழுதலாம். டைரி நினைவு வந்ததும் இன்றைய நாளின் வேலைகள் பற்றி யோசனை வந்தது. எழுந்து கோப்பையை கழுவிக் கவிழ்த்துவிட்டு டைரியை எடுத்துப்புரட்டினான்.

நேற்று சந்தித்த கிளையண்டுகள் பற்றிய குறிப்புகளிருந்தன. இன்று சனிக்கிழமை. இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்று தேடினான். எல்லாமே மனதில் பாடமாக இருப்பதுதான். என்றாலும் ஒருமுறை தவறுதலாக பிக்ஷாட் ஒருவரின் அப்பாய்ன்மெண்ட்டை இழந்துவிட்டான். மிகப்பெரிய அமவுண்டிற்கு பாலிஸி கிடைத்திருக்கவேண்டியது சிறு பிழையால் தவறிவிட்டது. அன்றிலிருந்துதான் புவனுக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டாயிற்று. ஒவ்வொரு நாளிலும் என்னென்ன நிகழ்ந்தன, யாரையெல்லாம் சந்தித்தோம், மறுபடி அவர்களை சந்திக்கவேண்டிய நாள் கிழமை நேரம் எல்லாம் அதில் குறித்துவைக்கத் துவங்கினான்.

இன்று மங்களம் ஜுவல்லர்ஸ் சித்ரஞ்சனை பார்க்கவேண்டும். மதியம் 3 மணிக்குத்தான் சொல்லியிருக்கிறார். அவன் பணிபுரியும் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வெளியில் நல்ல பெயரும் விளம்பரமும் இருந்தன. அதை சரியாக மார்க்கெட் செய்யும் வித்தையும் அதற்கான பயிற்சியும் இவனுக்கு இருந்தது. இருந்தும் சற்று கடினமாகவே ஓடுகிறது பிழைப்பு. இந்த வாழ்வு ஒரு பகாசுரன். எத்தனை சம்பாதித்தாலும் லபக் லபக்கென்று விழுங்கிவிட்டு, இன்னும் கொண்டா என்று கேட்கிறது.

என்னவோ இன்று வேலை பார்க்கவே தோன்றவில்லை. ஒரு விடுமுறைக்கொண்டாட்ட மனநிலைதான் இருந்தது. அவன் தயாராகி தன் டிஸ்கவர் பைக்கில் வெளிவந்தபோது சாலை நெறிசலின்றி வெறிச்சென்று கிடந்தது. சிக்னல்களிலும் அதிகம் கும்பலில்லை. கடைகள் ஷோரூம்கள் எல்லாம் ஷட்டர் இறங்கி இருந்ததையும், பள்ளிச்சீருடையில் ஒரு குழந்தைகளைக்கூட காணவில்லையே என்றும் வியந்துகொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி எடுத்துப்பார்க்க பாண்டித்துரைதான்.

“சொல்லு மச்சி எங்க இருக்க”

“ஏண்டா கூ…. நேத்துபூராம் நீ எங்கபோய்த்தொலஞ்ச”?

” என்னடா லூசுமாதிரி பேசுற ? நேத்து நைட்டு நம்ம பார்ல நாம ஒன்னாத்தான இருந்தோம்”?

“மூதேவி அது முந்தாநேத்துடா. நேத்து எங்கபோன ? த்தா எத்தனவாட்டி போன் பண்ணேன் ? அப்புடியென்ன பிஸி மசிறு ஒனக்கு”?

புவனுக்கு குழப்பமாக இருந்தது. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக இருக்க, பாண்டித்துரையே மறுபடிப் பேசினான்.

“சரி விடு இப்ப நீ எங்கயிருக்க”!

“இப்பத்தாண்டா ரூம்லருந்து கெளம்புனேன். மெஸ்ல சாப்டுட்டு அப்டியே ஒரு கிளையண்ட்ட பார்க்கனும். நீ எங்கருக்க”?

“நா நம்ம சேட்டன் கடைலதான் இருக்கேன் வா”

சரியென்று அழைப்பைத்துண்டித்து மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு பைக்கை நகர்த்தினான். நிரம்ப யோசனையாக இருந்தது. என்னாயிற்று பாண்டிக்கு ? நேற்று இரவு இருவரும் ஒன்றாகத்தான் பீர் சாப்பிட்டோம். பிறகு ஏன் குழப்புகிறான் ? நேற்றைய பீர் இன்னும் தெளியவில்லைபோல என்று தனக்குள் சிரித்துக்கொண்டான். பயங்கரமாக பசித்தது. மெஸ்ஸில் நிறுத்தி எதையேனும் அள்ளித்தின்றுவிட்டுப் போகலாமா என நினைத்தபடி மெஸ் வாசலில் நிறுத்த கேட் பூட்டியிருந்தது. முதலியாருக்கு உடம்பு சரியில்லை போல. சமீபமாக இப்படித்தான் அடிக்கடி மூடிவிட்டுச் சென்றுவிடுகிறார் பாவம். சரி இன்று வடையும் டீயும்தான் விதி என்று வழக்கமான சேட்டன் கடைக்குச்சென்று நிறுத்த வாசலிலேயே சிகரெட் பிடித்தபடி நின்றிருந்தான் பாண்டித்துரை. அவன் முகம் கடுப்புடனிருந்தது.

மாஸ்டரிடம் ஒரு லைட் டீ சொல்லிவிட்டு வடையொன்றை எடுத்துக்கொறித்தான்.

“ஏண்டா நேத்து போன்பண்ணப்ப எடுக்கல”? என்றான் மறுபடி.

நிஜமாகவே புவனுக்கு இம்முறை கோபம் வந்துவிட்டது. கூடவே சிரிப்பும். சட்டென்று தன் மொபைலை எடுத்து கால் ஹிஸ்டரியை பார்த்துவிட்டு பாண்டியிடம் கொடுத்தான்.

” த்தா போன் பண்ணிருந்தா மிஸ்டு கால் லிஸ்ட்ல இருக்கும்ல ? எங்கன்னு காட்டு”?

பாண்டி மொபைலை வாங்காமலேயே,

“ஆமா பெரிய விஞ்ஞானி. லிஸ்டை டெலிட் பண்றதெல்லாம் மேட்டராடா ? சரி அப்டி எங்கதான் போன. எதாச்சும்…..”?

புவனும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டான்.

” ரெண்டு பீர்தாண்டா அடிச்ச. இன்னுமா தெளியல? சரி விடு. நா ஒரு கிளையண்ட்டை பார்க்கனும். முடிச்சிட்டு சாயந்திரமா கால் பண்றேன்” என்று ஹெல்மட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிய புவனை ஆச்சரியமாகப்பார்த்தான் பாண்டி.

“ஏண்டா ஞாயித்துக்கெழமைல கூட எவனையும் வீட்ல நிம்மதியா இருக்கவுடமாட்டியாடா ? எப்பப்பாரு பாலிஸி பாலிஸின்னு”

“டே லூஸு. இன்னிக்கி சனிக்கிழமைடா. இந்த சண்டேதான் திருணாமலை போலாம்னு பிளான் பண்ணிருந்தமே”

“யப்பா சாமி. இப்பவாச்சும் நெனப்பு வந்துச்சே. த்தா பிளானைப்பூராம் சொதப்பிட்டு மொக்கத்தனமா சமாளிக்காத”

அப்போதுதான் புவன் கடையிலிருந்த தேதியைப்பார்த்தான். ஞாயிறு என்றிருந்தது. அவனுக்கு என்னவோ தோன்ற செய்தித்தாள்களை எடுத்துப்பார்க்க அதுவும் ஞாயிற்றுக்கிழமை பதிப்புத்தான் வந்திருந்தது. அவசர அவசரமாக தனது மொபைலை எடுத்து பரிசோதிக்க, கடைசியாக வெள்ளிக்கிழமை பேசிய தவறிய அழைப்புகள் மட்டுமே இருந்தன. இன்று காலை தவறிய பேசிய பாண்டியின் அழைபுகள் இருந்தன. சனிக்கிழமை தேதியில் ஒன்றுகூட பதிவாகவில்லை. புவனுக்கு சற்று பீதியுண்டானது.

பாண்டியை கடைக்குள் இழுத்துச்சென்று பெஞ்சில் அமர்ந்து பதட்டத்துடன் விஷயத்தைக்கூறினான்.

“மச்சி என் நேத்தை காணம்டா”

பாண்டி பகபகபகவென சிரித்தான்.

“என்னடா ஜட்டியக்கானோங்குற மாதிரி சொல்ற”?

புவன் வெளிறிப்போய் கிடந்தான்.

” மச்சி சீரியஸாடா. நேத்து முழுக்க என்ன நடந்துச்சி என்ன எதுமே மைண்ட்ல இல்லடா. கடைசியா வெள்ளிக்கிழமை நாம ஒன்னா சரக்கடிச்சது ஞாபகத்துல இருக்கு. அப்பறம் இன்னிக்கி நீ போன் பண்ணப்ப எழுந்ததுதான். நடுவுல நேத்து முழுக்க”…..

புவன் குரலிலிருந்த சீரியஸ்தனம் பாண்டிக்கு உறைத்திருக்க வேண்டும். ஆறுதலாய்க் கூறினான்.

“விட்ரா மச்சி. நேத்து நைட்டு என்னை விட்டு தனியா போய் புல்லா சரக்கடிச்சிருப்ப. நாள் முழுக்க மட்டையாயிருப்ப. விடு இதெல்லாம் மேட்டரா”

“போடா கூ…. . எவ்ளோ மட்டயானாலும் ரெண்டு ராத்திரி ஒரு பகலாடா தூங்குவாங்க? இல்ல உன்னவிட்டி என்னிக்காச்சும் தனியா சரக்கடிச்சிருக்கனா”?

புவன் கேட்டதில் லாஜிக் இருந்தது. அவன் தனியாக என்றுமே குடித்ததில்லை.

“இப்ப என்னடா செய்யறது? மங்களம் ஜுவல்லர்ஸ் அப்பாய்ன்மெண்டும் கோவிந்தா. அதான் ரோட்ல டிராபிக் ப்ரீயா, கடைகன்னியெல்லாம் மூடிக்கெடந்துருக்குபோல”

இப்போது குழப்பம் இருவருக்குமாய் ஆகிப்போனது.

“ஆபீசுக்கு போன் அடிச்சிப்பாரேன் மச்சி” என்றான் பாண்டி.

“அட போடா. ரெண்டுமாசமா டார்கட் அச்சீவ் ஆகலைன்னு மேனேஜர் கடுப்புல கெடக்கான். எதுனா பாலிஸியோட வந்தா ஆபீஸ் பக்கம் தலையக்காட்டுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான்”

சட்டென்று யோசனை வந்து, பேகில் இருந்த டைரியை புரட்டினான். அதிலும் வெள்ளிக்கிழமைதான் கடைசியாக பதிவாகியிருந்தது.

“சரி அதை விடு. எப்டியும் இன்னிக்கி லீவுன்னு கன்பர்ம் ஆயிருச்சில்ல. வா ஆளுக்கொரு பீர வாங்கிட்டு உன் ரூமுக்கு போயிருவோம்”

பாண்டி கூறியதுதான் சரியென்று தோன்றியது. இருவரும் சற்றுநேரத்திற்கெல்லாம் புவன் அறையை அடைந்தார்கள். படியேறுகையில் மூடிக்கிடந்த பில்டிங்கின் கடைகளை பாவமாக பார்த்தான். அறைக்குள் நுழைந்ததும் முதல் காரியமாக தினசரி காலண்டரை கவனித்தான். அது ஞாயிற்றுக்கிழமையை காட்டியது. எப்போதும் முதல்நாள் இரவே தேதித்தாளை கிழிக்கும் வழக்கம் வைத்திருந்தான் புவன். கடைசியாக வெள்ளிக்கிழமை இரவு கிழித்திருந்தால் சனிக்கிழமைதானே இருக்கவேண்டும்?

“டே என்னடா. எதுக்கு குப்பையக் கெளறிட்ருக்க”?

பதில்கூறாமல் குப்பை டப்பாவைக் கவிழ்த்து தேதித்தாள்களை மட்டும் சேகரித்து சோதித்துப்பார்க்க, அதில் மற்ற அனைத்து நாட்களும் இருந்தன. நேற்றைய சனிக்கிழமையை மட்டும் காணவில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தான். ஊரிலிருக்கும் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களும் நேற்றுமுழுக்க இவன் அழைப்பை ஏற்கவில்லையென்று புகார் வைத்தார்கள்.

” மச்சி எனக்குப் பயமாயிருக்குடா. இந்த செலக்டீவ் அம்னீஷியா அல்ஜைமர்லாம் சொல்றாய்ங்களே.. அப்டி ஏதும்”

“ச்சேச்சே.. அப்டிலாம் ஒன்னுமிருக்காது மச்சி. நீ கவலைப்படாத. நாளைக்கி நம்ம டாக்டர் பய ஹரீஷ பார்த்துருவோம். அப்டிலாம் இருக்காதுரா”?

பாண்டி ஆறுதல் கூறினாலும் கூட, அவனுக்குமே உள்ளுக்குள் சற்று அச்சமாகத்தான் இருந்தது. ஒரு புத்தகத்தின் பக்கமொன்று தொலைந்ததைப்போல தொலைந்துவிட்டிருக்கிறது ஒரு நாள் ! அது வந்து சென்றதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாமல். யார் கண்டது, அது வாராமலேகூட இருந்திருக்கலாம்.

இரண்டாவது பியரில் சற்றே மிதக்கத்துவங்கிய புவன் மறுபடிப் புலம்ப ஆரம்பிக்க, பாண்டி அவனிடம் சொன்னான்.

“இப்ப நம்மகையில இருக்கு பாரு இன்னிக்கி. இதான் நம்முது. இத்தை தொலையாம பாத்துக்கிட்டா போதும் மச்சி”

“அடப்போடா” என்று அவன் சலித்துக்கொண்டான். “சரி நா கேக்குறதுக்கு பதிக் சொல்லு மச்சி”

மிக்சரை ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டபடி புவன், “கேளு”

“சாதாரணமா ஒரு நாள்ல நீ என்னல்லாம் செய்வ”?

” ஏன் கேக்குற”?

“சும்மா சொல்லு மச்சி”

” என்னா, எந்திரிப்பேன். குளிப்பேன், சாப்புடுவேன், வேலைக்கிப்போவேன். வீட்டுக்கு வருவேன். தூங்குவேன்”

“சூப்பரு. நேத்து தொலையாம இருந்திருந்தாலும் நீ அதைத்தான செஞ்சிருப்ப”?

சற்று ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னான்.

” ஆங்… ஆமாம். அதத்தான் செஞ்சிருப்பேன். ஏன் கேக்குற”?

“இல்ல, ஒருவேளை உன் நேத்து தொலையாம இருந்திருந்தா, சி எம்மாவோ பி எம்மாவோ ஆயிருப்பியா? இல்ல ஐநாவுக்கு அதிபராயிருப்பியா”?

” டாய்”….

” அப்பறம் என்ன ? சும்மா பொலம்பாத மச்சி. நீ பெரிசா எதையும் இழந்திடல “

“த்தா ஒனக்கென்ன வந்திச்சு ? போனது என்னோட நேத்துடா”

“அதுஞ்சரிதான். ஒன்னு பண்ணேன். வேன்னா என் நேத்து சும்மாத்தான் கெடக்கும் மச்சி. அதை எடுத்துக்கயேன்” என்று கண்ணடித்துச் சிரித்தான் பாண்டி.

புவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“ஆமா அப்புடித்தான் செய்யணும். ஆனா அப்டி நாளைக்கி உன் நேத்தை நா எடுத்துக்கிட்டா, என்னோட நாளையை என்னடா செய்யிறது”?

” ம்… நியாயமான கேள்விதான். . ஆங்… உன் நாளைய நா வச்சிக்கிறேன். ஆனா, அப்ப என் நாளை என்னாவும் மச்சி ? பேசாம அதை யாருக்குனா பிச்சை போட்ரலாமா”? என்று பாண்டி கேட்க,

இருவரும் பயங்கரமாக வெடித்துச் சிரித்தார்கள். இறுதியாக பாண்டி, புவனிடம் சொன்னான்.

“மச்சீ… இந்த உத்திரவாதமில்லாத வாழ்க்கையில நேத்துக்கும் இன்னிக்கும் நாளைக்கும் பெரிய அர்த்தமோ வித்தியாசமோ இருக்குதா என்ன” ?

*

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *