Category: சிறுகதைகள்

கதைகள்

  • அகதியும் அதிதியும்

    -கே.எஸ்.சுதாகர்

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    தேவன் ஒருவாறு கனடா வந்து சேர்ந்து விட்டான். அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது.

    பல நாட்கள், நாடுகள். பட்ட கடனை அடைத்து, ஏழு வருடங்களில் தகப்பனாரைக் கூப்பிட்டான்.

    வந்த மறுவாரம் தகப்பனிற்கும் மகனுக்கும் சண்டை.

    “நான் என்ன உன்னைப் போல அகதியாகவா வந்தனான்? எயாப்போட்டிலை எனக்கு இருந்த வரவேற்பு. வெல்கம் ரு கனடா எண்டு சொல்லித்தானே உள்ளேயே விட்டவன்” என்றார் தந்தை.

    Share
  • “ஈஸி… வசந்த்”

    — தேமொழி.

    நாசமாப் போறவன், உருப்படவே மாட்டான்… என்று திட்டியபடி செல்போனை சோபாவில் வீசியெறிந்தான் வசந்த். அது அவன் எதிர்பார்த்தது போல சோபாவில் விழாமல் தரையில் மோதி விழுந்தது.

    “ஈஸி… வசந்த்” என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த பெண்ணும், அவளுடன் வந்த கணேஷும் சோபாவில் சாய்ந்தார்கள்.

    அந்த பெண் தரையில் இருந்த செல்போனை எடுத்து டீடேபிளில் வைத்தாள். தலையில் கிரீடமாகக் கறுப்புக் கண்ணாடி…காற்சட்டையில் துழாவி தனது செல்போனை எடுத்துக் குடைய ஆரம்பித்தாள்.

    கையில் நகப்பூச்சு இல்லை என்பதை வசந்த் கவனித்தான். ஏனோ அவளைப்பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது.

    முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடாமல் ஏன் எரிச்சலடைகிறான் என்று அவனுக்கேப் புரியவில்லை.

    “ஹலோ” என்றான் அவளை நோக்கி, இவள் யார் எனக்கு அட்வைஸ் கொடுக்க என்ற எரிச்சல் தென்பட்டது வசந்தின் குரலில்.

    “ஹலோ” என்றால் அவளும், தனது போனில்.

    “நான் உன்னிடம்தான் பேசுகிறேன்”

    “நன்றி, ஆனால் நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை”

    எழுந்து போய் ஜன்னலோரம் நின்று மொணமொணவென்று மெதுவாகப் பேசினாள்.

    “பாஸ், எங்க புடிச்சீங்க இந்த ராங்கிக்கரியை, கொஞ்சம் நஞ்சம் வரும் காற்றையும் ஜன்னலை அடைத்துக் கொண்டு மறைக்கிறாள்”

    “டோன்ட் பீ சில்லி வசந்த், ஏன் கரண்ட்டுக்கு என்னாச்சு? சென்னையில் கூடவா எலெக்ட்ரிசிட்டி பிராப்ளம்?”

    “ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் புட்டுகிச்சாம், தம்புச்செட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லைன்னு சொல்லிட்டான் இ.பி. ஆபிஸ்ல, நீங்க இன்னமும் அதைச் சொல்லல”

    “நானும் சொல்லணுமா? சரி, தம்புசெட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லை”

    விளையாடாதீங்க பாஸ், நானே வெறுப்பில் இருக்கேன், கண்டவனெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கிறான், கண்டவளெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்கோ, நீங்களுமா கலாய்க்கணும்? யாரிந்த அரை லூசு? எங்க புடிச்சீங்க இதை, என்னையே டபாய்க்குது”

    “நான் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கேன்” என்றவாறு அந்தப் பெண் போனில் பேசி முடித்து விட்டு வந்தாள்.

    “உன்னை உதைப்பேன் என்கிறாள்”

    ganesh-vasanth“நீங்க வேற அதை எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா பாஸ், என்ன திமிர்?” வசந்த் அவளை முறைதான்.

    “ஹை வசந்த், என் பேர் தேனு, பேராசிரியர் கணேஷின் ஸ்டுடெண்ட், வீட்டுக்கு போற வழியில ப்ரபொசர் கார் ப்ரேக் டவுன் ஆகி திண்டாடிகிட்டு இருந்தார், நான்தான் வாங்க உங்க ஆபிசில கொண்டு போய் விடறேன்னு சொல்லி ரைட் கொடுத்தேன். வெளியில் உங்க காரைப் பார்த்ததும், வசந்த் ஆபீஸ்லதான் இருக்கான், உள்ள வா, வசந்தை இன்ட்ரோடியுஸ் பண்றேன்னு சொன்னார்”.

    கணேஷ் இந்த அகாடெமிக் இயரில், யூனிவெர்சிடி சட்ட வகுப்பில் கௌரவ ஆசிரியராக சில வகுப்புகள் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளான்.

    “நான் உன்ன ஹனின்னு கூப்பிடலாமா?”

    “நான் துப்பாக்கி சுடுவதில் எக்ஸ்பெர்ட், ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கேன்”

    “அட சட்… பாஸ், இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கார்ல எல்லாம் ஏறாதீங்க பாஸ், இன்னக்கி இரக்கப்பட்டு ரைட் தரேன்னு கொண்டு வந்து விடுவாங்க, இன்னொருநாள் பாவம் ரொம்ப டயர்டா இருக்கீங்க வாங்க காபி சாப்பிடலாம்னு அழைச்சிப் போய் சிரிக்க சிரிக்க பேசி காஃபி வாங்கித் தருவாங்க, பிறகு நீங்க இழக்கக் கூடாததெல்லாம் இழக்க வேண்டி வரலாம்”.

    “தேவுடா..தேவுடா, ரோஜுலு மாரயி …தேவுடா…” என்று பாடி உதட்டை சுழித்து அழகு காட்டிய தேனு மீண்டும் செல்போனைக் குடைந்தாள்.

    “அது சரி, நாங்க வந்த போது கோபமாய் யாரைத் திட்டிக் கொண்டிருந்தே?”

    “ஒரு மனோ வியாதி வைத்தியரிடம் ….”

    “ஓ ….அந்த அளவுக்கு முத்திப் போச்சா”

    “பாஸ், கண்டவங்களையும் குறுக்கே பேச வேணான்னு சொல்லுங்க”

    “நீ சொல்லு, உனக்கு என்ன ஆச்சு?”

    “எனக்கு ஒண்ணுமில்ல, ஒரு கேஸ்… தேனு, தேனுண்ணு ஒரு பொண்ணு”

    “அதும் பேரும் தேனு தனா?”

    “ஆமாம் பாஸ், அந்த பேரு வச்சாலே சொர்ணாக்கா போல இருப்பாங்க போல, மேல கேளுங்க , வயசாகியும் கல்யாணம் வேணாமின்னு அம்புட்டு அடமாம். அவளோட அம்மா ஒரு மனோ வியாதி டாக்டர்கிட்ட அவளக் கொண்டு போனாங்களாம். அவரு ஊசி போட்டு சரி பண்ணிடறேன்னு சொல்லி ஊசி போட்டிருக்காரு. இந்தப் பொண்ணும் நோய் தெளிந்து போன பின்னர் டாக்டரையே கட்டுவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம். கொஞ்ச நாளில் டாக்டரிட்ட இருந்த ஊசியையும், சிரிஞ்சு பாட்டில் மருந்துகளையும் அவருக்குத் தெரியாமல் சுருட்டிக் கொண்டு அடுத்தாத்து அண்ணாசாமியுடன் சென்னைக்கு ஓடி வந்திடுச்சாம் .”

    “பிறகு சென்னையில் அந்த செக்ஸ் ஊசியை ஏலம் விடும் முயற்சியில் அது தொலைந்துவிட, அதை விசாரிக்க தேனுவிடம் போன மருத்துவக் கவுன்சில் தலைவர் நாகபூஷணத்திற்கு தொலைந்து போனது போலி ஊசி என்று தெரிந்தது விட்டது. அந்த மனுஷன் விடுவானா? ஒரிஜினல் ஊசியையும் தேனுவையும் சுருட்டிக் கொண்டோடிவிட்டான். போதாக்குறைக்கு ஜானு அப்படின்னு இன்னொரு செட்டப் வேறே வச்சுகிட்டான். ஜானுவுக்கும் தேனுவுக்கும் நாளும் குடுமிப் புடி சண்டை. பொறுக்க முடியாமல், இதோ ஊசியையை ஒழிச்சுக் கட்டுறேன்னு பாவ்லா காட்டி, ஏமாத்தி பொய் ஊசி ஒண்ணை அழிச்சி ரெண்டு பொண்ணுகளையும் கழட்டி விட்டுட்டான். அத்தோடு விட்டானா, புதுசா வசந்தான்னு இன்னொரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தான். உடனே தேனுவும் ஜானுவும் மோப்பம் புடிச்சி, இவன் நம்மை ஏமாத்தி தொரத்த நாடகம் போட்டான்னு புரிஞ்சி நேரே வந்துட்டாங்க. அப்பாலே மூணு பொண்ணுங்களுக்கும் சண்டை. தெருவில் உரண்டு புரண்டு உன்னை உயிரோடு விட்டேனா பார் என்று ஆளாளுக்கும் சவால் விட்டாங்க. தெருவே வேடிக்கப் பாத்துது. அவனவன் செல்போன்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். “

    “இதுக்கும் நீ திட்டுனதுக்கும் என்ன தொடர்புன்னு சுருக்கமா சொல்லு, வள வளவளக்காத. கதை சகிக்கல, காது கொண்டு கேக்க முடியல்ல, காதிலேயே நாத்தமடிக்குது”.

    “இருங்க பாஸ். பிறகு இங்கதான் ஒரு ட்விஸ்ட். அந்த மூணாவது பொண்ணு நேத்து ஆளு அவுட்டு, மதியம் தூங்கும் போது முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை. உடனே மருத்துவக் கவுன்சில் தலைவன் நாகபூஷணத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது. அவன் என்னடான்னா தேனுவும் ஜானுவும்தான் வசந்தாவைப் போட்டுத்தள்ளியிருப்பாங்க, எனக்கு அவங்க மேலேதான் சந்தேகமுன்னு சொல்லியிருக்கான். போலீஸ் சந்தேகக் கேசுல தேனுவையும் ஜானுவையும் இப்ப உள்ள போட்டுட்டாங்க. எல்லோருமே ஜெயில்ல இப்போ கம்பி எண்ணுறாங்க. தேனுவோட அம்மா வந்து எம்பொண்ண வெளிய கொண்டுவாங்க அப்படின்னு அழுதாங்க. நானும் சாயுங்காலம் வாங்க எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க, அவரு கேஸ எடுத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். நீங்க வரதுக்குள்ள கொஞ்சம் தகவல் சேகரிக்க எண்ணி, நம்பரைத்தேடி, அந்த மனோ வியாதி டாக்டர போன்ல கூப்பிட்டு விசாரிச்சேன். அவனிடம் என்னை அறிமுகப் படுத்தி வசந்த் பேசுறேன்னு சொன்னவுடன் ரொம்பவே உற்சாகமானான்.”

    “அந்த மாதிரி உற்சாகமானவனை நீங்க திட்ட காரணம் என்ன? நான் சொல்லவா? உங்களுக்கும் ஒரு செக்ஸ் ஊசி வேணுமின்னு கேட்டுருப்பீங்க , அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்”

    “தேனுன்னு இருக்கிற உன் பேரை தேனீ அல்லது தேளு அப்படின்னு மாத்தி வச்சுக்கோ, சும்மா வாயால கொட்டிகிட்டே இருக்க”

    “கட் இட் அவுட், வாட் ஹி சட் வசந்த், தேனு சொன்ன மாதிரிதான் கேட்டியா?”

    “அப்படி ஒரு ஊசி இருக்கிறது உண்மையா? எவ்ளோ விலை அப்படின்னு கேட்டேன் பாஸ். அதுக்கு அந்தப் பாழாப் போறவன், “யோவ், நான் உன்ன புத்திசாலின்னு நெனச்சிருந்தேனே, ஏன்யா இந்த மாதிரி கேக்கிற, உண்மையா இருந்தா நான் எவ்வளவோ சம்பாதிச்சிருப்பேனே. மனோ வியாதி டாக்டருங்கிறதாலே மனோதத்துவ முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன். சிரிஞ்சில டிஸ்டில்ட் வாட்டர போட்டு இன்ஜெக்ட் செய்து, இது ஒரு அதி அற்புதமா வேலை செய்யுற மருந்துன்னு சொல்லுவேன். பேஷண்டும் நான் பேசுறதக் கேட்டு உண்மையின்னு நம்பி கொஞ்சம் கொஞ்சமா பலனடைவாங்க. ப்ளாசீபோ எஃபக்ட்டு, பிளசிபோ விளைவு, மருந்துப்போலி விளைவு, வெற்று மாத்திரை விளைவுன்னெல்லாம் நீங்க கேள்விப் பட்டதே இல்லையா? மூளைக்கு நான் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுப்பேன். தேனுவும், அண்ணாசாமியும் அந்த மருந்தெல்லாம் சுருட்டிகிட்டு போனவுடன், தேனுவின் தொல்லை ஒழிஞ்சுது மருந்து புட்டிகளில் இருக்கிற தண்ணியெல்லாம் முடிஞ்சவுடன் ஆட்டம் போடுறத நிறுத்திடுவாங்கனு கண்டுக்காம விட்டுட்டேன். நீங்களும் இதெல்லாம் உண்மையான்னு கேக்க வந்திட்டீங்களே” அப்படின்னு கத்தி போனைக் கட் பண்ணிட்டான்.

    “நீ நெனச்சது சரிதான்”

    “தேங்க் யூ ப்ரபொசர்”

    பாஸ்…என்று கோபத்துடன் வசந்த் தொடங்கியபொழுது, கணேஷின் செல்போன் இடைமறித்து ஒலித்தது. போனில் எண்ணைப் பார்த்து “இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்…” என்று கூறிவிட்டு கணேஷ் இடையூறு இல்லாமல் பேசுவதற்காக ஜன்னலோரம் போனான்.

    “வசந்த், எனக்கு கைரேகை பார்ப்பீர்களா? நான் ப்ரபொசர் மாதிரி புகழ் பெற்ற லாயரா வருவேனா?” என்றாள் தேனு.

    அவள் குரலில் இருந்தது கிண்டலா அல்லது உண்மையான ஆர்வமா என வசந்திற்குப் புரியவில்லை.

    “நான்கூட புகழ் பெற்றவன்தான். இப்பவெல்லாம் முகத்தை பார்த்தே ஜோசியம் சொல்லப் படித்திருக்கிறேன். உன் சப்பை மூக்கைப் பார்த்தால் நீ எதிலேயும் முன்னேறவே மாட்டாய் எனத் தெரிகிறது”.

    “ஃபை..ஃபை..சொதப்பி ஃபை, நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை” என்ற தேனு எழுந்து ஆடினாள்.

    “என்ன இங்க கொண்டாட்டம்? ராஜேந்திரனைப் பார்க்கப் போகணும், என்னிடம் கார் கிடையாது”

    “வாங்க ப்ரபொசர், வீடு போற வழியில உங்கள டிராப் பண்றேன்”

    “நீ உருப்படியா வீடு போற வழியைப் பாரு, திருப்பி வர பாஸ் என்ன பண்ணுவாராம், வாங்க பாஸ் நான் இருக்கேன் உங்களுக்கு”

    “பை, பை சீரியோ…”

    தனது கார் கதவைத் திறந்து உட்க்காரப்போன தேனு போன் அடிக்கவே கதவை மீண்டும் மூடி அதில் சாய்ந்து பேசி , சிரிக்கத் தொடங்கினாள்.

    வசந்தின் காரில் கிளம்பினார்கள் கணேஷும் வசந்தும். ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்த வசந்த் கடுப்புடன். “பாருங்க, நடுதெருவில என்ன சிரிப்பும் கொம்மாளமும், எப்பப் பாரு போனைக் குடைய வேண்டியது, இதெல்லாம் தேருங்கறீங்க பாஸ், நோ சான்ஸ்?”

    “ஹார்ஷ் வார்ட்ஸ் வசந்த், அந்தப் பொண்ண ஏன் வாரிக்கிட்டே இருக்க, பின்னால பாக்காத முன்னால பாரு”

    “என்ன பாஸ் திடீர்னு தத்துவம்”?

    “தத்துவமில்ல, காருக்கு எப்ப பெட்ரோல் போட்ட? எம்ப்டின்னு காட்டுது? போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை பெட்ரோல் இருக்குமா?”

    “இருக்கும்”…. தெருமுனைக்கு வந்த கார் நின்றுவிட்டது “ஆனால் இருக்காது பாஸ்.”

    “ஹல்லோ, எனி ஒன் நீட் சம் ரைட்?” பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து தேனு தலையை நீட்டிக் கேட்டாள்.

    “வாடா, அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்”

    “வாங்க ப்ரபொசர், நான் இருக்கேன் உங்களுக்கு” என்றாள் தேனு.

    [தன்னிலை விளக்கம்: எழுத்தாளர் சுஜாதாவைப் போல நானும் “கணேஷ்-வசந்த்” கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாறின் அடிப்படையில் எழுந்த கற்பனைக் கதையிது, சுஜாதா மன்னிப்பாராக]

    https://groups.google.com/d/msg/vallamai/_DG_fpwcNgY/DcSH1SWhMucJ

     

     

    படம் உதவி: https://siliconshelf.wordpress.com/

    Share
  • பெரிய வாத்தியார்

    நிர்மலா ராகவன்

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம்.

    இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும்.
    இதைப் பழக்க தோஷத்தில் அறிந்திருந்த நண்பர் நாதன், “காலம் கெட்டுப் போச்சு!” என்று சொல்லிவைத்தார், பட்டுக்கொள்ளாமல்.

    முன்பு ஒருமுறை, ‘எதைச் சொல்றீங்க?’ என்று தெரியாத்தனமாய் கேட்கப்போய், ‘ஏன்யா? நீங்க தினசரி பேப்பரே படிக்கிறதில்லையா? இல்ல, டி.வி.யிலேயாவது பாத்துத் தெரிஞ்சுக்கிறது! இப்படி ஒங்களைமாதிரி, ‘நாட்டை ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, இல்ல, அந்தக் கொரங்கே ஆண்டால் என்ன’ன்னு கெணத்துத் தவளையா அவனவனும் இருக்கிறதாலேதான் ஒலகம் இப்படி சுயநலம் பிடிச்சு, ஒரேயடியாக் கெட்டுக் கிடக்கு!’ என்று சாம்பசிவத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த ஜன்மத்துக்கும் மறக்குமா!

    தான் தினசரி படிக்காததிற்கும், உலகம் கெட்டுப்போவதற்கும் என்ன சம்பந்தம் என்று நாதனுக்குப் புரியத்தான் இல்லை. அதை வாய்திறந்து எப்படிக் கேட்பது? என்ன இருந்தாலும், தான் சாதாரண ஆசிரியராக இருந்தபோது, அதே தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்தவர் ஆயிற்றே! இப்போது இருவருமே ஓய்வு பெற்று, அரசாங்கம் அளித்துவந்த சொற்ப பென்ஷன் பணத்தில் வறுமையின் எல்லைக்கோடு கண்ணில் தெரியும் தூரத்தில் இருந்துவந்தபோதும், சாம்பசிவம் மட்டும் அந்தப் பழைய மிடுக்கைக் குறைத்துக்கொள்ளவே இல்லை.

    ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்புவரை இருந்த அப்பள்ளியில் படித்த சிறுவர், சிறுமியர் அனைவரும் ‘பெரிய வாத்தியார்’ என்று பயபக்தியுடன்ஒதுங்கி வழி விட்டது, வாரம் தவறாது, திங்கள் காலை அவர்கள் எல்லாரையும் பள்ளி வளாகத்தில் இரட்டை மாடிக் கட்டிடத்தின்முன் நிற்கவைத்து, ஒழுக்கம், கடவுள், கலை என்று தனக்குத் தோன்றியதைப்பற்றி எல்லாம் மைக்கே அதிர்ந்துவிடும்படி அலறியது, மற்றும் தான் சொன்னது, செய்தது எதிலாவது குறையோ, மாற்றமோ தெரிவித்த ‘மரியாதை கெட்ட’ ஆசிரியர்களை அவர்களது வேலைப்பளுவை அதிகரிக்கச்செய்து, மரியாதை உள்ளவர்களாக மாற்றியது — இப்படிப் பலவும் சாம்பசிவம் தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த மதிப்பெண்களைக் கூட்டிக்கொள்ள வைத்திருந்தன. மேலும், அவருடைய பெரிய ஆகிருதியும், ரகசியம் பேசினால்கூட எட்டு வீடுகளுக்குக் கேட்கும் சிம்மக்குரலும் அவரது பலம்.

    சாம்பசிவம் ஓய்வு பெற்றதும், அந்தச் சிற்றூரைவிட்டு, டவுனில் இருக்கும் மகனுடனேயே போய் தங்கிவிடவேண்டும் என்று அவருடைய மனைவிக்கு ஆசை. ஆனால் தான் யாரென்றே தெரியாத பலரும் இருக்கும் ஓரிடத்தில் போய், தனது மதிப்பைக் குறைத்துக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை.

    இது பழகிப்போன இடம். ஓரிரண்டு தறுதலைகள் இவரைப் பார்த்தும் பாராதமாதிரி ஒதுங்கிப்போனாலும், ‘பெரிய வாத்தியார்’ என்று மார்க்கெட்டில் முருங்கைக்காய் விற்பவரிலிருந்து தபால்காரர்வரை இவரைத் தெரியாதவர்கள் எவருமில்லை. ‘ஆசிரியர்’ என்றால் எல்லாமே அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற அவர்கள் எண்ணத்திற்கேற்ப இவரும் நடந்துகொண்டார். தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, எல்லா விஷயங்களுக்கும் நியாய அநியாயம் கற்பிப்பார். பெரும்பாலும், இவரது தர்க்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காதில் இவரது சொற்கள் விழாதது இவருக்குச் சௌகரியமாகப் போயிற்று.

    இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சாம்பசிவம் ஒரே ஒரு தவறுமட்டும் செய்துவிட்டார். கல்யாணமான முதல் இருபது வருடங்கள் மனைவியை ஒரேயடியாக அடக்கி ஆண்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறார், காலங்கடந்து. வீட்டில் அவள் ராஜ்ஜியந்தான்.

    ‘போன ஜன்மத்தில கோயில் தேரா இருந்திருப்பீங்களோ! மழையோ, வெயிலோ, நாள் தவறாம தெருத்தெருவா அசைஞ்சுக்கிட்டுப் போகணும் ஒங்களுக்கு!’ அவர் எது செய்தாலும், அதைப் பழிக்காவிட்டால் அவளுக்கு உணவு செரிக்காது.

    அவள் வாய்க்குப் பயந்தே அவர் கூடுமானவரை வீட்டில் இருப்பதைத் தவிர்க்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை.
    அவள் சொல்வதற்கு ஏற்றார்போல், கடைத்தெரு, கோயில் பிரகாரத்துக்கு வெளியே, ‘விளையாட்டு மைதானம்’ என்ற பெயர் தாங்கிய முட்செடிகள் அடர்ந்த புல்வெளி — இப்படி, கால் போன போக்கில் செல்வார் சாம்பசிவம். அந்தச் சிற்றூரைத் தவிர வேறு வெளியுலகமே அறிந்திராத அப்பாவிகள் யாராவது சாம்பசிவத்திடம் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கும்தான் பொழுது போகவேண்டாமா?

    அப்படித்தான் அன்று நாதனும் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்த சாம்பசிவம், “எல்லாம் சட்ட விரோதமா நம்ப நாட்டுக்குள்ள நுழைஞ்சவங்களைத்தான் சொல்றேன்!” என்று பீடிகை போட்டார்.

    “யாரு, இந்தோன்களைச் சொல்றீங்களா?” மரியாதையை உத்தேசித்து, அக்கறை காட்டினார் நாதன்.

    “அது பழைய சமாசாரமில்ல? நான் அதைச் சொல்ல வரல,” என்று மறுத்தாலும், வகுப்பில் பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் சொல்லி நினைவுபடுத்துவதுபோல, அந்தப் பழைய சமாசாரத்தைப்பற்றியே பேசிக்கொண்டுபோனார். “மலையில வளர்ந்திருக்கற மரத்தையெல்லாம் நெருப்பு வெச்சுக் கொளுத்திட்டு, அங்க கத்தரிக்கா, வெண்டைக்கா செடியெல்லாம் போட்டு, அதில காய்க்கறதை ஒண்ணுக்கு நாலு விலை வெச்சு நம்ப தலையில கட்டறானுங்க. இன்னும், ராவில வீடு பூந்து திருடிட்டு, ‘என்னைப் பிடிங்கடா, பாக்கலாம்!’ அப்படின்னு சவால் விடறமாதிரி, கறுப்புக் கறுப்பா கைரேகையை வீட்டுச் சுவத்தில பதிச்சுட்டுப் போறானுங்களாம். அதான் தெரிஞ்ச கதையாச்சே!”

    “ஓ! அப்போ ‘பங்களா’வைச் சொல்றீங்களா?” என்று கேட்கும்போதே நாதனுக்குப் பெருமை ஓங்கியது, சரியான விடை அளித்துவிட்ட மாணவனைப்போல.

    “அதேதான்!” என்று சாம்பசிவம் ஆமோதிக்கவும், நாதனுக்கு உச்சிகுளிர்ந்து போயிற்று. அந்தச் செய்தியும் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், அது தன் வாயிலிருந்து வருவதைப் பெரிய வாத்தியார் விரும்பமாட்டார் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால், அவருக்கும்தான் அலட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுப்போமே என்று பெருமனது பண்ணி, வாயை மூடிக்கொண்டு, பழைய பணிவு மாறாது நின்றார்.

    “ஏழு வயசுப் பொண்ணு, பாவம்! இப்பத்தான் பல் விழுந்து முளைச்சிருக்கும். அதைப்போய்…! சே! இவனுங்களை எல்லாம் அவன் ஏறி வந்த படகிலேயே திரும்பவும் ஏத்திவிட்டு, நடுக்கடலிலே மூழ்க வைக்கணும்!”

    சாம்பசிவத்துக்குத் திடீர்திடீரென்று யார்மேலாவது கோபம் கிளம்பும்.

    ‘இவன்களை எல்லாம் வரிசையா நிக்கவெச்சு, சுட்டுத்தள்ளணும்!” என்று ஆக்ஞை பிறப்பிப்பார். இல்லாவிடில், ‘நகக்கணுவிலே ஊசியேத்தணும்,’ ‘கொதிக்கற எண்ணையில தூக்கிப் போடணும்’ என்று, நரகத்தில் நடத்தப்படுவதாகப் பெரியவர்கள் கூறித் தான் கேட்டிருந்ததை எல்லாம் சொல்லிச் சபிப்பார்.

    ‘பிரெஞ்சுக்காரன் கடலிலே அணுசக்தி ஆராய்ச்சி செய்யறானே! அதில செத்துப்போற மீனை எல்லாம் அவனையே சமைச்சுச் சாப்பிடச் சொல்லணும்!’ என்று ஏசுவார். எல்லாம், ‘அவன் காதில் விழவா போகிறது!’ என்ற தைரியந்தான்.
    சொல்கிறபோது சிறிது வீரமாக உணர்வார். வீட்டில் நுழையும்வரை அது நிலைக்கும்.

    “காலம் கெட்டுப் போச்சு!” என்று ஒத்துப்பாடினார் நாதன். மனமோ, ‘ஓ! இதுதானா காரணம்!’ என்று எக்காளமிட்டது.

    சாம்பசிவத்தின் கடைசி மகள் கடந்த வருடம் பெட்ரோல் ஸ்டேஷனில் வேலைபார்த்த ஒரு அயல் நாட்டானின் அழகிலோ, வேறு எதிலோ மயங்கி, வீட்டைவிட்டு ஓட இருந்தாள். தக்க சமயத்தில் மூக்கில் வியர்த்து, அதைத் தடுத்து, பெண்ணை உடனடியாக டவுனுக்கு, அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் சாம்பசிவம். அடுத்த வீட்டுக்காரன் யாரென்றே தெரியாது அங்கு ஒவ்வொருவரும் வாழ்ந்தது அவருக்குச் சாதகமாகப் போயிற்று.

    அப்பெண்ணை நிறைமாதக் கர்ப்பிணியாக அங்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக அவர்கள் பள்ளித் தோட்டக்காரன் முருகன் நாதனுடைய காதைக் கடிக்காத குறையாகச் சொன்னதோடு, ‘பெரிய வாத்தியார்கிட்ட இதைப்பத்தி நான் சொன்னதா எதுவும் கேட்டுடாதீங்கைய்யா!’ என்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

    அதன்பின், அப்பெண் தந்தைவீடு வந்து சேர்ந்தாள். அவளைப்பற்றிய ரகசியம் தனக்குத் தெரிந்திருப்பதாலேயே தான் அவரைவிட ஒரு படி மேல் என்று நாதன் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த எண்ணத்தில் பிறந்த கருணையுடன், “நாடுவிட்டு நாடு எதுக்காக வந்து, இங்க இருக்கறவங்க பிழைப்பிலே மண்ணைப் போடணும்கிறேன்!” என்றார் அழுத்தமாக.

    தமது மூதாதையர்களும் அதேமாதிரிதான் தாய்நாட்டைவிட்டு இந்த மலேசிய மண்ணில் கால்பதித்தார்கள் என்பதை இருவருமே அப்போது நினைத்துப்பார்க்க விரும்பவில்லை.

    நாதன் சொன்னது தன் காதிலேயே விழாததுபோல் நடந்துகொண்டார் சாம்பசிவம். ஒருநாள்போல் தினமும் இரவில் வீட்டுக்குப் போனால், மனைவியிடம் ‘பாட்டுக் கேட்கவேண்டி வருமே’ என்ற பயமெழ, சாம்பசிவம் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொள்ளப் பார்த்தார்: “அட, நாம்பளும் இளவட்டங்களா இருந்தவங்கதான். இப்படி ஆயிரக்கணக்கான மைல் தொலைவு — மலைமேலேயும், காட்டுக்குள்ளேயும் நடந்துவந்து, — பிழைப்புத் தேடறது லேசில்ல. ‘பணம்தான் கிடைக்குதில்ல, சன்னியாசிமாதிரி இரு’ன்னு சொல்லிட முடியுமா?”

    பெரிய வாத்தியார் திடீரென்று கட்சி மாறிவிட்டது எதனால் என்று திகைத்தார் நாதன். ஆண்-பெண் விவகாரத்தைப்பற்றிப் பேச்சு திரும்பியதும், சாம்பசிவத்துக்கு மனைவி ஞாபகம் வந்ததை அவர் எப்படி அறிவார்!

    “கோயிலுக்கு வந்தோமா, சாமி கும்பிட்டோமான்னு இல்லாம, கண்டதுங்களைப்பத்தி எல்லாம் என்னா பேச்சுங்கறேன்!” என்னவோ, அடுத்தவர் மூச்சு விடாமல் பேசினாற்போலவும், தான் அதைக் கேட்க நேர்ந்துவிட்டாற்போலவும் நொந்துகொண்டவர், நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “என்னப்பனே, முருகா! எல்லாருக்கும் நல்ல புத்தியைக் குடுடா!” என்று கடவுளை இறைஞ்சியபடி, எதிரில் நின்றிருந்தவரிடம் விடைபெற்றுக் கொள்ளாமலேயே நடையைக் கட்டினார்.

    (இதயம், 1996, வலைத்தமிழ்)

    Share
  • தங்கை நுப்ரா…

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    இன்ஷாத்துக்கு அன்று தூக்கமே வரவில்லை .இப்படியொரு அன்பான அருமையான தங்கை தன் வாழ்வில் குறுக்கிடுவாள் என அவன் கனவு கூட கண்டிருக்கவில்லை .

     

    அப்போதெல்லாம் அவனின் நண்பர்கள் தங்கள் “தங்கைகளை” புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது இன்ஷாத்தின் மனம் ஊமையாக கண்ணீர்  வடிக்கும். பொறாமையால் அவன் மனம் வெந்து போகும். இப்போது தனக்கு கிடைத்த இந்த தங்கையை அல்லாஹ்வால் தனக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே அவன் மகிழ்ந்துபோவான். அந்தக் கடிதத்தை எத்தனை தடவை பார்த்த போதிலும் அவன் மனம் அலுத்துக்  கொள்ளவில்லை. அவள் அதில் எழுதியிருந்த  அந்த  “நானாவை” மட்டும் தனக்குள் ஆயிரம் தரம் படித்துப் பார்த்து விட்டான் இன்ஷாத். இப்போதும் அந்தக் கடிதம் தான் அவன் கையில் இருந்தது. “அன்புள்ள நானா…! வண்டமிழ் வந்தனங்கள் பல! நான் நலம்! தங்களது நலம் மலராய் செரிந்து மணம் வீச ஏன் பிராத்தனைகள் தென்றலாய்  தடவட்டும்!” “இதுவரை நான் தங்களுக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன்.எல்லாவற்றிற்கும் பதில் எழுதி உங்கள் அன்பை வெளிப்படுத்தினீர்கள். நன்றிகள் நிழல்களாக! ” “நானா! நாளை உங்களுக்குத் லீவு நாள். அன்றைய மதிய உணவை தங்களுடன் சேர்ந்து உட்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். நீங்கள் வராவிட்டால் நான் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பது என முடிவு செய்துள்ளேன். எனவே என் அழைப்பை ஏற்று என் குடிசைக்கு வந்து என்னை  மகிழ்விப்பீர்களென நம்புகிறேன்.

    இப்படிக்கு உங்கள் வரவை எதிர்ப்பார்க்கும் அன்புத் தங்கை நுப்ரா”.

    கடிதத்தை படித்த இன்ஷாத் அப்படியே  தூங்கிப் போய்விட்டான். சகோதரிகள் இன்றிப் பிறந்த இன்ஷாத் எழுத்துத் துறையில் வல்லன். அவன் எழுதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும்  ஆகியன பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். வானொலியில் ஒலிபரப்பாக்கியும் வந்தன. இதனால் இன்ஷாத்துக்கு பல ரசிகர்கள், ரசிகைகள் அவனை பாராட்டி பல கடிதங்கள் வரைந்தனர். இந்த ரசிகைகளில் ஒருத்திதான் இந்த நுப்ரா. அவள் எழுதும் கடிதங்களில் கலக்கமில்லாத தூய அன்பு,பாசம் நிறையவே இழையோடுவதை அவனால் நன்கு உணர முடிந்தது. நானா…நானா… என்று எழுதுவதைப் பார்த்து அவன் பூரித்துப் போவான். அந்த தங்கையை  தன் உடன் பிறவாத தங்கையாகவே நினைத்துக் கொண்டான் இன்ஷாத்.

    தங்கையைப் பார்க்கப் போகும் ஆவல் இன்ஷாத்தை அதிகாலையிலேயே எழுந்து உட்கார வைத்து விட்டது. கைகடிகாரம் மணி ஐந்து  என்பதை சரியாக காட்டிய  போது அவன் அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் எழுந்து கொண்டான். தன் காலைக் கடமைகளை உற்சாகமாக  நிறைவேற்றியவன் தாய் கொடுத்த காப்பியையும் காலைச் சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டு நன்றாக “ட்ரெஸ்” பண்ணிக் கொண்டு  தன் தங்கையை பார்க்க புறப்பட்டான். அப்போது நேரம் சரியாக காலை எட்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. நுப்ராவின் வீட்டை நெருங்கிய போது பயம் அவன் மனதைபிடித்துக் கொண்டது. மெதுவாக வீட்டுக் கதவை தட்டிய போது “வாருங்கள்” என்ற சந்தோசமான வரவேற்பு அவனை மெய் சிலிர்க்க வைத்தது. அவனுக்காகவே காத்திருந்தது போல் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். அவளது அன்பான வரவேற்பில் அவள் நுப்ராவாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவன்  மனம் உறுதியாகக் கற்பனை பண்ணிக் கொண்டது. இரண்டு, மூன்று வருட பேனா சந்திப்பின் பின் இன்று தான் நேரடியாகச் சந்திக்கின்றான். நுப்ரா ரொம்பவும் அழகாக இருந்தாள். அதைப் போல் வீடும் கவர்ச்சியாக, அழகாக காட்சியளித்தது. நுப்ரா, வாய் ஓயாமல் கதைத்துக் கொண்டிருந்தாள். இடையில், தானும் வேலைக்காரக் கிழவியும் தான் வீட்டில் இருப்பதாக கூறினாள். ஒரு உறவினரின் கல்யாண  வீட்டுக்கு போயிருக்கும் பெற்றோர் நாளை தான் வருவார்கள் எனவும் கூறினாள்.

    கடிதத்தில் “நானா…நானா…” என எழுதும் அவள் இன்ஷாத் வந்து ஒரு மணி நேரமாகியும் கூட ஒரு தடவைக் கூட “நானா” எனக்  கூப்பிடாதது அவன் மனதை என்னவோ செய்தது. பாடசாலை ஆசிரியருமான இன்ஷாத்துக்கு அவள் போக்கு அறவே பிடிக்கவில்லை. அவன் அதிகநேரமாக மௌனமாகவே இருந்தான். “ஏன் பேசாமலே இருக்கீங்க… என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா…? என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு தூக்கி வாரிப் போட்டது. “நீங்க நுப்ராதானே…?ஆச்சரியத்தோடு கேட்டான் இன்ஷாத். “ஆமாம்” என்றவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். “நீங்க தனியாகத்தான் இருக்கீறீன்களா…?” என்று படபடப்போடு அவன் கேட்ட போது. “ம்… யாருமே  இல்லை…. உம்மா போகும் போது பக்கத்து வீட்டு தோழிகளை துணைக்கு கூப்பிடச்  சொல்லிட்டுப் போனாங்க… ஆனா… நான் யாரையுமே துணைக்கு கூப்பிடப் போறதில்லை… நீங்க தான் துணைக்கு  வந்திட்டீங்களே… இனி  எதற்கு….”  “உங்கள எனக்கு நல்லாப்  பிடிச்சிருக்கு….உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா…..? இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஷாத் அப்படியே  விறைத்துப் போய் விட்டான். எத்தனை தூய மனதோடு  அவளை  பார்க்க வந்தவனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

    “பெண்களே இப்படித்தானோ”என  எண்ணியவன்  “நீ…..நானா…நானா என்று எழுதியதை நன்றாக  நம்பி நான் இங்கு வந்து விட்டேன்… என்னை மன்னித்துக்கொள்”  “எனக்கு உன்னை  அறவே பிடிக்கவில்லை” என்று கூறியவன்  அவள் பதிலை எதிர்பாராமல்  சட்டென எழுந்து கொண்டான். அப்போது தான் அவள் கண்கள் கலங்கி  இருப்பதை அவனால் காண முடிந்தது. கூடவே அறைக்குள்ளிருந்து  நாலைந்து  பெண்களின் சிரிப்பொலி அவன் காதை துளைத்தது.  அத்தனை பேரும் சேர்ந்து  அவனை “நானா ” என அழைத்து, வெறுப்போடு போக இருந்தவனை திரும்பவும்  உட்காரவைத்தார்கள். கூடவே அவள் பெற்றோரும் சிரித்தபடி இன்ஷாத்தை அன்போடு பார்த்தபடி நின்றிருந்தார்கள். இன்ஷாத்துக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் அவன் எப்படிப்பட்டவன் என்று பார்ப்பதற்காக  அவர்கள் வைத்த  சோதனை  என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

    நானா தங்கை என்று பழகுவார்கள் சந்தர்ப்பத்தில் காதலர்கள் ஆகி விடுவார்கள். ஆண்கள் தனியாக பெண்ணைக் கண்டால் மனம் மாறிவிடுவார்கள். ஆனால் தன் மேல் இன்ஷாத் உண்மையான பாசம் தான் என்பதை  நன்றாக உணர்ந்து கொண்டாள் நுப்ரா. இன்ஷாத்துக்கு அறுசுவை உணவு  அந்த வீட்டில்  அன்போடு வழங்கப்பட்டது. நுப்ரா “நானா…….நானா…..” என  வாய்நிறைய அழைத்து உபசரித்ததனால் இன்ஷாத் மகிழ்ந்து போனான். பின்னர் அந்த அன்புத்  தங்கை  நுப்ராவிடம் விடை பெற்ற போது  அவன் கண்கள்  நீரை நிறைத்துக் கொண்டதை  அவனால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

    Share
  • மாறிய ஜென்மங்கள்

    — ரா.பார்த்தசாரதி.

    கமலாவும், சாரதியும் அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து இரு வருடங்கள் ஓடிவிட்டது. இருவரும் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். சாரதி ஓய்வு பெற்று, கிராமபுரத்தில் இருந்த ஒரு கிரௌண்டை விற்று, அந்தப் பணத்தை வங்கியில் போட்டு, அதில் வரும் வட்டியில் அந்த முதியோர் இல்லத்திற்கு மாத வாடகை கொடுத்துவிட்டு காலம் தள்ளினர். சிட்கோ நகரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை இதர செலவிற்கு வைத்து கொண்டார்.

    சாரதிக்கும், கமலாவிற்கும் ஒரு மகள், ஒரு மகன். இருவருக்கும் வெளிநாட்டில் வேலை. தூர இருந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, பக்கத்தில் இருந்தால் செடியும் பகை. இது யாவரும் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் தான் செய்ததை நினைத்து பார்த்தார் சாரதி. இரு பிள்ளைகளிடத்திலும் மாறாத அன்பும்… சனி, ஞாயிறு அவர்களை பீச், பார்க் என்றும்; பெண்ணை பாட்டு கிளாஸ் என்றும், பையனை ஓவிய வகுப்பு என்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்க வைத்தார். பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தது, அவளுக்கு ஓர் ஆண் குழந்தை மூன்று வயதில் … பேரன் பெயர் கேஷவ். மகன் கார்த்திக்கிற்கு பெண் குழந்தை அனுஷா, இரண்டு வயதில் .

    இவ்வளவு தூரம் படிக்கவைத்து பிள்ளைகளிடமிருந்து ஒதுங்கி வாழக் காரணம் என்ன?

    வருடத்திற்கு ஒரு முறையாவது போய் அவர்களைப் பார்த்து வந்தனர் கமலாவும், சாரதியும். அவர்களுக்கு மகன் கார்த்திக், மகள் பிரியா இருவருமே இரு கண்கள். அதிலும் கமலா பாசத்திற்கு அடிமையானவள். சாரதியோ என்றும் தாமரை இலை தண்ணீர் மாதிரி. மகனுக்கு வரன் பார்க்கும்போது ஏற்பட்ட சண்டை அவர்களை நிரந்தரமாக விலக்கியே வைத்து விட்டது.

    தனக்கு நல்ல மருமகள் வரவேண்டும் என்று எந்த தாயும் விரும்புவாள். கார்த்திக் பாரத் மேற்றிமோனியில் பதிவு செய்து வரன்களை தானே முடிவு செய்வதாகவும், அப்பா, அம்மா இருவரையும் புகைப்படத்தையும், ஜாதகத்தையும் பார்க்க அனுமதித்தாலும் தானே பதில் அனுப்ப முடிவு கொண்டான் கார்த்திக். ஒரு நாள் மகனுக்குத் தெரியாமல் ஒரு வரனுக்கு புகைப்படமும், ஜாதகமும், அனுப்பச் சொல்லி பதில் அனுப்பினார் சாரதி. இதைக் கம்ப்யூட்டரில் பார்த்து அறிந்து மிகுந்த கோபத்துடன் தந்தை என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் மகன். உன் அப்பாவை நீ பேசியது தவறு, மன்னிப்பு கேள் என்று கூறிய தாயையும் கேட்க கூடாத கேள்விகளை கேட்டான். கடைசி வரை அவன் தவற்றை உணரவில்லை, மன்னிக்கவும் இல்லை.

    பிறகு பெற்றோர்கள் மகள் பிரியா வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார்கள். இதற்கிடையில் பிரியாவும் மற்றவர்களும் அறிவுரை கூற நிதானமாக சிந்தித்துத் தன் தவறை உணர்ந்தான் கார்த்திக். அவன் நிச்சியதார்த்தம் அமெரிக்காவிலே அப்பா அம்மா வருகை இல்லாமல் நடந்து, திருமணம் மட்டும் சென்னையில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் கைபிடித்த சுமதி மிக அழகாக இருந்தாள், பண்பாடு, கலாச்சாரம் அறிந்து அமெரிக்க வரும்படி அழைத்தாள். திருமணத்திற்கு முன் நடந்தவை ஒன்றும் அவளுக்குத் தெரியாது.

    இரண்டு வருடங்கள் சென்றன. சுமதி கருவுற்றாள். வளைகாப்பு, சீமந்தம் எதற்குமே தன் மாமியார், மாமனார் கூப்பிட்டும் வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அவள் அப்பா, அம்மா, உத்தியோகத்திற்குச் செல்வதால், ஏதோ ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தான் அவளுடன் இருக்கமுடியும். நாத்தனருக்கும் இதே நிலைமைதான். அவளது குழந்தையை சீசேரியன் செய்து எடுத்தார்கள். அம்மா, அக்கா, நாத்தனார் ஒரு மாதத்திற்கு அருகில் இருந்து உதவினர்.

    பிரியாவை ஏர்போர்ட்டில் காரில் கொண்டு விடும்போது அவள் கார்த்திக்கிடம், “எனக்கு அம்மா, அப்பா பிரசவத்தின் போது ஆறு மாதம் கூட இருந்தா.
    உனக்கு என்றால் ஓடி வந்து செய்வா” என்றாள்.

    “எனக்கு செய்ய மாட்டா. நான் பணம் அனுப்புவதற்குதான் பிள்ளை.”

    “அப்படி எல்லாம் பேசாதே. நீ அனுப்பிய பணத்தை உன் மகள் மேல் டெப்பாசிட் செய்ய சொல்லி என்னிடமே அனுப்பிட்டா. நான்தான் ஒரு மாதம் விட்டு ஒரு முறை அவர்கள் பேங்க்குக்கு பணம் அனுப்புகின்றேன். உன் குழந்தயை கிரீச் அனுப்பி கஷ்டபடுகிறாய் !” என்றவள், தொடர்ந்தாள் …

    “அப்பா இப்போது ஒரு சீனியர் சிடிசன் ஆஷ்ரமத்தில் வேலை செய்துகொண்டே, அங்கேயே தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அம்மாவும் பக்கத்தில் உள்ள குழந்தை காப்பகத்தில் வேலை செய்கிறாள். நீ செய்த தப்பை என்றைகாவது உணர்ந்தாயா ! இல்லை உனக்கு மன்னிக்கும் குணம்தான் இருக்கா?”

    இவர்களது உரையாடலை பின்னால் அமர்ந்திருந்த சுமதி கேட்டு கொண்டு இருந்தாள்.

    “நம்ம அப்பா, அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது! அப்பா நமக்கு ஸ்கூல் போகும் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணி, வண்டி வரவில்லை என்றால் நம்மை கொண்டுவிட்டு, என் படிப்பிற்காக தன் தம்பிகளிடம் பணம் கேட்டு, பாட்டு கிளாஸ், உன்னை கிரிக்கெட், டிராயிங் கிளாஸ் எல்லாம் கொண்டுவிட்டு அழைத்து வந்து, பள்ளிகூடத்தில் விண்ணப்பதிற்காக விடியற்காலையில் நின்று இவ்வளவும் பண்ணின அப்பாவை உன்னால் எப்படி ஏத்துக்க முடியவில்லை. அவருக்கு உரிய மரியாதையை நீ கொடுக்கவில்லை. அதனால்தான் இருவருமே உனக்கு செய்வதற்குத் தயங்குகிறார்கள். நீ இங்கு வருவதற்கு காரணமே அப்பாதான். பாங்கில் கடன்வாங்கி உன்னை முதலில் இங்கு அனுப்பி படிக்கவச்சி இன்று நீ சம்பாதித்து கடனை நீயே அடைத்தாலும், பிள்ளையார் சுழி போட்டது அப்பாதானே ! இன்னிக்கி நாம் நன்னா இருக்கோம் என்றால் அதற்கு அப்பா அம்மா தான் காரணம். The integrity of man is to be measured by the conduct and character and not by their profession. இந்த வார்த்தயை அப்பா அடிக்கடிசொல்வா.” என்றாள் பிரியா.

    சுமதி, “பிரியா அக்கா அடுத்த மாதம் என் அத்தை மகன் கல்யாணத்திற்கு இன்வைட் பண்ணிருக்கா நான் இவரையும் அழைச்சுண்டு போகப்போறேன்” என்றாள். திருமணம் தேதி, இடம், அத்தைமகன் பெயர், வேலை போன்றவற்றை விவரித்தாள். அவர்கள் என் கல்யாணத்திற்கு வரமுடியாதவங்க என்னை கூப்பிட்டால் போய்விட்டு வருவேன் என்றாள்.

    மறுநாள் பிரியா சுமதிக்கு போன் பண்ணி தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை சொன்னாள். “சுமதி உன் அத்தை பெயர் கொண்ட திருமண பத்திரிகை எங்களுக்கும் வந்திருக்கு. மணமகள் என் கணவனின் மாமா பெண்தான் நல்லதா போச்சு. நானும் இவரும் உடனே சென்னை வருவதற்கு ஏற்பாடு செய்கிறோம், உங்களுக்கும் டிக்கெட் புக் செய்யவா? இதை கார்த்திக்கை கேட்டு எனக்கு சொல்லு” என்றாள்.

    பிரியாவிற்கு தனது அம்மா அப்பாவை பார்க்க ஆசை. தன் மூன்று வயது கேஷவ்வை அவர்களிடம் காண்பிக்க ஆசைப் பட்டாள். அவள் அம்மா ஒரு வயது வரைக்கும் அவளது மகனை வளர்த்தாள்.

    இருபது நாட்கள் கடந்தன. சென்னைக்கு பேக்கிங் செய்த சுமதிக்கு கார்த்திக்கும் உதவி செய்தான். தன்னுடையதையும் எடுத்து வைத்தான். கார்த்திக்கும் பிரியாவும் ஏர்போர்ட்டில் சந்தித்து கொண்டார்கள்.

    “பிரியா எனக்கு எப்படியாவது இவருடைய அப்பா அம்மாவை அழைதுவரவெண்டும். என்ன செய்யலாம். நேற்று இரவே அவரிடம் கேட்டேன்.”

    “அது முடியாத காரியம் சுமதி. அவர்கள் வரமாட்டார்கள்” என்றாள் பிரியா.

    குழந்தை இருப்பதால் விமானத்தில் பிரியாவுக்கும், சுமதிக்கும் பக்கத்து பக்கத்து சீட். மறுநாள் விமானம் சென்னையை காலை ஐந்து மணிக்கு அடைந்தது. மூன்று நாள் ஜெட்லாக், நான்கு நாள் ரெஸ்ட் , மூன்று நாட்களுக்கு,நண்பர்கள் உறவினர்கள் விருந்து, ஆக பத்து நாட்கள் முடிந்தது.

    கடைசி நாள் அப்பா, அம்மாவைப் பார்பதற்கு சுமதியும், பிரியாவும் காலையில் கால் டாக்ஸி பிடித்து குடும்பத்துடன் ஆஷ்ராமத்தை அடைந்தார்கள். சாரதிக்கு ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் எரிச்சல். செகரட்டரிக்கு போன் செய்து அவர்களை பார்க்க விருப்பும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடு என்றார்.

    கமலாவைப் பார்த்து, “உனக்கு வேண்டுமானால் பிள்ளை, பேரன் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்றால் நீ போய் பார்த்து வா. என்னைக் கூப்பிடாதே” என்றார்.

    கமலாவும், அரை மனதுடன் கேட்டை நெருங்கினாள். அம்மா என்று பிரியாவும் சுமதியும் ஓடிவந்தார்கள்.

    “அப்பா எங்கே? என்றாள் பிரியா.

    “அவர் இங்கு வர மறுத்துவிட்டார்”

    “அப்பாவைப் பார்க்காமல் நானும் சுமதியும் இங்கிருந்து நகர மாட்டோம்!”

    செக்கியூரிட்டியும் மூன்று தடவை சாரதிக்கு போன் செய்து, “சார், உங்க மகளும் மருமகளும் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாங்க தயவு செய்து வந்து எட்டி பார்த்துவிட்டு போங்க சார்” என்றார்.

    grandparentsதலை எழுத்தே என்று சாரதி கேட்டிற்கு வந்தார். உடனே பேரன் கேஷவ், தாத்தா, தாத்தா என்று ஓடி வந்ததும், பின்னாடியே பேத்தி ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு, குழந்தைகள் இரண்டும் தூக்கு, தூக்கு என்று கையை உயர்த்தியது.

    கமலாவும் பேத்தியை எடுத்துக் கொஞ்சினாள். இருவருமே குழந்தயை கொஞ்சிவதிலேயே இருந்தார்களே தவிர, பெண்ணையும், மருமகளையும் கவனிக்கவே இல்லை.

    அவர் மாப்பிளை, “அப்பா, நானும் உங்க மகனும் இரண்டு மணி நேரம் ஹாலில் வெயிட் பண்றோம், எங்களை நீங்க இருவருமே கண்டுகொள்ளவே இல்லை.” என்றார்.

    சுமதி பிரியாவிடம், “பார்த்தியா பிரியா, என் பொண்ணும் உன் பையனும் அவர்களிடம் எப்படி ஒட்டுகிறார்கள். இதுதான் ‘ப்ளட் இஸ் திக்கர் தான் வாட்டர்’ என்பது,” என்றாள்.

    கார்த்திக், “அப்பா, என்னை நீங்க மன்னிக்கணும். எப்போ இரண்டு பேரும் யு.எஸ் வருவிங்க. நான் டிக்கெட் வாங்கட்டுமா?” என்றான். சுமதியும், “அம்மா உங்க பேத்திக்காகவாவது எங்ககூட வந்து இருங்கள்” என்றாள்.

    “எல்லாம் அவரைக் கேளு” என்றாள் கமலா.

    சாரதி, “தூரத்துப் பச்சை கண்ணனுக்குக் குளிர்ச்சி. எங்களுக்கு இங்கேயே வசதியாய் இருக்கிறது. நாங்க இங்கேயே இருந்துவிடுகிறோம்” என்றார்.

    பிரியா அழுது விட்டாள். “அப்பா, தம்பி பண்ணின தப்பிற்கு என்னை தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்” என்றாள்.

    சாரதி கமலாவின் மீது பார்வையை செலுத்தினார். அவள் முகம் பேரன், பேத்தியின் பக்கமே இருந்தது.

    “நான் வரவில்லை. உன் அம்மா வந்தா அழைச்சிண்டு போ”

    கமலாவிடம் அவர்கள் போகலாமா என்று கேட்க, அவள் கணவரிடம் நாம் வேண்டுமென்றால்பேரன், பேத்தியை விமான நிலையம் வரை வழி அனுப்ப செல்வோமே என்றாள்.

    விடுதியில் பெர்மிஷன் சொல்லிவிட்டு அவர்கள் காரிலேயே கிளம்பினார்கள். வழி நெடுக பேரன், பேத்தி பற்றிதான் பேச்சு. இவ்வளவு ஆசை வச்சிண்டு வர மறுக்க காரணம் என்ன என்று தெரிந்தும் சுமதி காரணத்தைக் கேட்டாள்.

    “பட்டமரம் ஒட்டுவதில்லை, சுட்ட மண் ஒட்டுவதில்லை. இது தெரியாதாம்மா !” என்றாள் கமலா.

    அந்த அளவிற்கு கார்த்திக் அவர்கள் மனதை புண்படுத்தி இருந்தான். இவர்களிடம் பேரனையும், பேத்தியையும் விட்டுவிட்டு பிரியாவும், சுமதியும் குழந்தைகளுக்கு பால் வாங்கச் சென்றார்கள். சாரதியும் கமலாவும் குழந்தைகளின் மழலை பேச்சில் மயங்கினார்கள். பேத்தியின் சிரிப்பிலும், பேரனின் ஆங்கிலத்திலும் தன்னையே மறந்தார்கள். ஆயிரம் துக்கங்கள் குழந்தை பேச்சில் அமிழும் என்பது உண்மைதான்.

    பால் வாங்கிய பின் பிரியாவும், சுமதியும் குழந்தைகளை இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது, “தாதா, கம்பா பாட்டி” என்ற பேரனின் அலறலும், பேத்தியின் அழுகையும், அவர்களை அழுத்தியது. வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தார்கள்.

    மாப்பிளையும், மகனும் இம்மிக்கிரேஷன் முடித்து விடை பெற வந்தார்கள். கார்த்திக் “அப்பா நான் வரட்டுமா, வரடுமாம்மா” என்றான்.

    “டேய் , கார்த்திக் எனக்கும் உங்க அம்மாவிற்கும் விசாவும், டிக்கெட்டும் ஏற்பாடு செய்” என்றார் சாரதி.

    கார்த்திக் அப்பா அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதான்.

    “நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ரொம்ப தேங்க்ஸ் அப்பா.”

    வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் எது?

    தாய் தந்தையிடம் பார்த்த பாசமா? மகனிடமும், மகளிடமும் உணர்ந்த அன்பா? அண்ணன், தம்பி, தங்கைகள் இடையே உள்ள பந்த பாசமா?

    இது எந்த ரகம் என்று புரிந்துகொள்ள முடியாமல் நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் நமது பேரன்,பேத்திகளின் கள்ளமற்ற சிரிப்பா? பேரக்குழந்தைகளுக்காக மற்றவர்கள் செய்யும் தவறினை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனித நேயமா? பாசத்திற்காக நாம் எல்லோரையும் அரவணைத்துத்துதான் செல்லவேண்டுமா?

    உணர்தவர்கள் பதில் கூறட்டும்.

    Picture Source: http://daycare.sulekha.com/care-corner_all-about-the-grandchild-grandparent-bonding_blog_6158

    Share
  • வசந்த காலங்கள்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன. கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ! நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்டேன். பெற்றோரின் அரவணைப்பைக் காண முடியாத பாவியாகி விட்ட போதிலும் அந்த சுகங்களைக் காணும் பாக்கியத்தை இறைவன் அளித்திருந்தான்.

    ஆமாம்! எனது மாமியினதும் மாமாவினதும் பாசப்பிணைப்பில் நான் பராமரிக்கப்பட்டேன். அன்பை, ஆதரவை ஏன் அனைத்தையும் பெற்றேன். குறைகளின்றியே இன்று  குமரிப் பருவத்தையும் அடைந்து விட்டேன். அந்த மாமி மாமாவின் அன்பை நினைக்கையிலே என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறையும். என் மாமிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான். அழகும் அறிவும் கொண்ட என் மச்சான் ருவைஸ் மிகவும் கெட்டிக்காரன். என்னோடு போட்டி போட்டுக் கொண்டே எந்நேரமும் படிப்பான். படிப்பில் மட்டும் தான் போட்டி. மற்றபடி நானும் அவனும் மிக அன்பாகவே இருந்தோம். பாடசாலையில் கூட ஜெபரீன், ருவைஸ் என்றால் எல்லோருக்குமே தெரியும். படிப்பிலே எம்மைத் தவிர யாரும் முந்திக் கொண்டதேயில்லை. மாமிக்கும், மாமாவுக்கும் சந்தோஷம் நிறைந்து வழியும். கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தார்கள். இறைவனருளால் நானும் மச்சானும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே பல்கலைக்கழகம் சென்று ஒன்றாகவே டாக்டர்களாக வெளியேறினோம்!

    “என்ன ஜெபரீன் யோசிக்கிறீங்க ?” என்று கேட்டவாறே மச்சான் என்னருகில் வந்தததும் நான் யோசனைகளில் இருந்து விடுபட்டேன். “இல்ல….அடுத்த மாசம் களுத்துறைக்கு மாற்றம் கிடைச்சிருக்கு. அதுதான் யோசிக்கிறேன்” என்றேன். “உம்மா கூடச் சொன்னாங்க… என்னையும் உங்களோட  துணைக்குப் போகட்டாம்” என்றார் மச்சான். ஒரு நாளும் இல்லாதவாறு மச்சான் என்னை உற்று நோக்கி அவ்வார்த்தைகளைச் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இவ்வளவு நாட்களாக இப்படி வெட்கம் வந்ததில்லை. ஆனால் நேற்றில் இருந்து மனமெங்கும் ஒரே பரபரப்பாகவே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. எனக்கு களுத்துறைக்கு இடமாற்றம் கிடைத்ததையிட்டு மாமியும் மாமாவும் முடிவு ஒன்றை எடுத்திருந்தார்கள்.

    ஆமாம்! என்னை மச்சானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒன்றாகவே களுத்துறையில் குடியிருத்தவே அவர்கள் நினைத்தார்கள். இதை என்னிடம் மாமி சொல்லிய போது …நான் பதில் சொல்லாமலே  தலை குனிந்தேன். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே ! மாமி சிரித்து  விட்டு போய் விட்டார். மச்சானிடமும் அதைச் சொல்லித்தானே இருப்பார்கள். அதுதான் மச்சான் ஒரு நாளும் இல்லாதவாறு இப்படி பார்க்கிறார்! எனக்கு வழமை போல உட்கார்ந்து மச்சானுடன் கதைக்க முடியவில்லை….எழுந்து நிற்கிறேன்.

    “என்ன நான் துணைக்கு வருவது ஜெபரீனுக்கு விருப்பமில்லையா…? இன்னும் யோசிக்கிறீங்களே!” என்றார் மச்சான்.எனக்கு வெட்கத்தில்  வார்த்தை வரவில்லை. நான் ரூமிற்குள் ஓடி விட்டேன். இதைக் கண்ட மாமி சிரித்துக் கொண்டே எமக்கு திருமணம் செய்யும் நாள் பற்றி ஆலோசித்தார்கள். இறைவன் நாட்டம் வேறு மாதிரி இருந்தது! விரைவில் மச்சானை லண்டனுக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது. புலமைப் பரிசிலில் அவர் எடுபட்டிருந்தார். மேற்படிப்புக்காக லண்டன் செல்ல அவர் சின்ன வயதில் இருந்தே ஆசைப்பட்டார். அவரின் ஆசைகள் எனக்குத் தெரியும். மாமிக்கு எப்படியும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற ஆசை! ஆனால் மச்சானுக்கோ திருமணம் முடிந்தவுடன் என்னைப் பிரிய வேண்டுமே என்ற துயரம். அதனால் நான் தான் சொன்னேன் “மச்சான் படித்து விட்டு வரட்டுமே ” என்று. அது ஒருவாறு தீர்மானமாகி முடிவாகியது. மச்சான் லண்டனுக்குப் புறப்படும் போது என் விழிகள் ஏனோ குளமாகின. என் ரூமிற்குள் வந்த மச்சான் நான் அழுவதைக் கண்டு துடித்து விட்டார். “ஜெபரீன் …! படிக்கத்தானே போறேன்.மூணே மூணு  வருஷம். அப்புறம் வந்து இந்த ஜெபரீனோடேயே இருப்பேன்! ” என்று என் கைகளைப் பற்றி முத்தமிட்டார். அந்த அரவணைப்பும் ஆறுதலும் அப்போது எனக்குத் தேவைப்பட்டது. சிறுபிள்ளை போல நான் மச்சானின் மார்பில் முகம் புதைந்து அழுதேன். நேரம் போனதே தெரியாமல் நான் மச்சானோடு பேசிக்கொண்டு இருந்தேன். மனம் தைரியம் பெற்றது! அவர் லண்டனுக்குப் போய்விட்டார். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே!

    இன்று வீடு மிகவும் கோலமாக இருந்தது. ருவைஸ் வந்ததும் திருமணம் தான்! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். ருவைஸ் மச்சான் நாளைக் காலை கொழும்பு வந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் வருவதாக அறிவித்திருந்தார். எப்போது விடியும் என்று நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விடிந்த பின் அசந்து தூங்கி விட்டேன்! வீட்டிலே பெரிய சலசலப்புக் கேட்டு துடித்து எழும்பிய போது தான் அந்தக் கோரச் சத்தம் எனக்கு எட்டியது! மட்டக்களப்பிற்கு வந்த புகையிரதம் பொலன்னறுவைக்கு  அண்மையில் தடம் புரண்டதால் பல பிரயாணிகள் இறந்ததாகச் செய்தி கிடைத்தது! எனக்கு  எதுவுமே தெரியவில்லை. மயங்கிச் சாய்ந்தேன். நான் விழித்துப் பார்த்த போது புதிய இடத்திலிருப்பது எனக்கு தெரிந்தது. என்னைச் சுற்றிலும் பல ஆட்கள் நிறைந்து நின்றனர்.நடந்தது நினைவுக்கு வந்தது. என் விழிகள் மச்சானைத் தேடின. “உன் மச்சானுக்கு ஒன்னும்மில்ல ஜெபரீன். அவன் பஸ்ஸில தான் வந்திருக்கான்” என்று சொல்லவும் மச்சான் என்னருகில் வரவும்  சரியாக இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நான் மீண்டும் மச்சானைக் கண்டு அழத் தொடங்கினேன். என்னை எல்லோரும் தேற்றினார்கள்.வீட்டிற்கு வந்த போது அந்த இனிய நாளை எண்ணி நான் புதிய ஜெபரீனானேன்! மச்சான்  என்னை குறும்புடன் நோக்கினார். நான் இப்போது வெட்கப்படவில்லை! வசந்த காலங்கள் தொடர்ந்தும் என் வாழ்வில் வீசுவதை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே தொழுவதற்கு ஆயத்தமானேன்.

    Share
  • இனம்

    நிர்மலா ராகவன்

    “டீச்சர் என்ன இனம்?”

    தமிழரசி அயர்ந்து போனாள்.

    செல்வம் கொழிக்கும் மலேசிய நாட்டில், பள்ளிக்கூடங்களில் எல்லா முக்கியமான பாடங்களும் மலாய் மொழியில் இருந்ததால், `நீங்கள் எங்கள் மொழியைத்தான் பேச வேண்டியிருக்கிறது!` என்று அலட்டிக் கொள்வதுபோல் சில மாணவர்கள் நடந்து கொண்டார்கள். சீன, இந்திய இன ஆசிரியர்களின் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.

    நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களிடையே மொழி, மதம் மற்றும் பழக்கவழக்கங்களில் பல்வித வேறுபாடுகள் இருந்தாலும், மேலோட்டமாக ஒற்றுமையும் இருந்தது.

    பண்டிகைக் காலங்களில், பிற இன நண்பர்கள் வீட்டுக்குப் போவதன் சிறப்பை அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி, தாமும் அதன்படி நடந்து கொண்டதை ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டார்கள். அந்த சந்தர்ப்பங்களில், பொங்கலுக்கு குர்த்தா, சீனப் புத்தாண்டுக்கோ சிவப்பு ஸாடின் துணியில், தொளதொளவென்ற முழுக்கையும், கழுத்தை மறைக்கும் `மாண்டரின்` காலரும் கொண்ட சட்டை என்று, இனத்துக்குத் தக்கவாறு உடை அணிந்துகொண்டார்கள். ரம்ஜானுக்கு, அவர்கள் வழக்கப்படி, மலாய் உடை — பட்டு வண்ணத் துணியில் ஸாரோங், அதே நிறத்தில் முழுக்கை சட்டை, இடுப்பில், சரிகை வேலைப்பாடு அமைந்த, அங்கவஸ்திரம் போன்ற ஒன்று, மற்றும் தலையில் குல்லா.

    பண்டிகைகள் போதெல்லாம் குழந்தைகள் பாடு கொண்டாட்டம்தான். எந்தப் பண்டிகையாக இருந்தாலும், `அங் பாவ்` (ANG PAU) என்ற பெயரில், ஒன்று, இரண்டு, ஐந்து அல்லது பத்து ரீங்கிட்கூடக் கையில் கிடைக்கும், கொடுப்பவர்களின் வசதியைப் பொறுத்து. பக்கத்து வீட்டுக் குழந்தைகளைக்கூட கூப்பிட்டுக் கொடுப்பார்கள். சீனப் புத்தாண்டின்போது அவர்கள் வழக்கமாக இருந்தது இப்போது நாட்டின் பொது கலாச்சாரமாகிவிட்டது.

    அவ்வளவு ஏன், இன ஒற்றுமைக்குச் சான்றாக அவளே இல்லையா?

    ஒரு கீறலாக இருந்த கண்கள், மேடான கன்னம், கருத்த, நேராய்த் தொங்கும் நீளமான முடி என்று, தோற்றத்தில்தான் அவள் வேற்றினம். ஆனால், அவள் பெயரிலேயே தமிழ் இருந்தது. வளர்ப்புப் பெற்றோர்களின் உபயம்.

    தமிழரசியைப் பெற்றவள், `ஏற்கெனவே மூணு பொம்பளைப் பிள்ளைன்னு மாமியார் என்னை ஏசிக்கிட்டே இருக்கிறா. இனிமே அடி, உதைதான்!` என்று அஞ்சி, அழுதாளாம். பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று நிச்சயிப்பது தந்தையின் விந்துதான் என்று அந்த பாமரப் பெண்மணிக்குத் தெரியவில்லை.

    அவளுக்குப் பிரசவம் பார்த்த பொன்னம்மா, `எனக்குக் குடுத்துடேன், ஆ ஸௌ (மாமி)! நான் எடுத்துக்கிறேனே!` என்றெல்லாம் கெஞ்சி, வாங்கி வந்தாளாம்.

    அப்போது அவளுக்கு நாற்பது வயது. கல்யாணமாகி `எத்தனையோ` வருடங்கள் கடந்திருந்தும், வயிறு என்னவோ திறக்கவில்லை. புறம்போக்கு நிலத்தில் அந்த `சீனச்சி` வைத்திருந்த சிறு மளிகைக் கடையில் பருப்பு வகைகளைப் புடைத்து, கல் பொறுக்கி, அவள் அறிவுரைப்படி சற்றே குறைத்து அளவிட்டுச் சாமான்களை விற்பதுமாக மாதம் அறுபது வெள்ளிக்கு வேலை செய்துகொண்டிருந்த சமயம் அது. பிறர் வீட்டு வேலைக்குப் போனாலும், இதே சம்பளம்தான் கிடைக்கப் போகிறது! இங்காவது, யார் கண்ணிலும் படாமல் அரிசி, முந்திரி என்று அவ்வப்போது வாயில் போட்டு மெல்லலாமே என்ற திருப்தி அவளுக்கு.

    என்றாவது பெற்றவள் தன் உடைமையை திரும்பக் கேட்டுவிடுவாளோ என்று பயந்து, வேறு ஊருக்கு வந்துவிட்டதையும் பருமனான உடலதிரச் சிரித்தபடி கூறுவாள் பொன்னம்மா. இன்னாரிடம் என்றில்லை. அவள் சுபாவப்படி, நடந்து முடிந்ததை எல்லாம், மாடு அசை போடுவதுபோல், உரக்கச் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவள் பொழுதுபோக்கே அதுதான் — இடைவிடாது பேசிக்கொண்டிருப்பது. எங்காவது ஆரம்பித்து, எதிலாவது கொண்டு முடிப்பாள்.

    அப்படித்தான் தமிழரசி தன் பிறப்பைப் பற்றி அறிந்துகொண்டாள். எத்தனையோ கதைகளுடன் அதுவும் ஒன்றாகிவிட, இயல்பாக ஏற்றுக் கொண்டிருந்தாள்.

    பள்ளத்தாக்கில் அமைந்த புறம்போக்கு நிலத்தில், கோணல்மாணலாக அவரவர்கள் கட்டிக்கொண்டிருந்த, எங்கெங்கோ பொறுக்கிவந்த மரப்பலகைகளும், அலுமினியத் தகரங்களும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்று அவர்களுடையது.

    தந்தை சின்னப்பன் லோரி ஓட்டுநர். பிறரைப்போன்று சிகரெட், சம்சு (மலிவு ரக மது) என்று பணத்தையும், நேரத்தையும் வீணாக்காது, தன் வேலை உண்டு, தொலைகாட்சி உண்டு என்றிருந்தார். பிறரிடமிருந்து அவர் எல்லா விதத்திலும் வித்தியாசமாகத்தான் இருந்தார். `காது செவிடாறதுக்கா டி.வி. போடுவாங்க?` என்று, மறைமுகமாக அக்கம்பக்கத்தினர் தம் இல்லங்களிலும் அந்த விலையுயர்ந்த பொருள் இருக்கிற பெருமையைப் பறைசாற்றுவதைக் கேலி செய்வார். நேரம் கிடைத்தபோதெல்லாம், தமிழ், ஆங்கிலம் என்றில்லை, மாண்டரின், காண்டனீஸ் ஆகிய சீன மொழிகளுடன், கொரியப் படங்களையும், பாடல் நிகழ்ச்சிகளையும்கூட விட்டுவைத்ததில்லை அவர். ஒலி அவர் காதிலாவது விழுமா என்பதே சந்தேகமாக இருக்கும்.

    பள்ளி ஆசிரியைகள் எப்போதும், தம்மையுமறியாது, உரக்கப் பேசுவார்களாம். வகுப்பில் கத்தியே பழகிவிட்டதால் வந்த வினை.
    சின்னப்பனோ, தாம் ஓட்டும்போது கடகட சத்தத்தை ஓயாது கேட்க நேரிட்டதாலோ, என்னவோ, எந்த ஒலியையுமே வெறுப்பவராக நடந்துகொண்டார். அவர் பேசுவதே அபூர்வம். எப்போதாவது வாயைத் திறந்தாலும், `தாமான்` (TAMAN) என்று வழங்கப்பட்ட, ஆயிரக்கணக்கில் விலைமதிப்புள்ள வீடு வாங்குவதைப்பற்றித்தான் இருக்கும்.

    `தாமான் வீடுன்னா செங்கல்லாலும், சிமெண்டாலும் கட்டி இருப்பாங்க. சின்ன தோட்டமும் இருக்கும். மழை வந்தா, இப்படி வீட்டில இருக்கிற மங்கு, பாத்திரங்களை எல்லாம் தரையில வெச்சு, இருக்கிற வேலையையெல்லாம் விட்டுட்டு,கூரையைப் பிய்ச்சுக்கிட்டு ஒழுகற தண்ணியைப் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்டற பேஜார் பிடிச்ச வேலை இருக்காது,` என்று அடிக்கடி சொல்வார். ஏதோ நல்ல கனவு காண்கிற பாவத்தில் கண்கள் கிறங்கியிருக்கும்.

    சின்னப்பனுடைய கனவு கனவாகவே போய்விட்டது.

    அவளுக்குப் பன்னிரண்டு பிராயமாக இருந்தபோது நடந்தது அது. இரவு முழுவதும் வேலை செய்த களைப்பில், விடியற்காலையில் திரும்பும்போது, பேருந்துக்காகக் காத்து நின்ற ஐந்து பள்ளிச் சிறுமிகள்மேல் சின்னப்பன் மோத, தலத்திலேயே அவர்கள் உயிர் பிரிந்தது. தன் உடலில் ஒரு சிராய்ப்புகூட இல்லாமல் தப்பித்தது அவரது குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டது. தூக்கக் கலக்கமோ, அல்லது பிரேக் பிடிக்கவில்லையோ, அது அப்போது முக்கியமாகவில்லை.

    `நான் மகாபாவி! அந்தப் பிஞ்சுகளை அநியாயமா அழிச்சுட்டேனே!` என்று கதறியபடி, மார்பில் ஓங்கி அறைந்துகொண்டார், இதயமே நிற்கும்வரை. விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஒரு நாள்கூட அனுபவிக்காது, அந்த வகையில் குடும்பத்துக்குப் பழி நேராது போய்விட்டார் புண்ணியவான்.

    சரிந்துவிட்ட தங்கள் குடும்ப நிலையைத் தான்தான் நிமிர்த்த வேண்டும் என்று அந்த இளம் வயதிலேயே தமிழரசிக்கு உறுதி ஏற்பட்டது. அவள் பிறந்த இனத்துக்கே உரிய அலாதி சுறுசுறுப்பும், எடுத்துக்கொண்ட எந்த காரியத்தையும் துல்லியமாக முடிக்கும் திறனும் அவளுடைய ரத்தத்திலேயே கலந்து வந்திருந்தன.

    தந்தை இல்லாத குறை தெரியாதிருக்க, தாய் அவளிடம் இன்னும் பாசத்தைக் கொட்டினாள். `நான்தான் படிக்காத முட்டாளாயிட்டேன். நீயாவது நல்லாப் படிக்கணும், கண்ணு!` என்று நாள் தவறாது சொல்லிச் சொல்லி பொன்னம்மா அவளை வளர்த்ததில், இன்று தமிழரசி பட்டதாரி ஆசிரியை. பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தின் உபகாரச் சம்பளம் பெற்ற ஆயிரத்தில் ஒரு தமிழச்சி.

    `எம்மக கவர்மெண்டு ஸ்கூல்லே படிச்சுக் குடுக்குது!` என்று பூரிப்புடன், அவள் காதுபடவே பொன்னம்மா பார்ப்பவரிடமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, வேண்டாத நான்காவது மகளாய், எங்கேயோ கிடந்து இடிபட்டிருக்க வேண்டிய தன்னுடன் பிறந்த அக்காமார்களுக்கும் இந்த அதிர்ஷ்டம் இருந்திருக்குமா என்று யோசித்துப் பார்ப்பாள் தமிழரசி.

    அவர்கள் மேற்படிப்பு படித்திருப்பார்களா, அல்லது, `பொம்பளைப் பிள்ளைக்கு படிப்பு எதுக்கு?` என்ற தாயின் சொற்களை ஏற்று, கடையில் எடையைக் குறைத்துப் போட்டு, பெருலாபம் பார்த்து, கடையை விரிவுபடுத்தியிருப்பார்களா?

    `பெண்` என்றாலே பலருக்கும் அலட்சியம்.

    கற்காலத்தில் கொடிய வனவிலங்குகளுடன் சண்டை போட்டு, தன் உயிரைப் பணயம் வைத்துக் கானகத்தில் உணவு தேடி வந்ததால், ஆண் வைத்தது சட்டமாக இருக்கலாம். இன்று என்ன வந்தது!

    அவளுடைய பள்ளித்தோழி சியூ வாஹ், எப்போதோ சொன்னது நினைவில் எழும். `மேலே படிக்கணும்னு நான் எவ்வளவோ ஆசைப்பட்டேன். ஆனா, `ஒருத்தரை படிக்கவைக்கத்தான் வசதி இருக்கு. அதனால, ஒங்கண்ணன் படிச்சா போதும்,`னுட்டாங்க எங்கம்மா. அவனுக்கோ படிப்பிலே ஆர்வமே கிடையாது. இதை நான் சுட்டிக் காட்டினதும், `அவன்தானே கடைசிக் காலத்தில் எங்களை வைச்சுக் காப்பாத்தப் போறான்! நீ எப்படியும், கல்யாணமாகி, இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப் போறவதானே!ன்னு அலட்சியமா சொல்லிட்டாங்க. `அவன் காப்பாத்துவான்னு என்ன நிச்சயம்?` அப்படின்னு நான் சண்டை போட்டுக்கூட பாத்துட்டேன். ஆனா, அவங்க காதிலேயே போட்டுக்கல,` என்று அவள் துக்கம் தொண்டையை அடைக்க சொன்னதை எப்படி மறக்க முடியும்!
    நல்ல வேளை, அவள் குடும்பத்தினரோ, உறவினரோ, `நீ வெறும் பொம்பளைப் பிள்ளைதானே! எங்களைப்போலக்கூட இல்ல. ஒனக்கு மஞ்சத்தோலு. அதோட, பெத்தவங்க தூர வீசிட்ட பிள்ளை நீ!` என்றெல்லாம் ஒரு முறைகூட அவளைப் பழித்ததில்லை.
    இப்போது, அவளுடைய இருபத்தாறாவது வயதில் ஒரு தறுதலை கேட்கிறான், அவள் என்ன இனம் என்று!
    சமாளித்துக்கொண்டு, தமிழரசி பதில் சொல்வதற்குள், இன்னொருவன் உரக்கக் கூறினான், “ஸாரி கட்டி, நெத்தியில புள்ளி வைச்சிருக்காங்களே, தெரியல? கெலிங் (KELING) தான்!” என்று.

    வகுப்பில் ஒரு கணம் மௌனம்.

    `கலிங்கத்திலிருந்து வந்தவர்கள்` என்று பொருள்பட, தமிழர்களை, கெலிங் என்று குறிப்பிடுவார்களாம். முன்பு எப்போதோ. அது இப்போது கெட்ட வார்த்தையாக, ஒரு இனத்தையே கேவலப்படுத்தும் சொல்லாக மறுவிவிட்டது — `ஆப்பிரிக்க அமெரிக்கர்` என்பதுதான் சரி, `நீக்ரோ` என்ற பதம் அவமாரியாதையாகக் குறிப்பது என்பதுபோல்.

    அண்மையில், புதிய அகராதி ஒன்றில் `கெலிங்` என்ற அந்த கெட்ட வார்த்தை இடம் பெற்றபோது, மலேசியாவிலிருந்த எல்லா இந்திய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டனம் தெரிவித்து, அதை அகற்றச் செய்திருந்தனரே! அதெல்லாம் இந்த மாணவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

    அவள் சிறு வயதில் இருந்ததைப்போன்று, வறுமைக் கோட்டின் கீழ் இருந்தார்கள் அவர்கள். பதினான்கு வயதிலும், எந்த ஒரு எழுத்தையும் படிக்கத் தெரியாது, தம் பெயரைக்கூட எழுதத் தெரியாதிருந்த சிலரும் அவ்வகுப்பில் உண்டு என்பது அவளுக்குத் தெரிந்ததுதான். பெரும்பான்மைச் சமூகத்தினர் ஆனாலும், பொருளாதார அடிப்படையில் தாழ்ந்து போனவர்கள். சமூகத்தில் தமக்குக் கிடைக்காத மதிப்பை நிலைநாட்டிக்கொள்ள வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை, பாவம்!

    இப்படியெல்லாம் அறிவு விவாதித்தாலும், தமிழரசிக்கு ஆத்திரமும், வருத்தமும் ஒருங்கே எழுந்தன.
    “டீச்சர் இண்டியா!” என்று அவள் போதிக்கும் மலாய் மொழியில் பதிலளித்தாள். குரலில் ஆக்ரோஷம்.

    மனம் சற்று கிலேசப்படும்போது, வேறு வேண்டாத நினைவுகளும் வந்து, இன்னும் குழப்பும்.

    சமீபத்தில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி — எதிராளியின் தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதுபோல் — அமைந்ததே, அது எப்போது என்று அவள் யோசித்தாள்.

    ஓ! நேற்று மாலை கோலாலம்பூருக்கு அருகில், கெப்போங்கில் சீ ஹாக்குடன் தேநீர் அருந்தியபோது!

    சீ ஹாக் மலாயா பல்கலைக் கழகத்தில்அவளுடன் படித்தவன். அவர்களுடைய தொடர்பை நிரந்தரமாக்கிக் கொள்ளும் உத்தேசத்துடன் இன்னமும் அவளையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான்.

    அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில் முறைப்படி லைசன்சுடன் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுக்கடை அது. ஓரடிகூட இடைவெளி இல்லாது, சிவப்பு நிறத்தில் மலிவான பிளாஸ்டிக் நாற்காலிகளும், விரிப்பற்ற மூளி மேசைகளும் (மேடு பள்ளமாக இருந்த சிமெண்டுத் தரையில் ஆடாமல் இருக்க அவற்றில் சிலவற்றின் கால்களுக்குக்கீழ் மடித்து வைக்கப்பட்ட, பழுப்பாக நிறம் மாறிவிட்ட பழைய சீன தினசரிகள்) நிறைந்த ஹாக்கர் ஸ்டால் (HAWKER STALL) அது. பூதாகாரமான மின்விசிறிகளைத் தரையில் வைத்திருந்தும், ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை.

    வாழ்க்கையை வளப்பமாக ஆக்கிக்கொள்ள இவ்வளவு தூரம் சிரமப்பட்டுவிட்டு, இப்போது ஏன் பின்னோக்கிப் போவதுபோல் இந்த மாதிரி கடைக்குள் நுழைய வேண்டும் என்று அவள் தயங்க, “ஒரு தடவை வந்து சாப்பிட்டுப் பாரு! பெரிய ரெஸ்டாரண்டுகளில செய்யறதுபோல, அஜினோமோடோவை எல்லாத்திலும் போடறதில்ல இங்க. சைனாவில பண்ணறமாதிரியே விதவிதமா சாமான்களை இவங்களே அரைச்சுக்கிறாங்க. விலையும் கொள்ளை மலிவு!” என்று பலமாக சிபாரிசு செய்து, அவளை அங்கு அழைத்து வந்திருந்தான் கல்லூரி நண்பன். “முந்தி எங்க பாட்டி இருந்தப்போ, இப்படித்தான் சமைப்பாங்க!” என்று சேர்த்துக்கொண்டான், பழைய நினைவுகள் கிளப்பிவிட்ட ஏக்கத்துடன்.

    தமிழரசி, `தே ஸீ` என்று, பால் கலந்த டீயைக் கேட்டு, ஏற்கெனவே ஊற்றப்பட்ட சீனிப்பாலுடன், ஓரிரு ஸ்பூன் சீனியும் கேட்டு வாங்கி, அப்படிக் கலந்த டீயை விரும்பிப் பருகினாள்.

    சூப்புடன் கலந்து, வெடுக்கென்றிருந்த `வான் தான் மீ`யை சாப் ஸ்டிக் பாவித்துச் சாப்பிட்டான் சீஹாக். ஒரு பெரிய கிளாஸில் வந்த `சைனீஸ் டீ`யை இடையிடையே குடித்தவனைப் பார்த்து, `இந்தக் கசப்பை எப்படித்தான் குடிக்கிறீங்களோ!` என்று தமிழரசி ஆச்சரியப்பட்டாள். `எனக்கு எல்லாமே இனிப்பா இருக்கணும்!` என்று அதே மூச்சில் தெரிவிக்கவும் செய்தாள்.

    அவன் முகம் இறுகியது. “இண்டியன்!” என்று குற்றம் சாட்டுபவனைப்போல் கூறினான்.

    அவளுடன் பூப்பந்து விளையாடும்போது, எதிராளியைத் தோற்கடிப்பதே குறியாக, `ஸ்மாஷ்` செய்வதைப்போன்று கடுமையாக வந்தது அச்சொல்.

    தமிழரசி அயர்ந்து போனாள். பேச்சுவாக்கில் தான் ஏதோ சொன்னதற்கு இப்படி ஒரு எதிர்ப்பா!
    தன்னை ஏன் எல்லாரும் வித்தியாசமகவே பார்க்கிறார்கள்?

    கனத்த இதயத்துடன் பள்ளியிலிருந்து திரும்பியவளிடம் இருந்த மாறுதல் அன்புத் தாயின் கண்களுக்குத் தப்பவில்லை.”இன்னிக்கு வேலை அதிகமா, பாப்பா? முகமெல்லாம் வாடி இருக்குதே!”

    அவளிடம் சொல்வதா, வேண்டாமா என்று ஒரு வினாடி யோசித்த தமிழரசி, “ஸ்கூல்ல ஒரு பையன் என்னை கெலிங்னு சொன்னாம்மா,” என்று குழந்தைபோல் தெரிவித்தாள். குரல் கம்மியது.

    தான் பட்ட அவமானத்திற்காக தாயும் ஆத்திரப்படுவாள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளுக்குத் தோல்விதான்.

    “எம்மக பின்னே யாரு?” பொன்னம்மா சிரித்தாள், கடகடவென்று. “ஒனக்குச் சின்னப் பிள்ளையிலிருந்தே கண்ணுக்கு மை பூசி, நெத்தியிலே பெரிய கறுப்புப் பொட்டிட்டு, கடலையெண்ணை வெச்சு தலைமுடியைச் சீவி, பின்னல்ல பூ வெச்சு, கைக்கு காப்பு மாட்டி — எவ்வளவெல்லாம் செஞ்சிருக்கேன்!” பெருமையுடன் நினைவுகூர்ந்தாள். கண்கள் கிறங்கின. அருமை மகளின் கன்னத்தைத் தடவி, நெற்றியின் இருபுறங்களிலும் காய்த்துப்போன விரல்களை வைத்து நெறித்தாள். “நம்பளைத் தவிர வேற யாரு இப்படி எல்லாம் அலங்காரம் செஞ்சுக்கிறாங்க இங்க? ஒன்னைப் பாக்கிறவங்க யாரும் — ஒன்னைப் பெத்த சீனச்சியே வந்தாக்கூட — தமிழவங்க வீட்டுப் பிள்ளைதான்னு சொல்வாங்க!” என்றவள், “போய், தண்ணி குடி, போ! சுடுதண்ணி போத்தல்ல விட்டு வெச்சிருக்கேன்!” என்று அந்தப் பேச்சை முடித்தாள். தினமும் செய்வதுதான். இருந்தாலும், வேண்டாத பேச்சை முடிக்க அது ஒரு நல்ல உபாயமாக இருந்தது.

    கெட்டியாக, இனிப்பாக இருந்தது அம்மா கலக்கி வைத்திருந்த பானம். பெயர் மட்டும் கோப்பித்தண்ணி.
    தமிழரசியின் உதடுகள் புன்னகையில் லேசாக விரிந்தன.
    `பெயரில் என்ன இருக்கிறது!` என்று அவள் நினைப்பு ஓடிற்று.
    நம்மைப் படைத்து, ஆட்டுவிக்கும் தெய்வம் என்னவோ ஒன்றுதான். ஆனால், இடத்துக்கு இடம் அதன் பெயரும், வணங்கும் முறைகளும் வேறுபடுகின்றன.

    எங்காவது இரண்டு மனிதர்கள் ஒன்றுபோல் இருக்கிறார்களா! இருந்தாலும், தம்மைப்போல் அல்லாதவர்களை `மட்டம்` என்று பழித்துக் கேலி செய்வதில் ஒரு ஆனந்தம் பலருக்கு. பிறர் தாழ்ந்தால்தான் தாம் மேலே இருப்பதுபோல் பாவனை காட்ட முடியும் என்று நினைக்கும் அல்பங்கள்!

    ஒற்றுமையை ஆதாரமாகக் கொண்டு, உறவை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, சிறு சிறு மாறுபாடுகளை எதற்காகப் பெரிது பண்ணுகிறார்கள்?

    `இண்டியன்!` என்று அவளைப் பழிப்பதுபோலக் கூறிய சீ ஹாக்கையும், இனப் பெயரைக் கொச்சைப்படுத்திய மாணவனையும் ஒப்பிட்டுப் பார்த்தாள். பரிதாபம்தான் எழுந்தது.

    கல்லூரி நண்பன் மறுநாள் காலை ஆறு மணிக்கே அழைத்தான், தொலைபேசிவழி.”ஹை, டமில்! ஒங்கம்மாகிட்ட சொல்லிட்டியா? நம்ப கல்யாணத்தைப்பத்தி என்ன சொன்னாங்க?” ஆவலுடன் விசாரித்தான்.
    “அது நடக்காது, சீ ஹாக்!” என்றாள் தமிழரசி, உறுதியான குரலில்.

    (மலேசியாவில் தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கப் போட்டியில் பரிசு பெற்றது, சிறுகதைகள்.காம்)

    Share
  • உடன் எரியும் கவிதைகள்

    எஸ் வி வேணுகோபாலன் 

    எத்தனையோ அர்த்தமற்ற தொடர் அலுவல்களில் அவரை மறந்தே போயிருந்தேன். அப்போது தான் அந்தக் கடிதம் வந்தது. பவழவண்ணன் மிகவும் சுகவீனம் அடைந்ல்;]’திருப்பதாகவும், என்னை உடனே பார்க்க விரும்புவதாகவும் அவரது சகோதரி எழுதியிருந்த கடிதம் அது. அச்சு அசலாக அண்ணன் கையெழுத்து போலவே இருந்தது. இரவே புறப்பட்டேன். மறு நாள் அவரது வீட்டை நோக்கிச் சென்றவன், வாசலில் சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துக்  கலங்கிப் போனேன். பவழவண்ணன் போய்விட்டார்.  அடக்கமாட்டாது குமுறியபடி வேகமாக உள்ளே நுழைந்தேன்..ஓர் எளிய கவிஞனின் அகால மரணம் என்னைக் கொன்று தின்றது.

    வாசலில் காத்திருந்த கூட்டத்தில் கவிஞர்கள் அதிகம் தென்படவில்லை. அவரது பள்ளிக்காலத் தோழர்களும், அண்டைத் தெரு சகாக்களும் சூழ்ந்திருந்தனர். மூங்கில் வந்து இறங்கி இருந்தது. சேகண்டி ஒலியும், அடி வயிற்றிலிருந்து எடுத்த காற்றை நிரப்பி ஊதிய சங்கின் கூவலும் கண்ணீரைப் பெருக்க வல்லதாக இருந்தது…

    ‘யே..அப்பா…ஒப்பிலா மணியே..கண்ணே, முந்தை விதிப் பயனோ, சாபம் எதுவோ நானறியேன் தம்பிரானே ..’ என்று சொல்லியவாறு கருத்த ஒரு ஆள் மீண்டும் சேகண்டி அடிக்கவும், இதெல்லாம் அங்க மசானத்துல வச்சுக்கப்பா..இங்க ஓதற வளக்கமில்ல..மனுசாளு குடியிருக்கற வீதின்னு தெரிய வேண்டாம்? என்று பெரியவர் ஒருவர் தடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் சட்டியிலிருந்து புகை பரவிய திசையில் பவழவண்ணன் குறித்த சிந்தனைகளில் ஆழ்ந்தேன்.

    பவழவண்ணனை இலக்கிய சிந்தனை மாதாந்திரக் கூட்டத்தில்தான் முதன்முதல் சந்தித்தேன். அது எழுபதுகளின் பிற்பகுதி. ஒரு ஜோல்னாப் பை. தலையை அழகாக வாரிக் கலைத்தது மாதிரி முடி. அவர் கவிஞர் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் கண்டு பிடித்தேன். இதற்கு பெரிய யோகக் கலை எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த இளம் வயதில் கவிதை மீது பித்துப் பிடித்த ஆசாமிகளை அவர்களது பார்வை, தோரணை, பழகும் விதம் இவற்றில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். அநாயாசமாகத் தங்களது கவிதை வரிகளை எடுத்து விடுவார்கள்…தப்பிக்க முடியாதபடி கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திணிப்பார்கள், அது ஒரு பழைய வருஷத்து டயரியாக இருக்க எண்பது சதவீத சாத்தியங்கள் உண்டு. ஆனால் பவழவண்ணன் இந்த இலக்கணங்களையும் கடந்தவராக இருந்தார்.

    அவரது நினைவாற்றல் அசாத்தியமாக இருந்தது. ‘முச்சங்கப் புலவர் முதல் முந்தா நாள் புலவர் வரை, இச்சை மதுவெனவே எண்ணிக் குடித்ததிலே மிச்சம் மிகுதியுள்ள முத்தமிழ்ப் பால் அருந்திக் கொச்சைக் கவி பாடும் பச்சைக் குழந்தை நான்…’ என்றார். ‘அருமையான கவிதை’, என்றேன்.

    “வாலி சார், கவிஞர் வாலி…நீங்க விகடன்ல வாரா வாரம் வரும் அவரது கவிதைகளை வாசிப்பதில்லையா..” என்றார். நான் அசந்து போனேன். அடுத்தவர் கவிதைகளை ரசனையோடு சொல்லிக் காட்டித் தான் எனது நட்பு வட்டத்திற்குள் நுழைந்தார். சிறுகதைகளை விடவும் நாவலை விடவும் அவரது உயிர் கவிதையில் இருந்தது. ஆனால் அவரது கவிதை உலகம் மிகவும் பரிதாபமாக ஒலித்தது.

    பனகல் பூங்காவில் வைத்து அவரது இதயத்தை என் முன்பாகத் திறந்து வைத்தார் ஒரு மாலை நேரத்தில். முதல் பாகம் கடவுள் வாழ்த்துக்களால் நிரம்பி இருந்தது. சரளமாக தேவார, திருவாசக, திருப்பாவை அடிகளை எடுத்தாண்டிருந்தார். எனது முக பாவத்திலிருந்து என் உள் ஓட்டத்தைப் பிடித்துவிட்டார்.

    “சார், இதெல்லாம் ஆரம்பக் காலத்தில் பயிற்சிக்காக எளுதிப் பார்த்தது. தமிழ் ஆசிரியர் இராசகோபாலனார் தான் எதுகை மோனை எல்லாம் கட்டமைச்சுத் தந்தாரு….அரி, பரி, கரி, திரி…என்று வரிசைப் படுத்தி கடைசிப்  பக்கத்தில் எளுதி வச்சிருவேன் ..டக் டக் என்று தேவையான சொல்லைப் பொருத்தமான எடத்துல எடுத்துப் போட்டிருவேன் . பவளம் போல் மேனியான் என்ற வரியின் அடுத்த அடியில் பாருங்க, கவளம் என்று போட்டு யானையைக் கொண்டு வந்து இணைச்சதிலே சாரே அசந்து போய்ப் பாராட்டினாங்க..” என்றார்.

    கடவுள் அருளால், அடுத்த பாகத்தில் காதலிக்க ஆரம்பித்திருந்தார். மெலிதாக உணர்வுகளைப் படர விட்டிருந்தார். மெதுவாக அடுத்தடுத்த கட்டங்களை இருபத்தாறாவது பக்கத்தில் எட்டி,  கடிமணம் வரை பயணம் போயிருந்தார். கிட்டத் தட்ட அச்சேறிய பிரதி மாதிரி இருந்தது அவரது அருமையான கையெழுத்து பிரதி.

    இன்னும் இந்த நோட்டில் பதிவாகாத கவிதைகள் கைவசம் நிறைய இருக்குங்க..என்றார். எந்த இதழிலும் வரவில்லையா என்று கேட்டேன். வருத்தத்தோடு எதிர்மறையாகத் தலை ஆட்டினார்.

    “பால் அப்படின்னு ஒரு இதளுக்கு தினமணியில் விளம்பரம் பார்த்தேன்..புதிய மாத இதள், படைப்பாளிகள் விரைந்து உங்கள் கவிதைகளை அனுப்பவும்னாங்க….விளுந்தடிச்சு எளுதிப் போட்டேன் சார்..பாவிப் பசங்க கொத்தா சந்தா பொஸ்தகம், விளம்பர கூப்பன் எல்லாம் எணச்சு பெரிய கட்டு ஒண்ணை அனுப்பி வச்சானுவ.. ஆத்தாடி நா எங்க போக இதுக்கெல்லாம் அலையன்னு, இருபது ரூவா கடன் வாங்கி அடுத்த தபாலில் சனியன் பூராத்தையும் அவனுக்கே திருப்பி அனுப்பிச்சு, மவராசா என் படைப்பு எதையும் நீ போடவும் வேணா, நா ஆடவும் வேணான்னு முளுகித் தொலச்சேன்..”

    அவரோட கோபமும், வட்டார மொழியும், அவரது வெகுளித் தனமும் எனது நெஞ்சை நிறைத்தது…தேடித் தேடி சந்தித்துக் கொண்டிருந்தேன் அவரை.

    ஒரு வாரம் அமுதசுரபியைக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன்…பவழ வண்ணன் ஒங்க கவிதைதானே இது, அழகா வந்திருக்கே என்றேன்..

    அசரவே செய்யாமல் வாங்கிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்: “என்னோடது இல்ல சார்…எங்கேயாவது கவியரங்கம் போய்ப் படிச்சுட்டு வாரோம்ல, நம்ம புனைபெயர் கேட்டுக்கிட்டு அதையே அவனுகளும் வச்சிக்கிறானுவ  .ஆனா, கவிதையத் திருடுறதுக்கு, புனை பெயர் திருடுறது ஒண்ணும் மோசமில்ல..”

    அடுத்த முறை பார்க்கையில்,இதப் பாருங்களேன்..திருமண வாள்த்து..நண்பரோட தங்கச்சிக்காக எளுதினது..என்று காலண்டர் தாளின் பின்புறத்தில் எழுதியிருந்த கவிதையைக் காட்டினார்.

    சொக்கலிங் கப்பேர் கொண்ட என்று அறுசீர் விருத்தத்தில் தொடங்கி அதில் சொற்கள் பலவும் முழுதாய் ஒரு சீரில் படியாததில் தோற்று, வேறு என்று அடைப்புக் குறி போட்டு எண் சீருக்கு மாறி முடித்திருந்தார். காரிகை, கண்ணாளன் போன்ற சொல் பிரயோகம் எப்படி என்று பெருமிதத்தோடு கேட்டு அவராகவே புன்னகை பூத்து நின்றார். வாசித்துத் தந்த மடல் என்ற வாக்கியத்தை எனது விரலால் தடவிய போது, அவர் கண்களில் நீர்த் துளி பூத்ததைக் கவனித்து அதிர்ந்து போனேன்..வண்ணக் காகிதத்தில் அச்சிட்டு மண்டபத்தில் எல்லோருக்கும் வழங்கலாம்னு ஆச இருக்கு… ஆனா, காசில்ல. ஒரே காபி மட்டும் ரெடி பண்ணி – நம்ம கையெளுத்துதான் அச்சு மாறித் தான இருக்குமே, பிரேம் போட்டுக் கொடுத்திரலாம்னு இருக்கேன்..என்றார்.

    எனக்கு என்னவோ, காதல் கிழத்தியவள் கொஞ்சு மொழி பேசுபவள் என்று அவர் மணப் பெண் பற்றி விவரித்ததில் அவரது ஏக்கம் கலந்திருக்குமோ என்று பட்டது. கேட்கத் துணிவின்றி விட்டு விட்டேன். அன்றைக்கு வழக்கமாக தேநீர் அருந்துபவர், வேண்டாம் சார் என்று மறுத்துக் கொண்டது அவரது பொருளாதாரத்தின் சுய வெறுப்பில் இருந்து அப்படி நடந்து கொள்கிறார் என்று தோன்றியது. ஆள் ஏகத்திற்கு மெலிந்திருந்தார்.

    இளங்கலை பொருளாதாரம் என்று அவரது நோட்டுப் புத்தகத்தின் மேலட்டையில் எழுதியிருப்பார். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதை நேரடியாக அவர் ஒருபோதும் சொன்னதுமில்லை, நானும் அது குறித்துக் கேட்டுக் கொண்டதுமில்லை.

    அடுத்த வாரம் பார்க்கும் போது, அம்புலி மாமா இதழின் புகைப்பட வாக்கிய போட்டிக்கு எழுதியதைக் காட்டினார்.

    “மொதப் படம் ஆனை மேல ஆள் உக்காந்து போவாங்க சார்…பக்கத்துல உள்ளதுல விநாயகப் பெருமான் படம்..நா எப்படி யோசிச்சுப் போட்டேன் பாருங்கள், துதிக்கை யானை மீது வலம், துதித்து வலம் வர யானை முகம்…எப்படிங்க சார், நல்லாயிருக்கா, தேர்வானா, அய்ம்பது ரூவா வரும் சார்..”

    எனக்கு அவரது ஜீவிதத்தின் தட்டு தாழ்ந்து கொண்டே வருவது வலித்தது. அடுத்த மூன்று வாரங்களுக்கு ஆள் எங்கும் தட்டுப் படவில்லை. நான் கோவையில் வேலை கிடைத்துப் போகவும், சென்னை வருவது அரிதாகிப் போனது… பவழவண்ணன் விலாசம் இருந்தது, ஆனால் கடிதம் எழுதத் தயக்கமாக இருந்தது…

    ஆனால் அவரிடம் இருந்து கடிதம் வந்தது…மிகவும் வியப்பாகிப் போனது எனக்கு. எப்படியோ நண்பர்கள் மூலம் மிகவும் முயற்சி எடுத்து எனது முகவரியைப் பிடித்திருக்கிறார் மனுஷன். கண்ணீர் மல்க இருந்தது அவரது உணர்ச்சி மடல். உடனே அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது..

    அடுத்த வாரமே சனிக்கிழமை புறப்பட்டுப் போனேன். மிகவும் சோர்ந்தும், முகம் வாடியும் இருந்தார். பதினைந்து நாளாகி இருக்கும் போலிருந்தது முகத்தை மழித்து. இலேசாக இருமினார். வீட்டில் அவரது அம்மா மட்டும் இருந்தார். தெரிந்தது மாதிரி உடனே காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்.

    “…என்னவோ தம்பி, ஒரு வேல கிடைக்கக் கூடாதா எம்மவனுக்கு.. நாலு ஆளு நாலு பேச்சு சொல்லத் தான் செய்வாங்க.. அதுக்குப் பாத்தா ஆகுமா.. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுப் பொதச்சுக்குறான்.. கதவச் சாத்தி வச்சிக்கிட்டு எளுதித் தள்றான்..ஏன்பா.. இதெல்லாம் பொஸ்தவமாப் போட நெறைய காசாகுமா.. விக்கிறது கஸ்டம்கிறாங்க.. அது வேற பெரிய மனக் கொற அவனுக்கு..”

    பவழவண்ணன் வேண்டாம், அதெல்லாம் சொல்ல வேண்டாம் என்று சைகையால் தடுத்துக் கொண்டிருந்தார். நான் எதுவும் பட்டுக் கொள்ளாமல் புறப்பட்டேன். மறுபடியும் கோவைக்குத் திரும்பியதும் பவழவண்ணனை முற்றிலும் மறந்துவிட்டிருந்தேன்….இப்போது எல்லாம் முடிந்து போய்விட்டது.

    பவழவண்ணன் இறுதி யாத்திரைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எனது கேவல்களை அடக்கிக் கொள்ள ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். பவழவண்ணன் புகை பிடித்தலுக்கு எதிரான வாசகப் போட்டிக்கு ஒரு கவிதை வரி எழுதிப் போட்டது நினைவுக்கு வந்தது: நச்சுக் காற்றில் கரைய விடாதே உனது நாளைய வாழ்வை…

    அருகில் இருக்கும் சுடுகாடு நோக்கி நகர்ந்த ஊர்வலத்தின் பின்னே நடந்தேன். அந்தப் பெண்ணும் வந்து சேர்ந்த போது தான் தெரிந்தது, பவழவண்ணன் சகோதரி அது என்று.

    நான் தான் சார் உங்களுக்குக் கடிதம் போட்டது..மணிமேகலை என்று அறிமுகம் செய்தவாறு அருகே நடக்கத் தொடங்கினாள் அவள். “மத்த எல்லாரையும் விட உங்க மேல அண்ணனுக்கு ரொம்பவும் உயிர்” என்றாள்.

    “எனக்கும் அப்படித் தான் அவர் மேல் அத்தனை பிரியம்” என்றேன்.

    “அப்ப ஏன் சார் நீங்களும் அவர மத்தவங்க மாதிரியே நடத்தினீங்க..” என்றாள்.

    அந்த வாக்கியத்தின் சூடு தாங்காமலும், புரியாமலும் திணறினேன் நான். தனது தோளில் இருந்த பையைக் காட்டினாள் அவள். பை முழுக்க பவழவண்ணனின் கவிதை நோட்டுப் புத்தகங்கள், தனித் தனி தாள்களில் கவிதைகள் நிரம்பி இருந்தன.

    “எங்க அண்ணன் பாவம், தான் ஒரு பெரிய கவின்னு மனதார நம்பிக் கொண்டிருந்தார்..தனது கவிதைகள் கால காலத்திற்கும் சாகா வரம் பெற்றவை..வேறொருவர் எழுத இயலாதவை. என்று தனக்குள் கோட்டை கட்டி இருந்தார்..”

    அவளது பேச்சுத் தமிழ் வேறு தளத்தில் மிதப்பதை அப்போது தான் கவனித்தேன்..

    “தெரியும்..ஓர் அப்பாவியான மனிதர் அவர்.எளிதில் நொறுங்கி விடுவார் என்றுதான் அவரோடு பெரிய விவாதம் எல்லாம் செய்யாம அவரப் பாராட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்..” என்றேன்..

    “சரியில்லைங்க அது தவறு…தன்னை உண்மையா மதித்துப் பேசுகிற ஒரு மனிதரிடம் அவரைக் குறித்த அளவு கடந்த சுய மதிப்பீடு இருப்பதை எப்படி நீங்களும் வளர்த்துவிடப் போயிற்று?” என்ற அவளது அதிரடி கேள்வியைத் தவிர்த்து விட முயன்றேன். அவளோ அடுத்தடுத்து கேள்விகளால் என்னைத் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருந்தாள்.

    “தனது திறமைகளை, மிதமிஞ்சிய ஆற்றல்களை படைப்புலகம் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை தான் அவரை மிகவும் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது…ஆனால் அவரது நண்பர்கள் வட்டமோ அவரது அறியாமையை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறது.. எங்க அண்ணன் அன்பின் மறு உருவம்…எந்த எதிர்பார்ப்புமற்ற பாசத்தை ஒரே ஒரு சந்திப்பில் அறிமுகமான மனிதர்களிடமும் பொழியும் பெரிய உள்ளம் அவனது. அவனை அவனது கவிதையை வைத்து நான் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது….அவனது அன்பு ஆகப் பெரும் படைப்பாளியின் ஆளுமையைக் காட்டிலும் மகத்தானது… “

    எப்போது சுடுகாடு வந்தது என்று கூடக் கவனித்திருக்கவில்லை நான்… இறுதிச் சடங்குகள் வேக வேகமாக நடந்துகொண்டிருந்தது. என்னிடம் பேசிக் கொண்டிருந்த மணிமேகலை சடாரென்று தகன மேடை ஏறி அண்ணனின் முகத்தருகே நின்று கடைசி பார்வை பார்த்துக் கொண்டாள்.

    ‘முன்னை விதிப்பயனோ…கண்ணே’ என்று சேகண்டி ஒலிப்பவன் பெருங்குரலெடுத்தான். வீட்டுப் பெரியவர் எங்கிருந்தோ, வெட்டியானைப் பார்த்து ஏம்பா ஒடம் பால் சொல்ல மாட்டியா… என்று கத்தினார். சொல்லிட்டேங்கையா..ஏம்பா மொகமொழி பார்த்துக்க. உடம் பால், உடம் பால்…என்று குரல் கொடுத்தான்.

    பவழவண்ணனின் தந்தை கதறிக் கதறி அழுதபடி தண்ணீர் நிரம்பிய பானையைத் தோளில் சுமந்தபடி வலம் வந்தார். அவர் பின்னால் கத்தியோடு வந்த ஆள் அந்தப் பானையில் மூன்றாவது ஓட்டை போடவும் பெருகிய கண்ணீரை மறைக்க முடியவில்லை… பவழவண்ணன் முகத்தை அருகே சென்று பார்க்கத் துடித்தேன்.. மணிமேகலை பையிலிருந்து அத்தனை காகிதங்களையும், நோட்டுப் புத்தகங்களையும் வெளியே எடுத்துக் கொண்டிருந்தாள். என் பக்கம் ஒரு பார்வை பார்த்தாள்…தந்தை தனது மகன் சிதைக்குக் கொள்ளி வைக்கவும், நான் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று கையிலிருந்தவற்றை அப்படியே பவழவண்ணன் மீது பரவிக் கொண்டிருந்த நெருப்புக்குத் தீனி ஆக்கினாள் மணிமேகலை.

    நான் கேட்காமலே என்னிடம் சொல்ல ஆரம்பித்தாள்: “எங்க அண்ணன் இருக்கப்ப அவர் பட்டது போதும்…தவறிக் கூட அவரது மறைவுக்குப் பிறகு அவரது கவிதைகளை வைத்து யாரும் அவரை அவமதிப்பதை நான் அனுமதிக்க முடியாது..” என்று வெடித்தழத் தொடங்கினாள்.

    சீறிச் சீறி அலை பாய்ந்து கொண்டிருந்த பெருந் தீ என்னை மாறி மாறி கன்னத்தில் அறைந்தது மாதிரி இருந்தது.

    *******************

    நன்றி: நவீன விருட்சம்

    Share
  • சிரிப்பழகி

    –றியாஸ் முஹமட்.

     

    “என்ன அப்படி பார்க்கிறீங்க, சும்மா?”

    “பார்த்தேன்.. ஏன் பார்க்கக் கூடாதோ..?”

    “இல்ல அப்படி என்னதான் இருக்கு எங்கிட்ட பார்க்க?” சிரிப்புடன் கேட்டேன்.

    “உங்கிட்ட என்னடா இல்ல?”

    அழகன்டா நீ, மனசிலே ‘மின்னல்’ அடித்தது ஒரு பெண் அழகு என்று சொன்னதும். யாரு இவள் முதல் பேச்சிலேயே ‘டா’ போடுகிறாள்? எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிறாள் கெட்டிக்காரியும் கூட. சிரிக்கவே பிறந்தவள் மாதிரி. வகுப்பில் அடிக்கடி என்னையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடித்தும் பிடிக்காதது போல காட்டிக் கொண்டேன். நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?

    ஒரு நாள் கேட்டு விட்டேன் “இப்படி அடிக்கடி பார்க்காதீங்க வகுப்பில் மற்றவங்க தப்பாக நினைக்கப் போறாங்க”

    சொன்னதுதான் தாமதம் அவள் முகம் என்னவோ போல் ஆகி சிவந்த விட்டது…அட, சே’.. ஏன்டா இப்படிக் கேட்டேன் பாவம்…. எனக்கோ இருப்பு கொள்ள வில்லை. அன்றிலிருந்து அவள் அதிகம் பார்ப்பதில்லை எப்போதாவது ஒரு முறை பார்ப்பாள் அதுவும் முறைத்து. அவள் சும்மா பார்ப்பதை விட முறைத்து பார்ப்பது பிடித்திருந்தது பல மாதங்களாக அவள் முறைப்பு பார்வையிலேயே பல வகுப்புகள் கழிந்தது.

    rain-girlஅன்று ஒரு நாள் சரியான மழை, யாருமே இன்று பின்னேர வகுப்புக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தவாறே என் சைக்கிளை ‘சன்ரைஷ்’ டியூட்டரியின் பக்கமாக மிதித்தேன். அங்கே மழைத்தூறலில் குடையுடன் அவசர அவசரமாக ஒரு உருவம் நடந்து செல்கிறது. யாராக இருக்கும் நெருங்கும் போதே தெரிந்து விட்டது அதே சிரிப்பழகி என்று…

    சவனாட்டு சந்தியின் ரயில்வே கடவையை கடக்கும் முன்பே அவளை விரட்டி மடக்கி பிடித்து விட வேண்டும் என்ற ஆசை பேராசையாக மாற பறந்தது என் சைக்கிள்….என்னைக் கண்டதும் அவள் முகத்தில் குட்டி சந்தோசம், ஆனாலும் காட்டிக் கொள்ளவே மாட்டாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குகிறாள் என்று மட்டும் லேசாக புரிந்தது. ஹுதா பள்ளி ரோட்டில் வடிந்தோட வழியில்லாது சிதறிக்கிடக்கும் தண்ணீரை அவள் கடந்து செல்லும் அழகோ அழகு எத்தனைபேர் போனாலும் நம்ம பிகரை பார்ப்பது அது ஒரு தனி சுகம்தானே!

    அன்று வகுப்பில் யாருமேயில்லை எங்கள் இருவரையும் தவிர வெள்ளம் ‘சன்ரைஷ்’ டியூட்டரியின் உள்ளே வரட்டுமா என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது. நாங்களும் மழையில் உள்ளே இருக்கவும் முடியாது வெளியே போகவும் முடியாது அவதிப்படுவதும் இருவருக்குமே நன்கு புரிந்தது. எப்படியாவது பேச மாட்டாளா என் மனம் ஏங்கித்தவித்தது.

    rain-girl2ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு பேசினேன், “என்ன.. உங்கள் நண்பிகள் வரவில்லையா? ”

    “மழையால கூட்டப் போக வில்லை அப்படியே வந்து விட்டேன்..”

    ஓஓ..மழையும் பாராது படிப்பில் இவ்வளவு அக்கறையோ? இல்ல என்னை பார்க்கத்தான்…..

    “உங்கள் நண்பர்கள் யாரும் வரல..?” அவள் கேள்வி என் எண்ணத்தை திருப்பியது.

    “இல்ல நானும் அப்படியே வந்து விட்டேன், யாரையும் கூட்ட போகல குடையைக் கூட எடுக்கல பாருங்களேன்” … ஒரு சிரிப்பு. ஆனாலும் ரொம்ப ஓவராக பேசிவிடக் கூடாதென மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்…ஒருவேளை இவளும் நம்மைப்போல் நினைத்து விட்டாள் அவளைப் பார்க்க வந்தேன் என்று..சேசே.. அப்படி நினைக்கமாட்டாள் நினைத்தாலும் அதுதானே உண்மை கிளாஸ் கட் அடிக்காம வாரதே அவளுக்காக தானே என்னையே சமாதானப்படுத்தினேன்.

    விடுபட்ட பாடங்களை எழுதிக் கொண்டிருந்தாள். தூரத்திலிருந்த என் கண்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது அவள் எழுத்து. உடல் சிலிர்த்து, அந்த மழையிலும் வியர்த்ததே என் கழுத்து! மழை சற்று ஓய்ந்து விட காற்று வீசியது டியூட்டரி கதவை இரண்டு குடைகள் முட்டியது.

    வருவது என் நண்பர்களாகவோ இல்ல அவள் நண்பிகளாகவோ இருக்கக் கூடாது உள் மனதில் பிராத்தித்தவனாக யாரோ மழைக்கு ஒதுங்குகிறார்கள் என்று நினைத்தேன். இல்ல அவர்கள் எங்களை நோக்கிதான் வருகிறார்கள் எனத் தெரிந்தது. அங்கே, மழையில் நனைந்த தும்பிகளாக அவளின் நண்பிகள்குடையை மடக்கியவாறே உள்ளே நுழைந்தார்கள்…

    பெரும் ஏக்கத்தோடு படபடத்து ஓய்ந்தது எங்கள் இருவரின் விழிகள் …

    இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா…!!

     

     

     
    றியாஸ் முஹமட்
    கத்தார்
    Picture Source:
    http://www.merlinsilk.com/2011/04/23/men-crying-in-public/
    http://sarahflanigan.com/category/faith/

    Share
  • திருட்டு

    -மன்னை சதிரா

    தன் எதிரில் வந்து நின்ற பெண்ணைப் பார்த்து ‘’என்ன வேணும் உங்களுக்கு?” இன்ஸ்பெக்டர் கேட்டார்.

    ‘’சார் என் கைப்பையை ஒருவன் பிக்பாக்கெட் அடிச்சிட்டான் சார், அதிலே ஆயிரம் ரூபாய் பணமும், என் atm கார்டும் இருக்கு சார், அதைக் கண்டுபிடிச்சுக் கொடுங்க சார்‘’ ருத்ரா படபடப்போடு சொன்னாள்.

    ‘’எந்த ஏரியாவில நடந்தது ?’’

    ‘’ தெற்கு வீதியில் சார் ‘’

    ‘’எத்தனை மணிக்கு நடந்தது ?’’

    ‘’பத்தரை மணி இருக்கும் சார் ‘’

    ‘’309 இவங்ககிட்டே ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதி வாங்கிக்க, எழுதி கொடுத்துட்டுப் போங்கம்மா தகவல் கிடைத்ததும் சொல்றோம். ‘’

    ‘’கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடியுங்க சார் ’’

    ‘’சரி…சரி நீங்க போயி முதலில் பாங்கில் விவரம் சொல்லி உங்க கணக்கை

    ஸ்டாப் பண்ணச்சொல்லுங்க! ’’

    ”சொல்லிட்டேன் சார், அப்ப நான் வரேன் சார் ‘’விடை பெர்றுக்கொண்டாள்.

    ஒரு வாரம் ஆனது – போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எந்தத் தகவலும் வராததால் ஸ்டேஷனுக்குப்போனாள்.

    ‘’ஏம்மா திருடியவனை அடையாளம் காட்ட முடியுமா ?’’

    ‘’முடியும் சார் ‘’

    ‘’207 அந்த பிக்பாக்கெட் பயலுவ நாலு பெயரையும் அழைச்சுகிட்டு வாய்யா”

    இன்ஸ்பெக்டெர் சொன்னார்

    திருதிருவென விழித்தபடியே வந்து நின்றனர் நாலுபேரும்.

    இன்ஸ்பெக்டர் ஒவ்வொருத்தன் அருகிலும் நின்று காட்டி ”இவனா பாருங்க” என்று கேட்டபடி சென்றார்.

    ’’இவங்க யாரும் இல்லை சார். ’’

    ‘’நல்லாப் பார்த்து சொல்லுங்க! இவனுகதான் அந்த ஏரியாவில அடிக்கடி அடிச்சுட்டு இங்க வருவானுங்க‘’

    “இல்லே சார்… அப்படி யாரும் கிடையாது சார்‘’

    ‘’சரிம்மா நீங்க போங்க! அடையாளம் சொல்லிட்டீங்களே… வாட்ச் பண்றோம் ‘’

    எரிச்சலோடு போனாள் ருத்ரா. மன விரக்தி போக முகனூலில் அமர்ந்தாள்.

    அதில் யாரோ ஒரு புது முகம் ஒன்று ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார்கள்.

    நீண்ட யோசனைக்குப் பிறகு அக்சப்ட் செய்தாள். பின் ஒரு அப்டேட் போட்டுவிட்டு வெளியேறினாள்.

    அடுத்த நாள் அந்த புது முகக்காரன் தன் ப்ரொஃப்யில் பிக்சரை அப்டேட் பண்ணியிருந்தான். ருத்ரா வேண்டா வெறுப்பாக லைக் கொடுத்து விட்டு
    மூட எண்ணுகையில்…அவள் புத்தியில் திடீரென பல்பு எரிந்தது. படத்தை உற்றுப்பார்த்தாள். “ஆம் அவனேதான்” அன்று தன்னிடம் கைப்பையை அடித்த அவனேதான் .சட்டென்று அவனைப்பற்றிய விபரங்கள் கண்டு பிடித்து ஓடினாள் இன்ஸ்பெக்டரிடம்.

    வாரே வா… அறை மணியில் அவன் இருப்பிடம் சென்று இன்ஸ்பெக்டர் அவனைப் பிடித்து இழுத்து வந்தனர். நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல் தானே ரிக்வெஸ்ட் கொடுத்து மாட்டிக்கொண்டான். விசாரித்ததில் அந்த லாப்டாப்பும் வேறு ஒருவரிடம் திருடியது என்று   எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் திருடுவதற்குக் கூட.

    ”அடப்பாவிகளா!” ருத்ராவிற்கு atm கார்டும் கைக்கு வந்து சேர்ந்தது.

    Share
  • பிராயச்சித்தம்

    எம்.ரிஷான் ஷெரீப்

    தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். ‘அச்சு அச்சு’ எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.

    அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.

    குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

    முத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.

    மெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.

    ” அண்ணா.. தூங்கிட்டிருந்தீங்களோ ? “

    ” ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் “

    அவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். சில நாட்களுக்கு முன் அவருக்குப் பேய்பிடித்து தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.

    அந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.

    முத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலின் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.

    சின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல், வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.

    முத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.

    போன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதியும் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் முத்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும் முடங்கிப்போயிருந்தார்.

    பப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.

    விடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக ‘இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்’ எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.

    பழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.

    நல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்ணாவைக் கண்டதும் ‘இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு’ என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியை, சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போய் பின்னர் அதிலேயே வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.

    இன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.

    முத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.

    ” தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ? “

    தன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..

    ” வேண்டாமண்ணே..நான் வந்தது…மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்” என்றார்.

    ” சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் ” அண்ணி உள்ளே இருந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.

    அண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். ‘இதற்கொன்றும் குறைச்சலில்ல’ என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.

    ” தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா? நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல “

    “அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்” முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.

    “அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ?” மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.

    ” இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது?”

    “அவன் எண்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு “

    ” ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்? “

    புருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.

    கதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சுந்தரி நினைவு வந்தது. அவள் மேல் காதலும் மோகமும் கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . சுந்தரி சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.

    அந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.

    ” என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்” என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.

    – எம். ரிஷான் ஷெரீப்,
    இலங்கை
    mrishanshareef@gmail.com

    Share
  • எல்லோரும் அங்கேதான் போறோம்!

    எல்லோரும் அங்கேதான் போறோம்!

    ஒரு அரிசோனன்

     

    முன்குறிப்பு: இக்கதை நடந்ததாகக் குறிப்பிடும் காலம் பதினெட்டாம் நூற்றாண்டுத் துவக்கம்.  அப்போதைய தமிழ்நாட்டில் ஆங்கிலம் என்று ஒரு மொழி இருப்பதாகவே பலருக்குத்தெரியாது.  மக்கள் தனித்தனிக் குமுகமாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்வுமுறை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தன.  நான் செவிவழிக்கேட்ட ஒருகட்டுப்பாட்டைப்பற்றி எழுதிய கதையே இது.

     

    “கடைசியாத்து காமாச்சி போயிட்டாளாம்.   ஒரே அமக்களமா இருக்கு!” என்று தன் தந்தையின் மூன்றாம் தாரத்து மகள் பாரவதி யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பது முத்தண்ணா காதில் விழுந்தது. எல்லோருக்கும் அவர் முத்தண்ணாதான்.  அவர் பெயர் முத்துசுப்பிரமணியம் என்பது அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.  எண்பத்தொன்பது வயதான அவர்தான் அந்த கிராமத்திலேயே மூத்தவர் என்பதாலும், அவருக்கடுத்த முதியவர் அவரைவிட இருபத்திரண்டு வயது குறைந்த மூதாட்டி என்பதுமே காரணம்.

    “எலே, கறுப்புக்கண்ணா, இங்கே வாடா!” என்று இரைந்தார் முத்தண்ணா.

    “இப்ப கருப்பனை எதுக்குக் கூப்பிடறேள், முத்தண்ணா?” என்று வாசலில் எட்டிப்பார்த்தவாறே பதிலுக்கு இரைந்தாள் அறுபது வயதான பார்வதி.

    “உன்னால முடியாத காரியத்துக்குத்தான் அவனைக் கூப்பிடுவேன்!  எலே, கருப்பா? எங்கேடா போயிட்டே!” என்று மீண்டும் குரலை உயர்த்தினார் முத்தண்ணா.

    “இங்கேதான் இருக்கேன் சாமி.  மாட்டுக்கு கழனி காட்டிக்கினு இருந்தேன்.” என்று துண்டை இடுப்பில் கட்டுக்கொண்டு ஓடிவந்தான் கறுப்புக்கண்ணன் என்று அழைக்கப்பட்ட கருப்பன்.

    பெயருக்கேற்றபடி கருநீலக்கருப்பு, எடுப்பான நாசி, வேலை செய்துசெய்து உரமேறிய உடல்கட்டு;  சுருட்டை சுருட்டையான தலைமயிரைப் பின்னால் இழுத்துப் பெரிய குடுமியாக முடிந்திருந்தான்.  பத்துப் பதினைந்து நாளாக மழிக்கப்படாத முகத்தில் மிளகுப்போடியில் உப்பை ஆங்காங்கே தூவிவைத்ததுபோல கருப்பில் கொஞ்சம் நரைமுடி கலந்த முடிகள் அரிசி நீளத்திற்கு வளர்ந்திருந்தன. முப்பத்தேழு வயதான அவனுக்குத் நினைவு அறிந்த நாள் முதல் தெரிந்ததெல்லாம் முத்தண்ணாவுக்குச் சேவை செய்வதுதான்.

    “கோடியாத்து மாமி போயிட்டானு காதுலே விழுந்தது.  அங்கே என்ன நடக்கறதுன்னு பார்ந்த்துண்டு வாடா!” என்று முத்தண்ணா சொன்னதும் தலையைச் சொரிந்தான் கருப்பன்.

    “என்னடா மரமாட்டம் நிக்கறே!  சொன்னது காதுல விழுந்ததோல்லியோ?” என்று மீண்டும் விரட்டினார் முத்தண்ணா.

    அவர் குரலில் அதட்டல் இருந்தாலும், உள்ளத்தில் இல்லை என்று உணர்ந்திருந்த கருப்பன், “என்ன சாமி, இப்படிக் கேக்குறீக? சாமிமாரு வூட்டுல கேதம் விழுந்தா, அங்கிட்டு நா போகலாங்களா?  சும்மா உட்டுடுவாகளா?” என்று அவர் சொன்னதைச் தான் செய்ய இயலாத நிலைமையில் இருப்பதைத் தெரிவித்தான்.

    “ஆமாம்.  அது ஒண்ணுதான் இந்த ஊருக்குக் கொறச்சல்!  கட்டையிலே வச்சதுக்கு அப்பறம் வேகவைக்கறதையும் இவங்கனுளே செய்வானுங்களா? அப்பமட்டும் தலையாரி வேணாமா இவனுகளுக்கு!” என்று அலுத்துக்கொண்டவர், “ஒனக்குத்தான் கண்ணும் காதும் தீட்சண்யமாச்சே! தள்ளி நின்னு பாத்து, என்ன விவரம்னு தெரிஞ்சுண்டு வா.  பார்வதி, என் கைத்தடிய எடுத்துக்கொடு, எங்கேயோ மறந்து வச்சிட்டேன்!” என்று தன் தங்கையும் அதே குரலில் விரட்டினார்.

    “நான் என்ன சின்னப் பொண்ணுன்னு நெனப்பா, முத்தண்ணா!  சும்மா வெரட்டிண்டே இருக்கேள்!” என்று மெல்ல எழுந்து, அவரது தடியை எடுக்கச் சென்றாள் பார்வதி.

    இருபது வயதிலேயே கணவனை இழந்து, பிறந்தவீட்டுக்கு வந்தவள் — தனது தந்தையின் மூத்தமகனும், முப்பது வயதிலேயே மனைவியையும், மூன்று குழந்தைகளையும் வைசூரிக்குப் பறிகொடுத்துவிட்டு, இனித் திருமணமே வேண்டாம் என்று தனிக்கட்டையாக் இருந்துவிட்ட —  தன்னைத் தந்தையாக வளர்த்து ஆளாக்கிய தமையன் முத்தண்ணாவுக்குத் துணையாக இருந்துவிட்டாள்.

    அண்ணன் தடி எங்கு இருக்கிறது என்று மறந்து போய்த் தன்னை விரட்டவில்லை, வம்பு பேசாதே என்று மறைமுகமாகச் சொல்லுகிறார் என்றையும் உணர்ந்துதான் இருந்தாள்.  தனக்கு அறுபது வயதாகியும், ஆறுவயதுக் குழந்தையாக நடத்தப்படுவதுதான் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது.  இருந்தாலும், தந்தையாக நினைக்கும் முத்தண்ணாவை எதிர்க்கேள்வி கேட்கத் தோன்றவில்லை.

    “பக்கத்திலேயே கைத்தடியை வச்சுண்டு, ஊர்பூராத் தேடினா, எங்கே கெடைக்குமாம்?” என்ற திட்டலுடன் அவர் அருகில் கிடந்த தடியை எடுத்து, தரையில் ஒரு தட்டுத் தட்டி, அவரிடம் நீட்டினாள்.

    “பொணம் போறவரைக்கும் சாப்பிட முடியாது.  சமையக்கட்டுலே இருக்கறதத் தூக்கி கழனித் தொட்டீல கடாசு!” என்று தடியை ஊன்றிக்கொண்டு எழுந்தார் முத்தண்ணா.

    அவர் வாயிலுக்கு வருவதற்கும், கருப்பன் திரும்ப வருவதற்கும் சரியாக இருந்தது.

    ‘சாமி, எதோ தகராறு நடக்குது.  ஊரு சாமிகளெல்லாம் சேந்து எதோ சத்தம் போட்டுகினு இருக்காக.  எளவு வீட்டுச் சின்னசாமி மத்தசாமிகள ஏதோ கெஞ்சிக்கினு இருக்காக.  முடியாது, முடியாதுங்கற பேச்சுத்தான் கேக்குது.” கருப்பன் தகவல் தந்தான்.

    “ஆமாம், வைத்தா அங்கே இருக்கானா?”

    வைத்தாதான் ஊர் விசேஷங்களுக்கு உபாத்தியாயம் செய்பவர். பிறக்குமுன்னர் செய்யும் சடங்குகளில் இருந்து, முடிவுவரை அவர்தான் எல்லாவற்றிற்கும் வரவேண்டும்.

    “இருக்காரு சாமி.”

    “சரி!  என்னோட வா!” என்று தடியை ஊன்றிக்கொண்டு விடுவிவென்று நடந்தார் முத்தண்ணா.

    “நா அங்கிட்டு வர்றது சரியா இருக்குமா சாமி?  நா வேணும்னா தலையாரிக்குத் தகவல் சொல்லட்டுமா?” தனித்த குரலில் கேட்டான் கருப்பன்.

    “நான் பெரியவனா, நீ பெரியவனா?  எதுக்கு மேப்பேச்சுப் பேசறே?  வேண்டியதில்லை.  நான் இருக்கறச்சே எவனும் நீ ஏன் என்கூட வரேன்னு கேக்கமுடியாது.  வாய மூடிண்டு வா, என்கூட.”  என்று கடிந்துவிட்டு வேகத்தைக் குறைக்காமலேயே நடந்தார் முத்தண்ணா.  அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தான் கருப்பன்.

    அந்தச் சிற்றூர் – குக்குடநல்லூர் —  எப்பொழுதோ எந்த மன்னனாலோ முத்தண்ணாவின் முன்னோருக்கு பிரமதேயமாக வழங்கப்பட்டதாம்.  மொத்தம் இருநூறுபேர்களுக்கும் குறைவாகவே உள்ள அந்தச் சிற்றூருக்கு ஒரு தலபுராணமும் உண்டு.  அந்தக்கதை இப்போது வேண்டாம்.

    ஒவ்வொரு குமுகத்திற்கும் ஒரு கோவில். பதினெட்டு வீடுகள் உள்ள அந்தணர் தெரு, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை உள்ள வேளாளர் தெரு, இன்னும் பல குடிசைகள், என்று அவரவர்கள், அவரவர்கள் தொழிலைச் செய்துகொண்டிருந்தார்கள்.  அதேமாதிரி அந்தந்தக் குமுகங்களுக்கு அவரவர்கள் நீதி, கட்டுப்பாடு.  ஒருவர் விஷயத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை.

    முத்தண்ணாவின் குடும்பம் மட்டுமல்ல, எல்லோரின் குடும்பமுமே பெரிதாகத்தான் இருந்தன.  அப்பொழுது குக்குடநல்லூரின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேலாக இருந்தது.  எப்போதும்போல் திடுமென்று வந்த வைசூரி, முக்கால்வாசிப்பேரை வாரிக்கொண்டுபோய்விட்டது.  முத்தண்ணா குடும்பத்தில் மிஞ்சியவர்கள் அவரும், அவர் தங்கையும்தான்.

    அந்த ஊரில் முத்தண்ணாதான் மிகவும் கற்றவர்.  யஜுர்வேதம், சம்ஹிதை, கணம், பல உபநிஷத்துகள், ஜோசியம், இன்னும் வைதிகச் சடங்குகள் எல்லாம் தெரியும்.  நிறைய நிலபுலங்கள் உண்டு.  இருந்தாலும், நிலத்தில் பயிரிடுபவர்களிடம் தடலடி செய்து எதையும் வாங்குவதில்லை.  அவர்களாகக் கொண்டுவந்து கொடுப்பதிலேயே வீட்டுக்குதிர் நிரம்பி வழியும்.

    அதிலும், தனக்குத் தேவையானதுபோக மிச்சத்தைத் தேவையானவர்களுக்கு வழங்கிவிடுவார். அவரை எதிர்த்துப்பேச ஊரில் எவருக்குமே துணிவுகிடையாது.  ஆனால், பின்னர் பேசுபவர்கள் அவர் குமுகத்தில் நிறைய உண்டு…

    …”என்ன நடக்கிறது இங்கே?  காமாச்சி போய்ட்டானு பார்வதி சொன்னா.  இங்கே எதோ தகராறுன்னு கருப்புக்கண்ணன் கண்ணுலே பட்டது.  அதான் என்னனு பாக்கலாம்னு வந்தேன்.” என்று தான் வந்த நோக்கத்தை யாரும் கேட்பதற்கு முன்பே கணீர் என்று அறிவித்தார்.

    யாரிடமிருந்தும் பதில் வரவில்லை.

    “டேய் ராமா, எண்டா பச்ச மட்டை வல்லே?  காமாச்சி காஞ்சிரங்காடு (சுடுகாடு இருக்குமிடம்) போக வேணாமா?” என்றவர், “டேய் வைத்தா, அபர காரியத்துக்கு ஒண்ணுமே நீ கொண்டுவல்லையேடா.  அவ இங்கேந்து போனாத்தானே நாம புண்டம் திங்கமுடியும்?” என்று வைத்தாவை விரட்டினார்.

    வைத்தா தலையை நிமிரவே இல்லை.

    “கிச்சா, சொல்லுடா.  என்ன தகராறு இங்கே?” என்று கிருஷ்ணசாமியை – இறந்த காமாச்சியின் ஒரே மகனைக் கேட்டார்.

    பதினாறு வயதான கிச்சாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.

    அருகில் சென்று அவன் தலையை வருடினார் முத்தண்ணா.

    “சொல்லுடா, கிச்சா! ஒன் கொள்ளுத்தாத்தா வயசாறது நேக்கு.  காமாச்சி என் பேத்தி மாதிரி.  ஏன் எல்லோரும் பித்துப் பிடிச்சமாதிரி, காரியங்களைக் கவனிக்காம நின்னுண்டிருக்கேள்?”

    “யாரும் அம்மாவைக் கொண்டுபோக முடியாதுங்கறா, முத்தண்ணா!”  ஓவென்று கதை அழுதான் கிச்சா.

    “என்னது?  எவண்டாது அப்படிச் சொன்னது?”  கிழட்டுச் சிங்கமாக உறுமினார் முத்தண்ணா.

    “ஆத்துலே திரண்ட(வயதுக்குவந்த)பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்காம ரெண்டு வருஷமா ஆத்திலே வச்சிருக்கா.  நாங்க என்னசொல்லியும் காமாச்சி கேக்க மாட்டேனுட்டா.  நம்ம சம்பிரதாயமே கெட்டுப்போச்சு.  திரண்டபொண்ணு சும்மா இருப்பாளா? அவனை, இவனைப் பாத்து வலைவீசமாட்டாளா?  இப்படிப்பட்ட, ஜாதிகேட்ட விட்டுக்கு சம்ஸ்காரம் ஒண்ணுதான் கொறச்சல்!”  முத்தண்ணா பின்னாலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

    “யாரடாது பின்னலேந்து பேசறது?  முன்னால வாடா!” என்று அதட்டினார் முத்தண்ணா.

    பதிலே வரவில்லை.

    brahmins

    “பொம்மனாட்டிப்பசங்க!  முன்னால வந்து நிக்காம பின்னால பேசறாங்க, தலையைசெறச்சு முட்டாக்கு போட்டுண்டு ஒக்காந்துக்கவேண்டிய பசங்கல்லாம்!  .பார்வதியை பழம்பொடவையைத் தரச் சொல்லறேண்டா, கட்டிக்குங்கடா!”  அவர் குரலில் இருந்த உஷ்ணம் எல்லோரையும் சுட்டது.

    muththannaa

    “நான்தான் சொன்னேன், முத்தண்ணா!” என்று முன்னால் வந்து நின்றார் ஐம்பது வயதான அய்யாச்சாமி.

    “நீ எப்பலேந்துடா ஊருக்குப் பெரியமனுஷன் ஆனே?”

    “ஏன் முத்தண்ணா, நியாயத்தை எடுத்துச் சொல்ல பெரிய மனுஷனாத்தான் இருக்கவேணுமா?  உங்களைத் தவிர வேற பெரிய மனுஷாளே இந்த ஊரில இருக்கப்படாதா?”

    “ஓகோ, அப்படியா விஷயம்? என்னடா நியாயம் இங்கே இருக்கு?  ஒருத்தி கட்டையிலே போகவேணும்.  அதைச் செய்யவிடாம தடுக்கறது எந்த விதத்துலடா நியாயம்?”

    “உங்களுக்குத் தெரியாததில்லே, முத்தண்ணா!  பெரிய மனுஷி ஆகி, மூணுமாசத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிவைக்கணும், அப்படி இல்லாட்டி, அந்தப் பொண்ணு யாரைவேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சாஸ்திரம் சொல்லிஇருக்கு.  அப்படி நடக்கக்கூடாதுன்னுதானே பொண்ணு பெரியமனுஷி ஆகறத்துக்குமுன்னாலே கல்யாணம் பண்ணிவைக்கணும்கற சாஸ்திரத்தை நாம அனுஷ்டிக்கிறோம்!  அதை ஒத்தத்தரா மீற ஆரம்பிச்சா, நம்ப சாஸ்திர சம்பிரதாயங்கள்ளாம் காத்தோடபோயிடும்!”

    “அதுனால…”

    “அதுனாலதான் ஒன் தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு….  கிச்சா மாட்டேன்னுட்டான்!”

    “அடி சக்கை!  ஒனக்கு அம்பது வயசாறது.  உனக்கு பதினஞ்சு வயசுப் பொண்ணு கேக்கறதாக்கும்!  ஓம் பையனைக் கல்யாணம் பண்ணி வைக்கறதுதானே, அவனுக்கு இருபத்தாறு வயசுதானே ஆறது!”  முத்தாண்ணாவின் குரலில் கிண்டல் இருந்தது.

    “அதெப்படி?  அவனுக்குத்தான் ஒரு பொண்டாட்டி இருக்காளே!”

    “இருந்தா என்னடா?  ரெண்டு பொண்டாட்டி கல்யாணம் பண்ணிக்கப்படாதுன்னு சாஸ்திரம் எங்கேயாவது சொல்றதா?”

    “கிச்சாவோட அப்பன் சொத்தையெல்லாம் கண்ட எடத்துலே கொண்டுபோயி அழிச்சிட்டான்.  அவனுக்கு எல்லாக் கேட்ட பழக்கமும் இருந்துது. அப்படிப்பட்டவன் பொண்ணை நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு வரதே பெரிசு.”

    “எப்படிடா இப்படிப் பேசறே!  அப்பன் எப்படி இருந்தா எப்படிடா?  காமாச்சியும், அவ கொழந்தைகளும் தங்கக்கம்பிகள்டா!  பொண்ணு முக்கியமா, அல்லது செத்துப்போன அவன் அப்பன் முக்கியமா?”

    “முத்தண்ணா, என் பையனுக்குக் கல்யாணம் செஞ்சுவச்சா, சீரு செனத்தி என்ன செஞ்சானு கேள்வி வரும்.  என்னைக் கல்யாணம் பண்ணிண்டா அப்படிக் கேள்வி ஒண்ணும்….”

    “சீ!  வாயக் கழுவு.  வாயால மட்டும் பேசுடா.  வேறு இன்னோத்தால பேசாதேடா.  அதுக்கும், காமாச்சி பொறப்படறதைத் தடுக்கறதுக்கும் என்னடா சம்பந்தம்?”

    “பாடம் கல்பிச்சாத்தான் இனிமே தப்பு நடக்காது.”

    “அப்படியாடா அண்ணாவி?”  என்றவர், அங்கிருந்த கூட்டத்தை நோக்கிக் கேட்டார்.  “உங்க முடிவு என்னங்கடா?  டேய் வைத்தா, காரியத்தை ஆரம்பிப்பியா, மாட்டியா?” என்று வைதிகர் வைத்தாவை அதட்டினார்.

    “முத்தண்ணா,  நீங்க சொல்றேள்னு நான் எதையாவது செஞ்சா, என்னை கிராமத்தை விட்டு இவா ஒதுக்கி வச்சுடுவா.  நான் மூணு பொண்குழந்தைகளைக் கரையேத்தணும்.  இப்பவேணும்னா நீங்க என்னை சம்ரட்சணை பண்ணுவேள்.  அப்பறம்….” என்று இழுத்தார் வைத்தா.

    vaithaa

    “இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்னை சம்ரட்சணை பண்ணப்போறேன்னு கேக்கறே!  வேற நீ என்னடா பண்ணுவே!  அது ஒருவிதத்திலே நியாயம்தான்னாலும், ஒரு பிராமணன், அதிலும் ஒரு வைதிகன், குரு ஸ்தானத்திலே இருக்கறவன், இப்படி சுயநலத்தோட இருந்தா மழை பெய்யுமாடா?  நீங்க இப்படி இருக்கறதுனாலதான் வைசூரி, காலரான்னு நாம அழிஞ்சுபோறோம்.  அதிலேயும் பிராமணன் பண்ற தப்பு இந்த ஒலகத்தையே பாதிக்கும்டா.  இதை என்னிக்குத்தான் நீங்க புரிஞ்சுக்கப்போறேளோ?” என்றவர், மற்றவர்களை நோக்கித் திரும்பினார்.

    “டேய் பசங்களா!  ஊருக்குப் பெரியவன்கற முறையிலே கேக்கறேங்கடா!  இப்ப காமாச்சியை வழியனுப்ப நீங்க வரப்போறீங்களா இல்லையா?”

    பதிலே இல்லை.

    “இங்கே யாருடா உங்களுக்கு மூப்பு, வாடா இந்த முத்தண்ணா முன்னாலே!”

    முத்தண்ணாவின் சவாலை ஏற்றுக்கொள்வதுபோல அவர் முன்னால் வந்து நின்றார் அய்யாச்சாமி.

    “நான்தான் முத்தண்ணா இவங்களைத் தடுத்தேன்!  இப்ப எல்லோரும் என் வார்த்தைக்குத்தான் கட்டுப்பட்டுண்டு இருக்கா.  நாங்க எல்லோரும் எங்க வழியைப்பார்த்துண்டு போறதாத்தான் இருந்தோம்.  நீங்க வரேளேன்னுதான் இங்கே நின்னுண்டு இருந்தோம்.”

    அய்யாச்சாமியை ஏற இறங்கப்பார்த்தார் முத்தண்ணா.

    “எண்டா அய்யாச்சாமி!  அப்ப காமாச்சி இங்கே நாறிண்டே இருக்கணுங்கறதுதான் உங்க தீர்மானமா?”

    பதிலே இல்லை.

    ‘காமாச்சி இங்கே இருக்கறவரை யாராத்திலேயும் அடுப்பு எரியாது.  கோவில்லே சாயரட்சை பூஜை நடக்காது. அது பரவாயில்லையாடா நோக்கு?”  கேள்வியில் தீப்பொறி பறந்தது.

    “அப்ப கிச்சாப்பயலை எங்க வழிக்கு வரச்சொல்லுங்கோ!”

    “அப்படீன்னா?”

    “அவன் தங்கையை எனக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க சம்மதம்னு சொல்லச்சொல்லுங்கோ!’”

    பளார் என்று அய்யாச்சாமியின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.  அதிர்ந்துபோய் இரண்டடி பின்னல் எடுத்துவைத்தார் அய்யாச்சாமி.

    “எப்ப, எதைப் பேசறதுன்னு தெரியாத நீ ஒரு மனுஷன், உனக்குப் பின்னால ஒரு பட்டாளம்!  தூத்தெறி!” என்று காறி உமிழ்ந்தார் முத்தண்ணா.

    “எந்திருந்து போங்கடா, போக்கத்த பசங்களா!  காமாச்சியைக் கரையேத்தறது எப்படீன்னு எனக்குத்தெரியும்.  டேய் வைத்தா, உன் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுன்னு ஒருநாளைக்கு கேப்பான், இந்த அய்யாச்சாமி.  அப்ப உன்பாடு, அவன்பாடு.  அப்ப அதுக்கு மட்டுமில்லே, எதுக்குமே நீ எங்காத்து வாசல்படி ஏறி வரக்கூடாது. தெரிஞ்சுக்கோ.” என்று உறுமிய அவர், குனிந்து வைத்தாவின் ஒலைப்பையைப் பிடுங்கினார்.

    “காமாச்சியை அனுப்பி வச்சுட்டு, இந்தப்பையை தலையைச் சுத்தி வீசி எறியறேன்.  பொறுக்கிக்கோ!” என்றவர்,  கருப்பன் பக்கம் திரும்பி, “டேய் கருப்புக்கண்ணா, நெல்மூட்டை ஏத்திண்டு வருவியே, அந்தக் கட்டைவண்டியைக் கொண்டுவாடா! ஏன் என்னன்னு கேள்வி கேக்காதே!  பச்ச மட்ட ரெண்டையும் கொண்டுவந்து போடு.” என்று வழக்கம்போல அதட்டும் குரலில் விரட்டினார்.

    “இதோ சாமி!”  என்று ஓடினவனிடம், “எவனாவது உன்னைத் தடுத்து நிறுத்தினா, அவன் கையைக் காலை உடைச்சிடு.  எவன் என்ன பண்ணுவான்னு நான் பார்க்கறேன்!” என்று இரைந்தார்.  தலையை ஆட்டியபடி ஓடினான் கருப்பன்.

    “முத்தண்ணா, நீங்க பண்றது அநியாயம்.  உங்களுக்கும் ஒருநாள் எங்க தேவை வரும்.  உங்களையும் நாங்கதான் கரைசேக்கணும்  மறந்துடாதீங்கோ!”

    குரல் வந்த திசையை நோக்கித் தன் கைத்தடியைச் சுழற்றினார்.

    “ஆ!” என்று அய்யாச்சாமியிடமிருந்து ஒரு கத்தல் கிளம்பியது.

    “டேய், என்னை எப்படி கரையேத்திக்கணும்னு எனக்குத் தெரியும்டா.  உங்க கொட்டத்த எப்படி அடக்கணும்னும் எனக்குத் தெரியுங்கடா.  மனுஷனுக்கு மனுஷனா உபகாரம் செய்யலேன்னா, நரகலைத் திங்கற மிருகத்துக்கும் உங்களுக்கும் என்னங்கடா வித்தியாசம்!” என்றவர், கிச்சாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

    சிரித்து நேரம் சென்று வெளிவந்த அவர், பச்சைமட்டையுடன் கட்டைவண்டியில் வந்த கறுப்பனைப் பார்த்து விரல்களால் சைகை செய்தார்.

    கருப்பன் அரிவாளால் மட்டையை வெட்டி, பாடைபின்னத் துவங்கினான்.

    நேரம் சென்றது.

    “கருப்புக்கண்ணா, உள்ளே வாடா!” என்று முத்தண்ணாவின் அதட்டல் குரல் ஒலித்தது.

    “நானா?  வூட்டுக்கு உள்ளேயா  சாமி?” என்று இரைந்து குரல் கொடுத்தான் கருப்பன்.

    “ஆமாண்டா மடசாம்பிராணி! உன்னத்தான்.  காது செவிடாயிடுத்தா நோக்கு?” என்று திரும்பவும் அதட்டல் வந்தது.

    கலைந்து கிடந்த மயிர்க்கற்றையை அள்ளிமுடிந்துகொண்டு உள்ளே போன கருப்பன், காமாச்சியின் உடலைக் குழந்தையைப்போலத் தூக்கிக்கொண்டு வந்தான். முத்தண்ணா கண்ணைக்காட்டவே, பாடையை வண்டியில் தூக்கிவைத்தான் கிச்சா.

    காமாச்சியைப் பாடையில் கிடத்தினான் கருப்பன்.

    தீச்சட்டியைக் கீழே வைத்த முத்தண்ணா, கிச்சாவைப்பார்த்து தலையை ஆட்டினார்.

    தீச்சட்டியை எடுத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் மயானத்தை நோக்கி நடந்தான் கிச்சா.

    மாட்டின் மூக்கணாங்கயிறைப்பிடித்தவாறே வண்டியை மெல்ல நடத்திச் சென்றான் கருப்பன்.

    தடியை ஊன்றியவாறே அவனைப் பின்தொடர்ந்த முத்தண்ணா, கதறி அழுதுகொண்டிருந்த கிச்சாவின் தங்கையைத் திரும்பி பார்த்து, தனக்கே உரிய உரத்த அதட்டும்குரலில், “நாங்க உங்க அம்மாவைக் கரையேத்திவிடப்போறோம்மா. காலம் கெட்டுக்குக்கெடக்கும்மா, பொறுக்கிநாய்க்கூட்டம் காத்துக்கெடக்கு.  கதவைத் சாத்தித் தாப்பாப் போட்டுக்கோ!” என்று இறைந்துவிட்டு நடக்கத் துவங்கினார்.

     

                    ***************************

     

     

     

     

     

     

    Share
  • முடி

    இன்னும் சில நாட்களில் மொத்தமாய்க் கொட்டித் தீர்ந்துவிடும்.

    ஏற்கனவே பின்மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது. முன்மண்டை தற்காலிகமாகத் தப்பி நிற்கிறது. தற்போது எனக்கிருக்கும் தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்த முடிப்பிரச்சினை தான். முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. எனக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பவர்களிடம் என் வயதைக் கேட்டால், ‘இருபத்தைந்து இருக்கும்’ என்று கூறுவார்கள். மாறாக எனக்குப் பின்னால் இருப்பவர்களிடம் கேட்டால் ‘நாற்பதுக்கு மேல் இருக்கும்’ என்று உறுதியாகக் கூறுவார்கள்.

    சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பரத்தில் எனது பின்னந்தலை மட்டுமே தெரியும். அந்தத் துணிக்கடை விளம்பரத்தில் முக்கியமான இரண்டு மாடல்களில் நானும் ஒருவன். துணிக்கடையினர் கெல்லீசில் ஒரு மாபெரும் விளம்பரப் பலகை ஒன்றை வைந்திருந்தார்கள். அந்த விளம்பரத்திலும் என் முகம் தெரியாது. இன்னொரு மாடல் இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு அவனுடைய துணிகளனைத்தையும் எடைக்கு போடுவது போன்ற ஒரு விளம்பரம். நான் எடைக்கு துணிகளை எடுக்கும் ஆசாமியாக லுங்கி கட்டிக்கொண்டு, பனியன் அணிந்து, தராசை தூக்கிப்பிடித்தபடி, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன். அந்தப் படத்தில் என் தலைமுடியின் நீளத்தையும், அடர்த்தியையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.

    இப்போது அதே விளம்பரத்தை மீண்டும் எடுத்தால் நிச்சயம் என்னைக் கூப்பிட மாட்டார்கள். ஜடை போட்டுப் பின்னும் அளவுக்கு அடர்ந்த முடி குடிகொண்டிருந்த இந்த முன்னாள் மாடலின் பின்மண்டை இப்போது மின்னிக் கொண்டிருக்கிறது – பிளாஷ் பிரச்சினைகள் வரும் அளவிற்கு.

    அவ்வளவு தூரம் எதற்குப் போக வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்பு பெல்ஜியத்திற்கு வந்த போது கூட தலையில் முடி பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் என் தங்கை எடுத்த புகைப்படமே அதற்கு சாட்சி. என்னை விட்டு இத்தனை வேகமாக என் தலைமுடி விலகி ஓடிக்கொண்டிருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

    கவலை அதிகம் இருந்தால் முடி கொட்டும் என்கிறார்கள். கடன் அதிகம் இருந்தாலும் கொட்டும். ஏழரை வருடங்களுக்கு முன்பு வாங்கிய வீட்டுக்கடனை இப்போதுதான் கட்டி முடித்தேன். சென்னையில் இருந்த போது, வாங்கிய சம்பளத்தில் பாதிக்கு மேல் மாத தவணை கட்டுவதற்கே சரியாக இருந்தது. நான்கு வருடங்கள் செவ்வனே கட்டிவந்தும் அசல் மாறாமல் அப்படியே அய்யனார் சிலைபோல் இளித்தபடி அமர்ந்து கொண்டிருந்ததைக் கண்டபோதுதான் முடி கொட்ட ஆரம்பித்திருக்க வேண்டும்.

    சத்தான உணவு எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். உணவுக்கா பஞ்சம் இந்த தேசத்தில்? நமக்குத்தான் எதையும் செய்யத் தெரிவதில்லை. சாம்பார் செய்ய நினைத்தால் ரசமாகிறது. வெஜிடபிள் பிரியாணி செய்ய நினைத்தால் தக்காளி சாதமாகிப் போய்த்தொலைகிறது. சமைப்பது கூட கடினமில்லை. ஆனால் அதற்குப் பிறகு வரும் பாத்திரங்களைக் கழுவும் படலத்தை நினைத்துப் பார்த்தாலே நடுக்கம் வருகிறது. இதனாலேயே பெரும்பாலும் தயிர் சாதத்துடனும், ரொட்டியுடனும் ஓடுகிறது வண்டி. அவ்வப்போது ரெடிமிக்ஸ், ஃபுரோசன் ஃபுட் எடுத்துக்கொள்வதும் உண்டு.

    உள்ளூர் இந்தியக் குடும்பஸ்தர்கள், அவர்களின் குழந்தைகளுக்குப் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி விருந்துக்கு அழைப்பார்கள். இதுபோன்ற அழைப்புகளையெல்லாம் மறுப்பதே கிடையாது. அந்த நாட்களில் மட்டும்தான் நல்ல சாப்பாடே! ஓட்டலுக்கும் போக முடியாது. அதுவும் நான் வசிக்கும் லூவன் நகரின் பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள ஹிமாலயன் ரெஸ்டாரண்டில் தினந்தோறும் சாப்பிடவேண்டும் என்றால் இன்னொரு முறை வங்கியில் கடன் வாங்கி, வட்டி கட்ட வேண்டியது தான்..

    பெல்ஜிய நாட்டில் தண்ணீரின் கடினத்தன்மை அதிகம் என்கிறார்கள். அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனை நாட்களாக எனக்குத்தான் அது தெரியாமல் போயிருக்கிறது. இப்போது தண்ணீர் வரும் இடங்களில் எல்லாம் பில்ட்டர் மாட்டி வைத்திருக்கிறேன். கடினத்தன்மை கொண்ட தண்ணீரில் குளிப்பதற்கென்றே சிறப்பு ஷாம்பு ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். சரி. திருமணம் என்கிற ஒன்று நடக்கும் வரையிலாவது இருப்பதைக் காப்பற்றிக்கொள்வது நல்லது.

    எனக்கென்னவோ இவை எல்லாவற்றையும் விட அதிமுக்கியமான காரணமாகப்படுவது – ‘பார்ட் போலன்’ என்னும் ஆசாமி தான்! பார்ட் என்னுடைய மேலதிகாரி. அவர் ஒரு தொட்டால் விரிஞ்சிக் கண்ணன். தொட்டதற்கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வந்து கண்கள் விரிந்து, கன்னம் சிவந்து, வாய் கூப்பாடு போட ஆரம்பித்துவிடும். என் வாழ்நாளில் இத்தனை பதற்றம் நிறைந்த மனிதனை நான் பார்த்ததில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் இந்த மனிதரின் பதற்றம் அவரோடு இருந்துவிட்டால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், அது என் தலைமுடி வரை அல்லவா நீண்டிருக்கிறது. என் சொட்டைக்கு நிச்சயம் இந்த மனிதர் தான் பிரதான காரணம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

    எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் அவரது முன்னுரிமைகள் என்னை முழி பிதுங்க வைக்கும். ‘பிரசல்சு நகரில் உள்ள அலுவலகத்தில் சில பிரச்சினைகள். நீ உடனே அங்கு செல்லவேண்டும். அவர்களோடு அமர்ந்து இந்த வார இறுதிக்குள் பிரச்சினைகள் தீர்த்துவிட்டு வர வேண்டும்’ என்று கூறி அனுப்பி வைத்த இரண்டு நாட்களில் அவரிடமிருந்து அழைப்பு வரும். ‘இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா? நீ அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் இஷ்டம் போலெல்லாம் நடந்துகொண்டால், அப்புறம் நான் எதற்கு?’ என்று கத்துவார்.

    வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிவாக்கில் அழைத்து, ‘இது அதிமுக்கியமான வேலை. திங்கள்கிழமை காலைக்குள் முடித்துவிடு!’ என்பார். வேறு வழியே இல்லாமல் வார இறுதி முழுவதும் அமர்ந்து வேலை செய்யவேண்டும். இது போன்ற செயல்களை, இந்தியாவில் தங்கள் பெயரைத் தாங்களே சுருக்கி வைத்துக்கொள்ளும் ஐ.டி பிராஜக்ட் மானேஜர்களான என்.கே-கள், விஷி-கள், ராண்டி-கள் செய்து பார்த்திருக்கிறேன். வெள்ளிகிழமையானால் மூன்று மணிக்கே கிளம்பி விடும் சுதந்திர விரும்பிகளான ஐரோப்பியர்களில் இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

    என்றைக்காவது ஒருநாள் சற்று முன்னதாக கிளம்பினால் போதும். நான் பையைத் தூக்கிக்கொண்டு நடந்து போவதை ஓரக்கண்ணால் பார்ப்பார். சில சமயங்களில், ‘ஏன் அடிக்கடி சீக்கிரம் கிளம்பிவிடுகிறாய்?’ என்பார். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அதுபோல் சென்றிருப்பேன். அவருடைய போலி அழுத்தங்களின் காரணமாக இரவு வரை நான் வேலை பார்த்த நாட்களும், அவர் கொன்றழித்த என் வார இறுதிகளும் எப்போதுமே அவர் நினைவில் தங்குவதில்லை. அவருக்கென்ன? அவர் மட்டும் செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் யாருக்கும் சொல்லாமல் சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார். நமக்குத்தான் சிரமம்.

    ‘இவர் ஒரு ரேசிஸ்டா?’, ‘நான் ஒரு இந்தியன் என்பதால் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரா?’ என்றால் அதுவும் இல்லை. எங்கள் அணியில் இருக்கும் யோஹான் டி வொல்ஃப்-பிற்கும் இதே நிலைமைதான். அலுவலக நேரத்தில் அடிக்கடிப் புகைப்பிடிக்க வெளியே செல்கிறான் என்று அவனுடைய லைட்டரை ஒருமுறை பிடுங்கி வைத்துக்கொண்டார். யோஹான் இந்த மனிதரின் செயல்களை எந்த நிலையிலும் மதித்தாகவே தெரியவில்லை. அவன் வேறொரு லைட்டரை வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்கும் வெள்ளிகிழமை மாலை வேலைகளை ஒதுக்குவார். அவன் அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ‘டாட் வோல்கன்ட வீக்’ என்று கூறிவிட்டு நடையைக் கட்டிவிடுவான். திங்கள்கிழமை எப்படி இருந்தாலும் கத்துவார். குதிப்பார். அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு கவலை இருந்ததில்லை. ஆனால், அதை அவன் வேறுவிதமாகவும் சமாளித்தான். வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் அமர்ந்திருக்கும் லூவன் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்திவிட்டான். கென்டு நகரில் இருக்கும் எங்களின் கிளை அலுவலகத்துக்குச் சென்று விடுவான்.

    எங்கள் நிறுவனத்தில் வாரத்திற்கு ஒருநாள் வீட்டிலும், ஒருநாள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அலுவலகத்திலும் வேலைப் பார்க்கலாம் என்கிற சலுகை இருந்தது. இந்தச் சலுகைகளையெல்லாம் நான் அவ்வளவாக அனுபவித்ததே இல்லை. பார்ட் என்னை அனுபவிக்கவிட்டதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதன் உண்மையான காரணம் வீட்டிலிருந்து வேலை பார்த்தால் நாளொன்றுக்கு இருபது யூரோ ஃபுட் அலவன்ஸ் கிடைக்காமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் பார்ட்டின் மேல் வெறுமனே பழிசுமத்த எனக்கு விருப்பமில்லை.

    யோஹான் திங்களன்று வீட்டிலிருந்தும், வெள்ளியன்று கென்டிலிருந்தும் ‘வேலை செய்வான்’. ‘வீட்டிலும், கென்டிலும் இருப்பான்’ என்று தான் சொல்லவேண்டும். புதன்கிழமை எங்கிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. புதன்கிழமைகளில் என்ன காரணத்தினாலோ பார்ட் வேலைக்கு வருவதில்லை. வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்திற்கு வேலை பார்க்கிறார். மீதம் ஒருநாள் அவருடைய சொந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறாரோ என்னவோ? இங்குள்ள பெரும்பாலானோர் அவர்களுடைய சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

    பெல்ஜியத்தில் பள்ளிகூடங்கள் புதன்கிழமை அன்று அரைநாள் மட்டுமே இயங்குகின்றன. குழந்தைகளை பார்த்துக் கொள்ளவதற்காக வேண்டி, பெண்கள் பெரும்பாலும் அன்றைக்கு வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் அல்லது அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு விடுவார்கள். குழந்தைக் காப்பகங்களுக்கு பெருஞ்செலவு செய்வதை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் பார்ட் வராமல் இருப்பதற்கான காரணம் இதுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    எவரையும் விட்டுவைத்ததில்லை இந்த மனிதர். ஆறுமாதங்களுக்கு முன்பு டெய்சி நெவென் என்கிற அழகிய இளம் பெண் எங்கள் அணியில் சேர்ந்தாள். ஏனோ யோஹான் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அமோரியை அவளுக்கு பட்டியாக நியமித்து இருந்தார் பார்ட். அவளுக்கு சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், காபி அருந்துவதலிருந்து, உணவு வரை அத்தனை நேரமும் அவளுடனேயே இருந்தான் அமோரி. அவனை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவனுக்கு முடி நீளம். தன்னுடைய குதிரைவால் முடியால் என்னுடைய பொறாமையை மட்டும் சம்பாதித்து வைத்திருந்தவன், நான் புறமுதுகு காட்டியபடி நின்றுகொண்டிருந்த போட்டோவை என்னைக் கேட்காமலேயே பேஸ்புக்கில் போட்ட நாளில் இருந்து என் ஜன்ம எதிரியாகி விட்டான்.

    டெய்சியால் பார்ட்டின் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் அவருடன் கைபேசியில் பேசிமுடித்துவிட்டு, ‘ஹீ ஈஸ் எ மேல் சாவினிஸ்ட்!’ என்று கத்திவிட்டு தடாலென கைபேசியை மேஜை மீது வீசி எறிந்தாள். சாவினிஸ்ட் என்பதை விடுங்கள். இவரைப் பார்த்து ஒரு சாடிஸ்ட் என்று கூட சொல்லமுடியாது. சாடிஸ்டுகள் பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பவர்கள். இந்த மனிதர் சந்தோஷப்பட்டே நான் பார்த்ததில்லையே. வரையறுக்கவே முடியாத ஒரு பிறவி. டெய்சிக்கு சாவினிஸ்ட், அமோரிக்கு சாடிஸ்ட் என்று இன்னும் எத்தனை பேரிடம் எத்தனை இஸ்டுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

    கடைசியில் டெய்சி, காரல் வாண்டர்கோட்டனிடமே முறையீடு செய்துவிட்டாள். காரல் எங்கள் டைரக்டர். அவரோ அவள் விரும்பியபடியே அவளை மட்டும் வேறு டிபார்ட்மென்டுக்கு மாற்றினாரே தவிர, பார்ட்டின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாய்த் தெரியவில்லை. அதற்குக் காரணம் அவருடைய எல்லா ப்ராஜக்டுகளும் சிறப்பாக போய்க் கொண்டிருப்பதனால் இருக்கலாம். எல்லாவற்றையும் என் தலையில் தாங்கிக் கொட்டவைத்துக் கொண்டிருக்கிறேனே! என் எதிரி அமோரியே என்னை பார்ட்டின் ‘ரெக்டராண்ட்’ என்று கூறுவான். டச்சு மொழியில் ‘வலதுகை’. இப்படியும் கூறிவிட்டு, ‘நல்ல வேலை இடதுகை இல்லை. இந்தியாவில் இடதுகையை வேறு சில விஷயங்களுக்கு உபயோகிப்பார்கள்’ என்று சொல்லிச் சிரித்து வெறுப்பேற்றுவான். காரலுக்கு நான் செய்துகொண்டிருப்பவைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பார்ட் சொன்னாரோ இல்லையோ. நேரடியாகவே பாராட்டத் தெரியாத மனிதர், காரலிடம் பெரிதாக அப்படி என்ன சொல்லியிருக்கப் போகிறார். கண்டிப்பாக என்னுடைய உழைப்பைக் காட்டி இவர் நல்ல பெயர் வாங்கியிருப்பார்.

    இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், இத்தகைய சர்வாதிகார மனப்போக்குடைய, நரம்புக்கோளாருடைய, எதிர்மறையான, பிடிவாதமிக்க ஒரு மனிதருடன் மூன்று வருடங்களாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் முடி கொட்டக்கூடாது?

    இவருக்கு அடுத்து எனக்கு அதிக மன உளைச்சலைத் தருவது, எங்கள் அலுவலகத்திலேயே எனக்கு அறவே பிடிக்காத இந்த எலிவேட்டர். ஆனால் என்ன செய்வது, ஆறாவது தளத்தில் இருக்கும் என்னுடைய இருக்கைக்கு அதில் தானே சென்று வரவேண்டியிருக்கிறது. அந்தப் பாழாய்ப்போன எலிவேட்டரின் உள்ளே மூன்று புறங்களிலும் கண்ணாடிகள் இருக்கும். மூன்று கண்ணாடிகளிலும் முன்னூறு சொட்டைகள் தெரியும் போது மனதில் தோன்றுவதை விவரிக்க முடியாது. அங்கேயே அமர்ந்து அழுதுவிடலாம் போல் இருக்கும். இதனாலேயே எலிவேட்டரில் ஏறியவுடன் கதவைப் பார்த்தபடி நின்றுகொள்வேன்.

    முழுச்சொட்டையுடையோரைப் பார்க்கும் போதெல்லாம், இவர்களுக்கு நம் நிலைமை பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டாலும், முன்னூறு சொட்டைகள் காட்டும் இந்த லிப்டும், எரிச்சலூட்டும் முகபாவங்கள் காட்டும் இந்த பார்டும், குதிரைவால் கொண்டையான் அமோரியும் என் முடி கொட்டுவதை இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    நான் வேறு தளத்திற்குச் சென்று விடவேண்டும் அல்லது வேறு அலுவலகத்துக்குச் சென்று விட வேண்டும். ஆனால் ஏனோ எனக்கு பார்டை விட்டு வேறு பிராஜக்டிற்கோ, வேறு டிபார்ட்மென்டிற்கோ சென்றுவிட வேண்டும் என்று தோன்றவில்லை. நான் இந்தியாவிலிருந்து வந்தபோது ஒரு தற்காலிக ஒப்பந்த பணியாளனாகத்தான் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பார்ட் தான் எனக்கு நிரந்தரப் பணியிடம் பெற்றுத் தந்தார். எனக்கு நன்றாகத் தெரியும். இந்த நிறுவனத்தில், ஒரு இந்தியனுக்கு வேலை பெற்றுத் தருவதென்பது அத்தனை எளிதான காரியமில்லை. என்னதான் கடுமையாகவும் நேர்மையாகவும் வேலை செய்தாலும், வெளிநாட்டான் வெளிநாட்டான் தான். அவனுக்கு என்று சில எழுதப்படாத வரம்புகள் இருக்கின்றன. அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளியிலும் கூட இவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கும் செனோஃபோபியாவையும், இவர்கள் காட்டும் சட்டில் ரேசிசத்தையும் சகித்துக் கொண்டு தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.

    அனைத்திற்கும் மேலாக, மொழிப்பிரச்சினை. வேறு அணிக்கு மாறிச் சென்றால் ஆங்கிலத்தை மட்டும் கட்டிக்கொண்டு பிழைக்க முடியாது. மொழியறியாதவன் என்கிற கவலையெல்லாம் சிறிதும் இல்லாமல், பாவம் பார்க்காமல் டச்சு மொழியில் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஆங்கிலத்தைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட இது என்ன தமிழகமா?

    என் மன உளைச்சலுக்கான முதல் காரணகர்த்தாவாக எனக்கு பார்ட் தென்பட்டாலும், மேலே கூறிய இந்த இரண்டு விஷயங்களில், பார்ட் தனித்தே நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால் எல்லா விஷயத்திலும் இந்த மனிதர்களைக் காட்டிலும் அவர் முரண்பட்டவராகவே தெரிகிறார்.

    முடி உதிர்ந்தது உதிர்ந்தது தான். திருமணம் ஆகி இருந்தால் இவ்வளவு கவலைப்படமாட்டேன். சத்தியமூர்த்தி மாமா தான் எனக்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதற்காகவே இந்தியாவிற்கு வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை சென்று வருகிறேன். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போதும் அவர் சொல்வது – ‘இவனுக்கு முழுக்க முடி கொட்றதுக்குள்ள ஒரு பொண்ண பாத்து முடிக்கணும். எனக்கே இந்த வயசிலே இவ்ளோ முடி இருக்கு. இவனுக்கு ஏன் இப்படி?’

    அவர் மட்டுமா? நான்கு வருடங்கள் கழித்து தற்செயலாக என்னை பார்த்த நண்பரொருவர், ‘என்ன பயங்கரமா மாறிட்டீங்க?’ என்று கேட்டார்.

    சொட்டை! எவ்வளவு பயங்கரமான ஒரு வார்த்தை!

    என் கல்லூரி நண்பர்கள் அதற்கு மேல் சென்று, ‘என்ன மச்சான் மாடி காலியாகிட்டே வருது!’ என்பார்கள். தோற்றத்தை வைத்து பகடி செய்வதில் நம் மக்களை யாரும் விஞ்சிவிட முடியாது. இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே எதையாவது செய்ய வேண்டியிருந்தது. அலோபதி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, பலவித எண்ணைகள், அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எர்வாமாட்டின் என்று அத்தனையும் முயன்றாகி விட்டது. அவ்வப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட செல்ஃபி-கள் எடுத்தது தான் மிச்சம்.

    சமீபத்தில் கூட கபோக்கி என்கிற அமெரிக்க ப்ராடக்ட் ஒன்றைப் பற்றி இணையத்தில் பார்த்தேன். இலவச சாம்பிளுக்கும் விண்ணப்பித்துவிட்டேன். சிப்லா கூட டுகெயின் என்கிற ஜெல்லைத் தயாரித்திருக்கிறது. தடவிய ஆறுமாதங்களில் முடி வளர்ந்து விடுகிறதாம். டாக்டர் ரெட்டி லேப்சின் மின்டாப்பை பற்றி அங்கு வேலைபார்க்கும் நண்பன் மிலிந்தனிடமே கேட்டுவிட்டேன். அவனோ, ‘மின்டாபும் வேண்டாம். டுகெயினும் வேண்டாம். இரண்டிலும் மினாக்சிடில் இருக்கிறது. அது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டான். எதற்கு இந்த வேண்டாத வம்பு என்று விட்டுவிட்டேன்.

    இவற்றாலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை. எதிர்காலத்திற்குத் தயாராவது மட்டுமே சிறந்த வழி. எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்வது பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறேன். விக் வாங்கலாமா என்றால் அதெல்லாம் ஊரறிந்த வித்தை. அதற்குச் சொட்டையே மேல். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பாலு மகேந்திராவைப் போல் எப்போதும் தொப்பி அணிந்துகொண்டிருப்பார். அது அவருக்கான பாணி. சொட்டை உள்ள சிலர் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அது போல் செய்யலாம். எனக்கென்னவோ சொட்டையை விட மொட்டை சற்று மேலானதாகத் தோன்றுகிறது. அது அவ்வளவு எரிச்சலூட்டக்கூடிய வார்த்தை இல்லை. பயங்கரமாயும் இல்லை. ‘மொட்டை, இங்க வா’ என்பதற்கும், ‘சொட்டை இங்க வா’ என்பதற்கும் நிச்சயம் கடலளவு வித்தியாசமிருக்கிறது. எனவே நிச்சயம் முன்மண்டையில் முடி முழுவதுமாகக் கொட்டிவிட்டால், நான் நிச்சயம் மொட்டை அடித்துக்கொள்வேன்.

    இருப்பினும் இப்போதெல்லாம் முடிக்குத் தேவையான அத்தனை உணவுகளையும் ஒழுங்காக எடுத்துக்கொள்கிறேன். வாரத்தில் ஒருமுறைதான் தலைக்குக் குளிக்கிறேன். அதுவும் தலைக்கு மட்டும் பாட்டில் வாட்டர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்கிறேன். அலுவலகத்திலும் அதிகமாக வேலை பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து வருகிறேன். பார்ட்டின் வலதுகை என்கிற பட்டமெல்லாம் எனக்குத் தேவையில்லை.

    அன்றைக்கு வெள்ளிக்கிழமை. பத்தரை மணியாகியும் பார்ட் வரவில்லை. வழக்கமாக எட்டரை மணிக்கெல்லாம் வந்துவிடுபவர் ஆயிற்றே. குறுஞ்செய்தி அனுப்புவார். அதுவும் இல்லை.

    யோஹான் கைபேசியில் அழைத்தான். “மோஹான்’, என்று எப்போதும் போல் விளித்தான். அது மோஹான் இல்லை மோகன் என்று பலமுறை சொல்லியும் அவனுக்கு ஏறவில்லை. அவன் பெயர் யோஹான் என்பதால் அவன் பெயரில் இருக்கும் ‘J’-இற்கு பதிலாக ‘M’ இருப்பதால் அப்படி அழைக்கிறான்.

    ‘ஒரு வருத்தமான செய்தி!’ என்றான்.

    ‘ஏன் இன்றைக்கு பார்ட் கென்ட் அலுவலகம் வந்துவிட்டாரா?’ என்றேன் சிரித்துக்கொண்டே.

    ‘ஜோக்ஸ் அபார்ட், பார்ட்ஸ் வைப் பாஸ்ட் அவே’.

    ‘வாட்?’

    பார்ட்டின் மனைவி இறந்து விட்டார் என்றா கூறினான்? எப்படி இவனால் இதைக் கூட எந்தவித உணர்ச்சியுமின்றிக் கூற முடிகிறது. அவன் தொடர்ந்தான்.

    ‘ஆமாம். இப்போதுதான் காரல் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார்.’

    ‘என்ன காரணம்?’

    ‘தெரியவில்லை. நாளைக்கு இறுதிச் சடங்கு! காரல் இன்று மாலை பெரு நாட்டிற்குச் செல்வதால் என்னால் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நீ அவருக்கு நெருங்கியவன் என்பதால், உன்னையும் கண்டிப்பாக போக முயற்சி செய்யச் சொன்னார்.’

    நான் எப்போது அவருக்கு நெருங்கியவன் ஆனேன்?..

    ‘நிச்சயம் வருகிறேன் யோஹான். ஆனால் என்ன காரணம் என்று தெரியுமா? ‘

    ‘என்ன காரணம் என்று தெரியவில்லை, மோஹான். காரல் ஏதோ அவசரமாகத் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மாலை புறப்படுவதற்கு முன்பு அழைக்கிறேன் என்றார். ஆனால், அமோரி ஒருமுறை பார்டின் மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறான். நான் சரியாக கவனிக்கவில்லை. அவன் சைப்ரசில் இருந்து வந்துவிட்டானா என்று தெரியவில்லை. போன் செய்து பார்க்கவேண்டும். இறுதிச்சடங்கு நடக்குமிடத்தின் முகவரியை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.’ என்றான்.

    அதற்கு மேல் எனக்கு வேலையே ஓடவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? இந்த ஆசாமி வீட்டிலும் இதே போன்று நடந்து கொள்பவரோ? இப்படி இருந்தால் யாருக்குத்தான் உடன் வாழப் பிடிக்கும்? விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருப்பாளா? இருக்காது. இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து விடுவார்களே. அந்த முடிவுக்கெல்லாம் போக மாட்டார்கள். ஆக்சிடண்டாக இருக்குமா? ஆனால், அமோரி அவருடைய மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறானே? பிரச்சினை என்றால்? மனநலம் குன்றியவளா? இருக்காது. அமோரிக்கு பார்ட்டை சுத்தமாகப் பிடிக்காது. அவன் ஏதேனும் உளறியிருப்பான். சொல்ல முடியாது. உண்மையாகவும் இருக்கலாம். இந்த யோஹான் சரியாக கேட்டிருக்கவேண்டும். ஜடம். இவர்கள் சக மனிதர்களின் சொந்த விஷயங்களில் மூக்கையும் நுழைக்க மாட்டார்கள்; அக்கறையும் கொள்ளமாட்டார்கள். அப்படியே ஓரிருவர் அக்கறை காட்டினாலும் ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்றும் முறைத்துக்கொள்வார்கள்.

    பார்ட்டை தொலைபேசியில் அழைக்கலாமா? அவர் எப்போதும் போல் எரிந்து விழுந்தால் என்ன செய்வது? நமக்கெதற்கு வம்பு! இதையெல்லாம் யோஹானைப் போலவே ஒதுங்கி நின்று பார்க்கப் பழகிக்கொள்ளவேண்டும். இந்நேரம் அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருப்பான். பார்ட் இருந்தால் போன் செய்துவிடுவார். இப்போது அவனுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அவன் என்னமாதிரியான மனநிலையில் இருப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். பார்ட் இன்னும் சில நாட்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற எண்ணம் தோன்றியபோது என்னுடைய மனமும் லேசாக இன்புற்றது. உதடுகள் என்னை அறியாமல் விரிந்து புன்னகைத்த அடுத்த கணம், ‘என்ன மாதிரியான சாடிஸ்ட் நான்?’ என்கிற கேள்வி எனக்குள்ளே எழுந்து என் வக்கிர எண்ணங்களை ஒடுக்கியது. மனம் உடனே துக்கமடைவதற்கான காரணங்களைத் தேடியது. அவரில்லாமல் இந்த வேலை கிடைத்திருக்குமா? கடனை அடைத்திருப்போமா? ஏதோ பாவம் கோபப்படுகிறார், திட்டுகிறாரே ஒழிய, முதுகுக்குப் பின்னே என்னைப் பற்றி யாரிடமாவது தவறாகப் பேசியிருக்கிறாரா? பதட்டக்காரர். ஏதோ ஒரு விஷயத்தில் இயலாமையோ அல்லது மனப்பிறழ்வோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ எல்லாவற்றுக்கும் பதற்றம் கொள்கிறார். இப்போது பாவம் மனைவியை இழந்துவிட்டு என்ன செய்துகொண்டிருக்கிறாரோ?

    அடுத்த நாள் காலை காரை எடுத்துக்கொண்டு ஹெயிஸ்ட்-ஆப்-டென்-பெர்க் சென்றேன். எவ்வளவு நீண்ட பெயர் இந்த நகருக்கு? மலை-மேலமைந்த-ஹெயிஸ்ட் நகரம். லூவன் நகரிலிருந்து நாற்பத்தைந்து நிமிட தூரம். பார்ட்டின் வீடு இந்த நகருக்கு அருகே உள்ள இட்டெகெம் என்கிற கிராமத்தில் இருக்கிறதாம். இறுதிச் சடங்கு ஹெயிஸ்ட்லுள்ள ஒரு ஈமச்சடங்கு மண்டபத்தில் நடக்கிறதாம். வழக்கமாக இதுபோன்ற சடங்குகள் தேவாலயத்தில் தான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்ட் ஒரு நாத்தினாக இருக்க வேண்டும்.

    ஈமச்சடங்கு மண்டபம் இருந்த இடம் ஒரு குட்டித் தீவைப்போல் காட்சியளித்தது. சுற்றிலும் தண்ணீர். அமைதியான இடம். யோஹான் அந்தத் தீவுக்குச் செல்லும் குறுகிய பாலத்தின் மீது நின்று கொண்டிருப்பது தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அங்கு சென்றேன்.

    மண்டபத்திற்கு வெளியே இருந்த புல்வெளியில் கோட்டு போட்ட கனவான்களும் நன்கு உடையணிந்த பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரின் கைகளிலும் தாள்கள் இருந்தன. அந்தப் பெண்மணியைப் பற்றி இவர்கள் அனைவரும் எழுதிக்கொண்டு வந்துள்ளதை இன்னும் சில நேரத்தில் வாசிப்பார்கள் என்று யோஹான் கூறினான். காரலிடம் தான் முந்தைய நாள் மாலை பேசியவற்றைப் பற்றியும் மெதுவாக சொல்லிக்கொண்டே வந்தான்.

    இருவரும் மண்டபத்திற்கு உள்ளே சென்றோம். வரவேற்பறையில் ஒரு இளம் வயது பெண்ணின் புகைப்படம் வைக்கப்பட்டு, அதற்கருகே விதம் விதமான மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருந்தார்கள். பார்ட்டின் மனைவி தனது இளம் வயதில் எடுத்த புகைப்படமாக இருக்க வேண்டும். பார்ட்டுக்கே நாற்பத்து ஐந்து வயதாகிறது. அவரது மனைவிக்கு ஒரு ஐந்து குறைவாக இருக்கலாம். ஆனால், அந்தப் புகைப்படத்தில் வசீகரமான புன்னகையுடன் காணப்பட்டார்.

    வரவேற்பறையைக் கடந்து ஹாலுக்குள் நுழைந்த போது, பார்ட்டும் அவருக்கு அருகே மூன்று குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள். மூவரும் எட்டிலிருந்து, பதினைந்து வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். அவர்களுடைய கண்களை ப் பார்த்தேன் – சிவந்திருந்தன. முந்தைய இரவு முழுவதும் நிறைய அழுதிருக்கவேண்டும் என்று தோன்றியது. பார்ட் ஏன் இத்தனை நாளாய் இவர்களைப் பற்றியெல்லாம் பேசவேயில்லை. யார்தான் பேசுகிறார்கள்!

    பார்ட்டை நெருங்கினேன். அவருக்குக் கைகொடுத்து ஆறுதல் சொல்ல நினைத்த அடுத்தகணம், என்னைக் கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தார். பார்டின் இந்த செயல் நான் இதுவரை கண்டிராதது. குழந்தைகள் ஓடிவந்து அவரின் முதுகைப் பற்றிக் கொண்டார்கள். என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. பேரமைதி நிலவிய அந்தக் கூடத்தில் அவரது கதறல் என்னை நிலைகுலைய வைத்தது.

    “கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்னவோ செய்த பார்த்துவிட்டேன். தீவிரமான சிகிச்சை! இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. எங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விட்டாள்.’ என்று உடைந்துபோன குரலுடன் பேசினார்.

    கூடத்தின் மையத்தில் அவரது மனைவியின் உடல் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது. யோஹான் அதற்குள் அங்கே சென்று மலர் வளையத்தை வைத்துவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான். பார்ட் என் கைகளைப் பற்றி, ‘உன்னிடம் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துவிடு!’ என்றார்.

    எனக்கு வயிற்றில் என்னவோ செய்தது. எனது வலதுகையை இறுகப் பற்றிக்கொண்டிருந்த அவரது கைகளை தட்டிக்கொடுத்தவாறு, என் கண்ணீரை அடக்கத் திணறிக்கொண்டிருந்தேன்.

    அவரது மனைவியின் உடல் வைக்கப்படிருந்த இடத்துக்குச் சென்றேன். மேஜைக்கருகே கீழே அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். எல்லோரும் மலர்வளையங்களை அங்கே வைத்திருந்தார்கள். நான் மட்டுமே பூச்செண்டு கொண்டு வந்திருந்தேன். சலனமின்றி படுத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாளைய வலி நீங்கி, களைப்புடன் அமைதியாக அவர் உறங்கிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

    அவரது தலையைப் பார்த்தேன். ஒரு முடி கூட இல்லை.

    Share
  • சொர்க்கம் வேண்டாம்!

     

    சொறிபிடித்த தெருநாயின் சிறுகதைகள்:

     சொர்க்கம் வேண்டாம்!

    ஒரு அரிசோனன்

     நான்தான் உங்களுக்கு முன்னமேயே அறிமுகமான சொறிபிடித்த தெருநாய்!  நான் ஒரு கதை சொல்லி அது வெளிவந்தாலும் வெளிவந்தது, நான் மிகவும் பெரிய ஆள் –இல்லையில்லை, பெரிய நாய் ஆகிவிட்டேன்!  இப்பொழுது எனக்குச் சாப்பாட்டுக்குக் குறைவே இல்லை! கதை சொல்லும் நாய் என்று  ஒவ்வொரு தாய்மாரும், தந்தைமாரும் எனக்குக் கொஞ்சம் சாப்பாடு போடுகிறார்கள்!  என் எடைகூட ஏறிவிட்டது.  சொறிகூட கொஞ்சம் குறைந்துவிட்டது.  என்னைப் புகைப்படம் வேறு எடுத்து ஒரு அம்மையார் முகநூலில் போட்டிருக்கிறார் என்றால்  பாருங்களேன்! என் நிறம்கூட கொஞ்சம் மேருகேறியிருக்கிருக்கிறது.

    therunaai

    நன்கு உணவு கிடைப்பதால் தெருவெங்கும் சுற்றி அலைந்த களைப்பு தீர,  என்னால் சிறிது தூங்கி, சிந்திக்கக்கூட முடிகிறது.  அப்படிச் சிந்தித்தபோது என் முன்னோர் நாய் மேற்கொண்டு சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.  அதை நான் சொல்லுகிறேன், கேளுங்களேன்!

    .பஞ்சபாண்டவர்கள், பாஞ்சாலியுடன் எப்படி சொர்க்கத்திற்குச் சென்றார்கள், கடைசியில் தர்மபுத்திரரும், என் முன்னோர் நாயும்தானே மிஞ்சினார்கள் தர்மபுத்திரர் தேவேந்திரனின் இரத்தத்தில் செல்ல முடிவு செய்து அதில் ஏறிக்கொண்டார்.  இரதமும் சொர்க்கம் சென்றது என்று முன்பே சொல்லி இருக்கிறேன்.  அதற்குப் பின்னால் என்ன ஆயிற்று என்று இப்பொழுது சொல்கிறேன்…

    சொர்க்கம் நெருங்க நெருங்க தர்மபுத்திரருக்கு ஒரே உற்சாகம்.  தன் தம்பிகளையும், பாஞ்சாலியையும் அங்கு சந்திக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, அவர்களுடன் என்ன பேசவேண்டும், தங்களைத் தொடர்ந்துவந்த என் முன்னோர் நாய் தனது தந்தையான எமதர்மன்தான் என்று அவர்களிடம் சொல்லி, அவர்கள் முகம் எப்படி மாறப் போகிறது என்பதைக் காணவேண்டும் என்று பலவிதமான எண்ண அலைகளில் மூழ்கினார்.

    மேலும், சொர்க்கம் எப்படி இருக்கும், அது பூவுலகம் மாதிரி இருக்குமா, கதைகளில் வர்ணித்தவண்ணம் இருக்குமா, அல்லது எதிரே பார்க்காதவகையில் தன்னை வியப்பில் ஆழ்த்துமா என்று சிந்தித்துத் தனது மனதில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார், எதற்குமே பரபரப்பு அடையாத தர்மபுத்திரர்.

    கடைசியில் சொர்க்கமும் வந்து சேர்ந்தது.  சொர்க்க வாசல் கதவும் திறந்தது.VLUU L200  / Samsung L200

    அங்கு கண்ட காட்சி தர்மபுத்திரரைத் திகைக்க வைத்தது.

    துரியன் விதம்விதமான, இதுவரை அவர் பார்த்தே இராத, கண்ணைப்பறிக்கும் புத்தாடையை அணிந்திருந்தான்.  ஆடையில் முத்தும், மணியும், மரகதமும், வைரமும், வைடுரியமும், பதிக்கப்பட்டு, தங்க இழைகளும் ஊடாடப்பட்டு இருந்ததால், அவனை ஒரும் ஒளிரும் தெய்வமாகவே காட்டியது.

    தர்மபுத்திரரால் தனது கண்களையே நம்பமுடியவில்லை.

    எனவே, கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு மீண்டும் பார்த்தார்.  அங்கு அழகிய, பொன்னாலான அரியணையில் அமர்ந்திருந்தான் துரியனேதான்.  அவனுக்கு அடுத்த அரியணையில், அட்டணக்கால் போட்டு அமர்ந்து, அட்டகாசமாய்ச் சிரித்துக்கொண்டு இருந்ததும் அவனது இளையோன் துச்சாதனன்தான்.  அடிக்கடி மீசையைவேறு நீவி விட்டுக்கொண்டிருந்தான்.

    தருமரை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை.  தங்கள் பேச்சே அவர்களுக்குப் பெரிதாக இருந்தது.

    தர்மருக்குத் தலை சுற்றியது.

    “அதர்மிகளான, அதர்மத்திற்கே ஆசான்களான, அதற்கு இலக்கணம் வகுத்த இவர்கள் சொர்க்கத்தில் நுழைந்தவுடனே கண்ணில் தென்படுகிரார்களே!” என்று கவலையுற்றார்.

    “ஒருவேளை இது நரகமோ?  நரகமே இப்படி இருந்தால், சொர்க்கம் எப்படிச் சிறப்பாக இருக்கும்!” என்று எண்ணிப்பார்த்து அவர் மனம் வியப்படைந்தது.

    “சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாமல் தேவேந்திரன் தன்னை எதற்கு நரகத்திற்கு அழைத்துவந்திருக்கிறார்?” என்று எண்ணிய தருமர், “விண்ணவர் கோனே!  இது எந்த இடம், சொர்க்கமா, நரகமா?” என்று வினவினார்.

    அவரை வியப்புடன் நோக்கிய தேவேந்திரர், “தருமபுத்திரா!  ஏன் இந்தக் கேள்வி?  நரகத்தின் நாயகன் உனது தந்தையான எமதருமன்தான்!  எமக்கு அங்கு செல்ல அனுமதி இல்லை.  அளப்பிலா இன்பத்தையே நல்கும் எனது சொர்க்கத்தை விடுத்து, உன்னை நரகத்திற்கு ஏன் அழைத்துவரப் போகிறேன்?” என்று சிறிது சினங்கலந்த குரலில் கேட்டார்.

    “துரியனும், அவனது இளையோனும் இங்கு இருக்கிறார்களே, தேவேந்திரரே!”

    “அவர்கள் போரிட்டு மடிந்தார்கள் அல்லவா!  எனவே அவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைத்திருக்கிறது!” என்ற விடை வந்தது.

    “இருப்பினும்…” என்று இழுத்தார் தர்மர்.

    ஏன் என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார் தேவேந்திரன்.

    “அவர்கள் முறையற்ற விதத்தில் போர்செய்தார்களே!”

    “அவர்கள் அடைந்தது மரணம் வீர மரணம்தானே!  அதற்குரிய நற்பலன் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது!”

    வாயை மூடிக்கொண்டார் தருமபுத்திரர்.

    திருதராடிரனின் மைந்தர்களான கௌரவர்கள் நூறு பேரும் சொர்க்கத்தில், சுகத்தை அனுபத்துக்கொண்டு, ஆனந்தம் காண்பது அவருக்குக் குழப்பமாகவே இருந்தது.  சகுனிகூட அங்கு காணப்பட்டான்.  ஆயினும் கர்ணன் அங்கு காணப்படவில்லை.

    எனவே, தேவேந்திரனிடம் வினவினார் தர்மர்.  “விண்ணவர் கோனே!  வீரமரணம் அடைந்தவர்கள் என்று சொல்லப்பட்ட கௌரவர்கள் அனைவரையும் இங்கு காண்கிறேன்.  ஆயினும், அவர்கள் பக்கம் கடைசிவரை நின்ற — வீரத்தில் நிகரற்ற என் தமையன் — கதிரவனின் மகனான கர்ணன் இங்கு இல்லையே, ஏன்?”

    “அவன் கௌரவர்களைப் போன்று ஒரு கொள்கைக்காக, சத்திரிய நெறிக்காகவா போரிட்டு மடிந்தான்?  அருச்சுனன் மேல்கொண்ட வெறுப்பினால் எண்ணற்ற தவறுகளை, அறமில்லாச் செயல்களை அல்லவா செய்தான்! அவன் கொடுத்த தைரியத்தில்தானே துரியன் அடாத செய்கைகளைச் செய்ய முனைந்தான்!  அதுமட்டுமா!  தீயில் உதித்த பாஞ்சாலியை வேசி என்றும், அவள் துகிலை உரியவேண்டும் என்று துரியனைத் தூண்டியதும், துரியனை தீநெறிக்குச் செல்ல வழிவகுத்ததும் அவன்தானே! தவறு செய்பவனைவிட தவறு செய்யத் தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்!”  தேவேந்திரரிடமிருந்து வெடித்துச் சிதறின சொற்கள்.

    “என் இளையோர்களான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், எங்கள் மனைவியான பாஞ்சாலி – இவர்கள் எங்கே?  அவர்களை நான் பார்க்கவேண்டும்!”  தருமரின் குரலில் இருந்த அழுத்தம் தேவேந்திரரையே ஒருகணம் அதிரச் செய்தது.

    தருமரை ஏறஇறங்கப் பார்த்துக்கொண்டே, “அவர்கள் இங்கு இல்லை!” என்று மெதுவாகக் கூறினார் தேவேந்திரர்.

    “இல்லையா?  பின் எங்கே?”  தருமர் குரலில் சிறிது உஷ்ணம் இருந்தது.  “எனக்கு உடனே தெரிந்தாகவேண்டும்!”

    “அவர்களுக்கு இப்போது இங்கு இடமில்லை, தர்மா!  உனக்குத்தான் இங்கு முழு இடம்!  இங்கு இருக்கும் எல்லா சுகபோகங்களையும் நீ அனுபவித்துக்கொண்டு காலங்காலமாக இங்கு இருக்கத் தடையில்லை!”

    “மழுப்பல் வேண்டாம், விண்ணவர் கோனே!  அவர்கள் எங்கே என்று எனக்குத் தெரிந்தாகவேண்டும்!”

    தருமரின் கோபம் தேவேந்திரரையே திணற அடித்தது.

    மென்று விழுங்கிக்கொண்டு, “அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள்.  உன்னை அங்கு அழைத்துச்செல்ல எனக்கு அனுமதி இல்லை.” என்ற தேவேந்திரர் தலையைக் குனிந்துகொண்டார்.

    “அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை, விண்ணவர் கோனே!  நான் நரகத்தின் நாயகரான எமதர்மராஜனின் மகன்.  நீங்கள் சொல்லும் சமாதானத்தில் —  துரியனும் அவன் உடன்பிறப்புகளும் வீரமரணம் அடைந்ததால் வீரசொர்க்கம் அடையத் தக்கவர்கள், ஆனால் வீரத்தின் விளைநிலமான என் உடன்பிறப்புகள், மாவீரன் சாத்தகி முதலானோருக்கு வீரசொர்க்கம் இல்லை என்பதில் –- எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

    “போர் முடிந்ததும் என் அன்னை குந்தி தேவியார் என்னைக் கர்ணனுக்கும் நீத்தார் சடங்கு செய்யச்சொல்லி, அவன் எனக்குத் தமையன் என்பாதை விளக்கினார்.  என் நண்பர்கள், உடன்பிறப்புகள் இல்லாத சொர்க்கம் எனக்குத் தேவை இல்லை.  இது அறநெறி கொண்டு ஒழுகுவோர் ஏகும் சொர்க்கபுரி அல்ல.  என்னைபொருத்தவரை இது நரகமே. என் உடன்பிறப்புகளும், மனைவியும் இல்லாத இந்த சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம்.  அவர்கள் இருக்குமிடத்தைச் சொல்லி, அங்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்!  நான் இதுவரை பின்பற்றிய என் அறநெறியின்மீது ஆணை! என்னை யார் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல இயலுமோ, அவரை உடனே இங்கு தருவழையுங்கள்!”

    தருமரின் தாங்கொணாச் சினம் தேவேந்திரரையே நடுங்க வைத்தது.

    dharmar in hell hell 1

    அவர் ஒரு எமதூதனை சொர்க்கத்தின் வாசலுக்கு வரவழைத்து, தருமபுத்திரரை அவனுடன் அனுப்பி வைத்தார்.

    கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் அவனுடன் நடந்து சென்றார் தருமர்.

    இருண்ட ஒரு நிலப்பரப்பை அவர்கள் அடைந்தனர்.

    அங்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்ட, தலையில்லாத முண்டங்களும், அவற்றிலிருந்து பெருகி ஓடும் குருதி ஆறும் நிரம்பி இருந்தன. சித்திரவதைப்படும் ஜென்மங்களின் கூக்குரல் ஒலி காதுகளைக் கிழித்தது.  நிண நாற்றமும், முடை நாற்றமும் மூச்சை முட்டியது.  உயிருடன் இருக்கும் ஆடையற்ற மனிதர்களை — அவர்கள் கதறக் கத –, கூரிய பற்கள் உடைய — மனதினால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்குப் பயங்கரமான, கொள்ளிக்கண்களை உடைய பிராணிகள் கடித்துத் தின்றுகொண்டு இருந்தன.  கழுகுகளும், கோட்டங்களும், நரிகளும், ஓநாய்களும் இடும் ஓலம் அந்த இடமெல்லாம் எதிரொலித்தது.

    விசித்திரமான உடலையும், இறக்கைகளையும், ஒளிரும் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே தெரியும் உடலும் உள்ள ஜந்துகள் விர்,விர்ரென்று அங்குமிங்கும் இதயத்தை நடுங்கவைக்கும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு பறந்தன.  அவை அருகில் வரும்போது பிணவாடை வீசி, வயிற்றைப் புரட்டியது.

    வெப்பக்காற்றினால் உடலெங்கும் வேர்வை பெருகியது.

    hell 2

    “அண்ணா, அண்ணா!” என்றும், “தம்பி, தம்பி!” என்றும், “,ஐயனே, அறநெறியின் குலக்கொழுந்தே என்னவரே!!” என்றும் அவருக்கு மிகவும் பழக்கமான குரலில் பரிதாபமான ஓலங்கள் கேட்டான்.

    “யார்?”  அவரையும் அறியாமல் தருமரின் வாய் ஒலி எழுப்பியது.

    “நான்தான் அண்ணா பீமன்!”

    “நான் அருச்சுனன்!”

    “நான் நகுலன், இவன் சகாதேவன்!”

    “ஐயனே, நான்தான் உங்கள் பாஞ்சாலி!”

    “யுதிட்டிரா, நான்தான் கர்ணன்!”

    குரல்கள் சேர்ந்து ஒலித்தன.

    தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் தருமர்.

    மெல்ல எழுந்து, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

    hell 3

    ஒருவர் பின் ஒருவராக, அங்கு சிதறிக்கிடக்கும் பிணக் குவியல்களுக்கு நடுவிலிருந்து மெல்ல எழ ஆரம்பித்தனர் அறுவர்.  அங்கு சிந்திக் கிடக்கும் செங்குருதிச் சகதியில் பலமுறை வழுக்கி விழுந்து, எழுந்து நின்றனர்.

    அவர்களைக் கண்டு திகைத்து நின்றுவிட்டார் தருமர்.

    தான் அவர்களை முன்பு பார்த்தபோது இருந்த அழகு எங்கே, கம்பீரம் எங்கே, வீரம் எங்கே?  எலும்புக்கூட்டுக்குத் தோலைப் போர்த்தியது போல இருக்கும் இவர்களா தமது உடன்பிறப்புகள்?  அழகுக்கே இலக்கணமான பாஞ்சாலியா இவள்?  ஒரு தடவை கண்டாலே வாழ்நாள் முழுதும் கிறங்கவைக்கும் அழகுடைத்த இவளா இப்படி அவலட்சணமாக, ஒருமுறை பார்த்தாலே முகத்தைத் திருப்பிக்கொள்ளும் அளவுக்குக் கோரமாகக் காட்ச் அளிக்கிறாள்!

    இது நிஜமா, அல்லது தனது மனமே நரகத்தின் குழப்பத்தால் சித்துவிளையாட்டு விளையாடுகிறதா?

    தன்னுடன் வந்த எமதூதனைப்பார்த்து புருவத்தை உயர்த்தினார்.

    “தர்மப் பிரபுவே!  இவர்கள் உங்கள் அண்ணன், தம்பிகள், மனையாட்டிதான்!” என்று பணிவாகப் பதில் வந்தது.

    கல்லாய்ச் சமைந்து நின்றுவிட்டார் அவர்.

    “ஏன்?” பெரிதாக வெடித்தது அவர் குரல்.

    “இந்த அநீதியை நான் பொறுக்கமாட்டேன்.  நான் இதுவரை பின்பற்றிய அறநெறி உண்மை என்றால் – நல்லோர்கள் நற்கதி அடைவார்கள் என்பது உண்மை என்றால் – இங்கு இவர்கள் இப்படிப்பட்ட கொடிய நரகத்தில் உழலுவது அறநெறியே அல்ல!  என் வாழ்நாளில் நான் கடைப்பிடித்த தருமத்தின் மீது ஆணையிடுகிறேன்!  இந்த அநீதியைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி – எந்தக் கடவுளர்களாக இருந்தாலும் சரி – அவர்களுக்கு எமதர்மராஜனின் மகனான நான் ஒரு சாபத்தை…..”

    அவரது வாயைப் பொத்தியது ஒரு கரம்.

    yudhisthira_passes_the_test

    தருமர் தலையைத் திரும்பிப் பார்த்தால்….

    தேவேந்திரர் நின்றுகொண்டிருந்தார்.  அதுமட்டுமா?  தருமரின் தந்தை எமதர்மராஜன், சிவன், பிரம்மா, விஷ்ணு, மாருத், அஸ்வினி தேவதைகள், இன்னும் பல தேவர்களும், கடவுளர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.  கொடிய நரகம் மறைந்து, இனிய சொர்க்கம் தோன்றியது.

    “அறநெறியின் உறைவிடமான நீ இப்படிக் கோபம் கொண்டு சபித்தால், சொர்க்கம், நரகம் எல்லாம் அழிந்துபோய்விடும்.  மாந்தர்களின் அதர்மத்தைக் கட்டுப்படுத்த இயலாது போகும்.” என்று திருவாய் மலர்ந்து அருளினார் இறைவனான உருத்திரன்.  எமதர்மனை அவர் பொருட்செறிவுடன் பார்த்தவுடன், அவர் பேச ஆரம்பித்தார்.

    “மகனே தர்மா!  நீ இதுவரை கண்டது ஒரு மாயத் தோற்றமே!  உன் உடன்பிறப்புகளோ, மனைவியோ, உனக்காக அறத்தை நிலைநிறுத்தப் போரிட்ட எவருமோ நரகத்தில் இல்லை.  அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.”

    “பின் ஏன் தந்தையே, எனக்கு இப்படிப்பட்ட மாயத்தோற்றம் காண்பிக்கப்பட்டது?”

    “உனது ஆசானான துரோனாச்சரியாரை வீழ்த்த, நீ ஒரு பொய்த்தோற்றத்தைக் கற்பித்து மயங்கி நிற்கச் செய்தாய் அல்லவா!  அந்தப் பொய்த்தோற்றத்தை உருவாக்கியதற்காகவே உனக்கு முதலில் நரக வேதனையும், உன் உடன்பிறப்புகள், மனைவி, உற்றார்கள் நரகத்தில் உழளுவதுபோன்றதுமான ஒரு பொய்த்தோற்றம் காண்பிக்கப்பட்டது.

    “உன் உடன்பிறப்புகளும் அறநெறியை நிலைநிறுத்த, போர்நெறியை மீறினர்.  பாஞ்சாலியின் சபதத்தினால் பீமன் போர்நெறியை மீறி, துரியனின் தொடையைப் பிளந்து கொள்ள நேரிட்டது. எனவே சிறிது நேரம் அவர்களும் நரகத்தில் உழல நேரிட்டது.  இனி அவர்கள் சொர்கத்தில்தான் காலம் கழிப்பார்கள்.  வீர மரணம் அடைந்ததால் கௌரவர்கள் முதலில் சிலகாலம் சொர்க்கத்தில் இருந்துவிட்டுப் பின்னர் அவர்களின் தீச்செயல்களுக்காகக் கடும் நரகத்தில் நீண்டகாலம் வாடுவார்கள்.  .

    “ஒருவர் அதிகமாய்ச் செய்த நற்செயலுக்கோ, அல்லது தீச்செயலுக்கோ உள்ள பயனை அவர்கள் பிற்காலத்திலேதான் அனுபவிப்பார்கள்.  அறத்தை அதிகமாகச் செய்பவர்கள் வெய்யிலுக்குப்பின் நிழல் போல துன்பத்திற்குப்பின் நல்லின்பத்தையும், தீச்செயலுக்குத் துணைபோகிறவர்கள், தாம் செய்த சில நற்செயலுக்காக சிறிதுகாலம் இன்பம் துய்த்துவிட்டுப் பிறகு கொடுமையான நரகத்திலும் உழல்வார்கள். இதுவே அறநெறியின் விதியாகும்.

    “செல், மகனே, செல்!  சொர்க்கத்தில் உன்னை எதிர்நோக்குபவர்களுடன் இனிதுவாழச் செல்!” என்று ஆசி நல்கினார்.  இனிய இசை முழங்கியது…

    …”சனியனே!  நடு ராத்திரியில் ஏன் ஊளையிடுகிறாய்?”  என்ற ஆதட்டலைத் தொடர்ந்து ஒரு கல் என் மீது விழுந்தது.  துடித்து எழுந்தேன் நான்.

    போதும் சாமி, போதும்.  உங்களுக்கு சொர்க்கத்தைப்பற்றி கதை சொல்லிச் சொல்லி, கல்லெறி வாங்க முடியாது சாமி!  நான் கதை சொல்வது சிலர் காதில் ஊளையாகக் கேட்டால் அதற்கு நான் என்ன சாமி செய்ய முடியும்?  நான் இனி தூங்கினால் போலத்தான்!  ஆளை —  இல்லையில்லை, இந்த நாயை விடுங்கள் சாமி!  நான் என் பிழைப்பை பார்க்கப் போகிறேன்!”

    **************************************

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • சுமையென்று நினைத்து . . .

    வில்லவன் கோதை

    நாட்டு ஓடு வேயப்பட்ட அந்த வீடு அழுக்கேறிக் கிடந்தது.

    மரச்சட்டங்களால் தடுக்கப்பட்டிருந்த அதன் கதவுகளில் பழமையான பூட்டு ஒன்று  தொங்கிக்கொண்டிருந்தது.

    தயங்கித் தயங்கி அந்த வீட்டின் முன் நிற்கிறான் கார்த்தி.. இத்தனைக்கும் அவன் பிறந்து வளர்ந்த வீடுதான். இன்று அவனுக்கே அன்னியமாக தோன்றுகிறது.

    நடுத்தர வயதைக்கடந்த  மெலிந்த  பெரியவர் ஒருவர் குறுக்கிடுகிறார்.

    “வாத்தியார்  வைரமுத்து …”

    கார்த்தி வாக்கியத்தை முடிக்கவில்லை.

    “ஆமா தம்பி. .இப்ப அவுரு இல்லீங்க .கொஞ்ச நாளைக்கு முன்னால தவறிட்டாருங்க.“

    பெரியவரின் பதில் கார்த்தியின் உடலிலும் உள்ளத்திலும் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

    அப்ப  அவுரு பொண்ணு.

    “பாப்பாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சிங்க. மாப்பிள்ள கும்மோணம் பேங்ல செக்குரிட்டியா இருக்கிறதா கேள்வி.  வாத்தியாரு கல்யாணம் முடிஞ்சி  கொஞ்ச நாள் இங்கதான் இருந்தாருங்க.அப்ரம் பாப்பாவே கூட்டிகிட்டு போயிடுச்சிங்க..  நீங்க. தம்பி …“

    முதன் முறையாக வாத்தியாரின் மூத்த பிள்ளை என்று சொல்லிக்கொள்ள அவன் நா  தடுமாறுகிறது.  அப்படி ஒன்றும் கார்த்தி தப்பானவன் இல்லை.

    “தெரிஞ்சவுங்க..”

    “ வடக்குத்தெருவுல சீனுவாசன் டாக்டர் வீட்டுக்கு நேர் எதிர்வீடு. போனா பாப்பாவ பாக்கலாமுங்க. “

    கார்த்திக்கு தெரியாமல் நிகழந்துபோன தகவல்களை தொட்டுக்காட்டிய பெரியவர் நகர்கிறார்.

    நெஞ்சில் ஒரு இனம் புரியாத படபடப்பு. அவன் நினைவுகள் பின்னோக்கி அலசுகிறது.

    கடைசியாக அப்பாவையும் இழந்துவிட்டேன். அன்று நான் செய்த முடிவு என்னைப்பொறுத்தவரை தவறென்று தோன்றவில்லை. இருந்தும் இன்று இந்த மஞ்சுவைக்கூட  எதிர் கொள்ள போதுமான துணிவு எனக்கு ஏன் ஏற்படாமற்போயிற்று.

    இருபது வருஷம் கழிந்தபின்னும்  ஏன் இந்த குற்ற உணர்வு   !  மன உருத்தல். !

    சொற்ப வருமானத்தில் போராடிக்கொண்டிருந்த அப்பாவை உதறி நான் ஓடியிருக்கக்கூடாது.

    கனவுகளோடு கல்யாணத்தை உறுதி செய்து கொண்டிருந்த அந்த புதுப்பெண் , தீராத நோயுற்ற அம்மா  , அடுத்த பத்து வருஷத்தில் கரைசேற்க வேண்டிய தங்கை…

    நான் பொறுபற்று திரிந்தபோதும்  ஓய்வின்றி உழைத்து எங்களைச்சுமந்தவர் அப்பா. அம்மாவின் முடிவற்ற மருத்துவச்சுமைக்கிடையே என்னை முதுகலை பட்டாதாரி ஆக்கி மகிழ்ந்தவர்.

    தான் சுமக்கும் சுமைக்கு காலப்போக்கில் இவன் ஒரு சுமைதாங்கியாக இருப்பான் என்று நினைத்திருப்பாரோ என்னவோ.

    அவரை தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றிவிட்டேன்.

    அவர் தேடித்தந்த பலவேறு வேலைகள் அன்று என் கவுரவத்துக்கு இழுக்காக தோன்றிற்று.

    ச்சே ! என்ன காரியம் செய்தேன்.

    கார்த்திக்கு நினைவெல்லாம் கசந்தது.

    அன்று மனைவி உடல் மோசமடைய கார்த்திக்கு  கால்கட்டு போட நினைத்தார் வைரமுத்து வாத்தியார்.

    பெண்ணுக்கொன்றும் குறையில்லை. கார்த்திக்குகூட சம்மதம்தான். ஆனால் பெண்ணின் வயது முதிர்ந்த பெற்றோர் அவன் நினைவுகளில் இடறினர். அவர்களையும் சுமக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால்     என்ன செய்வதென்ற ஒரு அதீத கற்பனை.  கிடைத்திருக்கிற வாழ்க்கையில் சுமையின்றி சுதந்திரமாக பறக்கவிரும்பியவன். அதுதான் அவனுக்கு முக்கியம்.இந்த உறவுக்கு அவன்  தயாராயில்லை. .

    “ நம்ம குடும்பத்துக்கேத்த நல்ல பொண்ணுடா. ஒன்ன நம்பி நிச்சியம்கூட  பண்ணிட்டேன்..இதில ஒனக்கு இஷ்டமில்லேண்ணா அத்தோட உட்டுடு. அப்ரம் என் மொகத்தலயே விழிக்காதே. “

    தன் கனவுகள் தன் கண்ணெதிரே நொறுங்கிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையில்  விருட்டென்று எழுந்து கொல்லைபுறம் போகிறார் அப்பா.

    கல்யாணம் என்பதையே கால்கட்டு என்றுதானே சொல்கிறார்கள். அந்த கட்டை தானே போட்டுக்கொள்ள விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறி அன்று இரவில் சென்னைக்கு ரெயிலேறுகிறான் கார்த்தி

    பையன் யாரையோ லவ் பண்ணியிருக்கான். அதான் விட்டுட்டான் சவாரி !

    ஊரே கூடிக்கூடி பேசியிருக்கும். அப்பா முகம் எப்படி இருந்திருக்கும்.

    இந்த தேசத்தின் வரைபடங்களில் மட்டுமே அறிந்திருந்த  பல்வேறு பிரதேசங்களில்  நாயாக அலைந்து  இறுதியில் கொல்கத்தா நகரில் ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தில் அடைக்கலமாகிறான்.. அதுவரை அவன் சந்தித்த துயரங்கள் கேட்க சகிக்காதவை.

    இருபது  வருடம்கள் முடிந்து போனது.

    நாடெங்கும் சுற்றிய கார்த்தி இந்தமுறை ஒரு சுற்றுலா குழுவினரோடு தமிழகம் வந்தபோது அவன் நெஞ்சில் புதைக்கப்பட்டிருந்த நினைவுகள் அவனை இங்கே இறக்கிற்று.

    வெளி வராண்டாவில்  இந்து யாரிடமோ பேசும் குரல் கேட்டு வெளியே வந்தாள் மஞ்சுளா.

    “மஞ்சுளா அம்மா வீடு இதுதானேண்ணு இந்த மாமா கேட்டார். மஞ்சுளா வீடுதான் இது. அவுங்க அம்மா வீடுல்லண்ணு சொன்னேன். “

    வீட்டுப்பாடங்களை செய்துகொண்டே பதிலளித்தாள் இந்து. பத்து வயது இருக்கக்கூடும். மீண்டுமொருமுறை காணவிரும்பும் வசீகரமான சிவந்த முகம். துருதுருவென்ற பார்வை.

    தோளில் கருப்புப்பையொன்றை மாட்டியவாறு  கலைந்த முடியோடு நின்றிருந்த அந்த இளைஞனைப்பார்த்தும் இனம் புரியாத குழப்பமும் அதைத்தொடர்ந்து எதிர்பாராத வியப்பும் அடைந்தாள் மஞ்சுளா.ஏறத்தாழ தன்னையொத்த சாயலில் அவன் இருப்பதை உணர்ந்து அவள் அறியாமல் உடலெங்கும் மகிழ்ச்சி அலைகள் பரவின.

    அவனுக்கும் அதே மாதிரியான மனநிலைகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

    “வா ண்ணா ! “

    அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிய மஞ்சுளா அண்ணனை வரவேற்றாள். உள்ளே  நுழைந்த கார்த்தி  கைப்பையை கீழே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

    இந்துவுக்கு நடப்பது வித்தியாசமாய் தெரிந்தாலும் அவள் வீட்டுப்பாடத்தில் லயித்திருந்தாள்.

    “நல்லாருக்கியா அண்ணா  “

    எதிர் இருக்கையில் அமர்ந்த மஞ்சு பேச்சைத்துவக்கினாள்.

    கார்த்தி நா வரண்டுபோனதை உணர்ந்தான் .எந்த சொற்களும் அவனிடமிருந்து வெளியேறவில்லை. குளிர்ந்த நீரை ஒரு டம்ளர் நிறைய கொண்டுவந்து வைத்தாள் மஞ்சுளா.

    “இருபது வருஷத்ல ஒனக்கு எங்க நெனைப்பு ஒருதடவகூட வரல. அப்பா அன்னிக்கு அவரது இக்கட்டான சூழல்ல சொன்ன ஒரு வார்த்த ஒனக்கு பெரிசா போயிடுச்சி. அவர் கடைசிவரைக்கும் நீ வருவே வருவேண்ணு ..  போ . . ண்ணா ! “

    ஆத்திரமும் அழுகையும் பீரிட்டு வெளியேறுகிறது. நெஞ்சுக்குழியில் ஏதோ அடைப்பதை உணர்ந்தாள் மஞ்சுளா.

    துக்கத்தை மறைத்து அடுக்களைக்குள் நுழைந்த மஞ்சுளா .. .

    “அன்னிக்கு நிச்சியம் பண்ண  பொண்ணு நெலய நீ நெனச்சி பாத்தியா. ஊரே அப்பா மொகத்ல காரி துப்புச்சி. “

    அடுப்பிலிருந்த பாலை இறக்கி பில்டரில் இருந்த  டிகாஷத்தை சர்க்கரையோடு அளவாக கலந்து அண்ணனுக்கு முன்னாலிருந்த  மோடாவில் வைக்கிறாள்.

    காபியின் மணம் அந்த அறையை நிறைக்கிறது. கார்த்தியின் குற்ற உணர்வு அந்த மணத்தை விழுங்குகிறது.

    வலதுகையால் முகத்தைத் தாங்கியவாறு  பதில் ஏதும் பேசாமல் இருக்கையில் இருந்தான்  …

    “நீ போயி பத்து நாளைக்கெல்லாம் அம்மா போயிட்டாங்க. பெத்த பெண்ண எப்டி கரைசேர்க்கபோறோம்ங்ற பயம் அப்பாவுக்கு. அப்பாவோட ப்ரண்ட் மூலமா வந்த இவர்தான் எங்கள இக்கட்டான சூழல்லேயிருந்து விடுவிச்சார்.

    “அதுமட்டுமல்ல.  அப்பா படுத்த படுக்கையா போனப்ப ஒண்டரை வருஷத்துக்கு மேல அவர் செஞ்ச பணிவிடைகள்  கொஞ்ச நஞ்சமல்ல.அந்த விஷயத்ல அப்பா குடுத்து வெச்சவர்தான். அவருக்கு எந்த கஷ்டமும் தெரியாம  கடைசிவரைக்கும் அவருக்கு தொணையா இருந்தார்.

    இப்படியொரு புருஷன் எனக்கு கெடக்கிறதுக்கு நான் பாக்கியசாலிதான். இந்த குடும்பத்ல மூத்தவனா பொறந்த நீ பெத்து வளர்த்த  அப்பா ஏதோசொல்லிட்டாருண்ணு ஓடிப்போயிட்ட.

    எல்லாம் முடிஞ்சிபோனபிறகு இப்ப ஏண்ணா வந்த..யாராவது உசிரோடு இருக்காங்களாண்ணு பாக்கவா .இல்ல நீ உசிரோட இருக்கிறத காம்பிக்க வா.  “

    கண்களில் நீர் கொப்புளிக்க  எதிர் இருக்கையில் அமர்கிறாள்  மஞ்சுளா.

    “அப்பா சாகிற வரைக்கும் ஆபீசுலயும் வேல பாத்துகிட்டு ராப்பகலா கண்விழிச்சி . . . . அவர் ரொம்ப பாவம்ண்ணா. போன ஜன்மத்ல அவருக்கு புள்ளையா பொறந்து ஒன்னாட்டம் ஓடிட்டாரோ என்னவோ . “

    கார்த்தியின் கண்கள் கலக்கமுற்று கண்ணீரீரை வெளியேற்ற முயன்றது. முகத்தை தாழ்த்தி கட்டுப்படுத்த முயன்றான்.

    “சரி! காப்பிய குடிச்சிட்டு வா.  வென்நீர் போட்ருக்கேன்.குளிக்கலாம் “

    கலங்கிய கண்களை புடவைத்தலைப்பால் அழுந்த துடைத்துக்கொண்டே உள்ளே போனாள் மஞ்சுளா.

    தங்கையின் பேச்சைக்கேட்கக்கேட்க  கார்த்திக்கு ஓருபக்கம் தன்மீதே வெருப்பாகவும் இன்னொருபக்கம் மஞ்சுவை பார்க்க பார்க்க  வியப்பாகவும் இருந்தது

    மஞ்சுவா இப்படி பேசுகிறாள். காலம்தான்  மனிதர்களை  உடலாலும் உள்ளத்தாலும் எத்தனை எளிதாக பக்குவப்படுத்துகிறது.

    குளியலறைக்குள்  நுழைந்த கார்த்தி உடல் அசதி தீர குளித்தான். உள்ளத்தில் ஊறிக்கிடந்த நெடுநாள் குழப்பங்கள்  ஓரளவுக்கு வெளியேறியதை உணர்ந்தான்.

    தன்னுடைய பொறுப்பற்ற தன்மையும் எங்கிருந்தோ வந்த ஒருவனின் அசாத்திய பண்புகளையும் எண்ணிப்பார்த்தான். தான் கற்றிருந்த உயர்கல்வி தனக்கு இதை எள்ளளவும் போதிக்கவில்லை  என்ற எண்ணமே ஓங்கிற்று.

    “இந்து ! மாமாவுக்கு டவல் கொண்ட குடு. “

    அடுக்களையிலிருந்து குரலெழுப்பினாள் மஞ்சு.

    “ஒனக்கு இப்பிடியொரு அண்ணன் இருக்கிறதை இதுவரை சொல்லவே இல்லியே“

    என்றவாறே புதிய டவல் ஒன்றை கொண்டுபோனாள் இந்து.

    “சொல்ற மாதிரியா அவன் நடந்துகிட்டான்  ! “

    மெல்ல முணுமுணுத்த படியே  கார்த்திக்கு சுடசுட உணவு பரிமாரினாள் மஞ்சு.

    “ஒன் பொண்ணு ஒன்னாட்டம் ரொம்ப சமத்தா இருக்காளே !  இன்னிக்கு சண்டேதானே. அத்தான் எங்க போயிருக்கார். “

    முதன் முறையாக சாப்பிடுவதற்குமுன் வாயைத்திறந்தான் கார்த்தி.

    “அவுரு  மேனேஜரோட ஹெட் ஆபீசுக்கு கேம் போயிருக்கார். நாளை காலேலதான் திரும்புறார். “

    “எங்க ட்ராவல்ஸ் கோச் ஈவினிங் கும்பகோணம் வருது.அதுக்குள்ள நான் போயிடணும். “

    “நாளைக்கு இருந்து அவர பாத்துட்டு போ அண்ணா. அவரு ரொம்ப சந்தோஷப்படுவார். “

    ‘’இல்ல மஞ்சு .இன்னும் மூணுமாசத்துக்குள்ள  நான் சென்னைக்கு மறுபடி வருவேன்..  அத்தான் கிட்ட சொல்லு. அவர் மொகத்ல விழிக்கக்கூடிய தெம்பு எனக்கு மொதல்ல வரணும்.”

    அவனுக்கு பிடித்தமான வத்த கொழம்பையும்  கத்தரிக்காய் வருவலையும் நெடு நாட்களுக்குப்பிறகு தங்கை கையால் சாப்பிட நேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தான்.

    மஞ்சுவால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. அவனை பார்த்த இந்த தருணங்களே அவளுக்கு பெரிதாயிருந்தது.

    “மஞ்சு ஒன் கல்யாணத்துக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணம். இது .இந்துவுக்காவது ஒபயோகமா இருக்கட்டும். “

    அய்ந்து லட்சத்துக்கான ஒருகாசோலையை மஞ்சுவின் பெயரெழுதி இந்துவிடம் கொடுத்தான் கார்த்தி.

    “மாமா ஒரு நாள் இருங்க மாமா. “

    “நிச்சியமா இன்னொருமுறை வர்றம்மா. “

    கண்கலங்க விடை கொடுத்தாள் மஞ்சு.

    சந்தோஷம் என்பது  பொறுப்பற்று திரிவதில் இல்லை. சகமனிதர்களிடம்  அன்பை பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறதென்பதை கார்த்தி உணர்ந்து கொண்டான்.

    உறவுகளும் நட்புகளும் ஏற்பட்டிருப்பது அதற்காகத்தான்.

    Share