— சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் உங்களின் முன்னே !
1981ம் ஆண்டு என் வாழ்வினிலே மறக்க முடியாத ஆண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? என்னோடு பாதியாக என் வாழ்வின் சுகங்களை விடத் துக்கங்களை அதிகமாகப் பகிர்ந்து கொண்ட என் அன்பு மனைவி, இனிய தோழியை நான் மணந்து கொண்ட வருடமது. ஆனால் அதே வருடம் தன்னோடு மற்றுமொரு மிகப்பெரிய நிகழ்வைத் தாங்கிக் கொண்டது. ஆம் செப்டெம்பர் மாதம் 14ம் திகதி எனது மனம் கவர்ந்தவளை என் மனைவியாக்கிய பின்பு காலதேவன் சரி உனக்கொரு இன்பத்தை அளித்தேனே ஏன் நான் ஒரு துன்பத்தையும் அளிக்கக் கூடாது என்று எண்ணியோ என்னவோ எனது மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனை அதே வருடம் அக்டோபர் மாதம் 17ம் திகதி தன்னோடு விண்ணுலகிற்கு எடுத்துச் சென்று விட்டார். எனது திருமண வாழ்வின் 34 வருடங்களை கொண்டாடும் அதே வருடத்தில் என் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனின் 34 வது நினைவுதினத்தையும் கொண்டாட வேண்டும் என்பது அனைத்துக்கும் அப்பாற்பட்டவனின் நியதி போலும். வழமை போல கவியரசரின் பிறந்தநாளையும், நினைவுநாளையும் கவிதை பாடி உங்களோடு பகிர்ந்து கொள்வது போல இவ்வருடமும் மாபெரும் கவியரசனுக்கு இப்பாமரனின் சிறிய கவிதைமாலையைச் சமர்ப்பித்து வணங்குகிறேன்.
அன்புடன்
சக்தி

கண்ணதாசன்

தமிழன்னை
மடியினிலே தவழ்ந்த
அரும் பெரும் மைந்தர்களில்
அளவிட முடியா
ஆற்றலைப் பெற்றவனே !
மலையரசித் தாயின் மைந்தா !
எந்தன் மனதினிய வாசா !
மாண்புமிகு கவிஞனே ! கண்ணதாசா !

நேற்றொரு பொழுதினில்
நெஞ்சினில் சுரந்திட்ட
நேசமிகு கவிதையின்
வாசமாய் கமழ்ந்தவன் நீ
இன்றொரு கணத்தினில்
இனித்திடும் நினைவுகளில்
இயம்பிடும் கவிதைகளில்
இனிப்பாய் தித்திப்பவன் நீ !

நாளை இவ்வுலகினில்
நான் வாழ்ந்திடும் நாள்வரை
நீந்திடும் நினைவுகளில்
நீக்கமற நிறைந்திடும் தமிழில்
யாத்திடும் கவிதைகளுக்கெல்லாம்
யாப்பிலக்கணமாய் வாழ்பவன் நீ !

இலக்கணம் படித்தவனில்லை ஐயா !
இலக்கியம் பயின்றவனும் இல்லை ஐயா !
இயற்றிடும் பாக்கள் எல்லாம்
கவியரசன் எனும் பள்ளியில்
கண்ணதாசனின் நேசனிவன்
கற்றுக் கொண்டதே கவியரசா !

அன்றொருநாள் தமிழன்னை
மனம் கனிந்து உதிர்த்திட்டாள்
தன்கையிருந்த முத்துக்களில் ஒன்றை
விழுந்தது அது சிறுகூடல் பட்டியெனும் ஆழியில்
விசாலாட்சி எனும் சிப்பியின் வயிற்றில்
முகிழ்த்த முத்தையா எனும் முத்தாய் !

அப்படி என்ன அந்த
அக்டோபர் 17ம் திகதிக்கு ஆசை ?
அன்பன் உன்னைத் தான்
அமரானாக்கிட கொண்டிட்ட ஆசை . .
நிலவுக்குக் கூட ஒருநாள் அமாவாசை
உனக்கு மட்டும், எப்போதும் பௌர்ணமி
கற்பனைச் சிறகதனை விரிக்கும் போது
வானுக்குக் கொண்டு செல்வது
கண்ணதாசன் எனும் காற்றே !

காதலென்னும் படகேறி
கற்பனையில் பயணித்து
சோகமெனும் அலை தாக்க
தத்துவம் எனும் கரை சேர்க்கும்
கலையுந்தன் கலையன்றோ
ஞாலமிருக்கும் காலம் வரை
ஞாபகம் விட்டகலா பாடல்கள்
வடித்துத் தந்த கவியரசே !
மறப்பதுண்டோ உனை நாமே !

இறையடி இணைந்து நீயும்
இற்றோடு மூன்று பத்தோடு
நான்கு அகவைகள் கடந்ததய்யா !
காற்றுப் புகும் இடமெலாம் உன்
கானம் நிறைந்திடும் காலமிது
புலம்பெயர்ந்து புவியெங்கும்
நிலை கொண்ட எம் தமிழுறவுகள்
காக்கின்றார் உந்தன் படைப்புகளை

வளையும் எந்தன் விரல்களில்
வழிந்திடும் அன்னைத் தமிழின்
அலங்காரத்தின் அடிப்படை தந்தவனே !
அர்த்தமுள்ள பல அனுபவங்களை
அழகழாய் அன்னைத் தமிழில்
ஆக்கியெமக்கு அளித்த கண்ணனின் தாசனே!

மனசெல்லாம் நிறைந்திட்ட எந்தன்
மானசீகக்குருவாம் கவியரசர் கண்ணதாசனே !
வாழ்ந்திருக்கும் நாள்வரை மனதில் இருந்து
வரம்தருவாய் கவிபாட கவிதைநேசனே !

சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

  1. கவியரசர் ரசிகர்கள் லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவன். சில திரைப் பாடல்கள் எழுதியவர் யார் என்ற குழப்பங்கள் எனக்கு அவ்வப்பொழுது வருவதுண்டு. இப்பொழுது அவற்றை தீர்ப்பதற்கு ஒரு தளம் கிடைத்துவிட்டது என நம்புகிறேன்.

  2. “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற தனது வரிகளால் தான் வாங்கி வந்திருக்கும் சாகா வரத்தினை வார்த்தைகளில் வடித்த கவியுலக தீர்க்கதரிசி யின் சீடரின் தளத்தினைக் கண்டதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *