நிர்மலா ராகவன்

தனித்து வாழும் தாயும் மகனும்

உனையறிந்தால்
கேள்வி: ஒரு பெண்ணும், கணவரும் நான்கு வருடங்களுக்குமுன் சட்டப்படி பிரிந்துவிட்டார்கள். பணப்பிரச்னை கிடையாது. ஆனாலும், தாயுடன் இருக்கும் மகன் (14) யாருக்கும் அடங்காது வளர்கிறானே, அவனை எப்படித் திருத்துவது?

விளக்கம்: வீட்டில் முன்போல் சண்டை பூசல் இல்லாது அமைதி நிலவினாலும், தாய் தந்தையர் ஒருவரை ஒருவர் விட்டு நிரந்தரமாகப் பிரிந்தது தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக் கலங்குவார்கள்.

என் மாணவன் ரித்வான் அந்தப் பையனைப்போல்தான். தானே வந்து, வெவ்வேறு சமயங்களில் அவன் என்னிடம் கூறியது:

1 நான் பிறந்திருக்கவே கூடாது.
2 நான் ஏன் அப்பாவுடன் சேர்ந்து வாழக்கூடாது?
3 `இந்தச் சட்டையைத்தான் நீ இன்று போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்தும் அம்மா மாறவே மாட்டார்கள்!

அவன் கூறியதில் கசப்பு, சுயவெறுப்பு, இயலாமை, ஏமாற்றம், கேலி எல்லாம் இருக்கின்றன.

ஆண்களும், பெண்களும் குழந்தைகளை வளர்க்கும் விதமே வேறு.

உதாரணம்: ஒரு எட்டு வயதுப் பையனிடம் தாய்,`குளிக்கப் போ!’ என்றால், `ஏன்?’ என்று கேட்பான். அதற்கு அவள் நீளமாக ஏதாவது சொல்வாள். அனேகமாக, அது அவனை மட்டம் தட்டுவதுபோல் இருக்கும். அப்பாவோ, தந்தையோ, `கேள்வி கேட்காதே, போ!’ என்று அதிகாரமாகச் சொன்னால், குளியலறைக்கு ஓடுவான்!

பதின்ம வயதுப் பையன்களுக்குத் தம் உடலில் ஏற்படும் மாறுதல்களையும், அதனால் எழும் உணர்வுகளையும் இன்னொரு ஆணிடம்தானே பகிர்ந்துகொள்ள முடியும்! தந்தையுடன் வாரம் ஓரிரு நாட்கள் கழிக்கும் பையன் அவர் கட்டுப்படுத்தாது, தன்னைப் புரிந்து, அனுசரணையாக நடத்துவதை விரும்புவதில் என்ன அதிசயம்! (எப்போதும் கூடவே இருக்கும் தந்தைமார்கள் இப்படி இருக்கிறார்களா என்பது யோசிக்கத்தக்க விஷயம்).

ஒரு குழந்தை வழக்கமாக, தந்தை மிரட்டினால் தாயிடமும், தாய் திட்டினாலோ, தொணதொணத்தாலோ தந்தையிடமும் ஆதரவு நாடுவான். தாயுடன் தனித்து வாழும் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு இல்லையே! போதாக்குறைக்கு, கணவனை எக்காரணத்திலோ பிரிந்து வாழும் தாய் அவருக்குப் பிறந்த மகனும் அவரைப்போல் ஆகிவிடக்கூடாது என்று பெரும் முயற்சி எடுத்துக்கொள்வாள்.

`இவனாவது கடைசிக்காலத்தில் தன்னை மீண்டும் தனியாக விட்டுப் போய்விடக்கூடாதே!’ என்று அவளே அறியாது ஒரு பயம் உண்டாகிறது. அதனால் அவன் தன்னை எப்போதும் நாடப் பெருமுயற்சி எடுத்துக்கொள்கிறாள். அவனுடைய அத்தியாவசிய தேவைகளைத் தானே பார்த்துக்கொள்ளும் வயது அவனுக்கு வந்திருந்தாலும், குழந்தையாகவே அவனைப் பாவித்து, ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்கிறாள்.

`நான் செய்வது எல்லாமே அவனுடைய நன்மைக்குத்தான்!’ என்று எல்லாரிடமும் சொல்லிக்கொள்கிறாள். தான் இவ்வளவு அருமையாக நடத்தியும், மகன் ஏன் நன்றியில்லாமல் எதிர்ப்புக் காட்டுகிறான் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

சிறு விஷயங்களில்கூட ஒருவரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால், அதனால் விளையும் ஆத்திரத்தில் எல்லா விதிகளையும் மீறுவது மனித சுபாவம்.

பதின்ம வயதினரிடம் அவர்கள் எதை எப்படிச் செய்யவேண்டும் என்று பெற்றவள் ஓயாமல் கூறினால், `எனக்கு எதற்குத் தனியாக மூளை?’ என்ற ரீதியில் எண்ணத் துவங்குவார்கள்.

ஒருவர் தமக்கு இழைத்த பாதிப்பை எக்காலத்திலும் பெண்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இது அவர்களது இயல்பான குணம். (அதனால்தான் கணினி பெண்ணினம் என்று சொல்லப்படுகிறது!)

கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார், இல்லை, குடித்துவிட்டு அடிக்கிறார், சம்பாத்தியம் எல்லாவற்றையும் சூதாடியே அழிக்கிறார் — இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் தம்பதிகள் பிரிய முடிவு செய்யும்போது, தம் கோபத்திலேயே உழன்று கொண்டிருக்காது, தம் செய்கையால் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும்தான் என்று உணரத் தவறி விடுகிறார்கள்.

`உன் அப்பாவால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன், தெரியுமா?’ என்று சொல்லிச் சொல்லி மகனை வளர்க்கிறாள் தாய்.

மகனோ, தந்தைமேல் கொண்டுள்ள பாசம் ஒரு புறம், தன்னை வளர்க்கும் தாயின் மனதையும் நோக அடிக்கக்கூடாது என்ற தீர்மானம் மறுபுறம் என்று அலைக்கழிக்கப்பட்டு, யார்பக்கம் சாய்ந்தாலும் மற்றவருக்குத் துரோகம் செய்வதுபோல் ஆகிவிடுமே என்று குழம்புகிறான்.

சகநண்பர்களிடம் தன் வேதனையைச் சொன்னால் புரிந்துகொள்வார்களோ, இல்லை, பரிதாபப்படுவார்களோ என்று இப்படிப்பட்ட சிலர் தனித்திருக்க முற்படுவார்கள்.

பொதுவாகவே, தாமடைந்த துயரத்தை, தம் மனக்குழப்பங்களைப் பகிர்ந்துகொள்ள முயலுபவர்களின் மனநிலையில் நம்மைப் பொருத்திக்கொண்டு, அதிகம் குறுக்கே பேசாது, வேண்டாத அறிவுரையும் கூறாது கேட்டுக்கொள்வது அவர்கள் ஓரளவு நிம்மதி பெற, தம்மைத்தாமே புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

`என்னால் அப்பாவுடன் ஒத்துப்போக முடியவில்லை. நாங்கள் பிரியப்போகிறோம். எனக்கு அவர் கணவராக இல்லாது போனாலும், உனக்கு என்றும் அவர் அப்பாதான்!’ என்பதுபோல் முதலிலேயே குழந்தைகளிடம் விளக்கிவிட்டால், அவர்களுடைய குழப்பம் ஓரளவு தீரும்.

வயது முதிர்ந்தவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்றுதான் எல்லாக் குழந்தைகளும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களும் தவறு செய்வார்கள், அதை அவர்கள் வழியில் திருத்திக்கொள்வார்கள் என்று புரிந்துகொண்டால், நடந்ததில் தனக்குப் பங்கில்லை என்ற தெளிவு பிறக்கும். எல்லாரையும் எதிர்க்கும் குணமும் மறையும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *