குறளின் கதிர்களாய்…(90)

-செண்பக ஜெகதீசன்

ஒருதலையா னின்னாது காமங்காப் போல
விருதலை யானு மினிது. (திருக்குறள்-1196: தனிப்படர்மிகுதி)

புதுக் கவிதையில்…

காதல் வாழ்வில்
காமம் ஒருபக்கமிருப்பது,
கட்டாயம் இன்னல்தான்…
காவடி பாரம்போல்
இருபுறமும் காதலிருப்பின்
இன்பம்தான்!

குறும்பாவில்…

ஒருதலைக் காதல் உதவாது,
காவடிபோல் இருபுறமும்
காதல் இருப்பின் இனிதே!

மரபுக் கவிதையில்…

காதல் என்னும் வாழ்வினிலே
–காணும் ஆண்பெண் இருவருக்குள்
பேதம் மிகுந்தே ஒருதலையாய்ப்
–புகுந்திடும் காதல் வேதனைதான்,
சோதனை யின்றி இருவருமே
–சமமாய்க் காவடி பாரம்போல்
சாதனை யாகக் கொளுங்காதல்
–சரித்திர மாகும் இனிதுடனே!

லிமரைக்கூ…

ஒருதலைக் காதல்தரும் வேதனை,
காவடி பாரம்போல் காதலர்தம் காதல்
இனிதான இல்லறத்தில் சாதனை!

கிராமிய பாணியில்…

காதலிது காதல்காதல்
கண்ணியமிக்க காதல்காதல்,
ஆணும்பொண்ணும் மனசு ஒத்து
ஆனதுதான் காதல்காதல்…

அந்தரெண்டு பேருலயும்
ஒருத்தர்மட்டும் காதலிச்சா
அதுக்கப்பேரு காதலில்ல,
அதுலவரும் தும்பந்தானே…

ஆணும்பொண்ணும் ஒண்ணாகக்
காவடிபோல சமமாத்தான்
காதலிச்சா அதுகாதல்,
அதுலவருமே இன்பமெல்லாம்…

காதலிது காதல்காதல்
கண்ணியமிக்க காதல்காதல்!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *