சிறுகதைகள்

நடுத்தெரு நாராயணன்

க. பாலசுப்ரமணியன்.

“என்னங்க, ஆபீசுக்குக் கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அபிராமி வாசலை நோக்கி வந்தாள்.

“இதோ கிளம்பிண்டே இருக்கேன் அபிராமி” என்று பதிலளித்தவாறே “வண்டியைத் துடைச்சுக்கொண்டிருக்கிறேன். ரொம்ப அழுக்கா இருக்கு” தனது துடைக்கிற வேலையில் மும்முரமானார்.

“கொஞ்சம் இருங்கோ. நான் வந்துண்டே இருக்கேன். அந்த நாராயணன் எங்கே இருக்கான்னு ஒரு தடவை பார்த்துக்கிறேன். சரியாய் நம்ம வெளியிலே கிளம்பும் போது எதிரிலே வருவான். அவனுக்கு விவஸ்தையே கிடையாது. மற்றவங்களை நோகடிச்சுப் பார்க்கிறதிலே தான் அவனுக்குச் சந்தோஷம்.” முணுமுணுத்துக்கொண்டே அபிராமி வாசலை நோக்கி வந்தாள்.

அபிராமி எந்த நாராயணனைப் பற்றி சொல்லுகிறார்னு நினைக்கின்றீர்கள்? நடுத்தெரு நாராயணனைப் பற்றித் தான் ! அந்தப் பெயர் அவருக்கு எப்படி வந்தது? அவரைக் கண்டு ஏன் இப்படிப் பயப்படுகின்றார்கள்?

“நாராயணன் ரொம்ப நல்ல மனிதன். ஊர்ல எல்லாரும் அவரை ஒரு அப்பாவி என்று தான் சொல்வார்கள். வேலை ஒண்ணும் பார்த்ததாகத் தெரியவில்லை. அப்படியே திண்ணையில் உட்கார்ந்திருப்பார். ஏதாவது நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார் அவர் உண்டு. அவர் வேலையுண்டு . ஒரு வம்பு தும்புக்குப் போக மாட்டார்.” இது அநேகருடைய கருத்து..

நாராயணன் கிட்டத்தட்ட ஐந்து அடி எட்டு அங்குலம் உயரம். அநேகமாக ஒரு ஐம்பது வயது இருக்கும் புண்ணாக்கு போன்ற ஒரு நிறம். எப்போதும் பளபளவென இருக்கும் உடலைப் பார்த்தால் அதிலிருந்து ஒரு கால் கிலோ நல்லெண்ணெய்யை வழித்து எடுக்கலாம் போல இருக்கும்.

நாராயணன் ஒரு பக்திமான். கட்டை பிரம்மச்சாரி. காலையிலே குளித்ததும் திருநாமம் அணிந்து வேங்கடேச சுப்ரபாதமும் விஷ்ணு சஹஸ்ர நாமமும் சொல்லிவிட்டு பிரபந்தத்திலிருந்து சில பாடல்களைப் படித்துவிட்டு அதற்குப் பின் நியூஸ் பேப்பரை அலசுவார்.

பொழுது போக வில்லையென்றால் தெருவிலே இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருப்பார்.. அதனால் தான் தெருவிலே உள்ள எல்லோருமாகச் சேர்ந்து நடுத்தெரு நாராயணன் என்ற காரணப் பெயரை அவருக்கு வைத்தனர்

“என்ன நாராயணா, இன்றைய நடைப் பயணம் இன்னும் ஆரம்பமாக வில்லையா?” என்று கேட்டுக்கொண்டே பக்கத்து வீட்டு சாமிநாதப் பிள்ளை திண்ணையில் அவர் அருகில் வந்து உட்கார்ந்தார். இருவரும் திண்ணை நண்பர்கள்.

“இல்லை இனிமேல்தான்… முதல்லே சொர்ண பவனில் ஒரு காப்பி சாப்பிட்டு அதுக்கப்பறம்தான் எல்லாம். வாங்க பிள்ளை காப்பி சாப்பிடப் போகலாம்.”

நாராயணன் அவர் தம்பி வீட்டில்தான் தங்கியிருந்தார். அவர் தம்பிக்கு அரசாங்கத்தில் வேலை. தம்பி மனைவியும் அரசாங்கத்தில் தான் வேலை பார்க்கிறார். அதனால் இவர் வீட்டிலேயே தங்கி வீட்டையும் தன்னுடைய தாயாரையும் கவனித்துக் கொள்கிறார். மாசத்துக்கு ஒரு முறை தன்னுடைய கிராமத்திற்குச் சென்று நிலபுலன்களையும் கவனித்து வருகின்றார்.

பிள்ளையும் நாராயணனும் சொர்ண விலாசை நோக்கிச் செல்கின்றனர். எதிரே தன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய காவேரி அம்மாள் நாராயணனைப் பார்த்ததும் மீண்டும் வீட்டுக்குள் செல்கிறார்.

“கோவிலுக்குப் போகும் நேரத்தில் இவன் எதிரே வந்தால் சாமி கூடச் சரியா தரிசனம் தர மாட்டார்.” சொல்லிக்கொண்டே அவர் உள்ளே செல்கிறார்.

இதைக் கண்ட சாமிநாத பிள்ளை மனத்துக்குள் வருத்தப் படுகின்றார். “என்ன உலகமடா நாராயணா ! ரொம்ப மோசம்டா இந்த உலகம். என்னவோ எதிரே ஒரு ஆள் வந்தால் சகுனம் சரியில்லே என்று நினைத்து உலகமே இருண்டு போன மாதிரி மனசை வைத்துக்கொண்டு .. குடும்பமே முழுகிப்போறமதிரி மனதைக் கருப்பாக்கிக்கொண்டு.. ..ச்சீ, ஒரே அருவருப்பா இருக்கு நினைக்கிறதுக்கே ..ரொம்ப வருத்தமாக இருக்கு நாராயணா.” ‘.

ஒரு வருத்தம் தோய்ந்த முகத்தோடு நாராயணன் பதிலளித்தார். “சாமிநாதப் பிள்ளை..மனசு இருக்கே அது ஒரு குரங்கு மாதிரி.. தன்னோட இயலாமையையும், தன்னோட கையாலாகதனத்தையும் மற்றவா மேல போட்டு தன்னைச் சுற்றி ஒரு தற்காப்பு கவசம் போட்டுகொள்றது அது. .தன்னோட மனசையே நம்ப வைக்கறது தன்னோட தோல்விக்கு மற்றவாதான் காரணம்னு. ஒரு வகையில பார்க்கப்போனா உளவியலிலே இது ஒரு விதமான மனநோய் ….எஸ்கேபிஸ்ட் முறைன்னு கூட சில பேர் சொல்லுவா.”

“நாராயணா, இதெல்லாம் உனக்கு இப்படித் தெரியும்?”

சிரித்துக்கொண்டே நாராயணன் “பிள்ளை, ஒண்ணு தெரிஞ்சுக்குங்கோ அறிவுக்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஏதோ படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்ட அவாளுக்கெல்லாம் நிறைய அறிவு இருக்கும் என்பது கிடையாது. எனக்கு நிறைய படிக்கற ஆசை. அதனால்தான் படிக்கிறேன். ஒரு வகையிலே பார்க்கப்போன நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு மனசில ஒரு விதமான நோய் இருக்கிறதாகச் சொல்லுவா. அதனால இதல்லாம் பெரிசு பண்ணாம நம்ம வேலைய மட்டும் பார்த்துண்டு போயிண்டு இருக்கணும். “

“ ரொம்ப தைரியசாலி நீ நாராயணா. விவேகமானவன்.”

” சாமிநாதா, சுவத்திலே போய் முட்டிக்கொண்டு வலிக்கிறதே வலிக்கிறதேன்னு அழுதா யார் மேல தப்பு? சிலர் சுவர் மாதிரி. அவா மேல போய் நம்ம முட்டிக்கொண்டு நாம ஏன் அழணும் ? நான் சொல்லறது புரியறதா உங்களுக்கு? “

ஒரு நிமிடம் சாமிநாத பிள்ளை அப்படியே நின்றுவிட்டார். நாராயணின் மனப்பக்குவத்தைக் கண்டு வியந்து.

இருவரும் சொர்ணவிலாசை நோக்கிச் செல்கின்றனர். பின்னாலிருந்து ஸ்கூட்டரின் ஹார்ன் சப்தம் விட்டுவிட்டுக் கேட்கிறது.

சற்றே திரும்பிப் பார்த்த நாராயணன் ” குழந்தை, நில்லும்மா, நில்லும்மா, கிராஸ் பண்ணாதே.. ஸ்கூட்டர் வருது பாரு…” என்று சொல்லிக்கொண்டே ஸ்கூட்டரில் மோதவிருந்த குழந்தையை தள்ளிவிடுகிறார். ஸ்கூட்டர் திசை மாறி நாராயணனின் கால் மேல் ஏறுகின்றது.

ஒரு கையால் குழந்தையைப் பிடித்துக்கொண்டே கீழே விழுந்த நாராயணனைச் சுற்றி ஒரே கூட்டம். பதைபதைத்து செய்வதறியாமல் சாமிநாத பிள்ளை நிற்கிறார்.

கூட்டத்தைக்கண்டு ஓடி வந்த அபிராமி ” என்ன ஆச்சுன்னா உங்களுக்கு?.. அப்பவே சொன்னேன் சகுனம் பாத்துப் போங்கோ.. அவன் எதிரிலே வரப்போ போகாதேங்கோன்னு ….கேட்டேளா ” என்று அலறுகின்றார்.

ஸ்கூ ட்டெரிலிருந்து கீழே விழுந்த பார்த்திபன் தப்பித்து விட்டார். தலையில ஹெல்மெட் போட்டிருந்ததால் ! உடம்பில். ஒரு அடிகூடப் படவில்லை .

ஒரு ரிக்க்ஷாகாரர் ஓடிவந்து நாராயணனின் கையைப் பிடித்து ” நம்ம சாமிடா . இவரை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கடா.. ஒரு வண்டியை இந்தப் பக்கம் இழுங்கடா.” எனக் கத்துகிறான்.

வண்டியில் உட்கார்ந்து கொண்டே நாராயணன் அபிராமியப் பார்த்து சத்தமாகச் சொல்கின்றார் “அபிராமி.. நான் ஒண்ணும் அவர் எதிரே வரவில்லை. அவர் தான் என் பின்னாலேதான் வந்தார். விஷயம் தெரியாம தப்பாப் பேசாதேங்கோ “

குழந்தையின் தாயாரோ கைகூப்பி “ரொம்ப நன்றி நாராயணன் சார் . ஏதோ அந்த வைகுண்டத்திலிருந்து ஸ்ரீமன் நாராயணனே கீழே வந்து என் குழந்தையைக் காப்பாற்றின மாதிரி இருக்கு. நிஜம்மா நீங்கப் பகவான் வடிவத்திலே வந்திருக்கேள்.” .

அந்த ஒரு நிமிடம் நாராயணனுக்கு நடுத்தெருவிலிருந்து வைகுண்டத்திற்கே சென்று வந்த ஓர் உணர்வு.

சாமிநாத பிள்ளையின் கண்கள் பனித்தன. அவர் கண்களில் வழிந்த நீர் இந்த வார்த்தைகளைக் கேட்டதற்கா, இல்லை, நாராயணனின் கால் ஓடிந்ததற்கா, இல்லை இந்த மனிதர்களின் ஒடிந்த இதயங்களைக் கண்டா – யாருக்குத் தெரியும்?

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

 1. Avatar

  இத்தீபாவளி நன்நாள் – தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க