உடன் எரியும் கவிதைகள்
எஸ் வி வேணுகோபாலன்
எத்தனையோ அர்த்தமற்ற தொடர் அலுவல்களில் அவரை மறந்தே போயிருந்தேன். அப்போது தான் அந்தக் கடிதம் வந்தது. பவழவண்ணன் மிகவும் சுகவீனம் அடைந்ல்;]’திருப்பதாகவும், என்னை உடனே பார்க்க விரும்புவதாகவும் அவரது சகோதரி எழுதியிருந்த கடிதம் அது. அச்சு அசலாக அண்ணன் கையெழுத்து போலவே இருந்தது. இரவே புறப்பட்டேன். மறு நாள் அவரது வீட்டை நோக்கிச் சென்றவன், வாசலில் சூழ்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துக் கலங்கிப் போனேன். பவழவண்ணன் போய்விட்டார். அடக்கமாட்டாது குமுறியபடி வேகமாக உள்ளே நுழைந்தேன்..ஓர் எளிய கவிஞனின் அகால மரணம் என்னைக் கொன்று தின்றது.
வாசலில் காத்திருந்த கூட்டத்தில் கவிஞர்கள் அதிகம் தென்படவில்லை. அவரது பள்ளிக்காலத் தோழர்களும், அண்டைத் தெரு சகாக்களும் சூழ்ந்திருந்தனர். மூங்கில் வந்து இறங்கி இருந்தது. சேகண்டி ஒலியும், அடி வயிற்றிலிருந்து எடுத்த காற்றை நிரப்பி ஊதிய சங்கின் கூவலும் கண்ணீரைப் பெருக்க வல்லதாக இருந்தது…
‘யே..அப்பா…ஒப்பிலா மணியே..கண்ணே, முந்தை விதிப் பயனோ, சாபம் எதுவோ நானறியேன் தம்பிரானே ..’ என்று சொல்லியவாறு கருத்த ஒரு ஆள் மீண்டும் சேகண்டி அடிக்கவும், இதெல்லாம் அங்க மசானத்துல வச்சுக்கப்பா..இங்க ஓதற வளக்கமில்ல..மனுசாளு குடியிருக்கற வீதின்னு தெரிய வேண்டாம்? என்று பெரியவர் ஒருவர் தடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் சட்டியிலிருந்து புகை பரவிய திசையில் பவழவண்ணன் குறித்த சிந்தனைகளில் ஆழ்ந்தேன்.
பவழவண்ணனை இலக்கிய சிந்தனை மாதாந்திரக் கூட்டத்தில்தான் முதன்முதல் சந்தித்தேன். அது எழுபதுகளின் பிற்பகுதி. ஒரு ஜோல்னாப் பை. தலையை அழகாக வாரிக் கலைத்தது மாதிரி முடி. அவர் கவிஞர் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் கண்டு பிடித்தேன். இதற்கு பெரிய யோகக் கலை எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த இளம் வயதில் கவிதை மீது பித்துப் பிடித்த ஆசாமிகளை அவர்களது பார்வை, தோரணை, பழகும் விதம் இவற்றில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். அநாயாசமாகத் தங்களது கவிதை வரிகளை எடுத்து விடுவார்கள்…தப்பிக்க முடியாதபடி கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திணிப்பார்கள், அது ஒரு பழைய வருஷத்து டயரியாக இருக்க எண்பது சதவீத சாத்தியங்கள் உண்டு. ஆனால் பவழவண்ணன் இந்த இலக்கணங்களையும் கடந்தவராக இருந்தார்.
அவரது நினைவாற்றல் அசாத்தியமாக இருந்தது. ‘முச்சங்கப் புலவர் முதல் முந்தா நாள் புலவர் வரை, இச்சை மதுவெனவே எண்ணிக் குடித்ததிலே மிச்சம் மிகுதியுள்ள முத்தமிழ்ப் பால் அருந்திக் கொச்சைக் கவி பாடும் பச்சைக் குழந்தை நான்…’ என்றார். ‘அருமையான கவிதை’, என்றேன்.
“வாலி சார், கவிஞர் வாலி…நீங்க விகடன்ல வாரா வாரம் வரும் அவரது கவிதைகளை வாசிப்பதில்லையா..” என்றார். நான் அசந்து போனேன். அடுத்தவர் கவிதைகளை ரசனையோடு சொல்லிக் காட்டித் தான் எனது நட்பு வட்டத்திற்குள் நுழைந்தார். சிறுகதைகளை விடவும் நாவலை விடவும் அவரது உயிர் கவிதையில் இருந்தது. ஆனால் அவரது கவிதை உலகம் மிகவும் பரிதாபமாக ஒலித்தது.
பனகல் பூங்காவில் வைத்து அவரது இதயத்தை என் முன்பாகத் திறந்து வைத்தார் ஒரு மாலை நேரத்தில். முதல் பாகம் கடவுள் வாழ்த்துக்களால் நிரம்பி இருந்தது. சரளமாக தேவார, திருவாசக, திருப்பாவை அடிகளை எடுத்தாண்டிருந்தார். எனது முக பாவத்திலிருந்து என் உள் ஓட்டத்தைப் பிடித்துவிட்டார்.
“சார், இதெல்லாம் ஆரம்பக் காலத்தில் பயிற்சிக்காக எளுதிப் பார்த்தது. தமிழ் ஆசிரியர் இராசகோபாலனார் தான் எதுகை மோனை எல்லாம் கட்டமைச்சுத் தந்தாரு….அரி, பரி, கரி, திரி…என்று வரிசைப் படுத்தி கடைசிப் பக்கத்தில் எளுதி வச்சிருவேன் ..டக் டக் என்று தேவையான சொல்லைப் பொருத்தமான எடத்துல எடுத்துப் போட்டிருவேன் . பவளம் போல் மேனியான் என்ற வரியின் அடுத்த அடியில் பாருங்க, கவளம் என்று போட்டு யானையைக் கொண்டு வந்து இணைச்சதிலே சாரே அசந்து போய்ப் பாராட்டினாங்க..” என்றார்.
கடவுள் அருளால், அடுத்த பாகத்தில் காதலிக்க ஆரம்பித்திருந்தார். மெலிதாக உணர்வுகளைப் படர விட்டிருந்தார். மெதுவாக அடுத்தடுத்த கட்டங்களை இருபத்தாறாவது பக்கத்தில் எட்டி, கடிமணம் வரை பயணம் போயிருந்தார். கிட்டத் தட்ட அச்சேறிய பிரதி மாதிரி இருந்தது அவரது அருமையான கையெழுத்து பிரதி.
இன்னும் இந்த நோட்டில் பதிவாகாத கவிதைகள் கைவசம் நிறைய இருக்குங்க..என்றார். எந்த இதழிலும் வரவில்லையா என்று கேட்டேன். வருத்தத்தோடு எதிர்மறையாகத் தலை ஆட்டினார்.
“பால் அப்படின்னு ஒரு இதளுக்கு தினமணியில் விளம்பரம் பார்த்தேன்..புதிய மாத இதள், படைப்பாளிகள் விரைந்து உங்கள் கவிதைகளை அனுப்பவும்னாங்க….விளுந்தடிச்சு எளுதிப் போட்டேன் சார்..பாவிப் பசங்க கொத்தா சந்தா பொஸ்தகம், விளம்பர கூப்பன் எல்லாம் எணச்சு பெரிய கட்டு ஒண்ணை அனுப்பி வச்சானுவ.. ஆத்தாடி நா எங்க போக இதுக்கெல்லாம் அலையன்னு, இருபது ரூவா கடன் வாங்கி அடுத்த தபாலில் சனியன் பூராத்தையும் அவனுக்கே திருப்பி அனுப்பிச்சு, மவராசா என் படைப்பு எதையும் நீ போடவும் வேணா, நா ஆடவும் வேணான்னு முளுகித் தொலச்சேன்..”
அவரோட கோபமும், வட்டார மொழியும், அவரது வெகுளித் தனமும் எனது நெஞ்சை நிறைத்தது…தேடித் தேடி சந்தித்துக் கொண்டிருந்தேன் அவரை.
ஒரு வாரம் அமுதசுரபியைக் கொண்டு போய் அவரிடம் காட்டினேன்…பவழ வண்ணன் ஒங்க கவிதைதானே இது, அழகா வந்திருக்கே என்றேன்..
அசரவே செய்யாமல் வாங்கிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்: “என்னோடது இல்ல சார்…எங்கேயாவது கவியரங்கம் போய்ப் படிச்சுட்டு வாரோம்ல, நம்ம புனைபெயர் கேட்டுக்கிட்டு அதையே அவனுகளும் வச்சிக்கிறானுவ .ஆனா, கவிதையத் திருடுறதுக்கு, புனை பெயர் திருடுறது ஒண்ணும் மோசமில்ல..”
அடுத்த முறை பார்க்கையில்,இதப் பாருங்களேன்..திருமண வாள்த்து..நண்பரோட தங்கச்சிக்காக எளுதினது..என்று காலண்டர் தாளின் பின்புறத்தில் எழுதியிருந்த கவிதையைக் காட்டினார்.
சொக்கலிங் கப்பேர் கொண்ட என்று அறுசீர் விருத்தத்தில் தொடங்கி அதில் சொற்கள் பலவும் முழுதாய் ஒரு சீரில் படியாததில் தோற்று, வேறு என்று அடைப்புக் குறி போட்டு எண் சீருக்கு மாறி முடித்திருந்தார். காரிகை, கண்ணாளன் போன்ற சொல் பிரயோகம் எப்படி என்று பெருமிதத்தோடு கேட்டு அவராகவே புன்னகை பூத்து நின்றார். வாசித்துத் தந்த மடல் என்ற வாக்கியத்தை எனது விரலால் தடவிய போது, அவர் கண்களில் நீர்த் துளி பூத்ததைக் கவனித்து அதிர்ந்து போனேன்..வண்ணக் காகிதத்தில் அச்சிட்டு மண்டபத்தில் எல்லோருக்கும் வழங்கலாம்னு ஆச இருக்கு… ஆனா, காசில்ல. ஒரே காபி மட்டும் ரெடி பண்ணி – நம்ம கையெளுத்துதான் அச்சு மாறித் தான இருக்குமே, பிரேம் போட்டுக் கொடுத்திரலாம்னு இருக்கேன்..என்றார்.
எனக்கு என்னவோ, காதல் கிழத்தியவள் கொஞ்சு மொழி பேசுபவள் என்று அவர் மணப் பெண் பற்றி விவரித்ததில் அவரது ஏக்கம் கலந்திருக்குமோ என்று பட்டது. கேட்கத் துணிவின்றி விட்டு விட்டேன். அன்றைக்கு வழக்கமாக தேநீர் அருந்துபவர், வேண்டாம் சார் என்று மறுத்துக் கொண்டது அவரது பொருளாதாரத்தின் சுய வெறுப்பில் இருந்து அப்படி நடந்து கொள்கிறார் என்று தோன்றியது. ஆள் ஏகத்திற்கு மெலிந்திருந்தார்.
இளங்கலை பொருளாதாரம் என்று அவரது நோட்டுப் புத்தகத்தின் மேலட்டையில் எழுதியிருப்பார். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதை நேரடியாக அவர் ஒருபோதும் சொன்னதுமில்லை, நானும் அது குறித்துக் கேட்டுக் கொண்டதுமில்லை.
அடுத்த வாரம் பார்க்கும் போது, அம்புலி மாமா இதழின் புகைப்பட வாக்கிய போட்டிக்கு எழுதியதைக் காட்டினார்.
“மொதப் படம் ஆனை மேல ஆள் உக்காந்து போவாங்க சார்…பக்கத்துல உள்ளதுல விநாயகப் பெருமான் படம்..நா எப்படி யோசிச்சுப் போட்டேன் பாருங்கள், துதிக்கை யானை மீது வலம், துதித்து வலம் வர யானை முகம்…எப்படிங்க சார், நல்லாயிருக்கா, தேர்வானா, அய்ம்பது ரூவா வரும் சார்..”
எனக்கு அவரது ஜீவிதத்தின் தட்டு தாழ்ந்து கொண்டே வருவது வலித்தது. அடுத்த மூன்று வாரங்களுக்கு ஆள் எங்கும் தட்டுப் படவில்லை. நான் கோவையில் வேலை கிடைத்துப் போகவும், சென்னை வருவது அரிதாகிப் போனது… பவழவண்ணன் விலாசம் இருந்தது, ஆனால் கடிதம் எழுதத் தயக்கமாக இருந்தது…
ஆனால் அவரிடம் இருந்து கடிதம் வந்தது…மிகவும் வியப்பாகிப் போனது எனக்கு. எப்படியோ நண்பர்கள் மூலம் மிகவும் முயற்சி எடுத்து எனது முகவரியைப் பிடித்திருக்கிறார் மனுஷன். கண்ணீர் மல்க இருந்தது அவரது உணர்ச்சி மடல். உடனே அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது..
அடுத்த வாரமே சனிக்கிழமை புறப்பட்டுப் போனேன். மிகவும் சோர்ந்தும், முகம் வாடியும் இருந்தார். பதினைந்து நாளாகி இருக்கும் போலிருந்தது முகத்தை மழித்து. இலேசாக இருமினார். வீட்டில் அவரது அம்மா மட்டும் இருந்தார். தெரிந்தது மாதிரி உடனே காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்.
“…என்னவோ தம்பி, ஒரு வேல கிடைக்கக் கூடாதா எம்மவனுக்கு.. நாலு ஆளு நாலு பேச்சு சொல்லத் தான் செய்வாங்க.. அதுக்குப் பாத்தா ஆகுமா.. எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுப் பொதச்சுக்குறான்.. கதவச் சாத்தி வச்சிக்கிட்டு எளுதித் தள்றான்..ஏன்பா.. இதெல்லாம் பொஸ்தவமாப் போட நெறைய காசாகுமா.. விக்கிறது கஸ்டம்கிறாங்க.. அது வேற பெரிய மனக் கொற அவனுக்கு..”
பவழவண்ணன் வேண்டாம், அதெல்லாம் சொல்ல வேண்டாம் என்று சைகையால் தடுத்துக் கொண்டிருந்தார். நான் எதுவும் பட்டுக் கொள்ளாமல் புறப்பட்டேன். மறுபடியும் கோவைக்குத் திரும்பியதும் பவழவண்ணனை முற்றிலும் மறந்துவிட்டிருந்தேன்….இப்போது எல்லாம் முடிந்து போய்விட்டது.
பவழவண்ணன் இறுதி யாத்திரைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். எனது கேவல்களை அடக்கிக் கொள்ள ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். பவழவண்ணன் புகை பிடித்தலுக்கு எதிரான வாசகப் போட்டிக்கு ஒரு கவிதை வரி எழுதிப் போட்டது நினைவுக்கு வந்தது: நச்சுக் காற்றில் கரைய விடாதே உனது நாளைய வாழ்வை…
அருகில் இருக்கும் சுடுகாடு நோக்கி நகர்ந்த ஊர்வலத்தின் பின்னே நடந்தேன். அந்தப் பெண்ணும் வந்து சேர்ந்த போது தான் தெரிந்தது, பவழவண்ணன் சகோதரி அது என்று.
நான் தான் சார் உங்களுக்குக் கடிதம் போட்டது..மணிமேகலை என்று அறிமுகம் செய்தவாறு அருகே நடக்கத் தொடங்கினாள் அவள். “மத்த எல்லாரையும் விட உங்க மேல அண்ணனுக்கு ரொம்பவும் உயிர்” என்றாள்.
“எனக்கும் அப்படித் தான் அவர் மேல் அத்தனை பிரியம்” என்றேன்.
“அப்ப ஏன் சார் நீங்களும் அவர மத்தவங்க மாதிரியே நடத்தினீங்க..” என்றாள்.
அந்த வாக்கியத்தின் சூடு தாங்காமலும், புரியாமலும் திணறினேன் நான். தனது தோளில் இருந்த பையைக் காட்டினாள் அவள். பை முழுக்க பவழவண்ணனின் கவிதை நோட்டுப் புத்தகங்கள், தனித் தனி தாள்களில் கவிதைகள் நிரம்பி இருந்தன.
“எங்க அண்ணன் பாவம், தான் ஒரு பெரிய கவின்னு மனதார நம்பிக் கொண்டிருந்தார்..தனது கவிதைகள் கால காலத்திற்கும் சாகா வரம் பெற்றவை..வேறொருவர் எழுத இயலாதவை. என்று தனக்குள் கோட்டை கட்டி இருந்தார்..”
அவளது பேச்சுத் தமிழ் வேறு தளத்தில் மிதப்பதை அப்போது தான் கவனித்தேன்..
“தெரியும்..ஓர் அப்பாவியான மனிதர் அவர்.எளிதில் நொறுங்கி விடுவார் என்றுதான் அவரோடு பெரிய விவாதம் எல்லாம் செய்யாம அவரப் பாராட்டிக் கேட்டுக் கொண்டிருப்பேன்..” என்றேன்..
“சரியில்லைங்க அது தவறு…தன்னை உண்மையா மதித்துப் பேசுகிற ஒரு மனிதரிடம் அவரைக் குறித்த அளவு கடந்த சுய மதிப்பீடு இருப்பதை எப்படி நீங்களும் வளர்த்துவிடப் போயிற்று?” என்ற அவளது அதிரடி கேள்வியைத் தவிர்த்து விட முயன்றேன். அவளோ அடுத்தடுத்து கேள்விகளால் என்னைத் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருந்தாள்.
“தனது திறமைகளை, மிதமிஞ்சிய ஆற்றல்களை படைப்புலகம் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை தான் அவரை மிகவும் வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது…ஆனால் அவரது நண்பர்கள் வட்டமோ அவரது அறியாமையை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறது.. எங்க அண்ணன் அன்பின் மறு உருவம்…எந்த எதிர்பார்ப்புமற்ற பாசத்தை ஒரே ஒரு சந்திப்பில் அறிமுகமான மனிதர்களிடமும் பொழியும் பெரிய உள்ளம் அவனது. அவனை அவனது கவிதையை வைத்து நான் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது….அவனது அன்பு ஆகப் பெரும் படைப்பாளியின் ஆளுமையைக் காட்டிலும் மகத்தானது… “
எப்போது சுடுகாடு வந்தது என்று கூடக் கவனித்திருக்கவில்லை நான்… இறுதிச் சடங்குகள் வேக வேகமாக நடந்துகொண்டிருந்தது. என்னிடம் பேசிக் கொண்டிருந்த மணிமேகலை சடாரென்று தகன மேடை ஏறி அண்ணனின் முகத்தருகே நின்று கடைசி பார்வை பார்த்துக் கொண்டாள்.
‘முன்னை விதிப்பயனோ…கண்ணே’ என்று சேகண்டி ஒலிப்பவன் பெருங்குரலெடுத்தான். வீட்டுப் பெரியவர் எங்கிருந்தோ, வெட்டியானைப் பார்த்து ஏம்பா ஒடம் பால் சொல்ல மாட்டியா… என்று கத்தினார். சொல்லிட்டேங்கையா..ஏம்பா மொகமொழி பார்த்துக்க. உடம் பால், உடம் பால்…என்று குரல் கொடுத்தான்.
பவழவண்ணனின் தந்தை கதறிக் கதறி அழுதபடி தண்ணீர் நிரம்பிய பானையைத் தோளில் சுமந்தபடி வலம் வந்தார். அவர் பின்னால் கத்தியோடு வந்த ஆள் அந்தப் பானையில் மூன்றாவது ஓட்டை போடவும் பெருகிய கண்ணீரை மறைக்க முடியவில்லை… பவழவண்ணன் முகத்தை அருகே சென்று பார்க்கத் துடித்தேன்.. மணிமேகலை பையிலிருந்து அத்தனை காகிதங்களையும், நோட்டுப் புத்தகங்களையும் வெளியே எடுத்துக் கொண்டிருந்தாள். என் பக்கம் ஒரு பார்வை பார்த்தாள்…தந்தை தனது மகன் சிதைக்குக் கொள்ளி வைக்கவும், நான் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று கையிலிருந்தவற்றை அப்படியே பவழவண்ணன் மீது பரவிக் கொண்டிருந்த நெருப்புக்குத் தீனி ஆக்கினாள் மணிமேகலை.
நான் கேட்காமலே என்னிடம் சொல்ல ஆரம்பித்தாள்: “எங்க அண்ணன் இருக்கப்ப அவர் பட்டது போதும்…தவறிக் கூட அவரது மறைவுக்குப் பிறகு அவரது கவிதைகளை வைத்து யாரும் அவரை அவமதிப்பதை நான் அனுமதிக்க முடியாது..” என்று வெடித்தழத் தொடங்கினாள்.
சீறிச் சீறி அலை பாய்ந்து கொண்டிருந்த பெருந் தீ என்னை மாறி மாறி கன்னத்தில் அறைந்தது மாதிரி இருந்தது.
*******************
நன்றி: நவீன விருட்சம்
ஒரு கவிக்கு இந்த நிலைமை நினைக்கவே நடுங்குவது என் நெஞ்சம்.ஒரு ஐம்பது ரூவா கிடைக்கும் என்று சொன்னது.
என்ன கொடுமை இது.அவள் சகோதரி சொன்னது உண்மை இறந்த பின்னர் வாழ்த்தும் சமூகம்.ஒரு விதத்தில் தீயில் இட்டது ,அவளின் கோபம் புரியுது.இதயம் கணக்குது
ஆசிரியர் திரு எஸ் வி வி அவர்களுக்கு நெஞ்சுரம் அதிகம்
இடுகாட்டில் பவள வண்ணன் சகோதரி மனம் நொந்து கூறியவற்றை அப்படியே பதிவு செய்துள்ளார். உண்மை சுட்டாலும் அழகானது.