அமுதா . . . (சமூகத்தால் ஒடுக்கப்பட்ட திருநங்கையின் கதை…)

விஜய் விக்கி…

சமூகத்தால் இன்றளவும் ஒடுக்கப்பட்டுள்ள திருநங்கை சமூகத்தின் உண்மை நிலையை எடுத்துச்சொல்லவே இந்த படைப்பு… இது உண்மை சம்பவத்தை தழுவிய சிறுகதை…

ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அமுதா… பால் வாங்கி காய்ச்சி டீ போட்டு பிளாஸ்க்கில் ஊற்றிவைத்துவிட்டு, சமையல் வேலைகளையும் முடித்தாகிவிட்டது… ஏழு மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்புவதற்கும் ஆயத்தமாகிவிட்டபோதும், செல்வியும் ரோஸியும் இன்னும் எழுந்திருக்கவே இல்லை, எப்படியும் பத்து மணி ஆகலாம்.. இருவருக்குமே காலை சாப்பாடு சாப்பிடும் பழக்கமில்லை என்பதால், தேநீர் மட்டும் குடித்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு பைபாஸில் பயணித்துவிடுவார்கள்…

“ரோஸி, டீ போட்டு வச்சிருக்கேன்… கத்தரிக்காய் குழம்பும் வச்சிட்டேன், சோறு மட்டும் வடிச்சுக்கோங்க.. நான் கிளம்பட்டுமா?” கடிகாரத்தை பார்த்துக்கொண்டே கேட்டாள் அமுதா…

சோம்பல் முறித்து, கண்களை கசக்கி எழுந்து படுக்கையில் அமர்ந்தாள் ரோஸி.. கடிகாரத்தை பார்த்தாள், இன்னும் மூன்று மணி நேரத்தூக்கம் மிச்சம் இருக்கிறது… ஆழமாக ஒரு கொட்டாவி விட்டபடி, “இன்னிக்கு ஞாயித்துக் கிழமையாச்சே, லீவு இல்லையா??” என்றாள்…

“டீச்சரக்கா இருக்காகள்ல, அவங்க பக்கத்து வீட்டுக்கு யாரோ புதுசா குடி வந்திருக்காங்க.. வேலைக்கு பார்த்த ஆள் நாளக்கிதான் வருதாம், அதான் இன்னிக்கு மட்டும் வந்துட்டுப்போகச் சொன்னாங்க..”

“ஒருநாள் கூட ஓய்வில்லாம ஒழைக்கனுமா?.. டீச்சரக்கா சொன்னா, முடியாதுன்னு சொல்லவேண்டியதுதான?.. ஏண்டி இவ்ளோ கஷ்டப்படுற?.. பேசாம எங்ககூட தொழிலுக்கு வந்திடு, உன் அழகுக்கு விட்டில் பூச்சிங்க மாதிரி பார்ட்டிங்க
விழுவானுங்க…” அமுதாவின் கன்னத்தை உருவி முத்தம் கொடுத்தாள்…

நமட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டாள் அமுதா.. “நீதான் ராத்திரி பார்ட்டிய கூட்டிட்டு வந்தியா?.. பக்கத்து வீட்டு பொம்பள காலங்காத்தாலயே சண்டைக்கு வருது…”

“ஏன், அவ புருஷனையா கூப்ட்டேன்?… நல்ல கிராக்கி, ஐந்நூறு ரூபாய்க்கு மடிஞ்சான்.. இடமில்லைன்னு சொன்னதால கூட்டிட்டு வந்தேன், குந்தாணி பன்னண்டு மணிக்கு நான் வர்றத பார்த்திருக்கு பாரேன்” பொங்கினாள் ரோஸி..

“வீட்டுக்கு ஆள கூட்டிட்டு வராதன்னு எத்தன தடவ சொல்றது உனக்கு?.. ஓனரண்ணே பாவம்டி, அவருக்கு நம்ம சங்கடத்த குடுக்கணுமா?” தூக்கம் களைந்து எழுந்த செல்வியும் கோபித்துக்கொண்டாள்…

“காலைலேயே சண்டை வேணாம்டி, இனி அப்டி எதுவும் நடக்காம பார்த்துக்கறேன்..
ஆமா, உனக்கு நேத்து செம்ம கலெக்சன் போல, ரெண்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்த?” செல்வியை கேள்வியின் மூலம் திசைதிருப்ப முயன்றாள் ரோஸி….

ஆனாலும், அடுத்த வீடு தேடவேண்டி வருமோ? என்கிற பயம் அவளுக்குள் உண்டாகியிருந்தது..

“அடப்போப்பா.. இருநூறு ரூபாய்க்கு ஒரு மணி நேரமா பேரம் பேசி, பொழப்ப கெடுத்துட்டான் ஒரு சாவுகிராக்கி… ஆயிரம் ரூபாய்க்கு பெங்களூர் பொண்ணுகளே கெடைக்குது, உனக்கு முன்னூறு குடுக்கமுடியாதுன்னு சாதிக்கிறான்… அப்புறம் என்ன மயித்துக்குடா அரவாணிகிட்ட வந்தன்னு செவுல்லையே விட்டு பத்திவிட்டேன்…” காலை நேரத்து சூழலை கொஞ்சம் இறுக்கமாக்கியது செல்வியின் பேச்சு… ஒவ்வொரு நாளிலும் இப்படி எதிர்கொள்ளும் ஏளனப்பேச்சுகளை அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளும்போது, வீடும் நிசப்தமாகிவிடுவது வழக்கம்…

“ஐயோ நேரமாச்சு.. சாயந்திரம் வந்து பேசுவோம்!” சேலையை சரிசெய்துகொண்டு, அவசரமாக கிளம்பினாள் அமுதா..

வீட்டை விட்டு கிளம்பியது முதலாகவே, அமுதாவை வட்டமடிக்கும் கண்கள் கணக்கில் அடங்காதவை.. பெரும்பாலும் அந்த பார்வைகள், அவளின் அங்கங்களை துழைத்து எடுப்பதிலேயே குறியாக இருப்பதுண்டு… அதனாலேயே தன்
தோழிகளைப்போல உதட்டுச்சாயம், கிரீம்கள் என அரிதாரம் பூசிக்கொள்ள விரும்பமாட்டாள்… கழுத்தில் மாட்டியிருக்கும் பாசியும், முகத்தில் பூசிய பவுடருமேகூட பலநேரங்களில் தனக்கு விருப்பமில்லாமல் செய்துகொள்ளும்
ஒப்பனைதான்…

“வா அமுதா… போகலாமா?” வாசலிலேயே டீச்சர் அமுதாவிற்காக காத்திருந்தாள்…
“சரிக்கா…”
“ஒன்னும் பெரிய வேலை இல்ல… குழந்தைய வச்சுகிட்டு அந்த வீட்டுக்குவந்திருக்கிற பொண்ணு ரொம்ப கஷ்டப்படுது… சாமான்களை பிரிச்சு அடுக்கி வச்சு கொஞ்சம் ஒத்தாசை பண்ணனும், மதியம் போய்டலாம்..”
“சரிக்கா.. செஞ்சிடுறேன்…”

“உன்னப்பத்தி சொல்லிருக்கேன்… ஒன்னும் அத பெருசா எடுத்துக்கல.. திருநங்கைனு எதாச்சும் கேலி பேசக் கூடாதுன்னும் தெளிவா சொல்லிட்டேன்” அமுதாவின் முதுகை தட்டியபடி சொன்னாள் டீச்சர்… பலநேரங்களில் அமுதா எதிர்கொள்ளும் பாலின மாற்றம் தொடர்பான அவச்சொற்களை டீச்சரிடம் நிறையவே பகிர்ந்துகொன்டதன் விளைவுதான், இப்படியோர் கண்டிஷனுக்கும் காரணம்..

“சரிக்கா…” கண்களால் நன்றி சொன்னாள்…
பேசிக்கொண்டே இருவரும் அந்த வீட்டினை அடைந்துவிட்டனர்… அழைப்புமணியை அடித்துவிட்டு அமுதாவை பார்த்த டீச்சர், “சம்பளத்த நீயே பேசிக்கோ…”

கிசுகிசுப்பாக சொன்னாள்…
தலையை மட்டும் அசைத்துக்கொண்டாள் அமுதா…
மூன்றாம் அழைப்பு மணியின் சத்தத்திற்கு பிறகுதான் கதவை திறந்தார் ஒரு முப்பதுவயது மதிக்கத்தக்க இளைஞர்..

டீச்சரை பார்த்ததும் முன்முறுவல் செய்துவிட்டு, “வாங்க டீச்சர்… உள்ள வாங்க” என்று கதவை முழுமையாக திறந்துவிட்டு, உள்ளே சென்று அவசரக்கோலத்தில் ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு ஹாலுக்கு வந்தார் அவர்… அறைக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது… சுவரில் அரைகுறையாக மாட்டப்பட்டிருந்த சில புகைப்படங்களும், மின் இணைப்பு கொடுக்கப்படாத தொலைக்காட்சிப் பெட்டியும் தூசி துடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.. ஹாலின் பெரும்பகுதியை பிரிக்கப்படாத அட்டைப்பெட்டிகள் நிரப்பியிருந்தன, அநேகமாக அவற்றுள் புத்தகங்களோ, அலங்காரப் பொருட்களோ இருக்கலாம்… இவற்றை பிரித்துவைக்கவே ஒருநாள் ஆகலாம், அமுதா கண்களால் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்…

“ஒன்னும் பயப்படவேணாம்மா… இதை எதையும் நீங்க பிரிக்கவேணாம், இதல்லாம் நான் பார்த்துக்கறேன்… அடுப்படி ஐட்டங்களை மட்டும் நீங்க பிரிச்சு வையுங்க, போதும்” அமுதாவின் யூகத்தை அடையாளம் கண்டதுபோல அப்பட்டமாகச் சொன்னார்…

“ஐயோ… அப்டி இல்லைங்க சார்..” சிரித்துக்கொண்டாள்…

“அமுதா ரொம்ப நல்ல பொண்ணு… நம்ம விஜயா ஹாஸ்பிட்டல்லதான் வர்க் பண்றா, இன்னிக்கு சண்டே லீவுங்கறதால கூப்ட்டதும் வந்துட்டா… என்ன பண்ணனும்னு சொல்லுங்க, பர்பெக்டா செஞ்சிடுவா… நான் கிளம்புறேன் ரகு சார்…”
டீச்சர் கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்…

“ஐயோ இருங்க… காபி குடிச்சிட்டு போகலாம்… மாலு இப்போ வந்திடுவா..”

“இல்ல பரவால்ல சார்., அவங்க குழந்தை வேலையா இருக்காங்க போல.. அப்புறம் வந்து பார்த்துக்கறேன்.. நீங்க வேலைய பாருங்க…” பிடிவாதமாக கிளம்பிவிட்டார் டீச்சர்…

ஹாலில் இருந்த அட்டைப்பெட்டிகளை ஓரமாக நகர்த்திவைத்துவிட்டு, குப்பைகளை கூட்டத்தொடங்கினாள் அமுதா… குளித்துமுடித்து அறைக்குள் சென்ற ரகு, அமுதாவைப்பற்றி மனைவியிடம் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தான்..

“திருநங்கைனு சொன்னா நம்பவேமாட்ட மாலு, அப்டியே பொண்ணு மாதிரி இருக்கா..”

“அவகிட்டபோய் இத சொல்லிக்கிட்டு இருக்காதிங்க… நமக்கு வேலைதான் முக்கியம்.. குழந்தைய பிடிங்க, நான் போய் வேலைய சொல்லிட்டு வரேன்”

இன்னும் சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தையை ரகுவிடம் கொடுத்துவிட்டு, தலைமுடியை வாரிச்சுருட்டி முடிந்துகொண்டே ஹாலை நோக்கி நடந்தாள் மாலினி…

“அந்த பெட்டிகளை நகர்த்தி வச்சிட்டு ஹாலை கூட்டனும், போட்டோ பிரேம்களை துணியால தொடச்சு ஆணில மாட்டணும், ஜன்னல் கம்பிகள்ல படிஞ்சிருக்குற தூசிய தொடைக்கணும்..” தான் எதையல்லாம் சொல்லவேண்டும் என்று மாலினி நினைத்துக்கொண்டு வந்தாளோ, அவை அத்தனையும் ஏற்கனவே செய்துமுடித்திருப்பதைக்கண்டு ஆச்சர்யமடைந்தாள்.. நல்ல பொறுப்பான பொண்ணுதான் போல, தினமும் வரமுடியுமான்னு கேட்கணும்.. மனதிற்குள்
யோசித்தபடியே சமையலறைக்குள் சுத்தம் செய்துகொண்டிருந்த அமுதாவின் அருகில் சென்றுவிட்டாள்… சாக்கு மூட்டைக்குள் இருந்த பாத்திரங்களை அடுக்கி வைப்பதில் முனைப்பாக இருந்த அமுதா, மாலினியை கவனிக்கவில்லை… அமுதாவை பார்த்ததும் மாலினிக்கு எப்போதோ பரிச்சயமான முகம் போல தெரிந்தது, பலநாட்கள் பழகிய சாயல் தொனித்தது…

ஆழ்மனதை கசக்கி, அவள் சாயலைக்கொண்டு அடையாளம் காண முயற்சித்தாள்.. பயனில்லை, நினைவிற்கே வரவில்லை.. இப்படியாக இரண்டொரு நிமிடங்கள் தனது அருகாமையில் நின்று யோசித்துக் கொண்டிருந்த மாலினியை அப்போதுதான் கவனித்தாள் அமுதா… சட்டென எழுந்து சிரித்துக்கொண்டே வணக்கம் சொன்னபிறகுதான், அமுதாவின் முகமும் மெள்ள இறுக்கமாக மாறியது…

“அக்கா…” தழுதழுத்த குரலில் அழைத்தாள் அமுதா…

ஒருவழியாக யோசிப்புகள் முற்றுப்பெற்று ஒரு தீர்மானத்திற்கு வந்ததைப்போல, “சுரேஷ்?” சத்தம் வராமல் மாலினியின் உதடுகள் மட்டும் அசைந்தது… அதனை ஆமோதிப்பதைப்போல கண்களில் சுரந்த கண்ணீர் மல்க, தலையை மேலும் கீழும் அசைத்தாள் அமுதா…

மாலினி திகைத்துப்போனாள்… அடக்கடவுளே!.. இப்படியொரு தருணத்திலா சுரேஷை சந்திக்கணும்?… தான் அத்தனை செல்லம் கொடுத்து வளர்த்த தம்பியா இது?.. அவனை கட்டி அணைத்து, சோகம் தீர அழவேண்டும் போன்று மாலினிக்கு தோன்றியது.. நிறைய பேசணும், உடல்நலம் பற்றி விசாரிக்கணும், ஆசையாக தோசை வார்த்துக்கொடுக்கணும் என எல்லா ஆசைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக உயரப்பறந்தது… ஆனால், இப்படி பெண்ணாக மாறிய தம்பியிடம் அப்படியல்லாம் உறவு கொண்டாட அவள் மனம் ஒப்பவில்லை.. அதுமட்டுமல்லாமல் “இதுதான் ஆறு வருஷத்துக்கு முன்ன வீட்டை விட்டு ஓடிப்போன என் தம்பி!”ன்னு ரகுவிடம் எப்படி அறிமுகப்படுத்தமுடியும்?… அப்படிச்சொன்னால் நிச்சயம் அதன்மூலம் குடும்பத்தில் வெடிக்கும் சண்டைகளின் விளைவு கணிக்கமுடியாத அளவல்லவா இருக்கும்… கணவரை சமாளித்தாலும் கூட அவர் குடும்பத்தினர், அக்கம் பக்கம்னு ஒவ்வொருவரையும் சமாளிப்பது பச்சைத்தண்ணீரில் வெண்ணை எடுப்பது போன்றதுதான்..

“எப்புடிக்கா இருக்க?” ஆசையாக மாலினியின் கைகளைப்பிடித்து கேட்டாள் அமுதா… சட்டென அவள் கைகளை விலக்கிக்கொண்டு, இரண்டடிகள் பின்னே நகர்ந்துகொண்டாள்…

“இங்க எதுக்கு வந்த?” இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும்போது, முகத்தைக்கூட நேருக்கு நேர் பார்த்திடாமல், முகச்சுளிப்போடு அக்கா இப்படி கேட்பாள் என்பதை அமுதா கனவிலும் நினைக்கவில்லை… ஒருவாறாக தன்னை நிதானித்துக்கொண்ட அமுதா, “இது உன் வீடுன்னு தெரியாதுக்கா.. டீச்சர்தான் வரச்சொன்னாக…” கண்களை
துடைத்துக்கொண்டாள்…

“இப்பதான் தெரிஞ்சிருச்சுல்ல, முதல்ல கெளம்பு… என் வீட்டுக்காரருக்கு இப்டி ஒன்னு என் கூட பொறந்ததுன்னு தெரியாம இருக்குறதுதான் நல்லது…”

அமுதா திகைத்துப்போனாள்… சிறுவயது முதலாகவே அம்மாவின் அன்பிற்கு நிகராக பாசமூட்டி வளர்த்த அக்காவா இப்படி வெறுத்துப்பேசுகிறாள்?.. தனக்கு எது கிடைத்தாலும், “இது தம்பிக்கு!”ன்னு ஒரு பங்கு அக்காகிட்ட எப்பவும்
இருக்கும்.. தோற்பதற்காகவே என்கூட விளையாடுவாள், சண்டைகளின் இறுதியில் முதலில் சமாதானம் செய்வாள், எந்த தருணத்திலும் விட்டுக்கொடுக்காதவள்.. ஆனால் இன்று?… அமுதாவால் தன்னை நிதானிக்க முடியவில்லை, கண்ணீர் அவளை மீறி வழிந்துகொண்டிருந்தது…

“சும்மா ஒப்பாரி வைக்காம கிளம்பு, அவர்கிட்ட நான் எதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்..” மாலினி இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போது, ரகுவும் அவர்களை நோக்கி வந்துவிட்டான்…

“வாவ்.. அமுதா… ரொம்ப நல்லா வீட்டை சுத்தம் பண்ணிருக்கிங்க… ஒரு காபி போட்டுத்தரமுடியுமா?” சூழல் புரியாமல் இடைபுகுந்தான் ரகு…

“ஐயோ ரகு.. பேசாம இருங்க, நான் காபி போட்டுத்தரேன்..” பல்லை கடித்துக்கொண்டு உறுமினாள்…

“நீ ரெஸ்ட் எடும்மா, இன்னிக்கு இவங்க பார்த்துப்பாங்க… மயக்கமா வருதுன்னு சொன்னில்ல, போய் படு…” தோளோடு தோளாக மாலினியை அணைத்து படுக்கையறைக்குள் அழைத்துச்சென்றான்..

“அவ வேணாம்ங்க… நானே பார்த்துக்கறேன்…” எப்படிச்சொல்லி புரியவைப்பதென்று தடுமாறினாள்..

“இங்கபாரு மாலு, இது 2015… நம்ம கவர்மென்ட்டே அவங்கள அங்கீகரிச்சுடுச்சு, இன்னுமென்ன தயக்கம்?.. இன்னிக்கு ஒருநாள்தான அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா, நமக்கு வேலை நடக்குதுல்ல..” மாலினியின் மனதைப்புரியாமல் விளக்கிக் கொண்டிருந்தான் ரகு… நிஜமாகவே மாலினிக்கு கண்கள் இருளத்தொடங்கியது, ரகுவிடம் வாதம் புரிந்தும் பயனில்லை…
மனதிற்குள் எழுந்த பலநூறு குழப்பங்களோடு மெள்ள படுக்கையில் சாய்ந்தாள்.. சுரேஷ் வீட்டின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவன்… அப்பாவிற்கும் கூட ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு பையனுமாக பிறந்ததில் எல்லையில்லா
மகிழ்ச்சிதான்.. ஆனால் ஒருகட்டத்தில் வீட்டைவிட்டு அவன் ஓடிப்போகையில், வீடே மயான பூமியாக காட்சியளித்தது… நிறைய தேடினோம்.. காவல்துறையில் புகார், நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு… எல்லாமும் வீணாகத்தான்
போனது… எப்போது மீண்டும் தம்பியை பார்ப்பேன்? என்றிருந்த அதே மனதுதான், இப்போது ஏன்தான் பார்த்தோம்? என்று அரிக்கத்தொடங்கியுள்ளது.. குழந்தையை தோளில் போட்டபடியே சமயலறைக்கு வெளியே நின்று அமுதாவை அழைத்தான் ரகு… முகத்தை சேலையின் முனையில் துடைத்தபடி, வெளியே வந்தாள் அமுதா..

“என்னம்மா காபி போடலையா?.. மாலு ஏதும் பேசிட்டாளோ?.. சாரிம்மா, அவளுக்கு இன்னும் விவரம் பத்தாது.. நீங்க வேலைய பாருங்க..” கனிவாக பேசினான்..

முன்பு ரகுவை அமுதா எதிர்கொண்ட பார்வைக்கும், இப்போது பார்ப்பதற்கும் நிறைய மாற்றங்கள் தென்பட்டன… அக்காவின் கணவனல்லவா, ஒளிக்கீற்று கண்களில் ஒளிக்கத்தான் செய்யும்… இரண்டு நிமிடத்தில் கோப்பையில் காபியை ஆற்றியபடி ஹாலுக்கு எடுத்துவந்து ரகுவிடம் நீட்டினாள்..

“குழந்தைய கொஞ்சநேரம் பிடிங்கம்மா.. காபி குடிச்சிட்டு வாங்கிக்கறேன்..” கைகள் நடுங்க வாங்கி கன்னத்தில் ஒற்றிக்கொண்டாள் அமுதா… குழந்தை அழகாக சிரித்தது, அக்காவை அப்படியே உரித்துவைத்திருந்தது… ரகு பார்க்காதபோது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.. காலம் முழுக்க இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திடாதா? என்று மனம் ஏங்கத்தொடங்கியது.. குழந்தையின் சிரிப்பு அவளை அழவைத்துவிடுவது போல இருந்தது..

“குடுங்கம்மா…” காபியை குடித்துவிட்டு குழந்தையை வாங்கிக்கொண்டான் ரகு.. இப்படி வாங்கிக்கொள்வான் என்று தெரிந்திருந்தால், இன்னும் சூடாக பெரிய குவளையில் கொண்டுவந்து கொடுத்திருப்பாள்.. அரைமனதோடு குழந்தையை கொடுத்தாள்…

“நீங்க எந்த ஊரும்மா?”

“திரு….. திருப்போரூர் சார்…” திருச்சி தொண்டைக்குழியோடு திரும்பிவிட்டது… அக்காவை மேலும் சங்கடப்படுத்த விரும்பவில்லை.. அதற்கு மேலும் அங்கிருந்தால், மேற்கொண்டு பொய்களை சொல்லவேண்டிவரலாம்..

சமையலறைக்குள் சென்றுவிட்டு அடுத்தடுத்த வேலைகளை செய்யத்தொடங்கினாள்…

சமையலறையின் வாயிலில் அமர்ந்தபடியே மற்றப்பொருட்களை பிரிக்கத் தொடங்கினான் ரகு… புத்தகங்களை அதிலிருந்து எடுக்கும்போது தூசி தட்டுவதைப்போல முகத்தை மறைத்துக்கொண்டு, கண்களை மட்டும் லேசாக உயர்த்தி அமுதாவை நோட்டமிட்டான்.. பாதி நேரம் வேலையும், மீதி நேரம் அமுதாவின் அங்கங்களின் மீதான பார்வையுமாக நேரத்தை கழித்துக்கொண்டிருந்தான்… வேலைகளை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான் ரகு..

“என்ன சார் வேணும்?” இயல்பாக கேட்டாள் அமுதா…

“தண்ணி வேணும்…” குவளையில் எடுத்துக்கொடுத்தாள்…

“நீங்க யார்கூட தங்கிருக்கிங்க அமுதா?”

“என்கூட ரெண்டு பேர் இருக்காங்க சார்..”

“அவங்களும் ஹாஸ்பிட்டல்லதான் வேலை பார்க்குறாங்களா?”

“இல்ல… அவங்க…” தயங்கினாள் அமுதா…

“ஓ சரி… புரியுது… அப்போ உங்களைவிட அவங்க அதிகமா சம்பாதிப்பாங்கன்னு நினைக்குறேன்..”

“….” பதில் சொல்லவில்லை..

“போலிஸ் பிரச்சினயல்லாம் எப்டி சமாளிப்பாங்க?”

“தண்ணி குடிச்சிட்டிங்களா சார்?” இன்னும் கிளம்பலையா? என்பதின் நாகரிக வடிவம்தான் இந்த கேள்வி…
“ஓ.. சாரி, தப்பா நினைச்சுக்காதிங்க… நான் சாதாரணமாதான் கேட்டேன்”

அவசரமாக சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறிவிட்டான் ரகு.. நல்லவேளையாக பூசிமொழுகிய கேள்விகளோடு மாமா நிறுத்திவிட்டார்… மேற்கொண்டு பேசி சிக்கல்களுக்கு வழிவகுத்திருந்தால், அறைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அக்காவிற்கு தேவையில்லா தர்மசங்கடம்… வேலைகளை முடித்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் அமுதா… மாலினியும் குழந்தையும் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.. ரகுவை காணவில்லை, எங்காவது கடைக்கு போயிருக்கலாம்… கண்ணாடி திரைக்கு பின்னிருந்த அக்காவின் திருமண புகைப்படத்தை ஆசையாக
பார்த்துக்கொண்டிருந்தாள்… இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருக்கும் போல.. அப்பா, அம்மா, அக்கா என ஒவ்வொருவராக அவள் கடக்கும்போதும் அமுதாவின் மனம் விசும்பிக்கொண்டிருந்தது.. வெகுநேரமாக
நின்றபடி வெறித்துக்கொண்டிருந்தாள், நினைவுகள் காலச்சக்கரத்தின் ஊடே பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன…

“அமுதா…” ரகுதான் அழைத்தான்…திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள்..

“என்ன இங்க நிக்குறீங்க?”

“இல்ல சும்மாதான்… வேலை முடிஞ்சிடுச்சு, அதான் சார்…” பதறினாள்…

அவள் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டியது…

“ஏன் டென்ஷனா இருக்குறீங்க?… கூல்…” அமுதாவின் வெகு அருகில் வந்துநின்று தோளை தட்டி ஆசுவாசப்படுத்தினான்…

“உன் கஷ்டங்கள் எனக்கு புரியுது.. எதுக்காக ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு போய் கஷ்டப்படனும், இங்கயே ரெகுலரா வந்திடுவே?” தோளின் மீதிருந்த கை, ஊர்ந்து முதுகை தழுவியிருந்தது.. மனம் முழுவதும் மரத்துப்போயிருந்ததால்,
உடலின் உணர்ச்சிகள் அப்போது அமுதாவிற்கு புரிபடவில்லை…

“ஒன்னும் பெரிய வேலை இல்ல, சம்பளம் நீ எதிர்பாக்குறதை கொடுக்குறேன்!”

இப்போது இரண்டு கைகளும் அவளை வட்டமிட்டு சுற்றியிருந்தன.. சூழல் அப்போதுதான் அமுதாவிற்கு புரிந்தது.. தன் முழு பலத்தையும் செலுத்தி, ரகுவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இரண்டடிகள் பின்னே நகர்ந்து நின்றாள்… அவள் முகம் வெளிறிப்போயிருந்தது, அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்…

“ஏய் என்ன பிரச்சின உனக்கு?… உனக்கு கல்யாணம் காட்சியா ஆகப்போகுது?…

இப்டி கிடைக்கிற சந்தோஷங்கள ஏன் மறுக்குற?.. இதல்லாம் ஒன்னும் தப்பில்ல..” சொல்லிக்கொண்டே மீண்டும் அமுதாவின் அருகில் நெருங்கத்தொடங்கினான் ரகு.. ஐயோ கடவுளே.! என்ன இது கொடுமை?… அக்காவின் வீட்டில் இப்படியொரு சோதனையா காத்திருக்கணும்?… இதுவே வேறு ஆண் செய்திருந்தால் இந்நேரம் முகத்தில் காரி உமிழ்ந்து, சட்டையை கிழித்து சண்டை போட்டிருப்பாள்… ஆனால், அக்காவின் கணவனிடத்தில் என்ன செய்வது?… தலையில் அடித்துக்கொண்டு அழுதாள், அழுகை சத்தம் கூட அறைக்குள் இருக்கும் அக்காவிற்கு கேட்டுவிடக்கூடாது என்கிற பதற்றத்தோடு அழுதாள்… அதற்குமேல் அங்கிருந்து சிக்கலை அதிகமாக்கிட விரும்பவில்லை.. விறுவிறுவென
எழுந்து வீட்டை விட்டு வெளியேறினாள்… கண்ணீரை துடைக்கத்துடைக்க மறுபுறம் கசிந்துகொண்டே இருந்தது.. இவள் மீதான பார்வைகள் அருவருப்பாய் தோன்றியது… யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல இருந்தாலும், அதற்குரிய
வாய்ப்பும் இல்லை.. இன்னும் அவள் கண்கள் சுரப்பதை நிறுத்தவில்லை… வீட்டை அடைந்தபோதுதான் வாசலில் எழுந்த சத்தத்தை கவனித்தாள், பக்கத்து வீட்டுப்பெண்மணி, ரோசியிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்… வழக்கமான
சண்டைதான், ஆனால் அமுதாவின் வழக்கமான மனநிலை இல்லையே இன்று… போன வேகத்தில் அந்த பெண்ணின் நேருக்கு நேர் நின்று, “இப்ப என்னதான் உனக்கு வேணும்?” என்றாள் அமுதா…

“நீங்க பண்றதை கேக்க ஆள் இல்லைன்னு நெனச்சியா?… அதுக ராத்திரி படுக்க போற மாதிரி, நீ பகல்ல போயிட்டு வார… இதல்லாம் நாலு குடும்பம் குடித்தனம் இருக்குற ஏரியா, ஏன் இப்புடி அசிங்கம் பண்றீங்க?” மொத்தத்தையும் கொட்டினாள் அந்தப்பெண்…

“ஆமா.. எல்லாரும் பிராத்தலுக்குதான் போறோம்… உன் மவனுக்குதான் இன்னும் கல்யாணம் ஆகலையே, எங்க மூணு பேர்ல ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணிவச்சு எங்கள மாத்தப்பாரேன்… இல்லைன்னா நல்ல பையனா பார்த்து நீயே கட்டிக்கொடு, நாங்கல்லாம் நல்ல வழிக்கு மாரிடுறோம்…” அமுதாவும் விடுவதாக இல்லை…

“என்ன பேசுற நீ?.. அந்தம்மா பேசுறதுல என்ன தப்பு, நீ ஒழுக்கமில்லாம இருந்துட்டு இப்ப உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கனுமாக்கும்?” கூட்டத்திலிருந்த ஒரு நாற்பது வயது நபர் குரல் கொடுத்தார்…

“ஒழுக்கத்தப்பத்தி நீ பேசுறியா?.. எப்படா சேலை வெலகும், ஜாக்கெட்டை பாக்கலாம்னு நீ அலைஞ்ச அலைச்சல்லதான் உன் ஒழுக்கம் நல்லா தெரிஞ்சுதே…”

அமுதா ஒருவரையும் விடுவதாக இல்லை.. அதற்கு மேல் இவர்களின் ஒழுக்கத்தைப்பற்றி குறைகூற எத்தனித்த ஒழுக்க சீலர்கள் யாரும் இல்லை என்பதால், மெள்ள கூட்டம் கலைந்தது… ரோஸி இன்னும் அதிசயமாகவே பார்த்தாள்
அமுதாவை. ஆனாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.. வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் படுக்கையில் போய் விழுந்தாள் அமுதா… தலையணையில் முகத்தை புதைத்து விம்மி அழுதாள்.. அப்படியே தூங்கியும் போனாள்.. கனவு முழுக்க அக்காவும் குழந்தையுமாக நிறைந்திருந்தார்கள்…

“அமுதா… அமுதா…” ரோஸி எழுப்பினாள்… தூங்கி வெகுநேரம் ஆகிவிட்டது போலும், அந்தி நேரம் ஆகிவிட்டதை போல தெரிகிறது… அமுதாவின் தலை கனத்திருந்தது, தலையை பிடித்தபடியே எழுந்து அமர்ந்தாள்…

“டீச்சர் உன்னபாக்க வந்திருக்காக?”

முகத்தை துடைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.. நடந்த எதையும் சொல்லக்கூடாது, அக்காவிற்கு வீண் கஷ்டத்தை கொடுக்கக்கூடாது… மாலை இருள் வாசலை ஆட்கொள்ள தொடங்கியிருந்த நேரம்… டீச்சருடன் வேறொரு
பெண்ணும் நின்றுகொண்டிருந்தாள்…

“உள்ள வாங்க டீச்சர்” கையை பிடித்து உள்ளே அழைத்தாள்.. டீச்சரின் பின்னே அந்த பெண்ணும் உள்ளே வந்தாள்… வந்தவள் வேறு யாருமில்லை, அவள் அக்காவேதான்.. அமுதா அதிசயித்து நின்றாள், முகம் முழுவதும் பிரகாசமாக
மாறியது… அவசரமாக இரண்டு இருக்கைகளை எடுத்துப்போட்டு அமரச்செய்தாள்..

“என்ன சாப்பிடுறீங்க?.. காபி போடவா?” பூரிப்பாக கேட்டாள்…

“அதல்லாம் ஒன்னும் வேணாம் அமுதா… நீ வர்றப்போ பணம் வாங்கலையாம், அதான் மாலினி கொடுக்கலாம்னு வந்துச்சு… உன்ன வீட்டுக்கு வரச்சொல்றேன்னு சொன்னேன், என்னமோ அது உங்க வீட்டை பாக்கனும்னு சொன்னுச்சு… அதான் கூட்டி வந்தேன்..”

மாலினி ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை மடித்து அமுதாவின் கைகளில் கொடுத்தாள், அப்போது அவள் கைகளை அழுத்தி கண்களால் மன்னிப்பும் கேட்டாள்… அந்த பணத்தை பிரித்துப்பார்த்தபோது, அதனுள்ளே “அக்காவ மன்னிச்சிடும்மா..”
என்று எழுதியிருந்தது..

எதற்காக மன்னிப்பு?.. அவள் அப்படி பேசியதற்கா? அல்லது மாமா செய்த தவறுகள் தெரிந்தா?… புரியவில்லை… மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறி நின்றுகொண்டிருந்தாள்…

“எனக்கு ஒரு காபி கிடைக்குமா அமுதா?” அக்காவேதான் கேட்டாள்…

“இதோ ஒரு நிமிஷம்..” பறந்துபோய் சமையலறைக்குள் பாத்திரங்களை உருட்டத்தொடங்கினாள் அமுதா… ரோசியோடு மாலினி பேசிக்கொண்டிருந்தாள்.. மிகவும் கலகலப்பாக, உற்சாகமாக பேசினாள்…

“உங்களுக்கு எத்தனை குழந்தைங்கக்கா?” ரோஸிதான் கேட்டாள்…

“ஒண்ணுதான்… அதை சமாளிக்கவே நேரம் போதல..” மாலினி சிரித்தாள்…

“பையனா? பொண்ணா?”

“அதை பெருசானதும் அந்த குழந்தையே முடிவு பண்ணிக்கட்டும்!” அக்கா சொல்லும்போது, அடுப்பிலிருந்த பாலும் பொங்கியது…

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அமுதா . . . (சமூகத்தால் ஒடுக்கப்பட்ட திருநங்கையின் கதை…)

  1. அக்காவின் மனமாற்றத்தை இறுதியில் அவள் சொன்ன பதிலே தெரிவித்துவிடுகிறது. சிறப்பான கதை. விறுவிறுப்பாகப் போகிறது.

    நிர்மலா ராகவன்

  2. அதை பெருசானதும் அந்த குழந்தையே முடிவு பண்ணிக்கட்டும்!” அக்கா சொல்லும்போது, அடுப்பிலிருந்த பாலும் பொங்கியது… – முடிவு வரிகள் கதைக்கு சரியாகவே உள்ளது.  இந்தச் சூழ்னிலை இயற்கையை ஒட்டிய நிகழ்வு என்பதை உணரும் நிலை ஏற்பட்டு அன்பு செலுத்தும் நிலை உருவாக வேண்டும்.பல யதார்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் உண்மை.

  3. கதையை பிரசுரித்த இதழின் நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள்…
    கதைக்கு பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்திய எழுத்தாளர் நிர்மலா ராகவன் அவர்களுக்கும், தோழர் சித்தானந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *