தொட்டால் பூ மலரும் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
கவிதைபோல் தமிழ் மணம் கனிந்துருக வைத்துவிடும்
இளமைபோல் இனிமைநலம் என்றென்றும் பாடிவிடும்
அருமையெனச் சொல்லாதார் எவர் இருக்க முடியும்? – கவிஞர்
திறமைதனை மெச்சித்தான் ஊர் புகழும் உன்னை!!
படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.
இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!
தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.
பாடல் முழுவதும் ஓடிவருகிற வண்ணத்தை என்ன சொல்ல? கைகளால் காதலனும் காதலியும் தட்டிக்கொள்ள. ஒவ்வொரு வரியும் உள்ளத்தில் ஓராயிரம் சுகம் பிறக்க வைக்கிற உண்மையை மீண்டும் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம். வண்ணத்தில் வரைந்து வைத்த காவியமாம் இத்திரைப் படம் நம் எண்ணத்தில் என்றும் முன்னணியில்… இது போன்ற இனிய பாடல்களால்.
படம்: படகோட்டி (1964)
வரிகள்: வாலி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
ராகம் : சுத்ததன்னியாசி
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை ஹோ!
ஆசை விடுவதில்லை
[தொட்டால்…]
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஹோ!
இளமை முடிவதில்லை
எடுத்துக் கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோ!
பொழுதும் விடிவதில்லை
[தொட்டால்…]
பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோ!
பித்தம் தெளிவதில்லை
வெட்கம் இல்லாமல் வழங்கிச் செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை ஹோ!
சொர்க்கம் தெரிவதில்லை
[தொட்டால்…]
பழரச தோட்டம் பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஹோ!
பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் முகமல்லவா ஹோ!
ஆயிரம் முகமல்லவா
[தொட்டால்…]
காணொளி: https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M