பாலசுப்ரமணியன்

காலைக்கதிரவனின் முதல் மரியாதை இன்னும் மண்ணுக்குக் கிட்டவில்லை. மெல்லிய இளவேனில் காற்று உடலுக்கு மிகவும் இதமாக இருந்தது. நரசிம்மன் வழக்கம் போல் தன் வீட்டு மொட்டை மாடியில் தன்னுடைய தினசரி காலை நடையை துவக்கியிருந்தார் பொதுவாக அந்த நேரத்தில் அவர் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. ஆனால் இன்று அவர் மனம் கொஞ்சம் பாரமாக இருந்தது. அதற்குக் காரணம் அவர் முன்தினம் தன் வீட்டுப் பரம்பரை ஜோசியரிடம் தன்னுடைய ஜாதகத்தைக் காண்பித்ததுதான்.

“உங்களுக்கு மூல நட்சத்திரம். வரப்போவது ஏழரை நாட்டுச் சனி. ரொம்பப் படுத்தும். ஜாக்கிரதையாக இருக்கணும். உடம்பை கொஞ்சம் படுத்தும். வேண்டாத வம்பு தும்புல மாட்டிப்பேள். கொஞ்சம் வாயை அடக்கி வாசிக்கணும். என்ன சொன்னாலும் தப்பாகும்.”

இது போதாதா நரசிம்மனின் மனசை ஒரு கலக்குக் கலக்க!  பாவம், மனுஷன்!  காலையிலே மாலனைப்பற்றிக்கூட நினைக்கவில்லை. எல்லாம் சனி பகவான் நினைப்புத்தான்!!

இன்று மொட்டை மாடியில் அவர் நடையில் அவ்வளவு வேகமில்லை. “ஹலோ, நரசிம்மன், குட் மார்னிங்” பக்கத்து வீட்டுக்காரரின்   குரல்கூட அவர் காதுகளில் விழவில்லை.

“”காலையிலே ரொம்ப சிந்தனை போலிருக்கு” இது மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர். நரசிம்மன் தன்னை அமுக்கியிருக்கும் சிந்தனையிலிருந்து  வெளியே வந்த பாடில்லை. மரத்திலிருந்து விழுந்த முள் அவர் கால்களில் குத்தி வலி தந்தது. காலை ஒருமுறை தூக்கி முள்ளைப் பிடுங்கி எறிந்தார்.

“வனமாலி கதி சாரங்கி .. ” வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டே மேலே நடந்தார். “சனி பகவான் எப்படி வருவார்? சனி வரும்போதே ஒரு உலுக்கு உலுக்கும் என்பார்களே.!! நாராயணா. நீ தான் காப்பாத்தணும்.”

மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது

“அம்மா” என்று ஒரே அலறல். ஒரு நிமிடம் தன தலையை இரு கைகளால் தாங்கிக்கொண்டு “நாராயணா, நாராயணா” என்று அந்த முதலை வாயில் பிடிபட்ட யானை “ஆதிமூலமே” என்று அழைத்ததுபோல் ஒரு கத்தல். என்ன ஆச்சு என்று அவருக்கே புரியவில்லை. “என்ன சார்? ” மீண்டும் பக்கத்து வீட்டுக்காரர்.

“மண்டையிலே யாரோ பளார்னு அறைந்தமாதிரி இருந்தது” சொல்லிக்கொண்டே திரும்பிப்பார்த்தார். “ஓ, அந்த காக்கான்னா சிறகாலே மண்டையிலே அடிச்சிட்டு ப் போறது.”

ஒரு கணம். “ஆஹா, ஜோசியர் சொன்னது சரியாப்போச்சு. அந்த சனி பகவான் தன்னோட காக்கை வாகனத்திலேதான் வந்து மண்டையிலே தட்டி விட்டு ப் போயிருக்கார்.” அவர் மனம் ஒத்துக்கொண்டது.

“ஆரம்பிச்சாச்சு. சனியின் பலன் இன்னிலேந்து போலிருக்கு. சனிப்பெயர்ச்சிக்கு மூன்று மாதம் முன்னாலேயே பலன் தெரியும் என்று சொல்லுவா.”

அவர் நடையின் வேகம் தளர்ந்தது. சரி. இன்னிக்கு நடையை இதோடு முடித்துக்கொள்ளவேண்டியதுதான்.

“பத்து நிமிஷம் தானே ஆச்சு. இன்னொரு அஞ்சு நிமிஷம் பார்க்கலாமா. “மனம் யோசித்தது. திரும்பிப்பார்த்தார் “நல்லவேளை. காக்கை. போயிடுத்து” அவர் நடை தொடர்ந்தது.

சிறிது நேரத்தில் மீண்டும் “அம்மா” என்று தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழாத குறையாய் நரசிம்மன். “அப்பவே நினைத்தேன். சனீஸ்வரனுக்கு எதிராய் நாம். போகப்படாதுன்னு.  தப்புத்தான். தப்பு” சொல்லிக்கொண்டே அந்த மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார்.

“ஏன்னா. என்ன ஆச்சு., மாடில ஒரே சத்தமா இருந்தது.” அலமேலுவை ஒரு முறை பார்த்துக்கொண்டே “சனி வரானில்லையோ  . அதுக்கு முகவுரை எழுதிட்டுபோனான்” மனைவிக்கு ஒன்றும் புரிய வில்லை.

அடுத்த நாள் காலை அவருக்கு மொட்டைமாடிக்குப்   போவதா வேண்டாமா என்ற பிரச்சனை. “ஏன்னா, ஒரு நாள்  நடந்தா நித்தியம் நடக்குமாயென்ன? ” மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை. “தைரியம் புருஷலக்ஷணம்” என்றோ படித்தது இப்போது நினைவுக்கு வந்தது.

மாடியிலே பதினைந்து நிமிடங்கள் நடந்தவர் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். சனி பகவானின் வாகனத்தை எங்கும் காணோம். நடையில் வேகம் கட்டியது. சில நிமிடங்களில் “அம்மா”என்று தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தவர் பந்தயத்தில் ஓடுவது போல கீழிறங்கி வந்தார்.

இரண்டு மாதங்களுக்கு நரசிம்மன் மாடிப்பக்கம்   செல்லவே இல்லை. ஒரு நாள் மாலை அவரை மாடியிலே பார்த்த பக்கத்து வீட்டு கோவிந்தராஜன் “என்ன நரசிம்மன், ரொம்ப நாளா மார்னிங் வாக்ல உங்களைக் காணோம்.” என்றார்.

“என்ன சார் பண்றது, என் நட்சரத்துக்கு ஏழரைச் சனி பிடிச்சிருக்கு. தினசரி  காலையிலே காக்கை ரூபத்திலே சனி பகவான் மண்டையில ஓங்கி அடிச்சுட்டு போறார். ஒரு நாளுன்னா பரவாயில்ல,. தினசரியா? அதான். “

” என்ன சார் சொல்றேள், ஏழரை எட்டரையின்னு. கொஞ்சம் மேல நிமிந்து பாருங்கோ. உங்காத்து மரத்திலே காக்கா கூடுகட்டிக் குஞ்சு பொரிச்சிருக்கு. யார் அந்தப்பக்கம் போனாலும் தற்காப்புக்காக மண்டையிலே தட்டி விரட்டறது. ஒரு நாள் என்னைக்கூட எங்காத்து மாடியிலே…””

கோவிந்தராஜன் பேசுவதைக் கேட்க நரசிம்மன் அங்கே நிற்கவில்லை. அவர் மனதில் ஒரே குழப்பம். “அப்போ, சனி பகவான் இப்படி வரவில்லை என்றால் வேறே எப்படி வருவார்?”

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.