— தேமொழி.

பெருமை கிடைப்பது செய்யும் தொழிலாலா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் குறள் – ஒரு மீள்பார்வை

 

திருக்குறள்

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972 [அதிகாரம்: பெருமை]

திருக்குறளின் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தர முற்படுவோர், உலகில் பிறந்தவர் யாவரும் ஒரே மாதிரியாகப் பிறந்திருந்தாலும், ஒருவர் செய்யும் தொழிலே அவருக்குப் பெருமையைத் தேடித் தருகிறது என விளக்கம் தர முற்படுகின்றனர். எக்காலத்திற்கும்… உலகில் எங்கு பிறந்த மக்களுக்கும் பொருந்துகின்ற ஒரு பொது மறையென போற்றப்படும் திருக்குறளின் வழியே வள்ளுவர் இக்கருத்தைத்தான் முன் வைத்திருப்பாரா என ஆராய்கிறது இக்கட்டுரை. செய்யும் தொழிலால்தான் பெருமை என்று கூறுகிறதா இக்குறள்?

திருக்குறளில் “தொழில்” என்ற சொல் வருவது மொத்தம் எட்டு குறள்களில். அக்குறள்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டதுடன், அவற்றுக்கு மு. வரதராசனார் கொடுத்த விளக்க உரைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் “தொழில்” என்ற சொல் என்ன பொருளில் இக்குறள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிபிடப்பட்டுள்ளது.

தொழில் என்ற சொல் கொண்ட குறள்கள்:
[1]
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள் 394 [கல்வி]

உரை:
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

[2]
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 428 [அறிவுடைமை]

உரை:
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

[3]
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 549 [செங்கோன்மை]

உரை:
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்.

தொழில் = “கடமை” என்றப் பொருள் தருகிறது

[4]
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில் – குறள் 582 [ஒற்றாடல்]

உரை:
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

தொழில் = “கடமை” என்றப் பொருள் தருகிறது

[5]
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 648 [சொல்வன்மை]

உரை:
கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனிதாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

தொழில் = “ஏவல்” (பணி/கட்டளை) என்றப் பொருள் தருகிறது

[6]
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில் – குறள் 833 [பேதைமை]

உரை:
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

[7]
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 1252 [நிறையழிதல்]

உரை:
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

தொழில் = “வேலை” என்றப் பொருள் தருகிறது

[8]
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் – குறள் 972 [பெருமை]

மு.வ உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
தொழில் = “தொழில்” (வேலை) என்றப் பொருள் கூறுகிறார் மு. வ.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
தொழில் = “செயல்” என்றப் பொருள் கூறுகிறார் பாப்பையா.

இனி “பெருமை” என்றே ஓர் அதிகாரம் எழுதிய வள்ளுவர், அதில் உள்ள பத்து குறள்கள் வழியே பெருமை பற்றி விளக்குவதைக் காண்போம். குறள்களைத் தொடர்ந்து அவற்றின் உரைகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திருக்குறள் அதிகாரம்: “பெருமை”:
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். – குறள் 971

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். – குறள் 973

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. – குறள் 974

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். – குறள் 975

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. – குறள் 976

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். – குறள் 977

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. – குறள் 978

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். – குறள் 979

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். – குறள் 980

உரை:
ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்லவை செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே. (குறள்: 971)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

நல்ல பண்புகள் (பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர். (குறள்:973)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது பண்பு நிறைந்த செயலின் தன்மை.

தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.(குறள்: 974)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர். (குறள்: 975)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது. (குறள்: 976)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை .

பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம். (குறள்: 977)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர். (குறள்: 978)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை. (குறள்: 979)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர். (குறள்:980)
இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

இவற்றைத் தொகுத்து வழங்கினால், உற்சாகத்துடன் கூடிய விடாமுயற்சி கொண்ட செயலால் செயற்கரிய செய்தல், சிறந்த பண்புகளை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்தல், நெறி வழுவாத சிறந்த செயல்களைச் செய்தல், பிறரால் இயலாதவற்றை தக்க வழியில் செய்து முடித்தல், நன்மரபைப் பேணும் செயல், நிலை உயரும்பொழுதும் பணிவுகொண்ட செயல், செருக்கற்ற செயல், ஆணவமற்ற செயல், பிறரின் நற்பண்புகளை மட்டும் மதிக்கும் செயல் என அறிய செயல்களை நெறிமுறை வழுவாது செய்து முடித்தலும், செருக்கு தவிர்த்து ஆணவமற்று பிறரை மதிக்கும் செயகள்தாம் மீண்டும் மீண்டும் பல வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது “பெருமை” அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடும் பிற குறள்களின் வழி அவர் ஒருவருக்கு “பெருமை” தருவது எது என அறிவுறுத்துகிறார் என ஒப்பிட்ட பிறகு மீண்டும் ஒரு முறை “பிறப்பொக்கும்” குறளை மீள்பார்வை செய்தோமானால் …

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972

என்ற குறளுக்கு பாப்பையா கூறும் “எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்” பொருள்தான் மிகவும் பொருந்தி வருகிறது.

“எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை” என்ற மு.வ உரை, குறிப்பாக “செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடு” என்பது பொருந்தவில்லை. அதாவது இக்குறளில் தொழில் என்பது “வேலை” என்றப் பொருள் தரவில்லை. அதனால் தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் ஒருவர் சிறப்பு பெறுவதில்லை, ஒருவருடைய நற்செயல்களால் மட்டுமே அவர் சிறப்பு பெறுகிறார் என்பது புலனாகிறது. அந்த அதிகாரத்தில் ஏனைய குறள்கள் நற்பண்பு கொண்ட செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பிறப்பொக்கும் என்று தொடங்கும் குரல் மட்டும் ஒருவர் செய்யும் தொழிலினால் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்றுப் பேச வழியில்லை. அவ்வாறு பொருள் கொள்ள முற்படுவது வள்ளுவர் வலியுறுத்தும் பொருளுக்கு மாறானப் பொருளைக் கொள்வதாக அமையும்.

இதனை நாம் மேலும் தெளிவு படுத்தலாம். வள்ளுவர் ஒரே கருத்து கொண்ட குறளை, அக்கருத்தை வலியுறுதும் நோக்கில் மற்றொரு பொருத்தமான இடத்திலும், பிறிதொரு அதிகாரத்திலோ அல்லது அதே அதிகாரத்திலோ வேறொரு குறளாக வடித்திருப்பார். குறிப்பாக “மருந்து” அதிகாரத்தில் ஒரே பொருள் கொண்ட குறள்களைக் காணலாம். இது வள்ளுவர் தமது கருத்தை வலியுறுத்தும் பாங்கு.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. – குறள் 944

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். – குறள் 947

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். (குறள்: 944)

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும். (குறள்: 947)

என்ற இரு குறள்களின் மையக் கருத்தும் பசித்துப் புசிக்கவே வலியுறுத்துகிறது.

“பெருமை” என்ற அதிகாரம் எழுதிய வள்ளுவர் பெருமை பற்றி அந்த அதிகாரம் தவிர்த்து பிற இடங்களிலும் பெருமை பற்றி குறிப்பிட்டுச் செல்கிறார். திருக்குறளில் “பெருமை” என்ற சொல் மொத்தம் 16 குறள்களில் இடம் பெறுகின்றன. இவற்றில் குறள்கள் 974, 975, 978, 979 ஆகிய நான்கு குறள்களும் பெருமை அதிகாரத்திலேயே இருப்பதுவும், இவை சற்று முன்னர் பொருள் விளக்கம் நோக்கப்பட்ட குறள்களுமாகும். இவற்றைத் விலக்கி, பெருமை என்ற சொல் மற்ற குறள்களில் என்ன பொருளில் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது என்பதை காண்போம்.

[1]
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. – குறள் 21

உரை:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பெருமை தருவது: சிறந்த ஒழுக்கம் பெருமை தருகிறது.

[2]
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. – குறள் 22

உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பெருமை தருவது: ஆசைகளை விட்டு விலகிய ஒழுக்கம் பெருமை தருகிறது.

[3]
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. – குறள் 23

உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

பெருமை தருவது: அறவழியில் நடப்பது பெருமை தருகிறது.

[4]
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். – குறள் 28

உரை:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

பெருமை தருவது: பிறருக்கு அறவழியில் வாழ வழிகாட்டும் செயல் பெருமை தருகிறது.

[5]
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. – குறள் 336

உரை:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

பெருமை: நிலையாமை என்ற பண்பினைக் குறிக்கிறது.

[6]
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். – குறள் 416

உரை:
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

பெருமை தருவது: நன்மை தரும் சொற்களை கேட்பது உயர்வை பெருமையைத் தருகிறது.

[7]
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். – குறள் 451

உரை:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

பெருமை: தீய செயல் செய்யும் மக்களை விளக்கும் பெரியோரின் இயல்பு பெருமை எனக் காட்டப்படுகிறது.

[8]
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். – குறள் 505

உரை:
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

பெருமை தருவது: ஒருவரின் செயல்களே அவருக்கு உயர்வை பெருமையைத் தருகிறது.

[9]
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். – குறள் 611

உரை:
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

பெருமை என்ற சொல் வலிமை, ஆற்றல், சக்தி என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது.

[10]
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. – குறள் 907

உரை:
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

பெருமை தருவது: பெண்ணின் நான்னம் என்ற இயல்பான பண்பு பெருமையைத் தருகிறது.

[11]
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். – குறள் 980

உரை:
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

பெருமை பெருந்தன்மை என்ற பண்பான செயலைக் குறிக்கிறது.

[12]
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். – குறள் 1021

உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

பெருமை தருவது: உரிய கடமையைச் செய்யும் செயல் பெருமையைத் தருகிறது.

இங்கு குறிப்பிட்டுள்ள பெருமை என்ற சொல் கொண்ட 12 குறள்களின் வழியாகவும் வள்ளுவர், ஒருவருக்கு பீடு தரும் உயர்வை… பெருமையைத் தருவது அவருடைய நன்னெறி வழி நடக்கும் செயல் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

குறிப்பாக,
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். – குறள் 505
என்ற குறள் பிறப்பொக்கும் குறளின் பொருளையேத் தருகிறது.

எனவே, பிறப்பொக்கும் குறளுக்கு, “பிறப்பில் அனைவரும் சமமாக இருந்தாலும், ஒரே போன்று பிறந்தாலும் ஒருவரை பெருமை மிக்க இடத்திற்கு உயர்வடையச் செய்வது அவர் செய்யும் செய்கையே என்ற விளக்கமே பொருந்துகிறது. ஒருவர் செய்யும் அருஞ்செயல்கள் அவருடைய மதிப்பை உயர்த்துவதையும், தாகாத செயல்கள் அவர் புகழை சிறுமை படுத்துவதையுமே” வள்ளுவர் குறிப்பிடுகிறார் ஒருவர் செய்யும் ஊழியத்திற்கும் பெருமைக்கும் தொடர்பில்லை, மக்கள் மனதில் இக்கருத்திற்கு மாறான பிழையான எண்ணங்கள் பதிந்திருந்தாலும் உண்மையில் நற்செயல்களே அவர் எத்தொழில் செய்தாலும் ஒருவருக்குப் பெருமையைச் சேர்க்கும். ஒருவருடைய குடிபிறப்பினாலோ அல்லது செய்யும் தொழிலாலோ பெருமை வருவதில்லை. அவரது நற்செயல்களே பெருமை தரும்.

செய்யும் தொழிலால் வேறுபாடு காண்பிப்பது வர்ணாஸ்ரமம், அதனால் செய்யும் தொழிலால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு காட்டுவது நான்கு வர்ண குண என்பது ஆரியர் மரபு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்ல வரும் வள்ளுவன் இங்கு நான்கு வர்ண குண வேறுபாடுகளைக் குறிக்கவில்லை. அது ஒருவர் குணநலனைக் குறிக்கும். ஒருவரது செய்கையே அவருக்கு உயர்வையும் பெருமையையும் அளிக்கும் என்பது பெருமை அதிகாரத்தில் வள்ளுவர் குறிக்கும் பிற குறள்களின் பொருளுடன் ஒப்பிட்டுக் காண்கையில் தெளிவாகிறது. இக்குறள் காலப்போக்கில் நான்கு வர்ண உயர்வு தாழ்வினை நம்புபவர்கள், அதனால் வரும் பலனை விரும்புபவர்கள் மூலம் மாற்றுப் பொருள் கொடுக்கும் நிலையினை அடைந்திருக்கிறது. வள்ளுவர் சொல்ல நினைக்காத கருத்தை மக்கள் மனதில் திணிக்க மிகத் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

நன்றி: அமீரக “தமிழ்த்தேர்” பதிப்பு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.